திரு வலிதாயம்


திரு வலிதாயம்
(சென்னை - பாடி)

         சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் சென்னை நகரின் மேற்குப் பகுதியில் பாடி என்னும் இடத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. 

இறைவர்              : வல்லீசுவரர், வலிதாயநாதர்.

இறைவியார்           : ஜகதாம்பாள், தாயம்மை.

தல மரம்         : பாதிரி.

தீர்த்தம்               : பரத்வாஜ தீர்த்தம்.

தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - பத்தரோடுபலரும் பொலிய

         சென்னையின் ஒரு பகுதியான "பாடி" என்ற இடத்தில் அமைந்துள்ள வல்லீசுவரர் ஆலயம் தேவார காலத்தில் திருவலிதாயம் என்று வழங்கப்பட்டது. சென்னை - ஆவடி சாலையில் பாடி டிவிஸ் லூகாஸ் பேருந்து நிறத்தத்தில் இறங்கி எதிரே உள்ள கிளைப் பாதையில் சென்று இக்கோயிலை அடையலாம்.

         பாரத்துவாஜ முனிவர் கருங்குருவி (வலியன்) யாக வந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டதால் இத்தலம் திருவலிதாயம் என்றும் இறைவன் வலிதாய நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். 3 நிலைகளை உடைய கிழக்கு வாசல் கோபுரமே பிரதான கோபுரம். கோபுர வாசல் வழியாக உள்ளே நுழைந்ததும் ஒரு விசாலமான வெளிப் பிரகாரம் உள்ளது. அதில் கொடிமரம், நந்தி சுவாமி சந்நிதிக்கு நேர் எதிரே உள்ளது. வலது புறத்தில் குரு பகவானுக்கு தனி சந்நிதி இருக்கிறது. குரு பரிகார தலங்களாக சொல்லப்படும் தலங்களில் திருவலிதாயமும் ஒன்றாகும். குரு பகவான் தன்னைப் பற்றி இருந்த தோஷம் நீங்க இத்தலத்தில் தவமிருந்தே சிவனருள் பெற்றார் என்பதால் இத்தலத்தில் குரு பகவானுக்கு தனி சிறப்புண்டு. வெளிப் பிரகாரத்தில் இருந்து உள் மண்டபத்தில் நுழைந்தவுடன் மூலவர் திருவலிதாயநாதர் சந்நிதி கிழக்குப் நோக்கி அமைந்திருக்கிறது. சுவாமி சந்நிதி கருவறை கஜப்பிரஷ்ட விமான அமைப்புடையது. உள் பிரகாரத்தின் வலது புறம் தெற்கு நோக்கிய அம்பாள் தாயம்மை சந்நிதி இருக்கிறது. அம்பாள் சந்நிதிக்கு நேர் எதிரே தெற்கு வெளிப் பிரகாரத்தில் சிம்ம வாகனம் அம்பாளை நோக்கியவாறு உள்ளது.

         உள் சுற்றில் சூரியன், 4 கரங்களுடன் உள்ள பாலசுப்ரமணியர், விநாயகர், தட்சிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோரின் உருவச்சிலைகள் இருக்கின்றன. சோமஸ்கந்தர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், அனுமலிங்கம், மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதிகள் உள்ளன. பாரத்வாஜ முனிவரால் பிரதிஷ்டை செய்து வணங்கப்பட்ட ஒரு சிவலிங்கமும் உள் பிரகாரத்தில் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் சுப்பிரமணியராக ஒரு திருமுகத்துடனும் 4 திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. கோயிலில் உள்ள தூண்களில் நடராஜர், முருகர், கோதண்டராமர், மச்சாவதாரமூர்த்தி, கூர்மாவதாரமூர்த்தி ஆகியோரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

         ஒரு சமயம் பாரத்வாஜ மஹரிஷி சாபம் காரணமாக கருங்குருவி ஆனார். அவர் திருவலிதாயம் வந்து ஒரு தீர்த்தம் உண்டாக்கி இத்தலத்து இறைவனை பூஜை செய்து சாபவிமோசனம் பெற்றார். நவக்கிரஹ சந்நிதிக்கு எதிரே உள்ள கிணறு அவரால் உருவாக்கப்பட்ட பாரத்வாஜ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

         பிரம்மாவின் இரண்டு பெண்கள் கமலி, வல்லி என்பவர்கள் இத்தலத்து இறைவனை பூஜித்து, விநாயகரை இறைவன் ஆணைப்படி திருமணம் புரிந்து கொண்டனர் என்று தல புராணம் கூறுகிறது. விநாயகர் மணக்கோலத்தில் இருப்பதால், திருமணத்தடை உள்ளவர்கள் இவருக்கு மாலை அணிவித்து வணங்கி, அவர் அணிந்த மாலையை தாங்கள் அணிந்து கொண்டு கோயிலை வலம் வந்து வழிபடுகிறார்கள். இதனால், நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை. ஜோதிட ரீதியாக, குருவின் பார்வை வரும்வேளையில் தான் திருமணம் நிச்சயமாகும். நல்ல வரன் அமைய வியாழக்கிழமைகளில் இங்குள்ள குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை மாலை அணிவித்தும் வழிபடுகிறார்கள்.

         காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "ஊற்று மெய் அன்பு மிகும் தொண்டர் குழு ஆயும் வலிதாயத்தில் இன்ப மிகும் ஞான இலக்கணமே" என்று போற்றி உள்ளார்.

 
திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு 

         திருஞானசம்பந்த சுவாமிகள் அடியார் கூட்டத்தோடும் ‘மலையும் கானும் கடந்து போந்து, பாலியாற்று வடகரையை அடைந்து, திருவேற்காட்டை வணங்கி அதனை அடுத்துள்ள வலிதாயத்தை வணங்கும்போது ‘பத்தரோடு‘ என்னும் இத்திருப்பதிகத்தைப் பாடியருளினார்கள்.

பெரிய புராணப் பாடல் எண் : 1030
திருவேற்காடு அமர்ந்தசெழுஞ் சுடர்பொற் கோயில்
         சென்று,அணைந்து, பணிந்து, திருப் பதிகம்பாடி,
வருவேற்று மனத்துஅவுணர் புரங்கள் செற்றார்
         வலிதாயம் வந்து,எய்தி, வணங்கிப் போற்றி,
உருஏற்றார் அமர்ந்து உறையும் ஓத வேலை
         ஒற்றியூர் கைதொழச்சென்று உற்றபோது,
பொருவேட்கை தருவாழ்வு பெற்ற தொண்டர்
         பெரும்பதியோர் எதிர்கொள்ளப் பேணி வந்தார்.

         பொழிப்புரை : ஞானசம்பந்தர் திருவேற்காட்டில் விரும்பி வீற்றிருக்கும் செழுஞ்சுடரான இறைவரின் அழகான கோயிலில் சென்று சேர்ந்து, வணங்கித் திருப்பதிகம் பாடியருளி, செந்நெறிகளை எதிர்த்துவரும் வேறுபட்ட உள்ளமுடைய பகைவரான அவுணரின் முப்புரங்களையும் எரித்த இறைவரின் `திருவலிதாயத்தில்\' வந்து போற்றி, அழகான விடையூர்தியையுடைய இறைவர் விரும்பி வீற்றிருக்கும் குளிர்ந்த கடற்கரையில் உள்ள திருவொற்றியூரை வணங்குவதற்குச் சென்ற போது, பெருவிருப்பம் கொண்டு வாழ்வு பெற்ற தொண்டர்களும் அப்பதியில் உள்ளவர்களும் அவரை எதிர்கொண்டு வரவேற்க அன்புடன் வந்தனர்.

         குறிப்புரை : இப்பதிகளில் அருளிய பதிகங்கள்:

1.    திருவேற்காடு: ஒள்ளிதுள்ள (தி.1 ப.57) - பழந்தக்கராகம்.
     2.   திருவலிதாயம்: பத்தரொடு (தி.1 ப.3) - நட்டபாடை.


1.003 திருவலிதாயம்                    பண் –  நட்டபாடை
                                                            திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பத்தரோடுபல ரும்பொலியம்மலர் அங்கைப்புனல்தூவி
ஒத்த சொல்லி உலகத்தவர் தாம் தொழுது ஏத்த, உயர்சென்னி
மத்தம் வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலிதாயம்
சித்தம் வைத்த அடியார் அவர்மேல் அடையா மற்று இடர்நோயே.

         பொழிப்புரை :வலிதாயம் சித்தம் வைத்த அடியார்களை இடர் நோய் அடையா என வினைமுடிபு கொள்க. சிவனடியார்கள், விளங்குகின்ற அழகிய மலர்களை அகங்கையில் ஏந்தி மந்திரத்தோடு நீர் வார்த்துப் பூசிக்க அவர்களோடு ஒரே இசையில் அம்மந்திரங்களைச் சொல்லி உலகமக்கள் தாமும் வெளிநின்று தொழுதேத்துமாறு ஊமத்தை மலரை முடிமிசைச் சூடிய பெருமான் பிரியாதுறையும் வலிதாயம் என்ற தலத்தைத் தம் சித்தத்தில் வைத்துள்ள அடியவர்கள் மேல் துன்பங்களோ நோய்களோ வந்தடைய மாட்டா.


பாடல் எண் : 2
படை இலங்கு கரம் எட்டுஉடையான், படிறு ஆகக் கலன் ஏந்திக்
கடை இலங்கு மனையில் பலி கொண்டு உணும் கள்வன் உறைகோயில்
மடை இலங்கு பொழிலின் நிழல்வாய் மது வீசும் வலிதாயம்
அடைய நின்ற அடியார்க்கு அடையா வினை அல்லல் துயர்தானே.

         பொழிப்புரை :படைக் கலங்களை ஏந்திய எட்டுத் திருக்கரங்களை உடைய பெருமானும், பொய்யாகப் பலியேற்பது போலப் பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி வீடுகளின் வாயில்களிற் சென்று பலியேற்றுண்ணும் கள்வனும் ஆகிய பெருமான் உறையும் கோயிலை உடையதும், நீர்வரும் வழிகள் அடுத்துள்ள பொழில்களின் நீழலில் தேன்மணம் கமழ்வதுமாகிய வலிதாயத்தை அடைய எண்ணும் அடியவர்களை வினை அல்லல் துயர் ஆகியன வந்தடையமாட்டா.


பாடல் எண் : 3
ஐயன்,நொய்யன்,அணி யன்,பிணிஇல்லவர் என்றுந்தொழுதுஏத்தச்
செய்யன், வெய்யபடை ஏந்தவல்லான்திரு மாதோடு உறைகோயில்
வையம் வந்து பணியப் பிணி தீர்த்து உயர்கின்ற வலிதாயம்
உய்யும் வண்ணம் நினைமின், நினைந்தால்,வினை தீரும்,நலமாமே.

         பொழிப்புரை :வலிதாயத்தை உய்யும் வண்ணம் நினைமின்; நினைந்தால் பிணி தீரும், இன்பம் ஆம் என வினை முடிபு கொள்க. அழகன், நுண்ணியன், அருகிலிருப்பவன், செந்நிற மேனியன், நெடிய மழுவை ஏந்தும் ஆற்றலன். அவன் பாசங்கள் நீங்கிய அடியவர் எக்காலத்தும் வணங்கித் துதிக்குமாறு உமையம்மையோடு உறையும் கோயில் உலக மக்கள் அனைவரும் வந்து பணிய அவர்களின் பிணிகளைத் தீர்த்து உயரும் திருவலிதாயம் என்ற அத்தலத்தை நீர் உய்யும் வண்ணம் நினையுங்கள். நினைந்தால் வினைகள் தீரும். நலங்கள் உண்டாகும்.


பாடல் எண் : 4
ஒற்றை ஏறு அது உடையான் நடம் ஆடி ஓர் பூதப்படை சூழப்
புற்றில் நாகம் அரை ஆர்த்து உழல்கின்ற எம்  பெம்மான் மடவாளோடு
உற்ற கோயில், உலகத்து ஒளி மல்கிட உள்கும் வலிதாயம்
பற்றி வாழும் அதுவே சரண் ஆவது, பாடும் அடியார்க்கே.

         பொழிப்புரை :அடியவர்க்கு வலிதாயத்தைப் பற்றி வாழ்வதே சரண் என முடிபு காண்க. ஒற்றை விடையை உடையவன். சிறந்த பூதப்படைகள் சூழ்ந்துவர, புற்றில் வாழும் நாகங்களை இடையில் கட்டி நடனமாடி, உழலும் எம்பெருமான், உமையம்மையோடு உறையும் கோயில் உலகின்கண் ஒளி நிலைபெற்று வாழப் பலரும் நினைந்து போற்றும் வலிதாயமாகும். அடியவர்கட்கு அத்தலத்தைப் பற்றி வாழ்வதே அரணாம்.


பாடல் எண் : 5
புந்தி ஒன்றி நினைவார் வினை ஆயின தீர, பொருளாய
அந்தி அன்னது ஒரு பேர் ஒளியான் அமர் கோயில், அயல்எங்கும்
மந்தி வந்து கடுவன்னொடும் கூடி வணங்கும் வலிதாயம்
சிந்தியாத அவர் தம், அடும் வெந்துயர் தீர்தல் எளிது அன்றே.

         பொழிப்புரை :வலிதாயம் கோயிலைச் சிந்தியாதவர் துயர் தீர்தல் எளிதன்று என முடிபு கொள்க. மனம் ஒன்றி நினைபவர் வினைகளைத் தீர்த்து அவர்க்குத் தியானப் பொருளாய்ச் செவ்வான் அன்ன பேரொளியோடு காட்சி தரும் இறைவன் எழுந்தருளியுள்ள கோயிலாய் அயலில் மந்தி ஆண்குரங்கோடு கூடி வந்து வணங்கும் சிறப்பை உடைய திருவலிதாயத்தைச் சிந்தியாத அவர்களைத் தாக்கும் கொடிய துன்பம், தீர்தல் எளிதன்று.


பாடல் எண் : 6
ஊன் இயன்ற தலையில் பலி கொண்டு, உலகத்து உள்ளவர் ஏத்தக்
கான் இயன்ற கரியின் உரி போர்த்து உழல் கள்வன், சடை தன்மேல்
வான் இயன்ற பிறை வைத்த எம் ஆதி மகிழும் வலிதாயம்
தேன் இயன்ற நறு மாமலர் கொண்டு நின்று ஏத்தத் தெளிவாமே.

         பொழிப்புரை :வலிதாயத்திறைவனை நறுமாமலர் கொண்டு நின்றேத்தத் தெளிவு ஆம் என வினை முடிபு கொள்க. ஊன் கழிந்த பிரமகபாலத்தில் பலி ஏற்று உலகத்தவர் பலரும் ஏத்தக் காட்டில் திரியும் களிற்றுயானையின் தோலை உரித்துப் போர்த்துத் திரியும் கள்வனும், சடையின்மேல் வானகத்துப் பிறைக்கு அடைக்கலம் அளித்துச் சூடிய எம் முதல்வனும் ஆகிய பெருமான், மகிழ்ந்துறையும் திருவலிதாயத்தைத்தேன் நிறைந்த நறுமலர் கொண்டு நின்று ஏத்தச் சிவஞானம் விளையும்.


பாடல் எண் : 7
கண் நிறைந்த விழியின் அழலால் வரு காமன் உயிர் வீட்டிப்
பெண் நிறைந்த ஒரு பால் மகிழ்வு எய்திய பெம்மான் உறைகோயில்,
மண் நிறைந்த புகழ் கொண்டு, அடியார்கள் வணங்கும் வலிதாயத்து
உள் நிறைந்த பெருமான் கழல் ஏத்த, நம் உண்மைக் கதி ஆமே.

         பொழிப்புரை :வலிதாய நாதன் கழலை ஏத்தினால் வீட்டின்பத்தை அடையலாம் என வினை முடிபு காண்க. நெற்றி விழியின் அழலால், தேவர் ஏவலால் வந்த காமனது உயிரை அழித்துத் தனது திருமேனியின் பெண்ணிறைந்த இடப் பாகத்தால் மகிழ்வெய்திய பெருமான் உறை கோயிலாய் நிலவுலகெங்கும் நிறைந்த புகழைக்கொண்ட, அடியவர்கள் வணங்கும் திருவலிதாயத்துள் நிறைந்து நிற்கும் பெருமான் திருவடிகளை வணங்கினால் வீடு பேறு அடையலாம்.


பாடல் எண் : 8
கடலின் நஞ்சம் அமுது உண்டு, இமையோர் தொழுது ஏத்த நடம்ஆடி
அடல் இலங்கை அரையன் வலி செற்று அருள் அம்மான் அமர்கோயில்
மடல் இலங்கு கமுகின் பலவின் மது விம்மும் வலிதாயம்
உடல் இலங்கும் உயிர் உள்ள அளவுந் தொழ உள்ளத் துயர் போமே.

         பொழிப்புரை :உடலில் உயிர் உள்ள அளவும் தொழுவாரது மனத் துயரம் கெடும் என வினை முடிபு காண்க . திருப்பாற்கடலைக் கடைந்த போது எழுந்த நஞ்சினை அமுதமாக உண்டு தேவர்கள் தொழுது வாழ்த்த நடனம் ஆடி , வலிமை மிக்க இலங்கை மன்னனின் ஆற்றலை அழித்துப் பின் அவனுக்கு நல்லருள் புரிந்த இறைவன் எழுந்தருளிய கோயிலை உடையதும் , மடல்கள் விளங்கும் கமுகு பலாமரம் ஆகியவற்றின் தேன் மிகுந்து காணப்படுவதுமாகிய திருவலிதாயத் தலத்தை நினைக்க மனத்துயர் கெடும் .

         குருவருள் : சிவபூசை எடுத்துக் கொள்பவர் ` என் உடலில் உயிர் உள்ள அளவும் பூசையை விடாது செய்து வருவேன் ` என்ற உறுதி மொழி கொடுத்தே எடுத்துக்கொள்வர் . அக்கருத்தை இப்பாடலின் இறுதிவரி குறிப்பிடுதலைக் காணலாம் . ` பழனஞ்சேர் அப்பனை என் கண் பொருந்தும் போழ்தத்தும் கைவிட நான் கடவேனோ ` என்ற அப்பர் தேவாரமும் காண்க .


பாடல் எண் : 9
பெரிய மேரு வரையே சிலையா மலைவு உற்றார் எயின்மூன்றும்
எரிய எய்த ஒருவன், இருவர்க்கு அறி ஒண்ணா வடிவாகும்
எரியதாகி உற ஒங்கியவன், வலிதாயம் தொழுது ஏத்த
உரியராக உடையார், பெரியார்என உள்கும் உலகோரே.

         பொழிப்புரை :வலிதாயத்தை வணங்குவாரைப் பெரியார் என உலகோர் உள்குவர் என முடிபு காண்க. தேவர்களோடு மாறுபட்ட திரிபுர அசுரர்களின் கோட்டைகள் மூன்றையும், மிகப் பெரிய மேரு மலையை வில்லாகக் கொண்டு எரியும்படி அழித்த ஒருவனும், திருமால் பிரமன் ஆகிய இருவராலும் அறிய ஒண்ணாத அழல் வடிவாய் உயர்ந்தோங்கியவனும் ஆகிய சிவபிரானது திருவலிதாயத்தைத்தொழுது ஏத்தலைத் தமக்குரிய கடமையாகக் கொண்ட உலக மக்கள் பலரும் பெரியார் என நினைந்து போற்றப்படுவர்.


பாடல் எண் : 10
ஆசி ஆர மொழியார் அமண் சாக்கியர் அல்லாதவர்கூடி
ஏசி ஈரம் இலராய் மொழி செய்தவர் சொல்லைப் பொருள் என்னேல்,
வாசி தீர அடியார்க்கு அருள் செய்து வளர்ந்தான் வலிதாயம்
பேசும் ஆர்வம் உடையார் அடியார் எனப் பேணும் பெரியோரே.

         பொழிப்புரை :வலிதாயத்தின் புகழைப் பேசுபவர்க்கு யாம் அடியர் எனப் பெரியோர்கள் பேணுவர் . மனமார வாழ்த்தும் இயல்பினரல்லாத சமணர் சாக்கியர் ஆகிய புறச்சமயிகள் கூடி இகழ்ந்தும் அன்பின்றியும் பேசும் சொற்களைப் பொருளாகக் கொள்ளாதீர் . குற்றம் தீர , அடியவர்கட்கு அருள் செய்து புகழால் ஓங்கிய பெருமானது வலிதாயத்தின் புகழைப் பேசும் ஆர்வம் உடையவர்களே , அடியார்கள் என விரும்பப்படும் பெரியோர் ஆவர் .


பாடல் எண் : 11
வண்டு வைகும் மணம் மல்கிய சோலை வளரும் வலிதாயத்து
அண்டவாணன் அடி உள்குதலால் அருள் மாலைத் தமிழாகக்
கண்டல் வைகு கடல் காழியுள் ஞானசம் பந்தன் தமிழ்பத்தும்
கொண்டு வைகி இசை பாடவல்லார், குளிர் வானத்து உயர்வாரே.

         பொழிப்புரை :வலிதாய நாதன்மீது பாடிய இத்திருப்பதிகத்தை இசையோடு பாடுவார் குளிர் வானத்துயர்வார் என முடிபு காண்க. வண்டுகள் மொய்க்கும் மணம் நிறைந்த சோலைகள் வளரும் திருவலிதாயத்தில் விளங்கும் அனைத்துலக நாதனின் திருவடிகளைத் தியானிப்பதால், தாழைகள் வளரும் கடற்கரையை அடுத்துள்ள சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் தமிழ் மாலையாக அருளிச் செய்த இத்திருப்பதிகத்தைச் சிறந்த தோத்திரமாகக் கொண்டு அமர்ந்திருந்து இசையோடு பாடவல்லார், குளிர்ந்த வானுலக வாழ்க்கையினும் உயர்வு பெறுவர்.
திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...