அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
சங்குபோல் மென்
(திருச்செந்தூர்)
முருகனையே பாடித் தொண்டு
புரிந்து உய்ய
தந்தனா
தந்தனத் தந்தனா தந்தனத்
தந்தனா தந்தனத் ...... தனதான
சங்குபோல்
மென்கழுத் தந்தவாய் தந்தபற்
சந்தமோ கின்பமுத் ...... தெனவானிற்
றங்குகார்
பைங்குழற் கொங்கைநீள் தண்பொப்
பென்றுதாழ் வொன்றறுத் ...... துலகோரைத்
துங்கவேள்
செங்கைபொற் கொண்டல்நீ யென்றுசொற்
கொண்டுதாய் நின்றுரைத் ...... துழலாதே
துன்பநோய்
சிந்தநற் கந்தவே ளென்றுனைத்
தொண்டினா லொன்றுரைக் ...... கருள்வாயே
வெங்கண்வ்யா
ளங்கொதித் தெங்கும்வே மென்றெடுத்
துண்டுமே லண்டருக் ...... கமுதாக
விண்டநா
தன்திருக் கொண்டல்பா கன்செருக்
குண்டுபே ரம்பலத் ...... தினிலாடி
செங்கண்மால்
பங்கயக் கண்பெறா தந்தரத்
தின்கணா டுந்திறற் ...... கதிராழித்
திங்கள்வா
ழுஞ்சடைத் தம்பிரா னன்புறச்
செந்தில்வாழ் செந்தமிழ்ப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
சங்குபோல்
மென்கழுத்து, அந்தவாய் தந்தபல்
சந்தமோக இன்ப முத்து ...... என,
வானில்
தங்குகார்
பைங்குழல், கொங்கை நீள்
தண்பொருப்பு
என்று தாழ்வு ஒன்ற அறுத்து ...... உலகோரைத்
துங்கவேள், செங்கைபொன் கொண்டல் நீ என்று, சொல்
கொண்டு, தாய் நின்று உரைத்து ...... உழலாதே,
துன்பநோய்
சிந்த, நல் கந்த வேள் என்று, உனைத்
தொண்டினால் ஒன்று உரைக்க ...... அருள்வாயே.
வெங்கண்
வ்யாளம் கொதித்து, எங்கும் வேம் என்று, எடுத்து
உண்டு, மேல் அண்டருக்கு ...... அமுதாக
விண்ட
நாதன், திருக்கொண்டல் பாகன், செருக்
குண்டு, பேர் அம்பலத் ...... தினில்ஆடி,
செங்கண்மால்
பங்கயக் கண் பெறாது, அந்தரத்-
தின் கண் நாடும் திறல் ...... கதிர் ஆழித்
திங்கள்
வாழும் சடைத் தம்பிரான் அன்புஉற,
செந்தில்வாழ் செந்தமிழ்ப் ...... பெருமாளே.
பதவுரை
வெம் கண் வ்யாளம் கொதித்து எங்கும் வேம்
என்று எடுத்து உண்டு --- வெப்பமான கண்களையுடைய பாம்பினின்றும் வந்த ஆலகால விஷத்தை எங்கும் சூடாகி வேகச் செய்யும் என்று
கருதி அதனை எடுத்து உண்டு,
மேல் அண்டருக்கு அமுது ஆக விண்ட நாதன் ---
மேன்மையுடைய தேவர்கட்கு அமிர்தம் ஆகுமாறு வெளிவரச்
செய்த தலைவரும்,
திருக் கொண்டல் பாகன் --- அழகிய மேகவண்ணராகிய
திருமாலைத் தமது வலப் பாகத்தில் கொண்டவரும்,
செருக்கு உண்டு பேரம்பலத்தினில் ஆடி ---
மகிழ்ச்சியுடன் பெரிய வெளியினில் திருநடனம் புரிபவரும்,
செம் கண் மால் பங்கயக் கண் பெறாது அந்தரத்தின்கண்
ஆடும் திறல் --- சிவந்த கண்களையுடைய திருமால் தாமரைப் போன்ற கண்களால் காணமுடியாத
நிலையில், அருள் வெட்ட வெளியில்
ஆடும் பேராற்றல் படைத்தவரும்,
கதிர் ஆழி திங்கள் வாழும் சடை தம்பிரான்
அன்பு உற --- ஒளிபெற்ற கடலில் பிறந்த சந்திரன் உறையும் சடையை உடைய தனிப்பெருந்
தலைவரும் ஆகிய சிவபெருமான் அன்பு கொள்ள,
செந்தில்வாழ் செந்தமிழ் பெருமாளே ---
திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள செந்தமிழுக்கே உரிய பெருமையில் சிறந்தவரே!
சங்குபோல் மென் கழுத்து --- மெல்லிய
கழுத்து சங்குபோன்றது என்றும்,
அந்த வாய் தந்த பல் சந்த மோக இன்ப முத்து என ---
அழகிய வாயில் உள்ள பற்கள் இனிய மோகத்தைத் தரும்
முத்துக்கள் என்றும்,
வானில் தங்கு கார் பை குழல் --- விண்ணில்
தங்குகின்ற கரிய பசிய மேகம் போன்றது கூந்தல் என்றும்,
கொங்கை நீள் தண் பொருப்பு --- தனமானது நீண்ட குளிர்ந்த மலை போன்றது என்றும்
கூறி,
தாழ்வு ஒன்று அறுத்து ---- தாழ்வு என்பதை
விடுத்து,
உலகோரை --- உலகிலுள்ள செல்வரைப் பார்த்து,
துங்கவேள் --- அழகில் உயர்ந்த மன்மதனே!
செங்கை பொன் கொண்டல் நீ என்று --- சிவந்த
கரத்தால் பொன் தருவதில் நீ மேகமேயாகும் என்று புகழ்ந்து,
சொல்கொண்டு தாய் நின்று உரைத்து உழலாதே ---
தமிழ்ச் சொற்களைக் கொண்டு அவர்கள் பால் தாவிச்
சென்று நின்று கவிபாடி இங்கும் அங்குமாக உழன்று திரியாமல்,
துன்பநோய் சிந்த --- பிறவித் துன்பநோய்
அழியுமாறு,
நல் கந்தவேள் என்று உனைத் தொண்டினால் ---
நல்ல கந்தக் கடவுளே! என்று உம்மைத் துதித்து தொண்டு நெறியில்,
ஒன்று உரைக்க அருள்வாயே --- ஒன்று கூற
அருள்புரிவீர்.
பொழிப்புரை
வெவ்விய கண்களை உடைய பாம்பினிடம்
தோன்றிய ஆலகால விடத்தை, எங்கும் கொளுத்தி அழிக்கும்
என்று கருதி எடுத்து உண்டு, மேன்மை பெற்ற
அமரர்களுக்கு அமுதம் ஆகுமாறு வெளிப்படுத்தருளிய நாதரும், அழகிய திருமாலைத் தமது வலப்பக்கத்தில்
கொண்டவரும், ஆனந்தத்துடன்
பேரம்பலத்தில் நடனம் புரிபவரும்,
சிவந்த
கண்களையுடைய நாராயணர் கண்கொண்டு காணக்கூடாத நிலையில் அருள் வெளியில் ஆடுகின்ற
சமர்த்தரும், கடலில் தோன்றிய
ஒளிபெற்ற சந்திரன் உறைகின்ற சடைமுடியை உடையவரும் ஆகிய தனிப்பெருந் தலைவர்
சிவபெருமான் விரும்புகின்ற திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள செந்தமிழ்க்
கடவுளாகிய பெருமிதம் உடையவரே!
மெல்லிய கழுத்து சங்கு போன்றது, அழகிய வாயிலுள்ள பல் இனிய மோகத்தைத்
தரும் முத்துப்போன்றது, பசிய கூந்தல் வானில்
தங்கும் கரிய மேகம், தனங்கள் நீண்டு
குளிர்ந்துள்ள மலைகள் என்று வியந்து கூறி குறைவு என்பதை நீக்கி, செல்வரை நாடிச்சென்று “மன்மதனே! உன் கை
மேகம் போன்றது” என்று புகழுரைக்கூறி அவரிடம் தாவி நின்று பாடி (வீணில்) அழியாமல், பிறவித்துன்பமாகிய நோய்விலக நலம்
பொருந்திய கந்தவேளே என்று உம்மைத் துதித்துத் தொண்டு புரிந்து ஒரு மொழியாகிய தனி
மந்திரத்தைச் செபிக்கத் திருவருள் புரிவீர்.
விரிவுரை
விட புருடர்கள் அழிந்து போகும் மாதர்
அவயவங்களை அழகின் கருவூலமாகக் கருதி அவைகட்கு உவமைகள் தேடி நாடிப்பாடி அவமே அழிவர்.
காலையிலே கவின் பெற இலகும் மலர்,
மாலையிலே
வாடி உதிர்வதும், செவசெவ என்று
மின்னிப் பட்டுத் துணிபோல் விளங்கும் மாந்தளிர், பின்னர் முதிர்ந்து உலர்ந்து உதிர்ந்து
காலில் மிதிபட்டு அழிவதும் கண்கூடு. பவுர்ணமியன்று அழகாகத் தோன்றிய முழுநிலா
தேய்ந்து போவதும், முத்துப்போல் இருந்த
நீர்த்துளிகள் சிறிது நேரத்தில் வற்றி உலர்ந்து போவதையும் பார்க்கின்றோம். ஆகவே
இந்த அழகு அனைத்தும் நிலையில்லாதவை. நிலைபேறான அழகு இறைவனிடமே அமைந்திருக்கின்றது.
ஆயிரங்கோடி மன்மதர்களுடைய அழகுகள் அனைத்தும் ஒன்று கூடினாலும் முருகவேள் தூய
திருவடியின் ஒரு புறத்தில் உள்ள அழகுக்கு இணைவராது என்று நேரிற்கண்ட சூரபன்மன்
கூறுகின்றான்.
ஆயிர
கோடி காமர் அழகுஎலாம் திரண்டு,ஒன் றாகி
மேயின
எனினும், செவ்வேள் விமலமாம்
சரணந்தன்னில்
தூயநல்
எழிலுக்கு ஆற்றாது என்றிடில், இனைய தொல்லோன்
மாஇரு
வடிவுக்கு எல்லாம் உவமையார் வகுக்க வல்லார்.
ஆகவே, இத்தகைய அழகின் பிறப்பிடமும் அழகின்
சொரூபமும் ஆகிய அழகினைக் கண்டு களிக்காமலும், அவனைக் கை கூப்பித் தொழாமலும், அவனைச் சிந்திக்காமலும், மனிதர் அழகில்லாத மலக் கூட்டை - மலம்
சோரும் ஒன்பது வாயிற் குடிலை -நாறுகின்ற தசைப் பொதியைக் கண்டு, அதுவே அழகின் இருப்பிடம் என்று, விளக்கில் வீழும் விட்டிற்
பூச்சியைப்போல, மலத்தை உருட்டும்
கருவண்டைப் போலே, மல உடம்பை வருணனை
செய்து பாடி மாய்வர். அந்தோ!
காமதேனுவின்
பாலைக் கமரில் கொட்டுவதுபோல் ஆண்டவனைப் பாடுவதற்கு என்று அமைந்த அரிய தமிழைப்
புன்புலால் உடம்பைப் பாடுவதற்குப் பயன்படுத்திப் பரகதி காணாது பரதவிப்பர். அத்தகைய
புன்னெறியை விலக்க எழுந்தது இத்திருப்புகழ்.
சங்குபோல்
மென் கழுத்து
---
கழுத்து
சங்குபோல் படிப்படியாக அழகாக இருக்கவேண்டும். உடலின் சாமுத்ரிகா இலக்கணங்களில் அது
ஒன்று. மகளிர் கழுத்து சங்குபோல் அழகியது என்று புகழ்வது மரபு. சிலருடைய கழுத்து
குடத்தின் மீது சொம்பு வைத்தது போல விகாரமாக இருக்கும். அப்படிக்கின்றி அழகாக
அமைந்த கழுத்து வலம் புரிபோல் நலம் பெற விளங்கும்.
அந்த
வாய் தந்தபல் சந்த மோக இன்ப முத்து என ---
அழகிய
மகளிர் வாயிலுள்ள பல் முத்து போன்றது என்று உவமித்து மகிழ்வர். அவர்கள் புன்னகைப்
புரிந்தால், காணிக்கையாகப்
பொன்னகைத் தந்து பணிவர் காமுகர். அப்பல் ஒரு காலம் உதிர்ந்து போவதுதான். உதிர்ந்த
பல் முத்து போலவா இருக்கும்?
வானில்
தங்கு கார் பைங்குழல் ---
உதிர்ந்து
போவதும், பஞ்சு போல் நரைத்துப்
போவதும், கசக்கவில்லையானால்
அழுக்குப் பிடித்து நாறுவதும் சிக்குப்பிடித்துச் சீரழிவதும் ஆகிய கூந்தலை வானில்
தங்கும் கரிய மேகம் என்று வியந்து கூறுவர். இன்னும் என்ன என்னவோ உவமை
கூறியுழல்வர்.
கொங்கை
நீள் தண்பொருப்பு என்று ---
ஒரு
காலம் திரைத்துத் தொங்கி ஒழியும் தனத்தினை நீண்ட மலையென்று மதித்து மதி மயங்குவர்.
இவை அனைத்தும் கானலை நீரெனக் கருதுவது போலாகும்.
“வனம்அழியு மங்கை மாதர்களின்
நிலைதனை உணர்ந்து, தாளில்உறு
வழிஅடிமை அன்பு கூரும்அது சிந்தியாதோ” --- (உததியறல்) திருப்புகழ்.
உலகோரை..........கொண்டல்
நீ என்று சொற்கொண்டு ---
மகளிரைப்
புகழ்ந்து மதி மயங்கி மோகாந்தகாரம் மூடி, அவர்கட்கு
அள்ளி வழங்குதற்கெனப் பொருளை நாடி,
செல்வரைத்
தேடிச் சென்று, அழகில்லாதவரை அநங்கனே
என்றும், கொடாத லோபியைக்
கொண்டலே என்றும் பொய்மையாகப் புகழ்ந்து பாடித் தலைமை சான்ற புலமையை அவமாக்குவர்.
தாய்
நின்று உரைத்து உழலாதே ---
தாய்-தாவி.
அங்குமிங்குமாகத் தாவிச்சென்று உழல்வர். இங்ஙனம் உலகிலுள்ள புலவருட் பலர் வீணில்
உழல்வதை அருணகிரிநாதர் தம்மீது ஏற்றிக் கொண்டு,அவர்கள் பொருட்டு இறைவனிடத்தில்
மன்னிப்புக் கேட்டுக்கொண்டு அங்ஙனம் அவநெறி நிற்கும் புலவர் சிவநெறி
உய்யும்பொருட்டு இதனைப் பாடியருளினார் என வுணர்க.
துன்ப
நோய் சிந்த
---
இங்கு
நோய் என்பது பிறவிநோய் என உணர்க. அந்த நோயை மாற்றும் மருத்துவன் முருகனே ஆகும்.
அது நெடிது காலமாகத் தொடர்ந்து வருகின்ற நோய். அதனை அந்நோய் இல்லாத ஒருவனே மாற்ற முடியும்.
பெம்மான் முருகன் பிறவான் இறவான்,
ஏனைய
தேவதைகள் செத்துப் பிறப்பவை.
“செத்துப் பிறக்கின்ற
தெய்வங்கள் மணவாள!
செங்கீரை ஆடி அருளே” ---
குமரகுருபரர்.
முருகன்
அருணகிரியாருக்கு அந்த அருள் நலத்தை யருளினான் என்பதனை அடியில் வரும் அடியால்
அறிக.
“அநுபவ சித்த பவக்
கடலில் புகாது, எனை
வினவி எடுத்து, அருள் வைத்த கழல் க்ருபாகரன்” --- பூதவேதாள வகுப்பு
தொண்டினால்
ஒன்றுரைக்க அருள்வாயே ---
முருகனுக்கு
தொண்டுபட்டு, மறுமொழிப் புகலாது, ஒரு மொழிப் புகன்று உய்யவேண்டும். அந்த
வரத்தை இதன் மூலம் சுவாமிகள் வேண்டுகின்றனர்.
வெங்கண்
வ்யாளம்
---
வியாளம்-பாம்பு.
தேவர்கள் பாற்கடல் கடைந்த போது,
மந்தரகிரியை
மத்தாகவும், வாசுகி என்ற
அரவரசனைத் தாம்பாகவும் பிணித்தனர்,
பலநாள்
கடைந்தபோது அத்துன்பத் தைத் தாங்கமாட்டாத வாசுகி ஆலகால விடத்தைக் கக்கினன். இங்கே
பாம்பினிடந் தோன்றிய நஞ்சு என்பதை வருவித்துப் பொருள் கொள்ள வேண்டும். அந்த
விடத்தால் உலகமெல்லாம் கொதித்து அல்லலுற்றன. அமரர் ஆற்றாது அஞ்சி அலமரலுற்றனர்.
எடுத்து
உண்டு
---
இறைவன்
அமரரை ஆட்கொள்ளும் பொருட்டு ஆலகால விடத்தை யெடுத்து உண்டு அமரர்க்கு அமுதத்தை
வரவழைத்து அளித்து அருள்புரிந்தனர். இல்லையேல் வானவர் யாவரும் அன்றே
மாண்டிருப்பார்கள்.
மால்எங்கே, வேதன்உயர் வாழ்வுஎங்கே, இந்திரன்செங்
கோல்எங்கே, வானோர் குடிஎங்கே,-கோலஞ்செய்
அண்டங்கள்
எங்கே, அவனிஎங்கே, எந்தைபிரான்
கண்டம்அங்கே
நீலம்உறாக் கால். --- திருவருட்பா.
இறைவனுடைய
எல்லையில்லாத பெருங்கருணையை விளக்குவது அவரது நீலகண்டம்.
திருக்கொண்டல்
பாகன்
---
உமையம்மையாரை
இடப்பாகத்தும் திருமாலை வலப்பாகத்தும் சிவபெருமான் வைத்திருப்பர். திருமால்
புருஷசக்தியென அறிக. கூர்ம புராணம் முதலிய நூல்களில் விளக்கமாக இது பற்றிக்
கூறியுள்ளது. இத்திருமால் ’சம்பு
பட்சத்தில்’ உள்ள நவந்தருபேதத்தில் உள்ள மூர்த்தியென வுணர்க.
இறந்து
பிறந்து உழலும் மூவரில் ஒருவராகிய திருமால் என மயங்கற்க. அடிமலர் தேடியறியாது
அல்லலுற்ற திருமால்’அணுபட்சத்தில்’ உள்ளவர் எனவும் அறிக. இந்த விளக்கத்தை வெகுபேர்
அறியாது இரண்டும் ஒன்றென எண்ணி இடர்ப்படுவர்.
“பிறைதங்கு சடையானை
வலத்தே வைத்து” என்று திருமங்கையாழ்வாரும் கூறுகின்றார். இதுதான் சிவமூர்த்தம்
இருபத்தைந்தில் கேசவார்த்த மூர்த்தம் என வுணர்க.
தாழ்சடையும்
நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழ்அரவும்
பொன்நாணும் தோன்றுமால்-வீழும்
திரண்டுஅருவி
பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுஉருவும்
ஒன்றாய் இசைத்து. --- பேயாழ்வார்.
செருக்குண்டு
பேரம்பலத்தினிலாடி ---
செருக்கு-மகிழ்ச்சி.
இறைவனுடைய நடனம் ஆனந்த நடனம். சிற்றம்பலம் - ஆன்மாக்களின் இதயத் தாமரையிலுள்ள
சிறுமையான நுட்பமான தகராகாசம் ஆகும். பேரம்பலம் உலகங் கடந்த பெருவெளியாகும்.
செங்கண்மால்
பங்கயக் கண்பெறாது ---
புண்டரீகக்
கண்ணுடைய திருமால் ஆயிரம் ஆண்டு தேடியும் அரனார் அடிமலர் காணப் பெற்றாரில்லை.
“மண் வைத்த குக்கி
மணிவண்ணன் - அன்றொருநாள்
கண்வைத்துங் காணாக் கழலிணையான்”
என்ற
அமுத வாக்காலும் அறிக.
அந்தரத்தின்
கண் ஆடும்
---
இங்கே
அந்தரம் என்பது பகிரண்ட வெளியை யுணர்த்தியது. ஆண்டவ னுடைய அசைவே அகிலவுலகங்களின்
அசைவுக்குங் காரணமாகும்.
செந்தில்வாழ்
செந்தமிழ்ப் பெருமாளே ---
சிவபெருமானும்
அன்பு கொள்ளும் திருத்தலமாகிய திருச்சீரலைவாய் என்னும் திருச்செந்தூரில் தமிழில்
தவழ்ந்து வரும் தென்றல் காற்றுடன் செந்தமிழ்த் தெய்வமாகத் திருவேலிறைவன்
வீற்றிருக்கின்றான்.
கருத்துரை
சிவபெருமான் மகிழும் செந்தில் மேய
திருமுருகவேளே! அவர்களைப் பாடாமல் உம்மையே பாடி ஒருமொழி புகன்று உய்ய அருளுவீர்
No comments:
Post a Comment