கருவூர்த்தேவர் அருளிச் செய்தது
9. 08
கோயில் - கணம்விரிகுடுமி பண் - புறநீர்மை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
கணம்விரி
குடுமிச் செம்மணிக் கவைநா,
கறைஅணல் கட்செவிப் பகுவாய்
பணம்விரி
துத்திப் பொறிகொள்வெள் எயிற்றுப்
பாம்புஅணி பரமர்தம் கோயில்,
மணம்விரி
தருதே மாம்பொழில் மொழுப்பின்
மழைதவழ் வளர்இளங் கமுகந்
திணர்நிரை
அரும்பும் பெரும் பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.
பொழிப்புரை : கூட்டமாக விரிந்த தலைகளையும்
அத்தலைகளின் கண் சிவந்த இரத்தினங்களையும் பிளவுபட்ட நாக்குக்களையும் விடக்கறை
பொருந்திய வாயினையும், கண்ணொடு பொருந்தி நிற்கும் காதினையும், பிளந்த
வாய்களையும் படத்தின்கண் பொருந்திய புள்ளிகளையும், வெள்ளிய பற்களையும் உடைய பாம்புகளை
அணிகலன்களாக அணிந்த மேம்பட்ட சிவபெருமானுடைய கோயில், நறுமணம் கமழும் ஒட்டுமாமரச் சோலைகளையும், தம்
உச்சியில் மேகங்கள் தவழுமாறு உயர்ந்த பாக்கு மரங்களின் உச்சியில் வரிசையாகத்
தோன்றும் பூங்கொத்துக்களையும் உடைய பெரும்பற்றப் புலியூர் என்ற திருப்பதிக்கண்
அமைந்த திருச்சிற்றம்பலமாகும்.
பாடல்
எண் : 2
இவ்அரும்
பிறவிப் பௌவநீர் நீந்தும்
ஏழையேற்கு என்னுடன் பிறந்த
ஐவரும்
பகையே, யார்துணை யென்றால்,
அஞ்சல்என்று அருள் செய்வான் கோயில்,
கைவரும்
பழனம் குழைத்தசெஞ் சாலிக்
கடைசியர் களைதரு நீலம்
செய்வரம்பு
அரும்பு பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.
பொழிப்புரை : இந்தக் கடத்தற்கு அரிய பிறவியாகிய
கடலில் கரை காண்பதற்காக நீந்தும் அடியவனாகிய எனக்கு என்னுடன் தோன்றிய ஐம்பொறிகளும்
பகையாக உள்ளன. அந்நிலையில் எனக்குத் துணையாவர் என்று வருந்தினனால், `யானே
துணையாவேன். ஆதலின் அஞ்சாதே` என்று அருள் செய்கின்ற சிவபெருமானுடைய
கோயில், பக்கங்களில்
பொருந்தியுள்ள வயல்களில் தளிர்த்த செந்நெற் பயிர்களிடையே களையாக வளர்ந்ததனால், உழத்தியர்கள்
களையாகப் பிடுங்கிய நீலமலர்க்கொடிகளே வயலின் வரப்புக்களில் காணப்படும்
பெரும்பற்றப்புலியூரில் உள்ள இறைவனுடைய அருட்செல்வம் வளர்கின்ற திருச்சிற்றம்பலமே
யாகும்.
பாடல்
எண் : 3
தாயின்நேர்
இரங்குந் தலைவ, ஓ என்றும்,
தமியனேன் துணைவ,
ஓ என்றும்,
நாயினேன்
இருந்து புலம்பினால் இரங்கி
நலம்புரி பரமர்தம் கோயில்
வாயின்ஏர்
அரும்பு மணிமுருக்கு அலர
வளர்இளம் சோலைமாந் தளிர்செந்
தீயின்நேர்
அரும்பு பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.
பொழிப்புரை : தாயைப்போல உயிர்களிடம் இரக்கம் கொள்ளும்
தலைவனே எனவும், தன்னுணர்வு இல்லாத அடியேனுடைய தலைவனே எனவும், நாய்
போன்ற இழிந்தவனாகிய அடியேன் இருந்து அழைத்து வருந்தினால் இரக்கங்கொண்டு அடியேற்கு
நன்மையைச் செய்யும் சிவபெருமானுடைய கோயில், பெண்களுடைய வாய்க்கு ஒப்பாகச்
செந்நிறத்தோடு அரும்பும் அழகிய முருக்கமலர் மலர, இள மரங்கள் வளர்கின்ற சோலையில்
மாந்தளிர்கள் சிவந்த தீயைப் போலத் தோன்றுகின்ற பெரும்பற்றப்புலியூரில் உள்ள
அருட்செல்வம் வளர்கின்ற சிற்றம்பலமேயாகும்.
பாடல்
எண் : 4
துந்துபி
குழல்யாழ் மொந்தைவான் இயம்ப,
தொடர்ந்துஇரு டியர்கணம் துதிப்ப,
நந்திகை
முழவம் முகில்என முழங்க,
நடம்புரி பரமர்தம் கோயில்,
அந்தியின்
மறைநான்கு ஆரணம் பொதிந்த
அரும்பெறல் மறைப்பொருள் மறையோர்
சிந்தையில்
அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.
பொழிப்புரை : துந்துபி, வேய்ங்குழல், யாழ், மொந்தை என்ற தோற்கருவி இவற்றின் ஒலி
வானளவும் சென்று ஒலிக்க, முனிவர் குழாம் தொடர்ந்து துதிக்க, நந்திதேவர்
தம் கைகளால் முழக்கும் முழவம் மேகத்தைப் போல முழங்கக் கூத்து நிகழ்த்தும் சிவ
பெருமானுடைய கோயில், அந்திக் காலத்தில் சொல்லப்படுகின்ற
மந்திரங்களை உடைய நான்கு வேதங்களினும் உள் அமைந்த இரகசியப் பொருள்கள் வேதியருடைய
உள்ளத்தில் புலனாகின்ற பெரும்பற்றப்புலியூரிலுள்ள திருவளர் திருச்சிற்றம்பலமே
ஆகும்.
பாடல்
எண் : 5
கண்பனி
அரும்பக் கைகள் மொட்டித்து,என்
களைகணே ஓலம்என்று ஓல்இட்டு
என்புஎலாம்
உருகும் அன்பர்தம் கூட்டத்து
என்னையும் புணர்ப்பவன் கோயில்,
பண்பல
தெளிதேன் பாடிநின்று ஆடப்
பனிமலர்ச் சோலைசூழ் மொழுப்பில்
செண்பகம்
அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.
பொழிப்புரை : கண்கள் கண்ணீர் துளிக்க, கைகள்
குவித்து, `எனக்குப் பற்றுக் கோடு ஆனவனே! ஓலம்` என்று கதறி எலும்புக ளெல்லாம் அன்பினால்
உருகும் அடியார்களுடைய கூட்டத்தில் அடி யேனையும் இணைத்துக் கொள்ளும்
சிவபெருமானுடைய கோயில், தேன் உண்டு என்பதனைத் தெளிந்த வண்டுகள்
பலபல பண்களைப் பாடிக் கொண்டு ஆடக் குளிர்ந்த மலர்களைப் பரப்பிய மேலிடத்தில்
அரும்பும் சண்பகம் நிறைந்த சோலைகளை உடைய பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருவளர்
திருச்சிற்றம்பலமே யாகும்.
பாடல்
எண் : 6
நெஞ்சுஇடர்
அகல அகம்புகுந்து ஒடுங்கு
நிலைமையோடு இருள்கிழித்து எழுந்த
வெஞ்சுடர்
சுடர்வ போன்றுஒளி துளும்பும்
விரிசடை அடிகள்தம் கோயில்,
அஞ்சுடர்ப்
புரிசை ஆழிசூழ் வட்டத்து
அகம்படி மணிநிரை பரந்த
செஞ்சுடர்
அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.
பொழிப்புரை : அடியேங்களுடைய உள்ளங்களில் உள்ள துயரங்
கள் தீர, எங்கள்
உள்ளங்களில் புகுந்து தங்கியிருக்கும் நிலையோடு இருளைக் கிழித்துக்கொண்டு
வெளிப்பட்ட சூரியன் ஒளி வீசுவது போன்று ஒளியை வெளிப்படுத்தும் விரிந்த சடையை உடைய
சிவ பெருமானுடைய கோயில், அழகிய ஒளியை உடைய மதிலும் அகழி யும்
சூழ்ந்த உள்ளிடத்தில் மணிகளின் வரிசைகளிலிருந்து பரவிய சிவந்த ஒளி விரியும் பெரும்
பற்றப்புலியூரிலுள்ள திருவளர் திருச் சிற்றம்பலமே ஆகும்.
பாடல்
எண் : 7
பூத்திரள்
உருவம் செங்கதிர் விரியாப்
புந்தியில் வந்தமால் விடையோன்
தூத்திரள்
பளிங்கில் தோன்றிய தோற்றம்
தோன்றநின் றவன்வளர் கோயில்,
நாத்திரள்
மறைஓர்ந்து ஓமகுண் டத்து
நறுநெயால் மறையவர் வளர்த்த
தீத்திரள்
அரும்பு பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.
பொழிப்புரை : செம்பூக் குவியல்களின் உருவம்போலச்
சிவந்த ஒளியை வெளிப்படுத்திக் கொண்டு, அடியேனுடைய மனத்தில் வந்து எழுந்தருளிய, திருமாலாகிய
காளையை உடையவனாய், தூய பளிங்கின் குவியலினின்றும் தோன்றிய
காட்சி காணப்படுமாறு போல வெண்ணீற்றொளியோடு நிலை பெற்றிருப்பவன் கோயில், நாவினால்
கூட்டமாக ஓதப்படுகின்ற வேதமந்திரங்களை உணர்ந்து ஓமகுண்டங் களிலே நறிய நெய்யை
ஆகுதியாக அளித்து வேதியர்கள் வளர்த்த தீயின் குவியல் ஒளிவீசுகின்ற
பெரும்பற்றப்புலியூரில் உள்ள திருவளர் சிற்றம்பலமே ஆகும்.
பாடல்
எண் : 8
சீர்த்ததிண்
புவனம் முழுவதும் ஏனைத்
திசைகளோடு அண்டங்கள் அனைத்தும்
போர்த்ததம்
பெருமை சிறுமைபுக்கு ஒடுங்கும்
புணர்ப்புஉடை அடிகள்தம் கோயில்
ஆர்த்துவந்து
அமரித்து அமரரும் பிறரும்
அலைகடல் இடுதிரைப் புனிதத்
தீர்த்தநீர்
அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.
பொழிப்புரை : சிறப்புப் பெற்ற வலிய நில உலகம்
முழுவதும் ஏனைய திசைகளும் மற்ற அண்டங்கள் அனைத்தும் பெற்றுள்ள அவற்றின் பெருமைகள்
யாவும் தனது ஆற்றலுள்ளே மிகச் சிறியன வாய் ஒடுங்கத்தக்க ஆற்றலை உடைய
சிவபெருமானுடைய கோயில், இறைவன் பெருமைகளை ஒலித்துக் கொண்டே
ஒருவருக்குமுன் ஒருவராய் முற்பட்டு வந்து தேவர்களும் மற்றவர்களும் நீர் அலைக்
கின்ற கடலைப் போல அலைவீசுகின்ற, அபிடேகம் செய்யும் தூய்மை யான நீர்
நிறைந்து காணப்படும் பெரும்பற்றப் புலியூரிலுள்ள திருவளர்
திருச்சிற்றம்பலமேயாகும்.
பாடல்
எண் : 9
பின்னுசெஞ்
சடையும், பிறைதவழ் மொழுப்பும்,
பெரியதம் கருணையுங் காட்டி,
அன்னைதேன்
கலந்துஇன் அமுதுஉகந்து அளித்தாங்கு
அருள்புரி பரமர்தம் கோயில்
புன்னைதேன்
சொரியும் பொழிலகம் குடைந்து
பொறிவரி வண்டுஇனம் பாடும்
தென்னதேன்
அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.
பொழிப்புரை : ஒன்றோடொன்று கூடிய சிவந்த சடையும், பிறைச்
சந்திரன் தவழ்கின்ற முடியும், பெரிய தம்முடைய கருணையும் ஆகிய இவற்றைக்
காட்டி, தாய்
தன் குழந்தைக்குத் தேனைக் கலந்து இனிய உணவை விரும்பி அளித்தாற் போல அருள் புரியும்
சிவபெரு மானுடைய கோயில், புன்னை மலர்கள் தேனைச் சொரிகின்ற சோலை
களினுள்ளே பூக்களைக் கிளறிப் புள்ளிகளையும் கோடுகளையும் உடைய வண்டுகளின்
கூட்டங்கள் பாடும் `தென்ன` என்ற இசையாகிய தேன் பரவிய
பெரும்பற்றப்புலியூரில் உள்ள திருவளர் திருச்சிற்றம் பலமாகும்.
பாடல்
எண் : 10
உம்பர்நாடு
இம்பர் விளங்கியாங்கு எங்கும்
ஒளிவளர் திருமணிச் சுடர்கான்று
எம்பிரான்
நடஞ்செய் சூழல்அங்கு எல்லாம்
இருட்பிழம்பு அறஎறி கோயில்
வம்புலாங்
கோயில் கோபுரம் கூடம்
வளர்நிலை மாடமா ளிகைகள்
செம்பொனால்
அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.
பொழிப்புரை : தேவர் உலகமே இவ்வுலகில் காணப்பட்டமை
போன்று ஒளியை வெளிப்படுத்துகையினாலே எம்பெருமான் திருக்கூத்து நிகழ்த்தும்
இடங்களிலெல்லாம் இருட்டின் வடிவம் நீங்குமாறு அதனை விரட்டும் கோயில், புதுமை
வாய்ந்த தலைமை பொருந்திய இல்லங்கள், கோபுரங்கள், கூடங்கள், உயர்ந்த பல நிலைகளை உடைய மாடமாளிகைகள்
யாவும் சிவந்த பொன்னால் இயன்று தோன்றுகின்ற பெரும்பற்றப்புலியூரிலுள்ள திருவளர்
திருச்சிற்றம்பலமேயாகும்.
பாடல்
எண் : 11
இருந்திரைத்
தரளப் பரவைசூழ் அகலத்து
எண்ணில்அம் கண்இல்புன் மாக்கள்
திருந்துஉயிர்ப்
பருவத்து அறிவுறு கருவூர்த்
துறைவளர் தீந்தமிழ் மாலை
பொருந்துஅரும்
கருணைப் பரமர்தங் கோயில்
பொழிலகம் குடைந்துவண்டு உறங்கச்
செருந்திநின்று
அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.
பொழிப்புரை : பெரிய அலைகளால் மோதப்படும் முத்துக்களை
உடைய கடல் சூழ்ந்த அகன்ற பூமியில் உள்ள எண்ணற்ற, அழகிய கண்ணாகிய அறிவு இல்லாத இழிநிலையிலுள்ள
மக்கள், திருந்துகின்ற
உயிரின் பரிபாக நிலையில் ஞானம் பெறுதற்கு ஏதுவான கருவூர்த் தேவருடைய புறப்பொருள்
துறையாகிய கடவுள் வாழ்த்தாகிய இனிய தமிழ் மாலையை உளங்கொண்டு ஏற்றருளும் மேம்பட்ட
கருணையை உடைய சிவபெருமானுடைய கோயில், சோலைகளிலே மலர்களைக் குடைந்து வண்டுகள்
உறங்கவும் செருந்தி நிலையாக அரும்புகளைத் தோற்றுவிக்கின்ற பெரும்பற்றப்புலியூர்
என்ற தலத்திலுள்ள திருவளர் திருச்சிற்றம்பலமேயாகும்.
திருச்சிற்றம்பலம்
பூந்துருத்தி நம்பி காடநம்பி அருளிச்
செய்தது
9. 19
கோயில் - முத்துவயிரமணி பண் - சாளரபாணி
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
முத்து
வயிரமணி மாணிக்க மாலைகள்மேல்
தொத்து
மிளிர்வனபோல் தூண்டு விளக்குஏய்ப்ப
எத்திசையும்
வானவர்கள் ஏத்தும் எழில்தில்லை
அத்தனுக்கும்
அம்பலமே ஆடுஅரங்கம் ஆயிற்றே.
பொழிப்புரை : முத்து, வயிரம், மாணிக்கம் என்ற மணிகளால் செய்யப்பட்ட மாலையின்மேல்
பூங்கொத்துக்கள் ஒளிவீசுவது போன்றும், தூண்டப்பட்ட விளக்கின் ஒளி போன்றும், எல்லாத்
திசைகளிலும் உள்ள தேவர்கள் போற்றிப்புகழும் தில்லைத் திருத்தலத் திலுள்ள, ஒளிவீசும்
பொன்னம்பலம் எம்பெருமானுக்கும் திருக்கூத்து நிகழ்த்தும் அரங்கமாக ஆயிற்று.
பாடல்
எண் : 2
கடியார்
கணம்புல்லர் கண்ணப்பர் என்றுஉன்
அடியார்
அமர்உலகம் ஆள,நீ ஆளாதே,
முடியாமுத்
தீவேள்வி மூவா யிரவரொடும்
குடிவாழ்க்கை
கொண்டுநீ குலாவிக்கூத்து ஆடினையே.
பொழிப்புரை : சிறப்புமிக்க கணம்புல்ல நாயனார், கண்ணப்ப
நாயனார் என்ற பெயருடைய உன் அடியவர்கள் சிவலோகமாகிய வீடுபேற்றுலகத்தை ஆளவும், நீ
அதன்கண்ஆட்சி செய்வதனை விடுத்து, என்றும் அழிதல் இல்லாத முத்தீக்களால்
வேள்விகளை நிகழ்த்தும் தில்லை மூவாயிரவர் அந்தணரோடு உடன் உறையும் வாழ்க்கையை
மேற்கொண்டு மகிழ்ந்து ஆனந்தக் கூத்து ஆடுகின்றாய்.
பாடல்
எண் : 3
அல்லிஅம்
பூம்பழனத்து ஆமூர்நா வுக்கரசைச்
செல்லநெறி
வகுத்த சேவகனே தென்தில்லைக்
கொல்லை
விடைஏறி கூத்தாடு அரங்காகச்
செல்வ
நிறைந்தசிற் றம்பலமே சேர்ந்தனையே.
பொழிப்புரை : அக இதழ்களோடு கூடிய அழகிய பூக்கள்
பொருந்திய வயல்களை உடைய திருவாமூரில் அவதரித்த திருநாவுக்கரசு சுவாமிகள்
வீடுபேற்றை அடையும் வழியைக் காட்டிய வீரனே! அழகிய தில்லைநகரில் முல்லை நிலத்தில்
மேயும் காளையை ஒத்த காளையை இவர்ந்தவனே! நீ கூத்தாடுதலை நிகழ்த்தும் அரங்கமாகச்
செல்வம் மிகுந்த சிற்றம்பலத்தை அடைந்துள்ளாயே.
பாடல்
எண் : 4
எம்பந்த
வல்வினைநோய் தீர்த்திட்டு எமைஆளும்
சம்பந்தன்
காழியர்கோன் தன்னையும்ஆட் கொண்டுஅருளி
அம்புஉந்து
கண்ணாளும் தானும்அணி தில்லைச்
செம்பொன்செய்
அம்பலமே சேர்ந்துஇருக்கை ஆயிற்றே.
பொழிப்புரை : எம்மைப் பிணித்திருக்கும் கொடிய
வினையாகிய நோயினை அறவே அழித்து, எம்மை அடியவராகக் கொண்ட சீகாழி
மன்னனாகிய திருஞானசம்பந்த நாயனாரையும் அடிமையாகக் கொண்டருளிய பெருமானுக்கு, அம்பு
போன்ற கண்களை உடைய உமாதேவியும் தாமுமாக அழகிய தில்லைத் திருத்தலத்திலுள்ள
பொன்னம்பலமே எழுந்தருளியிருப்பதற்குரிய இடமாக ஆகிவிட்டது.
பாடல்
எண் : 5
களையா
உடலோடு சேரமான் ஆரூரன்
விளையா
மதம்மாறா வெள்ளானை மேல்கொள்ள
முளையா
மதிசூடி மூவா யிரவரொடும்
அளையா
விளையாடும் அம்பலம்நின் ஆடரங்கே.
பொழிப்புரை : தம் உயிர் இவ்வுடம்பை விடுத்து
நீங்காமல் இந்த உடலோடும் சேரமான் பெருமாள் நாயனாரோடும் ஆரூரன் ஆகிய சுந்தரமூர்த்தி
நாயனார் மதத்தைப் பெருக்கெடுத்து ஓடச் செய்தல் நீங்காத வெள்ளை யானையைக் கயிலை
மலையை அடைவதற்கு இவர்ந்து செல்லவும், இளம்பிறையைச் சூடிய பெருமானே! நீ தில்லை
மூவாயிரவரோடும் கலந்து விளையாடுகின்ற திருச்சிற்றம்பலமே உனக்குக் கூத்தாட்டு
நிகழ்த்தும் அரங்கமாக உள்ளது. சேரமான் குதிரையில் கயிலை சென்றார் என்க. மதிமுடி -
எனவும் பாடம் ஓதுப.
பாடல்
எண் : 6
அகலோகம்
எல்லாம் அடியவர்கள் தற்சூழப்
புகலோகம்
உண்டுஎன்று புகும்இடம்நீ தேடாதே
புவலோக
நெறிபடைத்த புண்ணியங்கள் நண்ணியசீர்ச்
சிவலோகம்
ஆவதுவும் தில்லைச்சிற் றம்பலமே.
பொழிப்புரை : நீ புகுவதற்கு வேறு உலகம் உண்டு என்று
நீ கருதாதபடி, மேல் உலகங்களை அடைவதற்கு உரிய நெறியானே எய்திய புண்ணியங்களால், இந்நிலவுலகம்
முழுதிலுமுள்ள அடியவர் கள் உன்னைச் சூழ்ந்து நிற்க, அதனால் பொருந்திய சிறப்பினையுடைய
சிவலோகமாகவே தில்லைத் திருப்பதியின் சிற்றம்பலம் அமைந்துவிட்டது.
பாடல்
எண் : 7
களகமணி
மாடம் சூளிகைசூழ் மாளிகைமேல்
அளகமதி
நுதலார் ஆயிழையார் போற்றிசைப்ப
ஒளிகொண்ட
மாமணிகள் ஓங்குஇருளை ஆங்குஅகற்றும்
தெளிகொண்ட
தில்லைச்சிற் றம்பலமே சேர்ந்தனையே.
பொழிப்புரை : வெண்சாந்து பூசப்பட்ட அழகிய மேல்மாடமும், மேல்மாடத்தின்
முகப்பும் சூழ்ந்துள்ள பேரில்லங்களின் மேல் நிலத் தில், கூந்தல் வந்து படிந்திருக்கும் பிறை
போன்ற நெற்றியை உடையவராகிய, ஆராய்ந்தெடுக்கப்பட்ட அணிகலன்களை அணிந்த
மகளிர் உன்னைப் போற்றிப் பாட, நல்ல பிரகாசமுடைய இரத்தினங்கள்
அவ்விடத்தில் கவியும் இருளைப்போக்கும் தெளிந்த ஒளியை உடைய,
தில்லைப் பதிக்கண்
உள்ள திருச்சிற்றம்பலத்தையே நீ வந்து சேர்ந்துள்ளாய்.
பாடல்
எண் : 8
பாடகமும்
நூபுரமும் பல்சிலம்பும் பேர்ந்துஒலிப்ப,
சூடகக்கை
நல்லார் தொழுதுஏத்த, தொல்உலகில்
நாடகத்தின்
கூத்தை நவிற்றும்அவர் நாடோறும்
ஆடகத்தால்
மேய்ந்துஅமைந்த அம்பலம்நின் ஆடரங்கே.
பொழிப்புரை : பாடகம், பாத கிண்கிணி, சிலம்பு என்று தம் கால் களில் அணிந்த
அணிகலன்கள் அசைந்து ஒலிக்க நாள்தோறும் கதை தழுவிவரும் கூத்தினை நிகழ்த்துபவராய்
வளையல்களை அணிந்த கைகளை உடைய அம்மகளிர் உன்னை வழிபட்டுப் புகழ, இப்பழைய
உலகில் பொன்னால் மேற்கூரை வேயப்பட்டு அமைந்துள்ள பொன்னம்பலம் உனக்கு நடன சபையாக
அமைந்துள்ளது.
பாடல்
எண் : 9
உருவத்
தெரியுருவாய் ஊழிதோறு எத்தனையும்
பரவிக்
கிடந்துஅயனும் மாலும் பணிந்துஏத்த
இரவிக்கு
நேராகி ஏய்ந்துஇலங்கு மாளிகைசூழ்ந்து
அரவிக்கும்
அம்பலமே ஆடுஅரங்கம் ஆயிற்றே.
பொழிப்புரை : பல ஊழிக்காலங்கள் உன் புகழைப்போற்றி
வழிபட்டுப் பிரமனும், திருமாலும் உன்னை வணங்கிப் புகழ, சூரியனை
ஒப்ப ஒளிமிக்கு விளங்குகின்ற மாளிகைகளால் சூழப்பட்டு, ஒலியை உண்டாக்குகின்ற சிற்றம்பலமே அழகிய
தீப்பிழம்பு போன்ற வடிவுடன் நீ கூத்து நிகழ்த்தும் அரங்கமாக அமைந்துவிட்டது.
பாடல்
எண் : 10
சேடர்
உறைதில்லைச் சிற்றம் பலத்தான்தன்
ஆடல்
அதிசயத்தை ஆங்குஅறிந்து பூந்துருத்திக்
காடன்
தமிழ்மாலை பத்தும் கருத்துஅறிந்து
பாடும்
இவைவல்லார் பற்றுநிலை பற்றுவரே.
பொழிப்புரை : சான்றோர்கள் வசிக்கின்ற தில்லைத்
திருத்தலத் திலுள்ள சிற்றம்பலத்தை உடையவனாகிய கூத்தப்பிரானுடைய ஆனந்தக்கூத்தின்
சிறப்பினை அறிந்து பூந்துருத்திக்காட நம்பி இயற் றிய தமிழ்மாலையில் உள்ள பாடல் இவை
பத்தினையும் அவற்றின் கருத்தை அறிந்து பாடும் தொழிலில் வல்லவர்கள் அடையத்தக்க
இடமாகிய வீடுபேற்றினை அடைவர்.
திருச்சிற்றம்பலம்
கண்டராதித்தர் அருளிச் செய்தது
9. 20
கோயில்-மின்னார் உருவம் பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
மின்னார்
உருவம் மேல் விளங்க, வெண்கொடி மாளிகைசூழப்
பொன்னார்
குன்றம் ஒன்று வந்து நின்றது போலும்என்னாத்
தென்னா
என்று வண்டு பாடும் தென்தில்லை அம்பலத்துள்
என் ஆரமுதை எங்கள் கோவை என்றுகொல் எய்துவதே.
பொழிப்புரை : மின்னலைப் போல ஒளிவீசும் மகளிருடைய
வடிவங்கள் மாடங்களின் மேல்நிலையில் விளங்கவும், வெண்கொடிகள் அம் மாளிகைகளைச் சுற்றிலும்
பறக்கவும் அமைந்த அழகான தில்லை என்ற திருத்தலத்தில், பொன்னாலாகிய மலை ஒன்று வந்து அவ்வூரில்
தங்கிவிட்டது போலும் என்று கருதுமாறு, தென்னா என்று இசை ஒலியை எழுப்பி
வண்டுகள் பாடும் அவ்வூரின் பொன்னம்பலத்தில் எழுந்தருளியிருக்கும், என்
கிட்டுதற்கரிய அமுதமாகிய எங்கள் தலைவனை அடியேன் என்று கிட்டப்பெறுவேன்?
பாடல்
எண் : 2
ஓவா
முத்தீ அஞ்சு வேள்வி ஆறுஅங்க நான்மறையோர்
ஆவே
படுப்பார் அந்த ணாளர் ஆகுதி வேட்டு உயர்வார்
மூவா
யிரவர் தங்க ளோடு முன்அரங்கு ஏறிநின்ற
கோவே, உன்தன்
கூத்துக் காணக் கூடுவது என்றுகொலோ.
பொழிப்புரை : என்றும் அணையாத முத்தீக்களையும், ஐவகை
வேள்விகளையும், ஆறு அங்கங்களையும், நான்கு வேதங்களையும் முறையே வளர்த்து, நிகழ்த்தி, கற்று, ஓதும்
அந்தணாளராய், பசுக் களின் நெய், பால், தயிர் இவற்றை ஆகுதிகளாகச் சொரிந்து
வேள்வி களை நிகழ்த்தி மேம்பட்ட மூவாயிரவர் வேதியரோடு, முன் ஒரு காலத்துப் பதஞ்சலி முனிவர் உன்
கூத்தினைக்காண நாட்டிய அரங் காகிய திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளிய பெருமானே!
உன் திருக் கூத்தினைக் காணும் வாய்ப்பு அடியேனுக்கு என்று கிட்டுமோ?
பாடல்
எண் : 3
முத்தீ
யாளர் நான் மறையர் மூவா யிரவர் நின்னோடு
ஒத்தே
வாழும் தன்மை யாளர் ஓதிய நான்மறையைத்
தெத்தே
என்று வண்டு பாடும் தென்தில்லை அம்பலத்துள்
அத்தா, உன்தன்
ஆடல் காண அணைவதும் என்றுகொலோ
பொழிப்புரை : முத்தீ ஓம்பி நான்மறை ஓதும்
மூவாயிரவராய் உன் திருவுள்ளக் குறிப்பிற்கு ஏற்ப வாழும் தன்மை உடையவர்கள் ஓதிய
நான்கு வேதங்களையும் தெத்தே என்று இசை எழுப்பி வண்டுகள் பாடும் அழகிய தில்லையின்
சிற்றம்பலத்தில் உள்ள தலைவனே! உன்னுடைய ஞான ஆனந்தத் திருக்கூத்தினைத் தரிசிக்க
அடியேன் உன்னிடம் வந்து சேருவது எந்த நாளோ!
பாடல்
எண் : 4
மானைப்
புரையும் மடமெல் நோக்கி மாமலை யாளோடும்
ஆன்அஞ்சு
ஆடும் சென்னி மேல்ஓர் அம்புலி சூடும்அரன்,
தேனை, பாலை, தில்லை
மல்கு செம்பொனின் அம்பலத்துக்
கோனை, ஞானக்
கொழுந்து தன்னைக் கூடுவது என்றுகொலோ.
பொழிப்புரை : மானின் பார்வையை ஒத்த பார்வையை உடைய
ளாய் மடம் என்ற பண்பினை உடைய பார்வதியோடு, பஞ்சகவ்விய அபிடேகம் செய்யப்படும்
தலையின் மீது ஒரு பிறையைச் சூடும் சிவபெருமானாய்த் தேன் போலவும், பால்
போலவும் இனியனாய்த் தில்லைத் திருத்தலத்தில் விளங்குகின்ற செம்பொன்மயமான அம்பலத்
தில் உள்ள தலைவனாய், ஞானக்கொழுந்தாய் உள்ள எம்பெருமானை
அடியேன் கூடும் நாள் எந்நாளோ?
பாடல்
எண் : 5
களிவான்
உலகில் கங்கை நங்கை காதலனே அருள்என்று
ஒளிமால்
முன்னே வரங்கி டக்க உன்அடி யார்க்குஅருளும்
தெளிவுஆர்
அமுதே, தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துள்
ஒளிவான்
சுடரே, உன்னை நாயேன் உறுவதும் என்றுகொலோ.
பொழிப்புரை : `களித்து
வாழ்தற்குரிய வானுலகிற்கு உரிய கங்கை என்ற பெண்ணின் கணவனே! எனக்கு அருள்
செய்வாயாக!` என்று அழகை உடைய திருமால் உன் முன்னே வரம் வேண்டிப் படுத்துக்
கிடக்கவும் அவனுக்கு அருளாது உன் அடியவர்களுக்கே அருள் செய்யும் தெளிவு பொருந்திய
அமுதமே! தில்லைத் திருப்பதியில் விளங்குகின்ற செம்பொன்மயமான அம்பலத்துள் ஒளிவீசும்
மேம் பட்ட ஒளியே! உன்னை நாய்போன்ற கடையேனாகிய நான் என்று வந்து அடைவேன்?
பாடல்
எண் : 6
பாரோர்
முழுதும் வந்து இறைஞ்சப் பதஞ்சலிக்கு ஆட்டுஉகந்தான்
வார்ஆர்
முலையாள் மங்கை பங்கன் மாமறை யோர்வணங்கச்
சீரால்
மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத்து ஆடுகின்ற
கார்ஆர்
மிடற்றுஎம் கண்ட னாரைக் காண்பதும் என்றுகொலோ.
பொழிப்புரை : உலகிலுள்ள மக்களெல்லாம் தன்னை வந்து
வணங்கவும், பதஞ்சலி முனிவருக்காகத் திருக்கூத்து ஆடுதலை விரும்பி
மேற்கொண்டவனாய், கச்சணிந்த முலையை உடைய பார்வதி பாகனாய், மேம்பட்ட
வேதியர் வணங்கச் சிறப்பால் மேம் பட்ட தில்லையம்பதியின் செம்பொன் அரங்கில்
திருக்கூத்து நிகழ்த்து கின்ற நீலகண்டனாகிய எம் தலைவனை எந்நாள் காண்பேனோ?
பாடல்
எண் : 7
இலையார்
கதிர்வேல் இலங்கை வேந்தன் இருபது தோளும்இற
மலைதான் எடுத்த
மற்றவற்கு வாளொடு நாள்கொடுத்தான்,
சிலையால்
புரமூன்று எய்த வில்லி செம்பொனின் அம்பலத்துக்
கலையார்
மறிபொன் கையி னானைக் காண்பதும் என்றுகொலோ.
பொழிப்புரை : இலைவடிவமாக அமைந்த ஒளி பொருந்திய வேலை
ஏந்திய இலங்கை மன்னனுடைய இருபது தோள்களும் நொறுங்குமாறு செய்து, கயிலைமலையை
எடுத்த அவனுக்குச் சந்திரகாசம் என்னும் வாளோடு முக்கோடி வாழ்நாளும் கொடுத் தவனாய், வில்லினால்
முப்புரங்களையும் எய்த வில்லாளனாய், செம்பொன்மயமான சிற்றம்பலத்தில்
மான்கன்றை ஏந்திய கையனாய் உள்ள பெருமானை அடியேன் எந்நாள் காண்பேன்?
பாடல்
எண் : 8
வெங்கோல்
வேந்தன் தென்னன் நாடும் ஈழமும் கொண்டதிறல்
செங்கோல்
சோழன் கோழி வேந்தன் செம்பியன் பொன்அணிந்த
அங்கோல்
வளையார் பாடி ஆடும் அணிதில்லை அம்பலத்துள்
எங்கோன்
ஈசன் எம் இறையை என்றுகொல் எய்துவதே.
பொழிப்புரை : கொடுங்கோலினை உடைய அரசனான பாண்டியனுடைய
நாட்டினையும், இலங்கையையும் கைப்பற்றிய ஆற்றலை உடைய செங்கோலை உடைய சோழ
மரபினனாய், உறையூரைக் கோநகராகக் கொண்டு சிபி மரபினனாய் ஆண்ட பராந்தகச்
சோழன் பொன் வேய்ந்த, அழகிய திரண்ட வளையல்களை உடைய மகளிர்
பாடியும், ஆடியும்
நற்பணி செய்யும் அழகிய தில்லை அம்பலத்துள் எம்தலைவனாய், எம்மை அடக்கி ஆள்பவனாய் உள்ள எம் இறைவனை
என்று அடையப்போகிறேனோ?
பாடல்
எண் : 9
நெடியா
னோடு நான் முகன்னும் வானவரும் நெருங்கி
முடியால்
முடிகள் மோதி உக்க முழுமணி யின்திரளை
அடியார்
அலகி னால் திரட்டும் அணிதில்லை அம்பலத்துக்
கடியார்
கொன்றை மாலை யானைக் காண்பதும் என்றுகொலோ.
பொழிப்புரை : ஓங்கி உலகளந்த திருமாலோடு பிரமனும், தேவர்களும்
சந்நிதியில் நெருங்கி நிற்றலான், அவர்கள் முடிகள் ஒன்றோடொன்று மோதுதலான், சிதறிய
பெரிய மணிகளின் குவியலை அடியவர்கள் திருவலகைக்கொண்டு திரட்டி வைக்கும் அழகிய
தில்லை அம்பலத்துள்ள நறுமணம் கமழும் கொன்றைப் பூமாலையானாகிய சிவபெருமானை அடியேன்
எந்நாள் காண்பேனோ?
பாடல்
எண் : 10
சீரால்மல்கு
தில்லைச் செம்பொன் அம்பலத்து ஆடிதன்னைக்
கார்ஆர்
சோலைக் கோழி வேந்தன் தஞ்சையர் கோன்கலந்த
ஆராஇன்சொல்
கண்டரா தித்தன் அருந்தமிழ் மாலைவல்லார்
பேரா
உலகில் பெருமை யோடும் பேரின்பம் எய்துவரே.
பொழிப்புரை : சிறப்பான் மேம்பட்ட தில்லைநகரில் உள்ள
செம் பொன் அம்பலத்தில் கூத்து நிகழ்த்தும் சிவபெருமானைப்பற்றி மேகங்கள் பொருந்திய
சோலைகளை உடைய உறையூர் மன்னனும், தஞ்சைமாநகரில் உள்ள அரசனும் ஆகிய
கண்டராதித்தன் திருவரு ளோடு கலந்து தெவிட்டாத இனிய சொற்களால் பாடிய அரிய தமிழ்ப்
பாமாலையைப் பொருளுணர்ந்து கற்றுப் பாட வல்லவர்கள், ஒருமுறை சென்றால் மீண்டும் அவ்விடத்தினின்றும்
திரும்பி நில உலகிற்குப் பிறப்பெடுக்க வாராத வீட்டுலகில் பெருமையோடு பேரானந்தத்தை
அடைவார்கள்.
திருச்சிற்றம்பலம்
வேணாட்டடிகள் அருளிச் செய்தது
9.
21 கோயில்-துச்சான பண் - புறநீர்மை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
துச்சான
செய்திடினும் பொறுப்பர்அன்றே ஆள் உகப்பார்
கைச்சாலும்
சிறுகதலி இலைவேம்பும் கறிகொள்வார்
எச்சார்வும்
இல்லாமை நீ அறிந்தும் எனதுபணி
நச்சாய்காண்
திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.
பொழிப்புரை : தில்லையில் திருக்கூத்து நிகழ்த்தும்
எம் பெருமானே! அடிமைகளை விரும்புபவர்கள், அவ்வடிமைகள் இழிவான செயல்களைச்
செய்தாலும் அவற்றைப் பொறுத்துக் கொள்வர். கசப்புச் சுவையை உடையவாயிருப்பினும்
வாழைக்கச்சல் களையும், வேப்பங்கொழுந்தினையும் கறி சமைத்தற்குப்
பயன்படுத்து வார்கள். அடியேனுக்கு உன்னைத் தவிர வேறு எந்தப்பற்றுக்கோடும் இல்லை
என்பதனை நீ அறிந்தும் என்னுடைய தொண்டினை விரும்பா திருப்பதன் காரணம்
புலப்படவில்லை.
பாடல்
எண் : 2
தம்பானை
சாய்ப் பற்றார் என்னும் முதுசொல்லும்
எம்போல்வார்க்கு
இல்லாமை என்அளவே அறிந்து ஒழிந்தேன்
வம்பானார்
பணி உகத்தி, வழிஅடியேன் தொழில் இறையும்
நம்பாய் காண், திருத்தில்லை
நடம்பயிலும் நம்பானே.
பொழிப்புரை : திருத்தில்லையில் நடம்பயிலும் நம்பானே!
ஒருவரும் தம்முடைய பானையைச் சாய்த்து நீரைப் பிடிக்க மாட்டார்கள் என்னும்
பழமொழியும் அடியேனைப் போன்றவர் களுக்குப் பொருந்தாதிருத்தலை என்னைப்பொறுத்த
வரையில் தெரிந்து கொண்டுவிட்டேன். புதியராக வந்த அடியவர்களின் தொண் டினை
விரும்பும் நீ வழிவழியாக வந்த அடியேனுடைய தொண் டினைச் சிறிதும்
விரும்பாதிருக்கிறாயே.
பாடல்
எண் : 3
பொசியாதோ
கீழ்க்கொம்பு நிறைகுளம்என்றதுபோலத்
திசைநோக்கிப்
பேழ்கணித்துச் சிவபெருமான் ஓஎனினும்
இசையானால்
என்திறத்தும், எனையுடையாள் உரையாடாள்,
நசையானேன்
திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.
பொழிப்புரை : திருத்தில்லையில் நடம்பயிலும் நம்பான், நீர்
நிறைந்த குளத்தின் அருகிலே பள்ளத்தில் உள்ள சிறுமரத்துக்கு அக்குளத்தின் நீர்
கசிந்து பாயாதோ என்று சொல்லப்படும் பழ மொழிக்கு இணங்க அவன் வரும் திசைகளைப்
பார்த்து மனம் வருந்திச் `சிவபெருமானே! அடியேனுக்கு அருள் செய்ய
வாரா திருத்தல் முறையோ!` என்று முறையிட்டாலும், அந்த
எம்பெருமான் என்பக்கம் வர உள்ளம் கொள்வானல்லன். அடியேனை அடிமையாக உடைய உமாதேவியும்
எம்பெருமானை அடியேன் கண்முன் வருமாறு பரிந்துரை கூறுகின்றாள் அல்லள். அவனைக்காண
ஆசைப்படும் அடியேன் யாது செய்வேன்?
பாடல்
எண் : 4
ஆயாத
சமயங்கள் அவரவர்கள் முன்புஎன்னை
நோயோடு
பிணிநலிய இருக்கின்ற அதனாலே
பேயாஇத்
தொழும்பனைத்தம் பிரான்இகழும் என்பித்தாய்
நாயேனைத்
திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.
பொழிப்புரை : திருத்தில்லையில் நடம்பயிலும் நம்பானே!
ஆராய்ச்சியில்லாத புறச்சமயங்களைப் பின்பற்றும் மக்களுக்கு முன்னே அடியேனை
மனக்கவலையும் உடற்பிணியும் வருத்துமாறு அடியேன் இருக்கின்ற காரணத்தால், `இந்த
அடியவனைப் பேய் என்று கருதி இவனுடைய ஆண்டானும் இகழ்ந்து புறக்கணித்து விட்டான்` என்று
நாய் போன்ற அடியேனை அவர்கள் எள்ளி உரைக்குமாறு செய்துவிட்டாய்.
பாடல்
எண் : 5
நின்றுநினைந்து
இருந்துகிடந்து எழுந்துதொழும் தொழும்பனேன்
ஒன்றிஒரு
கால்நினையாது இருந்தாலும் இருக்கவொட்டாய்,
கன்றுபிரி
கற்றாப்போல் கதறுவித்தி, வரவுநில்லாய்,
நன்றுஇதுவோ
திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.
பொழிப்புரை : திருத்தில்லையில் நடம்பயிலும் நம்பானே!
நின்ற இடத்தும் அமர்ந்த இடத்தும் கிடந்த இடத்தும் நினைந்து, எழுந்த
விடத்துத் தொழுகின்ற அடியவனாகிய நான், மனம் பொருந்தி ஒரு நேரத்தில் உன்னை விருப்புற்று
நினைக்காமல் இருந்தாலும் நீ அவ்வாறு இருக்கவிடாமல் கன்றைப் பிரிந்த தாய்ப்பசுவைப்
போலக் கதறச் செய்கின்றாயே ஒழிய நீ என் எதிரில் வந்து நிற்கின்றாய் அல்லை. இவ்வாறு
நீ செய்யும் இச்செயல் உனக்கு ஏற்புடைய நல்ல செயல் ஆகுமா?
பாடல்
எண் : 6
படுமதமும்
இடவயிறும் உடையகளிறு உடையபிரான்
அடிஅறிய
உணர்த்துவதும் அகத்தியனுக்கு ஓத்துஅன்றே
இடுவதுபுல்
ஓர்எருதுக்கு, ஒன்றினுக்கு வையிடுதல்
நடுஇதுவோ
திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.
பொழிப்புரை : திருத்தில்லையில் நடம்பயிலும் நம்பானே!
ஒழுகுகின்ற மத நீரையும் பானை போன்ற வயிற்றினையும் உடைய யானை முகனாகிய விநாயகனை
மகனாக உடைய தலைவனே! உன் திருவருளை உணர்தற்பொருட்டு அகத்திய முனிவருக்கு ஆகமத்தை
உபதேசித்தாய். அகத்தியருக்கு மேம்பட்ட நிலையை அருளி, அடியேனுக்கு உலகியலை அருளிய இச்செயல்
இரண்டு எருதுகள் உள்ள இடத்திலே ஓர் எருதுக்குப் புல்லை வழங்கி மற்றொன்றினுக்கு
வைக் கோலை வழங்குவதனை ஒக்கும் செயலாகும். இஃது உனக்கு எல்லோரிடமும் நடுவு நிலையோடு நடந்துகொள்ளும்
பண்பு ஆகுமா?
பாடல்
எண் : 7
மண்ணோடு
விண்ணளவும் மனிதரொடு வானவர்க்கும்
கண்ஆவாய், கண்ஆகாது
ஒழிதலும்நான் மிகக்கலங்கி
அண்ணாஓ
என்றுஅண்ணாந்து அலமந்து விளித்தாலும்
நண்ணாயால்
திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.
பொழிப்புரை : திருத்தில்லையில் நடம்பயிலும் நம்பானே!
மண்ணுலகிலிருந்து விண்ணுலகம் வரையிலும் மனிதர்களோடு தேவர்கள் வரையிலும்
எல்லோருக்கும் நீ பற்றுக்கோடு ஆவாய். அவ்வாறாகவும் அடியேனுக்கு மாத்திரம்
பற்றுக்கோடு ஆகாமல் அடியேனைப் புறக்கணித்தலால் அடியேன் மிகவும் கலங்கி, `பெருமை
பொருந்திய தலைவனே` என்று மேல்நோக்கி மனம் சுழன்று அழைத்
தாலும் நீ அடியேனை நெருங்கி நிற்கின்றாய் அல்லை; இதன் காரணம் தான் யாதோ?
பாடல்
எண் : 8
வாடாவாய்
நாப்பிதற்றி உனைநினைந்து நெஞ்சுஉருகி
வீடாம்செய்
குற்றேவல் எற்றேமற்று இதுபொய்யில்
கூடாமே
கைவந்து குறுகுமாறு யான்உன்னை
நாடாயால்
திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.
பொழிப்புரை : திருத்தில்லையில் நடம்பயிலும் நம்பானே!
வாட்ட முற்று, வாயின்கண் உள்ள நாவினால் அடைவுகேடாகப் பல கூறி, உன்னை
விருப்புற்று நினைத்து, மனம் உருகும் இதனைத் தவிர, வீடு
பேறு அடைதலுக்கு ஏதுவாகிய சிறுபணிவிடை வேறுயாது உளது? இக்குற்றேவல் பொய்யின்கண் பொருந்திப்
பழுதாகாவாறு யான் உன்பக்கம் வந்து உன்னைக் கூடுமாறு நீ திருவுள்ளம் பற்றுவாயாக.
பாடல்
எண் : 9
வாளாமால்
அயன்வீழ்ந்து காண்பரிய மாண்புஇதனைத்
தோள்ஆரக்
கையாரத் துணையாரத் தொழுதாலும்
ஆளோநீ
உடையதுவும் அடியேன்உன் தாள்சேரும்
நாள்ஏதோ
திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.
பொழிப்புரை : திருத்தில்லையில் நடம்பயிலும் நம்பானே!
வழிபடுதலைச் செய்யாது திருமாலும் பிரமனும் விரும்பிக் காண் பதற்கு அரிய உன்
திருமேனியைக் கைகளை உச்சிமேல் குவித்துச் சேர்த்துத் திருவடித்துணைக்கண் நிறைவு
பெறும்படி தொழுதாலும் நீ அடியேனை அடிமையாக உடைய செயலும் உடையையோ? அடியேன்
உன் திருவடிகளைச் சேரும் நாள் என்று வருமோ?
பாடல்
எண் : 10
பாவார்ந்த
தமிழ்மாலை பத்தர்அடித் தொண்டன்எடுத்து
ஒவாதே
அழைக்கின்றான் என்றுஅருளின் நன்று,மிகத்
தேவே
தென் திருத்தில்லைக் கூத்தாடீ, நாயடியேன்
சாவாயும்
நினைக்காண்டல் இனிஉனக்குத் தடுப்புஅரிதே.
பொழிப்புரை : என் தேவனே! அழகிய புனிதத் தலமாகிய
தில்லையில் திருக்கூத்து நிகழ்த்துபவனே! அடியார்களுடைய திருவடித் தொண்டன் பாட்டு
வடிவமாக அமைந்த தமிழ்மாலையை எடுத்துக் கூறி விடாமல் அழைத்துக் கொண்டிருக்கிறான்
என்பதனைத் திருவுளம்பற்றி இப்பொழுதே அருள்செய்தால் மிக நல்லது. நாய் போன்ற இழிந்த
அடியவனாகிய நான் சாகின்ற நேரத்திலாவது உன்னைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டுவதனை
இனி உன்னாலும் தடுத்தல் இயலாது.
திருச்சிற்றம்பலம்
திருவாலியமுதனார் அருளிச் செய்தது
9.22
கோயில்-மையல் மாதொரு பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
மையல்
மாதுஒரு கூறன், மால்விடை
ஏறி, மான்மறி ஏந்தி யதடம்
கையன், கார்புரை
யுங்கறைக்
கண்டன், கனன் மழுவான்,
ஐயன், ஆரழல்
ஆடு வான்,அணி
நீர்வயல் தில்லை அம்பலத்தான்
செய்யபாதம்
வந்துஎன் சிந்தை
உள் இடம் கொண் டனவே.
பொழிப்புரை : அழகிய நீர்வளம் உடைய வயல்கள் சூழ்ந்த
தில்லைத் திருப்பதியின் பொன்னம்பலத்தில் உள்ளவனாய், தன் மாட்டுக் காமமயக்கம் கொண்ட பார்வதி
பாகனாய், திருமாலாகிய
காளையை இவர்பவனாய், மான்குட்டியை ஏந்திய நீண்ட கையனாய், கார்மேகத்தை
ஒத்த விடக்கறை பொருந்திய கழுத்தினனாய், கனலை யும் மழுவையும் ஏந்துகின்றவனாய், நிறைந்த
தீயிடைக் கூத்தாடு பவனாய் உள்ள தலைவனுடைய சிவந்த பாதங்கள் என் மனத்தின்கண் வந்துபொருந்தி
அதனைத் தம் இருப்பிடமாகக் கொண்டுள்ளன.
பாடல்
எண் : 2
சலம்பொன்தாமரை
தாழ்ந்து எழுந்ததட
மும்,தடம்புனல் வாய்மலர் தழீஇ
அலம்பி
வண்டுஅறையும் அணி
யார்தில்லைஅம்பலவன்
புலம்பி
வானவர் தான வர்புகழ்ந்து
ஏத்த ஆடுபொற் கூத்தனார்கழல்
சிலம்பு
கிங்கிணிஎன் சிந்தை
உள் இடம் கொண்டனவே.
பொழிப்புரை : நீரின்கண் பொலிவை உடைய தாமரைக் கொடிகள்
ஆழமாக வேர்ஊன்றி வளர்ந்த குளங்களை உடையதாய், அந்த மிக்க நீரின்கண் உள்ள பூக்களைச்
சேர்ந்து அவற்றைக் கிண்டி வண்டுகள் ஒலிக்கப்பெறுவதாய், அழகுநிறைந்த தில்லைப்பதியிலுள்ள
பொன்னம்பலத்தில் உள்ளவனாய், முறையிட்டுத் தேவரும் அசுரரும் தன்னைப்
புகழ்ந்து துதிக்கக் கூத்து நிகழ்த்தும் பொன்போலச் சிறந்த கூத்தப்பிரானுடைய
திருவடிகளில் ஒலிக்கின்ற கிண்கிணிகள் அடியே னுடைய சிந்தையுள் தம் இருப்பிடத்தை
அமைத்துக் கொண்டன.
பாடல்
எண் : 3
குருண்ட
வார்குழல் கோதை மார்குயில்
போல்மி ழற்றிய கோல மாளிகை
திரண்ட
தில்லைதன்னுள் திரு
மல்குசிற் றம்பலவன்
மருண்டு
மாமலை யான்மகள்தொழ
ஆடுங் கூத்தன் மணிபு ரைதரு
திரண்ட
வான்குறங்குஎன் சிந்தை
யுள்இடம் கொண்டனவே.
பொழிப்புரை : சுருண்ட நீண்ட கூந்தலை உடைய மகளிர்
குயில் போல இனிமையாக மழலைபேசும் அழகிய பேரில்லங்கள் மிகுதியாக உள்ள
தில்லைத்திருப்பதியில் செல்வம் நிறைந்த சிற்றம்பலத்தில் உள்ளவனாய், திகைத்து
நின்று இமவான் மகள் தொழுமாறு ஆடும் கூத்தப்பிரானுடைய செம்மணியை ஒத்த திரண்ட சிறந்த
துடைகள் அடியேன் சிந்தையுள் தம் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டன.
பாடல்
எண் : 4
போழ்ந்தி
யானை தன்னைப் பொருப்பன்
மகள்உமை அச்சம் கண்டவன்,
தாழ்ந்த
தண்புனல்சூழ் தட
மல்குசிற் றம்பலவன்,
சூழ்ந்த
பாய்புலித் தோல்மிசைத் தொடுத்து
வீக்கும் பொன்னூல் தன்னினொடு
தாழ்ந்த
கச்சுஅதுஅன்றே தமி
யேனைத் தளர்வித்ததே.
பொழிப்புரை : யானையின் தோலை உரித்துத் தன்னுடைய அச்
செயலினால் உமாதேவிக்கு ஏற்பட்ட அச்சத்தைப் பின்னர்க் கண்ட வனாய், ஆழ்ந்த
குளிர்ந்த நீரால் நிறைந்த குளங்கள் மிகுந்த தில்லைச் சிற்றம்பலத்திலுள்ள பெருமான்
அணிந்த அழகிய பூணநூலோடு, பரவிய புலித்தோல் மீது வளைத்துக்கட்டிய
இடைக்குப் பொருத்த மான கச்சு தன்னுணர்வு இல்லாத அடியேன் உள்ளத்தைத் தளரச் செய்தது.
பாடல்
எண் : 5
பந்த
பாசம் எலாம்அ ற,பசு
பாச நீக்கிய பன்மு னிவரோடு
அந்தணர்
வணங்கும் அணி
யார்தில்லை அம்பலவன்
செந்த
ழல்புரை மேனியும், திகழும்
திருவயிறும், வயிற்றினுள்
உந்தி
வான்சுழி,என் உள்ளத்
துள்இடம் கொண்டனவே.
பொழிப்புரை : செயற்கையாகிய மாயை, கன்மம்
என்பனவற்றை யும், இயற்கையாகிய ஆணவமலத்தையும் போக்கிய பல முனிவர் களோடு
அந்தணர்கள் வணங்கும் அழகுநிறைந்த தில்லைத்திருநகரில் அமைந்த பொன்னம்பலத்திலுள்ள
பெருமானுடைய சிவந்த நெருப்பை ஒத்த திருமேனியும், விளங்கும் திருவயிறும் அத்திரு
வயிற்றிலுள்ள கொப்பூழின் அழகிய சுழியும் அடியேனுடைய உள்ளத்துள் தம் இருப்பிடத்தை
அமைத்துக் கொண்டன.
பாடல்
எண் : 6
குதிரை
மாவொடு தேர்ப லகுவிந்து
ஈண்டுதில்லையுள் கொம்ப னாரொடு
மதுர
வாய்மொழி யார்மகிழ்ந்து
ஏத்துசிற் றம்பலவன்
அதிர
வார்கழல் வீசி நின்றுஅழ
காநடம் பயில் கூத்தன் மேல்திகழ்
உதர
பந்தனம்என் உள்ளத்
துள்இடம் கொண்டனவே.
பொழிப்புரை : குதிரைகள் யானைகள் என்ற இவற்றோடு
தேர்கள் பல சேர்ந்து நெருங்குகின்ற தில்லையம் பதியிலே பூங்கொம்புபோன்ற ஆடல்
மகளிரோடு இனிய இசைப் பாட்டைப் பாடுகின்றவர்கள் மகிழ்ந்து போற்றும் சிற்றம்பலத்தில்
உள்ளவனாய், நீண்ட கழல் ஒலிக்கக் கால்களை வீசி அழகாகக் கூத்து
நிகழ்த்துகின்ற கூத்தப்பிரான் திருமேனியின்மேல் விளங்கும் வயிற்றின் மேல்
கட்டப்படும் ஆபரணத்தின் பல சுற்றுக்கள் என் உள்ளத்தினுள் தமக்கு இருப் பிடத்தை
அமைத்துக் கொண்டன.
பாடல்
எண் : 7
படங்கொள்
பாம்புஅணை யானொ டுபிர
மன்,ப ரம்பர மா,அருள் என்று
தடங்கை
யால்தொழ வும்,தழல்
ஆடுசிற் றம்பலவன்
தடங்கை
நான்கும் அத்தோள்க ளும்,தட
மார்பினில் பூண்கள் மேற்றுஇசைவு
இடம்கொள்
கண்டம்அன்றே வினை
யேனை மெலிவித்தவே.
பொழிப்புரை : படம் எடுக்கின்ற திரு அனந்தாழ்வானைப்
பாயலாகக் கொண்ட திருமாலொடு பிரமன், `மேலோருக்கும் மேலாயவனே! எங்களுக்கு
அருள்புரிவாயாக` என்று நீண்ட கைகளால் தொழக் கையில் அனல்ஏந்தி ஆடும் சிற்றம்பலப்
பெருமானுடைய நீண்டகைகள் நான்கும் நான்கு திருத்தோள்களும்,
பரந்த மார்பில்
அணிந்த அணிகலன்களும், அவற்றின் மேலதாய்ப் பொருந்திய விடமுண்ட
கண்டமும் ஆகிய இவைகள் இவற்றைத் தரிசிக்கும் நல் வினையை உடைய அடியேனை உள்ளத்தை
உருக்கி மெலிவித்தன.
பாடல்
எண் : 8
செய்ய
கோடுடன் கமல மலர்சூழ்தரு
தில்லை மாமறை யோர்கள் தாந்தொழ
வையம்
உய்ய நின்று மகிழ்ந்து
ஆடுசிற் றம்பலவன்
செய்ய
வாயின் முறுவலும், திகழுந்திருக்
காதும், காதினின் மாத்தி ரைகளோடு
ஐய
தோடும் அன்றே அடி
யேனை ஆட் கொண்டனவே.
பொழிப்புரை : சிறந்த சங்குகளோடு தாமரை மலர்கள்
ஊரைச்சுற்றிக் காணப்படும் தில்லைத்திருப்பதியில் மேம்பட்ட வேதியர்கள் தொழவும், உலகம்
தீமைநீங்கி நன்மைபெறவும் நிலையாக மகிழ்ந்து கூத்து நிகழ்த்தும் சிற்றம்பலப்
பெருமானுடைய சிவந்த வாயிலுள்ள பற்களும், விளங்கும் அழகிய காதுகளும், காதுகளில்
அணிந்த குழைகளும் தோடும் தம் பேரழகால் அடியேனை அடிமையாகக் கொண்டன.
பாடல்
எண் : 9
செற்று
வன்புரம் தீயெழச்சிலை
கோலி ஆரழல் ஊட்டினான், அவன்
எற்றி
மாமணிகள் எறி
நீர்த்தில்லை அம்பலவன்,
மற்றை
நாட்டம் இரண்டொ டுமல
ரும்திரு முகமும், முகத்தினுள்
நெற்றி
நாட்டம்அன்றே நெஞ்சு
ளேதிளைக் கின்றனவே.
பொழிப்புரை : சினங்கொண்டு கொடியோருடைய மும்மதில்களும்
தீ எழுமாறு வில்லை வளைத்து அவற்றை அரிய நெருப்புக்கு உணவாக்கினவனாய், சிறந்தமணிகளை
மோதிக் கரைசேர்க்கும் நீர்வளம் மிக்க தில்லை அம்பலத்தில் உள்ள பெருமானுடைய மற்ற
இருகண்களோடு விளங்கும் திருமுகமும், முகத்தில் நெற்றி யிலுள்ள கண்ணும்
அல்லவோ அடியேனுடைய நெஞ்சினுள்ளே பதிந்துள்ளன.
பாடல்
எண் : 10
தொறுக்கள்
வான்கம லம்ம லர்உழக்
கக்க ரும்புநற் சாறு பாய்தர,
மறுக்க
மாய்க்கயல்கள் மடை
பாய்தில்லை அம்பலவன்
முறுக்கு
வார்சிகை தன்னொடு முகிழ்த்த
அவ்வ கத்துமொட் டோடு மத்தமும்
பிறைக்கொள்
சென்னிஅன்றே பிரியாது
என்னுள் நின்றனவே.
பொழிப்புரை : பசுக்கூட்டங்கள் வயல்களில் களையாக
முளைத்த தாமரைக் கொடிகளின் பூக்களை மேயவும் அவற்றின் கால்களில் மிதிபட்டுக்
கருப்பஞ்சாறு வயல்களில் பாயவும், தாக்குண்ட கயல் மீன்கள் வருந்தி
நீர்மடையை நோக்கிப் பாயும் தில்லையம்பதியிலுள்ள அம்பலப்பெருமானுடைய முறுக்கிய
நீண்ட சடையும், அச்சடையில் சிறிது மலர்ந்த மொட்டோடு கூடிய ஊமத்தம் பூக்களும்
பிறைச் சந்திரனும் உடைய திருமுடிகள் என்றும் நீங்காது அடியேனுடைய உள்ளத்தில் நிலை
பெற்றுள்ளன. சிவபெருமான் ஐந்தலை உயரிய அணங்குடை அருந்திறல் மைந்துடை ஒருவன் ஆவான்.
பாடல்
எண் : 11
தூவி
நீரொடு பூஅவைதொழுது
ஏத்து கையினர் ஆகி மிக்கதோர்
ஆவி
யுள்நிறுத்தி அமர்ந்து
ஊறிய அன்பினராய்த்
தேவர்தாம்
தொழ ஆடிய தில்லைக்
கூத்த னைத்திரு வாலி சொல்இவை
மேவ
வல்லவர்கள் விடை
யான் அடி மேவுவரே.
பொழிப்புரை : நீரினால் திருமுழுக்காட்டி மலர்களைத்
தூவித் தொழுது கும்பிடும் கைகளை உடையவர்களாய் மேம்பட்ட பிராண வாயுவை உள்ளே அடக்கி
விரும்பச் சுரந்த அன்புடையவர்களாய்த் தேவர்கள் தாம் வணங்குமாறு திருக்கூத்து
நிகழ்த்திய தில்லைக் கூத்தப்பிரானைத் திருஆலி அமுதன் சொல்லிய சொற்களை விரும்பிப்
பாட வல்லவர்கள் காளை வாகன இறைவனாகிய சிவபெரு மானுடைய திருவடிகளை மறுமையில்
அடைவார்கள்.
குறிப்புரை
:
திருச்சிற்றம்பலம்
திருவாலியமுதனார் அருளிச் செய்தது
9. 23
கோயில்-பவளமால் வரை பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
பவளமால்
வரையைப் பனிபடர்ந்து அனையதுஓர்
படர்ஒளி தருதிரு நீறும்,
குவளை
மாமலர்க் கண்ணியும், கொன்றையும்,
துன்றுபொற் குழல்திருச் சடையும்,
திவள
மாளிகை சூழ்தரு தில்லையுள்
திருநடம் புரிகின்ற
தவள
வண்ணனை நினைதொறும் என்மனம்
தழல்மெழுகு ஒக்கின்றதே.
பொழிப்புரை : பவளத்தால் ஆகிய பெரிய மலையைப் பனிபரவி
மூடினாற்போல வெண்ளொளி வீசும் திருநீற்றினைப் பூசி, பெரிய குவளைமலர்களாலாகிய முடிமாலையும்
கொன்றைப் பூவும் பொருந்திய பொன்னிறமுடைய சுருண்ட அழகிய சடையை உடைய வனாய், ஒளிவீசும்
மாளிகைகள் சூழ்ந்த தில்லைநகரிலே திருக்கூத்து நிகழ்த்துகின்ற வெண்ணிறம் பொருந்திய
சிவபெருமானை நினைக்குந் தோறும் அடியேனுடைய உள்ளம் நெருப்பின் அருகிலிருக்கும்
மெழுகுபோல உருகுகின்றது.
பாடல்
எண் : 2
ஒக்க
ஓட்டந்த அந்தியும் மதியமும்
அலைகடல் ஒலியோடு
நெக்கு
வீழ்தரு நெஞ்சினைப் பாய்தலும்
நிறைஅழிந்து இருப்பேனைச்
செக்கர்
மாளிகை சூழ்தரு தில்லையுள்
திருநடம் வகையாலே
பக்கம்
ஓட்டந்த மன்மதன் மலர்க்கணை
படுந்தொறும் அலந்தேனே.
பொழிப்புரை : செந்நிற ஒளியைஉடைய மாளிகைகள் சூழ்ந்த
தில்லை நகரில் எம்பெருமான் திருக்கூத்தைத் தரிசித்த காரணத்தால், ஒருசேர
ஓடிவந்த மாலைநேரமும், சந்திரனும் தண்ணீர் அலைகின்ற கடலின்
ஒலியோடு சேர்ந்து உருகி ஓடுகின்ற அடியேனுடைய நெஞ் சினைத் தாக்கிய அளவில் அடக்கம்
என்ற பண்பு அழிய இருக்கும் அடியேன் பக்கல் ஓடிவந்த மன்மதனுடைய பூக்களாகிய அம்புகள்
அடியேன் மேல் படுந்தொறும் அடியேன் வருந்தினேன்.
பாடல்
எண் : 3
அலந்து
போயினேன் அம்பலக் கூத்தனே
அணிதில்லை நகராளீ
சிலந்தி
யைஅரசு ஆள்கஎன்று அருள்செய்த
தேவதே வீசனே,
உலர்ந்த
மார்க்கண்டிக் காகிஅக் காலனை
உயிர்செக உதைகொண்ட
மலர்ந்த
பாதங்கள் வனமுலை மேல்ஒற்ற
வந்துஅருள் செய்யாயே.
பொழிப்புரை : சபையில் நடனமாடும் பெருமானே! அழகிய
தில்லைநகரை ஆள்பவனே! திருத்தொண்டுசெய்த சிலந்தியை அதன்மறுபிறப்பில் அரச
குடும்பத்தில் தோன்றி நாட்டை ஆளுமாறு அருள்செய்த, பெருந்தேவர்களையும் அடக்கி ஆள்பவனே!
பொலிவு இழந்த மார்க்கண்டேயன் பொருட்டு அவன் உயிரைப்பறிக்க வந்த அந்தக் காலனை
உயிர்நீங்குமாறு உதைத்த உன் திருவடிகள், வருந்திக் கிடக்கும் அடியேனுடைய
வருத்தம் நீங்குமாறு அடியேனுடைய அழகிய முலைகளின் மீது அழுந்தப் படியுமாறு
அருள்செய்வாயாக.
பாடல்
எண் : 4
அருள்செய்து
ஆடுநல் அம்பலக் கூத்தனே,
அணிதில்லை நகராளீ
மருள்செய்து
என்தனை வனமுலை பொன்பயப்
பிப்பது வழக்காமோ?
திரளும்
நீண்மணிக் கங்கையைத் திருச்சடை
சேர்த்திஅச் செய்யாளுக்கு
உருவம்
பாகமும் ஈந்துநல் அந்தியை
ஒண்ணுதல் வைத்தோனே.
பொழிப்புரை : அடியவர்கள் திறத்து அருள் செய்து
மேம்பட்ட பொன்னம்பலத்தில் கூத்துநிகழ்த்தும் கூத்தப்பிரானே! அழகிய தில்லை நகரை
ஆள்பவனே! அடியேனுக்குக் காமமயக்கத்தை உண்டாக்கி அடியேனுடைய அழகிய முலைகளைப்
பசலைநிறம் பாயச் செய்வது நீதியான செயலாகுமா? நீர் திரண்டு ஓடிவரும், நீண்ட
மணிகளை அடித்துவரும் கங்கையைத் திருச்சடையில் வைத்துக்கொண்டு அச் செயலைப்
பொறுத்துக்கொண்ட பெருங்கற்பினளாகிய பார்வதிக்கு உன்உடம்பில் ஒருபாகத்தை வழங்கி, பெரிய
அழகிய தீயினை நெற்றியில் வைத்த பெருமானே! நின் செயலை நினைத்துப் பார்.
பாடல்
எண் : 5
வைத்த
பாதங்கள் மாலவன் காண்கிலன்
மலரவன் முடிதேடி
எய்த்து
வந்துஇழிந்து இன்னமும் துதிக்கின்றார்
எழில்மறை அவற்றாலே,
செய்த்த
லைக்கம லம்மலர்ந்து ஓங்கிய
தில்லைஅம் பலத்தானைப்
பத்தியால்
சென்று கண்டிட என்மனம்
பதைபதைப்பு ஒழியாதே.
பொழிப்புரை : சிவபெருமான் ஏழுலகங்களுக்கும் கீழே
ஊடுருவு மாறு வைத்த திருவடிகளைத் திருமால் காணஇயலாதவனாயினான். பிரமன் மேல்
ஏழுஉலகங்களையும் கடந்து ஊடுருவிய திருமுடியைக் காணஇயலாமல் மனம் இளைக்க, இருவரும்
நிலஉலகிற்குவந்து அழகிய வேத வாக்கியங்களால் இப்பொழுதும் உன்னைப் புகழ்ந்து
கொண்டிருக்கிறார்கள். வயல்களிலே தாமரைகள் களைகளாக வளர்ந்து ஓங்கும் தில்லையிலே
அம்பலத்தில் கூத்து நிகழ்த்தும் உன்னைப் பத்தி செலுத்தி அடைந்து காண்பதற்கு, திருமால்
பிரமன் என்பவர்களோடு ஒப்பிடின் மிகத்தாழ்ந்த அடியேனுடைய உள்ளம் விரைதலை நீங்காது
உள்ளது. இஃது என்ன வியப்போ!
பாடல்
எண் : 6
தேய்ந்து
மெய்வெளுத்து, அகம்வளைந்து, அரவினை
அஞ்சித்தான் இருந்தேயும்
காய்ந்து
வந்துவந்து என்தனை வலிசெய்து
கதிர்நிலா எரிதூவும்,
ஆய்ந்த
நான்மறை அந்தணர் தில்லையுள்
அம்பலத் தரன் ஆடல்
வாய்ந்த
மாமலர்ப் பாதங்கள் காண்பதோர்
மனத்தினை உடையேற்கே.
பொழிப்புரை : நான்கு வேதங்களையும் ஆராய்ந்த சிறந்த
அந்தணர்கள் வாழும் தில்லைநகரில் உள்ள பொன்மன்றத்தில் எம் பெருமானுடைய
கூத்துநிகழ்த்தும் மேம்பட்ட மலர்களைப் போன்ற திருவடிகளைக் காணும் எண்ணமுடைய
அடியேன் மீது, உடல் தேய்ந்து அச்சத்தால் வெளுத்து உட்புறம் வளைந்து, பாம்பினை
அஞ்சித் தான் உன்சடையிலே இருக்கும் நிலையிலும், அடியேனை வெகுண்டு பலகாலும் என்னை அணுகி
என்னைத்துன்புறுத்தி ஒளிக் கதிர்களை உடைய நிலா அடியேன்மீது நெருப்பைத் தூவுகிறது.
பாடல் எண் : 7
உடையும்
பாய்புலித் தோலும்நல் அரவமும்,
உண்பதும் பலிதேர்ந்து,
விடையது
ஊர்வதும், மேவிடங் கொடுவரை,
ஆகிலும், என்னெஞ்சம்
மடைகொள்
வாளைகள் குதிகொளும் வயல்தில்லை
அம்பலத்து அனல்ஆடும்
உடைய
கோவினை அன்றி,மற்று ஆரையும்
உள்ளுவது அறியேனே.
பொழிப்புரை : நீர் மடைகளிலே வந்துசேர்ந்த வாளை
மீன்கள் குதித்து அடையும் வயல்களை உடைய தில்லைநகரின் பொன்னம் பலத்தில் தீயைக்
கையில்ஏந்திக் கூத்துநிகழ்த்தும், அடியேனை அடிமையாக உடைய எம்பெருமான்
உடையாகக்கொள்ளுவன பாய் கின்ற புலியின் தோலும் பெரிய பாம்புமே ஆகும். உண்பதும்
பிச்சை எடுத்துக் கொள்ளும் உணவே. ஏறிச் செலுத்துவதும் காளையே. தங்கும் இடமும்
கொடிய கயிலாயமலையே. இவ்வளவு குறைபாடுகள் அப்பெருமானிடத்தில் இருந்தாலும் அவனையன்றி
வேறு எந்தத் தெய்வத்தையும் பரம்பொருளாக அடியேன் நினைத்து அறியேன்.
பாடல்
எண் : 8
அறிவும்
மிக்கநல் நாணமும் நிறைமையும்
ஆசையும் இங்குஉள்ள
உறவும்
பெற்றநல் தாயொடு தந்தையும்
உடன்பிறந் தவரோடும்
பிரிய
விட்டுஉனை அடைந்தனன், ஏன்றுகொள்,
பெரும்பற்றப் புலியூரின்
மறைகள்
நான்குங்கொண்டு அந்தணர் ஏத்தநன்
மாநடம் மகிழ்வானே.
பொழிப்புரை : பெரும்பற்றப்புலியூரில் நான்கு
வேதங்களின் வாக்கியங்களையும் கொண்டு அந்தணர்கள் புகழ மேம்பட்ட சிறந்த கூத்தினை
மகிழ்ந்து ஆடும் பெருமானே! அறிவும், மிக மேம்பட்ட நாணமும் அடக்கமும், உலகப்பொருளிடத்துள்ள
ஆசையும், இவ்
வுலகில் உள்ள உறவினர்களும் பெற்றதாயும், தந்தையும், உடன் பிறந்தவர்களும் என்னைப்பிரியுமாறு
அப்பண்புகளையும் அவர்களை யும் விடுத்து உன்னைப் பற்றுக்கோடாக அடைந்துள்ள அடியேனை
ஏற்றுக் கொள்வாயாக.
பாடல்
எண் : 9
வான
நாடுஉடை மைந்தனே ஓஎன்பன்,
வந்துஅருளாய் என்பன்,
பால்நெய்
ஐந்துஉடன் ஆடிய படர்சடைப்
பால்வண்ண னேஎன்பன்,
தேன்
அமர்பொழில் சூழ்தரு தில்லையுள்
திருநடம் புரிகின்ற
ஏன
மாமணிப் பூண் அணி மார்பனே,
எனக்குஅருள் புரியாயே.
பொழிப்புரை : வண்டுகள் விரும்பித் தங்கியிருக்கின்ற
சோலை களால் சூழப்பட்ட தில்லைநகரில் திருநடம் புரிகின்றவனாய்ப் பன்றிக் கொம்பாகிய
அழகிய அணிகலனை அணிந்த மார்பை உடைய பெருமானே! மேல்உலகாகிய சிவலோகம் உடையவனே! வந்து
அருள் செய்வாயாக என்று முறையிடுகின்றேன். பால், நெய் முதலிய பஞ்சகவ்வியத்தை அபிடேகம்
செய்து கொண்ட பரந்த சடையினை உடைய பால் போன்ற வெள்ளிய நிறத்தினனே! ஓ என்று முறையிடு
கின்றேன். அடியேனுக்கு அருள்புரிவாயாக.
பாடல்
எண் : 10
புரியும்
பொன்மதில் சூழ்தரு தில்லையுள்
பூசுரர் பலர்போற்ற
எரிஅது
ஆடும்எம் ஈசனைக் காதலித்து
இனைபவள் மொழியாக
வரைசெய்
மாமதில் மயிலையர் மன்னவன்
மறைவல திருவாலி
பரவல்
பத்திவை வல்லவர் பரமனது
அடிஇணை பணிவாரே.
பொழிப்புரை : எல்லோராலும் விரும்பப்படும் அழகிய
மதில்களால் சூழப்பட்ட தில்லைநகரிலே, நிலத்தேவர் எனப்படும் அந்தணர்கள் பலரும்
துதிக்குமாறு, எரியைக் கையில் சுமந்து கூத்து நிகழ்த்தும் எம்பெருமானை
ஆசைப்பட்டு அவன் அருள் முழுமையாகக் கிட்டாமையால் வருந்தும் தலைவிகூறும் மொழிகளாக, மலையைப்
போன்ற பெரிய மதில்களைஉடைய திருமயிலாடுதுறை என்ற ஊருக்குத்தலைவனான வேதங்களில் வல்ல
திரு ஆலிஅமுதன் முன்நின்று போற்றிய இப்பத்துப்பாடல்களையும் கற்றுவல்லவர்
சிவபெருமானுடைய திருவடிகளின் கீழ்ச் சிவலோகத்தில் அவனைப் பணிந்து கொண்டு
வாழ்வார்கள்.
திருச்சிற்றம்பலம்
திருவாலியமுதனார் அருளிச் செய்தது
9. 24
கோயில் - அல்லாய் பகலாய் பண்
- இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
அல்லாய்ப்
பகலாய் அருவாய் உருவாய்
ஆரா அமுதமாய்க்
கல்லால்
நிழலாய் கயிலை மலையாய்
காண அருள் என்று
பல்லா
யிரம்பேர் பதஞ்ச லிகள்
பரவ வெளிப்பட்டுச்
செல்வாய்
மதிலின் தில்லைக்கு அருளித்
தேவன் ஆடுமே.
பொழிப்புரை : இரவாகவும், பகலாகவும், உருவம் அற்ற பொருளாகவும், உருவம்
உடைய பொருளாகவும், மனநிறைவைத் தாராத அமுதமாகவும், கல்லாலமரத்தின்
நிழலில் உள்ளவனாகவும், அமையும் கயிலைமலைத் தலைவனே! `உன்
திருவுருவைக் காணும் பேற்றை எங்களுக்கு அருளுவாயாக` என்று பதஞ்சலி முனிவர் போன்ற
பல்லாயிரவர் சான்றோர்கள் முன் நின்று வேண்ட, அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி
வெளிப்பட்டு மேகமண்டலம் வரை உயர்ந்த மதில்களை உடைய தில்லைக்கண் உள்ள
அடியார்களுக்கு அருள் செய்து எம்பெருமான் கூத்து நிகழ்த்துகிறான்.
பாடல்
எண் : 2
அன்ன
நடையார் அமுத மொழியார்
அவர்கள் பயில்தில்லைத்
தென்னன்
தமிழும் இசையும் கலந்த
சிற்றம் பலந்தன்உள்
பொன்னும்
மணியும் நிரந்த தலத்துப்
புலித்தோல் பியற்குஇட்டு
மின்னின்
இடையாள் உமையாள் காண
விகிர்தன் ஆடுமே.
பொழிப்புரை : அன்னப்பறவை போன்ற நடையினையும் அமுதம்
போன்ற இனிய சொற்களையும் உடைய இளமகளிர் வாழும் தில்லைப் பதியில், பாண்டியன்
வளர்த்த தமிழும் இசையும் கலந்து முழங்கும் சிற்றம்பலத்தில், பொன்னும்
மணிகளும் பரந்து பொருந்திய இடத்திலே புலித்தோலைத் தோளில் அணிந்து, மின்னலைப்
போன்ற இடையை உடைய உமாதேவிகாண மற்றவரினும் வேறுபட்ட வனாகிய சிவபெருமான் கூத்து
நிகழ்த்துகிறான்.
பாடல்
எண் : 3
இளமென்
முலையார் எழில்மைந் தரொடும்
ஏர்ஆர் அமளிமேல்
திளையும்
மாடத் திருவார் தில்லைச்
சிற்றம் பலந்தன்னுள்
வளர்பொன்
மலையுள் வயிர மலைபோல்
வலக்கை கவித்துநின்று
அளவில்
பெருமை அமரர் போற்ற
அழகன் ஆடுமே.
பொழிப்புரை : மென்மையான நகில்களை உடைய இளைய மகளிர்
அழகிய ஆடவரோடு அழகுநிறைந்த படுக்கையில் இன்பத்தில் மூழ்கும் மேல்மாடிகளைஉடைய
செல்வம் நிறைந்த தில்லைநகரத்துச் சிற்றம்பலத்திலே உயர்ந்த பொன்மலையின் உள்ளே
அமைந்த வயிரமலை போல வலக்கையை வளைத்துக்கொண்டு நின்று, எல்லையற்ற பெருமையை உடைய தேவர்களும்
வழிபடுமாறு எம்பெருமான் கூத்து நிகழ்த்துகிறான்.
பாடல்
எண் : 4
சந்தும்
அகிலும் தழைப்பீ லிகளும்
சாதி பலவுங்கொண்டு
உந்தி
இழியும் நிவவின் கரைமேல்
உயர்ந்த மதில்தில்லைச்
சிந்திப்பு
அரிய தெய்வப் பதியுள்
சிற்றம் பலந்தன்னுள்
நந்தி
முழவம் கொட்ட நட்டம்
நாதன் ஆடுமே.
பொழிப்புரை : சந்தனமரம், அகில்மரம், சாதிக்காய்மரம்,
தழை போன்ற மயில்தோகை
என்ற பலவற்றையும் அகப்படக்கொண்டு தள்ளி ஓடுகின்ற நிவா என்ற ஆற்றின் கரையில் அமைந்த
உயர்ந்த மதில்களைஉடைய தில்லை என்ற பெயருடைய, நினைக்கவும் அரிய தெய்வத்
திருத்தலத்துச் சிற்றம்பலத்தில் திருநந்திதேவர் முழவு ஒலிக்கச் சிவபெருமான்
திருக்கூத்து நிகழ்த்துகிறான்.
பாடல்
எண் : 5
ஓமப்
புகையும் அகிலின் புகையும்
உயர்ந்து முகில்தோயத்
தீமெய்த்
தொழிலார் மறையோர் மல்கு
சிற்றம் பலந்தன்னுள்
வாமத்து
எழிலார் எடுத்த பாதம்
மழலைச் சிலம்பார்க்கத்
தீமெய்ச்
சடைமேல் திங்கள் சூடித்
தேவன் ஆடுமே.
பொழிப்புரை : வேள்விப்புகையும், அகிலின்புகையும்
மேல் நோக்கிச் சென்று மேகத்தோடு பொருந்துமாறு தீஓம்பும் தொழிலை உடைய அந்தணர்கள்
மிக்கிருக்கும் சிற்றம்பலத்தில், தூக்கிய அழகிய இடத்திருவடியில் இனிய
ஓசையை உடைய சிலம்பு ஒலிக்கத் தீயைப் போன்ற சிவந்த நிறத்தை உடைய சடையின் மேல்
பிறையைச்சூடி எம்பெருமான் கூத்துநிகழ்த்துகிறான்.
பாடல்
எண் : 6
குரவம்
கோங்கம் குளிர்புன்னை கைதை
குவிந்த கரைகள் மேல்
திரைவந்து
உலவும் தில்லை மல்கு
சிற்றம் பலந்தன்னுள்
வரைபோல்
மலிந்த மணிமண் டபத்து
மறையோர் மகிழ்ந்துஏத்த
அரவம்
ஆட அனல்கை ஏந்தி
அழகன் ஆடுமே.
பொழிப்புரை : குரவம், கோங்கம், குளிர்ந்த புன்னை என்ற மரங்களும், தாழைப்
புதரும் திரண்டுள்ள கடற்கரைப் பகுதிகளின் மேல் அலைகள்வந்து உலவும் தில்லைநகரில்
விளங்கும் சிற்றம்பல மாகிய, மலையைப் போன்ற நிறைந்த இரத்தினங்களால்
அமைக்கப் பட்ட மண்டபத்தில் அந்தணர்கள் மகிழ்ந்து துதிக்கவும் பாம்பு ஆடவும், தீயைக்
கையிலேந்தி அழகனாகிய கூத்தப்பிரான் திருக்கூத்து நிகழ்த்துகிறான்.
பாடல்
எண் : 7
சித்தர்
தேவர் இயக்கர் முனிவர்
தேனார் பொழில்தில்லை
அத்தா
அருளாய் அணிஅம் பலவா
என்றுஎன்று ய்வர் ஏத்த
முத்தும்
மணியும் நிரந்த தலத்துள்
முளைவெண் மதிசூடிக்
கொத்தார்
சடைகள் தாழநட்டம்
குழகன் ஆடுமே.
பொழிப்புரை : `வண்டுகள்
நிறைந்த சோலைகளை உடைய தில்லைநகர்த் தலைவனே! அழகிய சிற்றம்பலத்தில் உள்ளவனே!
அருளுவாயாக.` என்று சித்தர்களும் தேவர்களும் இயக்கர்களும் முனிவர்களும்
போற்றி வேண்ட, முத்தும் மணியும் வரிசையாக அமைந்த அந்த அம்பலத்தில்
பிறைச்சந்திரனைச் சூடி, கொத்துக் கொத் தாக அமைந்த சடைகள்
தொங்குமாறு அழகனாகிய சிவபெருமான் திருக்கூத்து நிகழ்த்துகிறான்.
பாடல்
எண் : 8
அதிர்த்த
அரக்கன் நெரிய விரலால்
அடர்த்தாய் அருள்என்று
துதித்து
மறையோர் வணங்குந் தில்லைச்
சிற்றம் பலந்தன்னுள்
உதித்த
போழ்தில் இரவிக் கதிர்போல்
ஒளிர்மா மணிஎங்கும்
பதித்த
தலத்துப் பவள மேனிப்
பரமன் ஆடுமே.
பொழிப்புரை : `ஆரவாரம்
செய்த அரக்கனாகிய இராவணன் உடல் நொறுங்குமாறு அவனைக் கால்விரலால் துன்புறுத்தியவனே!
எங்களுக்கு அருளுவாயாக` என்று போற்றி வேதியர்கள் வழிபடும்
தில்லையம்பதியிலுள்ள சிற்றம்பலமாகிய உதயநிலைச் சூரியனின் கிரணங்கள் போல ஒளி
வீசுகின்ற மேம்பட்ட மணிகள் எல்லா இடத் தும் பதிக்கப்பட்ட அரங்கத்தில் பவளம் போன்ற
சிவந்த திருமேனியை யுடைய மேலோன் ஆகிய சிவபெருமான் கூத்து நிகழ்த்துகிறான்.
பாடல்
எண் : 9
மாலோடு
அயனும் அமரர் பதியும் வந்து வணங்கிநின்று
ஆல
கண்டா அரனே அருளாய் என்றுஎன்ரு அவர்ஏத்தச்
சேல்
ஆடும்வயல் தில்லை மல்கு சிற்றம் பலந்தன்னுள்
பால்
ஆடும்முடிச் சடைகள் தாழப் பரமன் ஆடுமே.
பொழிப்புரை :திருமாலோடு பிரமனும் தேவர்தலைவனாகிய
இந்திரனும் வந்து வணங்கிநின்று `விடக்கறை தங்கிய நீலகண்டனே! தீயோரை
அழிப்பவனே! அருளுவாயாக` என்று போற்றிப் புகழுமாறு சேல்மீன்கள்
உலாவும் வயல்களை உடைய தில்லைநகரின் மேம்பட்ட சிற்றம்பலத்தில் சுற்றிலும் சுழன்று
ஆடுகின்ற முடியிலுள்ள சடைகள் நீண்டு விளங்கப் பரமன் ஆடுகின்றான்.
பாடல்
எண் : 10
நெடிய
சமணும் மறைசாக் கியரும்
நிரம்பாப் பல்கோடிச்
செடியுந்
தவத்தோர் அடையாத் தில்லைச்
சிற்றம் பலந்தன்னுள்
அடிகள்
அவரை ஆரூர் நம்பி
அவர்கள் இசை பாடக்
கொடியும்
விடையும் உடையகோலக்
குழகன் ஆடுமே.
பொழிப்புரை : உடலை மறைக்காத நீண்ட உடம்பை உடைய
சமணரும், உடம்பை
ஆடைகளான் மறைத்துக் கொள்ளும் பௌத்தரும், உணர்வு நிரம்பப் பெறாத பலகோடிகளான பாவங்
களால் செலுத்தப்படுகின்ற வீண்செயல் உடையவர்களாய் எய்தப் பெறாத தில்லைநகரில் உள்ள
சிற்றம்பலத்தில் இருக்கும் பெருமானைத் திருவாரூர் நம்பியாகிய சுந்தரமூர்த்திநாயனார்
இசைப்பாடல்களால் போற்றிவழிபட, விடைக்கொடியும் விடைவாகனமும் உடைய
அத்தகைய அழகன் சிற்றம்பலத்துள் கூத்துநிகழ்த்துகிறான்.
பாடல்
எண் : 11
வானோர்
பணிய மண்ணோர் ஏத்த
மன்னி நடமாடும்
தேனார்
பொழில்சூழ் தில்லை மல்கு
சிற்றம் பலத்தானைத்
தூநான்
மறையான் அமுத வாலி
சொன்ன தமிழ்மாலைப்
பால்நேர்
பாடல் பத்தும் பாடப்
பாவம் நாசமே.
பொழிப்புரை : தேவர்கள் வணங்கவும் மனிதர்கள்
துதிக்கவும், பொருந்திக் கூத்துநிகழ்த்தும், வண்டுகள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட
தில்லையில் விளங்கும் சிற்றம்பலப் பெருமானைப் பற்றித் தூய்மையான நான்கு வேதங்களையும்
ஓதுபவனான திரு ஆலி அமுதன் பாடிய தமிழ்மாலையாகிய பால் போன்ற இனிய பாடல்கள்
பத்தினையும் பாடுதலால் தீவினைகள் அழிந்து ஒழியும்.
திருச்சிற்றம்பலம்
திருவாலியமுதனார் அருளிச் செய்தது
9. 25 கோயில் -கோலமலர் பண்
- பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
கோல
மலர்நெடுங்கண் கொவ்வை வாய்க்கொடி ஏர்இடையீர்
பாலினை, இன்னமுதை, பரம்
ஆய பரஞ்சுடரைச்
சேல்உக
ளும்வயல்சூழ் தில்லை மாநகர்ச் சிற்றம்பலத்து
ஏல்உடை
எம்இறையை என்றுகொல் காண்பதுவே.
பொழிப்புரை : அழகிய பூப்போன்ற பெரிய கண்களையும், கொவ்வைக்கனி
போன்ற சிவந்த வாயினையும் கொடிபோன்ற மெல்லிய இடையினையும் உடைய தோழிமீர்! பால்போன்று
இனிய னாய், இனிய அமுதம் போன்று புத்துயிர் அளிப்பவனாய், எல்லா
ரினும் மேம்பட்டவனாகிய மேம்பட்ட ஒளிவடிவினனாய், சேல் மீன்கள் துள்ளுகின்ற வயல்களால்
சூழப்பட்ட தில்லையாகிய பெரிய நகரிலே சிற்றம்பலத்தில் எழுந்தருளியிருக்க இசைந்த எம்
தலைவ னாகிய சிவபெருமானை அடியேன் எக்காலத்துப் புறக்கண்களால் காணப்போகிறேனோ?
பாடல்
எண் : 2
காண்பது
யான்என்றுகொல் கதிர் மாமணி யைக்கனலை
ஆண்பெண்
அருவுருஎன்று அறிதற்கு அரிது ஆயவனைச்
சேண்பணை
மாளிகைசூழ் தில்லை மாநகர்ச் சிற்றம்பலம்
மாண்புடை
மாநடஞ்செய் மறை யோன்மலர்ப் பாதங்களே.
பொழிப்புரை : ஒளிவீசும் மேம்பட்ட மணி போல்பவனாய்க்
கனல் போன்ற செம்மேனியனாய், ஆண் என்றோ பெண் என்றோ வடிவு அற்றவன்
என்றோ அறிவதற்கு இயலாதவனாக உள்ளவனாய், வானத்தை அளாவிய பெரும்பரப்புடைய
மாளிகைகளால் சூழப்பட்ட தில்லை என்ற பேரூரின் சிற்றம்பலத்திலே மாட்சிமை பொருந்திய
மேம்பட்ட திருக்கூத்தினை நிகழ்த்தும், வேதம் ஓதும் சிவபெரு மானுடைய தாமரைமலர்
போன்ற திருவடிகளை அடியேன் புறக்கண் களால் காணும் நாள் எந்நாளோ?
பாடல்
எண் : 3
கள்ளவிழ்
தாமரைமேல் கண்ட அயனோடு மால்பணிய
ஒள்எரி
யின்நடுவே உரு வாய்ப்பரந்து ஓங்கியசீர்த்
தெள்ளிய
தண்பொழில்சூழ் தில்லை மாநகர்ச் சிற்றம்பலத்
துள்எரி
ஆடுகின்ற ஒரு வனை உணர்வரிதே.
பொழிப்புரை : உலகத்தைப் படைத்தவனாகிய, தேன்
வெளிப் படும் தாமரைமலர்மேல் இருக்கும் பிரமனும், திருமாலும் வணங்குமாறு அவ்விருவருக்கும்
நடுவே ஒளிவீசும் தீப்பிழம்பின் உருவத்தனாய்ப் பரவி உயர்ந்த சிறப்பை உடையவனாய், மேலோர்
தமக்குப் புகலிடமாகத் தெளிந்த, குளிர்ந்த சோலைகளால் சூழப்பட்ட தில்லை
யாகிய பெரிய நகரத்தில் உள்ள சிற்றம்பலத்துள் தீயினைக் கையில் ஏந்தி ஆடுகின்ற
ஒப்பற்ற சிவபெருமானை உள்ளவாறு அறிதல் இயலாத செயலாகும்.
பாடல்
எண் : 4
அரிவைஓர்
கூறுஉகந்தான், அழ கன்,எழில் மால்கரியின்
உரிவைநல்
உத்தரியம் உகந் தான்,உம்ப ரார்தம்பிரான்,
புரிபவர்க்கு
இன்னருள்செய் புலி யூர்த்திருச் சிற்றம்பலத்து
எரிமகிழ்ந்து
ஆடுகின்றஎம் பிரான்என் இறையவனே.
பொழிப்புரை : பார்வதியைத் தன் உடம்பின் ஒருபகுதியாகக்
கொண்டு மேம்பட்டவனாய், அழகனாய், அழகிய மத மயக்கம் பொருந்திய யானையின்
தோலைச் சிறந்த மேலாடையாகக் கொண்டு மேம்பட்டவனாய், தேவர்களுக்குத் தலைவனாய், தன்னை
விரும்பு பவர்களுக்கு இனிய கருணைசெய்யும், புலியூரில் உள்ள திருச்சிற்றம் பலத்திலே
எரியைக் கையிலேந்தி மகிழ்ச்சியோடு ஆடுகின்ற எங்கள் பெருமானே என் தெய்வம் ஆவான்.
பாடல்
எண் : 5
இறைவனை
என்கதியை என் உளேஉயிர்ப்பு ஆகிநின்ற
மறைவனை
மண்ணும்விண்ணும் மலிவான் சுடராய் மலிந்த
சிறையணி
வண்டுஅறையுந் தில்லை மாநகர்ச் சிற்றம்பலம்
நிறைஅணி
யாம்இறையை நினைத் தேன்இனிப் போக்குவனே.
பொழிப்புரை : தலைவனாய், எனக்குப் பற்றுக்கோடாய், எனக்
குள்ளே மூச்சுக்காற்றாய் மறைந்து நிற்பவனாய், நிலவுலகமும் வானுல கமும் மகிழ்தற்கு
ஏதுவான மேம்பட்ட ஒளியாய், நிறைந்த சிறகு களைக் கொண்டுள்ள அழகிய
வண்டுகள் ஒலிக்கும் தில்லைமா நகரிலே சிற்றம்பலத்துக்கு மிக்க அணியாக இருக்கும்
தெய்வமாகிய சிவபெருமானை விருப்புற்று நினைத்த யான் அவனை இனி, என்
உள்ளத்தினின்றும் போக்கி விடுவேனோ?
பாடல்
எண் : 6
நினைத்தேன்
இனிப்போக்குவனோ நிம லத்திரளை நினைப்பார்
மனத்தின்
உளே இருந்த மணியை மணி மாணிக்கத்தைக்
கனைத்து இழியும் கழனிக் கனகம் கதிர் ஒண்பவளம்
சினத்தொடு
வந்துஎறியுந் தில்லை மாநகர்க் கூத்தனையே.
பொழிப்புரை : தூய்மையின் மிகுதியனாய், தன்னை
விருப்புற்று நினைப்பவர் உள்ளத்திலே தங்கியிருக்கும் அழகிய மாணிக்கம் போல் வானாய், ஒலித்துக்கொண்டு
வயல்களிலே வந்து பாயும் மிக்க நீர், ஒளி வீசுகின்ற பவளத்தைக் கோபம்
கொள்பவரைப்போலக் கரையில் ஒதுக்கித்தள்ளும் தில்லை மாநகரில் உள்ள கூத்தப்பிரானை
விருப் புற்று நினைத்த அடியேன் இனி என் உள்ளத்தினின்றும் போக விடுவேனோ?
பாடல்
எண் : 7
கூத்தனை, வானவர்தம்கொழுந்
தை,கொழுந்
தாய்எழுந்த
மூத்தனை, மூவுருவின்
முத லை,முத லாகிநின்ற
ஆத்தனை, தான்படுக்கும்
அந் தணர்தில்லை அம்பலத்துள்
ஏத்தநின்று
ஆடுகின்ற எம் பிரான்அடி சேர்வன்கொலோ.
பொழிப்புரை : கூத்தாடுபவனாய்,
தேவர்
கூட்டத்துக்குத் தலை வனாய், எல்லாப் பொருள்களுக்கும் அடிப்படையாய்த்
தோன்றிய மூத்தவனாய், படைத்தல் காத்தல் அழித்தல் என்ற மூன்று
செயல் களுக்கும் மூன்று வடிவங்களை எடுத்த முதல்வனாய், எல்லாச் செயல் களுக்கும் காரணமாய்
இருப்பவனாய், பசுவின் பால், தயிர், நெய் முதலியவற்றை ஆகுதி செய்யும்
அந்தணர்கள் வாழும் தில்லை அம்பலத்துள் பலரும் துதிக்குமாறு நிலையாகக் கூத்து
நிகழ்த்துகின்ற எம் தலைவனுடைய திருவடிகளை அடியேன் சேர்வேன் கொல்லோ!
பாடல்
எண் : 8
சேர்வன்கொ
லோஅன்னைமீர் திக ழும்மலர்ப் பாதங்களை,
ஆர்வங்
கொளத்தழுவி அணி நீறுஎன் முலைக்குஅணியச்
சீர்வங்கம்
வந்தணவும் தில்லை மாநகர்ச் சிற்றம்பலத்து
ஏர்வுஅங்கை
மான்மறியன் எம் பிரான்போல் நேசனையே.
பொழிப்புரை : என் அன்னையர்களே! சிறந்த மரக்கலங்கள்
வந்து அணுகும் தில்லைமாநகரில் உள்ள சிற்றம்பலத்தில் உள்ளவனாய், கையில்
எழுச்சியை உடைய மான்குட்டியை ஏந்தியவனாய், எம் தலைவனாய், எம்மால் விரும்பப்படும் பெருமானுடைய
விளங்கும் தாமரைமலர் போன்ற திருவடிகளை விருப்பத்தோடு தழுவி, அவன்
அணிந்திருக்கும் திருநீறு என் நகில்களில் படியுமாறு அவனைத் தழுவும் வாய்ப்பினைப்
பெறுவேனோ?
பாடல்
எண் : 9
நேசமு
டையவர்கள் நெஞ்சு ளேஇடம் கொண்டுஇருந்த
காய்சின
மால்விடையூர் கண் ணுதலைக் காமருசீர்த்
தேச
மிகுபுகழோர் தில்லை மாநகர்ச் சிற்றம்பலத்து
ஈசனை
எவ்வுயிர்க்கும் எம் இறைவன்என்று ஏத்துவனே.
பொழிப்புரை : தன்னிடம் விருப்பமுடைய அடியவர்களின்
உள்ளத்துள்ளே தன் இருப்பிடத்தை அமைத்துக்கொண்டு தங்கு பவனாய், பகைவர்களைத்
துன்புறுத்தும் வெகுளியை உடைய பெரிய காளையை வாகனமாக இவர்கின்ற, நெற்றிக்
கண்ணுடையவனாய், விரும்பத்தக்க சிறப்பினை உடைய உலகத்தில் மிகுகின்ற புகழை
உடையவர்கள் வாழும் தில்லைமாநகரில் சிற்றம்பலத்தில் வீற்றிருக் கும், மற்றவரை
அடக்கியாளும் பெருமானை எல்லா உயிர்களுக்கும் தெய்வமாயவன் என்று புகழ்ந்து கூறும்நான்
அவன் அருள்பெறுவது என்றோ?
பாடல்
எண் : 10
இறைவனை
ஏத்துகின்ற இளை யாள்மொழி யின்தமிழால்
மறைவல
நாவலர்கள் மகிழ்ந்து ஏத்துசிற் றம்பலத்தை
அறைசெந்நெல்
வான்கரும்பின் அணி ஆலைகள் சூழ்மயிலை
மறைவல
வாலிசொல்லை மகிழ்ந்து ஏத்துக, வான்எளிதே.
பொழிப்புரை : சிவபெருமானைத் துதிக்கின்ற இளம்பருவத்
தலைவியின் கூற்றாக இனிய தமிழால், நான்மறைகளின் பொரு ளுணர்ந்து ஒலி
பிறழாது அவற்றை ஓதுதலில் வல்லவர்கள் மகிழ்ந்து துதிக்கின்ற சிற்றம்பலம் தொடர்பாக
வரப்பால் வரையறுக்கப்பட்ட வயல்கள் செந்நெற்பயிர்களோடும் மேம்பட்ட கரும்புகளின் வரிசையான
ஆலைகளோடும் சூழ்ந்திருக்கும் திருமயிலாடு துறையைச் சேர்ந்த, வேதங்களில்
வல்ல திருஆலிஅமுதன் பாடிய பாடல்களை விருப்பத்தோடு பாராயணம் செய்க. சிவலோகம்
உங்களுக்கு மறுமையில் எளிதாகக் கிட்டும்.
திருச்சிற்றம்பலம்
புருடோத்தம நம்பி அருளிச் செய்தது
9. 26
கோயில் - வாரணி நறுமலர்
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
வார்அணி
நறுமலர் வண்டு கெண்டு
பஞ்சமம் செண்பக மாலை மாலை
வார்அணி
வனமுலை மெலியும் வண்ணம்
வந்துவந்து இவைநம்மை மயக்கு மாலோ,
சீர்அணி
மணிதிகழ் மாடம் ஓங்கு
தில்லையம் பலத்துஎங்கள் செல்வன் வாரான்,
ஆர்எனை
அருள்புரிந்து அஞ்சல் என்பார்
ஆவியின் பரம்அன்றுஎன்தன் ஆதரவே.
பொழிப்புரை : தேன் ஒழுகுகின்ற நறுமலர்களைக்
கிளறுகின்ற வண்டுகள் பாடுகின்ற பஞ்சமப் பண், சண்பகப் பூமாலை,
மாலைக் காலம் என்ற
இவை கச்சணிந்த அழகிய முலைகள் மெலியுமாறு தொடர்ந்து வந்து நம்மை மயக்குகின்றன.
அம்மயக்கத்தைப் போக்க அழகினைக் கொண்ட மணிகள் விளங்குகின்ற மாடங்கள் உயர்ந்த
தில்லையம்பலத்திலுள்ள எங்கள் செல்வனாகிய சிவபெருமான் நமக்குக் காட்சி நல்கவில்லை.
என்திறத்து அருள் செய்து என்னை அஞ்சாதே என்று சொல்லக்கூடியவர் யாவர் உளர்? என்
விருப்பம் என் உயிரால் தாங்கப்படும் அளவினதாக இல்லை.
பாடல்
எண் : 2
ஆவியின்
பரம்என்தன் ஆதரவும்
அருவினை யேனைவிட்டு, அம்ம
அம்ம,
பாவிவன்
மனம்இது பைய வேபோய்ப்
பனிமதிச் சடையரன் பால தாலோ,
நீவியும்
நெகிழ்ச்சியும் நிறைஅழிவும்
நெஞ்சமும் தஞ்சம் இலாமை யாலே
ஆவியின்
வருத்தம் இதுஆர்அறிவார்
அம்பலத்து அருநடம்ஆடு வானே.
பொழிப்புரை : என் விருப்பம் என் உயிரின் தாங்கும்
எல்லையைக் கடந்து மிக்குள்ளது. தீ வினையினேன் ஆகிய அடியேனை விடுத்துப் பாவியாகிய
வலிய மனம் யான் அறியாதவாறு மெதுவாகச் சென்று குளிர்ந்த பிறையைச் சடைக்கண் அணிந்த சிவபெருமான்பால்
சேர்ந்து விட்டது. நெஞ்சம் எனக்குப் பற்றுக்கோடாக இல்லாமையாலே மேகலையின்
நெகிழ்ச்சியும் நிறை அழிவும் ஏற்பட, அவற்றால் என் உயிர்படும் வருத்தத்தை
யாவர் அறிவார்?. அம்பலத்தில் அரிய கூத்தாடும் பெருமானே அறிவான்.
பாடல்
எண் : 3
அம்பலத்து
அருநடம் ஆடவேயும்
யாதுகொல் விளைவதுஎன்று அஞ்சி, நெஞ்சம்
உம்பர்கள்
வன்பழி யாளர் முன்னே
ஊட்டினர் நஞ்சைஎன் றேயும் உய்யேன்,
வன்பல
படைஉடைப் பூதஞ் சூழ
வானவர் கணங்களை மாற்றி, ஆங்கே
என்பெரும்
பயலைமை தீரும் வண்ணம்
எழுந்தரு ளாய்எங்கள் வீதி ஊடே.
பொழிப்புரை : நீ பொன்னம்பலத்திலே அரிய கூத்தினை ஆடிக்
கொண்டிருந்தாலும், கொடிய பழிச்செயல்களைச் செய்யும்
தேவர்கள் முன்னொரு காலத்தில் உன்னை நஞ்சினை உண்பித்தார்களே. அதனால் உனக்கு
என்றாவது என்ன தீங்கு நேரக்கூடுமோ என்று அஞ்சி நெஞ்சில் நிம்மதியில்லாமல்
இருக்கின்றேன். தேவர்கள் கூட்டங்களை நீக்கி வலிமையுடையனவாய்ப் பலவாய் உள்ள படை
யாம் தன்மையை உடைய பூதங்கள் உன்னைச்சூழ எங்கள் வீதி வழியாக என்னுடைய மிக்க பசலை
நோய்தீரும் வண்ணம் எழுந்தருளுவாயாக.
பாடல்
எண் : 4
எழுந்தருளாய்
எங்கள் வீதி ஊடே
ஏதம்இல் முனிவரோடு எழுந்த ஞானக்
கொழுந்தது
ஆகிய கூத்த னே,நின்
குழையணி காதினின் மாத்தி ரையும்,
செழுந்தட
மலர்புரை கண்கள் மூன்றும்,
செங்கனி வாயும்,என் சிந்தை வௌவ,
அழுந்தும்என்
ஆருயிர்க்கு என்செய் கேனோ,
அரும்புனல் அலமரும் சடையினானே.
பொழிப்புரை : குற்றமற்ற பதஞ்சலி, வியாக்கிரபாதர்
முதலிய முனிவர்களோடு வெளிப்பட்ட ஞானக்கொழுந்தாகிய கூத்தப் பிரானே! உன் குழையை
அணிந்த காதுகளில் உள்ள காதணிகளும் செழித்த பெரிய மலர்களை ஒத்த முக்கண்களும், சிவந்த
கனி போன்ற வாயும் என் உள்ளத்தைக் கவருவதனால் துன்பத்தில் ஆழ்ந்த என் உயிர்
நிலைத்திருப்பதற்கு யான் யாது செய்வேன்? அரிய கங்கை நீர் சுழலும் சடையினானே! நீ
எங்கள் வீதி வழியே அடியேன் காணுமாறு எழுந்தருளுவாயாக. எழுந்தருளினால் அடியேன்
உயிர்நிற்கும்.
பாடல்
எண் : 5
அரும்புனல்
அலமரும் சடையினானை
அமரர்கள் அடிபணிந்து அரற்ற, அந்நாள்
பெரும்புரம்
எரிசெய்த சிலையின் வார்த்தை
பேசவும் நையும்என் பேதை நெஞ்சம்,
கருந்தட
மலர்புரை கண்ட, வண்டுஆர்
காரிகை யார்முன்புஎன் பெண்மை தோற்றேன்,
திருந்திய
மலரடி நசையி னாலே
தில்லையம் பலத்துஎங்கள் தேவ தேவே.
பொழிப்புரை : கரிய பெரிய மலரை ஒத்த கழுத்தை உடையவனே!
தில்லை அம்பலத்தில் எழுந்தருளியிருக்கும், தெய்வங்களுக்குள் மேம்பட்ட எங்கள்
தேவனே! கங்கை சுழலும் சடையை உடைய உன்னைத் தேவர்கள் அடிகளில் விழுந்து வணங்கிப்
பலவாறு தங்கள் முறையீடுகளை விண்ணப்பிக்க, அக்காலத்துப் பெரிய திரிபுரங்களைத்
தீக்கிரையாக்கிய உன் வில்லாண்மையின் புகழை எடுத்துக்கூறும் அள வில், அடியேனுடைய
அறியாமையை உடைய உள்ளம் உருகுகிறது. வளப்பமான மாலையை அணிந்த மகளிர் முன்னே என்
பெண்மையை, உன்
அழகான மலர்போன்ற திருவடிகளை அணைய வேண்டும் என்ற விருப்பத்தினாலே தோற்று
நிற்கிறேன்.
பாடல்
எண் : 6
தில்லையம்
பலத்துஎங்கள் தேவ தேவைத்
தேறிய அந்தணர் சிந்தை செய்யும்
எல்லைஅது
ஆகிய எழில்கொள் சோதி
என்உயிர் காவல்கொண்டு இருந்த எந்தாய்,
பல்லையார்
பசுந்தலை யோடுஇடறிப்
பாதமென் மலர்அடி நோவ, நீபோய்
அல்லினில்
அருநடம் ஆடில், எங்கள்
ஆருயிர் காவல்இங்கு அரிது தானே.
பொழிப்புரை : தில்லை அம்பலத்தில் எங்கள் தேவதேவனாய், மனந்தெளிந்த
அந்தணர் தியானிக்கும் இடமாகிய சிற்றம்பலத்தில் உள்ள அழகுமிக்க ஒளி வடிவினனாய், அடியேனுடைய
உயிரைப் பாதுகாத்துக் கொண்டிருந்த என் தந்தையே! பல்லோடு கூடிய பிரம கபாலமாகிய
மண்டையோட்டைக் கையில் ஏந்தி இருட்டில் கால்கள் இடற, உன் திருவடிகளாகிய மெல்லிய மலர்கள்
அடியிடுதலால் நோவ, நீ சென்று இருளில் அரிய கூத்தாடினால், உன்
செயல்பற்றிக் கவலைப்படும் அடியேங்களுடைய அரிய உயிரை நீங்காமல் பாதுகாப்பது அரிய
செயலாகும். ஆதலின் இருளில் நடம்புரிதலை நீக்கு வாயாக.
பாடல்
எண் : 7
ஆருயிர்
காவல்இங்கு அருமை யாலே
அந்தணர் மதலைநின் அடிபணியக்
கூர்நுனை
வேற்படைக் கூற்றம்சாயக்
குரைகழல் பணிகொள மலைந்தது,என்றால்
ஆர்இனி
அமரர்கள் குறைவு இலாதார்
அவரவர் படுதுயர் களைய நின்ற
சீர்உயிரே, எங்கள்
தில்லை வாணா,
சேயிழை யார்க்குஇனி வாழ்வுஅரிதே.
பொழிப்புரை : இவ்வுலகில் தன்னுடைய அரிய உயிரைப்
பாதுகாத்துக் கொள்ள இயலாமையாலே அந்தணர் மகனாகிய மார்க்கண்டேயன் உன் திருவடிக்கண்
வணங்க, கூரிய
முனையினை உடைய வேலாகிய படைக்கலனை ஏந்திய கூற்றுவன் அழியுமாறு உன் கழல் ஒலிக்கும்
திருவடி ஒன்றினைச் செயற்படுத்த நீ போரிட்டனை என்றால் தேவர்களில், குறைவில்லாதவர்கள்
யாவர்? அவரவர்
நுகரும் துயரங்களைப் போக்குதற்கு ஒருப்பட்டு நிற்கின்ற சிறந்த உயிர்போல்பவனே!
எங்கள் தில்லையம்பதியில் வாழ்கின்றவனே! நீ காவாதொழியின் சேயிழையார் ஆகிய
மகளிருக்கு இனி உயிர் வாழ்தல் அரிது.
பாடல்
எண் : 8
சேயிழை
யார்க்குஇனி வாழ்வுஅரிது
திருச்சிற்றம் பலத்துஎங்கள் செல்வ னே,நீ
தாயினும்
மிகநல்லை என்று அடைந்தேன்,
தனிமையை நினைகிலை சங்க ரா,உன்
பாய்இரும்
புலியத ளின்னு டையும்
பையமேல் எடுத்தபொற் பாத முங்கண்டு
ஏ, இவள்
இழந்தது சங்கம் ஆவா
எங்களை ஆள்உடை ஈசனேயோ.
பொழிப்புரை : திருச்சிற்றம்பலத்து எங்கள் செல்வனே!
எங்களை அடிமைகொள்ளும் ஈசனே! நீ தாயை விட மிக நல்லவனாய் உள்ளாய் என்று உன்னைச்
சரண்யனாக அடைந்தேன். எல்லோருக்கும் நன்மையைச் செய்கின்றவனே! நீ இப்பெண்ணுடைய
தனிமைத் துயரை நினைத்துக்கூடப் பார்க்காதவனாக உள்ளாய். உன்னுடைய பரவிய புலித்தோல்
ஆடையையும் மெதுவாக மேலே தூக்கிய அழகிய திருவடியையும் கண்டே இப்பெண் தன் சங்கு
வளையல்களை இழந்தாள். நீ அருளாவிடின் இனி மகளிருக்கு உயிர்வாழ்தல் அரிதாகும்.
பாடல்
எண் : 9
எங்களை
ஆள்உடை ஈசனேயோ,
இளமுலை முகம்நெக முயங்கி நின்பொற்
பங்கயம்
புரைமுகம் நோக்கி நோக்கி,
பனிமதி நிலவுஅதுஎன் மேல்படரச்
செங்கயல்
புரைகண்ணி மார்கள் முன்னே
திருச்சிற்றம் பலமுட னேபு குந்து
அங்குஉன
பணிபல செய்து நாளும்
அருள்பெறின் அகலிடத்து இருக்கல் ஆமே.
பொழிப்புரை : எங்களை அடிமையாகக் கொண்ட ஈசனே! இள
முலையின் முகடு நசுங்குமாறு உன்னைத்தழுவி உன்னுடைய அழகிய பங்கயம் போன்ற முகத்தை
நோக்கி நீ அணிந்திருக்கும் குளிர்ந்த பிறையின் நிலவொளி என்மேல் பரவ, சிவந்த
கயல் மீன்களை ஒத்த கண்களை உடைய இளைய பெண்கள் காணுமாறு, அவர்கள் கண் எதிரே
திருச்சிற்றம்பலத்தில் உன்னோடு புகுந்து, அங்கு உனக்குக் குற்றேவல்கள் பல
நாள்தோறும் செய்து உன் அருளைப் பெறும் வாய்ப்பு உண்டாயின் இவ்வுலகில் பலகாலம் இருக்கலாம்.
உன் அருள் கிட்டாவிடின் அஃது இயலாது.
பாடல்
எண் : 10
அருள்பெறின்
அகலிடத்து இருக்க லாம்என்று
அமரர்கள் தலைவனும், அயனும், மாலும்,
இருவரும்
அறிவுஉடை யாரின் மிக்கார்,
ஏத்துகின் றார்இன்னம் எங்கள் கூத்தை,
மருள்படு
மழலைமென் மொழி உமையாள்
கணவனை வல்வினை யாட்டி யேன்நான்
அருள்பெற
அலமரும் நெஞ்சம், ஆவா,
ஆசையை அளவுஅறுத் தார்இங்கு ஆரே.
பொழிப்புரை : சிவபெருமானுடைய அருள் கிட்டினால் பரந்த
தத்தம் உலகில் பலகாலம் இருக்கலாம் என்று இந்திரனும், பிரமனும் திருமாலும் ஆகிய அறிவுடையவரின்
மேம்பட்டார் இருவரும், இன்றும் எங்கள் கூத்தப்பிரானைத்
துதிக்கிறார்கள். இறைவனுக்கு மையல் ஏற்படுவதற்குக் காரணமான மழலை போன்ற மென்மையான
சொற்களை உடைய பார்வதியின் கணவனாகிய சிவபெருமானை அடைவதற்குத் தீவினையை உடைய
அடியேனுடைய நெஞ்சம் சுழல்கிறது. ஒவ்வொருவருக்கும் ஆசை இவ்வளவுதான் இருத்தல் வேண்டும்
என்று ஆசையை அளவுபடுத்தி ஆசைகொள்பவர் இவ்வுலகில் யாவர் உளர்?
பாடல்
எண் : 11
ஆசையை
அளவுஅறுத் தார்இங்கு ஆரே,
அம்பலத்து அருநடம் ஆடு வானை,
வாசநன்
மலர்அணி குழல்மடவார்
வைகலும் கலந்துஎழு மாலைப் பூசல்
மாசுஇலா
மறைபல ஓது நாவன்
வண்புரு டோத்தமன் கண்டு உரைத்த
வாசக
மலர்கள்கொண்டு ஏத்த வல்லார்
மலைமகள் கணவனை அணைவர் தாமே.
பொழிப்புரை : உலகிலே ஆசையை அளவுபடுத்தி ஆசை வைப் பார்
யாவர் உளர்? பொன்னம்பலத்தில் அரிய கூத்து நிகழ்த்தும் சிவ பெருமானை நறுமணம்
கமழும் மலர்களை அணிந்த கூந்தலை உடைய மகளிர் நாள்தோறும் மனத்தால் கூடியதனால்
அவனுடைய மாலையைப் பெறுவதற்காக ஏற்பட்ட பூசலைப்பற்றிக் குற்றமற்ற வேத வாக்கியங்கள்
பலவற்றை ஓதும் நாவினனாகிய வண்மையை உடைய புருடோத்தமன் படைத்துக்கூறிய பாடல்களாகிய
மலர்களைக் கொண்டு, பார்வதி கணவனாகிய சிவபெருமானைத் துதிக்க
வல்லவர் கள் அவனை மறுமையில் சென்று அடைவார்கள்.
திருச்சிற்றம்பலம்
புருடோத்தம நம்பி அருளிச் செய்தது
9. 27
கோயில் - வானவர்கள்
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
வானவர்கள்
வேண்ட வளர்நஞ்சை உண்டார்தாம்
ஊனம்இலா
என்கை ஒளிவளைகள் கொள்வாரோ,
தேன்நல்வரி
வண்டுஅறையும் தில்லைச்சிற் றம்பலவர்
நான்நமரோ
என்னாதே நாடகமே ஆடுவரே.
பொழிப்புரை : தேவர்கள் வேண்டியதனால் பெருகி வந்த
விடத்தை உண்ட பெருமானார் அவர்களைக் காப்பாற்றினார். ஆனால் அடியவள் ஆதற்கு எந்தக்
குறைபாடும் இல்லாத அடியேனுடைய கைகளில் இருந்த ஒளிவீசும் வளைகளைக் கைப்பற்றி எனக்கு
இறந்து பாட்டை நல்கலாமா? தேனிலே பெரிய கோடுகளை உடைய வண்டு கள்
ஒலிக்கும் தில்லைப்பதியிலுள்ள சிற்றம்பலத்தில் கூத்தாடும் பெருமான், நான்
அவரை நம்முடைய உறவினர் என்று சொல்ல முடியாதபடி என்துன்பத்தைப் போக்காது நாடகத்தை
நடிக்கின்றார்.
பாடல்
எண் : 2
ஆடிவரும்
கார்அரவும், ஐம்மதியும், பைங்கொன்றை
சூடிவரு
மாகண்டேன், தோள்வளைகள் தோற்றாலும்,
தேடிஇமை
யோர்பரவும் தில்லைச்சிற் றம்பலவர்
ஆடிவரும்
போதுஅருகே நிற்கவுமே ஒட்டாரே.
பொழிப்புரை : ஆடிக்கொண்டுவரும் கரிய பாம்பினையும்
அழகிய பிறையையும் பசியகொன்றைப்பூமாலையையும் எம்பெருமான் சூடிவருதலைக்கண்ட நான்
அவரிடத்து மையலால் உடல்மெலிய என் தோள்வளைகள் நெகிழ அவற்றை இழந்தாலும், தேவர்கள்
தேடிக் கொண்டுவந்து முன்நின்று துதிக்கும் அச்சிற்றம்பலத்துப் பெருமானார் தாம்
கூத்தாடிக் கொண்டு வரும் பொழுது அவர் அருகே நின்று அவர் கூத்தினை அடியேன் காணும்
வாய்ப்புப் பெறாதபடி விரட்டுகிறார்.
பாடல்
எண் : 3
ஒட்டா
வகைஅவுணர் முப்புரங்கள் ஒர்அம்பால்
பட்டாங்கு
அழல்விழுங்க எய்துஉகந்த பண்பினார்,
சிட்டார்
மறைஒவாத் தில்லைச்சிற் றம்பலவர்
கொட்டா
நடமாடக் கோல்வளைகள் கொள்வாரே.
பொழிப்புரை : பொருந்தாத பகைமை பாராட்டிய அசுரர்களின்
மும்மதில்களையும் தீப்பட்டு அவற்றை விழுங்குமாறு அம்பு எய்து மகிழ்ந்த பண்பாளராம், உயர்வு
பொருந்திய வேதஒலி நீங்காத தில்லைச் சிற்றம்பலத்து எம்பெருமானார் மத்தளம் முதலியவை
முழங்கப் பொருத்தமாகக் கூத்து ஆடுதலால் அதன்கண் ஈடுபட்ட அடி யேனுடைய திரண்ட
வளையல்களைக் கைப்பற்றுவார் ஆயினார்.
பாடல்
எண் : 4
ஆரே
இவைபடுவார் ஐயம் கொளவந்து
போர்ஏடி
என்று புருவம் இடுகின்றார்
தேர்ஆர்
விழவுஓவாத் தில்லைச்சிற் றம்பலவர்
தீராநோய்
செய்வாரை ஒக்கின்றார் காணீரே.
பொழிப்புரை : நற்குணங்கள் உடையார் எவர்தாம்
இக்குணங்கள் தோன்ற நிற்பவர் ஆவர்? பிச்சை பெறவந்து ஏடீ! என்று என்னை
அழைத்துப் புருவத்தால் போரிடுகின்றார். அஃதாவது புருவங்களை நெரித்துக் காதல்
குறிப்பை உணர்த்துகின்றார். தேர்கள் நிறைந்ததாய்த் திருவிழாக்கள் இடையறாது
நிகழ்த்தப்படும் தில்லைநகரிலுள்ள சிற்றம்பலத்து எம்பெருமானார் நோய் மாத்திரமே செய்து
அந்நோய் தீரும் பரிகாரத்தைச் செய்யாமையின் நீங்காத நோயைச் செய்யு மவரை
ஒத்துள்ளார். அவரை நீங்களும் வந்து காணுங்கள்.
பாடல்
எண் : 5
காணீரே
என்னுடைய கைவளைகள் கொண்டார்தாம்
சேண்ஆர்
மணிமாடத் தில்லைச்சிற் றம்பலவர்
பூணார்
வனமுலைமேல் பூஅம்பால் காமவேள்
ஆண்ஆடு
கின்றவா கண்டும் அருளாரே.
பொழிப்புரை : என்னுடைய கைவளையல்களைக் கவர்ந்து கொண்ட
பெருமானார் ஆகிய, வானளாவிய அழகிய மாடங்களை உடைய தில்லைநகரின் சிற்றம்பலத்தில்
நடனமாடுபவர், அணிகலன் களை அணிந்த அழகிய முலைகளின்மேல் பூக்களாகிய அம்புகளை
எய்து மன்மதன் தன் ஆண்மையைக் காட்டி நிற்றலைக் கண்டும் எனக்கு அருள் செய்கிறார்
அல்லர். அவருடைய இந்த அருளற்ற செயலை என் தோழிகளாகிய நீங்களும் காணுங்கள்.
பாடல்
எண் : 6
ஏ,இவரே
வானவர்க்கும் வானவரே என்பாரால்,
தாய்இவரே
எல்லார்க்கும் தந்தையும்ஆம் என்பாரால்,
தேய்மதியஞ்
சூடிய தில்லைச்சிற் றம்பலவர்
வாயின
கேட்டுஅறிவார் வையகத்தார் ஆவாரே.
பொழிப்புரை : பிறையைச்சூடிய தில்லைச்சிற்றம்பலவர்
ஆகிய பெருமானாரே தேவர்களுக்கும் மேம்பட்டவர் என்கின்றனர். இவரே எல்லோருக்கும்
தாயும் தந்தையும் ஆவார் என்கின்றனர். இவர் வாயிலிருந்து வரும் சொற்களைக் கேட்டு
அவற்றை மெய்ம்மொழி யாக மனங்கொள்பவர் இவ்வுலகத்தில் பலகாலம் இருப்பதனை விடுத்து
இறந்துபாடுற்று விரைவில் வானகத்தார் ஆவர்.
பாடல்
எண் : 7
ஆவா
இவர்தம் திருவடி கொண்டு அந்தகன்தன்
மூவா
உடல்அவியக் கொன்றுஉகந்த முக்கண்ணர்,
தேவாம்
மறைபயிலும் தில்லைச்சிற் றம்பலவர்
கோவாய்
இனவளைகள் கொள்வாரோ என்னையே.
பொழிப்புரை : தெய்வத்தன்மை பொருந்திய வேதஒலி பலகாலும்
கேட்கப்படுகின்ற தில்லைச்சிற்றம்பலத்துக் கூத்தனார் ஆகிய இவர், ஐயோ!
என்று கேட்டார் இரக்கப்படுமாறு தம்திருவடிகளால் காலனுடைய மூப்படையாத உடல்
அழியுமாறு அவனைக்கொன்று மகிழ்ந்த முக்கண்களைஉடைய மூர்த்தியாவர். அடியவன் ஒருவனைக்
காத்த அப்பெருமானார் எனக்குத் தலைவராய் வந்து யான்அணிந்த இனமான வளையல்களை
என்னிடமிருந்து கைப்பற்றி அவர் அடிய வளாகிய என்னைத் துன்புறுத்துவாரோ?
பாடல்
எண் : 8
என்னை
வலிவார்ஆர் என்ற இலங்கையர்கோன்
மன்னு
முடிகள் நெரித்த மணவாளர்
செந்நெல்
விளைகழனித் தில்லைச்சிற் றம்பலவர்
முன்னம்தான்
கண்டுஅறிவார் ஒவ்வார்இம் முத்தரே.
பொழிப்புரை : என்னைத் தம்வலிமையால் அடக்கவல்லவர்
யாவர் என்று கயிலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனுடைய நிலை பெற்ற முடிகளை நசுக்கிப்
பார்வதியின் அச்சத்தைப் போக்கிய மணவாளர் செந்நெல் விளையும் வயல்களால் சூழப்பட்ட
தில்லைச் சிற்றம்பலவர் ஆவர். இயல்பாகவே பாசங்கள் இல்லாத இப்பெருமான் முன்பு தம்மை
விரும்பியவர்களுடைய அச்சத்தைப் போக்குபவராக இருந்தமைபோல இக்காலத்தில் இருப்பவராகத்
தோன்றவில்லை.
பாடல்
எண் : 9
முத்தர்
முதுபகலே வந்து,என்தன் இல்புகுந்து,
பத்தர்
பலியிடுக என்றுஎங்கும் பார்க்கின்றார்,
சித்தர்
கணம்பயிலும் தில்லைச்சிற் றம்பலவர்
கைத்தலங்கள்
வீசிநின்று ஆடுங்கால் நோக்காரே.
பொழிப்புரை : இயல்பாகவே பாசங்கள் இல்லாத எம்பெருமான்
நண்பகல் நேரத்தில் வந்து அடியேனுடைய வீட்டில் புகுந்து `அன்பராய் உள்ளார் பிச்சை வழங்கட்டும்` என்று
வாயால் யாதும் பேசாமல் என் உருவம் முழுதும் பார்த்தவர், அத்தகைய, சான்றோர்கள் குழாம் நெருங்கிய
சிற்றம்பலப் பெருமான் தம் கைகளை வீசி ஆடுங்கால் பண்டுபார்த்து அடையாளம் கண்ட
அடியேனை நோக்குகின்றார் அல்லர்.
பாடல்
எண் : 10
நோக்காத
தன்மையால் நோக்கிலோம் யாம்என்று,
மாற்குஆழி
ஈந்து, மலரோனை நிந்தித்து,
சேக்கா
தலித்துஏறும் தில்லைச்சிற் றம்பலவர்
ஊர்க்கேவந்து
என்வளைகள் கொள்வாரோ ஒண்ணுதலீர்.
பொழிப்புரை : ஒளி பொருந்திய நெற்றியை உடைய என்
தோழிமீர்! காளைவாகனத்தை விரும்பி இவரும் தில்லைச்சிற்றம் பலவர் தம்மை
முழுமுதற்கடவுளாக மதித்த திருமாலுக்குச் சக்கராயுதம் வழங்கி, அவ்வாறு
மதிக்காத தன்மையால் நாம் உனக்கு அருள் செய்யக்கருதேம் என்று பிரமனைப் பழித்து அவன்
நடுத்தலையைக் கைந்நகத்தால் கிள்ளி எடுத்தவராவார். அப்பெருமான் என் ஊர்க்கண் வந்து
தன்னையே பரம் பொருளாக வழிபடும் என்னுடைய வளை களைக் கவர்ந்து என்னை வருத்துவாரோ?
பாடல்
எண் : 11
ஒண்நுதலி
காரணமா உம்பர் தொழுதுஏத்தும்
கண்ணுதலான்
தன்னைப் புருடோத் தமன்சொன்ன
பண்ணுதலைப்
பத்தும் பயின்றுஆடிப் பாடினார்,
எண்ணுதலைப்
பட்டுஅங்கு இனிதா இருப்பாரே.
பொழிப்புரை : தேவர்கள் தொழுது புகழும் நெற்றிக்கண்ண
னாகிய சிவபெருமானைப் பற்றித் தலைவி கூற்றாகப் புருடோத்தமன் பாடிய, யாழை
எழுவிப்பாடுதற்கு உற்ற தலையாய இப்பத்துப் பாடல்களையும் நன்கு உணர்ந்து ஆடிக்
கொண்டு பாடுபவர், இவ் வுலகில் எல்லோராலும் மதிக்கப்படுதலைப் பொருந்தி மறுமையில்
சிவலோகத்தில் மகிழ்வாக இருப்பார்கள்.
திருச்சிற்றம்பலம்
சேதிராயர் அருளிச் செய்தது
9. 28
கோயில் - சேலுலாம் பண்
- பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
சேல்உ
லாம்வயல் தில்லை உளீர்,உமைச்
சால
நாள் அயல் சார்வதி னால்இவள்
வேலை
ஆர்விடம் உண்டுஉகந் தீர்என்று
மால்அது
ஆகும்என் வாள்நுதலே.
பொழிப்புரை : சேல்மீன்கள் உலாவும் வயல்களை உடைய தில்லையம்பதியில்
உள்ள பெருமானே! என்னுடைய ஒளி பொருந்திய நெற்றியை உடைய மகளாகிய இத்தலைவி பல நாள்கள்
உம் அருகிலேயே பொருந்தியிருப்பதனால், `கடலில் தோன்றிய விடத்தை உண்டு
தேவர்களைக் காத்த மகிழ்ச்சியை உடையீர் நீர்` என்று உம் திறத்துக் காம மயக்கம்
கொண்டுள்ளாள்.
பாடல்
எண் : 2
வாள்நுதல்
கொடி மால்அது வாய்,மிக
நாணம்
அற்றனள் நான்அறி யேன்,இனிச்
சேணுதல்
பொலி தில்லை உளீர்,உமைக்
காணில்
எய்ப்புஇலள் காரிகையே.
பொழிப்புரை : என் அழகியமகளாகிய ஒளி பொருந்திய
நெற்றியை உடைய இக்கொடி போல்வாள் மிகவும் காம மயக்கம் கொண்டு நாணமற்றவளாய் உள்ளாள்.
இவளைப்பழைய நிலையில் கொண்டுவரும் வழியை நான் அறியேன். மாளிகைகளின் மேற்பகுதி
ஆகாயம் வரையில் உயர்ந்த மாளிகைகளை உடைய தில்லையம் பதியில் உள்ள பெருமானே! உம்மைக்
கண்டால் இவள் மெலிவு இல்லாதவள் ஆவாள். ஆதலின் இவளுக்கு நீர் காட்சியையாவது
வழங்குதல் வேண்டும்.
பாடல்
எண் : 3
காரி
கைக்குஅரு ளீர்,கரு மால்கரி
ஈர்
உரித்துஎழு போர்வையி னீர்,மிகு
சீர்இயல்
தில்லை யாய்,சிவ னே,என்று
வேரி
நல்குழ லாள்இவள் விம்முமே.
பொழிப்புரை : கரிய பெரிய யானையின் தோலைக் கிழித்து
உரித்து அதனை மேற்போர்வையாக அணிந்தவரே! `மேம்பட்ட சிறப்பினை உடைய தில்லை நகரில்
உள்ளவனே! சிவபெருமானே!` என்று தேன் பொருந்திய நல்ல கூந்தலைஉடைய
இவள் நாக்குழறிப்பேசுகிறாள். இப்பெண்ணுக்கு நீர் அருள் செய்வீராக.
பாடல்
எண் : 4
விம்மி
விம்மியே வெய்துஉயிர்த் தாள்எனா,
உம்மை
யேநினைந்து ஏத்தும் ஒன்றுஆகிலள்
செம்ம
லோர்பயில் தில்லையு ளீர்எங்கள்
அம்மல்
ஓதி அயர்வு உறுமே.
பொழிப்புரை : பெரிதும் தேம்பிப் பெருமூச்சுவிட்டு
அடியேனை ஆண்டுகொள்வாயாக என்று உம்மையே விருப்புற்று நினைத்துப் புகழ்கிறாள். இவள்
ஒருதிறத்தும் ஆற்றுவிக்க இயலாதவளாக உள்ளாள். சான்றோர்கள் வாழும் தில்லை நகரில்
உள்ள பெருமானே! எங்களுடைய அழகிய கரிய மயிர்முடியை உடைய பெண் பெரிதும்
மயங்குகிறாள்.
பாடல்
எண் : 5
அயர்வுஉற்று
அஞ்சலி கூப்பி, அந்தோ,எனை
உயஉன்
கொன்றையந் தார்அரு ளாய்எனும்,
செயல்உற்
றார்மதில் தில்லையு ளீர்,இவண்
மயல்உற்
றாள்என்தன் மாதுஇவளே.
பொழிப்புரை : என் மகளாகிய இப்பெண் சோர்ந்து கைகளைக்
கூப்பி `ஐயோ!
என்னை வாழச்செய்ய உன் கொன்றைப் பூமாலையை அருளுவாயாக` என்று உம்மை வேண்டுகிறாள்.
வேலைப்பாடுகள் அமைத்து நிறைந்த மதில்களைஉடைய தில்லைநகரில் உள்ள பெருமானீரே! நீர்
இப்பெண்ணுக்கு அருள் செய்யுங்கள்!
பாடல்
எண் : 6
மாதொர்
கூறன்,வண்டு ஆர்கொன்றை மார்பன்,என்று
ஓதில்
உய்வன், ஒண் பைங்கிளி யேஎனும்,
சேதித்
தீர்சிரம் நான்முக னை,தில்லை
வாதித்
தீர்என்ம டக்கொடியையே.
பொழிப்புரை : `ஒளிபொருந்திய
பச்சைக்கிளியே! பார்வதிபாகன், வளமான கொன்றைப்பூவினை அணிந்த மார்பினன்
என்று நீ கூறினால் நான் பிழைப்பேன்` என்று என் இளைய கொடிபோல்வாள் ஆகிய மகள்
கூறுகிறாள். பிரமனுடைய தலையைப் போக்கினவரே! தில்லைக் கண்நின்று இவளை வருந்தப்
பண்ணினீர்; இது தகுமோ?
பாடல்
எண் : 7
கொடியை, கோமளச்
சாதியை, கொம்புஇளம்
பிடியை, என்செய்திட்
டீர்,பகைத் தார்புரம்
இடியச்
செஞ்சிலை கால்வளைத் தீர்என்று,
முடியும்
நீர்செய்த மூச்சுஅறவே.
பொழிப்புரை : `பகைவருடைய
மும்மதில்களும் அழியுமாறு செந் நிறமுடைய மேருமலையை இருகால்களும் அணுகவருமாறு வளைத்
தவரே!` என்று
பூங்கொடி, அழகிய
சண்பகப்பூ, பூங்கொம்பு, இளைய பெண்யானை இவற்றைப் போன்ற என்மகள்
வருந்தி நிற்கின்றாள். நீர் செய்துள்ள இந்த இறந்து படும்நிலை இவளுக்கு எந்நாள்
நீங்கும்? நீர்
என்னகாரியம் செய்துவிட்டீர்?
பாடல்
எண் : 8
அறவ
னே,அன்று
பன்றிப் பின்ஏகிய
மறவ
னே,எனை
வாதைசெய் யேல்எனும்,
சிறைவண்டு
ஆர்பொழில் தில்லையு ளீர்எனும்,
பிறைகு
லாம்நுதல் பெய்வளையே.
பொழிப்புரை : ``அறவடிவினனே!
முன்னொருகால் பன்றியின் பின்னே அதனைவேட்டையாடச் சென்றவேடனே! என்னைத்
துன்புறுத்தாதே`` என்கிறாள். பிறைபோன்ற நெற்றியை உடைய வளாய் வளையல்களை அணிந்த
என் மகள் `சிறகுகளை
உடைய வண்டுகள் பொருந்திய சோலைகளைஉடைய தில்லைநகரில் இருப்பவரே!` என்று
உம்மை அழைக்கிறாள்.
பாடல்
எண் : 9
அன்றுஅ
ருக்கனைப் பல்இறுத்து, ஆனையைக்
கொன்று, காலனைக்
கோள் இழைத் தீர்எனும்,
தென்றல்
ஆர்பொழில் தில்லையு ளீர்,இவள்
ஒன்றும்
ஆகிலள் உம்பொருட்டே.
பொழிப்புரை : தென்றல் காற்று வீசும் சோலைகளைஉடைய
தில்லைநகரில் உள்ளவரே! என்மகள் `ஒருகாலத்தில் சூரியனுடைய
பற்களைத்தகர்த்து, யானையைக் கொன்று, இயமனைக்
கொலை செய்தவர் நீங்கள்` என்று கூறிக்கொண்டே இருக்கிறாள்.
என்மகள் உம்மை அடைய வேண்டி ஒன்றும் ஆகாமல் நாளும் அழிந்து கொண்டிருக்கிறாள்.
பாடல்
எண் : 10
ஏயு
மாறுஎழில் சேதிபர் கோன்தில்லை
நாய
னாரை நயந்துஉரை செய்தன
தூய
வாறுஉரைப் பார்,துறக் கத்துஇடை
ஆய
இன்பம் எய்தி இருப்பரே.
பொழிப்புரை : பொருந்தும் வகையில் தில்லை நாயனாராகிய
சிவபெருமானைப் பற்றி அழகிய சேதி நாட்டு மன்னன் விரும்பி உரைத்த இப்பாடல்களை, எழுத்துப்பிழை, சொற்பிழை
தோன்றாத வாறு தூய்மையாகப் பாடுபவர்கள் சிவலோகத்தில் உள்ள இன்பத்தை மறுமையில்
பொருந்தி என்றும் மகிழ்வாக இருப்பர்.
திருச்சிற்றம்பலம்
சேந்தனார் அருளிச் செய்தது
9. 29 கோயில் - திருப்பல்லாண்டு பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
மன்னுக
தில்லை, வளர்கநம் பத்தர்கள்,
வஞ்சகர் போய்அகல,
பொன்னின்செய்
மண்டபத் துஉள்ளே புகுந்து,
புவனிஎல் லாம்விளங்க,
அன்ன
நடைமட வாள்உமை கோன்,அடி
யோமுக்கு அருள்புரிந்து,
பின்னைப்
பிறவி அறுக்க நெறிதந்த பித்தற்குப்
பல்லாண்டு கூறுதுமே.
பொழிப்புரை : தில்லைத் திருநகரம் என்றும் நிலைபெறுக; நம்
அடியார்கள் பல்லாண்டு வாழ்க; அடிமை செய்ய ஒருப்படாதவர்கள் இல்லாதொழிய, பொன்மயமான
மண்டபத்திலே நுழைந்து உலக மெல்லாம் நிலைபெறுமாறு நின்று, அன்னம் போன்ற நடையினை உடைய இளையள் ஆகிய
உமாதேவியின் தலைவன், அடியவர் களாகிய நமக்கு அருள் பாலித்து
மேல்வரும் பிறவியை நாம் அறுத்துக் கொள்ளும்படி அடியேமுக்குத் தன் திருக்கூத்தாகிய
அருளைப் பொழிந்து திருவடி ஞானத்தை அருளியுள்ளான். அந்தப்பித்தனை நாம் பல்லாண்டு
வாழ்க என்று வாழ்த்துவோமாக.
பாடல்
எண் : 2
மிண்டு
மனத்தவர் போமின்கள்,
மெய்அடியார்கள் விரைந்து வம்மின்,
கொண்டும்
கொடுத்தும் குடிகுடி ஈசற்குஆட்
செய்மின், குழாம்புகுந்து,
அண்டங்கடந்த
பொருள்,அளவு இல்லதுஓர்
ஆனந்த வெள்ளப்பொருள்,
பண்டும்
இன்றும் என்றும் உள்ளபொருள், என்றே
பல்லாண்டு கூறுதுமே.
பொழிப்புரை : எம் பெருமான் திறத்து உருகாத
மனமுடையவர்கள் எங்களை விடுத்து நீங்குங்கள். உண்மை அடியவர்கள் விரைந்து வாருங்கள்.
நம்மை அடக்கியாளும் இறைவன்பால் அவனுடைய திருவருளைக் கொண்டும் நம் உடல் பொருள் ஆவி
அனைத்தையும் அவனுக்கு வழங்கியும் எல்லாக்குடிகளில் உள்ளவர்களும் அடிமை
செய்யுங்கள். கூட்டமாகத் திருவம்பலத்துக்குச் சென்று, `உலகங்களைக் கடந்தபொருள், எல்லையற்ற
ஆனந்தப் பெருக்காகிய பொருள், பண்டும் இன்றும் என்றும் உள்ள காலம்
கடந்தபொருள்` ஆகிய நம் பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.
பாடல்
எண் : 3
நிட்டை
இலாஉடல் நீத்து,என்னை ஆண்ட
நிகர்இலா வண்ணங்களும்,
சிட்டன்
சிவன்அடி யாரைச்சீர் ஆட்டும்
திறங்களு மேசிந்தித்து,
அட்டமூர்த்
திக்கு,என் அகம்நெக ஊறும்
அமிர்தினுக்கு,
ஆலநிழல்
பட்டனுக்கு, என்னைத்தன்
பால்படுத் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
பொழிப்புரை : இறைவனிடத்து அசையாது ஈடுபட்டு நிற்றல்
இல்லாத அடியேனுடைய உடலை நிட்டைக்குத் துணைசெய்வதாக மாற்றி அடியேனை ஆட்கொண்ட
நிகரில்லாச் செயல்களையும், மேம் பட்டவன் ஆகிய சிவபெருமான் தன்
அடியவர்களைப் பெருமைப் படுத்தும் செயல்களையுமே மனத்துக்கொண்டு அட்டமூர்த்தியாய், என்
மனம் நெகிழுமாறு ஊறும் அமுதமாய் ,ஆலமரத்தின் நிழலில் அமர்ந்த
குருமூர்த்தியாய், அடியேனைத்தன் அடிமையாக ஆட் கொண்ட
நம்பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.
பாடல்
எண் : 4
சொல்ஆண்ட
சுருதிப்பொருள் சோதித்த
தூய்மனத் தொண்டர்உள்ளீர்,
சில்ஆண்
டில்சிதை யும்சில தேவர்
சிறுநெறி சேராமே,
வில்ஆண்டகன
கத்திரள், மேரு
விடங்கன், விடைப்பாகன்,
பல்ஆண்டு
என்னும் பதம்கடந் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
பொழிப்புரை : மெய்ம்மொழிகளால் நிறைந்த வேதப்பொருள்
களை ஆராய்ந்து துணிந்த தூயமனத்தை உடைய அடியீர்களே! சில ஆண்டுகளில் மறைந்து அழியும்
சிலதேவர்களைப் பரம்பொருளாகக் கருதும் சிறிய வழியில் ஈடுபடாமல், பொன்மலையாகிய
மேரு மலையை வில்லாகப் பணிகொண்டஅழகனாய், காளையை வாகன மாக உடையவனாய், பல
ஆண்டுகள் என்ற காலத்தைக் கடந்தவனாய் உள்ள சிவபெருமான் பல்லாண்டு வாழ்க என்று
வாழ்த்துவோமாக.
பாடல்
எண் : 5
புரந்தரன்
மால் அயன் பூசலிட்டு, ஓலம்இட்டு,
இன்னம் புகல்அரிதாய்,
இரந்துஇரந்து
அழைப்பஎன் உயிர்ஆண்ட கோவினுக்கு
என்செய வல்லம்என்றும்,
கரந்தும்
கரவாத கற்பகன் ஆகிக்
கரையில் கருணைக்கடல்,
பரந்தும்
நிரந்தும் வரம்புஇலாப் பாங்கற்கே
பல்லாண்டு கூறுதுமே.
பொழிப்புரை : இந்திரன், திருமால், பிரமன் முதலியோர் செருக்குத் தோன்ற
முதன்மை பாராட்டி ஆரவாரம் செய்து, பின் இன்று வரை எம்பெருமானைச் சரண்
என்று அடைய இயலாதவராய், பல காலும் கெஞ்சிக்கெஞ்சி அழைக்கவும், அடியேமுடைய
உயிரை ஆட் கொண்ட தலைவனுக்கு என்ன கைம்மாறு அடியேம் செய்யும் ஆற்றலுடையேம்? எக்காலத்தும்
கண்ணுக்குப் புலனாகாமல் இருந்தும் வேண்டியவற்றை வேண்டியவாறு நல்கும் கற்பக மரம்
போல் பவனாய், எல்லையற்ற கருணைக் கடலாய் எல்லா இடங்களிலும் விரிந்தும்
இடையீடின்றி நிறைந்தும் எல்லைகடந்து நிற்கும் அடிகள் ஆகிய நம்பெருமான் பல்லாண்டு
வாழ்க என்று வாழ்த்துவோம்.
பாடல்
எண் : 6
சேவிக்க
வந்தஅயன் இந்திரன் செங்கண்மால்
எங்குந் திசைதிசையன,
கூவிக்
கவர்ந்து நெருங்கிக் குழாங்குழா
மாய்நின்று கூத்தாடும்
ஆவிக்கு
அமுதை,என் ஆர்வத் தனத்தினை,
அப்பனை, ஒப்புஅமரர்
பாவிக்கும்
பாவகத்து அப்புறத் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
பொழிப்புரை : வழிபடவந்த பிரமன், இந்திரன், சிவந்த
கண்களை உடைய திருமால் எங்கும் பல திசைகளாகிய இடங்களில் அழைத்து, வழிபாட்டுப்
பொருள்களைக் கைக்கொண்டு நெருங்கிக் கூட்டம் கூட்டமாய் நிற்க, திருக்கூத்தினை
நிகழ்த்தும், என் உயிருக்கு அமுதம் போல்பவனாய், என் அவாவிற்கு உரிய செல்வமாய், எங்கள்
தலைவனாய், பிறப்புவகையால்
ஒரு நிகரான தேவர்கள் நினையும் நினைவுக்கு அகப்படாமல் அவர்கள் நினைவையும் கடந்து
நிற்கும் நம்பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.
பாடல்
எண் : 7
சீரும்
திருவும் பொலியச் சிவலோக
நாயகன் சேவடிக்கீழ்
ஆரும்
பெறாத அறிவுபெற் றேன்,பெற்றது
ஆர்பெறு வார்உலகில்,
ஊரும்
உலகும் கழற உழறி,
உமைமண வாளனுக்குஆட்
பாரும்
விசும்பும் அறியும் பரிசுநாம்
பல்லாண்டு கூறுதுமே.
பொழிப்புரை : சிவநெறி ஒழுக்கமும் அவன் திருவருளும்
அடியேனிடத்து நிலைபெற்று விளங்கும்படி, அச்சிவலோக நாயக னான பெருமானுடைய
திருவடிகளின் கீழ் மற்ற யாவரும் பெறாததான `யாவரையும் யாவற்றையும் உடையவன்
சிவபெருமானே` என்று அறியும் அறிவினைப் பெற்றேன். அவ்வறிவால் அடியேன் பெற்ற
பேற்றினை வேறுயாவர் பெறக்கூடும்? இவ்வுலகில் நாட்டில் உள்ளா ரும் ஊரில்
உள்ளாரும் எடுத்துக் கூறும்படி, அவன்புகழைப் பிதற்றி உமாதேவியின்
கணவனாகிய எம்பெருமானுக்கு நாம் அடிமையாகிய திறத்தை இந்நிலவுலகத்தாரும் தேவர்
உலகத்தாரும் அறியும் வகையில் அப்பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.
பாடல்
எண் : 8
சேலும்
கயலும் திளைக்கும்கண் ணார்இளம்
கொங்கையில் செங்குங்குமம்
போலும்
பொடிஅணி மார்புஇலங் கும்என்று
புண்ணியர் போற்றிசைப்ப
மாலும்
அயனும் அறியா நெறிதந்து,
வந்துஎன் மனத்துஅகத்தே
பாலும்
அமுதமும் ஒத்துநின் றானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
பொழிப்புரை : `சேல்
மீனையும் கயல் மீனையும் உவமை கூறும் படியான கண்களைஉடைய இளமகளிரின் கொங்கைகளில்
பூசப்படும் குங்குமத்தைப் போல எம்பெருமான் திருமார்பில் திருநீறு விளங்கு கிறது` என்று
அடியவர்கள் புகழ்ந்து கூற, திருமாலும் பிரமனும் அறிய முடியாத
வழியைக்காட்டி அடியேனுடைய உள்ளத்தினுள் பாலும் அமுதும் ஒத்து இனிமையானவனாகியும், புத்துயிர்
அளிப்பவனாகி யும், நிலை பெற்றிருக்கும் எம்பெருமான்
பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்து வோமாக.
பாடல்
எண் : 9
பாலுக்குப்
பாலகன் வேண்டி அழுதிடப்
பாற்கடல் ஈந்தபிரான்,
மாலுக்குச்
சக்கரம் அன்றுஅருள் செய்தவன்,
மன்னிய தில்லைதன்னுள்
ஆலிக்கும்
அந்தணர் வாழ்கின்ற சிற்றம்
பலமே இடமாகப்
பாலித்து, நட்டம்
பயிலவல் லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
பொழிப்புரை : பாலை உண்பதற்கு வியாக்கிர பாதமுனிவர்
புதல் வனாகிய உபமன்யு என்ற சிறுவன் விரும்பிப் பால்பெறாது அழுது, வருந்த
அவனுக்குப் பாற்கடலையே அழைத்து வழங்கிய பெரு மானாய், ஒருகாலத்தில் திருமாலுக்குச்
சக்கராயுதத்தை அருள் செய்தவனாய், நிலைபெற்ற தில்லைத்திருப்பதியிலே வேதம்
ஓதும் அந்தணர்கள் வாழ்தற்கு முதலாய் நிற்கின்ற சிற்றம்பலத்தையே இடமாக்கொண்டு, அருளைவழங்கி
நாட்டியத்தை நிகழ்த்தும் எம் பெருமான் பல்லான்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.
பாடல்
எண் : 10
தாதையைத்
தாள்அற வீசிய சண்டிக்குஅவ்
அண்டத் தொடும் உடனே
பூதலத்
தோரும் வணங்கப்பொன் கோயிலும்
போனக மும் அருளி,
சோதி
மணிமுடித் தாமமும், நாமமும்,
தொண்டர்க்கு நாயகமும்,
பாதகத்
துக்குப் பரிசுவைத் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
பொழிப்புரை : தம் தந்தையின் கால்கள் நீங்கும்படி மழு
வாயுதத்தை வீசிய சண்டேசுர நாயனாருக்கு அந்தவானுலகத் தோடு நிலஉலகத்தவரும் ஒருசேர
வணங்குமாறு அழகிய இருப்பிடமும் தனக்கு நிவேதித்த உணவும் வழங்கி, ஒளி
பொருந்திய அழகிய முடியில் அணிந்த தன் மாலையும் சண்டன் என்ற சிறப்புப் பெயரும், அடியவர்களுக்குத்
தலைமையும், தாம் செய்த பாதகச் செயலுக்குப் பரிசாக வழங்கிய எம்பெருமான்
பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்து வோமாக.
பாடல்
எண் : 11
குழல்ஒலி, யாழ்ஒலி, கூத்துஒலி, ஏத்துஒலி,
எங்கும் குழாம்பெருகி
விழவுஒலி
விண்அள வும்சென்று விம்மி
மிகுதிரு வாரூரில்,
மழவிடை
யாற்கு வழிவழி ஆளாய்
மணம்செய் குடிப்பிறந்த
பழஅடி
யாரொடும் கூடி,எம் மானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
பொழிப்புரை : வேய்ங்குழல் இசை, யாழின்
இசை, கூத்தாடுதலின்
ஓசை, துதித்தலின்
ஓசை என்பன கூட்டமாகப்பெருகித் திருவிழா நாளில் நிகழ்த்தப்படும் ஓசையோடுகூடி
வானத்தளவும் சென்று பெருகி மிகுகின்ற திருவாரூரில் இளைய காளையை வாகனமாக உடைய
சிவபெருமானுக்குப் பரம்பரை பரம்பரையாக அடிமையாய் அத்தகைய குடும்பங்களுக்குள்ளேயே
திருமணம் செய்துகொள்கின்ற அடியவர் குடும்பங்களில் பிறந்த பழ அடியாரோடும் கூடி எம்
பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.
பாடல்
எண் : 12
ஆர்ஆர்
வந்தார் அமரர் குழாத்தில்
அணிஉடை ஆதிரைநாள்,
நாரா
யணனொடு நான்முகன் அங்கி
இரவியும் இந்திரனும்
தேரார்
வீதியில் தேவர் குழாங்கள்
திசைஅனைத்தும் நிறைந்து
பார்ஆர்
தொல்புகழ் பாடியும் ஆடியும்
பல்லாண்டு கூறுதுமே.
பொழிப்புரை : அழகினை உடைய ஆதிரைத்திருநாளில் தேவர்
கூட்டத்தில் யாவர்யாவர் தரிசிக்கவந்தனர் எனின், திருமால், நான் முகன், அக்கினி, சூரியன், இந்திரன் முதலியோர் வந்தனர். தேர்ஓடும்
வீதியில் தேவர் கூட்டங்கள் நாற்றிசையும் நிறைய, நிலவுலகெங்கும் நிறைந்த சிவபெருமானுடைய
பழமையான புகழைப்பாடியும் ,அதற்கு ஏற்ப ஆடியும், அந்த
ஆதிரைநாளை உடைய அப்பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.
பாடல்
எண் : 13
எந்தைஎந்
தாய்சுற்றம் முற்றும் எமக்குஅமுது
ஆம்எம் பிரான்என்று என்று
சிந்தை
செய்யும் சிவன் சீர்அடியார்
அடிநாய் செப்புஉரை
அந்தம்இல்
ஆனந்தச் சேந்தன் எனைப்புகுந்து
ஆண்டுகொண்டு ஆருயிர்மேல்
பந்தம்
பிரியப் பரிந்தவ னேஎன்று
பல்லாண்டு கூறுதுமே.
பொழிப்புரை : எம்தந்தை, எம்தாய், எம்சுற்றம் முதலிய எல்லாப் பொருள்களும்
எமக்கு அமுதம் போன்று இனிக்கும் சிவபெருமானே என்று தியானம் செய்யும், சிவபெருமானுடைய
சிறப்புடைய அடியவர்களின் திருவடிகளை வழிபடும் நாய்போல இழிந்தவனாகிய சேந்தன், `அழிவில்லாத
ஆனந்தத்தை வழங்கும் சிறந்த தேன் போலவந்து அடிமையாகக் கொண்டு அரிய உயிரின்மேல்
நிற்கும் கட்டு நீங்குமாறு அருள் செய்தபெருமானே` என்று வாழ்த்தும் அப்பெருமான் பல்லாண்டு
வாழ்க என்று வாழ்த்துவோமாக.
திருச்சிற்றம்பலம்
ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
அருளிய
க்ஷேத்திரத் திருவெண்பா
பாடல்
எண் : 1
ஒடுகின்ற
நீர்மை ஒழிதலுமே, உற்றாரும்
கோடுகின்றார், மூப்பும்
குறுகிற்று, நாடுகின்ற
நல்அச்சுஇற்
றுஅம்பலமே நண்ணாமுன், நன்னெஞ்சே,
தில்லைச்சிற்
றம்பலமே சேர்.
நடந்து செல்லதல் மட்டுமல்லாது ஓடிச்
செல்லவும் இருந்த வலிமை நீங்கின் போது, நமக்கு உற்றவர்களான மனைவி, மக்கள்
முதலாயினார் மனம் மாறி விடுவர். இளமை மாறி முதுமையும் வந்தது. மிகவும் விரும்பப்பட்ட,
வண்டியில் சுமையைத்
தாங்குகின்ற நல்ல அச்சுப் போன்ற இந்த உடம்பானது, செயல்
அற்று வீழ்ந்து விடும். அப்படி வாழ்ந்த
உடலுக்கு இடம் யாவருக்கும் உரிய மயானம்தான்.
அம்பலம் என்று சொல்லப்படும் அந்த இடத்தை நாடுவதை விடுத்து, நல்ல நெறியையே பற்றுவதற்கு உரிய எனது
நல்ல நெஞ்சமே, தில்லைச் சிற்றம்பலத்தைச் சேர்ந்து வழிபட்டு உய்வாயாக.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment