அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
படர்புவியின் மீது
(திருச்செந்தூர்)
புலவர்கள் அகந்தை தீர்ந்து
அருள்நெறி நிற்க
தனதனன
தான தான தந்தன
தனதனன தான தான தந்தன
தனதனன தான தான தந்தன ...... தந்ததான
படர்புவியின்
மீது மீறி வஞ்சர்கள்
வியனினுரை பானு வாய்வி யந்துரை
பழுதில்பெரு சீல நூல்க ளுந்தெரி ......
சங்கபாடல்
பனுவல்கதை
காவ்ய மாமெ ணெண்கலை
திருவளுவ தேவர் வாய்மை யென்கிற
பழமொழியை யோதி யேயு ணர்ந்துபல்
......சந்தமாலை
மடல்பரணி கோவை யார்க லம்பக
முதலுளது கோடி கோள்ப்ர பந்தமும்
வகை வகையி லாசு சேர்பெ ருங்கவி ......
சண்டவாயு
மதுரகவி
ராஜ னானென் வெண்குடை
விருதுகொடி தாள மேள தண்டிகை
வரிசையொடு லாவு மால கந்தைத ......
விர்ந்திடாதோ
அடல்பொருது
பூச லேவி ளைந்திட
எதிர்பொரவொ ணாம லேக சங்கர
அரஹர சிவாம ஹாதெ வென்றுனி ......
அன்றுசேவித்
தவனிவெகு
கால மாய்வ ணங்கியு
ளுருகிவெகு பாச கோச சம்ப்ரம
அதிபெல கடோர மாச லந்தர ...... னொந்துவீழ
உடல்தடியு
மாழி தாவெ னம்புய
மலர்கள்தச நூறு தாளி டும்பக
லொருமலரி லாது கோவ ணிந்திடு ......செங்கண்மாலுக்
குதவியம
கேசர் பால இந்திரன்
மகளைமண மேவி வீறு செந்திலி
லுரியஅடி யேனை யாள வந்தருள் ......
தம்பிரானே.
பதம் பிரித்தல்
படர்
புவியின் மீது மீறி வஞ்சர்கள்
வியனின் உரை பானுவாய் வியந்து உரை
பழுதில் பெரு சீலநூல்களும், தெரி
...... சங்கபாடல்
பனுவல்,
கதை, காவ்யம் ஆம் எண் எண்கலை
திருவளுவ தேவர் வாய்மை என்கிற
பழமொழியை ஓதியே உணர்ந்து, பல்
......சந்தமாலை,
மடல்,பரணி, கோவையார், கலம்பகம்
முதல் உளது கோடி கோள் ப்ரபந்தமும்,
வகை வகையில் ஆசு சேர் பெருங்கவி .....
சண்டவாயு
மதுரகவி
ராஜன் நான் என், வெண்குடை,
விருதுகொடி, தாள மேள தண்டிகை,
வரிசையொடு உலாவும் மால் அகந்தை ......தவிர்ந்திடாதோ?
அடல் பொருது
பூசலே விளைந்திட,
எதிர் பொர ஒணாமல் ஏக, சங்கர
அரஹர சிவாமஹாதெவ என்றுஉனி, ...... அன்று சேவித்து
அவனி
வெகு காலமாய் வணங்கி,உள்
உருகி, வெகு பாச கோச சம்ப்ரம
அதி பெல கடோர மா சலந்தரன் ...... நொந்துவீழ
உடல்தடியும்
ஆழி தாஎன், அம்புய
மலர்கள் தசநூறு தாள் இடும்பகல்,
ஒருமலர் இலாது கோ அணிந்திடு
....செங்கண்மாலுக்கு
உதவிய
மகேசர் பால! இந்திரன்
மகளை மணம் மேவி, வீறு செந்திலில்
உரிய அடியேனை ஆள வந்துஅருள் ......
தம்பிரானே.
பதவுரை
அடல் பொருது பூசலே விளைந்திட ---
வலிமையுடன் எதிர்த்து அசுரர்கள்
போர்புரிந்திட,
எதிர்பொர ஒணாமல் ஏக --- எதிர் நின்று போர்
புரிய மாட்டாதவராகி புறந்தந்து சென்று திருமால்,
சங்கர --- சுகத்தைச் செய்பவரே!
அரஹர --- பாவத்தைக் கொடுப்பவரே!
சிவ - சிவ சிவா! மஹாதேவ என்று உன்னி ---
பெரிய தேவரே என்று நினைத்து,
அன்று சேவித்து --- அந்நாளில் ஆராதனை
புரிந்து,
அவனி வெகு காலமாய் வணங்கி --- மண்ணுலகில் அநேக காலமாய் வழிபாடு செய்து,
உள் உருகி --- உள்ளம் உருகி,
வெகு பாச --- அநேக பாசம் என்ற ஆயுதமும்,
கோசம் --- கவசமும்,
சம்ப்ரமம் --- சிறப்பும்,
அதி பெலம் --- மிகுந்த வலிமையும்,
கடோரம் --- கொடுமையும்,
மா சலந்தரன் --- பெருமையும் உடைய சலந்தராசுரன்,
நொந்து வீழ --- துன்புற்று மாண்டு விழுமாறு,
உடல் தடியும் --- அவனது உடம்பைப் பிளந்த,
ஆழி தா
என - சக்ராயுதத்தைத்
தந்தருளுவீர்
என்று வேண்டி,
தச நூறு அம்புய மலர்கள் --- ஆயிரம் தாமரை
மலர்களை,
தாள் இடும்பகல் --- திருவடியில் அருச்சனை
செய்து வர ஒரு நாள்,
ஒரு மலர் இலாது --- ஒரு மலர் குறைந்துபோக,
கோ அணிந்திடு --- கண்ணை எடுத்து திருவடியில்
அருச்சித்த,
செங்கண்மாலுக்கு --- சிவந்த கண்களையுடைய
நாராயணருக்கு,
உதவிய மகேசர் பால --- அந்தச் சக்ராயுதத்தைக்
கொடுத்தருளிய சிவபெருமானுடைய திருக்குமாரரே!
இந்திரன் மகளை மணம் மேவி --- இந்திரனுடைய புதல்வியாகிய தெய்வயானையம்மையைத்
திருமணம் செய்துகொண்டு,
வீறு செந்திலில் --- பெருமை நிறைந்த
திருச்செந்தூரில்,
உரிய அடியேனை ஆள வந்து அருள் தம்பிரானே ---
தங்கட்கே உரிய அடியவனாகிய என்னை ஆட்கொள்ளும் பொருட்டு வந்து அருளிய பெருந்தலைவரே!
படர் புவியின் மீது மீறி --- விசாலமான
பூதலத்தின் கண் உச்சியடைந்து,
வஞ்சர்கள் வியனின் உரை பானுவாய் வியந்து ---
வஞ்சனையாளர்கள் வியப்பாகக் கூறுமுறையில் கல்வியில் சூரியனே என்று புகழ்ந்து
சொல்லவும்,
உரை பழுதில் பெறு சீல நூல்களும் --- நல்ல
உரைகளுடன் கூடிய குற்றமில்லாத ஒழுக்க நூல்களையும்,
தெரி சங்க பாடல் பனுவல் --- தெரிய வேண்டிய
சங்க நூல்களையும்,
கதை --- வரலாற்று நூல்களையும்,
காவ்யம் --- காவியங்களையும்,
ஆம் எண் எண் கலை --- ஆகிய அறுபத்து நான்கு
கலைகளையும்,
திருவள்ளுவ தேவர் வாய்மை என்கிற பழமொழியை
ஓதியே உணர்ந்து --- திருவள்ளுவ தேவர் திருவாய் மலர்ந்தருளிய பொய்யாமொழியாகிய பழைய
மொழி என்கின்ற திருக்குறளையும் ஓதியும் உணர்ந்தும்,
பல் சந்த மாலை --- பலவிதமான சந்தங்களுடைய
மாலை,
மடல் பரணி கோவையார் கலம்பகம் முதல் உளது கோடி
கோள் ப்ரபந்தமும் --- மடல், பரணி, கோவை, கலம்பகம் முதலாக உள்ள கோடி கொள்கைகளையுடைய
நூல்களையும்,
வகை வகையில் --- வகை வகையாகக் கற்று,
ஆசுசேர் பெருங்கவி --- விரைந்து பாடுகின்ற
பெரிய கவியென்றும்,
சண்டவாயு --- சண்ட மாருதம் என்றும்,
மதுர கவிராஜன் நான் என் --- மதுரகவி ராஜன்
நான் என்றும்,
வெண்குடை --- வெண்மை நிறமுடைய குடையும்,
விருது --- விருதுகளும்,
கொடி --- கொடிகளும்,
தாளம் மேளம் --- தாளம் மேளங்களும்,
தண்டிகை --- பல்லக்கும்,
வரிசையோடு உலாவும் --- இந்த வரிசையோடு
புலவர்கள் உலாவுகின்ற,
மால் அகந்தை தவிர்ந்திடாதோ --- மயக்கத்துடன்
கூடிய செருக்கு தவிராதோ?
பொழிப்புரை
வலிமையுடன் எதிர்த்துப் போர் நிகழ, அப்போரில் எதிர்த்துப் போரிட
முடியாமையால், திருமால் அந்நாளில்
சிவபெருமானை வழிபாடு செய்து, “சங்கரா! அரஹர! சிவ
சிவ! மஹாதேவா” என்று துதிசெய்து பூதலத்தில் நெடுங் காலமாகப் பூசித்து உள்ளம் உருகி, பாசக் கயிறுகளும் கவசமும் சிறப்பும்
மிகுந்த வலிமையும் கொடுமையும் பெருமையும் உடைய சலந்தராசுரனுடைய உடம்பைப் பிளந்த
சக்கராயுதத்தைத் தந்தருள வேண்டும் என்று, சிவபெருமானுடைய
திருவடியில் ஆயிரம் தாமரை பூக்களால் நாடோறும் அருச்சனை புரிந்து வந்த போது, ஒரு நாள் ஒரு மலர் குறைந்தது கண்டு, உடனே தன் கண்ணை எடுத்து அர்ச்சித்தலும், அவருக்குச் சக்கரத்தை உதவிய சிவபெருமானுடைய
திருக்குமாரரே!
இந்திரனுடைய புதல்வியாகிய தெய்வயானையைத்
திருமணம் புரிந்துகொண்டு, பெருமை பொருந்திய
திருச்செந்தூரில், அருள் பெறுவதற்கு
உரிய அடியேனை ஆட்கொள்ளுமாறு எழுந்தருளிய பெருமை மிகுந்தவரே!
பரந்த உலகிலே மேம்பாடு பெற்று, வஞ்சகர்கள் புகழ்ந்துரையாக ’சூரியன்
போன்றவர்’ என்று வியந்துரைக்க, குற்றமில்லாத உரையுடன்
கூடிய ஒழுக்க நூல்களையும், தெரிய வேண்டிய சங்க
நூல்களையும், வரலாற்று நூல்களையும், காவியங்களையும், அறுபத்துநான்கு கலைகளையும், திருவள்ளுவ தேவர் கூறிய பொய்யாமொழியாகிய
திருக்குறளையும் ஓதியுணர்ந்து, பல சந்தங்களுடன்
கூடிய மாலை, மடல் பரணி, கோவையார், கலம்பகம் முதலிய அநேக நயங்களைக்
கொள்ளுகின்ற நூல்களை வகைவகையாகப் பாடி பெரிய “ஆசுகவி” “சண்டமாருதம்” மதுரகவி
ராஜன்” என்று புலவர்கள் (தம்மைத்,
தாமே
கூறிக் கொண்டு) வெண்குடை, விருது, கொடி, தாளம், மேளம், பல்லக்கு முதலிய வரிசைகளோடு உலாவுகின்ற, மயக்கத்துடன் கூடிய அகந்தை அவர்களை
விட்டு அகலமாட்டாதோ?
விரிவுரை
படர்புவியின்
மீது மீறி
---
விசாலமான
இந்த மண்ணுலகத்திலே சிலர் பல வகையான சிறப்புகளால் மேம்பாட்டை யடைவர்; அப்படி யடைந்தவர்களைக் கண்டு சிலர்
வஞ்சனையாக அவர்களைப் புகழ்வர்.
வஞ்சகர்
வியன் இன் உரை பானுவாய் வியந்து ---
ஆ!
தாங்கள் “ஞானபானு” “கல்விக்கதிர்” என்றெல்லாம் வெறுமையாக வியந்து கூறுவர் வஞ்சகர்.
உரை
பழுதில் பெறு சீல நூல்கள் ---
குற்றமில்லாத
சொற்களைப் பெற்ற ஒழுக்க நூல்கள். பதினெண் கீழ்க்கணக்கு என்ற நூல்கள் இந்த
வரிசையைச் சேர்ந்தவை.
சங்க
பாடல் பநுவல்
---
சங்ககாலத்தில்
எழுந்த நூல்கள்; அவைகளில் பல கடல்
கோளால் அழிந்துபட்டன. எஞ்சி நின்ற நூல்கள் சில. இப்போது உள்ளவை பத்துப்பாட்டு
எட்டுத்தொகை முதலிய நூல்கள்.
கதை
காவ்யம்
---
கதை-வரலாற்று
நூல்கள், காவ்யம்-சிந்தாமணி, நைடதம் முதலியவை காவியங்களாகும்.
எண்ணெண்
கலை ---
அறுபத்து
நான்கு கலைகள்
அக்கர
இலக்கணம், இலிகிதம், கணிதம், வேதம், புராணம், வியாகரணம், நீதிசாத்திரம், ஜோதிட சாத்திரம், தரும சாத்திரம், யோக சாத்திரம், மந்திர சாத்திரம், சகுன சாத்திரம், சிற்ப சாத்திரம், வைத்திய சாத்திரம், உருவசாத்திரம், இதிகாசம், காவியம், அலங்காரம், மதுரபாடனம், நாடகம், நிருத்தம், சத்தப்பிரமம், வீணை, வேணு, மிருதங்கம், தாளம், அத்திரபரீட்சை, கனக பரீட்சை, இரத பரீட்சை, கசபரீட்சை, அசுவ பரீட்சை, இரத்னபரீட்சை, பூமிபரீட்சை, சங்கிராமவிலக்கணம், மல்யுத்தம், ஆகருடணம், உச்சாடணம், வித்துவேடணம், மதனசாத்திரம், மோகனம், வசீகரணம், இரசவாதம், காந்தருவவாதம், பைப்பீல வாதம், கௌத்துகவாதம், தாதுவாதம், காருடம், நட்டம், முட்டி ஆகாயப் பிரவேசம், ஆகாயகமனம், பரகாயப் பிரவேசம், அதிரிசியம், இந்திரசாலம், மகேந்திரசாலம், அக்கினித்தம்பம், சலத்தம்பம், வாயுத்தம்பம், திட்டித்தம்பம், வாக்குத்தம்பம், சுக்கிலத்தம்பம், கன்னத்தம்பம், கட்கத்தம்பம், அவத்தைப் பிரயோகம்.
திருவள்ளுவ
தேவர்
---
மனிதர்களில்
விலங்கு உண்டு;
மனிதர்களில்
மனிதர் உண்டு,
மனிதர்களில்
தேவர் உண்டு;
ஆசையுள்ளம்
படைத்தவன் விலங்கு.
அன்பு
உள்ளம் படைத்தவன் மனிதன்.
அருள்
உள்ளம் படைத்தவன் தேவன்.
திருவள்ளுவர்
அருள் உள்ளம் படைத்தவர். 1330 திருக்குறள்
அமுதத்தால் உலகில் உள்ள மன்பதைகளை வாழச் செய்தார். அதனால் அவர் மனித உலகில் தேவர்.
தேவர்
குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர்
தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா
சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா
சகமென் றுணர்.
என்னும்
ஔவையார் பாடலாலும் அறிக.
“ஆமுயிர் கொல்லா மேலோர்
அறிவினை யறிந்த நல்லோர்
தீமனம் அடக்கவல்லார் இவர்களே தேவராவார்”
வாய்மை
என்கின்ற பழமொழி ---
திருவள்ளுவர்
பாடியருளிய திருக்குறள் எப்போதும் மாறுபாடு-அழிவு இல்லாத ஒரு பெரிய சத்தியமறை.
பொய்யா மொழி எனப்படும். அதற்கு ஈடு அதுதான். அது போன்ற ஒரு நூல் எந்த நாட்டிலும்
எம்மொழியிலும் இல்லை என்பது உறுதி. சுருங்கிய சொற்களால் விரிந்த கருத்துக்களைத்
தன்னகத்தே கொண்ட அறிவுக் கருவூலம் அது.
ஓதியே
உணர்ந்து ---
படிப்பது
வேறு; ஓதுவது வேறு. ஆழமாகப்
பதிவு பெறாமல் மேல்வாரியாக ஒரு நூலைப் பயில்வதற்குப் படிப்பது என்று பேர்.
ஆழ்ந்து
நுணுகி அறிவிற்செறிந்து அநுபவத்துக்கு வரும் அளவில் பயில்வது ஓதுவது ஆகும்.
“ஓதியுணர்ந்தும்
பிறர்க்குரைத்தும்” ---
திருக்குறள்.
“காதல் நான்முகனாலும்
கணிப்பரிய கலையனைத்தும்
ஓதினான் கதிரோன்முன் சென்று”
“மறையெலாம்
ஓதியுணர்ந்தீர் --- கம்பராமாயணம்.
ஆகவே
திருக்குறளைப் படிக்கக் கூடாது. ஓதுதல் வேண்டும். ஓதியுணர்தல் வேண்டும்.
பல்சந்த
மாலை
---
பிரபந்தவகை
96. அவற்றுள் ஒன்று மாலை.
பல்சந்த மாலை பண்மணிமாலை, மணிமாலை, புகழ்ச்சிமாலை, பெருமகிழ்ச்சிமாலை, மெய்க்கீர்த்திமாலை, காப்புமாலை, வேனில் மாலை, வசந்த மாலை, தாரகை மாலை, உற்பவமாலை, தானை மாலை, மும்மணி மாலை, தண்டகமாலை, வீரவெட்சிமாலை, நாமமாலை, நான்மணிமாலை, நவமணிமாலை, இணைமணிமாலை, இரட்டைமணிமாலை, அநுராக மாலை எனப் பல மாலைகள் உண்டு.
ஒவ்வொரு மாலை நூலும் அதனதற்குரிய விதிப்படி பாடப்படவேண்டும்.
மடல் ---
மடல், ஊர்வது பற்றிப் பாடும் நூல். உலாமடல், வளமடல் என்பன.
பரணி ---
ஆயுரம்
யானை அமரிடை வென்ற
மாணவனுக்கு
வகுப்பது பரணி.
போரில்
ஆயிரம் யானைகளை வென்ற வீரன் மீது பாடுவது. கலிங்கத்துப்பரணி, மோகவதைப் பரணி, அஞ்ஞவதைப் பரணி, அண்டத்துப் பரணி, வீரபத்திரப்பரணி என வரும் நூல்களைக்
காண்க.
கோவை
---
இருவகைப்பட்ட
முதற்பொருளும், பதினான்கு வகைப்பட்ட
கருப்பொருளும், பத்துவகைப்பட்ட
உரிப்பொருளும் பொருந்திக், கைக்கிளை முதலுற்ற
அன்புடைக் காமப்பகுதியவாம் களவொழுக்கத்தினையுங் கற்பொழுக்கத்தினையுங் கூறுதலே
எல்லையாகக் கட்டளைக் கலித்துறையால்,
நானூறுபாடல்களால், திணை முதலாகத் துறையீறாகக் கூறப்பட்ட
பன்னிரண்டு அகப்பாட்டுறுப்பும் வழுவின்றித் தோன்றப் பாடுவது.
திருக்கோவையார், தஞ்சைவாணன் கோவை, வெங்கைக்கோவை, கோடீச்சுரக் கோவை, ஒருதுறைக் கோவை, அம்பிகாபதிக் கோவை, திருவாரூர்க் கோவை,காழிக் கோவை முதலியவற்றைக் காண்க.
கலம்பகம் ---
ஒருபோகும், வெண்பாவும், முதற்கலியுறுப்பாக முற்கூறப் பெற்று, புயவகுப்பு,மதங்கம், அம்மானை, காலம், சம்பிரதம்கார், தவம், குறம், மறம், பரண், களி,சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் என்னும் இப்பதினெட்டு உறுப்புகளும்
இயைய, மடக்கு, மருட்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம், கலித்தாழிசை, வஞ்சி விருத்தம், வஞ்சித்துறை, வெண்துறை என்னும் இவற்றால், இடையே வெண்பா கலித்துறை விரவ, அந்தாதித் தொடையால் பாடுவது கலம்பகம்.
தில்லைக்
கலம்பகம், மறைசைக் கலம்பகம், மதுரைக் கலம்பகம், காசிக் கலம்பகம், அருணைக்கலம்பகம், கதிர்காமக் கலம்பகம், கச்சிக் கலம்பகம், வெங்கைக்கலம்பகம், புள்ளிருக்கு வேளூர்க் கலம்பகம், திருவாமாத்தூர்க் கலம்பகம் முதலிய
நூல்களைக் காண்க.
ஆசுசேர்
பெருங்கவி
---
கவி
நான்கு வகைப்படும். ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தார கவி, ஆசு-விரைவு. விரைந்து பாடுவது ஆசுகவி.
(1) பொருளடி, பாவணி முதலியன தந்து மற்றொருவன் பாடுக
என்ற உடனே பாடுவோன் ஆசுகவி.
(2) பொருட்செல்வம், சொற் செல்வம், தொடை விகற்பம் செறிய, உருவகம் முதலிய அலங்காரத்தோடு
இன்னோசைத்தாய் அமுதமுறப் பாடுவோன் மதுரகவி.
(3) மாலைமாற்று, சுழி குளம், ஏகபாதம், சக்கரம், எழு கூற்றிருக்கை, காதை கரப்பு, கரந்துரை, தூசங்கொளல், வாவனாற்று, பாதமயக்கு, பாவின் புணர்ப்பு, கூட சதுக்கம், கோமூத்திரி, ஓரெழுத்தினம், ஒற்றெழுத்துத் தீர்ந்த ஒரு பொருட்
பாட்டு, சித்திரப்பா, விசித்திரப்பா, வினாவுத்தரம், சருப்பதோ பத்திரம், எழுத்து வருத்தனம் இவை முதலிய மிளிரக்
கவி பாடுவோன் சித்திரக்கவி.
புலவர்களில்
பலர் தங்களை "நாற்கவி வலவன் “சண்டமாருதம்” முதலிய பட்டங்களைத் தம்பட்டம்
அடித்துச் செருக்குற்றிருப்பர்.
விருது ---
அப்புலவர்கள்
மற்ற புலவர்களை வென்று அதற்கு அடையாளமாக அமைத்து வைக்கும் வெற்றிச்சின்னம் விருது.
கொடி
தாளம் மேளம் தண்டிகை ---
கொடிகள், மேளதாளங்கள், பல்லக்கு, பரிசனங்கள் முதலியன சூழ்ந்துவர
ஆடம்பரமாகப் போதல்.
வரிசையொடு
உலாவு மால் அகந்தை தவிர்ந்திடாதோ ---
மேற்கூறிய
வரிசைகளுடன் சிறிதாவது பக்தியும் ஞானமுமின்றி, உய்யவேண்டும் என்ற அருள்தாகம் இன்றி
கேவலம் நான் என்ற மமதையுடன் உலாவித் திரிகின்ற இந்த அகந்தை அகன்று புலவர்கள்
நல்வழிப்பட மாட்டார்களா?
எதிர்பொர
எணாமல் ஏக
---
ஒருசமயம்
வலிமை மிகுந்த அசுரர்கள் திருமாலுடன் போர் புரிய, அவர்களை வெல்லும் ஆற்றல் இன்றி அவர்
வாட்ட முற்றனர். அப்போது சிவபெருமானிடம் சலந்தரனைக் கொன்ற சக்கரம் இருந்தது.
அதனைப் பெற்று அசரர்களை அழிக்கவேண்டும் என்று திருமால் விரும்பினார்.
சலந்தரன்
கங்கை வயிற்றில் சமுத்திர ராசனுக்குப் பிறந்தவன். அளவிட முடியாத ஆற்றல் படைத்தவன்.
இவன் மனைவி பிருந்தை. இவன் மிக்க இளைமையிலேயே தன் கைக்கு அகப்பட்ட பிரமதேவரைக்
கழுத்திற் பிடித்து வருத்தி விட்டவன். இந்திரன் முதலிய இமையவர் இவனிடம் போர்
புரிந்து தோற்றுப் புறங் கொடுத்து ஓடி ஒளிந்தார்கள். திருமால் இவனிடம் அமர்
புரிந்து ஆற்றல் தேய்ந்து அல்லல்பட்டுத் தோற்றோடினார்.
இறுதியில்
சலந்தரன் திருக்கயிலாய மலைக்குச் சென்றான். அங்கே சிவபெருமான், ஒரு முதுமறையவர் உருவில் கோபுர வாசலில்
இருந்தார். “அப்பா எங்கே போகின்றாய்? என்று
வினவினார். “சிவனுடன் போர் புரியப் போகிறேன்” என்றான். “அப்படியா! நல்லது” என்று
அக்கிழவர் கூறித் தன் இடக்காலால் நிலத்தில் வட்டமாகக் கீறி, “இதை உன்னால் எடுக்க முடியுமா? என்றார்.
“ஓய்! இந்த உலகத்தையே எடுக்கும் ஆற்றல் படைத்த
என்னால் இதனை எடுக்க முடியாதா?”
என்று
சலந்தரன் கூறி, வட்டமான அதனைப்
பேர்த்துத் தலையில் வைத்தான். அது கூரிய சக்ராயுதமாகி அவன் உடம்பைப்
பிளந்துவிட்டது.
இந்தச்
சக்ராயுதம் சிவபெமானிடம் இருந்தது. இதனைப் பெறுதல் வேண்டும் என்று கருதிய திருமால், திருவீழிமிழலை என்ற திருத்தலஞ்
சென்றார்.தாமரைக் குளம் அமைத்து,
நாள்
தோறும் ஆயிரம் தாமரை மலர்களால் சிவமூர்த்தியை மிகுந்த அன்புடன் உள்ளம் குழைந்து உருகி
வழிபட்டு வந்தார்.
சிவபெருமான்
ஒருநாள் அவருடைய அன்பை மற்றவர்கட்குக் காட்டும்பொருட்டு ஒருமலரைக் காணாமல்
செய்துவிட்டார். அர்ச்சனைப் புரிந்துகொண்டு வந்த திருமால் ஒரு மலர் குறைவதைக்
கண்டார். ஆயிரம் மந்திரங்களால் ஆயிரம் மலர்கள் அருச்சிப்பது அவருடைய நியதி. உடனே
தமது அழகிய கண்ணைப் பிடுங்கி அரனார் அடி மலர் மீது அருச்சித்தார். உடனே
சிவபெருமான் வெளிப்பட்டுத் தோன்றி,
அவருடைய
அளவற்ற அன்புக்கு மகிழ்ந்து சக்ராயுதத்தையும், கண்ணையும், கண்ணன் என்ற பெயரையும் வழங்கி
அருள்புரிந்தனர்.
ஒரே
ஒரு மலரைப் பிய்த்துப் பிய்த்து அர்ச்சிப்போரும், நான்கு, ஐந்து மந்திரங்கட்கு ஒரு மலரையிட்டு
அர்ச்சிப்போரும், இந்த வரலாற்றை ஊன்றி
நோக்கி உய்வு பெறுக.
நீற்றினை
நிறையப் பூசி நித்தல் ஆயிரம்பூக் கொண்டு
ஏற்றுழி
ஒருநாள் ஒன்று குறையக்கண் நிறைய விட்ட
ஆற்றலுக்கு
ஆழி நல்கி அவன்கொணர்ந்து இழிச்சும் கோயில்
வீற்றிருந்து
அளிப்பர் வீழி மிழலையுள் விகிர்த னாரே. ---
அப்பர்.
பங்கயம்
ஆயிரம் பூவினில்ஓர் பூக்குறையத்
தம்கண்
இடந்துஅரன் சேவடிமேல் சாத்தலுமே,
சங்கரன்
எம்பிரான் சக்கரமாற்கு அருளியவாறு
எங்கும்
பரவிநாம் தோணோக்கம் ஆடாமோ. --- திருவாசகம்.
சலம்உடைய
சலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி
நலம்உடைய
நாரணற்குஅன்று அருளியவாறு என்னேடீ,
நலம்உடைய
நாரணண்தன் நயனம்இடந்துஅரனடிக்கீழ்
அலராக
இடஆழி அருளினன்காண் சாழலோ. --- திருவாசகம்.
கருத்துரை
மாலுக்குச் சக்ரமருளிய மகேசருடைய
மதலையே! செந்திற்குமாரரே! புலவர்கள் அகந்தை தீர்ந்து அறநெறி நிற்க அருள் புரிவீர்.
No comments:
Post a Comment