அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
நிறுக்குஞ் சூதன
(திருச்செந்தூர்)
மாதர் மயல் தீர்ந்து, ஆறெழுத்தோதி,
முருகனை அகக்கண் கொண்டு காண அருள் பெற
தனத்தந்
தானன தத்தன தத்தன
தனத்தந் தானன தத்தன தத்தன
தனத்தந் தானன தத்தன தத்தன ...... தனதான
நிறுக்குஞ்
சூதன மெய்த்தன முண்டைகள்
கருப்பஞ் சாறொட ரைத்துள வுண்டைகள்
நிழற்கண் காணவு ணக்கிம ணம்பல ......
தடவாமேல்
நெருக்கும்
பாயலில் வெற்றிலை யின்புறம்
ஒளித்தன் பாகஅ ளித்தபி னிங்கெனை
நினைக்கின் றீரிலை மெச்சலி தஞ்சொலி ....யெனவோதி
உறக்கண்
டாசைவ லைக்குள ழுந்திட
விடுக்கும் பாவிகள் பொட்டிகள் சிந்தனை
யுருக்குந் தூவைகள் செட்டைகு ணந்தனி
....லுழலாமே
உலப்பின்
றாறெனு மக்கர முங்கமழ்
கடப்பந் தாருமு கப்ரபை யுந்தினம்
உளத்தின் பார்வையி டத்தினி னைந்திட ....அருள்வாயே
கறுக்குந்
தூயமி டற்றன ருஞ்சிலை
யெடுக்குந் தோளனி றத்தம ரெண்கரி
கடக்குந் தானவ னைக்கொல ரும்புயன்
......மருகோனே
கனத்தஞ்
சாபுரி சிக்கல்வ லஞ்சுழி
திருச்செங் கோடுஇ டைக்கழி தண்டலை
களர்ச்செங் காடுகு றுக்கைபு றம்பயம்
......அமர்வோனே
சிறுக்கண்
கூர்மத அத்திச யிந்தவ
நடக்குந் தேரனி கப்படை கொண்டமர்
செலுத்தும் பாதகன் அக்ரமன் வஞ்சனை......யுருவானோன்
செருக்குஞ்
சூரக லத்தையி டந்துயிர்
குடிக்குங் கூரிய சத்திய மர்ந்தருள்
திருச்செந் தூர்நக ரிக்குள்வி ளங்கிய
...... பெருமாளே.
பதம் பிரித்தல்
நிறுக்கும்
சூது அன மெய்த்தன முண்டைகள்,
கருப்பம் சாறொடு அரைத்து உள உண்டைகள்
நிழல்கண் காண உணக்கி, மணம் பல ...... தடவா,மேல்
நெருக்கும்
பாயலில் வெற்றிலையின் புறம்
ஒளித்து, அன்பாக அளித்த பின், இங்கு எனை
நினைக்கின்றீர் இலை மெச்சல் இதம்சொலி .....என
ஓதி
உறக்
கண்டு, ஆசை வலைக்குள் அழுந்திட
விடுக்கும் பாவிகள், பொட்டிகள், சிந்தனை
உருக்கும் தூவைகள் செட்டை குணம் தனில்
.....உழலாமே,
உலப்பு
இன்று ஆறு எனும் அக்கரமும், கமழ்
கடப்பம் தாரும், முக ப்ரபையும் தினம்
உளத்தின் பார்வை இடத்தில் நினைந்திட ..... அருள்வாயே!
கறுக்கும்
தூய மிடற்றன், அரும்சிலை
எடுக்கும் தோளன், நிறத்து அமர் எண்கரி
கடக்கும் தானவனைக் கொல் அரும்புயல்
......மருகோனே!
கனத்
தஞ்சாபுரி, சிக்கல், வலஞ்சுழி,
திருச்செங்கோடு, இடைக்கழி, தண்டலை,
களர், செங்காடு, குறுக்கை, புறம்பயம் ......அமர்வோனே!
சிறுக்கண்
கூர்மத அத்தி சயிந்தவ
நடக்கும் தேர் அனிகப் படை கொண்டு அமர்
செலுத்தும் பாதகன், அக்ரமன், வஞ்சனை...... உரு
ஆனோன்,
செருக்கும், சூர் அகலத்தை இடந்து, உயிர்
குடிக்கும் கூரிய சத்தி அமர்ந்து அருள்
திருச்செந்தூர் நகரிக்குள் விளங்கிய
...... பெருமாளே.
பதவுரை
கறுக்கும் தூய மிடற்றன் --- கரிய நிறம்
பொருந்திய தூய்மைமிக்க கழுத்தையுடைய சிவபெருமானுடைய,
அரும்சிலை --- அருமையான மலையை,
எடுக்கும் தோளன் --- எடுத்த (வலிமையுடைய)
தோள்களை உடையவனும்,
நிறத்து அமர் --- மார்பில் பொருந்திக்
குத்திய,
எண் கரி --- எட்டுத் திசையிலுள்ள யானைகளை,
கடக்கும் தானவனை கொல் --- வென்ற அசுரனும்
ஆகிய இராவணனைக் கொன்ற,
அரும் புயல் மருகோனே --- அருமை மிக்க மேகம்
போன்ற திருமாலின் திருமருகரே!
கன தஞ்சா புரி --- பெருமைமிக்க
தஞ்சாவூர்,
சிக்கல் --- திருச் சிக்கல்,
வலஞ்சுழி --- திருவலஞ்சுழி,
திருச்செங்கோடு --- திருச்செங்கோடு,
இடைக்கழி --- திருவிடைக்கழி,
தண்டலை --- திருத்தண்டலை நீணெறி,
களர் --- திருக்களர்,
செங்காடு --- திருச்செங்காடு,
குறுக்கை --- திருக்குறுக்கை,
புறம்பயம் அமர்வோனே --- திருப்புறம்பயம் என்ற திருத்தலங்களில்
எழுந்தருளியிருப்பவரே!
சிறு கண் கூர் மத அத்தி --- சிறிய
கண்களையும் மிகுந்த மதத்தையும் உடைய யானைகளும்,
சயிந்தவம் --- குதிரைகளும்,
நடக்கும் தேர் --- ஓட்டப்படுகின்ற தேர்களும்,
அனிக படை கொண்டு --- காலாள்களும் அடங்கிய
நால்வகைச் சேனைகளைக் கொண்டு,
அமர் செலுத்தும் பாதகன் --- போர் புரிகின்ற
பாவியும்,
அக்ரமன் --- அநீதியுடையவனும்,
வஞ்சனை உருவு ஆனோன் --- வஞ்சனையே ஒரு
வடிவமானவனும்,
செருக்கும் சூர் --- அகங்காரங் கொண்டவனுமாகிய
சூரபன்மனுடைய,
அகலத்தை இடந்து --- மார்பைப் பிளந்து,
உயிர் குடிக்கும் --- உயிரைப் பருகிய,
கூரிய சக்தி அமர்ந்து அருள் --- கூர்மைப்
பொருந்திய வேலாயுதம் தங்கி அருள்கின்ற,
திருச்செந்தூர் நகரிக்குள் விளங்கிய பெருமாளே
--- திருச்செந்தூர் என்ற திருத்தலத்துள் விளங்குகின்ற பெருமையின் மிக்கவரே!
நிறுக்கும் சூது அ(ன்)ன --- செல்வத்தை
நிறுத்துக் கொடுக்க வைக்கும் சூதுக் கருவிப் போன்ற
மெய் தன முண்டைகள் --- கொங்கைகளை உடம்பில்
உடைய தீயவர்களாகிய பொது மகளிர்,
கருப்பம் சாறொடு அரைத்து உள உண்டைகள் ---
கரும்புச் சாறுடன் சேர்த்து அரைத்த மருந்து உருண்டைகளை,
நிழல் கண் காண உணக்கி --- நிழலிலேயே வைத்து
உலர்த்தி,
மணம் பல மேல் தடவா --- அவ்வுருண்டைகளின் மேல்
நல்ல வாசனைகள் பலவற்றைத் தடவி,
நெருக்கும் பாயலில் --- நெருக்குகின்ற
படுக்கையில்,
வெற்றிலையின் புறம் ஒளித்து ---
அம்மாத்திரைகளை வெற்றிலைச் சுருளில் ஒளிய
வைத்து,
அன்பாக அளித்த பின் --- அன்புடன் கொடுத்து
அதன் பின்னர்,
இங்கு எனை நினைக்கின்றீர் இலை --- இங்கு
என்னை நீர் நினைப்பதே இல்லை,
மெச்சல் இதம் சொலி என ஓதி --- மெச்சி
மகிழ்ந்து இனிய சொற்களையும் சொல்கின்றீரிலை என்று சொல்லி,
உற கண்டு --- அவன் தன் மையலில் விழுந்ததைக்
கண்டு,
ஆசை வலைக்குள் அழுந்திட விடுக்கும் பாவிகள் ---
ஆசை வலைக்குள் அவன் விழுந்திடுமாறு செய்கின்ற பாவிகள்,
பொட்டிகள் --- வேசிகள்,
சிந்தனை உருக்கும் தூவைகள் --- எண்ணங்களை
உருக்குகின்ற புலால் உணவை உண்பவர்கள் ஆகிய விலைமகளிருடைய,
செட்டை குணம் தனில் உழலாமே --- உலோப
குணத்தில் அடியேன் சிக்குண்டு அலையாமற்படிக்கு,
உலப்பு இன்று --- அழிவு இல்லாத,
ஆறெனும் அக்கரமும் --- சடக்கர மந்திரத்தையும்,
கமழ் கடப்பம் தாரும் --- மணம் நிறைந்த கடப்ப
மலர் மாலையையும்,
முக ப்ரபையும் --- திருமுக ஒளியையும்,
தினம் - நாள்தோறும்,
உளத்தின் பார்வை இடத்தில் நினைத்திட அருள்வாயே
--- அடியேன் உள்ளக் கண்ணில் கண்டு அவற்றையே தியானிக்குமாறு திருவருள் புரிவீர்.
பொழிப்புரை
நீலகண்டத்தையுடைய தூய சிவபெருமானுடைய
அரிய திருக்கயிலாய மலையை எடுத்து வலிமையுடைய தோள்களை யுடையவனும், மார்பில் கொம்புகளால் குத்திய எட்டுத்
திசைகளின் யானைகளை வென்றவனும் ஆகிய இராவணனைக் கொன்ற அரிய நீலமேகவண்ணராகிய
திருமாலின் திருமருகரே!
பெருமைப் பொருந்திய தஞ்சாவூர், சிக்கல், திருவலஞ்சுழி, திருச்செங்காடு, திருவிடைக்கழி, திருத்தண்டலை, நீணெறி, திருக்களர், திருச்செங்கோடு, திருக்குறுக்கை, திருப்புறம்பயம் என்ற திருத்தலங்களில்
உறைபவரே! சிறிய கண்களும் மிகுந்த மதமும் உடைய யானைகள், குதிரைகள், செலுத்துகின்ற தேர்கள், காலாட்கள் என்ற நாற்படைகளைக் கொண்டு
போர் புரிகின்ற பாதகனும், அநீதி யுடையவனும், வஞ்சனையின் வடிவமானவனும் அலங்காரமுடையவனுமாகிய
சூரபன்மனுடைய மார்பைப் பிளந்து உயிரைப் பருகிய கூரிய வேலாயுதம் தங்கி அருள்கின்ற
திருச்செந்தூர் என்ற திருநகரில்
எழுந்தருளிய பெருமிதம் உடையவரே!
பொன்னை நிறுக்கவல்ல சூதாட்டத்திற்குரிய
கருவியையொத்த தனபாரங்களை உடம்பில் உடைய மௌடிகள், கரும்புச்சாறுடன் சேர்த்து அரைத்து
நிழலில் உலர்த்திய மருந்து உண்டைகளின் மீது நறுமணங்களைப் பூசி அதனை நெருங்கிப்
படுக்கின்ற படுக்கையில் வெற்றிலைச் சுருளில் மறைத்துக் கொடுத்து, அதனை அவன் உண்டபின், “என்னை நீர் நினைப்பதே இல்லை; மெச்சுகின்ற இனிய சொற்களைச் சொல்லுவதும்
இல்லை;” என்று கூறி, அவன் மையல் கடலில் விழுந்தது கண்டு ஆசை
வலை வீசி அதில் அழுந்தும்படிச் செய்கின்ற பாவிகள், வேசிகள், எண்ணங்களை எண்ணுகின்ற உள்ளத்தை
உருக்குகின்றவர்கள்; புலாலுண்பவர்களாகிய
விலைமகளிரது உலோப குணத்திற்சிக்கி அடியேன் உழலாமல், அழிவில்லாத ஆறெழுத்தாகிய சடக்கர
மந்திரத்தையும், மணங்கமழ்கின்ற
கடப்பமலர் மாலையையும் திருமுக ஒளியையும், நாள்தோறும்
அகக்கண்ணால் கண்டு தியானிக்கத் திருவருள் புரிவீர்.
விரிவுரை
நிறுக்குஞ்
சூதன மெய்த்தள முண்டைகள் ---
ஆளை
நிறுத்து, அதற்கிடைப் பொன்
தந்து ஆட்சி செய்யும் வல்லபமுள்ளது சூது. நாடு நகரங்கள் அத்துணையும் இழந்து நளனைக்
காடு போக வைத்தது இச்சூது. பாண்டவர்கள் தம்மையும் மனைவியையும் பணயமாக வைத்து ஆடி
நாடிழந்து நலிந்தார்கள். இத்தகைய சூது விளையாடுகின்ற கருவி தனத்திற்கு உவமையாக
நிற்பது.
கருப்பஞ்சாறொடு
அரைத்து உள உண்டைகள் ---
தம்பால்
வரும் ஆடவரை மயக்கும் பொருட்டு மாத்திரைகளை விலைமகளிர் தயாரிப்பார்கள். சில
மருந்து பொருள்களைக் கரும்புச் சாறுவிட்டு அரைத்து உருண்டை செய்வார்கள்.
நிழற்கண்
காண உணக்கி
---
உணக்குதல்
- உலர்த்துதல். மருந்து உருண்டைகளை வெய்யிலில் உலர்த்தினால் அதன் சத்துப் போய்விடும்.
அதனால் உயர்ந்த மருந்து உருண்டைகளையும், மூலிகைகளையும்
நிழலிலே உலர்த்தவேண்டும் என்பது மருத்துவமுறை.
மணம்
பல தடவா மேல்
---
அம்
மருந்து உருண்டைகளின் மீது, குங்குமப்பூ, ஏலரிசி, பச்சைக் கற்பூரம் முதலிய வாசனைப்
பொருள்களை அரைத்து அவற்றைத் தடவி தாம்பூல மாத்திரையாகச் செய்வார்.
தடவா
மேல் என்பதனை மேல் தடவா என்று சொல் மாற்றிப் பொருள் செய்யப்பட்டது. செய்யா என்ற
வாய்ப்பாட்டின் படி தடவா என வந்தது.
நெருக்கும்
பாயலில்
---
நெருங்கிச்
சயனிக்குஞ் சயன மெத்தையில் தம்பால் வரும் ஆடவருடன் இருந்து மயக்குவர்.
வெற்றிலையின்
புறம் ஒளித்து அன்பாக அளித்து ---
தாம்பூலச்
சுருளில் அம்மாத்திரையை மறைத்து அன்புடன் கொடுத்து தம்மைவிட்டு என்றும் அகலாவண்ணம்
மையல் புரிவார்கள்.
இங்கெனை
நினைக்கின்றீரிலை மெச்சலிதஞ் சொலி எனவோதி ---
அவ்விலைமகளிர்
முன்கூறியபடி அம்மருந்தினை யளித்தபின் “மெச்சிப் பேசி இனிது உரைடயாடுகின்றீர்
இல்லை; எம்மை நினைக்கின்றீர்
இல்லை” என்று பசப்புரைப் பகர்வர். மருந்துண்டு மயங்கிய அவர்கள் இனி அவளை
நினைக்காது கடவுளையா நினைக்கப் போகிறார்கள்?
ஆசை
வலைக்கு ளழுந்திட விடுக்கும் பாவிகள் ---
ஆடவரைத்
தமது ஆசையாகிய வலையிற் சிக்கி உய்வு பெறாவண்ணம் அதிலேயே அழுந்தியலையுமாறு புரிவா.்
பொட்டிகள் ---
பொட்டி-வேசை.
சிந்தனை
உருக்குந் தூவைகள் ---
சிந்தனை-எண்ணம் இங்கு ஆகுபெயராக மனத்தைக்
குறிப்பிடுகின்றது. பற்பல சிந்தனை செய்கின்ற மனதை உருக்குவர்.
தூ-இறைச்சி.
இறைச்சியுண்போர் ஆதலின் தூவையர் என்றார்.
செட்டை
குணம்
---
செட்டு
- உலோபம். விலைமகளிர் பொருள்களைப் பிறரிடமிருந்து நிரம்பவும் பறிப்பர். தாம்
அப்பொருளைச் செலவிடாது செட்டாக இருப்பர்.
உலப்பின்று
ஆறெனும் அக்கரம் ---
அழிவின்றி
விளங்குவது சடக்கரமந்திரம். அழிவற்ற தன்மையும் அருளவல்ல மந்திர வேந்து.
இத்திரு
ஆறெழுத்தைச் செபம்புரிவோர் பிறவிப் பெருங்கடலினின்றுங் கரையேறுவர்; ஆபத்து விபத்து என்ற இடர்களை
யெய்யமாட்டார்.
கறுக்கும்
தூய மிடற்றன் அருஞ்சிலை எடுக்கும் தோளன் ---
ஆலகாலவிடத்தை
உண்டு, சிவபெருமானுடைய
கண்டங் கருமையாக ஆயிற்று. ஆயினும் அது தூயது.
திருக்கயிலாய
மலையைப் பெயர்த்து எறியவேண்டும் என்று கருதிய இராவணன் அம்மலையைத் தோள் மீது
எடுத்து ஆர்த்தனன். பின்னர் அப் பரமபதி திருவிரல் நக நுனியால் சிறிது அழுத்திய
மாத்திரத்தில் பாறையின் கீழ் அகப்பட்ட எலிபோல் நலிவுற்றுக் கதறினான். அதற்குப்பின்
பாடி உய்வு பெற்றனன்.
நிறத்தமர்
எண்கிரி கடக்குந் தானவன் ---
நிறம்-மார்பு.
இராவணன் திக்குவிஜயம் புரிந்து வந்த போது, திக்கஜங்கள் எட்டும் வந்து தேர்மீது
அமர்ந்துள்ள இராவணன் மார்பில் குத்தின. ஒவ்வொரு யானைக்கும் நான்கு கொம்புகள்.
முப்பத்திரண்டு தந்தங்களும் அவன் மார்பில் பதிந்தன. அவன் எழுந்து நின்றான். எட்டு
யானைகளும் மறுவட்டைகள்போல் தொங்கின. வாளாயுதத்தால் கொம்புகளை வெட்டினான். யானைகள்
அஞ்சி அகன்று ஓடின. மார்பில் பதிந்த கொம்புகள் மார் பதக்கம்போல் அழகு செய்தன.
அரும்புயன்
மருகோனே
---
அரும்புயல்
எனக்கொண்டு உரை கூறப்பட்டது. புயல்-மேகம். உவம ஆகு பெயராகத் திருமாலைக்
குறிக்கின்றது. இனி புயன் என்றே கொண்டு அருமையான தோளையுடையவர் என்றும் பொருள்
கொள்ளலாம்.
கன
தஞ்சாபுரி - புறம்பயம் ---
இந்த
அடியில் பத்துத் தலங்களைக் கூறுகின்றாா். அடையில்லாமலே இத்தலங்களின் பெயர்கள்
சந்தத்திற்கு ஏற்ப அமைந்திருப்பது மிகவும் பாராட்டுதற்குரியது.
சிறு
கண் கூர்மத அத்தி ---
கூர்-மிகுதி.
யானைக்குச்
சிறிய கண்களும் மிகுந்த மதமும் இருக்கும். யானை நால்வகைப் படையில் சிறந்தது.
வேழ
நெடும்படை கண்டு விலங்கிடு வில்லாளோ?’ -கம்பர்
’செருக்கும்
சூர்’:-சூரபன்மன் பற்பல மாயங்கள் புரிந்தும், வஞ்சனையாகவும் போர் புரிந்தனன். அதனால்
“அக்ரமன்” “வஞ்சனை யுருவானோன்” என்றெல்லாம் அடிகளார் கூறுகின்றார். செருக்குதல் -
அலங்கரித்தல். ஆயிரத்தெட்டு அண்டங்களுக்கும் அரசன், தான் என்று அகங்கரித்தான். “கோலமா மஞ்ஞை
தன்னில் குலவிய குமரன் தன்னைப் பாலன் என்று” எண்ணினான். “கோலவாலெயிறு இன்னமுந்
தோன்றிலாக்குதலைப் பாலன் மேலையாயிரத் தெட்டெனும் அண்டமும் வென்றே ஏலுகின்றதோர்
நல்லிறை யாகிய என்னை வெல்லவல்லனோ” என்று கூறி இறுமாந்தான். முடிவில் பெருமானால்
அடக்கியாளப் பெற்றான்.
கருத்துரை
திருமால் மருகரே! சூரனை வதைத்த
செந்திலாண்டவரே! மாதர் மயல் தீர்ந்து, ஆறெழுத்தோதி
தேவரீரை அகக்கண் கொண்டு காண அருள் புரிவீர்.
No comments:
Post a Comment