திருக்கச்சூர்
ஆலக்கோயில்
தொண்டை நன்னாட்டுத் திருத்தலம்.
சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு இரயில்
மார்க்கத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோயில் இரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் இத் திருத்தலம்
உள்ளது.
சென்னை
- செங்கல்பட்டு தேசீய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள்கோயில் சென்று அங்கிருந்து
ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் திரும்பி இரயில்வே கேட் தாண்டி சுமாராக 1 கி.மீ. தூரம் சென்ற பின் வலதுபுறம்
பிரியும் சாலையில் மேலும் 1 கி.மீ. தூரம்
சென்றால் திருக்கச்சூர் ஆலயத்தை அடையலாம். ஊரின் நடுவே கோயில் உள்ளது.
சிங்கப்பெருமாள்கோயில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆட்டோ மூலம் செல்வது
நல்லது. இல்லாவிடில் சுமார் 2 கி.மீ. தொலைவு
நடந்து செல்ல வேண்டும்.
திருக்
கச்சூர் ஆலக் கோயில்...
இறைவர்
: விருந்திட்டஈசுவரர், விருந்திட்டவரதர், கச்சபேஸ்வரர்.
இறைவியார்
: அஞ்சனாட்சியம்மை.
தல
மரம் :
ஆல்
தீர்த்தம் : கூர்ம (ஆமை) தீர்த்தம்.
மருந்தீசர்
கோயில்...
இறைவர்
--- மருந்தீசர்.
இறைவி --- அந்தகநிவாரணி, இருள்நீக்கித் தாயார்.
தேவாரப்
பாடல்கள் --- சுந்தரர் - முதுவாய் ஓரி
கதற.
அமிர்தம் கிடைப்பதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தார்கள்.
மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பைக்
கயிறாக்கி பாற்கடலைக் கடையும் சமயத்தில் மந்தார மலை கனம் தாங்காமல் மூழ்கத்
தொடங்கியது. அது கடலில் மூழ்காமல் இருக்க திருமால் ஆமை (கச்சபம்) வடிவெடுத்து
மந்தர மலையின் அடியில் சென்று மலையை தாங்கி நின்றார். திருமால் இவ்வாறு ஆமை
உருவில் மலையின் கனத்தைத் தாங்கக்கூடிய ஆற்றலைப் பெற இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை
வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. ஆமை (கச்சபம்) வடிவத்தில் மஹாவிஷ்னு சிவபெருமானை
வழிபட்டதால் இத்தலம் திருக்கச்சூர் என்று பெயர் பெற்றது.. இத்தலம் ஆதிகச்சபேஸம்
என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் உள்ள கூர்ம தீர்த்தத்தில் நீராடி பிரதோஷ
நாட்களில் கச்சபேசுவரரை வணங்கினால் எல்லா தோஷங்களும் நீங்கும். செல்வம், கல்வி, இன்பம் கிடைக்கும் என்று தல புராணம்
கூறுகிறது.
நம்பியாரூர் பெருமான் தொண்டை நாடு
புகுந்து திருக்கழுக்குன்றத்தை வழிபட்டுத் திருப்பதிகம் பாடி, திருக்கச்சூருக்கு எழுந்தருளினார். இறைவரை வழிபட்டுத் திருக்கோயிலினின்றும்
வெளிவந்தார். உச்சி வேளை. உணவு ஆக்கும் பரிசனங்கள் வரவில்லை. நம்பியாரூரருக்குப்
பசி மேலிட்டது. மதில் புறத்தே தங்கினார். அடியவர்கள் துயரம் கண்டு தரியாதவராகிய
சிவபெருமான், அவ்வூரில் உள்ள
அந்தணர் ஒருவரின் திருவருவம் தாங்கி நம்பியாரூரரை அணைந்து, "நீர் பசித்து இருக்கிறீர் போலும். யான்
சோறு இரந்து கொண்டு வருகின்றேன். இங்கே இரும்" என்று சொல்லி, வீடுகள் தோறும்
சென்று சேறும் கறியும் இரந்து வந்து கொடுத்தார்.
வன்தொண்டர் அடியவர்களுடன் அமுது செய்ததும், வந்த மறையவர் மறைந்தார். வந்தவர் இறைவர் என்பதை உணர்ந்து, "முதுவாய் ஓரி
கதற" என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி அருளினார்.
இந்த நிகழ்வை, வள்ளல் பெருமான், தாம் பாடியருளிய திருவடிப் புகழ்ச்சி
என்னும் பாடலில், "இன் தொண்டர் பசி அறக்
கச்சூரின் மனைதொறும் இரக்க, நடை கொள்ளும்
பதம்" என்று மனமுருகப் பாடியருளினார்.
இது தான் நமது பண்பாடு. நான் சிறியவனாக
இருந்த காலத்தில், எங்கள் ஊருக்கு
அகாலத்தில் யாராவது வந்தார்கள் என்றால், அவர்களைத்
திருக்கோயில் மேடையில் இருத்தி,
நாங்கள்
அவரவர் வீட்டுப் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு, வீடுகள் தோறும் சென்று, "அம்மா, தர்மச் சோறு" என்று கேட்டு வாங்கி
வந்து, அதிதியாக
வந்தவர்களுக்குப் பலகாலம் அமுது படைத்து இருக்கின்றோம்.
"பாடுவார் பசி
தீர்ப்பாய், பரவுவார் பிணி
களைவாய்" என்பது முதலான ஆப்த வாக்கியங்கள் பலவற்றின் அற்புதத் தன்மையை, அக் காலத்தில் அடியேன் செய்த பணியை
எண்ணிப் பார்க்க, திருவருள்
அடியேனுக்கு இந்தப் பெரும் பேற்றை அருளியதை எண்ணும் தோறும் நெஞ்சம் உருகும்.
திருக்கச்சூர் தலம் ஆலக்கோயில் என்ற
பெயருடனும் அழைக்கப்படுகிறது. இவ்வாலயத்தின் மூலவர் கச்சபேசுவரர். இருந்தாலும்
இவ்வாலயம் தியாகராஜசுவாமி திருக்கோயில் என்றே அழைக்கப்படுகிறது. கிழக்கு திசை
நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு கோபுரமில்லை. கோயிலுக்கு எதிரில் ஒரு பெரிய
குளம் இருக்கிறது. இது கூர்ம தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. திருமால்
கூர்மாவதாரம் எடுத்தபோது இக்குளத்தை உண்டு பண்ணியதாகக் கருதப்படுகிறது. இக்குளத்திற்கு
அருகில் தான் சுந்தரர் பசிக் களைப்பால் படுத்திருந்த 16 கால் மண்டபம் இருக்கிறது. மண்டபத்
தூண்களில் அழகிய சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கிழக்கிலுள்ள நுழைவாயில் வழியாக உள்ளே
சென்றவுடன் கிழக்கு வெளிப் பிரகாரத்தில் கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியவை அமைந்துள்ளன. தெற்கு
வெளிப் பிரகாரத்தில் 27 தூண்களை உடைய
நட்சத்திர மண்டபம் உள்ளது. நட்சத்திர மண்டபத்தைக் கடந்து நேரே சென்றால் தியாகராஜர்
சந்நிதி உள்ளது. இவர் உபயவிடங்கர் எனப்படுகிறார். மகாவிஷ்ணுவிறகு இத்தலத்தில்
இறைவன் தனது நடனத்தைக் காட்டி அருளியுள்ளார். நட்சத்திர மண்டபத்தில் உள்ள ஒரு
தூணில் ஆமை உருவில் மகாவிஷ்ணு சிவலிங்கத்தை வழிபடும் சிற்பம் ஒன்று உள்ளது.
மண்டபத்தில் உள்ள தெற்கு வாயில் வழியே
உள்ளே சென்றால் இறைவி அஞ்சனாட்சியின் சந்நிதி உள்ளது. நான்கு திருக்கரங்களுடன்
நின்ற நிலையில் அம்பாள் அருள் பாலிக்கிறாள். வலம் வருவதற்கு வசதியாக அம்மன்
சந்நிதி ஒரு தனிக் கோயிலாகவே உள்ளது. அம்பாள் சந்நிதி முன் உள்ள மண்டபத்திதிருந்து
மற்றொரு கிழக்கு நோக்கிய வாயில் வழியாக உள்ளே சென்றால் கருவறையில் கிழக்கு நோக்கிய
சந்நிதியில் இறைவன் கச்சபேசுவரர் காட்சி தருகிறார். திருமாலுக்கு அருளிய இவர் ஓர்
சுயம்புலிங்கமாவார். கருவறை அகழி போன்ற அமைப்பு கொண்டது. கருவறை சுற்றில்
தென்கிழக்கில் வடக்கு நோக்கிய நால்வர் சந்நிதியைக் காணலாம். கருவறை சுற்று வலம்
வரும்போது வடக்குச் சுற்றின் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது.
கருவறை கோஷ்ட மூர்த்திகளாக விநாயகர், தட்சினாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். வடக்கு
வெளிப் பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய முருகன் சந்நிதியும், விருந்திட்ட ஈசுவரர் சந்நிதியும்
அமைந்திருக்கின்றன. விருந்திட்ட ஈசுவரர் சந்நிதிக்கு அருகே வடக்கு நோக்கிய
சுந்தரர் சந்நிதியும் அமைந்துள்ளது. வடக்கு வெளிப் பிரகாரத்தில் தெற்கு நோக்கிய
பைரவர் சந்நிதியும் இருக்கிறது.
திருக்கச்சூர் கோயிலின் இணைக்கோயிலான
மலைக்கோயில், ஆலக்கோயிலில் இருந்து
சுமார் 1 கி.மி. தொலைவில்
அமைந்துள்ளது. இக்கோயிலில் குடிகொண்டிருக்கும் இறைவன் மருந்தீசுவரர் என்றும் இறைவி
இருள்நீக்கியம்மை என்றும் அழைக்கப்படுகின்றனர்.
காலை 8 மணி முதல் நண்பகல் 11.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "தூவி மயில் ஆடும்
பொழில் கச்சூர் ஆலக் கோயிற்குள் அன்பர் நீடும் கன தூய நேயமே" என்று போற்றி உள்ளார்.
சுந்தரர் திருப்பதிக
வரலாறு
ஏயர்கோன் கலிக்காம
நாயனார் புராணம்.
பெரிய
புராணப் பாடல் எண் : 172
தண்டகமாம்
திருநாட்டுத்
தனிவிடையார்
மகிழ்விடங்கள்
தொண்டர்எதிர்
கொண்டுஅணையத்
தொழுதுபோய், தூயநதி
வண்டுஅறைபூம்
புறவுமலை
வளமருதம் பலகடந்தே,
எண்திசையோர்
பரவுதிருக்
கழுக்குன்றை
எய்தினார்.
பொழிப்புரை : குளிர்ந்த
நீர்வளமுடைய திருநாட்டில் ஒப்பற்ற ஆனேற்று ஊர்தியையுடைய பெருமான் மகிழ்ந்தருளும்
இடங்களில் அடியவர்கள் அங்கங்கும் எதிர்கொண்டு வணங்கிடத் தொழுது சென்று, தூய ஆறுகளும், வண்டுகள் பாடும் சோலைகள் சூழ்ந்த முல்லை
நிலங்களும், மலைவளம் தரும்
குறிஞ்சி நிலங்களும், மருத நிலங்களுமாய பல
இடங்களைக் கடந்து, எண்திசையினில்
உள்ளாகியவரும் வணங்கிடும் திருக்கழுக்குன்றத்தை அடைந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 173
தேன்ஆர்ந்த
மலர்ச்சோலை
திருக்கழுக்குன்
றத்துஅடியார்
ஆனாத
விருப்பினொடும்
எதிர்கொள்ள அடைந்து,அருளித்
தூநாள்வெண்
மதிஅணிந்த
சுடர்க்கொழுந்தைத்
தொழுதுஇறைஞ்சி,
பாநாடும்
இன்னிசையின்
திருப்பதிகம்
பாடினார்.
குறிப்புரை : இங்கு அருளிய பதிகம் `கொன்று செய்த\'(தி.7 ப.8) என்னும் தொடக்கமுடைய நட்டபாடைப் பண்ணில்
அமைந்த பதிக மாகும். தூ நாள் வெண்மதி - தூ - தூய்மை : சாபம் நீங்கி இறையருள் பெற்ற
தூய்மை. நாள் - புதிய : அன்றலர்ந்த.
பெ.
பு. பாடல் எண் : 174
பாடியஅப்
பதியின்கண்
இனிதுஅமர்ந்து
பணிந்துபோய்,
நாடியநல்
உணர்வினொடும்
திருக்கச்சூர்
தனைநண்ணி,
ஆடகமா
மதில்புடைசூழ்
ஆலக்கோ யிலின்அமுதைக்
கூடியமெய்
அன்புஉருகக்
கும்பிட்டுப்
புறத்துஅணைந்தார்.
பொழிப்புரை : இவ்வாறு பாடிய
அத்திருப்பதியில் இனிது தங்கி, பணிந்து, அப்பால் சென்று, பெருமானை நாடிய நல்லுணர்வோடும் திருக்கச்சூரை
அடைந்து, அங்குப் பொன்னாலான
பெரிய மதில்கள் சூழப்பெற்ற ஆலக்கோயிலில் அமர்ந்தருளும் அமுதாய பெருமானை உள்ளத்தில்
பெருகும் உண்மையான அன்பு உருகக் கும்பிட்டு வெளியே வந்தருளினார்.
பெ.
பு. பாடல் எண் : 175
அணைந்துஅருளும்
அவ்வேலை
அமுதுசெயும் பொழுது
ஆக,
கொணர்ந்துஅமுது
சமைத்துஅளிக்கும்
பரிசனமும் குறுகாமை,
தணந்தபசி
வருத்தத்தால்
தம்பிரான் திருவாயில்
புணர்ந்தமதில்
புறத்துஇருந்தார்,
முனைப்பாடிப்
புரவலனார்.
பொழிப்புரை : வெளியே வந்தருளிய
அப்பொழுது, திருவமுது செய்யும்
பொழுதாகிட, உணவுப் பொருள்களைக்
கொண்டு வந்து அமுதினைச் சமைத்துக் கொடுத்திடும் ஏவலர் அவ்விடம் வந்து சேராமையால், பெருகிய பசியின் வருத்தத்தினால், திருமுனைப்பாடி நாட்டின் பேரருளாளராய
சுந்தரர், கோயில்
திருவாயிலினைச் சேர்ந்த மதிலின் அருகே இருந்தருளினார்.
பெ.
பு. பாடல் எண் : 176
வன்தொண்டர்
பசிதீர்க்க,
மலையின்மேல்
மருந்தானார்
மின்தங்கு
வெண்தலைஓடு
ஒழிந்து, ஒருவெற்று ஓடுஏந்தி
அன்றுஅங்கு
வாழ்வார்ஓர்
அந்தணராய்ப்
புறப்பட்டுச்
சென்று, அன்பர் முகநோக்கி
அருள்கூரச்
செப்புவார்.
பொழிப்புரை : அவ்வாறு பசியுடன்
இருந்த வன்தொண்டரின் பசியைத் தீர்த்திட, கச்சூர்மலைமேல்
வீற்றிருக்கும், கொடிய பசிப்பிணியைத்
தீர்த்தருளும் மருந்தாகிய சிவபெருமான், தமது
திருக்கரத்து ஏந்திய மின்னல் போலும் ஒளிபொருந்திய வெண்தலை ஓட்டினை நீக்கி வேறு ஒரு
மண் ஓட்டினைத் திருக்கையில் ஏந்தி,
அவ்விடத்து
வாழும் ஓர் அந்தணர் வடிவில் சென்று,
அவர்
திருமுகத்தை நோக்கி, அருள் கூர்ந்திடச்
சொல்வாராய்,
பெ.
பு. பாடல் எண் : 177
"மெய்ப்பசியால்
மிகவருந்தி
இளைத்து இருந்தீர், வேட்கைவிட,
இப்பொழுதே
சோறுஇரந்து, இங்கு
யான்உமக்குக்
கொணர்கின்றேன்,
அப்புறம்நீர்
அகலாதே
சிறிதுபொழுது
அமரும்"எனச்
செப்பி, அவர் திருக்கச்சூர்
மனைதோறும்
சென்றுஇரப்பார்.
பொழிப்புரை : `உடலில் ஏற்பட்ட பசியால் மிக வருந்தி, நீவிர் இளைத்திருக்கின்றீர்; உம் பசிவருத்தம் நீங்கிட, இப்பொழுதே நான் சோற்றினை இரந்து
உமக்குக் கொண்டு வருவேன்; நீவிர் அப்புறம்
போகாமல் சிறிது நேரம் இங்கு அமரும்\'
எனச்
சொல்லி, அவர் திருக்கச்சூர்
என்னும் அந்நகரில் உள்ள மனைதோறும் சென்று சோறு இரப்பாராய்,
பெ.
பு. பாடல் எண் : 178
வெண்திருநீற்று
அணிதிகழ,
விளங்குநூல்
ஒளிதுளங்க,
கண்டவர்கள்
மனம்உருக,
கடும்பகல்போது
இடும்பலிக்குப்
புண்டரிகக்
கழல்புவிமேல்
பொருந்த, மனை தொறும்புக்குக்
கொண்டு, தாம் விரும்பிஆட்
கொண்டவர்முன்
கொடுவந்தார்.
பொழிப்புரை : வெண்மையான
திருநீற்றின் அழகு திகழ, மார்பில் விளங்கிய
நூல், ஒளியுடன் விளங்கக்
கண்டவர்கள் மனம் காதலால் உருகிட,
கடுமையான
வெயில் மிக்க நண்பகல் பொழுதில் இடுகின்ற பிச்சைக்காகத் தாமரை யனைய திருவடிகள் நிலத்தில்
பொருந்திட, வீடுகள்தொறும்
புகுந்து சோறு பெற்றுக் கொண்டு வந்தவர்,
பெ.
பு. பாடல் எண் : 179
இரந்துதாம்
கொடுவந்த
இன்அடிசிலும் கறியும்
"அரந்தை தரும் பசீ தீர
அருந்துவீர்"என
அளிப்பப்
பெருந்தகையார்
மறையவர்தம்
பேரருளின் திறம்பேணி
நிரந்தபெரும்
காதலினால்
நேர்தொழுது
வாங்கினார்.
பொழிப்புரை : இரந்து தாம் கொண்டு
வந்த இனிய சோற்றையும், கறிவகைகளையும்
எடுத்துத் `துயர்தரும்நும்
பசிதீர உண்டிடுவீர்\' எனக் கொடுத்திடலும், பெருந்தகையாராய சுந்தரர் அந்தணராக வந்து
அருளியவரின் பேரருளைப் போற்றி உள்ளம் நிறைகின்ற பெருங் காதலினால் எதிரே தொழுது
அச்சோற்றை வாங்கியவர்,
பெ.
பு. பாடல் எண் : 180
வாங்கிஅத்
திருவமுது
வன்தொண்டர்
மருங்குஅணைந்த
ஓங்குதவத்
தொண்டருடன்
உண்டுஅருளி
உவந்துஇருப்ப,
ஆங்குஅருகு
நின்றார்போல்,
அவர்தம்மை அறியாமே
நீங்கினார், எப்பொருளும்
நீங்காத
நிலைமையினார்.
பொழிப்புரை : வாங்கிய
அத்திருவமுதைச் சுந்தரர் தம் மேலாய தவமுடைய அடியார்களுடன் உண்டருளிப்
பெருமகிழ்ச்சி கொண்டு இருப்ப, எப்பொருளினும்
நீங்குதலரிய தேவராய பெருமானும்,
அவர்
அருகே நின்றாற்போல் நின்று, அவரை அறியாது
மறைந்தருளினார்.
பெ.
பு. பாடல் எண் : 181
திருநாவ
லூராளி
சிவயோகி யார்நீங்க,
வருநாம
மறையவனார்
இறையவனார் எனமதித்தே,
"பெருநாதச் சிலம்பணிசே
வடிவருந்தப்
பெரும்பகல்கண்
உருநாடி
எழுந்து அருளிற்று
என்பொருட்டாம்"
எனஉருகி.
பொழிப்புரை : அதுகண்டு
திருநாவலூரின் மன்னராய சுந்தரரும்,
சிவயோகியாய
அவ்வந்தணர் பெருமான் மறைந்திடத் தம் முன்பு வந்தருளிய அந்த அந்தணர், எல்லாம் வல்ல ஈசனாகும் என எண்ணிப்
பேரொலியையுடைய சிலம்பு ஒலித்திட அணிந்த திருவடிகள் இந்நிலவுலகில் வருத்தமடைய, இக்கொடிய பெரும் பகற்பொழுதில் நாடி
வந்தருளியது என் பொருட்டாகவன்றோ?
என
உள்ளம் உருகி,
பெ.
பு. பாடல் எண் : 182
"முதுவாய் ஓரி"
என்றுஎடுத்து
முதல்வ னார்தம்
பெருங்கருணை
அதுவாம்
இதுஎன்று அதிசயம்வந்து
எய்த, கண்ணீர் மழையருவிப்
புதுவார்
புனலின் மயிர்ப்புளகம்
புதைய, பதிகம் போற்றிசைத்து,
மதுவார்
இதழி முடியாரைப்
பாடி மகிழ்ந்து
வணங்கினார்.
பொழிப்புரை : `முதுவாய் ஓரி\' எனத் தொடங்கி எப்பொருட்கும் மூலமான
சிவபெருமானது பெருங்கருணை அதுவாம் இது எனும் கருத்தமைய, கண்களில் நீர் மழை அருவியென மேனியில்
புது நீராகிப் பொழிய, உடல் முழுதும்
மயிர்க் கூச்செறிய, அப்பதிகத்தை இசையு
டன் பாடிப் போற்றி, தேனார்ந்த கொன்றை
மலரை முடிமேல் சூடிய பெருமானை மகிழ்ந்து வணங்கினார்.
குறிப்புரை : `முதுவாய் ஓரி' எனத் தொடங்கும் பதிகம் கொல்லிக்
கௌவாணத்தில் அமைந்த பதிகமாகும் (தி.7
ப.41). இவ்வரலாற்றிற்கு
இப்பதிகம் அகச்சான்றாக அமைந்துள்ளது. தமக்காக உச்சிப் பொழுதில் வீடுதொறும்
சென்றிரந்து வந்த பெருங்கருணையைச் சுந்தரர் பலபடக் குறித்து நன்றியுணர்வோடு போற்றி
மகிழ்கின்றார். இரண்டாவது பாடலில் `கச்சேர் அரவு ஒன்று
அரையில் அசைத்துக் கழலும் கிலம்பு ஒலிக்க பலிக்கென்று உச்சம் போதா ஊர் ஊர்திரியக்
கண்டால் அடியார் உருகாரே' எனவரும் பகுதி
எண்ணற்குரியது.
பெ.
பு. பாடல் எண் : 183
வந்தித்து
இறைவர் அருளால்போய்,
மங்கை பாகர்
மகிழ்ந்தஇடம்
முந்தித்
தொண்டர் எதிர்கொள்ளப்
புக்கு, முக்கண்பெருமானைச்
சிந்தித்
திடவந்து, அருள்செய்கழல்
பணிந்து செஞ்சொல்
தொடைபுனைந்தே,
அந்திச்
செக்கர்ப் பெருகுஒளியார்
அமரும் காஞ்சி
மருங்குஅணைந்தார்.
பொழிப்புரை : இவ்வாறு இறைவனாரைப்
போற்றி, அவர் அருள்பெற்று, உமையம்மையாரை ஒரு கூற்றில் உடைய
பெருமான் மகிழ்ந்தருளும் திருப்பதிகள் பலவற்றிற்கும் ஆங்காங்குள்ள அடியவர்கள்
எதிர்கொளச் சென்று அத்திருப்பதிகளில் கோயில் கொண்டிருக்கும் முக்கட்செல்வரை
நினைந்த வண்ணம் திருவடிகளை வணங்கிச் செஞ்சொற்களாலாய தமிழ்ப் பதிக மாலைகளைச் சூட்டி, மாலைப்பொழுதில் தோன்றும் செக்கர் வானம்
போலும் சிவப்பு மிக்க ஒளியையுடைய பெருமான் வீற்றிருக்கும் காஞ்சிபுரத்தின் அருகாக
வந்து சேர்ந்தார்.
7. 041 திருக்கச்சூர்
ஆலக்கோயில் பண்
- கொல்லிக் கௌவாணம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
முதுவாய்
ஓரி கதற முதுகாட்டு
எரிகொண்டு ஆடல்
முயல்வானே,
மதுவார்
கொன்றைப் புதுவீ சூடும்
மலையான் மகள்தன் மணவாளா,
கதுவாய்த்
தலையிற் பலிநீ கொள்ளக்
கண்டால், அடியார் கவலாரே,
அதுவே
ஆமாறு இதுவோ, கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.
பொழிப்புரை : பெரிய வாயை உடைய
நரிகள் கூப்பிடப் புறங் காட்டில் தீயை ஏந்தி ஆடுதலைச் செய்பவனே , கொன்றையினது தேன் ஒழுகுகின்ற புதிய
பூவைச் சூடுகின்ற , மலையான் மகள் மணவாளனே
, திருக்கச்சூரில் உள்ள
ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே , நீ சென்று , முரிந்த வாயையுடைய ஓட்டில் பிச்சை
ஏற்றலைக் கண்டால் உன் அடியவர் கவலைகொள்ளாரோ ?
பாடல்
எண் : 2
கச்சுஏர்
அரவுஒன்று அரையில் அசைத்துக்
கழலும் சிலம்பும்
கலிக்கப் பலிக்கென்று
உச்சம்
போதா ஊர்ஊர் திரியக்
கண்டால், அடியார் உருகாரே,
இச்சை
அறியோம் எங்கள் பெருமான்,
ஏழேழ் பிறப்பும்
எனைஆள்வாய்,
அச்சம்
இல்லாக் கச்சூர் வடபால்
ஆலக் கோயில் அம்மானே.
பொழிப்புரை : எங்கள் பெருமானே , இருவகை ஏழ் பிறப்புக் களிலும் என்னை
ஆளாகக் கொண்டு ஆள்பவனே , திருக்கச்சூரின் வட
பகுதிக்கண் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற அச்சம் இல்லாத பெருமானே , நீ , அழகிய பாம்பு ஒன்றைக் கச்சாகக் கட்டி , கழலும் சிலம்பும் காலில் நின்று ஒலிக்க , பிச்சைக் கென்று , ஞாயிறு உச்சம் ஆகவும் ஊர்தோறும்
திரிதலைக் கண்டால் , உன் அடியவர் மனம்
உருகமாட்டாரோ ! உன் விருப்பம் இன்னது என்பதனை யாம் அறிய மாட்டோம் .
பாடல்
எண் : 3
சாலக்
கோயில் உளநின் கோயில்,
அவைஎன் தலைமேல்
கொண்டாடி,
மாலைத்
தீர்ந்தேன், வினையும் துரந்தேன்,
வானோர் அறியா
நெறியானே,
கோலக்
கோயில் குறையாக் கோயில்
குளிர்பூங் கச்சூர்
வடபாலை
ஆலக்
கோயில் கல்லால் நிழற்கீழ்
அறங்கள் உரைத்த
அம்மானே.
பொழிப்புரை : தேவரும் அறிய ஒண்ணாத
நிலையையுடையவனே , அழகுடையதும் , குறைவில்லாததும் ஆகிய , குளிர்ந்த அழகிய திருக்கச்சூர் வடபால்
ஆலக்கோயிலில் எழுந்தருளி யிருக்கின்ற , கல்லால்
நிழற்கீழ் நால்வர் முனிவர்க்கு அறங்களை உரைத்த பெருமானே , உனது கோயிலாகப் பல கோயில்கள் இம்
மண்ணில் உள்ளன ; அவற்றை யெல்லாம்
என்தலைமேல் வைத்துப் புகழ்ந்து ,
மயக்கமுந்
தீர்ந்தேன் ; வினையையும் ஓட்டினேன்
; இங்குள்ள கோயிலைப்
புகழ்ந்து , நீ இரந்து
சோறிடப்பெற்றேன் .
பாடல்
எண் : 4
விடையும்
கொடியும் சடையும் உடையாய்,
மின்னேர் உருவத்து
ஒளியானே,
கடையும்
புடைசூழ் மணிமண் டபமும்
கன்னி மாடம்
கலந்துஎங்கும்,
புடையும்
பொழிலும் புனலும் தழுவி,
பூமேல் திருமா
மகள்புல்கி,
அடையும்
கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.
பொழிப்புரை : இடப வாகனத்தையும் , இடபக்கொடியையும் , சடை முடியையும் உடையவனே , திருமேனியினது மின்னல்போலும்
ஒளியையுடையவனே , எங்கும் , அழகியவாயில்களையும் , நிறைந்த மணிமண்டபங்களையும் , அழிவில்லாத மாடங்களையும் கொண்டு , சூழ உள்ள இடங்களிலும் சோலைகளையும் , நீர் நிலைகளையும் பெற்று விளங்குதலால் , தாமரைமேல் இருக்கும் பெருமை வாய்ந்த
திருமகள் நீங்காது பற்றி உறைகின்ற ,
வயல்களையுடைய
பண்ணை சூழ்ந்த திருக்கச்சூரில் உள்ள , ஆலக்கோயிலில்
எழுந்தருளியிருக்கின்ற பெரு மானே ,
இஃது
உன்கருணை இருந்தவாறேயோ !
பாடல்
எண் : 5
மேலை
விதியே, விதியின் பயனே,
விரவார் புரமூன்று
எரிசெய்தாய்,
காலை
எழுந்து தொழுவார் தங்கள்
கவலை களைவாய், கறைக்கண்டா,
மாலை
மதியே, மலைமேல் மருந்தே,
மறவேன் அடியேன், வயல்சூழ்ந்த
ஆலைக்
கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.
பொழிப்புரை : மேம்பட்டதாகிய
அறநெறியாயும் , அதன் பயனாயும்
உள்ளவனே , பகைவரது திரிபுரங்களை
எரித்தவனே , காலையில் எழுந்து
உன்னை வணங்குவாரது மனக்கவலையை அடியோடு நீக்குபவனே , நீலகண்டத்தை யுடையவனே , மாலைக் காலத்தில் தோன்றும்
சந்திரன்போல்பவனே , மலைமேல் இருக்கின்ற
மருந்து போல்பவனே , வயல்கள் நிறைந்த , கரும்பாலையை உடைய இடங்களைக் கொண்ட
பண்ணையை உடைய திருக்கச்சூரில் உள்ள ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே , அடியேன் உன்னை மறவேன் .
பாடல்
எண் : 6
பிறவாய், இறவாய், பேணாய், மூவாய்,
பெற்றம் ஏறிப்
பேய்சூழ்தல்
துறவாய், மறவாய், சுடுகாடு என்றும்
இடமாக் கொண்டு
நடம்ஆடி,
ஒறுவாய்த்
தலையில் பலிநீ கொள்ளக்
கண்டால், அடியார் உருகாரே,
அறவே
ஒழியாய், கச்சூர் வடபால்
ஆலக் கோயில் அம்மானே.
பொழிப்புரை : பிறவாதவனே , இறவாதவனே , யாதொன்றையும் விரும்பாதவனே , மூப்படையாதவனே , இடபத்தை ஏறிப் பேயாற் சூழப்படுதலை
விடாதவனே , மறதி இல்லாதவனே , என்றும் சுடு காட்டையே இடமாகக்கொண்டு
நடனம் ஆடுபவனே , திருக்கச்சூரில்
வடபால் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே , நீ , உடைந்த வாயையுடைய ஓட்டில் பிச்சை
ஏற்றலைக் கண்டால் , உன் அடியவர் மனம்
வருந்தமாட்டாரோ ? இதனை அறவே ஒழி.
பாடல்
எண் : 7
பொய்யே
உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால்
அதுவும் பொருளாக்
கொள்வானே,
மெய்யே, எங்கள் பெருமான், உன்னை
நினைவார் அவரை
நினைகண்டாய்,
மைஆர்
தடங்கண் மடந்தை பங்கா,
கங்கார் மதியம்
சடைவைத்த
ஐயா, செய்யாய், வெளியாய், கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.
பொழிப்புரை : மை பொருந்திய பெரிய
கண்களையுடைய மங்கை பங்காளனே , கங்கையையும் , ஆத்திப் பூவையும் , சந்திரனையும் சடையில் வைத்துள்ள தலைவனே , செம்மைநிறம் உடையவனே , வெண்மைநிறம் உடையவனே , திருக்கச்சூரில் உள்ள ஆலக்கோயிலில்
எழுந்தருளியிருக்கின்ற பெருமானே ,
உன்னைப்
புகழ்கின்றவர்கள் பொய்யாகவே புகழ்ந்தாலும் , அதனையும் மெய்யாகவே கொண்டு
அருள்செய்கின்றவனே , எங்கள் பெருமானாகிய
உன்னை மெய்யாகவே நினைக்கின்ற அடியவரை நீ நினை .
பாடல்
எண் : 8
ஊனைப்
பெருக்கி உன்னை நினையாது
ஒழிந்தேன், செடியேன், உணர்வில்லேன்,
கானக்
கொன்றை கமழ மலரும்
கடிநாறு உடையாய், கச்சூராய்,
மானைப்
புரையும் மடமென் னோக்கி
மடவாள் அஞ்ச
மறைத்திட்ட
ஆனைத்
தோலாய், ஞானக் கண்ணாய்,
ஆலக் கோயில் அம்மானே.
பொழிப்புரை : காட்டில் உள்ள கொன்றை
மலர் , மணங் கமழ மலரும்
புதுமணம் வீசுதலை உடையவனே , மானை நிகர்த்த இளைய
மெல்லிய பார்வையை யுடையவளாகிய உமையவள் அஞ்சும்படி போர்த்துள்ள யானைத்தோலை உடையவனே , உயிர்களுக்கு ஞானக்கண்ணாய் விளங்குபவனே , திருக்கச்சூரில் உள்ளவனே , ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற
பெருமானே , கீழ்மையுடையேனும் , அறிவில்லாதேனும் ஆகிய யான் , உடம்பை வளர்க்கும் செயலில் நின்று , உன்னை நினையாது விட்டேன் .
பாடல்
எண் : 9
காதல்
செய்து களித்துப் பிதற்றிக்
கடிமா மலர்இட்டு
உனைஏத்தி,
ஆதல்
செய்யும் அடியார் இருக்க,
ஐயங் கொள்ளல் அழகிதே,
ஓதக்
கண்டேன், உன்னை மறவேன்,
உமையாள் கணவா, எனைஆள்வாய்,
ஆதற்
கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.
பொழிப்புரை : உமையம்மைக்குக் கணவனே
, உனது தன்மைகளைப்
பெரியோர் சொல்ல அறிந்து உன்னை மறவாதேனாகிய என்னையும் அடியாருள் வைத்து ஆள்கின்றவனே
, விளைதலை யுடைய
கழனிகளையுடைய பண்ணையையுடைய திருக்கச்சூரில் உள்ள ஆலக்கோயிலில்
எழுந்தருளியிருக்கின்ற பெருமானே,
உன்
பால் பேரன்புகொண்டு, அதனால்
இன்பம்மீதூரப்பெற்று , தம்மை யறியாது வரும்
சொற்களைச் சொல்லி , மணம்பொருந்திய
மலர்களைத் தூவி உன்னைப் போற்றி செய்து உயர்வடைகின்ற அடியவர்கள் உனக்கு வேண்டும்
பணிகளைச் செய்ய அவாவியிருக்க , நீ சென்று பிச்சை
ஏற்பது அழகிதாமோ ? ஆகாதன்றே ?
பாடல்
எண் : 10
அன்னம்
மன்னும் வயல்சூழ் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானை,
உன்னம்
உன்னும் மனத்து ஆரூரன்,
ஆரூ ரன்பேர்
முடிவைத்த
மன்னு
புலவன், வயல்நா வலர்கோன்,
செஞ்சொல் நாவன், வன்தொண்டன்
பன்னு
தமிழ்நூல் மாலை வல்லார்
அவர்என் தலைமேல்
பயில்வாரே.
பொழிப்புரை : அன்னங்கள் நிலைத்து
வாழும் வயல்கள் சூழ்ந்த திருக்கச்சூரில் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற
பெருமானை , அவனது கருணையையே
நினைகின்ற மனத்தினால், `ஆரூரன்` என்று, திருவாரூர் இறைவனது பெயரைத் தலையில்
வைத்துள்ள மிக்க புலமையுடையவனும்,
செவ்விய
சொல்லால் அமைந்த பாடல்களைப் பாடவல்ல நாவன்மையுடையவனும், வயல்களை உடைய திருநாவலூருக்குத்
தலைவனும் வன்றொண்டனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய, தமிழ் இலக்கணம் அமைந்த இப்பாமாலையைப்
பாட வல்லவர், என் தலைமேல்
எப்பொழுதும் இருத்தற்கு உரியராவர் .
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment