திருக் கழிப்பாலை


திருக் கழிப்பாலை

     சோழ நாட்டு, காவிரி வடகரைத் திருத்தலம்.

         சிதம்பரத்தில் இருந்து 13 கி.மீ. தென்கிழக்கே கொள்ளிடம் நதியின் வடகரையில் காரைமேடு என்ற இடத்தில் இருந்து வந்த இந்தத் திருத்தலம் ஒரு சமயம் கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சேதம் அடைந்த போது அருகில் உள்ள திருநெல்வாயல் என்ற மற்றொரு பாடல் பெற்ற திருத்தலத்தின் அருகே ஒரு புதிய ஆலயத்தின் உள்ளே மூலவர் பால்வண்ண நாதர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். திருநெல்வாயல் திருத்தலத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் திருக்கழிப்பாலை ஆலயம் உள்ளது.

இறைவர்                   : பால்வண்ணநாதர்

இறைவியார்               : வேதநாயகி

தல மரம்                    : வில்வம்

தீர்த்தம்                     : கொள்ளிடம்

தேவாரப் பாடல்கள்    : 1. சம்பந்தர் - 1. புனலாடியபுன்,
                                                           2. வெந்தகுங்குலியப்,

                                               2. அப்பர்   -   1. வனபவள வாய்                                                                      2. நங்கையைப் பாகம்,
                                                                     3. நெய்தல் குருகுதன்,                                                                                       4. வண்ணமும் வடிவும்,
                                                                     5. ஊனுடுத்தி,

                                              3. சுந்தரர்  -  1. செடியேன் தீவினை


         இத்தலத்தில் சிவலிங்கப் பெருமான வெண்ணிறம் உடையவராக விளங்கிறார். அதனாலேயே இறைவர் பால்வண்ண நாதர் என்ற திருநாமத்துடன் இத்திருத்தலத்தில் அருட்காட்சி தருகிறார். வன்மீக முனிவர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளார். கொள்ளிட நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் தேவார காலத்து பழைய ஆலயம் அடித்துச் செல்லப்பட்டதால் அக்கோவிலில் இருந்த பால்வண்ணநாதர் சிதம்பரத்திலிருந்து தென்கிழக்குத் திசையில் சுமார் 5 கி.மி. தொலைவிலுள்ள சிவபுரி என்றும் திருநெல்வாயல் என்றும் வழங்கும் மற்றொரு சிவத்தலத்தில் இருந்து தெற்கே தனி ஆலயத்தில் தனது மற்ற பரிவார தேவதைகளுடன் தற்போது எழுந்தருளியுள்ளார்.

     3 நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் காட்சி அளிக்கிறது. வாயிலின் இருபுறங்களிலும் அதிகார நந்தியர் துணைவியருடன் தரிசனம் தருகின்றனர். கொடிமரம் ஏதுமில்லை. பிராகாரத்தில் சூரியன், விநாயகர், கிராதமூர்த்தி, மகாவிஷ்ணு, சுப்பிரமணியர், மகாலட்சுமி, நவக்கிரகம், காலபைரவர், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. உள்பிரகார நுழைவு வாசலின் இருபுறமும் அதிகார நந்தியர் தமது துணைவியருடன் உள்ளனர். உள் மண்டபத்துள் சென்றால் துவாரபாலகர்களைத் தரிசிக்கலாம். மண்டபத்தின் வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. நடராச சபையில் சிவகாமி அம்மையின் திருமேனி தன் தோழியர் இருவர் சூழ ஒரே பீடத்தில் காட்சி தருகிறாள். துவார விநாயகரை, தண்டபாணியைத் தொழுது உட்சென்றால் மூலவர் தரிசனம். பெயருக்கேற்ப வெண்ணிறமாக உள்ளது. மிகச் சிறிய பாணம். மேற்புறம் சதுரமாக, வழித்தெடுத்தாற்போல் நடுவில் பள்ளத்துடன் அதிசயமான அமைப்புடன் இலிங்கத் திருமேனி காட்சி தருகின்றது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். குதிரையின் கால் குளம்பு பட்டு பிளந்து போன வெண்ணிற லிங்கத்திற்கு தான் இன்றும் பூஜை நடக்கிறது. லிங்கத்திற்கு பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் உள்ளனர். அபிஷேகத்தின்போது பால் மட்டும்தான் இப்பள்ளத்தில் தேங்கும். மற்ற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்குத்தான்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "செல்வாய்த் தெழிப்பாலை வேலைத் திரை ஒலி போல் ஆர்க்கும் கழிப்பாலை இன்பக் களிப்பே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 167
கைம்மான் மறியார் கழிப்பாலை உள்அணைந்து
மெய்ம்மாலைச் சொல்பதிகம் பாடிவிரைக் கொன்றைச்
செம்மாலை வேணித் திருவுச்சி மேவிஉறை
அம்மானைக் கும்பிட்டு அருந்தமிழும் பாடினார்.

         பொழிப்புரை : தம் திருக்கையில் மான் கன்றைக் கொண்டிருக்கும் சிவபெருமான் எழுந்தருளிய திருக் கழிப்பாலையைச் சேர்ந்து மெய்ம்மை பொருந்திய சொற்பதிகத்தைப் பாடி, மணமுடைய கொன்றை மலராலாய அழகான மாலையைச் சூடிய திருச்சடையை உடைய `திருவுச்சி\' என்னும் பதியில் எழுந்தருளிய இறைவரைக் கும்பிட்டு அரிய தமிழ்ப்பதிகத்தையும் பாடினார் காழிப் பிள்ளையார்.

         குறிப்புரை : திருக்கழிப்பாலையில் அருளிய பதிகங்கள்:

1. `புனலாடிய' (தி.2 ப.21) - பண், இந்தளம்.
2. `வெந்தகுங்கிலியப்புகை\' (தி.3 ப.44) - பண், கௌசிகம்.

         திருநெல்வாயிலில் அருளிய பதிகம்: `புடையினார்' (தி.2 ப.26) - பண், இந்தளம். இத்திருப்பதி திருவுச்சி என்றும், சிவபுரி என்றும் அழைக்கப்பெறும். இப்பதிகப் பாடல் தொறும் இறைவன் `உச்சியாரே' எனக் குறிக்கப் பெறுதலும் காணலாம். உச்சியார் - தலைமீது உள்ளவர் எனும் பொருள்படவும் வரும். `தலைமே லான\' (தி.6 ப.8 பா.5) என வரும் அப்பர் திருவாக்கும் காண்க.


2.021 திருக்கழிப்பாலை                        பண் - இந்தளம்
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
புனல் ஆடியபுன் சடையாய், அரணம்
அனல் ஆகவிழித் தவனே, அழகுஆர்
கனல் ஆடலினாய், கழிப்பா லைஉளாய்,
உனவார் கழல்கை தொழுதுஉள் குதுமே.

         பொழிப்புரை :கங்கை நீரில் மூழ்கிய சடையை உடையவனே! முப்புரங்களையும் அழலெழுமாறு விழித்து எரித்தவனே! அழகிய நெருப்பில் நின்று ஆடல் புரிபவனே! கழிப்பாலையுள் எழுந்தருளியவனே! உன்னுடைய நீண்ட திருவடிகளைக் கைகளால் தொழுது நினைகின்றோம்.


பாடல் எண் : 2
துணைஆக வொர்தூ வளமா தினையும்
இணையாக உகந் தவனே, இறைவா,
கணையால் எயில்எய் கழிப்பா லைஉளாய்,
இணைஆர் கழல்ஏத்த இடர் கெடுமே.

         பொழிப்புரை :தனக்குத் துணையாகுமாறு தூய அழகிய உமையம்மையையும் உன்திருமேனியின் ஒருபாகமாக இணைத்துக் கொண்டு மகிழ்ந்தவனே! இறைவனே! முப்புரங்களைக் கணையால் எய்து கழிப்பாலையில் மேவி இருப்பவனே! உன் இரண்டு திருவடிகளை ஏத்த இடர் கெடும்.


பாடல் எண் : 3
நெடியாய், குறியாய், நிமிர்புன் சடையின்
முடியாய், சுடுவெண் பொடிமுற்று அணிவாய்,
கடிஆர் பொழில்சூழ் கழிப்பாலை உளாய்,
அடியார்க்கு அடையா அவலம் அவையே.

         பொழிப்புரை:மிகவும் பெரியவனே! நுண்ணியனே! நிமிர்த்துக் கட்டப்பட்ட சடையாகிய முடியை உடையவனே! திருநீற்றைத் திருமேனி முழுதும் அணிந்தவனே! மணம் கமழும் பொழில் சூழ்ந்த கழிப்பாலையில் எழுந்தருளியிருப்பவனே! உன் அடியவர்களை அவலங்கள் அடையமாட்டா.


பாடல் எண் : 4
எளியாய், அரியாய், நிலம்நீ ரொடுதீ
வளிகா யம்என வெளிமன் னிய,தூ
ஒளியாய், உனையே தொழுதுஉன் னும்அவர்க்கு
அளியாய் கழிப்பா லைஅமர்ந் தவனே.

         பொழிப்புரை :அன்பர்க்கு எளியவனே! அல்லாதார்க்கு அரியவனே! நிலம், நீர், தீ, காற்று ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களில் வெளிப்படையாக விளங்கும் தூய ஒளியோனே! உன்னையே வணங்கி நினைப்பவர்பால் அன்பு செய்பவனே! கழிப்பாலையில் விளங்கு பவனே!


பாடல் எண் : 5
நடம்நண் ணியொர்நா கம்அசைத் தவனே
விடம்நண் ணியதூ மிடறா, விகிர்தா,
கடல்நண் ணுகழிப் பதிகா வலனே,
உடல்நண் ணிவணங் குவன்உன் அடியே.

         பொழிப்புரை :நடனத்தை விரும்பி ஒப்பற்ற பாம்பைக் கச்சாகக் கட்டியவனே! விடம் பொருந்திய தூயமிடற்றினனே! வேறுபட்ட பல வடிவங்களைக் கொண்டவனே! கடலை அடுத்துள்ள கழியில் விளங்கும் தலத்தில் விளங்குபவனே! என்உடல் உறுப்புக்கள் நிலத்தில் பொருந்த வணங்குவது உன் திருவடிகளையாகும்.


பாடல் எண் : 6
பிறைஆர் சடையாய், பெரியாய், பெரிய
மறைஆர் தருவாய் மையினாய், உலகில்
கறைஆர் பொழில்சூழ் கழிப்பா லைஉளாய்,
இறைஆர் கழல்ஏத் தஇடர் கெடுமே.

         பொழிப்புரை :பிறையணிந்த சடையினனே! பெரியோனே! பெருமை பொருந்திய வேதங்கள் கூறும் உண்மைப் பொருளாய் உள்ளவனே! மண்ணுலகில் கருநிறம் பொருந்திய பொழில் சூழ்ந்த கழிப்பாலையில் எழுந்தருளியவனே! எங்கும் தங்கும் உன் திருவடிகளை ஏத்த இடர்கெடும்.


பாடல் எண் : 7
முதிரும் சடையின் முடிமேல் விளங்கும்
கதிர்வெண் பிறையாய், கழிப்பா லைஉளாய்,
எதிர்கொள் மொழியால் இரந்துஏத் தும்அவர்க்கு
அதிரும் வினையா யினஆசு அறுமே.

         பொழிப்புரை :முதிர்ந்த சடை முடியின்மேல் விளங்கும் வெண்மையான ஒளிக்கதிர்களை உடைய பிறையைச் சூடியவனே! கழிப்பாலையில் எழுந்தருளியவனே! முன்னிலைப்பரவல் என்னும் வகையில் எதிர்நின்று பரவி இரங்கி உன்னைத் துதிக்கும் அடியவர்க்கு நடுக்கத் தைத்தரும் வினைகளாகிய குற்றங்கள் அகலும்.


பாடல் எண் : 8
எரிஆர் கணையால் எயில்எய் தவனே,
விரிஆர் தருவீழ் சடையாய், இரவில்
கரிகா டலினாய், கழிப்பா லைஉளாய்,
உரிதாகி வணங் குவன்உன் அடியே.

         பொழிப்புரை :தீக்கடவுள் பொருந்திய கணையால் முப்புரங்களை அழித்தவனே! விரிந்து விழும் சடைக்கற்றையை உடையவனே! இரவில் கரிந்த சுடுகாட்டில் ஆடுபவனே! கழிப்பாலையில் விளங்குபவனே! உன் திருவடிகளை எனக்கு உரியவாகக் கொண்டு வணங்குவேன்.


பாடல் எண் : 9
நலநா ரணன்நான் முகன்நண் ணல்உறக்
கனல் ஆனவனே, கழிப்பா லைஉளாய்,
உனவார் கழலே தொழுதுஉன் னும்அவர்க்கு
இலதுஆம் வினைதான் எயில்எய் தவனே.

         பொழிப்புரை :நன்மைகளைப் புரியும் திருமால், நான்முகன் இருவரும் அடிமுடி காண்போம் என்று உன்னை நண்ணியபோது கனல்வடிவோடு ஓங்கி நின்றவனே! கழிப்பாலையில் எழுந்தருளியவனே! முப்புரங்களை எய்து எரித்தவனே! உன்னுடைய நீண்ட திருவடிகளையே தொழுது நினைவார்க்கு வினைகள் இல்லையாகும்.


பாடல் எண் : 10
தவர்கொண்ட தொழில் சமண்வே டரொடும்
துவர்கொண் டனர்நுண் துகில் ஆடையரும்,
அவர்கொண் டனவிட்டு, அடிகள் உறையும்
உவர்கொண்ட கழிப் பதிஉள் குதுமே.

         பொழிப்புரை :தவத்தினராகிய வேடங்கொண்டு திரிவதைத் தொழிலாகக் கொண்ட போலியான சமண்துறவி வேடத்தினரும் பழுப்பு நிறம் ஏற்றிய நுண்ணிய ஆடையைப் போர்த்துத்திரியும் புத்தர்களும் ஆகிய அவர்கள் கொண்ட கொள்கைகள் உண்மையானவை அல்ல எனவிடுத்துத் தலைமைக்கடவுளாக விளங்கும் சிவபிரான் உறைவதும், உவர் நீரையுடைய உப்பங்கழிகளை உடையதும் ஆகிய கழிப்பாலையை நாம் நினைத்துப் போற்றுவோம்.


பாடல் எண் : 11
கழியார் பதிகா வலனை, புகலிப்
பழியா மறைஞா னசம்பந் தனசொல்,
வழிபாடு இவைகொண்டு அடிவாழ்த் தவல்லார்
கெழியார் இமையோ ரொடுகேடு இலரே.

         பொழிப்புரை :உப்பங்கழிகள் பொருந்திய தலமாகிய கழிப்பாலைத் தலைவனாகிய சிவபிரானை, புகலிப்பதிக்குரியவனாய் மறை நெறிவளரத் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றிப் பரவிய இத்திருப்பதிகத்தை ஓதுவதையே வழிபாடாகக் கொண்டு போற்றவல்லவர் வானோர்களோடு பொருந்தி விளங்குவர். கேடு முதலியன இல்லாதவர் ஆவர்.
                                             திருச்சிற்றம்பலம்

3. 044    திருக்கழிப்பாலை           பண் - கௌசிகம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
வெந்த குங்கி லியப்புகை விம்மவே
கந்தம் நின்றுஉல வுங்கழிப் பாலையார்
அந்த மும்அள வும்அறி யாததுஓர்
சந்த மால்அவர் மேவிய சாந்தமே.

         பொழிப்புரை :நெருப்பிலிடப்பட்ட குங்கிலியத்தின் புகைப் பெருக்கால் நறுமணம் கமழும் திருக்கழிப்பாலையில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் அழிவில்லாதவர் . இன்ன தன்மையர் என்று அளந்தறிய முடியாதவர் . அப்பெருமானின் சாந்தநிலையும் அளக்கொணாத தன்மையுடையதாகும் .


பாடல் எண் : 2
வான் இலங்க விளங்கும் இளம்பிறை
தான் அலங்கல் உகந்த தலைவனார்,
கான் இலங்க வருங்கழிப் பாலையார்,
மான் நலம்மட நோக்குஉடை யாளொடே.

         பொழிப்புரை : வானம் பிரகாசிக்க விளங்கும் இளம்பிறைச் சந்திரனை மாலைபோல் விரும்பி அணிந்த தலைவரான சிவபெருமான் , கடற்கரைச் சோலை விளங்கும் திருக்கழிப்பாலையில் மான் போன்ற பார்வையுடைய உமாதேவியாரோடு வீற்றிருந்தருளுவார் .


பாடல் எண் : 3
கொடிகொள் ஏற்றினர், கூற்றை உதைத்தனர்,
பொடிகொள் மார்பினில் பூண்டதொர் ஆமையர்,
கடிகொள் பூம்பொழில் சூழ்கழிப் பாலைஉள்
அடிகள் செய்வன ஆர்க்குஅறிவு ஒண்ணுமே.

         பொழிப்புரை :இறைவர் எருதுக் கொடியுடையவர் . காலனைக் காலால் உதைத்தவர் . திருநீறு அணிந்துள்ள மார்பில் ஆமையின் ஓட்டினை ஆபரணமாக அணிந்தவர் . நறுமணம் கமழும் பூஞ் சோலைகள் சூழ்ந்த திருக்கழிப்பாலையில் வீற்றிருந்தருளும் அப்பெருமானின் செயல்களை யார்தான் அறிந்துகொள்ளமுடியும் ? ஒருவராலும் முடியாது .


பாடல் எண் : 4
பண் நலம்பட வண்டுஅறை கொன்றையின்
தண் அலங்கல் உகந்த தலைவனார்,
கண் நலம்கவ ருங்கழிப் பாலைஉள்
அண்ணல் எம்கட வுள்அவன் அல்லனே.

         பொழிப்புரை :பூக்களிலுள்ள தேனை உண்டதால் வண்டுகள் பண்ணிசைக்கக் குளிர்ச்சி பொருந்திய கொன்றைமாலையை விரும்பி அணிகின்ற தலைவரான சிவபெருமான் கண்ணைக் கவரும் பேரழகினையுடைய திருக்கழிப்பாலையில் வீற்றிருக்கும் அண்ணலாவார் . அவரே எம் கடவுள் அல்லரே ?


பாடல் எண் : 5
ஏரின் ஆர்உல கத்துஇமை யோரொடும்
பாரி னார்உட னேபர வப்படும்
காரின் ஆர்பொழில் சூழ்கழிப் பாலை,எம்
சீரி னார்கழ லேசிந்தை செய்ம்மினே.

         பொழிப்புரை : எழுச்சி மிகுந்த விண்ணுலகத்தவராகிய தேவர்களோடு, மண்ணுலக மக்களாலும் சேர்ந்து தொழப்படுகின்றவனும், மேகங்கள் தவழும் சோலைகள் சூழ்ந்த திருக்கழிப்பாலையில் வீற்றிருந்தருளும் சிறப்புடையவனுமாகிய சிவபெருமானின் திருவடிகளையே சிந்தை செய்யுங்கள் .


பாடல் எண் : 6
துள்ளு மான்மறி அங்கையி லேந்தி,ஊர்
கொள்வ னார்இடு வெண்தலை யில்பலி,
கள்வ னார்உறை யுங்கழிப் பாலையை
உள்ளு வார்வினை ஆயின ஓயுமே.

         பொழிப்புரை : துள்ளுகின்ற இளமையான மானை , அழகிய கையில் ஏந்தி , ஊர்தோறும் திரிந்து பிச்சை ஏற்கின்ற கள்வனாராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கழிப்பாலையை நினைந்து ஏத்த வினையாவும் நீங்கும் .


பாடல் எண் : 7
மண்ணின் ஆர்மலி செல்வமும், வானமும்
எண்ணி, நீர்இனிது ஏத்துமின், பாகமும்
பெண்ணி னார்,பிறை நெற்றியொடு உற்றமுக்
கண்ணி னார்உறை யுங்கழிப் பாலையே.

         பொழிப்புரை :மண்ணுலகில் பொருந்திய மிக்க செல்வங்களையும் , வானுலகில் மறுமையில் பெறக்கூடிய செல்வத்தையும் தருபவன் இவனே என்பதை மனத்தில் எண்ணி, தன் திருமேனியின் ஒரு பாகமாக உமாதேவியைக் கொண்டுள்ளவனும் , பிறைச் சந்திரனைச் சடைமுடியில் அணிந்தவனும் , முக்கண்ணனுமான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கழிப்பாலையை இனிதே போற்றி நீங்கள் வணங்குவீர்களாக!


பாடல் எண் : 8
இலங்கை மன்னனை ஈர்ஐந்து இரட்டிதோள்
துலங்க ஊன்றிய தூமழு வாளினார்,
கலங்கள் வந்துஉல வுங்கழிப் பாலையை
வலங்கொள் வார்வினை ஆயின மாயுமே.

         பொழிப்புரை : இலங்கை மன்னனான இராவணனின் இருபது தோள்களும் நொறுங்கும்படி கயிலைமலையில் தன்காற்பெருவிரலை ஊன்றிய , தூய்மையான மழுவாகிய படைக்கலத்தை உடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற , மரக்கலங்கள் வந்து உலவும் திருக்கழிப்பாலையை வலமாக வருபவர்களுக்கு வினைகள் யாவும் அழிந்துவிடும்

பாடல் எண் : 9
ஆட்சி யால்,அல ரானொடு மாலுமாய்த்
தாட்சி யால்அறி யாது தளர்ந்தனர்,
காட்சி யால்அறி யான்கழிப் பாலையை
மாட்சி யால்தொழு வார்வினை மாயுமே.

         பொழிப்புரை :தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும் , திருமாலும் தாங்கள் செய்கின்ற படைத்தல் , காத்தல் ஆகிய தொழில்களின் ஆளுமையால் ஏற்பட்ட செருக்குக் காரணமாக இறைவனுடைய திருமுடியையும் , திருவடியையும் அறிய முற்பட்டு , தமது தாழ்ச்சியால் அவற்றை அறியமுடியாது தளர்ச்சியடைந்தனர் . நூலறிவாலும் , ஆன்ம அறிவாலும் அறியப்படாதவனான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கழிப்பாலையை அதன் மாட்சிமை உணர்ந்து தொழுவாருடைய வினைகள் யாவும் மாயும் .


பாடல் எண் : 10
செய்ய நுண்துவர் ஆடையி னாரொடு
மெய்யின் மாசு பிறக்கிய வீறுஇலாக்
கையர் கேண்மை எனோ, கழிப் பாலைஎம்
ஐயன் சேவடியே அடைந்து உய்ம்மினே.

         பொழிப்புரை :சிவந்த மெல்லிய மஞ்சட்காவி உடைகளை உடுத்தும் புத்தர்களோடும் , அழுக்கு உடம்பை உடைய பெருமையற்ற கீழ்மக்களாகிய சமணர்களோடும் நட்பு உங்கட்கு ஏனோ ? திருக்கழிப் பாலையில் வீற்றிருந்தருளும் எம் தலைவராகிய சிவபெருமானுடைய சிவந்த திருவடிகளையே சரணாக அடைந்து உய்தி பெறுங்கள் .


பாடல் எண் : 11
அந்தண் காழி அருமறை ஞானசம்
பந்தன், பாய்புனல் சூழ்கழிப் பாலையைச்
சிந்தை யால்சொன்ன செந்தமிழ் வல்லவர்
முந்தி வான்உலகு ஆல்தல் முறைமையே.

         பொழிப்புரை : அழகிய , குளிர்ச்சி மிகுந்த சீகாழியில் அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தன் , பாய்கின்ற நீர் சூழ்ந்த திருக்கழிப் பாலையைப் போற்றிச் சிவ சிந்தையோடு சொன்ன செந்தமிழாகிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் எல்லோரும் முன்னதாக வானுலகத்தை ஆளுதற்கு உரியவராவர்.
                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------

திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 172
மேவிய பணிகள் செய்து
         விளங்குநாள், வேட்க ளத்துச்
சேவுயர் கொடியார் தம்மைச்
         சென்றுமுன் வணங்கிப் பாடி,
காவிஅம் கண்டர் மன்னும்
         திருக்கழிப் பாலை தன்னில்,
நாவினுக்கு அரசர் சென்று
         நண்ணினார் மண்ணோர் வாழ.

         பொழிப்புரை : திருநாவுக்கரசர் இவ்வாறு தமக்குப் பொருத்தமான பணிகளைச் செய்து வந்த நாள்களில், `திருவேட்களத்தில்` எழுந்தருளியிருப்பவரும், உயரிய ஆனேற்றுக் கொடியை உடையவருமான இறைவரைத் திருமுன் சென்று வணங்கிப்பாடி, நீலமலர் போன்ற நிறமுடைய, அழகிய கழுத்தினையுடைய பெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கழிப்பாலைக்கு, மண்ணுலகத்தவர் வாழும் பொருட்டுச் சென்று அடைந்தார்.


பாடல் எண் : 173
சினவிடைஏ றுஉகைத்துஏறும் மணவாள
         நம்பிகழல் சென்று தாழ்ந்து,
"வனபவள வாய்திறந்து வானவர்க்கும்
         தானவனே என்கின் றாள்"என்று
அனையதிருப் பதிகமுடன் அன்புஉறுவண்
         தமிழ்பாடி, அங்கு வைகி,
நினைவுஅரியார் தமைப்போற்றி, நீடுதிருப்
         புலியூரை நினைந்து மீள்வார்.

         பொழிப்புரை : சினத்தையுடைய ஆனேற்றை ஊர்கின்ற மணக்கோலத்துடன் வீற்றிருக்கும் இறைவரின் திருவடிகளை வணங்கி, அழகிய பவளம் போன்ற வாயைத் திறந்து வானவர்களுக்கும் தானவன் ஆகியவரே என்று கூறுகின்றார்` என்று அத்தன்மையுடைய திருப்பதிகத்துடனே, அன்பு பொருந்திய வளம்மிக்க தமிழ் மாலைகளைப் பாடி அப்பதியில் தங்கி, நினைதற்கரிய சிவபெருமானைப் போற்றிச் செல்வம் நிலைபெறும் புலியூரை நினைந்து திரும்புவராகி.

         குறிப்புரை : இதுபொழுது அருளிய பதிகங்களில் முன்னையது, `வனபவள வாய்திறந்து வானவர்க்கும் தானவனே என்கின்றாளால்`(தி.4 ப.6) எனத்தொடங்கும் காந்தாரப் பண்ணிலமைந்த பதிகமாகும். இது முதலாக அன்புறு வண்தமிழ் மாலை பாடி, எனவே பலபதிகங்கள் பாடியிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

         இன்று கிடைத்துள்ள பதிகங்கள், இத்திருப்பதிகத்தோடு (1) ஐந்தாம்.  அவை

(2) வண்ணமும் வடிவும் - திருக்குறுந்தொகை (தி.5 ப.40).
(3) நங்கையைப் பாகம் - திருநேரிசை (தி.4 ப.30).
(4) நெய்தல் குருகு - திருவிருத்தம் (தி.6 ப.106).
(5) ஊன் உடுத்தி - திருத்தாண்டகம் (தி.6 ப.12).



திருநாவுக்கரசர்  திருப்பதிகங்கள்


4. 006    திருக்கழிப்பாலை                பண் - காந்தாரம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
வனபவள வாய்திறந்து வானவர்க்கும்
         தானவனே என்கின் றாளால்,
சினபவளத் திண்தோள்மேல் சேர்ந்துஇலங்கு
         வெண்ணீற்றன் என்கின் றாளால்,
அனபவள மேகலையொடு அப்பாலைக்கு
         அப்பாலான் என்கின் றாளால்,
கனபவளம் சிந்தும் கழிப்பாலைச்
         சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

         பொழிப்புரை : அழகிய பவளம் போன்ற வாயைத் திறந்து தேவர்களுக்கும் அருள் வழங்குகின்றவனே என்கின்றாள் . சிவந்த பவளம் போன்ற திண்ணிய தோள்களின்மேல் சேர்ந்து விளங்கும் வெள்ளிய திருநீறு அணிந்தவனே என்கின்றாள் . அன்னம் போன்ற நடையினளாய்ப் பவளத்தாலாகிய மேகலையை அணிந்த பார்வதியோடு சுத்தாவத்தைகளுள் துரியத்துக்கு அப்பாற்பட்ட துரியாதீதத்தில் உள்ளவன் என்கின்றாள் . பெரிய பவளங்களைக் கடல் கரையில் சேர்க்கும் திருக்கழிப்பாலையில் உள்ள எம்பெருமானை என்மகள் தரிசித்தாளோ ?


பாடல் எண் : 2
வண்டுஉலவு கொன்றை வளர்புன்
         சடையானே என்கின் றாளால்,
விண்டுஅலர்ந்து நாறுவதொர் வெள்எருக்க
         நாள்மலர்உண்டு என்கின் றாளால்,
உண்டுஅயலே தோன்றுவதொர் உத்தரியப்
         பட்டுஉடையன் என்கின் றாளால்,
கண்டுஅயலே தோன்றும் கழிப்பாலைச்
         சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

         பொழிப்புரை :வண்டுகள் உலவும் கொன்றைப் பூக்கள் தங்கிய செந்நிறச் சடையனே ! இதழ் விரிந்து நறுமணம் கமழும் புதிய வெள்ளெருக்க மலரும் அச்சடையில் உள்ளது . பக்கத்தில் காட்சி வழங்கும் மேலாடையாகப் பட்டினை அவன் அணிந்திருத்தலும் உண்டு என்று கூறுகின்ற என் பெண் கழிமுள்ளி கடற்கரையருகே வளருகின்ற கழிப்பாலைப் பெருமானைக் கண்டாளோ ?

  
பாடல் எண் : 3
பிறந்துஇளைய திங்கள்எம் பெம்மான்
         முடிமேலது என்கின் றாளால்,
நிறம்கிளரும் குங்குமத்தின் மேனி
         அவன்நிறமே என்கின் றாளால்,
மறம்கிளர்வேல் கண்ணாள் மணிசேர்
         மிடற்றவனே என்கின் றாளால்,
கறங்குஓத மல்கும் கழிப்பாலைச்
         சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

         பொழிப்புரை :இளையபிறைச் சந்திரன் எம்பெருமான் முடிமேல் உள்ளது . அவன் திருமேனியின் நிறம் ஒளிவீசும் குங்குமத்தின் நிறமே . வீரத்தை வெளிப்படுத்தும் வேல் போன்ற கண்களையுடைய பார்வதிதேவியின் கண்மணிபோன்ற நீலகண்டன் என்று கூறுகின்ற என் பெண் ஒலிக்கின்ற கடல் வெள்ளம் மிகுகின்ற கழிப்பாலையை உகந்தருளியிருக்கும் பெருமானைத் தரிசித்தாளோ ?


பாடல் எண் : 4
இரும்புஆர்ந்த சூலத்தன், ஏந்தியொர்
         வெண்மழுவன் என்கின் றாளால்,
சுரும்புஆர் மலர்க்கொன்றைச் சுண்ணவெண்
         நீற்றவனே என்கின் றாளால்,
பெரும்பாலல் ஆகியொர் பிஞ்ஞக
         வேடத்தன் என்கின் றாளால்,
கரும்பானல் பூக்கும் கழிப்பாலைச்
         சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

         பொழிப்புரை :இரும்பினாலாய சூலமும் மழுப்படையும் ஏந்தியவன் , வண்டுகள் பொருந்திய கொன்றை மலரைச் சூடித் திருநீற்றை அணிந்தவன் . பெரிய இடப்பகுதியைப் பார்வதி பாகமாகக் கொண்டு அப்பகுதியில் விளங்கும் தலைக்கோலத்தை உடையவன் என்று கூறுகின்ற என்பெண் கருங்குவளை மலர்கள் பூக்கும் கழிப்பாலைப் பெருமானைத் தரிசித்தாளோ ?


பாடல் எண் : 5
பழிஇலான் புகழ்உடையன் பால்நீற்றன்
         ஆன்ஏற்றன் என்கின் றாளால்,
விழிஉலாம் பெருந்தடங்கண் இரண்டுஅல்ல
         மூன்றுஉளவே என்கின் றாளால்,
சுழிஉலாம் வருகங்கை தோய்ந்த
         சடையவனே என்கின் றாளால்,
கழிஉலாம் சூழ்ந்த கழிப்பாலைச்
         சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

         பொழிப்புரை : எம்பெருமான் பழியில்லாதவன் , புகழுடையவன் , பால்போன்ற நீறு அணிந்தவன் , காளை வாகனத்தை உடையவன் , அவனுக்கு விழிகளாக அமைந்தவை இரண்டல்ல , மூன்று . அவன் நீர்ச் சுழிகளோடு பரவும் கங்கை வந்து தங்கிய சடைமுடியை உடையவன் என்று கூறுகின்ற என்பெண் , எங்கும் பரவி ஓடுகின்ற உப்பங்கழிகளால் சூழப்பட்ட திருக்கழிப்பாலைப் பெருமானைத் தரிசித்தாளோ ?


பாடல் எண் : 6
பண்ஆர்ந்த வீணை பயின்ற
         விரலவனே என்கின் றாளால்,
எண்ணார் புரம்எரித்த எந்தை
         பெருமானே என்கின் றாளால்,
பண்ஆர் முழவுஅதிரப் பாடலொடு
         ஆடலனே என்கின் றாளால்,
கண்ஆர் பூஞ்சோலைக் கழிப்பாலைச்
         சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

         பொழிப்புரை :பண்கள் நிறைந்து ஒலித்தற்கு இடமான கருவியாகிய வீணையை ஒலியெழுப்பும் விரல்களை உடையவனே ! பகைவருடைய மும்மதில்களையும் தீக்கு இரையாக்கிய எம் தந்தையாகிய பெருமானே ! பண்களுக்கு ஏற்ப முழவு என்ற தோற்கருவி ஒலிக்கப் பாடிக் கொண்டு கூத்து நிகழ்த்துபவனே ! என்று கூறுகின்ற என் பெண் கண்ணுக்கு நிறைவைத் தரும் பூக்கள் நிறைந்த சோலைகளையுடைய திருக்கழிப்பாலை இறைவனைத் தரிசித்தாளோ ?


பாடல் எண் : 7
முதிரும் சடைமுடிமேல் மூழ்கும்
         இளநாகம் என்கின் றாளால்,
அதுகண்டு அதன்அருகே தோன்றும்
         இளமதியம் என்கின் றாளால்,
சதுர்வெண் பளிக்குக் குழைகாதின்
         மின்னிடுமே என்கின் றாளால்,
கதிர்முத்தம் சிந்தும் கழிப்பாலைச்
         சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

         பொழிப்புரை :நன்கு செறிந்து நிறைந்த சடைமுடிமேல் இளநாகம் மறைந்து கிடக்கிறது . அதனைக் கண்டு அஃது ஊறுதாராது என்ற கருத்தோடு அதன் அருகிலே பிறை காட்சி வழங்குகின்றது . வேலைப்பாடு அமைந்த வெண்ணிறத்ததாகிய பளிங்கினாலாகிய காதணி காதில் இருந்து கொண்டு ஒளி வீசுகின்றது என்று கூறுகின்ற என்பெண் ஒளி வீசுகின்ற முத்துக்களைக் கடல் அலை கரைக்கண் செலுத்தும் திருக்கழிப்பாலைப் பெருமானைத் தரிசித்தாளோ ?


பாடல் எண் : 8
ஓர்ஓதம் ஓதி, உலகம்
         பலிதிரிவான் என்கின் றாளால்,
நீர்ஓதம் ஏற நிமிர்புன்
         சடையானே என்கின் றாளால்,
பார்ஓத மேனிப் பவளம்
         அவன்நிறமே என்கின் றாளால்,
கார்ஓதம் மல்கும் கழிப்பாலைச்
         சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

         பொழிப்புரை :ஓர்ந்து கொள்ளத்தக்க வேதங்களை ஓதிக்கொண்டு உலகம் முழுதும் பிச்சை ஏற்றுத் திரிகின்றவனே! கங்கை நீர்வெள்ளம் உயர அதற்கேற்ப உயர்ந்து தோன்றும் செந்நிறச் சடையவனே, உலகைச் சூழ்ந்த கடலில் உள்ள செந்நிறப் பவளம் எம்பெருமானுடைய திருமேனியின் நிறமே என்று கூறுகின்ற என்பெண் , கரிய கடல்வெள்ளம் மிகும் திருக்கழிப்பாலையின் பெருமானைத் தரிசித்தாளோ ?


பாடல் எண் : 9
வான்உலாம் திங்கள் வளர்புன்
         சடையானே என்கின் றாளால்,
ஊன்உலாம் வெண்தலைகொண்டு
         ஊர்ஊர் பலிதிரிவான் என்கின்றாளால்
தேன்உலாம் கொன்றை திளைக்கும்
         திருமார்பன் என்கின் றாளால்,
கான்உலாம் சூழ்ந்த கழிப்பாலைச்
         சேர்வானைக் கண்டாள் கொல்லோ

         பொழிப்புரை :வானத்தில் உலவ வேண்டிய பிறைதங்கிய செஞ் சடையனே ! புலால் நாற்றம் கமழும் வெண்ணிற மண்டையோட்டைக் கையில் கொண்டு ஊர்ஊராகப் பிச்சைக்குத் திரிகின்றவனே ! தேன் என்ற வண்டினங்கள் சுற்றும் கொன்றைப் பூக்கள் சிறந்து விளங்கும் திருமார்பினனே ! என்று எம்பெருமானைப் பற்றிக்கூறும் என்மகள் , எங்கும் பரவுகின்ற நறுமணம் சூழ்ந்த திருக்கழிப்பாலையிலுள்ள பெருமானைத் தரிசித்தாளோ ?


பாடல் எண் : 10
அடர்ப்புஅரிய இராவணனை அருவரைக்கீழ்
         அடர்த்தவனே என்கின் றாளால்,
சுடர்ப்பெரிய திருமேனிச் சுண்ணவெண்
         நீற்றவனே என்கின் றாளால்,
மடல்பெரிய ஆலின்கீழ் அறம்நால்வர்க்கு
         அன்றுஉரைத்தான் என்கின் றாளால்,
கடற்கருவி சூழ்ந்த கழிப்பாலைச்
         சேர்வானைக் கண்டாள் கொல்லோ

         பொழிப்புரை : துன்புறுத்தி வெல்லுவதற்கரிய இராவணனைக் கயிலைமலையின்கீழ் வருத்தியவனே ! ஒளிவீசும் பெருமையை உடைய திருமேனியில் நீறு பூசியவனே ! பெரிய இலைகளை உடைய கல்லால மரத்தின் கீழிருந்து சனகர் முதலிய முனிவர் நால்வருக்கு ஒரு காலத்தில் அறத்தை உபதேசித்தவனே என்று கூறுகின்ற என்பெண் கடலின் தொகுதிகளாகிய உப்பங்கழிகள் சூழ்ந்த திருக்கழிப் பாலையின் பெருமானைத் தரிசித்தாளோ ?
                                             திருச்சிற்றம்பலம்


5. 040    திருக்கழிப்பாலை        திருக்குறுந்தொகை
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
வண்ண மும்வடி வுஞ்சென்று கண்டுஇலள்,
எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்துஇலள்,
கண் உலாம்பொழில் சூழ்கழிப் பாலை,எம்
அண்ணலே அறிவான் இவள் தன்மையே.

         பொழிப்புரை : கழிப்பாலை இறைவனின் நிறம் வடிவம் முதலியவற்றைச்சென்று நேரே கண்டிலள். அவன் திருநாமங்களை எண்ணினாளில்லை. காணாமலே காதல்கொண்டு பிதற்றும் இவள் தன்மையைப் பொழில் சூழ்ந்த கழிப்பாலை இறைவனே அறிவான்.


பாடல் எண் : 2
மருந்து வானவர் உய்யநஞ்சு உண்டுஉகந்து
இருந்த வன்,கழிப் பாலையுள் எம்பிரான்,
திருந்து சேவடி சிந்தையுள் வைத்துஇவள்
பரிந்து உரைக்கிலும் என்சொல் பழிக்குமே.

         பொழிப்புரை : தேவர்கள் அமிர்தத்தை உண்டு உய்யத் தான் நஞ்சினை உண்டு உகந்து இருப்பவனும் வலிய கழிப்பாலையில் வீற்றிருக்கும் எம்பெருமானுமாகிய இறைவனின் சேவடிகளைச் சிந்தையுள் வைத்து யான் பரிந்து உரைத்தாலும், இவள் என் சொல்லைப் பழிக்கின்றாள்.


பாடல் எண் : 3
மழலை தான்வரச் சொல்தெரி கின்றிலள்,
குழலின் நேர்மொழி கூறிய கேண்மினோ,
அழக னே,கழிப் பாலைஎம் அண்ணலே,
இகழ்வ தோஎனை, ஏன்றுகொள் என்னுமே.

         பொழிப்புரை : குழல் இசை போன்ற மொழியினை உடைய இவள், மழலைச்சொல்லே கிளக்கும் இயல்பினள்; தெரியுமாறு சொற்களைப்பேசா இயல்பினளாய்க் கூறிய மொழிகளைக் கேட்பீர்களாக; "அழகனே! கழிப்பாலையில் வீற்றிருக்கும் எம் தலைவனே! என்னை இகழ்வதோ? ஏற்றுக்கொள்" என்கின்றாள்.


பாடல் எண் : 4
செய்ய மேனிவெண் நீறுஅணி வான்தனை
மையல் ஆகி, மிதக்கிலள் ஆரையும்,
கைகொள் வெண்மழுவன் கழிப்பாலை,எம்
ஐயனே அறிவான் இவள் தன்மையே.

         பொழிப்புரை : சிவந்த மேனியும், அதில் வெண்ணீறு அணியும் கோலமும் உடைய சிவபெருமானின்மேல் மையல் உடையவளாகி, இவள் ஆரையும் மதிக்கிலள்; கையிற் பிடித்த வெண்மழுவினனும், கழிப்பாலையில் உறைவானும் ஆகிய இறைவனே இவள் தன்மையை அறிவான்.


பாடல் எண் : 5
கருத்த னை,கழிப் பாலையுள் மேவிய
ஒருத்த னை, உமை யாள்ஒரு பங்கனை,
அருத்தி யால்சென்று கண்டிட வேண்டும்என்று
ஒருத்தி ஆர்உளம் ஊசல் அதுஆடுமே.

         பொழிப்புரை : ஒருத்தியின் உள்ளம், கருத்தின்கண் இருப்பவனும், கழிப்பாலையுள் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்றவனும், உமையாளை ஒருபங்கில் உடையவனும் ஆகிய பெருமானை விருப்பத்தாற் சென்று கண்டிடவேண்டும் என்று ஊசலாடுகிறது.


பாடல் எண் : 6
கங்கை யைச்சடை வைத்து மலைமகள்
நங்கை யைஉட னேவைத்த நாதனார்,
திங்கள் சூடித் திருக்கழிப் பாலையான்
இங்கு வந்திடும் என்றுஇறு மாக்குமே.

         பொழிப்புரை : இப்பெண், சடையிற் கங்கையை வைத்து மலை மகளாகிய நங்கையைத் தன்னொரு பங்கில் வைத்த இறைவனாகிய திருக்கழிப்பாலைப் பெருமான் இளம்பிறை சூடி இங்குத் திருவுலாப் போதற்கு எழுந்தருள்வான் என்று இறுமாப்பு அடைகின்றாள்.


பாடல் எண் : 7
ஐய னே, அழ கே, அனல் ஏந்திய
கைய னே,கறை சேர்தரு கண்டனே,
மைஉலாம் பொழில் சூழ்கழிப் பாலைஎம்
ஐய னே, விதியே, அருள் என்னுமே.

         பொழிப்புரை : இவள், "தலைவனே! அழகனே! தழலை ஏந்திய கரத்தவனே! திருநீலகண்டனே! மேகங்கள் உலாவுகின்ற பொழில் சூழ்ந்த கழிப்பாலையில் வீற்றிருக்கும் எம் அழகியவனே! நன்மை தீமைகளை விதிப்பவனே! அருள்வாயாக!" என்று கூறுகின்றாள்.


பாடல் எண் : 8
பத்தர் கட்குஅமுது ஆய பரத்தினை,
முத்த னை,முடிவு ஒன்றுஇலா மூர்த்தியை,
அத்தனை, அணி ஆர்கழிப் பாலை,எம்
சித்த னைச்சென்று சேருமா செப்புமே.

         பொழிப்புரை : இவள், அன்பர்கட்கு அமுதாயுள்ள மேலானவனை, முத்தியை அளிப்பவனை, முடிவு ஒன்று இல்லாத மூர்த்தியை, தலைவனை, அழகு நிரம்பிய கழிப்பாலையில் வீற்றிருப்பவனாகிய என் சித்தத்தவனைச் சென்று சேருமாறு ஒரு நெறி எனக்குச் செப்புவீர்களாக!" என்கின்றாள்.

பாடல் எண் : 9
* * * * * * * * *

பாடல் எண் : 10
பொன்செய் மாமுடி வாள்அரக் கன்தலை
அஞ்சு நான்கும்ஒன் றும்இறுத் தான்அவன்,
என்செ யான்,கழிப் பாலையுள் எம்பிரான்
துஞ்சும் போதும் துணைஎனல் ஆகுமே.

         பொழிப்புரை : பொன்னாற் செய்யப்பட்ட முடியணிந்தவனும், வாளுடையவனுமாகிய இராவணன் தலைகள் பத்தும் இறுத்தவன்! கழிப்பாலையுள் எம் தலைவன் என்ன செய்யாதவன்? ஆதலின் அப்பெருமானே தூங்கும்போதும் நமக்குத் துணை எனற்குப் பொருந்தியவன் ஆவன்.

                                             திருச்சிற்றம்பலம்



4. 030    திருக்கழிப்பாலை                திருநேரிசை
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
நங்கையைப் பாகம் வைத்தார்,
         ஞானத்தை நவில வைத்தார்,
அங்கையில் அனலும் வைத்தார்,
         ஆனையின் உரிவை வைத்தார்,
தம்கையின் யாழும் வைத்தார்,
         தாமரை மலரும் வைத்தார்,
கங்கையைச் சடையுள் வைத்தார்,
         கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

         பொழிப்புரை : கழிப்பாலையிற் கடற்கரைத் தலைவராக ( சேர்ப்பன் ) உள்ள பெருமான் பார்வதிபாகராய் , சிவஞானத்தை வழங்குமாறு உபதேசிப்பவராய் , உள்ளங்கையில் தீயை ஏந்தியவராய் , யானைத் தோலைப் போர்த்தவராய் , ஒருகையில் யாழை ஏந்தியவராய் , அந்தணர் கோலத்திற்கேற்பத் தாமரைப்பூ அணிந்தவராய் , கங்கையைச் சடையில் வைத்தவராய் உள்ளார் .


பாடல் எண் : 2
விண்ணினை விரும்ப வைத்தார்,
         வேள்வியை வேட்க வைத்தார்,
பண்ணினைப் பாட வைத்தார்,
         பத்தர்கள் பயில வைத்தார்,
மண்ணினைத் தாவ நீண்ட
         மாலினுக்கு அருளும் வைத்தார்,
கண்ணினை நெற்றி வைத்தார்,
         கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

         பொழிப்புரை : கழிப்பாலைச் சேர்ப்பனார் அடியவர்கள் வீடு பேற்றை விரும்புமாறும், வேள்விகளை நிகழ்த்துமாறும் , பண்களைப் பாடுமாறும் , திருவடி வழிபாட்டில் பயிற்சி உறுமாறும் செய்தவர் . நெற்றியில் கண்ணுடைய அப்பெருமான் உலகங்களை அளக்குமாறு நீண்ட வடிவெடுத்த திருமாலுக்கும் அருள்பாலித்தவர் .


பாடல் எண் : 3
வாமனை வணங்க வைத்தார்,
         வாயினை வாழ்த்த வைத்தார்,
சோமனைச் சடைமேல் வைத்தார்,
         சோதியுள் சோதி வைத்தார்,
ஆமன்நெய் ஆட வைத்தார்,
         அன்புஎனும் பாசம் வைத்தார்,
காமனைக் காய்ந்த கண்ணார்,
         கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

         பொழிப்புரை : கழிப்பாலைச் சேர்ப்பனார் தம் சத்தியாகிய பெருமாட்டியை எல்லோரும் வணங்குமாறு செய்தவர் . எல்லோர்க்கும் வாழ்த்துவதற்காம் வாயை அருளியவர் . பிறையைச் சடையில் சூடி அடியார்களுடைய ஆன்ம சொரூபமான ஒளியில் தம் ஞான ஒளியை வைத்து , பசு நெய்யால் தம்மை அபிடேகம் செய்யும் வாய்ப்பினை அடியர்க்கு நல்கி , அன்பென்னும் தொடர்பு சாதனத்தையும் ஆக்கி வைத்தார். அத்துடன் மன்மதனை வெகுண்டு சாம்பலாக்கிய நெற்றிக் கண்ணராய் உள்ளார் .


பாடல் எண் : 4
அரியன அங்கம் வேதம்
         அந்தணர்க்கு அருளும் வைத்தார்
பெரியன புரங்கள் மூன்றும்
         பேரழல் உண்ண வைத்தார்
பரியதீ வண்ணர் ஆகிப்
         பவளம்போல் நிறத்தை வைத்தார்,
கரியதுஓர் கண்டம் வைத்தார்,
         கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

         பொழிப்புரை : அந்தணர்களுக்கு வேத வேதாங்கக் கல்வியும் சீவ காருணியமும் வழங்கிய கழிப்பாலைச் சேர்ப்பனார் பெரிய மும்மதில்களும் நெருப்பு உண்ணச் செய்து , பெரிய தீயைப்போல ஞானஒளி வீசுபவராய் , பவளம் போன்ற செந்நிறத்தினராய் நீலகண்டராய் உள்ளார் .


பாடல் எண் : 5
கூர்இருள் கிழிய நின்ற
         கொடுமழுக் கையில் வைத்தார்,
பேர்இருள் கழிய மல்கு
         பிறை,புனல் சடையில் வைத்தார்,
ஆர்இருள் அண்டம் வைத்தார்,
         அறுவகைச் சமயம் வைத்தார்,
கார்இருள் கண்டம் வைத்தார்,
         கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

         பொழிப்புரை : கழிப்பாலைச் சேர்ப்பனார் இருட்டை விரட்டும் கொடிய மழுவினைக் கையில் கொண்டு , பெரிய இருள் நீங்க ஒளி வீசும் பிறையையும் கங்கையையும் சடையில் வைத்து , எல்லா உலகங்களையும் தம் மாயையாகிய இருளுக்குள் வைத்து அறுவகைச் சமயங்களைப் படைத்து , நீலகண்டராய் விளங்குகிறார் .


பாடல் எண் : 6
உள்தங்கு சிந்தை வைத்தார்,
         உள்குவார்க்கு உள்ளம் வைத்தார்,
விண்தங்கு வேள்வி வைத்தார்,
         வெந்துயர் தீர வைத்தார்,
நள்தங்கு நடமும் வைத்தார்,
         ஞானமும் நாவில் வைத்தார்,
கட்டங்கம் தோள்மேல் வைத்தார்,
         கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

         பொழிப்புரை : கழிப்பாலைச் சேர்ப்பனார் தம்மையே தியானிப்பவருக்கு அதற்கு ஏற்ற அலைவில்லாத மனத்தை அருளி அதனைத் தாம் உள்ளே தங்கும் இருப்பிடமாக வைத்தவர் . தேவர்கள் விரும்பித் தங்கி அவி நுகரும் வேள்விகளையும் அவற்றால் நாட்டில் கொடிய துயர் நீங்குதலையும் அமைத்தவர் . நள்ளிருளில் கூத்தாடும் பெருமான் ஞானத்துக்கு உரிய நூல்களைப் பயிலும் ஆற்றலை நாவில் அமைத்துக் கொடுத்தவர். தம் தோள்மேல் கட்டங்கப் படையைக் கொண்டுள்ளார் .


பாடல் எண் : 7
ஊனப்பேர் ஒழிய வைத்தார்,
         ஓதியே உணர வைத்தார்,
ஞானப்பேர் நவில வைத்தார்,
         ஞானமும் நடுவும் வைத்தார்,
வானப்பேர் ஆறு வைத்தார்,
         வைகுந்தற்கு ஆழி வைத்தார்,
கானப்பேர் காதல் வைத்தார்,
         கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

         பொழிப்புரை : கழிப்பாலைச் சேர்ப்பனார் புலால் மயமான இவ்வுடல் தொடர்பான பெயர்கள் நீங்கத் தம் அடியவர் என்ற பெயரை வழங்கி , ஞானநூல்களை ஓதியே ஞானம் பெறும் வழியை வைத்து , ஞான தேகத்திற்குரிய கடவுளை நினைப்பூட்டும் ஞானப்பெயரையே சொல்லி அழைக்குமாறும் செய்து திருவடி ஞானத்தையும் அந்த ஞானம் தங்குதற்குரிய இதயத்தையும் நல்கி , கங்கையைச் சடையில் வைத்து , திருமாலுக்குச் சக்கரம் நல்கித் திருக்கானப்பேர் என்ற திருத்தலத்தைத் தாம் விரும்பிஉறையும் இடமாகக் கொண்டுள்ளார் .


பாடல் எண் : 8
கொங்கினும் அரும்பு வைத்தார் ,
         கூற்றங்கள் கெடுக்க வைத்தார்,
சங்கினுள் முத்தம் வைத்தார்,
         சாம்பரும் பூச வைத்தார்,
அங்கமும் வேதம் வைத்தார்,
         ஆலமும் உண்டு வைத்தார்,
கங்குலும் பகலும் வைத்தார்,
         கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

         பொழிப்புரை : கழிப்பாலைச் சேர்ப்பனார் அரும்பில் மகரந்தத்தை வைத்தவர் . தீயவார்த்தைகள் பேசுதலைப் போக்க திருமுறை ஓதுதலான நல்ல வழியை வைத்தவர் . சங்கினுள் முத்துக்களை வைத்தவர் . தாம் பூசத் திருநீற்றைப் பொருளாகக் கொண்டவர். உலகம் உய்ய நால்வேதமும் அங்கமும் பரவச் செய்தவர் . உலகம் உய்ய விடம் உண்டவர். மகிழ்வாக உறங்க இரவையும் , செயற்பட்டு உழைக்கப் பகற்பொழுதையும் அமைத்தவர் .


பாடல் எண் : 9
சதுர்முகன் தானும் மாலும்
         தம்மிலே இகலக் கண்டு
எதிர்முகம் இன்றி நின்ற
         எரிஉரு அதனை வைத்தார்,
பிதிர்முகன் காலன் தன்னைக்
         கால்தனில் பிதிரவைத்தார்,
கதிர்முகம் சடையில் வைத்தார்,
         கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

         பொழிப்புரை : கழிப்பாலைச் சேர்ப்பனார் பிரமனும் திருமாலும் தம் இருவருள் பரம்பொருள் யாவர் என்று மாறுபடுதலைக் கண்டு , கண்கூடாக ஆதியும் அந்தமும் காணமுடியாத தீத்தம்பத்தைப் படைத்தார் . கடுமையான முகத்தை உடைய கூற்றுவனைக் காலினால் சிதறவைத்தார் . பிறையைச் சடையில் வைத்தவருமானார் .


பாடல் எண் : 10
மாலினாள் நங்கை அஞ்ச
         மதில்இலங் கைக்கு மன்னன்
வேலினான் வெகுண்டு எடுக்கக்
         காண்டலும் வேத நாவன்
நூலினான் நோக்கி நக்கு
         நொடிப்பது ஓர்அளவில் வீழக்
காலினால் ஊன்றி இட்டார்
         கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

         பொழிப்புரை : மதில்களை உடைய இலங்கைக்கு மன்னனாகிய இராவணன் என்ற, வேல் ஏந்திய வீரன் கோபங்கொண்டு கயிலை மலையைப் பெயர்க்க , அதுகண்டு தம்மிடம் பெருவிருப்புடைய பார்வதி அஞ்ச , அதனைக்கண்ட அளவில் வேதங்களை ஓதுபவனும் பூணூல் அணிந்தவனுமாகிய அவ்விராவணனை மனத்தால் நோக்கி , அவன் ஒரு நொடியில் ஆற்றலிழந்து மலையடியில் விழுமாறு , கால் விரலால் அவனை அழுத்தி நசுக்கிவிட்டவர் கழிப்பாலைச் சேர்ப்பனாரே .

                                             திருச்சிற்றம்பலம்



4. 106   திருக்கழிப்பாலை                 திருவிருத்தம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
நெய்தல் குருகுதன் பிள்ளைஎன்று
         எண்ணி நெருங்கிச்சென்று
கைதை மடல்புல்கு தென்கழிப்
         பாலை அதன்உறைவாய்,
பைதல் பிறையொடு பாம்புஉடன்
         வைத்த பரிசுஅறியோம்,
எய்தப் பெறின், இரங் காதுகண்
         டாய், நம் இறையவனே.

         பொழிப்புரை : நெய்தல் நிலத்திலுள்ள நாரை தன் பார்ப்பு என்று கருதி அணுகி வெண்தாழை மடலைத் தழுவும் அழகிய கழிப்பாலையில் உறைபவனே! இளைய பிறைச் சந்திரனோடு தலையில் பாம்பையும் அருகில் வைத்த திறம் பற்றி யாம் அறியோம். தன் அருகே பிறைவரினும் பிறை அருகே தான் அணுகப்பெறினும் பாம்பு இரக்கமின்றி பிறையை விழுங்கிவிடும் என்பதனை நம் தலைவனாகிய நீ அறிவாய் அல்லையோ ?


பாடல் எண் : 2
பருமா மணியும் பவளமுத் தும்பரந்து உந்திவரை
பொருமால் கரைமேல் திரைகொணர்ந்து எற்றப் பொலிந்து இலங்கும்
கருமா மிடறுஉடைக் கண்டன்எம் மான்கழிப் பாலைஎந்தை
பெருமான் அவன்என்னை ஆள்உடை யான்இப் பெருநிலத்தே.

         பொழிப்புரை : மலையை ஒத்த உயர்ந்த கடற்கரை மீது பெரிய மணி பவளம் முத்து என்பனவற்றைப் பரவிச் செலுத்தி அலைகள் கொண்டு வந்து சேர்ப்பதனால் விளங்கித் தோன்றும் கழிப்பாலை என்ற திருத்தலத்தில் உறையும் எம் தலைவன் , எந்தை பெருமான் ஆகிய நீல கண்டன் இப்பேருலகில் அடியேனை அடிமையாகக் கொண்டவன் ஆவான் .


பாடல் எண் : 3
நாள்பட்டு இருந்துஇன்பம் எய்தல்உற்று இங்கு நமன்தமரால்
கோள்பட்டு ஒழிவதன் முந்துறவே, குளிர் ஆர் தடத்துத்
தாள்பட்ட தாமரைப் பொய்கைஅந் தண்கழிப் பாலை அண்ணற்கு
ஆள்பட்டு ஒழிந்தம் அன் றே,வல்ல மாய்,இவ் அகலிடத்தே.

         பொழிப்புரை : இப்பரந்த உலகில் பல காலம் உயிர்வாழ்ந்து சிற்றின்ப நுகர்ச்சிகளைப் பொருந்தி இயமனுடைய ஏவலரால் கொள்ளப்பட்டு அழிவதன் முன்னம் , குளிர்ந்த நீர் நிலைகளையும், தண்டு நீண்ட தாமரைப் பொய்கைகளையும் உடைய அழகிய குளிர்ந்த கழிப்பாலைப் பெருமானுக்கு அடிமையாகி வல்லமை உடையோமாய் யமபயத்திலிருந்து விடுபட்டோம் .
                                             திருச்சிற்றம்பலம்




6. 012    திருக்கழிப்பாலை        திருத்தாண்டகம்
                           திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
ஊன்உடுத்தி ஒன்பது வாசல் வைத்து,
         ஓள்எலும்பு தூணா உரோமம் மேய்ந்து,
தாம்எடுத்த கூரை தவிரப் போவார்,
         தயக்கம் பலபடைத்தார் தாமரையினார்,
கான்எடுத்து மாமயில்கள் ஆலும் சோலைக்
         கழிப்பாலை மேய கபாலப்பனார்
வான்இடத்தை ஊடுஅறுத்து வல்லைச் செல்லும்
         வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

         பொழிப்புரை :சதைப்பகுதியை வளைத்துச் சுவராகச் செய்து ஒன்பது வாயில்களை அமைத்து வெள்ளிய ஒளியை உடைய எலும்புகளைத் தூணாக அமைத்து மயிரினை மேற்பரப்பித் தாமே படைப்பித்த குடில் நீங்கும்படி தக்காரிடத்து வலியச் சென்று , தாவும் மானைக் கையில் ஏந்திய பெருமான் பல வடிவங்களை உடையவராய் அருள் செய்கின்றார் . தோகைகளைப் பரப்பி மயில்கள் ஆடும் சோலைகளை உடைய திருக்கழிப்பாலைத் தலத்தை உகந்தருளியுள்ள மண்டை யோட்டினை ஏந்திய தலைவராகிய அப்பெருமான் வான் உலகங்களை எல்லாம் கடந்து விரைவாகச் செல்லும் வீடுபேற்றுலகிற்குச் செல்லும் வழியை அமைத்துக் கொடுத்துள்ளார் . இவ்வுடம்பு பெற்றதனாலாய பயன்கொண்டு அவர் வகுத்த வழியிலே செல்வது ஒன்றே நாம் செயற்பாலது . அவர்க்குக் கைம்மாறாக நாம் செயற்பாலது ஒன்றும் இல்லை .


பாடல் எண் : 2
முறைஆர்ந்த மும்மதிலும் பொடியாச் செற்று,
         முன்னுமாய்ப் பின்னுமாய் முக்கண் எந்தை
பிறைஆர்ந்த சடைமுடிமேல் பாம்பு கங்கை
         பிணக்கம் தீர்த்து உடன்வைத்தார், பெரிய நஞ்சுக்
கறைஆர்ந்த மிடற்றுஅடங்கக் கண்ட எந்தை,
         கழிப்பாலை மேய கபாலப் பனார்,
மறைஆர்ந்த வாய்மொழியால் மாய யாக்கை
         வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

         பொழிப்புரை :மதில்களுக்குரிய இலக்கணங்கள் நிரம்பிய மூன்று மதில்களையும் சாம்பலாகுமாறு அழித்த பெருமான் ஏனைய பொருள்கள் தோன்றுவதன் முன்னும் அவை அழிந்தபின்னும் உள்ள முக்கண் தலைவர் . கங்கை தங்கிய சடைமுடியிலே பிறைச்சந்திரனும் பாம்பும் பகைமை நீங்கச் சேர்த்து வைத்தவர் . கொடிய விடக் கறையைக் கழுத்தளவில் தங்கச் செய்தவர் , எம்பெருமானார் . கழிப் பாலை மேவிய அக்கபாலப்பனார் வேதங்களாகவும் ஆகமங்களாகவும் அமைந்த தம் சொற்களால் , இவ்வுடல் அழிய உயிர் செல்லுதற்குரிய வழியை வகுத்தருளியுள்ளார். அவ்வழியிலே நாம் செல்லுவோம்.


பாடல் எண் : 3
நெளிவுஉண்டாக் கருதாதே நிமலன் தன்னை
         நினைமின்கள் நித்தலும், நேரிழையாள் ஆய
ஒளிவண்டுஆர் கருங்குழலி உமையாள் தன்னை
         ஒருபாகத்து அமர்ந்துஅடியார் உள்கி ஏத்தக்
களிவண்டுஆர் கரும்பொழில் சூழ் கண்டல் வேலிக்
         கழிப்பாலை மேய கபாலப் பனார்,
வளிஉண்டார் மாயக் குரம்பை நீங்க
         வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

         பொழிப்புரை :தூயனாகிய அப்பெருமானாரை நெகிழ்ச்சியால் இடையறவு படாமல் நாடோறும் தொடர்ந்து விருப்போடு நினையுங்கள் . சிறந்த அணிகலன்களை உடைய , வண்டுகள் ஒளிந்து தங்கும் கருங்கூந்தலை உடைய உமாதேவியைத் தம் உடம்பில் ஒருபாகமாக விரும்பிக்கொண்டு , அடியார்கள் நினைந்து துதிக்குமாறு , களிப்பை உடைய வண்டுகள் நிறைந்த இருண்ட சோலைகளுக்குத் தாழைவேலியாகச் சூழ்ந்த கழிப்பாலை மேவிய கபாலப்பனார் காற்றை நுகர்தலாலே நிலைத்து நிற்கும் , மாயையின் காரியமாகிய இவ்வுடம்பை இனிக்கொள்ளாது நிலையாக விடுத்தற்குரிய நெறியைக் குறிப்பிட்டுள்ளார் . அந்நெறியிலே நாம் செல்வோம் .

  
பாடல் எண் : 4
பொடிநாறு மேனியர், பூதிப் பையர்,
         புலித்தோலர், பொங்குஅரவர், பூணநூலர்,
அடிநூறு கமலத்தர், ஆரூர் ஆதி,
         ஆன்அஞ்சும் ஆடும் ஆதிரையி னார்தாம்
கடிநாறு பூஞ்சோலை கமழ்ந்து நாறும்
         கழிப்பாலை மேய கபாலப் பனார்
மடிநாறு மேனிஇம் மாயம் நீங்க
         வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

         பொழிப்புரை :திருநீறு விளங்கும் திருமேனியை உடைய பெருமானார் திருநீற்றுப்பையையும் வைத்துள்ளார் . அவர் பூணூல் அணிந்து புலித்தோலை உடுத்துப் பாம்புகளை அணிகலனாகப் பூண்டவர் . ஆதிரை நட்சத்திரத்தை உகந்து கொண்டு திருவாரூரில் உள்ள அவ்வாதி மூர்த்தி பஞ்சகவ்விய அபிடேகத்தை ஏற்றுத் தம் திருவடிகளில் அடியவர்கள் இட்ட பல தாமரைப் பூக்களை உடையவர் . சோலைகள் நறுமணம் வீசும் கழிப்பாலை மேவிய அக் கபாலப்பனார் , இறந்து போகும் இப்பொய்யாய உடல் நீங்க உயிர் நிலையாகத் தங்குதற்குரிய இடத்தை அடைவதற்கு உரிய வழியை வகுத்துக் கொடுத்துள்ளார் . அவ்வழியே நாம் செல்வோம் .


பாடல் எண் : 5
விண்ஆனாய், விண்ணவர்கள் விரும்பி வந்து,
         வேதத்தாய், கீதத்தாய், விரவி எங்கும்
எண்ஆனாய், எழுத்துஆனாய், கடல்ஏழ்ஆனாய்,
         இறைஆனாய், எம்இறையே என்று நிற்கும்
கண்ஆனாய், கார்ஆனாய், பாரும் ஆனாய்,
         கழிப்பாலை உள்உறையும் கபாலப் பனார்
மண்ஆய மாயக் குரம்பை நீங்க
         வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

         பொழிப்புரை :தேவர்கள் விரும்பி வந்து ` தேவருலகம் ஆகிய வனே ! எல்லா இடங்களிலும் பரவி வேதம் ஓதி , கீதம்பாடி , எண் ஆனவனே ! எழுத்தானவனே ! ஏழ்கடலும் ஆனவனே ! எல்லாப் பொருள்களுக்கும் தலைவனே ! எங்கள் தலைவனே ! எங்கள் பற்றுக் கோடே ! மேகங்களும் உலகப் பொருள்களும் ஆயவனே !` என்று போற்றி நிற்கும் கழிப்பாலை மேவிய கபாலப்பனார் இவ்வுலகில் தோன்றிய நிலையாமையை உடைய உடல் நீங்க வழி வைத்தார். அவ்வழி நாம் செல்வோம்.


பாடல் எண் : 6
விண்ணப்ப விச்சா தரர்கள் ஏத்த
         விரிகதிரான் எரிசுடரான் விண்ணும் ஆகிப்
பண்அப்பன், பத்தர் மனத்துள் ஏயும்
         பசுபதி, பாசுபதன், தேச மூர்த்தி,
கண்ணப்பன் கண்அப்பக் கண்டு உகந்தார்,
         கழிப்பாலை மேய கபாலப் பனார்,
வண்ணப் பிணிமாய யாக்கை நீங்க
         வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

         பொழிப்புரை :கழிப்பாலை மேவிய கபாலப்பனார் , வேண்டு கோளை உடைய வித்தியாதரர்கள் துதிக்க , சூரியன் , அக்கினி , விண்ணுலகத்தார் ஆகிய எல்லாப் பொருள்களையும் ஆக்கும் தந்தையார் . அடியார்கள் மனத்துள் பொருந்தும் உயிர்களின் தலைவர் . பாசுபதவேடத்தையுடைய ஒளி வடிவினர் . கண்ணப்ப நாயனார் தம் வலக்கண்ணை இடந்து அப்பிய செயலைக் கண்டு உகந்தவர் . அவர் பவவகையான பிணிகளுக்கு இருப்பிடமாகிய இந்நிலையற்ற உடம்பு நீங்க வழி வகுத்துள்ளார் . அவ்வழியே நாம் செல்வோம் .


பாடல் எண் : 7
பிணம்புல்கு பீறல் குரம்பை மெய்யாப்
         பேதப் படுகின்ற பேதை மீர்காள்,
நிணம்புல்கு சூலத்தர், நீல கண்டர்,
         எண்தோளர், எண்நிறைந்த குணத்தி னாலே
கணம்புல்லன் கருத்துஉகந்தார், காஞ்சி உள்ளார்,
         கழிப்பாலை மேய கபாலப் பனார்,
மணம்புல்கு மாயக் குரம்பை நீங்க
         வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

         பொழிப்புரை :பிணமாதலைப் பொருந்தும் ஓட்டைக் குடிசையை நிலைபேறுடையதாகத் தவறாக எண்ணும் அறிவிலிகளே ! கழிப்பாலை மேவிய கபாலப்பனார் , கொழுப்புத் தங்கும் சூலத்தவராய் , நீல கண்டராய் , எண்தோளினராய் எண்ணற்ற குணத்தினாலே கணம்புல்ல நாயனாரின் கருத்தை விரும்பி ஏற்றவராய்க் காஞ்சிமாநகரில் உகந்தருளியிருப்பவர் . நறுமணப் பொருளால் நாற்றம் மறைக்கப்பட்ட நிலையில்லாத இவ்வுடல் தொடர்பு நீங்குதற்கு வழிவகுத்துள்ளார் . அவ்வழியே நாம் செல்வோம் .


பாடல் எண் : 8
இயல்பாய ஈசனை, எந்தை தந்தை,
         என்சிந்தை மேவி உறைகின் றானை,
முயல்வானை, மூர்த்தியை, தீர்த்த மான
         தியம்பகன், திரிசூலத்து அன்ன கையன்,
கயல்பாயும் கண்டல்சூழ்வு உண்ட வேலிக்
         கழிப்பாலை மேய கபாலப் பனார்,
மயல்ஆய மாயக் குரம்பை நீங்க
         வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

         பொழிப்புரை :கயல்மீன்கள் தம் மீது பாயப்பெற்ற தாழை மரங்களை எல்லையாகக் கொண்டு அவற்றால் சூழப்பட்ட கழிப்பாலை மேவிய கபால அப்பன் செயற்கையான் அன்றி இயற்கையாகவே எல்லோருக்கும் தலைவன். எம் குலத்தலைவன். என் சிந்தையில் விரும்பித் தங்கியிருக்கின்றவன். இடையறாது தொழில் செய்பவன். அவ்வத்தொழில்களுக்கு ஏற்ற திருமேனிகளை உடையவன். தூயவன், முக்கண்ணன், முத்தலைச் சூலத்தினன். தீயை வெளிப்படுத்தும் சிரிப்பினன். அப்பெருமான் மயக்கத்தைத் தரும் நிலையில்லாத இவ்வுடல் நீங்க வழிவைக்க, அவ்வழியே நாம் போதுகம்.


பாடல் எண் : 9
செற்றதுஓர் மனம்ஒழிந்து, சிந்தை செய்து,
         சிவமூர்த்தி என்றுஎழுவார் சிந்தை உள்ளால்
உற்றதுஓர் நோய்களைந்துஇவ் வுலகம் எல்லாம்
         காட்டுவான், உத்தமன், தான் ஓதாது எல்லாம்
கற்றதுஓர் நூலினன், களிறு செற்றான்,
         கழிப்பாலை மேய கபாலப் பனார்,
மற்றுஇதுஓர் மாயக் குரம்பை நீங்க
         வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

         பொழிப்புரை :கழிப்பாலை மேவிய கபால அப்பன் , மனத்தில் பகை எண்ணத்தை நீக்கிச் சிவபெருமான் என்று தன்னை அன்போடு தியானிப்பவர்களின் உள்ளத்தில் உள்ள நோய்களைப் போக்கி அவர்களை இவ்வுலகத்தார் போற்றச் செய்யும் உத்தமனாய் எல்லா வற்றையும் ஓதாதே உணர்ந்தவனாய் இயல்பாகவே எல்லாப் பாசங்களையும் நீங்கியவன் . அப்பெருமான் இந்த நிலையற்ற உடல் நீங்க வைத்த வழியிலே நாம் போவோம் .


பாடல் எண் : 10
பொருதஅலங்கல் நீள்முடியான், போர் அரக்கன்,
         புட்பகந்தான் பொருப்பின்மீது ஓடாது ஆக,
இருநிலங்கள் நடுக்குஎய்த எடுத்தி டுதலும்,
         ஏந்திழையாள் தான்வெருவ, இறைவன் நோக்கிக்
கரதலங்கள், கதிர்முடிஆறு அஞ்சி னோடு
         கால்விரலால் ஊன்று கழிப்பா லையார்
வருதல்அங்க மாயக் குரம்பை நீங்க
         வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.

         பொழிப்புரை :போரில் வல்ல அரக்கனாகிய இராவணனுடைய புட்பக விமானம் வெற்றிமாலை சூடிய சிவபெருமானுடைய மலையின் மீது செல்லாதாகக் கீழ் நிலம் அசையுமாறு அவன் மலையைப் பெயர்த்த அளவில் உமாதேவி அஞ்ச அப்பெருமான் மனத்தால் நோக்கி அவன் இருபது கரங்களையும் பத்துத் தலைகளையும் தன் கால் விரலை ஊன்றி நசுக்கியவன் . அப்பெருமான் திருக்கழிப்பாலையை உகந்தருளும் திருத்தலமாகக் கொண்டு பிறத்தலை உடைய நிலையாமையை உடைய இவ்வுடம்பின் தொடர்பு உயிருக்கு என்றும் நீங்கு மாறு செய்யும் வழியை அறிவித்துள்ளான் . அவ்வழியிலேயே நாம் செல்வோம் .
திருச்சிற்றம்பலம்

---------------------------------------------------------------------------------------------------------


சுந்தரர் திருப்பதிக வரலாறு:

         வன்தொண்டர் திருக்குருகாவூர் அமர்ந்தருளும் குழகரைப் பணிந்து பல பதிகளையும் வணங்கித் திருக்கழிப்பாலை சென்று தொழுது பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 ஏயர் கோன். புரா. 166)


பெரிய புராணப் பாடல் எண் : 166
அந்நாளில் தம்பெருமான் அருள்கூடப் பணிந்துஅகன்று,
மின்ஆர்செஞ் சடைமுடியார் விரும்பும்இடம் பலவணங்கி,
கல்நாடும் எயில்புடைசூழ் கழிப்பாலை தொழுதுஏத்தி,
தென்நாவ லூர்மன்னர் திருத்தில்லை வந்துஅடைந்தார்.

         பொழிப்புரை : அந்நாள்களில், தம் பெருமானின் அருள்கூடப் பணிந்து, விடைபெற்று, அங்கிருந்து அகன்று, மின்போல் மிளிரும் செஞ்சடை முடியையுடைய பெருமான் விரும்பி அமர்ந்தருளும் இடங்கள் பலவும் வணங்கி, கற்களால் அமைந்த மதில் சூழ்ந்த திருக் கழிப்பாலைக்குச் சென்று வணங்கிப் போற்றி, அப்பால் தென்னாட்டில் சிறந்த திருநாவலூர் அரசர், திருவமைந்த திருத்தில்லைக்கு வந்து சேர்ந்தார்.

         குறிப்புரை : விரும்பும் இடம்பல வணங்கி என்பன திருமுல்லைவாயில், திருமயேந்திரப்பள்ளி, திருநல்லூர்ப்பெருமணம் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். திருக்கழிப்பாலையில் அருளிய பதிகம் `செடியேன்' (தி.7 ப.23) எனும் தொடக்கமுடைய நட்டராகப் பண்ணிலமைந்த பதிகமாகும்.


7. 023    திருக்கழிப்பாலை           பண் - நட்டராகம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
செடியேன் தீவினையில் தடு மாறக் கண்டாலும்
அடியான் ஆவஎனாது ஒழி தல் தகவாமே
முடிமேல் மாமதியும் அரவும் உடன்துயிலும்
வடிவே தாம் உடையார், மகி ழுங்கழிப் பாலையதே.

         பொழிப்புரை : திருமுடியின் மேல் , பெருமை பொருந்திய பிறையும் , பாம்பும் பகையின்றி ஒருங்கு கூடித் துயில்கின்ற வடிவத்தை உடையவர் , குணம் இல்லாதவனாகிய யான் தீவினையில் கிடந்து தடுமாறுவதை நேரே பார்த்தாலும் , ` அந்தோ ! இவன் நம் அடியவன் !` என்று இரங்காது தாம் மகிழ்ந்து எழுந்தருளியுள்ள திருக் கழிப்பாலையில் , வாளா இருத்தல் தகுதியாகுமோ !


பாடல் எண் : 2
எங்கே னும்இருந்துஉன் அடியேன் உனைநினைந்தால்
அங்கே வந்துஎன்னொடும் உடனாகி நின்றுஅருளி
இங்கே என்வினையை அறுத்திட்டு எனைஆளும்
கங்கா நாயகனே, கழிப்பாலை மேயானே.

         பொழிப்புரை : திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருக் கின்றவனே , நீயே உன் அடியவனாகிய யான் இப்பூமியிலே எங்காயினும் இருந்து உன்னை நினைத்தால் , அங்கே வந்து என்னோடு கூடி நின்று , என் வினையை நீக்கி என்னை ஆண்டருள்கின்ற கங்கைக்கு நாயகன் .


பாடல் எண் : 3
ஒறுத்தாய் நின்அருளில், அடியேன்பி ழைத்தனகள்
பொறுத்தாய் எத்தனையும், நாயேனைப் பொருட்படுத்து,
செறுத்தாய் வேலைவிடம் அறியாமல் உண்டுகண்டம்
கறுத்தாய், தண்கழனிக் கழிப்பாலை மேயானே.

         பொழிப்புரை : குளிர்ந்த கழனிகளையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனே , உனது கருணையினாலே ஒரு பிழைக்காக முன்பு என்னை ஒறுத்தாய் ; பின்பு அடியேன் செய்த பிழைகள் எத்தனையாயினும் அவை அனைத்தையும் , நாய்போலும் என்னை ஒரு பொருளாக வைத்துப் பொறுத்துக் கொண்டாய் ; தேவர்கள் இறவாதிருத்தற் பொருட்டுக் கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு கண்டத்தில் நிறுத்தினாய் ; அதனால் , அவ்விடம் கரிதாயினாய் ; இவை உன் அருட்செயல்கள் .


பாடல் எண் : 4
சுரும்புஆர் விண்டமலர் அவைதூவித் தூங்குகண்ணீர்
அரும்பா நிற்குமனத்து அடியாரொடும் அன்புசெய்வன்,
விரும்பேன் உன்னைஅல்லால் ஒருதெய்வம் என்மனத்தால்,
கரும்பு ஆருங்கழனிக் கழிப்பாலை மேயானே.

         பொழிப்புரை : கரும்புகள் நிறைந்த கழனிகளையுடைய திருக்கழிப் பாலையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனே , வண்டுகள் ஒலிக் கின்ற , அப்பொழுது மலரும் மலர்களைத் தூவி , பாய்தற்குரிய கண்ணீர் அரும்புகின்றமைக்குக் காரணமான மனத்தையுடைய அடியார்களோடு கூடி அடியேன் உனக்கு அன்புசெய்வேன் ; உன்னையன்றி வேறொரு தெய்வத்தை என் மனத்தாலும் விரும்பேன் ; இஃது என் உணர்விருந்தவாறு .


பாடல் எண் : 5
ஒழிப்பாய் என்வினையை, உகப்பாய்மு னிந்துஅருளித்
தெழிப்பாய், மோதுவிப்பாய், விலைஆவ ணம்உடையாய்,
சுழிப்பால் கண்டுஅடங்கச் சுழிஏந்து மாமறுகில்
கழிப்பா லைமருவும் கனல்ஏந்து கையானே.

         பொழிப்புரை : நீர்ச் சுழிகளை , அவை கழியிடத்தையடைந்து அடங்குமாறு தாங்கி நிற்கின்ற தெருக்களையுடைய திருக்கழிப் பாலையில் எழுந்தருளியிருக்கின்ற தீயேந்திய கையினையுடையவனே , நீ என்னை உனக்கு உரியவனாக்கிக்கொண்ட விலைப் பத்திரத்தை உடையையாகலின் . என்னை விரும்பி என்னோடு அளவளாவினும் அளவளாவுவாய் ; பின் அது காரணமாக , என் வினையை நீக்கி என்னை இன்புறச் செய்யினும் செய்வாய் ; அன்றி என்னை வெகுண்டு உரத்த கடுஞ்சொற்களால் இகழினும் இகழ்வாய் ; பின் அது காரணமாக , என்னைத் தண்டிக்கச் செய்யினும் செய்வாய் ; உன்னை ` இவ்வாறு செய்க ` எனக் கட்டளையிடுவார் யார் ?


பாடல் எண் : 6
ஆர்த்தாய் ஆடுஅரவை, அரைஆர்பு லிஅதள்மேல்
போர்த்தாய் யானையின்தோல் உரிவைபு லால்நாற,
காத்தாய் தொண்டுசெய்வார் வினைகள் அவைபோகப்
பார்த்தாய், நுற்குஇடமாம் பழிஇல்கழிப் பாலைஅதே.

         பொழிப்புரை : அரையின்கண் பொருந்திய புலித்தோலின்மேல் , ஆடுகின்ற பாம்பைக் கட்டியவனே , யானையின் உரிக்கப்பட்டதாகிய தோலைப் புலால் நாற்றம் வீசும்படி போர்த்துக்கொண்டவனே , உனக்குத் தொண்டு செய்வாரது வினைகள் நீங்கும்படி திருக்கண் நோக்கம் வைத்து அவர்களைக் காத்தருளினவனே , உனக்கு இடமாவது , புகழையுடைய திருக்கழிப்பாலையே .


பாடல் எண் : 7
பருத்தாள் வன்பகட்டைப் படமாகமுன் பற்றிஅதள்
உரித்தாய் யானையின்தோல், உலகந்தொழும் உத்தமனே,
எரித்தாய் முப்புரமும், இமையோர்கள் இடர்கடியும்
கருத்தா, தண்கழனிக் கழிப்பாலை மேயானே.

         பொழிப்புரை : உலகமெல்லாம் வணங்குகின்ற மேலானவனே , தேவர்களது துன்பத்தை நீக்கியருளுகின்ற தலைவனே . குளிர்ந்த கழனிகளையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பியெழுந்தருளி யிருப்பவனே , நீ முன்புயானையின் தோலைப் போர்வையாக விரும்பி , பருத்த கால்களையுடைய வலிய யானையைப் பிடித்து அதன் தோலை உரித்தாய் ; முப்புரங்களையும் எரித்தாய் ; இவை உனது வீரச் செயல்கள் .


பாடல் எண் : 8
படைத்தாய் ஞாலமெலாம் படர்புன்சடை எம்பரமா,
உடைத்தாய் வேள்விதனை, உமையாளையொர் கூறுடையாய்,
அடர்த்தாய் வல்அரக்கன் தலைபத்தொடு தோள்நெரியக்
கடல்சா ருங்கழனிக் கழிப்பாலை மேயானே.

         பொழிப்புரை : விரிந்த புல்லிய சடையினை யுடைய எங்கள் இறைவனே , உமையம்மையை ஒரு பாகத்தில் உடையவனே , கடலைச் சார்ந்த , கழனிகளையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனே , நீ , உலகம் எல்லாவற்றையும் படைத்தாய் ; தக்கனது வேள்வியை அழித்தாய் ; வலிய அரக்கனாகிய இராவணனது பத்துத் தலைகளோடு இருபது தோள்களும் நெரியும்படி நெருக்கினாய் ; இவை உன் வல்லமைகள் !


பாடல் எண் : 9
பொய்யா நாஅதனால் புகழ்வார்கள் மனத்தின்உள்ளே
மெய்யே நின்றுஎரியும் விளக்கேஒத்த தேவர்பிரான்,
செய்யா னும்கரிய நிறத்தானும் தெரிவுஅரியான்
மைஆர் கண்ணியொடும் மகிழ்வான்கழிப் பாலையதே.

         பொழிப்புரை : பொய் கூறுதல் இல்லாத நாவினால் புகழ்கின்றவர்களது மனத்தில் அணையாது எரியும் விளக்கே போல விளங்கி நிற்கின்ற பெரிய தேவனும் , செம்மை நிறமுடைய பிரமனும் , கருமை நிறமுடைய திருமாலும் அறிதற்கரியவனும் ஆகிய சிவபிரான் திருக் கழிப்பாலையையே விரும்பி , மைபொருந்திய கண்களையுடைய உமா தேவியோடும் எழுந்தருளியிருப்பான் .


பாடல் எண் : 10
பழிசேர் இல்புகழான் பரமன், பரமேட்டி,
கழிஆர் செல்வமல்கும் கழிப்பாலை மேயானைத்
தொழுவான் நாவலர்கோன், ஆரூரன் உரைத்ததமிழ்,
வழுவா மாலைவல்லார் வானோர்உலகு ஆள்பவரே.

         பொழிப்புரை : பழி பொருந்துதல் இல்லாத புகழையுடையவனும் , யாவர்க்கும் மேலானவனும் மேலிடத்தில் உள்ளவனும் ஆகிய கழியின்கண் பொருந்திய செல்வங்கள் பெருகுகின்ற திருக்கழிப் பாலையில் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற சிவபிரானை , அவனையே தொழுபவனாகிய திருநாவலூரார்க்குத் தலைவனாம் நம்பியாரூரன் பாடிய இத் தமிழ்ப் பாடல்களைத் தவறு உண்டாகாதபடி பாடவல்லவர்கள் , தேவர் உலகத்தை ஆள்பவராவர் .

                                             திருச்சிற்றம்பலம்

1 comment:

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...