அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
இருகுழை யெறிந்த
(திருச்செந்தூர்)
மாதர் மயக்கில் விழாமல்
ஆட்கொள்ள வேண்டல்
தனதன
தனந்த தந்தன தனதன தனந்த தந்தன
தனதன தனந்த தந்தன ...... தனதான
இருகுழை
யெறிந்த கெண்டைகள் ஒருகுமி ழடர்ந்து வந்திட
இணைசிலை நெரிந்தெ ழுந்திட ...... அணைமீதே
இருளள
கபந்தி வஞ்சியி லிருகலை யுடன்கு லைந்திட
இதழமு தருந்த சிங்கியின் ...... மனமாய
முருகொடு
கலந்த சந்தனஅளருப டுகுங்கு மங்கமழ்
முலைமுக டுகொண்டெ ழுந்தொறு ...... முருகார
முழுமதி
புரிந்த சிந்துர அரிவைய ருடன்க லந்திடு
முகடியு நலம்பி றந்திட ...... அருள்வாயே
எரிவிட
நிமிர்ந்த குஞ்சியி னிலவொடு மெழுந்த கங்கையு
மிதழியொ டணிந்த சங்கரர் ...... களிகூரும்
இமவரை
தருங்க ருங்குயில் மரகத நிறந்த ருங்கிளி
யெனதுயி ரெனுந்த்ரி யம்பகி ......
பெருவாழ்வே
அரைவட
மலம்பு கிண்கிணி பரிபுர நெருங்கு தண்டைக
ளணிமணி சதங்கை கொஞ்சிட ...... மயில்மேலே
அகமகிழ்
வுகொண்டு சந்ததம் வருகும ரமுன்றி லின்புறம்
அலைபொரு தசெந்தில் தங்கிய ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
இருகுழை
எறிந்த கெண்டைகள், ஒருகுமிழ் அடர்ந்து வந்திட,
இணைசிலை நெரிந்து எழுந்திட, ...... அணைமீதே
இருள்
அளக பந்தி வஞ்சியில் இருகலையுடன் குலைந்திட,
இதழ் அமுது அருந்த, சிங்கியின் ...... மனம் மாய,
முருகொடு
கலந்த சந்தன அளறு படு குங்குமம் கமழ்
முலை முகடு கொண்டு எழுந்தொறும், ...... முருகு ஆர
முழுமதி
புரிந்த சிந்துர அரிவையர் உடன் கலந்திடு
முகடியும், நலம் பிறந்திட ...... அருள்வாயே!
எரிவிட
நிமிர்ந்த குஞ்சியில் நிலவொடும், எழுந்த கங்கையும்,
இதழியொடு அணிந்த சங்கரர் ...... களிகூரும்,
இம
வரை தரும் கரும் குயில், மரகத நிறம் தரும் கிளி,
எனது உயிர் எனும் த்ரியம்பகி ......
பெருவாழ்வே!
அரைவடம்
அலம்பு கிண்கிணி, பரிபுரம், நெருங்கு தண்டைகள்,
அணிமணி சதங்கை கொஞ்சிட, ...... மயில்மேலே
அகமகிழ்வு கொண்டு, சந்ததம் வரு குமர! முன்றிலின்
புறம்
அலைபொருத செந்தில் தங்கிய ...... பெருமாளே.
பதவுரை
எரிவிட நிமிர்ந்த குஞ்சியில் நிலவுடன் ---
நெருப்பைப்போல் ஒளிவிட்டு நிமிர்ந்துள்ள சடையில் சந்திரனுடன்,
எழுந்த கங்கையும் --- திரண்டு எழுந்த கங்கா
நதியையும்,
இதழியொடு அணிந்த சங்கரர் களி கூரும் --- கொன்றை
மலரையும் தரித்த சிவபெருமான்
மகிழ்கின்ற,
இமவரை தரும் கரும் குயில் --- மலையரையன் பெற்ற கரிய குயில் போன்றவரும்,
மரகத நிறம் தரும் கிளி --- பச்சை மணிபோல் நிறம் படைத்த கிளியை
ஒத்தவரும்,
எனது உயிர் எனும் த்ரியம்பகி பெருவாழ்வே ---
அடியேனுடைய உயிர்ப் போன்றவரும் மூன்று கண்கள் உடையவரும் ஆகிய உமாதேவியார் பெற்ற பெரிய வாழ்வாக விளங்குபவரே!
அரைவடம் --- அரையில் கட்டிய சதங்கை,
அலம்பு கிண்கிணி --- ஒலிக்கின்ற கிண்கிணி,
பரிபுரம் --- சிலம்பு,
நெருங்கு தண்டைகள் --- நெருங்கிய தண்டைகள்,
அணிமணி சதங்கை கொஞ்சிட --- அழகிய இரத்தின
மணியாலான பாதச் சதங்கை ஆகிய இத்
திருவாபரணங்கள் இனிது ஒலி செய்ய,
மயில்மேல் --- மயில் வாகனத்தின் மீது,
அகமகிழ்வு கொண்டு --- திருவுள்ளத்தில்
மகிழ்ச்சிக் கொண்டு,
சந்ததம் வரு குமர --- எப்போதும் எழுந்தருளி வருகின்ற
குமாரக் கடவுளே!
முன்றிலின் புறம் அலை பொருத --- திருக்கோயிலின்
திருமுன்னே கடல் அலைகள் வந்து
மோதுகின்ற
செந்தில் தங்கிய பெருமாளே --- திருச்செந்தூரில்
எழுந்தருளியுள்ள பெருமையில்
சிறந்தவரே!
இருகுழை எறிந்த கெண்டைகள் --- காதுகளில்
விளங்கும் இரண்டு குழைகளையும், தாக்குகின்ற
மீன்போன்ற கண்கள்,
ஒரு குமிழ் அடர்ந்து வந்திட --- ஒப்பற்ற
குமிழம் பூவைப் போன்ற நாசியை நெருங்கி வந்திடவும்,
இணை சிலை நெரிந்து எழுந்திட --- இரண்டு வில்
போன்ற புருவங்கள் நெரிந்து எழுந்திடவும்,
அணைமீதே --- படுக்கையின் மீது
இருள் அளகபந்தி வஞ்சியில் இரு கலையுடன்
குலைந்திட--- இருண்ட கரிய
கூந்தற்கற்றை கொடி போன்ற இடையிலுள்ள பெரிய ஆடையுடன் குலைந்திடவும்,
இதழ் அமுது அருந்து சிங்கியில் மனம் மாய ---
இதழ் அமுதமாகிய நஞ்சை உண்டு எனது மனம் அழிய,
முருகொடு கலந்த சந்தன அளறுபடு --- நறுமணத்துடன்
கலந்த சந்தனச் சேற்றுடன்
குங்குமம் கமழ் --- குங்குமம் மணக்கும்,
முலைமுகடு கொண்டு எழுந்தொறும் --- தனங்களின்
உச்சி பூரித்து எழுந்தொறும்
முருகு ஆர முழுமதி புரிந்த சிந்துர --- அழகு
நிரம்ப, முழு நிலாப் போன்ற
திலகந் தரித்த,
அரிவையருடன் கலந்திடு முகடியும் நலம்
பிறந்திட அருள்வாயே --- பொது மாதர்களுடன் சேருகின்ற மூதேவியாகிய அடியேனுக்கும் நன்மை
பிறக்குமாறு திருவருள் புரிவீர்.
பொழிப்புரை
அக்கினியைப்போல் ஒளிவிட்டு நிமிர்ந்த
சடாமகுடத்தில் சந்திரனையும், சீறியெழுந்த கங்கா
நதியையும், கொன்றை மலரையும்
தரித்த சிவபெருமான் மகிழ்கின்ற தேவியும், மலையரையன்
பெற்ற கரிய குயிலைப் போன்ற இனிய மொழியை உடையவரும், மரகதமணி போன்ற நிறமுடைய கிளியை
ஒத்தவரும், எனது உயிர்
போன்றவரும், மூன்று கண்களை
யுடையவரும் ஆகிய அம்பிகையின் புதல்வராக விளங்கும் பெருவாழ்வினரே!
திருவரையில் கட்டிய சதங்கை இனிது
ஒலிக்கின்ற கிண்கிணி, சிலம்பு, நெருங்கிய தண்டைகள், அழகிய மணிகள் பதித்த பாதச்சதங்கை
என்பனவாய் அணிகலன்கள் இனிமையாக ஒலிக்க, மயில்
வாகனத்தின் மீது திருவுள்ளம் மகிழ்ந்து எப்போதும் உலா வருகின்ற குமாரக் கடவுளே!
திருக்கோயிலின் முன் கடலில் அலைகள்
வந்து வந்து மோதுகின்ற திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே!
காதுகளில் உள்ள இரு குழைகளையும்
மோதுகின்ற நீண்ட மீன்போன்ற கண்கள் ஒப்பற்ற குமிழமலர் போன்ற நாசியை நெருங்கி
வந்திடவும், இரண்டு வில் போன்ற
புருவங்கள் நெரிந்து மேல் எழுந்திடவும், படுக்கையின்
மீது இருண்ட கூந்தலின் சுருள், வஞ்சிக்கொடி போன்ற
இடையில் உள்ள ஆடையுடன் குலையவும்,
இதழமுதமாகிய
நஞ்சினையுண்டு மனம் அழிய, நறுமணங் கலந்த சந்தனச்
சேற்றுடன் குங்குமம் மணம் செய்கின்ற தனங்களின் உச்சி பூரித்து எழுந்தொறும் அழகு
நிறைய பூரண சந்திரனைப் போன்ற திலகமணிந்த பொதுமகளிருடன் சேர்ந்த மூதேவியாகிய அடியேனுக்கும்
சிவஞானபோத நலம் பிறக்கத் திருவருள் புரிவீர்.
விரிவுரை
இருகுழை
எறிந்த கொண்டைகள் ---
பெண்களின்
கண்கள் நீண்டிருக்க வேண்டும். அவ்வாறு நீண்ட கண்கள் காது வரைச் சென்று மோதும். இது
அக் கண்களுக்கு அழகு.
“மங்கையர் வதனசீத
மதி இரு மருங்கும் ஓடி
செங்கயல் குழைகள் நாடுந் திருமுனைப்பாடி நாடு”
என்று
சேக்கிழார் பெருமானும் கூறுகின்றனர்.
கெண்டை-மீன், பெண்களுடைய கண்கள் பிறழுந் தன்மையால்
மீனைப் போன்று இருக்கும். அதனால் கண்களைக் கெண்டைகள் என்றனர். இது உவம ஆகு பெயர்.
ஒரு
குமிழ் அடர்ந்து வந்திட ---
குமிழம்
என்பது ஒரு மலர். அது பெண்மணிகளின் மூக்குக்கு உவமையானது. இங்கேயும் குமிழ் என்றது
ஆகுபெயராக நாசியை உணர்த்தியது. காதுவரை நீண்ட கண்கள் இப்புறம் நாசியையும்
நெருங்கியுள்ளன. அடர்ந்து வந்திட-நெருங்கி அடர்ந்து உவந்திட எனப் பிரித்து
நெருங்கி மகிழ்ந்திட எனவும் பொருள் படுத்திக் கொள்ளலாம்.
இணைசிலை
நெறிந்து எழுந்திட ---
சிலை-வில்.
இங்கு இது புருவத்தைத் தெரிவிக்கின்றது. பொதுமகளிர் புருவத்தை நெரித்து ஆடவரை
மயக்குவர்.
இருள்
அளக பந்தி
---
கூந்தல்
மிகவும் கருமையாகவும் அடர்ந்தும் இருக்கும்.
வஞ்சியில் ---
வஞ்சி-கொடி.
இதுவும் ஆகுபெயராக இடையை உணர்த்தியது. கொடி அசைவதுபோல் இடை அசைந்தசைந்து அழகு
செய்யும்.
இதழ்
அமுது அருந்து சிங்கியின் மனமாய ---
சிங்கி-குளிர்ந்து
கொல்லும் பாஷாணம். இந்த நஞ்சு உண்டரைக் கொல்லும். அது இதழமுதாகிய நஞ்சு. அதனை உண்டார் உய்யமாட்டார்.
`குமுத அமுத இதழ்
பருகி யுருகிமயல்
கொண்டுற் றிடுநாசயேன்’ --- (கொலைமத) திருப்புகழ்.
முழுமதி
புரிந்த சிந்தூர ---
மகளிர்
முழுச் சந்திரனைப்போல் வட்டமாக பொட்டு இட்டுக்கொள்வர். அப்பொட்டு பலரை மயக்கிப்
பொட்டாக செய்யும்.
`பொட்டிலே அவர்கட்டு
பட்டிலே புனைகந்த
பொடியிலே அடியிலே ......
...... ...... ...... ...... ...... ......
......
புந்திதனை நுழையவிட்டு
நெட்டிலே அலையாமல்’ ---
தாயுமானார்.
முகடியும்
நலம் பிறந்திட அருள்வாயே ---
முகடி-மூதேவி. தூக்கம், மயக்கம், சோம்பல் முதலிய அசட்டுக் குணங்களுடையவள்
மூதேவி. “முருகா! மூதேவியாகிய அடியேனுக்கு நலம் விளைய அருள்வாய்” என்று சுவாமிகள்
வேண்டுகின்றனர்.
நலம் என்றால் என்ன பொருள்? உண்பதுவா நலம்; உறங்குவதா நலம்? மனைவி மக்களுடன் வாழ்வதுவா நலம்? மாடமாளிகைகளுடன் வாழ்வதுவா? உண்பது நலம் என்றால், நம்மைவிடப் பன்மடங்கு அதிகமாக
உண்ணுகின்றன ஆடு மாடுகள். உறங்கிக் கொண்டேயிருக்கும் எருமை. என்ன அருமை? விலங்குகள் கூட பெண் விலங்குகளுடன் கூடி
இன்புறுகின்றன; மாட மாளிகையில்
எலியும் பெருச்சாளியும் கூட வாழ்கின்றன. மூட்டைப் பூச்சியும், எட்டுக்கால் பூச்சியும் வாழ்கின்றன.
இதனால் அவைகள் நலமுடையன அல்லவே.
இனி
நலம் எது? தெய்வ உணர்ச்சி ஒன்றுதான் நலம்.
“கலந்த அன்பாகி, கசிந்து,உள் உருகும்
நலம்தான் இலாத சிறியேன்”
என்கிறார் மாணிக்கவாசகர்.
“நாதனார் கழல்கள்
வாழ்த்தி வழிபடும் நலத்தின் மிக்கார்”
என்பது
சேக்கிழார் திருவாக்கு.
தனக்கென்று
உரிய பொருள்கள் எல்லாவற்றையும் கரணங்களையும் இழப்பதுவே நலம் என்கிறார் அறிவின்
சிகரமாகிய அருணகிரிநாதர்.
“எல்லாம் அற என்னை
இழந்த நலம்” --- கந்தர் அநுபூதி
ஒன்றைப்
பெற்றால் நலம் என்பது உலகியல்; எல்லாவற்றையும்
இழப்பது நலம் என்பது அருளியல்.
“யாதனில் யாதனில்
நீங்கியான், நோதல்
அதனில் அதனில் இலன்” ---
திருக்குறள்.
அனைத்தையும்
விட்ட அருளாளர்க்கு உள்ளத்தில் சாந்தி நிலவும். கடைசி மூச்சு உள்ளவரை மறவாமல்
நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய திருக்குறள் ஒன்று. அதன் உயர்வு இமயத்தினும்
சிறந்தது. அதனை இங்கு கூறுகின்றேன்.
“அடல்வேண்டும் ஐந்தன்
புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு”
ஆ!
ஆ! இத் தமிழ் அமிழ்தம் நம்மை உய்விக்கும். இதனை என்றும் மறந்துவிடக் கூடாது. ஆகவே
எல்லாவற்றையும் விடுத்து இறைவன் திருவடியை யடுத்து உள்ளம் உருகும் நலம் பெற
வேண்டும்.
எரிவிட
நிமிர்ந்த குஞ்சி ---
குஞ்சி-ஆண்
மயிர். இறைவனுடைய சடைத் தீப்பிழம்பு போல் சுடர் விட்டு நிமிர்ந்து ஒளி செய்யும்.
சடை என்பது இறைவனுடைய ஞானத்தின் அடையாளம். சிவமூர்த்தியின் சடை சிவந்திருக்கும்.
செம்மைப்பண்பையும் அது காட்டுகின்றது.
நிலவோடு
மெழுந்த கங்கையும் :-
சிவபெருமான்
திங்களையும் கங்கையையும் சடைமுடியில் தரித்திருக்கின்றார்.
சந்திரனை
முடித்திருப்பது அருளின் அடையாளம். கங்கையை முடித்திருப்பது ஆற்றலின் அடையாளம்.
சங்கரன்
களி கூரும் ---
சம்-சுகம்; கரன்-செய்பவன். சுகத்தை செய்பவன் சங்கரன்.
செய்கின்ற கைக்கும் கரம் எனப் பேர் அமைந்திருப்பதைக் காண்க. தினத்தைச் செய்வதனால்
சூரியன் தினகரன் எனப் பெயர் பெற்றான். ஆன்மாக்களுக்கு சுகத்தைச் செய்கின்ற
சிவபெருமான் உமையம்மையாரின் உத்தம குணங்களைக் கண்டு மகிழ்கின்றார்.
இமவரை
தரும் கருங்குயில் ---
இமவான்
செய்த எல்லையில்லாத தவத்தினால் அகிலலோக அன்னையாகிய பராசக்தி அவனுக்கு
திருப்புதல்வியாக அவதரித்தனர்; குயிலனைய இனிய
குரலுடையவர்.
மரகத
நிறம் தரும் கிளி ---
மரகதமணி
போன்ற நிறமும் கிளி போன்ற மெல்லிய மொழியும் உடையவர்.
எனது
உயிர் எனும் த்ரியம்பகி ---
அருணகிரிநாதருக்கு
உயிர் போன்ற அருமையுடைய முக்கண்ணி. இந்த அடி அமுதம் போன்றது. கனியமுதம் அன்ன
இனியது. பலமுறை கூறினும் தெவிட்டாதது.
“இமவரை தருங்
கருங்குயில் மரகத நிறந்தருங்கிளி,
எனதுயிரெனுந் த்ரியம்பகி பெருவாழ்வே”
என்று
அநேக தடவை சொல்லிப் பாருங்கள். எத்துணைச் சுவையாக இருக்கிறது என்பதை உணருங்கள்.
மயில்
மேலே அக மகிழ்வு கொண்டு சந்ததம் வரு குமர ---
திருச்செந்தூரில்
உள்ள உற்சவ மூர்த்தி குமரவிடங்கர் என்ற பெயரை உடையவர். சகல அணிகலன்களையும் பூண்டு
பெருமான் மயில்வாகனத்தில் செந்திலம் பதியில் திருவீதியில் உலா வருகின்றனர்.
அலை
பொருத செந்தில் தங்கிய ---
கடலின்
அலைகள் வந்து கோயில் வாயிலில் மோதுமாறு கடலுக்கு மிக அண்மையில் விளங்குந்
திருத்தலம் செந்திலம்பதி. பிறவிப் பெருங்கடலுக்குத் துறைமுக நகரம் திருச்செந்தூர்.
“எனது சரணமாகிய கப்பலில் ஊர்ந்தோரை நான் முத்திக்கரை சேர்ப்பேன்” என்று
முருகப்பெருமான் கடற்கரையில் திருவடியாகிய ஓடத்துடன் இருக்கின்றான்.
கருத்துரை
உமாசுதரே! செந்திற் குமாரக் கடவுளே! மாதர்
மயக்குறா வண்ணம் அருள் நலம் தந்து ஆட்கொள்வீர்.
No comments:
Post a Comment