அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கண்டுமொழி
(திருச்செந்தூர்)
முருகா!
அடியாருடன் கலந்து
சிவநெறி பெற அருள்
தந்ததன
தந்த தந்த தந்ததன தந்த தந்த
தந்ததன தந்த தந்த ...... தனதான
கண்டுமொழி
கொம்பு கொங்கை வஞ்சியிடை யம்பு நஞ்சு
கண்கள்குழல் கொண்டல் என்று ...... பலகாலும்
கண்டுளம்வ
ருந்தி நொந்து மங்கையர்வ சம்பு ரிந்து
கங்குல்பகல் என்று நின்று ...... விதியாலே
பண்டைவினை
கொண்டு ழன்று வெந்துவிழு கின்றல் கண்டு
பங்கயப தங்கள் தந்து ...... புகழோதும்
பண்புடைய
சிந்தை யன்பர் தங்களினு டன்க லந்து
பண்புபெற அஞ்ச லஞ்ச ...... லெனவாராய்
வண்டுபடு
கின்ற தொங்கல் கொண்டறநெ ருங்கி யிண்டு
வம்பினைய டைந்து சந்தின் ...... மிகமூழ்கி
வஞ்சியைமு
னிந்த கொங்கை மென்குறம டந்தை செங்கை
வந்தழகு டன்க லந்த ...... மணிமார்பா
திண்டிறல்பு
னைந்த அண்டர் தங்களப யங்கள் கண்டு
செஞ்சமர்பு னைந்து துங்க ...... மயில்மீதே
சென்றசுரர்
அஞ்ச வென்று குன்றிடைம ணம்பு ணர்ந்து
செந்தில்நகர் வந்த மர்ந்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கண்டுமொழி, கொம்பு கொங்கை, வஞ்சிஇடை, அம்பு நஞ்சு
கண்கள், குழல் கொண்டல், என்று, ...... பலகாலும்
கண்டு
உளம் வருந்தி நொந்து, மங்கையர் வசம் புரிந்து,
கங்குல்பகல் என்று நின்று, ...... விதியாலே
பண்டைவினை
கொண்டு உழன்று, வெந்து விழுகின்றல்
கண்டு,
பங்கய பதங்கள் தந்து, ...... புகழோதும்
பண்புடைய
சிந்தை அன்பர் தங்களின் உடன் கலந்து
பண்புபெற, அஞ்சல் அஞ்சல் ...... என வாராய்.
வண்டு
படுகின்ற தொங்கல் கொண்டு அற நெருங்கி,
இண்டு
வம்பினை அடைந்து, சந்தின் ...... மிகமூழ்கி,
வஞ்சியை
முனிந்த கொங்கை, மென்குற மடந்தை
செங்கை
வந்து அழகுடன் கலந்த ...... மணிமார்பா!
திண்திறல்
புனைந்த அண்டர் தங்கள் அபயங்கள் கண்டு,
செஞ்சமர் புனைந்து, துங்க ...... மயில்மீதே
சென்று, அசுரர் அஞ்ச வென்று, குன்றிடை மணம் புணர்ந்து,
செந்தில்நகர் வந்து அமர்ந்த ......
பெருமாளே.
பதவுரை
வண்டு படுகின்ற
தொங்கல் கொண்டு அற நெருங்கி --- வண்டுகள் இருந்து தேன்
அருந்துகின்ற பூமாலையைத் தாங்கியும்
மிகவும்
நெருங்கியும்,
ஈண்டு வம்பினை அடைந்து சந்தில் மிக மூழ்கி
--- பெருகிய கச்சையைச் சேர்ந்தும் சந்தனக்குழம்பில் மிகவும் முழுகியும்,
வஞ்சியை முனிந்த கொங்கை மென் குறமடந்தை
--- கொடி போன்ற இடையைச் சினந்து வருத்துகின்றதுமாகிய தனங்களையுடைய மென்மைத் தங்கிய வள்ளியம்மையாருடைய,
செம்கை வந்து அழகுடன் கலந்த மணி மார்பா
--- செம்மையான திருக்கரங்களால் அழகுடன் தழுவப்பெற்ற இரத்தின மணிகள் பொருந்திய
திருமார்பை உடையவரே!
திண் திறல் புனைந்த
அண்டர் தங்கள் அபயங்கள் கண்டு --- மிகுந்த வலிமையுடைய தேவர்களது அபயம் என்ற சொல்லைக் கேட்டு,
செம் சமர் புனைந்து --- செவ்வையான
போர்க்கோலங் கொண்டு,
துங்க மயில் மீதே சென்று --- தூய
மயில்வாகனமீது ஏறிச்சென்று,
அசுரர் அஞ்ச வென்று --- சூராதி
அவுணர்கள் அஞ்சுமாறு அவரை வெற்றி கொண்டு,
குன்றிடை மணம் புணர்ந்து --- திருப்பரங்குன்றத்தில்
தெய்வயானை அம்மையாரை மணம் புரிந்து,
செந்தில் நகர் வந்து அமர்ந்த பெருமாளே ---
திருச்செந்தூரில் வந்து விரும்பி வாழ்கின்ற பெருமையின்
மிக்கவரே!
மொழி கண்டு --- சொற்கள்
கற்கண்டு என்றும்,
கொங்கை கொம்பு --- தனங்கள் யானைக்
கொம்பு என்றும்,
இடை வஞ்சி --- இடையானது கொடி என்றும்,
கண்கள் அம்பு நஞ்சு --- கண்கள் அம்பு, ஆலாலவிடம் என்றும்,
குழல் கொண்டல் என்று --- கூந்தல்
மேகம் என்றும்,
பலகாலும் கண்டு உளம் வருந்தி நொந்து ---
பலகாலும் பார்த்து உள்ளம் (அவைகளின் மீதுள்ள அவாவினால்) துன்புற்று மெலிந்து,
மங்கையர் வசம் புரிந்து ---
பெண்களுடைய வசமாக இருந்து,
கங்குல் பகல் என்று நின்று --- இரவு
பகலாகக் கழிந்து,
விதியாலே பண்டை வினை கொண்டு உழன்று ---
விதிப்படியினால் பழைய வினைகளைக்
கொண்டு அதன்படி உழன்று,
வெந்து விழுகின்றல் கண்டு --- அடியேன்
மனம் வெந்து தளர்ந்து வீழ்வதைக் கண்டருளி,
பங்கய பதங்கள் தந்து --- தேவரீரது
திருவடித் தாமரைகளைத் தந்தருளி,
புகழ் ஓதும் பண்பு உடைய சிந்தை அன்பர்
தங்களின் உடன் கலந்து பண்பு பெற --- திருப்புகழை ஓதுகின்ற அடியார்களுடன்
அடியேனுங்கூடி நல்ல பண்பினைப் பெற்று உய்ய,
அஞ்சல் அஞ்சல் என வாராய் ---
“பயப்படாதே”, “பயப்படாதே”, என்று திருவாய் மலர்ந்து வந்தருளல்
வேண்டும்.
பொழிப்புரை
வண்டுகள் தங்கி தேனுண்டு மகிழ்கின்ற
பூமாலையைக் கொண்டதும், மிகுதியாக நெருங்கியிருப்பதும், பெரிய கச்சுப் பூண்டிருப்பதும், சந்தனக் குழம்பில் முழ்கியிருப்பதும், கொடிபோன்ற இடையை முனிந்து வருத்துவதும்
ஆகிய தனபாரமுடைய மெல்லிய வள்ளியம்மையார் திருக்கரங்களால் அழகாகத் தழுவுகின்ற
மணிகளுடன் கூடிய திருமார்பினை உடையவரே!
மிகுந்த வலிமையுடைய தேவர்களின் அபயக்
குரலைக் கேட்டு செவ்வையான போர்க்கோலங் கொண்டு, தூயமயிலின் மீதூர்ந்து சென்று
சூராதியவுணர்கள் அஞ்சுமாறு வென்று,
திருப்பரங்குன்றத்தில்
தெய்வயானையம்மையாரை மணம்புரிந்து திருச்செந்தூரில் விருப்பமுடன் வாழ்கின்ற
பெருமிதம் உடையவரே!
பெண்களுடைய சொற்களைக் கற்கண்டு என்றும், தனங்களை யானைக்கொம்பு என்றும், இடையைக் கொடியென்றும் கண்களை கணை விடம்
என்றும், கூந்தலை மேகம்
என்றும் புகழ்ந்து, பலகாலும் அவைகளையே
விரும்பிப் பார்த்து, அவாவினால் உள்ளம்
வருந்தி நொந்து பெண்களுடைய வசமாகி,
இரவு
பகலாகநின்று விதியினால் பழைய வினைகளையனுபவித்து உழன்று, மனம் வெந்து, வீணே அழிந்து வீழ்கின்ற அடியேனைக் கடைக்
கணித்து, தேவரீருடைய திருவடித்
தாமரைகளைத் தந்தருளிய உமது திருப்புகழை ஓதுகின்ற பண்புமிக்க அடியார்களுடன் கூடி, நல்ல பண்பினைப் பெற்று உய்ய “அஞ்சேல்”
அஞ்சேல்”, என்று கூறி வந்தருளல்
வேண்டும்.
விரிவுரை
கண்டு
மொழி
---
பெண்
மயல் கொண்டவர் அவர்களது அங்க அடையாளங்களையும், குணவிசேடங்களையும் மிகவும் உயர்வாக
எண்ணி உவமை கூறிப்புகழ்ந்து அழிவர்.
பித்தம்
கொண்டவனுக்கு வெய்யிலில் விருப்பமும், கற்கண்டில்
வெறுப்பும் உண்டாவது போல், மாதர் மயக்கம் உற்றானுக்குச்
சிவநெறிக் கசந்து, அவநெறி இனிக்கும்.
கண்டு
--- கற்கண்டு. பெண்களது மொழியைக் கற்கண்டு என வியந்து கூறுவர்.
கொம்பு
கொங்கை ---
தனங்கள்
யானைக் கொம்புக்கு நிகர் என்று கூறுவர்.
வஞ்சி
இடை
---
இடை
கொடிக்குச் சமானம் என்பர்.
அம்பு
நஞ்சு கண்கள்
---
கண்கள்
கணைக்கும் விடத்திற்கும் சமானம் என்பர். கூர்மையால் கணை என்றும், கருமையால் விடம் என்றும் உவமை கூறுவர்.
குழல்
கொண்டல்
---
இருண்ட
மேகத்தைக் கூந்தலுக்கு உவமை கூறுவர். இறைவனுடைய திருமேனியைப் புகழ்ந்து கூறாமல், அழிவதற்கு ஏதுவாகிய
புலால் உடம்பை இவ்வண்ணம் செஞ்சொற்களைத் தேடி வாடிப் பாடி அழிவர்.
பால்என்பது
மொழி, பஞ்சுஎன்பது பதம், பாவையர்கண்
சேல்என்ப
தாகத் திரிகின்றநீ, செத்திலோன் திருக்கை
வேல்என்கிலை, கொன்ற மயூரம்என்கிலை, வெட்சித் தண்டைக்
கால்என்கிலை, நெஞ்சமே, எங்ஙனே முத்தி காண்பதுவே.
--- கந்தர் அலங்காரம்.
பலகாலும்
கண்டு உளம் வருத்தி நொந்து ---
ஒருமுறை
கண்டதுடன் திருப்தியுறாமல் பலகாலும் அவைகளையே பார்த்துப் பார்த்து, அவாவினால் உள்ளம் வருந்தி வாடுவார்.
மங்கையர்
வசம் புரிந்து ---
பெண்
மயலால், தன் வசம் அழிந்து, மாதர் வசமாகி, அவர் ஏவலை ஆவலுடன் செய்து, கள்ளுண்ட வண்டுபோல் சுற்றுவர்.
“சதிசெய்து அவரவர் மகிழ
அணை மீது உருக்கியர்கள்
வசம் ஒழுகி அவர் அடிமை என, மாதர் இட்டதொழில்
தனில் உழலும் அசடனை உன் அடியே வழுத்த அருள்..... புரிவாயே”
--- (குமரகுருபர முருக குகனே) திருப்புகழ்.
கங்குல்
பகல் என்று நின்று ---
மோக
வெறி கொண்டவர்க்கு இரவெல்லாம் பகலாகவும், பகல்
எல்லாம் இரவாகவும் இருக்கும். உலகமெல்லாம் உறங்கும் சமயம் இவர்க்கு உறக்கமின்றி
யொழியும் இயற்கைக்கு மாறுபடுவர்.
பண்டை
வினை கொண்டு உழன்று, வெந்து விழுகின்றல்
கண்டு
---
`இப்பிறப்பில் இப்படி
நல்வினை செய்யாது அலைவது போல், முற்பிறப்பில் நன்மை
செய்யாது தீமையே செய்தபடியால், அவ்வினைக் கீடாக
வெவ்வினைகளின் பயனை அனுபவித்து,
அதனால்
வெதும்பி வீணே அழிந்து விழுகின்ற அடியேனை, அருட்பார்வையால் கடைக்கணித்து
அருள்புரிதல் வேண்டும் என்று இறைவனை அடிகள் வேண்டுகின்றனர்.
பங்கய
பதங்கள் தந்து
---
இறைவனுடைய
திருவடிகள் தாமரைக்கு நிகர் என்பது மரபு. தாமரையில் தேன் துளிக்கும்; இறைவனுடைய திருவடியில் கருணை
துளிக்கும்.
“கருணை கூர்ப்பன கழல்கள்
ஆர்ப்பன
கால்மேல் வீழேன், வீழ்வார் கால் மீதினும் வீழேன்”
--- (கவடுகோத்தெழு) திருப்புகழ்.
தாமரையில்
மணம் வீசும். இறைவனுடைய
திருவடியில் ஞானமணம் வீசும்.
தாமரையில்
உள்ள தேனை வண்டுகள் வந்து பருகும்.
இறைவனுடைய
திருவடியில் துளிக்கும் கருணையை அடியார்கள் பருகிப் பவப்பசியை மாற்றுவர்.
தாமரை
சிவந்திருக்கும், இறைவனுடைய
திருவடியும் செம்மைப் பண்புடன் விளங்கும்.
தாமரை
குளிர்ந்திருக்கும். இறைவனுடைய திருவடியும் பிறவி வெப்பத்தை மாற்றி பேரின்பம் தந்து
குளிர்விக்கும்.
புகழ்
ஓதும் பண்பு உடைய சிந்தை அன்பர் ---
அடியார்கள்
எப்போதும் இறைவனது திருப்புகழை ஓதிக் கொண்டே இருப்பர். அதனால் அவர்கள், கரப்பண்பும், சிரப்பண்பும், மொழிப்பண்பும், விழிப்பண்பும்,மனப்பண்பும் உடையவராவர். பண்பில்லாதவர்
மனிதராக மாட்டார்.
“அரம்போலுங்
கூர்மையரேனும் மரம் போல்வர்
மக்கட்பண்
பில்லாதவர்” ---
திருக்குறள்
“பழி பிறங்காப்
பண்புடை மக்கள்”
என்ற
திருவள்ளுவ தேவருடைய திருவாக்கைச் சிந்திக்க.
கரப்பண்பு
--- அறஞ் செய்தல்;
சிரப்பண்பு
--- ஈசனை வணங்குதல்;
மொழிப்
பண்பு --- உண்மை பேசுதல்;
விழிப்
பண்பு --- பிறன்மனை நோக்காது இருத்தல்;
மனப்
பண்பு --- பிறருக்குத் தீங்கு நினையாது நன்மையை நினைத்தல்.
அன்பர்
தங்களினுடன் கலந்து பண்பு பெற ---
பண்பு
பெற்ற அடியார்களுடன் கூடி அவர்களது குறிப்பின் வழி ஒழுகினால் அப்பண்பு பெற்று
உய்யலாம். ஆதலின் அரிதின் முயன்று நல்ல அடியாருடன் கலந்து ஒழுகவேண்டும்.
“மனநலம் நன்குஉடையர் ஆயினும்
சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்பு உடைத்து. --- திருக்குறள்.
“துரும்பனேன் என்னினும்
கைவிடுதல் நீதியோ,
தொண்டரொடு கூட்டு கண்டாய்” --- தாயுமானார்.
அஞ்சலஞ்ச
லென வாராய்
---
ஆபத்தில்
அஞ்சேல் என்ற பெருமாளும், ஏழு கடலும், எண்சிலம்பும், நிசிசரரும் அஞ்ச, அஞ்சும் இமையவரை அஞ்சல் என்ற பெருமாளும்
ஆகிய முருகவேள், உயிர்கள் துன்புற்று
முறையிட்ட போது, அச்சமகற்றும் பச்சை
மயிலில் வந்து தோன்றி அருள்புரிவீர்.
தொங்கல்
கொண்டற நெருங்கி இண்டு ---
ஞானாம்பிகையாகிய
வள்ளிநாயகியின் தனங்கள் இரண்டும் பரஞானம் அபரஞானம் என்ற இருஞானங்களாம். அது
நெருங்கி யிருக்கும். பரஞானத் திற்கும் அபரஞானத்திற்கும் மிகுந்த நெருக்கம்
உண்டல்லவா? ஈண்டு என்பது
குறுகுல் விகாரம் பெற்று இரண்டு என வந்தது.
வஞ்சியை
முனிந்த
---
வஞ்சி
--- கொடி.
கொடிபோன்ற
இடையைத் தெரிவிக்கிறது. இது அஞ்ஞானத்தைத் தெரிவிக்கிறது. ஞானமாகிய தனம்
அஞ்ஞானமாகிய இடையை முனிகின்றது.
கருத்துரை
வள்ளி மணவாளா! திருச்செந்திலாண்டவா!
அடியேன் அவநெறிச் சென்று அலையாமல் அடியாருடன் கலந்து சிவநெறி பெற அருள்புரிவாய்.
No comments:
Post a Comment