திருச்செந்தூர் - 0044. களபம் ஒழுகிய


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

களபம் ஒழுகிய (திருச்செந்தூர்)

பொதுமாதர் உறவு நீங்க

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன ...... தனதான

களப மொழுகிய புளகித முலையினர்
      கடுவு மமிர்தமும் விரவிய விழியினர்
      கழுவு சரிபுழு கொழுகிய குழலினர் .....    எவரோடும்
    
கலக மிடுகய லெறிகுழை விரகியர்
      பொருளி லிளைஞரை விழிகொடு மொழிகொடு
      தளர விடுபவர் தெருவினி லெவரையு.....   நகையாடிப்
  
பிளவு பெறிலதி லளவள வொழுகியர்
      நடையி லுடையினி லழகொடு திரிபவர்
      பெருகு பொருள் செறில் அமளியி லிதமொடு....  குழைவோடே
    
பிணமு மணைபவர் வெறிதரு புனலுணு
      மவச வநிதையர் முடுகொடு மணைபவர்
      பெருமை யுடையவ ருறவினை விடஅருள்.....   புரிவாயே
  
அளையி லுறைபுலி பெறுமக வயில்தரு
      பசுவி னிரைமுலை யமுதுண நிரைமகள்
      வசவ னொடுபுலி முலையுண மலையுடன்....   உருகாநீள்
    
அடவி தனிலுள உலவைகள் தளிர்விட
      மருள மதமொடு களிறுகள் பிடியுடன்
      அகல வெளியுயர் பறவைகள் நிலம்வர.....    விரல்சேரேழ்

துளைகள் விடுகழை விரல்முறை தடவிய
      இசைகள் பலபல தொனிதரு கருமுகில்
      சுருதி யுடையவன் நெடியவன் மனமகிழ்.....  மருகோனே
    
துணைவ குணதர சரவண பவநம
      முருக குருபர வளரறு முககுக
      துறையி லலையெறி திருநகர் உறைதரு.....   பெருமாளே.


பதம் பிரித்தல்


களபம் ஒழுகிய புளகித முலையினர்,
     கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர்,
     கழுவு சரி புழுகு ஒழுகிய குழலினர், ...... எவரோடும்

கலகம் இடுகயல் எறிகுழை விரகியர்,
     பொருளில் இளைஞரை வழிகொடு, மொழிகொடு,
     தளர விடுபவர், தெருவினில் எவரையும் ...... நகையாடி,

பிளவு பெறில், அதில் அளவுஅளவு ஒழுகியர்,
     நடையில் உடையினில் அழகொடு திரிபவர்,
     பெருகு பொருள் பெறில் அமளியில் இதமொடு, ...... குழைவோடே,
  
பிணமும் அணைபவர், வெறிதரு புனல்உணும்
     அவச வனிதையர், முடுகொடும் அணைபவர்,
     பெருமை உடையவர், உறவினை விட,அருள் ...... புரிவாயே.

அளையில் உறை புலி பெறுமகவு வயிறுஅரு
     பசுவின் நிரைமுலை அமுது உண நிரைமகள்
     வசவனொடு புலி முலைஉண மலையுடன் ...... உருகாநீள்

அடவி தனில்உள உலவைகள் தளிர்விட,
     மருள, மதமொடு களிறுகள் பிடியுடன்
     அகல, வெளிஉயர் பறவைகள் நிலம்வர, ...... விரல்சேரேழ்

தொளைகள் விடுகழை விரல்முறை தடவிய
     இசைகள் பலபல தொனிதரு கருமுகில்,
     சுருதி உடையவன், நெடியவன், மனமகிழ் ...... மருகோனே!

துணைவ! குணதர! சரவண பவ நம!
     முருக! குருபர! வளர்அறுமுக! குக!
     துறையில் அலைஎறி திருநகர் உறைதரு ...... பெருமாளே.


பதவுரை

         அளையில் உறை புலி பெறு மகவு அயில் தரு --- மலைக்குகையில் வாழ்கின்ற புலி பெற்ற குட்டி குடிக்கின்ற,

     பசுவின் நிரை முலை அமுது உண --- பசுக்கூட்டத்திற் சென்று பசுவின் மடியில் வாய் வைத்துப் பால் உண்ணவும்,

     நிரைமகள் வசவனொடு புலி முலை உண --- பசுவின் பெண்கன்று ஆண் கன்றுடன் புலியின் முலையில் வாய் வைத்துப் பால் குடிக்கவும்,

     மலை உடன் உருகா --- (மண், மரம் முதலிய பொருளும்) மலையும் அப்படியே உருகவும்.

     நீள் அடவிதனில உள உலவைகள் தளிர்விட --- நீண்ட கானகத்திலேயுள்ள (உலர்ந்த) மரங்கள் தளிர்விடவும்,

     மருள --- உயிர்கள் எல்லாம் திகைக்கவும்,

     மதமொடு களிறுகள் பிடியுடன் அகல --- மதங்கொண்ட ஆண் யானைகள் பெண் யானையுடன் ஒருபுறம் போகவும்,

     வெளி உயர் பறவைகள் நிலம் வர --- ஆகாயத்தில் உயரத்தில் உள்ள பறவைகள் நிலத்தில் வந்துசேரவும்.

     விரல்சேர் ஏழ்தொளைகள் விடுகழை விரல்முறை தடவி --- விரல்களால் தடவுகின்ற ஏழு தொளைகள் விட்டுள்ள புல்லாங்குழலில் தமது திருவிரலால் தடவுவதால் எழுகின்ற,

     இசைகள் பல பல தொனி தரு --- பல்வேறு இசைகளை இனிய நாதத்துடன் உண்டாக்குகின்ற,

     கருமுகில் --- கரியமேகம் போன்ற கண்ணபிரான்,

     சுருதி உடையவர் --- வேதப் பொருளாக உடையவர்.

     நெடியவன் --- நீண்டவராகிய திரு வாசு தேவன்,

     மனம் மகிழ் மருகோனே --- திருவுள்ளம் மகிழ்கின்ற திருமருகரே!

         துணைவ --- அடியேனுக்கு அரிய துணைவரே!

         குணதர --- குணத்தை அணிகலமாகத் தரித்தவரே!

         சரவணபவ --- சரவணபவா,

     நம --- வணங்கத் தக்கவரே!

         முருக --- முருகப்பெருமானே!

         குருபர --- குருமுர்த்தியே!
        
         வளர் அறுமுக --- புகழ் என்றும் வளர்கின்ற ஆறுமுகக் கடவுளே!

         குக --- ஆன்மாக்களின் இதய குகையில் வசிக்கின்றவரே!

         துறையில் அலை எறி திருநகர் உறை தரு பெருமாளே --- கரையில் அலைகள் வீசுகின்ற திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள பெருமையில் மிகுந்தவரே!

         களபம் ஒழுகிய புளகித முலையினர் --- கஸ்தூரி சந்தனம் முதலிய கலவைச் சாந்து ஒழுகிய பூரித்த தனங்களை யுடையவரும்,

     கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர் --- நஞ்சும் அமிர்தமும் கலந்த கண்களை உடையவர்களும்,

     கழுவு சரி புழுகு ஒழுகிய குழலினர் --- கழுவி எடுத்த நல்ல வாசனைத் தைலம் ஒழுகும் கூந்தலையுடையவரும்,

     எவரோடும் கலகம் இடு கயல் எறி குழை விரகியர் --- எல்லாரோடும் கலகம் புரிகின்ற கயல்மீன் போன்ற கண்கள் நீண்டு மோதுகின்ற குழைகளை அணிந்துள்ள உபாயம் உடையவர்களும்,

     பொருள் இல் இளைஞரை வழிகொடு மொழிகொடு --- பணம் இல்லாத இளைஞர்களை தமது வழிப்படுத்தி இனிய மொழிகளால்,

     தளர விடுபவர் --- தளர்ச்சியடையச் செய்பவரும்.   தெருவினில் எவரையும் நகையாடி --- வீதியில் கண்டவர்களுடன் நகைத்துப் பேசி,

     பிளவு பெறில் அதில் அளவு அளவு ஒழுகியவர் --- பிரிவு ஏற்பட்டால் அதற்குத் தக்கவாறெல்லாம் ஒழுகுகின்றவரும்,

     நடையில் உடையில் அழகொடு திரிபவர் --- நடையினாலும் உடையினாலும் அழகாகத் திரிபவர்களும்,

     பெருகு பொருள் பெறில் --- நிரம்பப் பணம் கிடைத்தால்,

     அமளியில் இதமொடு குழைவோடே --- படுக்கையில் இன்பத்துடனும் உருக்கத்துடனும்,

     பிணமும் அணைபவர் --- பிணம் போன்றவர்களையும் தழுவுபவர்களும்,

     வெறிதரு புனல் உணும் அவச வநிதையர் --- வெறியைக் கொடுக்கும் கள்ளை உண்ணும் மயக்கமடையும் பெண்களும்,

     முடுகொடும் அணைபவர் --- வேகத்துடன் அணைபவர்களும்,

     பெருமை உடையவர் --- அகந்தை யுடையவருமாகிய பொது மகளிரின்,

     உறவினை விட அருள் புரிவாயே --- நட்பை விடுமாறு திருவருள் புரிவீர்.

பொழிப்புரை

         மலைக் குகையில் வாழ்கின்ற புலியின் குட்டி பசுக்களின் மடியில் பால் குடிக்கவும், பசுவினுடைய ஆண் பெண் கன்றுகள் புலியின் முலையில் வாய் வைத்துப் பால் குடிக்கவும், மலை முதலியன இசையைக் கேட்டு உருகவும், நீண்ட கானகத்தில் உள்ள உலர்ந்த மரங்கள் தளிர்க்கவும், எல்லா உயிர்களும் அந்த இசையைக் கேட்டு உள்ளம் மயங்கவும், மதங்கொண்ட யானைகள் பெண் யானையுடன் ஒருபுறம் போகவும், உயரத்தில் பறக்கும் பறவைகள் நிலத்தில் இறங்கி வரவும். விரல் வைத்து வாசிக்கக் கூடிய ஏழு தொளைகள் விட்டுள்ள புல்லாங்குழலை விரல்களினால் முறையே தடவி, பலப்பல விதமான இன்னிசைகளை உண்டாக்கிய நீலமேகம் போன்றவரும், வேதத்தின் பொருளாக விளங்குபவரும், நீண்ட உறவினரும் ஆகிய திருமாலின் மருகரே!

         அடியேனுக்கு அருந் துணையானவரே!

         அருட் குணங்களை யுடையவரே!

         சரவணபவரே!

         வணக்கத்திற்கு உரியவரே!

         முருகக் கடவுளே!

         குருமூர்த்தியே!

         புகழ் வளர்கின்ற ஆறுமுகக் கடவுளே!

         உயிர்களின் இதய குகையில் வாழ்பவரே!

     கரையில் அலைகள் மோதுகின்ற திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே!

         சந்தனக் கலவை  ஒழுகும் பூரித்த தனங்களை உடையவரும், நஞ்சும் அமிர்தமும் சேர்ந்த கண்களை யுடையவரும், கழுவிய நல்ல புனுகு என்ற வாசனை ஒழுகிய கூந்தலையுடையவரும், எல்லோரிடமும் கலகம் புரியும் கயல் போன்ற கண்கள் மோதுகின்ற குழைகள் அணிந்த தந்திரக்காரரும், பொருள் இல்லாத இளைஞர்களைத் தமது வழிப்படுமாறு இன்மொழிகளைப் பேசியும் தளர்ச்சியடைச் செய்பவரும், வீதியில் கண்டவர்களுடன் புன்னகை புரிந்து பேசி, உறவு கொண்டவர் பிரிவாராயின் அவர்களுக்குத் தக்கபடி யெல்லாம் ஒழுகுபவரும், நடையாலும் உடையாலும் அழகோடு உலாவுபவரும், நிரம்பப் பொருள் பெற்றால் படுக்கையில் இனிமையாகவும் உள்ளம் குழைந்தும் பிணம் போன்றவர்களையும் தழுவுபவர்களும், செருக்கு உடையவரும் ஆகிய, பொதுமகளிருடைய உறவை விட்டு நீங்கத் திருவருள் புரிவீர்.

விரிவுரை

களபம் ---

சந்தனம், கஸ்தூரி முதலியவைகள் சேர்ந்த கலவை.

கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர் ---

கடு-நஞ்சு, பெண்கள் பார்வை நஞ்சாகவும், அதுவே அமுதமாகவும் இருக்கும்.அப்பார்வை சிலரை நஞ்சாகிக் கொல்லும், சிலரை அமுதாகிக் காக்கும்.

இருநோக்கு இவள்உண்கண் உள்ளது, ருநோக்கு
நோய்நோக்கு, னறுஅந்நோய் மருந்து.        ---  திருக்குறள்.
  
எவரோடும் கலகம் இடு கயல் எறி குழை ---

கயல்-மீன். இது ஆகுபெயராகக் கண்ணைத் தெரிவித்தது. கண்கள் நீண்டு காதுடன் மோதி நிற்கும். இக்கண்களால் பலரையும் விழித்துநோக்கிக் கலகமிடுந் தன்மையுடையவர் விலைமகளிர்.

பொருளில் இளைஞரை..தளர விடுபவர் ---

பொருள் இல்லாத வாலிபர்களை தங்கள் அழகு முதலியவைகளைக் கண்டு ஏங்குமாறு சாகசம் புரிபவர்.

வெறிதரு புனல் உணும் அவச வநிதையர் ---

வெறிதரு புனல்-கள், மது அருந்தி மதிமயங்கி நிற்பர்.

உறவினை விட அருள் புரிவாயே ---

மோகாந்தகாரந் தீர்த்து வேதாந்த தீபங்காட்டும் பரம் பொருள்” முருகன் ஆதலின், அப்பரமனை நோக்கிப் பரத்தையர் உறவு நீங்க அருள்புரியுமாறு அடிகளார் வேண்டுகின்றார்.
    
அளையில் உறை புலி பெறுமகவு அயில் தரு பசுவின் நிரை முலை அமுது உண ---

கண்ணபிரான் புல்லாங்குழலை ஊதி கானம் புரிந்தபோது, உலகமே மயங்கி உருகி நின்றது, கொடுமை மறைந்தது. எங்கும் ஒரே இன்பவெள்ளம் ஓடியது.

கொடிய புலிகள் குகையில் படுத்திருந்தன; அவைகளின் குட்டிகள், கண்ணபிரானுடைய வேய்ங்குழல் இசையில் மயங்கி ஓடிவந்து, தமக்கு நேர் விரோதிகளாகிய பசுக்களின் மடியில் வாய் வைத்துப் பால் அருந்தலாயின.

நிரைமகள் வசவனொடு புலி முலை உண ---

பசுவினுடைய கன்றுகள் சென்று புலியின் மடியில் வாய் வைத்துப் பால் குடிக்கின்றன. புலியைக் கண்டால் நடுங்கி ஒடுங்கி ஓடி ஒளியும் பசுவின் கன்றுகள் சிறிதும் பயமின்றிப் புலிப்பால் குடிக்கின்றன. எத்துணைப் பெரிய மாறுதல்.

மலையுடன் உருகா ---

கானத்தின் இனிமையால் அங்கு, மண், மலை, மரம் எல்லாம் உருகி நின்றன.நீண்ட கானகத்தில் உலர்ந்த மரங்கள் தளிர்விட்டுத் தழைத்தன. என்ன அற்புதம்! சராசரங்கள் யாவும் இன்புற்றன!

மதமொடு களிறுகள் பிடியுடன் அகல ---

மதங்கொண்ட ஆண் யானைகள் பெண் யானையுடன் கூடி மகிழ்கின்றன.

வெளியுயர் பறவைகள் நிலம்வரை ---

எட்டாத தொலைவில் பறக்கும் பட்சிகள் இந்த கானத்தைக் கேட்டு உருகி நிலத்திற்கு இறங்கிவந்து கேட்டு மகிழ்கின்றன.
  
ஏழ்தொளைகள் விடுகழை ---

முங்கில் குழலில் ஏழு தொளைவிட்டு ஏழு சுரங்களை அமைத்து கோபாலகிருஷ்ணர் உலகம் உய்ய இன்னிசைத் தேனை வழங்கியருளினார்.

புல்லாங்குழல்

இது இயற்கையான வாத்தியம். கானகத்தில் ஓங்கி வளர்ந்த முங்கில்களில் தீப்பிடித்துத் தொளை உண்டாகும். அத்தொளையின் வழியே காற்று வீசும் பொழுது இயற்கையில் நாதம் எழும். ஆகவே இயற்கை வாத்தியம் புல்லாங்குழல்.

இது யாழினும் முந்தியது. அதனால் “குழலினிது” என்கின்றார் திருவள்ளுவர்.

மலையில் சமநிலத்தில் இளமையும், முதுமையின்றி ஒரு புருடாயுசு உடைய மூங்கிலை வெட்டி, அதனை நிழலிலே ஆற விடவேண்டும். ஓராண்டு சென்றபின் இலக்கண விதியின்படி குழல் செய்யவேண்டும். இருபதுவிரல் நீளமும், சுற்றளவும் நாலரை விரல் அமைக்கவேண்டும். துளை இடும்போது ஒரு நெல்லரிசியில் பாதி மரம் நிறுத்தி வெண்கலத்தால் அணைசு பண்ணி இடமுகத்தை அடைத்து வலமுகம் வெளியாக விடவேண்டும். இருபது விரல்கள் உள்ள குழலிலே தலைப்புறம் இரண்டு விரல்களை நீக்கி முதல் தொளை விடவேண்டும். அத்துளையிலிருந்து ஏழுவிரல்விடுத்து, கடைவாயிலும், வெளி வாயிலும் இரண்டு நீக்கி நடுவிலுள்ள ஒன்பதுவிரல் நீளத்தில் எட்டுத்துளையும் இடவேண்டும். மிகுந்து நின்ற இவற்றில் ஒன்று முத்திரை என்று கழித்து ஏழினும், ஏழு விரல் வைத்து ஊதவேண்டும், தொளைகளின் இடப்பரப்பு ஒரு விரல் அகலம்.

ஏழு விரல்களாவன: இடக்கையில் பெருவிரலும், சிறுவிரலும் நீக்கிய மற்றைய மூன்று விரல்களும், வலக்கையில் பெருவிரல் நீங்க மற்றைய நான்கு விரல்களும் என உணர்க. இவற்றுள் சட்சமம், ரிஷபம், காந்தாரம், மத்திபம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற ஏழு சுரங்கள் பிறக்கும்.

இத்தகைய அருமையுடையது புல்லாங்குழல். இதனை முதன்முதலாக வாசித்தவர் முருகப்பெருமான். “குழலன் கோட்டன் குறும்பல்லியத்தன்” என வரும் திருமுருகாற்றுப் படைத் திருவாக்கால் அறிக.

துணைவ ---

முருகன், அடியார்கட்கு எப்போதும் அருந்துணையா யிருந்து உதவுகின்ற கருணாமூர்த்தி.

குணதர ---

அருட்குணங்களைத் தரித்தவர். “எண்குண பஞ்சரனே”

துறையில் அலை எறி திருநகர் ---

கரையில் அலைமோதி நிற்க, அக்கடற்கரையில் மிக மிக அழகாக விளங்கும் திருத்தலம் திருச்செந்தூர். இயற்கை வளமும் செயற்கை எழிலும் பொருந்திக் காண்பார் கண்ணுங் கருத்தும் ஒருங்கே கவர்ந்து, பிறவிப் பெருங்கடலுக்குத் துறைமுகமாக புண்ணியப்பதி.

கருத்துரை

         கண்ணபிரானுடைய திருமருகரே! செந்தில் கடவுளே! மாதருறவு நீங்க அருள் புரிவீ்ர்.
                              

No comments:

Post a Comment

பெரியோரை அவமதித்தல் கொலைக்குச் சமம்

                                         பெரியோரை அவமதித்தல் கொலைக்குச் சமம். -----        பாரதப் போரின் தளபதியாக துரியோதனனால் நியமனம் செய்ய...