கோயில் - சிதம்பரம் - 1


கோயில்
(சிதம்பரம், தில்லை)

இறைவர்       : நடராசர், அம்பலகூத்தர், திருச்சிற்றம்பலமுடையார்அம்பலவாணர்,                      திருமூலட்டானேசுவரர்(கூத்தபிரான், கனகசபாபதி, சபாநாயகர்)

இறைவியார்    : சிவகாமி, சிவகாமசுந்தரி.

தல மரம்       : தில்லை, ஆல்

தீர்த்தம்        : சிவகங்கை, பரமானந்தகூபம், வியாக்ரபாததீர்த்தம்,                                                         திருப்புலீச்சரம்) பிரமதீர்த்தம், அனந்ததீர்த்தம்  முதலியன.

தேவாரப் பாடல்கள்  : நால்வர் பாடல் பெற்ற தலம்.


சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.

            'கோயில்' என்று பொதுவாக வழங்கினாலே சைவத்தில் சிதம்பரம் நடராசப் பெருமானின் கோயிலைத் தான் குறிக்கும். ஊர்ப் பெயர் தில்லை; கோயிலின் பெயர் சிதம்பரம், இன்று ஊர்ப்பெயர் வழக்கில் மறைந்து, கோயிலின் பெயரே ஊர்ப் பெயராக வழங்கி வருகிறது.

            தில்லை மரங்கள் அடர்ந்த காடாக இருந்தமையால் தில்லைவனம் என்று பெயர் பெற்றது. (இம்மரங்கள் தற்போது சிதம்பரத்தில் இல்லை; ஆனால் இதற்கு அண்மையிலுள்ள பிச்சாவரத்திற்குப் பக்கத்தில் உப்பங்கழியின் கரைகளில் காணப்படுகின்றன.)

            இக்கோயிலுள் 'திருமூலட்டானம்' என்னும் தனிக்கோயில் ஒன்றுள்ளது. அர்த்தசாம வழிபாடு முடிந்தபின் எல்லாக் கோயில்களிலும் உள்ள சிவகலைகள் அனைத்தும் இந்த மூலத்தான இலிங்கத்தில் ஒடுங்குவதாக ஐதீகம்.

            திருச்சிற்றம்பலம் உள்ளே செல்வதற்கு ஐந்துபடிகள் - பஞ்சாக்கரப்படிகள் உள்ளன; இப்படிகளின் இரு புறமும் யானை உருவங்கள் உள்ளன. பதினான்கு சாத்திரங்களில் ஒன்றை இப்படியில் வைத்தபோது, இப்படிகளிலுள்ள யானைகளில் ஒன்று தன் தும்பிக்கையால் அந்நூலையெடுத்து நடராசப்பெருமான் திருவடியில் வைத்தமையால் அந்நூல் 'திருக்களிற்றுப்டியார்' என்ற பெயர் பெற்றது.

            இறைவன் - விராட்புருஷனின் வடிவத்தில் திருவாரூர் மூலாதாரமாகவும், திருவானைக்கா 'உந்தி 'யாகவும், திருவண்ணாமலை 'மணிபூரக'மாகவும், திருக்காளத்தி 'கழுத்தாகவும்', காசி 'புருவமத்தி'யாகவும், சிதம்பரம் 'இருதயத் தான'மாகவும், சொல்லப்படும்.

            பஞ்சபூத தலங்களுள் இது 'ஆகாயத்' தலம்.  பஞ்ச சபைகளுள் இது கனகசபை என்றும், பொற்சபை என்றும், சிற்சபை என்றும் சொல்லப்படும்.

            இக்கோயிலுள், இறைவனின் ஐந்து சபைகளாகிய 1. சிற்றம்பலம், 2. பொன்னம்பலம் (கனகசபை), 3. பேரம்பலம், 4. நிருத்தசபை, 5. இராசசபை என ஐந்து மன்றங்கள் உள்ளன.

             "சிற்றம்பலம்" நடராசப்பெருமான் திருநடனம் புரிந்தருளும் இடம். இவ்வம்பலத்திற்கு முதலாம் ஆதித்த சோழனின் மகன் முதற் பராந்தகசோழன் பொன் வேய்ந்தான் என்று செப்பேடுகள் கூறுகின்றன. இவனுக்கு முன் இரண்யவர்மன், பொன்வேய்ந்தான் என்று கோயிற்புராணம் தெரிவிக்கின்றது.

            "பொன்னம்பலம் (கனகசபை)" நடராசப்பெருமான் அபிஷேகம் கொண்டருளும் இடம். இப்பொன்னம்பலத்தின் முகட்டை, முதலாம் ஆதித்தசோழன், கொங்குநாட்டிலிருந்து கொண்டுவந்த உயர்ந்த மாற்றுடைய பொன்னால் வேய்ந்தான் என்று சேக்கிழாரும், தில்லைக்கோயில் கல்வெட்டுப் பாடலொன்று சிறந்த சிவபக்தனும், படைத்தலைவனுமான மணவில் கூத்தனான காளிங்கராயன் என்பவன் பொன்வேய்ந்தான் என்றும் கூறுகின்றது.

            "பேரம்பலம்" இது தேவசபை எனப்படும். மணவில் கூத்தனான காளிங்கராயன் விக்கிரமசோழன் காலதில் இச்சபையைச் செம்பினால் வேய்ந்தான் என்று தில்லைக் கோயில் பாடலால் அறிவதோடு, பின்பு இப்பேரம்பலத்திற்கு பொன் வேய்ந்தவன் மூன்றாங்குலோத்துங்கச் சோழன் ஆவான்.

            "நிருத்த சபை" ஊர்த்தவ தாண்டவம் செய்தருளிய இடம் இதுவே.

            "இராச சபை" என்பது ஆயிரக்கால் மண்டபமாகும். சோழ மன்னர் மரபில் முடிசூடப் பெறுபவர்களுக்கு இம்மண்டபத்தில் முடிசூட்டு விழா நடைபெற்று வந்தன.

            வியாக்ரபாதர் (புலிக்கால்முனிவர்) மிகுதியான பற்றினால் பூசித்த ஊராதலின் பெரும்பற்றப்புலியூர் என்றும்; சித்+ அம்பரம் (அறிவு - வெட்டவெளி) = சிதம்பரம் ஞானகாசம் என்றும்; பூலோக கயிலாயம், புண்டரீகபுரம், சிதாகாசத்தலம் எனவும் இதற்குப் பலபெயர்களுண்டு.

            வைணவத்திலும் 'திருச்சித்திரக்கூடம்' என்று புகழ்ந்தோதப்படும் திருப்பதி.

            சந்தானாசாரியர்கள் முத்தி பெற்ற சிறப்புடையதுமாகிய பழம்பதி.

            மாணிக்கவாசகர் புத்தரை வாதில் வென்று ஊமைப் பெண்ணைப் பேசுவித்த பெரும்பதி.

            திருஞானசம்பந்தர் தில்லைவாழ் அந்தணர்களைச் சிவகணங்களாகக் கண்டது இப்பதியில் தான்.


தில்லைவாழ் அந்தணர்கள் வரலாறு

            தில்லைவாழ் அந்தணர்கள் தில்லைக் கூத்தனின் திருவடித் தொண்டர்கள். அதுவே அவர்களுடைய பெருந்தவம். வேதங்களைத் தாம் கற்ற வழியிலே நின்று முறைப்படி எரி மூன்று ஓம்பி, உலகுக்கு நலம் செய்வதில் அவர்கள் கண்ணும் கருத்தும் படிந்து கிடக்கும். அறத்தைப் பொருளாக் கொண்டு வேதங்களையும் வேதாங்கங்களையும் பயில்வதில் அவர்கள் பொழுது போகும்.  அவர்களின் மரபும் ஒழுக்கமும் மாசு இல்லாதது.  அவர்களது, ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் அறுதொழில் ஆட்சியால் அருங்கலி நீங்கும்.  "கற்றாங்கு எரி ஓம்பி கலியை வாராமே செற்றார்" என்று திருஞானசம்பந்தப் பெருமான் இவர்களைச் சிறப்பித்துள்ளார்.  திருநீறு அவர்களது செல்வம்.  ஞானம் முதலிய நான்கு பாதங்களில் அவர்களுடைய உழைப்புச் செல்லும்.  அவர்கள் மானமும் பொறையும் தாங்கும் இல்லறம் பூண்டு, இப்பிறவியிலேயே இறைவனை வணங்கும் பேறு பெற்றமையால், இனிப் பெறவேண்டிய பேறு ஒன்று இல்லாதவர்கள்.  அவர்கள் பெருமையில் சிறந்தவர்கள்.  தங்களுக்குத் தாங்களே ஒப்பானவர்கள்.  தியாகேசப் பெருமானே, சுந்தரமூர்த்தி சுவாமிகட்குத் "தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்" என்று அடி எடுத்துக் கொடுத்துச் சிறப்பித்த முதன்மை வாய்ந்தவர்கள்.

            திருநீலகண்ட நாயனார் அவதரித்து வாழ்ந்த பதி.

            அவதாரத் தலம்      : தில்லை (சிதம்பரம்).
            வழிபாடு                : சங்கம வழிபாடு.
            முத்தித் தலம்          : திருப்புல்லீச்சரம் (தில்லை - சிதம்பரத்தில் உள்ள ஒரு தலம்).
            குருபூசை நாள்       : தை - விசாகம்.

திருநீலகண்ட நாயனார் வரலாறு

            தில்லயம்பதியிலே குயவர் குலத்தில் அவதரித்து அறவழியிலே நின்றவர். சிவபத்தி, சிவனடியார் பத்தியில் சிறந்தவர். மண்கல் வனையும் தொழில் செய்து வாழ்ந்து வந்தார். அடியவர்களுக்குத் திருவோடு கொடுப்பது அவருடைய திருத்தொண்டு. சிவபெருமானுடைய திருநீலகண்டமானது, யாவரையும் அழிக்கக் கூடிய விடத்தை உண்டு, எல்லோரையும் காத்ததால், திருநீலகண்டத்தினிடத்துப் பேரன்பு கொண்டு எப்போதும் "திருநீலகண்டம், திருநீலகண்டம்" என்று சொல்லி வந்தமையால், அவருக்குத் திருநீலகண்ட நாயனார் என்னும் திருப்பெயர் வழங்கலாயிற்று.

            நாயனார், அருந்ததி அனைய மங்கை நல்லாள் ஒருவரை மணம் செய்து இல்லறத்தில் வாழ்ந்து வந்தார்.  வரும் நாளில் இன்பத் துறையில் எளியர் ஆனார். பரத்தைபால் அணைந்து வீடு சேர்ந்தார்.  அதை உணர்ந்த இல்லக் கிழத்தியார், ஊடல் கொண்டு, வீட்டுப் பணிகள் எல்லாவற்றையும் குறைவு அறச் செய்துகொண்டு, கூடலுக்கு மட்டும் இசையாது இருந்தார்.  ஊடலைத் தீர்க்க வேண்டி, நாயனார் ஒருநாள் நயவுரைகள் கூறி, மனைவியாரைத் தழுவ முயன்றார்.  அவ் வேளையில் அம்மையார் வெகுண்டு, "நீர் எம்மைத் தீண்டுவீர் ஆயின், திருநீலகண்டம்" என்றார்.  நாயனாரோ, திருநீலகண்டத்தினிடத்து அளவில்லாப் பத்தி பூண்டவர்.   நாயனார், தம் மனைவியைத் தீண்டாது அகன்று, அவரை "அயலாரைப் பார்ப்பது போல் பார்த்து, இவள் எம்மைப் பன்மையாகக் கூறினமையால இவளையும், இவள் இனிமாகிய மற்ற மாதர்களையும் நான் மனத்தினாலும் தீண்டேன்" என்று சபதம் சொன்னார். இக் கொள்கையுடன், இருவரும் வீட்டை விட்டுத் துறவாது, தங்களுக்குள் புணர்ச்சி இன்மையை அயலவரும் அறியாதவண்ணம், இல்லறத்தை நடத்தி வந்தனர்.  இவ்வாறே ஆண்டுகள் பல கழிந்து, முதுமையும் வந்தது. உடம்பு தளர்ந்த போதிலும், சிவபத்தியும், சிவனடியார் பத்தியும் சிறிதும் தளரவில்லை.

            நாயனாரது பெருமையை உலகுக்கு உணர்த்த வேண்டி, தில்லையம்பலவாணப் பெருமான், ஒரு சிவயோகியாகி நாயனாரது வீட்டிற்கு எழுந்தருளினார். நாயனார் அவரை முறைப்படி வழிபட்டு, "அடியேன் செய்ய வேண்டிய பணி யாது?" என்று கேட்டார்.  சிவயோகியார், "அன்பனே, இந்தத் திருவோட்டைப் பாதுகாப்பாக வைத்திருந்து நான் கேட்கும்போது கொடுப்பாயாக.  இது தனக்குத் தானே ஒப்பானது.  தன்னிடம் சேரும் எல்லாப் பொருளையும் தூய்மை செய்யும் ஆற்றல் உடையது.  பொன்னினும் மணியினும் போற்றும் தகையது.  இத்தகு சிறப்பு வாயந்த இந்தத் திருவோட்டினை, நீ வாங்கி, வை" என்று அதை நீட்டினார்.  நாயனார் அதை அன்புடன் வாங்கி, இல்லத்தின் ஒரு பக்கத்தில், காப்புடைய ஓரிடத்தில் வைத்துத் திரும்பினார்.  சிவயோகியார் அங்கிருந்து புறப்பட்டார்.  நாயனார் அவருடன் சிறிது தூரம் சென்று விடைபெற்றார்.  சிவயோகியாக வந்த நடராச வள்ளல் பொற்சபைக்கு எழுந்தருளினார்.

            நெடுநாள் கழிந்தது.  திருவோடு வைக்கப்பட்ட இடத்தில் இருந்து அதை மறைந்து ஒழியச் செய்த அம்பலவாணப் பெருமான், முன்பு போலச் சிவயோகியாகத் திருவடிவம் கொண்டு, நாயனார் வீட்டுக்கு வந்தார்.  நாயனாரைப் பார்த்து, "நான் முன்னே உன்னிடம் தந்த ஓட்டைக் கொண்டுவா" என்றார்.  நாயனார் திருவோட்டை வைத்த இடத்தில் கண்டாரில்லை.  மனைவியாரைக் கேட்கிறார், மற்றவரைக் கேட்கிறார், பிற இடங்களில் தேடுகிறார், திகைக்கிறார்.  "யோகியாருக்கு என்ன சொல்வேன், என்ன செய்வேன்" என்று அலமருகிறார்.  நாயனார் ஒன்றும் தோன்றாது நிற்கிறார்.  இந்நிலையில் சிவயோகியார்,  "எவ்வளவு நேரம்" என்று கூவுகிறார்.  நாயனார் ஓடிவந்து, "ஐயனே, திருவோட்டை வைத்த இடத்திலும் தேடினேன், வேறு இடங்களிலும் தேடினேன். அதைக் கண்டிலேன். அப் பழைய ஓட்டினும் சிறந்த ஓடு ஒன்றினை வனைந்து தருகிறேன். ஏற்றுக் கொண்டு என் பிழையைப் பொறுத்து அருள வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.  சிவயோகியாருக்குச் சினம் மூண்டது. அவர், நாயனாரை உற்று நோக்கி, "என்ன சொன்னாய்? புதிய ஓடா கொடுக்கப் போகிறாய்? யான் கொடுத்த மண் ஓடு தான் வேண்டும். மற்றது பொன் ஓடே ஆயினும் எனக்கு வேண்டாம்.  என் ஓட்டைக் கொண்டு வா" என்றார்.  நாயனார் நடுக்குற்றுப் பெரியவரைப் பணிந்து, "ஐயரே! தங்கள் திருவோடு கெட்டு விட்டது.  என்ன செய்வேன்" என்று ஏக்கத்தோடு நின்றார். புண்ணியப் பொருளாய் உள்ள பெருமான், "என்ன இது? உன்பால் வைத்த அடைக்கலப் பொருளை வௌவிக் கொண்டாய்.  பழி பாவத்திற்கு அஞ்சுகிறாய் இல்லை, நான் உன்னை விடமாட்டேன்.  என் ஓட்டை வாங்கிக் கொண்டே போவேன்" என்றார்.  நாயனார், "திருவோட்டை நான் வௌவினேனில்லை.  என் உள்ளத்திலும் களவு இன்மையை நான் எப்படி விளக்குவேன்" என்று இரங்கிக் கூறினார்.  "அப்படியானால், உன் மகனைப் பற்றிக் குளத்தில் மூழ்கித் திருவோடு கெட்டது என்று சொல்லிப் போ" என்றார் சிவயோகியார்.  அதற்கு நாயனார், "எனக்குப் புதல்வன் இல்லையே" என்றார்.  சிவயோகியார், "உன் மனைவியைப் பற்றிச் சொல்" என்றார்.   அதற்கும் நாயனார், "எனக்கும் என் மனைவிக்கும் முன்னமே ஒரு சூள் உண்டு.  அதனால் அவள் கையைப் பிடித்து முழ்க இயலாமை குறித்து வருந்துகிறேன்.  நானே முழ்கி உண்மையைச் சொல்கிறேன்" என்றார்.  சிவயோகியார் சினந்து, "என் ஓட்டையும் கொடாமல், மனைவியைப் பற்றிக் குளத்தில் முழ்கவும் இசையாமல், சிந்தை வலித்து இருக்கிறாய்.  தில்லைவாழ் அந்தணர்கள் கூடியுள்ள பேரவையில் என் வழக்கை உரைக்கப் போகிறேன்" என்று சொல்லி விரைந்து நடந்தார். நாயனாரும் அவரைத் தொடர்ந்து நடந்தார்.

            சிவயோகியார் அந்தணர் அவைக்களம் புகுந்து நிகழ்ந்ததைக் கூறினார்.  வேதியர்கள் வேட்கோவரைப் பார்த்தார்கள்.  இருவர் கூற்றையும் கேட்ட அந்தணர்கள், வேட்கோவரை நோக்கி, "இவருடைய ஓட்டை நீர் இழந்தீராயின், இவர் விரும்பும் வண்ணம் செய்வத நியாயம்" என்று தீர்ப்புக் கூறினார்கள்.

            தமக்கும் தம் மனைவிக்கும் உள்ள தீண்டாமையை நாயனார் வெளியிடமாட்டாராய், "பொருந்திய வகையால் குளத்தில் முழ்குகிறேன்" என்று சொல்லி, சிவயோகியாருடன் தமது இல்லத்திற்குச் சென்று, மனைவியாரை அழைத்துக் கொண்டு, திருப்புலீச்சுரத்திற்கு முன் உள்ள திருக்குளத்தை அடைந்து, ஒரு மூங்கில் தண்டின் ஒரு முனையை மனைவியார் பற்ற, மற்றொரு முனையைத் தாம் பற்றி முழ்கலானார்.  அப்போது சிவயோகியார், "உன் மனைவியைக் கைப்பற்றி மூழ்கு" என்றார்.  நாயனார், அப்படிச் செய்யக் கூடாமையை யாவரும் அறிய விளக்கி மூழ்கிக் கரை ஏறினார்.  ஏறிய இருவரிடமும் முதுமை ஒழிந்து இளமைச் செவ்வி மலர்ந்தது.  அக் காட்சியைக் கண்டவர்கள், அங்கிருந்த சிவயோகியாரைக் கண்டார்களில்லை.  அந் நேரத்தில் சிவயோகியாக வந்த சிவபெருமான் உமையம்மையாருடன் விடைமீது காட்சி வழங்கினார்.    திருநீலகண்ட நாயனாரும் அவர்தம் மனைவியாரும் சிவபெருமானை வணங்கிப் போற்றி இன்பக் கடலில் மூழ்கினர்.  எல்லாம் வல்ல இறைவர், "ஐம்புலனை வென்ற விழுமிய அன்பர்களே! இவ் இளமை என்றும் நீங்காமல் நம்மிடத்து இருங்கள்" என்று திருவருள் சுரந்து எழுந்தருளினார்.  நாயனாரும் அவர்தம் மனைவியாரும் சிவலோகத்தினை அடைந்தார்கள்.

------------------------------------------------------------

            உமாபதிசிவம் 'கொடிக்கவி' பாடிக் கொடியேற வைத்த அதிசய தலம்.

            உமாபதி சிவாசாரியார் தில்லைக் கோயிலில் பூசை நடத்தும் அந்தணர் குலத்தில் அவதரித்தவர். ஒருநாள் பூசை முடித்து வழக்கம்போல், தீவட்டி முன் செல்ல, உமாபதி சிவம் சிவிகையில் ஏறி, பரிவாரங்கள் புடைசூழத் திருவீதியில் வந்துகொண்டு இருந்தார்.  இதைக் கண்ணுற்ற மறைஞானசம்பந்தர், "பட்ட கட்டையில் பகல் குருடு ஏகுதல் பார்" என்றார்.  உடநே, சிவிகையில் இருந்து இறங்கி, மறைஞானசம்பந்தரை அணுகினார். அவர் சொன்னதற்கு விளக்கம் கேட்டார். பட்ட கட்டை என்பது பல்லக்கைக் குறிக்கும். பகல் குருடு என்பது உச்சி வேளையில் தீவட்டியுடன் சென்றதைக் குறிக்கும்.  இவ் விளக்கத்தினைக் கேட்ட உமாபதி சிவம் மறைஞானசம்பந்தர் திருவடிகளில் வணங்கினார்.  ஞானோபதேசம் வேண்டினார்.  நெசவுத் தொழில் செய்யும் கைக்கோளர் தெருவுக்குச் சென்ற மறைஞானசம்பந்தர், பாவுக்கு இட்ட கூழின் மிச்சத்தை உண்டார். அவர் கைகளில் ஒழுகிய கூழினை, அந்தணர் குலத்தில் தோன்றிய உமாபதிசிவம் தம் கைகளில் ஏந்தி உண்டார்.  உமாபதி சிவனாருக்குப் பக்குவம் வாய்த்து இருப்பதை அறிந்து சிவஞானபோதத்தை சிவஞான சித்தியாருடன் உணர்த்தியருளினார்.  மாணவராக ஏற்றுக் கொண்டார்.

            இதனை அறிந்த தில்லைவாழ் அந்தணர்கள், உமாபதி சிவம் மரபு பிறழ்ந்தார் என்று கூறி, அவரை சாதியிலிருந்து நீக்கி வைத்தனர்.  தில்லைக் கோயில் பூசை நடத்தும் தமது முறை வந்தபோது, அவர் தடுக்கப்பட்டார்.  மனம் தளராத உமாபதிசிவம் கொற்றவன்குடியில் உள்ள தமது மடத்திற்குச் சென்று, அந்தப் பூசையை மானதமாகச் செய்து முடித்தார்.

            உமாபதி சிவத்தைத் தடுத்த அந்தணர்கள், அடுத்த முறையில் பூசை நடத்துவதற்கு ஒருவரை நியமித்தனர்.  அவர் பூசை செய்யச் சென்று போது, அங்கே திருச்சிற்றம்பலவர் இருந்த பெட்டகம் காணவில்லை.  அச்சம் கொண்டு அம்பலவாணரிடம் முறையிட்டனர்.  அப்போது, பூசைக்குரிய முறையாளர் ஆகிய உமாபதி சிவத்திடம் நாம் அமர்ந்திருக்கின்றோம் என்று ஓரு வானொலி எழுந்தது.  உடனே, அந்தணர்கள் கொற்றவன்குடிக்குச் சென்று உமாபதி சிவத்தின் திருவடிகளில் வீழ்ந்து, தங்கள் குற்றத்தைப் பொறுத்தருளுமாறு வேண்டினர்.  தில்லைக் கோயிலுக்குள் சென்று பூசை முடித்து, தம் திருமடத்திற்குத் திரும்பினார்.

            முற்பிறப்பில் முனிவராய் இருந்து, இப்பிறப்பில் ஊழ்வினை காரணமாக, புலையர் குலத்தில் பிறந்து, பெற்றான் சாம்பான் என்னும் பெயருடன் ஒரு முதியவர் தில்லைக் கோயில் திருமடைப் பள்ளிக்கு நாள்தோறும் விறகு வெட்டிக் கொண்டு வரும் பணியினைச் செய்து வந்தார்.  அவரது கனவில் இறைவன் தோன்றி, இதோ ஒரு சீட்டு உள்ளது.  இதனை உமாபதி சிவத்திடம் சேர்த்தால், அவர் உனக்கு முத்திப் பேற்றினை வழங்குவார் என்ரு கூறினான்.  கனவு நீங்கி, அந்தச் சீட்டை உமாபதி சிவத்தின் திருமுன் வைத்தார்.  அந்தச் சீட்டில்,

அடியார்க்கு எளியன் சிற்றம்பலவன் கொற்றங்
குடியார்க்கு எழுதிய கைச்சீட்டு -- படியின்மிசை
பெற்றான் சாம்பானுக்குப் பேதம்அறத் தீக்கைசெய்து
முத்தி கொடுக்க முறை.

என்று இருந்தது.  பெற்றான் சாம்பானுக்கு சிவதீக்கை செய்து, முத்திப் பேற்றை அருளிச் செய்தார்.  இந்த உண்மையை அறியாத சாம்பானின் மனைவி, அரசனிடம் சென்று, உமாபதிசிவம் தன் கணவனைக் கொன்று விட்டார் என்று முறையிட்டாள்.

            அரசன் வியப்படைந்து, உமாபதிசிவத்தை அணுகி, உண்மை என்ன என்று கேட்டான்.  உமாபதி சிவம் அவனுக்குச் சிவதீக்கையின் சிறப்பை விளக்கினார்.  அது உண்மையாக இருக்குமானால், அதனைத் தனக்குப் புலப்படுத்துமாறு அரசன் கேட்டுக் கொண்டான்.

            அங்கிருந்தவர்களில் யாருக்கும் முத்திப் பேறு அளிப்பதற்கு உரிய தகுதி இல்லாததால், அபிடேக நீர் பாய்ந்து, அதனால் வளர்ந்து இருந்த முள்ளச்செடியினை அரசனுக்குக் காட்டி, அதற்கு நயன தீக்கை செய்து, அதனை முத்தி பெறச் செய்தார்.  அது ஒளியுருவம் பெற்று வான் நோக்கிச் சென்றதை அரசனும் மற்றவரும் கண்டனர்.    

            சிலகாலம் சென்றது.  தில்லைக் கோயிலில் பெருவிழா தொடங்கியது.  அந்தணர்கள் கொடியேற்ற முற்பட்டனர். அந்த விழாவிற்கு உமாபதிசிவத்தைப் புறக்கணித்திருந்தனர். கொடி ஏற்ற முயன்றபோது கொடி ஏறவில்லை.

            உமாபதிசவம் வந்தால் அன்றிக் கொடி ஏறாது என்று வானொலி எழுந்தது.  மீண்டும் தில்லையந்தணர்கள் உமாபதிசிவத்தின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, கொடியேற்றி வைக்குமாறு வேண்டினர்.  உமாபதி சிவம் கொடிக்கவி பாடினார்.  கொடி ஏறியது.  அதுவே சித்தாந்த சாத்திரங்களில் ஒன்றாக விளங்குகின்றது.

--------------------------------------------------------------------------

            திருப்பல்லாண்டு பாடிச் சேந்தனார் தடைப்பட்ட தேரை ஓடச்செய்த மந்திரத் தலம். தில்லை நடராசப்பெருமான் தம் அடியாராகிய சேந்தனாரின் அன்பின் திறத்தை உலகிற்குக் காட்டத் திருவுள்ளம் கொண்டு, மார்கழித் திருவாதிரைத் திருநாளில், தாம் திருத்தேர் கொண்டு அருளும்போது, தேரைப் பூமியில் அழுந்துமாறு செய்தார்.  அப்போது, அன்பர்கள் யாவரும் அறியச் சேந்தனார் திருப்பல்லாண்டு என்ற திருப்பதிகத்தைப் பாட, திருத்தேர் தானே அசைந்து ஓடி நிலையினை அடைந்தது.

------------------------------------------------------

            இராசராசன் வேண்டுதலின் பேரில் நம்பியாண்டார் நம்பிகளால் பொல்லாப் பிள்ளையாரின் துணைக் கொண்டு, திருமுறைகளை வெளிப்படுத்திய தெய்விகத் தலம்.

            சேக்கிழார் பெருமானுக்குத் திருத்தொண்டர் புராணம் பாட அடியெடுத்துத் தந்து, அரங்கேற்றச் செய்யப்பட்ட அருமையான தலம்.

             நடராச சந்நிதிக்கான கொடிமரம் தங்கத்தகடு வேய்ந்ததாகும்.

            சிற்றம்பலம் - சிற்சபை நடராசப் பெருமானுக்குப் பக்கத்தில் 'சிதம்பர ரகசியம் ' உள்ளது.

            சென்னை - திருச்சி இருப்புப் பாதையில் உள்ள புகைவண்டி நிலையம். தமிழகத்தின் பல இடங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

-----------------------------------------------------------------------------------------------------

திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 142
சிரபுரத்தில் அமர்ந்துஅருளும்
            திருஞான சம்பந்தர்,
பரவுதிருத் தில்லைநடம்
            பயில்வாரைப் பணிந்துஏத்த,
விரவிஎழும் பெருங்காதல்
            வெள்ளத்தை உள்ளத்தில்
தர, இசையும் குறிப்புஅறியத்
            தவமுனிவர்க்கு அருள்செய்தார்.

            பொழிப்புரை : சீகாழியில் இருந்தருளும் திருஞானசம்பந்தர், யாவரும் வணங்கிப் போற்றும் திருத்தில்லையில் திருக்கூத்தியற்றும் இறைவரைப் பணிந்து போற்றிட, பொருந்தி எழும் விருப்பமான பெருவெள்ளத்தைத் தம் உள்ளத்தில் கொள்ள, அதற்கு இசையும் அருட்குறிப்பும் நிகழ்ந்ததாக, அவ்வருட் குறிப்பைத் தவமுனிவராம் தந்தையாரான சிவபாத இருதயருக்குக் கூறினார்.


பெ. பு. பாடல் எண் : 143
பிள்ளையார் அருள்செய்ய,
            பெருந்தவத்தால் பெற்றுஎடுத்த
வள்ளலார் தாமும்உடன்
            செல்வதற்கு மனம்களிப்ப,
வெள்ளிமால் வரைஎன்னத்
            திருத்தோணி வீற்றுஇருந்த
புள்ளிமான் உரியாரைத்
            தொழுது, அருளால் புறப்பட்டார்.

            பொழிப்புரை : காழிப்பிள்ளையார் இவ்வாறு அருள்செய்ய, பெருந்தவத்தின் பயனாய்ப் பிள்ளையாரைத் தமக்கு மகனாராகப் பெற்ற வள்ளலாரான சிவபாத இருதயர், தாமும், அவருடன் செல்ல மனமகிழ்ச்சியுடன் ஒருப்பட்டாராக, பெரிய வெள்ளி மலைபோல் விளங்கும் திருத்தோணியில் வீற்றிருந்தருளும் புள்ளிமான் தோலை உடைய இறைவரை வணங்கி, அருள்விடை பெற்றுச் சீகாழியில் இருந்தும் புறப்பட்டனர்.


பெ.பு.பாடல் எண் : 144
தாஇல்யாழ்ப் பாணரொடும்,
            தாதையார் தம்மோடும்
மேவியசீர் அடியார்கள்
            புடைவர,வெங் குருவேந்தர்
பூவின்மேல் அயன்போற்றும்
            புகலியினைக் கடந்துபோய்த்
தேவர்கள்தம் பெருந்தேவர்
            திருத்தில்லை வழிச்செல்வார்.

            பொழிப்புரை : குற்றம் இல்லாத யாழ்ப்பாணரோடும், தந்தை சிவபாத இருதயருடனும் பொருந்திய சிறப்புடைய அடியவர்கள் இருமருங்கும் சூழ்ந்து வர, மண்ணுலகில் வந்து நான்முகன் வழிபட்ட சீகாழிப் பதியைக் கடந்து, தேவர்களுக்கெல்லாம் பெருந்தலைவராய கூத்தப் பெருமானின் திருத்தில்லையை நோக்கிச் செல்வாராயினர்.
   
பெ. பு. பாடல் எண் : 145
நள்ளி ருள்கண்நின்று ஆடுவார்
            உறைபதி நடுவுகண் டனபோற்றி,
முள்உ டைப்புற வெள்இதழ்க்
            கேதகை முகிழ்விரி மணஞ்சூழப்
புள்உ டைத்தடம் பழனமும்
            படுகரும் புடைகழிந் திடப்போந்து
கொள்ளி டத்திரு நதிக்கரை
            அணைந்தனர் கவுணியர் குலதீபர்.

            பொழிப்புரை : நள்ளிருளில் நட்டம் பயின்று ஆடுகின்ற இறைவர் எழுந்தருளியிருக்கும் தில்லைத் திருப்பதிக்கு இடையில் கண்டவற்றை வழிபட்டு, அடியில் முள்களுடன் கூடிய புற இதழ்களைக் கொண்ட தாழைகளின் மொட்டுகள் மலருகின்றதால் மணம் கமழ்கின்ற, நீர்ப் பறவைகளையுடைய இடம் அகன்ற வயல்களும், பள்ளமான நிலங்களும் இருமருங்கிலும் கழிந்திடச் சென்று, கவுணியர் குலவிளக்கான ஞானசம்பந்தர் கொள்ளிடத்தின் தென்கரையை அடைந்தார்.


பெ.பு. பாடல் எண் : 146
வண்டு இரைத்துஎழு செழுமலர்ப்
            பிறங்கலும் மணியும் ஆரமும்உந்தித்
தண்ட லைப்பல வளத்தொடும்
            வருபுனல் தாழ்ந்துசே வடிதாழத்
தெண்தி ரைக்கடல் பவளமும்
            பணிலமும் செழுமணித் திரள்முத்தும்
கொண்டு இரட்டிவந்து ஓதம் அங்கு
            எதிர்கொளக் கொள்ளிடம் கடந்துஏறி.

            பொழிப்புரை : வண்டுகள் ஒலித்து எழுகின்ற செழுமையான மலர்களின் கூட்டத்தையும், மணிகளையும், சந்தனக் கட்டைகளையும் வாரிக் கொண்டு, சோலைகளின் வளங்கள் பலவற்றுடன் வருகின்ற ஆற்றின் நீர், தாழ்ந்த தம் அடிகளை வணங்கவும், தெளிவான அலைகளையுடைய தன்னிடத்தினின்றும் பவளங்கள், சங்குகள் ஆகியவற்றையும், மற்ற மணிகளையும், திரண்ட முத்துக்களையும் அலைகளால் வாரிக் கொண்டு வீசி வரும் கடல்நீர் எதிர் கொள்ளவும், கொள்ளிடத் திருநதியினைக் கடந்து வடகரையின் மேல் ஏறி,


பெ.பு. பாடல் எண் : 147
பல்கு தொண்டர்தம் குழாத்தொடும்
            உடன்வரும் பயில்மறை யவர்சூழச்
செல்க திப்பயன் காண்பவர்
            போல்களி சிந்தைகூர் தரக்கண்டு
மல்கு தேவரே முதல்அனைத்து
            உயிர்களும் வணங்க வேண்டின எல்லாம்
நல்கு தில்லைசூழ் திருஎல்லை
            பணிந்தனர் ஞானஆர் அமுது உண்டார்.

            பொழிப்புரை : நிறைந்த அடியவர் திருக்கூட்டத்துடன் பழகி வரும் அந்தணர்கள் சூழ்ந்துவர, செல்லும் கதியின் பயனைக் காண்பவரைப் போல் உளமகிழ்வு கொண்டு, பெருகிய தேவர் முதலான எவ்வுயிர்களும் வணங்க, அவரவர் வேண்டிய வரங்களையெல்லாம் தரும் தில்லையைச் சூழ்ந்த திருவெல்லையினை, ஞானம் நிறைந்த பால் அமுது உண்ட பிள்ளையார் நிலத்தில் விழுந்து வணங்கினார்.

            குறிப்பு --  "தேவரே முதல் அனைத்து உயிர்களும் வேண்டின எல்லாம் நல்கு தில்லை".  எல்லோருக்கும் எல்லாமும் திருகின்ற சிறப்பு உடைய தில்லை என்று தெய்வச் சேக்கிழார் பெருமான் அருளியது நினைந்து இன்புறத்தக்கது.


பெ.பு. பாடல் எண் : 148
செங்கண் ஏற்றவர் தில்லையே
            நோக்கி, இத் திருந்து உலகினிற்கு எல்லாம்
மங்கலம் தரு மழஇளம்
            போதகம் வரும்இரு மருங்குஎங்கும்,
தங்கு புள்ஒலி வாழ்த்துரை
            எடுத்துமுன் தாமரை மதுவாசப்
பொங்கு செம்முகை கரங்குவித்து
            அலர்முகம் காட்டின புனற்பொய்கை.

            பொழிப்புரை : இத்திருந்திய உலகுக்கெல்லாம் மங்கலம் தரும் இளமையுடைய யானைக் கன்றான ஞானசம்பந்தர் வரும் இருமருங்கிலும், எங்கும் உறையும் பறவைகளின் ஒலியான வாழ்த்துகள், வழங்க, தாமரை மலர்களின் செம்முகையான கைகள் குவிய, நீர்ப் பொய்கைகள் மலர்ந்த முகத்தைக் காட்டி வரவேற்றன.


பெ. பு. பாடல் எண் : 149
கலவ மென்மயில் இனம்களித்து
            அழைத்திட, கடிமணக் குளிர்கால்வந்து
உலவி முன்பணிந்து எதிர்கொள,
            கிளர்ந்து எழுந்து உடன்வரும் சுரும்புஆர்ப்ப,
இலகு செந்தளிர் ஒளிநிறம்
            திகழ்தர, இருகுழை புடைஆட,
மலர்மு கம்பொலிந்து அசைய,மென்
            கொம்பர்நின்று ஆடுவ மலர்ச்சோலை.

            பொழிப்புரை : மலர்ச் சோலைகளில், தோகைகளையுடைய மென்மையான மயில் இனங்கள் மகிழ்வுடன் அழைக்கவும், புதிய மணமுடைய குளிர்ந்த தென்றல் காற்று எதிர் கொண்டு வரவேற்கவும், பெயர்ந்து எழுந்து உடன்வரும் வண்டுகள் ஒலிக்கவும், விளங்கும் செந்தளிர்கள் ஒளியுடைய நிறம் விளங்கவும், இருகுழைகள் இருமருங்கும் ஆடவும், மலர்கள் முகம்பொலிந்து அசையவும், மென்மையான கொம்புகள் நின்று ஆடின.

            குறிப்புரை : இருகுழை - பெரிய தளிர்கள்: பெண்களுக்கு ஆகுங்கால், காதணியாம். இதனால், சோலைகள் பிள்ளையாரை வரவேற்கும் காட்சி புலனாகும்.


பெ. பு. பாடல் எண் : 150
இழைத்த டங்கொங்கை இமயமா
            மலைக்கொடி இன்அமுது என,ஞானம்
குழைத்து அளித்திட அமுதுசெய்து
            அருளிய குருளையார் வரக்கண்டு,
மழைத்த மந்தமா ருதத்தினால்
            நறுமலர் வண்ணநுண் துகள்தூவி,
தழைத்த பொங்குஎழில் முகம்செய்து
            வணங்கின தடம்பணை வயல்சாலி.

            பொழிப்புரை : இடம் அகன்ற வயல்களில் உள்ள நெற்பயிர்கள், அணிகள் அணிந்த மார்பகங்களையுடைய, இமயமலையில் தோன்றிய கொடிபோன்ற பார்வதியம்மையார் இனிய அமுதச் சிவஞானத்தைக் குழைத்து அளிக்க, அதை உண்டருளிய ஞானசம்பந்தர் வரக்கண்டு, குளிர்ந்த மென்மையான காற்றினால் மணம் கமழும் மலர்களின் அழகிய நுண்ணிய பூந்தாதுக்களான சுண்ணத்தைத் தூவித் தழைத்த எழில் முகம் செய்து வணங்கின.

            குறிப்புரை : நெற்பயிர்கள், பிள்ளையாரை வரவேற்ற காட்சி இதனால் விளக்கப் பெறுகின்றது.


பெ. பு. பாடல் எண் : 151
ஞாலம் உய்ந்திட ஞானம் உண்
            டவர்எழுந்து அருளும்அந் நலங்கண்டு,
சேல் அலம்புதண் புனல்தடம்
            படிந்துஅணை சீதமா ருதம்வீச,
சால வும்பல கண்பெறும்
            பயன்பெறும் தன்மையில் களிகூர்வ
போல் அசைந்து, இரு புடைமிடைந்து
            ஆடின, புறம்பணை நறும்பூகம்.

            பொழிப்புரை : வயல்களின் அருகேயுள்ள மணம் கமழும் பாக்கு மரங்கள், உலகம் உய்யும் பொருட்டாக ஞான அமுதையுண்டவர் எழுந்தருளும் திருத்தகைமையைக் கண்டு, சேல் மீன்கள் அலம்பும் குளிர்ந்த நீரையுடைய பொய்கைகளில் படிந்து அணைகின்ற குளிர்ந்த காற்று வீச, மிகப் பல கண்கள் பெற்ற பயன் பெறும் தன்மையினால் மகிழ்ச்சி அடைவன போல், இருமருங்கிலும் அசைந்து நெருங்கி ஆடின.

            குறிப்புரை : பூகம்: கமுகு என்கின்ற பாக்கு மரங்கள். பிள்ளையார் வரவு கண்டநிலையில் அம்மரங்கள் அவரை ஆடி வரவேற்றனவாம்.


பெ. பு. பாடல் எண் : 152
பவம் தவிர்ப்பவர் தில்லைசூழ்
            எல்லையில் மறையவர் பயில்வேள்விச்
சிவந் தரும் பயன் உடையஆ
            குதிகளின் செழும்புகைப் பரப்பாலே,
தவம்த ழைப்பவந் துஅருளிய
            பிள்ளையார் தாம்அணை வுற,முன்னே
நிவந்த நீலநுண் துகில்விதா
            னித்தது போன்றது நெடுவானம்.

            பொழிப்புரை : தவம் தழையத் தோன்றியருளிய ஞானசம்பந்தப் பெருமான் வந்தருள, அவரை வரவேற்று மகிழும் பொருட்டுப் பிறவியை ஒழித்தருளுபவரான கூத்தரின் திருத்தில்லை நகரத்தைச் சூழ்ந்த எல்லையில், மறையவர் பயிலும் வேள்வியில், சிவத்தன்மையை விளக்கும் பயன் கொண்ட வேள்வித் தீயினின்றும் எழுகின்ற செழும் புகையினது பரப்பினால், பெரிய வானம், உயர்ந்த நீலநிறமான நுட்ப மான துகிலை மேற்கட்டியாய்க் கட்டினதைப் போல் விளங்கியது.

            குறிப்புரை : சிவம் தரும் பயன் - பாச நீக்கம் செய்து சிவத்தை அடைவிக்கும் பயன்: வீடு பேறாம் பயன். கொள்ளிடத்தின் தென்கரையை அடைந்து தில்லையை நோக்கிவரும் பிள்ளையாரை, இருமருங்கிலுமுள்ள பொய்கைகளும் (பா.148), சோலைகளும் (பா.149), நெற்பயிர்களும் (பா.150), பாக்குமரங்களும் (பா.151), வானமும் (பா.152) மகிழ்ச்சி மீதூர எதிர்கொண்டவாற்றைத் தொடர்ந்து கூறியிருக்கும் திறம் அறிந்து போற்றுதற்குரியதாம்.


பெ. பு. பாடல் எண் : 153
கரும்பு செந்நெல்பைங் கமுகொடு
            கலந்துஉயர் கழனிஅம் பணைநீங்கி,
அரும்பு மென்மலர் தளிர்பல
            மூலம்என்று அனைத்தின் ஆகரமான
மருங்கில் நந்தன வனம்பணிந்து,
            அணைந்தனர் மாடமா ளிகைஓங்கி
நெருங்கு தில்லைசூழ் நெடுமதில்
            தென்திரு வாயில் நேர்அணித்தாக.

            பொழிப்புரை : கரும்பும் செந்நெல்லும் பசுமையான பாக்கு மரங்களுடன் கலந்து உயர்தற்கு இடமான வயல்களைக் கொண்ட மருத நிலத்தைக் கடந்து, அரும்புகளும் மென்மையான தளிர்களும், பழங்களும், வேர்களும் என்றிவை முதலான எல்லாவற்றிற்கும் பிறப்பிடமாக உள்ள திருநந்தனவனங்களை வணங்கி, மாடமாளிகைகள் ஓங்கிச் செறியும் தில்லை மாநகரைச் சூழ்ந்த மதிலின் தென்திசை வாயிலின் அருகில், ஞானசம்பந்தர் வந்து சேர்ந்தார்.

            குறிப்புரை : பொய்கை முதலாக உள்ள இயற்கைப் பொருள்கள் யாவும் பிள்ளையாரை வணங்கி வரவேற்கத் திருநந்தனவனத்தை மட்டும் இவர் வணங்கி வந்தனர் என்றது, அஃது இறைவற்குப் பயன்படும் தகவும் பயனும் கருதியாம். `பன்மலர்ப் புனித நந்த வனங்கள் பணிந்து சென்றனன் மணங்கமழ் தாரான்\' எனச் சுந்தரர் வரலாற்றில் (தி.12 சரு.1-5 பா.94) வருமாறும் காண்க.


பெ. பு. பாடல் எண் : 154
"பொங்கு கொங்கையில் கறந்தமெய்ஞ்
            ஞானமாம் போனகம் பொன்குன்ற
மங்கை செங்கையால் ஊட்ட உண்டு
            அருளிய மதலையார் வந்தார்" என்று
அங்கண்வாழ் பெருந்திருத் தில்லை
            அந்தணர் அன்பர்களுடன் ஈண்டி,
எங்கும் மங்கல அணிமிக அலங்கரித்து,
            எதிர்கொள அணைவார்கள்.

            பொழிப்புரை : `பால் பெருகிய மார்பகங்களில் கலந்த மெய்ஞ்ஞானப் பாலமுதினைப் பொன்மலையின் மங்கையாரான உமையம்மையார் தம் கையினால் எடுத்து ஊட்ட, அதனை உண்டருளிய பிள்ளையார் வந்தார்\' என்று அங்கு வாழ்கின்ற தில்லைவாழ் அந்தணர்கள் அடியார்களுடன் கூடி நிறைந்து, யாண்டும் நகரை அணி செய்து, பிள்ளையாரை எதிர்கொள்ள அணைவாராய்,


பெ. பு. பாடல் எண் : 155
வேத நாதமும், மங்கல முழக்கமும்,
            விசும்பிடை நிறைந்து ஓங்க,
சீத வாசநீர் நிறைகுடம் தீபங்கள்
            திசை எலாம் நிறைந்துஆர,
சோதி மாமணி வாயிலின் புறம்சென்று
            சோபன ஆக்கமும் சொல்லி,
கோதுஇ லாதவர் ஞானசம்
            பந்தரை எதிர்கொண்டு கொடுபுக்கார்.

            பொழிப்புரை : மறைகளின் ஒலியும், மங்கல முழக்கமும் வானத்தில் நிறைந்து ஒலிக்கவும், குளிர்ச்சியும் மணமும் உடைய நீர் நிரம்பிய குடங்களும் நல்விளக்குகளும் நிறைந்து பொருந்தவும், ஒளி பொருந்திய பெரிய மணிகளையுடைய திருவாயிலின் வெளியே நின்று, மங்கலம் பெருக, `நல் வரவாகுக\' என்ற நன்மொழிகளையும் வாழ்த்துரைகளையும் சொல்லித் தீது நீங்கப் பெற்று வாழ்ந்தவர்களாகி, ஞானசம்பந்தரை எதிர் ஏற்று அழைத்துச் சென்றனர்.


பெ. பு. பாடல் எண் : 156
செல்வம் மல்கிய தில்லைமூ
            தூரினில் தென்திசைத் திருவாயில்
எல்லை நீங்கி,உள் புகுந்து,இரு
            மருங்குநின்று எடுக்கும்ஏத்து ஒலிசூழ,
மல்லல் ஆவண மறுகுஇடைக்
            கழிந்துபோய், மறையவர் நிறைவாழ்க்கைத்
தொல்லை மாளிகை நிறைத்திரு
            வீதியைத் தொழுதுஅணைந் தனர்தூயோர்.

            பொழிப்புரை : செல்வம் நிரம்பிய தில்லை மூதூரில் தெற்கு வாயிலின் வழி உட்புகுந்து, இருமருங்கிலும் எடுத்துப் போற்றும் ஒலி சூழ, வளமையுடைய அங்காடித் தெருவினைக் கடந்து போய், அந்தணர்களின் நிறைவுடைய வாழ்க்கையைக் காண்டற்குரிய திருமாளிகைகள் நிரல்பட அமைந்து நிற்கும் திருவீதியைத் தொழுது, பிள்ளையாரான தூயவர் திருநகரத்துள் சென்றனர்.


பெ. பு. பாடல் எண் : 157
மலர்ந்த பேரொளி குளிர்தர,
            சிவமணம் கமழ்ந்துவான் துகள்மாறி,
சிலம்ப லம்புசே வடியவர்
            பயில்வுறும் செம்மையால், திருத்தொண்டு
கலந்த அன்பர்தஞ் சிந்தையில்
            திகழ்திரு வீதி,கண் களிசெய்ய,
புலங்கொள் மைந்தனார் எழுநிலைக்
            கோபுரம் பணிந்து எழுந் தனர்போற்றி.

            பொழிப்புரை : உலகெலாம் மலர்ந்த பேரொளி தண்ணிதாக அமைய, சிவமணம் கமழ நிற்பதால் வானளவாய தூசுகள் நீங்கப் பெற்று, சிலம்பு ஒலிக்கும் சேவடிகளையுடைய கூத்தப் பெருமான் வீற்றிருக்கப் பெற்றதால் திருத்தொண்டின் உறைப்புப் பெற்ற அடியவர்களின் உள்ளம் போல் விளங்கும் அவ்வீதியானது தம் கண்களை மகிழச் செய்ய, இவ்வுலகம் பயன் கொள்வதற்குரிய ஞானசம்பந்தப் பிள்ளையார் எழுநிலைக் கோபுரத்தைப் போற்றிப் பணிந்து எழுந்தார்.

            குறிப்புரை : அடியவர்களின் திருவுள்ளம் எனத் திருவீதி திகழ்ந்தது:

திருவீதிக்கு ஆங்கால்: ஒளிதிகழ்தல் - சந்திரகாந்தக் கற்களாலாய மாடங்கள், திருவிளக்குகள் ஒளிதருதல். சிவமணம் கமழ்தல் - பெருமானுக்குரிய தூபம் முதலாய நறுமணப் பொருள்கள் கமழ்தல். வான் துகள் - வானளாவிய தூசுகள். சிலம்பு அலம்ப சேவடியவர் பயில்வுறல் - பெருமான் திருவுலாப் போதருதல்.

அடியவர்களின் திருவுள்ளத்திற்கு ஆங்கால்: மலர்ந்த பேரொளி திகழ்தல் - உயிராவணம் இருந்து உற்று நோக்கிய நிலையில் உள்ளத்துள் சிவமுளைதழைதல். சிவ மணம் - சிவயோகத்தால் பெற்ற சிவமணம். வான்துகள் - நீள இருந்த ஆணவம் முதலாய தூசுகள். சேவடி பயில்வுறல் - சிவப்பேற்றை அடைதல்.


பெ. பு. பாடல் எண் : 158
நீடு நீள்நிலைக் கோபுரத்து
            உள்புக்கு நிலவிய திருமுன்றில்
மாடு செம்பொனின் மாளிகை
            வலங்கொண்டு, வான்உற வளர்திங்கள்
சூடு கின்றபேர் அம்பலம்
            தொழுதுபோந்து, அருமறை தொடர்ந்து ஏத்த
ஆடு கின்றவர் முன்புஉற,
            அணைந்தனர் அணிகிளர் மணிவாயில்.

            பொழிப்புரை : நீண்டுயர்ந்த நிலைகளைக் கொண்ட தெற்குக் கோபுரத்துள் புகுந்து, நிலைபெற்ற திருமுற்றத்தின் அருகேயுள்ள செம்பொன் மாளிகையைச் சூழ வலமாக வந்து, வானுற ஓங்கிய திங்களைச் சூடிடும் உயர்ந்த பேரம்பலத்தை வணங்கி, மேலும் சென்று, அரிய மறைகள் தொடர்ந்து போற்றத் திருக்கூத்து இயற்றும் கூத்தப்பெருமானின் திருமுன்பு சேர்வதற்கு, அழகு மிகும் மணிகளையுடைய திருவணுக்கன் திருவாயிலை அடைந்தார் ஞானசம்பந்தர்.


பெ. பு. பாடல் எண் : 159
நந்தி எம்பிரான் முதல்கண
            நாதர்கள் நலங்கொள்பன் முறைகூட
அந்தம் இல்லவர் அணுகிமுன்
            தொழுதிரு அணுக்கனாம் திருவாயில்,
சிந்தை ஆர்வமும் பெருகிட,
            சென்னியில் சிறியசெங் கைஏற,
உய்ந்து வாழ்திரு நயனங்கள்
            களிகொள்ள, உருகும்அன் பொடுபுக்கார்.

            பொழிப்புரை : நந்தி தேவரான நம்பெருமானைத் தலைவராகக் கொண்ட சிவகணநாதர்கள், நலம்மிக நிரல்படக் கூடி நிற்க, எண்ணிறந்த அடியவர்கள், முனிவர்கள், தேவர்கள் முதலியவர்கள் அவர்களின் பின்நின்று தொழுகின்ற திருவணுக்கன் வாயிலில், உள்ளத்தில் ஆர்வம் பெருகவும், தலைமீது சிறிய சிவந்த கைகள் ஏறிக் குவியவும், கண்கள் மகிழ்ச்சி பொருந்தவும், உருகிய அன்புடன் உட்புகுந்தார் காழிப் பிள்ளையார்.


பெ. பு. பாடல் எண் : 160
அண்ண லார்தமக்கு அளித்தமெய்ஞ்
            ஞானமே ஆனஅம் பலமும், தம்
உள்நி றைந்தஞா னத்து எழும்
            ஆனந்த ஒருபெருந் திருக்கூத்தும்,
கண்ணில் முன்புஉறக் கண்டுகும்
            பிட்டுஎழும் களிப்பொடும், கடல்காழிப்
புண்ணியக் கொழுந்து அனையவர்
            போற்றுவார், புனிதர் ஆடியபொற்பு.

            பொழிப்புரை : தலைமையமைந்த இறைவர் தமக்குத் தந்த மெய்ஞ்ஞானமேயாய திருவம்பலத்தையும், தமதுள்ளத்தே நிறைந்துள்ள அச்சிவஞானத்துள் எழுகின்ற சிவானந்தமான ஒப்பில்லாத பெருமை பொருந்திய திருக்கூத்தையும், கண்களின் முன் வெளிப்படக் கண்டு வணங்கியதால் உண்டான பெருமகிழ்வுடன், கடல் சூழ்ந்த சீகாழியில் தோன்றிய சிவ புண்ணியக் கொழுந்து போன்ற பிள்ளையார், தூயவரான இறைவரின் திருக்கூத்து இயற்றும் அழகைப் போற்றுபவராய்,

            குறிப்புரை : மெய்ஞ்ஞானம் - மெய்யுணர்வு : தன்னறிவானும் தனக்குற்ற கருவிகளானும் அறிதற்கரியதாகலின் உணர்வரிய மெய்ஞ்ஞானம் என முன்னர்க் குறித்தார். இவ்வுணர்வின் பயன் இறையைக் கண்டு மகிழ்தலாம்.


பெ. பு. பாடல் எண் : 161
'உணர்வின் நேர்பெற வரும்சிவ
            போகத்தை ஒழிவுஇன்றி உருவின்கண்
அணையும் ஐம்பொறி அளவினும்
            எளிவர அருளினை' எனப்போற்றி
இணையில் வண்பெருங் கருணையே
            ஏத்தி,முன் எடுத்தசொல் பதிகத்தில்
புணரும் இன்னிசை பாடினர்,
            ஆடினர், பொழிந்தனர் விழிமாரி.

            பொழிப்புரை : `உள் உணர்வால் உணர வருகின்ற சிவபோகத்தை, வெளிப்படப் புலப்படுத்தி நிற்கும் ஐம்பொறிகளின் அளவிலும் எளிதில் கண்டு மகிழும் வண்ணம் அருள்செய்தீர்\' எனப் போற்றி ஒப்பில்லாத கருணைத் திறத்தை முன்னர்த் தொடங்கிய சொற்பதிகத்தில் பொருந்தும் இனிய இசையுடன் பாடுபவராய், மகிழ்ச்சி மீதூரக் கூத்தாடுபவராய்க் கண்களினின்றும் அவ்வின்பப் பெருக்கைப் பொழிந்தவராய்,

            குறிப்புரை : இக்கருத்தமைவுடைய திருப்பதிகம் கிடைத்திலது.


பெ. பு. பாடல் எண் : 162
ஊழி முதல்வர்க்கு உரிமைத் தொழில்சிறப்பால்
வாழிதிருத் தில்லைவாழ் அந்தணரை முன்வைத்தே,
ஏழ்இசையும் ஓங்க எடுத்தார், எமை ஆளும்
காழியர்தம் காவலனார் 'கற்றுஆங்கு எரிஓம்பி'.

            பொழிப்புரை : ஊழிகளின் முதல்வரான கூத்தப் பெருமானுக்கு உரிய அகம்படிமைத் தொழில் புரிந்துவரும் சிறப்பால், தில்லையில் வாழும் அந்தணரை முதலில் வைத்து, ஏழிசையும் பொருந்தி விளங்கக் `கற்றாங்கு எரியோம்பி\' என்ற முதற்குறிப்பை உடைய திருப்பதிகத்தை எம்மை ஆளும் சீகாழிக் காவலர் தொடங்கியவராய்,

            குறிப்புரை : தொடர்ந்து வரும் பிறப்பு இறப்பின் தொடர்பால் இளைப்புற்று நிற்கும் உயிர்களுக்கு அவ்விளைப்பு நீங்குதற்காக அவற்றைத் தன்பால் ஒடுக்கியும், வினை நீக்கத்தின் பொருட்டு மீளத் தோற்றுவித்தும் வரும் பாங்கால், இறைவனை, `ஊழி முதல்வன்' என்றார். `ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனையே' (தி.8 ப.7 பா.8) எனவரும் திருவாக்கும் காண்க. இவ்வாறு அந்தத்தைச் செய்யும் பெருமானே ஆதியாதல் பற்றி `அந்தம் ஆதி' என மெய்ந்நூல்கள் குறிப்பதாயின. `கற்றாங்கு எரியோம்பிக் கலியை வாராமே, செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய' என இப் பதிகம் (தி.1 ப.80). தொடங்கி வருதலின், `தில்லைவாழ் அந்தணரை முன் வைத்தே' எனக் கூறினார். இப்பதிகம் குறிஞ்சிப் பண்ணில் அமைந்துள்ளது


பெ. பு. பாடல் எண் : 163
பண்ஆர் பதிகத் திருக்கடைக்காப் புப்பரவி,
உள்நாடும் என்பும் உயிரும் கரைந்து உருக்கும்
விண்நா யகன்கூத்து வெட்டவெளி யேதிளைத்து,
கண்ஆர் அமுது உண்டார், காலம் பெறஅழுதார்.

            பொழிப்புரை : காலம் உண்டாகவே காதல் செய்து அழுது அழைத்தவரான பிள்ளையார், பண் நிரம்பிய திருப்பதிகத்தின் திருக்கடைக்காப்பினை நிறைவித்துப் போற்றி, உடற்கு நிலைக்களனாய எலும்பும், உயிரும் கரையுமாறு உருக்குகின்ற இறைவரின் அருட்கூத்தை வெட்ட வெளியில் நுகர்ந்து, கண்ணகத்தே நின்று களிதரும் அமுதை உட்கொண்டார்.

            குறிப்புரை : இப்பதிகப் பண் குறிஞ்சியாம்.

திருஞானசம்பந்தர் திருப்பதிகம்

1.080   கோயில்                            பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
கற்றுஆங்கு எரிஓம்பி, கலியை வாராமே
செற்றார் வாழ்,தில்லைச் சிற்றம் பலமேய
முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.

            பொழிப்புரை :வேதம் முதலிய நூல்களைக் கற்று அவற்றின்கண் ஓதிய நெறியிலே நின்று, வேள்விகளைச் செய்து, இவ்வுலகில் வறுமையை வாராமல் ஒழிக்கும் அந்தணர்கள் வாழும் தில்லையிலுள்ள திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளியவனும், இளமையான வெள்ளிய பிறை மதியைச் சூடியவனும் ஆகிய முதல்வனது திருவடிகளைப் பற்றுக்கோடாகக் கொண்டு வாழ்பவர்களைப் பாவம் பற்றா.


பாடல் எண் : 2
பறப்பைப் படுத்து,எங்கும் பசுவேட்டு எரிஓம்பும்
சிறப்பர் வாழ்,தில்லைச் சிற்றம் பலமேய
பிறப்புஇல் பெருமானை, பின்தாழ் சடையானை,
மறப்பு இலார்கண்டீர், மையல் தீர்வாரே.

            பொழிப்புரை :பல இடங்களிலும் வேள்விச் சாலைகளை அமைத்து, ஆன்மபோதத்தைக் கொன்று, எரியோம்பும் சிறப்புடைய அந்தணர்கள் வாழும் தில்லையில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ளவனும், தாயின் வயிற்றில் தங்கிப் பிறத்தல் இல்லாதவனும், பின்புறம் தாழ்ந்து தொங்கும் சடாபாரம் உடையவனும் ஆகிய பெருமானை மறவாதவர் மயக்க உணர்வு நீங்கப் பெறுவர்.


பாடல் எண் : 3
மைஆர் ஒண்கண்ணார் மாட நெடுவீதிக்
கையால் பந்துஓச்சும் கழிசூழ் தில்லையுள்
பொய்யா மறைபாடல் புரிந்தான், உலகுஏத்தச்
செய்யான் உறைகோயில் சிற்றம் பலம்தானே.

            பொழிப்புரை :மைதீட்டப் பெற்ற ஒளி பொருந்திய கண்களை உடைய பெண்கள், நீண்ட வீதிகளிலுள்ள மாட வீதிகளில் தம் கைகளால் பந்தினை ஓச்சி விளையாடும் அழகுடையதும், உப்பங்கழிகள் சூழ்ந்ததுமான தில்லையுள், என்றும் பொய்யாத வேதப்பாடல்களை விரும்பும் சிவந்த திருமேனியை உடைய சிவபிரான், உலக மக்கள் தன்னை ஏத்த உறையும் கோயிலை உடையது திருச்சிற்றம்பலமாகும்.


பாடல் எண் : 4
நிறைவெண் கொடிமாடம் நெற்றி நேர்தீண்டப்
பிறைவந்து இறைதாக்கும் பேரம் பலம்தில்லைச்
சிறைவண்டு அறைஓவாச் சிற்றம் பலம்மேய
இறைவன் கழல்ஏத்தும் இன்பம் இன்பமே.

            பொழிப்புரை :மாடவீடுகளில் நிறைந்துள்ள வெண்மையான கொடிகள் வானத்திலுள்ள பிறையின் நெற்றியை நேரே தீண்டுமாறு வந்து சிறிதே தாக்கும் தில்லைப்பதியில் சிறகுகளை உடைய வண்டுகள் எப்போதும் ஒலிக்கும் பேரம்பலத்தை அடுத்துள்ள சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் திருவடிகளைப் பரவுவதால் வரும் இன்பமே இன்பம் ஆகும்.


பாடல் எண் : 5
செல்வ நெடுமாடம் சென்று சேண்ஓங்கிச்
செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலம்மேய
செல்வன் கழல்ஏத்தும் செல்வம் செல்வமே.

            பொழிப்புரை :செல்வவளம் மிக்க பெரிய மாடவீடுகள் வானளாவ ஓங்கி உயர்ந்து அழகிய மதியினைத் தோயப் பல்வகை அழகு நலன்களும் உயர்ந்து விளங்கிவருவதும், ஞானச்செல்வர்கள் பலர் வாழ்வதுமாகிய தில்லையிலுள்ள சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள, வீடுபேறாகிய செல்வத்திற்குரிய பெருமான் திருவடிகளை வாழ்த்தும் செல்வமே, ஒருவருக்குச் செல்வமாம்.


பாடல் எண் : 6
வருமாந் தளிர்மேனி மாதுஓர் பாகமாம்
திருமாந் தில்லையுள் சிற்றம் பலம்மேய
கருமான் உரிஆடைக் கறைசேர் கண்டத்துஎம்
பெருமான் கழல்அல்லால் பேணாது உள்ளமே.

            பொழிப்புரை :புதிதாக மரத்தின்கண் இருந்து வெளிவரும் மாந்தளிர் போன்ற மேனியளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு, திருமகள் விளங்கும் தில்லை மாநகருள் சிற்றம்பலத்தின் கண் எழுந்தருளியவரும், யானைத்தோலை உரித்து ஆடையாகப் போர்த்தவரும் நீலமணி போன்ற கண்டத்தை உடையவருமாகிய எம் பெருமான் திருவடிகளை அல்லது என் உள்ளம் வேறொன்றையுமே விரும்பாது.


பாடல் எண் : 7
அலைஆர் புனல்சூடி, ஆகத்து ஒருபாகம்
மலையான் மகளோடு மகிழ்ந்தான் உலகுஏத்த,
சிலையால் எயில்எய்தான் சிற்றம் பலம்தன்னைத்
தலையால் வணங்குவார் தலைஆ னார்களே.

            பொழிப்புரை :அலைகள் வீசும் கங்கை நதியை முடியிற்சூடித் தன் திருமேனியில் ஒருபாகமாக மலையரையன் மகளாகிய பார்வதி தேவியோடு மகிழ்ந்திருப்பவனும், உலகம் போற்ற மேருமலையாகிய வில்லால் முப்புரங்களை எய்து அழித்தவனும் ஆகிய சிற்றம்பலத்துப் பெருமானைத் தலைதாழ்த்தி வணங்குவார் தலைமைத் தன்மையோடு விளங்குவார்.


பாடல் எண் : 8
கூர்வாள் அரக்கன்தன் வலியைக் குறைவித்துச்
சீரா லேமல்கு சிற்றம் பலம் மேய
நீர்ஆர் சடையானை நித்தல் ஏத்துவார்,
தீரா நோய்எல்லாம் தீர்தல் திண்ணமே.

            பொழிப்புரை :கூரிய வாளை உடைய அரக்கனாகிய இராவணனின் வலிமையை அழித்துச் சிறந்த புகழ் மல்கிய சிற்றம்பலத்தின் கண் எழுந்தருளிய கங்கையைத் தரித்த சடையினை உடைய இறைவனை நாள்தோறும் ஏத்துபவருக்குத் தீராத நோய்கள் எல்லாம் தீர்தல் திண்ணம்.


பாடல் எண் : 9
கோள்நாக அணையானும் குளிர்தா மரையானும்
காணார் கழல்ஏத்தக் கனலாய் ஓங்கினான்
சேணார் வாழ்தில்லைச் சிற்றம் பலம்ஏத்த
மாணா நோய்எல்லாம் வாளா மாயுமே.

            பொழிப்புரை :வளைந்து சுற்றிய பாம்பணையில் பள்ளிகொள்ளும் திருமாலும், குளிர்ந்த தாமரை மேல் விளங்கும் நான்முகனும், அடிமுடிகளைக் காணாதவராய்த் தன் திருவடிகளைப் பரவ, அழல் வடிவில் ஓங்கி நின்றவனும், உயர்ந்தோர் பலர் வாழும் தில்லைப் பதியுள் சிற்றம்பலத்தின்கண் எழுந்தருளியவனுமாகிய பெருமானைப் போற்ற, நோய்களில் மாட்சிமை உள்ள கொடிய, பெரிய நோய்கள் எல்லாமும் பயன்தாராது கழியும்.


பாடல் எண் : 10
பட்டைத் துவர்ஆடைப் படிமம் கொண்டுஆடும்
முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே,
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலம்மேய
நட்டப் பெருமானை நாளும் தொழுவோமே.

            பொழிப்புரை :மரப்பட்டையில் இருந்து தயாரிக்கப்படும் காவிச்சாயம் ஏற்றிய ஆடையை உடுத்த புத்தரும், நோன்புகள் பலவற்றை மேற்கொண்டு திரியும் சமணர்களும் மொழியும் அறியாமையோடு கூடிய உரைகளைக் கேளாது, ஒழுக்கத்தால் மேம்பட்டவர் வாழும் தில்லையில் சிற்றம்பலத்தில் எழுந்தருளிய நடராசப்பெருமானை நாள்தோறும் நாம் தொழுவோம்.


பாடல் எண் : 11
ஞாலத் துஉயர்காழி ஞான சம்பந்தன்
சீலத் தார்கொள்கைச் சிற்றம் பலம்மேய
சூலப் படையானைச் சொன்ன தமிழ்மாலை
கோலத் தால்பாட வல்லார் நல்லாரே.

            பொழிப்புரை :உலகில் உயர்ந்து விளங்கும் சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், ஒழுக்க சீலர்களாலே புனிதமாகக் கொண்டு போற்றப் பெறும் தில்லைச் சிற்றம்பலத்தே எழுந்தருளிய, சூலப்படையுடைய பெருமான் மீதுபாடிய, இத்தமிழ் மாலையாகிய திருப்பதிகத்தை, அழகுறப் பாடவல்லவர் நல்லவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்

--------------------------------------------------------------------------------------------------

 திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெ. பு. பாடல் எண் : 164
முன்மால் அயன்அறியா மூர்த்தியார் முன்நின்று,
சொல்மாலை யால்காலம் எல்லாம் துதித்து, இறைஞ்சி,
பன்மா மறைவெள்ளம் சூழ்ந்து பரவுகின்ற
பொன்மா ளிகையைவலம் கொண்டு, புறம்போந்தார்.

            பொழிப்புரை : முற்காலத்தில் திருமாலும் நான்முகனும் அறியாத இறைவரின் திருமுன் நின்று, சொல் மாலையான திருப்பதிகங்களால் எல்லாக் காலங்களிலும் போற்றி வணங்கி, அளவற்ற பெருமறைகளின் வெள்ளங்கள் சூழ்ந்து வணங்குகின்ற செம்பொன் மாளிகையான பொன்னம்பலத்தை வலமாக வந்து புறத்தே போந்தார்.

            குறிப்புரை : `சொல்மாலையால் காலமெல்லாம் துதித்து\' எனவே, இக்கால எல்லையில் பிள்ளையார், பல்வேறு பண்களில், பல பதிகங்களை அருளிச் செய்திருத்தல் வேண்டும். எனினும் அவை கிடைத்தில. பன்மாமறை வெள்ளம் - அளவற்ற மறைகள். அம்மறைகளை ஓதிவரும் அளவற்ற அந்தணர் கூட்டம் என்றும் அமையும். இனி அம்மாளிகையின் தூண்கள், பலகணிகள், மேல்வேய்ந்த ஓடுகள் பலவும் மறைகளின் மந்திர உறுப்புக்களாக அமைந்திருத்தல் பற்றி இங்ஙனம் கூறினார் எனலுமாம்.


பெ. பு. பாடல் எண் : 165
செல்வத் திருமுன்றில் தாழ்ந்து, எழுந்து, தேவர்குழாம்
மல்கும் திருவாயில் வந்து இறைஞ்சி, மாதவங்கள்
நல்கும் திருவீதி நான்கும் தொழுது, அங்கண்
அல்கும் திறம்அஞ்சு வார்,சண்பை ஆண்தகையார்.

            பொழிப்புரை : செல்வம் பொருந்திய திருமுன்றிலின் கீழே விழுந்து வணங்கி எழுந்து, விண்ணவர் கூட்டம் நிறைந்திருக்கும் திருவாயிலில் வந்து வணங்கி, மாதவங்களைத் தரும் நான்கு வீதிகளையும் வணங்கி, அவ்விடத்தில் தங்கியிருத்தற்கும் பிள்ளையார் அஞ்சுபவராய்,

            குறிப்புரை : செல்வத் திருமுன்றில் - செல்வராய பெருமானும் அவரை வணங்கும் செல்வமாய செல்வமும் நிலைபெற்றிருக்கும் திருமுன்றில். தவத்தின் பயன் சிவத்தை அடைதலாம். இவ்வீதிகள் சிவமே நிலவிய திருவீதிகளாதலின் அப்பயனை அவ்வீதிகளே நல்குதலின் `மாதவங்கள் நல்கும் திருவீதி\' என்றார். அவ்விடத்துத் தங்குதற்கும் அஞ்சினார் என்பதால் அப்பதியின் பெருமையுணர நின்றது. அன்றியும் தாழ்வெனும் தன்மையோடும் சைவமாம் சமயம் சார்ந்து நிற்கும் பிள்ளையாரின் பெருமையும் உணர நின்றது.


பெ. பு. பாடல் எண் : 166
செய்ய சடையார் திருவேட் களம்சென்று
கைதொழுது, சொல்பதிகம் பாடி, கழுமலக்கோன்
வைகி அருளும்இடம் அங்குஆக, மன்றுஆடும்
ஐயன் திருக்கூத்துக் கும்பிட்டு அணைவுறுநாள்.

            பொழிப்புரை : ஞானசம்பந்தர் சிவந்த சடையையுடைய சிவபெருமானின் திருவேட்களத்துக்குச் சென்று, கையால் தொழுது சொல்பதிகத்தைப் பாடி, எழுந்தருளியிருக்கும் இடம் அவ்விடமாக, நாளும் அப்பேரம்பலத்தில் வீற்றிருந்தருளும் பெருமானாரின் திருக்கூத்தையும் சென்று கண்டு மகிழ்ந்து மீண்டு போந்திருக்கும் அந்நாளில்,


பெ. பு. பாடல் எண் : 167
கைம்மான் மறியார் கழிப்பாலை உள்அணைந்து,
மெய்ம்மாலைச் சொல்பதிகம் பாடி,விரைக் கொன்றைச்
செம்மாலை வேணித் திருவுச்சி மேவிஉறை
அம்மானைக் கும்பிட்டு, அருந்தமிழும் பாடினார்.

            பொழிப்புரை : தம் திருக்கையில் மான் கன்றைக் கொண்டிருக்கும் சிவபெருமான் எழுந்தருளிய திருக் கழிப்பாலையைச் சேர்ந்து மெய்ம்மை பொருந்திய சொற்பதிகத்தைப் பாடி, மணமுடைய கொன்றை மலராலாய அழகான மாலையைச் சூடிய திருச்சடையை உடைய `திருவுச்சி\' என்னும் பதியில் எழுந்தருளிய இறைவரைக் கும்பிட்டு அரிய தமிழ்ப்பதிகத்தையும் பாடினார் காழிப் பிள்ளையார்.


பெ. பு. பாடல் எண் : 168
பாடும் பதிகஇசை யாழ்ப்பாண ரும்பயிற்றி
நாடும் சிறப்புஎய்த நாளும்நடம் போற்றுவார்,
நீடும் திருத்தில்லை அந்தணர்கள் நீள்மன்றுள்
ஆடும் கழற்கு அணுக்கர் ஆம்பேறு அதிசயிப்பார்.

            பொழிப்புரை : பாடப்பட்ட பதிகத்தின் இசையினைத் திரு நீலகண்ட யாழ்ப்பாணரும் யாழில் இசைத்து வேண்டத்தகும் சிறப்பைப் பெற்றார். நாளும் தில்லையில் சென்று இறைவரின் திருக்கூத் தைப் போற்றிவரும் பிள்ளையார், தில்லைவாழ் அந்தணர்கள் நீளும் திருவம்பலத்தில் ஆடும் திருவடிகளுக்கு அணுக்கத் தொண்டர்களாக இருக்கும் பேற்றைப் பார்த்து வியப்படைந்து வந்தனர்.


பெ. பு. பாடல் எண் : 169
ஆங்குஅவர்தம் சீலத்து அளவுஇன் மையும்நினைந்தே,
ஓங்கி எழும் காதல் ஒழியாத உள்ளத்தார்,
தேங்கமழும் சோலைத் திருவேட் களம் கடந்து
பூங்கிடங்கு சூழ்புலியூர்ப் புக்குஅணையும் போழ்தின்கண்.

            பொழிப்புரை : அங்கு வாழும் அந்தணர்கள் தம் ஒழுக்கத்தில் அளவில்லாத சிறப்புடன் நிற்கும் நிலைமையும் எண்ணி, மேல் கிளர்ந்து எழும் ஆசை நீங்காத மனத்துடன், ஒருநாள் மணம் வீசும் சோலை சூழ்ந்த திருவேட்களத்தைக் கடந்து, மலர்கள் நிரம்பிய அகழி சூழ்ந்த திருப்புலியூரினுள் புகுந்து சேர்கின்ற போழ்தில்,


பெ. பு. பாடல் எண் : 170
அண்டத்து இறைவர் அருளால் அணிதில்லை
முண்டத் திருநீற்று மூவா யிரவர்களும்
தொண்டத் தகைமைக் கணநாத ராய்தோன்றக்
கண்டு,அப் பரிசுபெரும் பாணர்க்கும் காட்டினார்.

            பொழிப்புரை : எவ்வுலகிற்கும் இறைவரான கூத்தப் பெருமான் திருவருளால், அழகிய தில்லையில் வாழ்கின்ற, நெற்றியில் திருநீற்றை அணிந்த அந்தணர் மூவாயிரவரும் திருத்தொண்டின் தன்மையுடைய சிவகண நாதர்களாய்த் தோன்றக் கண்டு, அதனை ஞானசம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கும் காட்டினார்.


பெ. பு. பாடல் எண் : 171
செல்வம் பிரிவுஅறியாத் தில்லைவாழ் அந்தணரும்,
எல்லையில்சீர்ச் சண்பை இளஏறு எழுந்தருளி
ஒல்லை இறைஞ்சாமுன், தாமும் உடன்இறைஞ்சி,
மல்லல் அணிவீதி மருங்கு அணைய வந்தார்கள்.

            பொழிப்புரை : அருட்செல்வம் என்றும் நீங்கப் பெறாத தில்லைவாழ் அந்தணர்களும், அளவற்ற சிறப்பையுடைய சீகாழியில் தோன்றிய இளஞ்சிங்க ஏற்றைப் போன்ற ஞானசம்பந்தர் எழுந்தருளி வந்து விரைந்து தம்மை வணங்குதற்கு முன்பே, தாமும் உடனே வணங்கிச் செழுமையும் பொலிவும் கொண்ட வீதியில் அவர் அருகே சூழ வந்தனர்.

  
பெ. பு. பாடல் எண் : 172
பொங்கி எழும்காதல் புலன்ஆகப் பூசுரர்தம்
சிங்கம் அனையார், திருமுடியின் மேல்குவித்த
பங்கயத்தின் செவ்வி பழித்து வனப்புஓங்கும்
செங்கை யொடும்சென்று, திருவாயில் உட்புக்கார்.

            பொழிப்புரை : மேன்மேலும் பெருகி எழும் மிக்க ஆசையானது வெளித் தோன்றுமாறு அந்தணர்களின் சிங்கம் போன்ற ஆளுடைய பிள்ளையார், தலைமீது கூப்பிய தாமரை மலரின் அழகையும் வென்று அவ்வழகாலே ஓங்கும் கையுடனே சென்று திருவாயிலுள் புகுந்தார்.


பெ. பு. பாடல் எண் : 173
ஒன்றிய சிந்தை உருக உயர்மேருக்
குன்று அனைய பேர்அம்பலம் மருங்கு கும்பிட்டு,
மன்றுஉள் நிறைந்துஆடும் மாணிக்கக் கூத்தர்எதிர்
சென்று, அணைந்து, தாழ்ந்தார், திருக்களிற் றுப்படிக்கீழ்.

            பொழிப்புரை : இறைவரிடம் ஒன்றுபட்ட மனம் உருக, உயர்ந்த மேருமலையைப் போன்ற பேரம்பலத்துள் நிறைந்து அருள்கூத்து இயற்றுகின்ற மாணிக்கக் கூத்தரின் திருமுன்பு திருக்களிற்றுப் படியின் கீழே நின்று தாழ்ந்து எழுந்தார்.

  
பெ. பு. பாடல் எண் : 174
'ஆடி னாய்நறு நெய்யொடு
            பால்தயிர்' என்றுஎடுத்து ஆர்வத்தால்
பாடி னார்பின்னும் அப்பதி
            கத்தினில் பரவிய பாட்டுஒன்றில்
நீடு வாழ்தில்லை நான்மறை
            யோர்தமைக் கண்டஅந் நிலை எல்லாம்
கூடு மாறுகோத்து, அவர்தொழுது
            ஏத்துசிற் றம்பலம் எனக்கூறி.

            பொழிப்புரை : `ஆடினாய் நறுநெய்யொடு பால் தயிர்\' என்று தொடங்கி, மிகுந்த ஆசையுடன் பாடினார். மேலும் அப்பதிகத்தில் போற்றியதொரு திருப்பாட்டில், தில்லைவாழ் அந்தணர்களை அன்று தாம் கணநாதராய்க் கண்ட அந்நிலைகள் எல்லாம் பொருந்துமாறு கோத்து, அத்தகைய தன்மையுடையவர் தொழுது, வணங்கும் திருச்சிற்றம்பலமாகும் என்று எடுத்துக் கூறி,

            குறிப்புரை : `ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர்\' (தி.3 ப.1) எனத் தொடங்கும் பதிகம், காந்தாரபஞ்சமப் பண்ணில் அமைந்தது. தில்லைவாழ் அந்தணர்களைச் சிவகணநாதர்களாகப் பிள்ளையார் கண்டு போற்றிய குறிப்பை, இப்பதிகத்துள் 3ஆவது பாடல் கூறும்.

`நீலத் தார்கரி யமிடற் றார்நல்ல
நெற்றி மேலுற்ற கண்ணி னார்பற்று
சூலத் தார்சுட லைப் பொடி நீறணி வார்சடையார்
சீலத் தார்தொழு தேத்துசிற் றம்பலஞ்
சேர்த லாற்கழற் சேவடி கைதொழக்
கோலத் தாயரு ளாயுன காரணங் கூறுதுமே\'    (தி.3 ப.1 பா.3)

என்பது அப்பாடலாகும். இதன்கண் தில்லைவாழ் அந்தணர்களைச் சிவகணநாதரின் தோற்றமாகக் கண்டிருப்பதைக் காணலாம். நீலநிறம் பொருந்திய கழுத்தும், நெற்றிக் கண்ணும், சூலமும் தில்லைவாழ் அந்தணர்களுக்கு இயல்பில் அமைந்தனவல்ல. ஆயினும் அவை அவர்களிடத்துக் கண்டது சிவகணங்களாக இறைவர் காட்டிய நிலையிலேயாம். திருவாரூர்ப் பிறந்தார்களைச் சிவகணங்களாக நமிநந்தி அடிகட்கு இறைவர் காட்டியமையும் ஈண்டு நினைவு கூரலாம். (தி.12 பு.27 பா.27).


பெ. பு. பாடல் எண் : 175
இன்ன தன்மையில் இன்இசைப்
            பதிகமும் திருக்கடைக் காப்புஏற்றி,
மன்னும் ஆனந்த வெள்ளத்தில்
            திளைத்து,எதிர் வந்துமுன் நின்றுஆடும்
பின்னு வார்சடைக் கூத்தர்பேர்
            அருள்பெறப் பிரியாத விடைபெற்று,
பொன்னின் அம்பலம் சூழ்ந்துதாழ்ந்து,
            எழுந்துபோந்து, அணைந்தனர் புறமுன்றில்.

            பொழிப்புரை : இவ்வாறாய நிலையில் இனிய இசை பொருந்திய பதிகத்தைத் திருக்கடைக் காப்புச் சொல்லி நிறைவாக்கிப் போற்றி, நிலைபெற்ற ஆனந்த வெள்ளத்துள் முழுகித் திளைத்து, எதிரில் வந்து நின்றாடும் பின்னிய நீண்ட சடையையுடைய கூத்தரின் திருவருளைப் பெறுமாறு பிரியாவிடை பெற்றுப் பொன்னம்பலத்தை வலம் வந்து வெளிமுற்றத்தை அடைந்தார் பிள்ளையார்.

திருஞானசம்பந்தர் திருப்பதிகம்

3.001   கோயில்                  பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
ஆடி னாய்நறு நெய்யொடு பால்தயிர்,
            அந்த ணர்பிரி யாதசிற் றம்பலம்
நாடி னாய்இடமா, நறும் கொன்றை நயந்தவனே,
பாடி னாய்மறை யோடுபல் கீதமும்,
            பல்சடைப்பனி கால்கதிர் வெண்திங்கள்
சூடி னாய், அரு ளாய், சுருங்கஎம தொல்வினையே.

            பொழிப்புரை :நறுமணம் உடைய நெய்யும் , பாலும் , தயிரும் ஆட்டப் பெற்றவனே! தில்லைவாழந்தணர் எல்லோரும் எப்பொழுதும் அகத்தும் புறத்தும் பிரியாது வழிபடும் திருச்சிற்றம்பலத்தைத் திருக்கூத்தாடும் ஞானவெளியாகக் கொண்டு வாழ்பவனே! நறிய கொன்றைப் பூமாலையை நயந்து   (விரும்பிச்) சூடியவனே! நான்மறையுள் சாமகானத்துடன் பல கீதங்களையும் பாடியவனே! பலவாகிய சடைமேல், குளிர் பனியைச் சொரிகின்ற வெண்ணிலவையுடைய இளம்பிறையைச் சூடியவனே! எம் தொல்லைவினை இல்லையாம்படி திருவருள் செய்க .

பாடல் எண் : 2
கொட்ட மேகம ழும்குழ லாளொடு
            கூடி னாய்,எருது ஏறினாய், நுதல்
பட்ட மேபுனை வாய், இசை பாடுவ பாரிடமா
நட்ட மேநவில் வாய்,மறை யோர்தில்லை
            நல்ல வர்பிரி யாதசிற் றம்பலம்
இட்ட மாஉறை வாய்,இவை மேவியது என்னைகொலோ.

            பொழிப்புரை :நறுமணம் கமழும் கூந்தலை உடைய சிவகாமி அம்மையாரொடு கூடியவனே, விடையை வாகனமாகக் கொண்டவனே , நெற்றிப் பட்டம் அணிந்தவனே, பூதகணங்கள் இசைபாடவும் அதற்கேற்பத் திருக்கூத்தினை இயற்றுபவனே,  அறிதற்கு அரியதான வேதங்களை ஆய்ந்த ஓதுகின்ற,  தில்லையில் வாழும் நல்ல அந்தணர்கள் எப்போதும் தம் மனத்தால் பிரியாது வழிபடுகின்ற திருச்சிற்றம்பலத்தில் தனக்கு ஆடல் புரிய வாயந்த இடமாகக் கொண்டு வாழ்பவனே ! இத்தகு கருணைச் செயல்களையும் நீ விரும்பி இயற்றுவது என்ன காரணம் பற்றியோ ? கூறியருள்வாயாக.


பாடல் எண் : 3
நீலத் தார்,கரி யமிடற் றார்,நல்ல
            நெற்றி மேல்உற்ற கண்ணி னார்,பற்று
சூலத் தார்,சுட லைப்பொடி நீறுஅணி வார்சடையார்,
சீலத் தார்தொழுது ஏத்துசிற் றம்பலம்
            சேர்த லால்,கழல் சேவடி கைதொழக்
கோலத் தாய்அரு ளாய்உன காரணம் கூறுதுமே.

            பொழிப்புரை :நீல நிறத்தைப் பொருந்திய கரிய திருக் கழுத்தினை உடையவர்கள், ( திருநீலகண்டர் ). அழகிய நெற்றியிலே கண்ணோடு திகழ்பவர். திரிசூலத்தைத் திருக்கையிலே பற்றியவர், காடுடைய சுடலைப் பொடி பூசியவர், சடையினை உடையவர், ஒழுக்கத்தால் மிக்கவர் ஆகிய தில்லைவாழ் அந்தணர்கள் வணங்கி வழிபடும் திருச்சிற்றம்பலத்தை மனத்தால் இடைவிடாது நினைந்து சேர்தலால். திருக்கோலம் உடைய நடராசப்பெருமானே ! நின் கழல்அணிந்த திருவடியைக் கையால் தொழுமாறு அருள் செய்வாயாக. உன்னுடைய காரணங்களை (முதன்மையை) நாங்கள்  கூறுவேம்.


பாடல் எண் : 4
கொம்புஅ லைத்துஅழகு எய்திய நுண்இடைக்
            கோல வாள்மதி போலமு கத்துஇரண்டு
அம்பு அலைத்தகண் ணாள்முலை மேவிய வார்சடையான்
கம்ப லைத்துஎழு காமுறு காளையர்
            காத லால்கழல் சேவடி கைதொழ
அம்ப லத்துஉறை வான்அடி யார்க்குஅடை யாவினையே.

            பொழிப்புரை :பூங்கொம்பு தனக்கு இணையாகாதவாறு, அதனை அலையச் செய்து, அதன் அழகினை பெற்ற நுண்ணிய இடையையும், அழகும் ஒளியும் பொருந்திய திங்கள் போலும் திருமுமுகத்தில் இரண்டு அம்புகளை வருத்தி ஒப்பாகாவண்ணம் விளங்கும் திருக்கண்களையும் உடைய சிவகாமியம்மையாரது கொங்கைகளை விரும்பிய வார்சடையான், ( நடராசப் பெருமான்), அரகர என்று முழக்கம் செய்து விழுந்து எழுந்து அன்பர்கள் அன்புடன் வழிபடும் காளையைப் போன்ற கட்டமைந்த திருவுடலை உடையவர். உள்ளத்தில் பொருந்திய காதலோடு திருக்கழல் அணிந்த சிவந்த திருவடிகளைக் கைகளால் தொழுகின்ற, பொன்னம்பலத்தில் திருக்கூத்தாடும் முழுமுதல்வனுடைய அடியவர்க்கு வினைத் தொடர்பால் வரும் துன்பங்கள் இல்லை.


பாடல் எண் : 5
தொல்லை யார்அமு துஉண்ணநஞ் சுஉண்டதோர்
            தூம ணிமிட றா,பகு வாயதுஓர்
பல்லை யார்தலை யில்பலி ஏற்றுஉழல் பண்டரங்கா,
தில்லை யார்தொழுது ஏத்துசிற் றம்பலம்
            சேர்த லால்கழல் சேவடி கைதொழ
இல்லை யாம்வினை தான்,எரி யம்மதில் எய்தவனே.

            பொழிப்புரை :திரிபுரத்தை எரித்தொழிக்க மலையை வில்லாகவும் தீயை அம்பாகவும் கொண்டு எய்தவனே, பழமையான தேவர்கள் எல்லாரும் அமுதுண்ண வேண்டிக் உனது கருணைப் பெருக்கால், கடலில் விளைந்த கொடிய விடத்தை உண்டதால் தூய நீலமணி போலக் கறுத்த திருக்கழுத்தினை உடையவனே! பற்கள் நிறைந்த பிளந்த வாயினை உடைய கபாலத்தில் பிச்சையை ஏற்று உழலும் பாண்டரங்கக் கூத்தனே ! தில்லைவாழ் அந்தணர்கள் வணங்கி ஏத்தும் திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்து வழிபடுதலாலும் கழலணிந்த சேவடியைக் கைகளால் தொழுதலாலும், இருவினையும் பற்று அறக் கழியும்.


பாடல் எண் : 6
ஆகம் தோய்அணி கொன்றை யாய்,அனல்
            அங்கை யாய்,அம ரர்க்குஅம ரா,உமை
பாகம் தோய்பக வா,பலி யேற்றுஉழல் பண்டரங்கா,
மாகம் தோய்பொழில் மல்குசிற் றம்பலம்
            மன்னி னாய்,மழு வாளி னாய்,அழல்
நாகம் தோய்அரை யாய்,அடி யாரைநண் ணாவினையே.

            பொழிப்புரை :திருமார்பில் தோய்ந்த அழகிய கொன்றை மாலையை உடையவனே ! தீயினை ஏந்திய திருக்கையினை உடையவனே ! தேவர்களுக்கு எல்லாம் தேவனே ! அம்பிகையை ஒரு பாகத்தில் உடைய பகவனே ! பிச்சை ஏற்றுத் திரிந்து பாண்டரங்கக் கூத்தினை இயற்றுபவனே ! வானத்தை அளாவிய சோலைகள் நிறைந்த திருச்சிற்றம்பலத்தே நிலைபெற்று விளங்குபவனே ! மழுவாள்னை ஏந்தியவனே ! தீயைப் போலும் நஞ்சினை உடைய பாம்பினைக் கச்சாக அணிந்த இடுப்பினை உடையவனே ! உன் அடியவரை வினைகள் அடையா.


பாடல் எண் : 7
சாதிஆர் பளிங் கின்னொடு வெள்ளிய
            சங்க வார்குழை யாய்,திக ழப்படும்
வேதி யா,விகிர் தா,விழ வார்அணி தில்லைதன்னுள்
ஆதி யாய்க்குஇடம் ஆயசிற் றம்பலம்
            அங்கை யால்தொழ வல்லஅடி யார்களை
வாதி யாதுஅகலும்,நலி யாமலி தீவினையே.

            பொழிப்புரை : உத்தம இனத்தனவாகிய பளிங்குடன்,  வெண் சங்குகொண்டு செய்யப்பட்ட குண்டலத்தை அணிந்தவனே , வேதங்களில் போற்றப்படுபவனே, விகிர்தனே , திருவிழாக்கள் நிறைந்த அழகிய தில்லையுள் முதற்பரம்பொருளாகிய உனக்கு இடமான திருச்சிற்றம்பலத்தைத் தமது அழகிய கைகளால் தொழவல்ல அடியார்களைத் தீவினைப் பெருக்கமானது துன்புறுத்தாது ; தீவினைகள் அழிந்து ஒழியும் .


பாடல் எண் : 8
வேயின் ஆர்பணைத் தோளியொ டுஆடலை
            வேண்டி னாய்,விகிர் தா,உயிர் கட்குஅமுது
ஆயி னாய்,இடு காட்டுஎரி ஆடல்அமர்ந்தவனே,
தீயின் ஆர்கணை யால்புரம் மூன்றுஎய்த
            செம்மை யாய்,திகழ் கின்றசிற் றம்பலம்
மேயி னாய்,கழ லேதொழுது எய்துதும் மேல்உலகே.

            பொழிப்புரை :மூங்கிலைப் போன்ற பருத்த தோள்களை உடைய காளியோடு திருக்கூத்து இயற்றுதலை விரும்பினவனே , விகிர்தனே, உயிர்களுக்கு எல்லாம் அருளமுதமாக விளங்குபவனே, இடுகாட்டின் தீயில் ஆடுதலை விரும்பியவனே, தீக்கடவுளைக் கூரிய முனையாக் கொண்ட திருமாலாகிய அம்பினால் திரிபுரத்தை எய்த செம்மையனே, திருவருள் சிறப்பினை உடைய திருச்சிற்றம்பலத்தைத் திருநடனம் இயற்றும் இடமாக விரும்பியவனே, உனது கழல் அணிந்த திருவடிகளையே தொழுது சிவலோகத்தை அடைவோம் .


பாடல் எண் : 9
தாரி னார்விரி கொன்றை யாய்,மதி
            தாங்கு நீள்சடை யாய்,தலை வா,நல்ல
தேரின் ஆர்மறு கின்திருஆர் அணி தில்லைதன்னுள்
சீரி னால்வழி பாடுஒழி யாததுஓர்
            செம்மை யால்அழகு ஆயசிற் றம்பலம்
ஏரி னால்அமர்ந் தாய்,உன சீர்அடி ஏத்துதுமே.

            பொழிப்புரை :மலர்ந்த கொன்றைப் பூமாலையைஅணிந்தவனே, பிறையைத் தாங்கிய நீண்ட சடையை உடையவனே, எங்கள் தலைவனே , அழகிய தேர்களாலே பொலிவு நிறையப்பெற்ற திருவீதிகளையுடைய செல்வம் நிறைந்த திருத் தில்லையுள், சிறந்த முறைப்படி வழிபடுவதை ஒழியாத செம்மையால் அழகான திருச்சிற்றம்பலத்தைத் திருக் கூத்து இயற்ற விரும்பினவனே, உன் பெருமை பொருந்திய திருவடிகளை ஒழியாமல் வழிபாடுவோம்.


பாடல் எண் : 10
வெற்று அரையுழல் வார்,துவர் ஆடைய
            வேடத் தார்,அவர் கள்உரை கொள்ளன்மின்,
மற்று அவர்உல கின்அவ லம்அவை மாற்றகில்லார்,
கற்ற வர்தொழுது ஏத்துசிற் றம்பலம்
            காத லால்கழல் சேவடி கைதொழ
உற்ற வர்உல கின்உறு திகொள வல்லவரே.

            பொழிப்புரை : இடுப்பிலே ஆடையில்லாமல் திரிபவர்களாகிய சமணர் உரைப்பதையும், காவி நிறம் தோய்க்கபெற்ற ஆடையால் உடுத்தியவராகிய கோலத்தை உடைய புத்தரகள் உரைப்பதையும் பொருட்டாகக் கொள்ளாதீர்கள். அவர்கள் உலகத்து உயிர்கள் படும் அவலங்களை மாற்றவல்லவர்கள் அல்லர் . சிவாகமங்களைக் கற்று வல்ல சிவனடியார்கள் தொழுது ஏத்தும் திருச்சிற்றம்பலத்தைக் கண்ட  பெருங்காதலால் , கழலணிந்த உனது சேவடிகளைக் கைகளால் தொழுதலை உடையவர்களே உயிர்க்கு உலகில் பிறந்த பிறவியின் பயனைப் அடையும் உறுதியினைக் கொள்ள வல்லவராவர்.
            
 
பாடல் எண் : 11
நாறு பூம்பொழில் நண்ணிய காழியுள்
            நான்ம றைவல்ல ஞானசம் பந்தன்
ஊறும் இன்தமி ழால்உயர்ந் தார்உறை தில்லைதன்னுள்
ஏறு தொல்புகழ் ஏந்துசிற் றம்பலத்து
            ஈச னைஇசை யால்சொன்ன பத்துஇவை
கூறு மாறுவல் லார்உயர்ந் தாரொடும் கூடுவரே.

            பொழிப்புரை : நறுமணம் வீசுகின்ற பூக்களை உடைய சோலைகள் நிறைந்துள்ள சீகாழியுள் நான்கு வேதங்களிலும் வல்ல திருஞானசம்பந்தர், இனிமை ஊறுகின்ற தமிழால்,  உணர்வால் உயர்ந்தவர்களாகிய தில்லைவாழ் அந்தணர் மூவாயிரவர் வாழுகின்ற தில்லையுள் மேன்மேல் ஏறும் தொன்மைப் புகழ் தாங்கும் திருச்சிற்றம்பலமுடையானாகிய பெருமானை பண்ணிசையால் சொன்னவை ஆகிய இத்திருப்பதிகத்தை இசையுடன் பாடுமாறு வல்லவர் உயர்ந்தவர்களாகிய அடியவரோடும் கூடி இருக்கும் பேற்றை அடைந்தவர்களாவார்கள்..

திருச்சிற்றம்பலம்

---------------------------------------------------------------------------------------------------


பெ. பு. பாடல் எண் : 176
அப்பு றத்திடை வணங்கி,அங்கு
            அருளுடன் அணிமணித் திருவாயில்
பொற்பு றத்தொழுது, எழுந்து, உடன்
            போதரப் போற்றிய புகழ்ப்பாணர்,
நற்ப தம்தொழுது, அடியனேன்
            பதிமுதல்நதி நிவாக் கரை மேய
ஒப்புஇல் தானங்கள் பணிந்திட
            வேண்டும்என்று உரைசெய, அதுநேர்வார்.

            பொழிப்புரை : அத்திருமுற்றத்தைப் புறத்தில் வணங்கி, அங்குத் திருவருள் பெற்று அழகிய மணிகள் பதித்த திருவாயிலில் தொழுது, வணங்கி, எழுந்தார் பிள்ளையார். அது பொழுது தம்முடன் வரப்பெறும் பேற்றைப் பெற்ற புகழையுடைய திருநீலகண்ட யாழ்ப்பாணர் தம் திருவடிகளை வணங்கி, அடியவனின் பதியான `திருஎருக்கத்தம் புலியூர்' முதலாக `நிவா நதியின் கரையில் உள்ள ஒப்பில்லாத திருப்பதிகளைச் சென்று வணங்க வேண்டும்' என்று வேண்டிக் கொள்ளப் பிள்ளையாரும் அதற்கு உடன்பட்டவராய்,

                                                                                                                 (தொடரும்).......
-----------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...