திருவான்மியூர்


திரு வான்மியூர்

     தொண்டை நன்னாட்டுத் திருத்தலம்.

         இத்திருத்தலம் சென்னையின் தென் பகுதியில் திருவான்மியூரில் இருக்கிறது. சென்னையின் மற்ற பகுதிகளில் இருந்து திருவான்மியூருக்கு பேருந்து வசதிகள் இருக்கின்றன. திருவான்மியூர்ப் பேருந்து நிலையத்திலிருந்து மிக அருகில் உள்ளது.

இறைவர்               : மருந்தீசுவரர், பால்வண்ணநாதர்வேதபுரீசுவரர்
                            
இறைவியார்           : சொக்கநாயகி, சுந்தரநாயகி

தல மரம்                : வன்னி

தீர்த்தம்                 : பஞ்சதீர்த்தம்

தேவாரப் பாடல்கள்: 1. சம்பந்தர்    -   1. கரையுலாங் கடலிற்பொலி,
                                                             2. விரையார் கொன்றையினாய்.

                                 2. அப்பர்       -   1. விண்டமாமலர் கொண்டு.

         இவ்வாலயத்திற்கு கிழக்கில் 7 நிலை இராஜகோபுரம், அதையடுத்து 5 நிலை இரண்டாவது கோபுரம் மற்றும் மேற்கில் ஒரு 5 நிலை கோபுரம் அமைந்துள்ளன. மேற்கு கோபுரம் மகாபலிபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் இருப்பதால் இந்த வாயில் பிரதானமாக உள்ளது. கிழக்கிலுள்ள இராஜ கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன் ஒரு விசாலமான திறந்த வெளியும் வலது புறத்தில் தியாகராஜ மண்டபமும் இடது பறத்தில் கோயில் தீர்த்தமும் உள்ளது. நேரே சென்று 2-வது கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் கிழக்கு வெளிப் பிரகாரம் அடையலாம். அதில் வலது புறம் அம்பாள் திரிபுரசுந்தரி சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு வெளிப் பிரகாரத்தில் விநாயகர், முருகன் சந்நிதிகளும் காணப்படுகின்றன. மேற்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன. இவற்றை அடுத்து உள்ள சிறிய வாயில் வழியாக இறைவன் மருந்தீசுவரர் கருவறையை அடையலாம். மருந்தீசுவரர் கருவறைக்குள் செல்வதற்கு தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள தியாகராஜர் மண்டபத்தின் வழியாக உள்ள தெற்கு வாயில் வழியாகவும் வர வசதி உள்ளது. கருவறையில் மூலவர் மருந்தீசுவரர் சுயம்புலிங்க உருவில் மேற்கு நோக்கி காட்சி கொடுக்கிறார்.

         பால்வண்ண நாதர், மருந்தீசுவர் ஆகிய பெயர்களால் இத்தலத்து ஈசன் அழைக்கப் பெறுவதற்குக் காரணங்கள் உள்ளன. ஒருசமயம் தேவலோகத்தைச் சேர்ந்த காமதேனு பிரம்மரிஷியான வசிட்டரிடம் சற்று அவமரியாதையாக நடந்து கொண்டது. அதனால் கோபம் கொண்ட வசிட்டர், "நீ பூவுலகில் பசுவாகப் பிறப்பாய்" என்று சாபமிட்டார். தன் தவறை உணர்ந்து வருந்திய காமதேனு வசிட்டரிடம் மன்னிப்பு கேட்டு, சாப விமோசனத்துக்கான வழியைக் கேட்க, திருவான்மியூரில் எழுந்தருளியிருக்கும் சுயம்பு லிங்கத்திற்கு தினமும் பால் சொரிந்து அபிஷேகம் செய்து வந்தால் சாப விமோசனம் கிட்டும் என்று கூறினார். அதன்படியே செய்து ஈசன் அருளால் சாப விமோசனம் பெற்றது காமதேனு. பசு பால் சொரிந்து சிவலிங்கம் வெண்ணிறமாகக் காட்சி தந்ததால் இவர் பால்வண்ண நாதர் என்று பெயர் பெற்றார். அதுபோலவே, இத்தலத்திற்கு வந்து வழிபட்ட அகத்திய முனிவருக்கு, உலகத்திலுள்ள அனைத்து வகையான நோய்கள் பற்றியும், அதைப் போக்கும் மருந்துகள் பற்றியும் ஈசன் உபதேசித்தருளினார். அதன் காரணமாகவே மருந்தீசுவரர், ஔஷதநாதர் (ஔஷதம் - மருந்து) என்று இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார்.

         மேற்கில் உள்ள சிறிய வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறம் கருவறை உட்பிரகாரம் மேற்குச் சுற்றில் கஜலட்சுமி, வள்ளி தெய்வானையுடன் செல்வ முத்துக்குமாரசாமி சந்நிதிகளும், வலதுபுறம் விநாயகர் சந்நிதி, நால்வர் சந்நிதி ஆகியவையும் உள்ளன. வடக்குச் சுற்றில் உற்சவ மூர்த்திகள் மண்டபம், அடுத்து நடராஜர் சந்நிதியும் அதையடுத்து 108 சிவலிங்கங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளதையும் காணலாம். வடக்குச் சுற்றின் முடிவில் தெற்கு நோக்கிய காலபைரவர் சந்நிதி உள்ளது. கிழக்குச் சுற்றில் வரிசையாக உள்ள கேதாரீசுவரர், இராமநாதேசுவரர், சுந்தரேசுவரர், அருணாசலேசுவரர் மற்றும் ஜம்புகேசுவரர் சந்நிதிகளைக் காணலாம். தெற்குச் சுற்றில் 63 நாயன்மார்களின் உருவச் சிலைகள் உள்ளன.

         கருவறை சுவற்றின் வெளிப்புறம் வடக்கில் பிரம்மா, துர்க்கை, கிழக்கில் மஹாவிஷ்ணு, தெற்கில் தட்சிணாமூர்த்தி, கணபதி ஆகியோர் கோஷ்ட மூர்த்தங்களாக அழகுடன் காட்சி தருகின்றனர்.

     கயிலை மலையில் சிவன் பார்வதி திருமணம் நடைபெறும் சமயம் திருமணத்தைக் காண எல்லோரும் அங்கு கூடியதால் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதனை சமன் செய்ய சிவபெருமான் அகத்திய முனிவரை தென்திசை அனுப்பினார். தென்புலம் சென்றால் தன்னால் தெய்வத் திருமணத்தைக் காண இயலாமல் போய்விடுமோ என்று சிவனிடம் முறையிட இறைவனும் அகத்தியர் விரும்பும் போது திருமணக் கோலம் காட்டி அருளுவதாக கூறினார். அதன்படி திருவான்மியூர் தலத்தில் அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டி அருளினார். அகத்தியர் திருவான்மியூர் தலத்தில் தங்கி இருந்த போது வயிற்று வலியினால் அவதிப்பட்டார். இறைவன் அகத்தியருக்கு காட்சி கொடுத்து மருந்துகள் பற்றியும், அதன் உபயோக முறைகளைப் பற்றியும் உபதேசம் செய்து அருளினார். அதனாலேயே இறைவன் மருந்தீஸ்வரர் என்ற பெயருடன் இத்தலத்தில் அறியப்படுகிறார். சூரியனும், சந்திரனும் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளதால், இங்கு நவக்கிரகங்களுக்கு என்று தனி சந்நிதி இல்லை.

         ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் உள்ள வன்னி மரமே இத்தலத்தின் தல விருட்சமாகும். இந்த வன்னி மரத்தினடியில் தான் அகத்தியருக்கு இறைவன் திருமணக் காட்சி கொடுத்ததாக ஐதீகம். வான்மீகி முனிவரும் முக்திப் பேறு வேண்டி நாரதரின் ஆலோசனைப் படி இத்தலம் வந்து இந்த வன்னி மரத்தடியில் தான் சுயம்பு லிங்கத்தைக் கண்டெடுத்து வழிபட்டதாக புராண செய்திகள் கூறுகின்றன. அகத்திய முனிவருக்காக ஒரு முறையும், வான்மீகி முனிவருக்காக ஒரு முறையும் ஆக இரண்டு முறை இறைவன் இந்த வன்னி மரத்தடியில் காட்சி கொடுத்துள்ளார். இந்த வன்னி மரத்தடியில் பங்குனி மாத பிரம்மோற்சவத்தில் ஒன்பதாம் நாள் இறைவன் அகத்தியருக்கு திருமணக் காட்சி கொடுத்த விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

         காலை 5.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "கார்த் திரண்டு வாவுகின்ற சோலை வளர் வான்மியூர்த் தலத்தின் மேவுகின்ற ஞான விதரணமே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 1120
திருத்தொண்டர் அங்குஉள்ளார்
         விடைகொள்ள, சிவநேசர்
வருத்தம்அகன் றிட,மதுர
         மொழிஅருளி விடைகொடுத்து,
நிருத்தர்உறை பிறபதிகள்
         வணங்கிப்போய், நிறைகாதல்
அருத்தியொடும் திருவான்மி
         யூர்பணிய அணைவுற்றார்.

         பொழிப்புரை : அங்கு இருக்கும் திருத்தொண்டர்கள் விடைபெற்றுக் கொள்ளச் சிவநேசரின் வருத்தம் நீங்கும்படி அவருக்கு இனிய சொற்களைச் சொல்லி விடைதந்து, சிவபெருமான் வீற்றிருக்கும் பிறபதிகளையும் வணங்கிச் சென்று, நிறைந்த காதலால் விளைந்த அன்புடனே திருவான்மியூரை வணங்கச் செல்வாரானார்.

         குறிப்புரை : பிறபதிகளாவன திருமயிலைக்கும் திருவான்மியூருக்கும் இடைப்பட்ட புலியூர், கோட(கன்)ம்பாக்கம், வெளிச்சேரி, முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார்.


பெ. பு. பாடல் எண் : 1121
திருவான்மி யூர்மன்னும்
         திருத்தொண்டர் சிறப்புஎதிர
வருவார்மங் கலஅணிகள்
         மறுகுநிரைத்து எதிர்கொள்ள,
அருகாக இழிந்துஅருளி,
         அவர்வணங்கத் தொழுது,அன்பு
தருவார்தம் கோயில்மணித்
         தடநெடுங்கோ புரம்சார்ந்தார்.

         பொழிப்புரை : திருவான்மியூரில் நிலைபெற்று வாழ்கின்ற தொண்டர்கள் சிறப்பாக வரவேற்க வருபவர்களாய், மங்கலம் பொருந்திய அணிகளைத் தெருவில் நிரல்பட அமைத்து, எதிர்கொண்டு அருகே வந்த பொழுது, முத்துப் பல்லக்கினின்றும் இறங்கி அருளி, அத்தொண்டர்கள் தம்மை வணங்கத் தாமும் அவர்களை வணங்கி, அன்பை அளித்து ஆட்கொள்கின்ற இறைவரின் திருக்கோயிலின் அழகிய பெரிய நீண்ட கோபுரத்தைச் சேர்ந்தார்.


பெ. பு. பாடல் எண் : 1122
மிக்குஉயர்ந்த கோபுரத்தை
         வணங்கி,வியன் திருமுன்றில்
புக்குஅருளி, கோயிலினைப்
         புடைவலம்கொண்டு, உள்அணைந்து,
கொக்குஇறகும் மதிக்கொழுந்தும்
         குளிர்புனலும் ஒளிர்கின்ற
செக்கர்நிகர் சடைமுடியார்
         சேவடியின் கீழ்த்தாழ்ந்தார்.

         பொழிப்புரை : மிகவும் உயர்ந்த கோபுரத்தை வணங்கி, பெரிய முற்றத்தினுள் புகுந்து, கோயிலை வலமாக வந்து, உட்சென்று கொக்கு இறகும் பிறைச்சந்திரனும் கங்கையும் விளங்கும் அந்தி மாலையின் சிவப்புப் போன்ற சடையையுடைய இறைவரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.


பெ. பு. பாடல் எண் : 1123
தாழ்ந்துபல முறைபணிந்து,
         தம்பிரான் முன்நின்று
வாழ்ந்துகளி வர, பிறவி
         மருந்துஆன பெருந்தகையைச்
சூழ்ந்தஇசைத் திருப்பதிகச்
         சொன்மாலை, வினாவுரையால்
வீழ்ந்தபெரும் காதலுடன்
         சாத்திமிக இன்புற்றார்.

         பொழிப்புரை : நிலத்தில் விழுந்து பன்முறையும் வணங்கி, முன்நின்று, வாழ்வு பெற்று, மகிழ்ச்சி பொருந்த, பிறவி நோய்க்கு மருந்தான பெருந்தகைமை மிக்க இறைவரை உளங்கொண்டவாறு, பண் பொருந்திய திருப்பதிகமான வினாவுரையாய் வரும் சொல்மாலையை மிக்க விருப்புடனே பாடி இன்பம் அடைந்தார்.

         குறிப்புரை : இப்பதியில் இதுபொழுது அருளியது, `கரையுலாங் கடலில்\' (தி.2 ப.4) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணில் அமைந்த பதிகமாகும். இப்பதிகப் பாடல்கள் முழுதும் இறைவனிடத்துக் கேட்கும் வினாவுரையாக அமைந்துள்ளன.


பெ. பு. பாடல் எண் : 1124
பரவிவரும் ஆனந்தம்
         நிறைந்த துளி கண்பனிப்ப,
விரவுமயிர்ப் புளகங்கள்
         மிசைவிளங்க, புறத்துஅணைவுற்று
அரவநெடும் திரைவேலை
         அணிவான்மி யூர்அதனுள்
சிரபுரத்துப் புரவலனார்
         சிலநாள்அங்கு இனிது அமர்ந்தார்.

         பொழிப்புரை : : சீகாழித் தலைவர், பரவி வருகின்ற ஆனந்தக் கண்ணீர் விழிகளினின்றும் துளித்துப் பெருகவும், மேனி முழுதும் மயிர்க் கூச்செறியவும் பெற்று, கோயிலின் வெளியே வந்து, ஒலி பொருந்திய நீண்ட அலைகளையுடைய கடற்கரையில் அமைந்த அழகிய திருவான்மியூரில், சில நாள்கள் இனிதாய்த் தங்கியிருந்தார்.


பெ. பு. பாடல் எண் : 1125
அங்கண்அமர் வார்உலகு
         ஆள்உடையாரை அருந்தமிழின்
பொங்கும்இசைப் பதிகங்கள்
         பலபோற்றிப் போந்துஅருளி,
கங்கையணி மணிமுடியார்
         பதிபலவும் கலந்துஇறைஞ்சி,
செங்கண்விடைக் கொடியார்தம்
         இடைச்சுரத்தைச் சேர்வுற்றார்.

         பொழிப்புரை : அவ்விடத்தில் தங்கியிருப்பவரான ஞானசம் பந்தர், உலகங்களுக்கெல்லாம் தலைவராகிய இறைவரை, அரிய தமிழில் மேன்மேல் வாழும் இசையையுடைய பதிகங்கள் பலவற்றால் போற்றி, அங்கிருந்து நீங்கிக் கங்கையை அணிந்த அழகிய சடையை உடைய இறைவரின் பதிகள் பலவற்றிற்கும் அங்கங்கும் சென்று சேர்ந்து, வணங்கி சிவந்த கண்ணையுடைய விடையைக் கொடியாக உடைய சிவபெருமானின் திருவிடைச்சுரத்தை அடைந்தார்.

         குறிப்புரை : `பதிகங்கள் பலபோற்றி' என்றாரேனும், `விரையார் கொன்றையினாய்' (தி.3 ப.55) எனத் தொடங்கும் கௌசிகப் பண்ணிலமைந்த ஒருபதிகமே கிடைத்துள்ளது.

         பதிபலவும் என்பன, குன்றத்தூர், திருநெடுங்குன்றம், திருக்கச்சூர், ஆலக்கோயில், மாடன்பாக்கம், பல்லவபுரம், திருச்சுரம், திருச்சிவப்பேறூர், கோவூர், மாங்காடு, சோமங்கலம், மணிமங்கலம், படூர், பூஞ்சேரி, திருக்கச்சூர், வயலூர், வீராபுரம் முதலாயின ஆகலாம் என்பர் சிவக்கவிமணியார்.


திருஞானசம்பந்தர்  திருப்பதிகங்கள்

2.004 திருவான்மியூர்                     பண் - இந்தளம்
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
கரை உலாம் கடலில் பொலி சங்கம்,வெள் இப்பி,வன்
திரை உலாம் கழி மீன் உகளும் திரு வான்மியூர்
உரை உலாம் பொருளாய் உலகு ஆள் உடையீர் சொலீர்,
வரை உலா மடமாது உடன் ஆகிய மாண்பு அதே.

         பொழிப்புரை :கடலின்கண் விளங்கும் சங்குகளும் வெண்ணிறமான இப்பிகளும் கரையில் வந்துலாவுமாறு அலைகள் வீசுவதும், அவ்வலைகளை உடைய கழிகளில் மீன்கள் பிறழ்வதுமான திருவான்மியூரில், எல்லோராலும் புகழப்படும் பொருளாய் உலகனைத்தையும் ஆட்சிபுரிபவராய் விளங்கும் இறைவரே! மலைமாது எனப்படும் உமையம்மையை ஓருடம்பில் உடனாகக்கொண்டுள்ள மாண்பிற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.


பாடல் எண் : 2
சந்து உயர்ந்து எழு கார்அகில் தண்புனல் கொண்டு தம்
சிந்தை செய்து அடியார் பரவும் திரு வான்மியூர்ச்
சுந்தரக் கழல் மேல் சிலம்பு ஆர்க்க வல்லீர் சொலீர்
அந்தியின் ஒளியின் நிறம் ஆக்கிய வண்ணமே.

         பொழிப்புரை :அடியவர்கள் சந்தனம், உயர்ந்து வளர்ந்த கரிய அகில், குளிர்ந்த நீர் ஆகியவற்றைக் கொண்டு வந்து ஆட்டித் தமது சிந்தையால் நினைந்து பரவும் திருவான்மியூரில் வலக்காலில் விளங்கும் அழகிய கழல், இடக்காலில் விளங்கும் சிலம்பு ஆகியன ஆரவாரிக்கும் திருவடிகளை உடையவரே! மாலையந்தியின் ஒளி போன்ற செவ்வண்ணத்தை உம் நிறமாகக் கொண்ட காரணம் யாதோ? சொல்வீராக.


பாடல் எண் : 3
கான் அயங்கிய தண்கழி சூழ் கடலின் புறம்
தேன் அயங்கிய பைம்பொழில் சூழ்திரு வான்மியூர்த்
தோல் நயங்கு அமர் ஆடையினீர் அடிகேள் சொலீர்
ஆனை அங்கவ்வுரி போர்த்து அனல் ஆட உகந்ததே.

         பொழிப்புரை :காடு, பள்ளமான கழி ஆகியன சூழ்ந்த கடலின் புறத்தே தேன் சொரியும் பசுமையான பொழில்கள் சூழ்ந்து விளங்கும் திருவான்மியூரில், புலித்தோலை ஆடையாகக் கொண்டு எழுந்தருளிய அடிகளே, நீர், யானையின் தோலை உரித்துப் போர்த்தி அனலாடலை விரும்பியது ஏனோ? சொல்வீராக.


பாடல் எண் : 4
மஞ்சு உலாவிய மாட மதில்பொலி மாளிகைச்
செஞ் சொலாளர்கள் தாம் பயிலும் திரு வான்மியூர்த்
துஞ்சு வஞ்சு இருள் ஆடல் உகக்க வல்லீர் சொலீர்
வஞ்ச நஞ்சு உண்டு வானவர்க்கு இன்அருள் வைத்ததே.

         பொழிப்புரை :மேகங்கள் உலாவும் மாடங்களையும் மதில்களையும் அழகிய மாளிகைகளையும் உடையதால், இனிய சொற்களைப் பேசுவோர் வாழ்வதாய் விளங்கும் திருவான்மியூரில், எல்லோரும் உறங்கும் கரிய இருட்போதில் ஆடலை விரும்பி மேற்கொள்ளும் வன்மையை உடையவராய் இலங்கும் இறைவரே!, கரியவிடத்தை நீர் உண்டு தேவர்களுக்கு இனிய அருள் வழங்கியது ஏனோ? சொல்வீர்.


பாடல் எண் : 5
மண்ணினில் புகழ் பெற்றவர் மங்கையர் தாம்பயில்
திண் எனப் புரிசைத் தொழிலார் திருவான்மியூர்த்
துண் எனத் திரியும் சரிதைத் தொழிலீர் சொலீர்
விண்ணினில் பிறை செஞ்சடை வைத்த வியப்பதே.

         பொழிப்புரை :உலகோரால் புகழப்பெறும் குணநலங்களை உடைய மகளிரையும், உறுதியான வேலைப்பாடுகள் பொருந்திய மதில்களையும் உடைய திருவான்மியூரில் எல்லோரும் வியப்படையும் வண்ணம் பலியேற்கும் தொழிலை மேற்கொண்டு உறைபவரே, நீர் வானத்தில் விளங்கும் வெண்பிறையை உம் செஞ்சடை மேல் வைத்துள்ள வியப்புடைச் செயலை ஏன் செய்தீர்? சொல்வீராக.

  
பாடல் எண் : 6
போது உலாவிய தண்பொழில் சூழ் புரிசைப் புறம்
தீது இல் அந்தணர் ஓத்து ஒழியாத் திருவான்மியூர்ச்
சூது உலாவிய கொங்கையொர் பங்கு உடையீர் சொலீர்
மூது எயில் ஒரு மூன்று எரி ஊட்டிய மொய்ம்புஅதே.

         பொழிப்புரை :மலர்கள் நிறைந்த குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்ததும், மதில்களைப் புறத்தே உடையதும், குற்றமற்ற அந்தணர்கள் வேதம் ஓதுதலை இடையறாது உடையதுமாகிய திருவான்மியூரில் சூதாடு கருவி போன்ற வடிவுடைய தனங்களைக் கொண்ட உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு எழுந்தருளியிருப்பவரே! பழமையான முப்புரங்களை எரிசெய்து அழித்த உமது வீரச்செயலுக்குக் காரணம் யாதோ? சொல்வீர்.


பாடல் எண் : 7
வண்டு இரைத்த தடம் பொழிலின் நிழல் கானல்வாய்த்
தெண் திரைக்கடல் ஓதமல்கும் திருவான்மியூர்த்
தொண்டு இரைத்துஎழுந்து ஏத்திய தொல் கழலீர்சொலீர்
பண்டு இருக்குஒரு நால்வர்க்கு நீர்உரை செய்ததே.

         பொழிப்புரை :வண்டுகள் ஒலிக்கும் பெரிய சோலைகளின் நிழலிலும் கானலிலும் தெளிந்த அலைகளை உடைய திருவான்மியூரில் அடியவர்கள் சிவநாமங்களைச் சொல்லித் துதிக்கும், பழமையான கழல்களை அணிந்துள்ள இறைவரே! முற்காலத்தே நீர் சிவஞானத்தைச் சனகாதியர் நால்வர்க்கு மட்டும் உபதேசித்தது ஏனோ? கூறுவீர்.


பாடல் எண் : 8
தக்கில் வந்த தசக் கிரிவன் தலை பத்து இறத்
திக்கில் வந்து அலறவ்வடர்த்தீர், திரு வான்மியூர்த்
தொக்க மாதொடும் வீற்றிருந்தீர் அருள் என்சொலீர்
பக்கமே பல பாரிடம் பேய்கள் பயின்றதே.

         பொழிப்புரை :தகுதியற்ற நெறியில் வந்த இராவணன் கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்டுத் தன் தலைகள் பத்தும் பல திசைகளிலும் வெளிப்பட்டு அவன் அலறுமாறு அவனை அடர்த்தவரே! திருவான்மியூரில் தன் திருமேனியோடு இணைந்த உமையம்மை யாரோடும் வீற்றிருந்தருளியவரே! பல பூதகணங்களும், பேய்க்கணங்களும் உம்மைச் சூழ்ந்து பயிலக் காரணம் யாதோ? சொல்வீராக.


பாடல் எண் : 9
பொருது வார்கடல் எண்திசை யும்தரு வாரியால்
திரி தரும்புகழ் செல்வ மல்கும் திரு வான்மியூர்ச்
சுருதியார் இருவர்க்கும் அறிவு அரியீர் சொலீர்
எருது மேல்கொடு உழன்றுஉகந்து இல்பலி ஏற்றதே.

         பொழிப்புரை :பெரிய கடல் அலைகள் எட்டுத் திசைகளிலிருந்தும் கொண்டு வந்து தரும் முத்து பவளம் முதலிய வளங்களால் பரவிய புகழ், செல்வம் ஆகியன நிறைந்த திருவான்மியூரில் வேதங்களை ஓதி மகிழும் திருமால், பிரமன் ஆகிய இருவர்க்கும் அறிதற் கரியவராய் விளங்கும் இறைவரே! எருதின்மேல் ஏறி உழன்று பல இடங்கட்கும் மகிழ்வோடு சென்று பலியேற்றற்குரிய காரணத்தைக் கூறுவீராக.

  
பாடல் எண் : 10
மை தழைத்து எழு சோலையின் மாலைசேர் வண்டினம்
செய் தவத் தொழிலார் இசை சேர் திரு வான்மியூர்
மெய் தவப்பொடி பூசிய மேனியினீர் சொலீர்
கைதவச் சமண் சாக்கியர் கட்டுரைக் கின்றதே.

         பொழிப்புரை :கருநிறம் மிக்குத்தோன்றும் சோலையின்கண்  மாலைக்காலத்தில் வண்டுகள் குழுமித் தவஞ்செய்யும் தொழிலையுடைய அந்தணர் ஓதும் வேதாகமம் போல் இசைபாடிச் சேர்கின்ற திருவான்மியூரில், மேனிமீது மிகுதியாக வெண்பொடியணிந்த திருமேனியை உடையவரே! வஞ்சனையை உடைய சமணர் சாக்கியர் உம்மீது பொய்யுரை கூறிப்பழித்துரைக்கக் காரணம் யாதோ? கூறீர்.


பாடல் எண் : 11
மாதொர் கூறு உடை நல் தவனை, திரு வான்மியூர்
ஆதி எம்பெரு மான் அருள் செய்ய, வினாவுரை
ஓதி இயன்று எழு காழியுள் ஞானசம் பந்தன்சொல்
நீதியால் நினைவார் நெடு வான் உலகு ஆள்வரே.

         பொழிப்புரை :உமையம்மையை ஒரு கூறாக உடைய நல்ல தவத்தின் வடிவாய் திருவான்மியூரில் உறையும் ஆதியாகிய எம் பெருமான் அருள் செய்தற்பொருட்டு வினாவிய இதனை ஓதி, ஊழி முடிவாகிய அக்காலத்தே மிதந்து எழுந்த காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன்தன் சொல்லால் எழுந்த இப்பதிகத்தை முறையோடு நினைபவர் நீண்ட வானுலகை ஆள்வர்.

                                             திருச்சிற்றம்பலம்


3. 055    திருவான்மியூர்                      பண் - கௌசிகம்
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
விரைஆர் கொன்றையினாய், விடம்உண்ட மிடற்றினனே,
உரைஆர் பல்புகழாய், உமைநங்கையொர் பங்குஉடையாய்,
திரைஆர் தெண்கடல்சூழ் திருவான்மி யூர்உறையும்
அரையா, உன்னை அல்லால் அடையாதுஎனது ஆதரவே.

         பொழிப்புரை : நறுமணம் கமழும் கொன்றைமலரை அணிந்தவனே. விடமுண்ட கறுத்த கண்டத்தினனே. அடியவர்களால் பலவாகப் புகழ்ந்துரைக்கப் படுபவனே. உமாதேவியைத் தன்திரு மேனியில் ஒரு பாகமாகக் கொண்டவனே. அலைவீசும் அழகிய கடல் சூழ்ந்த திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் அரசனே! உன்னைத்தவிர என்மனம் ஆதரவாக வேறெதையும் அடையாது.


பாடல் எண் : 2
இடிஆர் ஏறுஉடையாய், இமையோர் தம் மணிமுடியாய்,
கொடிஆர் மாமதியோடு அரவம்மலர்க் கொன்றையினாய்,
செடிஆர் மாதவிசூழ் திருவான்மி யூர்உறையும்
அடிகேள் உன்னைஅல்லால் அடையாதுஎனது ஆதரவே.

         பொழிப்புரை : இடிபோல் முழங்கும் இடபத்தை வாகனமாக உடையவனே! தேவர்கள் தங்கள் மணிமுடி உன் திருப்பாதத்தில் படும்படி வணங்க அவர்கட்கு வாழ்வளிக்கும் முதற்பொருளே! இடபக்கொடியும், சந்திரனும், பாம்பும், கொன்றைமலரும் உடைய இறைவனே! செடிகளோடு கூடிய மாதவி மலரின் மணம் சூழ்ந்த திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் தலைவனான சிவபெருமானே! உன்னைத் தவிர என் மனம், ஆதரவாக வேறெதையும் அடையாது.


பாடல் எண் : 3
கைஆர் வெண்மழுவா, கனல்போல் திரு மேனியனே,
மைஆர் ஒண்கண்நல்லாள் உமையாள்வளர் மார்பினனே,
செய்ஆர் செங்கயல்பாய் திருவான்மி யூர்உறையும்
ஐயா, உன்னைஅல்லால் அடையாதுஎனது ஆதரவே.

         பொழிப்புரை : கையின்கண் பொருந்திய வெண்மையான மழு வாயுதத்தை உடையவனே! கனல் போன்ற சிவந்த திருமேனியனே! மை பூசப் பெற்ற, ஒளி பொருந்திய கண்களை உடைய நல்லவளாகிய உமையம்மை கண்வளரும் மார்பினனே! வயல்களில் செங்கயல்கள் பாயும் வளம் பொருந்திய திருவான்மியூரில் உறையும் ஐயனே! உன்னையல்லால் எனது அன்பு பிறிதொருவரைச் சென்றடையாது.


பாடல் எண் : 4
பொன்போ லும்சடைமேல் புனல் தாங்கிய புண்ணியனே,
மின்போ லும்புரிநூல் விடைஏறிய வேதியனே,
தென்பால் வையம்எலாம் திகழுந்திரு வான்மிதன்னில்
அன்பா, உன்னைஅல்லால் அடையாதுஎனது ஆதரவே.

         பொழிப்புரை : பொன்போல் ஒளிரும் சடைமேல் கங்கையைத் தாங்கிய புண்ணியமூர்த்தியே! மின்போல் ஒளிரும் முப்புரிநூல் அணிந்து, இடப வாகனத்திலேறி, வேதங்களை அருளிச் செய்தவனாய், வேதப் பொருளாகவும் விளங்குபவனே! உலகெலாம் இன்புறத் திருவான்மியூர் என்னும் தலத்தில் வீற்றிருந்தருளும் அன்புருவான உன்னையல்லால் என் மனம் வேறெதையும் ஆதரவாக அடையாது.


பாடல் எண் : 5
கண்ஆ ரும்நுதலாய், கதிர்சூழ்ஒளி மேனியின்மேல்
எண்ஆர் வெண்பொடிநீறு அணிவாய், எழில் வார்பொழில்சூழ்
திண்ஆர் வண்புரிசைத் திருவான்மி யூர்உறையும்
அண்ணா, உன்னைஅல்லால் அடையாதுஎனது ஆதரவே.

         பொழிப்புரை : நெற்றிக்கண்ணை உடையவனே! கதிர்போல் ஒளிரும் திருமேனி மீது திருவெண்ணீற்றினை அணிந்துள்ளவனே! அழகிய சோலைகள் சூழ்ந்த உறுதியான மதில்களை உடைய திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் தந்தையே! உன்னையல்லால் என்மனம் வேறெதையும் ஆதரவாக அடையாது.


பாடல் எண் : 6
நீதி, நின்னைஅல்லால் நெறியாதும் நினைந்துஅறியேன்,
ஓதீ நான்மறைகள், மறையோன்தலை ஒன்றினையும்
சேதீ, சேதம்இல்லாத் திருவான்மி யூர்உறையும்
ஆதீ, உன்னைஅல்லால் அடையாதுஎனது ஆதரவே.

         பொழிப்புரை : நீதிவடிவாயுள்ளவனே! உன்னையே நினைப்பதல்லாமல் உன்னை வழிபடுதற்குரிய நெறி வேறொன்றை அறிந்திலேன். நால்வேதங்களை அருளிச் செய்தவனே! பிரமன் தலை ஒன்றை நகத்தால் கிள்ளியவனே! எத்தகைய குறைவுமின்றி வளம் பொருந்திய திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் ஆதிமூர்த்தியே! உன்னையல்லால் என்மனம் வேறெதையும் ஆதரவாக அடையாது.


பாடல் எண் : 7
வான்ஆர் மாமதிசேர் சடையாய்,வரை போலவரும்
கான்ஆர் ஆனையின்தோல் உரித்தாய்,கறை மாமிடற்றாய்,
தேன்ஆர் சோலைகள்சூழ் திருவான்மி யூர்உறையும்
ஆனாய், உன்னைஅல்லால் அடையாதுஎனது ஆதரவே.

         பொழிப்புரை : வானில் விளங்கும் சந்திரனைச் சடையில் தரித்தவனே! மலைபோல வரும் காட்டிலுள்ள யானையின் தோலை உரித்தவனே! நஞ்சுண்டு கறுத்த கண்டத்தையுடையவனே! தேன் துளிக்கும் மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருவான்மியூரில் இடபவாகனத்தில் வீற்றிருந்தருளும் இறைவனே! உன்னையல்லால் என்மனம் வேறெதையும் ஆதரவாக அடையாது.


பாடல் எண் : 8
* * * * * * * *

பாடல் எண் : 9
பொறிவாய் நாகணையா னொடுபூமிசை மேயவனும்,
நெறிஆர் நீள்கழல்மேல் முடிகாண்புஅரிது ஆயவனே,
செறிவுஆர் மாமதில்சூழ் திருவான்மி யூர்உறையும்
அறிவே, உன்னைஅல்லால் அடையாதுஎனது ஆதரவே.

         பொழிப்புரை : நெருப்புப் பொறிபோல் விடம் கக்கும் வாயுடைய பாம்பைப் படுக்கையாகக் கொண்ட திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், நன்னெறி காட்டும் உனது நீண்ட திருவடியையும், மேலோங்கும் திருமுடியையும் காண்பதற்கு அரியவனாய் விளங்கியவனே! நெருக்கமாக நீண்ட பெரிய மதில்கள் சூழ்ந்த திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் முற்றுணர்வும், இயற்கை உணர்வுமுடையவனே! உன்னையல்லால் என் மனம் வேறெதையும் ஆதரவாக அடையாது.


பாடல் எண் : 10
குண்டு ஆடும்சமணர் கொடுஞ்சாக்கியர் என்றுஇவர்கள்
கண்டார் காரணங்கள் கருதாதுஅவர் பேசநின்றாய்,
திண்தேர் வீதியதுஆர் திருவான்மி யூர்உறையும்
அண்டா, உன்னைஅல்லால் அடையாதுஎனது ஆதரவே.

         பொழிப்புரை : விதண்டாவாதம் செய்கின்ற சமணர்களும், முரட்டுத் தன்மையுடைய புத்தர்களும் காரணம் அறியாதவராய் உன்னைப்பேச வீற்றிருந்தாய். வலிமை வாய்ந்த தேரோடும் வீதிகளையுடைய திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் தேவனே! உன்னையல்லால் என் மனமானது ஆதரவாக வேறெதையும் நாடாது.


பாடல் எண் : 11
கன்று ஆரும்கமுகின் வயல்சூழ்தரு காழிதனில்
நன்றுஆன புகழான் மிகுஞானசம் பந்தன்உரை
சென்றார் தம்இடர்தீர் திருவான்மி யூர்அதன்மேல்
குன்றாது ஏத்தவல்லார் கொடுவல்வினை போய்அறுமே.

         பொழிப்புரை : பாக்குமரக் கன்றுகள் வயல்களைச் சூழ்ந்து விளங்குகின்ற சீகாழியில் அவதரித்து, நல்ல புகழ் மிகுந்த ஞானசம்பந்தன், இடர்தீர்க்கும் திருவான்மியூரின் மேல் போற்றி அருளிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்குக் கொடிய தீவினையானது நீங்கும்.

                                             திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 330
நீடுதிருக் கழுக்குன்றில்
         நிருத்தனார் கழல்வணங்கி,
பாடுதமிழ்த் தொடைபுனைந்து,
         பாங்குபல பதிகளிலும்
சூடும்இளம் பிறைமுடியார்
         தமைத்தொழுது போற்றிப்போய்,
மாடுபெரும் கடல்உடுத்த
         வான்மியூர் வந்துஅணைந்தார்.

         பொழிப்புரை : நாவரசர் நிலைத்த செல்வம் உடைய கழுக் குன்றத்தில் வீற்றிருக்கும் கூத்தப் பெருமானின் திருவடிகளை வணங்கி, அருந்தமிழ் மாலையைப் பாடி, அருகிலுள்ள பல திருப்பதிகளுக்கும் சென்று, பிறையைச் சூடும் திருமுடியினையுடைய இறைவரை வணங்கிப் போற்றி, மேலும் சென்று, கடலால் சூழப்பட்ட திருவான்மியூர் என்னும் திருப்பதியைச் சேர்ந்தார்.


பெ. பு. பாடல் எண் : 331
திருவான்மி யூர்மருந்தைச்
         சேர்ந்து,பணிந்து, அன்பினொடும்
பெருவாய்மைத் தமிழ்பாடி,
         அம்மருங்கு பிறப்புஅறுத்துத்
தருவார்தம் கோயில்பல
         சார்ந்து,இறைஞ்சி, தமிழ்வேந்தர்
மருஆரும் மலர்ச்சோலை
         மயிலாப்பூர் வந்து அடைந்தார்.

         பொழிப்புரை : திருவான்மியூரில் வீற்றிருக்கும் மருந்தீசரைச் சேர்ந்து பணிந்து, அன்புடன் பெருவாய்மை பொருந்திய தமிழ்ப் பதிகம் பாடி, அதன் அருகிலுள்ள பிறவியை அறுத்து வீடு பேற்றை அருளுதற்குரிய இறைவரின் பல திருப்பதிகளையும் அடைந்து, வணங்கி, தமிழ் மன்னரான நாவுக்கரசர் மணம் நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த மயிலாப்பூரை வந்தடைந்தார்.

         குறிப்புரை : திருவான்மியூரில் அருளியது `விண்ட மாமலர்` (தி.5 ப.82) எனத் தொடங்கும் திருக்குறுந்தொகைப் பதிகமாகும். இறைவர் பெயர் மருந்தீசர் ஆதலின் மருந்துநாதர் என்றார். கோயில் பல என்பன நெடுங்குன்றம், குன்றத்தூர், திருநின்றவூர், திருவேற்காடு, நெற்குன்றம், திருவலிதாயம் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவி மணியார். பதிகங்கள் எவையும் கிடைத்தில.


5. 082    திருவான்மியூர்          திருக்குறுந்தொகை
                           திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர்
அண்டர் நாயகன் தன்அடி சூழ்மின்கள்,
பண்டு நீர்செய்த பாவம் பறைந்திடும்,
வண்டு சேர்பொழில் வான்மியூர் ஈசனே.

         பொழிப்புரை : விரிந்த மாமலர்களைக் கொண்டு விரைந்து நீர் , தேவர்நாயகனும் , வண்டுசேர் பொழில்களை உடைய வான்மியூர் ஈசனுமாகிய இறைவன் சேவடியைச் சூழ்வீர்களாக ; முன்பு செய்த பாவங்கள் கெடும் .


பாடல் எண் : 2
பொருளும் சுற்றமும் பொய்ம்மையும் விட்டு,நீர்
மருளும் மாந்தரை மாற்றி மயக்குஅறுத்து
அருளு மாவல்ல ஆதியாய் என்றலும்
மருள் அறுத்திடும் வான்மியூர் ஈசனே.

         பொழிப்புரை : பொருளும் , சுற்றத்தாருமாகிய பொய்ம்மையை விட்டு நீர் மருளுதற்குரிய மாந்தரை மாற்றி மயக்கம் நீக்கி அருளு மாறுவல்ல ஆதியாய் ! என்று கூறியதும் வான்மியூர் ஈசன் மயக்கம் நீக்குவன் .


பாடல் எண் : 3
மந்தம் ஆகிய சிந்தை மயக்குஅறுத்து
அந்தம் இல்குணத் தானை அடைந்துநின்று,
எந்தை ஈசன்என்று ஏத்திட வல்லிரேல்
வந்து நின்றிடும் வான்மியூர் ஈசனே.

         பொழிப்புரை : மந்தமாகிய சிந்தையின் மயக்கத்தை அறுத்து முடிவற்ற குணத்தை உடையவனாகிய பெருமானை அடைந்துநின்று எந்தையே ! ஈசனே ! என்று வழிபடவல்லமை உடையீரேயாயின் வான்மியூர் ஈசன் வந்து நின்றிடும் .


பாடல் எண் : 4
உள்ளம் உள்கலந்து ஏத்தவல் லார்க்குஅலால்
கள்ளம் உள்ள வழிக்கசி வான்அலன்
வெள்ள மும்அர வும்விர வுஞ்சடை
வள்ளல் ஆகிய வான்மியூர் ஈசனே.

         பொழிப்புரை : கங்கையும் பாம்பும் கலக்கும் சடையோடு கூடிய வள்ளலாகிய வான்மியூர் ஈசன் , உள்ளம் கலந்து ஏத்த வல்லவர்க்கு அல்லால் கள்ளம் உள்ளவழிக் கசிவான் அல்லன் .


பாடல் எண் : 5
படங்கொள் பாம்பரை, பால்மதி சூடியை,
வடங்கொள் மென்முலை மாதுஒரு கூறனை,
தொடர்ந்து நின்று தொழுதுஎழு வார்வினை
மடங்க நின்றிடும் வான்மியூர் ஈசனே.

         பொழிப்புரை : படம் கொண்ட பாம்பு உடையவனும் , பால் மதி சூடியவனும் , மாலைகள் கொண்ட மென்முலைமாதாகிய உமையொரு கூறனுமான வான்மியூர் ஈசன் , தொடர்ந்து நின்று தொழுது எழுவார் வினைகள் மடங்க முன்னே வந்து நின்று அருளுவான் .


பாடல் எண் : 6
நெஞ்சில் ஐவர் நினைக்க நினைக்குறார்
பஞ்சின் மெல்அடி யாள்உமை பங்கஎன்று
அஞ்சி நாண்மலர் தூவி அழுதிரேல்
வஞ்சம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே.

         பொழிப்புரை : ` நெஞ்சில் நினைக்க ஐம்புலக் கள்வர் நினைக்கவையார் ; பஞ்சனைய மெல்லடியாளாகிய உமைபங்கனே !` என்று அஞ்சிப் புதிய மலர்கள் தூவி அழுதீரேல் வான்மியூர் ஈசன் உம் வஞ்சனையைத் தீர்ப்பர் .


பாடல் எண் : 7
நுணங்கு நூல்அயன் மாலும் அறிகிலாக்
குணங்கள் தான்பர விக்குறைந்து உக்கவர்
சுணங்கு பூண்முலைத் தூமொழி யார்அவர்
வணங்க நின்றிடும் வான்மியூர் ஈசனே.

         பொழிப்புரை : நுண்ணிய நூல் பல உணர்ந்த பிரமனும் திருமாலும் அறியும்வல்லமை இல்லாத பேரருட் குணங்களைப் பரவி சுணங்கு படர்ந்த பூண்களை உடைய முலையையும் தூய மொழியையும் உடைய பெண்கள் வணங்க வான்மியூர் ஈசன் நின்றிடுவான் .


பாடல் எண் : 8
ஆதி யும்அர னாய்அயன் மாலுமாய்ப்
பாதி பெண்உரு ஆய பரமன்என்று
ஓதி உள்குழைந்து ஏத்தவல் லார்அவர்
வாதை தீர்த்திடும் வான்மியூர் ஈசனே.

         பொழிப்புரை : வான்மியூர் ஈசன் முதலாகிய மூர்த்தி அரனும் அயனும் திருமாலும் ஆயவன் . பாதிபெண்ணுருவுமாகிய பரமன் என்று ஓதி உள்ளம் குழைந்து ஏத்த வல்லமை உடையவர்களின் துன்பங்களைத் தீர்த்திடுவான் .


பாடல் எண் : 9
ஓட்டை மாடத்தில் ஒன்பது வாசலும்
காட்டில் வேவதன் முன்னம் கழல்அடி
நாட்டி நாண்மலர் தூவி வலஞ்செயில்
வாட்டம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே.

         பொழிப்புரை : ஓட்டை மாடமாகிய உடம்பில் உள்ள ஒன்பது வாயில்களும் இடுகாட்டில் வெந்து எரிந்து சாம்பலாவதன் முன் , தன் கழலடியை நெஞ்சில் நாட்டிப் புதுமலர் தூவி வலம் செய்தால் வான்மியூரீசன் வாட்டம் தீர்ப்பான் .


பாடல் எண் : 10
பாரம் ஆக மலைஎடுத் தான்தனைச்
சீரம் ஆகத் திருவிரல் ஊன்றினான்,
ஆர்வம் ஆக அழைத்துஅவன் ஏத்தலும்
வாரம் ஆயினன் வான்மியூர் ஈசனே.

         பொழிப்புரை : பாரமாகத் திருக்கயிலையை எடுத்த இராவணனைச் சிதையும்படி திருவிரலால் ஊன்றியவனும் , ஆர்வம் பெருகி அழைத்து அவன் ஏத்தலும் அன்பு கொண்டவனும் வான்மியூர் ஈசன் ஆவன் .

                                             திருச்சிற்றம்பலம்
No comments:

Post a Comment

பெரியோரை அவமதித்தல் கொலைக்குச் சமம்

                                         பெரியோரை அவமதித்தல் கொலைக்குச் சமம். -----        பாரதப் போரின் தளபதியாக துரியோதனனால் நியமனம் செய்ய...