திருப்பரங்குன்றம் - 0018. மன்றல்அம் கொந்து




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மன்றலங் கொந்துமிசை (திருப்பரங்குன்றம்)

முருகா!
உனது திருவடிப் பேற்றை அருள்


தந்தனந் தந்ததன தந்தனந் தந்ததன
     தந்தனந் தந்ததன ...... தனதான


மன்றலங் கொந்துமிசை தெந்தனத் தெந்தனென
     வண்டினங் கண்டுதொடர் ...... குழல்மாதர்

மண்டிடுந் தொண்டையமு துண்டுகொண் டன்புமிக
     வம்பிடுங் கும்பகன ...... தனமார்பில்

ஒன்றஅம் பொன்றுவிழி கன்றஅங் கங்குழைய
     உந்தியென் கின்றமடு ...... விழுவேனை

உன்சிலம் புங்கனக தண்டையுங் கிண்கிணியும்
     ஒண்கடம் பும்புனையும் ...... அடிசேராய்

பன்றியங் கொம்புகம டம்புயங் கஞ்சுரர்கள்
     பண்டையென் பங்கமணி ...... பவர்சேயே

பஞ்சரங் கொஞ்சுகிளி வந்துவந் தைந்துகர
     பண்டிதன் தம்பியெனும் ...... வயலூரா

சென்றுமுன் குன்றவர்கள் தந்தபெண் கொண்டுவளர்
     செண்பகம் பைம்பொன்மலர் ...... செறிசோலை

திங்களுஞ் செங்கதிரு மங்குலுந் தங்குமுயர்
     தென்பரங் குன்றிலுறை ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


மன்றல் அம் கொந்து மிசை தெந்தனத் தெந்தன் என
     வண்டு இனம் கண்டு தொடர் ...... குழல்மாதர்,

மண்டிடும் தொண்டை அமுது உண்டுகொண்டு, அன்பு மிக,
     வம்பு இடும் கும்ப கன ...... தனமார்பில்

ஒன்ற, அம்பு ஒன்று விழி கன்ற, அங்கம் குழைய,
     உந்தி என்கின்ற மடு ...... விழுவேனை,

உன் சிலம்பும், கனக தண்டையும், கிண்கிணியும்,
     ஒண் கடம்பும் புனையும் ...... அடிசேராய்.

பன்றிஅம் கொம்பு, கமடம், புயங்கம், சுரர்கள்
     பண்டை என்பு அங்கம் அணி ...... பவர்சேயே!

பஞ்சரம் கொஞ்சு கிளி வந்து வந்து, ஐந்து கர
     பண்டிதன் தம்பி எனும் ...... வயலூரா!

சென்று முன் குன்றவர்கள் தந்த பெண் கொண்டு,வளர்
     செண்பகம் பைம்பொன் மலர் ...... செறிசோலை,

திங்களும் செங்கதிரும் மங்குலும் தங்கும் உயர்
     தென்பரங்குன்றில் உறை ...... பெருமாளே.


பதவுரை


      பன்றி அம் கொம்பு --- பன்றியினது அழகிய கொம்பையும்,

     கமடம் --- ஆமையினது ஓட்டையும்,

     புயங்கம் --- பாம்பையும்,

     சுரர்கள் பண்டை என்பு --- தேவர்களது பழைய எலும்புகளையும்,

     அங்கம் --- கங்காளத்தையும்,

     அணிபவர் சேயே --- தரித்துக்கொண்டுள்ள சிவபெருமானது திருக்குமாரரே!

      பஞ்சம் கொஞ்சு கிளி --- கூட்டில் இருந்துகொண்டு கொஞ்சுகின்ற கிளிப் பிள்ளைகள்,

     வந்து வந்து --- கூட்டின் முகப்பில் வந்து வந்து,

     ஐந்துகர பண்டிதன் தம்பி எனும் --- ஐந்து கரங்களையுடைய ஞானபண்டிதராகிய விநாயகமூர்த்தியினது இளைய சகோதரரே என்று கூறுகின்ற,

     வயலூரா --- வயலூர் என்கின்ற புனித திருத்தலத்தில் வாசஞ் செய்பவரே!

      சென்று முன் குன்றவர்கள் தந்த --- குன்றுகளில் வசிப்பவராகிய வேடுவர்கள் முன்னாளிற் சென்று கொடுத்த,

     பெண் கொண்டு --- வள்ளிநாயகியாரை மணங்கொண்டு,

     பைம்பொன் மலர்செறி --- அழகிய பொன் நிறத்தையுடைய மலர்கள் மிகுந்து,

     வளர் செண்பகம் --- வளர்ந்து ஓங்கிய செண்பக மரங்களின்,

     சோலை --- சோலைகளால் சூழப்பெற்றதும்,

     திங்களும், செம்கதிரும், மங்குலும் --- சந்திரனும், சிவந்த சூரியனும், மேகமும்,

     தங்கும் உயர் --- தங்கும்படி உயர்ந்தும்,

     தென் பரங்குன்றில் உறை --- தென்னாட்டில் சிறப்புற்றதுமாகிய திருப்பரங்குன்றத்தில் வாசம் புரிகின்ற,

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

      மன்றல் --- வாசனை பொருந்திய,

     அம் கொந்து மிசை --- அழகிய பூங்கொத்துகளின் மீது,

     தெந்தனம் தெந்தன என --- தெந்தனம் தெந்தன என்று ரீங்காரம் செய்து கொண்டு,

     வண்டு இனம் --- வண்டின் கூட்டங்கள்,

     கண்டு தொடர் --- தேனை உண்பதற்காகப் பார்த்துக் கொண்டு தொடரும்படியான,

     குழல் மாதர் --- கூந்தலையுடைய பெண்களது,

     மண்டிடும் --- நெருங்கியுள்ள,

     தொண்டை அமுது உண்டு கொண்டு --- கொவ்வைப் பழத்தை நிகர்த்த இதழில் பெருகும் அமிர்தத்தைப் பருகிக்கொண்டு,

     அன்பு மிக --- ஆசையானது மிகுதியை அடையவும்,

     வம்பு இடும் --- இரவிக்கையை யணியும்,

     கும்ப கன --- குடத்தை ஒத்துப் பருத்த,

     தன மார்பில் ஒன்ற --- தனபாரங்களையுடைய மார்பில் பொருந்தவும்,

     அம்பு ஒன்று விழி கன்ற --- அம்பினை ஒத்த கண்கள் சோரவும்,

     அங்கங் குழைய --- சரீரம் குழைந்து உருகவும்,

     உந்தி என்கின்ற --- உந்தி என்கின்ற,

     மடு விழுவேனை --- மடுவில் விழுகின்றவனை,

     சிலம்பும் --- இரத்தினச் சிலம்பையும்,

     கனக தண்டையும் --- பொன்னாலாகிய தண்டையையும்,

     கிண்கிணியும் --- கிண்கிணியையும்,

     ஒண் கடம்பும் --- அழகிய கடப்ப மலரையும்,

     புனையும் --- தரித்துக்கொண்டுள்ள,

     உன் அடிசேராய் --- தேவரீரது திருவடியில் சேர்த்தருள்வீர்.


பொழிப்புரை


         பன்றியினது அழகியகொம்பையும் ஆமையினது ஓட்டையும், சர்ப்பாபர ணத்தையும், தேவர்களது பழமையான எலும்புகளையும், தசை நீங்கிய முழு எலும்பின் கூட்டையும், அணிகலமாகத் தரித்துக் கொண்டுள்ள சிவபெருமானது திருக்குமாரரே!

         கூட்டிலிருந்து கொஞ்சுகின்ற கிளிகளானது அக் கூட்டின் முகப்பில் அடிக்கடி வந்து `ஐந்து கரங்களையுடையவரும், சகல கலாவல்லவரும் ஆகிய விநாயகமூர்த்தியின் அருமைத் தம்பியே’ என்று துதிக்கும்படியான வயலூர் என்னும் புண்ணிய தலத்தில் வசிப்பவரே!

         குன்றுகளில் வசிப்பவராகிய வேடர்கள் முன்னாளிற் சென்று எம்புதல்வியை மணந்தருள்வீர் என்று தந்த வள்ளிநாயகியாரை மணம் புரிந்துகொண்டு, அழகு தங்கிய பொன்னிறத்தை யுடைய மலர்கள் செறிந்துள்ள செண்பகத்தருக்களினது சோலைகளாற் சூழப்பெற்றதும், சந்திர சூரியர்களும் மேகங்களும் தங்கும்படி உயர்ந்திருப்பதும், தென்னாட்டில் சிறப்பு வாய்ந்ததுமாகிய திருப்பரங்குன்றத்தில் அடியார் பொருட்டு எழுந்தருளியுள்ள பெருமையிற் சிறந்தவரே!

         வாசனை பொருந்திய அழகிய மலர்க் கொத்துக்களின் மீது தெந்தனம் தெந்தனம் என்ற ஒலியுடன் வண்டின் கூட்டங்கள் தேனை உண்பதற்காகத் தொடர்கின்ற கூந்தலை உடையவர்களாகிய மாதர்களது நெருங்கிய கொவ்வைக் கனிக்கு நிகரான அதரத்தில் பெருகும் அமிர்தத்தைப் பருகிக் கொண்டு, ஆசை மேன்மேல் விருத்தியடையவும், இரவிக்கை அணிந்து கொண்டுள்ள கலசத்தை ஒத்து பருத்த தனங்களுடைய மார்பில் பொருந்தவும், பாணத்தை நிகர்த்த விழிகள் சோர்வடையவும், உடல் குழைந்து உருகவும், உந்தியென்கின்ற மடுவில் விழுகின்றவனாகிய அடியேனை, சிலம்பையும், பொன்னாலாகிய தண்டையையும், கிண்கிணியையும் அழகிய கடப்ப மலர்கலையும், அணிந்து கொண்டுள்ள தேவரீரது திருவடியிற் சேர்த்தருளுவீர்.


விரிவுரை


தொண்டை அமுது உண்டு ---

     விரக தாபத்தால் பெண்களது அதரபானத்தை அமிர்தமெனக் கருதி அதனை சதாகாலமும் பருகிக் கொண்டு அவமே மனிதர்கள் காமமயக்கங்கொண்டு அழிகின்றனர்.

குமுதஅ முதஇதழ் பருகியு ருகிமயல்
  கொண்டுற் றிடுநாயேன்”            --- (கொலைமத) திருப்புகழ்.

பாலொடு தேன்கலந்து அற்றே பணிமொழி
வால்எயிறு ஊறிய நீர்.                --- திருக்குறள்.

உந்தி என்கின்ற மடு விழுவேனை..........அடிசேராய் ---

     ஆழமுள்ள மடுவில் வீழ்ந்தோர்கள் கரை சேர்வது எத்துணை அரிதோ, அத்துணை அரிது உந்தித் தடத்தில் வீழ்ந்தோர்களும் முத்திக்கரை சேர்வது.

அவத்தமாய்ச் சில படுகுழி தனில் விழும்"    ---(பழிப்பர்)  திருப்புகழ்.
                                                                      
பரிபுர பதமுள வஞ்ச மாதர்கள்
 பலபல விதமுள துன்ப சாகர
 படுகுழி யிடைவிழு பஞ்ச பாதக னென்று சேர்வேன்.   --- உரைதரு (திருப்புகழ்)

                                   
அணங்கனார் மயல் ஆழத்தில் விழுந்தேன்”     ---இராமலிங்க அடிகளார்.    
                                                             

     ஆழமாகிய பெரிய மடுவின்கண் வீழ்ந்தோர்கள் புணையின் துணையின்றி எங்ஙனம் கரையேறுதல் முடியாதோ அங்ஙனமே உந்தியென்கின்ற பெரிய மடுவில் வீழ்ந்தோர்கள் வேற்பரமனது தண்டையணி வெண்டையங் கிண்கிணி சதங்கைகள் கொஞ்சும் திருவடித்தாமரையைப் புணையாகப் பற்றினாலன்றி அம் மடுவினின்றும் உய்ந்து முத்தியென்கிற கரைசேர்ந்து முடிவிலா இன்பத்தை நுகர முடியாது.

கடத்தில் குறத்தி பிரான்அரு ளாற்கலங் காதசித்தத்
திடத்தில் புணைஎன யான்கடந் தேன்,சித்ர மாதர்அல்குல்
படத்தில் கழுத்தில் பழுத்தசெவ் வாயில் பணையில்உந்தித்
தடத்தில் தனத்தில் கிடக்கும் வெங்காம சமுத்திரமே.  --- கந்தரலங்காரம்.
                                                                                      

பன்றி அம் கொம்பு ---

சிவபெருமான் பன்றியின் கொம்பை அணிந்த வரலாறு

     காசிப முனிவருக்குத் திதியின்பால் பிறந்தவனும், பொற்கணைகளை உடையவனுமாகிய இரணியாக்கன், வாணிகேள்வன் பால் வரம்பல பெற்று, மூவுலகும் ஏவல் கேட்ப அரசியற்றினான். உலகங்களுக்கெல்லாம் தானே தலைவன் என்றும் தன்னை அன்றி வேறு தலைவன் இல்லை என்றும், மனம் தருக்கினான். அத் தைத்தியன்பால் தவமுனிவர் சென்று “பூதேவி மணாளனாகிய புனத் துழாயலங்கற் புனிதனே கடவுள்” என்றனர். அது கேட்ட இரணியாக்கன் விழி சிவந்து “அப் பூதேவியைப் பாயாகச் சுருட்டிக் கடலிற் கரைத்து விடுகிறேன்” என்று கூறி, தன் தவவலியால் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு ஆழ்கடலை யணுகினன்.

விண்ணு ளோர்க்கு எலாம் அல்லலே வைகலும் விளைத்து
நண்ணும் ஆடகக் கண்ணினன் முன்னம்ஓர் நாளில்
மண்ண கந்தனை வௌவியே வயிற்றிடை வைத்துத்
துண்ணெனப் பிலம்புக்கனன்உயிர் எலாம் துளங்க.    --- கந்தபுராணம்.
                                                                                

     அதனை உணர்ந்த செந்தழலோம்பும் அந்தணரும், வானவரும் மாதவரும், பூதேவியும் அஞ்சி பச்சைமாமலை போல் நின்ற அச்சுதனை அண்மி, “அரவணைச் செல்வ! அடியேங்களுக்கு அடைக்கலம் வேறில்லை; ஆண்டருள்வீர்” என்று வேண்டி நின்றனர். நாராயணர், “அஞ்சுந் தன்மையை விடுமின்” என்று வையகத்தைக் கொணர்வான் வேண்டி வராக ரூபமெடுத்தார்.

     நீலவெற்பினும் இருமடங்கு உயரமும் கால்களின் நடுவே ஆயிரங்காத தூரம் விசாலமும், அசையுந்தோறும் திக்குகளிற்படும் வாலும், அண்டங்களைக் குலுக்குகின்ற சுவாசமும், வடவாமுகாக்கினி போன்ற பார்வையும் உடைய அவ் வராகமூர்த்தி உராய்ஞ்சுவதால் அண்டச்சுவர்கள் அசைந்தன. இத்துணைப் பேராற்றலுடைய வராக மூர்த்தி ஏழு கடல்களையும் கலக்கிச் சேறுபடுத்தி, அளவின்றி நின்ற பெரும் புறக்கடலுள் முழுகி இரணியாக்கனைக் கண்டு அவனோடு பொருது, தமது தந்தத்தால் அவனைக் கிழித்துக் கொன்று, தனது கொம்பினுனியால் பூமியைத் தாங்கி மேலெழுந்து வந்தார். அப்பூமியை ஆதிசேடனது ஆயிரம் பணாமகுடங்களில் நிலை நிறுத்தினார். அது கண்டு விண்ணவரும் மண்ணவரும் விஷ்ணுமூர்த்தியைத் துதித்தார்கள்.

ஓரிமைக்குமுன் பாதலந் தன்னின்மால் உற்றுக்
கூர்எயிற்றினால் பாய்ந்துபொற் கண்ணனைக் கொன்று
பாரினைக்கொடு மீண்டு,முன் போலவே பதித்து,
வீரமுற்றனன் தன்னையே மதித்தனன் மிகவும்.  ---கந்தபுராணம்.

     அவ்வெற்றியின் காரணத்தாலே வராகம்* மனம் தருக்குற்று தானே உலகங்களுக்குத் தனிப் பெருந் தலைவன் என்ற பிரமையாலும், இரணியாக்கனது இரத்தத்தைப் பருகின வெறியினாலும், மயங்கி எண்கிரிகளை இடித்துத் தள்ளியும், உயிர்கள் பலவற்றையும் வாயிற் பெய்து குதட்டியும், மேகங்கள் ஏழும், நாகங்கள் எட்டும் அஞ்சும்படி ஆர்ப்பரித்தும், கடைக்கண்ணில் ஊழித் தீயைச் சிந்தியும், பூமியைத் தோண்டி மதம் கொண்டு உலாவியது. அதனைக் கண்டஞ்சிய பிரமன் இந்திரன் இமையவர் இருடிகள் முதலியோர் வெள்ளிமலையை அடைந்து, நந்தியண்ணலின்பால் விடை பெற்று, திருச் சந்நிதிச் சென்று, கருணையங் கடவுளாங் கண்ணுதலைக் கண்டு, வலம் வந்து வணங்கி நின்று “பணிவார் பவப்பிணி மாற்றும் பசுபதியே! புரமூன்றட்ட புராதன! திருமால் வராக மூர்த்தியாகிய உலகங்களுக்கும், உயிர்களுக்கும் உறுகண் புரிகின்றனர்” என்று முறையிட்டனர்.

     உடனே சிவபெருமான் திருவுளமிரங்கிக் குன்றமெறிந்த குமாரக் கடவுளை அவ்விடரை நீக்கி வர அனுப்பியருளினார். அறுமுகப் பெருமான் வராகமூர்த்தியை அணுகி, அயிற்படையால் அதன் நெற்றியில் குத்தி நிலத்தில் அழுத்தி அதன் ஆற்றலை அடக்கினார். புத்தேளிர் பூமாரி பொழிந்தனர், வராகமூர்த்தியும் தோத்திரம் புரிந்தனர். அறுமுகனார் திருவுளம் இரங்கி அவ்வராகத்தின் கொம்பைப் பறித்துக் கொண்டு போய் சிவபெருமான் திருமுன்பு வைத்தருளினார். தேவர்கள் வேண்டிக் கொள்ள அப் பன்றியின் கொம்பை அரனார் தம் திருமார்பில் தரித்துக் கொண்டனர்.

     வராகமூர்த்தி தருக்கொழிந்து சிவசண்முகப் பெருமையை விளக்கும் வராகபுராணத்தை தேவர் முதலியோர்க்குக் கூறியருளி வைகுந்த மடைந்தனர்.

அன்று கொண்டதோர் மருப்பினைச் சின்னமா அணிந்தான்
இன்றும் அங்குஅவன் மார்பிடைப் பிறையென விளங்கும்
ஒன்று, மற்றிது கேட்டனை நின்றது உரைப்பாம்
நன்று தேர்ந்துணர் மறைகளும் இத்திற நவிலும்.

அங்கண்மா ஞாலந்தன்னை மேல்இனி அகழுமோட்டுச்
செங்கண்மால் ஏனயாக்கை எயிற்றையோர் சிறுகை பற்றி
மங்குல்வான் உலகிற் சுற்றி மருப்பொன்று வழுத்த வாங்கித்
தங்கள்நா யகற்குச் சாத்தச் சண்முகன் அளிக்கும் என்பர்.     --- கந்தபுராணம்.

கமடம் ---

சிவபெருமான் ஆமையின் ஓட்டைத் தரித்த வரலாறு

     பண்டொரு காலத்தில் ஆதித்யர்களாகிய தேவர்களும், தைத்யர்களாகிய அசுரர்களும் தீரா பகையால் பல காலம் சமர் புரிந்தார்கள். அப்போரில் இருதிறத்தவரிலும் எண்ணிலார் இறந்து பட்டனர். அதனால் தேவாசுரர்கள் ஒருங்கு கூடிப் பாற்கடலைக் கடைந்து அமுதம் உண்டு அதிகநாள் சாவாதிருந்து அரும்போர் ஆற்ற வேண்டுமென்று நினைத்து, அயன்பால் தம் நினைவை வெளியிட்டு அப்பிரமனுடன் அனந்தசயனராகிய அச்சுதரிடம் சென்று குறையிரந்தனர். திருமால் “அவ்வாறே ஆகுக” என்று அன்னாரை அழைத்துக் கொண்டு பாற்கடலை அண்மி, மந்தரமலையை மத்தாகவும் சந்திரனை அம் மத்திற்குத் தறியாகவும், வாசுகியைத் தாம்பாகவும் அமைத்து, தேவர்கள் வாற்புறத்தும், அசுரர்கள் தலைப்புறத்தும், பிடித்து இழுத்துக் கடையுமாறு செய்தனர். இவர்கள் இழுக்கும் விசையினால் உடல் தேய்ந்து வருந்திய வாசுகி யென்னும் பணியரசன் துன்பம் பொறுக்க முடியாமல் ஆலகால விடத்தைக் கக்கினன். அது கண்டு அரியயனாதி அமரர் குழாம் அஞ்சியோடி அரனாரிடம் முறையிட, அவர் அவ்வாலகாலவிடத்தை யுண்டு கண்டத்தில் தரித்து திருநீலகண்டராக விளங்கினார்.

     பின்னர் விநாயகர் பூசை செய்து, தேவாசுரர்கள் மீண்டும் பாற்கடலைக் கடைவாராயினார்கள். அப்போது மந்தரமலை பாதலத்தில் அமிழ்ந்தது. உடனே நாராயணர் பெரிய கூர்ம (ஆமை) வடிவங் கொண்டு பாற்கடலிற் பாய்ந்து, தன் மேற்புறத்தை இலக்க யோசனை யிடமாக்கி மந்தரமலையைத் தாங்கி அமிர்தமதனம் புரியச் செய்தனர்.

அடலின் மேதகு தேவரும் அவுணரும் அந்நாள்
கடல் கடைந்திடும் எல்லையின் மந்தரம் கவிழ
நெடிய மால்அது நிறுவியே பொருக்கென நீந்தம்
தடவி உள்ளணைந்து ஆமையாய் வெரினிடைத் தரித்தான்!   --- கந்தபுராணம்.

     சுரரும் அசுரரும் மீண்டும் மாறி மாறிக் கடைய, மந்தரகிரி மேலும் கீழும் பக்கத்தும் சரிந்து போவதைக் கண்டு, கமட வடிவங் கொண்ட கமலக் கண்ணனுக்குக் கரங்கள் ஆயிரம் தோன்றின. பல கரங்கள் மலையின் உச்சியைப் பற்றி ஊன்றின. பல கரங்கள் பர்வதத்தின் பக்கத்திற் சாயாமற் பற்றி நின்றன. பல கரங்கள் தேவாசிரர்கள் களைப்புறா வண்ணம் அன்னார்களுக்கு உதவியாக இருந்து கடல் கடைந்தன. அதன் பின் அமிர்தம் தோன்றியது. அச்சுதர் மோகினி வடிவந்தாங்கி அசுரரை ஒழித்து அண்டருக்கு அமிர்தத்தை ஈந்தனர்.

     அக்காலம் மந்தரமலையைத் தாங்கி நின்ற மாதவன் அவதாரமாகிய கூர்மம், தன்னை விடச் சிறந்தோர் ஒருவருமில்லை என்று மனம் செருக்குற்று, ஏழு கடலையும் ஒன்று கூட்டி, அதன் வெள்ளம் அவனியை அழிக்கும்படிக் கலக்கி, சிந்துவைச் சேறாக்கி ஆயிரங் கைகளாலும் ஆழியை வற்றச் செய்தது. கால்கள் கணக்கில் அடங்காதவையாகின. திமிங்கலம் முதலிய நீர்வாழ்வன அனைத்தையும் உண்டு பசி தணியாது கடல் நீர் முழுதுங் குடித்து தரை தெரியும்படி சேற்றையும் நக்கியது. உலகமெல்லாம் நடுங்கின. சந்திர சூரியர்கள் விண்ணில் சஞ்சரிக்க இயலாதவர் ஆயினார்கள். உலகமெங்கும் இருள் சூழ்ந்தது. பிரமாதி தேவர்கள் ஓலமிட்டுக் கதறி கயிலைமலைச் சென்று “அழலுந்த நகுந்திறல் கொண்ட” அந்திவண்ணர் பால் நிகழ்ந்தது கூறி முறையிட்டனர்.

     கறைமிடற்று அண்ணல் கருணை பூத்து, புன்முறுவல் கொண்டு “அடியார்களே! அஞ்சன்மின்” என்று அபயமீந்து, தமது மடித்தலத்தில் எழுந்தருளியுள்ள கந்தப் பெருமானை திருநோக்கஞ் செய்தருளினர். அக்குறிப்பை உணர்ந்து குமாரக் கடவுள் திருப்பால் கடலை அணுகி ஓர் ஊங்காரஞ் செய்தார். அதனைக் கேட்ட கூர்மம் மூர்ச்சித்தது. அக்காலை முருகப்பெருமானுடன் பின் தொடர்ந்து வந்த அரிகர புத்திரராகிய ஐயனார் அக் கூர்மத்தைப் பற்றி இழுத்து வெளியிற் கொணர்ந்தனர். கந்தவேள் தம் திருவடி கொண்டு அதனை ஏற்றுதலும் அக்கூர்மம் அண்ட முகடுமே இடிந்து விழுந்தாற்போல் மேலே எழுந்து நிலம் பிளக்க திக்கு செவிடுபட மல்லாந்து விழுந்தது. இளம்பூரணன் இருப்புலக்கை கொண்டு ஓரடி அடிக்க உன்னும் போது, செந்தாமரைப் பொகுட்டில் வீற்றிருக்கும் இலக்குமிதேவி விரைந்து வந்து கண்ணீருகுத்து வடிவேற் பரமனை வணங்கி,

மருவார் செழுங்கூந்தல் வாணிகலன் பூண்டுஇருப்பத்
 தருநீழன் மேவிச் சசிவாழ்வி னோடுஇருப்பத்   
 திருவோ திருஇழப்பர் தேவர்சூ ளாமணியே,
 மருகோய் உயிர்அளித்துஎன் மங்கலநாண் காப்பாயே.

 மங்காத காமர்பிடி மான்மருங்கு வைத்தருளும்
 எங்கள் பெருமானே, ஏத்துவார் கண்மணியே
 கங்கை குமராஎன காதலனை உய்வித்து
 மங்கல நாண்பிச்சை வழங்காய் வழங்காயே.

 மூவர்என ஓது முதல்தேவ ரில்ஒருவன்
 ஆவி அழிந்தால் அவுணர்நினை ஏசாரோ
 தேவர்இடர் தீர்ப்பாய் சிற்றடிச்சி மங்கலநாண்
 காவல் புரியாயேல் என்னாம் களைகண்ணே”

என்று துதித்துத் தன் முன்தானையை நீட்டி, மாங்கல்ய பிச்சைக் கொடுத்தருள வேண்டுமென்று குறையிரந்து வேண்டினள். என்றும் இளையபெருமாளாகிய குகப் பெருமான் திருவுளமிரங்கி விட்டுணுவாகிய கூர்மத்தின் உயிரைப் போக்காது, அதன் ஓட்டினை மட்டும் பெயர்த்து உறுதி கூறி திருக்கயிலையை நணுகி, தந்தையார்பால் அவ்வாமையின் ஓட்டினை வைத்தருளினார். முக்கட்பரமன் தம் புதல்வராய முருகநாயகனை அணைத்து முதுகு தைவந்து மருங்கில் இருத்தினர். பின்னர் தேவர்கள் வேண்ட, அவ்வாமையின் ஓட்டைத் தமது திருமார்பில் உள்ள பிரம விட்டுணுக்களின் சிரமாலைக்கு நடுநாயகமாக அமைத்து தரித்துக் கொண்டு அமரர்களுக்கு அருள் பாலித்தனர்.

     பின்னர் கூர்ம வடிவேற்ற திருமால் மயக்கம் நீங்கி பண்டைய உணர்வு பெற்று பரமபதியைத் துதித்து, தெளிந்த அறிவுடனே, நாரதர் முதலிய முனிவர்க்கும் பிறர்க்கும் சிவபெருமானது பெருமையை நன்கு விளக்கும் கூர்மபுராணத்தைக் கூறித் தம் பழைய வடிவு தாங்கி வைகுந்த மெய்தினர்.

மகரந்திளைக்குங் கடலேழு மலங்கக்கலங்கும் பசுந்துளவ
முகைவிண் டலர்தா ராமையினைப் பற்றித் தகர்த்தமுதுகோடு
நகுவெண் டலைமா லிகையணிக்கு நடுநாயகமாக் கோத்தணிந்து
புகரின் றுயர்ந்தோர் தொழப்பொலிந்த புத்தேள் செல்வத்  திருவுருவம்.
                                                                                --- காஞ்சிபுராணம்

புயங்கம் ---

சிவபெருமான் நாகங்களை ஆபரணமாகக் கொண்ட வரலாறு

     தாருகாவனத்து முனிவர்கள் தவமே சிறந்தது என்றும், அவர் பன்னியர் கற்பே உயர்ந்ததென்றும், கர்மமே பலனைக் கொடுக்கும் என்றும் கருதி, கண்ணுதற் கடவுளை கருதாது, மமதையுற்று வாழ்ந்திருந்தார்கள். அவர்களுக்கு நல்லறிவுச் சுடர் கொளுத்த நம்பன் திருவுளங் கொண்டு திகம்பரராய்ப் பிட்சாடனத் திருக்கோலங் கொண்டு, திருமாலை மோகினி வடிவு கொள்ளச் செய்து அம்முனிவர் தவத்தையும் முனிபன்னியர் கற்பையும் அழித்தனர். அக்காலத்து அரிவையர் முயக்கில் அவாவுற்று தமது இருக்கை நாடிய அந்தணர் தம்தம் வீதியில் கற்பு அழிந்து உலவுங் காரிகையரைக் கண்டு, “நம் தவத்தை அழித்து நமது பத்தினிகளின் கற்பை ஒழித்தவன் சிவனே; அவன் ஏவலால் அரிவையாக வந்தவன் அச்சுதனே” என்று ஞானத்தாலறிந்து, விஷ விருட்சங்களைச் சமிதையாக்கி வேம்பு முதலியவற்றின் நெய்யினால் அபிசார வேள்வி செய்து அதனின் றெழுந்த பல பொருள்களையும் பரமபதியின் மீது பிரயோகிக்க, சிவபரஞ்சுடர் அவற்றை உடை, சிலம்பு, ஆடை, ஆயுதம், மாலை, சேனை முதலியனவாகக் கொண்டனர்.

     தவமுனிவர் தாம் பிரயோகித்தவை முழுதும் அவமாயினதைத் கண்டு யாகாக்கினியினின்றும் எழுந்த சர்ப்பங்களைச் சம்புமேல் விடுத்தனர். அந் நாகவினங்கள் அஞ்சும் தன்மையின் அவனியதிரும்படி அதிவேகமாகத் தமது காளி, காளாஸ்திரி, யமன், யமதூதன் என்னும் நான்கு நச்சுப்பற்களில் விடங்களைச் சொரிந்து கொண்டு காளகண்டன் பால் வந்தன. மதனனை ஏரித்த மகாதேவன், ஆதிகாலத்தில் கருடனுக்கு அஞ்சித் தம்பால் சரண்புகுந்த சர்ப்பங்களைத் தாங்கி இருந்ததுடன் இப் பாம்புகளையும் ஏற்று “உமது குலத்தாருடன் ஒன்று கூடி வாழுங்கள்” என்று திருவுளஞ் செய்து அப் பன்னாகங்கள் அஞ்சும்படித் திருக்கரத்தாற் பற்றிச் சிறிது நேரம் நடித்து, திருக்கரம், திருவடி, திருவரை, திருமார்பு முதலிய ஆபரணங்களாக அணிந்து கொண்டனர்.

ஏந்திய பின்னர் வேள்வி எரியதற்கு இடையே எண்ணில்
பாந்தள் அங் கொழுந்து தீயோர் பணியினார் சீற்றங்கொண்டு
போந்தன, அவற்றை மாயோன் புள்ளினுக்கு அஞ்சித் தன்பால்
சேர்ந்ததோர் பணிகளோடு செவ்விதிற் புனைந்தான் எங்கோன்.--- கந்தபுராணம்.

சுரர்கள் பண்டை என்பு அங்கம் ---

காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடும் கறைமிடற்றண்ணல் சர்வசம்மாரம் புரிந்தபின், தன் பக்தர்களாகிய பிரமாதி தேவர்களின் எலும்புகளையும், எலும்பின் கூட்டையும் (கங்காளம்) அவர்கள் பக்திக்காக அன்புடன் தரித்துக் கொள்வர்.

பரமனிவ்வகை யடுந்தொறு மடுந்தொறும் பலவாம்
 பிரம னாதியோரென்பினைத் தரிக்கும்”         --- கந்தபுராணம்.

ஐந்து கர பண்டிதன் ---

     கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவரும், முத்தமிழிடை வினை முற்படுகிரி தனில் முற்பட எழுதிய முதல்வோனுமாகி விளங்குவதால் விநாயக மூர்த்தியைப் “பண்டிதன்” என்றனர். புலவர்களுக்கு அறிவருளும் அண்ணலும் அவரே; அவரை வழிபடுவோர் சகலகலா வல்லவராகத் திகழ்வார். ஐந்துகரத்தானை ஆனை முகத்தண்ணலைப் பூசித்துப் படிக்காமலே கல்வி ஞானத்தைப் பெற்ற நம்பியாண்டார் நம்பியே போதிய சான்று.

நற்குஞ் சரக்கன்று நண்ணில் கலைஞானம்
நற்குஞ் சரக்கன்று காண்.

தென்பரங்குன்று ---

திருப்பரங்குன்றம் பராசரகுமாரராகிய தத்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி என்ற அறுவருக்கும் முருகப் பெருமான் உபதேசித்த அற்புத க்ஷேத்திரம்.

கருத்துரை

         சிவகுமாரரே! விநாயகரது தம்பியே! திருப்பரங்குன்றம் மேவிய தேவ தேவா! மாதர் மயக்குறாது அடியேனை தேவரீரது திருவடியிற் சேர்த்தருள்வீ்ா.



                 

No comments:

Post a Comment

பொது --- 1097. உறவின் முறையோர்க்கும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உறவின்முறை யோர்க்கும் (பொது) முருகா!  தேவரீரை அன்பொடு துதிக்க அறிவு தந்து அருளுவாய். தனதனன தாத்த தனதனன ...