திரு இரும்பை மாகாளம்


திரு இரும்பைமாகாளம்

     தொண்டை நன்னாட்டுத் திருத்தலம்.

     மக்கள் வழக்கில் இரும்பை என்று வழங்கப்படுகின்றது.

         திண்டிவனத்திலிருந்து கிளியனூர் வழியாக பாண்டிச்சேரி செல்லும் சாலையில் திருச்சிற்றம்பலம் கூட்டுசாலையை தாண்டி சிறிது தூரம் சென்றால், இடதுபுறம் இரும்பை செல்லும் சாலை பிரிகிறது. சாலை பிரியும் இடத்தில் இரும்பை என்ற பெயர்ப் பலகையும் உள்ளது. இந்த சாலையில் 2 கி.மி. சென்று மாகாளேசுவரர் திருக்கோயிலை அடையலாம்.

     பாண்டிச்சேரியில் இருந்து சுமார் 10 கி.மி. தொலைவில் இரும்பை மாகாளம் என்ற இந்தத் திருத்தலம் இருக்கிறது. பாண்டிச்சேரியில் இருந்து சஞ்சீவி நகர் செல்லும் நகரப் பேருந்து மாகாளேசுவரர் கோயில் வழியாகச் செல்கிறது. மற்றொரு பாடல் பெற்ற திருத்தலமான திருஅரசிலி இங்கிருந்து சுமார் 5 கி.மி. தூரத்தில் இருக்கிறது.


இறைவர்                   : மாகாளேசுவரர்.

இறைவியார்               : குயில்மொழிநாயகிமதுரசுந்தரநாயகி

தல மரம்                   : புன்னை

தீர்த்தம்                    : மாகாள தீர்த்தம்

தேவாரப் பாடல்கள்         : சம்பந்தர் - மண்டுகங்கை சடையில்
        
         கடுவெளிச்சித்தர் என்பவர் இத்தலத்தில் உள்ள அரசமரத்தின் அடியில் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது நாட்டில் மழையில்லாமல் பயிர்கள் வாடுவதைக் கண்ட இந்நாட்டு சிற்றரசன் கடுவெளி சித்தரின் கடும் தவமே மழை இல்லாமைக்கு காரணம் என்று கருதி அவரது தவத்தைக் கலைக்க ஒரு தேவதாசி மாதுவை அனுப்பினான். தேவதாசியும் அவரது தவத்தைக் கலைத்தாள். சித்தர் தவம் கலைந்து எழுந்தபோது மன்னன் அவரிடம், நாட்டின் பஞ்ச நிலையைக்கூறி அதற்கு காரணமாக சித்தரின் தவம் இருந்ததோ என சந்தேகம் கொண்டு அவரை எழுப்பியதாக நடந்த உண்மைகளைக் கூறினான். அரசனின் பேச்சைக் கேட்ட சித்தர் அவனுக்காகவும், மக்களுக்காவும் மீண்டும் தவ வாழ்க்கையை தொடராமல் இங்கேயே தங்கி சிவப் பணி செய்து வந்தார். அதன்பின் நாட்டில் நல்ல மழை பெய்தது. மக்கள் பஞ்சம் நீங்கப் பெற்று, சிவனுக்கு திருவிழா எடுத்தனர். கோவில் திருவிழாவில் சுவாமி ஊர்வலமாக சென்றபோது, அவருக்கு முன்பாக சித்தரின் தவத்தை கலைந்த தேவதாசி நடனமாடிச் சென்றாள். அப்போது, அவளது காற்சிலம்பு கீழே கழண்டு விழுந்தது. இதை பார்த்த சித்தர் கோவில் விழாவில் நடன நிகழ்ச்சி தடைபடக் கூடாதென்றெண்ணி, அச்சிலம்பை எடுத்து நடனமாதின் காலில் அணிவித்து விட்டார். இதைக்கண்ட மக்கள், சித்தரின் செயலை ஏளனம் செய்து நகைத்தனர். சித்தர் வெகுண்டு இறைவனை நோக்கிப் பாட, ஆலயத்திலுள்ள மூலலிங்கம் வெடித்து 3 பகுதிகளாக சிதறியது. இதையறிந்த அரசன் சித்தரிடம் மன்னிப்புக் கோரினான். சித்தர் மீண்டும் ஒரு பாட்டுப் பாட சிதறிய சிவலிங்கம் ஒன்று கூடியது. சிவலிங்கத்தை செப்புத்தகடு வேய்ந்து ஒன்றாக்கி அரசன் வழிபட்டான். அன்று முதல் இந்நாள் வரை சிவலிங்கம் செப்புத் தகட்டால் இணைக்கப்பட்டு காட்சி அளிக்கிறது.

         நாட்டில் மூன்று சிவத்தலங்கள் மாகாளம் என்ற பெயருடன் விரங்குகின்றன. அவை வடதாட்டிலுள்ள உஜ்ஜயினி மாகாளம், காவிரி தென்கரைத் தலமான அம்பர் மாகாளம் மற்றும் தொண்டை நாட்டுத் தலமான இந்த இரும்பை மாகாளம்.

         சிவனிடம் வரம் பெற்ற அம்பன், அம்பாசுரன் எனும் இரு அசுரர்கள் பார்வதி தேவியின் மீது ஆசை கொண்டனர். அவர்கள் இருவரும் பார்வதியை திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினர். அவர்களை பார்வதிதேவி, மகாகாளி அவதாரம் எடுத்து, தெற்கே மயிலாடுதுறைக்கு அருகே அம்பர் என்னுமிடத்தில் வதம் செய்தாள். இதனால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்த அம்பாள், இத்தலத்தில் சிவனை நோக்கி தவம் செய்து, தோஷம் நீங்கப்பெற்றாள். பிற்காலத்தில் மகாகாளர் எனும் மகரிஷி சிவத்தல யாத்திரையின் போது வடக்கே உஜ்ஜயினியில் ஒரு லிங்கமும், தெற்கே மயிலாடுதுறை, பூந்தோட்டத்திற்கு அருகே அம்பர் மாகாளத்தில் ஒரு லிங்கமுமாக பிரதிஷ்டை செய்து வணங்கினார். அவர் மேலும் இத்தலம் வந்தபோது, இத்தலத்தின் மகிமையை அறிந்து இங்கேயும் லிங்கம் ஒன்றை பிரதிட்டை செய்து வணங்கினார். மாகாளரால் பிரதிட்டை செய்யப்பட்டதால் இறைவனும் "மகாகாளநாதர்" என்ற பெயர் பெற்றார்.

         ஆலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயிலின் வலதுபுறம் விநாயகர் சந்நிதி உள்ளது. முகப்பு வாயில் கடந்தவுடன் நேரே பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. மூலவர் சுயம்புலிங்க வடிவில் மாகாளேசுவரர் என்ற பெயருடன் கிழக்கு நோக்கியும், இறைவி குயில்மொழிநாயகி தெற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர். ஆலயம் திருப்பணி செய்யப்பட்டு புதுப் பொலிவுடன் திகழ்கிறது. பிராகார மேற்குச் சுற்றில் கருவறைக்குப் பின்புறம் வள்ளி தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து ஆறுமுகர் காட்சி அளிக்கிறார். இச்சந்நிதிக்கு அருகில் காலபைரவர் சந்நிதி இருக்கிறது. அம்பாள் சன்னதிக்கு முன் இடதுபுறத்தில் நடராஜர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இச்சந்நிதியில் நின்று கொண்டு இறைவன், அம்பாள், நடராஜர் ஆகிய மூவரையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம். நவக்கிரக சன்னதியில் உள்ள கிரகங்கள் அனைத்தும் மனைவியர்களுடன் இருக்கின்றனர். சூரியன் தாமரை மலர் மீது, தன் இரண்டு கால்களையும் மடக்கி வைத்து அமர்ந்து கொண்டு உஷா, பிரத்யூஷா ஆகிய இருவரையும் தன் இரு மடிகளில் அமர்த்திய கோலத்தில் காட்சி அளிக்கிறார். சூரியனின் இந்த தரிசனம் விசேஷமானது. கோவில் கிழக்குப் பிராகாரத்தில் மேற்கு நோக்கியபடி சூரியன், சந்திரன் தனிச் சந்நிதிகளில் இருக்கின்றனர். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். பிராகாரம் சுற்றி வரும்போது வடக்குச் சுற்றில் ஆஞ்சனேயருக்கும் சந்நிதி உள்ளது.

         பிராகார சுற்றுச் சுவர் உட்புறம் முற்றிலும் விதவிதமான உருவங்கள் பதிக்கப்பட்டுள்ளன். அங்கங்கே ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. கருவறை முன்புறச் சுவர் முழுவதும் செப்புத் தகட்டால் வேயப்பட்டு தங்கமுலாம் பூசியது போன்று பளபளப்புடன் திகழ்கிறது. துவாரகாலகர்கள், மாகாளர் உருவம் ஆகியவை செப்புத் தகட்டால் வேயப்பட்டிருப்பதைக் காணலாம்.

     காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "பத்தி உள்ளோர் எண்ணும் புகழ் கொள் இரும்பை மாகாளத்து நண்ணும் சிவயோகத்து நாட்டமே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 1135
அரசிலியில் அமர்ந்துஅருளும்
         அங்கண்அர சைப்பணிந்து,
பரசிஎழு திருப்புறவார்
         பனங்காட்டூர் முதலாய
விரைசெய்மலர்க் கொன்றையினார்
         மேவுபதி பலவணங்கி,
திரைசெய்நெடுங் கடல்உடுத்த
         திருத்தில்லை நகரணைந்தார்.

         பொழிப்புரை : திருஅரசிலியில் விரும்பி வீற்றிருக்கும் இறைவரைப் பணிந்து போற்றி, திருப்புறவார் பனங்காட்டூர் முதலான, மணம் கமழ்கின்ற கொன்றை மலரைச் சூடிய இறைவர் எழுந்தருளி யிருக்கின்ற பல பதிகளையும் வணங்கிச் சென்று, அலைகளையுடைய நீண்ட கடல் அணிமையாய்ச் சூழ்ந்த திருத்தில்லை நகரை அடைந்தார்.

         குறிப்புரை : திருஅரசிலியில் அருளியது, `பாடல் வண்டறை\' (தி.2 ப.95) எனும் முதற்குறிப்புடைய பியந்தைக் காந்தாரப் பண்ணில் அமைந்த பதிகமாகும். திருஅரசிலி மற்றும் திருப்புறவார்பனங் காட்டூரில் இதுபோது அருளியது, `விண் அமர்ந்தன\' (தி.2 ப.53) எனும் முதற்குறிப்புடைய சீகாமரப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

         பதிபலவும் என்பன திருவக்கரை, திருவடுகூர், திருஇரும்பைமாகா ளம், திருவாமாத்தூர், திருவதிகை, திருச்சோபுரம் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். இவற்றுள் திருஇரும்பை மாகாளத்திற்கு அமைந்தது, `மண்டு கங்கை' (தி.2. ப.117) எனும் முதற்குறிப்புடைய செவ்வழிப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

திருஞானசம்பந்தர் திருப்பதிகம்

2.117 திருவிரும்பைமாகாளம்                  பண் - செவ்வழி
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
மண்டுகங்கை சடையில் கரந்தும், மதிசூடி,மான்
கொண்டகையால் புரமூன்று எரித்த குழகன்இடம்
எண்டதிசையும் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள்
வண்டுகீதம் முரல்பொழில் சுலாய்நின்ற மாகாளமே.

         பொழிப்புரை :கங்கையைச் சடையில் கரந்து , பிறைமதியைச் சூடி , மான் ஏந்திய கையால் கணைதொடுத்து முப்புரங்களை எரித்த குழகனது இடம் , எண்திசையும் புகழ்பெற்று விளங்கும் திருஇரும்பை நகரில் உள்ளதும் வண்டுகள் இசைபாடி முரலும் பொழில் சூழ்ந்து விளங்குவதுமாகிய திருமாகாளமாகும் .


பாடல் எண் : 2
வேதவித்தாய், வெள்ளைநீறு பூசி, வினைஆயின
கோதுவித்தா நீறுஎழ, கொடிமா மதில்ஆயின
ஏதவித்து ஆயினதீர்க் கும்இடம் இரும்பைதனுள்
மாதவத்தோர் மறையோர் தொழநின்ற மாகாளமே.

         பொழிப்புரை :வேதவித்தாய் , வெண்ணீறுபூசி , வினைகள் யாவற்றையும் அழித்து , கொடிய திரிபுரங்களை நீறெழச் செய்து , குற்றங்களுக்கு விதையானவற்றைத் தீர்த்து , அருள்புரியும் சிவ பிரானது இடம் , திருஇரும்பை நகரில் உள்ளதும் , மாதவத் தோரும் மறையோரும் தொழ நின்றதுமான திருமாகாளமாகும் .


பாடல் எண் : 3
வெந்தநீறும், எலும்பும், அணிந்த விடைஊர்தியான்,
எந்தைபெம்மான் இடம்எழில் கொள்சோலை இரும்பைதனுள்
கந்தம்ஆய பலவின் கனிகள் கமழும்பொழில்
மந்திஏறிக் கொணர்ந்துஉண்டு உகள்கின்ற மாகாளமே.

         பொழிப்புரை :திருவெண்ணீற்றையும் எலும்பையும் அணிந் தவனும் , விடைஊர்தியனும் , எந்தையும் , தலைவனுமாகிய இறைவனது இடம் , அழகிய சோலைகள் சூழ்ந்ததும் மணம் கமழும் பலாக் கனிகளை மந்திகள் ஏறிப் பறித்து உண்டு திரியும் பொழில்கள் சூழ்ந்தது மாகிய திருஇரும்பை நகரில் உள்ள திருமாகாளம் ஆகும் .


பாடல் எண் : 4
நஞ்சுகண்டத்து அடக்கி, நடுங்கும் மலையான்மகள்
அஞ்சவேழம் உரித்த பெருமான் அமரும்இடம்,
எஞ்சல்இல்லாப் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள்
மஞ்சில்ஓங்கும் பொழில்சூழ்ந்து அழகாய மாகாளமே.

         பொழிப்புரை :நஞ்சைக் கண்டத்தில் அடக்கியவரும் , மலைமகள் அஞ்சி நடுங்க யானையை உரித்தவருமான பெருமான் அமரும் இடம் , குன்றாத புகழ் விளங்கும் திருஇரும்பை நகரில் உள்ளதும் மேகங்கள் தோயும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய அழகிய திருமாகாளமாகும் .


பாடல் எண் : 5
பூசுமாசுஇல் பொடியான், விடையான், பொருப்பான்மகள்,
கூசஆனை உரித்தபெரு மான்,குறை வெண்மதி
ஈசன்எங்கள் இறைவன் இடம்போல், இரும்பைதனுள்
மாசுஇலோர்கள் மலர்கொண்டு அணிகின்ற மாகாளமே.

         பொழிப்புரை :குற்றமற்ற திருநீற்றுப் பொடியைப் பூசியவனும், விடையூர்தியனும், மலைமகள் கூசுமாறு யானையை உரித்த பெருமானும், பிறைமதி சூடிய ஈசனும் ஆகிய எங்கள் இறைவனது இடம், திரு இரும்பையில் உள்ளதும், அடியவர் மலர் கொண்டு அணிவித்து மகிழ்வதுமாகிய திருமாகாளம் ஆகும் .


பாடல் எண் : 6
குறைவதுஆய குளிர்திங்கள் சூடிக் குனித்தான்,வினை
பறைவதுாக்கும் பரமன், பகவன், பரந்தசடை
இறைவன்,எங்கள் பெருமான் இடம்போல், இரும்பைதனுள்
மறைகள்வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே.

         பொழிப்புரை :கலைகள் குறைந்த பிறைமதியைச் சூடிக் கூத்தாடிய வரும் , வினைகளை அழிக்கும் பரமரும் , தூய்தான ஆறு குணங்களை உடையவரும் , பரவலான சடைகளை உடைய இறைவ ரும் , எங்கள் பெருமானுமாகிய இறைவரது இடம் திருஇரும்பை நகரில் வேத வித்துக்கள் வழிபடும் திருமாகாளமாகும் .


பாடல் எண் : 7
பொங்குசெங்கண் அரவும், மதியும், புரிபுன்சடைத்
தங்கவைத்த பெருமான்என நின்றவர் தாழ்வுஇடம்
எங்கும்இச்சை அமர்ந்தான் இடம்போல் இரும்பைதனுள்
மங்குல்தோயும் பொழில்சூழ்ந்து அழகாய மாகாளமே.

         பொழிப்புரை :சடையில் பாம்பையும் பிறையும் பகை நீக்கித் தங்க வைத்த பெருமானும் , எவ்விடத்தும் விருப்போடு எழுந்தருளி விளங்குபவனுமாகிய இறைவனது இடம் திருஇரும்பையூரில் வானளாவிய பொழில்கள் சூழ்ந்து விளங்கும் திருமாகாளம் ஆகும் .


பாடல் எண் : 8
நட்டத்தோடு நரிஆடு கானத்துஎரி ஆடுவான்,
அட்டமூர்த்தி, அழல்போல் உருவன், அழகாகவே
இட்டமாக இருக்கும் இடம்போல், இரும்பைதனுள்
வட்டஞ்சூழ்ந்து பணிவார் பிணிதீர்க்கும் மாகாளமே.

         பொழிப்புரை :நரிகள் விளையாடும் இடுகாட்டில் எரியேந்தி நடனம் புரிபவரும் , அட்டமூர்த்தி வடிவினரும் , அழல் உருவினரும் ஆகிய இறைவர் விருப்போடு எழுந்தருளிய இடம் திருஇரும்பை நகரில் உள்ளதும் வலம் வந்து தொழுவார் பிணிகளைத் தீர்ப்பதுமாகிய திருமாகாளமாகும் ,

பாடல் எண் : 9
அட்டகாலன் தனைவவ் வினான்,அவ் அரக்கன்முடி
எட்டும்மற்றும் இருபத்திரண் டும்இற ஊன்றினான்,
இட்டமாக விருப்பான் அவன்போல், இரும்பைதனுள்
மட்டுவார்ந்த பொழில்சூழ்ந்து எழில்ஆரும் மாகாளமே.

         பொழிப்புரை :மார்க்கண்டேயரோடு போராடிய காலனுயிரைக் கவர்ந்தவரும் , இராவணன் பத்துத்தலைகளும் இருபது தோள்களும் நெரியுமாறு திருவடியை ஊன்றியவரும் , ஆகிய சிவபிரான் இட்டமாக இருக்குமிடம் திருஇரும்பை நகரில் விளங்குவதும் தேனார்ந்த பொழில் சூழ்ந்துள்ளதுமான திருமாகாளமாகும் .


பாடல் எண் : 10
அரவம்ஆர்த்து அன்று அனல்அங்கை ஏந்தி, அடியும்முடி
பிரமன்மாலும் அறியாமை நின்ற பெரியோன்இடம்,
குரவம்ஆரும் பொழில்குயில்கள் சேரும் இரும்பைதனுள்
மருவிவானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே.

         பொழிப்புரை :பாம்பைத் தம் இடையில் கட்டிக்கொண்டு , அனலை அங்கையில் ஏந்தி , பிரமன் , மால் ஆகியோர் அடிமுடி அறியாதவாறு ஓங்கிநின்ற பெரியோன் இடம் , குயில்கள் வாழும் குரா மரங்கள் நிறைந்த பொழில் சூழ்ந்த திரு இரும்பை நகரில் உள்ள வானோரும் மறையோரும் தொழும் திருமாகாளமாகும் .


பாடல் எண் : 11
எந்தைஎம்மான் இடம்,எழில் கொள்சோலை இரும்பைதனுள்
மந்தம்ஆய பொழில்சூழ்ந்து அழகுஆரும் மாகாளத்தில்
அந்தம்இல்லா அனல்ஆடு வானை,அணி ஞானசம்
பந்தன்சொன்ன தமிழ்பாட வல்லார்பழி போகுமே.

         பொழிப்புரை :எந்தையும் எங்கள் தலைவனும் ஆகிய சிவபிரான் விளங்குவதும் திருஇரும்பையில் விளங்கும் தென்றல் வந்துலவும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய திருமாகாளத்தில் முடிவற்ற நிலையில் அனலாடும் இறைவன் மீது ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத் தமிழை ஓதுபவர்களின் பழிகள் போகும் .

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...