திருச்செந்தூர் - 0031. இயல்இசையில்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

இயலிசையில் உசித (திருச்செந்தூர்)

முருகனை உள்ளத்தில் அறிய அருள் வேண்டல்

தனதனன தனன தந்தத் ...... தனதான
     தனதனன தனன தந்தத் ...... தனதான


இயலிசையி லுசித வஞ்சிக் ...... கயர்வாகி
     இரவுபகல் மனது சிந்தித் ...... துழலாதே

உயர்கருணை புரியு மின்பக் ...... கடல்மூழ்கி
     உனையெனது ளறியு மன்பைத் ...... தருவாயே

மயில்தகர்க லிடைய ரந்தத் ...... தினைகாவல்
     வனசகுற மகளை வந்தித் ...... தணைவோனே

கயிலைமலை யனைய செந்திற் ...... பதிவாழ்வே
     கரிமுகவ னிளைய கந்தப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


இயல் இசையில் உசித வஞ்சிக்கு ...... அயர்வு ஆகி,
     இரவுபகல் மனது சிந்தித்து ...... உழலாதே,

உயர்கருணை புரியும் இன்பக் ...... கடல்மூழ்கி,
     உனைஎனது உள்அறியும் அன்பைத் ...... தருவாயே.

மயில் தகர் கல் இடையர், ந்தத் ...... தினைகாவல்
     வனசகுற மகளை வந்தித்து ...... அணைவோனே!

கயிலைமலை அனைய செந்தில் ...... பதிவாழ்வே!
     கரிமுகவன் இளைய! கந்தப் ...... பெருமாளே!


பதவுரை

         மயில் தகர் --- மயிலும், ஆடும் நிறைந்த,

     கல் இடையர் --- மலையினிடம் வாழ்கின்ற வேடர்கள் அமைத்த

     அந்த தினைக்காவல் வனச குறமகளை வந்தித்து அணைவோனே --- அழகிய தினைப்புனத்தைக் காவல் புரிந்த, இலக்குமியின் முகம் போன்ற வள்ளியம்மையாரை வணங்கி மணஞ்செய்து கொண்டவரே!

         கயிலை மலை அனைய செந்தில் பதி வாழ்வே --- திருக்கயிலாய மலைக்கு நிகரான மகிமையுடைய திருச்செந்தூரில் எழுந்தருளி வாழ்பவரே!

         கரிமுகவன் இளைய --- யானைமுகக் கடவுளாகிய விநாயகப் பெருமானுக்கு இளையவரே!

         கந்த --- கந்தக் கடவுளே!

         பெருமாளே --- பெருமையின் மிகுந்தவரே!

         இயல் இசையில் உசித வஞ்சிக்கு அயர்வு ஆகி --- உடல் சாயலிலும் இசைப் பயிற்சியிலும் மேன்மைப் பெற்றுள்ள, கொடிபோன்ற இடையையுடைய பெண்ணின்பால் மயக்கத்தை அடைந்து,

     இரவுபகல் மனது சிந்தித்து உழலாதே --- இரவும் பகலும் என் மனமானது அப்பெண்ணையே நினைந்து அலையாமல்,

     உயர் கருணைபுரியும் இன்பக் கடல் மூழ்கி --- தேவரீருடைய உயர்ந்த திருக் கருணையால் விளையும் பேரின்பக் கடலில் முழுகி,

     உனை எனது உள் அறியும் அன்பைத் தருவாயே --- தேவரீரை அடியேனுடைய உள்ளத்தில் அறிகின்ற அன்பினைத் தந்து அருள்புரிவீர்.

பொழிப்புரை

         மயில்களும் ஆடுகளும் நிறைந்து வாழ்கின்ற மலையினிடம் வசிக்கின்ற வேடர்களுடைய தினைப்புனத்தைக் காவல் புரிந்த திருமகள் போன்ற அழகு மிகுந்த வள்ளியம்மையாரை விளையாட்டாக வணங்குவார்போல் வணங்கி மணந்து அருள் புரிந்தவரே!

         திருக்கயிலாயம் போல் மகிமையில் சிறந்த திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ளவரே!

         ஆனைமுகப் பெருமானுக்குத் தம்பியே!

         கந்தவேளே!

         பெருமிதம் உடையவரே!

         உடம்பின் சாயலினாலும் இயல் தமிழுடன் கூடி இசைப்பாடல்களிலும் வல்ல கொடிப் போன்ற இளம் பெண்ணை விரும்பி தளர்ச்சியுற்று, இரவு பகலாக அப்பெண்மணியையே நினைந்து அலையாமல், தேவரீருடைய உயர்ந்த திருக்கருணையினால் விளையும் பேரின்ப சாகரத்தில் முழுகி தேவரீரை எனது உள்ளமாகிய கோயிலிலே உணர்ந்து உய்யும் அன்பை அருள் புரிவீர்.

விரிவுரை

இயல் இசையில் உசித வஞ்சிக்கு அயர்வாகி ---

வஞ்சி - கொடி, கொடிபோன்ற மென்மைத் தன்மையுடைய அம்மாதரை விரும்பி உள்ளம் வருந்துவர்.

பொது மகளிர் இனிய இயல் இசைப்பாடைலை மிகவும் நன்றாகக் கற்றுக் கொள்வர். அந்த இசை ஆடவரை மயக்கி இசைவிக்கும். இசை பசுவையும் பாம்பையும் மயக்குமெனின் ஆடவரை மயக்குவதில் என்ன வியப்பு? “புலன்களை வென்று துறவு பூண்டவர்கள் பெண்களை வியந்து கூறக்கூடாது. பெயரையும் தம் நாவினால் சொல்ல வொண்ணாது; கண்ணும் கருத்தும் ஒன்றிப் பெண்களை நோக்கக் கூடாது பண்ணமைந்த பாடல் கேட்கக் கூடாது” என்று அறநூல் கூறுகின்றது.

பெண்மை வியவார், பெயரும் எடுத்துஓதார்,
கண்ணொடு நெஞ்சுஉறைப்ப நோக்கார்,-பண்ணொடு
பாடல் செவிமாடார், பண்புஅல்ல பாராட்டார்,
வீடில் புலப்பகையி னார்.                       ---  நீதிநெறி விளக்கம்.

இரவு பகல் மனது சிந்தித்து உழலாதே ---

அம்மாதரை இராப் பகலாக நினைந்து நினைந்து நெஞ்சு புண்ணாகி, அம்மாதரை யடையும் பொருட்டு இங்குமங்குமாக உழலுவர். இனி ஆசைக் கடலுள் முழுகி அதனால் பலப்பல பிறப்பு எடுத்தும் உழலுவர். சுவர்க்கத்திற்கும் நரகிற்குமாகவும் உழலுவர்.

உயர் கருணை புரியும் இன்பக்கடல் மூழ்கி ---

முருகப் பெருமானுடைய கருணை மிகவும் உயர்ந்தது. அதனால் விளைவது பேரின்பம். அது கடல்போல் பெருகியுள்ளது. ஆதலின் அதில் பிறவிக் கோடையாலாய வெப்பந் தீரும் பொருட்டு முழுக, அதுவே முத்தியைத் தரும்.

ஆசை வெள்ளத்தில் முழுகியலைந்த ஆன்மா ஆண்டவனுடைய கருணையால் எய்தும் பேரின்பவெள்ளத்தில் முழுகி மகிழும்.

உனை எனது உள் அறியும் அன்பைத் தருவாயே ---

முருகப் பெருமான் ஆன்மாக்களின் இதய தாமரையில் உறைகின்றனன். அப் பரமனை உள் நாடி யறிய வேண்டும்.

எண்ணாயிரத் தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணா ரமுதனைக் கண்டறி வாரில்லை
உண்ணாடி யுள்ளே ஒளிபெற நோக்கில்
கண்ணாடி போலக் கலந்திருந் தானே.

என்கின்றார் திருமூலர்.

உடலும்உடல் உயிரும்நிலை பெறுதல் பொருள்என உலகம்
வருவிவரு மநுபவன சிவயோக சாதனையில்
ஒழுகுமவர், பிறிதுபர வசம்அழிய விழிசெருகி 
உணர்வுவிழி  கொடுநியதி தமதுஊடு நாடுவதும்”        ---  சீர்பாத வகுப்பு

தேடிக் கண்டு கொண்டேன் - திருமாலொடு நான்முகனும்
தேடித் தேடொண்ணாத் தேவனை என்னுள்ளே
தேடிக் கண்டு கொண்டேன்.                                 ---  அப்பர்.

முருகனிடத்தில் அருணகிரியார் கேட்கின்ற வரம் அன்பு ஒன்றே என்பதை உய்த்துணர்மின்கள். வீரவாகு தேவர் முருகவேளிடம் வேண்டிய வரமும் இதுவேயாகும்.

கோல நீடிய நிதிபதி வாழ்க்கையும் குறியேன்,
மேலை இந்திரன் அரசினைக் கனவினும் வெஃகேன்,
மால் அயன்பெறு பதத்தையும் பொருள்என மதியேன்,
சால நின்பதத்து அன்பையே வேண்டுவன் தமியேன்.       ---  கந்தபுராணம்.

யான் ஏதும் பிறப்பு அஞ்சேன், இறப்பு அதனுக்கு என் கடவேன்?
வானேயும் பெறில்வேண்டேன், மண் ஆள்வான் மதித்தும் இரேன்,
தேன்ஏயும் மலர்க்கொன்றைச் சிவனே! எம் பெருமான்! எம்
மானே! உன் அருள்பெறு நாள் என்று என்றே வருந்துவனே.    ---  மணிவாசகம்.

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ
வான் ஆளும் செல்வமும் மண்அரசும் யான் வேண்டேன்
தேன் ஆர் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே.            --- குலசேகராழ்வார்.

மயில் தகர் கல் இடையர் ---

   தகர் - ஆடு. கல் - மலை. இடையர் - அதன் இடையே வாழ்பவர்; வேடர்.

 
தினைக்காவல் வனச குறமகளை வந்தித்து அணைவோனே ---

ஜீவான்மாவாகிய வள்ளிநாயகியார் ஐம்புலன்களாகிய வேடுவர் குலத்தில் தோன்றி, நெஞ்சமாகிய புனத்தில், ஞானப்பயிராகியத் தினையை, மாயாமலமாகியப் பறவைகள் அழிக்காவண்ணம் காத்துக் கொண்டிருக்க, அடியார்க்கு எளியவராகிய எந்தை கந்தவேள் விரைந்து வந்து, தன்னையுணராத வள்ளியை, “உன்னை நான் கும்பிடுகிறேன் என்னை மணந்து கொள்” என்று இதவசனங்கூறி ஆட்கொண்டனர்.

வள்ளியை ஞான பண்டிதன் வந்தித்தான் என்பதன் உட்பொருள், ஆன்மாவின் மீதுள்ள கருணையால் தனது உயர்வை ஒரு பொருளாக எண்ணாமல் இரங்கி வந்து எளிதாக நின்றான் என்பதாகும்.

கயிலைமலை அனைய செந்தில் ---

திருச்செந்தூர் திருக்கயிலாயம் போன்ற உயர்வுடையது. “பரமபதம் ஆய செந்தில்” என்றும் பிறிதொரு திருப்புகழில் கூறியுள்ளார். முருகவேள் சூராதியவுணரை மாய்ப்பதற்கு முன்னும் பின்னும் தங்கி பக்தாபீஷ்ட வரதராக எழுந்தருளியிருப்பதால் இவ்வுயர்வு பெற்றது.

கருத்துரை

         வள்ளி நாயகரே! செந்திற் குமாரரே! தேவரீரை அடியேனுடைய உள்ளத்தில் அறிய அன்பைத் தருவீர்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...