திருத் துறையூர்


திருத் துறையூர்
(திருத்தளூர்)

         நடு நாட்டுத் திருத்தலம்.

          மக்கள் வழக்கில் திருத்தளூர் என்று வழங்குகிறது.

         பண்ருட்டியில் இருந்து, பண்ணுருட்டி - புதுப்பேட்டை வழியாக அரசூர் செல்லும் சாலையில், 10 கிமீ. சென்று, மீண்டும் கரும்பூர் சாலையில் திரும்பி 5 கிமீ சென்று இத் திருத்தலத்தை அடையலாம். 

     திருநாவலூர், திருவதிகை, திருமாணிகுழி, திருவடுகூர், திருப்பாதிரிப்புலியூர் ஆகிய திருத்தலங்கள் அருகில் உள்ளவை.


இறைவர்              : குருநாதேசுவரர், பசுபதீசுவரர்.

இறைவியார்           : சிவலோகநாயகி, பூங்கோதைநாயகி.

தல மரம்                : கொன்றை.

தீர்த்தம்                : சூரிய தீர்த்தம்.

தேவாரப் பாடல்கள்    : சுந்தரர் - மலையார் அருவித் திரள்.


          சுந்தரர் காலத்தில் ஊரில் தென்பால் ஓடிய பெண்ணையாறு; இன்று வடபால் ஓடுகிறது. (பழைய பெண்ணையாறு, மலட்டாறு என்னும் பெயரில் தென்பால் உள்ளது.)

          இத்தலத்திற்கு வந்த சுந்தரரை, இறைவன் கிழவடிவில் தோன்றி ஆட்கொண்ட இடம் துறையூருக்கு அண்மையில் உள்ள 'கிழப்பாக்கம்' என்பதாகும். அவ்விடத்தில் சிவலிங்கமும் கோயிலும் உள்ளன. இவ்வாறு ஆட்கொண்ட திருமேனியே பசுபதீஸ்வரர் - பூங்கோதை நாயகி எனப்படுகிறது.

          இறைவன் முதியவராக சுந்தரரை ஆட்கொண்ட இடத்திலிருந்து சுந்தரர் கோயிலைப் பார்த்துத் தரிசிக்க, அப்போது இறைவன் கோயில் விமானத்திலிருந்து ரிஷபாரூடராய்க் காட்சி தந்ததாகவும் சொல்லப்படுகிறது. (இதற்கேற்ப இருந்த கோயில் அமைப்பு பிற்காலத்தில் திருப்பணி செய்தோரால் மாற்றப்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது.)

          சுந்தரர் தவநெறி வேண்டிப்பெற்ற தலம்.

          'சிவஞானசித்தியார் ' என்னும் சாத்திர நூலைப் பாடிய அருணந்தி சிவாசாரியார் (சகலாகம பண்டிதர்) அவதரித்து வாழ்ந்த தலம். (இவரது சமாதிக் கோயில் உள்ளது.)

          இப்பதி பெண்ணையாற்றின் தென்கரையில் உள்ளது; மேற்கு நோக்கிய சந்நிதி.

          அருணகிரிநாதரின் திருப்புகழும், வண்ணச் சரபம் தண்டபாணிசுவாமிகள் பாடல்களும் இத்தலத்திற்கு உள்ளது.

          இங்கு சுவாமி மேற்கு நோக்கியும், அம்பாள் வடக்கு நோக்கியும் இருப்பது நினைந்து தொழத்தக்கது.

          ரிஷபாரூடர் தவநெறி தந்த காட்சியும், சுந்தரர் கைகூப்பி வணங்கும் நிலையும் காணலாம்.

          நால்வர் மண்டபத்தின் தூண் ஒன்றில் - இத்தலத்திற்கு சுந்தரர் பெண்ணையாற்றை ஓடத்தில் கடந்து வந்ததாகச் சொல்லப்படும் ஐதீகம் சிற்பமாக உள்ளது.

          தட்சிணாமூர்த்திக்குப் பக்கத்தில் உமாமகேஸ்வரர் சுந்தரருக்கு தவநெறி தந்த காட்சி, சாட்சி விநாயகருடன் கல்லில் சிற்பமாக உள்ளது. அம்பாள் சந்நிதிக்கு எதிரில் தலமரம்.  பக்கத்தில் அகத்தியர் வழிபட்ட இலிங்கம்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "மல் ஆர்ந்து மாசு உந்து உறையூர் மகிபன் முதல் மூவரும் சீர் பேசும் துறையூர்ப் பிறைசூடீ" என்று போற்றி உள்ளார்.


சுந்தரர் திருப்பதிக வரலாறு
தடுத்தாட்கொண்ட புராணம்.

பெரி புராணப் பாடல் எண் : 225/79
சிவன்உறையும் திருத்துறையூர் சென்று அணைந்து, "தீவினையால்
அவநெறியில் செல்லாமே தடுத்துஆண்டாய், அடியேற்குத்
தவநெறி தந்து அருள்"என்று  தம்பிரான் முன்நின்று,
பவநெறிக்கு விலக்கு ஆகும் திருப்பதிகம் பாடினார்.

         பொழிப்புரை : திருநாவலூரிலிருந்து சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருத்துறையூரை அணைந்து, தம் இறைவன் திருமுன்னிலையில் நின்று, என் தீவினைப்பயனால் உலகியல் உணர்வில் செல்லாதவாறு தடுத்து ஆளாகக் கொண்டருளினாய். அடியேற்கு யான் உய்தற்குரிய தவநெறியைத் தந்தருள வேண்டும் எனும் குறிப்பினையுடையதாய பிறவிப் பிணிக்கு விலக்காகும் திருப்பதிகத்தைப் பாடினார்.

         குறிப்புரை : இத்திருப்பதியில் பாடிய பதிகம் `மலையார் அருவி` (தி.7 ப.13) எனத் தொடங்கும் திருப்பதிகமாகும். இப்பதிகத்தில் வரும் பாடல்கள் தோறும் தவநெறி வேண்டும் எனும் குறிப்பு இடம் பெற்றுள்ளது. பதினோராவது பாடலில், `பொய்யாத் தமிழ் ஊரன் உரைத்தன வல்லார், மெய்யே பெறுவார்கள் தவநெறிதானே` (தி.7 ப.13) என ஓதுமாற்றான் இத்திருப்பதிகத்தை ஓதுவார்க்கும் தவநெறி கிட்டுமெனக் கூறப்பட்டுள்ளது.


பெ. பு. பாடல் எண் : 226/80
புலன்ஒன்றும் படிதவத்தில் புரிந்தநெறி கொடுத்து அருள,
அலர்கொண்ட நறுஞ்சோலைத் திருத்துறையூர் அமர்ந்து அருளும்
நிலவும் தண்புனலும் ஒளிர் நீள்சடையோன் திருப்பாதம்
மலர்கொண்டு போற்றி இசைத்து, வந்தித்தார் வன்தொண்டர்.

         பொழிப்புரை : ஆரூரர் வேண்டியவாறே, ஐம்பொறிகளும் தம் வயப்பட்டு நிற்கும் தவநெறியை இறைவன் கொடுத்தருள, அதனை மேற்கொண்ட ஆரூரர், மலர்கள் நிறைந்த மணம் மிக்க சோலைகள் சூழ்ந்த திருத்துறையூரில் வீற்றிருந்தருளும் பிறையும், சடையும் இருத்தற்கிடனாய நீண்ட சடையினையுடைய பெருமானின் திருவடி மலர்களை மனத்திற் கொண்டு அழகிய மலர்களால் வழிபாடு செய்து வணங்கினார்.

         குறிப்புரை : பொறிகள் தத்தம் வழியில் செல்லாது ஒருவழிப்பட்டு நிற்க, இறைவனை அகத்தே உணர்ந்தும், புறத்தே வழிபட்டும் நிற்கும் அநுபவமே இப்பாடற்கண் குறிக்கும் தவமாகும். `தவத்தினில் உணர்த்த` என்னும் சிவஞானபோதமும் (சூத்.8). இத்தவத்தாலேயே இவர் திருக்கோயிலில் மலர் கொண்டு வழிபட்டார், இவ்வுரிமை அக்காலத்து வழிபடுவார் அனைவர்க்கும் இருந்தமை, `போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்` (தி.4 ப.3 பா.1) எனவரும் அப்பரடிகளின் திருவாக்கால் அறியப்படும். `இவ்வாற்றான் நம்பிகள் ஆன்மார்த்த பரார்த்தங்களாகிய இருவகைப் பூசைக்குமுரிய ஆதி சைவராதலும் உணர்க` எனச் சிவக்கவிமணியார் விளக்கம் தருவர் (பெரிய.பு. உரை).


7. 013    திருத்துறையூர்                   பண் - தக்கராகம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
மலைஆர் அருவித் திரள் மாமணி உந்திக்
குலை ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால்
கலைஆர் அல்குல் கன்னியர் ஆடும் துறையூர்த்
தலைவா! உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே.

         பொழிப்புரை : மலையிற் பொருந்திய அருவிக் கூட்டம் , பெரிய மணிகளைத் தள்ளிக் கொணர்ந்து கரை நிறைய எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணை யாற்றின் வடகரைக்கண் , நல்லஆடையை அணிந்த அல்குலையுடைய கன்னிப்பெண்கள் மூழ்கி விளையாடும் ஒரு துறையைச் சார்ந்த ஊராகிய திருத்துறையூரின்கண் எழுந்தருளியுள்ள தலைவனே , உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன் ; வேறொன்றையும் வேண்டேன் .


பாடல் எண் : 2
மத்தம் மத யானையின் வெண்மருப்பு உந்தி
முத்தம் கொணர்ந்து எற்றிஓர் பெண்ணை வடபால்
பத்தர் பயின்று ஏத்திப் பரவும் துறையூர்
அத்தா! உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே.

         பொழிப்புரை : மயக்கங்கொண்ட மதயானைகளின் கொம்புகளைத் தள்ளிக்கொண்டுவந்து அவற்றில் உள்ள முத்துக்களைக் கரையில் எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண் உள்ள , அடியவர் பலகாலும் வந்து ஏத்தி வழிபடுகின்ற திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தந்தையே , உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன் ; வேறொன்றையும் வேண்டேன் .


பாடல் எண் : 3
கந்தம் கமழ் கார் அகில் சந்தனம் உந்திச்
செந்தண் புனல் வந்து இழி பெண்ணை வடபால்
மந்தீ பல மாநடம் ஆடும் துறையூர்
எந்தாய்! உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே.

         பொழிப்புரை : நறுமணம் கமழ்கின்ற கரிய அகில்மரங்களையும் , சந்தன மரங்களையும் தள்ளிக்கொண்டு , சிவந்த குளிர்ந்த நீர் இடையறாது வந்து பாய்கின்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண்ணுள்ள , பெண் குரங்குகள் பல வகையான நடனங்களை ஆடுகின்ற திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள எம்தந்தையே , உன்பால் அடியேன் தவ நெறியையே வேண்டிக் கொள்வேன் ; வேறொன்றையும் வேண்டேன் .


பாடல் எண் : 4
அரும்பு ஆர்ந்தன மல்லிகை சண்பகம் சாடிச்
சுரும்பு ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால்
கரும்பு ஆர் மொழிக் கன்னியர் ஆடும் துறையூர்
விரும்பா! உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே.

         பொழிப்புரை : அரும்புகள் நிறைந்தனவாகிய ` மல்லிகை , சண்பகம் ` என்னும் மரங்களை முரித்து , அவற்றில் உள்ள வண்டுகள் நிறையக்கிடக்கக் கொணர்ந்து கரையில் எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணை யாற்றின் வடகரைக்கண் , கரும்புபோலும் மொழியினையுடைய கன்னிப் பெண்கள் மூழ்கி விளையாடும் ஒருதுறையைச் சார்ந்த திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள என் விருப்பத்திற்குரியவனே , உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக்கொள்வேன் ; வேறொன்றையும் வேண்டேன் .


பாடல் எண் : 5
பாடு ஆர்ந்தன மாவும் பலாக்களும் சாடி
நாடு ஆர வந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால்
மாடு ஆர்ந்தன மாளிகை சூழும் துறையூர்
வேடா! உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே.

         பொழிப்புரை : பக்கங்களில் நிறைந்துள்ளனவாகிய மா மரங்களையும் , பலா மரங்களையும் முரித்துக் கொணர்ந்து நாடெங்கும் நிறையும் படி எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக் கண் உள்ள , செல்வம் நிறைந்தனவாகிய மாளிகைகள் சூழ்ந்த துறையூரில் எழுந்தருளியுள்ள , பல அருட்கோலங்களை யுடையவனே , உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன் ; வேறொன்றையும் வேண்டேன் .


பாடல் எண் : 6
மட்டு ஆர் மலர்க் கொன்றையும் வன்னியும் சாடி
மொட்டு ஆரக் கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வடபால்
கொட்டு ஆட்டொடு பாட்டு ஒலி ஓவாத் துறையூர்ச்
சிட்டா! உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே.

         பொழிப்புரை : தேன் நிறைந்த மலர்களை யுடையகொன்றை மரம் , வன்னி மரம் இவைகளை முரித்து , அரும்புகளோடு நிரம்பக் கொணர்ந்து எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக் கண் , வாச்சிய முழக்கமும் , ஆடலும் , பாடலும் நீங்காது கொண்டு விளங்குகின்ற திருத் துறையூரில் எழுந்தருளியுள்ள மேலானவனே , உன்பால் அடியேன் தவ நெறியையே வேண்டிக் கொள்வேன் ; வேறொன்றையும் வேண்டேன் .


பாடல் எண் : 7
மாது ஆர் மயில் பீலியும் வெள் நுரை உந்தித்
தாது ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால்
போது ஆர்ந்தன பொய்கைகள் சூழும் துறையூர்
நாதா! உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே.

         பொழிப்புரை : அழகு நிறைந்தனவான மயிற்பீலியையும் , வெள்ளிய நுரைகளையும் தள்ளி , பல மலர்களை மகரந்தத்தோடு நிரம்பக் கொணர்ந்து எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண் , மலர்கள் நிறைந்தனவாகிய பொய்கைகள் சூழப் பெற்று விளங்கும் திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தலைவனே , உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக்கொள்வேன் ; வேறொன்றையும் வேண்டேன் .


பாடல் எண் : 8
கொய் ஆர் மலர்க் கோங்கொடு வேங்கையும் சாடிச்
செய் ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால்
மை ஆர் தடம் கண்ணியர் ஆடும் துறையூர்
ஐயா! உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே.

         பொழிப்புரை : கொய்தல் பொருந்திய மலரையுடைய கோங்க மரம், வேங்கை மரம் இவைகளை முரித்துக் கொணர்ந்து, வயல் நிறைய எறிவதாகிய , ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண் , மை பொருந்திய கண்களையுடைய மகளிர் மூழ்கியாடும் ஒரு துறைக்கண் உள்ள திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தலைவனே , உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன் ; வேறொன்றையும் வேண்டேன் .


பாடல் எண் : 9
விண் ஆர்ந்தன மேகங்கள் நின்று பொழிய
மண் ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால்
பண் ஆர் மொழிப் பாவையர் ஆடும் துறையூர்
அண்ணா! உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே.

         பொழிப்புரை : வானத்தில் நிறைந்தனவாகிய மேகங்கள் நிலைத்து நின்று பொழிவதனால் , மலைக்கண் உள்ள பொருள்களை வாரிக் கொணர்ந்து நிலம் நிறைய எறிவதாகிய , ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண் , பண்போலும் மொழியினையுடைய மகளிர் மூழ்கி யாடும் ஒரு துறைக்கண் உள்ள திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தலைவனே , உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன் ; வேறொன்றையும் வேண்டேன் .


பாடல் எண் : 10
மாவாய்ப் பிளந்தானும் மலர்மிசை யானும்
ஆவா அவர் தேடித் திரிந்து அலமந்தார்,
பூ ஆர்ந்தன பொய்கைகள் சூழும் துறையூர்த்
தேவா! உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே.

         பொழிப்புரை :பூக்கள் நிறைந்தனவாகிய பொய்கைகள் சூழ்ந்துள்ள திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள பெருமானே! `கேசி ` என்னும் அசுரன் கொண்ட வஞ்சனை உருவமாகிய குதிரையின் வாயைக் கிழித்த திருமாலும் , மலர்மிசையோன் ஆகிய பிரமனும் ஆகிய அவ்விருவரும் உன்னை வழிபட்டுத் தவநெறியை வேண்டிக் கொள்ள மாட்டாது , அந்தோ! உன் அளவினை ஆராய்ந்து தேடியலைந்தனர் ; ஆயினும் , உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக்கொள்வேன் ; வேறொன்றையும் வேண்டேன் .


பாடல் எண் : 11
செய் ஆர் கமலம் மலர் நாவலூர் மன்னன்,
கையால் தொழுது ஏத்தப் படும் துறையூர் மேல்,
பொய்யாத் தமிழ் ஊரன் உரைத்தன வல்லார்
மெய்யே பெறுவார்கள் தவநெறி தானே.

         பொழிப்புரை : வயல்கள் நிறையத் தாமரை மலரும் திரு நாவலூருக்குத் தலைவனும் , மெய்ம்மையையே கூறும் தமிழ்ப் பாடலைப் பாடுபவனும் ஆகிய நம்பியாரூரன் , யாவராலும் கையால் கும்பிட்டுத் துதிக்கப்படும் திருத்துறையூரில் உள்ள இறைவன் மீது பாடியனவாகிய இப் பாடல்களை நன்கு பாடவல்லவர் தவநெறியைத் தப்பாது பெறுவர் .
                                             திருச்சிற்றம்பலம்














1 comment:

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...