அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
மங்கை சிறுவர்
(திருச்செந்தூர்)
மரணத் தருவாயில் முருகன்
சரணம் தந்து அருள
தந்த
தனன தந்த தனன
தந்த தனன ...... தனதான
மங்கை
சிறுவர் தங்கள் கிளைஞர்
வந்து கதற ...... வுடல்தீயின்
மண்டி
யெரிய விண்டு புனலில்
வஞ்ச மொழிய ...... விழஆவி
வெங்கண்
மறலி தன்கை மருவ
வெம்பி யிடறு ...... மொருபாச
விஞ்சை
விளையு மன்று னடிமை
வென்றி யடிகள் ...... தொழவாராய்
சிங்க
முழுவை தங்கு மடவி
சென்று மறமி ...... னுடன்வாழ்வாய்
சிந்தை
மகிழ அன்பர் புகழு
செந்தி லுறையு ...... முருகோனே
எங்கு
மிலகு திங்கள் கமல
மென்று புகலு ...... முகமாதர்
இன்பம்
விளைய அன்பி னணையு
மென்று மிளைய ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
மங்கை
சிறுவர் தங்கள் கிளைஞர்
வந்து கதற, ...... உடல் தீயின்
மண்டி
எரிய விண்டு, புனலில்
வஞ்சம் ஒழிய ...... விழ, ஆவி
வெங்கண்
மறலி தன்கை மருவ,
வெம்பி இடறும் ...... ஒருபாச
விஞ்சை
விளையும் அன்று, உன் அடிமை
வென்றி அடிகள் ...... தொழ வாராய்.
சிங்கம்
உழுவை தங்கும் அடவி
சென்று மறமின் ...... உடன் வாழ்வாய்!
சிந்தை
மகிழ அன்பர் புகழும்
செந்தில் உறையும் ...... முருகோனே!
எங்கும்
இலகு திங்கள் கமலம்
என்று புகலும் ...... முகமாதர்
இன்பம்
விளைய, அன்பின் அணையும்,
என்றும் இளைய ...... பெருமாளே.
பதவுரை
சிங்கம் உழுவை தங்கும் அடவி சென்று ---
சிங்கங்களும், புலிகளும் வாழுகின்ற கானகத்தில் சென்று,
மறமின் உடன் வாழ்வாய் --- வேடப் பெண்ணாகிய
வள்ளிதேவியுடன் வாழ்கின்றவரே!
சிந்தை மகிழ அன்பர் புகழும் --- உள்ளம்
மகிழ்ச்சியுடன் அன்பர்கள் துதிசெய்கின்ற,
செந்தில் உறையும் முருகோனே ---
திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள முருகக் கடவுளே!
எங்கும் இலகு --- எவ்விடத்திலும்
விளங்குகின்ற,
திங்கள் கமலம் என்று - சந்திரனையும், தாமரையையும் ஒத்தது என்று,
புகலும் முக மாதர் --- உவமை கூறி புலவர்கள்
புகழ்கின்ற திருமுகத்தையுடைய, தெய்வயானையையும், வள்ளியையும்,
இன்பம் விளைய அன்பின் அணையும் ---
உயிர்களுக்கு இன்பம் விளையுமாறு அன்புடன் தழுவுகின்ற,
என்றும் இளைய பெருமாளே --- எக்காலத்தும்
இளமையுடன் இருக்கின்ற பெருமை மிகுந்தவரே!
மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர் --- மனைவி, மக்கள், தமது உறவினர்,
வந்து கதற --- வந்து கதறி அழ,
உடல் தீயில் மண்டி எரிய --- உடம்பானது
நெருப்பில் சுடர்விட்டு எரிந்துகொண்டிருக்க,
விண்டு --- உறவினர்கள் சுடலையை விட்டு நீங்கி,
புனலில் வஞ்சம் ஒழிய விழ --- பந்தம் என்கின்ற
மாயம் ஒழியுமாறு நீரில் குளிக்க,
ஆவி வெம்கண் மறலி தன்கை மருவ --- உயிரானது
கொடிய கண்களையுடைய இயமனுடைய கரத்தில் சிக்கிக் கொள்ள,
வெம்பி இடறும் --- மனம் புழுங்கித்
துன்பப்படும்.
ஒரு பாச விஞ்சை விளையும் அன்று --- ஒரு பற்று
எனப்படும் மாயக் கூத்து நிகழ்கின்ற அந்த நாளில்,
உன் அடிமை --- தேவரீருடைய அடிமையாகிய
சிறியேன்,
வென்றி அடிகள் தொழ வாராய் --- வெற்றி
பொருந்தும் உமது திருவடி மலர்களைத் தொழுது உய்யும்படி வநது அருளுவீராக!
பொழிப்புரை
சிங்கம் புலி முதலிய கொடிய விலங்குகள்
உறைகின்ற கானகத்தில் சென்று, வேடவர் குல மகளாகிய
வள்ளி பிராட்டியுடன் வாழ்கின்றவரே!
அடியார்கள் உள்ளம் உவகையுறப் புகழ்ந்து
பாடத் திருச்செந்தூரில் உறைகின்ற முருகக்கடவுளே!
எங்கும் விளங்குகின்ற சந்திரனையுந்
தாமரையையும் ஒத்தது என்று உவமை கூறிப் புலவர்கள் புகழ்கின்ற குளிர்ந்த
திருமுகத்தையுடைய வள்ளி தெய்வயானை என்ற இரு சக்திகளையும், உயிர்கள் தழைத்து இன்புறும் பொருட்டுத்
தழுவுகின்ற என்று மகலாத இளமையுடைய பெருமிதமுடையவரே!
மனைவி மக்கள் உறவினர் முதலியோர் வந்து
கதறியழுது புலம்ப, உடம்பு தீயில் நன்கு
எரிந்து கொண்டிருக்க, உறவினர் அச்சுடலையை விட்டு
அகன்று, பந்தம் ஒழியுமாறு
நீரில் முழுக, உயிரானது கொடுங்கண்களையுடைய
இயமனுடைய கையில் சிக்கிக்கொள்ள,
மனம்
புழுங்கி இடர்ப்படும் ஒரு பாசமாகிய மாய நாடகம் நிகழ்கின்ற அந்நாளில், உமது அடியேனாகிய நாயினேன் வெற்றி
பொருந்தும் திருவடிகளைத் தொழுது உய்யுமாறு, தேவரீர் வந்தருள வேண்டும்.
விரிவுரை
மங்கை
---
மங்கை
என்பது இங்கே மனைவியைக் குறிக்கின்றது. உயிர் பிரிகின்ற போது, மனைவி பெரிதும் துன்பமுற்றுப் பதறிக்
கதறி அழுது மேல் விழுந்து புலம்புவாள். ஏன் எனில், அவள் ஒருத்தியே மஞ்சளும் குங்குமமும்
மலரும் இழக்கின்றாள்; ஆதலின் கணவனார்
பிரிந்த பின் மனைவி உயிர் இல்லா உடம்புபோல் ஆகின்றாள். “மங்கையழுது விழவே” என்று
வேறொரு திருப்புகழிலும், “ஏழை மாதராள் மோதி
மேல் விழ!” என்று திருவிடைமருதூர்த் திருப்புகழிலும் அடிகளார் கூறுகின்றனர்.
சிறுவர் ---
சிறுவர்-புதல்வர்கள்.
ஆவி பிரியும்போது புதல்வர்களும்,
புதல்விகளும், மனம் வருந்திக் கண்ணீர் சிந்தி கலங்கி அழுவார்கள்.
தங்கள்
கிளைஞர் வந்து கதற ---
அங்கும்
இங்குமாகப் பரவியுள்ள மாமன் மைத்துனன் சகலன் முதலிய நெருங்கிய உறவினர்கள், உயிர்ப் பிரிகின்ற செய்தியை அறிந்து
ஓடோடியும் வந்து, மிக்க பரிதாபத்துடன்
தலையில் அடித்துக்கொண்டு ஓ என்று வாய்விட்டுக் கதறியழுவர்.
உடல்
தீயின் மண்டி எரிய ---
மிகவும்
இனிய உணவுகளைக் காலந் தவறாது தந்து,
நெடுங்காலமாக
இந்த உடம்பை வளர்க்கின்றோம். ஆனால்,
இந்த
உடம்பு உணவினால் நிலைபெறுவதில்லை. உண்ட உணவைச் செரிக்கச் செய்து அவ்வுணவின் சத்தை
உடம்புக்குத் தந்து உடம்பைப் பாதுகாக்கும் தன்மை உடையது உடம்பில் மறைந்துள்ள
அக்கினியாகும். அந்த அக்கினிக்கு ஜாடராக்கினி என்று பேர். இந்தத் தீயால் உடம்பு
நிலைக்கின்றது. இந்தத் தீ அவிந்தால் உடம்பு பனிக்கட்டிபோல் குளிர்ந்துவிடும்.
உயிர்ப் பிரிந்து விடும். எனவே தீயினால் நிலைபெற்று வாழ்ந்த உடம்பை முடிவில்
அந்நெருப்புக்கே உணவாக (ஆகுதியாக)த் தந்து விடுவது. இதற்கு, “அந்தியேஷ்டி;” என்று பேர்.அந்திய இஷ்டி எனப்படும்.
அந்திய-இறுதி, இஷ்டி-யாகம்.
முடிவில் உடம்பையே நெருப்பிலிட்டுப் புரியும் யாகம் இப்படித் தகிக்கப்படுவதனால்
இந்த உடம்பு தேகம் எனப்பேர் பெறுகின்றது.
விண்டு
புனலில் வஞ்சமொழிய விழ ---
உடம்பு
நெருப்பில் வேகின்றபோது தான், உறவினருக்குத்
துன்பம் மிகுதியாகப் பொங்கி எழும். கண்ணீர் அருவிபோல் வழியும்.
“அருங்கான் மருங்கே
எடுங்கோள் சுடுங்கோள்
அலங்கார நன்றி தெனமூழ்கி
அகன்றாசையும்
போய் விழும் பாழ் உடம்பால்
அலந்தேனை யஞ்சல் எனவேணும்” ---
(பெருங்காரியம்)
திருப்புகழ்.
நீரில்
படிந்துவிடு பாசத்து அகன்று ---
(இத்தாரணி) திருப்புகழ்.
ஊர் எல்லாம்
கூடி ஒலிக்க அழுதிட்டு,
பேரினை
நீக்கிப் பிணம் என்று பேரிட்டு,
சூரையங்
காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில்
மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே. ---
திருமந்திரம்.
எனவே, சுற்றத்தார் நீரில் முழுகியவுடன்
பாசத்தையும் நேசத்தையும் விட்டு அவரவர் இருப்பிடம் போவார்கள்.
ஆவி
வெங்கண் மறலி தன்கை மருவ ---
இவ்வாறு
உடல் எரிய, உறவினர் நீரில்
முழுகி இருப்பிடம் ஏக, நமது உயிரை இயமன்
கொண்டுபோகிறான். அவன் கண்கள் நெருப்புப்பொறி ஏந்திக் கொண்டு கொடுமையாக இருக்கும்.
“விழித்துப் புகையெழப்
பொங்கு வெங்கூற்றன்” --- கந்தர் அலங்காரம்
வெம்பி
இடறும் ஒரு பாச விஞ்சை விளையுமன்று ---
இதனால்
“அடியேன் உள்ளம் வெதும்பித் துன்புறுகின்ற பாச நிலையில் மாய நாடகம் நிகழ்கின்ற
நாள் என்றோ அன்று, பெருமானே என்னைக்
காத்தருளவேண்டும்” என்கிறார்.
வென்றி
அடிகள் தொழ வாராய் ---
முருகா!
மூவர் முதல்வா! அடியேன் காலன் வாய்ப்பட்டுக் கலங்கு கின்றபோது, வெற்றிப் பொருந்திய உமது திருவடியைத்
தொழுது உய்யுமாறு எனக்குமுன் தோன்றியருள வேண்டும்.
சிங்கம்
உழுவை தங்கும் அடவி சென்று மறமின் உடன் வாழ்வாய் ---
வள்ளியம்மையார்
இருந்த காட்டில் இரவு பகலாக இரை தேடிக்கொண்டு கொடிய விலங்குகள் உலாவிவாழும்.
“எறுழிபுலி கரடியரி
கரிகடமை வருடையுழை
இரலைமரை இரவு பகல் இரைதேர் கடாடவியில்” --- சீர்பாத வகுப்பு
“கரடிபுலி திரிகடிய
வாரான கான்” --- (உறவின் முறை)
திருப்புகழ்.
இத்தகைய
பொல்லாத காட்டிற்கு வள்ளியம்மைக்கு அருள்புரியும்
பொருட்டு சென்றார் முருகவேள் .
கற்பக
நாட்டில் வாழ்ந்த தெய்வயானையம்மையை மணந்த எம்பெருமான், காட்டில் வாழ்ந்த வள்ளியம்மையையும்
மணந்தருளினான். நாட்டையும், காட்டையும் ஒன்றாக
பார்க்க வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகின்றான். அன்றியும் சுரமகளை மணந்த தேவாதி
தேவன், நரமகளையும் மணந்தான்.
“நரர்களுக்கும்
சுரர்களுக்கும் நலம் கொடுக்கும் நலமே”
என்கின்றார்
வள்ளல் பெருமானார்.
இந்தத்
தத்துவத்தை உலகம் அறியும் பொருட்டு காமனைக் கடிந்த கனற் கண்ணிலேயிருந்து வந்த, பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பாகிய
முருகப் பெருமான் வள்ளியுடன் வாழ்கின்றான்.
“தினை வனங்கிளி காத்த
சவுந்தரி
அருகு சென்றடி போற்றி மணஞ் செய்து
செகம றிந்திட வாழ்க்கை புரிந்திடும் இளையோனே”
--- (முனை யழிந்தது)
திருப்புகழ்.
சிந்தை
மகிழ அன்பர் புகழும் செந்தில் உறையும்
முருகோனே
---
அன்பர்கள்
தங்கள் உள்ளம் உவக்க உருகி அன்பு பெருகி வேலவனைப் புகழ்கின்றார்கள். அங்ஙனம்
அன்பர்கள் புகழுமாறு, கடற்கரையில், பிறவிப் பெருங்கடலில் நெடுங்காலமாகத்
தத்தளிக்கின்ற ஆன்மாக்களுக்கு இதுவே உய்வு பெறுவதற்குத் துறைமுகப் பட்டினம் என்று
மக்கள் உணர்ந்து உய்யுமாறு, எம்பெருமான் அங்கு
எழுந்தருளியுள்ளான். “யதாசந்நிதானம்” என்று தொடங்கும் பாடலில் புஜங்கத்துதியில்
இவ்வாறு கூறியுள்ளார்.
எங்கும்
இலகு திங்கள் கமலம் என்று புகலும் முகமாதர் ---
வள்ளியம்மை
தெய்வயானையம்மை என்ற இரு அம்மைகளின் திருமுகங்கள் சந்திரனைப்போலவும், அன்றலர்ந்த தாமரைபோலவும், குளிர்ந்திருக்கின்றன. பெரும்புலவர்கள்
அத்திருமுகங்களை எங்குமிலகும் திங்கள் என்றும், பங்கயம் என்றும் புகழ்ந்து
புகல்கிறார்கள்.
இன்பம்
விளைய அன்பின் அணையும் ---
முருகவேள்
வள்ளி தெய்வயானையைத் தழுவுவது, தான் இன்புறும்
பொருட்டன்று; அவன் ஞானத்தின்
திருவுருவம். மன்மதனை எரித்த நெருப்புக் கண்ணிலிருந்து வந்தவன்.
எனவே, இறைவன் கருணை அம்பிகையுடன் வாழ்வது
உயிர்கள் இன்புறும் பொருட்டு. கண்ணாடியில் தெரியும் நிழல் அசையுமாறு தானே
அசைகின்றான் ஒருவன். அதுபோல் இறைவன் உயிர்கள், நல்லறமாகிய இல்லறத்தில் வாழ்ந்து
இன்புறும் பொருட்டு, தான் தேவியுடன்
வாழ்கின்றான். மாணவனுக்குக் கணக்குப் பாடஞ் சொல்லிக் கொடுக்கின்ற கணக்கு ஆசிரியர்
தனது விரல்விட்டுக் கணக்கைச் சொல்வதுபோல் எனவுணர்க.
தென்பால்
உகந்துஆடும் தில்லைச் சிற்றம்பலவன்
பெண்பால்
உகந்தான் பெரும்பித்தன் காணேடீ,
பெண்பால்
உகந்திலனேல் பேதாய், இருநிலத்தோர்
விண்பால்
யோமுஎய்தி வீடுவர்காண் சாழலோ. --- திருவாசகம்
என்றும்
இளைய பெருமாளே ---
என்றும்
இளமையுடன் இருக்கும் தெய்வம் எந்தை கந்தவேள்; அதனால் அப்பரமனுக்கு இளம்பூரணன் என்று
ஒரு திருப்பெயருண்டு. ’என்றும் அகலாத இளமைக்கார’ என்கின்றார் மற்றொரு திருப்புகழில்.
எல்லோரும் விரும்புவது இளமையைத்தானே? முதுமையை
ஒருவரும் விரும்புவதில்லை. விரும்பாதது மட்டும் அன்று; வெறுக்கவும் செய்கின்றார்கள். அந்த
இளமையை நமக்கு வழங்குகின்ற தெய்வம் முருகவேள்.
ஒரு
மனிதனுக்குப் பெருந் துன்பத்தைத் தருவது முதுமைப்பருவம். முதுமையில் கிண்கிண்
என்று இருமல் வந்து, மனித வாழ்க்கைக்கு
இளைப்பாற்றி வைக்கும் துயிலைத் துறக்க வைக்கும். “இருமல் வந்தது தூக்கம் ஒழிந்தது”
என்கின்றார் மற்றொருத் திருப்புகழில். கிழப் பருவத்தில் எல்லோரும் வெறுத்து
இகழ்வார்கள். எனவே முதுமைப் பருவம் மிகப் பெருங் கொடுந் துன்பத்தை விளைப்பது. அப் பருவம்
வருமுன் இறைவன் இணையடி சேர்தல் வேண்டும்.
“இளமை கிழம்படுமுன்
பதம் பெற உணர்வேனோ”
--- (கரதலமுங்) திருப்புகழ்.
இந்த
இளமையே ஓர் உருவாகக் கொண்டு திகழும் ஆனந்த மூர்த்தி முருகன்.
கருத்துரை
வள்ளி மணவாளா! செந்திலாண்டவா!
இளம்பூரணா! மரண வேதனை உறும்போது உன் சரணத்தைத் தந்து அருள வேண்டும்.
No comments:
Post a Comment