திருப்பரங்குன்றம் - 0017. பொருப்புறும்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பொருப்புறுங் (திருப்பரங்குன்றம்)

முருகா!
தேவரீரது அருட்பதத்தில் அன்பு பற்ற அருள்


தனத்தனந் தந்தன தனத்தனந் தந்தன
     தனத்தனந் தந்தன ...... தந்ததான


பொருப்புறுங் கொங்கையர் பொருட்கவர்ந் தொன்றிய
     பிணக்கிடுஞ் சண்டிகள் ...... வஞ்சமாதர்

புயற்குழன் றங்கமழ் அறற்குலந் தங்கவிர்
     முருக்குவண் செந்துவர் ...... தந்துபோகம்

அருத்திடுஞ் சிங்கியர் தருக்கிடுஞ் செங்கயல்
     அறச்சிவந் தங்கையில் ...... அன்புமேவும்

அவர்க்குழன் றங்கமும் அறத்தளர்ந் தென்பயன்
     அருட்பதம் பங்கயம் ...... அன்புறாதோ

மிருத்தணும் பங்கயன் அலர்க்கணன் சங்கரர்
     விதித்தெணுங் கும்பிடு ...... கந்தவேளே

மிகுத்திடும் வன்சம ணரைப்பெருந் திண்கழு
     மிசைக்கிடுஞ் செந்தமிழ் ...... அங்கவாயா

பெருக்குதண் சண்பக வனத்திடங் கொங்கொடு
     திறற்செழுஞ் சந்தகில் ...... துன்றிநீடு

தினைப்புனம் பைங்கொடி தனத்துடன் சென்றணை
     திருப்பரங் குன்றுறை ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


பொருப்பு உறும் கொங்கையர், பொருள் கவர்ந்து ஒன்றிய
     பிணக்கு இடும் சண்டிகள், ...... வஞ்சமாதர்,

புயல் குழன்ற அம் கமழ் அறல் குலம் தங்கு, அவிர்
     முருக்கு வண் செந்துவர் ...... தந்து, போகம்

அருத்திடும் சிங்கியர், தருக்கிடும் செங்கயல்
     அறச் சிவந்து, அங்கையில் ...... அன்புமேவும்

அவர்க்கு உழன்று, அங்கமும் அறத் தளர்ந்து என் பயன்?
     அருள் பதம் பங்கயம் ...... அன்பு உறாதோ?

மிருத்து அணும் பங்கயன், அலர்க்கணன், சங்கரர்,
     விதித்து எணும் கும்பிடு ...... கந்தவேளே!

மிகுத்திடும் வன் சமணரைப் பெரும் திண்கழு
     மிசைக்கு இடும் செந்தமிழ் ...... அங்க வாயா!

பெருக்கு தண் சண்பக வனத்து இடம் கொங்கொடு
     திறல் செழும் சந்து அகில் ...... துன்றி, நீடு

தினைப்புனம் பைங்கொடி தனத்துடன் சென்று அணை
     திருப்பரங்குன்று உறை ...... தம்பிரானே.


பதவுரை

      மிருத்து அ(ண்)ணும் பங்கயன் --- இறப்புடைய பிரமதேவனும்,

     அலர்க்கணன் --- தாமரை மலர் போன்ற கண்களையுடைய திருமாலும்,

     சங்கரர் --- உருத்திரனும்,

     விதித்து எணும் கும்பிடும் --- முறைப்படி என்றும் கும்பிடுகின்ற,

     கந்தவேளே --- கந்தக் கடவுளே,

      மிகுத்திடும் வன் சமணரை --- மிகுதியாக இருந்த வலிய சமணர்களை,

     பெரும் திண் கழுமிசைக்கு இடும் --- பெரியதாகவும் வலியதாகவும் உள்ள கழுக்களின் மீது ஏறும்படிச் செய்த,

     செம் தமிழ் அங்க வாயா --- செய்ய தமிழ்மறைப் பாடிய வேதாங்கங்கள் மணக்கும் திருவாயரே!

      பெருக்கு தண் --- குளிர்ச்சியைப் பெருக்குகின்ற,

     சண்பக வனத்து இடம் --- சண்பக மரங்கள் நிறைந்த காட்டில்,

     கொங்கொடு --- வாசனை நிறைந்து,

     திறல் செழும் சந்து --- வலிமையும் செழுமையுமுடைய சந்தன மரங்களும்,
    
     அகில் --- அகில் மரங்களும்,

     துன்றி நீடு --- நெருங்கி நீண்டு வளர்ந்துள்ள,

     தினைப்புனம் --- தினைப்புனத்தில் இருந்த,

     பைங்கொடி --- பசுமை தங்கிய கொடி போன்ற வள்ளியம்மையாரை,

     தனத்துடன் சென்று அணை --- சேர்ந்து அவருடைய தனபாரங்களைத் தழுவி,

     திருப்பரங்குன்று உறை --- திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளியுள்ள,

     தம்பிரானே --- தனிப்பெரும் தலைவரே!

      பொருப்பு உறும் கொங்கையர் --- மலை போன்ற முலைகளை உடையவர்கள்,

     பொருள் கவர்ந்து --- தம்பால் வந்தவர்களுடைய பொருளைப் பறித்து,

     ஒன்றிய பிணக்கிடும் --- (பொருள் நீங்கியவுடன்) தக்கபடி பிணங்குகின்ற,

     சண்டிகள் --- கொடியவர்கள்,

     வஞ்ச மாதர் --- வஞ்சனை செய்கின்றவர்கள்,

     புயல் குழன்ற அம் கமழ் --- மேகம் போன்றதும் சுருண்டு அழகியதாய் வாசனை வீசுகின்றதும்,

     அறல் குலம் தங்கு அவிர் --- கருமணல் கூட்டம் போல் கருத்து விளங்குவதுமாகிய கூந்தலையுடையவர்கள்,

     முருக்கு --- முருக்கு மலர் போலவும்,

     வண்செம் துவர் --- வளமையும் சிவப்பும் உடைய பவளம் போன்ற இதழை,

     தந்து --- இளைஞர்கள் அதரபானம் புரியத் தந்து,

     போகம் அருத்திடும் சிங்கியர் --- போக இன்பத்தை ஊட்டும்,  நஞ்சு போன்றவர்கள்,

     தருக்கு இடும் --- வாதம் புரிகின்றவர்கள்,

     செம் கயல் --- செம்மையான மீன் போன்ற கண்கள்,

     அற சிவந்து --- மிகவும் சிவந்து,

     அம் கையில் அன்பு மேவும் அவர்க்கு --- அழகிய கரத்திலுள்ள பொருள் மீது அன்பு கொள்கின்றவர்களுமாகிய விலைமகளிரை நாடி,

     உழன்று --- அவர்களிடம் அலைந்து திரிந்து,

     அங்கமும் அற தளர்ந்து --- உடம்பும் (உணர்வும்) அறவே தளர்ச்சியுற்று,

     என் பயன் --- அதனால் என்ன பயன்? (ஒன்றுமில்லை)

     அருள் பதம் பங்கயம் --- அருள் புரிகின்றதும் தாமரை மலர் போன்றதுமாகிய திருவடியிடம்,

     அன்பு உறாதோ --- அடியேனுக்கு அன்பு உண்டாகாதோ?


பொழிப்புரை


         இறப்புடைய பிரமதேவனும், நாராயணரும், உருத்திரரும் முறையுடன் என்றும் வணங்குகின்ற கந்தக் கடவுளே!

         மிகுதியாக இருந்த வலிமை மிக்க சமணர்கள் பெரிய திண்ணிய கழுக்களில் ஏறுமாறு செந்தமிழ்ப் பாடல்களை ஓதிய வேதாங்கங்கள் மணக்கும் திருவாயரே!

         குளிர்ச்சி மிகுந்த சண்பகக் காட்டில் வாசனை மிகுந்த வலிமையும் செழுமையும் உடைய சந்தன மரம், அகில் மரம் முதலியவைகள் நெருங்கி நீண்டு விளங்குகின்ற தினைப்புனத்திலே பசுங்கொடிபோல் இருந்த வள்ளியம்மையாரிடம் போய் அவரது தனங்களுடன் சேர்ந்து, திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமிதமுடையவரே!

         மலைபோன்ற முலைகளை உடையவர்கள், தம்பால் வந்தவர்களுடைய பணங்களைப் பறித்து மீண்டும் அவர்களிடம் பிணங்கிடும் கொடியவர்கள், வஞ்சனையுடைய மாதர்கள்; மேகம்போல் சுருண்டு மணம் வீசிக் கருமணல்போல் இருண்டுள்ள கூந்தலை உடையவர்கள்; முருக்குமலர் போலும், சிவந்த பவளம் போலும் உள்ள இதழைத் தந்து போகத்தை யூட்டி மயக்கும் நஞ்சு போன்றவர்கள்; வாதிடுகின்றவர்கள். சிவந்த மீன் போன்ற கண்கள் மிகவும் சிவந்து அழகிய கைப்பொருளின்மீது ஆசை வைக்கின்ற அப்பொது மகளிரை நாடி உழன்று உடம்பு மிகவுந் தளர்ந்து என்ன பயன்? தேவரீரது அருளை உதவும் திருவடித் தாமரைமீது அன்பு ஏற்படாதோ?


விரிவுரை

சிங்கியர் ---

     சிங்கி என்பது ஒருவகை நஞ்சு. அது குளிர்ந்து கொல்வது விலை மகளிரும் குளுர்ச்சியாகப் பேசி உடைமையையும் உணர்வையும் உயிரையும் ஒருங்கே கவர்வர்.

தருக்கிடுஞ் செங்கயல் அறச்சிவந்து ---

     தருக்கு --- வாது. தம்பால் வந்தவரிடம் வாதிட்டு வேதனை புரியுங் கண்களை உடையவர். அடிக்கடி ஆடவருடன் சிணுங்கியும் பிணங்கியும் கண்களைச் சிவக்கும்படிச் செய்வர்.

அங்கையில் அன்பு மேவும் ---

     அங்கையில் என்றது கையிலுள்ள பொருளில் என்று பொருள் கொள்ளவும். கைப்பொருளின் மீதிலேயே கவனமுடையவராயப் பற்பல சாகசம் புரிந்து மிச்சமின்றிப் பறித்துக் கொள்வர்.

அங்கமும் அறத்தளர்ந்து என்பயன்? ---

     விலைமகளிரை நாடியும் தேடியும் ஓடியும் காலமெல்லாம் அதனால் உடம்பு உள்ளம் உணர்ச்சி ஆகிய யாவும் தளர்ச்சியுறுவர். அதனால் என்ன பயன்? பொருளும் போய் புகழும் போய் உடல் நலமும் குன்றி இடர்ப்படுவர். இம்மையிலே பழியும், மறுமையிலே பாவமும் எய்துவர். தளர்ச்சியடையுமுன் இறைவன் திருவடியடைய முயலுதல் வேண்டும்.

அருட்பதம் பங்கயம் அன்புறாதோ? ---

     திருவருள் நிலையமாக விளங்குவது இறைவனுடைய திருவடி; திருவடியை தியானிப்பவர் திருவருட் செல்வத்திற்கு உரியவராவார்கள். அருட்செல்வம் பெற்றார் முத்தி வீட்டில் முதன்மை பெறுவர். `அருளில்லார்க் கவ்வுலக மில்லை’ என்பார் திருவள்ளுவர்.

     அருளை அன்பாலேயே பெறமுடியும். நாம் இறைவனிடம் அன்பு வைத்தால் இறைவன் நம்மீது அருள் வைப்பான், அன்பிலார் அருளைப் பெறுகிலார். நாளும் நாளும் இறைவன் திருவடித் தாமரைமீது அன்பை வளர்க்கவேண்டும்.

     இறைவன்மீது தொடக்கத்தில் அன்பு வைத்தவர் பின்னர் எல்லா உயிர்களையும் இறைவனுடைய திருக்கோயில்களாகவே கருதி எல்லா உயிர்களிடத்திலும் அன்பு கொள்வர். எல்லாம் இறைவனுடைய உடைமைகளாகவே தோன்றும். ஈசனிடத்து அன்புடையார்க்கே இந்தப் பண்பாடு உண்டாகும். ஈசன்பால் அன்பிலாதார் யார்க்கும் அன்பிலாதவரே யாவர். அவர் என்புதோல் போர்த்த உடம்பாக மட்டுமே இருப்பர்.

அன்பின் வழியது உயிர்நிலை, அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.         --- திருக்குறள்

மிருத்தணும் பங்கயன் ---

     மிருத்து --- மரணம்;  அண்ணும் --- அடைதல்; பங்கயன் --- பிரமதேவன். அண்ணும் என்பது அணும் என வந்தது.

     மால் அயன் முதலிய வானவர் அனைவர்க்கும் இறப்பு, பிறப்புண்டு; திரிமூர்த்திகளும் பசுக்களே. அவர்கட்கு குணம், வடிவம், பேர் முதலியவையுண்டு.

மாலும் துஞ்சுவான், மலரவன் இறப்பான்,
     மற்றைவானவர் முற்றிலும் அழிவார்,
ஏலும் நல்துணை யார்நமக்கு? ன்றே
     எண்ணி நிற்றியோ, ஏழைநீநெஞ்சே,
கோலும் ஆயிரம் கோடி அண்டங்கள்
     குலைய நீக்கியும் ஆக்கியும் அளிக்கும்
நாலு மாமறைப் பரம்பொருள் நாமம்
     நமச்சிவாயங்காண் நாம்பெறும் துணையே. ---திரு அருட்பா.

நூறுகோடி பிரமர்கள் நொங்கினர்
     ஆறுகோடி நாராயணர் அங்ஙனே
 ஏறுகங்கை மணல்எண்ணில் இந்திரர்
     ஈறுஇல்லாதவன் ஈசன் ஒருவனே.”            ---அப்பர்.

     சிவபெருமான் ஒருவரே பிறப்பிறப்பில்லாதவர்; மூவருந் தேவரும் பசுக்களே. சிவமூர்த்தி பசுபதி. “பிறவா யாக்கைப் பெரியோன்” என்று இளங்கோவடிகளும், “பிறப்பிலி இறப்பிலி” என்று வில்லிபுத்தூராழ்வாரும் கூறுகின்றனர். பிறப்பு இறப்பு என்னும் பெரும்பிணியை அகற்ற கருதும் அன்பர்கள் பிறப்பு இறப்பில்லாத இறைவனை வழிபட்டு உய்வு பெறுக.

அலர்க்கணன் ---

தாமரைக்கண்ணன் --- திருமால்.

     திருமால் நாடோறும் ஆயிரம் தாமரை மலர்களால் சிவமூர்த்தியை வழிபட்டனர். ஒருநாள் ஒரு மலர் குறைந்தது கண்டு தனது கண்மலரை எடுத்து அருச்சித்தனர். அது காரணமாக அவருக்குப் “புண்டரீகாட்சன்” என்ற பேர் உண்டாயிற்று.

சங்கரர் ---

     உருத்திரர் மூவரில் ஒருவர். உருத்திரர் வேறு; சிவம் வேறு. சிவம் சதுர்த்தப் பொருள். மூவர்க்கும் அப்பாற்பட்ட நான்காவது பொருள். சிவபெருமானுடைய நாமங்கள் உருத்திரருக்கு உண்டு. அதனால் உருத்திரரைச் சங்கரர் எனக் கூறினார் என்று அறிக.

விதித்து எணும் கும்பிடும் ---

     விதி --- முறை. என்றும் என்ற சொல் எணும் என மருவியது. மும்மூர்த்திகளும் முழுமுதல் கடவுளாகியமுருகவேளை அன்புடன் வணங்குகின்றனர்.

இதழ் பொதி அவிழ்ந்த தாமரையின்
     மணவறை புகுந்த நான்முகனும்
     எறிதிரை அலம்பு பால்உததி      நஞ்சுஅராமேல்
இருவிழி துயின்ற நாரணனும்
   உமைஉருவு சந்த்ர சேகரனும்
   இமைவவர் வணங்கு வாசவனும்    நின்றதாழும்
   முதல்வ...................”                 --- (உததியறல்) திருப்புகழ்.

அங்க வாயா ---

அங்கம் --- வேத அங்கங்கள் ஆறு; இதனைச் சடங்கம் என்பர்.

வேதமோடு ஆறங்கமாயினை”         --- தேவாரம்.

நாசி வாய் கண் காது கைகால் என்ற ஆறு அங்கங்களைப் போல் வேதத்திற்கும் ஆறு அங்கங்கள் உண்டு. அவை சிட்சை, வியாகரணம், சோதிடம், நிருக்தம், கல்பம், சந்தஸ், என்பன.

1. சிட்சை ---

நாசி போன்றது.  மூச்சுக் காற்று மனித வாழ்க்கைக்கு முக்கியமானது. அது நாசியின் மூலம் இயங்குகின்றது. அது போன்றது சிட்சை என்ற அங்கம். எழுத்துக்களின் உச்சாரணம், மாத்திரை உற்பத்தி முதலியவைகளை வரையறுப்பது.

2. வியாகரணம் ---

வாய் போன்றது. நடராஜப்பெருமானுடைய நடனத்தின் முடிவில் உடுக்கையிலிருந்து பதினான்கு ஒலிகளுடன் பதினான்கு எழுத்துக்கள் தோன்றின. பாணினி இவற்றைப் பதினான்கு சூத்திரங்களாக எழுதினார். இவை மஹேஸ்வர சூத்திரங்கள் எனப்படும்.

பாணினியின் வியாகரணத்திற்குப் பாஷ்யஞ் செய்தவர் பதஞ்சலி. ஆதிசேடனுடைய அம்சம் பதஞ்சலி. ஆதிசேடன் நடராஜருடைய திருவடியிலுள்ள அணிகலம்.

சிவபெருமானுடைய மூச்சுக் காற்று- வேதம்
                    கைக் காற்று - வியாகரணம்
                    கால் காற்று - பாஷ்யம்.

3. சோதிடம் ---

கண் போன்றது. கண் தொலைவிலுள்ளதைக் காட்டும். ஜோதிடமும் பல ஆண்டுகளுக்கு அப்பால் வரக்கூடிய சூரியகிரகணம், சந்திரகிரகணம் முதலியவற்றைக் காட்டுவது.

4. நிருத்தம் ---

காது போன்றது: இது நிகண்டு. ஏன் இந்தப்பதம் இங்கு வந்தது என விளக்குவது ஹ்ருதயம் ஹ்ருதி அபயம். ஹ்ருதயத்தில் இவன் இருக்கிறான் என்பது பொருள். பரமாத்மா நிவாசம் புரகின்றார். இதுபோல் பதங்களை நிச்சயிப்பது.

5. கல்பம் ---

கைபோன்றது. காரியங்களைச் செய்வதனால் கரமெனப்பட்டது. தெலுங்கிலே செய் என்று கையைக் கூறுவர். இன்னார் இதனைச் செய்ய வேண்டும்; இன்ன கர்மாவுக்கு இன்ன மந்திரம்; இன்ன திரவியம் செய்விப்பவர்களுடைய இலக்கணம்; பாத்திரங்களின் அமைப்பு இவைகளை விளக்குவது.

6. சந்தஸ் ---

கால் போன்றது. யாப்புபோன்றது. இன்ன இன்ன கவிக்கு இத்தனை இத்தனை எழுத்துக்கள்; இத்தனை அடி; இத்தனை மாத்திரை என்று வரையறுப்பது.

வேதமந்திரங்கள் --- சந்தஸ்

மற்றவை --- சுலோகம்.

இவையில்லாமல் நிற்க முடியாது;ஆதலின் கால் எனக் கொள்ளப்பட்டது. இந்த ஆறங்கங்களிலும் வல்லவர்கள் வேதத்தின் பொருளை நன்கறிந்தவர்கள். வேதத்தினை யறிந்தவர் வேத முதல்வராகிய இறைவனையறிவர். வேதம் அங்கம் இவைகள் இறைவனுடைய திருவாக்கில் தங்கியுள்ளன. ஆதலினால் “அங்கவாயா” என்றனர்.

பெருக்கு தண் சண்பக வனத்து இடம் கொங்கொடு திறல் செழும் சந்து அகில் துன்றி, நீடு தினைப்புனம் பைங்கொடி தனத்துடன் சென்று அணை ----

முருகப் பெருமான் வள்ளி நாயகியைத் திருமணம் புரிந்த வரலாறு

     தீய என்பன கனவிலும் நினையாத் தூய மாந்தர் வாழ் தொண்டை நன்னாட்டில், திருவல்லம் என்னும் திருத்தலத்திற்கு வடபுறத்தே, மேல்பாடி என்னும் ஊரின் அருகில், காண்பவருடைய கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவரும் அழகு உடைய வள்ளிமலை உள்ளது. அந்த மலையின் சாரலில் சிற்றூர் என்னும் ஒரு ஊர் இருந்தது. அந்த ஊரில் வேடர் தலைவனும், பண்டைத் தவம் உடையவனும் ஆகிய நம்பி என்னும் ஒருவன் தனக்கு ஆண்மக்கள் இருந்தும் பெண் மகவு இன்மையால் உள்ளம் மிக வருந்தி, அடியவர் வேண்டும் வரங்களை நல்கி அருளும் ஆறுமுக வள்ளலை வழிபட்டு, குறி கேட்டும், வெறி ஆட்டு அயர்ந்தும், பெண் மகவுப் பேற்றினை எதிர்பார்த்து இருந்தான்.

     கண்ணுவ முனிவருடைய சாபத்தால் திருமால் சிவமுனிவராகவும், திருமகள் மானாகவும், உபேந்திரன் நம்பியாகவும் பிறந்து இருந்தனர். அந்தச் சிவமுனிவர், சிவபெருமானிடம் சித்தத்தைப் பதிய வைத்து, அம்மலையிடம் மாதவம் புரிந்து கொண்டு இருந்தார். பொன் நிறம் உடைய திருமகளாகிய அழகிய மான், சிவமுனிவர் வடிவோடு இருந்த திருமால் முன்னே உலாவியது. அம்மானை அம்முனிவர் கண்டு உள்ளம் விருப்புற்று, தெய்வப் புணர்ச்சி போலக் கண்மலரால் கலந்தார். பிறகு தெளிவுற்று, உறுதியான தவத்தில் நிலைபெற்று நின்றார்.

     ஆங்கு ஒரு சார், கந்தக் கடவுளைச் சொந்தமாக்கித் திருமணம் செய்துகொள்ளும் பொருட்டுத் தவம் புரிந்து கொண்டு இருந்த சுந்தரவல்லி, முன்னர் தனக்கு முருகவேள் கட்டளை இட்டவாறு, அந்த மானின் வயிற்றில் கருவில் புகுந்தாள். அம்மான் சூல் முதிர்ந்து, இங்கும் அங்கும் உலாவி, உடல் நொந்து, புன்செய் நிலத்தில் புகுந்து, வேட்டுவப் பெண்கள் வள்ளிக் கிழங்குகளை அகழ்ந்து எடுத்த குழியில் பல்கோடி சந்திரப் பிரகாசமும், மரகத வண்ணமும் உடைய சர்வலோக மாதாவைக் குழந்தையாக ஈன்றது. அந்தப் பெண் மானானாது, குழந்தை தன் இனமாக இல்லாமை கண்டு அஞ்சி ஓடியது. குழந்தை தனியே அழுதுகொண்டு இருந்தது.

     அதே சமயத்தில், ஆறுமுகப் பெருமானுடைய திருவருள் தூண்டுதலால், வேட்டுவ மன்னனாகிய நம்பி, தன் மனைவியோடு பரிசனங்கள் சூழத் தினைப்புனத்திற்குச் சென்று, அக் குழந்தையின் இனிய அழுகை ஒலியைக் கேட்டு, உள்ளமும் ஊனும் உருகி, ஓசை வந்த வழியே போய், திருப்பாற்கடலில் பிறந்த திருமகளும் நாணுமாறு விளங்கும் குழந்தையைக் கண்டான். தனது மாதவம் பலித்தது என்று உள்ளம் உவந்து ஆனந்தக் கூத்து ஆடினான். குழந்தையை எடுத்து, தன் மனைவியாகிய கொடிச்சியின் கரத்தில் கொடுத்தான். அவள் மனம் மகிழ்ந்து, குழந்தையை மார்போடு அணைத்தாள். அன்பின் மிகுதியால் பால் சுரந்தது. பாலை ஊட்டினாள். பிறகு யாவரும் சிற்றூருக்குப் போய், சிறு குடிலில் புகுந்து, குழந்தையைத் தொட்டிலில் இட்டு, முருகப் பெருமானுக்கு வழிபாடு ஆற்றினர். மிகவும் வயது முதிர்ந்தோர் வந்து கூடி, வள்ளிக் கிழங்கை அகழ்ந்து எடுத்த குழியில் பிறந்தமையால், குழந்தைக்கு வள்ளி என்று பேரிட்டனர். உலக மாதாவாகிய வள்ளிநாயகியை நம்பியும் அவன் மனைவியும் இனிது வளர்த்தார்கள்.

     வேடுவர்கள் முன் செய்த அருந்தவத்தால், அகிலாண்டநாயகி ஆகிய எம்பிராட்டி, வேட்டுவர் குடிலில் தவழ்ந்தும், தளர்நடை இட்டும், முற்றத்தில் உள்ள வேங்கை மர நிழலில் உலாவியும், சிற்றில் இழைத்தும், சிறு சோறு அட்டும், வண்டல் ஆட்டு அயர்ந்தும், முச்சிலில் மணல் கொழித்தும், அம்மானை ஆடியும் இனிது வளர்ந்து, கன்னிப் பருவத்தை அடைந்தார்.

     தாயும் தந்தையும் அவருடைய இளம் பருவத்தைக் கண்டு, தமது சாதிக்கு உரிய ஆசாரப்படி, அவரைத் தினைப்புனத்திலே உயர்ந்த பரண் மீது காவல் வைத்தார்கள். முத்தொழிலையும், மூவரையும் காக்கும் முருகப் பெருமானுடைய தேவியாகிய வள்ளி பிராட்டியாரை வேடுவர்கள் தினைப்புனத்தைக் காக்க வைத்தது, உயர்ந்த இரத்தினமணியை தூக்கணங்குருவி, தன் கூட்டில் இருள் ஓட்ட வைத்தது போல் இருந்தது.

     வள்ளி நாயகியாருக்கு அருள் புரியும் பொருட்டு, முருகப் பெருமான், கந்தமாதன மலையை நீங்கி, திருத்தணிகை மலையில் தனியே வந்து எழுந்தருளி இருந்தார். நாரத மாமுனிவர் அகிலாண்ட நாயகியைத் தினைப்புனத்தில் கண்டு, கை தொழுது, ஆறுமுகப் பரம்பொருளுக்குத் தேவியார் ஆகும் தவம் உடைய பெருமாட்டியின் அழகை வியந்து, வள்ளி நாயகியின் திருமணம் நிகழ்வது உலகு செய்த தவப்பயன் ஆகும் என்று மனத்தில் கொண்டு, திருத்தணிகை மலைக்குச் சென்று, திருமால் மருகன் திருவடியில் விழுந்து வணங்கி நின்றார். வள்ளிமலையில் தினைப்புனத்தைக் காக்கும் பெருந்தவத்தைப் புரிந்துகொண்டு இருக்கும் அகிலாண்ட நாயகியைத் திருமணம் புணர்ந்து அருள வேண்டும் என்று விண்ணப்பித்தார்.  முருகப்பெருமான் நாரதருக்குத் திருவருள் புரிந்தார்.

     வள்ளிநாயகிக்குத் திருவருள் புரியத் திருவுள்ளம் கொண்டு, கரிய திருமேனியும், காலில் வீரக்கழலும், கையில் வில்லம்பும் தாங்கி, மானிட உருவம் கொண்டு, தணியா அதிமோக தயாவுடன், திருத்தணிகை மலையினின்றும் நீங்கி, வள்ளிமலையில் வந்து எய்தி, தான் சேமித்து வைத்த நிதியை ஒருவன் எடுப்பான் போன்று, பரண் மீது விளங்கும் வள்ளி நாயகியாரை அணுகினார்.

     முருகப்பெருமான் வள்ளிநாயகியாரை நோக்கி, "வாள் போலும் கண்களை உடைய பெண்ணரசியே! உலகில் உள்ள மாதர்களுக்கு எல்லாம் தலைவியாகிய உன்னை உன்னதமான இடத்தில் வைக்காமல், இந்தக் காட்டில், பரண் மீது தினைப்புனத்தில் காவல் வைத்த வேடர்களுக்குப் பிரமதேவன் அறிவைப் படைக்க மறந்து விட்டான் போலும். பெண்ணமுதே, நின் பெயர் யாது? தின் ஊர் எது? நின் ஊருக்குப் போகும் வழி எது? என்று வினவினார்.

நாந்தகம் அனைய உண்கண்
     நங்கை கேள், ஞாலம் தன்னில்                     
ஏந்திழையார்கட்கு எல்லாம்
     இறைவியாய் இருக்கும்நின்னைப்                               
பூந்தினை காக்க வைத்துப்
     போயினர், புளினர் ஆனோர்க்கு                       
ஆய்ந்திடும் உணர்ச்சி ஒன்றும்
     அயன் படைத்திலன்கொல் என்றான்.

வார் இரும் கூந்தல் நல்லாய்,
     மதி தளர்வேனுக்கு உன்தன்                  
பேரினை உரைத்தி, மற்று உன்
     பேரினை உரையாய் என்னின்,                                   
ஊரினை உரைத்தி, ஊரும்
     உரைத்திட முடியாது என்னில்
சீரிய நின் சீறுர்க்குச்
     செல்வழி உரைத்தி என்றான்.

மொழிஒன்று புகலாய் ஆயின்,
     முறுவலும் புரியாய் ஆயின்,                              
விழிஒன்று நோக்காய் ஆயின்
     விரகம் மிக்கு உழல்வேன், உய்யும்                                
வழி ஒன்று காட்டாய் ஆயின்,
     மனமும் சற்று உருகாய் ஆயின்                             
பழி ஒன்று நின்பால் சூழும்,
     பராமுகம் தவிர்தி என்றான்.    
    
உலைப்படு மெழுகது என்ன
      உருகியே, ஒருத்தி காதல்
வலைப்படுகின்றான் போல
     வருந்தியே இரங்கா நின்றான்,
கலைப்படு மதியப் புத்தேள்
     கலம் கலம் புனலில் தோன்றி,
அலைப்படு தன்மைத்து அன்றோ
     அறுமுகன் ஆடல் எல்லாம்.

     இவ்வாறு எந்தை கந்தவேள், உலகநாயகியிடம் உரையாடிக் கொண்டு இருக்கும் வேளையில், வேட்டுவர் தலைவனாகிய நம்பி தன் பரிசனங்கள் சூழ ஆங்கு வந்தான். உடனே பெருமான் வேங்கை மரமாகி நின்றார். நம்பி வேங்கை மரத்தைக் கண்டான். இது புதிதாகக் காணப்படுவதால், இதனால் ஏதோ விபரீதம் நேரும் என்று எண்ணி, அதனை வெட்டி விட வேண்டும் என்று வேடர்கள் சொன்னார்கள். நம்பி, வேங்கை மரமானது வள்ளியம்மையாருக்கு நிழல் தந்து உதவும் என்று விட்டுச் சென்றான்.

     நம்பி சென்றதும், முருகப் பெருமான் முன்பு போல் இளங்குமரனாகத் தோன்றி, "மாதரசே! உன்னையே புகலாக வந்து உள்ளேன். என்னை மணந்து இன்பம் தருவாய். உன் மீது காதல் கொண்ட என்னை மறுக்காமல் ஏற்றுக் கொள். உலகமெல்லாம் வணங்கும் உயர் பதவியை உனக்குத் தருகின்றேன்.  தாமதிக்காமல் வா" என்றார். என் அம்மை வள்ளிநாயகி நாணத்துடன் நின்று, "ஐயா, நீங்கள் உலகம் புரக்கும் உயர் குலச் செம்மல். நான் தினைப்புனப் காக்கும் இழிகுலப் பேதை. தாங்கள் என்னை விரும்புவது தகுதி அல்ல. புலி பசித்தால் புல்லைத் தின்னுமோ?" என்று கூறிக் கொண்டு இருக்கும்போதே, நம்பி உடுக்கை முதலிய ஒலியுடன் அங்கு வந்தான். எம்பிராட்டி நடுங்கி, "ஐயா! எனது தந்தை வருகின்றார். வேடர்கள் மிகவும் கொடியவர். விரைந்து ஓடி உய்யும்" என்றார். உடனே, முருகப் பெருமான் தவவேடம் கொண்ட கிழவர் ஆனார்.

     நம்பி, அக் கிழவரைக் கண்டு வியந்து நின்றான். பெருமான் அவனை நோக்கி, "உனக்கு வெற்றி உண்டாகுக. உனது குலம் தழைத்து ஓங்குக. சிறந்த வளம் பெற்று வாழ்க" என்று வாழ்த்தி, திருநீறு தந்தார். திருநீற்றினைப் பெருமான் திருக்கரத்தால் பெறும் பேறு மிக்க நம்பி, அவர் திருவடியில் விழுந்து வணங்கி, "சுவாமீ! இந்த மலையில் வந்த காரணம் யாது? உமக்கு வேண்டியது யாது?" என்று கேட்டான். பெருமான் குறும்பாக, "நம்பீ! நமது கிழப்பருவம் நீங்கி, இளமை அடையவும், உள்ளத்தில் உள்ள மயக்கம் நீங்கவும் இங்குள்ள குமரியில் ஆட வந்தேன்" என்று அருள் செய்தார். நம்பி, "சுவாமீ! தாங்கள் கூறிய (குமரி - தீர்த்தம்) தீர்த்தத்தில் முழுகி சுகமாக இருப்பீராக. எனது குமரியும் இங்கு இருக்கின்றாள். அவளுக்குத் தாங்களும், தங்களுக்கு அவளும் துணையாக இருக்கும்" என்றான். தேனையும் தினை மாவையும் தந்து, "அம்மா! இந்தக் கிழ முனிவர் உனக்குத் துணையாக இருப்பார்" என்று சொல்லி, தனது ஊர் போய்ச் சேர்ந்தான்.

     பிறகு, அக் கிழவர், "வள்ளி மிகவும் பசி" என்றார்.  நாயகியார் தேனையும் தினைமாவையும் பழங்களையும் தந்தார். பெருமான் "தண்ணீர் தண்ணீர்" என்றார். "சுவாமீ! ஆறு மலை தாண்டிச் சென்றால், ஏழாவது மலையில் சுனை இருக்கின்றது. பருகி வாரும்" என்றார் நாயகியார். பெருமான், "வழி அறியேன், நீ வழி காட்டு" என்றார். பிராட்டியார் வழி காட்டச் சென்று, சுனையில் நீர் பருகினார் பெருமான்.

     (இதன் தத்துவார்த்தம் --- வள்ளி பிராட்டியார் பக்குவப்பட்ட ஆன்மா. வேடனாகிய முருகன் - ஐம்புலன்களால் அலைக்கழிக்கப்பட்டு நிற்கும் ஆன்மா. பக்குவப்பட்ட ஆன்மாவைத் தேடி, பக்குவ அனுபவம் பெற, பக்குவப்படாத ஆன்மாவாகிய வேடன் வருகின்றான். அருள் தாகம் மேலிடுகின்றது. அந்தத் தாகத்தைத் தணிப்பதற்கு உரிய அருள் நீர், ஆறு ஆதாரங்களாகிய மலைகளையும் கடந்து, சகஸ்ராரம் என்னும் ஏழாவது மலையை அடைந்தால் அங்கே அமுதமாக ஊற்றெடுக்கும். அதனைப் பருகி தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம் என்று பக்குவப்பட்ட ஆன்மாவாகிய வள்ளிப் பிராட்டியார், பக்குவப் படாத ஆன்மாவாகிய வேடனுக்கு அறிவுறுத்துகின்றார். ஆன்மா பக்குவப்பட்டு உள்ளதா என்பதைச் சோதிக்க, முருகப் பெருமான் வேடர் வடிவம் காண்டு வந்தார்  என்று கொள்வதும் பொருந்தும்.)

     வள்ளிநாயகியைப் பார்த்து, "பெண்ணே! எனது பசியும் தாகமும் நீங்கியது. ஆயினும் மோகம் நீங்கவில்லை. அது தணியச் செய்வாய்" என்றார். எம்பிராட்டி சினம் கொண்டு, "தவ வேடம் கொண்ட உமக்கு இது தகுதியாகுமா? புனம் காக்கும் என்னை இரந்து நிற்றல் உமது பெருமைக்கு அழகோ? எமது குலத்தார் இதனை அறிந்தால் உமக்குப் பெரும் கேடு வரும். உமக்கு நரை வந்தும், நல்லுணர்வு சிறிதும் வரவில்லை. இவ்வேடருடைய கூட்டத்திற்கே பெரும் பழியைச் செய்து விட்டீர்" என்று கூறி, தினைப்புனத்தைக் காக்கச் சென்றார்.

     தனக்கு உவமை இல்லாத தலைவனாகிய முருகப் பெருமான்,  தந்திமுகத் தொந்தியப்பரை நினைந்து, "முன்னே வருவாய், முதல்வா!" என்றார். அழைத்தவர் குரலுக்கு ஓடி வரும் விநாயகப்பெருமான் யானை வடிவம் கொண்டு ஓடி வந்தனர். அம்மை அது கண்டு அஞ்சி ஓடி, கிழமுனிவரைத் தழுவி நின்றார். பெருமான் மகிழ்ந்து, விநாயகரைப் போகுமாறு திருவுள்ளம் செய்ய அவரும் நீங்கினார்.

     முருகப் பெருமான் தமது ஆறுதிருமுகம் கொண்ட திருவுருவை அம்மைக்குக் காட்டினார். வள்ளநாயகி, அது கண்டு ஆனந்தமுற்று, ஆராத காதலுடன் அழுதும் தொழுதும் வாழ்த்தி, "பெருமானே! முன்னமே இத் திருவுருவைத் தாங்கள் காட்டாமையால், அடியாள் புரிந்த அபசாரத்தைப் பொறுத்து அருளவேண்டும்" என்று அடி பணிந்தார். பெருமான் பெருமாட்டியை நோக்கி அருள் மழை பொழிந்து, "பெண்ணே! நீ முற்பிறவியில் திருமாலுடைய புதல்வி. நம்மை மணக்க நல் தவம் புரிந்தாய். உன்னை மணக்க வலிதில் வந்தோம்" என்று அருள் புரிந்து, பிரணவ உபதேசம் புரிந்து, "நீ தினைப்புனம் செல்.  நாளை வருவோம்" என்று மறைந்து அருளினார்.

     அம்மையார் மீண்டும் பரண் மீது நின்று "ஆலோலம்" என்று ஆயல் ஓட்டினார். அருகில் உள்ள புனம் காக்கும் பாங்கி வள்ளிநாயகியிடம் வந்து,  "அம்மா! தினைப்புனத்தை பறவைகள் பாழ் படுத்தின. நீ எங்கு சென்றாய்" என்று வினவினாள். வள்ளியம்மையார், நான் மலை மீது உள்ள சுனையில் நீராடச் சென்றேன்" என்றார். 

     "அம்மா! கருமையான கண்கள் சிவந்து உள்ளன. வாய் வெளுத்து உள்ளது. உடம்பு வியர்த்து உள்ளது. முலைகள் விம்மிதம் அடைந்து உள்ளன. கையில் உள்ள வளையல் நெகிழ்ந்து உள்ளது. உன்னை இவ்வாறு செய்யும் குளிர்ந்த சுனை எங்கே உள்ளது? சொல்லுவாய்" என்று பாங்கி வினவினாள்.   

மை விழி சிவப்பவும், வாய் வெளுப்பவும்,
மெய் வியர்வு அடையவும், நகிலம் விம்மவும்,
கை வளை நெகிழவும் காட்டும் தண் சுனை
எவ்விடை இருந்து உளது? இயம்புவாய் என்றாள்.  

     இவ்வாறு பாங்கி கேட், அம்மையார், "நீ என் மீது குறை கூறுதல் தக்கதோ?" என்றார். 

     வள்ளியம்மையாரும் பாங்கியும் இவ்வாறு கூடி இருக்கும் இடத்தில், ஆறுமுகப் பெருமான் முன்பு போல் வேட வடிவம் தாங்கி, வேட்டை ஆடுவார் போல வந்து, "பெண்மணிகளே! இங்கு எனது கணைக்குத் தப்பி ஓடி வந்த பெண் யானையைக் கண்டது உண்டோ? என்று வினவி அருளினார். தோழி, "ஐயா! பெண்களிடத்தில் உமது வீரத்தை விளம்புவது முறையல்ல" என்று கூறி, வந்தவர் கண்களும், இருந்தவள் கண்களும் உறவாடுவதைக் கண்டு, "அம்மை ஆடிய சுனை இதுதான் போலும்" என்று எண்ணி, புனம் சென்று இருந்தனள். பெருமான் பாங்கி இருக்கும் இடம் சென்று, "பெண்ணே! உன் தலைவியை எனக்குத் தருவாய். நீ வேண்டுவன எல்லாம் தருவேன்" என்றார். பாங்கி, "ஐயா! இதனை வேடுவர் கண்டால் பேராபத்தாக முடியும். விரைவில் இங்கிருந்து போய் விடுங்கள்" என்றாள்.

தோட்டின் மீது செல் விழியினாய் தோகையோடு என்னைக்                   
கூட்டிடாய் எனில், கிழிதனில் ஆங்கு அவள் கோலம்
தீட்டி, மா மடல் ஏறி, நும் ஊர்த் தெரு அதனில்
ஓட்டுவேன், இது நாளை யான் செய்வது" என்று உரைத்தான்.                                 

     பாங்கி அது கேட்டு அஞ்சி, "ஐயா! நீர் மடல் ஏற வேண்டாம். அதோ தெரிகின்ற மாதவிப் பொதும்பரில் மறைந்து இருங்கள். எம் தலைவியைத் தருகின்றேன்" என்றாள். மயில் ஏறும் ஐயன், மாதவிப் பொதும்பரில் மறைந்து இருந்தார். பாங்கி வள்ளிப்பிராட்டியிடம் போய் வணங்கி, அவருடைய காதலை உரைத்து, உடன்பாடு செய்து, அம்மாதவிப் பொதும்பரிடம் அழைத்துக் கொண்டு போய் விட்டு, "நான் உனக்கு மலர் பறித்துக் கொண்டு வருவேன்" என்று சொல்லி மெல்ல நீங்கினாள். பாங்கி நீங்கவும், பரமன் வெளிப்பட்டு, பாவையர்க்கு அரசியாகிய வள்ளிநாயகியுடன் கூடி, "நாளை வருவேன், உனது இருக்கைக்குச் செல்" என்று கூறி நீங்கினார்.

     இவ்வாறு பல பகல் கழிந்தன. தினை விளைந்தன. குன்றவாணர்கள் ஒருங்கு கூடி விளைவை நோக்கி மகிழ்ந்து, வள்ளியம்மையை நோக்கி, "அம்மா! மிகவும் வருந்திக் காத்தனை. இனி உன் சிறு குடிலுக்குச் செல்வாய்" என்றனர்.

     வள்ளிநாயகி அது கேட்டு வருந்தி, "அந்தோ என் ஆருயிர் நாயகருக்கு சீறூர்க்கு வழி தெரியாதே! இங்கு வந்து தேடுவாரே" என்று புலம்பிக் கொண்டே தனது சிறு குடிலுக்குச் சென்றார்.

     வள்ளிநாயகியார் வடிவேற் பெருமானது பிரிவுத் துன்பத்திற்கு ஆற்றாது அவசமுற்று வீழ்ந்தனர். பாவையர்கள் ஓடி வந்து, எடுத்து அணைத்து, மேனி மெலிந்தும், வளை கழன்றும் உள்ள தன்மைகளை நோக்கி, தெய்வம் பிடித்து உள்ளது என்று எண்ணினர். நம்பி முதலியோர் உள்ளம் வருந்தி, முருகனை வழிபட்டு, வெறியாட்டு அயர்ந்தனர். முருகவேள் ஆவேசம் ஆகி, "நாம் இவளைத் தினைப்புனத்தில் தீண்டினோம். நமக்குச் சிறப்புச் செய்தால், நம் அருளால் இது நீங்கும்" என்று குறிப்பில் கூறி அருளினார். அவ்வாறே செய்வதாக வேடர்கள் சொல்லினர்.

     முருகவேள் தினைப்புனம் சென்று, திருவிளையாடல் செய்வார் போல், வள்ளியம்மையைத் தேடிக் காணாது நள்ளிரவில் சீறூர் வந்து, குடிலுக்கு வெளியே நின்றார். அதனை உணர்ந்த பாங்கி, வெளி வந்து, பெருமானைப் பணிந்து, "ஐயா! நீர் இப்படி இரவில் இங்கு வருவது தகாது. உம்மைப் பிரிந்த எமது தலைவியும் உய்யாள். இங்கு நீர் இருவரும் கூட இடம் இல்லை. ஆதலால், இவளைக் கொண்டு உம் ஊர்க்குச் செல்லும்" என்று தாய் துயில் அறிந்து, பேய் துயில் அறிந்து, கதவைத்திறந்து, பாங்கி வள்ளிப்பிராட்டியாரைக் கந்தவேளிடம் ஒப்புவித்தாள்.

தாய்துயில் அறிந்து, தங்கள்
     தமர்துயில் அறிந்து, துஞ்சா
நாய்துயில் அறிந்து, மற்றுஅந்
     நகர்துயில் அறிந்து, வெய்ய
பேய்துயில் கொள்ளும் யாமப்
     பெரும்பொழுது அதனில், பாங்கி
வாய்தலில் கதவை நீக்கி
     வள்ளியைக் கொடுசென்று உய்த்தாள்.

     (இதன் தத்துவார்த்த விளக்கம் --- ஆன்மாவை வளர்த்த திரோதமலமாகிய தாயும், புலன்களாகிய தமரும், ஒரு போதும் தூங்காத மூலமலமாகிய நாயும், தேக புத்தியாகிய நகரமும், சதா அலைகின்ற பற்று என்ற பேயும், இவை எல்லாம் துயில்கின்ற வேளையில் திருவருளாகிய பாங்கி,  பக்குவ ஆன்மா ஆகிய வள்ளியம்மையாரை முருகப் பெருமான் கவர்ந்து செல்லத் துணை நின்றது. "தாய் துயில் அறிதல்" என்னும் தலைப்பில் மணிவாசகப் பெருமானும் திருக்கோவையார் என்னும் ஞானநூலில் பாடியுள்ளார்.)

     வள்ளி நாயகியார் பெருமானைப் பணிந்து, "வேதங்கள் காணாத உமது விரை மலர்த்தாள் நோவ, என் பொருட்டு இவ்வேடர்கள் வாழும் சேரிக்கு நடந்து, இவ்விரவில் எழுந்தருளினீரே" என்று தொழுது நின்றார்.

பாங்கி பரமனை நோக்கி, "ஐயா! இங்கு நெடிது நேரம் நின்றால் வேடர் காண நேரும். அது பெரும் தீமையாய் முடியும். இந்த மாதரசியை அழைத்துக் கொண்டு, நும் பதி போய், இவளைக் காத்து அருள்வீர்" என்று அம்மையை அடைக்கலமாகத் தந்தனள். எம்பிரான் பாங்கிக்குத் தண்ணருள் புரிந்தார். பாங்கி வள்ளநாயகியைத் தொழுது அணைத்து, உன் கணவனுடன் சென்று இன்புற்று வாழ்வாய்" என்று கூறி, அவ்விருவரையும் வழி விடுத்து, குகைக்குள் சென்று படுத்தாள். முருகப் பெருமான் வள்ளிநாயகியுடன் சீறூரைத் தாண்டிச் சென்று, ஒரு பூங்காவில் தங்கினார்.

     விடியல் காலம், நம்பியின் மனைவி எழுந்து, தனது மகளைக் காணாது வருந்தி, எங்கும் தேடிக் காணாளாய், பாங்கியை வினவ, அவள் "நான் அறியேன்" என்றாள். நிகழ்ந்ததைக் கேட்ட நம்பி வெகுண்டு, போர்க்கோலம் கொண்டு தமது பரிசனங்களுடன் தேடித் திரிந்தான். வேடர்கள் தேடுவதை அறிந்த வள்ளிநாயகி, எம்பெருமானே! பல ஆயுதங்களையும் கொண்டு வேடர்கள் தேடி வருகின்றனர். இனி என்ன செய்வது.  எனது உள்ளம் கவலை கொள்கின்றது" என்றார்.

     முருகவேள், "பெண்ணரசே! வருந்தாதே. சூராதி அவுணர்களை மாய்த்த வேற்படை நம்மிடம் இருக்கின்றது. வேடர்கள் போர் புரிந்தால் அவர்களைக் கணப்பொழுதில் மாய்ப்போம்" என்றார். நம்பி வேடர்களுடன் வந்து பாணமழை பொழிந்தான். வள்ளிநாயகியார் அது கண்டு அஞ்சி, "பெருமானே! இவரை மாய்த்து அருள்வீர்" என்று வேண்டினாள். பெருமான் திருவுள்ளம் செய்ய, சேவல் கொடி வந்து கூவியது. வேடர் அனைவரும் மாய்ந்தனர். தந்தையும் உடன் பிறந்தாரும் மாண்டதைக் கண்ட வள்ளிநாயகியார் வருந்தினார். ஐயன் அம்மையின் அன்பைக் காணும் பொருட்டு சோலையை விட்டு நீங்க, அம்மையாரும் ஐயனைத் தொடர்ந்து சென்றார்.

     இடையில் நாரதர் எதிர்ப்பட்டார். தன்னை வணங்கி நின்ற நாரதரிடம் பெருமான் நிகழ்ந்தவற்றைக் கூறி அருளினார். நாரதர், "பெருமானே! பெற்ற தந்தையையும் சுற்றத்தாரையும் வதைத்து, எம்பிராட்டியைக் கொண்டு ஏகுதல் தகுதி ஆகுமா? அது அம்மைக்கு வருத்தம் தருமே" என்றார். முருகப் பெருமான் பணிக்க, வள்ளிநாயகியார் "அனைவரும் எழுக" என்று அருள் பாலித்தார். நம்பி தனது சேனைகளுடன் எழுந்தான். பெருமான் ஆறு திருமுகங்களுடனும், பன்னிரு திருக்கரங்களுடனும் திருக்காட்சி தந்தருளுனார். நம்பிராசன் வேடர்களுடன், அறுமுக வள்ளலின் அடிமலரில் விழுந்து வணங்கி, உச்சிக் கூப்பிய கையுடன், "தேவதேவா! நீரே இவ்வாறு எமது புதல்வியைக் கரவு செய்து, எமக்குத் தீராப் பழியை நல்கினால் நாங்கள் என்ன செய்வோம்? தாயே தனது குழந்தைக்கு விடத்தை ஊட்டலாமா? எமது குல தெய்வமே! எமது சீறூருக்கு வந்து, அக்கினி சான்றாக எமது குலக்கொடியை திருமணம் புணர்ந்து செல்வீர்" என்று வேண்டினான். முருகப் பெருமான் அவன் முறைக்கு இரங்கினார்.

     கந்தக் கடவுள் தமது அருகில் எழுந்தருளி உள்ள தேவியைத் திருவருள் நோக்கம் செய்ய, வள்ளிநாயகியார் தமது மானுட வடிவம் நீங்கி, பழைய வடிவத்தைப் பெற்றார். அதனைக் கண்ட, நம்பி முதலியோர், "அகிலாண்ட நாயகியாகிய வள்ளிநாயகியார் எம்மிடம் வளர்ந்த்து, நாங்கள் செய்த தவப்பேறு" என்று மகிழ்ந்தான். முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்து, திருத்தணிகையில் வந்து உலகம் உய்ய வீற்றிருந்து அருளினார்.

     முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்த வரலாறு, பெரும் தத்துவங்கள் பொதிந்தது. தக்க ஞானாசிரியர் வாய்க்கத் தவம் இருந்தால், அவர் மூலம் உண்மைகள் வெளிப்படும். நாமாக முயன்று பொருள் தேடுவது பொருந்தாது. அனுபவத்துக்கும் வராது.

கருத்துரை


         மூவர் முதல்வரே! குறமகள் கணவரே! பராசலமேவிய பரம்பொருளே! மாதர் மயக்கற்று உமது பாதமலர் மீது அன்பு வைக்க அருள் புரிவீர்.


No comments:

Post a Comment

பொது --- 1097. உறவின் முறையோர்க்கும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உறவின்முறை யோர்க்கும் (பொது) முருகா!  தேவரீரை அன்பொடு துதிக்க அறிவு தந்து அருளுவாய். தனதனன தாத்த தனதனன ...