திருச்செந்தூர் - 0068. தொடர் இயமன் போல்


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

தொடரியமன் (திருச்செந்தூர்)

முருகா!
மாதர் மயலில் அழியாமல்,
     முத்தமிழால் உனைனைப் பாடி உய்ய அருள்


தனதன தந்தாத் தந்தத்
     தனதன தந்தாத் தந்தத்
          தனதன தந்தாத் தந்தத் ...... தனதான


தொடரிய மன்போற் றுங்கப்
     படையைவ ளைந்தோட் டுந்துட்
          டரையிள குந்தோட் கொங்கைக் ...... கிடுமாயத்

துகில்விழ வுஞ்சேர்த் தங்கத்
     துளைவிர குஞ்சூழ்த் தண்டித்
          துயர்விளை யுஞ்சூட் டின்பத் ...... தொடுபாயற்

கிடைகொடு சென்றீட் டும்பொற்
     பணியரை மென்றேற் றங்கற்
          றனையென இன்றோட் டென்றற் ...... கிடுமாதர்க்

கினிமையி லொன்றாய்ச் சென்றுட்
     படுமன முன்றாட் கன்புற்
          றியலிசை கொண்டேத் தென்றுட் ...... டருவாயே

நெடிதுத வங்கூர்க் குஞ்சற்
     புருடரும் நைந்தேக் கம்பெற்
          றயர்வுற நின்றார்த் தங்கட் ...... கணையேவும்

நிகரில்ம தன்தேர்க் குன்றற்
     றெரியில்வி ழுந்தேர்ப் பொன்றச்
          சிறிதுநி னைந்தாட் டங்கற் ...... றிடுவார்முன்

திடமுறு அன்பாற் சிந்தைக்
     கறிவிட முஞ்சேர்த் தும்பர்க்
          கிடர்களை யும்போர்ச் செங்கைத் ...... திறல்வேலா

தினவரி வண்டார்த் தின்புற்
     றிசைகொடு வந்தேத் திஞ்சித்
          திருவளர் செந்தூர்க் கந்தப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


தொடர் இயமன் போல் துங்கப்
     படையை வளைந்து ஓட்டும் துட்-
          டரை, இளகும் தோள் கொங்கைக்கு ...... இடுமாயத்

துகில் விழவும் சேர்த்து அங்கத்து,
     உளை விரகுது சூழ்த்து, ண்டித்
          துயர் விளையும் சூட்டு இன்பத் ...... தொடு,பாயல்

கிடைகொடு சென்று, ட்டும் பொன்
     பணியரை, "மென் தேற்றம் கற்-
          றனை" என, இன்று ஓட்டு என்று, ற்- ...... கிடு மாதர்க்கு

இனிமையில் ஒன்றாய்ச் சென்று, ட்-
     படும் மனம், உன்தாட்கு அன்பு உற்று,
          "இயல் இசை கொண்டு ஏத்து" என்றுஉள் ....தருவாயே.

நெடிது தவம் கூர்க்கும் சற்-
     புருடரும் நைந்து ஏக்கம் பெற்று,
          அயர்வுற நின்று ஆர்த்து, ங்கண் ...... கணை ஏவும்

நிகரில் மதன் தேர்க் குன்று, ற்று
     எரியில் விழுந்து ஏர்ப் பொன்ற,
          சிறிது நினைந்து ஆட்டம் கற்- ...... றிடுவார்முன்

திடம் உறு அன்பால் சிந்தைக்கு
     அறிவிடமுஞ் சேர்த்து உம்பர்க்கு
          இடர் களையும் போர்ச் செங்கைத் ...... திறல்வேலா!

தினவரி வண்டு ஆர்த்து இன்புற்று,
     இசைகொடு வந்து ஏத்து இஞ்சித்
          திருவளர் செந்தூர்க் கந்தப் ...... பெருமாளே.


பதவுரை

      நெடிது தவம் கூர்க்கும் சற்புருடரும் --- நீண்ட தவத்தை மிகுதியாகப் புரியும் உத்தம மனிதர்களும்,

     நைந்து ஏக்கம் பெற்று அயர்வு உற --- உள்ளத்தின் உறுதிநலிந்து ஏக்கமுற்றுத் தளர்ச்சி அடையும்படி,

     அங்கண் நின்று ஆர்த்து கணை ஏவும் --- அவ்விடத்தில் நின்று ஆரவாரம் புரிந்து மலர்க்கணைகளை விடுகின்ற,

     நிகர் இல் மதன் --- சமானமில்லாத மன்மதனுடைய;

     தேர் குன்று அற்று எரியில் விழுந்து ஏர் பொன்ற --- மலைப்போன்ற தேர் ஒடிந்து நெருப்பில் விழுந்து அழகு அழியுமாறு,

     சிறிது நினைந்து ஆட்டம் கற்றிடுவார் முன் --- சற்று நினைந்து திருவிளையாடலைப் புரிந்த சிவபெருமானுடைய திருமுன்,

     திடம் உறு அன்பால் --- உறுதியுள்ள அன்புடன்,

     சிந்தைக்கு அறிவிடமும் சேர்த்து --- சிவமூர்த்தியின் திருவுள்ளத்தில் [ஓம் என்னும் தனி மந்திரத்தின் உட்பொருளை] உபதேசித்து;

     உம்பர்க்கு இடர்களையும் போர் --- தேவர்களது துன்பம் நீங்குமாறு போர்புரிந்த,

     செங்கை திறல் வேலா --- சிவந்த திருக்கரத்தில் வேலை ஏந்தியவரே!

      தினவரி வண்டு ஆர்த்து இன்புற்று --- நாடோறும் இசைப் பாட்டுக்களை வண்டுகள் ஒலித்தது மகிழ்ச்சியடைந்து,

     இசை கொடுவந்து ஏத்து --- இசையோடு வந்து துதிக்கின்றதும்,

     இஞ்சி --- திருமதில்கள் சூழ்ந்திருப்பதும்,

     திருவளர் --- மேன்மை வளர்கின்றதுமாகிய,

     செந்தூர் கந்த --- திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள கந்தப் பெருமானே!

      பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

      தொடர் இயமன் போல் --- தொடர்ந்து வருகின்ற கூற்றுவனைப் போல்,

     துங்க படையை வளைந்து ஓட்டும் --- வெற்றியுடைய (காமனுடைய) ஆயுதங்களை வளைத்துச் செலுத்துகின்ற,

     துட்டரை --- துட்டர்களாகிய மாதர்களும்,

     இளகும் தோள் --- தழைத்துள்ள தோள்மீதும்,

     கொங்கைக்கு இடு --- தனங்களின்மீதும் இட்டுள்ள,

     மாய துகில் விழவும் --- மாயத்தைத் தரும் ஆடை சரிந்து விழவும்,

     அங்கத்து சேர்த்து --- மீளவும் அதை எடுத்து உடம்பில் சேர்த்து,

     உளை விரகும் சூழ்ந்து --- வருத்தஞ் செய்கின்ற சூழ்ச்சிகளைச் செய்து,

     அண்டி துயர் விளையும் --- நெருங்கி வந்து துன்பத்தை விளைவிக்கும்,

     சூட்டு இன்பத்தொடு --- புதிய இன்பத்துடன்,

     பாயல் கிடைகொடு சென்று --- படுக்கையில் கொண்டுபோய்,

     ஈட்டும் பொன் பணியரை --- பொன்னாபரணங்களைச் சோக்கின்றவர்களும்,
    
     (தமக்கு இணங்காதவரை நோக்கி),

     மென் தேற்றம் கற்றனை என --- மெல்ல தெளிவு கற்றுவிட்டனை போலும் என்றுகூறி,

     இன்று ஓடு என்று --- இன்றே ஓடிப்போ என்றும் சொல்லி,

     அற்கிடு மாதர்க்கு --- அன்பு சுருங்குபவருமாகிய விலைமகளிர்கட்கு,

     இனிமையில் ஒன்றாய்ச் சென்று --- இனிமையுடன் ஒன்றுபட்டுச் சென்று,

     உட்படு மனம் --- உட்படுகின்ற மனமானது,

     உன்தாட்கு அன்புற்று --- தேவரீருடைய திருவடிகட்கு அன்புகொண்டு,

     இயல் இசை கொண்டு ஏத்து என்று --- இயல் இசை என்ற தமிழினைக் கொண்டு துதிப்பாயாக என்று,

     உள் தருவாயே --- உள்ளத்தைத் தந்தருளுவீர்.


பொழிப்புரை

         நீண்ட தவத்தை மிகுதியாகச் செய்யும் உத்தம மனிதருங் கூட உள்ளம் நொந்து ஏங்கி உறுதி குலைந்து தளர்வுறுமாறு, அவ்விடத்தில் ஆரவாரித்து நின்று மலர்க்கணை ஏவும் ஒப்பற்ற மன்மதன், மலைபோன்ற தேருடன் அழிந்து நெருப்பில் விழுந்து அழகுடன் அழியும்படிச் சிறிது நினைந்து திருவிளை யாடலைப் புரிந்த சிவபெருமான் திருமுன் உறுதியுடன் அன்போடு அவர் திருவுள்ளம் மகிழ பிரணவ உபதேசம் புரிந்து, தேவர்களின் துன்பம் நீங்கும்படி போர்புரிந்த வலிமையுடைய வேலாயுதத்தைச் சிவந்த திருக்கரத்தில் ஏந்தியவரே!

         தினந்தோறும் இசைப்பாட்டுகள் பாடும் வண்டுகள் ஒலித்து இன்பமுடன் இசையோடுவந்து துதிக்கின்றதும், திருமதில்கள் சூழ்ந்ததும் மேன்மை வளர்க்கின்றதுமாகிய திருச்செந்தூரில் எழுந்தருளிய கந்தக் கடவுளே!

     பெருமிதம் உடையவரே!

         தொடர்கின்ற இயமனைப்போல் வந்து காமனது ஆயுதங்களை வளைத்துச் செலுத்தும் துட்டர்களும், வளப்பமான தோள்மீதும் தனங்களின் மீதும் உள்ள மாயத்தைச் செய்யும் ஆடையானது அகன்று விழவும், மீளவும் எடுத்து உடம்பில் சேர்த்து, உள்ளம் உளையுமாறு வஞ்சனைச் சூழ்ச்சிகளைச் செய்து நெருங்கி, துன்பத்தை விளைவிக்கும் புதிய இன்பத்துடன் கூடிய படுக்கையிற் கொண்டுபோய்ச் சேர்க்கின்ற பொன்னாபரணங்களை யுடையவர்களும், (தமக்கு இணங்காதவரைப் பார்த்து) “மெல்லதெளிவு பெற்றனை போலும், இன்றே ஓடிப்போ?” என்று கூறி விரட்டி அன்பு சுருங்குபவர்களுமாகிய பொதுமகளிரிடம் இனிமையுடன் ஒன்றுபட்டுச் சென்று அவர் வசப்படுகின்ற மனமானது தேவரீருடைய திருவடிகளிடம் அன்புற்று இயலிசைத் தமிழால் ஏத்துக என்று அடியேனுக்கு உளப்பண்பை அருளுவீராக.


விரிவுரை

     இப்பாடலின் பொதுமகளிரின் இயல்புகளை எடுத்துக் கூறுகின்றனர். அவர் வலைப்பட்டார் மீளும் பொருட்டும், மற்றையோர் அந்த வலைப்படாதிருக்கும் பொருட்டும், ஆன்றோர்க்கு அது கடன் என்று உணர்க. திருவள்ளுவரும் தாம் பாடியருளிய சுருங்கிய அறநூலாகிய திருக்குறளிலே “வரைவின் மகளிர்” என்று அதிகாரம் அமைத்து அவர்களது நட்பு ஏற்படாவண்ணம் தடுத்தருளுகின்றார்.


தொடர் இயமன் போல் ---

     இயமன் உயிர்களைத் தொடர்வதுபோல், பொது மகளிர்களும் இளைஞர்களைத் தொடர்வார்கள். இயமன் தொடர்ந்த உயிர்கட்கு உய்வில்லை. அதுபோல் பொது மகளிரால் தொடரப்பட்ட ஆடவர்கட்கும் உய்வில்லை. மிகப்பெரிய அபாயமான தொடர்பு என உணர்க.

துங்கப்படையை வளைந்து ஓட்டும் துட்டரை ---

     துங்கம் --- வெற்றி;

     தங்கள் சாகச வித்தைகளால் மன்மதனுடைய கணைகளைச் செலுத்தி ஆடவரை மயக்குவர். அதனால் துட்டர் என்றார். துட்டருக்கு என்று வருவித்துக் கொள்ளவும். சந்தத்தை நோக்கி நான்காம் வேற்றுமை உருபு மயங்கி இரண்டாம் வேற்றுமை உருபு பெற்று வந்தது.

     எட்டாவது வரியிலும் இதே வண்ணம் “பொற்பணியரை” என்று வருகின்றது. அங்கேயும் இதேபோல் “பொற்பணியற்கு” என்று கொள்ளவும்.

இளகுந்தோட் கொங்கைக் கிடுமாயத் துகில்விழ ---

     பொதுமகளிர் வீதியில் நின்று இளைஞரை மயக்கும் பொருட்டு துகில் சரிய நிற்பர்.


சேர்த்து அங்கத்து ---

     அப்படிச் சரிந்த ஆடையை எடுத்து மறைப்பர். இப்படிப் பல மாயம் புரிவர். அதனால் “மாயத்துகில்” என்றார்.


உளை விரகும் சூழ்த்து அண்டி ---

     உளைதல் --- வருந்துதல். விரகு --- வஞ்சனை, சூழ்தல் ---ஆராய்ந்து செய்தல். அண்டுதல் --- நெருங்குதல்,

     ஆடவர் மனம் வருந்துமாறு பல வஞ்சனைகளைப் புரிந்து நெருங்குவர்.

துயர் விளையும் சூட்டு இன்பம் ---

     மனிதர்களுக்குத் துயரத்தை விளைவிக்கும் புதிய இன்பம். சூடு என்பது புதுமையைக் குறிக்கின்றது. அம்மகளிர் புதுப் புது வண்ணமாக நடந்து தம்மை யடைந்தோர்க்கு இன்பத்தைத் தருவர்.

பாயற்கிடை கொடு சென்று ஈட்டும் பொற்பணியரை ---

     சயனத்தில் கொண்டு சென்று இங்கிதமாகப் பொருள் பறிப்பர். நல்லறம் புரியாதார் செல்வம் அவ்வழியில் செல்லும் என உணர்க. அப்படிச் சேகரித்த செல்வத்தைக் கொண்டு அளவற்ற பொன்னாபரணங்களைப் பூண்டு மேலும் மேலும் பலரை விரும்புவர்.

நம்பன் அடியவர்க்கு நல்காத் திரவியங்கள்
பம்புக்குஆம், பேய்க்குஆம், பரத்தையர்க்குஆம், வம்புக்குஆம்,
கொள்ளையர்க்குஆம், கள்ளுக்குஆம், கோவுக்குஆம், சாவுக்குஆம்,
கள்ளர்க்குஆம் தீங்கு ஆகும் காண்.       --- ஔவையார்.


மென் தேற்றம் கற்றனை என ---

     அம் மையலிலிருந்து தெளிந்தவனை அரைக்கணமும் தம் பால் இருக்கவிடாது,“மெல்ல தெளிவு பெற்றாய் போலும்; இன்றே ஓடு” என்று கூறி விரட்டி விடுவர்.

அற்கிடு மாதர் ---

     அற்குதல் --- குறைதல். அன்பு சுருங்குவர்.

இனிமையில் ஒன்றாய் ---

     இத்தகைய விலைமகளிரிடம் சென்று அவருடன் கலந்து ஒன்றுபடுவர்.

உட்படு மனம் ---

     அம் மையலில் உட்பட்டு மனம் அலமரும். அவ்வாறு அலையாவண்ணம் திரும்பி நல்வழிப்பட வேண்டும் என்று சுவாமிகள் குறிப்பிடுகின்றனர்.

அன்புற்று இயலிசை கொண்டேத்த என்று உள் தருவாயே ---

     இறைவன் திருவடிக்கு அன்புசெய்து, ஆனந்தத்தேன் சொரிகின்ற இறைவனுடைய இணையடிகளை இயலிசைகள் என்ற நல்ல தமிழினால் பாடிப் பரவிப் பரகதிப் பெறவேண்டும். “அப்படி உய்யும்படி முருகா அருள் புரிவாய்” என்று உளங்கனிந்து சுவாமிகள் வேண்டுகின்றனர்.

     தமிழ், இயல், இசை நாடகம் என மூவகைப்படும். இவற்றுள் முதலில் நிற்கும் இயலிசைகளால் ஏந்தி நலம் பெறவேண்டும் என்று குறிப்பிடுகின்றனர். தமிழால் பாடி வழிபடும் அடியவர் உள்ளத்தில் இறைவன் கோயில் கொண்டிருப்பான்.

செந்தமிழா மலர் தூவிய வஞ்சமிலாத தபோதனர்
 சிந்தையொர் ஆலயம் ஆகிய சீமானே”          --- திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழ்.

நெடிது தவம் கூர்க்குஞ் சற்புருடர் ---

     இந்த ஆறு வரிகளில் சிவபெருமான் மன்மதனை எரித்ததை எடுத்து இயம்புகின்றார். மன்மதனுடைய திறனையும் சிறப்பிக்கின்றார். நீண்ட தவஞ்செய்து பலகாலும் பயிற்சியுற்ற மாதவரையும் மதனன் மயங்குவன். அதற்குச் சான்று காசிபர், விஸ்வாமித்திரர் முதலியோர் என உணர்க.

     கூர்தல் --- மிகுதல்.

சிவபரம்பொருள் மன்மதனை எரித்த வரலாறு

இந்திரன் முதலிய தேவர்கள் பின்தொடர்ந்து வர, பிரமதேவர் வைகுந்தம் சென்று, திருமாலின் திருப்பாத கமலங்களை வணங்கி நின்றார். திருமால், நான்முகனிடம், "உனது படைப்புத் தொழில் இடையூறு இல்லாமல் நடைபெறுகின்றதா" என வினவினார்.

     "எந்தாய்! அறிவில் சிறந்த அருந்தவர்களாகிய சனகாதி முனிவர்கள் என் மனத்தில் தோன்றினார்கள். அவர்களை யான் நோக்கி, மைந்தர்களே! இந்த படைப்புத் தொழிலைச் செய்துகொண்டு இங்கே இருங்கள் என்றேன். அவர்கள் அது கேட்டு, நாங்கள் பாசமாகிய சிறையில் இருந்து கொண்டு நாங்கள் படைப்புத் தொழிலைப் புரிய விரும்பவில்லை. சிவபெருமான் திருவடியைப் பணிந்து இன்புற்று இருக்கவே விரும்புகின்றோம் என்று கூறி, பெருந்தவத்தைச் செய்தனர்.  அவர்களுடைய தவத்திற்கு இரங்கி, ஆலமுண்ட அண்ணல் தோன்றி, 'உங்கள் விருப்பம் என்ன' என்று கேட்க, வேத உண்மையை விளக்கி அருளுமாறு வேண்டினார்கள்.

     சிவபெருமான் திருக்கயிலாயத்தின் தென்பால், ஓர் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து, நால்வர்க்கும் நான்கு வேதங்களின் பொருளை அருளினார். அதனால் சனகாதி நால்வர்க்கும் மனம் ஒருமை அடையாமையால், மீண்டும் அவர்கள் கடுமையான தவத்தினை மேற்கொண்டு, திருக்கயிலையை அடைந்து, மனம் அடங்குமாறு உபதேசிக்க வேண்டினர். அவர்களது பரிபக்குவத்தை உணர்ந்த பரம்பொருள், ஆகமத்தின் உட்கருத்துக்கள் ஆகிய சரியை, கிரியை, யோகம் என்னும் முத்திறத்தையும் உபதேசித்து, ஞானபாதத்தை விளக்க சின்முத்திரையைக் காட்டி, மோன நிலையை உணர்த்தி, தானும் மோன நிலையில் இருப்பார் ஆயினார். அதுகண்ட அருந்தவரும் செயலற்று சிவயோகத்தில் அமர்ந்தனர். சிவபெருமான் ஒரு கணம் யோகத்தில் அமர்ந்துள்ள காலம் எமக்கும் ஏனையோருக்கும் பலப்பல யுகங்கள் ஆயின. உயிர்கள் இச்சை இன்றி, ஆண்பெண் சேர்க்கை இன்றி வருந்துகின்றன. அதனால் அடியேனுடைய படைப்புத் தொழில் அழிந்தது.

     இதுவும் அல்லாமல், சிவபரம்பொருளிடம் பலப்பல வரங்களைப் பெற்றுத் தருக்கிய சூராதி அவுணர்கள் நாளும் ஏவலைத் தந்து பொன்னுலகத்திற்கும் துன்பத்தை விளைவித்தனர். இந்திரன் மகனையும், பிற தேவர்களையும், தேவமாதர்களையும் சிறையிட்டுத் துன்புறுத்துகின்றனர். சூரபன்மன் தேவர்களை ஏவல் கொண்டு ஒப்பாரும் மிக்காரும் இன்றி அண்டங்கள் ஆயிரத்தெட்டையும் ஆளுகின்றான். இவைகளை எல்லாம் அறிந்தும் அறியாதவர் போல், சிவபரம்பொருள், சிவயோகத்தில் அமர்ந்துள்ளார்.  இனிச் செய்ய வேண்டியதொரு உபாயத்தை எமக்கு நீர் தான் அருள வேண்டும்" என்று கூறி நின்றார்.

     இதைக் கேட்ட திருமகள் நாயகன், "பிரமனே! எல்லா உயிர்களுக்கும் உயிர்க்கு உயிராய், அருவமும், உருவமும், உருவருவமும் ஆகிய எல்லா உயிர்கட்கும், எல்லா உலகங்கட்கும் மூலகாரணமாய் நின்ற, மூவர் முதல்வன் ஆகிய முக்கண்பெருமான் மோன நிலையைக் காட்டி இருந்தார் என்றார், உலகில் எவர்தான் இச்சையுற்று மாதர் தோள்களைத் தழுவுவர்?"

"ஆவிகள் அனைத்தும் ஆகி,
     அருவமாய் உருவமாகி
மூவகை இயற்கைத்து ஆன
     மூலகாரணம் ஆது ஆகும்
தேவர்கள் தேவன் யோகின்
     செயல்முறை காட்டும் என்னில்,
ஏவர்கள் காமம் கன்றித்
     தொன்மை போல் இருக்கும்நீரார்".

     "சிவமூர்த்தியின் பால் பலப்பல நலன்களைப் பெற்ற தக்கன், ஊழ்வினை வயப்பட்டு, செய்ந்நன்றி மறந்து, சிவமூர்த்தியை நிந்தித்து ஒரு பெரும் வேள்வி செய்ய, அந்தச் சிவ அபராதி ஆகிய தக்கனிடம் சேர்ந்து இருந்ததால் நமக்கு ஏற்பட்ட தீவினையைத் தீர்த்து, இன்பத்தை நல்க எம்பெருமான் திருவுள்ளம் கொண்டார். சூரபன்மனுக்கு அளவில்லாத ஆற்றலை அளித்ததும், தேவர்கள் அணுகமுடியாத அரிய நிலையில் சனகாதி முனிவர்களுக்கு சிவயோக நிலையைக் காட்டி, உயிர்களுக்கு இன்னலை விளைவித்ததும் ஏன் என்று ஆராய்ந்து பார்த்தால், சிவபெருமானுடைய பேரருள் பெருக்கு விளங்கும். வேறு ஏதும் இல்லை. சிவபெருமான் முனிவருக்கு உணர்வு காட்டும் மோனத்தில் இருந்து நீங்கி, எம்பெருமாட்டியை மணந்து கொண்டால், படைத்தல் தொழில் இனிது நடைபெறும். உமாமகேசுவரன் பால் ஓரு குமரன் தோன்றினால், சூராதி அவுணர்கள் அழிந்து இன்பம் உண்டாக்கும். உலகம் எல்லாம் தொன்மை போல் நன்மை பெற்று உய்யும். பிரமதேவரே! இவைகள் எல்லாம் நிகழ வேண்டும் என்றால், உலகத்தில் யாராக இருந்தாலும் காம வயப்படுமாறு மலர்க்கணைகளை ஏவும் மன்மதனை விட்டு, ஈசன் மேல் மலர் அம்புகளைப் பொழியச் செய்தால், சிவபெருமான் யோக நிலையில் இருந்து நீங்கி, அகிலாண்ட நாயகியை மணந்து, சூராதி அவுணர்களை அழிக்க ஒரு புத்திரனைத் தந்து அருள்வார்.  இதுவே செய்யத்தக்கது" என்றார்.

     அது கேட்ட பிரமதேவர், "அண்ணலே! நன்று நன்று. இது செய்தால் நாம் எண்ணிய கருமம் கைகூடும். சமயத்திற்குத் தக்க உதவியைக் கூறினீர்" என்றார்.

     திருமால், "பிரமதேவரே! நீர் உடனே மன்மதனை அழைத்து, சிவபெருமானிடம் அனுப்பு" என்றார். பிரமதேவர் மீண்டு, தமது மனோவதி நகரை அடைந்து, மன்மதனை வருமாறு நினைந்தார். மாயவானகிய திருமாலின் மகனாகிய மன்மதன் உடனே தனது பரிவாரங்களுடன் வந்து பிரமதேவரை வணங்கி, "அடியேனை நினைத்த காரணம் என்ன. அருள் புரிவீர்" என்று வேண்டி நின்றான். "மன்மதா! சிவயோகத்தில் இருந்து நீங்கி, சிவபெருமான் மகேசுவரியை உணந்து கொள்ளுமாறு, உனது மலர்க்கணைகளை அவர் மீது ஏவுவாய். எமது பொருட்டாக இந்தக் காரியத்தை நீ தாமதியாது செய்தல் வேண்டும்" என்றார்.

"கங்கையை மிலைச்சிய கண்ணுதல், வெற்பின்
மங்கையை மேவ, நின் வாளிகள் தூவி,
அங்கு உறை மோனம் அகற்றினை, இன்னே
எங்கள் பொருட்டினால் ஏகுதி என்றான்".

     பிரமதேவர் கூறிய கொடுமையானதும், நஞ்சுக்கு நிகரானதும் ஆகிய தீச்சொல் மன்மதனுடைய செவிகள் வழிச் சென்று அவனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது. சிவபெருனாது யோக நிலையை அகற்றவேண்டும் என்ற சொல்லே மன்மதனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது என்றால், பெருமான் அவனுடைய உடம்பை எரிப்பது ஓர் அற்புதமா?

     மன்மதன் தனது இருசெவிகளையும் தனது இருகைகளால் பொத்தி, திருவைந்தெழுத்தை மனத்தில் நினைந்து, வாடிய முகத்துடன் பின்வருமாறு கூறுவானானான்.

     "அண்ணலே! தீயவர்கள் ஆயினும் தம்மிடம் வந்து அடுத்தால், பெரியோர்கள் உய்யும் வகையாகிய நன்மையைப் புகல்வார்கள். அறிவிலே மிக்க உம்மை வந்து அடுத்த என்னிடம் எக்காரணத்தாலும் உய்ய முடியாத இந்தத் தீய சொற்களைச் சொன்னீர். என்னிடம் உமக்கு அருள் சிறிதும் இல்லையா? என்னுடைய மலர்க்கணைகளுக்கு மயங்காதவர் உலகில் ஒருவரும் இல்லை. பூதேவியையும், பூவில் வைகும் சீதேவியையும், ஏனைய மாதர்களையும் புணர்ந்து போகத்தில் அழுந்துமாறு என்னுடைய தந்தையாகிய நாராயணரையே மலர்க்கணைகளால் மயங்கச் செய்தேன். வெண்தாமரையில் வீற்றிருக்கும் நாமகளைப் புணருமாறும், திலோத்தமையைக் கண்டு உள்ளத்தால் புணருமாறும், உம்மை எனது மலர்க்கணைகளால் வென்றேன். திருமகளை நாராயணர் தமது திருமார்பில் வைக்கவும், கலைமகளைத் தங்கள் நாவில் வைக்கவும் செய்தேன். அகலிகையைக் கண்டு காமுறச்செய்து, இந்திரனுடைய உடல் முழுவதும் கண்களாகச் செய்தது என்னுடைய மலர்க்கணைகளின் வல்லபமே. தனது பாகனாகிய அருணன் பெண்ணுருவத்தை அடைந்த போது, அவளைக் கண்டு மயங்கச் செய்து, சூரியனைப் புணருமாறு செய்ததும் எனது மலர்க்கணைகளே. சந்திரன் குருவின் பத்தினியாகிய தாரையைப் புணர்ந்து, புதன் என்னும் புதல்வனைப் பெறுமாறு செய்தேன். வேதங்களின் நுட்பங்களை உணர்ந்த நல்லறிவுடைய தேவர்கள் யாவரையும் எனது அம்புகளால் மயக்கி, மாதர்களுக்குக் குற்றேவல் புரியுமாறு செய்தேன். மறை முழுது உணர்ந்த அகத்தியர், அத்திரி, கோதமன், அறிவில் சிறந்த காசிபர், வசிட்டர், மரீசி முதலிய முனிவர்களின் தவ வலியை, இமைப்பொழுதில் நீக்கி, என் வசப்பட்டுத் தவிக்கச் செய்தேன். நால்வகை வருணத்தாராகிய மனிதர்களைப் பெண்மயல் கொள்ளுமாறு செய்தேன். என் மலர்க்கணைகளை வென்றவர் மூவுலகில் யாரும் இல்லை. ஆயினும், சிவபெருமானை வெல்லும் ஆற்றல் எனக்கு இல்லை. மாற்றம் மனம் கழிய நின்ற மகேசுவரனை மயக்கவேண்டும் என்று மனத்தால் நினைதாலும் உய்ய முடியாது. பெருமானுடைய திருக்கரத்தில் அக்கினி. சிரிப்பில் அக்கினி. கண்ணில் அக்கினி. நடையில் அக்கினி. அனல் பிழம்பு ஆகிய அமலனிடம் நான் சென்றால் எப்படி ஈடேறுவேன்? அவரை மயக்க யாராலும் முடியாது. பிற தேவர்களைப் போல அவரையும் எண்ணுவது கூடாது".

     "சண்ட மாருதத்தை எதிர்த்து ஒரு பூளைப்பூ வெற்றி பெறுமே ஆகில், வெண்ணீறு அணிந்த விடையூர்தியை நான் வெல்லுதல் கூடும். சிவபரம்பொருளை எதிர்த்து அழியாமல், உய்ந்தவர் யாரும் இல்லை".

     "திரிபுர சங்கார காலத்தில், திருமால் முதலிய தேவர்கள் யாவரும் குற்றேவல் புரிய, முக்கண்பெருமான் தனது புன்னகையாலேயே முப்புரங்களையும் ஒரு கணப் பொழுதில் எரித்ததை மறந்தீரோ?"

     "தன்னையே துதித்து வழிபாடு செய்த மார்க்கண்டேயரைப் பற்ற வந்த கூற்றுவனை, பெருமான் தனது இடது திருவடியால் உதைத்து, மார்க்கண்டேயரைக் காத்ததைத் தாங்கள் அறியவில்லையா?"

     "முன் ஒரு நாள், தாங்களும், நாராயணமூர்த்தியும் 'பரம்பொருள் நானே' என்று வாதிட்ட போது, அங்கு வந்த சிவபரம்பொருளைத் தாங்கள் மதியாது இருக்க, உமது ஐந்து தலைகளில் ஒன்றைத் தமது திருவிரல் நகத்தால் சிவபெருமான் கிள்ளி எறிந்தது மறந்து போயிற்றா?"

     "சலந்தரன் ஆதி அரக்கர்கள் சங்கரனைப் பகைத்து மாண்டதை அறியாதவர் யார்?"

     "உமது மகனாகிய தக்கன் புரிந்த வேள்விச் சாலையில் இருந்த யாவரும், பெருமான்பால் தோன்றிய வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டு வருந்தியதை நீர் பார்க்கவில்லையா?"

     "திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை உண்டு, நம்மை எல்லாம் காத்து அருளியதும் மறந்து போயிற்றா?"

     "உலகத்தை எல்லாம் அழிக்குமாறு பாய்ந்த கங்காதேவியைத் தனது திருச்சடையில் பெருமான் தாங்கியது சிவபெருமான் தானே!"

     "தாருகா வனத்தில், இருடிகள் அபிசார வேள்வியைப் புரிந்து அனுப்பிய யானை, புலி, மான்,முயலகன், பாம்பு முதலியவைகளைக் கண்ணுதல் கடவுள், உரியாகவும், போர்வையாகவும், ஆபரணமாகவும் அணிந்து உள்ளதை நீர் பார்க்கவில்லையா?"

     "சர்வ சங்கார காலத்தில், சிவனார் தமது நெற்றிக்கண்ணில் இருந்து விழும் ஒரு சிறு பொறியால் உலகங்கள் எல்லாம் சாம்பலாகி அழிவதை நீர் அறிந்திருந்தும் மறந்தீரோ?
இத்தகைய பேராற்றலை உடைய பெருமானை, நாயினும் கடைப்பட்ட அடியேன் எனது கரும்பு வில்லைக் கொண்டு, மலர்க்கணை ஏவி ஒருபோதும் போர் புரிய மாட்டேன்."

     இவ்வாறு மன்மதன் மறுத்துக் கூறியதும், நான்முகன் உள்ளம் வருந்தி, சிறிது நேரம் ஆராய்ந்து, பெரு மூச்சு விட்டு, மன்மதனைப் பார்த்து, "மன்மதனே! ஒருவராலும் வெல்லுதற்கு அரிய சிவபெருமானது அருட்குணங்களை வெள்ளறிவு உடைய விண்ணவரிடம் விளம்புவதைப் போல் என்னிடம் விளம்பினை. நீ உரைத்தது எல்லாம் உண்மையே. தனக்கு உவமை இல்லாத திருக்கயிலை நாயகனை வெல்லுதல் யாருக்கும் எளியது அல்ல. ஆயினும் தன்னை அடைந்தோர் தாபத்தைத் தீர்க்கும் தயாநிதியாகிய சிவபெருமானின் நல்லருளால் இது முடிவு பெறும். அவனருளைப் பெறாதாரால் இது முடியாது. உன்னால் மட்டுமே முடியும். எல்லாருடைய செயலும் அவன் செயலே. நீ இப்போது கண்ணுதலை மயக்கச் செல்வதும் அவன் அருட்செயலே ஆகும். ஆதலால், நீ கரும்பு வில்லை வளைத்து, பூங்கணைகளை ஏவுவாயாக. இதுவும் அவன் அருளே. இது உண்மை. இதுவும் அல்லாமல், ஆற்ற ஒணாத் துயரம் கொண்டு யாராவது  ஒருவர் உதவி செய் என்று வேண்டினால் அவருடைய துன்பத்திற்கு இரங்கி, அவருடைய துன்பத்தைக் களையாது, தன் உயிரைப் பெரிது என்று எண்ணி உயிருடன் இருத்தல் தருமமோ? ஒருவனுக்குத் துன்பம் நேர்ந்தால், அத் துன்பத்தைத் தன்னால் நீக்க முடியுமானால், அவன் சொல்லா முன்னம் தானே வலிய வந்து துன்பத்தை நீக்குதல் உத்தமம். சொன்ன பின் நீக்குதல் மத்திமம். பல நாள் வேண்டிக் கொள்ள மறுத்து, பின்னர் நீக்குதல் அதமம். யாராவது இடர் உற்றால், அவரது இடரை அகற்றுதல் பொருட்டு தன் உயிரை விடுதலும் தருமமே. அவ்வாறு செய்யாமல் இருந்தால், பாவம் மட்டும் அல்ல, அகலாத பழியும் வந்து சேரும்.

"ஏவர் எனினும் இடர் உற்றனர் ஆகில்,
ஓவில் குறை ஒன்று அளரேல், அது முடித்தற்கு
ஆவி விடினும் அறனே, மறுத்து உளரேல்
பாவம் அலது பழியும் ஒழியாதே".

     பிறர்க்கு உதவி செய்யாது கழித்தோன் வாழ்நாள் வீணாகும். திருமாலிடம் வாது புரிந்த ததீசி முனிவரை இந்திரன் குறை இரப்ப, விருத்தாசுரனை வதைக்கும் பொருட்டு, தனது முதுகெலும்பைத் தந்து ததீசி முனிவன் உயிர் இழந்ததை நீ கேட்டது இல்லையோ? பாற்கடலில் எழுந்த வடவாமுக அக்கினியை ஒத்த விடத்தினைக் கண்டு நாம் பயந்தபோது, திருமால் நம்மைக் காத்தல் பொருட்டு அஞ்சேல் எனக் கூறி, அவ்விடத்தின் எதிரில் ஒரு கணப் பொழுது நின்று, தமது வெண்ணிறம் பொருந்திய திருமேனி கருமை நிறம் அடைந்ததை நீ பார்த்தது இல்லையோ? பிறர் பொருட்டுத் தம் உயிரை மிகச் சிறிய பொருளாக எண்ணுவோர் உலகில் பெரும் புகழ் பெற்று வாழ்வார்கள். நாம் சூரபன்மனால் மிகவும் வருந்தினோம். அந்த வருத்தம் தீரும்படி கண்ணுதல் பெருமான் ஒரு புதல்வனைத் தோற்றுவிக்கும் பொருட்டு, நீ பஞ்ச பாணங்களுடன் செல்ல வேண்டும். எமது வேண்டுகோளை மறுத்தல் தகுதி அல்ல" என்று பலவாக பிரமதேவர் கூறினார்.

     அது கேட்ட மன்மதன் உள்ளம் மிக வருந்தி, "ஆதிநாயகன் ஆன சிவபெருமானிடம் மாறுகொண்டு எதிர்த்துப் போர் புரியேன். இது தவிர வேறு எந்தச் செயலைக் கட்டளை இட்டாலும் இமைப் பொழுதில் செய்வேன்" என்றான்.

     பிரமதேவர் அது கேட்டு வெகுண்டு, "அறிவிலியே! என்னுடைய இன்னுரைகளை நீ மறுத்தாய். நான் சொன்னபடி செய்தால் நீ பிழைத்தாய். இல்லையானால் உனக்குச் சாபம் தருவேன். இரண்டில் எது உனக்கு உடன்பாடு.  ஆராய்ந்து சொல்" என்றார்.

     மன்மதன் அது கேட்டு உள்ளம் மிக வருந்தி, என்ன செய்யலாம் என்று சிந்தித்து, ஒருவாறு தெளிந்து, பிரமதேவரைப் பார்த்து, "நாமகள் நாயகனே! சிவமூர்த்தியினை எதிர்த்துச் சென்றால், அந்தப் பரம்பொருளின் நெற்றி விழியால் அழிந்தாலும், பின்னர் நான் உய்தி பெறுவேன். உனது சாபத்தால் எனக்கு உய்தி இல்லை. எனவே, நீர் சொல்லியபடியே செய்வேன், சினம் கொள்ள வேண்டாம்" என்றான்.

     பிரமதேவர் மனம் மகிழ்ந்து, "நல்லது. நல்லது. மகாதேவனிடத்தில் உன்னைத் தனியாக அனுப்பு மாட்டோம்.  யாமும் பின்தொடர்ந்து வருவோம்" என்று அறுப்பினார்.

     மன்மதன், பிரமதேவரிடம் விடைபெற்றுச் சென்று, நிகழ்ந்தவற்றைத் தனது பத்தினியாகிய இரதிதேவியிடம் கூற, அவள் போகவேண்டாம் என்று தடுக்க, மன்மதன் அவளைத் தேற்றி, மலர்க்கணைகள் நிறைந்த அம்புக் கூட்டினை தோள் புறத்தே கட்டி, கரும்பு வில்லை எடுத்து, குளிர்ந்த மாந்தளிர் ஆகிய வாளை இடையில் கட்டி, குயில், கடல் முதலியவை முரசு வாத்தியங்களாய் முழங்க, மீனக் கொடியுடன் கூடியதும், கிளிகளைப் பூட்டியதும், சந்திரனைக் குடையாக உடையதும் ஆகிய தென்றல் தேரின்மேல் ஊர்ந்து இரதி தேவியுடன் புறப்பட்டு, எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் திருக்கயிலை மலையைக் கண்டு, கரம் கூப்பித் தொழுது, தேரை விட்டு இறங்கி, தன்னுடன் வந்த பரிசனங்களை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு, இரதிதேவியுடன் வில்லும் அம்பும் கொண்டு, பெரும் புலியை நித்திரை விட்டு எழுப்ப ஒரு சிறுமான் வந்தது போல் திருக்கயிலை மேல் ஏறினான். கரும்பு வில்லை வளைத்து, மலர்கணைகளைப் பூட்டி அங்குள்ள பறவைகள் மீதும், விலங்குகள் மீதும் காம இச்சை உண்டாகுமாறு செலுத்தினான். கோபுர முகப்பில் இருந்த நந்தியம்பெருமான் அது கண்டு பெரும் சினம் கொண்டு, இது மன்மதனுடைய செய்கை என்று தெளிந்து, 'உம்' என்று நீங்காரம் செய்தனர். அவ்வொலியைக் கேட்ட மன்மதனுடைய பாணங்கள் பறவைகள் மீதும், விலங்குகள் மீதும் செல்லாது ஆகாயத்தில் நின்றன. அதனைக் கண்ட மதனன் உள்ளம் வருந்தி, திருநந்தி தேவர் முன் சென்று பலமுறை வாழ்த்தி வணங்கி நின்றான். மன்மதன் வந்த காரணத்தைக் கேட்ட நந்தியம்பெருமான், 'பிரமாதி தேவர்கள் தமது துன்பத்தை நீக்க இவனை இங்கு விடுத்துள்ளார்கள். சிவபெருமான் மோன நிலையில் அமரும்பொழுது, யார் வந்தாலும் உள்ளே விடவேண்டாம். மன்மதன் ஒருவனை மட்டும் விடுவாய் என்று அருளினார். மந்திர சத்தியால் பசுவைத் தடிந்து, வேள்வி புரிந்து, மீளவும் அப்பசுவை எழுப்புதல் போல், மன்மதனை எரித்து, மலைமகளை மணந்து, பின்னர் இவனை எழுப்புமாறு திருவுள்ளம் கொண்டார் போலும்' என்று நினைத்து, "மாரனே! சிவபெருமான்பால் செல்லுதல் வேண்டுமோ?" என்று கேட்க, மன்மதன், "எந்தையே! என் உயிர்க்கு இறுதி வந்தாலும் சிவபெருமானிடம் சேர எண்ணி வந்தேன். அந்த எண்ணத்தை நிறைவேற்றவேண்டும்" என்றான். மேலைக் கோபுர வாயில் வழியாகச் செல்லுமாறு திருநந்தி தேவர் விடை கொடுத்தார்.

     மன்மதன் திருநந்தி தேவரை வணங்கி, மேலை வாயிலின் உள் சென்று, சோதிமாமலை போல் வீற்றிருக்கும் சூலபாணி முன் சென்று, ஒப்பற்ற சரபத்தைக் கண்ட சிங்கக்குட்டி போல் வெருவுற்று, உள் நடுங்கி, உடம்பு வியர்த்து, கையில் பற்றிய வில்லுடன் மயங்கி விழுந்தான். உடனே இரதிதேவி தேற்றினாள். மன்மதன் மயக்கம் தெளிந்து எழுந்து, "ஐயோ! என்ன காரியம் செய்யத் துணிந்தேன். நகையால் முப்புரம் எரித்த நம்பனை நோக்கிப் போர் புரியுமாறு பிரமதேவர் என்னை இங்கு அனுப்பினார். இன்றே எனக்கு அழிவு வந்துவிட்டது என்பதில் சிறிதும் ஐயமில்லை. பெருமானைப் பார்த்த உடனேயே இப்படி ஆயினேனே, எதிர்த்துப் போர் புரிந்தால் என்ன ஆவேன்? இன்னும் சிறிது நேரத்தில் அழியப் போகின்றேன். விதியை யாரால் கடக்க முடியும். இதுவும் பெருமான் பெருங்கருணை போலும். இறைவன் திருவருள் வழியே ஆகட்டும்.  இனி நான் வந்த காரியத்தை முடிப்பேன்" என்று பலவாறு நினைந்து, கரும்பு வில்லை வளைத்து, சுரும்பு நாண் ஏற்றி, அரும்புக் கணைகளைப் பூட்டி, சிவபெருமான் முன்பு சென்று நின்றான்.

     இது நிற்க, மனோவதி நகரில் பிரமதேவரை இந்திரன் இறைஞ்சி, "மன்மதனுடைய போர்த் திறத்தினைக் காண நாமும் போவோம்" என்று வேண்டினான். எல்லோரும் திருக்கயிலை சென்று, சிவபெருமானை மனத்தால் துதித்து நின்றனர். மன்மதன் விடுத்த மலர்க்கணைகள் சிவபெருமான் மேல் படுதலும், பெருமான் தனது நெற்றிக் கண்ணைச் சிறிது திறந்து மன்மதனை நோக்க, நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய சிறு தீப்பொறியானது மன்மதனை எரித்தது. அதனால் உண்டாகிய புகை திருக்கயிலை முழுதும் சூழ்ந்தது. 


நைந்து ஏக்கம் பெறறு அயர்வுற ---

திடமனம் பெற்றாரும் உறுதியிழந்து நொந்து வெந்து ஏங்கி இளைப்புற மன்மதன் மலர்க்கணைகளைச் சொரிவான்.

நின்றார்த் தங்கட் கணையேவும் ---

நின்று ஆர்த்து அங்கண் என்று பதப்பிரிவு செய்க. அங்கு நின்று ஆரவாரித்து கணைகளை ஏவுவன்.

நிகரில் மதன் ---

மயக்குந் தொழிலில் தனக்கு நிகரில்லாதவன் மன்மதன்.

தேர்க்குன்றற்றெரியில் விழுந்தேர்ப் பொன்ற ---

தேர் குன்று அற்று எரியில் விழுந்து ஏர் பொன்ற”

குன்றம் போன்ற தேர் அற்று எரியில் விழுந்து அழகு அழிய மன்மதன் தன் தேருடனும் வில்லுடனும் நெருப்பில் விழுந்து எரிந்தான்.

சிறிது நினைந்து ஆட்டங் கற்றிடுவார் ---

மதனன் எரியுமாறு சிவபெருமான் சிறிதே நினைத்தருளினார். அதுவும் ஒரு திருவிளையாடல் காரணமாக என அறிவிக்கின்றார். கற்றிடுவார் என்பது செய்தார் என்ற பொருளில் வந்தது.

திடமுறு அன்பால் சிந்தைக் கறிவிடமுஞ் சேர்த்து ---

தந்தையார்க்கு உபதேசிக்கவந்த குழந்தை திடமுடனும் அன்புடனும் இருந்து தந்தைக்கு ஓங்காரத்து உட்பொருளை அறிவித்து உபதேசித்தது.

தினவரி வண்டார்த்து ---

வரி-பாடல். நாள்தோறும் வண்டுகள் தேனுண்டு நல்ல இனிய ஒலியுடன் பாடும்.


இன்புற் றிசையுடன் வந்தேத்து ---

வண்டுகள் அப்படிப் பாடுவதனால் இன்பத்தை யடைந்து கோயிலின் மதில்புறத்தில் வந்து ஏத்துகின்றன.

இசை பாடுகின்றவர்கட்கும் இன்பத்தை நல்கும். கேட்கின்றவர்கட்கும் இன்பத்தை நல்கும். இங்கு வண்டுகள் வந்து பாடுகின்றன என்பது, அடியார்கள் செந்திலில் வந்து பாடிப் பரவுகின்றார்கள் என்பதைக் குறிக்கின்றது.

இஞ்சி ---

மதில். செந்தில் மாநகர்த் திருக்கோயிலில் உயர்ந்த மதில்கள் மிகவும் அழகாக இருக்கும் திறனைக் குறிப்பிடுகின்றார்.

திருவளர் செந்தூர் ---

சதா செந்தில் மேன்மையான அறம் கலை பண்பு முதலியவைகள் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.

கந்தப் பெருமாளே ---

கந்தனாகிய பெருமாளே.

     சுப்ரமண்ய மூர்த்தம் பதினாறு. அதில் கந்த மூர்த்தம் என்பது ஒன்று. ஒரு திருமுகமும், இரு புயங்களும் கொண்டது. அரையில் கோவணம் கொண்டு, வலக்கரத்தில் தண்டை ஊன்றி, இடக்கரத்தைத் தொடையில் வைத்து செம்மேனியுடன் விளங்குகின்ற திருவுருவம்.


கருத்துரை

         சிவகுருவே! செந்தில் மேவிய கந்தக்கடவுளே! அடியேன் மாதர் மயக்குறாது இயலிசைத் தமிழால் உம்மைப் பாடி உய்ய அருள் புரிவீர்.



No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...