அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
பாத நூபுரம்
(திருச்செந்தூர்)
விலைமகளிர் உறவு நீங்க
அருள் வேண்டல்
தான
தானனந் தானனந் தானதன
தான தானனந் தானனந் தானதன
தான தானனந் தானனந் தானதன ......
தந்ததானா
பாத
நூபுரம் பாடகஞ் சீர்கொள்நடை
யோதி மோகுலம் போலசம் போகமொடு
பாடி பாளிதங் காருகம் பாவையிடை ......வஞ்சிபோலப்
பாகு
பால்குடம் போலிரண் டானகுவ
டாட நீள்வடஞ் சேரலங் காரகுழல்
பாவ மேகபொன் சாபமிந் தேபொருவ ......
ரந்தமீதே
மாதர் கோகிலம் போல்கரும் பானமொழி
தோகை வாகர்கண் டாரைகொண் டாடிதகை
வாரும் வீடெயென் றோதிதம் பாயல்மிசை
...... யன்புளார்போல்
வாச
பாசகஞ் சூதுபந் தாடஇழி
வேர்வை பாயசிந் தாகுகொஞ் சாரவிழி
வாகு தோள்கரஞ் சேர்வைதந் தாடுமவர்
.....சந்தமாமோ
தீத தோதகந் தீததிந் தோதிதிமி
டூடு டூடுடுண் டூடுடுண் டூடுடுடு
டீகு டீகுகம் போலவொண் பேரிமுர ......
சங்கள்வீறச்
சேடன்
மேருவுஞ் சூரனுந் தாருகனும்
வீழ ஏழ்தடந் தூளிகொண் டாடமரர்
சேசெ சேசெயென் றாடநின் றாடிவிடு ......
மங்கிவேலா
தாதை
காதிலங் கோதுசிங் காரமுக
மாறும் வாகுவுங் கூரசந் தானசுக
தாரி மார்பலங் காரியென் பாவைவளி ......யெங்கள்மாதைத்
தாரு
பாளிதஞ் சோரசிந் தாமணிக
ளாட வேபுணர்ந் தாடிவங் காரமொடு
தாழை வானுயர்ந் தாடுசெந் தூரிலுறை
......தம்பிரானே.
பதம் பிரித்தல்
பாத
நூபுரம் பாடகம் சீர்கொள்நடை,
ஓதிம குலம் போல சம்போகமொடு
பாடி, பாளிதம் காருகம் பாவை இடை
.....வஞ்சிபோல,
பாகு
பால்குடம் போல் இரண்டு ஆன குவடு
ஆட, நீள்வடம் சேர் அலங்கார குழல்
பா அமேக பொன் சாபம், இந்தே பொருவர்
...அந்தமீதே
மாதர் கோகிலம் போல் கரும்பான மொழி,
தோகை வாகர், கண்டாரை கொண்டாடி தகை,
வாரும் வீடெ என்று ஓதி, தம் பாயல்மிசை,
...... அன்புஉளார்போல்
வாச
பாசு அகம் சூது பந்து ஆட, இழி
வேர்வை பாய, சிந்து ஆகு கொஞ்சு ஆரவிழி
வாகு தோள் கரம் சேர்வை தந்து ஆடும்
அவர் .....சந்தம்ஆமோ?
தீத தோதகம் தீததிந் தோதிதிமி
டூடு டூடுடுண் டூடுடுண் டூடுடுடு
டீகு டீகுகம் போல ஒண் பேரி முர-
...... சங்கள் வீற,
சேடன்
மேருவும் சூரனும் தாருகனும்
வீழ, ஏழ்தடம் தூளி கொண்டாட, அமரர்
சேசெ சேசெ என்று ஆட,நின்று ஆடிவிடும்
...... அங்கிவேலா
தாதை
காதி அங்கு ஓது சிங்கார முகம்
ஆறும் வாகுவும் கூர, சந்தான சுக-
தாரி,மார்பு அலங்காரி, என் பாவை வளி, ...... எங்கள்
மாதைத்
தாரு
பாளிதம் சோர, சிந்தாமணிகள்
ஆடவே புணர்ந்து ஆடி, வங்காரமொடு
தாழை வான் உயர்ந்து ஆடு செந்தூரில் உறை
...... தம்பிரானே.
பதவுரை
தீத தோதகந் தீததிந் தோதிதிமி டூடு
டூடுடுண் டூடுடுடு டீகு டீகுகம்போல ---
தீத.... டீகுகம் போன்ற ஒலிகளைச் செய்து,
ஒண் பேரி முரசங்கள் வீற --- ஒலிபெற்ற முரசு வாத்தியங்களும்
பேரிகைகளும் பெரிய முழக்கஞ்செய்ய,
சேடன் மேருவும் சூரனும் தாருகனும் வீழ --- ஆதிசேடனும், மகாமேரு மலையும், சூரபன்மனும், தாருகாசுரனும் அயர்ந்து விழவும்,
ஏழ் தடம் தூளி கொண்டாட --- ஏழுமலைகளும் பொடிபட்டு உதிரவும்,
அமரர் சேசெ சேசெ என்று ஆட நின்று --- தேவர்கள்
“ஜேஜெஜேஜெ” என்று ஆடவும் அவர் முன்நின்று,
ஆடி விடும் அங்கி வேலா --- நடனம் செய்து
விடுத்த நெருப்பு மயமான
வேலாயுதத்தை உடையவரே!
தாதை காதில் அங்கு ஓது --- தந்தையின்
செவியில் அங்கே பிரணவப் பொருளை ஓதிய,
சிங்கார முகம் ஆறும் --- அழகிய திருமுகங்கள்
ஆறும்,
வாகுவும் கூர --- (பன்னிரு) தோள்களும்
பூரிக்குமாறு,
சந்தான சுக தாரி --- வழிவழி இன்பம் தருபவளும்,
மார்பு அலங்காரி ---- திருமார்பில் அலங்காரம்
கொண்டவளும்,
என் பாவை --- எனது அரிய பதுமை போன்றவளும்,
வளி எங்கள் மாதை --- வள்ளிப்பிராட்டியாகிய
எங்கள் பெண்மணியை,
தாரு --- மரச்சோலையினிடையே,
பாளிதம் சோர --- பட்டாடை சோரும்படி,
சிந்தாமணிகள் ஆடவே --- அணிந்துள்ள சிறந்த
மணிகள் அசைய,
புணர்ந்து --- கலந்து,
ஆடி --- அவருடன் விளையாடி,
வங்காரமொடு --- செப்பமாக வளர்ந்த,
தாழை வான் உயர்ந்து ஆடு --- தென்னை மரங்கள்
வானளாவி உயர்ந்து அசைகின்ற,
செந்தூரில் உறை தம்பிரானே ---
திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள தனிப்பெரும் தலைவரே!
பாத நூபுரம் --- பாதத்தில் அணிந்துள்ள
சிலம்பு,
பாடகம் --- பாடகம் என்ற நகைகளுடன்,
சீர்கொள் நடை --- சிறப்புடைய நடை,
ஓதிம குலம் போல - அன்னப் பறவைகளின்
கூட்டம்போல விளங்கி,
சம்போகமொடு --- கல்வி இன்பங்கொண்டு,
பாடி பாளிதம் காருகம் பாவை இடை --- நன்றாக
பாவை அமைத்து நெய்த பட்டாடையுடன் கூடிய இடையானது,
வஞ்சிபோல --- வஞ்சிக்கொடிபோல் விளங்கவும்,
பாகு பால்குடம்போல் --- அழகிய பாற்குடம்
போன்ற,
இரண்டு ஆன குவடு ஆட --- இரு மலைபோன்ற தனங்கள்
அசையவும்,
நீள் வடஞ் சேர் --- நீண்ட இரத்தினமணி
ஆரஞ்சேர்ந்த,
அலங்கார குழல் பா அமேக --- அலங்கரித்த
கூந்தல் பரந்த அம் மேகத்தை நிகர்க்கவும்,
பொன் சாபம் --- அழகிய வில் (புருவத்தையும்),
இந்து பொருவர் --- சந்திரன் (நெற்றியையும்)
நிகர்த்தவை யென்று கூறவும்,
அந்த மீதே --- அழகு மிகுதியாகக் கொண்டு,
மாதர் கோகிலம் போல் கரும்பான மொழி --- அழகிய
குயில் போலவும், கரும்பு போலவும்
மொழியையும்,
தோகை வாகர் --- மயில் போன்ற அழகையும்
கொண்டவரும்,
கண்டாரை கொண்டாடி --- கண்டவர்களைப் புகழ்ந்து
பேசி,
தகை --- அவர்களை மறித்து நிறுத்தி,
வாரும் வீடெ என்று ஓதி --- எமது வீட்டுக்கு
வாருங்கள் என்று கூறி அழைத்துப் போய்,
தம் பாயல் மிசை அன்புளார் போல் --- தமது படுக்கையின்
மீது அன்பு உள்ளவரைப்போல் நடித்து,
வாச பாசு அகம் --- மணமும் பசுமையுமுடைய
மார்பில்,
சூது பந்து ஆட --- சூதாடு கருவிபோன்ற தனங்கள்
பந்துபோல் அசையவும்,
இழி வேர்வை பாய --- வேர்வை வழிந்து பாயவும்,
சிந்து ஆகு கொஞ்சு ஆர விழி --- கடல்
போன்றதும் கொஞ்சுதல் நிறைந்ததுமான கண்களும்,
வாகு தோள் கரம் --- அழகிய தோள்களும்
கரங்களும்,
சேர்வை தந்து ஆடும் அவர் --- ஒன்றுபடத் தந்து
விளையாடுகின்ற விலை மகளிரது,
சந்தம் ஆமோ --- உறவு ஆகுமோ?
பொழிப்புரை
திததோதகந் தீததிந் தோதிதிமி டூடு
டூடுடுண் டூடுடுண் டூடுடுடு டீகு டீகுகம் என்ற ஒலிகளை யுண்டாக்கி ஒளிபெற்ற முரசு
வாத்தியமும் பேரிகையும், முழக்கஞ் செய்ய, ஆதிசேடனும் மேருமலையும், சூரபன்மனும் தாருகாசுரனும் அயர்ந்து
விழுமாறும், ஏழு மலைகள் பொடிபட்டு
உதிரவும், ஜேஜே ஜேஜே என்று
அமரர்கள் ஆடவும், போர்க்களத்தில்
நடனஞ்செய்து விடுத்த நெருப்பு மயமான வேற்படையை உடையவரே!
தந்தையாரது செவியில் அங்கு ஓங்கார
மந்திரத்தின் உட்பொருளை ஓதிய ஆறுமுகமும் பன்னிரு தோள்களும் பூரிக்குமாறும், உயிர்கட்கு வழிவழியே இன்பத்தை
நல்குபவரும், அலங்கரித்த மார்பை
யுடையவரும், எனது பதுமை
போன்றவரும் ஆகிய எங்கள் மாதாவாகிய வள்ளி நாயகியை மரச்சோலையில், பட்டாடை சோருமாறும் இரத்தின மணியாரங்கள்
அசையுமாறும் கலந்து விளையாடி, வளமையுடன் வானளாவி
வளர்ந்து தென்னை மரங்கள் சூழ்ந்துள்ள திருச்செந்தூரில் உறைகின்ற பெருமிதம்
உடையவரே!
பாதத்தில் சிலம்பும் பாடகமும் அணிந்து
அன்னப் பறவைகள் போன்ற நடையும், கலவியின்பங்கொண்டு
நன்கு நெய்யப்பட்ட பட்டாடை சூழ்ந்துள்ள வஞ்சிக் கொடி போன்ற இடையும் விளங்கவும், அழகிய பாற்குடம் போன்ற இரண்டு மலை போன்ற
தனங்கள் அசையவும், நீண்ட மணியாரஞ்
சேர்ந்துள்ள அலங்கரித்த கூந்தல்,
பரந்த
அம்மேகத்தை நிகர்க்கும் என்று கூறுமாறு மிகுந்த அழகைக் கொண்டு, அழகான குயிலையும், கரும்பையும், ஒத்த மொழியையும், மயில் போன்ற சாயலையும் கொண்டு, கண்டவர்களைக் கொண்டாடி நிறுத்தி, இதோ எமது வீட்டுக்கு வாருங்கள் என்று இத
வசனம் புகன்று அழைத்துச் சென்று, படுக்கை மீது
அன்புள்ளவர்கள் போல் நடித்து, மணமும் பசுமையுமுள்ள
மார்பில் சூதுக்கருவி போன்ற தனங்கள் பந்துபோல் அசைய, வேர்வை சிந்த, கடல் போல் கொஞ்கின்ற கண்கள், தோள்கள், கரங்கள் இவைகளை ஒன்றுபடத் தந்து
விளையாடுகின்ற வேசையரது உறவு ஆகுமோ?
ஆகாது.
விரிவுரை
பாத
நூபுரம்.........
---
இப்பாடலில்
பாதிவரை விலைமகளிரது அலங்காரத்தைக் கூறுகின்றனர்.
பாடி
பாளிதம் காருகம் பாவை ---
படி-என்பது
பாடி என சந்தத்தை நோக்கி நீண்டு வந்தது. படி-குணம், பாளிதம்-பட்டாடை, காருகம்-நெய்யுந் தொழில். பாவு ஐ-பாவை
(ஐ சாரியை) பட்டுப்பாவில் நன்றாக நெய்த அழகிய ஆடை.
பாகு
பால் குடம்
---
பாகு-அழகு.
அழகிய பால்குடம் போன்ற தனம்.
வாச
பாசு அகம்
---
பாசு-பசுமை.
அகம்-மார்பு. மணமும் பசுமை நிறமும் உடைய மார்பு.
சூது
பந்தாட
---
தனங்களுக்கு
சூதுக் கருவியையும் பந்தையும் உவமிப்பது மரபு.
சந்தம்
ஆமோ ---
விலைமகளிரது
உறவு கூடாது என்கின்றனர்.
தீத
தோதகம் ..........பேரி முரசங்கள் வீற ---
போர்க்களத்திலே
போரிடுவோர்க்கு வீரவுணர்ச்சி யுண்டாகுமாறு செருப்பறைகளை ஒலிப்பர். அந்த
முழக்கங்களைப் பற்றி இந்த அடியில் கூறுகின்றனர்.
ஏழ்தடந்
தூளி கொண்டாட
---
தடம்-மலை.
முருகப் பெருமானுடைய வேலால் ஏழு மலைகளும் துகளாயின.
“ஓரெழு குலகிரி யடைய
இடிந்து தூளெழ” --- (நிணமொடு) திருப்புகழ்.
“ஏழுமலை பொடித்த
கதிரிலை நெடுவேல்” ---கல்லாடம்
சந்தான
சுகதாரி
---
சந்தானம்-வழிவழியாக
வரும் மரபு. உயிர்கட்கு வழி வழியாக இன்பத்தைத் தருகின்ற சக்தி இச்சா சக்தி.
வள்ளியம்மை இச்சாசக்தியாதலின் சந்தான சுகதாரி என்றருளிச் செய்தனர்.
எங்கள்
மாதை
---
தமிழகத்திலே, தமிழ்க்குடியில் அவதரித்த அம்மை
வள்ளிப்பிராட்டி யாதலின் எங்கள் மாது என்ற உரிமையுடன் கூறினார்.
தாரு-மரச்சோலை, பாளிதம்-பட்டாடை, வங்காரம்-வளப்பம், தாழை- தென்னை மரம்.
தென்னையின்
மலருக்கு மடல் கனமாக இருக்கும். ஆனால் வாசனை துளிகூட இராது. இதனை நோக்கியே, “மடல் பெரிது தாழை மகிழினிது கந்தம்”
என்று ஒளவையார் கூறினார்.
தாழை
என்ற சொல்லுக்குத் தென்னையென்று பொருள் கொள்வதுதான் சிறப்பு.சிலர் தாழை மலர் என்றே
கூறுவர். தாழை மலருக்கும் மணம் உண்டு. ஆதலின் அப்பொருள் சிறக்காது என உணர்க.
கருத்துரை
சூர சங்காரஞ் செய்த வேலவரே! வள்ளி
மணவாளரே! செந்திற் கந்தவேளே! விலை மகளிர் உறவு நீங்க அருள்புரிவீர்.
No comments:
Post a Comment