அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
வடத்தை மிஞ்சிய
(திருப்பரங்குன்றம்)
முருகா!
மாதர் மயல் தீர்ந்து திருவடி
சேர அருள்வாய்
தனத்த
தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான
வடத்தை
மிஞ்சிய புளகித வனமுலை
தனைத்தி றந்தெதிர் வருமிளை ஞர்களுயிர்
மயக்கி ஐங்கணை மதனனை ஒருஅரு ...... மையினாலே
வருத்தி
வஞ்சக நினைவொடு மெலமெல
நகைத்து நண்பொடு வருமிரும் எனஉரை
வழுத்தி அங்கவ ரொடுசரு வியுமுடல் ......
தொடுபோதே
விடத்தை
வென்றிடு படைவிழி கொடுமுள
மருட்டி வண்பொருள் கவர்பொழு தினில்மயல்
விருப்பெ
னும்படி மடிமிசை யினில்விழு ......தொழில்தானே
விளைத்தி
டும்பல கணிகையர் தமதுபொய்
மனத்தை நம்பிய சிறியனை வெறியனை
விரைப்ப தந்தனில் அருள்பெற நினைகுவ ......
துளதோதான்
குடத்தை
வென்றிரு கிரியென எழில்தள
தளத்த கொங்கைகள் மணிவடம் அணிசிறு
குறக்க ரும்பின்மெய் துவள்புயன் எனவரு
...... வடிவேலா
குரைக்க
ருங்கடல் திருவணை எனமுனம்
அடைத்தி லங்கையின் அதிபதி நிசிசரர்
குலத்தொ டும்பட ஒருகணை விடுமரி ......
மருகோனே
திடத்தெ
திர்ந்திடும் அசுரர்கள் பொடிபட
அயிற்கொ டும்படை விடுசர வணபவ
திறற்கு கன்குரு பரனென வருமொரு ......
முருகோனே
செழித்த
தண்டலை தொறுமில கியகுட
வளைக்கு லந்தரு தரளமு மிகுமுயர்
திருப்ப ரங்கிரி வளநகர் மருவிய ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
வடத்தை
மிஞ்சிய புளகித வனமுலை-
தனைத் திறந்து, எதிர் வரும் இளைஞர்கள் உயிர்
மயக்கி, ஐங்கணை மதனனை ஒரு அரு ......
மையினாலே
வருத்தி,
வஞ்சக நினைவொடு மெலமெல
நகைத்து, நண்பொடு வரும் இரும் எனஉரை
வழுத்தி, அங்கு அவரொடு சருவியும் உடல்.....தொடுபோதே,
விடத்தை
வென்றிடு படைவிழி கொடும், உள
மருட்டி, வண்பொருள் கவர்பொழுதினில், மயல்
விருப்பு எனும்படி மடி மிசையினில் விழு......தொழில்தானே
விளைத்திடும்,
பல கணிகையர் தமது, பொய்
மனத்தை நம்பிய சிறியனை, வெறியனை,
விரைப்பதம் தனில் அருள்பெற நினைகுவது....உளதோதான்?
குடத்தை
வென்று இரு கிரி என எழில்தள
தளத்த கொங்கைகள், மணிவடம் அணி சிறு
குறக் கரும்பின் மெய் துவள் புயன் என வரு......
வடிவேலா!
குரைக்
கருங்கடல் திருஅணை எனமுனம்
அடைத்து, இலங்கையின் அதிபதி நிசிசரர்
குலத்தொடும் பட ஒரு கணை விடும் அரி ......
மருகோனே!
திடத்து
எதிர்ந்திடும் அசுரர்கள் பொடிபட,
அயில் கொடும் படை விடு சரவணபவ!
திறல் குகன் குருபரன் என வரும் ஒரு ......
முருகோனே!
செழித்த
தண்டலைதொறும் இலகிய, குட
வளைக்குலம் தரு தரளமும், மிகும்உயர்
திருப்பரங்கிரி வளநகர் மருவிய ......
பெருமாளே.
பதவுரை
குடத்தை வென்று --- அழகினால்
குடத்தை வெற்றி பெற்று,
இருகிரி என --- இரண்டு மலைகள்போல்,
எழில் தளதளத்த கொங்கைகள் --- அழகு
தளதள என்று மெருகிட்டதுபோல் விளங்கும் முலைகளின் மீது,
மணிவடம் அணி --- முத்துமாலையை அணிந்துள்ள,
சிறுகுறக் கரும்பின் மெய் --- இளங்குறமகளாகிய
வள்ளி பிராட்டியின் திருமேனி மீது,
துவள் புயன் என வரு வடிவேலா ---
புரளுகின்ற திருத்தோள்களை உடையவன் என்று புகழ வருகின்ற கூர்மையான வேலாயுதத்தை
யுடையவரே!
குரைகரும் கடல் --- ஒலிக்கின்ற கரிய
கடலை,
திருஅணை எனமுனம் அடைத்து --- அழகிய
அணைகட்டி அடைத்து,
இலங்கையின் அதிபதி --- இலங்கையின்
அரசனாகிய இராவணனை,
நிசிரர் குலத்தொடும் பட --- இரவில்
உலவுகின்ற அரக்கர் கூட்டத்துடன் அழியும்படி,
ஒரு கணை விடும் அரி மருகோனே --- ஓர்
அம்பை விடுத்தருளி (ஸ்ரீராமராக அவதரித்த) நாராயணருடைய திருமருகரே!
திடத்து எதிர்ந்திடும் --- உறுதியுடன்
எதிர்த்துவந்த,
அசுரர்கள் பொடிபட --- சூராதியுவணர்கள்
தூள்பட்டு மாளும்படி,
அயில் கொடும் படை விடு ---
வேலாயுதமாகிய உக்கிரப்படையை விடுத்தருளிய,
சரவணபவ --- சரவணப் பொய்கையில்
வந்தவரே!,
திறல் குகன் --- வலிமை மிகுந்த குகப்பெருமானே!
குருபரன் என வரும் --- மேலாகிய
குருமூர்த்தி என்று (வேதங்கள்) புகழ எழுந்தருளி வருகின்ற,
ஒரு முருகோனே --- ஒப்பற்ற முருகக்
கடவுளே!
செழித்த தண்டலை
தொறும் இலகிய
--- வளமை மிகுந்த சோலைகள் தோறும் விளங்கும்,
குடவளை குலம்தரும் தரளமும் மிகும் ---
வளைந்துள்ள சங்குகள் ஈன்ற முத்துக்களும் மிகுந்து பொலிகின்ற,
உயர் திருப்பரங்கிரி வளநகர் மருவிய ---
மகிமையால் உயர்ந்த திருப்பரங்குன்றமாகிய வளமை நிறைந்த நகரத்தில் எழுந்தருளியுள்ள,
பெருமாளே --- பெருமை மிகுந்தவரே!
வடத்தை மிஞ்சிய
புளகித வனமுலை தனைத் திறந்து --- மணிவடத்தினும் மேலோங்கிப் புளகம்
பூண்டுள்ள அழகிய முலைகளைத் திறந்து,
எதிர்வரும் இளைஞர்கள் உயிர் மயக்கி ---
எதிரிலே வரும் இளைஞர்களுடைய உயிரை மயங்குமாறு செய்து,
ஐங்கணை மதனனை ஒரு அருமையினாலே வருத்தி
--- ஐந்து மலர்க்கணைகளை உடைய மன்மதனை ஒப்பற்ற அருமையுடன் வருவித்து,
வஞ்சக நினைவொடு மெல மெல நகைத்து ---
வஞ்சனையான எண்ணத்துடன் மெல்ல மெல்லச் சிரித்து,
நண்பொடு வரும் இரும் என உரை வழுத்தி ---
நட்புரிமை காட்டி “வாரும்” “இரும்” என்று உரைபேசி,
அங்கு அவரொடு சருவியும் --- அங்கு
அவர்களுடன் பழகி,
உடல் தொடு போதே --- உடம்பைத்
தொடுகின்றபோதே,
விடத்தை வென்றிடு படை விழிகொடும் ---
விடத்தையும் (கொடுமையால்) வெல்லுகின்ற ஆயுதம் போன்ற கண்களைக் கொண்டு,
உளம் மருட்டி --- உள்ளத்தை
மாறுபடச்செய்து,
வண் பொருள் கவர் பொழுதினில் ---
வளமைமிக்க பொருளைக் கவர்கின்றபோது,
மயல் விருப்பு எனும்படி --- (உம்மைக்கண்டு
உளம்) மயங்கி விருப்பம் கொண்டேன் என்றுகூறி,
மடி மிசையினில் விழு தொழில் தானே
விளைத்திடும் --- ஆடவர் மடித்தலத்தின் மீதுவிழுந்து மகிழ்ச்சியை விளைக்கின்ற
சாகசத் தொழிலைச் செய்கின்ற,
பல கணிகையர் தமது --- பொதுமகளிர்
பலருடைய,
பொய் மனத்தை நம்பிய சிறியனை --- பொய்
நிறைந்த மனத்தை மெய்யென நம்பிய சிறியவனும்,
வெறியனை --- மயக்கம் உடையவனும் ஆகிய
அடியேனை,
விரைப் பதந்தனில் அருள்பெற நினைகுவது உளதோ
தான் --- மணம் மிகுந்த தேவரீருடையத் திருவடியைச் சார்ந்து திருவருளைப் பெற
உமது திருவுள்ளத்தில் எண்ணியருளுந் தன்மை எனக்கு உண்டாகுமோ?
பொழிப்புரை
பொன்குடத்தை அழகினால் வென்று இருமலைகள்
போல் அழகு பெற்று தளதளப்புடைய முலைகள்மீது முத்து மணி மாலைகள் அணிந்த இளம் பருவமுடைய
கரும்பு போன்ற வள்ளியம்மையாருடையத் திருமேனிமீது துவள்கின்ற தோள்களையுடைய
வடிவேலரே!
ஒலிக்கின்ற கரிய கடலின் கண் அணைகட்டி
இலங்கைக்குத் தலைவனாகிய இராவணனை அசுரர் குழாத்துடன் மாண்டு ஒழிய ஒரு கணை விடுத்த
திருமாலின் திருமகரே!
உறுதியுடன் போரில் எதிர்த்த சூராதி யவுணர்கள்
பொடிபட்டு அழகிய கூர்மையான வேலாயுதத்தை விடுத்த சரவணபவமூர்த்தியே!
ஆற்றல் மிக்க குகப் பெருமானே! குருபரரே!
என்று (வேதாகமங்கள்) புகழும்படி எழுந்தருளிவருகின்ற முருகக் கடவுளே!
செழுமை மிக்க சோலைகள் தோறும் திகழ்கின்ற
வளைந்த சங்குகள்ஈன்ற முத்துக்கள் மிகுந்ததும் பெருமையால் உயர்ந்ததும் வளமை
நிறைந்ததுமாகியத் திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளியுள்ள பெருமையிற் சிறந்தவரே!
முத்துவடம் புனைந்து பூரித்த அழகிய முலைகளைத்
திறந்து, தமது எதிரில்
வருகின்ற இளைஞர்களுடைய உயிரை மயக்கி, ஐங்கணைக்
கிழவனாகிய மன்மதனை மிகவும் அருமையுடன் வருவித்து, தீய நினைவுடன் மெல்ல மெல்லச் சிரித்து, நட்புரிமை காட்டி, “வாரும்,” “இரும்” என்று இதவசனம் பேசி, அவர்களுடன் பழகி, உடம்பைத் தொடும் போதே, நஞ்சினும் கொடிய ஆயுதம் போன்ற கண்களைக்
கொண்டு உள்ளத்தை மருட்டி வளமையான பொருளைப் பறிக்கும்பொழுது, “உம்மீது அதிக விருப்பம் பூண்டு
மயங்குகின்றேன்” என்று கூறி மடியின் மிசைவிழும் செயலையுடைய விலை மகளிரது பொய்
மனத்தை மெய்யென்று நம்பி மயங்கும் சிறியவனைத் தேவரீரது நறுமணங் கமழ்கின்ற
திருவடியைச் சார்ந்து அருள் பெருமாறு திருவுள்ளத்தில் நினைத்தருளும் தன்மை
உண்டாகுமோ?
விரிவுரை
வடத்தை
மிஞ்சிய புளகித வனமுலை ---
பொதுமகளிர் மார்பில் முத்துபவளம் பொன்மணி
முதலியவைகளால் ஆகிய மாலைகளை நிரம்பவும் அணிந்து கொள்வர். இளைஞர்களைக் காணும்தோறும்
புளகிதமடைவர்
ஐங்கணை
மதனன்
---
மன்மதன் கரும்பு வில்லில் ஐந்து வகையான
மலர்க்கணைகளை விடுத்து உயிர்களுக்கு வேட்கைத் தீயை மூட்டுவன்.
மா, அசோகு, முல்லை, தாமரை,கருங்குவளை என்ற மலர்கள் என அறிக.
நண்பொடு
மெலமெல நகைத்து ---
நட்புரிமை காட்டி வெண்மையானபல் சிறிது
தெரியும்படி மெல்லப் புன்சிரிப்பைச் செய்து அம்மகளிர் ஆடவரை மயக்குவர்.
“முகிழாகிய நகையுங்
காட்டி” --- (முகிலாமெனு திருப்புகழ்)
வரும்
இரும் எனவுரை வழுத்தி ---
வாரும் என்ற சொல் குறுகல் விகாரம் பெற்றது.
தெருவில் போகும் இளைஞர்களைக் கண்வீசி, “இங்கே வாருங்கள்! இந்த வீடு உங்கள்
வீடுதான்; இங்கு இருங்கள்”
என்று இதவசனங் கூறி மருட்டுவர்.
“பண்டு தந்தது போதாதோ, மேல்
இன்று தந்துஉற வோதான்,
இங்கு நின்றதுஎன் வீடே வாரீர்” --- (அங்கைமென்) திருப்புகழ்.
விடத்தை
வென்றிடு படைவிழிகொடும் உள மருட்டி ---
விலைமகளிரின் கண்கள் நஞ்சினும், நமனுடைய ஆயுதத்தினும் கொடியது. நஞ்சும்
நமன் படையும் உயிரை மட்டும் மாய்க்கும். விலைமகளிர் கண்கள் உயிரை மாய்ப்பதுடன்
அமையாது, தீவினையை மூட்டி
நரகையும் நல்கும்.
“படைஎம படையென
அந்திக்குங் கண்கடையாலே. --- (பரிமள களப)
திருப்புகழ்
பொய்மனத்தை
நம்பிய சிறியன் ---
பொது மகளிர் தம்பால் வருவோரிடம் பொருள்
பறிக்கும் நோக்கம் ஒன்றையே கொண்டு,
ஒரு
சிறிதும் அன்பு இல்லாமல் அன்புடையார் போல் பொய்மையாக நடிப்பர். அப்பொய்மையை
மெய்மையாக நம்புவர் சிறியர். அதாவது அறிவாற்றலில் சிறியவர்.
வெறியன் ---
காமமாகிய பித்தேறி மயங்கியவன்.
வெறி --- மயக்கம்.
வெறி பிடித்தவனுக்கு வெய்யில் நிழலாகவும், கந்தல், பட்டு உடையாகவும், புழுதி கஸ்தூரியாகவும், துன்பம் இன்பமாகவும் மாறுபட்ட உணர்ச்சி
மிகுந்து இருக்கும்.
அது போல் காமவெறி கொண்டவனும், புண்ணியத்தைப் பாவமாகவும், பாவத்தைப் புண்ணியமாகவும், இரவைப் பகலாகவும், பகலை இரவாகவும் கேட்டை உறுதியாகவும்
எண்ணி அவமே அலைந்து திரிந்து அழிவான்.
இந்த
வெறியை வென்றவரே வேற்பெருமானை அடைவர்.
“வெறிவென் றவரோடு உறும்
வேலவனே” ---கந்தர்அநுபூதி
அருள்பெற
நினைகுவது உளதோதான் ---
தேவரீருடைய அடியவனாகிய நான்,உனது பாதமலரிற் சார்ந்து இன்புற உனது
கருணை நிறைந்த திருவுள்ளம் சற்று நினக்காதோ? அவ்வாறு நினைக்கும் நாள் என்றோ? என்று அடிகளார் முருகனை வேண்டி
உருகுகின்றனர்.
இறைவன் கருணையே வடிவானவன். தியாகமூர்த்தி. எல்லாவற்றையும்
எப்போதும் குறைவறத் தர வல்லவன் நம் இடர்களை யெல்லாம் அறிகின்றவன். அப்படியிருந்தும் பலர் இடர்படுகின்றனர்.
அதனால் இறைவன் அவர்கள் இடரை அறிந்தவனல்லன். பாராமுகமாய் இருக்கின்றானுமல்லன். அருள்
புரிய பின் வாங்கும் கடினசித்தம் உடையவனுமல்லன் பின்னர் இறைவன் பலருடைய இடர்களைக்
களையாமைக்குக் காரணம் யாது?
பல குழந்தைகளைப் பெற்ற தாயார் உடல் நலமுள்ள
குழந்தைகட்கு நல்லுணவு தருகின்றாள். உடல் நலமில்லாத குழந்தைகட்கு நோய் தீரும்
பொருட்டு விளக்கெண்ணெய், வேப்பங்
கொழுந்து முதலிய கசப்பு மருந்துகளைத் தந்து, அஜீரணம் போகும் பொருட்டு உணவுந் தராமல்
பட்டினி போடுகின்றாள். கருணை நிறைந்த தாய் அங்ஙனம் புரிவதற்கு காரணம் யாது? கருணையின்மை அல்ல. குழந்தையின் நோய்
நீக்கம் கருதி உரிய காலம் வரும்வரை பொறுத்திருப்பாள். அதுபோல் இறைவனும் உயிர்கள்
மலமாயா கன்மங்களின் நீக்கம் கருதி வினைகளை உயிர்கள் துய்க்கும் பொருட்டு, பக்குவ காலம் வரும்வரை அருள்புரியக்
காத்திருப்பன்.
குடத்தை
வென்று........வடிவேலா ---
வள்ளியம்மையார் இச்சாசக்தி.
ஆன்மாக்கள் இச்சையின்றி ஒரு செயலும்
செய்யமாட்டா. செயல் இல்லையானால் வினைகள் ஒழியமாட்டா. செயல்பட்டு வினைகளைத்
துய்த்து மலத்தின் வலிமையைக் கெடுத்து பேரின்பத்தை உயிர்கள் எய்த வேண்டும். உயிர்களுக்கு
இச்சை விளையும் பொருட்டு இறைவன் இச்சாசக்தியுடன் கூடி நிற்கின்றனன்.
வள்ளியம்மையாருடைய இருதனங்கள் அபரஞானம்
பரஞானம் என உணர்க. அந்த ஞானங்களை இறைவன் விரும்புகின்றனன்.
குரைக்கருங்
கடல் திருவணை எனமுனம் அடைத்து ---
இராமர் இலங்கைச் செல்லும் நிமித்தம் தென்கடலை
வானர சேனைகளைக் கொண்டு பெரிய பெரிய குன்றுகளை கொணர்ந்து அணை புதுக்கினார்.
பிறவிப்
பெருங்கடலை அடைத்தனர் என இதனால் அறிக.
வீடணனாகிய சத்துவ குணத்தை வாழ்வித்து, தாமத குணமாகிய கும்பகர்ணனையும் ராஜஸ
குணமாகிய இராவணனையும் மாய்த்தனர்.
கருத்துரை
வள்ளிமணவாளரே! திருமால் மருகரே!
சூரசங்காரம் புரிந்த வீரமூர்த்தியே! பராசலமேவிய பரமனே! மாதர் மையல் தீர்ந்து உமது
திருவடிசேர அருள்புரிவீர்.
No comments:
Post a Comment