திருச்செந்தூர் - 0083. பூரண வார கும்ப


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பூரண வார கும்ப (திருச்செந்தூர்)

மாதர் மயக்கம் விட்டு, சிவயோகியாக இருக்க

தானன தான தந்த தானன தான தந்த
     தானன தான தந்த தானன தான தந்த
          தானன தான தந்த தானன தான தந்த ...... தனதான


பூரண வார கும்ப சீதப டீர கொங்கை
     மாதர் விகார வஞ்ச லீலையி லேயு ழன்று
          போதவ மேயி ழந்து போனது மான மென்ப ....தறியாத

பூரிய னாகி நெஞ்சு காவல்ப டாத பஞ்ச
     பாதக னாய றஞ்செ யாதடி யோடி றந்து
          போனவர் வாழ்வு கண்டு மாசையி லேய ழுந்து ...... மயல்தீரக்
 
காரண காரி யங்க ளானதெ லாமொ ழிந்து
     யானெனு மேதை விண்டு பாவக மாயி ருந்து
          காலுட லுடி யங்கி நாசியின் மீதி ரண்டு ......விழிபாயக்

காயமு நாவு நெஞ்சு மோர்வழி யாக அன்பு
     காயம்வி டாம லுன்ற னீடிய தாள்நி னைந்து
          காணுதல் கூர்த வஞ்செய் யோகிக ளாய்வி ளங்க ...... அருள்வாயே

ஆரண சார மந்த்ர வேதமெ லாம்வி ளங்க
     ஆதிரை யானை நின்று தாழ்வனெ னாவ ணங்கு
          மாதர வால்வி ளங்கு பூரண ஞான மிஞ்சு ...... முரவோனே

ஆர்கலி யூடெ ழுந்து மாவடி வாகி நின்ற
     சூரனை மாள வென்று வானுல காளு மண்ட
          ரானவர் கூர ரந்தை தீரமு னாள்ம கிழ்ந்த ...... முருகேசா

வாரண மூல மென்ற போதினி லாழி கொண்டு
     வாவியின் மாடி டங்கர் பாழ்பட வேயெ றிந்த
          மாமுகில் போலி ருண்ட மேனிய னாமு குந்தன் ...... மருகோனே

வாலுக மீது வண்ட லோடிய காலில் வந்து
     சூல்நிறை வான சங்கு மாமணி யீன வுந்து
          வாரிதி நீர்ப ரந்த சீரலை வாயு கந்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


பூரண வார கும்ப சீதப டீர கொங்கை,
     மாதர் விகார வஞ்ச லீலையிலே உழன்று,
          போது அவமே இழந்துபோனது மானம் என்பது..... அறியாத

பூரியன் ஆகி, நெஞ்சு காவல் படாத பஞ்ச
     பாதகனாய், அறம் செயாது, டியோடு இறந்து
          போனவர் வாழ்வு கண்டும், ஆசையிலே அழுந்து ...... மயல்தீரக்

காரண காரியங்கள் ஆனது எலாம் ஒழிந்து,
     யான்எனும் மேதை விண்டு, பாவகமாய் இருந்து,
          கால் உடல் ஊடு இயங்கி, நாசியின் மீதி இரண்டு ...... விழிபாய,

காயமும், நாவும், நெஞ்சும் ஓர் வழி ஆக, அன்பு
     காயம் விடாமல், உன்தன் நீடிய தாள் நினைந்து,
          காணுதல் கூர் தவம் செய் யோகிகளாய் விளங்க ...... அருள்வாயே.

ஆரண சார மந்த்ர, வேதம் எலாம் விளங்க,
     ஆதிரையானை நின்று தாழ்வன் எனா வணங்கும்
          ஆதரவால் விளங்கு பூரண ஞான மிஞ்சும் ..... உரவோனே!

ஆர்கலி ஊடு எழுந்து, மாவடிவு ஆகி நின்ற
     சூரனை, மாள வென்று, வான் உலகு ஆளும் அண்டர்
          ஆனவர் கூர் அரந்தை தீரமுன் நாள் மகிழ்ந்த ......முருகேசா!

வாரணம் மூலம் என்ற போதினில், ஆழி கொண்டு,
     வாவியின் மாடு இடங்கர் பாழ்படவே எறிந்த
          மாமுகில் போல் இருண்ட மேனியனாம் முகுந்தன் ...... மருகோனே!

வாலுகம் மீது வண்டல் ஓடிய காலில் வந்து,
     சூல்நிறைவு ஆன சங்கு மாமணி ஈன உந்து,
          வாரிதி நீர் பரந்த சீரலைவாய் உகந்த ...... பெருமாளே.


பதவுரை

         ஆரண சார மந்த்ர --- வேதத்தின் சாரமாகிய பிரணவ மந்திரப் பொருளால்,

         வேதம் எலாம் விளங்க --- வேதத்திலுள்ள இரகசியங்கள் முழுவதும் நன்றாக விளங்கும்படி,

         ஆதிரையான் --- (ஐ-சாரியை) திருவாதிரை நக்ஷத்திரத்திற்கு உரித்தானவராகிய சிவபெருமான்,

         நின்று தாழ்வன் எனா வணங்கும் --- வாய் பொத்தி எதிரில் நின்று “நின்னைப் பணிகின்றேன்” என்று கூறி வணங்கும்படியான,

         ஆதரவால் விளங்கு --- அன்பினால் விளங்குகின்ற,

         பூரண ஞான மிஞ்சும் உரவோனே --- நிறைந்த ஞானம் ததும்பிய அறிவாற்றல் உடையவரே,

         ஆர்கலி ஊடு எழுந்து மா வடிவு ஆகி நின்ற --- சமுத்திரத்தின் நடுவில் மாமரத்தின் வடிவத்தைக் கொண்டு நின்ற,

     சூரனை மாளவென்று --- சூரபன்மனை இறக்கச் செய்து வெற்றிபெற்று,

     வான் உலகு ஆளும் அண்டர் ஆனவர் கூர் --- தேவலோகத்தை யாள்கின்றவர்களான தேவர்கள் அடைந்த,

     அரந்தை தீர --- துன்பமானது அகலும்படிச் செய்து,

     முன் நாள் மகிழ்ந்த முருக ஈசா --- முன்னொரு காலத்தில் மகிழ்ச்சியடைந்த முருகப் பெருமானே!

         வாரணம் மூலம் என்ற போதினில் --- கஜேந்திரம் என்ற யானை “ஆதி மூலமே” என்று அழைத்தபோது,

     ஆழிகொண்டு --- சக்ராயுதத்தைக் கொண்டு,

     வாவியின் மாடு இடங்கர் --- மடுவிலிருந்த முதலையானது,

     பாழ்படவே எறிந்த --- அழிந்துபோகுமாறு அதை எறிந்தருளியவரும்,

     மாமுகில் போல் இருண்ட மேனியன் ஆம் --- சிறந்த மேகத்தைப்போல் கரிய திருமேனியை உடையவருமாகிய,

     முகுந்தன் மருகோனே - நாராயண மூர்த்தியினுடைய திருமருகரே!

         வாலுக மீது --- (நதியின் முகத்துவாரத்தில் சமுத்திரக்கரையிலுள்ள) மணலின் மீது,

     வண்டல் ஓடிய காலின் வந்து --- வண்டல் ஓடி படியப்பட்ட கிளைநதி வழியாக வந்து,

     சூல் நிறைவான சங்கு --- நிறைந்த கருப்பமுற்ற சங்கினங்கள்,

     மாமணி ஈன --- சிறந்த முத்துக்களைப் பெறும்படி,

     உந்து வாரிதி நீர் பரந்த --- அலைகளையுடைய சமுத்திரம் நீர் எங்கும் பரந்துள்ள,

     சீரலைவாய் உகந்த பெருமாளே --- திருச்சீரலைவாய் என்னும் புண்ணியத் திருத்தலத்தில் எழுந்தருளிய பெருமையின் மிக்கவரே!

         பூரண வார கும்ப --- பூரணமாக வளர்ந்துள்ளவையும் அன்பைப் பெருக்குபவையும் குடத்திற்கு நிகரானவையும்,

     சீத படீர கொங்கை --- குளிர்ந்த சந்தனக்குழம்பு பூசப்பெற்றவையுமாகிய தனங்களையுடைய,

     மாதர் --- விலைப்பெண்களது,

     விகார வஞ்ச லீலையிலே உழன்று --- விகாரத்தை உண்டுபண்ணுவதும் வஞ்சத்தை உடையதுமாகிய கலவி லீலையிலே ஈடுபட்டு அதனிடத்திலேயே மயங்கிச் சுழன்று,

     போது அவமே இழந்து --- பொழுதை வீணாகக் கழித்து,

     மானம் போனது என்பது அறியாத --- மானம் போய் விட்டது என்பதைத் தெரிந்து கொள்ளாத,

     பூரியன் ஆகி --- கீழ் மகனாகி,

     நெஞ்சு காவல் படாத --- இன்னதைத்தான் நினைக்கவேண்டும் இன்னதை நினைக்கப்படாது என்ற நியதிக்காக நெஞ்சத்தில் நல்லுணர்வாகிய காவலை வைக்காத,

     பஞ்ச பாதகனாய் --- ஐம்பெரும் பாதகங்களைச் செய்பவனாய்,

     அறஞ்செயாது --- தருமத்தைச் செய்யாமல்,

     அடியோடு இறந்து போனவர் வாழ்வு கண்டும் --- இருந்த சுவடேயின்றி அறவே இறந்தவர்கள் மாயவாழ்வைக் கண்டும்,

     ஆசையிலே அழுந்தும் --- ஆசையாகிய கடலில் அழுந்துகின்ற,

     மயல் தீர --- மயக்கம் நீங்கும் வண்ணம்,

     காரண காரியங்கள் ஆனது எலாம் ஒழிந்து --- வினைகளின் காரணமாக இருப்பதும் காரியமாக வருவதுமாகிய அனைத்தும் நீங்கப்பெற்று,

     யான் எனும் மேதை விண்டு --- நான் என்கின்ற தற்போதத்தை விட்டு,

     பாவகமாய் இருந்து --- குஹோஹம் பாவனையில் அசைவற்று இருந்து,

     கால் உடல் ஊடு இயங்கி --- பிராணவாயுவானது இரேசக பூரக கும்பமாகிய சாதனையால் உடலில் வியாபிக்கப்பெற்று,

     நாசியின் மீது இரண்டு விழி பாய --- நாசி முனையில் இரு விழிகளின் பார்வையைச் செலுத்தி,

     காயமும் நாவும் நெஞ்சும் ஓர் வழியாக --- உடலும் உரையும் உள்ளமும் ஒருவழிப்பட்டு நிற்க,

     அன்பு காயம் விடாமல் --- அன்பானது உடம்பைவிட்டு நீங்காதவண்ணம்,

     உன்றன் நீடிய தாள் நினைந்து --- தேவரீரது நித்தியமான திருவடிக் கமலங்களை சிந்தித்து,

     காணுதல் கூர் தவஞ்செய் --- அத்திருவடித் தாமரைகளைப் பார்ப்பதற்கு விரும்பித் தவம் புரியும்,

     யோகிகளாய் விளங்க அருள்வாயே --- சிவயோகிகளைப் போல் அடியேன் நிருவிகற்ப சமாதியில் நிலைபெற்று விளங்க அருள்புரிவீர்.

பொழிப்புரை

     வேதத்தின் சாரமாகிய குடிலை மந்திர உரையால், அவ் வேதத்திலுள்ள இரகசியப் பொருள் யாவும் நன்றாக விளங்கும்படி, திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரித்தானவராகிய
சிவமூர்த்தி, வாய்பொத்தி நின்று, (நாதா குமாரா) “உன்னை நமஸ்கரிக்கிறேன்” என்று கூறி வணங்கும்படியான தன்மையால், உயர்ந்து விளங்குகின்ற பரிபூரண ஞானமிகுதி உடைய உரவோனே!

     முன்னொரு காலத்தில் சமுத்திரத்தின் மத்தியில் மாமர வடிவு கொண்டு நின்ற சூரபன்மன் மாளும்படி வெற்றிப்பெற்று வானுலகத்தை ஆளும் தேவர்கள் அடைந்த துன்பம் நீங்கும்படி யருள் புரிந்து மகிழ்ச்சியடைந்த முருகப்பெருமானே!

         கஜேந்திரம் என்ற யானை “ஆதிமூலமே” என்று அழைத்தபோது, மடுவில் இருந்த முதலை அழியுமாறு சக்ராயுதத்தை விடுத்தருளியவரும், பெருமையுடைய நீலமேக வண்ணருமாகிய திருமாலின் மருகரே!

         (நதியின் முகத்துவாரத்தில் சமுத்திரக் கரையிலுள்ள) மணற்குன்றின் மீது, வண்டல் வந்து படியப்பட்ட கிளைநதி வழியாக வந்து பூரண கருப்பமான சங்குகள் சிறந்த முத்துக்களை பெரும்படி செலுத்துகின்ற அலைகளையுடைய சமுத்திரத்தின் நீர் எங்கும் பரந்துள்ள திருச்சீரலைவாய் என்னும் செந்திலம்பதியில் எழுந்தருளியுள்ள பெருமையிற் சிறந்தவரே!

         நன்றாக வளர்ந்துள்ளவையும், ஆசையைப் பெருக்குபவையும், குளிர்ந்த சந்தனக்குழம்பு பூசப்பெற்றவையும்,  குடத்திற்கு நிகரானவையுமான தனபாரங்களை யுடைய விலைமாதர்களது, விகாரத்தை உண்டாக்குவதும், வஞ்சகமுடையதுமாகிய கலவி லீலையிலே ஈடுபட்டு மயங்கிச் சுழன்று, அரிய வாழ்நாளை அவமே கழித்த மானம் அழிந்து விட்டது என்பதை உணராத கீழ்மகனாகி, இன்னதைத் தான் நினைக்கவேண்டும் இன்னதை நினைக்கப்படாது என்ற நியதிக்காக நெஞ்சத்தில் நல்லுணர்வாகிய காவலை வைக்காத பஞ்சபாதகனாகி, தருமத்தைச் செய்யாது, தாம் இருந்த அடையாளமே இன்றி அடியோடு அழிந்து போனவர்களை கண்டு (`நாமும் இப்படியே அழிவோம்` என்ற உணர்ச்சியின்றி) ஆசையாகிய சமுத்திரத்தில் அழுந்துகின்ற மயக்கந் தீரும்படி, உடல் எடுப்பதற்குக் காரண காரியங்களாயுள்ளவை அனைத்தும் நீங்கப்பெற்று, நான் என்ற தற்போதத்தை ஒழித்து, குஹோஹம் பாவனையில் அசைவற்று இருந்து, இரேசக பூரக கும்பகம் என்னும் சாதனையால் உடலில் பிராணவாயு வியாபிக்கப் பெற்று, நாசி முனையில் விழிகளின் பார்வையைச் செலுத்தி உடலும், உரையும், உள்ளமும் ஒரு வழிப்பட்டு நிற்க, உடலில் அன்பு என்னும் தத்துவம் நீங்காத வண்ணம், தேவரீருடைய நித்தியமான திருவடித் தாமரைகளைச் சிந்தித்து அத்திருவடித் தாமரைகளைப் பார்ப்பதற்கு விரும்பித் தவம் புரியும் சிவயோகிகளைப் போல் அடியேன் விளங்கத் திருவருள் புரிவீர்.

விரிவுரை

போது அவமே இழந்து ---

உலகத்தில் அரிய பொருளாகக் கருதப்படுகின்றவை அனைத்திற்கும் அரியது வாழ்நாளேயாம். ஒவ்வொரு நிமிஷமும் விலை மதிக்க முடியாததாம்; கழிந்துபோன ஒரு நிமிஷத்திற்கு எத்தனை கோடி செல்வத்தைக் கொடுத்தாலும் திரும்பவராது; அதன் அருமை நுனித்து உணர்வார்க்குப் புலனாகும். அத்தகைய அருமையான நாட்களை வீணே கழித்து விடுகின்றோம். ஒவ்வொரு நிமிஷத்தையும் நல்ல விஷயத்திலேயே கழிக்கவேண்டும்.

வீணேநாள் போய்விடாமல் ஆறாறுமீதில்
 ஞானோபதேசம் அருள்வாயே”                --- (மாலாசை) திருப்புகழ்.


நெஞ்சு காவல்படாத ---

வீட்டு வாயில் தக்கவனை விடு; தகாதவனை விடாதே, என்று காவல் வைப்பதுபோல, நெஞ்சில் நல்லுணர்வு என்ற காவல் வைக்கவேண்டும். அதனால் தீய எண்ணங்களை எண்ணுதற்கு இடமிராது, நல்லெண்ணங்களே தோன்றும்.

அடியோடு இறந்துபோனவர் வாழ்வு கண்டும் ---

பெருமையுடன் வாழ்ந்தவர்களும் தமது அடையாளமே இன்றி இறந்து போவதைக் கண்டாவது, “நாமும் இறந்து போவோம்” என்று எண்ணித் தெளிவடைய வேண்டும்.

 
நானெனும் மேதை விண்டு ---

நான் என்கின்ற எண்ணம் ஒழிந்தால் தான், பரம சுகம் தலைப்படும்.

நானென்ப தற்றுயிரொ டூனென்ப தற்றுவெளி
 நாதம் பரப்பிரம ஒளிமீதே”         --- (தேனுந்து) திருப்புகழ்.

பாவகமாயிருந்து ---

குஹோஹம் பாவனையில் அசைவற்றிருப்பது குஹமூர்த்தியாகத் தன்னைப் பாவிப்பது; விடம் ஏறியவன் கருடனாகத் தன்னைப் பாவிப்பதாகிய கருடோஹம் பாவனையால் விடம் நீங்கப் பெறுவதுபோல், குஹோஹம் பாவனையால் மல நிவர்த்தி உண்டாகும்.

காயமு நாவு நெஞ்சும் ஓர்வழியாக ---

மனம், வாக்கு, காயம் என்ற திரிகரணங்களும் ஒருவழிப்படுதலே இன்பத்திற்குக் காரணமாம். இறைவனை நினைக்குங் காலையிலும் ஒருவழிப் பட்டு நிற்கவேண்டும்.

வாயுந் தனுவு மனமுமொரு வழிநின் றிடநின் மகிமைதனை
 ஆயுந்திறமை வரவிலையே ஐயோ இதற்கென் செய்வேன்நான்”
                                                                               --- மாம்பழக்கவி.

வாரண மூலமென்ற .............யெறிந்த ---

கஜேந்திரன் வரலாறு

திருப்பாற் கடலாற் சூழப்பட்டதாயும், பதினாயிரம் யோசனை உயர முடையதாயும், பெரிய ஒளியோடு கூடியதாயும், திரிகூட மென்ற ஒரு பெரிய மலையிருந்தது. சந்தனம், மந்தாரம், சண்பகம் முதலிய மலர்த்தருக்கள் நிறைந்து எப்போதும் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. அம்மலையில் குளிர்ந்த நீர் நிலைகளும் நவரத்தின மயமான மணற் குன்றுகளும் தாமரை ஓடைகளும் பற்பல இருந்து அழகு செய்தன. கந்தருவரும், இந்திரர் முதலிய இமையவரும், அப்சர மாதர்களும் வந்து அங்கு எப்போதும் நீராடி மலர் கொய்து விளையாடிக்கொண்டிருப்பார்கள். நல்ல தெய்வமணம் வீசிக்கொண்டிருக்கும். அவ்வழகிய மலையில், வளமைத்தங்கிய ஒரு பெரிய தடாகம் இருந்தது. அழகிய பூந் தருக்கள் சூழ அமிர்தத்திற்கு ஒப்பான தண்ணீருடன் இருந்தது அத் தடாகம். அந்தத் திரிகூட மலையின் காடுகளில் தடையின்றி உலாவிக் கொண்டிருந்த கஜேந்திரம் என்கின்ற ஒரு யானையானது, அநேக பெண் யானைகளாலே சூழப்பட்டு, தாகத்தால் மெலிந்து, அந்தத் தடாகத்தில் வந்து அதில் முழுகித் தாகம் தணித்து தனது தும்பிக்கை நுனியால் பூசப்பட்ட நீர்த் துளிகளால் பெண் யானைகளையும் குட்டிகளையும் நீராட்டிக் கொண்டு மிகுந்த களிப்புடன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு முதலை அந்த யானையின் காலைப் பிடித்துக் கொண்டது. அக் கஜேந்திரம் தன்னால் கூடிய வரைக்கும் முதலையை இழுக்கத் தொடங்கிற்று. முதலையை வெற்றி பெறும் சக்தியின்றித் தவித்தது. கரையிலிருந்த மற்ற யானைகள் துக்கப் பட்டு அந்த யானையை இழுக்க முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை. யானைக்கும் முதலைக்கும் ஆயிரம் ஆண்டுகள் யுத்தம் நிகழ்ந்தது; கஜேந்திரம் உணவு இன்மையாலும் முதலையால் பல வாண்டுகள் துன்புற்றமையாலும் எலும்பு மயமாய் இளைத்தது. யாதும் செய்யமுடியாமல் அசைவற்று இருந்தது. பின்பு தெளிந்து துதிக்கையை உயர்த்தி, பக்தியுடன் “ஆதிமூலமே!” என்று அழைத்தது. திக்கற்றவர்க்குத் தெய்வமே துணையென்று உணர்ந்த அந்த யானை அழைத்த குரலை, பாற்கடலில் அரவணை மேல் அறிதுயில் செய்யும் நாராயணமூர்த்தி கேட்டு, உடனே கருடாழ்வான்மீது தோன்றி, சக்கரத்தை விட்டு முதலையைத் தடிந்து, கஜேந்திரத்திற்கு அபயம் தந்து அருள் புரிந்தனர். சிவபெருமான் தமக்குத் தந்த காத்தற்றொழிலை மேற்கொண்ட நாராயணர் காத்தற் கடவுளாதலால், உடனே ஓடிவந்து கஜேந்திரனுடைய துன்பத்தை நீக்கி இன்பத்தை நல்கினர்.

மதசிகரி கதறிமுது முதலை கவர் தரநெடிய
 மடுநடுவில் வெருவியொரு விசையாதி மூலமென
 வருகருணை வரதன்”                                     --- சீர்பாதவகுப்பு.

யானை பொதுவாக அழைத்தபோது நாராயணர் வந்து காத்தருளிய காரணம், நாராயணர் தமக்குச் சிவபெருமான் கொடுத்தருளிய காத்தல் தொழிலைத் தாம் செய்வது கடமை ஆதலால் ஓடி வந்தனர். ஒரு தலைவன் நீ இந்த வேலையைச் செய்யென்று ஒருவனுக்குக் கொடுத்துள்ளபோது, ஒருவன் தலைவனையே அழைத்தாலும் தலைவன் கொடுத்த வேலையைச் செய்வது அப்பணியாளன் கடமையல்லவா? தலைவனைத்தானே அழைத்தான்? நான் ஏன் போகவேண்டு மென்று அப்பணியாளன்  வாளாவிருந்தால், தலைவனால் தண்டிக்கப் படுவானல்லவா? ஆதலால், சிவபெருமான் தனக்குத் தந்த ஆக்ஞையை நிறைவேற்ற நாராணர் வந்தார் என்பது தெற்றென விளங்கும்.

கருத்துரை

         பரமசிவமூர்த்திக்கு குடிலை மந்திரத்தை உபதேசித்த ஞான தேசிகரே! சூரனைக் கொன்று வானவர் துன்பத்தை நீக்கிய முருகப் பெருமானே! கஜேந்திரவரதராகிய கருமுகில் வண்ணரது மருகரே! செந்திலாதிப! மாதர் மயக்கத்தில் அடியேனுழலாது, தற்போதத்தை விட்டு, விழிநாசி வைத்து ஒரு வழிப்பட்டு சிவயோகியாக அடியேன் அசைவற்று இருக்கத் திருவருள் புரிவீர்.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...