திரு மயிலை
கபாலீச்சரம்
(மயிலாப்பூர், சென்னை)
தொண்டை நன்னாட்டுத் திருத்தலம்.
சென்னை நகரின் மத்தியில் மைலாப்பூரில்
இத் திருத்தலம் அமைந்துள்ளது. சென்னை நகரின் பல பகுதிகளில் இருந்தும்
திருமயிலைக்கு நகரப் பேருந்து வசதிகள் உண்டு. திருமயிலை புறநகர் இரயில் நிலையம்
கோயிலுக்கு மிக அருகாமையில் உள்ளது.
இறைவர்
: கபாலீசுவரர்
இறைவியார்
: கற்பகவல்லியம்மை
தல
மரம் : புன்னை
தீர்த்தம் : கபாலி தீர்த்தம்
வழிபட்டோர் : அம்பிகை,இராமர்
தேவாரப்
பாடல்கள் : சம்பந்தர் - மட்டிட்ட
புன்னை
கிழக்கில் உள்ள கோபுரமே இராஜகோபுரமாகும். 7 நிலைகளும் சுமார் 120 அடி உயரமும் உடையது. ஒரு விசாலமான
வெளிப் பிரகாரமும் முக்கிய சந்நிதிகளைச் சுற்றி பிரகாரங்களும் அமைந்துள்ளன.
கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் நாம் காணபது கிழக்கு வெளிப்
பிரகாரம். இதில் வரிசையாக அண்ணாமலையார், நர்த்தன
விநாயகர், ஜகதீசுவரர் மற்றும்
நவக்கிரக சந்நிதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. தெற்குப் பிரகாரத்தில் கிழக்கு
நோக்கிய நவராத்திரி மண்டபமும், மேற்கு நோக்கிய
சிங்காரவேலர் சந்நிதியும் அமைந்துள்ளன. மேற்கு கோபுர வாயில் வழியாக உள்ளே
நுழைந்தவுடன் மேற்கு வெளிப் பிரகாரத்தில் சுவாமி சந்நிதி முன் உள்ள கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். இதைக்
கடந்தவுடன் சுவாமி சந்நிதி நுழைவு வாயிலின் முன்னுள்ள மண்டபத்தில் இடதுபுறம்
தெற்கு நோக்கிய இறைவி கற்பகாம்பாள் சந்நிதி உள்ளது. சுவாமி சந்நிதிக்குள் நுழைந்தவுடன்
இத்தலத்தின் இறைவன் கபாலீஸ்வரர் மேற்கு நோக்கி சுயம்பு லிங்க உருவில் காட்சி
தருகிறார். கருவறைச் சுற்றில் நாம் பைரவர், வீரபத்திரர், தேவார மூவர் மற்றும் 63 நாயன்மார்கள் ஆகியோரின்
திருவுருவங்களைக் காணலாம்.
சிவனைப் போலவே பிரமனுக்கும் ஐந்து
தலைகள் இருந்தன. இதனால் தானும் சிவனுக்கு ஈடானவனே என்ற எண்ணம் பிரமனுக்கு
ஏற்பட்டது. இதனால் அவர் ஆணவத்துடன் இருந்தார். பிரமன் ஒவ்வொரு யுகம் அழியும்போது
அழிந்து விடுவார். மீண்டும் புது யுகம் உண்டாகும்போது, புதிதாக ஒரு பிரமன் படைக்கப்படுவார். ஆக, பிரமன் ஒவ்வொரு யுகத்திலும் அழிந்து
மீண்டும் பிறப்பதால் அவர் நிலையில்லாதவர் ஆகிறார். சிவபெருமானோ ஆதியும், அந்தமும் இல்லாதவர். இதை உணராமல் பிரமன்
ஆணவம் கொண்டதால், அவரைத் திருத்த
நினைத்த சிவபெருமான், அவரது ஒரு கபாலத்தை
(தலையை) கிள்ளி கையில் ஏந்திக்கொண்டார். எனவே இவர், கபால ஈஸ்வரர் என்றழைக்கப்பட்டு
கபாலீஸ்வரர் ஆனார். தலமும் கபாலீச்சரம் என்று பெயர் பெற்றது.
மேற்கு வெளிப் பிரகாரத்தில்
அருணகிரிநாதரின் திருவுருவம் ஒரு சிறிய சந்நிதியில் சிங்காரவேலர் சந்நிதிக்கு நேர்
எதிரே உள்ளது. வடக்கு வேளிப் பிரகாரத்தில் தலவிருட்சம் புன்னை மரமும் அதன் அருகில்
புன்னைவனநாதர் சந்நிதியும் உள்ளது. அம்பிகை இத்தலத்தில் சிவனை வேண்டி
தவமிருந்தபோது, சுவாமி அவளுக்கு
புன்னை மரத்தின் அடியில் காட்சி கொடுத்தார். புன்னைவனநாதர் சந்நிதிக்குப்
பின்புறம் ஒரு பாணத்தின் மத்தியில் சிவலிங்கம் ஒன்று புடைப்புச்சிற்பமாக
இருக்கிறது. இச்சன்னதியில் அம்பாள் மயில் உருவில் வழிபட்ட சிலையும் இருக்கிறது.
வடக்கு வேளிப் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் மேற்கு நோக்கிய தனி சந்நிதியில்
சனி பகவான் அருள் புரிகிறார். தெற்குப் பிரகாரத்தில் இத்தலத்தில் முருகப்பெருமான் 6 திருமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும்
கொண்டு மேற்கு நோக்கி மயில் மீது எழுந்தருளியுள்ளார். தேவியர் இருவரும் யானை மீது
அமர்ந்து காட்சி தருகின்றனர். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 10 பாடல்கள் உள்ளது.
பார்வதிதேவி சிவனிடம், சிவாயநம என்னும் ஐந்தெழுத்து
மந்திரத்தின் பொருளை உபதேசிக்கும்படி வேண்டினாள். சிவனும் உபதேசித்தார்.
அவ்வேளையில் மயில் ஒன்று நடன மாடவே,
அதன்
அழகில் மயங்கிய அம்பிகை உபதேசத்தை கவனிக்காமல் வேடிக்கை பார்த்தாள். பாடத்தைக்
கவனிக்காத மாணவர்களுக்கு குரு தண்டனை கொடுப்பார். இப்போது குருவான சிவன், மாணவியான அம்பிகையை, எதன் அழகில் மயங்கினாயோ அதுவாகவே பிற
என்று மயிலாக மாறும்படி செய்து விட்டார். அம்பிகை தன் குற்றத்திற்கு விமோசனம்
கேட்டாள். பூலோகத்தில் தன்னை மயில் வடிவில் வழிபட்டுவர விமோசனம் கிடைக்கும்
என்றார் சிவன். அதன்படி அம்பிகை மயில் வடிவில் இத்தலம் வந்தாள். சிவனை வணங்கி
விமோசனம் பெற்றாள். இருவரும் இங்கேயே கோயில் கொண்டனர். பார்வதி மயில் உருவில்
இத்தலத்தில் இறைவனை பூஜை செய்ததால் இத்தலம் திருமயிலை என்றும் பெயர் பெற்றது.
எலும்பைப்
பெண்ணாக்கிய வரலாறு
திருமயிலாப்பூரிலே சிவநேசர் என்பவர்
ஒருவர் இருந்தார். அவர் ஒரு வணிகர், சிவன் அடியார். செல்வத்தில் சிறந்தவர். அவர் திருஞானசம்பந்தப்
பெருமானுடைய பெருமைகளைக் கேள்வியுற்று, அவர்பால்
பேரன்பு உடையவராய் வாழ்ந்திருந்தார்.
அவருக்கு மகப்பேறு இல்லாமல் இருந்தது. அவர் புரிந்த தவம் அடியார்க்கு அமுது
படைத்தலும், அவர்க்கு வேண்டியன
செய்தலுமே. அதன் பயனாக அவருக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. பூம்பாவை என்னும்
திருநாமம் சூட்டினார். பெண் குழந்தை பிறை
என வளர்ந்து வந்தது. "என் மகளுக்குக் கணவனாக வாய்க்கிறவனுக்கே எனது அருநிதி
உரியது" என்று சொல்லி வந்தார். அந் நாளில் அவரிடம் சிலர் வந்து
திருஞானசம்பந்தப் பெருமான் பாண்டி நாட்டில் நிகழ்த்திய அற்புதங்களைக் கூறினர். சிவநேசர்
அவர்களுக்குப் பொன்னையும் மணியையும் வாரி வாரி வழங்கினார். மகிழ்ச்சிப் பெருக்கால்
அவர், "என் மகள், என் நிதி, எனக்கு உள்ள மற்ற எல்லாவற்றையும், என்னையும் பிள்ளையாருக்கே
கொடுத்தேன்" என்று சுற்றத்தாருக்கு எல்லாம் கேட்குமாறு அறிவிக்கை செய்து
இன்பக் கடலில் திளைத்தார்.
ஒருநாள், பூம்பாவையார் நந்தவனத்துள்
சென்றார். பூக்கொய்யும் வேளையில், மல்லிகைப் பந்தரிலே மறைந்து இருந்த
பாம்பு தீண்டியது. சாய்ந்த அம்மையாரைச் சேடியர்கள் கன்னிமாடத்துக்குக் கொண்டு
சென்றார்கள். மணி, மந்திர, மருந்து முறைகள் செய்யப்பட்டன.
பயனில்லை. பூம்பாவையாரிடம் உயிர் நீங்கும் குறிகள் தோன்றின. துயரக் கடலில்
அழுந்திய சிவநேசர் ஒருவாறு தெளிவு பெற்று, "இந்த விடத்தை மாற்றுவோருக்கு நிதி
குவியல் குவியலாக வழங்கப்படும்" என்று பறை அறைவித்தார். அரச மருத்துவர்களும், மந்திரவாதிகளும் தங்களால் இயன்றவரை
மூன்று நாள்கள் முயன்றும் பயன் இல்லை. அது
கண்ட சிவநேசர், "பூம்பாவை
திருஞானசம்பந்தப் பெருமானுக்கு உரியவள். நான் ஏன் வருந்தல் வேண்டும். இவள் உடலை
எரித்து, எலும்பையும்
சாம்பலையும் பெருமான் வரும்வரை சேமித்து வைத்தல் வேண்டும்" என எண்ணி, அவ்வாறே செய்து, சாம்பலையும் எலும்பையும் குடத்தில்
இட்டு, அக்குடத்தை
அலங்கரித்து வைத்து இருந்தார்.
அவ் வேளையில், திருஞானசம்பந்தப் பெருமான்
திருவொற்றியூரில் எழுந்தருளி இருப்பதைக் கேள்வியுற்றார். திருமயிலாப்பூரிலே இருந்து திருவொற்றியூர் வரை
நடைப்பந்தல் அமைத்து, திருஞானசம்பந்தப்
பெருமானை திருமயிலாப்பூருக்கு வரவேற்றார்.
அப்பொழுது அடியவர்கள், சிவநேசருக்கு உற்றதை, திருஞானசம்பந்தப் பெருமானுக்கு
அறிவித்தார்கள்.
திருஞானசம்பந்தப் பெருமான், தம்முடன் இருந்த சிவநேசரை நோக்கி, "என்புக் குடத்தைக்
கொண்டு வாரும்" என்றார். சிவநேசர்
என்புக் குடத்தைக் கொண்டு வந்து கோபுரத்திற்கு எதிரே திருமுன்னர் வைத்தார். அவ் ஊரில் உள்ளாரும், பிற ஊராரும், சமணர்களும், மற்றவரும் அங்கே வந்து
சூழ்ந்தார்கள். திருஞானசம்பந்தப் பெருமான்
திருவருளைச் சிந்தித்து, "மட்டிட்ட" என்னும்
திருப்பதிகத்தை எடுத்து, "போதியோ
பூம்பாவாய்" என்று பாடலானார். பூம்பாவையார் குடத்தில் உருப்பெற்றார். "உரிஞ்சாய வாழ்க்கை" என்னும்
திருப்பாட்டைப் பெருமான் பாடியதும், குடம் உடைந்தது. பூம்பாவையார் பன்னிரண்டு வயது உடையவராய் வெளித் தோன்றினார். திருக்கடைக் காப்புச் சாத்தப் பெற்றதும், அடியவர்கள் அனைவரும் மகிழ்ச்சிக் கடலில்
ஆழ்ந்து அஞ்செழுத்தை ஓதித் துதித்தார்கள். தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். பூம்பாவையார்
திருஞானசம்பந்தப் பெருமானை வணங்கி நின்றார். பெருமான் சிவநேசரைப் பார்த்து, "உமது அருமை மகளை
அழைத்து வீட்டிற்குச் செல்க" என்றார்.
சிவநேசர் திருஞானசம்பந்தப் பெருமானைத் தொழுது, "இவளைத் திருமணம் செய்து அருளல்
வேண்டும்" என்றார். திருஞானசம்பந்தப்
பெருமானோ, "நீர் பெற்ற பெண், விடத்தால் மாண்டாள். பின்னர் சிவன்
அருளால் நாம் தோற்றுவித்தோம். உமது உரை
தகாது" என்று மறுத்தார். சிவநேசரும் அவர்தம் உறவினரும் மயங்கி நின்றனர். பெருமான்
திருக்கோயில் சென்று வழிபட்டார். சிவநேசர், பூம்பாவையாரை வேறு ஒருவருக்கும் மணம் செய்து
கொடுக்க விரும்பவில்லை. அம்மையார்
கன்னிமடாத்திலேயே தவம் கிடந்து,
சிவனடி
சேர்ந்தார்.
இக்கோயில் மேற்கு கோபுரம் அருகில்
பூம்பாவைக்கு சந்நிதி இருக்கிறது. அருகில் திருஞானசம்பந்தர் இருக்கிறார்.
திருஞானசம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சி, பங்குனிப் பெருவிழாவின் 8ம்
நாள் காலையில் நடக்கிறது. அப்போது திருஞானசம்பந்தர், பூம்பாவை, சிவநேசர் மற்றும் உற்சவ மூர்த்திகள்
கபாலி தீர்த்தத்திற்கு எழுந்தருள்கின்றனர். ஒரு கும்பத்தில் சாம்பலுக்குப் பதிலாக
நாட்டுச்சர்க்கரை வைத்து, திருஞானசம்பந்தரின்
பதிகம் பாடப்படுகிறது. பின்பு பூம்பாவை
உயிருடன் எழுந்ததை பாவனையாக செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை பார்த்தால்
தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அறுபது, எண்பதாம் திருமணம் செய்ய ஏற்ற தலம் இது.
பங்குனிப் பெருவிழாவின்போது, இக்கோயிலில் நடக்கும் பன்னிருதிருமுறை
விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இவ்விழாவின் 8ம் நாளில், 63 நாயன்மார்களும் வீதியுலா செல்கின்றனர்.
இதேபோல் மாசி பவுர்ணமியில் இங்கு நடக்கும் கடலாட்டு விழாவும் பிரசித்தி பெற்றது.
அப்போது சிவன் கடலுக்குச் சென்று தீர்த்த நீராடி வருகிறார். திருஞானசம்பந்தர் தனது
பதிகத்தில் 6-வது பாடலில் கடலாட்டு
விழாவைப் பற்றியும், பக்தர்கள் கடலாடுவதை
இறைவன் பார்த்தபடி இருப்பதையும் குறிப்பிடுவதால் தேவார காலத்தில் இத்தலம் கடலருகே
இருந்தது என்பது தெரிய வருகிறது.
காலை 6-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் தரிசனத்திற்காக
திறந்திருக்கும்.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "பால் காட்டும்
ஆர்த்தி பெற்ற மாது மயிலாய்ப் பூசித்தார் மயிலைக் கீர்த்தி பெற்ற நல் வேத
கீதமே" என்று போற்றி உள்ளார்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 1032
பொன்திரள்கள்
போல்புரிந்த சடையார் தம்பால்
பொங்கிஎழும்
காதல்மிகப் பொழிந்து விம்மிப்
பற்றிஎழும்
மயிர்ப்புளகம் எங்கும் ஆகிப்
பரந்துஇழியும்
கண்ணருவி பாய நின்று
சொல்திகழும்
திருப்பதிகம் பாடி ஏத்தித்
தொழுதுபுறத்து
அணைந்துஅருளித் தொண்ட ரொடும்
ஒற்றிநகர்
காதலித்துஅங்கு இனிது உறைந்தார்
உலகுஉய்ய உலவாத ஞானம்
உண்டார்.
பொழிப்புரை :நபொன்னின் திரள் என
முறுக்கிய சடையை உடைய இறைவர்பால் பெருகி எழுகின்ற பெருவிருப்பம் மிகவும் மேலோங்க
விம்மித் திருமேனியைப் பற்றி, மேல் எழுகின்ற
மயிர்க் கூச்சு மேனி எங்கும் நிரம்பப் பரவி, வழியும் கண்ணீர்ப் பெருக்குப்
பாய்ந்தொழுக நின்று, சொற்பொருள் மிகவும்
விளங்கும் திருப்பதிகத் தைப் பாடி,
உலகம்
உய்யும் பொருட்டுக் கெடுதல் இல்லாத சிவஞான அமுதுண்ட சம்பந்தர், திருவொற்றியூரில் விரும்பி அங்குத்
தங்கி யிருந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 1033
இன்ன
தன்மையில் பிள்ளையார் இருந்தனர், இப்பால்
பன்னு
தொல்புகழ்த் திருமயி லாபுரிப் பதியில்
மன்னு
சீர்ப்பெரு வணிகர்தம் தோன்றலார் திறத்து
முன்னம்
எய்தியது ஒன்றினை நிகழ்ந்தவா மொழிவாம்.
பொழிப்புரை : இங்ஙனம் ஞானசம்பந்தர்
எழுந்தருளி இருந் தார். இவ்வுலகில் புகழ்ந்து பேசப்படுகின்ற திருமயிலாப்பூர்ப்
பதியில் நிலைபெற்ற புகழையுடைய பெருவணிகர் குடியில் வந்த பெருமை யுடையவரின்
வாழ்நாளில் நிகழ்ந்ததொரு வரலாற்றை இனிப் புகல் வாம்.
பெ.
பு. பாடல் எண் : 1034
அருநி
தித்திறம் பெருக்குதற்கு அருங்கலம் பலவும்
பொருக
டல்செலப் போக்கியப் பொருட்குவை நிரம்ப
வரும்
மரக்கலம் மனைப்படப் பணைக்கரை நிரைக்கும்
இரு நிதிப் பெரும் செல்வத்தின் எல்லையில் வளத்தார்.
பொழிப்புரை : அரிய செல்வ வகைகளைப்
பெருக்கச் செய்வதற் காக பெரிய மரக்கலங்கள் பலவற்றையும் அலைமோதும் கடலின்கண்
செலுத்தி, அவ்வணிகத்தால்
திரட்டிய செல்வக் குவியல்கள் நிரம்பத் தம் இல்லத்தில் சேரும்படி கொண்டுவரும்
மரக்கலன்களின் குவியல், வரிசை பெறக்
குவிக்கும் பெருநிதி முதலான பெருஞ்செல்வங்களின் எல்லையில்லாத வளங்களை யுடையவராய்,
பெ.
பு. பாடல் எண் : 1035
தம்மை
உள்ளவாறு அறிந்தபின், சங்கரற்கு அடிமை
மெய்ம்மையே செயும் விருப்புடன் மிக்கது ஓர்அன்பால்,
பொய்மை
நீக்கிய மெய்ப் பொருள்இது எனக்கொளும் உள்ளச்
செம்மையே புரி மனத்தினார் சிவநேசர் என்பார்.
பொழிப்புரை : தம்மை உள்ளவாறு
அறிந்து கொண்டமையின் அதன்பின், இன்பந் தருபவரான
இறைவரிடத்தில் அடிமைத் திறத்தை மெய்ந்நெறி பிறழாது செய்யும் விருப்பத்துடன் கூடிய
அன்பினால், பொய்ம்மையைக் கடிந்த
மெய்ப் பொருள் இதுவே எனத் தெரிந்து கொண்ட உள்ளத்தில், செம்மை நெறியையே இடைவிடாது எண்ணி
ஒழுகும் திண்மை உடையவர் ஒருவர்;
அவர்
சிவநேசர் என்று அழைக் கப்படுவர்.
பெ.
பு. பாடல் எண் : 1036
கற்றை
வார்சடை முடியினார் அடியவர் கலப்பில்
உற்ற
செய்கையில் ஒழிவின்றி உருகிய மனமும்,
பற்றி
லாநெறிப் பரசமயங்களைப் பாற்றும்
செற்றம்
மேவிய சீலமும் உடையராய்த் திகழ்வார்.
பொழிப்புரை : தொகுதியான நீண்ட
சடையையுடைய இறைவரின் அடியவர்கள் வரின், பொருந்திய
செய்கையில் இடை விடாது உருகிய உள்ளத்தையும், இறைவரிடத்து அன்பு இல்லாத நெறிகளை யுடைய
பிறசமயங்களை நீக்குவதில் சினம் பொருந்திய நல்லொழுக்கத்தையும் உடையராய் விளங்குவர்.
பெ.
பு. பாடல் எண் : 1037
ஆன
நாள்செல, அருமறைக் கவுணியர் பெருமான்
ஞான
போனகம் நுகர்ந்ததும், நானிலம் உய்ய
ஏனை
வெஞ்சமண் சாக்கியம் இழித்து அழித்த அதுவும்,
ஊனம்
இல்புகழ் அடியர்பால் கேட்டு உவந்து உளராய்.
பொழிப்புரை : அவ்வாறான நாள்கள்
பலசெல்ல, அரிய வேதி யரான
கவுணியர் குலத்தில் தோன்றிய தலைவரான ஞானசம்பந்தப் பெருமான் சிவஞானம் உண்டதையும், உலகம் உய்யும் பொருட்டா கப் பிற
சமயங்களான கொடிய சமண புத்த சமயங்களின் கீழ் நிலையை விளக்கி, அவை அடைந்திருந்த தலைமையை ஒழித்ததையும், குற்றம் இல்லாத அடியவர்கள் வந்து
சொல்லக் கேட்டு மகிழந்தவராய்,
பெ.
பு. பாடல் எண் : 1038
செல்வ
மல்கிய சிரபுரத் தலைவர் சேவடிக் கீழ்
எல்லை
இல்லது ஓர் காதலின் இடையறா உணர்வால்
அல்லும்
நண்பகலும் புரிந்து அவர் அருள் திறமே
சொல்லவும்
செயல் கேட்கவும் தொழிலினர் ஆனார்.
பொழிப்புரை : அருட்செல்வம் நிறைந்த
சீகாழித் தலைவரான திருஞானசம்பந்தரின் திருவடிகளின்பால் அளவில்லாத ஒப்பற்ற பெரு
விருப்புடன் இடையறாத அன்பு பூண்ட உணர்ச்சியால், இரவும் பகலும் இடைவிடாது அவரையே
எண்ணியவராய், அவரது அருள்
தன்மையையே தம் வாக்கினால் புகழ்ந்து பாராட்டுதலும் அருட் செயல்களை அன்பர்களிடம்
கேட்டலுமாகிய இவையே தம் வாழ்க்கைக்குரிய செயல்களாக மேற்கொண்டவர் ஆனார்.
பெ.
பு. பாடல் எண் : 1039
நிகழும்
ஆங்குஅவர் நிதிப்பெரும் கிழவனின் மேலாய்த்
திகழும்
நீடிய திருவினில் சிறந்து உளர் ஆகிப்
புகழும்
மேன்மையில் உலகினில் பொலிந்து உளார்
எனினும்
மகவு
இலாமையின், மகிழ்மனை வாழ்க்கையின்
மருண்டு.
பொழிப்புரை : நிதிப்பெரும் கிழவனான
குபேரனுக்கு மேலாம் செல்வத்தில் பொலிந்து, புகழ் மிகுந்து இருந்த போதிலும், மனைமாட்சிக்கு உரிய
நன்மக்கள் பேறு இல்லாமையால் சிந்தை மயக்கம் கொண்டவராய்,
பெ.
பு. பாடல் எண் : 1040
அரிய
நீர்மையில் அருந்தவம் புரிந்தஅரன்
அடியார்க்கு
உரிய
அர்ச்சனை உலப்புஇல செய்தஅந் நலத்தால்,
கரிய
வாங்குழல் மனைவியார் வயிறுஎனும் கமலத்து
உரிய
பூமகள் என, ஒரு பெண்கொடி உதித்தாள்.
பொழிப்புரை : அரிய தன்மையுடன்
அருந்தவம் ஆற்றிவரும் சிவனடியார்களுக்குரிய அளவற்ற அருச்சனைகளைச் செய்துவர, அந் நன்மையால் அவரது கரிய சிறந்த
கூந்தலையுடைய மனைவியாரின் வயிறு என்னும் தாமரையில், உரிமை பொருந்திய பூமகள் போன்ற பெண்
ஒருத்தி பிறந்தாள்.
பெ.
பு. பாடல் எண் : 1041
நல்ல
நாள்பெற ஓரையில் நலம்மிக உதிப்பப்,
பல் பெருங் கிளையுடன் பெரு வணிகர் பார் முழுதும்
எல்லையில் தனம் முகந்து கொண்டு யாவரும் உவப்ப,
மல்லல்
ஆவண மறுகு இடைப் பொழிந்து, உளம்
மகிழ்ந்தார்.
பொழிப்புரை : நல்லநாளில் நல்ல
ஓரையில் நலம் பல பெறுதற்குரிய அக்குழந்தை பிறக்க, பல பெரிய சுற்றத்துடன் பெருவணிகரான
சிவநேசர், அளவற்ற செல்வங்களை
முகந்து எடுத்து, யாவரும் மகிழச்
செழிப்புடைய வீதியில் பொழிந்து உள்ளம் மகிழ்ந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 1042
ஆறு
சூடிய முடியினார் அடியவர்க்கு அன்பால்,
ஈறு
இலாத பூசனைகள் யாவையும் மிகச் செய்து,
மாறு
இலா மறையவர்க்கு வேண்டின எலாம் அளித்து,
பேறு
மற்று இதுவே எனும்படி பெருங்களி சிறந்தார்.
பொழிப்புரை : கங்கையைச் சூடிய
சடையையுடைய சிவபெரு மானின் அடியார்களுக்கு, அன்பு மிகுதியினால் எல்லையற்ற பூசை களை
மிகவும் செய்தும், ஒப்பில்லாத
மறையவர்களுக்கு அவர்கள் வேண்டியவற்றை எல்லாம் தந்தும், இதுவே பெரும் பேறாகும் என்று
சொல்லும்படி உள்ளம் மகிழ்ந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 1043
சூத
நல்வினை மங்கலத் தொழில்முறை தொடங்கி,
வேத
நீதியின் விதிஉளி வழாவகை விரித்த
சாத
கத்தொடு சடங்குகள் தசதினம் செல்ல,
காதல்
மேவிய சிறப்பினில் கடிவிழா அயர்ந்தார்.
பொழிப்புரை : குழந்தை பிறந்தவுடன்
செயத்தக்க நல்ல செயற்பாடுகளையெல்லாம் முறைப்படி செய்யத் தொடங்கி, மறைவழித் தவறாது விரித்துக் கூறிய
சாதகன்மம் முதலாக வரும் செயற்பாடுகளை குழந்தை பிறந்தபின் பத்து நாள்களிலும் செய்து, பெருவிருப்பம் பொருந்திய சிறப்பால்
மங்கல விழாவையும் செய்தனர்.
பெ.
பு. பாடல் எண் : 1044
யாவரும் பெரு மகிழ்ச்சியால் இன்புறப் பயந்த
பாவை
நல் உறுப்பு அணிகிளர் பண்புஎலாம் நோக்கிப்
பூவினாள் என வருதலின், பூம்பாவை என்றே
மேவும்
நாமமும் விளம்பினர் புவியின்மேல் விளங்க.
பொழிப்புரை : யாவரும்
பெருமகிழ்ச்சியால் இன்பத்தை அடையப் பெற்றெடுத்த பாவை போன்ற பெண்ணின் அழகு விளங்
கும் பண்புகளை எல்லாம் பார்த்து,
அவை
திருமகளின் திருத்தகவு என விளங்கலின், அப்பெண்ணுக்குப்
`பூம்பாவை\' என்ற பெயரை உலகத்தில் மேலாய்
விளங்குமாறு கூறிச் சூட்டினர்.
பெ.
பு. பாடல் எண் : 1045
திங்கள்
தோறுமுன் செய்யும்அத் திருவளர் சிறப்பின்
மங்க
லம்புரி நல்வினை மாட்சியில் பெருக
அங்கண்
மாநகர் அமைத்திட ஆண்டுஎதிர் அணைந்து
தங்கு
பேரொளிச் சீறடி தளர்நடை பயில.
பொழிப்புரை : மாதந்தோறும் முன்
செய்யப்படும் அந்தச் செல்வம் வளரும் மங்கலங்களாகிய சடங்குகளும் ஏனை நல்வினைகளும்
மாண்பு பொருந்தப் பெருகும்படி அங்குப் பெரிய நகரத்தினர்கள் அமைவுபடுத்தியிட; ஓராண்டு நிறைந்து தங்கும்
பேரொளியினையுடைய சிற்றடிகள் தளர்நடை பயில;
பெ.
பு. பாடல் எண் : 1046
தளரும்
மின்னின் அங்குரம் எனத் தமனியக் கொடியின்
வளர்
இளந்தளிர்க் கிளை என, மணிகிளர் ஒளியின்
அளவுஇல்
அம்சுடர்க் கொழுந்துஎன அணைவுறும் பருவத்து
இள அனப்பிணை அனையவர்க்கு ஏழுயாண்டு எய்த.
பொழிப்புரை : துவள்கின்ற
மின்னலின் முளைபோலவும்; பொன்னலாகியதோர்
கொடியினது வளர்கின்ற இளந் தளிரினது கிளைபோலவும்; இரத்தின மணிகளினின்றும் கிளர்கின்ற
ஒளியினது அளவுட்படாத அழகிய சுடர்க்கொழுந்து போலவும்;
சார்கின்ற
பருவங்களிலே; இளமையான பெண் அன்னப்
பறவை போலும் அவருக்கு ஏழு ஆண்டுகளின் பருவம் பொருந்த,
பெ.
பு. பாடல் எண் : 1047
அழகின்
முன்இளம் பதம்என, அணிவிளக்கு என்ன,
விழவு
கொண்டுஎழும் பேதையருடன் விளை யாட்டில்
கழலொடு
அம்மனை கந்துகம் என்று மற்று இனைய
மழலை
மென்கிளிக் குலம்என மனைஇடை ஆடி.
பொழிப்புரை : அழகு என்றதொரு
பொருளின் முதலிற் பெறப்படும் இளம்பதம் என்று சொல்லும்படியாகவும், அணிவிளக்கு என்று கூறும்படியும்
வளர்ந்து; விழக்கொண்டு கூடி
எழுகின்ற சிறுமியருடனே கூடி; விளையாடல் பயில்வதில் கழல் - அம்மானை -
பந்து என்று இன்னவற்றை மழலை ததும்பும் நிலை மெல்லிய கிளிக்கூட்டங்கள் போலப் பாடி
எழ மனையினுள்ளே ஆடி,
பெ.
பு. பாடல் எண் : 1048
பொன் தொடிச் சிறு மகளிர் ஆயத்தொடும் புணர்ந்து,
சிற்றில்
முற்றவும் இழைத்து, உடன் அடும்தொழில் சிறுசோறு
உற்ற
உண்டிகள் பயின்று, ஒளி மணி ஊசல் ஆடி,
மற்றும்இன்புறு
வண்டல் ஆட்டு அயர்வுடன் வளர.
பொழிப்புரை : பொன்னால் ஆன வளையலை
அணிந்த சிறுபெண்களின் கூட்டத்துடன் கூடிச் சிற்றில்களை முற்றக் கட்டியும், அதனுடன் சமைக்கும் தொழிலில் சிறு
சோற்றுடன் பொருந்திய உணவு கள் அமைத்தும், உண்டும்
பழகியும், ஒளியையுடைய மணிகள்
கட்டிய ஊஞ்சல் ஆடியும், இன்னும் இங்ஙனம்
இன்பம் பொருந்தும் வண்டல் பயிலும் ஆடல்களை ஆடியும் வளர,
குறிப்புரை : இறைவனையோ இறைவியையோ
அல்லது பெரியவர்களையோ பிள்ளைமைத் தன்மையில் வைத்துப் பாடுவது பிள்ளைத் தமிழாகும்.
இப்பூம்பாவைக்கோ உண்மையிலேயே பிள்ளைமைத் தன்மையில் இவ்வருஞ் செயல்களை வைத்துக்
கூறுகின்றார் சேக்கிழார் பெருமானார்.
பெ.
பு. பாடல் எண் : 1049
தந்தை
யாரும்அத் தளிர்இளம் கொம்புஅனாள் தகைமை
இந்த
வையகத்து இன்மையால், இன்புறு களிப்பு
வந்த
சிந்தையின் மகிழ்ந்து,மற்று "இவள்மணம் பெறுவான்
அந்தம்
இல் எனது அருநிதிக்கு உரியன்" என்று
அறைந்தார்.
பொழிப்புரை : தந்தையான சிவநேசரும், அந்தத் தளிர்த்த இளங்கொம்பைப் போன்ற
பெண்ணுக்கு ஒத்த பண்பு இவ்வுலகத்தில் வேறு எவருக்கும் இல்லாததால், இன்பத்துடன் கூடிய களிப்புப் பொங்கிய
உள்ளத்தில் மகிழ்ச்சியடைந்து, பெறற்கரிய பேறாகிய
இவளை மணம் செய்து கொள்ளும் மணமகனே என் எல்லையற்ற அரிய செல்வங்களுக்கெல்லாம் உரிமை
உடையவன் ஆவன் என்று சொன்னார்.
பெ.
பு. பாடல் எண் : 1050
ஆய
நாள்களில் அமண்பயில் பாண்டிநாடு அதனைத்
தூய
ஞானம்உண்டு அருளிய தோன்றலார் அணைந்து,
மாய
வல்அமண் கையரை வாதில்வென் றதுவும்,
மேய
வெப்புஇடர் மீனவன் மேல்ஒழித் ததுவும்.
பொழிப்புரை : முன்கூறிய அவ்வாறாகிய
நிகழ்ச்சிகள் நிகழ்ந்த காலத்தில்;
சமணர்கள்
மிக்கிருந்த பாண்டி நாட்டினைத் தூய ஞானபோனகம் உண்டு அருளிய பிள்ளையார் சென்றணைந்து; வஞ்சனையில் வல்ல அமணர்களாகிய கீழ்மக்களை
வாதில் வென்றதுவும்; வந்து பொருந்திய வெப்பு நோயின்
துன்பத்தினைப் பாண்டியனது உடலினின்றும் நீக்கியதுவும்;
பெ.
பு. பாடல் எண் : 1051
நெருப்பில்
அஞ்சினார் தங்களை நீரில் ஒட்டியபின்
மருப்பு
நீள்கழுக் கோலின்மற்று அவர்கள் ஏறியதும்,
விருப்பினால் திரு நீறு மீனவற்கு அளித்து
அருளிப்
பொருப்பு
வில்லியார் சாதனம் போற்றுவித் ததுவும்.
பொழிப்புரை : அனல் வாதத்தில்
தோற்று அஞ்சிய சமணர் களைப் புனல் வாதத்தால் வென்ற பின்பு, கூர்மையான கொம்பைப் போன்ற நீண்ட
கழுமரங்களில் அந்தச் சமணர்கள் ஏறியதும் விருப்பத்துடன் பாண்டிய மன்னனுக்குத்
திருநீற்றை அளித்து அதன்மூலம் மலையா கிய வில்லையுடைய சிவபெருமானின் திருநீற்றுச்
சாதனத்தைப் போற்றுவித்தும்,
பெ.
பு. பாடல் எண் : 1052
இன்ன
வாறுஎலாம் அறிந்துஉளார் எய்திஅங்கு இசைப்ப,
சொன்ன
வர்க்குஎலாம் இருநிதி தூசுடன் அளித்து,
மன்னு
பூந்தராய் வள்ளலார் தமைத்திசை நோக்கிச்
சென்னி
மேல்கரம் குவித்து,வீழ்ந்து, எழுந்து, செந் நின்று.
பொழிப்புரை : (ஆகிய) இவ்வரிய
செயல்களை எல்லாம் அறிந் தவர் அங்குச் சொல்ல, வந்து சொன்னவர்க்கெல்லாம் பெருநிதியங்
களை ஆடைகளுடன் அளித்து, நிலைபெற்ற சீகாழிப்
பதியின் வள்ள லாரான ஞானசம்பந்தரை,
அவர்
இருந்த திசையை நோக்கித் தலைமீது கைகுவித்துக் கூப்பிக் கொண்டு நிலமுற விழுந்து, வணங்கி எழுந்து நேர் நின்று,
பெ.
பு. பாடல் எண் : 1053
சுற்றம்
நீடிய கிளைஎலாம் சூழ்ந்துஉடன் கேட்ப,
"கற்ற மாந்தர்வாழ்
காழிநாடு உடையவர்க்கு, அடியேன்
பெற்று
எடுத்தபூம் பாவையும், பிறங்கிய நிதியும்,
முற்றும்
என்னையும் கொடுத்தனன் யான்" என்று
மொழிந்தார்.
பொழிப்புரை : சுற்றத்தவரும் நீண்ட
கிளைஞர்களும் கேட்கு மாறு, உரத்த குரலில் `கற்றவர்களாகிய மக்கள் வாழ்கின்ற
சீகாழிப் பிள்ளையாருக்கு, அடியேன் பெற்ற
பூம்பாவையையும், விளக்கமான என்பெருஞ்
செல்வத்தையும், முற்றவும் அடிமையாக
என்னையும் யான் தந்தேன்!' என உரைத்தார்.
பெ.
பு. பாடல் எண் : 1054
எல்லை
இல்பெரும் களிப்பினால் இப்பரிசு இயம்பி,
முல்லை
வெண்நகை முகிழ்முலை யாருடன் முடியா
மல்கு
செல்வத்தின் வளமையும் மறைவளர் புகலிச்
செல்வரே
உடை யார்எனும் சிந்தையால் மகிழ்ந்தார்.
பொழிப்புரை : அளவு இல்லாத
பெருமகிழ்ச்சியினால் இவ் வாறு சிவநேசர் சொல்லி, முல்லையரும்பைப் போன்ற கூர்மையும்
வெண்மையுமான பல்வரிசையையும், முகிழ்க்கும்
மார்பகங்களை யும், உடைய மகளுடன்
எல்லையற்ற நிரம்பிய செல்வ வளங்களை யும், மறையவரின்
சீகாழிப் பதியில் தோன்றிய செல்வரான திருஞானசம்பந்தரே உடையவர் என்று துணிவு கொண்ட
உள்ளத்தில் மகிழ்வும் அடைந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 1055
ஆற்று
நாள்களில் அணங்கனார் கன்னிமா டத்தின்
பால் தடம்பொழில் மருங்கினில் பனிமலர் கொய்வான்
போற்று
வார்குழல் சேடியர் உடன்புறம் போந்து
கோல்தொடித்
தளிர்க் கையினால் முகைமலர் கொய்ய.
பொழிப்புரை : இங்ஙனம் சிவநேசர்
செயல் ஆற்றிவரும் நாள்களில், தெய்வப் பெண் போன்ற
பூம்பாவையார் கன்னிமாடத் தில், பால் போன்ற தூய நீர்
நிறைந்த பொய்கை அருகில், குளிர்ந்த மலர்களைக்
கொய்வதற்காகத் தம்மைப் போற்றும் நீண்ட கூந்தலை உடைய தோழியருடனே வெளியே சென்று, திரண்ட வளையலை அணிந்த தளிர் போன்ற
கைகளால் முகைக்கும் பருவத்து மலர்களைக் கொய்ய,
பெ.
பு. பாடல் எண் : 1056
அன்பர்
இன்புறும் ஆர்வத்தின் அளித்த பாங்கு அல்லால்,
பொன் பிறங்கு நீர்ப் புகலி காவலர்க்கு இது புணராது
என்பது
உட்கொண்ட பான்மை, ஓர் எயிற்று இளம் பணியாய்
முன்பு
அணைந்தது போலவோர் முள்எயிற்று அரவம்.
பொழிப்புரை : அன்பரான சிவநேசர்
இன்பம் பொருந்துகின்ற விருப்பத்தால் அளித்த அளவிலன்றிப் பொன்கொழிக்கும் நீரை உடைய
சீகாழித் தலைவராய ஞானசம்பந்தருக்கு இது சேர்வுறாது என்பதை மனத்துள் கொண்டுள்ள
ஊழானது, நச்சுப் பற்களையுடைய
ஒரு பாம்பாகி முன்வந்ததைப் போல,
முள்
போன்ற பற்களையுடைய ஒரு பாம்பு,
குறிப்புரை : சிவநேசர், சீகாழித் தலைவருக்கெனத் தம் மகளாரையும், பொருள்களையும் உரிமைப் படுத்திய
அளவிலன்றி, அத்திரு மகளாரோ, அப்பொருள்களோ அவரைச் சார்தற்குரிய
ஊழ்இல்லை. ஆதலின் அவ்வூழே ஒருபாம்பாக வந்தது என ஆசிரியர் குறிப்பாராயினர்.
பெ.
பு. பாடல் எண் : 1057
மௌவல்
மாதவிப் பந்தரில் மறைந்துவந்து எய்திச்
செவ்வி
நாண்முகை கவர்பொழுதினில் மலர்ச் செங்கை
நவ்வி
வாள்விழி நறுநுதல் செறிநெறி கூந்தல்
கொவ்வை
வாய்அவள் முகிழ்விரல் கவர்ந்தது குறித்து.
பொழிப்புரை : மல்லிகையும்
முல்லையுமாகப் படர்ந்த பந்தலில் மறைந்து வந்து சேர்ந்து, பூம்பாவையார் புதிய அரும்புகளைப்
பறிக்கின்றபோது, மான்போன்ற கூர்மையான
கண்களையும், நல்ல நெற்றி யையும், செறிவும் நெறிவும் உடைய கூந்தலையும், கோவைக் கனி போன்ற வாயையும் உடைய
பூம்பாவையரின் மலர் போன்ற கையில்,
பூக்கொய்யக்
கூப்பிய விரலைக் கடித்தது.
பெ.
பு. பாடல் எண் : 1058
நாலு
தந்தமும் என்புஉறக் கவர்ந்து, நஞ்சு உகுத்து
மேல்
எழும்பணம் விரித்துநின்று ஆடிவேறு அடங்க
நீல
வல்விடம் தொடர்ந்துஎழ நேரிழை, மென்பூ
மாலை
தீயிடைப் பட்டது போன்று உளம் மயங்கி.
பொழிப்புரை : நச்சுப் பற்கள்
நான்கும், எலும்பளவும் அழுந்தக்
கடித்து, நஞ்சைச் செலுத்திப்
படத்தை விரித்து நின்று ஆடிய அப்பாம்பு, வேறு
இடத்தில் மறைந்து விட்டது. அவ்வாறாகவே, கரிய
கொடிய நஞ்சு அதனைத் தொடர்ந்து மேலே எழுந்ததால், மென்மை ஆன பூமாலையில் தீப்பட்டதைப் போல, நல்ல அணிகளை அணிந்த பூம்பாவையார் உள்ளம்
மயங்கி,
பெ.
பு. பாடல் எண் : 1059
தரையில்
வீழ்தரச் சேடியர் வெருக்கொண்டு தாங்கி
வரைசெய்
மாடத்தின் உட்கொடு புகுந்திட, வணிகர்
உரையும்
உள்ளமும் நிலைஅழிந்து உறுதுயர் பெருகக்
கரைஇல்
சுற்றமும் தாமும்முன் கலங்கினார் கலுழ்ந்தார்.
பொழிப்புரை : பூம்பாவையார் மயங்கி
நிலத்தில் விழ, தோழியர் திடுக்கிட்டு
அஞ்சித் தாங்கிச் சென்று, அவருக்கென்று
அமைக்கப்பட்ட கன்னிமாடத்தில் கொண்டு புக, அதனால்
சிவநேசர் சொல்லும் மனமும் நிலையழிந்து துன்பம் மேலிட, அளவற்ற சுற்றத்தாரும் தாமும் முன்கலங்கி
அழுதனர்.
பெ.
பு. பாடல் எண் : 1060
விடம்தொலைத்திடும்
விஞ்சையில் பெரியராம் மேலோர்
அடர்ந்த
தீவிடம் அகற்றுதற்கு அணைந்துஉளார் அனேகர்
திடங்கொள்
மந்திரத் தியான பாவக நிலை முட்டி
தொடர்ந்த
செய்வினைத் தொழிலராய்த் தனித்தனிச் சூழ்வார்.
பொழிப்புரை :நநஞ்சைத் தீர்த்திடும்
கலையில் கைவந்த பெரி யோரான மேலோர் பலர், கொடிய
அந்நஞ்சைப் போக்குதற்குச் சேர்ந் தவர்களாய், வன்மையுடைய மந்திரமும் தியானமும்
பாவனையும் முட்டி நிலையுமாய்த் தொடர்ந்த தீர்வுச் செயல்களைத் தனித்தனிச் செய்யச்
சூழ்ந்து,
பெ.
பு. பாடல் எண் : 1061
மருந்தும்
எண்இல மாறுஇல செய்யவும்,
வலிந்து
பொருந்து
வல்விடம் ஏழுவேகமும் முறை பொங்கிப்
பெரும்
தடம்கண் மென்கொடி அனாள் தலைமிசைப் பிறங்கித்
திருந்து
செய்வினை யாவையும் கடந்து தீர்ந்துஇலதால்.
பொழிப்புரை : மேற்கூறப்பட்ட
நான்குடன், அளவில்லாத இணையற்ற
மருந்துகளைக் கொடுத்தும் தடவியும் சிகிச்சை செய்யவும், வன்மையாய்ப் பற்றிக் கொண்ட கொடிய நஞ்சு, ஏழு வேகமும் முறையாய் மேல்ஏறி, அகன்ற கண்களையுடைய மென்மை ஆன கொடி போன்ற
பூம்பாவையாரின் தலையை மேற்கொண்டு விளங்க, திருந்துமாறு
செய்த தீர்வினைகள் எல்லாவற்றையும் கடந்து தீராமல் போகவே,
பெ.
பு. பாடல் எண் : 1062
ஆவி
தங்குபல் குறிகளும் அடைவுஇல ஆக,
மேவு
காருட விஞ்சை வித்தகர்இது விதிஎன்று
ஓவும்
வேளையில், உறுபெரும் சுற்றமும்
அலறிப்
பாவை
மேல்விழுந்து அழுதனர் படர்ஒலிக் கடல்போல்.
பொழிப்புரை : உயிர் உடம்பில்
தங்குவதற்கு உரிய பல குறிகளும் பொருந்தாது போக, வந்து சேர்ந்த காருடக் கலையில்
வல்லவரும் இது ஊழ் என்று கைவிடும் வேளையில், பொருந்திய பல சுற்றத்தார்களும், கடலைப் போல் அலறிப் பாவை மீது விழுந்து
அழுதனர்.
பெ.
பு. பாடல் எண் : 1063
சிந்தை
வெந்துயர் உறு சிவநேசரும் தெளிந்து,
வந்த
செய்வினை இன்மையில் வையகத்து உள்ளோர்
"இந்த வெவ்விடம்
ஒழிப்பவர்க்கு ஈகுவன்என்னுடைய
அந்தம்
இல்நிதிக் குவை" எனப் பறைஅறை வித்தார்.
பொழிப்புரை : உள்ளத்தில் கொடிய
துன்பம் அடைந்த சிவநேசரும், பின்பு தெளிந்து, செய்யக்கூடிய தீர்வினை ஏதும் இல்லா
ததால், `உலகத்தில்
உள்ளவர்களில் யாவராயினும் இந்தக் கொடிய நஞ்சை ஒழித்தார் அவருக்கு இங்குள்ளன
எல்லையில்லாத செல்வத் திரள் அனைத்தையும் அளிப்பேன்\' என்று எங்கும் யாரும் அறியுமாறு பறை
சாற்றினார்.
பெ.
பு. பாடல் எண் : 1064
முரசு
இயம்பிய மூன்றுநாள் அகவயின் முற்ற,
அரசர்
பாங்குஉளோர் உட்பட அவனிமேல் உள்ள
கரையில்
கல்வியோர் யாவரும் அணைந்துதம் காட்சிப்
புரையில்
செய்கையில் தீர்ந்திடாது ஒழிந்திடப் போனார்.
பொழிப்புரை : இங்ஙனம் பறை சாற்றிய
பின்னர், மூன்று நாள்
எல்லையில், அரச அவையில் உள்ளவர்
உட்பட உலகத்தில் உள்ள எல்லை இல்லாத கல்வியுடைய யாவரும் வந்து சேர்ந்து, தாம் தாமும் உறுதியாய்க் கண்ட குற்றமற்ற
தீர்தொழில்கள் எவற்றாலும் தீராது ஒழியாமல் போக, நீங்கிச் சென்றனர்.
பெ.
பு. பாடல் எண் : 1065
சீரின்
மன்னிய சிவநேசர் கண்டுஉளம் மயங்கி,
காரின்
மல்கிய சோலைசூழ் கழுமலத் தலைவர்
சாரும்
அவ்வளவும், உடல் தழல்இடை அடக்கி,
சேர
என்பொடு சாம்பல் சேமிப்பது தெளிவார்.
பொழிப்புரை : அந்நிலைமையைக் கண்ட
சிறப்புப் பொருந்திய சிவநேசர் உள்ளம் மயங்கி, மேகம் பொருந்திய சோலைகளால் சூழப்பட்ட
சீகாழித் தலைவர் வந்து சேரும் நாள் வரையிலும், பூம்பாவையாரின் உடலைத் தீயில் இட்டு
அடங்கச் செய்து, அதில் சேரும்
எலும்புடன் சாம்பலையும் பாதுகாத்து வைப்பது எனும் தெளிவுடையவராய்,
பெ.
பு. பாடல் எண் : 1066
'உடைய பிள்ளையார்க்கு
எனஇவள் தனை உரைத்ததனால்
அடைவு
துன்புஉறு வதற்குஇலை ஆம்நமக்கு' என்றே
இடர்
ஒழிந்தபின் அடக்கிய என்பொடு சாம்பல்
புடை
பெருத்த கும்பத்தினில் புகப்பெய்து வைப்பார்.
பொழிப்புரை : ஞானசம்பந்தப்
பெருமானுக்கு இவளை அளித்தேன் என்று கூறிவிட்டதால், இதனால் தமக்குத் துன்பம் அடைவதற்கு
இயைபு இல்லையாம் என்று துணிந்து,
துன்பம்
நீங்கிய நிலையில், தீயில் எரிந்த
எலும்பையும் சாம்பலையும் வாய் அகன்ற குடத்தில் இட்டு வைப்பார் ஆனார்.
பெ.
பு. பாடல் எண் : 1067
கன்னி
மாடத்தின் முன்புபோல் காப்பு உற அமைத்துப்
பொன்னு
முத்துமேல் அணிகலன் பூந்துகில் சூழ்ந்து
பன்னு
தூவியின் பஞ்சணை விரைப்பள்ளி அதன்மேல்
மன்னு
பொன்அரி மாலைகள் அணிந்துவைத் தனரால்.
பொழிப்புரை : கன்னிமாடத்தில்
முன்போலவே காவல் பொருந்த அக்குடத்தை வைத்துப் பொன்னும் முத்தும் மேல் அணி
கலன்களும், அழகான மேன்மையான
துகில்களும் சுற்றிப் புனைந்து,
புகழ்ந்து
பேசப்படும் அன்னத்தூவியிட்ட படுக்கையான மணம் கமழும் பஞ்சணையில் வைத்து, அதன்மேல் நிலைபெற்ற பொன்னரியான கழுத்தணி
வகைகளையும் அழகுபெறக் கோலம் செய்து வைத்தார்,
பெ.
பு. பாடல் எண் : 1068
மாலை
சாந்தொடு மஞ்சனம் நாள்தொறும் வழாமைப்
பாலின்
நேர்தரும் போனகம் பகல்விளக்கு இனைய
சாலும்
நன்மையில் தகுவன நாள்தொறுஞ் சமைத்தே
ஏலு
மாசெய யாவரும் வியப்பு எய்து நாளில்.
பொழிப்புரை : மாலையும், சந்தனத்துடன் திருமுழுக்கும், நாள்தோறும் விடாமல், பால்சோறும், பகல் விளக்கும் என்ற இவையும் இவை
போன்றவற்றையும் பொருந்திய நன்மையினால் தக்கவையாக நாள்தோறும் அமைத்துப்
பொருந்தும்படி செய்ய, யாவரும் அதைக் கண்டு
வியப்படைந்து வரும் நாள்களில்,
பெ.
பு. பாடல் எண் : 1069
சண்பை
மன்னவர் திருவொற்றியூர்நகர் சார்ந்து
பண்பு
பெற்றநல் தொண்டர்களுடன்பணிந்து இருந்த
நண்பு
மிக்கநல் வார்த்தைஅந் நல்பதி உள்ளோர்
வண்பு
கழ்ப்பெரு வணிகர்க்கு வந்துஉரை செய்தார்.
பொழிப்புரை : சீகாழித் தலைவரான
ஞானசம்பந்தர் திருவொற் றியூரில் வந்து சார்ந்து, பண்புமிக்க நல்ல தொண்டர்களுடன் இறை வரைப்
பணிந்து அங்கே எழுந்தருளியிருக்கின்றார் என்ற பொருந்து வதற்குரிய நல்ல சொல்லை, அந்நற்பதியில் வாழும் அடியார்கள், வண்மையும் புகழும் உடைய பெருமை சான்ற
வணிகர் தோன்றலார் ஆன சிவநேசரிடம் வந்து கூறினர்.
பெ.
பு. பாடல் எண் : 1070
சொன்ன
வர்க்குஎலாம் தூசொடு காசுபொன் அளித்தே,
இன்ன
தன்மையர் எனஒணா மகிழ்சிறந்து எய்த,
சென்னி
வாழ்மதி யார்திரு வொற்றியூர் அளவும்
துன்னு
நீள்நடைக் காவணம் துகில்விதா னித்து.
பொழிப்புரை : அங்ஙனம்
ஞானசம்பந்தரைப் பற்றித் தம்மிடம் வந்து கூறியவர்களுக்கெல்லாம் சிவநேசர், ஆடையும், காசும், பொன் னும் அன்புடனே கொடுத்து, இன்ன தன்மைதான் பெற்றார் என்று சொல்ல
முடியாத மகிழ்ச்சி மேல் ஓங்க, திருச்சடையில் வாழ்வு
பெறும் மதியைத் தாங்கிய இறைவர் எழுந்தருளிய திருவொற்றியூர் அளவும் நெருங்கிய நடைக்
காவணம் இட்டுத் துணியால் விதானமும் கட்டி,
பெ.
பு. பாடல் எண் : 1071
மகர
தோரணம் வண்குலைக் கமுகொடு கதலி
நிகரில்
பல்கொடித் தாமங்கள் அணிபெற நிரைத்து
நகர
நீள்மறுகு யாவையும் நலம்புனை அணியால்
புகர்இல்
பொன்உலகு இழிந்ததாம் எனப்பொலி வித்தார்.
பொழிப்புரை : மகர தோரணங்களும், வளம்மிக்க குலைக் கமுகுகளும், வாழைகளும், ஒப்பில்லாத பலகொடிகளும், மாலை களும் ஆகிய இவற்றை அழகு பொருந்த
நிரல்பட அமைத்து, நகரம் முழுமையும்
உள்ள நீண்ட தெருக்கள் எல்லாவற்றையும் நன்மை பொருந்த அணிசெய்து, குற்றம் இல்லாத தேவலோகமே கீழ் இறங்கிய
தாம் எனக் கூறுமாறு அழகு செய்வித்தார் சிவநேசர்.
பெ.
பு. பாடல் எண் : 1072
இன்ன
வாறுஅணி செய்துபல் குறைவு அறுப்பு ஏவி
"முன்னம் ஒற்றியூர்
நகர்இடை முத்தமிழ் விரகர்
பொன்
அடித்தலம் தலைமிசைப் புனைவன்"என்று எழுவார்
அந்ந
கர்ப்பெருந் தொண்டரும் உடன்செல அணைந்தார்.
பொழிப்புரை : இவ்வாறு பலவாற்றானும்
அணி செய்து, குறைகள் எவையும்
இல்லாமல் செய்யும் பணியாட்களை ஏவி,
`முன்சென்று
திருவொற்றியூர் நகரில் முத்தமிழ் விரகரான பிள்ளை யாரின் பொன்னார் திருவடிகளை
வணங்கித் தலைமீது சூட்டிக் கொள்வேன்\' என்று
எழுவாராகி, அம் மயிலையில் வாழும்
பெருந் தொண்டர்களும் தம் உடன் வரத் திருவொற்றியூரை நோக்கிச் சென்றார்.
பெ.
பு. பாடல் எண் : 1073
ஆய
வேலையில் அருமறைப் புகலியர் பிரானும்
மேய
ஒற்றியூர் பணிபவர் வியன்நகர் அகன்று
காயல்
சூழ்கரைக் கடல்மயி லாபுரி நோக்கித்
தூய
தொண்டர்தம் குழாத்தொடும் எதிர்வந்து தோன்ற.
பொழிப்புரை : அவ்வமையத்தில்
சீகாழித் தலைவரான திருஞானசம்பந்தப் பெருமானும், தாம் தங்கியிருந்த திருவொற்றியூரைப்
பணிந்து, அப் பெருநகரை விட்டு
அகன்று, உப்பளங்கள் சூழ்ந்த
கடற்கரையின் துறையையுடைய திருமயிலையை நோக்கித் தூய்மையான தொண்டர்களின்
திருக்கூட்டத்தோடும் எதிரில் வந்து தோன்ற,
பெ.
பு. பாடல் எண் : 1074
மாறுஇல்
வண்பெரு வணிகரும், தொண்டரும், மலர்ந்த
நீறு
சேர்தவக் குழாத்தினை நீள்இடைக் கண்டே,
"ஆறு சூடினார் திருமக
னார்அணைந் தார்"என்று
ஈறு
இலாததுஓர் மகிழ்ச்சியி னால்விழுந்து இறைஞ்ச.
பொழிப்புரை : ஒப்பற்ற
கொடைத்திறனுடைய பெருவணிக ரான சிவநேசரும், அவருடன்
வந்த பெருந் தொண்டர்களும், ஒளி விளங்கும்
வெண்ணீறு புனைந்த தவத்தையுடைய அடியார் கூட்டத் தினை நெடுந்தொலைவில் பார்த்து, `கங்கையாற்றைச் சூடிய இறைவரின் மகனார்
வந்தனர்' என்று இறுதியில்லாத
ஒப்பற்ற மகிழ்ச்சியால் நிலத்தில் விழுந்து போற்ற,
பெ.
பு. பாடல் எண் : 1075
காழி
நாடரும் கதிர்மணிச் சிவிகைநின்று இழிந்து,
சூழ்
இரும்பெருந் தொண்டர்முன் தொழுது,எழுந்து
அருளி,
வாழி
மாதவர் வணிகர்செய் திறம்சொலக் கேட்டே,
ஆழி
சூழ்மயி லாபுரித் திருநகர் அணைந்தார்.
பொழிப்புரை : சீகாழித் தலைவரான
ஞானசம்பந்தரும் ஒளி வீசும் முத்துச் சிவிகையினின்றும் இழிந்து, சூழ்ந்த பெரிய தொண்டர் களின் முன்னே, தொழுது எழுந்தருளி, வாழ்வுடைய மாதவர்களா கிய அடியவர்கள்
சிவநேசரின் அடிமைப் பண்பை எடுத்துச் சொல்லக் கேட்டு, கடற்கரை சூழ்ந்த திருமயிலைத் திருநகரைச்
சேர்ந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 1076
அத்தி
றத்துமுன் நிகழ்ந்தது திருவுள்ளத்து அமைத்துச்
சித்தம்
இன்புறு சிவநேசர் தம்செயல் வாய்ப்பப்
பொய்த்த
வச்சமண் சாக்கியர் புறத்துறை அழிய
வைத்த
அப்பெருங் கருணைநோக் கால்மகிழ்ந்து அருளி.
பொழிப்புரை : அத்திறத்தின் முன்னே
நிகழ்ந்த நிகழ்ச்சியைத் தம் உள்ளத்தில் ஞானசம்பந்தப் பெருமான் அமைத்துக் கொண்டு, உள்ளத்தில் இன்பமடையும் தொண்டரான
சிவநேசரின் செயல் வாய்த்திட, பொய்யான தவத்தை
மேற்கொண்ட சமணர் சாக்கியரின் புறத்துறைகள் அழியத் திருவுளங் கொண்ட அப் பெரிய அருள்
நோக்கத்தினால் மகிழ்ந்தருளி,
பெ.
பு. பாடல் எண் : 1077
கங்கை
வார்சடை யார்கபாலீச்சரத்து அணைந்து,
துங்க
நீள்சுடர்க் கோபுரம் தொழுது,புக்கு அருளி,
மங்கை
பாகர்தம் கோயிலை வலங்கொண்டு,
வணங்கி,
செங்கை
சென்னிமேல் குவிந்திடத் திருமுன்பு சேர்ந்தார்.
பொழிப்புரை : கங்கையைச் சூடிய
நீண்ட சடையையுடைய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் `திருக்கபாலீச்சரம்\' என்னும் திருக்கோயிலைச் சேர்ந்து, உயர்ந்த நீண்ட ஒளியுடைய கோபுரத்தைத்
தொழுது, புகுந்தருளி, உமையம்மையாரை ஒரு கூற்றில் கொண்ட இறைவர்
கோயிலை வலமாக வந்து வணங்கி, சிவந்த கை தலைமீது
குவித்திடத் திருமுன்பு வந்து சேர்ந்தவராய்,
பெ.
பு. பாடல் எண் : 1078
தேவ
தேவனை, திருக்கபாலீச்சரத்து
அமுதை,
பாவை
பாகனை, பரிவுறு பண்பினால்
பரவி
மேவு
காதலின் விரும்பிய விரைவினால் விழுந்து
நாவின்
வாய்மையால் போற்றினார் ஞானசம் பந்தர்.
பொழிப்புரை : தேவரின் தலைவராயுள்ள
இறைவரை, திருக்
கபாலீச்சரத்தில் அமர்ந்தருளிய அமுதம் போன்றவரை, உமையம் மையை ஒருகூற்றில் கொண்ட முதல்வரை, அன்பு பொருந்திய பண்பி னால் போற்றிப்
பொருந்திய காதலால், விரும்பிய விரைவினால்
நிலத்தில் பொருந்த விழுந்து, திருநாவில் பொருந்திய
உண்மைத் திருவாக்கினால், ஞானசம்பந்தர்
போற்றியருளினார்.
குறிப்புரை : இதுபொழுது அருளிய
பதிகம் கிடைத்திலது.
பெ.
பு. பாடல் எண் : 1079
போற்றி
மெய்அருள் திறம்பெறு பரிவுடன் வணங்கி,
நீற்றின்
மேனியில் நிறைமயிர்ப் புளகங்கள் நெருங்க,
கூற்று
அடர்த்தவர் கோயிலின் புறம்புபோந்து அருளி,
ஆற்றும்
இன்அருள் வணிகர்மேல் செலஅருள் செய்வார்.
பொழிப்புரை : அங்ஙனம் போற்றி, மெய்யருள் திறத்தைப் பெறும் இடைவிடாத எண்ணத்துடன்
வணங்கி, திருநீறு பூசிய மேனி
யில் நிறைவாக மயிர்க் கூச்செறிய,
இயமனைக்
காலினால் உதைத்து உருட்டிய இறைவரின் கோயிலின் வெளிப்புறத்தில் சென்று, செய் கின்ற இனிய அருள், வணிகரின் மீது செல்வதாய் அருளிச்
செய்பவராய்,
பெ.
பு. பாடல் எண் : 1080
"ஒருமை உய்த்த நல்
உணர்வினீர், உலகவர் அறிய
அருமையால்
பெறும் மகள்என்பு நிறைத்தஅக் குடத்தைப்
பெரு
மயானத்து நடம்புரி வார்பெருங் கோயில்
திருமதில்
புற வாய்தலில் கொணர்க" என்று செப்ப.
பொழிப்புரை : `பெருமானின் அடிமைத் திறத்தில் ஒன்றித்து
வைத்த உணர்வுடையீர்! உலகத்தவர் எல்லாம் அறியுமாறு, அரிய தவத்தின் பயனாய்ப் பெற்ற மகளுடைய
எலும்பு நிறைந்த அக் குடத்தை, பெரிய மயானத்தில்
கூத்தாடுகின்ற இறைவரின் கோயிலின் திருமதில் புறத்துத் திருவாயில் முன்னர்க் கொண்டு
வருக' எனக் கூறியருள,
பெ.
பு. பாடல் எண் : 1081
அந்தம்
இல்பெரு மகிழ்ச்சியால் அவனிமேல் பணிந்து,
வந்து
தம்திரு மனையினில் மேவி,
அம்
மருங்கு
கந்த
வார்பொழில் கன்னிமாடத்தினில் புக்கு,
வெந்த
சாம்பலோடு என்புசேர் குடத்தை வேறு எடுத்து.
பொழிப்புரை : எல்லையற்ற
பெருமகிழ்ச்சியால் நிலத்தின் மீது விழுந்து வணங்கிக் கோயிலினின்றும் வந்து, தம் திரு இல்லத்துள் சேர்ந்து, அங்கு மணம் பொருந்திய நீண்ட
சோலையிடையில் உள்ள கன்னி மாடத்தில் புகுந்து, மகளது உடல் வெந்தமையாலாய சாம் பலுடன்
எலும்பையும் இட்டு வைத்த குடத்தை,
பஞ்சணை
முதலியவற் றினின்றும் வேறாய் எடுத்து வந்து,
பெ.
பு. பாடல் எண் : 1082
மூடு
பன்மணிச் சிவிகையுள் பெய்து,முன் போத,
மாடு
சேடியர் இனம்புடை சூழ்ந்துவந்து அணைய,
ஆடல்
மேவினார் திருக்கபாலீச்சரம் அணைந்து,
நீடு
கோபுரத்து எதிர், மணிச் சிவிகையை
நீக்கி.
பொழிப்புரை : பலமணிகளால்
இழைக்கப்பெற்ற மூடிய சிவிகையுள் அக்குடத்தை இனிதாக வைத்து, அதனை முன்போக விட்டு, இருமருங்கிலும் தோழியர் கூட்டம்
சூழ்ந்து வர, ஆடலைச் செய்யும்
இறைவரின் திருக்கபாலீச்சரத்தைச் சேர்ந்து, நீண்ட கோபுரத் தின் வெளியே எதிரில், மணிச் சிவிகையின் திரையை விலக்கி,
பெ.
பு. பாடல் எண் : 1083
அங்க
ணாளர்தம் அபிமுகத்தினில்,
அடி
உறைப்பால்
மங்கை
என்புசேர் குடத்தினை வைத்துமுன் வணங்க,
பொங்கு
நீள்புனல் புகலிகாவலர் புவனத்துத்
தங்கி
வாழ்பவர்க்கு உறுதியாம் நிலைமைசா திப்பார்.
பொழிப்புரை : இறைவரின் திருமுன்பாக, அவரது திருவடியில் பதிந்த அன்பின்
உறைப்பால், பெண்ணின் எலும்புடைய
குடத்தை எடுத்து வைத்துப் பிள்ளையாரின் திருமுன்பு சிவநேசர் வணங்கி நிற்ப, பொங்கிவரும் பெருநீர்ச் சிறப்புடைய
சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர்,
இவ்வுலகத்தில்
இருந்துவரும் மக்களுக்கு உறுதிப் பொருள் இதுவாம் என நேரே காட்டியருள,
பெ.
பு. பாடல் எண் : 1084
மாடம்
ஓங்கிய மயிலைமா நகர்உளார் மற்றும்
நாடு
வாழ்பவர் நன்றியில் சமயத்தின் உள்ளோர்
மாடு
சூழ்ந்துகாண் பதற்குவந்து எய்தியே மலிய
நீடு
தேவர்கள் ஏனையோர் விசும்புஇடை நெருங்க.
பொழிப்புரை : மாடங்கள் ஓங்கிய
மயிலைப் பெருநகரத்தில் உள்ளவர்களும், மற்றும்
அந்நாட்டில் உள்ளவர்களும், நன்றி இல்லாத மற்ற
சமயத்தில் உள்ளவர்களும், எம்மருங்கிலும்
சூழ்ந்து, இதன் விளைவைக்
காண்பதற்கு வந்து பெருகவும், நீடிய தேவர்களும்
மற்றவர்களும் வானத்தில் நெருங்கவும்,
பெ.
பு. பாடல் எண் : 1085
தொண்டர்
தம்பெரும் குழாம்புடை சூழ்தரத் தொல்லை
அண்டர்
நாயகர் கோபுர வாயில்நேர் அணைந்து
வண்டு
வார்குழ லாள்என்பு நிறைந்தமண் குடத்தைக்
கண்டு
தம்பிரான் கருணையின் பெருமையே கருதி.
பொழிப்புரை : திருத்தொண்டர்கள் தம்
அருகே சூழ்ந்து வரவும், பழமையான தேவரது கோபுர
வாயிலின் நேரில் வந்து சேர்ந்து,
வண்டுகள்
தங்கும் நீண்ட கூந்தலையுடைய பூம்பாவையாரின் எலும்பு நிறைந்த அம் மண்குடத்தை, அருட்பார்வை செய்து, இறைவரின் கருணையின் பெருமையை உள்ளத்துள்
பெரிதும் நினைந்து,
பெ.
பு. பாடல் எண் : 1086
இந்த
மாநிலத்து இறந்துஉளோர் என்பினைப் பின்னும்
நந்து
நன்னெறிப் படுத்திட நன்மையாம் தன்மை
அந்த
என்பொடு தொடர்ச்சியாம் எனஅருள் நோக்கால்
சிந்தும்
அங்கம்அங்கு உடையபூம் பாவைபேர் செப்பி.
பொழிப்புரை : இவ்வுலகத்தில்
இறந்தவரின் எலும்பை, மேலும் பெரிய
நன்னெறியில் பொருந்தியிட, நன்மையாகின்ற
தன்மையானது அவ்வெலும்புடன் கூடிய தொடர்ச்சியால் ஆவதாகும் என்று எண்ணிய அருள்
நோக்கத்தினால், சிந்திய அந்த எலும்பை, முன் உடம்பில் வாழ்ந்த பூம்பாவை என்ற
பெயரால் விளித்துச் சொல்லி அருளி,
குறிப்புரை : என்புக் குடத்தை
நோக்கிப் பூம்பாவை என்றது, எலும்பும் அதனொடு
கூடிய தசைத் திரளாய உடம்பும், அதனுள் வாழும்
உயிருமாய் நின்ற முன் தொடர்ச்சி பற்றியாம். எலும்பை வைத்துச் செய்யும் நற்செயல், அதனொடு தொடர்புற்றிருந்த உடற்கும், அதனோடு இயைந்து வாழ்ந்த உயிர்க்கும்
ஆதலினாற்றான் இன்றும் அத்தகைய நற்செயல்கள் நடைபெற்று வருகின்றன. `என்போடி யைந்த தொடர்பு\' (குறள், 73) எனத் திருவள்ளுவர் இத்தொடர்ச்சி யைக்
கூறுவதும் காண்க. நந்துதல் - பெரிதாதல்; தழைத்தல்.
பெ.
பு. பாடல் எண் : 1087
"மண்ணி னில்பிறந்
தார்பெறும் பயன், மதி சூடும்
அண்ண
லார்அடி யார்தமை அமுதுசெய் வித்தல்,
கண்ணி
னால்அவர் நல்விழாப் பொலிவுகண்டு ஆர்தல்,
உண்மை
யாம்எனில் உலகர்முன் வருக"என உரைப்பார்.
பொழிப்புரை : `இம்மண்ணுலகத்தில் வினைக்கு ஈடாக வந்து
பிறந்த உயிர்கள், பெறும் பிறவிப்
பயனாகிய உறுதிப் பொருள்களாவன, பிறையை அணியும்
பெருமானின் அடியவர் தமக்குத் திருவமுது செய்வித்தலும், கண்களால் அவ்வடியவர்களின் உள்ளத்து
உயிர்க்கு உயிராய் நிற்கும் இறைவரின் திருவிழாக்களின் பெரும் பொலிவைக் கண்டு
மகிழ்தலும் ஆய இவ்விரண்டுமே என்பது உண்மையானால், பூம்பாவையே! இவ்வுலகத்தார் முன் உடலும்
உயிரும் பொருந்த வருவாயாக! எனச் சூள் செய்து எடுத்துச் சொல்பவராய்,
குறிப்புரை : `அண்ணலார் அடியார்' என இருசொற்கள் முன் இருத்தலின், பின்வரும் அவர் என்ற சுட்டு இறைவர், அடியவர் ஆகிய இரு வரையும் குறிக்கும்.
எனினும், பதிகப் பொருண்மை
வகையால் இறைவர் என்றே கொள்ளத்தகும். `உருத்திர பல்கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ' என முதற் பாட்டில்
வருதல் கண்டு, அண்ணலார் அடியார் தமை
அமுது செய்வித்தலை முன்னர்க் கூறினார். அடுத்து வரும் பாடல்களிலெல்லாம், இறைவற்கு எடுக்கும் விழாக்களைக்
குறித்துத் தனித்தனியே அவ்வவ் விழாக்களையும் `காணாதே போதியோ' எனக் குறித்தலின், கண்ணினால் அவர்தம் (இறைவர்) நல்விழாக்
காண்டலை இரண்டாவதாகக் குறித்தார்.
பெ.
பு. பாடல் எண் : 1088
மன்னு
வார்சடை யாரைமுன் தொழுது"மட் டிட்ட"
என்னும்
நற்பதி கத்தினில் "போதியோ" என்னும்
அன்ன
மெய்த்திரு வாக்குஎனும் அமுதம்அவ் அங்கம்
துன்ன
வந்துவந்து உருவமாய்த் தொக்கதுஅக் குடத்துள்.
பொழிப்புரை : நிலைபெற்ற நீண்ட
சடையையுடைய இறைவ ரைத் தொழுது `மட்டிட்ட' எனத் தொடங்கும் அந்தத் திருப்பதிகத்தில்
`போதியோ' என்றுகூறும் அந்த மெய்த் திருவாக்கு என்னும்
அமுதமானது, அக்குடத்தினுள்
இருந்த எலும்பினுள்ளே வந்துவந்து பொருந்தப் பெண்ணுருவமாகக் கூடியது.
குறிப்புரை : `மட்டிட்ட' (தி.2 ப.47) எனத் தொடங்கும் பதிகம் சீகாமரப் பண்ணில்
அமைந்ததாகும். `போதியோ' என்ற இடத்து அமைந்த ஓகாரம், `போகமாட்டாய், மீண்டும் வந்து விடுவாய்' எனப் பொருள் படுதலின் எதிர்மறைப்
பொருளதாம். ஞானத்தின் திருவுருவாய் நின்றருளும் பிள்ளையாரின் திருவாயில், இவ்வரிய சொல் வருதலின், ஆசிரியர் இதனை `மெய்த் திருவாக்கு' என்றார். அன்றியும் ஓகாரம் பிரணவமாதலும்
அறியத்தக்கதாகும். பாடல்தொறும் வரும் அவ்வரிய திருவாக்கு எலும்பினுள் வந்து வந்து
பொருந்த அரிய பெண்ணுருவானது.
பெ.
பு. பாடல் எண் : 1089
ஆன
தன்மையில் அத்திருப் பாட்டினில், அடைவே
போன
வாயுவும் வடிவமும் பொலிவொடு நிரம்பி,
ஏனை
அக்குடத்து அடங்கிமுன்இருந்து எழுவதன்முன்,
ஞான
போனகர் பின்சமண் பாட்டினை நவில்வார்.
பொழிப்புரை : முன் நான்கு
பாட்டுகளில் கூறிய அத்தகைய தன்மையால் `மட்டிட்ட' எனத் தொடங்கிய அத்திருப்பாட்டைத்
தொடர்ந்து முறையே பாடுந்தோறும்,
போன
உயிரும் உருவம் பெறும் உறுப்புப் பகுதிகளும் அழகுபட முறையாய் நிரம்பி, வேறாகிய அக்குடத்தில் முன்பு தொக்குக்
கூடியிருந்து உரியபடி வெளிப்பட்டு எழுவதன் முன்பு ஞானஅமுது உண்ட சம்பந்தப்
பெருமான், பின் முறையாய்
அருளும் சமண் பாட்டான பத்தாம் திருப்பாட்டை அருளிச் செய்பவராகி,
பெ.
பு. பாடல் எண் : 1090
தேற்றம்
இல்சமண் சாக்கியத் திண்ணர்இச் செய்கை
ஏற்றது
அன்றுஎன எடுத்துஉரைப் பார்என்ற போது,
கோல்
தொடிச்செங்கை தோற்றிடக் குடம்உடைந்து எழுவாள்
போற்று
தாமரைப் போதுஅவிழ்ந்து எழுந்தனள் போன்றாள்.
பொழிப்புரை : முன் நான்கு
பாட்டுகளில் கூறிய அத்தகைய தன்மையால் `மட்டிட்ட' எனத் தொடங்கிய அத்திருப்பாட்டைத்
தொடர்ந்து முறையே பாடுந்தோறும்,
போன
உயிரும் உருவம் பெறும் உறுப்புப் பகுதிகளும் அழகுபட முறையாய் நிரம்பி, வேறாகிய அக்குடத்தில் முன்பு தொக்குக்
கூடியிருந்து உரியபடி வெளிப்பட்டு எழுவதன் முன்பு ஞானஅமுது உண்ட சம்பந்தப்
பெருமான், பின் முறையாய்
அருளும் சமண் பாட்டான பத்தாம் திருப்பாட்டை அருளிச் செய்பவராகி,
பெ.
பு. பாடல் எண் : 1091
எடுத்த
பாட்டினில் வடிவுபெற்று,
இருநான்கு
திருப்பாட்டு அடுத்த அம்முறைப் பன்னிரண்டுஆண்டுஅளவு அணைந்து,
தொடுத்த
வெஞ்சமண் பாட்டினில்தோன்றிடக் கண்டு,
விடுத்த
வேட்கையர் திருக்கடைக்காப்புமேல் விரித்தார்.
பொழிப்புரை : `மட்டிட்ட' எனத் தொடங்கிய பாட்டில் பாவையார்
வடிவத்தைப் பெற்று, அதன்மேல் அருளிய
எட்டுத் திருப்பாட்டுகளில் அம்முறையே பன்னிரண்டு ஆண்டுகளுக்குரிய வளர்ச்சியைப்
பெற்றுத் தொடுத்த கொடிய சமணர் பாட்டை அருளிய அளவில், குடமானது உடைந்து, பூம்பாவை வெளிப்பட்டுத் தோன்றக் கண்டு, பற்றற்ற பான்மையுடைய பிள்ளையார், அதன்பின் திருக்கடைக்காப்பை விரித்துக்
கூறினார்.
குறிப்புரை : எடுத்த பாட்டு -
இப்பதிகத்தின் முதற் பாடல். அதனைப் பாடிய அளவில், அவ்வென்பும் சாம்பலும் உயிருடன் கூடத்
தொடங்கி ஒரு வடிவு பெற்றன. அடுத்து அருளப் பெற்ற எட்டுப் பாடல்களையும், ஒவ்வொன்றாய் அருளப் பெற்ற நிலையில், அவ்வடிவும் வளரப்பெற்று பன்னிரண்டாண்டு
நிரம்பப் பெற்ற பூம்பாவை யாயினள். பாம்பு தீண்டி இறந்தது ஏழாவது ஆண்டில் ஆகும்.
இதுபொழுது பன்னிரண்டு ஆண்டாய் நிரம்பினள் எனவே, அப்பெண் இறந்த ஐந்து ஆண்டுகளுக்குப்
பின்னையது இந்நிகழ்ச்சி என்பதும் அறியத்தக்கதாகும். திருக்கடைக்காப்பில் இப்பதிகம்
பூம்பாவைப் பாட்டு என்றே குறிக்கப் பெற்றுள்ளது.
பெ.
பு. பாடல் எண் : 1092
ஆங்கனம்
எழுந்து நின்ற அணங்கினை
நோக்குவார்கள்,
"ஈங்கிது காணீர்"
என்னா அற்புதம் எய்தும்
வேலை,
பாங்குசூழ்
தொண்டர் ஆனோர் அரகர என்ன, பார்மேல்
ஓங்கிய
ஒசை உம்பர் நாட்டினை உற்றது
அன்றே.
பொழிப்புரை : அவ்வாறு தோன்றிய
தெய்வ நலம் வாய்ந்த பூம்பாவையாரைப் பார்த்தவர் எல்லாம் `இங்கு இதனைப் பாரீர்\' என்று எடுத்துச் சொல்லி அற்புதத்தை
அடைந்த போது, அருகில்
சூழ்ந்திருந்த திருத்தொண்டர்கள் `அரகர\' என்று இவ்வுலகத்தில் முழங்கிய பேரொலி, அப்போதே சென்று வானுலகத்தை அடைந்தது.
பெ.
பு. பாடல் எண் : 1093
தேவரும்
முனிவர் தாமும் திருவருள் சிறப்பு
நோக்கிப்
பூவரு
விரைகொள் மாரி பொழிந்தனர், ஒழிந்த மண்ணோர்
யாவரும்
"இருந்த வண்ணம் எம்பிரான் கருணை"
என்றே
மேவிய
கைகள் உச்சி மேற்குவித்து இறைஞ்சி
வீழ்ந்தார்.
பொழிப்புரை : வானத்தில் நெருங்கிய
தேவர்கள் முனிவர்கள் முதலானவர்கள் சிவபெருமானின் திருவருட் சிறப்பை நோக்கித் தெய்வ
மரங்களின் மலர்களால் ஆன மணமுடைய மலர் மழையைப் பெய்தனர். முன்கூறப்பட்டவர்கள் ஒழிய, மற்றவர்கள் எல்லோரும் `இங்ஙனம் நிகழ்ந்த இவ்விளைவின் வண்ணம்
எம்தலைவரான சிவபெருமானின் திருவருட்கருணையே யாகும்\' எனச் சொல்லிப் பொருந்திய கைகளை
உச்சிமீது குவித்து வணங்கி, நிலத்தில் விழுந்து
தொழுதனர்.
பெ.
பு. பாடல் எண் : 1094
அங்குஅவள்
உருவம் காண்பார், அதிசயம் மிகவும்
எய்தி,
பங்கம்
உற்றாரே போன்றார் பரசமயத்தின் உள்ளோர்.
"எங்குஉள செய்கைதான்
மற்று என் செய்தவாறு
இது" என்று
சங்கையாம்
உணர்வு கொள்ளும் சமணர் தள்ளாடி
வீழ்ந்தார்.
பொழிப்புரை : அங்கு
அப்பூம்பாவையின் வடிவத்தைக் காண்பவரான மற்ற சமயத்தில் உள்ளவர்கள், மிக்க அதிசயம் அடைந்து, இச்செய்தியால் தம்தம் சமயங்களும்
மறுத்து ஒதுக்கப்பட அவ்வவரும் தோல்வி அடைந்தவர் போல் ஆயினர். இச்செய்கை எங்குத்
தான் உள்ளது? எவ்வாறு செயல்பட்டது? எனத் துணிய மாட்டாமல் ஐயம் கொண்ட சமணர், தள்ளாடி நிலத்தில் தடுமாறி விழுந்தனர்.
பெ.
பு. பாடல் எண் : 1095
கன்னிதன்
வனப்புத் தன்னைக் கண்களால் முடியக்
காணார்,
முன்உறக்
கண்டார்க்கு எல்லாம் மொய்கருங் குழலின்
பாரம்
மன்னிய
வதன செந்தா மரையின்மேல் கரிய
வண்டு
துன்னிய
ஒழுங்கு துற்ற சூழல்போல் இருண்டு
தோன்ற.
பொழிப்புரை : பூம்பாவையாரின் அழகு
முழுமையும், தம் கண்களால்
முற்றும் காணாதவராகி அவ்வளவில் அமைந்தார்க்கு எல்லாம், தோன்றிய நிலையாவது, செறிந்து வளர்ந்த கருமையான கூந்தலான
பளுவைப் பொருந்திய முகமான செந்தாமரையில், கரிய
வண்டுக் கூட்டம் நெருங்கி மொய்த்து வரிசையாகச் சூழந்திருந்தாற் போன்று கரிய நிறம்
அடைந்து காணப்படவும்,
குறிப்புரை : செந்தாமரையில்
வண்டின் கூட்டம் மொய்த்திருந்தாற் போல, முகத்தின்
மேலதாகக் கூந்தல் அமைந்திருந்தது.
பெ.
பு. பாடல் எண் : 1096
பாங்குஅணி
சுரும்பு மொய்த்த பனிமலர் அளகப் பந்தி
தேங்கமழ்
ஆரம் சேரும் திருநுதல் விளக்கம்
நோக்கில்
பூங்கொடிக்கு
அழகின் மாரி பொழிந்திடப் புயல் கீழ்இட்ட
வாங்கிய
வான வில்லின் வளரொளி வனப்பு
வாய்ப்ப.
பொழிப்புரை : பக்கத்தில் அழகிய
வண்டுகள் மொய்த்த குளிர்ந்த பூக்களை அணிந்த கூந்தல் ஒழுங்கின் கீழ், மணம் வீசும் திலகம் அணிந்த நெற்றிப்
பொலிவைப் பார்க்கில், பூம்பாவையரான
பூங்கொடிக்கு அழகின்மழை பொழியும் பொருட்டாக மேகத்தின் கீழே இட்ட வளைந்த
வானவில்லின் மிக்க ஒளி பொருந்திய அழகு பொருந்தவும்,
குறிப்புரை : கூந்தலைச் சேர்ந்து
இருந்த நெற்றி, மேகத்தின் கீழிருந்த
வானவில்லைப் போன்றது.
பெ.
பு. பாடல் எண் : 1097
புருவமென்
கொடிகள் பண்டு புரமெரித்தவர் தம்
நெற்றி
ஒருவிழி
எரியில் நீறாய் அருள்பெற உளனாம்
காமன்
செருஎழும்
தனு அதுஒன்றும் சேமவில் ஒன்றும் ஆக
இருபெருஞ்
சிலைகள் முன்கொண்டு எழுந்தன போல ஏற்ப.
பொழிப்புரை : புருவம் என்ற இரண்டு
கொடிகள், முற்காலத்தில்
முப்புரம் எரித்த சிவபெருமானின் நெற்றித் தனிக்கண்ணில் வந்த தீயினால் சாம்பலாகிப்
பின், அருள் பெற உள்ளவனான
காமனின் போரில் ஏந்திய வில் ஒன்றும் சேமமாய் வைக்கப்படும் வில் ஒன்றுமாக இருபெரு
விற்களின் தன்மையை முன்னே கொண்டு தோன்றி எழுந்தாற்போல் அழகு செய்ய,
குறிப்புரை : நெற்றியின் கீழ்
அமைந்த இருபுருவங்களும், மன்மதன் கைக்கொண்டிருந்த
இருபெரு வில்கள் என இருந்தன.
பெ.
பு. பாடல் எண் : 1098
மண்ணிய
மணியின் செய்ய வளர்ஒளி மேனி யாள்தன்
கண்இணை
வனப்புக் காணில், காமரு வதனத் திங்கள்
தண்அளி
விரிந்த சோதி வெள்ளத்தில் தகைவுஇல்
நீள
ஒள்நிறக்
கரிய செய்ய கயல்இரண்டு ஒத்து
உலாவ.
பொழிப்புரை : கடைந்தெடுத்த
மாணிக்கத்தினும் செம்மையாய ஒளிபொருந்திய மேனியைக் கொண்ட பாவையாரின் இரண்டு கண்
களின் அழகானது, அழகுமிக்க முகமான
சந்திரனின் குளிர்ந்த கதிர்கள் விரிந்த நிலவொளியான வெள்ளத்தில் தடுக்கப்படாத
நீளமுடைய ஒள்ளிய நிறமும் கருமையும் செம்மையும் கலந்த இரண்டு கயல் மீன்களைப் போன்று
உலாவ,
குறிப்புரை : கண்கள் இரண்டும், ஒருநிலா வெள்ளத்தில் இரு கயல்கள்
உலாவுவன போலிருந்தன.
பெ.
பு. பாடல் எண் : 1099
பணிவளர்
அல்குல் பாவை நாசியும் பவள வாயும்
நணியபேர்
ஒளியில் தோன்றும் நலத்தினை
நாடுவார்க்கு
மணிநிறக்
கோபம் கண்டு மற்றுஅது வவ்வத்
தாழும்
அணிநிறக்
காம ரூபி அனையதாம் அழகு காட்ட.
பொழிப்புரை : பாம்பின் படம் போன்ற
அல்குலை உடைய பூம்பாவையின் மூக்கும் பவளம் போன்ற சிவந்த வாயும் ஒளி மிகுந்து
தோன்றும் அழகினை நாடுவாருக்கு, மூக்கானது விரும்பும்
வடிவம் கொள்ளும் காமரூபி எனப்படும் பச்சோந்தியை ஒத்து இருந்தது. அந்தப் பச்சோந்தியானது கவர வரும் இந்திர கோபப்
பூச்சியைப் போன்று வாயும் இரந்தது.
குறிப்புரை : காமரூபி - பச்சோந்தி.
வேண்டியவாறு நிறம் கொள்ளும் இயல்பினது. வாய் இந்திர கோபப் பூச்சியையும், மூக்குப் பச்சோந்தியையும் ஒத்தன.
நீண்டிருக்கும் மூக்கின் கீழ் வாய் இருப்பது கவரவரும் பச்சோந்தியின் கீழ்க் கோபப்
பூச்சி இருப்பதைப் போன்றது. வடிவும் நிறமும் பற்றி வந்த உவமை.
பெ.
பு. பாடல் எண் : 1100
இளமயில்
அனைய சாயல் ஏந்திழை குழைகொள்
காது
வளமிகு
வனப்பி னாலும் வடிந்த தாள்
உடைமையாலும்
கிளர்ஒளி
மகர ஏறு கெழுமிய தன்மை யாலும்
அளவில்சீர்
அனங்கன் வென்றிக் கொடிஇரண்டு அனைய ஆக.
பொழிப்புரை : இளம் மயிலைப் போன்ற
சாயலையுடைய ஏந்திய இழை அணிந்த பூம்பாவையின் காதணி அணிந்த காதுகள், வளமான அழகாலும் வடிந்த காதுத்தண்டை
உடைமையாலும் மிக்க ஒளியுடைய ஆண் சுறா மீனானது பொருந்திய தன்மையினாலும் அளவில்லாத
சிறப்புடைய மன்மதனின் வெற்றிக்கொடியான மீனக் கொடிகளைப் போன்று விளங்க,
பெ.
பு. பாடல் எண் : 1101
வில்பொலி
தரளக் கோவை விளங்கிய கழுத்து
மீது
பொற்புஅமை
வதனம் ஆகும் பதுமநல் நிதியம்
பூத்த
நற்பெரும்
பணிலம் என்னும் நன்னிதி போன்று
தோன்றி
அல்பொலி
கண்டர் தந்த அருட்கு அடையாளம்
காட்ட.
பொழிப்புரை : ஒளி திகழும் முத்துக்
கோவைகள் விளங்கும் கழுத்து, நல்ல பெரிய சங்கம்
என்னும் நிதியைப் போன்றும், அதன்மீது விளங்கும்
அழகமைந்த முகம் பதுமநிதியைப் போன்றும் தோன்றி விளங்குவது, இருள்போலும் கரிய நஞ்சு விளங்கிய கழுத்தையுடைய
திருநீலகண்டரான இறைவர் தந்த பெருங் கருணைக்கு அடையாளத் தைக் காட்ட,
குறிப்புரை : தாமரை முகத்திற்கும், சங்கு கழுத்திற்கும் உவமையாம். ஆசிரியர்
சேக்கிழார் இவ்விரண்டையும் முறையே பதுமநிதி, சங்கநிதி என உருவகித்து, அவையிரண்டும் அழகுபெற அமைந்தால் போலப் பாவையாரின்
முகமும் கழுத்தும் விளங்கின என்றார். இவ்விரு நிதியினையும் வழங்கத்தக்கவன் இறைவனே.
இச்செல்வியாரும் அப்பெருமானின் அருளால் தோன்றியவராதலின், அதற்குரிய அடையாளங்களைக் காட்டி
விளங்குபவராயினார் என ஆசிரியர் கூறுகின்றார்.
பெ.
பு. பாடல் எண் : 1102
எரியவிழ்
காந்தள் மென்பூத் தலைதொடுத்து இசைய
வைத்துத்
திரள்பெறச்
சுருக்கும் செச்சை மாலையோ தெரியின் வேறு
கருநெடும்
கயற்கண் மங்கை கைகளால் காந்தி
வெள்ளம்
அருகுஇழிந்
தனவோ என்னும் அதிசயம் வடிவில்
தோன்ற.
பொழிப்புரை : கரிய நீண்ட கயல்மீன்
போன்ற கண்களை உடைய பாவையாரின் கைகளைக் காணும்போது, தீயைப் போல் மலர்ந்த மெல்லிய
செங்காந்தள் பூக்களைத் தலைத்தலை பொருந்தத் தொடுத்துப் பொருந்துமாறு வைத்து அதன்
திரட்சி வரவரச் சுருங்கி வருமாறு அமைந்த வெட்சிப் பூ மாலையோ, அதுவன்றி வேறொரு வகையால் ஆராயுமிடத்து
உடலில் உள்ள மேனியின் ஒளி மிகுதி இரு பக்கங்களிலும் மிகுந்து வழிந்தனவோ எனும்
அதிசயம் தோன்ற அக்கைகள் அமைய,
குறிப்புரை : தோளினிடமாகத் தோன்றிய
இருகைகளும் மேலே பருத்தும், வரவரச் சிறுத்தும்
இருக்கும். அதற்குக் காந்தட் பூக்களைத் தலையில் கொண்டு, கீழ் வரவர வெட்சிப் பூவைத் தொடுத்துக்
கட்டிய மாலையை உவமை கூறினார். அக்கைகளின் ஒளிக்கு உடலின் ஒளி இரு மருங்கும்
வழிந்தொழுகியது போல்வது என்றார். இவ்வுவமை யழகுகள் எல்லாம் தனித்தன்மை வாய்ந்தன.
பெ.
பு. பாடல் எண் : 1103
ஏர்கெழு
மார்பில் பொங்கும் ஏந்துஇளம் கொங்கை
நாகக்
கார்கெழு
விடத்தை நீக்கும் கவுணியர் தலைவர் நோக்கால்
ஆர்திரு
அருளில் பூரித்து அடங்கிய அமுத கும்பச்
சீர்கெழு
முகிழைக் காட்டும் செவ்வியில் திகழ்ந்து
தோன்ற.
பொழிப்புரை : அழகு பொருந்திய
மார்பில் பெருகி எழுகின்ற மார்பகங்கள், பாம்பின்
கரிய நஞ்சைப் போக்கும் கவுணியர் தலைவரான ஞானசம்பந்தப் பெருமானின் நோக்கத்தால்
பொருந்திய திருவருள் என்னும் அமுதத்தால் நிறையப் பெற்று, அமைந்த கும்பத்தினை மேல் மூடிய முகிழ்
போன்ற தன்மையில் விளங்கித் தோன்ற,
குறிப்புரை : `போகம் ஆர்த்த பூண்முலையாள்' என அன்னையின்
மார்பகங்கள் போற்றப்படுதல் போல,
இப்பாவையின்
மார்பகங்களும் திருவருள் ஆர்த்த பூண் முலையாக விளங்குகின்றன என ஆசிரியர்
திருவுள்ளம் பற்றுகின்றார்.
பெ.
பு. பாடல் எண் : 1104
காமவேள்
என்னும் வேடன் உந்தியில் கரந்து
கொங்கை
நேமிஅம்
புட்கள் தம்மை அகப்பட நேரிது ஆய
தாமநீள்
கண்ணி சேர்த்த சலாகை தூக்கியதே
போலும்
வாம மேகலை சூழ் வல்லி மருங்கின்மேல் உரோம
வல்லி.
பொழிப்புரை : அழகிய மேகலை என்ற
அணியை அணிந்த கொடியைப் போன்ற பூம்பாவையாரின் இடையை அடுத்த கொப்பூழினின்று தொடங்கி
மேல் எழும் மயிர் ஒழுங்கானது, காமன் என்ற வேடன்
கொப்பூழுக்குள் மறைந்திருந்து மேலே உள்ள கொங்கைகள் என்ற அழகிய சக்கரவாளப் பறவைகளைப்
பிடிப்பதற்கு நேரான கயிற்றில் நீண்ட கண்ணிகளைக் கோத்த ஓர் அம்பினை உயர்த்தியது போல
விளங்கிட,
குறிப்புரை : மார்பகங்களுக்குச்
சக்கரவாளப் பறவைகளும், உந்தியிலிருந்து
மேற்செல்லும் மயிர் ஒழுங்கிற்கு மன்மதனின் அம்பும் உவமையாயின.
பெ.
பு. பாடல் எண் : 1105
பிணிஅவிழ்
மலர்மென் கூந்தல் பெண்ணமுது அனையாள்
செம்பொன்
அணிவளர்
அல்குல் தங்கள் அரவுசெய் பிழையால்
அஞ்சி
மணிகிளர்
காஞ்சி சூழ்ந்து வனப்புடை அல்குல்
ஆகிப்
பணிஉலகு
ஆளும் சேடன் பணம்விரித்து அடைதல்
காட்ட.
பொழிப்புரை : கட்டவிழ்ந்த
மலர்களைச் சூடிய மென்மையான கூந்தலையுடைய பெண்களுள் அமுதத்தை ஒத்த பூம்பாவையாரது
செம்பொன் அணிகளை அணிந்த அல்குலானது,
நாக
உலகத்தை ஆளும் ஆதிசேடன் தம் உறவாகியதொரு பாம்பு, பூம்பாவையைத் தீண்டிய பிழையின் பொருட்டு, அச்சம் கொண்டு, செம்மணிகள் விளங்கும் காஞ்சி என்னும்
எட்டுக் கோவை வடத்தால் சூழப்பெற்று அழகுடைய அல்குலாகிப் படத்தை விரித்துச்
சேர்கின்ற தோற்றத்தைக் காட்ட,
குறிப்புரை : அல்குலுக்கு
ஆதிசேடனின் படத்தை உவமை காட்டிய ஆசிரியர், தற்குறிப்பேற்றமாக அதற்கு ஒரு காரணமும்
கூறினர்.
பெ.
பு. பாடல் எண் : 1106
வரிமயில்
அனைய சாயல் மங்கைபொன் குறங்கின்
மாமை
கரிஇளம்
பிடிக்கை வென்று கதலிமென் தண்டு
காட்டத்
தெரிவுறும்
அவர்க்கு மென்மைச் செழுமுழந் தாளின்
செவ்வி
புரிவுறு
பொன்பந்து என்னப் பொலிந்துஒளி
விளங்கிப் பொங்க.
பொழிப்புரை : வரி பொருந்திய மயில்
போன்ற சாயலைக் கொண்ட பாவையாரின் பொன் போன்ற தொடைகளின் அழகானது, இளம் பெண் யானையின் துதிக்கையின் அழகை
வெற்றி கொண்டு, வாழையின் மெல்லிய
தண்டின் அழகையும் புலப்படுத்திக் காட்டக் காண்பவர்க்கு மென்மையுடைய செழுமையான
முழந்தாளின் அழகானது கைத்திறம் அமைந்த பொன்னால் ஆன பந்தைப் போல விளங்கி ஒளி
பொருந்திப் பெருக,
குறிப்புரை : தொடைக்குப்
பெண்யானையின் துதிக்கையும், வாழைத்தண்டும்
உவமை.
பெ.
பு. பாடல் எண் : 1107
பூஅலர்
நறுமென் கூந்தல் பொற்கொடி கணைக்கால்
காமன்
ஆவ நாழிகையே போலும் அழகினின் மேன்மை எய்த
மேவிய
செம்பொன் தட்டின் வனப்பினை மீதிட்டு
என்றும்
ஓவியர்க்கு
எழுத ஒண்ணாப் பரட்டுஒளி ஒளிர்வுற்று
ஓங்க.
பொழிப்புரை : மலர்கள் மலர்வதற்கு
இடமான மென்மையான கூந்தலையுடைய பொற்கொடி போன்ற பாவையாரின் கணைக்கால், காமனின் அம்பறாத் துணியே போன்ற அழகால், மேன்மை பொருந்த, பொருந்திய செம்பொன்னால் ஆன துலாத்
தட்டின் அழகை வெற்றி கொண்டு, எக்காலத்தும்
சித்திரம் தீட்டுவோர்க்கும் எழுத இயலாத கணைக்காலின் ஒளி விளங்கித் தோன்ற,
குறிப்புரை : கணைக்காலிற்குக்
காமனின் அம்புப் புட்டிலும் தராசுத் தட்டும் உவமையாகின்றன.
பெ.
பு. பாடல் எண் : 1108
கற்பகம்
ஈன்ற செவ்விக் காமரு பவளச் சோதிப்
பொன்திரள்
வயிரப் பத்திப் பூந்துணர் மலர்ந்த
போலும்
நற்பதம்
பொலிவு காட்ட ஞாலமும் விசும்பும்
எல்லாம்
அற்புதம்
எய்தத் தோன்றி அழகினுக்கு அணியாய்
நின்றாள்.
பொழிப்புரை : கற்பக மரம் தந்த
சிவந்த அழகிய பவளத்தின் ஒளி வீசும் பொன் திரளுடன் வயிர வரிசைகளையுடைய மலர்க் கொத்
துகள் மலர்ந்தவை போன்ற அழகை நல்ல அடிகள் புலப்படுத்த, இம் மண்ணுலகமும் விண்ணுலகமும் மற்ற
எல்லா உலகங்களும் அற்புதம் பொருந்தத் தோன்றி அழகுக்கு அழகு செய்யும் பொருளாக
நின்றார்.
குறிப்புரை : இந்நூலுள் முடிமுதல்
அடிவரை (கேசாதி பாதமாக)வருணிக்கப்பட்ட பாவை இப்பூம்பாவையாரே யாவர். காரணம், கண்ணுதல் கருணை வெள்ளத்தால் தோன்றியமையே
ஆகும்.
பெ.
பு. பாடல் எண் : 1109
எண்இல்ஆண்டு
எய்தும் வேதாப் படைத்தவள் எழிலின்
வெள்ளம்
நண்ணுநான்
முகத்தால் கண்டான், அவளினும் நல்லாள்
தன்பால்
புண்ணியப்
பதினாறு ஆண்டு பேர்பெறும் புகலி
வேந்தர்,
கண்ணுதல்
கருணை வெள்ளம் ஆயிர முகத்தால்
கண்டார்.
பொழிப்புரை : அளவற்ற ஆண்டுகள்
கழிந்த நான்முகன், தான் படைத்த
திலோத்தமை என்ற மங்கையின் அழகின் வண்ணங்களைத் தனக்குள்ள நான்கு முகங்களால் கண்டு
மகிழ்ந்தான். அவளை விட மேலான நலங்கள் பலவும் அமைந்த பூம்பாவையாரிடம், பதினாறு ஆண்டு எனக் கணக்கிடத்தகும் சீகாழித்
தலைவராம் ஞானசம்பந்தர், நெற்றிக் கண்ணையுடைய
சிவபெருமானின் அருட் பெருக்கையே ஆயிர முகங்களால் காண்பார் ஆயினார்.
குறிப்புரை : நான்முகன், எண்ணில் ஆண்டு எய்தியவன். வயது
முதிர்ந்தவன். தம்மால் படைக்கப்பட்டவள் திலோத்தமை. மகள் முறையினள்.
அத்திலோத்தமையின் அழகைத் தன் நான்கு முகங்களாலும் கண்டு, அவளை விரும்பினன். பிள்ளையார், பதினாறு ஆண்டு வயதை நெருங்கும் மிக
இளைஞர். அவர்தம் திருவருள் திறத்தால் தோற்றுவிக்கப்பட்டவர் பூம்பாவையார். சிவநேசர்
மகளாயிருந்த நிலையில் இவருக்கென உரிமை யாக்கப் பெற்றவர். திருவருள் வயத்தால் தம்மால்
தோற்றுவிக்கப்பட்ட மகண்மை முறையையும், திருவருள்
திறத்தையுமே நினைந்து தம் ஆயிரம் திருமுகங்களானும் அத்திருவருள் பொலிவாகவே
கண்டார்.
இதற்குக் காரணம் என்ன? நான்முகன் படைப்புத் தொழிற்கு
உரியவனாயினும், கலையறிவையே (வேதா)
பெற்றவன். காழிப் பிள்ளையாரோ அம்மையாரின் பாலமுதத்தோடு சிவஞானமும் குழைத்து ஊட்டப்
பெற்றவர். ஆதலின் அந்நான்முகன் பார்வையினும் இவர் பார்வை வேறுபட்டும் உயர்ந்தும்
இருப்பதாயிற்று.
பெ.
பு. பாடல் எண் : 1110
இன்னணம்
விளங்கிய ஏர்கொள் சாயலாள்
தன்னை, முன் கண்உறக் கண்ட
தாதையார்,
பொன்அணி
மாளிகைப் புகலி வேந்தர்தாள்
சென்னியில்
பொருந்தமுன் சென்று வீழ்ந்தனர்.
பொழிப்புரை : இங்ஙனம் விளங்கிய
அழகுடைய மென்மை யான சாயலையுடைய பூம்பாவையைக் கண்முன் பார்த்த தந்தையா ராகிய
சிவநேசர், பொன்னால் அணியப்பட்ட
மாளிகைகளை உடைய சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரின் திருவடிகளைத் தம் தலையில்
பொருந்தும்படி முன்சென்று வீழ்ந்து வணங்கினார்.
பெ.
பு. பாடல் எண் : 1111
அணங்கினும்
மேம்படும் அன்னம் அன்னவள்
பணம்புரி
அரவுஅரைப் பரமர் முன்பணிந்து,
இணங்கிய
முகில்மதில் சண்பை ஏந்தலை
வணங்கியே
நின்றனள், மண் உளோர்தொழ.
பொழிப்புரை : திருமகளினும்
மேன்மையுடையவராய் அன் னம் போன்றவரான பூம்பாவையார், படம் பொருந்திய ஐந்து தலைப் பாம்பை
அரையில் அணிந்த கபாலீச்சுரரை முன் வணங்கி, அதைக் கண்ட உலகத்தவர் தொழுமாறு, மேகம் தவழும் மதில்களை உடைய சீகாழித்
தலைவரான ஞானசம்பந்தரை வணங்கி நின்றார்.
குறிப்புரை : பூம்பாவையார், முன்னர் இறைவனை வணங்கிப் பின்னர்ப்
பிள்ளையாரை வணங்கி நின்றது உலகத்தவரும் ஏற்றுப் போற்று தற்குரியதாகும்.
பெ.
பு. பாடல் எண் : 1112
சீர்கெழு
சிவநேசர் தம்மை முன்னமே
கார்கெழு
சோலைசூழ் காழி மன்னவர்,
"ஏர்கெழு
சிறப்பில்நும் மகளைக் கொண்டுஇனிப்
பார்கெழு
மனையினில் படர்மின்" என்றலும்.
பொழிப்புரை : சிறப்புப் பொருந்திய
சிவநேசரை, முன்னம் மேகம்
சூழ்ந்த சோலைகள் பெருகிய சீகாழித் தலைவர், `அழகால் மிகச் சிறப்புடைய உம்மகளை உலகில்
ஓங்கி விளங்கும் இல்லத்துக்கு இனி அழைத்துச் செல்வீர்' என்று அருளிச் செய்யவும்,
பெ.
பு. பாடல் எண் : 1113
பெருகிய
அருள்பெறும் வணிகர் பிள்ளையார்
மருவுதா
மரைஅடி வணங்கிப் போற்றிநின்று
"அருமையால் அடியனேன்
பெற்ற பாவையைத்
திருமணம்
புணர்ந்துஅருள் செய்யும்" என்றலும்.
பொழிப்புரை : பெருகிய திருவருளைப்
பெற்ற வணிகரான சிவநேசர், ஞானசம்பந்தரின் தாமரை
மலர் போன்ற திருவடிகளை வணங்கிப் போற்றி நின்று, `அடியேன் அருமையாய்ப் பெற்றெடுத்த
இப்பூம்பாவைப் பெண்ணை மணம் கொண்டருளும்' என
வேண்டிக் கொள்ளவும்.
பெ.
பு. பாடல் எண் : 1114
மற்றுஅவர்
தமக்குவண் புகலி வாணர்,
"நீர்
பெற்றபெண்
விடத்தினால் வீந்த பின்னை,யான்
கற்றைவார்
சடையவர் கருணை காண்வர
உற்பவிப்
பித்தலால் உரை தகாது" என.
பொழிப்புரை : அவ்வாறு வேண்டிக்
கொண்ட வணிகரான சிவநேசரைப் பார்த்து,
வளம்
பொருந்திய சீகாழிச் செல்வரான ஞான சம்பந்தர், `நீவிர் பெற்ற பெண் நஞ்சினால் இறந்த
பின்பு, தொகுதியான நீண்ட
சடையையுடைய கபாலீச்சுரரின் அருள் விளங்க மீளவும் நான் உயிர் பெறச் செய்தலால், நீவிர் சொல்லும் அச் சொல் பொருந்தாது!' என்று கூறியருள,
குறிப்புரை : மகளாராகிய நிலையில்
மணக்கச் சொல்லுதல் தகாது என்றார். கோட்புலியார் மகளாரைச் சுந்தரர் தமது பெண்மக்கள்
ஆகக் கொண்டதையும் எண்ணுக.
பெ.
பு. பாடல் எண் : 1115
வணிகரும்
சுற்றமும் மயங்கிப் பிள்ளையார்
அணிமலர்
அடியில்வீழ்ந்து அரற்ற, ஆங்குஅவர்
தணிவுஇல்நீள்
பெருந்துயர் தணிய, வேதநூல்
துணிவினை
அருள்செய்தார் தூய வாய்மையார்.
பொழிப்புரை : வணிகரான சிவநேசரும்
அவருடைய சுற்றத் தவரும் அதைக் கேட்டு மயங்கி, ஞானசம்பந்தரின் அழகிய மலரடிக ளில்
விழுந்து பலவும் கூறிக் குறையிரந்து அழுது புலம்பக் கண்டு, அப்போது அவர்களின் ஆற்ற இயலாத நீண்ட
பெருந்துன்பம் தணியு மாறு, தூய்மையான
வாய்மையுடைய ஞானசம்பந்தர், மறை நூல் களில்
விதிக்கப்பட்டிருக்கும் முறைமைகளை எடுத்துக் கூறித் தேற்றியருளினார்.
குறிப்புரை : மறைநூல் முறைமையாவது
மகளாராகக் கருதத் தக்கவரை, மனைவியாராக ஏற்றல்
முறைமையும் அறனும் அன்று என்பதும்,
`அன்றே
அனாதி அமைத்தபடி யல்லாது ஒன்று,
இன்றே
புதிதாய் இயையுமோ - என்றும், சலியாது இயற்றுவான்
தன்னையே நோக்கி, மெலியாது இருந்து
விடு' (சிவபோகசாரம், 95) என்பதும் போன்ற
நியதிகளாகும்.
பெ.
பு. பாடல் எண் : 1116
தெள்ளுநீ
தியின்முறை கேட்ட சீர்கிளை
வெள்ளமும், வணிகரும், வேட்கை நீத்திட,
பள்ளநீர்ச்
செலவுஎனப் பரமர் கோயிலின்
உள்எழுந்து
அருளினார், உடைய பிள்ளையார்.
பொழிப்புரை : தெளிந்த நீதி
நூல்களின் ஒழுகலாற்றைக் கேட்ட சிறப்புடைய சுற்றத்தவரான பெருங்கூட்டமும், சிவநேசரும் தாம் கொண்ட விருப்பம்
நீங்கிட, ஞானசம்பந்தரும்
மேட்டுநிலத்தினின்றும் பள்ளத்திற்குப் பாயும் நீரென விரைவுடன் கோபுர
வாயிலினின்றும் இறைவரின் திருக்கோயிலுக்குள் எழுந்தருளினார்.
பெ.
பு. பாடல் எண் : 1117
பான்மையால்
வணிகரும் பாவை தன்மணம்
ஏனையோர்க்கு
இசைகிலேன் என்று கொண்டுபோய்,
வான்உயர்
கன்னிமா டத்து வைத்தனர்,
தேன்அமர்
கோதையும் சிவத்தை மேவினாள்.
பொழிப்புரை : பழவினை வயத்தால்
சிவநேசரும், `பூம்பாவை யாரை
மற்றவர் எவர்க்கும் மணம் செய்விக்க நான் சம்மதியேன்' என எண்ணித் துணிந்து, வான் அளாவ உயர்ந்த அவரது கன்னிமாடத்தில்
வைத்து, அங்கு வாழச்
செய்தார். வண்டுகள் மொய்த்தற்கு இடமான மாலையை அணிந்த பூம்பாவையாரும் சிவபெருமானை
அடைந்தார்.
குறிப்புரை : சடங்கவியார் மகளார், திலகவதியார் ஆகியோர்களின் நிறைவு
நிலையும் ஈண்டு ஒப்பிட்டு உணர்தற்குரியவாம்.
பெ.
பு. பாடல் எண் : 1118
தேவர்பிரான்
அமர்ந்துஅருளும் திருக்கபா லீச்சரத்து
மேவியஞா
னத்தலைவர் விரிஞ்சன்முதல்
எவ்வுயிர்க்கும்
காவலனார்
பெருங்கருணை கைதந்த படிபோற்றிப்
பா அலர் செந்தமிழ் பாடிப் பன்முறையும்
பணிந்துஎழுவார்.
பொழிப்புரை : தேவர்களின் தலைவரான
சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கும் திருக்கபாலீச்சுரத்தினுள் எழுந்தருளிய ஞான
சம்பந்தர், நான்முகன் முதலான
எல்லா உயிர்களுக்கும் காவலரான இறைவரின் பெருங்கருணை, கைகொடுத்தருளியதைப் போற்றிப் பாக்களாக
மலர்ந்த செந்தமிழைப் பாடிப் பன்முறையும் பணிந்து எழுவாராய்,
குறிப்புரை : முன் அருளிய பதிகம்
(தி.2 ப.47) கிடைத்தது போல, இதுபொழுது அருளிய பதிகம் கிடைத்திலது; நம்மனோரின் நல் தவக் குறைவே.
பெ.
பு. பாடல் எண் : 1119
தொழுதுபுறம்
போந்துஅருளித் தொண்டர்குழாம்
புடைசூழப்
பழுதுஇல்புகழ்த்
திருமயிலைப் பதியில்அமர்ந்து
அருளும்நாள்
முழுதுஉலகும்
தரும்இறைவர் முதல்தானம் பலஇறைஞ்ச
அழுதுஉலகை
வாழ்வித்தார் அப்பதியின்
மருங்குஅகல்வார்.
பொழிப்புரை : ஞானசம்பந்தர் தொழுது
வெளியே வந்து, திருத்தொண்டர்களின்
கூட்டம் அருகில் சூழ்ந்துவர, குற்றம் இல்லாத
புகழையுடைய அம்மயிலைத் திருப்பதியில் விரும்பித் தங்கி இருந் தருளும் நாள்களில், எல்லா உலகங்களையும் தந்து காத்தருளும்
இறை வர் எழுந்தருளும் முதன்மையுடைய பதிகள் பலவற்றையும் சென்று வணங்குவதற்காக, அழுது உலகை வாழ்வித்தவரான ஞானசம்பந்தர், அப்பதியினின்றும் நீங்கிச் செல்வாராய்,
திருஞானசம்பந்தர் திருப்பதிகம்
2.047 திருமயிலாப்பூர் பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
மட்டுஇட்ட
புன்னைஅம் கானல் மடமயிலைக்
கட்டுஇட்டம்
கொண்டான், கபாலீச்சரம்
அமர்ந்தான்,
ஒட்டிட்ட
பண்பின் உருத்திர பல்கணத்தார்க்கு
அட்டுஇட்டல்
காணாதே போதியோ பூம்பாவாய்.
பொழிப்புரை :பூம்பாவாய்!
தேன்பொருந்திய அழகிய. புன்னை மரச்சோலைகள் சூழ்ந்ததும், இளமயில்கள் ஆரவாரிப்பதுமான ஊரில் உள்ள
கபாலீச்சரம் என்னும் கோயிலில் விருப்பத்தோடு அமர்ந்தவன் மீது நெருக்கமான அன்புடைய
மாகேசுரர்களுக்குத் திருவிழாக்காலங்களில் அன்பர்கள் அமுது செய்விக்கும் காட்சிகளைக்
காணாது செல்வது முறையோ?
பாடல்
எண் : 2
மைப்பயந்த
ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த
நீற்றான் கபாலீச் சரம்அமர்ந்தான்
ஐப்பசி
ஒண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும்
காணாதே போதியோ பூம்பாவாய்.
பொழிப்புரை :பூம்பாவாய்!
மைபூசப்பெற்ற ஒளிநிறைந்த கண்களை உடைய இளமகளிர் வாழும் திருமயிலையில் கபாலீச்சரம்
என்னும் கோயிலில் கைமேல் பயன்தரும் திருநீற்றை அணிந்தவனாய் அமர்ந்துள்ள
பெருமானுக்கு நிகழ்த்தும் ஐப்பசி ஓண விழாவையும் அருந்தவமுனிவர் அமுதுண்ணும்
காட்சிகளையும் காணாது செல்வது முறையோ?
பாடல்
எண் : 3
வளைக்கை
மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்குஇல்
கபாலீச் சரத்தான்தொல் கார்த்திகைநாள்
தளத்துஏந்து
இளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு
காணாதே போதியோ பூம்பாவாய்.
பொழிப்புரை :பூம்பாவாய்!
வளையல்கள் அணிந்த இளமகளிர் வாழும் வளமான தெருக்களைக் கொண்டுள்ள மாமயிலையில்
விளங்கும், தளர்வற்ற கபாலீச்சரம்
என்னும் கோயிலில் விளங்கும் பெருமானைக் கார்த்திகைத் திங்களில் நிகழும்
விழாக்களின்போது சாந்தணிந்த இளநகில்களைக் கொண்ட மகளிர் திருவிளக்குகள் ஏற்றிக்
கொண்டாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?
பாடல்
எண் : 4
ஊர்திரை
வேலை உலாவும் உயர்மயிலைக்
கூர்தரு
வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
கார்தரு
சோலைக் கபாலீச் சரம்அமர்ந்தான்
ஆர்திரைநாள்
காணாதே போதியோ பூம்பாவாய்.
பொழிப்புரை :பூம்பாவாய்! ஊர்ந்து
வரும் அலைகள் வந்து உலாவும் கடலை அடுத்துள்ள உயர்ந்த மயிலாப்பூரில், கூரிய வேலால் மீன்களைக் கொல்வதில் வெற்றிகாணும்
நெய்தற்சேரியில் மழைவளம் தந்ததால் வளர்ந்த சோலைகள் சூழ்ந்த கபாலீச்சரம் என்னும்
கோயிலில் விளங்கும் பெருமானுக்குத் திருவாதிரை நாளில் நிகழ்த்தும் விழாவைக் காணாது
செல்வது முறையோ?
பாடல்
எண் : 5
மைப்பூசும்
ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு
நீற்றான், கபாலீச்
சரம்அமர்ந்தான்,
நெய்ப்பூசும்
ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசம்
காணாதே போதியோ பூம்பாவாய்.
பொழிப்புரை :பூம்பாவாய்! மைபூசிய
ஒளிநிறைந்த கண்களை உடைய இளமகளிர் வாழும் சிறந்த மயிலாப்பூரில் உள்ள கபாலீச்சரம்
என்னும் கோயிலில் கைகளில் நீறுபூசியவனாய் அமர்ந்துள்ள பெருமானுக்கு அணிகலன்
பூண்டுள்ள மகளிர் நெய்யொழுகும் சிறந்த பொங்கல் படைத்துக் கொண்டாடும்
தைப்பூசவிழாவைக் காணாது செல்வது முறையோ?
பாடல்
எண் : 6
மடல்ஆர்ந்த
தெங்கின் மயிலையார் மாசிக்
கடல்ஆட்டுக்
கண்டான் கபாலீச் சரம்அமர்ந்தான்
அடல்ஆன்
ஏறுஊரும் அடிகள் அடிபரவி
நடம்ஆடல்
காணாதே போதியோ பூம்பாவாய்.
பொழிப்புரை :பூம்பாவாய்! மடல்கள்
நிறைந்த தென்னைமரங்கள் மிகுந்த மயிலாப்பூரில் மாசிமகநாளில் கடலாட்டுக் கொண்ட
களிப்பொடு கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளியிருப்பவனும், வலிமை பொருந்திய ஆனேற்றில் ஊர்ந்து வருபவனும்
ஆகிய இறைவன் புகழ் பரவி அப்பெருமானது நடனமாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?
பாடல்
எண் : 7
மலிவிழா
வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக்
கண்டான் கபாலீச் சரம்அமர்ந்தான்
பலிவிழாப்
பாடல்செய் பங்குனி உத்தரநாள்
ஒலிவிழாக்
காணாதே போதியோ பூம்பாவாய்.
பொழிப்புரை :பூம்பாவாய்! இளம்
பெண்கள் வாழும் விழாக்கள் நிறைந்த வீதிகளைக் கொண்ட பெரிய மயிலையில் எழுச்சியை
விளைவிக்கும் திருவிழாக்களைக் கண்டு அங்குள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில்
அமர்ந்தானது பலி அளிக்கும் விழாவாகப் பங்குனி உத்தரநாளில் நிகழும் ஆரவாரமான
விழாவைக்காணாது செல்வது முறையோ?
பாடல்
எண் : 8
தண்ணா
அரக்கன்தோள் சாய்த்துஉகந்த தாளினான்,
கண்ஆர்
மயிலைக் கபாலீச் சரம்அமர்ந்தான்,
பண்ஆர்
பதின்எண் கணங்கள்தம் அட்டமிநாள்
கண்ஆரக்
காணாதே போதியோ பூம்பாவாய்.
பொழிப்புரை :பூம்பாவாய்!
வெம்மையான இயல்புடைய இராவணனின் தோள்களை நெரித்துகந்த திருவடிகளை உடையவனாய், கண்களுக்கு நிறைவு தரும் மயிலையில் உள்ள
கபாலீச்சரத்தில் அமர்ந்துள்ளவனுக்கு, பண்ணோடு
பாடும் பதினெண் கணத்தினரும் ஏத்தும் வகையில் சித்திரை அட்டமியில் நிகழும் விழாவைக்
கண்ணாரக் கண்டுமகிழாது செல்வது முறையோ?
பாடல்
எண் : 9
நல்தா
மரைமலர்மேல் நான்முகனும் நாரணனும்
முற்றுஆங்கு
உணர்கிலா மூர்த்தி திருவடியைக்
கற்றார்கள்
ஏத்தும் கபாலீச் சரம்அமர்ந்தான்
பொன்தாப்புக்
காணாதே போதியோ பூம்பாவாய்.
பொழிப்புரை :பூம்பாவாய்! நல்ல
தாமரைமலர் மேல் உறையும் நான்முகனும் திருமாலும் முழுவதும் அறியாதவாறு அழலுருவாய்
ஓங்கிய, மூர்த்தி தன்
திருவடிகளைக் கற்றவர்பரவக் கபாலீச்சரம் அமர்ந்து உறைவோன். அப்பெருமானுக்கு நிகழும்
ஊஞ்சலாட்டுத் திருவிழாவைக் காணாது செல்லல் முறையோ?
பாடல்
எண் : 10
உரிஞ்சுஆய
வாழ்க்கை அமண்,உடையைப் போர்க்கும்
இருஞ்சாக்
கியர்கள் எடுத்து உரைப்ப,
நாட்டில்
கருஞ்சோலை
சூழ்ந்த கபாலீச் சரத்தான்தன்
பெருஞ்சாந்தி
காணாதே போதியோ பூம்பாவாய்.
பொழிப்புரை :பூம்பாவாய்! உடை
ஒழிந்தவராய் வாழும் சமணர், உடையைப் போர்த்துத்
திரியும் கரிய சாக்கியர் தம் வாய்க்கு வந்தவாறு பிதற்ற மண்ணுலகில் கரிய சோலை
சூழ்ந்த கபாலீச்சரத்தானுக்கு நிகழும் நல்ல பெருஞ்சாந்தி விழாவைக் காணாது செல்வது
முறையோ?
பாடல்
எண் : 11
கான்அமர்
சோலைக் கபாலீச் சரம்அமர்ந்தான்
தேன்அமர்
பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான்
ஞானசம்
பந்தன் நலம்புகழ்ந்த பத்தும்வல்லார்
வானசம்
பந்தத்து அவரோடும் வாழ்வாரே.
பொழிப்புரை :மணம் பொருந்திய
சோலைகள் சூழ்ந்த மயிலையில் விளங்கும் கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளிய
இறைவன்மீது, தேன் பொருந்திய
பூவில் உறையும் பாவையை விளிக்கும் பாட்டாகச் செந்தமிழால் ஞானசம்பந்தன் இறைவனது
நலம்புகழ்ந்து பாடிய இப்பத்துப்பாடல்களையும் ஓதவல்லவர் வீடுபெற்ற சிவகணத்தவரோடு
கூடி நிலைத்து வாழ்வர்.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment