திருப்பரங்குன்றம் - 0020. வரைத்தடம் கொங்கையாலும்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

வரைத்தடங் கொங்கை (திருப்பரங்குன்றம்)

முருகா!
பிறவிக் கடலைக் கடந்து முத்திக் கரை ஏற,
திருவடித் தாமரையாகிய தெப்பத்தை அருள்வாய்.


தனத்தனந் தந்த தான
     தனத்தனந் தந்த தான
          தனத்தனந் தந்த தான ...... தனதான


வரைத்தடங் கொங்கை யாலும்
     வளைப்படுஞ் செங்கை யாலும்
          மதர்த்திடுங் கெண்டை யாலும் ...... அனைவோரும்

வடுப்படுந் தொண்டை யாலும்
     விரைத்திடுங் கொண்டை யாலும்
          மருட்டிடுஞ் சிந்தை மாதர் ...... வசமாகி

எரிப்படும் பஞ்சு போல
     மிகக்கெடுந் தொண்ட னேனும்
          இனற்படுந் தொந்த வாரி ...... கரையேற

இசைத்திடுஞ் சந்த பேதம்
     ஒலித்திடுந் தண்டை சூழும்
          இணைப்பதம் புண்ட ரீகம் ...... அருள்வாயே

சுரர்க்குவஞ் சஞ்செய் சூரன்
     இளக்ரவுஞ் சந்த னோடு
          துளக்கெழுந் தண்ட கோளம் ...... அளவாகத்

துரத்தியன் றிந்த்ர லோகம்
     அழித்தவன் பொன்று மாறு
          சுடப்பருஞ் சண்ட வேலை ...... விடுவோனே

செருக்கெழுந் தும்பர் சேனை
     துளக்கவென் றண்ட மூடு
          தெழித்திடுஞ் சங்க பாணி ...... மருகோனே

தினைப்புனஞ் சென்று லாவு
     குறத்தியின் பம்ப ராவு
          திருப்பரங் குன்ற மேவு ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


வரைத்தடம் கொங்கை யாலும்,
     வளைப்படும் செங்கை யாலும்,
          மதர்த்திடும் கெண்டை யாலும், ......அனைவோரும்

வடுப்படும் தொண்டை யாலும்,
     விரைத்திடும் கொண்டை யாலும்,
          மருட்டிடும் சிந்தை மாதர் ...... வசமாகி,

எரிப்படும் பஞ்சு போல,
     மிகக்கெடும் தொண்ட னேனும்,
          இனல் படும் தொந்த வாரி ...... கரை ஏற,

இசைத்திடும் சந்த பேதம்
     ஒலித்திடும் தண்டை சூழும்
          இணைப்பதம் புண்டரீகம் ...... அருள்வாயே.

சுரர்க்கு வஞ்சம் செய் சூரன்
     இள க்ரவுஞ்சம் தனோடு
          துளக்க எழுந்து, அண்ட கோளம் ...... அளவாகத்

துரத்தி, அன்று இந்த்ர லோகம்
     அழித்தவன் பொன்றுமாறு,
          சுடப்பருஞ் சண்ட வேலை ...... விடுவோனே!

செருக்கு எழுந்து உம்பர் சேனை
     துளக்க வென்று, அண்டம் ஊடு
          தெழித்திடும் சங்க பாணி ...... மருகோனே!

தினைப்புனம் சென்று உலாவு
     குறத்தி இன்பம் பராவு
          திருப்பரங்குன்றம் மேவு ...... பெருமாளே.


பதவுரை


       சுரர்க்கு வஞ்சம் செய் சூரன் --- தேவர்கட்கு வஞ்சனையைச் செய்த சூரபன்மனும்,

     இள க்ரவுஞ்சம் தனோடு --- இளையனாகிய கிரவுஞ்சன் என்ற அரக்கனுடன்,

     துளக்க --- உலகம் நடுங்குமாறு,

     எழுந்து --- போர் புரிய எழுந்து,

     அண்டகோளம் அளவாக --- அண்டகோளகை வரை,

     துரத்தி --- தேவர்களைத் துரத்திச் சென்று,

     அன்று இந்த்ரலோகம் அழித்தவன் --- அந்நாளில் இந்திரனுடைய உலகத்தை அழித்தவனுமாகிய அரக்கர்கோன்,

     பொன்றுமாறு --- இறந்துபடுமாறு,

     சுட பரும் சண்ட வேலை விடுவோனே --- சுடுகின்ற மிக்க வேகமுடைய வேலாயுதத்தை விடுத்தருளியவரே!

      செருக்கு எழுந்து --- போருக்கு எழுந்து,  (செரு - போர்)

     உம்பர் சேனை துளக்க –-- வானவர் சேனை கலங்குமாறு,

     வென்று அண்டம் ஊடு --- வெற்றி பெற்று வான உலகில்,

     தெழித்திடும் --- சினந்து நின்ற,

     சங்கபாணி --- சங்கத்தை ஏந்திய திருக்கையினராகிய திருமாலின்,

     மருகோனே --- திருமருகரே!

      தினைப்புனம் சென்று --- தினைப்புனத்திற்குச் சென்று,

     உலாவு குறத்தி இன்பம் பராவு --- அங்கு உலவுகின்ற வள்ளியம்மை யாருடைய இன்பத்தைப் புகழ்ந்து பேசிய,

     திருப்பரங்குன்ற மேவு --- திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளியுள்ள,

     பெருமாளே --- பெருமையின் மிக்கவரே!

      வரைத் தடம் கொங்கையாலும் --- மலைபோன்ற பருத்த முலைகளினாலும்,

     வளைப்படுஞ் செங்கையாலும் --- வளையல்கள் நிறைந்த சிவந்த கரங்களாலும்,

     மதர்த்திடும் கெண்டையாலும் --- செழிப்புடைய மீன் போன்ற கண்களாலும்,

     அனைவோரும் வடுப்படும் தொண்டையாலும் --- எல்லோராலும் வடுப்படுத்தப்பட்ட கொவ்வைக்கனி போன்ற இதழாலும்,

     விரைத்திடும் கொண்டையாலும் --- நறுமணங் கமழ்கின்ற கூந்தலாலும்,

     மருட்டிடும் சிந்தை மாதர் வசம் ஆகி --- இளைஞர்களை மயக்குகின்ற மனமுடைய பொது மகளிருடைய வசப்பட்டு,

     எரி படும் பஞ்சுபோல --- நெருப்பில் வீழ்ந்த பஞ்சைப்போலே,

     மிகக் கெடும் தொண்டனேனும் --- மிகவும் கெடுகின்ற அடியேனாகிய சிறியேன்,

     இனல் படும் தொந்த வாரி --- துன்பப்படுகின்ற பந்த பாசத்தினால் வருகின்ற பிறவிக்கடலினின்றும்,

     கரையேற --- கரையேறி உய்யும்படி,

     இசைத்திடும் சந்தபேதம் ஒலித்திடும் தண்டை சூழும் --- இசை நூல்கள் கூறும் பலவகையான சத்தங்களை ஒலிக்கின்ற தண்டைகள் சூழ்ந்த,

     இணைப் பதம் புண்டரீகம் --- தாமரை போன்ற இரண்டு திருவடிகளையும்,

     அருள்வாயே --- அடியேனுக்குத் தந்து அருள் புரிவீர்.


பொழிப்புரை


         தேவர்களுக்கு வஞ்சனையைச் செய்த சூரபன்மன் இளமை பொருந்திய கிரவுஞ்சன் என்ற அசுரனோடு உலகம் நடுங்குமாறு போருக்கு எழுந்து சென்று, அண்டகடாகம் வரை அமரர்களைத் துரத்திச் சென்று, அந்நாளில் இந்திரனுடைய உலகமாகிய பொன்னுலகத்தை யழித்தபோது, அவ்வசுரன் மாளும்படி சுடுகின்ற மிகப் பெரும் வேகமுடைய வேலாயுதத்தை விடுத்தருளியவரே!

         போருக்கு எழுந்து தேவர்சேனை நடுங்குமாறு வெற்றி பெற்று, வானத்தில் சினங்கொண்ட சங்கமேந்திய திருக்கையராகிய கண்ணபிரானுடைய திருமருகரே!

         தினைப்புனத்தில் சென்று அங்கு உலாவுகின்ற வள்ளியம்மையாருடைய இன்பத்தைப் புகழ்ந்து பேசிய திருப்பரங் குன்றத்தில் எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே!

         மலைபோல் பருத்த முலைகளினாலும், வளையல் அணிந்த சிவந்த கரங்களாலும் எல்லோராலும் வடுப்படுத்தப்பட்ட கொவ்வைப்பழம் போன்ற சிவந்த இதழினாலும், வாசனை வீசுகின்ற கூந்தலினாலும், இளையோர்களை மயக்குகின்ற மனமுடைய பொதுமாதருடைய வசமாகி, நெருப்பில் வீழ்ந்த பஞ்சு போல் அறவே யழிகின்ற அடியேன், அல்லல் படுகின்ற பந்தம் நிறைந்த பிறவிப் பெருங்கடலினின்றும் கரையேறுமாறு, இசை நூல்கள் இயம்புகின்ற பலவகையான சத்தங்களை யொலிக்கின்ற மணித் தண்டைகள் சூழ்ந்துள்ள தேவரீருடைய தாமரை போன்ற திருவடிகள் இரண்டையுந் தந்து உதவி அருள்புரிய வேணும்.



விரிவுரை

எரிப் படும் பஞ்சு போல் ---

     விலைமகளிருடைய தனம், கரம், விழி, இதழ், குழல் முதலிய உறுப்புக்களைக் கண்டு மயங்கித் தியங்கி விரக அக்கினி மூண்டு, தீயில் விழுந்த பஞ்சுபோல் காமுகர் அழிவர்.

இனற்படுந் தொந்தவாரி ---

     இனல் --- இன்னல், (துன்பம்),

     சொந்தம் --- உறவு, கிளை --- மனைவி மக்கள் முதலிய தொடர்புகளால் வரும் பந்தபாசம். அதனால் பிறவிக் கடலில் வீழ்ந்து ஆன்மாக்கள் அல்லலுறும். அப்பிறவிக் கடலினின்றும் கரையேறும் பொருட்டு இறைவனுடைய திருவடித் தோணியைப் பற்றுதல் வேண்டும்.

யாது நிலைஅற்று அலையும் ஏழுபிறவிக் கடலை
 எறவிடும் நற்கருணை ஓடக்காரனும்”      --- திருவகுப்பு.

இசைத்திடுஞ் சந்தபேதம் ஒலித்திடும் தண்டை ---

     முருகவேள் என்றும் மாறாத இளம் பருவமுடையவர். அதனால் அப்பெருமானுடைய திருவடிகளில் இரத்தினமணித் தண்டைகள் விளங்குகின்றன. அவைகள் நானாவகையான வேத சந்தங்களை ஒலிக்கின்றன. அவைகள் மிகவும் இனிய நாதங்களை உண்டுபண்ணுகின்றன. உலகமே இனிமையின் ஓசையால் மகிழ்ச்சியுறுகின்றது. இனிய ஒலி மன ஒருமைப்பாட்டையும் தருகின்றது. வீணை ஓசையால் யானையின் மதமும் அடங்கும். இன்னோசையால் நோய் நீங்கும். இனிய நாதத்தைக் கேட்டு பாம்பு பசு முதலியவைகளும் உவகை உறுகின்றன. கொடிய விலங்குகளும் தத்தம் கொடுமைகளினின்றும் நீங்கப் பெறுகின்றன. எனவே இனிய நாதத்தினால் விளைகின்ற பயன்கள் பலப்பல. இத்தகைய இனிய நாதங்கள் இறைவன் திருவடித் தாமரையில் விளங்குந் தண்டைகளினின்று தோன்றுகின்றன.

.................................”அணிமணித் தண்டையார்க்கும்
செழுமலரடியுங் கண்டான் அவன் தவம் செப்பற் பாற்றோ?”
                                                                                      --- கந்தபுராணம்.

செருக்கு எழுந்து உம்பர்சேனை துளக்க வென்று, ண்டம் ஊடு செழித்திடுஞ் சங்கபாணி ---

     இந்த ஏழாவது அடி, கண்ணபிரான் இந்திரன் முதலிய இமையவருடன் போர்புரிந்து வென்று பாரிஜாத விருட்சத்தை மண்ணுலகிற்குக் கொணர்ந்த வரலாற்றைத் தெரிவிக்கின்றது.

பாரிஜாத வரலாறு

     பூபாரம் தீர்க்கவந்த புருஷோத்தமனாகிய கண்ணபிரான் துவாரகையில் வாழ்கின்றார். உருக்குமணியம்மையாரும் சத்யபாமையும் அவருடைய மனைவியர்களாக விளங்கினார்கள். இவர்கள் சீதேவி பூதேவிகளின் அமிசங்கள்.

     ஒருநாள் வீணை வல்லுநராகிய நாரதமுனிவர் இந்திர உலகிலிருந்து பாரிஜாத மலரால் தொடுத்த பரிமள மிக்க மலர் மாலையைக் கொணர்ந்து கண்ணபிரானிடம் கொடுத்து அவரைத் துதிசெய்து மகிழ்ந்து சென்றனர். கண்ணபிரான் அப்பாரிஜாத மலர்மாலையை உருக்குமணி அம்மையாரிடம் கொடுத்தனர். மாலை அணிந்த உருக்குமணி அம்மையைக் காண மாலையில் சத்யபாமை வந்திருந்தனர். தேவலோக மலர்மாலையைக் கண்டு அதிசயம் உற்றார். அதன் நறுமணம் நாசியைத் தொளைத்தது. “இது ஏது?” என்று வினவினார். உருக்குமணியம்மை “இது இந்திரனுடைய நந்தவனத்திலுள்ள பாரிஜாத மலர்மாலை; இதை அணிந்து கொண்டவர் இளமை நலங்குன்றாது இருப்பர். இதனை இன்று பகவான் பரிந்தளித்தனர்” என்றனர்.

     சத்யபாமை தனது இல்லம் போய், அணிகலன்களை எல்லாம் அகற்றி, நிலத்தில் வீழ்ந்து, கண்ணீர் சிந்தி, விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள். அங்கு நாரத முனிவர் வந்து சத்யபாமையைக் கண்டார். சத்யபாமை அவரைத் தொழுது அழுதாள்.

     அம்மணி! என்ன கவலை?” என்றார் நாரதர்.

     சுவாமி! அந்த மாய கிருஷ்ணர் இந்திர மலர் மாலையை உருக்குமணிக்கு ஈந்தனர். நான் பிரியமானவளாக இருந்தால் எனக்குத் தானே தரவேண்டும்? கொஞ்சுவதும் கூலாவுவதும் இங்கே. கொடுப்பதும் அடுப்பதும் அங்கே. என்ன அநியாயம்? நரகாசுர வதத்திற்காக நான் அவருக்குத் தேரோட்டி வெற்றி பெறச் செய்த உபகாரத்தைக்கூட அவர் நினைக்கவில்லை. இத்தனை மர்மமும் வர்மமும் உடையவர் என்று நான் அவரைக் கனவிலும் கருதவில்லை. எனக்கு இதயம் வெடித்து விடுகின்றது போல் இருக்கின்றது” என்று கூறினாள் சத்யபாமை.

     நாரதர், “தாயே! வருந்தற்க. இது உலக இயல்புதான். உன்னைக் கண்ட இடத்தில் அவர் கபட நாடகம் போடுகின்றார். அவருடைய அன்பு அத்தனையும் உருக்குமணிமேல் தான். இதை நீ இப்போதுதான் அறிகின்றாய் போலும். பாவம், உன்னைக் கண்டால் எனக்கு உள்ளம் உலைகின்றது. மலர் மாலையை அவளிடம் தந்தவர் அதில் ஒரு மலராவது உனக்குத் தரக் கூடாதா? கொடுத்து வைத்தது அவ்வளவுதான். மனதைத் திடப்படுத்திக்கொள். நான் வருகின்றேன்” என்று கூறிவிட்டுச் சென்றனர். நாரதர் சொல் அவள் தாபத்தை அதிகப்படுத்திவிட்டது.

     இரவு வழக்கம்போல் கண்ணபிரான் சத்யபாமையின் திருமாளிகைக்கு வந்தனர். அவள் அடிபட்ட மான் போலும், அணிகலன்களின்றி, தோகையை உதிர்த்த மயில் போலவும் முத்து முத்தாகக் கண்ணீர் சிந்திச் சிந்தாகுலம் உடையவளாக இருப்பதைக் கண்டனர். அவளை இரு கரங்களாலும் எடுத்துக் கண்ணீர் துடைத்து, “மானே! உனக்கு என்ன கவலை? நீ இப்படித் திடீர் என்று வருந்தக் காரணம் யாது? உள்ளதை யுரை. எனக்கு அன்பு மிக்க நீ வருந்தக் காண்பேனோ?” என்றனர்.

     சத்யபாமை, “சுவாமி! உமது அன்பும் சொல்லும் வெறும் கற்பனை. உம்மை நான் நம்பமாட்டேன். என்னிடம் வந்து என்னைப் புகழ்வதும் போற்றுவதும் புரட்டு. உம்மை நம்பவே கூடாது. நீர் செய்யும் பொய்யன்பைக் கண்டு இனி நான் ஏமாற மாட்டேன். இனி உமக்கு இங்கு வேலை கிடையாது. போய் வாரும்” என்றாள்.

         கண்ணபிரான், “என் அன்பு மிக்க ஆருயிரே! நீ இப்படி என்னை வெறுத்துரைக்க காரணம் யாது? நான் உன்னை என் உயிராகக் கருதியுள்ளேன். உன்னைவிட எனக்கு இனி யார் ஒருவருமில்லை” என்றார்.

         சத்யபாமை, “சுவாமி! ஏன் இந்த வஞ்சனை வார்த்தை பேசுகின்றீர்? இந்திரவுலக பாரிஜாத மலர் மாலையை யாருக்குக் கொடுத்தீர்? அவள் வீட்டிற்கே போம். நான் உண்மையாக உமக்கு அன்புடையவளாக இருப்பேனாயின் அம்மாலையை எனக்குத் தானே தந்திருப்பீர். இதனால் உமது பொய்மை புலப்படுகிறது” என்றாள்.

         கண்ணபிரான், “இவ்வளவும் நாரதர் செய்த நாடகமா? கண்மணியே! இதற்கா இந்த அமர்க்களம்? நான் வரும் வழியில் அவளைத் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்தது. அதற்காக நீ சிறிதும் வருந்த வேண்டாம். உனக்கு அந்த பாரிஜாத மரத்தையே கொணர்ந்து தருவேன். வருந்தற்க” என்றனர்.

         அந்த வேளையில் நாரத முனிவர் வந்தார். “வாரும் நாரதரே! நீர் வைத்த தீ இங்கு கொழுந்துவிட்டு எரிகின்றது. உமக்கு இப்படி வேடிக்கைப் பார்ப்பது விளையாட்டாக ஆகிவிட்டது. சீக்கிரம் போய் இந்திரனைக் கண்டு, நான் கூறியதாகக் கூறி பாரிஜாத விருட்சத்தை இங்கு அனுப்புமாறு செய்யும். இப்போதே அம்மரம் இங்கு வரவேணும்” என்றார். நாரத முனிவர் விரைந்து விண்ணுலகம் புகுந்து இந்திரனைக் கண்டு கண்ணபிரானுடைய கட்டளையைக் கூறினார்.

         இந்திரன் அது கேட்டு புன்முறுவல் செய்தான். “நாரத முனிவரே! இது என்ன விந்தை! பொன்னுலகத்தில் உள்ள பாரிஜாதத்தை மண்ணுலகத்திற்கு அனுப்புவதா? இது பாற்கடலில் அமுதத்துடன் பிறந்த ஐந்து தருக்களாகிய கற்பகம், அரிசந்தனம், பாரிஜாதம், மந்தாரம், சந்தானம், என்ற தருக்களில் ஒன்று. இதன் மகிமை அளவிடற்கரியது. ஆதலின் இதனை அனுப்புவது முடியாத காரியம். வேண்டுமாயின் இதன் மலரை அனுப்புவேன்” என்றான்.

         நாரதர் இச்செய்தியை வந்து பார்த்தசாரதியிடம் பகர்ந்தனர். உடனே வேணுகோபாலர் வெகுண்டெழுந்தார். “நன்றி கெட்ட இந்திரன், இம்மரத்தை அனுப்ப மறுத்தானோ? நரகனைக் கொன்று விண்ணுலகை அவனுக்குத் தந்த உதவியை ஒரு சிறிதும் எண்ணினானில்லை, அவனுக்கு புத்தி புகட்டுவேன்” என்று ஆயுதபாணியாகத் தேர் ஏறி விண்ணுலகம் சென்றார்.

         தேவர்கட்கும் தேவகி புதல்வருக்கும் கடும் போர் நடந்தது. அமரர்கள் புறங்காட்டி ஓடினர். இந்திரன் வந்து எதிர்த்தான். அவனுடன் சிறிது நேரம் போராடி அவனை அழிக்கத் திருவுளங்கொண்டு சக்கரப்படையை எடுத்தார். காசிப முனிவர் எதிர்த் தோன்றி இருவருக்குஞ் சமாதானம் செய்து போரை நிறுத்தினார். இந்திரன் கண்ணபிரானைத் தொழுது பாரிஜாத விருட்சத்தைக் கொடுத்து அனுப்பினான். அதனைப் பகவான் கொணர்ந்து சத்யபாமையின் அரண்மனையில் வைத்தனர். சத்யபாமை மனம் மகிழ்ந்தாள்.


கருத்துரை

         முருகா! பிறவிக் கடலைக் கடந்து முத்திக் கரை ஏற,திருவடித் தாமரையாகிய தெப்பத்தை அருள்வாய். 

No comments:

Post a Comment

பொது --- 1097. உறவின் முறையோர்க்கும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உறவின்முறை யோர்க்கும் (பொது) முருகா!  தேவரீரை அன்பொடு துதிக்க அறிவு தந்து அருளுவாய். தனதனன தாத்த தனதனன ...