திருச்செந்தூர் - 0066. துன்பம் கொண்டு


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

துன்பம்கொண்டு அங்கம் (திருச்செந்தூர்)

முருகன் திருவடிக்குத் தொண்டு பட்டு உய்ய

தந்தந்தந் தந்தன தந்தன
     தந்தந்தந் தந்தன தந்தன
          தந்தந்தந் தந்தன தந்தன ...... தனதான

துன்பங்கொண் டங்கமெ லிந்தற
     நொந்தன்பும் பண்பும றந்தொளி
          துஞ்சும்பெண் சஞ்சல மென்பதி ...... லணுகாதே

இன்பந்தந் தும்பர்தொ ழும்பத
     கஞ்சந்தந் தஞ்சமெ னும்படி
          யென்றென்றுந் தொண்டுசெ யும்படி ...... யருள்வாயே

நின்பங்கொன் றுங்குற மின்சர
     ணங்கண்டுந் தஞ்சமெ னும்படி
          நின்றன்பின் றன்படி கும்பிடு ...... மிளையோனே

பைம்பொன்சிந் தின்றுறை தங்கிய
     குன்றெங்குஞ் சங்குவ லம்புரி
          பம்புந்தென் செந்திலில் வந்தருள் ...... பெருமாளே.

பதம் பிரித்தல்

துன்பம்கொண்டு, அங்கம் மெலிந்து, அற
     நொந்து, அன்பும் பண்பும் மறந்து, ஒளி
          துஞ்சும்பெண் சஞ்சலம் என்பதில் ...... அணுகாதே,

இன்பம் தந்து, உம்பர் தொழும் பத
     கஞ்சம் தம் தஞ்சம் எனும்படி,
          என்றென்றும் தொண்டு செயும்படி ...... அருள்வாயே,

நின்பங்கு ஒன்றும் குறமின் சர-
     ணம் கண்டும் தஞ்சம் எனும்படி
          நின்று, அன்பின் தன்படி கும்பிடும் ...... இளையோனே!

பைம்பொன் சிந்தின் துறை தங்கிய
     குன்று எங்கும் சங்கு வலம்புரி
          பம்பும், தென் செந்திலில் வந்துஅருள் ...... பெருமாளே.

பதவுரை

         நின் பங்கு ஒன்றும் குறமின் சரணம் கண்டு --- தேவரீருடைய பக்கத்தில் பொருந்தி நிற்கும் வள்ளியம்மையின் பாதத்தைப் பார்த்து,

     தஞ்சம் எனும்படி நின்று அன்பின் தன்படி கும்பிடும் இளையோனே --- புகலிடம் என்று கூறி நின்று அன்பின் முறைப்படி கும்பிட்ட இளம்பூரணரே!

         பைம் பொன் சிந்தின் துறை தங்கிய குன்று எங்கும் --- பசுமைப் பொலிவுடன் விளங்கும் கடற்கரையில் உள்ள, குன்றுகளிலெல்லாம்,

     வலம்புரி சங்கு பம்பும் தென் செந்திலில் வந்தருள் பெருமாளே --- வலம்புரிச் சங்குகள் நிறைந்துள்ள அழகிய திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள பெருமையிற் சிறந்தவரே!

         துன்பம் கொண்டு அங்கம் மெலிந்து அற நொந்து - துன்பத்தை அடைந்து உடம்பு மெலிவுற்று, மிகவும் நலிந்து,

     அன்பும் பண்பும் மறந்து --- அன்பையும் பண்பையும் மறந்து,

     ஒளி துஞ்சும் --- உடம்பின் ஒளி குறைந்து போகுமாறு செய்கின்ற,

     பெண் சஞ்சலம் என்பதில் அணுகாதே --- பெண்களால் வருந் துன்பத்தில் அடியேன் சிக்கி வருந்தாமல்,

     இன்பம் தந்து --- இன்பத்தைத் தந்தருளி,

     உம்பர் தொழும் பத கஞ்சம் --- தேவர்கள் பணிகின்ற பாத தாமரையே,

     தம் தஞ்சம் எனும்படி --- நமது புகலிடம் என்று கொண்டு,

     என்றென்றும் --- எந்த நாளிலும்,

     தொண்டு செயும்படி அருள்வாயே --- தேவரீருக்குத் திருத்தொண்டு செய்யுமாறு அருள்புரிவீர்.

பொழிப்புரை

         தேவரீருடைய பக்கத்தில் பொருந்தியுள்ள, வள்ளியம்மையாருடைய பாத மலரைக் கண்டு இதுவே புகலிடம் என்று கூறி நின்று, அன்பின் முறைப்படி வணங்கிய இளங் குமாரரே!

         பசுமை நிறப் பொலிவுடைய கடற் கரையின் கண்ணுள்ள குன்றுகளிளெல்லாம் வலம்புரிச் சங்குகள் நிறைந்துள்ள இனிமையான திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே!

         துன்பத்தை அடைந்தும், தேகம் மெலிந்தும், மிகவும் நொந்தும், அன்பையும், பண்பையும் மறந்தும், உடல் ஒளி குறைந்து போகும்படியும் புரியும் பெண்கள் மயக்கத்தில் அணுகி வீணாகாமல்,

     பேரின்பத்தை வழங்கி, தேவர்கள் தொழுகின்ற உமது பாத தாமரையே நமது புகலிடம் என்று நினைத்து, எந்த நாளிலும் தேவரீருக்கே தொண்டு செய்து உய்யுமாறு அருள் புரிவீர்.

விரிவுரை

துன்பங் கொண்டு ---

         உலகிலே வருகின்ற துன்பங்களுக்கெல்லாம் தலையாய துன்பம் பெண்மயலால் விளைவதுவே ஆகும். வலிமையில் சமான மில்லாத வாலியும், இந்திரபோகம் பெற்ற இராவணனும்; சந்திரன், இந்திரன், நகுஷன் முதலியோர்களும் அழிந்தது இப்பெண் மையலால் என அறிக.

இராமன் சுக்ரீவனை நோக்கிக் கூறுகின்றார்.

மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம் என்றல்
சங்கையின்று உணர்தி வாலி செய்கையால் சாலும் இன்னம்
அங்கவர் திறத்தினானே அல்லலும் பழியும் ஆதல்
எங்களில் காண்டி அன்றே இதற்கு வேறு உவமை உண்டோ.

அங்கம் மெலிந்தற நொந்து ---

மாதர் நலத்தை மிகுதியாக விரும்பி அநுபவிப்பார்க்கு, உடல் மெலிவும், உளநலிவும் உண்டாகும். அன்றி ஆரோக்கியம் குறையும். ஆற்றல் கெடும், மேலும் நோய்கள் மலியும்.

அன்பும் பண்பும் மறந்து ---

உயிர் வாழ்க்கைக்கு அன்பு மிகச் சிறந்தது. அன்பின் முடிவில் அதன் சிகரமாக விளங்குவது பண்பு.

அன்பின் வழியது உயிர்நிலை, அஃதுஇலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.                  --– திருக்குறள்.

பண்பு என்பது மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது. பண்புடைமை என்று ஓர் அதிகாரமே வகுத்துரைத்தார் திருவள்ளுவதேவர். அதுவும் சான்றாண்மைக்கு அடுத்த அதிகாரமாக அமைத்தனர்.

பண்பெனப் படுவது பாடறிந் தொழுகல்”      என்று கலித்தொகை புகல்கின்றது.

பண்பில்லாதவர், கூரிய அறிவுடையவர்களாக இருப்பினும் அவர்கள் மனிதர்கள் அல்லர் மரத்துக்குச் சமானமாவார் என்கிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவர்.

அரம்போலும் கூர்மைய ரேனும், மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.                    --- திருக்குறள்.

கெடுதலான பாத்திரத்தில் விட்ட பால் கெட்டு விடுவதுபோல், பண்பில்லாதானிடம் அமைந்த பெருஞ்செல்வமும் பயன்படாது ஒழியும் என்கின்றார்.

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம், நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.              --- திருக்குறள்.   

ஒளி துஞ்சும் ---

மிகுந்த ஆசையாளராய் அரிவையர் மயலில் வீழ்ந்து உழன்றோர்க்கு உடல் ஒளி குன்றும். அன்றியும் அறிவின் ஒளியும் குறையும்.

பெண் சஞ்சலம் என்பதில் அணுகாதே ---

    மாதரை அணைதல் வேண்டும் என்றும், அவருக்கு ஆடை அணிகலன்கள் அளிக்க வேண்டும் என்றும், அவருடைய உற்றாரை ஓம்புதல் வேண்டும் என்றும் சதா மனதில் துயரமே உண்டாகும். அறிவுடையவர்கள், துயரங்களுக்கு மூல காரணமாகவுள்ள மாதராசையை வேருடன் களைதல் வேண்டும்.

தூம கேது புவிக்கு எனத் தோன்றிய
வாம மேகலை மங்கைய ரால்வரும்
காமம் இல்லை எனில்,கடுங் கேடுஎனும்
நாமம் இல்லை, நரகமும் இல்லையே.    --- கம்பராமாயணம்.

இன்பந் தந்து ---

உலகிலேயுள்ள சுகங்கள் யாவும் தினையளவாகும். இந்த அற்ப சுகத்தைப் பெரிதெனக் கருதி ஆன்ம கோடிகள் இங்கும் அங்கும் அலைகின்றன. அந்தோ! பரிதாபம்.

மன்னர்கள், சிறந்த அரண்மனையில் வாழ்ந்து அநுபவிக்கின்ற சுகமும், இந்திரன், அமராவதியில் கற்பகத் தருவின் கீழ்வீற்றிருந்து அநுபவிக்கின்ற சுகமும், பிரம்மதேவர் சத்தியவுலகில் தாமரைத் தவிசின் மீது அமர்ந்து துய்க்கின்ற பெரிய சுகமும், திருமால் வைகுண்டத்தில் இருந்துசீதேவி பூதேவியுடன் இனிதமர்ந்து நித்தியசூரிகள் சேவிக்க அநுபவிக்கின்ற பரமபத வாழ்வின் சுகமும், நாகவுலகில் மணிவிளக்கு எரிய நாகர்கள் அநுபவிக்கின்ற சுகமும், ஏனைய குபேரன், வசுக்கள் முதலியோர் அனுபவிக்கின்ற சுகமும், சிவத்திடம் விளைகின்ற பெருஞ்சுகத்தின் கோடியில் ஒரு பாகத்திற்கும் இணைவராது எனத்தெளிக.

மன்னராவார் உறுசுகமும், வானோர் மகிழ்ந்து பெறுசுகமும்,
  மணிப்பைந்நாகத் தவர்சுகமும், மற்றையோர்கள் அடைசுகமும்,
பன்னும்இடத்தில், சிவத்துஎழுந்த பரமானந்த லேசமெனப்
  பகர்ந்தாய், குருவாய் எழுந்தருளி, படிறேன் மறந்துஇங்கு உழல்கின்றேன்.
கன்னல் எழுந்த தெளிசாறே! கட்டுமாவின் தீங்கனியே!
  கதலிக்கனியே! நறும்பலவின் கனகச் சுளையே! கதிமுளையே!
பொன்னம்பொருப்பே! என்விருப்பே! போதச் சுகமே! கிஞ்சுகமே!
  புராண வெளியே! உள்ளொளியே! போரூர் முருகப் பெருமாளே!
                                                                              --- சிதம்பர சுவாமிகள்.

         ஒரு பெரிய பூஞ்சோலை; அதன் இடையே பளிங்கு மாளிகை. வசந்த காலம்; மாலை நேரம்; முழுநிலா தன் குளிர்ந்த கிரணத்தை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கின்றது; தென்றல் காற்று மென்மையாக வீசுகின்றது; நறுமணம் கமழ்கின்றது, பளிங்குமாளிகையின் முற்றத்தில் சாய்வு நாற்காலியில் சாய்ந்திருக்கின்றார் ஒருவர். இனிய வாத்திய நாதம் ஒலிக்கின்றது. பெண்மணிகள் பன்னீர்த் தெளிக்கின்றனர். அமுதம் போன்ற இளவனிதையர் அமுதத்தை எடுத்து ஊட்டுகின்றார்கள். இந்த வகையால் விளைகின்ற சுகங்கள் யாவும் தோல்வியுறுமாறு, உடம்பு, உணர்வு, உள்ளம், உயிர், ஆகிய அனைத்தும் இன்புறுமாறு அருளின்பத்தை ஆண்டவன் அருளுகின்றான்.

தண் அமுத மதிகுளிர்ந்த கிரணம் வீச,
    தடம் பொழில் பூ மணம்வீச, தென்றல் வீச,
எண் அமுதப் பளிக்குநிலா முற்றத் தேஇன்
    இசைவீச, தண்பனி நீர் எடுத்து வீச,
பெண்ணமுதம் அனையவர் விண் ணமுதம் ஊட்டப்
    பெறுகின்ற சுகமனைத்தும் பிற்பட்டு ஓட,
கண்ணமுதத்து உடம்புஉயிர்மற்று அனைத்தும் இன்பம்
    கலந்துகொளத் தருங்கருணைக் கடவுள் தேவே.    --- திருவருட்பா.

உம்பர் தொழும்பதம் ---

மூவர் தேவாதிகள் தொழும் தம்பிரான் முருகப்பெருமான். அவருடைய திருவடியை மூவர்களும், தேவர்களும் முனிவர்களும், முத்தர்களும், சித்தர்களும் தொழுது இன்புறுகின்றார்கள்.

ஆலமுண்டகோன் அகண்ட லோகமுண்ட மால் விரிஞ்சன்
     ஆரணங்கள் ஆகமங்கள்                புகழ்தாளும்”
                                                                     --- (தோலெலும்பு) திருப்புகழ்.

தஞ்சமெனும்படி ---

முருகனுடைய கஞ்சமலர்ப்பாதமே ஆன்மாக்களுக்குத் தஞ்சமாகும். அப் பரமகருணாநிதி, தஞ்சம் என்பவரை ஆட்கொள்கின்றான். தஞ்சம்-புகலிடம்.

தஞ்சந் தஞ்சஞ் சிறியேன்மதி
 கொஞ்சங் கொஞ்சந் துரையேயருள்
 தந்தென் றின்பந்தரு வீடது தருவாயே”  ---  (வஞ்சங்) திருப்புகழ்.

தஞ்சத்து அருள் சண்முகனுக்கு”       --- கந்தரநுபூதி.


என்றென்றுந் தொண்டு செயும்படி அருள்வாயே ---

முருகப் பெருமானுக்கு எந்த நாளும் இனிய திருத்தொண்டு புரியவேண்டும். அதுவே உய்யும் நெறியாகும். தொண்டு புரிபவர் தொண்டர்: இத்தொண்டர் தம்பெருமை சொல்வதற்கு அரிது. அது பெரிது என்று கூறுவர் ஒளவையார். திருத்தொண்டர் புராணமே பெரியபுராணம் எனப் பெற்றது. எனவே, நமது கருவி கரணங்கள் அனைத்தையையும் அப்பரமனுடையத் தொண்டிலேயே அர்ப்பணித்து விடவேண்டும்.

சிந்தனைநின் தனக்குஆக்கி, நாயி னேன்தன்
     கண்இணைநின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி,
வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி, வாக்குஉன்
     மணிவார்த்தைக்கு ஆக்கி, ஐம்புலன்களு ஆர
வந்தனை,ஆட் கொண்டுஉள்ளே புகுந்த விச்சை
     மால்அமுதப் பெருங்கடலே, மலையே, உன்னைத்
தந்தனை செந்தாமரைக் காடுஅனைய மேனித்
     தனிச் சுடரே, இண்டுமிலித் தனியனேற்கே. ---   திருவாசகம்.
    
நின் பங்கு ஒன்றுங் குறமின் சரணம் ........கும்பிடும் ---

அருணகிரிநாதர், அநேக இடங்களில் வள்ளியம்மையாரை முருகவேள் கும்பிட்டதாகக் கூறுகின்றார்.

குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்
 குவித்துக் கும்பிடும் பெருமாளே.”               ---  (தடக்கைப்) திருப்புகழ்.

பணியாவென வள்ளி பதம் பணியும்”     --- கந்தர் அநுபூதி

இவ்வாறு கூறுவதன் கருத்து யாது?

முருகவேள் காமனை எரித்த கனல் கண்ணிலிருந்து அருட்பெருஞ் ஜோதியாக வந்தவர். ஞானந்தான் உருவாகிய நாயகன். அப் பரமனடியார்கள் பார்த்தருளும் பக்கத்திலேயே ஆசா பாசம் அணுகாது. அப்படியாயின் முருகவேள் வள்ளி பிராட்டியை வணங்கினார் என்பது ஆசையால் அன்று. அந்த ஆன்மாவை உய்விக்கக் கருதி, அத்துணை எளியனாகி வேண்டியும், தொழுதும் ஆட்கொண்டருளினான் எனக் கொள்க.

ஒரு மகன் உணவு உண்ணாது வெய்யிலில் விளையாடுகின்றான். தாய் அவனைத் தொழுது ’அப்பா! உன் காலுக்குக் கும்பிடு; வெய்யிலில் ஆடாதே வந்து சாப்பிடு’ என்று வேண்டுகின்றாள். அது அவள் கருணையைக் குறிக்கும். அதே நியாயந்தான் இங்கே.

குன்றெங்குஞ் சங்கு வலம்புரி பம்பும் ---

தென் திசைக் கடலில் இன்றும் சங்கும் முத்துக்களும் உற்பத்தியாகின்றன.

வாலுகமீது வண்ட லோடிய காலில் வந்து
சூல்நிறை வான சங்கு மாமணி யீன வுந்து
வாரிதி நீர்பாந்த சீரலை வாயுகந்த பெருமாளே”   ---  (பூரணவார) திருப்புகழ்.

கருத்துரை

         வள்ளி மணவாளரே! செந்தில் மேவிய கந்த நாயகரே! மாதர் மயக்குறாது பேரின்பம் தந்து உமது திருவடித்தொண்டு புரிந்து உய்யுமாறு அருள் புரிவீர்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...