திருக் கூடலையாற்றூர்


திருக் கூடலையாற்றூர்

     நடு நாட்டுத் திருத்தலம்.

         வெள்ளாறு, மணிமுத்தாறு ஆகிய இரண்டு நதிகள் கூடும் இடத்தில் திருக்கூடலையாற்றூர் திருத்தலம் அமைந்திருக்கிறது. இத்தலத்திற்குச் செல்ல விருத்தாசலத்தில் இருந்து புவனகிரி செல்லும் பாதையில் சென்று வளையமாதேவி என்னும் இடத்தில் இறங்கிச் செல்ல வேண்டும். விருத்தாசலத்தில் இருந்து சுமார் 23 கி.மீ. தொலைவில் உள்ளது.

         சிதம்பரத்திலிருந்து காவாலக்குடி செல்லும் பேருந்தில் சென்று அதை அடுத்துள்ள இத்தலத்தை அடையலாம். சிதம்பரத்திலிருந்து இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது. சிதம்பரம் - காவாலகுடி நகரப் பேருந்து உள்ளது.

         கும்பகோணம் - சேத்தியாதோப்பு சாலையில் குமாரகுடி என்ற இடத்தை அடைந்து, அங்கிருந்து ஸ்ரீ முஷ்ணம் போகும் பாதையில் பிரிந்து 2 கி.மீ. சென்று, பின் காவாலகுடி செல்லும் சாலையில் திரும்பி, 2 கி.மீ. சென்று காவாலகுடியை அடைந்து, அடுத்துள்ள கூடலையாற்றூரை அடையலாம்.

இறைவர்                  : நர்த்தனவல்லபேசுவரர், நெறிகாட்டுநாதர்.

இறைவியார்              : பராசத்தி, ஞானசத்தி, (இரு அம்பாள் சந்நிதிகள்) 
                                      (புரிகுழல்நாயகி)
                                                                                                                                                                                                                       
தல மரம்                   : கல்லால மரம் - தற்போது இல்லை.

தீர்த்தம்                    : சங்கமத்தீர்த்தம் (வெள்ளாறும் மணிமுத்தாறும் கூடும் இடம்)

தேவாரப் பாடல்கள்         : சுந்தரர் - வடிவுடை மழுவேந்தி.


     இராஜகோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டது. கோபுர வாயல் வழியே நுழைந்தால் நந்திதேவர் மட்டும் காணப்படுகிறார். கொடிமரம் பலிபீடம் இல்லை. வெளிச் சுற்றில் பக்க வாயில் உள்ளது. அமுத விநாயகர், விசுவநாத லிங்கம், ஆறுமுகர், ஞானசக்தி அம்பாள் முதலிய சந்நிதிகள் உள்ளன. அம்பாள் நின்ற திருக்கோலம். இத்தேவி மிகவும் சக்திவாய்ந்த அம்மை என்று மக்கள் போற்றி வழிபடுகின்றனர். மூலவர் விமானம் இரு தள அமைப்புடையது. படிகள் ஏறி மேலே சென்றால் அழகிய மண்டபம் உள்ளது. துவார கணபதியை வணங்கி உட்சென்றால் மூலவரைத் தரிசிக்கலாம். கம்பீரமான சிவலிங்க திருமேனி. கோஷ்டமூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரமன், அஷ்டபுஜ துர்க்கை முதலியவைகள் உள்ளன. சண்டேசுவரர் சந்நிதி எதிரில் உள்ளது. சுவாமிக்கு வலதுபுறம் பராசக்தி அம்பாள் சந்நிதி உள்ளது. இதுவும் நின்ற திருக்கோலமே. நடராச சபையில் சிவகாமி மூர்த்தமும் உள்ளது. சித்திரை மாதம் முதல் மூன்று தேதியில் மூலவரின் மீது சூரிய ஒளிபட்டு சூரியபூஜை நடக்கிறது.

         எமதர்மராஜாவின் உதவியாளரான சித்திரகுப்தருக்கு சன்னதி இருப்பது ஒரு சில கோயில்களில் மட்டுமே. இங்குள்ள சித்ரகுப்தர் உற்சவ மூர்த்தியாக ஒரு கையில் எழுத்தாணியும், மறு கையில் ஏடும் கொண்டு காட்சி தருகிறார்.

     இக்கோயிலில் நவக்கிரக சந்நிதியில்லை.

     மூலவரைத் தரிசித்து விட்டு வரும்போது வலதுபுறம் சனிபகவான் சந்நிதி மட்டும் உள்ளது. பொதுவாக சிவன் கோயில்களில் சிவனுடன் ஒரு அம்மன் சன்னதி இருப்பது வழக்கம். ஆனால் திருக்கூடலையாற்றூரில் உள்ள நர்த்தன வல்லபேஸ்வரர் கோயிலில் இரண்டு அம்மன் சன்னதிகள் உள்ளன. ஞானசக்தி, பராசக்தி என்ற பெயர்களில் இரண்டு அம்மன் அருள்பாலிக்கிறாள். ஞானசக்தி சந்நிதிதியில் குங்குமமும், பராசக்தி சந்நிதியில் விபூதியும் பிரசாதமாக தரப்படுகிறது. இவர்களை வழிபடுவதன் மூலம் கல்வி அறிவு விருத்தியாகும். ஆற்றல் பெருகும் என்பது நம்பிக்கை.

         காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "நீங்காது நீடு அலைஆற்றூர் நிழல் மணிக் குன்று ஓங்கு திருக் கூடலையாற்றூர்க் குணநிதியே" என்று போற்றி உள்ளார்.


சுந்தரர் திருப்பதிக வரலாறு:

         சுவாமிகள் திருப்புறம்பயத்திலிருந்து பல தலங்களையும் வணங்கிக் கொண்டு செல்லும் பொழுது திருக்கூடலையாற்றூர் சார,அதனையடையாது திருமுதுகுன்றத்தை நோக்கிச் செல்லுகின்றபொழுது வழியில் பெருமான் வேதியர் வடிவங்கொண்டு நம்பியாரூரர் முன் நின்றார். நம்பியாரூரர் எதிரில் நின்ற வேதியரை வணங்கி, 'திருமுதுகுன்று எய்துதற்கு வழி இயம்பும்' எனக் கூற, பெருமானும், 'கூடலையாற்றூர் ஏறச்சென்றது இவ்வழி தான்' என்று கூறி, வழித்துணையாய்ச் சென்று மறைந்தருளினார். அப்பொழுது வேதியர் வடிவில் வந்தவர் பெருமானே என்று அதிசயித்து, "அடிகள் இவ்வழி போந்த அதிசயம் அறியேனே" எனப் பாடியருளியது இத் திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 103)

பெரிய புராணப் பாடல் எண் : 100
வம்புநீடு அலங்கல் மார்பின்
         வன்தொண்டர், வன்னி கொன்றை
தும்பைவெள் அடம்பு திங்கள்
         தூயநீர் அணிந்த சென்னித்
தம்பிரான் அமர்ந்த தானம்
         பலபல சார்ந்து, தாழ்ந்து,
கொம்புஅனார் ஆடல் நீடு
         கூடலை யாற்றூர் சார.

         பொழிப்புரை : நறுமணம் மிக்க மாலை அணிந்த மார்பினை உடைய ஆரூரர், வன்னி, கொன்றை, தும்பை, வெள்ளெருக்கு, இளம் பிறை, தூய கங்கைநீர் ஆகியவற்றை அணிந்த சடையையுடைய சிவபெருமான் இருந்தருளும் திருப்பதிகள் பலவற்றையும் வணங்கிப் பூங்கொடியின் வனப்புடைய பெண்கள் ஆடல் மிகுந்த கூடலை ஆற்றூரை அணுக,


பெ. பு. பாடல் எண் : 101
செப்பரும் பதியில் சேரார்,
         திருமுது குன்றை நோக்கி
ஒப்புஅரும் புகழார் செல்லும்
         ஒருவழி, உமையா ளோடும்
மெய்ப்பரம் பொருளாய் உள்ளார்
         வேதியர் ஆகி நின்றார்,
முப்புரி நூலும் தாங்கி
         நம்பியா ரூரர் முன்பு.

         பொழிப்புரை : ஆயினும், ஒப்பற்ற புகழுடைய சுந்தரர் பெருமான் சொலற்கரிய பெருமையுடைய திருக்கூடலையாற்றூருக்குச் சேராதவராய்த் திருமுதுகுன்றை நோக்கிச் செல்லலும், அவ்வழியில் உமையம்மையாரோடு வீற்றிருந்தருளும் உண்மையான மேலான பொருளாக விளங்கும் சிவபெருமான், ஓர் அந்தணர் வடிவு கொண்டு, முப்புரி நூல் அணிந்து அவர் முன்பு நின்றார்.


பெ. பு. பாடல் எண் : 102
நின்றவர் தம்மை நோக்கி,
         நெகிழ்ந்தசிந் தையராய்த் தாழ்வார்,
"இன்றுயாம் முதுகுன்று எய்த
         வழிஎமக்கு இயம்பும்" என்னக்
குன்றவில் லாளி யாரும்
         "கூடலை யாற்றூர் ஏறச்
சென்றதுஇவ் வழிதான்" என்று
         செல்வழித் துணையாய்ச் செல்ல.

         பொழிப்புரை : அவ்வழியில் நின்ற அந்தணர் பெருமானை, நம்பிகள் நோக்கி, நெகிழ்ந்த சிந்தை உடையவராகித் தாழ்ந்து வணங்கி, `இன்று யாம் திருமுதுகுன்றத்தைச் சேர்தற்குரிய வழியைச் சொல்லும்' என்னலும், அதுபொழுது மேருமலையை வில்லாக உடைய சிவபெருமான் அவரை நோக்கிக் `கூடலையாற்றூரை அடைதற்குரிய வழி இதுவாகும்' என்று கூறியருளித் தாமும் அவருக்கு வழித்துணையாகச் சென்றிடலும்,


பெ. பு. பாடல் எண் : 103
கண்டவர் கைகள் கூப்பித்
         தொழுதுபின் தொடர்வார்க் காணார்,
வண்டுஅலர் கொன்றை யாரை
         "வடிவுடை மழு"என்று ஏத்தி,
அண்டர்தம் "பெருமான் போந்த
         அதிசயம் அறியேன்" என்று,
கொண்டுஎழு விருப்பி னோடும்
         கூடலை யாற்றூர் புக்கார்.

         பொழிப்புரை : அந்தணனாய எம்பிரான் வழித்துணையாக முன் போகக்கண்டு, கைகள் கூப்பித் தொழுது, பின்னாகச் செல்பவர், முன் போன அந்தணனாரைக் காணாதவராகி, வண்டுகள் மொய்க்க இதழ் விரிந்து விளங்கும் மலர் சூடிய சிவபெருமானை உடன் நினைந்து தொழுது, `வடிவுடை மழு\' எனத் தொடங்கும் பதிகம் பாடிப் போற்றித் தேவர்கள் தலைவனாம் சிவபெருமானார் `இவ்வழிப் போந்த அதிசயம் அறியேன் யான்' என அப்பதிகத்து மொழிந்து, எம்பிரான் மீது கொண்டெழுகின்ற பெருவிருப்பத்துடன் திருக்கூடலையாற்றூருக்குச் சென்றருளினார்.

         குறிப்புரை : `வடிவுடை மழு' எனத் தொடங்கும் பதிகம் புறநீர்மைப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.85). `இவ்வழி போந்த அதிசயம் அறியேனே' எனப் பாடல்தொறும் வரும் நிறைவுத் தொடர் ஆசிரியர் சேக்கிழார் அருளும் இவ்வரலாற்றிற்கு அரணாய் அமைந்துள்ளமை அறியத்தக்கது.

   
பெ. பு. பாடல் எண் : 104
கூடலை யாற்றூர் மேவும்
         கொன்றைவார் சடையி னார்தம்
பீடுஉயர் கோயில் புக்கு,
         பெருகிய ஆர்வம் பொங்க,
ஆடகப் பொதுவில் ஆடும்
         அறைகழல் வணங்கிப் போற்றி,
நீடுஅருள் பெற்றுப் போந்து,
         திருமுது குன்றில் நேர்ந்தார்.

         பொழிப்புரை : அத்திருநகரில் வீற்றிருந்தருளும், கொன்றை மலர் சூடிய சடையையுடைய, பெருமானது பெருமை மிகுந்த கோயிலினுள் புகுந்து, உள்ளத்துப் பெருகிய ஆர்வம் பொங்கிட, பொன்னாலாய திருச்சபையில் திருக்கூத்தியற்றும் பெருமானின் வீரக்கழலை யணிந்த திருவடிகளை வணங்கிப் போற்றிப் பேரருள் பெற்றுப் பின் திருமுதுகுன்றத்தைச் சென்று சேர்ந்தார்.


7. 085    திருக்கூடலையாற்றூர்          பண் - புறநீர்மை
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
வடிஉடை மழுஏந்தி, மதகரிஉரி போர்த்து,
பொடிஅணி திருமேனி, புரிகுழல் உமையோடும்,
கொடிஅணி நெடுமாடக் கூடலை யாற்றூரில்
அடிகள்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே

         பொழிப்புரை : கூர்மையையுடைய மழுப்படையை ஏந்தி , மதத்தை யுடைய யானையினது தோலைப் போர்த்துக்கொண்டு , பின்னிய கூந்தலையுடைய உமாதேவியோடும் , கொடிகள் நாட்டிய உயர்ந்த மாடங்களையுடைய திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற , திருநீற்றை யணிந்த பெருமான் , இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதேயொழிந்தேன் ; இஃதே என் ஏழைமை இருந்தவாறு !


பாடல் எண் : 2
வையகம் முழுதுஉண்ட மாலொடு நான்முகனும்
பையரவு அகல்அல்குல் பாவையொ டும்முடனே
கொய்அணி மலர்ச்சோலைக் கூடலை யாற்றூரில்
ஐயன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே

         பொழிப்புரை : உலகம் முழுதையும் உண்ட திருமாலோடும் . பிரம தேவனோடும் , அரவப் படம்போலும் அல்குலையுடைய , இளைய , பாவைபோலும் உமாதேவியோடும் உடனாகி , கொய்யப்படுகின்ற அழகிய பூக்களையுடைய சோலைகளையுடைய திருக்கூடலை யாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற தலைவன் , இவ்வழியிடை என் முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதேயொழிந்தேன் ; இஃதே என் ஏழைமை இருந்தவாறு !


பாடல் எண் : 3
ஊர்தொறும் வெண்டலைகொண்டு உண்பலி இடும்என்று
வார்தரு மென்முலையாள் மங்கையொ டும்முடனே
கூர்நுனை மழுஏந்திக் கூடலை யாற்றூரில்
ஆர்வன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே

         பொழிப்புரை : ஊர்தோறும் சென்று , வெள்ளிய தலையோட்டை ஏந்தி , ` பிச்சை இடுமின் ` என்று இரந்துண்டு . கச்சணிந்த , மெல்லிய தனங்களையுடையவளாகிய உமாதேவியோடும் உடனாய் , கூரிய முனையையுடைய மழுவை ஏந்திக் கொண்டு , திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற , பேரன்புடையனாகிய பெருமான் , இவ்வழி யிடை என்முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதே யொழிந்தேன் ; இஃதே என் ஏழைமை இருந்தவாறு !


பாடல் எண் : 4
சந்துஅண வும்புனலும் தாங்கிய தாழ்சடையன்
பந்துஅண வும்விரலாள் பாவையொ டும்முடனே
கொந்துஅண வும்பொழில்சூழ் கூடலை யாற்றூரில்
அந்தணன் வழிபோந்த அதிசயம் அறியேனே

         பொழிப்புரை : பிறை முதலிய பிறவற்றோடு அழகு பொருந்திய நீரையும் தாங்கியிருக்கின்ற , நீண்ட சடைமுடியையுடையவனாய் , பந்தின்கண் பொருந்திய விரலை யுடையாளாகிய , பாவைபோலும் உமையோடும் உடனாகி , பூங்கொத்துக்கள் பொருந்திய சோலை சூழ்ந்த திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற , அழகிய கருணையை யுடையவனாகிய பெருமான் , இவ்வழியிடை என்முன் போந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதே யொழிந்தேன் ; இஃதே என் ஏழைமை இருந்தவாறு !


பாடல் எண் : 5
வேதியர் விண்ணவரும் மண்ணவ ரும்தொழநல்
சோதியது உருவாகிச் சுரிகுழல் உமையோடும்
கோதிய வண்டுஅறையும் கூடலை யாற்றூரில்
ஆதிஇவ் வழிபோந்த அதிசயம் அறியேனே

         பொழிப்புரை : அந்தணரும் , தேவரும் , மக்களும் வணங்கி நிற்க , நல்ல ஒளியுருவமாய் , சுரிந்த கூந்தலையுடைய உமாதேவியோடும் , பூக்களில் மகரந்தத்தைக்கிண்டிய வண்டுகள் ஓசையைச் செய்கின்ற திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற முதல்வன் , இவ்வழி யிடை என்முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதே யொழிந்தேன் ; இஃதே என் ஏழைமை இருந்தவாறு !


பாடல் எண் : 6
வித்தக வீணையொடும் வெண்புரி நூல்பூண்டு
முத்துஅன வெண்முறுவல் மங்கையொ டும்முடனே
கொத்துஅல ரும்பொழில்சூழ் கூடலை யாற்றூரில்
அத்தன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே

         பொழிப்புரை : தான் வல்லதாகிய வீணையோடும் , வெள்ளிய முப்புரி நூலை அணிந்து , முத்துப்போலும் வெள்ளிய நகையினை யுடைய உமாதேவியோடும் உடனாகி , பூக்கள் கொத்தின்கண் மலர்கின்ற சோலைகள் சூழ்ந்த திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளி யிருக்கின்ற எந்தை , இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதேயொழிந்தேன் ; இஃதே என் ஏழைமை இருந்த வாறு !


பாடல் எண் : 7
மழைநுழை மதியமொடு வாள்அரவும் சடைமேல்
இழைநுழை துகில்அல்குல் ஏந்திழை யாளோடும்
குழைஅணி திகழ்சோலைக் கூடலை யாற்றூரில்
அழகன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே

         பொழிப்புரை : மேகத்தில் நுழைகின்ற சந்திரனையும் , கொடிய பாம்பையும் சடைக்கண்வைத்து , நுண்ணிய இழைபொருந்திய உயர்ந்த உடையை அணிந்த அல்குலையும் , தாங்கிய அணிகலங் களையும் உடைய உமாதேவியோடும் உடனாகி , தளிர்களது அழகு விளங்குகின்ற சோலைகளையுடைய திருக்கூடலையாற்றூரில் எழுந் தருளியிருக்கின்ற அழகன் , இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதே யொழிந்தேன் ; இஃதே என் ஏழைமை இருந்தவாறு !


பாடல் எண் : 8
மறைமுதல் வானவரும் மால்அயன் இந்திரனும்
பிறைநுதல் மங்கையொடும் பேய்க்கணமும் சூழக்
குறள்படை அதனோடும் கூடலை யாற்றூரில்
அறவன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே

         பொழிப்புரை : வேதத்திற் சொல்லப்பட்ட தலைமைகளையுடைய பலராகிய தேவரும் , அத்தேவர்க்கெல்லாம் தலைவனாகிய இந்திரனும் , பேய்க்கூட்டமும் சூழ்ந்திருக்க , பிறைபோலும் நெற்றியை யுடைய உமாதேவியோடும் , பூதப் படையோடும் , திருக்கூடலை யாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற புண்ணியனாகிய பெருமான் , இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதேயொழிந்தேன் ; இஃதே என் அறியாமை இருந்தவாறு !


பாடல் எண் : 9
வேலையின் நஞ்சுஉண்டு விடைஅது தான்ஏறிப்
பால்அன மென்மொழியாள் பாவையொ டும்முடனே
கோலம் அதுஉருவாகிக் கூடலை யாற்றூரில்
ஆலன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே

         பொழிப்புரை : கடலின்கண் எழுந்த நஞ்சினை உண்டு விடையை ஊர்ந்து , பால்போலும் இனிய மொழியை உடையவளாகிய உமா தேவியோடும் உடனாய கோலமே தனது உருவமாகக் கொண்டு , திருக் கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற ஆல்நிழற்பெருமான் , இவ் வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதே யொழிந்தேன் ; இஃதே என் அறியாமை இருந்தவாறு !


பாடல் எண் : 10
கூடலை யாற்றூரில் கொடிஇடை அவளோடும்
ஆடல் உகந்தானை அதிசயம் இதுஎன்று
நாடிய இன்தமிழால் நாவல வூரன்சொல்
பாடல்கள் பத்தும்வல்லார் தம்வினை பற்றறுமே

         பொழிப்புரை : திருக்கூடலையாற்றூரில் , கொடிபோலும் இடையினையுடையவளாகிய உமாதேவியோடும் , அருள் விளை யாட்டை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, `அவன் செய்த இச்செயல் அதிசயம்` என்று சொல்லி, ஆராய்ந்த இனிய தமிழால், திருநாவலூரனாகிய நம்பியாரூரன் பாடிய இப்பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர்களது வினை, பற்றறக் கெடுதல் திண்ணம் .

                                             திருச்சிற்றம்பலம்



No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...