திருப்பரங்குன்றம் - 0016. பதித்தசெஞ்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பதித்த செஞ்சந்த (திருப்பரங்குன்றம்)

முருகா!
  நினது தண்டை அணிந்த திருவடித் தாமரையை அருள்வாய்


தனத்ததந் தந்தத் தத்தன தத்தந்
     தனத்ததந் தந்தத் தத்தன தத்தந்
     தனத்ததந் தந்தத் தத்தன தத்தந் ...... தனதான


பதித்தசெஞ் சந்தப் பொற்குட நித்தம்
     பருந்துயர்ந் தண்டத் திற்றலை முட்டும்
     பருப்பதந் தந்தச் செப்பவை ஒக்குந் ...... தனபாரம்

படப்புயங் கம்பற் கக்குக டுப்பண்
     செருக்குவண் டம்பப் பிற்கயல் ஒக்கும்
     பருத்தகண் கொண்டைக் கொக்குமி ருட்டென் ......றிளைஞோர்கள்

துதித்துமுன் கும்பிட் டுற்றது ரைத்தன்
     புவக்கநெஞ் சஞ்சச் சிற்றிடை சுற்றுந்
     துகிற்களைந் தின்பத் துர்க்கம் அளிக்கும் ......கொடியார்பால்

துவக்குணும் பங்கப் பித்தன வத்தன்
     புவிக்குளென் சிந்தைப் புத்திம யக்கந்
     துறக்கநின் தண்டைப் பத்மமெ னக்கென் ......றருள்வாயே


குதித்துவெண் சங்கத் தைச்சுற வெற்றுங்
     கடற்கரந் தஞ்சிப் புக்கஅ ரக்கன்
     குடற்சரிந் தெஞ்சக் குத்திவி திர்க்குங் ...... கதிர்வேலா

குலக்கரும் பின்சொற் றத்தையி பப்பெண்
     தனக்குவஞ் சஞ்சொற் பொச்சையி டைக்குங்
     குகுக்குகுங் குங்குக் குக்குகு குக்குங் ...... குகுகூகூ

திதித்திதிந் தித்தித் தித்தியெ னக்கொம்
     பதிர்த்துவெண் சண்டக் கட்கம்வி திர்த்துந்
     திரட்குவிந் தங்கட் பொட்டெழ வெட்டுங் ......கொலைவேடர்

தினைப்புனஞ் சென்றிச் சித்தபெ ணைக்கண்
     டுருக்கரந் தங்குக் கிட்டிய ணைத்தொண்
     திருப்பரங் குன்றிற் புக்குளி ருக்கும் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


பதித்த செஞ் சந்தப் பொன்குடம், நித்தம்
     பருந்து உயர்ந்து, அண்டத்தில் தலை முட்டும்
     பருப்பதம், தந்தச் செப்பு அவை ஒக்கும் ...... தனபாரம்,

பட புயங்கம் பல் கக்கு கடு, பண்
     செருக்கு வண்டு அம்பு அப்பில் கயல் ஒக்கும்
     பருத்த கண், கொண்டைக்கு ஒக்கும் இருட்டு என்று......இளைஞோர்கள்

துதித்து, முன் கும்பிட்டு உற்றது உரைத்து, அன்பு
     உவக்க நெஞ்சு அஞ்சச் சிற்றிடை சுற்றும்
     துகில் களைந்து இன்பத் துர்க்கம் அளிக்கும்....கொடியார்பால்

துவக்கு உணும் பங்கப் பித்தன், அவத்தன்,
     புவிக்குள் என் சிந்தைப் புத்தி மயக்கம்
     துறக்க, நின் தண்டைப் பத்மம் எனக்கு என்று.....அருள்வாயே.

குதித்து வெண் சங்கத்தைச் சுறவு எற்றும்
     கடல் கரந்து, அஞ்சிப் புக்க அரக்கன்
     குடல் சரிந்து எஞ்சக் குத்தி, விதிர்க்கும் .....கதிர்வேலா!

குலக் கரும்பு இன்சொல், தத்தை, இபப் பெண்
     தனக்கு வஞ்சம் சொல், பொச்சை இடை, குங்
     குகுக்குகுங் குங்குக் குக்குகு குக்குங் ...... குகுகூகூ

திதித்திதிந் தித்தித் தித்தி எனக் கொம்பு
     அதிர்த்து, வெண் சண்டக் கட்கம் விதிர்த்தும்,
     திரள் குவிந்து அங்கண் பொட்டு எழ வெட்டும் ......கொலைவேடர்

தினைப் புனம் சென்று, இச்சித்த பெணைக் கண்டு,
     உருக் கரந்து, அங்குக் கிட்டி, அணைத்து, ஒண்
     திருப்பரங்குன்றில் புக்கு உள் இருக்கும்...... பெருமாளே.


பதவுரை

       குதித்து சுறவு --- சுறா மீன்கள் குதித்து,

     வெண் சங்கத்தை எற்றும் --- வெண்மையான சங்குகளைக் கரையில் வீசுகின்ற,

     கடல் கரந்து அஞ்சி புக்க --- கடலில் ஒளிந்து பயந்து சென்ற,

     அரக்கன் --- சூரபன்மனுடைய,

     குடல் சரிந்து எஞ்ச --- குடலானது சரிந்து வலிமை குறையுமாறு,

     குத்தி விதிர்க்கும் --- வேலினால் குத்தி அசைத்த,

     கதிர்வேலா --- ஒளி மிகுந்த வேலாயுதக் கடவுளே!

      குல கரும்பு இன்சொல் --- சிறந்த கரும்பு போன்ற இனிய சொற்களை உடையவரும்,

     தத்தை --- கிளி போன்றவரும் ஆகிய,

     இபப் பெண் தனக்கு --- தெய்வயானை அம்மையாருக்கு,

     வஞ்சம் சொல் --- மறைத்துச் சொல்லி,

     பொச்சை இடை --- காட்டினிடத்தில்,

     குங்குகுக் குகுங் குங்குக் குக்குகு குக்குங் குகுகூகூ திதித் திதிந் திந்தித் தித்தி என --- குங்குகு......தித்தி என்ற ஒலியை,

     கொம்பு அதிர்ந்து --- கொம்புகளால் உண்டாக்கி,

     வெண் சண்ட கட்கம் விதிர்த்தும் --- வெண்மை நிறம் பொருந்திய வலிமை மிக்க வாளாயுதத்தை வீசியும்,

     திரள் குவிந்து அங்கண் பொட்டு எழ வெட்டும் --- குவியலாகக் குவிந்து அங்கேயே பகைவர் அழியுமாறு வெட்டுகின்ற,

     கொலை வேடர் --- கொலைத் தொழிலையுடைய வேடர்கள் வாழ்கின்ற,

     தினைப்புனம் சென்று --- தினை விளைகின்ற இடத்திற் சென்று,

     இச்சித்த பெ(ண்)ணை கண்டு --- விரும்பிய பெண்ணாகிய வள்ளி பிராட்டியாரைக் கண்டருளி,

     உரு கரந்து அங்கு கிட்டி அணைத்து --- உண்மை வடிவினை ஒளித்து நெருங்கிச் சென்று அம் மாதரசியைத் தழுவி,

     ஒண் திருப்பரங்குன்றில் --- ஒளியுள்ள திருப்பரங்குன்றம் என்ற திருத்தலத்தில்,

     புக்கு உள் இருக்கும் --- உறைவிடமாகக் கொண்டு எழுந்தருளியுள்ள,

     பெருமாளே --- பெருமை மிக்கவரே!

      பதித்த --- மார்பில் பதிந்துள்ள,

     செம் சந்த பொன் குடம் --- அழகிய சிவந்த பொன்குடத்தையும்,

     நித்தம் பருத்து உயர்ந்து அண்டத்தில் தலைமுட்டும் பருப்பதம் ---- நாளும் பருமனுற்று உயர்ந்து வானில் தலையை முட்டுகின்ற மலையையும்,

     தந்த செப்பு --- தந்தச் சிமிழையும்,

     அவை ஒக்கும் தனபாரம் --- ஆகியவைகளை நிகர்க்கும் முலைகள் என்றும்,

     பட புயங்கம் பல் கக்கு கடு --- படத்துடன் கூடிய பாம்பின் பல்லிலிருந்து கக்கிய நஞ்சு,

     பண் செருக்கு வண்டு, அம்பு, அப்பில் கயல் --- பண்களைக் களிப்புடன் பாடும் வண்டு,  அம்பு, தண்ணீரில் புரண்டு ஓடுகின்ற மீன்,

     ஒக்கும் பருத்த கண் --- இவைகளை நிகர்க்கும் பருத்த கண்கள் என்றும்,

     கொண்டைக்கு ஒக்கும் இருட்டு என்று --- கூந்தலுக்கு இருள் ஒப்பாகும் என்றும் வியந்து புகழ்ந்து,

     இளைஞோர்கள் --- இளைஞர்கள்,

     துதித்து முன் கும்பிட்டு --- துதி செய்து முன்னதாகக் கும்பிடு போட்டு,

     உற்றது உரைத்து --- தனக்கு உற்ற விரக நோயைக் கூறி,

     அன்பு உவக்க நெஞ்சு --- உள்ள அன்பு மிகுந்து மகிழ்ச்சியுற,

     சிற்றிடை அஞ்ச சுற்றும் துகில் களைந்து --- சிறிய இடை அஞ்சுமாறு சுற்றிய உடைகளைக் களைந்து,

     இன்ப துர்க்கம் அளிக்கும் ---- இன்பமாகிய கலக்கத்தைத் தரும்,

     கொடியார் பால் --- கொடியவர்களாகிய பொதுமாதர்களிடம்,

     துவக்கு உணும் --- கட்டுண்டுக் கிடக்கும்,

     பங்க பித்தன் --- பழுதுபட்ட மயக்கமுடையவனும்,

     அவத்தன் --- வீணனுமாகிய சிறியேன்,

     புவிக்குள் என் சிந்தை புத்தி மயக்கம் துவக்க --- பூமியில் எனது மனத்திலும் அறிவிலும் உள்ள மயக்கமானது நீங்க,

     நின் தண்டை பத்மம் --- தேவரீரது தண்டையணிந்த பாத தாமரையை,

     எனக்கு என்று --- அடியேனுக்கு உரிமையாகுமாறு தந்து,

     அருள்வாயே --- அருள் புரிவீர்.


பொழிப்புரை


         சுறாமீன்கள் குதித்து வெண்மையான சங்குகளைக் கரையில் வீசுகின்ற கடலில் சென்று அஞ்சி ஒளித்த சூரபன்மனுடைய குடல் சரிந்து வலிமை குறையுமாறு குத்தி அசைத்த ஒளிமயமான வேலாயுதத்தை உடையவரே!

         மேன்மையான கரும்பு போன்ற இனிய சொற்களையுடைய கிளியை நிகர்த்த தெய்வயானை அம்மையாருக்கு மறைத்துச் சொல்லி, காட்டினிடத்திலே, குங்குகுக் குகுங் குங்குக் குக்குகு குக்குங் குகுகூகூ திதித் திதிந் திந்தித் தித்தி என்ற ஒலியுடன் கொம்புகளை ஊதி வலிமை மிக்க வெண்மையான வாளை வீசி பகைவர் குவியலாக அங்கேயே அழியுமாறு வெட்டுகின்ற கொலை வேடர் வாழ்கின்ற தினைப்புனத்தில் சென்று, தன்னை விரும்பிய வள்ளியம்மையாரைக் கண்டு, உண்மை உருவை ஒளித்து நெருங்கிச் சென்று, அப்பிராட்டியைத் தழுவி, ஒளியுடைய திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமிதம் உடையவரே!

         மார்பில் பதித்த அழகிய செம்பொன் குடத்தையும், நாளும் வளர்ந்து விண் தலத்தைத் தலையால் முட்டுகின்ற மலையையும், தந்தச் சிமிழையும் நிகர்க்கின்ற தனபாரங்களையும், பணா மகுடமுடைய பாம்பின் பல்லிலிருந்து வந்த நஞ்சையும், களிப்புடன் பண்களைப் பாடும் வண்டினையும், அம்பையும், நீரில் புரண்டோடும் மீனையும் ஒக்கும் பருத்த கண்களையும், இருளை ஒத்த கூந்தலையும் இளைஞர்கள் புகழ்ந்து கூறித் துதி செய்து முன்னதாகக் கும்பிட்டு தமக்கு உற்ற விரக நோயைக் கூறி, உள்ளம் உவந்து அன்பு செய்ய கண்டு, சிறிய இடை அஞ்சுமாறு உடுத்திருந்த உடையைக் களைந்து இன்பமாகிய கலக்கத்தை நல்கும் கொடியவர்களாகிய பொது மாதர் பால் கட்டுண்டு பழுதுபடும் பித்தனும் வீணனுமாகிய அடியேன் இப்பூதலத்தில் என் அறிவிலும் மனதிலும் உண்டான மயக்கத்தினின்றும் மீட்சியுற்று உய்யுமாறு, உமது தண்டையணிந்த திருவடிக் கமலத்தை எளியோனுக்கு உரிமையாகுமாறு தந்து அருள்புரிவீர்.


விரிவுரை


பதித்த.........இளைஞர்கள் துதித்து ---

     ஆசைநோய் கொண்ட இளைஞர்கள் பொதுமகளிர் பால் சென்று, அவர்களுடைய தனம், கண், குழல், அதரம் முதலிய உறுப்புக்களைப் பற்பல உவமைகளைக் கூறிப் புகழ்ந்து மகிழ்ந்து அவர்களையும் மகிழ்விப்பார்கள். அங்ஙனம் புகழ்வோர் உய்யு நெறியடையார் என உணர்க.

பால்என்பது மொழி, பஞ்சுஎன்பதுபதம், பாவையர் கண்
சேல்என்பதாகத் திரிகின்ற நீ, செந்தி லோன் திருக்கை
வேல்என்கிலை, கொற்ற மயூரம் என்கிலை, வெட்சித்தண்டைக்
கால்என்கிலை, மனமே எங்ஙனேமுத்தி காண்பதுவே.  ---  கந்தர் அலங்காரம்.

கொடியார்பால் துவக்குணும் பித்தன் ---

     சூதும் வாதும் புரிந்து தம்பால் வந்தவர்களுடைய உடையையும் உணர்வையும் ஒருங்கே பறித்து, வறியவராக்கி விரட்டியடித்து, வேறு யார் வருகின்றனர் என்று வீதியில் நின்று விரகு புரிகின்றவர். ஆதலின் விலை மகளிரைக் கொடியவர் என்றனர். பரத்தையரிலும் நற்குணமுள்ளார் உண்டு எனினும் மிகுதியும் கொடுமையாளரே இருப்பதனால் இங்ஙனம் நிந்திக்கப் பெறுகின்றனர். அவர்பால் மோ கவலையால் கட்டுண்டு மயங்கிக் கிடப்பவன்.

என் சிந்தை புத்தி மயக்கம் துறக்க ---

     ஆசை நோயுற்றாருடைய மனதிலும் அறிவிலும் மயக்கம் எய்தும். இன்பத்தைத் துன்பமாகவும், துன்பத்தை இன்பமாகவும், மெய்யைப் பொய்யாகவும், பொய்யை மெய்யாகவும் பிறழ உணர்வர். வெப்பு நோயால் பீடிக்கப்பட்டார்க்கு கற்கண்டு கசக்கும்; புளி இனிக்கும்; காமாலை நோய் கொண்டார்க்கு சூரியன் மஞ்சளாகத் தெரிவான்.

     முத்தி நெறியை அவர்கள் வீண்மார்க்கமென்றும், முத்தி நெறி முயல்வாரை வீணர்களென்றும், தம்மைப் பரம சமர்த்தர்களாகவும் கருதுவர். அக்கமணி அணிபவரையும் வெண்ணீறு புனைபவரையுங் கண்டு முறுவலிப்பர். திருக்கோயில் வழிபாடு அவர்கட்குத் தித்திக்காது, தேவார திருவாசக பாராயணம் கசக்கும். சீட்டு விளையாட்டு இனிக்கும்; வீணுரையும் வெற்றுரையும் பூணுரைகளாய்ப் பொலியும்; மது நமது என்பர்.

     ஆசைநோய்த் தீர மெய்ஞ்ஞான பண்டிதனாகிய முருகன் ஞானமாத்திரை தந்தால் அறிவிலும் மனத்திலும் உண்டாகிய மயக்கந் தீர்ந்து நற்கதி பெறுவர்.

தண்டை பத்ம எனக்கென்று அருள்வாயே ---

     முருகா! உன்னுடைய திருவடித் தாமரை அடியேனுக்கே சொந்தமாகுமாறு சிறப்பாக வழங்குவாய் என்று அடிகளார் கூறுகின்றனர். இறைவன் திருவடி எல்லா உயிர்கட்கும் பொதுவானது என்றாலும், நன்கு வழிபட்டார்க்கு அது உரிமையாகின்றது. இராகம் எல்லார்க்கும் பொதுவாக இருப்பினும் அளவுக்கு மீறிய சாதனம் புரிந்து அதனைத் தன் வயப்படுத்தியோர்க்குக் குறிப்பிட்ட ராகம் உரிமையாவதுபோல் என அறிக. “தோடி கிருஷ்ணையர்” “பல்லவி எல்லையர்” “சங்கராபரணம் குப்புசாமி ஐயர்” என்றெல்லாம் வழங்குவதை அறிக.

குதித்து வெண் சங்கத்தைச் சுறவு எற்றும் ---

     சுறாமீன் கடலில் வாழும்உயிர் வகைகளில் சிறந்தது. வீரமும் தீரமும் உடையது. அது தன் வலிமையால் குதித்து சங்கினங்களைக் கரையில் கொணர்ந்து எற்றும்.

கடல் கரந்து அஞ்சிப் புக்க அரக்கன் ---

     ஆண்டவனுடைய அருட்கடலில் புகாது சூரபன்மன் உவர்க் கடலில் - துன்பக் கடலில் புகுந்து ஒளிந்தனன். அதனால் ஞான வேலினால் வலிமை யிழந்து, தான் என்ற செருக்கற்று உய்வு பெற்றனன்.

இபப்பெண் தனக்கு வஞ்சம் சொல் ---

     வள்ளியம்மையாரை ஆட்கொள்ளும் பொருட்டுப் புறப்பட்ட முருகவேள் தெய்வயானை அம்மையாருக்குத் தெரியாமல் புறப்பட்டனர். காரணம் யாது? அந்த அம்மையாருக்கு அஞ்சியன்று.  வஞ்சகத்தாலும் அன்று.

     பிரியாமல் இருக்கவேண்டும் என்று தவஞ்செய்த தவமான்கள் தெய்வயானையும் வள்ளியும்.  வள்ளியம்மையாரை மணந்து அருள் செய்வதில் தெய்வயானை அம்மையார் ஒரு சிறிதும் தடை சொல்லமாட்டார். மகிழ்ச்சியே உறுவர்.

     தமது தங்கையாருக்கு உண்மை வடிவு காட்டி உடனே உய்யக் கொள்ளுமாறு தெய்வயானை அம்மையார் வேண்டுவர். மாறுவேடம் புனைந்து வள்ளியைச் சோதிக்க அவர் மனஞ் சகியார்.

     முருகன், பாசபந்தம் அறவே நீங்காத வள்ளியம்மையை உண்மை வடிவுடன் சென்று ஆட்கொள்ளுதல் கூடாது. ஆகவே மாறுவேடத்துடன் சென்று பந்தபாசத்தை மாற்றியே ஆளுதல் முறை. அதனால்தான் வேடனாகவும் வேங்கையாகவும் விருத்த வேதியனாகவும் சென்று அவரைப் பக்குவப்படுத்தி ஆட்கொண்டருளினார். வள்ளியம்மையார் திருமண வரலாறு குருபரன் ஓர் உயிரை உய்விக்கும் உண்மையை உணர்த்தும் முறைமையென அருட்கண் கொண்டு காணுதல் வேண்டும்.

பொச்சையிடை ---

     வள்ளியம்மையார் வாழ்ந்த காடு, பாசமாகிய அடவியிலே ஆன்மா இருந்தது.

குங் குகுக்குங்........தித்தியெனக் கொம்பு ---

     பாச அடவியிலே காமக்ரோத முதலிய வேடர்கள் கொம்பு என்ற வாத்தியத்தை ஊதிப் பேரொலி புரிவார்கள்.

இச்சித்த பெணைக் கண்டு ---

     முருகன் இச்சித்த பெண் என்று பொருள் செய்யக்கூடாது. முருகன் விருப்பு வெறுப்பு இல்லாதவன். வேண்டுதல் வேண்டாமையிலான். முற்பிறப்பிலே திருமாலுடைய கண்ணிலே பிறந்த சுந்தரவல்லி முருகனை விரும்பி பன்னெடுங் காலம் பெரும் தவம் புரிந்து வள்ளியம்மையாகப் பிறந்தனர். ஆகவே அவர் இச்சித்தவாறு முருகவேள் அவரை மணந்து அருள் புரிந்தார்.

உருக் கரந்து அங்கு கிட்டி ---

     வள்ளி பிராட்டிக்கு பந்தபாசம் முற்றும் நீங்கப் பெறாமையால் முருகவேள் உருக்கரந்து சென்றனர் என்று முன்னர் அறிவித்ததை நினைவு கூர்க.

     இருவினையொப்பு, மலபரிபாகம், சத்தினிபாதம் எய்திய ஆன்மாக்களுக்கு ஆண்டவன் உண்மை வடிவு காட்டி அருள் புரிவான் என்ற சாத்திரக் கருத்தை யுணர்க.

உனக்கிலாததோர் வித்து மேல்விளை
         யாமல்என் வினைஒத்தபின்
 கணக்கிலாதிருக் கோலம் நீவந்து
         காட்டினாய் கழுக் குன்றிலே”    --- திருவாசகம்.

திருப்பரங்குன்றம் ---

     இது முதற்படைவீடு. மூலாதாரத் தலம். சேர சோழ பாண்டியர்களுடன் சென்று சுந்தரமூர்த்தி நாயனார் வழிபட்டுத் தேவாரம் அருளிச்செய்த அருமையும் பெருமையும் உடையது.

கருத்துரை


         சூரனை வதைத்த சுப்ரமண்ய மூர்த்தியே! வள்ளி மணவாளரே! பராசலம் மேவிய பரமனே! மாதர் மயக்கமற்று உமது பதாம்புயம் பெற அருள் புரிவீராக.


No comments:

Post a Comment

பொது --- 1097. உறவின் முறையோர்க்கும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உறவின்முறை யோர்க்கும் (பொது) முருகா!  தேவரீரை அன்பொடு துதிக்க அறிவு தந்து அருளுவாய். தனதனன தாத்த தனதனன ...