திருச்செந்தூர் - 0033. இருள்விரி குழலை




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

இருள்விரி குழலை (திருச்செந்தூர்)

மாதர் வசம் உற்று மதி அழியாமல், முருகனைப் போற்றும் மதி வேண்டல்.

தனதன தனன தனத்தத் தாத்தன
     தனதன தனன தனத்தத் தாத்தன
          தனதன தனன தனத்தத் தாத்தன ...... தந்ததான


இருள்விரி குழலை விரித்துத் தூற்றவு
     மிறுகிய துகிலை நெகிழ்த்துக் காட்டவு
          மிருகடை விழியு முறுக்கிப் பார்க்கவு .....மைந்தரோடே

இலைபிள வதனை நடித்துக் கேட்கவு
     மறுமொழி பலவு மிசைத்துச் சாற்றவு
          மிடையிடை சிறிது நகைத்துக் காட்டவு .....மெங்கள்வீடே

வருகென வொருசொ லுரைத்துப் பூட்டவும்
     விரிமல ரமளி யணைத்துச் சேர்க்கவும்
          வருபொரு ளளவி லுருக்கித் தேற்றவு ......நிந்தையாலே

வனைமனை புகுதி லடித்துப் போக்கவு
     மொருதலை மருவு புணர்ச்சித் தூர்த்தர்கள்
          வசைவிட நினது பதத்தைப் போற்றுவ .....தெந்தநாளோ

குருமணி வயிர மிழித்துக் கோட்டிய
     கழைமட வுருவு வெளுத்துத் தோற்றிய
          குளிறிசை யருவி கொழித்துத் தூற்றிய ......மண்டுநீரூர்
  
குழிபடு கலுழி வயிற்றைத் தூர்த்தெழு
     திடர்மண லிறுகு துருத்திக் காப்பொதி
          குளிர்நிழ லருவி கலக்கிப் பூப்புனை ...... வண்டலாடா

முருகவிழ் துணர்க ளுகுத்துக் காய்த்தினை
     விளைநடு விதணி லிருப்பைக் காட்டிய
          முகிழ்முலை யிளைய குறத்திக் காட்படு ...... செந்தில்வாழ்வே

முளையிள மதியை யெடுத்துச் சாத்திய
     சடைமுடி யிறைவர் தமக்குச் சாத்திர
          முறையருள் முருக தவத்தைக் காப்பவர் ...தம்பிரானே.


பதம் பிரித்தல்


இருள்விரி குழலை விரித்துத் தூற்றவும்,
     இறுகிய துகிலை நெகிழ்த்துக் காட்டவும்,
          இருகடை விழியும் முறுக்கிப் பார்க்கவும், ..... மைந்தரோடே

இலை பிளவு அதனை நடித்துக் கேட்கவும்,
     மறுமொழி பலவும் இசைத்துச் சாற்றவும்,
          இடைஇடை சிறிது நகைத்துக் காட்டவும், .....எங்கள் வீடே

வருக என ஒருசொல் உரைத்துப் பூட்டவும்,
     விரிமலர் அமளி அணைத்துச் சேர்க்கவும்,
          வருபொருள் அளவில் உருக்கித் தேற்றவும் ......நிந்தையாலே

வனை மனை புகுதில் அடித்துப் போக்கவும்,
     ஒருதலை மருவு புணர்ச்சித் தூர்த்தர்கள்
          வசைவிட, நினது பதத்தைப் போற்றுவது ..... எந்த நாளோ?

குருமணி வயிரம் இழித்துக் கோட்டிய,
     கழை மட உருவு வெளுத்துத் தோற்றிய
          குளிறு இசை அருவி கொழித்துத் தூற்றிய ......மண்டுநீர் ஊர்

குழிபடு கலுழி வயிற்றைத் தூர்த்து எழு
     திடர்மணல் இறுகு துருத்திக் கா, பொதி
          குளிர்நிழல் அருவி கலக்கிப் பூப்புனை ......வண்டல்ஆடா

முருகு அவிழ் துணர்கள் உகுத்துக் காய்த் தினை
     விளை நடு இதணில் இருப்பைக் காட்டிய,
          முகிழ்முலை இளைய குறத்திக்கு ஆட்படு ......செந்தில்வாழ்வே!

முளை இள மதியை எடுத்துச் சாத்திய
     சடைமுடி இறைவர் தமக்கு, சாத்திர
          முறை அருள் முருக! தவத்தைக் காப்பவர் .....தம்பிரானே.


பதவுரை

    குருமணி வயிரம் இழித்து கோட்டிய --- நல்ல நிறமுள்ள வயிர மணிகளை அடித்துத்  தள்ளிக்கொண்டு,

    கழை மட உருவும்  வெளுத்து தோற்றிய --- வளைந்த இள மூங்கிலின் உருவமும்  வெளுத்துத் தோல்வியடையுமாறு வெண்மையும்,

    குளிறு இசை அருவி கொழித்து தூற்றிய மண்டு நீர் ஊர் --- ஒலிக்கின்ற  இசையையும் உடைய அருவியானது கொழித்துக் கொண்டு  இறைக்கப் பெருகிய நீர் செல்லுகின்ற,

    குழிபடு கலுழி வயிற்றை தூர்த்து எழு --- ஆழ்ந்துள்ள கான்யாற்றின், நடு இடத்தை அடைந்து, உயர்ந்து எழுந்த

    திடர் மணல் இறுகு  துருத்தி கா பொதி --- மேட்டு மணலால் இறுகி நிற்கும் திட்டினிடத்தேயுள்ள, சோலையில் அடர்ந்து

    குளிர் நிழல் அருவி கலக்கி ---  குளிர்ந்த நிழலில் அருவியைக் கலக்கியும்,

    பூ புனை வண்டல் ஆடா --- மலர் சூடியும், மகளிர் மணல்
விளையாட்டு விளையாடியும்,

    முருகு அவிழ் துணர்கள் உகுத்து --- மணம் வீசுகின்ற பூங் கொத்துக்கள்  மலர்ந்து,

    காய் தினை விளை நடு --- கதிர்விடும் தினை விளைகின்ற கொல்லையின் நடுவில்  உள்ள,

    இதணில் இருப்பை காட்டிய முகிழ்முலை இளைய குறத்திக்கு ஆட்படு செந்தில் வாழ்வே --- பரண் மீது  இருத்தலைத் தெரிவித்த, அரும்புகின்ற தனங்களையுடைய, இளமை பொருந்திய வள்ளிநாயகிக்கு ஆட்பட்டு அருளிய செந்திலில் வாழ்பவரே!

         முளை இளமதியை எடுத்து சாத்திய சடைமுடி இறைவர் தமக்கு சாத்திரமுறை அருள் முருக --- முளைக்கின்ற இளந்திங்களை எடுத்து அணிந்த,  சடாமகுடத்தை உடைய சிவபெருமானுக்கு சிவசாத்திர முறையை உபதேசித் தருளிய முருகக் கடவுளே!

         தவத்தைக் காப்பவர் தம்பிரானே --- தவத்தினைக் காக்கும் முனிவரர் போற்றும் தனிப்பெருந்தலைவரே!

         இருள் விரிகுழல் விரித்து தூற்றவும் --- இருண்டு விரிந்த கூந்தலை விரித்து சிக்கெடுத்து ஆற்றவும்,

     இறுகிய துகிலை நெகிழ்ந்து காட்டவும் --- அழுத்தமாக உடுத்தியுள்ள ஆடையைச் சற்று தளர்த்திக் காட்டவும்,

     இரு கடைவிழியும் முறுக்கி பார்க்கவும் --- இரண்டு கடைக் கண்களால் சுழற்றிப் பார்க்கவும்,

     மைந்தரோடே இலை பிளவு அதனை நடித்து கேட்கவும் --- அங்கு செல்கின்ற ஆண் மைந்தருடன், வெற்றிலையையும் வெட்டுப்பாக்கையும் நடிப்புடன் கேட்கவும்,

     மறுமொழி பலவும் இசைத்து சாற்றவும் --- மறுமொழிகள் பலப்பல சொல்லிப் பேசவும்,

     இடை இடை சிறிது நகைத்து காட்டவும் --- இடையிடையே சற்று புன்னகை புரியவும்,

     எங்கள் வீடே வருக என ஒரு சொல் உரைத்து பூட்டவும் --- “இனிது எங்கள் வீடு வாருங்கள்” என்று ஒரு சொல் சொல்லிப் பிணைத்தும்,

     விரிமலர் அமளி அணைத்து சேர்க்கவும் --- விரிந்த மலர்ப் படுக்கையில் அணைத்துச் சேர்க்கவும்,

     வருபொருள் அளவில் உருக்கி தேற்றவும் --- வந்த பொருள் அளவுக்குத் தக்கபடி உருக்கம் காட்டித் தெளிவித்தும்,

     நிந்தையாலே வனைமனை புகுதில் அடித்து போக்கவும் --- பின்னர் பொருள் கொடாவிடில் நிந்தனைபேசி, அலங்கரித்துள்ள வீட்டில் புகுந்தால் அடித்து வெருட்டவும்,

     ஒரு தலை மருவு புணர்ச்சி தூர்த்தர்கள் வசை விட --- ஒரு தலைக் காமத்தராய் புணரும் கொடியோர்களால் வரும், பழிசொல் நீங்க,

     நினது பதத்தைப் போற்றுவது எந்த நாளோ --- தேவரீருடைய திருவடியைப் போற்றி உய்வது எந்நாளோ?
  
பொழிப்புரை

         ஒலிக்கின்ற இசையையுடைய அருவியானது, நல்ல நிறமுள்ள வயிரமணிகளை அடித்துத் தள்ளியும், வளைந்த இளம் மூங்கிலின் நிறம் தோற்குமாறு வெண்மை நிறத்துடனும், வர வர நீர்ப் பெருக்கெடுத்து குழிபட்டுள்ள காட்டாறுகளின் நடு இடத்தைத் தூர்த்து உயரமாக்கிய மணல்கள் இறுகிய நடுத்திட்டில் சோலைகளின் அடர்ந்த குளிர்ந்த நிழலில் அருவியைக் கலக்கியும், மலர் சூடியும் இளமகளிர் மணல் விளையாட்டினை ஆடுகின்ற, மணம் வீசும் பூங்கொத்துக்கள் மலர்ந்து காய்த்த தினைப்புனத்தின் இடையில் உள்ள பரண்மீது விளங்குகின்ற அரும்பு போன்ற இளந் தனபாரங்களையுடைய வள்ளியம்மையாருக்கு ஆட்பட்டு அருள்புரிந்த செந்தில் ஆண்டவரே!

         இளம்பிறை மதியைச் சடைமுடியில் தரித்த சிவபெருமானுக்கு சிவசாத்திர முறையை உபதேசித்தருளிய முருக மூர்த்தியே!

         தவத்தைக் காத்தருள்பவர் வணங்குகின்ற தனிப் பெருந் தலைவரே!

         இருண்டு விரிந்த கூந்தலை விரித்து ஆற்றவும், இறுக்கியுடுத்த ஆடையைத் தளர்த்தி உடம்பைக் காட்டவும், ஆண் மைந்தரோடு வெற்றிலைப் பாக்கை நடிப்புடன் கேட்கவும், மறுமொழிகள் பலப்பல சொல்லிப் பேசவும், இடையிடையே சிறிது புன்முறுவல் புரிந்தும், இதோ எங்கள் வீட்டிற்கு வாரும் என்று அழைத்து ஆசைக் கயிற்றால் கட்டியும்,  விரிந்த மலர்ப்படுக்கையில் தழுவி யணைத்தும், வந்த பொருளுக்குத் தக்கவாறு உருக்கம் காட்டித் தெரிவித்தும், பணம் தீர்ந்தவுடன் வசை புகன்றும், அலங்கரித்த வீட்டில் புகுந்தவுடன் அடித்து விரட்டவும், ஒருதலைக் காமத்துடன் புணர்கின்ற கொடிய விலைமாதர்களினால் வந்த பழிச் சொல் நீங்குமாறு தேவரீருடைய திருவடியைப் போற்றி உய்யும் நாள் என்றோ?

விரிவுரை

இருள் விரி குழலை விரித்துத் தூற்றவும் ---

பொது மகளிர் மாலை நேரத்தில் தெருச் சந்தியில் நின்று அங்கு போவாரும் வருவாரும் தமது மயலில் சிக்கும்படி, இருள் போன்ற கூந்தலை விரித்து அதைச் சிக்கெடுப்பார் போல் அபிநயித்து அதில் கமழும் நறுமணம் வீசுமாறு கையால் கோதிக்கொண்டு நிற்பர்.

அங்கை மென்குழல் ஆய்வார் போலே
 சந்தி நின்றுஅய லோடே போவார்
 அன்பு கொண்டிட நீரோ போறீர் அறியீரோ”   ---  திருப்புகழ்.


இறுகிய துகிலை நெகிழ்த்துக் காட்டவும் ---

மேலும் அம்மகளிர் துறந்தவரும், துறவு நிலையை மறந்திடுமாறு நடு வீதியில் நின்று தமது ஆடையை சிறிது சரிய நின்று சாகசம் புரிவர்.

முலையிலுறு துகில் சரிய நடுவீதி நிற்பவர்கள்”
                                          ---  (குமரகுருபர முருக குகனே) திருப்புகழ்.

இருகடை விழியும் முறுக்கிப் பார்க்கவும் ---

அவ் விலைமகளிர்க்குச் சிறந்த பாணம் இரு கண்களேயாகும். அக்கணைகளினால் எத்துணை உறுதியுடைய வீர உள்ளத்தையும் பிளந்துவிடுவர். கணையின் முனையே அதிக கூர்மையுடன் பிளக்க வல்லது. அதுபோல் அக்கண்களின் கடைப்பகுதியே மிகுந்த வேகமுள்ளது. கடைக்கண் பார்வையை வேகமாக சுழற்றிப் பார்த்தால் ஆடவர் மந்திரத்தால் கட்டுண்ட நாகம்போல் வேகமடங்கி மயங்கி விழுவர்.

யமபடை யென அந்திக்குங்கட் கடையாலே”
                                                                     ---  (பரிமளகளப) திருப்புகழ்.

மைந்தரோடே இலை பிளவு அதனை நடித்துக் கேட்கவும் ---

பால் சாப்பிடுங்கள்; பழஞ் சாப்பிடுங்கள்; பட்சணம் சாப்பிடுங்கள்” என்கின்றார்கள். “வெற்றிலைப் பாக்கு போட்டுக் கொள்ளுங்கள்” என்கின்றார்கள். உண்ணுகின்ற பொருளாகிய இதனைத் தாம்பூலம் சாப்பிடுங்கள் என்று கூறுவதில்லை. தாம்பூலம் போட்டுக் கொள்ளுங்கள்” என்கின்றார்கள். என்ன காரணம்?

நன்றாக வயிறு நிறைய உண்டபின் வாய்க்கு அலங்காரப் பொருளாகவே தாம்பூலத்தை உபயோகப் படுத்துகிறார்கள். காதுக்கு அணிகலம் கடுக்கன்; கண்ணுக்கு அணிகலம் மை; கைக்கு அணிகலம் தங்கச் சங்கிலி; விரலுக்கு அணிகலம் மோதிரம். அலங்காரப் பொருள்களைப் போட்டுக் கொள்ளுங்கள் என்பதே மரபு. கடுக்கன் போட்டுக் கொள்ளுங்கள், மை போட்டுக் கொள்ளுங்கள்; அங்கவஸ்திரம் போட்டுக் கொள்ளுங்கள் என்பது போல, தாம்பூலம் அலங்காரப் பொருள் என்பதைத் தெரிவிக்கவே “தாம்பூலம் போட்டுக்கொள்ளுங்கள்” என்கிறார்கள். என்ன அழகான மரபு! நம் முன்னோர்கள் எந்தச் சொல்லையும் நன்கு சிந்தித்துச் சொன்னார்கள்.

விலைமகளிர் தம்பால் வரும் ஆடவரிடம் கொஞ்சுதலாக நடித்து `வெற்றிலைப் பாக்குத் தாருங்கள்’ என்று கேட்டுப் பெறுவர்.

மறுமொழி பலவும் இசைத்துச் சாற்றவும் ---

ஆடவர்கள் கேட்கும் வினாக்களுக்கெல்லாம் இனிமையாக மறுமொழி கூறி மகிழ்விப்பர்.

இடையிடை சிறிது நகைத்துக் காட்டவும் ---

பேச்சுக்கு இடையிடையே மெல்லச் சிறிது புன்சிரிப்பு சிரித்துக் கொள்வார்கள். இவைகள் அவர்கள் புரியும் சாகசங்கள்.

எங்கள் வீடே வருக என ஒரு சொல் உரைத்துப் பூட்டவும் ---

சந்தியில் நின்றுகொண்டு அப் பொதுமகளிர், வழியோடு போகும் இளைஞர்கள் மீது கண்வலை வீசி, “வணக்கம்; உங்கள் வரவு நல்வரவு. உங்களைப் பார்த்ததே பரம சந்தோஷம். ஏன் நடுத்தெருவில் நின்று பேசவேண்டும்? உங்கள் பாதம் பட்டால் போதும். இதோ என் வீடு. வாருங்கள். உள்ளே போவோம்’ என்று அழைப்பர்.

இங்கு நின்றதுஎன் வீடே வாரீர்   
 என்று இணங்கிகள் மாயா லீலா
 இன்ப சிங்கியில் வீணே வீழாது அருள்வாயே”      ---  (அங்கை) திருப்புகழ்.

பூட்டவும்-மோகமாகிய சங்கிலியால் கட்டிப்பிணித்து விடுவர்.

வருபொருள் அளவில் உருக்கித் தேற்றவும் ---

விலைமகளிர் ஆடவர் தமக்குத் தரும் பொருளுக்கு ஏற்ற அளவில் தமது நேயத்தை நீட்டி உபசரிப்பர்.

களவி னொடுபொரு ளளவள வருளிய கலவி”
                                                 ---  (குமர குருபர குணதர) திருப்புகழ்.

நிந்தையாலே வனை மனை புகுதில் அடித்துப் போக்கவும் ---

பொருள் தீர்ந்து வறியவரான ஆடவரை நிந்தித்தும், அவர்கள் தமது அலங்கரித்த வீட்டிற்கு வந்தால்  அடித்தும் புடைத்தும் அகற்றுவர்.

நாவார வேண்டும் இதம் சொல்லுவார், உனைநான் பிரிந்தால்
சாவேன் என்றேஇருந்து ஒக்க உண்பார்கள்,கைதான் வறண்டால்
போய்வாரும் என்று நடுத்தலைக்கே குட்டும் பூவையருக்கு
 ஈவார், தலைவிதியோ, இறைவா, கச்சி ஏகம்பனே.     --- பட்டினத்து சுவாமிகள்.

ஒருதலை மருவு புணர்ச்சித் தூர்த்தர்கள் ---

இருவரும் மனம் ஒத்து மகிழாமல், ஒருவர் மட்டும் விரும்பி மற்றொருவர் விரும்பாமல் சேர்வது கைக்கிளை எனப்படும்.

வசைவிட நினது பதத்தைப் போற்றுவது எந்த நாளோ? ---

மேலே கூறியபடி பொதுமகளிர் வசம் சேர்ந்து அதனால் வந்த பழமொழி அகலுமாறு முருகனுடைய திருவடியைப் போற்றிப் புகழவேண்டும். முருகனை நினைந்தால் பிற நினைவுகள் தாமே அகலும். ஒளியுண்டானால் இருள் தானே நீங்குமாப் போல் எனவுணர்க.

குருமணி.......துருத்தி ---

இந்த மூன்று அடிகளிலும் வள்ளியம்மையார் வாழும் தினைப்புனத்தின் சிறப்பையும், அவ்வனத்தில் ஓடும் காட்டாற்றின் அழகையும், அங்கு மகளிர் ஆடும் திறத்தையும் அழகாகக் கூறுகின்றனர்.

         மூங்கிலின் வெண்மையிலும் சிறந்த வெண்மை நிறத்துடன் காட்டாறு ஓடுகின்றது. அதில் சிறந்த நிறமுள்ள வயிரக் கூழாங் கற்கள் அடித்துச் செல்லப்படுகின்றன. அந்த நதியின் ஓசை நல்ல இசையுடையதாக உள்ளது. ஆற்றின் நடு இடம் மணலால் நிரம்புகின்றது. ஆற்றுக்கு நடுவே சிறு திட்டுகள் உண்டாகின்றன. அவ்வாறு உண்டாகும் திட்டுக்குத் துருத்தி என்று பெயர். அத் துருத்தியாகிய ஆற்றிடையில் நல்ல குளிர் மரங்கள்; குளிர்ந்த நிழல்; அங்கு சிற்றருவியும் ஓடுகின்றது. அதில் நீராடி மகளிர் மணல் விளையாட்டுக்கள் ஆடுகின்றார்கள். இப்படி இயற்கை வளத்தைச் சுவாமிகள் இனிய தமிழ்ச் சொற்களால் இனிது எடுத்துக் கவி புனைகின்றார்கள்.

         ஆற்றுக்கு நடுவேயுள்ள திட்டுக்குத் துருத்தி என்று பெயர். திருத்துருத்தி: திருப்பூந்துருத்தி என்ற திருத்தலங்களை நினைக. இத் தலங்கள் ஆற்றுக்கு இடையே உள்ளவை என்ற கருத்தில் அப்பேரைத் தாங்கின. இன்றும் மலையாளத்தில் கழிகளுக்கு இடையில் உள்ள பகுதிகளைத் துருத்தியெனக் கூறுகின்றார்கள்.

கருத்துரை

         வள்ளி மணவாளரே! செந்திலாண்டவரே! மாதர் வசமுற்று மதியழியாது, தேவரீரைப் போற்றி உய்ய அருள் புரிவீர்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...