திருச்செந்தூர் - 0079. பரிமள களப


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பரிமள களப (திருச்செந்தூர்)

மாதர் மயலில் உழலுபவனை ஆட்கொள்ள வேண்டல்

தனதன தனதன தந்தத் தந்தத் ...... தனதானா
     தனதன தனதன தந்தத் தந்தத் ...... தனதானா


பரிமள களபசு கந்தச் சந்தத் ...... தனமானார்
     படையம படையென அந்திக் குங்கட் ...... கடையாலே

வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற் ...... குழலாலே
     மறுகிடு மருளனை யின்புற் றன்புற் ...... றருள்வாயே

அரிதிரு மருகக டம்பத் தொங்கற் ...... றிருமார்பா
     அலைகுமு குமுவென வெம்பக் கண்டித் ...... தெறிவேலா

திரிபுர தகனரும் வந்திக் குஞ்சற் ...... குருநாதா
     ஜெயஜெய ஹரஹர செந்திற் கந்தப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


பரிமள களப சுகந்தச் சந்தத் ...... தன மானார்
     படை, யம படைஎன அந்திக்கும் கண் ...... கடையாலே,

வரி அளி நிரைமுரல் கொங்குக் கங்குல் ...... குழலாலே,
     மறுகிடும் மருளனை இன்புஉற்று, அன்பு உற்று ...... அருள்வாயே.

அரி திருமருக! கடம்பத் தொங்கல் ...... திருமார்பா!
     அலை குமுகுமு என வெம்ப, கண்டித்து ...... எறிவேலா!

திரிபுர தகனரும் வந்திக்கும் சற் ...... குருநாதா!
     ஜெயஜெய ஹரஹர செந்தில் கந்தப் ...... பெருமாளே.


பதவுரை

         அரி திரு மருக --- திருமாலின் திருமருகரே!

         கடம்ப தொங்கல் திருமார்பா --- கடப்ப மலர் மாலையணிந்த திருமார்புடையவரே!

         அலை குமுகுமு என வெம்ப --- கடலின் அலைகள் குமுகுமு என்று கொதிப்புறுமாறு,

     கண்டித்து எறி வேலா --- கண்டனம் புரிந்து வேலை எறிந்தவரே!

         திரிபுர தகனரும் வந்திக்கும் சற்குருநாதா - முப்புரத்தை எரித்த சிவபெருமானும் கும்பிடுகின்ற உத்தமமான குருமூர்த்தியே!

         ஜெய ஜெய --- வெற்றியை யுடையவரே!

         ஹரஹர --- பாவத்தை நீக்குபவரே!

         செந்தில் கந்த --- திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள கந்தக் கடவுளே!

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

         பரிமள களப --- இனிய மணமுள்ள கலசைச் சாந்தினின்றும்,

     சுகந்த --- நறுமணம் வீசுகின்ற,

     சந்த தனமானார் --- அழகிய தனங்களுடைய பெண்களின்,

     படை யமபடை என --- படைகளுள் யமனுடைய படையென்று கூறும்படியான,

     அந்திக்கும் கண் கடையாலே --- சந்திக்கும் கடைக்கண் பார்வையாலும்,

     வரி அளி நிரை முரல் --- கோடுகள் உள்ள வண்டுகளின் வரிசை ஒலிக்கின்ற,

     கொங்கு கங்குல் குழலாலே --- வாசனையுள்ள இருண்ட கூந்தலாலும்,

     மறுகிடும் மருளனை --- மனம் சுழன்று மயங்குகின்ற அடியேனை,

     இன்புஉற்று அன்புஉற்று அருள்வாயே --- இன்பத்துடனும் அன்புடனும் ஆட்கொண்டு அருள்புரிவீர்.


பொழிப்புரை

         நாராயணருடைய திருமகரே!

         கடப்ப மலர் மாலையை அணிந்த திருமார்பை உடையவரே!

         கடலின் அலைகள் குமு குமு என்ற ஒலியுடன் கொதிப்புறுமாறு கண்டித்து வேலை எறிந்தவரே!

         முப்புரங்களை எரித்த சிவபெருமானும் வணங்கிய உத்தமமான குருநாதரே!

         ஜெய ஜெய! ஹரஹர!

         திருச்செந்தூரில் எழுந்தருளிய கந்தக் கடவுளே! பெருமிதம் உடையவரே!

         மணம் வீசுகின்ற அழகிய தனங்களையுடைய பெண்களின், படைகளுள் யமனுடைய படை என்று சொல்லும்படியாகச் சந்திக்கும் கடைக்கண்களாலும், கோடுகள் உள்ள வண்டுகளின் கூட்டம் ஒலிக்கின்ற வாசனையும் கருமையுமுடைய கூந்தலாலும், மனம் சுழன்று மருளுகின்ற அடியேனை, இன்புடனும், அன்புடனும், ஆட்கொண்டு அருளுவீர்.


விரிவுரை

பரிமள களப சுகந்தச் சந்தத் தன மானார் ---

சந்தனம் ஒரு சிறந்த வாசனைப் பொருள், அதனை அணிவதனால் உடலுக்குப் பல நலன்கள் உண்டு. சந்தனத்தை உணவுக்குப் பின் பூசிக்கொள்வதனால் ஜீரண சக்தி மிகுதிப்படும். நம் நாட்டில் எல்லாச் சிறப்பு நாட்களிலும் சந்தனம் தந்து தாம்பூலம் தரும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகின்றது.

களபம் அணிந்திடு மணிமார்பா”    ---  (பரவு நெடுங்) திருப்புகழ்.

தகுதியுடைய பெண்கள் சந்தனக் குழம்பை உடம்பிலும் தமது மார்பிலும் அணிந்து கொள்வர்.

மகளிர் மான்போன்று மருண்ட பார்வையும், அச்சமும் உடையவர்களாதலின் “மானார்” என்றனர்.


படை எம படை என அந்திக்கும் கண் கடையாலே ---

படை என்ற சொல்லை தனமானார் படைத்த என்று கூட்டிப் பொருள் செய்து கொள்ளலாம்.

பெண்களுடைய கண்கள் ஆடவரை மிகவும் மயங்கச் செய்து கேடு விளைவிக்கும். இங்கே விலைமகளிரைப் பற்றி இது குறிக்கின்றது. கற்புடைய மகளிரை அன்று என்று தெளிக.


வரி அளி நிரைமுரல் கொங்குக் கங்குற் குழலாலே ---

வரி - கோடு அளி - வண்டு; நிறை - கூட்டம்; கொங்கு - வாசனை; கங்குல் - இருள்.

கூந்தலில் பூக்களை முடித்திருப்பதனால், வண்டுகள் தேனைப் பருகும் பொருட்டு, இனியநாதமுடன் ஒலிக்கும், பெண்களின் கூந்தலும் ஆடவரை மயக்கும்.


மறுகிடும் மருளனை ---

மறுகல் - சுழலல்.

வையகம் மறுகுறும் என்பதோர் மறுக்கமுண்டரோ”  -கம்பர்.

துறக்கப் படாத உடலைத் துறந்து,வெந் தூதுவரோடு
இறப்பன், இறந்தால் இருவிசும்பு ஏறுவன், ஏறிவந்து
பிறப்பன், பிறந்தால் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர்
மறப்பன்கொலோ என்று என் உள்ளம் கிடந்து மறுகிடுமே.”    ---அப்பர்.

இன்பு உற்று அன்பு உற்று அருள்வாயே ---

அவாவற்று, பற்றினை விட்டு, பரம் பொருளைப் பற்றி நின்றபோது உண்மையான இன்பம் விளைகின்றது. இன்பத்தை அன்பினாலேயே பெறவேண்டுமாதலின், இன்புற அன்புற்று அருள்வாய் என்றனர்.

அரி திருமருக ---

அரி-பாவத்தை நீக்குபவர்.

அலை குமுகுமு என வெம்பக் கண்டித்து எறிவேலா ---

இறதிப் போரில் உறுதியிழந்த சூரன் கடலில் ஒளிந்தான். முருகவேள் வேற்படையைக் கடலின்மீது விடுத்தருளினார்.

சூரன் உடல் அற வாரி சுவறிட வேலை விடவல பெருமாளே”
                                                                           ---  (பாதிமதி) திருப்புகழ்.

வேலை வற்றி வறண்டு சுறீல் சுறீலென”            ---  (ஓலமிட்ட) திருப்புகழ்.

இது உக்கிரப் பெருவழுதி மூலம் கடல் மீது வேல் விட்ட வரலாற்றையும் குறிக்கும்.

  
கருத்துரை

         திருமால் மருகரே! கடல்மீது வேலை எறிந்தவரே! சிவகுருவே! செந்திலாண்டவரே! மாதர் மயக்கில் வீழ்ந்து தவியாது அடியேன் உய்வு பெற்று இன்புற அருள் புரிவீர்.


No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...