அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கருப்பம் தங்கு
(திருச்செந்தூர்)
முருகா!
பிறவிச் சிறை அற்று,
திருவடி இன்பம் பெற அருள்.
தனத்தந்தம்
தனத்தந்தம்
தனத்தந்தம் தனத்தந்தம்
தனத்தந்தம் தனத்தந்தம் ...... தனதானா
கருப்பந்தங்
கிரத்தம்பொங்
கரைப்புண்கொண் டுருக்கும்பெண்
களைக்கண்டங் கவர்ப்பின்சென் ...... றவரோடே
கலப்புண்டுஞ்
சிலுப்புண்டுந்
துவக்குண்டும் பிணக்குண்டுங்
கலிப்புண்டுஞ் சலிப்புண்டுந் ......
தடுமாறிச்
செருத்தண்டந்
தரித்தண்டம்
புகத்தண்டந் தகற்கென்றுந்
திகைத்தந்திண் செகத்தஞ்சுங் ......
கொடுமாயும்
தியக்கங்கண்
டுயக்கொண்டென்
பிறப்பங்கஞ் சிறைப்பங்கஞ்
சிதைத்துன்றன் பதத்தின்பந் ...... தருவாயே
அருக்கன்சஞ்
சரிக்குந்தெண்
டிரைக்கண்சென் றரக்கன்பண்
பனைத்தும்பொன் றிடக்கன்றுங் ...... கதிர்வேலா
அணிச்சங்கங்
கொழிக்குந்தண்
டலைப்பண்பெண் டிசைக்குங்கொந்
தளிக்குஞ்செந் திலிற்றங்குங் ...... குமரேசா
புரக்குஞ்சங்
கரிக்குஞ்சங்
கரர்க்குஞ்சங் கரர்க்கின்பம்
புதுக்குங்கங் கையட்குந்தஞ் ......
சுதனானாய்
புனைக்குன்றந்
திளைக்குஞ்செந்
தினைப்பைம்பொன் குறக்கொம்பின்
புறத்தண்கொங் கையிற்றுஞ்சும் ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
கருப்பம்
தங்கு இரத்தம் பொங்கு
அரைப்புண் கொண்டு உருக்கும் பெண்-
களைக் கண்டு, அங்கு அவர்ப் பின்சென்று, ......அவரோடே
கலப்புண்டும், சிலுப்புண்டும்,
துவக்குண்டும், பிணக்குண்டும்,
கலிப்புண்டும், சலிப்புண்டும், ...... தடுமாறிச்
செருத்தண்டம்
தரித்து, அண்டம்
புகத் தண்டு, அந்தகற்கு என்றும்
திகைத்து, அம் திண் செகத்து,அஞ்சும் ...... கொடுமாயும்
தியக்கம்
கண்டு, உயக்கொண்டு, என்
பிறப்பு அங்கம் சிறைப் பங்கம்
சிதைத்து, உன்தன் பதத்து இன்பம் ...... தருவாயே.
அருக்கன்
சஞ்சரிக்கும் தெண்
திரைக்கண் சென்று, அரக்கன் பண்பு
அனைத்தும் பொன்றிடக் கன்றும் ...... கதிர்வேலா!
அணிச்
சங்கம் கொழிக்கும் தண்-
டலைப் பண்பு எண் திசைக்கும், கொந்-
தளிக்கும் செந்திலில் தங்கும் ......
குமரேசா!
புரக்கும்
சங்கரிக்கும், சங்-
கரர்க்கும், சங்கரர்க்கு இன்பம்
புதுக்கும் கங்கையட்கும் தம் ...... சுதன் ஆனாய்!
புனைக்
குன்றம் திளைக்கும் செந்-
தினைப் பைம்பொன் குறக்கொம்பின்
புறத் தண் கொங்கையில் துஞ்சும் ......
பெருமாளே.
பதவுரை
அருக்கன்
சஞ்சரிக்கும்
--- சூரியன் உலாவுகின்ற
தெண் திரை கண் சென்று --- அலைகள்
வீசுகின்ற தெளிந்த கடலிடத்தில் சென்று,
அரக்கன் பண்பு அனைத்தும் பொன்றிட ---
சூரபன்மனது பெருமைகள் யாவும் அழியுமாறு
கன்றும் கதிர்வேலா --- சினந்த ஒளிமிகுந்த வேலாயுதத்தையுடைய கடவுளே!
அணி சங்கம்
கொழிக்கும்
--- அழகிய சங்குகளைக் கொழிக்கின்றதும்,
தண்டு அலை --- சேனைகள் போல்
எழுகின்ற அலைகள்
பண்பு எண்திசைக்கும்
கொந்தளிக்கும்
--- பண்புடைய எட்டுத் திசைகளிலும் கேட்குமாறு கொந்தளிப்பதுமாகிய கடல் சூழ்ந்த,
செந்திலில் தங்கும் குமரேசா ---
திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள குமாரக் கடவுளே!
புரக்கும்
சங்கரிக்கும் சங்கரர்க்கும் --- உலகங்களை எல்லாம் காத்தருள்
புரிகின்ற உமாதேவிக்கும், சுகத்தைச் செய்கின்ற
சிவபெருமானுக்கும்,
சங்கரர்க்கு இன்பம்
புதுக்கும் கங்கையட்கும் சுதன் ஆனாய் --- சிவமூர்த்திக்கு இன்பத்தைத் தரும்
கங்காதேவிக்கும் புதல்வராக ஆனவரே!
புனக் குன்றம்
திளைக்கும் செம்தினை பைம்பொன் --- கொல்லைகளுடன் கூடிய மலையில்
மகிழ்ச்சியுறுகின்ற, செம்மையாகிய
தினைப்பயிரைக் காத்த பசும்பொன் சிலைபோன்ற,
குற கொம்பின் --- குறமகளாகிய
வள்ளியம்மையின்
தண் கொங்கைப்
புறத்தில் துஞ்சும் பெருமாளே --- குளிர்ந்த தனபாரங்களின் அருகில்
துயில்கின்ற பெருமிதம் உடையவரே!
கருப்பம் தங்கு
இரத்தம் பொங்கு --- கருத் தங்குவதற்கு ஏற்றதாய் உதிரம் நிறைந்த
அரை புண்கொண்டு --- அரையில் இருக்கும்
அல்குலைக் கொண்டு,
உருக்கும் பெண்களைக் கண்டு ---
உள்ளத்தை உருக்குகின்ற விலைமாதரைக் கண்டு,
அவர் பின்சென்று --- அம்மாதர்களின்
பின்னே சென்று,
அவரோடே கலப்புண்டும் சிலுப்புண்டும் ---
அவரைக் கூடியும் ஊடியும்,
துவக்குண்டும் --- மீண்டும் அவர்களைக்
கலந்தும்,
பிணக்குண்டும் --- மறுபடியும்
வேற்றுமை அடைந்தும்,
கலிப்புண்டும் --- இன்பமுற்றும்,
சலிப்புண்டும் தடுமாறி ---
துன்பமுற்றும் தடுமாற்றத்தை அடைந்து,
செருத் தண்டம் தரித்து --- போருக்கு
உரிய தண்டாயுதத்தைத் தாங்கி,
அண்டம் புக தண்டு --- வேறு உலகம்
புகுமாறு உயிர்களைத் துன்புறுத்துகின்ற,
அந்தகற்கு என்றும் திகைத்து ---
இயமனுக்கு என்றும் அஞ்சி,
அம் திண் செகத்து --- அழகிய திண்ணிய
பூமியில்,
அஞ்சும் கொடுமாயும் --- ஐம்புலன்களால்
அலைந்து அழிகின்ற அடியேனுடைய,
தியக்கம் கண்டு --- கலக்கத்தைக் கண்டு,
உயக் கொண்டு --- உய்யுமாறு ஆட்கொண்டு,
என் பிறப்பு அங்கம் சிறைப் பங்கம்
சிதைத்து --- அடியேன் பிறந்து வந்த உடம்பாகிய சிறையில் கிடந்து வருந்துந் துயரத்தைப்
போக்கி,
உன்தன் பதத்து இன்பம் தருவாயே ---
தேவரீருடைய திருவடியின்பத்தைத் தந்து அருள்புரிவீர்.
பொழிப்புரை
சூரியன் உலவுகின்றதும், தெளிந்த அலைகள் வீசுகின்றதுமாகிய
கடலின்கண்சென்று, சூரபன்மனுடைய பெருமை
யாவும் அழியுமாறு சினந்த ஒளி மிகுந்த வேலாயுதத்தை உடையவரே!
அழகிய சங்குகளைக் கொழித்து சேனை எழுவது போல
அலைகள் எழுந்து எண்திசையும் கேட்குமாறு ஆரவாரிக்கின்ற கடற்கரையில் விளங்கும்
செந்தில் மாநகரில் எழுந்தருளியுள்ள குமாரக் கடவுளே!
உலகங்களை யெல்லாம் காத்தருளுகின்ற
பார்வதியம்மையாருக்கும், உயிர்களுக்குச்
சுகத்தைச் செய்கின்ற சிவமூர்த்திக்கும், அவருக்கு
மகிழ்ச்சியைத் தருகின்ற கங்கா தேவிக்கும் புதல்வராக விளங்குபவரே!
புன்செய்ப் பயிர்களுடன் கூடிய மலையில்
தினைக்கொல்லையில் மகிழச்சியுடன் வாழ்ந்த பொற்சிலைப் போன்ற வள்ளிப்பிராட்டியின்
குளிர்ந்த தனபாரத்தினிடம் துயில்கின்ற பெருமிதமுடையவரே!
கருத்தங்குதற்கு ஏற்றதாய் உதிரம்
நிறைந்த அரையில் அல்குலைக் கொண்டு ஆடவர் உள்ளத்தை உருக்கும் விலைமகளிரைக் கண்டு, அவர் பிறகே சென்று, அவர்களைக் கலந்தும் பிரிந்தும், மறுபடியும் ஒருமைப்பட்டும்
வேற்றுமைப்பட்டும், இன்புற்றும், துன்புற்றும், தடுமாற்ற மடைந்தவனாய், போருக்கு உரிய தண்டாயுதத்தை
ஏந்திக்கொண்டு வேறு உலகம் புகுமாறு உயிர்களை வருத்துகின்ற கூற்றுவனுக்கு அஞ்சி, அழகும், திட்பமும் உடைய பூமியில், ஐம்புலன்களால் அலைந்து அழிகின்ற, அடியேனுடைய கலக்கத்தைக் கண்டு, உய்வித்து, பிறந்து வந்த உடலாகிய சிறையில் கிடந்து
வருந்தும் இடரை நீக்கி, உமது திருவடி இன்பத்தை
வழங்கி அருள்வீர்.
விரிவுரை
கருப்பம்
தங்கு இரத்தம் பொங்கு .................அவரோடே ---
ஆடவர்களைத்
தங்கள் அங்கங்களைக் கொண்டு மயக்கும் விலை மகளிரைக் கண்டு, உள்ளம் உருகி, அவர் சென்ற பக்கமெல்லாம் சென்று, அவர் பின்னே திரிவர்.
கலப்புண்டும்
சிலுப்புண்டும் ---
கலத்தல்
--- கூடல். சிலுத்தல் --- ஊடல்.
காதல்
மிகுதியால் கூடுவதும், இன்பம் மிகும்
பொருட்டு ஊடுவதும் காதலர் இயல்பு.
உணலினும்
உண்ட தறலினிது காமம்
புணர்தலின்
ஊடல் இனிது. --- திருக்குறள்.
ஊடுதல்
காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி
முயங்கப் பெறின் --- திருக்குறள்.
துவக்குண்டும்
பிணக்குண்டும் ---
பொருள்
தந்து அவருடன் கூடியும், பொருள்தர இயலாமையால்
பிணங்கியும் ஆடவர் துன்புறுவர். விலை
மகளிர் பொன்னையே நோக்குபவர் ஆதலின்,அடிக்கடி பிணங்குவர்.
நிரம்பவும் பொருள்தரின் இணங்குவர்.
கலிப்புண்டும்
சலிப்புண்டும் ---
விலைமகளிர்
உறவால் மகிழ்ச்சியுற்றும், பிணி வறுமை முதலிய
எய்தி துன்புற்றும் தடுமாறுவர். விலை மகளிர் உறவு மிக்க இன்பம்போல் தோன்றி
துன்பத்தில் முடியும் என்பதனை இந்த அடியால் அடிகளார் அறிவுறுத்தினார்.
அஞ்சும்
கொடு மாயும் ---
ஐந்து
புலன்கள் நம்மை ஒருவழிப்பட விடாமல் அலக்கழிக்கின்றன. ’ஓரவொட்டார்; ஒன்றை யுன்னவொட்டார்; மலர் இட்டு உனதாள் சேர வொட்டார் ஐவர்; செய்வதென் யான்?’ என்று அடிகளாரே கூறி வருந்துகின்றார்.
அரிச்சி
இராப்பகல் ஐவரால் ஆட்டுண்டு
சுரிச்சிராது
நெஞ்சே! ஒன்று சொல்லக்கேள்,
திருச்சி
ராப்பள்ளி என்றலும், தீவினை
நரிச்சிராது
நடக்கும் நடக்குமே.
என்கின்றார்
அப்பர் பெருமான்.
இதன்
பொருள் ---
நெஞ்சே!
ஐம்புலக் கள்வரால் இராப் பகலாக அரிக்கப்பெற்று ஆட்டப்பெற்று வருந்தியிராமல் இருக்க, ஓர் உபாயம் சொல்லக் கேட்பாயாக! திருச்சிராப்பள்ளி
என்றலும் தீவினை பொருந்தி இருக்காமல் உன்னைவிட்டு நடக்கும்; நடக்கும்!
இவ்வாறு
நம்மைப் பன்னெடுங்காலமாக அலைத்து வருந்தும் ஐம்புலன்களை ஒரு வழிப்படுத்தி அவற்றை
வெல்லுதல் வேண்டும்.
உரன்என்னும்
தோட்டியான் ஓர்ஐந்தும் காப்பான்
வரன்என்னும்
வைப்பிற்கு ஓர் வித்து. --- திருக்குறள்.
ஐம்புல
வேடரை அடக்காது அவர் வழிச் சென்றார் விரைவில் கெடுவர். ஆகவே ஐவரை வென்று உயர்வு
பெறுவதே உய்ய நெறியாகும்.
பிறப்பங்கஞ்
சிறைப்பங்கம் ---
இந்த
உடம்பு ஒரு சிறைக் கூடம். நல்வினை தீவினை என்ற இரு விலங்குகளாற்கட்டி நியாயாதிபதியாகிய
இறைவன் ஆன்மாவை இதற்குள் அடைத்து வைத்திருக்கின்றனர். தண்டனைக் காலம் முடிந்தவுடன்
மீளவும் இப்பிறப்பில் செய்த வினைகளை ஆய்ந்து அதற்குரிய தீர்ப்பு கூறப்படுகின்றது.
“அறம்பாவ மென்னும்
அருங்கயிற்றால் கட்டி
புறந்தோல் போர்த்தெங்கும் புழுவழுக்கு மூடி”
என்கிறார்
மாணிக்கவாகர்
“ஏழையின் இரட்டைவினை ஆயதொர்
உடல்சிறை
இராமல் விடுவித்துஅருள்
நியாயக்காரனும்” --- திருவேளைக்காரன்
வகுப்பு
பிறப்புடன்கூடிய
இடமாகிய உடம்பு ஒரு சிறை யென்பதனை இதில் விளக்கி, அச்சிறையாகிய துன்பத்தை முருகன் தனக்கு அகற்றியருளினார்
என்று அடிகளார் கூறுகின்றனர்.
இருவினையொப்பு
என்ற தன்மையை எய்தி மலபரிபாக முற்றோர் அருள் பதிந்து மீட்டிங்கு வாரா நெறியடைவர்.
புரக்குஞ்
சங்கரிக்குஞ்.......கங்கையட்கு ---
சம்
--- சுகம்; கரம் --- செய்வது.
சங்கரன் --- சுகத்தைச் செய்பவன். சுகத்தை ஆன்மாக்களுக்குச் செய்யும் அம்பிகை
சங்கரியெனப் பெற்றனர்.
எல்லா வுலகங்களையும் இறைவன் திருவருள்
கொண்டே காத்தருளுகின்றனர்.அவ்வருளே அம்பிகையாகும். இறைவனும் திருவருளும் ஒன்றே.
அன்றியும் இறைவனிடத்தில் பிரியாது உறையும்
நீர்மைக் குணமே கங்காதேவி என உணர்க.
ஆகவே சிவம் அம்பிகை கங்கை யென்ற சொற்கள்
வேறு வேறாயினும் மூர்த்தி ஒன்றே எனத் தெளிக. சிவத்தினிடமிருந்து வெளிப்பட்ட
’ஆனந்தமே முருகன்’. ஆகவே சிவமூர்த்தி வேறு முருகன் வேறு அன்று.
கருத்துரை
சூரசங்கார மூர்த்தியே! செந்திற்குமாரரே!
சிவகுமாரரே! வள்ளி நாயகமே! பிறப்பாகிய சிறைத் துயரை அகற்றி திருவடி இன்பம் அருள்வீர்.
No comments:
Post a Comment