அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அங்கை மென்குழல்
(திருச்செந்தூர்)
பொதுமாதரது இன்பம் என்னும்
விஷக் குழியில் விழாமல், முருகன்
அருள் பெற்று ஈடேற
தந்த
தந்தன தானா தானா
தந்த தந்தன தானா தானா
தந்த தந்தன தானா தானா ...... தனதான
அங்கை
மென்குழ லாய்வார் போலே
சந்தி நின்றய லோடே போவா
ரன்பு கொண்டிட நீரோ போறீ ...... ரறியீரோ
அன்று
வந்தொரு நாள்நீர் போனீர்
பின்பு கண்டறி யோநா மீதே
அன்று மின்றுமொர் போதோ போகா ......
துயில்வாரா
எங்க
ளந்தரம் வேறா ரோர்வார்
பண்டு தந்தது போதா தோமே
லின்று தந்துற வோதா னீதே ...... னிதுபோதா
திங்கு
நின்றதென் வீடே வாரீ
ரென்றி ணங்கிகள் மாயா லீலா
இன்ப சிங்கியில் வீணே வீழா ...... தருள்வாயே
மங்கு
லின்புறு வானாய் வானூ
டன்ற ரும்பிய காலாய் நீள்கால்
மண்டு றும்பகை நீறா வீறா ...... எரிதீயாய்
வந்தி
ரைந்தெழு நீராய் நீர்சூழ்
அம்ப ரம்புனை பாராய் பாரேழ்
மண்ட லம்புகழ் நீயாய் நானாய் ...... மலரோனாய்
உங்கள்
சங்கரர் தாமாய் நாமார்
அண்ட பந்திகள் தாமாய் வானாய்
ஒன்றி னுங்கடை தோயா மாநோன் ...... மருகோனே
ஒண்த
டம்பொழில் நீடூர் கோடூர்
செந்தி லம்பதி வாழ்வே வாழ்வோர்
உண்ட நெஞ்சறி தேனே வானோர் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
அங்கை
மென்குழல் ஆய்வார் போலே,
சந்தி நின்று அயலோடே போவார்,
அன்பு கோண்டிட, நீரோ போறீர்? ...... அறியீரோ?
அன்று
வந்து ஒரு நாள் நீர் போனீர்,
பின்பு கண்டு அறியோம் நாம், ஈதே?
அன்றும் இன்றும் ஒர் போதே போகா, ...... துயில்வாரா,
எங்கள்
அந்தரம் வேறு ஆர் ஓர்வார்?
பண்டு தந்தது போதாதோ? மேல்
இன்று தந்து உறவோதான்? ஈதுஏன்? ......இதுபோதாது?
இங்கு
நின்றது என்? வீடே வாரீர்,
என்று இணங்கிகள் மாயா லீலா
இன்ப சிங்கியில் வீணே வீழாது ...... அருள்வாயே
மங்குல்
இன்புறு வான்ஆய், வான்ஊடு
அன்று அரும்பிய கால்ஆய், நீள்கால்
மண்டு உறும்பகை நீறா வீறா ...... எரிதீயாய்,
வந்து
இரைந்து எழு நீராய், நீர்சூழ்
அம்பரம் புனை பார்ஆய், பார்ஏழ்
மண்டலம் புகழ் நீயாய், நானாய், ...... மலரோன்ஆய்,
உங்கள்
சங்கரர் தாமாய், நாம்ஆர்
அண்ட பந்திகள் தாமாய், வானாய்,
ஒன்றினும் கடை தோயா மாயோன் ......
மருகோனே!
ஒண்
தடம் பொழில் நீடுஊர், கோடுஊர்,
செந்தில் அம்பதி வாழ்வே! வாழ்வோர்
உண்ட நெஞ்சு அறி தேனே! வானோர் ...... பெருமாளே.
பதவுரை
மங்குல் இன்புறு வானாய் ---மேகமானது இன்புற்றுச்
சஞ்சரிக்கும் ஆகாய பூதமாகியும்,
வானூடு அன்று அரும்பிய காலாய் --- அவ்வாகாயத்தில்
அந்நாளில் தோன்றிய வாயு பூதமாகியும்,
நீள் கால் மண்டு உறும் புகை நீறா வீறா எரி தீயாய்
--- பெருங்காற்றுடன் நெருங்கிப் புகையுடன் எழுந்து யாவற்றையும் நீறாக்கும் வன்மையுடைய
அக்கினி பூதமாகியும்,
வந்து இரைந்து எழும் நீராய் --- ஒலித்து எழுந்துவரும்
அப்பு பூதமாகியும்,
நீர் சூழ் அம்பரம் புனை பாராய் --- தண்ணீரைத்
தனக்கு ஆடையாகப் புனைந்துள்ள பிருதிவி பூதமாகியும்,
பார்ஏழ் மண்டலம் புகழ் நீயாய் --- நிலம் முதலிய
ஏழுலகங்களும் புகழும் குகக்கடவுளாகிய தாங்களாகவும்,
நானாய் --- அடியேனாகவும்,
மலரோனாய் --- பிரமதேவராகியும்,
உங்கள் சங்கரர் தாமாய் --- உமது பிதாவாகிய சிவபெருமானாகவும்,
நாம் ஆர் அண்ட பந்திகள் தாம் ஆய்வானாய் --- எத்துணையவோ
என்று அச்சத்தை விளைவிக்கக்கூடிய எண்ணில்லாத அண்ட கோடிகளை ஆராய்பவராகியும்,
ஒன்றிலும் கடை தோயா --- முடிவில் ஒன்றிலும் கலப்பில்லாதவருமாகிய,
மாயோன் --- மாயவன் என்னும் திருமாலினது,
மருகோனே --- மருகரே!
ஒண் தடம் பொழில் நீடு ஊர் --- ஒளிபெற்றதும் விசாலமுடையதும்
மலர்ச்சோலைகள் சூழ்ந்தும் புராதன தலமுமாகிய,
கோடு ஊர் --- சங்குகள் தவழும்,
செந்திலம்பதி வாழ்வே --- திருச்செந்தூர் என்னும்
திருத்தலத்தின் வாழ்வையுடையவரே!
வாழ்வோர் உண்ட நெஞ்சு அறி தேனே --- அத்தலத்தில்
வாழ்பவர்கள் பருகிய உள்ளத்தில் தித்தித்து அறிந்துகொள்ளும் ஆனந்தத் தேனே!
வானோர் பெருமாளே --- தேவர்களுக்கெல்லாம் பெருமானாக
வீற்றிருப்பவரே!
அம் கை மென்குழல் ஆய்வார் போலே --- அழகிய கரத்தால்
மென்மையாகிய அளகபாரக் கூந்தலைச் சிக்கெடுப்பவர்களைப் போல்,
சந்தி நின்று --- பல தெருக்கள் கூடுமிடத்தில்
நின்று,
அயலோடே போவார் --- அயலிடத்திற்கெனச் செல்லுவோர்கள்,
அன்பு கொண்டிட --- தங்கள் மீது அன்பு கொள்ளும்படி,
நீரோ போறீர் --- நீங்களா போகின்றீர்கள்?
அறியீரோ --- நான் நிற்பதை அறியவில்லை போலும்?
அன்று வந்து ஒரு நாள் போனீர் --- அன்றைத் தினம்
ஒரு நாள் இவ்விடம் வந்து போனீர்,
நாம் பின்பு கண்டு அறியோம் --- நாம் பின்னர் ஒருவரையொருவர்
பார்த்து அறியவே இல்லை,
ஈதே --- உம்முடைய அன்பு இதுவோ?
அன்றும் இன்றும் ஓர் போதோ போகா --- தாங்கள் என்னிடம்
வந்துபோன அன்று தொடங்கி இன்றுவரை பொழுதே போகிறதில்லை,
துயில் வாரா --- இரவில் தூக்கமே வருவதில்லை,
எங்கள் அந்தரம் வேறு ஆர் ஓர்வார் --- எமது இரகசியத்தைத்
தங்களைத் தவிர வேறு யார்தான் ஆராயவல்லார்?
பண்டு தந்தது போதாதோ --- முன்பு கொடுத்தீரே அதுவே
போதாதா?
மேல் இன்று தந்து உறவோ தான் --- இனிமேல் இன்றைக்கு
வேறுபொருள் கொடுத்துத்தான் உறவாட வேண்டுமென்பதில்லை,
ஈது ஏன் இது போதாது --- இது என்ன தாங்கள் இப்படி
வந்து தெரிசனம் கொடுத்தீரே இதுபோதாதோ?
இங்கு நின்று என் --- நடுவீதியாகிய இங்கு நின்றிருப்பது
எதற்கு?
வீடே வாரீர் --- வீட்டிற்கு வாருங்கள்,
என்று இணங்கிகள் மாயா லீலா --- என்று இவ்வாறு
இணக்கமாகப் பேசி (பொருள் பறிக்கும்) மாயா லீலைகளையுடைய,
இன்ப சிங்கியில் --- விலைமகளிரது இன்பமாகிய குளிர்ந்து
கொல்லும் விஷக்குழியில்,
வீணே வீழாது --- வீணே விழுந்து உழலாவண்ணம்,
அருள்வாயே --- அருள் புரிந்து காப்பாற்றவேண்டும்.
பொழிப்புரை
மேகங்கள் இன்புற்று உலவும் ஆகாய
பூதமாகியும், அவ்வாகாயத்தில்
அந்நாளில் தோன்றிய வாயுபூதமாகியும்,
பெருங்காற்றுடன்
நெருங்கியெழும் புகையுடன் கூடி யாவற்றையும் நீறாக்கும் வலியுடைய அக்கினி
பூதமாகியும், ஒலித்தெழுந்து வரும்
அப்பு பூதமாகியும், நீரை ஆடையாகவுடைய
பிருதிவி பூதமாகியும் நிலம் முதலாக (சத்திய உலகம் ஈறாகவுள்ள) ஏழுலகங்களும் புகழும்
தேவரீராகியும், அடியேனாகியும், பிரமதேவராகியும், உமது பிதாவாகிய சிவமூர்த்தியாகியும், எத்துணையவோ என அச்சத்தை விளைவிக்கும்
அண்டகோடிகளை ஆராய்பவராகியும், முடிவில் ஒன்றிலும்
தோயாத மாயவனாகிய திருமாலினது மருகரே!
ஒளி பெற்றதும் விசாலமுடையதுமாகிய
சோலைகளால் சூழப்பெற்ற புராதனத்தலமும், சங்குகள்
தவழப் பெற்றதுமாகிய திருச்செந்திலம்பதியில் வாழ்கின்றவரே!
அத்தலத்தில் வாழ்வோர்கள் பருகிய
நெஞ்சத்தில் தித்திக்கும் ஆனந்தத்தேனே!
தேவர் பெருமாளே!
அழகிய கரத்தினால் மெல்லிய கூந்தலை
ஆராய்பவரைப்போல் பல தெருக்கள் கூடுமிடத்தில் நின்று அயலில் செல்லும் ஆடவர் தம்மீது
அன்பு கொள்ளுமாறு "நீங்களா போகிறீர்? என்னைப் பார்க்கவில்லை போலும்? அன்று ஒருநாள் வந்து போனீர். பின்பு
உம்மைக் காணவேயில்லை. உமது அன்பு இதுவோ? நீர்
வந்து போன அன்று முதல் இன்று வரைப் பொழுதே போகிறதில்லை. இரவில் தூக்கமும்
வருவதில்லை. உம்மைத் தவிர எமது உள்ளக்கிடக்கையை ஆராயவல்லவர் யாவர்? முன்பு கொடுத்தது போதாதோ? இனிமேல் இன்று புதிதாகக் கொடுத்து உறவாட
வேண்டுமோ? வேண்டியதில்லை. என்ன
இது; நீ இங்கு வந்து
தெரிசனந் தந்தீரே இது போதாதோ? இங்கு நிற்பது எதற்கு? வீட்டிற்கு வாருங்கள்" என்று
இணக்கமாகப் பேசி (அழைத்துக் கொண்டுபோய்) மாய லீலைகளைப் புரியும் இன்பம்போல்
குளிர்ந்து கொல்லும் விலைமாதரது நச்சுக் குழியில் அவமே வீழ்ந்தழியா வண்ணம் அருள்
புரிவீர்.
விரிவுரை
அங்கை
மென்குழல்.......என்று இணங்கிகள் ---
நடு
வீதியில் நின்று அவ்வீதிவழியே செல்லும் இளைஞர்களை வலிந்து அழைத்து பல இனிய
வார்த்தைகளைக் கூறி கண்வலை வீசித் தமது நடை உடைகளால் மயக்கி, மனமுடனே பொருளையும் ஆவியையும் பறிமுதல்
புரியும் விலைமகளிரது சாகசங்களை எடுத்துக் கூறி, அதனிடத்து மயங்கா வண்ணம் விழிப்பை உண்டுபண்ணுகிறார்.
சிவஞானம் தலைப்படுமாறு பக்திநெறி சென்று, முத்தி நிலையடைய விழைவார்க்கு முதற்படி
மாதராசையை நீக்குவதேயாம். முதலில் விலைமகளிரை வெறுத்து, இல்லறத்தில் இருந்து, பின்னர்
அதனையும் வெறுத்து, நிராசையை மேற்கொள்ள வேண்டும்.
எங்கேனும்
ஒருவர்வர அங்கேகண் இனிதுகொடு
இங்குஏவர் உனதுமயல் தரியார்என்று
இந்தாஎன்
இனியஇதழ் தந்தேனை உறமருவ
என்றுஆசை குழைய,விழி இணையாடி
தங்காமல்
அவருடைய உண்டான பொருள்உயிர்கள்
சந்தேகம் அறவெபறி கொளுமானா
சங்கீத
கலவிநலம் என்றுஓது முத்திவிட
தண்பாரும் உனதுஅருளை அருள்வாயே” ---
திருப்புகழ்.
சந்தி
- என்பதற்கு மாலைநேரம் என்றும் பொருள் கொள்ளலாம்.
சிங்கி
- குளிர்ந்து கொல்லும் நஞ்சு.
மங்குல்
இன்புறு........மாயோன் ---
விஷ்ணு
என்றால் வியாபகன் என்று பொருளாதலின் பஞ்ச பூதங்களாகியும் விளங்குகின்றனர். சங்கரர்
தாமாய், முருகனாய், என்பதன் பொருள். நாராயணர்
சிவனடியாராதலால் சிவ சாரூப்யமும் விஷ்ணுவுக்கு உளதாதலால் சிவமூர்த்தி யாகவும்
விளங்குகிறார் என்றனர். நாராயணர் திருநீறு தரித்து உருத்திராக்கமணிந்து சிவ
வழிபாடு செய்கின்ற சிவனடியாரில் முதன்மையானவர். அங்ஙனம் சிவபெருமானை வழிபட்ட
ஆலயங்கள் இன்றைக்கும் ஆங்காங்கு விளங்குகின்றன. உதாரணம், திருவீழிமிழலை, திருமாற்பேறு.
உண்ட
நெஞ்சு அறி தேனே ---
பக்தி நெறி
சென்று தினந்தோறும் இறைவனை மனம் மொழி மெய் என்ற மூன்று கரணங்களாலும் வழிபட்டு
இறைவனது திருவருட் பெருமையை நினைந்து நினைந்து நெஞ்சம் நெகிழ்ந்து, கண்ணீர் மல்கி, உரை தடுமாறி, உரோமஞ் சிலிர்ப்ப ஒழியா ஆர்வத்துடன்
அன்பு செய்வார்க்கே அப்பெருமானுடைய தியானானந்தம் இனிக்கும். அவ்வாறு வழிபடத்
தெரியாத அபாக்கியவான்களுக்கு அம்மதுரம் இனிப்பது யாங்ஙனம்? அன்பு நெறி நின்று ஆண்டவனை
வழிபடுவார்க்கு அவ்வானந்தத் தேன் நினைக்குந்தோறும் பேசுந்தோறும் காணுந்தோறும்
மற்று எக்காலத்தும் இன்பத்தை வழங்கும். இதனை மணிவாசகனார் தமிழ்மறை தெரிவிக்குமாறு
காண்க.
தினைத்தனை
உள்ளதோர் பூவினில் தேன் உண்ணாதே
நினைத்தொறுங்
காண்தொறும் பேசும்தொறும் எப்போதும்
அனைத்துஎலும்பு
உள்நெக ஆனந்தத் தேன்சொரியும்
குனிப்புஉடை
யானுக்கே சென்றுஊதாய்க் கோத்தும்பி.
இறைவனைத்
தேனே என்று பரிந்து அழைக்கும் ஆன்றோர் அமுதவாக்குகளையும் உற்று நோக்குக.
“திருவே என் செல்வமே
தேனே வானோர்செழும் சுடரே.” --- அப்பர்.
“சேவின் மேல்வருஞ் செல்வனைச்
சிவனைத்
தேவதேவனைத் தித்திக்குந் தேனை” --- சுந்தரர்.
கருத்துரை
பஞ்சபூத சொரூபியாயும் யாவையுமாயும்
விளங்கும் திருமாலின் மருகரே! செந்திலதிப! உண்ட நெஞ்சறித் தேனே! தேவர் பெருமானே!
விலைமகளிரது மாயாலீலையிற் சிக்கி வீணே அழியாமல் நின் திருவருளால் அடியேனைக்
காத்தருளல் வேண்டும்.
No comments:
Post a Comment