அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அனைவரும் மருண்டு
(திருச்செந்தூர்)
முருகன் திருவடி மலரைப் பெற வேண்டல்
தனதன
தனந்த தந்த தனதன தனந்த தந்த
தனதன தனந்த தந்த ...... தனதான
அனைவரு
மருண்ட ருண்டு கடிதென வெகுண்டி யம்ப
அமரஅ டிபின்தொ டர்ந்து ...... பிணநாறும்
அழுகுபிணி கொண்டு விண்டு புழுவுட னெலும்ப லம்பு
மவலவுட லஞ்சு மந்து ...... தடுமாறி
மனைதொறு
மிதம்ப கர்ந்து வரவர விருந்த ருந்தி
மனவழி திரிந்து மங்கும் ...... வசைதீர
மறைசதுர்
விதந்தெ ரிந்து வகைசிறு சதங்கை கொஞ்சு
மலரடி வணங்க என்று ...... பெறுவேனோ
தினைமிசை
சுகங்க டிந்த புனமயி லிளங்கு ரும்பை
திகழிரு தனம்பு ணர்ந்த ...... திருமார்பா
ஜெகமுழு
துமுன்பு தும்பி முகவனொ டுதந்தை முன்பு
திகிரிவ லம்வந்த செம்பொன் ...... மயில்வீரா
இனியக
னிமந்தி சிந்து மலைகிழ வசெந்தில் வந்த
இறைவகு ககந்த என்று ...... மிளையோனே
எழுகட
லுமெண்சி லம்பும் நிசிசர ருமஞ்ச அஞ்சு
மிமையவ ரையஞ்ச லென்ற ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
அனைவரும்
மருண்டு, அருண்டு, கடிதுஎன வெகுண்டு இயம்ப,
அமர அடி பின் தொடர்ந்து, ...... பிணநாறும்
அழுகு
பிணி கொண்டு, விண்டு புழுவுடன் எலும்பு
அலம்பும்
அவல உடலம் சுமந்து ...... தடுமாறி,
மனைதொறும்
இதம் பகர்ந்து, வரவர விருந்து அருந்தி,
மன வழி திரிந்து மங்கும் ...... வசைதீர,
மறைசதுர்
விதம் தெரிந்து, வகை சிறு சதங்கை கொஞ்சு,
மலர் அடி வணங்க என்று ...... பெறுவேனோ?
தினைமிசை
சுகம் கடிந்த புனமயில், இளங் குரும்பை
திகழ், இரு தனம் புணர்ந்த ...... திருமார்பா!
ஜெகமுழுதும்
முன்பு தும்பி முகவனொடு, தந்தை முன்பு
திகிரி வலம் வந்த செம்பொன் ......
மயில்வீரா!
இனிய
கனி மந்தி சிந்து மலை கிழவ! செந்தில் வந்த
இறைவ! குக! கந்த! என்றும் ...... இளையோனே!
எழுகடலும், எண் சிலம்பும், நிசிசரரும் அஞ்ச, அஞ்சும்
இமையவரை அஞ்சல் என்ற ...... பெருமாளே.
பதவுரை
தினைமிசை சுகம் கடிந்த --- தினைகளின் மீது இருந்த
கிளிகளை ஓட்டிய,
புனமயில் இளங் குரும்பை திகழ் --- புனத்தின்கண்
மயில்போல் விளங்கிய வள்ளியம்மையாரது குரும்பைபோல் திகழ்கின்ற,
இரு தனம் புணர்ந்த --- இரண்டு தனங்களுடன் புணர்கின்ற,
திரு மார்பா --- அழகிய மார்பையுடையவரே!
ஜெக முழுதும் --- உலக முழுவதும்,
முன்பு --- முன்னாளில்,
தும்பி முகவனொடு --- யானை முகமுடைய விநாயகருடன்
போட்டியிட்டு,
தந்தை முன்பு --- சிவபெருமானுடைய முன்னிலையில்,
திகிரி வலம் வந்த --- வட்டமாக வலம் வந்த,
செம்பொன் மயில் வீரா --- செம்பொன் நிறமுடைய மயிலையுடைய
வீரரே!
மந்தி இனிது கனி சிந்து --- குரங்குகள் இனிமையான
பழங்களை உதிர்க்கின்ற,
மலை கிழவ --- மலைநிலமாகியக் குறிஞ்சி நிலத்திற்கு
உரியவரே!
செந்தில் வந்த --- திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள,
இறைவ --- இறைவரே!
குக --- குகப் பெருமானே!
கந்த --- கந்தக் கடவுளே!
என்றும் இளையோனே --- என்றும் அகலாத இளமைப் பருவம்
உடையவரே!
எழு கடலும் --- ஏழு சமுத்திரங்களும்,
எண் சிலம்பும் --- எட்டு குலமலைகளும்,
நிசிசரரும் அஞ்ச --- இராக்கதர்களும் அஞ்சுமாறு,
அஞ்சும் இமயவரை அஞ்சல் என்ற --- பயந்து நின்ற
தேவர்களை அஞ்சாதீர்கள் என்று அபயங்கொடுத்த,
பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!
அனைவரும் மருண்டு அருண்டு --- எனக்கு உற்ற பெரு
நோயைக் கண்டு எல்லோரும் அச்சங்கொண்டு மனங் கலங்கியும்,
கடிது என வெகுண்டு இயம்ப --- சீக்கிரம் விலகிப்
போ என்று கோபித்துக் கூறவும்,
அமர அடி பின் தொடர்ந்து --- (நான்) நெருங்கி அவர்களது
அடிப்பின்னே தொடர்ந்து சென்று,
பிண நாறும் அழுகு பிணி கொண்டு --- பிணம்போல் நாறுகின்ற
அழுகிய தசையுடன் கூடிய நோயைக் கொண்டு,
விண்டு புழுவுடன் எலும்பும் அலம்பும் --- புழு
வெளிப்பட்டு எலும்புகள் நிலை குலைந்துள்ள,
அவல உடலம் சுமந்து --- துன்பத்தையுடைய உடம்பைச்
சுமந்து கொண்டு,
தடுமாறி --- தடுமாற்றமுற்று,
மனைதொறும் இதம் பகர்ந்து --- வீடுகள்தோறும் சென்று
இனிய வசனங்களைக் கூறி!
வர வர விருந்தி அருந்தி --- நாள் போகப் போகப்
புதிய வீடுகளில் உணவு உண்டு,
மனவழி திரிந்து மங்கும் வசை தீர --- மனம் போன
வழியில் சென்று திரிந்து கெடுகின்ற பழிப்பு நீங்குமாறு,
மறை சதுர்விதம் தெரிந்து --- நான்கு வேதங்களின்
வகைகளை யறிந்து,
வகை சிறு சதங்கை கொஞ்ச --- முறைப்படி சிறிய சதங்கைகள்
கொஞ்சி ஒலிக்கின்ற,
மலரடி வணங்க --- மலர்ப் போன்ற தேவரீருடைய திருவடியை
வணங்குகின்ற பேற்றினை,
என்று பெறுவேனோ --- அடியேன் எந்நாள் பெறுவேனோ?
பொழிப்புரை
தினைப்பயிர் மீது அமர்ந்த கிளிகளை ஓட்டிட
புனத்தில் வாழ்ந்த மயில் போன்ற வள்ளியமையாருடைய தென்னங் குரும்பை அனைய இரு தனபாரங்களுடன்
கலந்த திருமார்பினை உடையவரே!
சிவபெருமான் முன்னிலையில் யானைமுகப்
பெருமானுடன் போட்டியிட்டு, உலக முழுவதும்
வட்டாகாரமாக வலம் வந்த செம்பொன் நிறமுடைய மயில்வாகனத்தையுடைய வீரமூர்த்தியே!
குரங்குகள் இனிய கனிகளை உதிர்க்கின்ற
நிலத்திற்கு உரியவரே!
திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள
இறைவரே!
குகப்பெருமானே!
கந்தநாயகனே!
என்றும் அகலாத இளமையுடையவரே!
ஏழு கடல்களும், எட்டு குலமலைகளும், அசுரர்களும் அஞ்சுமாறு, அஞ்சி நின்ற அமரர்களை, அஞ்சேல் என்று உரைத்தருளிய பெருமிதம்
உடையவரே!
எனக்கு உற்ற பெரும் நோயைக் கண்டு
யாவரும் அச்சமும் கலக்கமும் அடைந்து “விரைவில் விலகிப் போ” என்று கோபித்துக்
கூறியும், நான் அவரை விடாது
அவர் அடிப் பின்தொடர்ந்து சென்று,
பிணம்
போல் நாறுகின்ற அழுகிய சதையுடன் கூடிய நோயுடன், புழுக்கள் வெளிப்படவும் எலும்புகள்
நிலைகுலையும் துன்பத்துடன் கூடிய உடம்பைக் கொண்டு தடுமாற்றமுற்று, வீடுகள் தோறுஞ் சென்று இனிய சொற்களைக் கூறி, நாள் செல்லச் செல்ல புதிய புதிய
இடங்களுக்குச் சென்று உணவு உண்டு,
மனம்
போன வழியில் திரிந்து அழிகின்ற பழி நீங்குமாறு, நான்கு வேதங்களின் வகைகளை அறிந்து
இனிமையாகக் கொஞ்சி ஒலிக்கின்ற சதங்கையுடன் கூடிய தேவரீரது திருவடிகளை வணங்கும்
பெரும் பேற்றினை அடியேன் எந்நாள் பெறுவேனோ?
விரிவுரை
அனைவரு
மருண்டு அருண்டு ---
பெருநோய்
என்பது ஒரு கொடிய நோய்; அதற்குத் தொழுநோய்
என்று ஒரு பெயரும் உண்டு; ஏனைய நோய்கள் இந்த
அரச நோயைக் கண்டால் தொழும். அதனால் தொழு நோய் எனப்பட்டது. இந்த நோயினால்
பீடிக்கப்பட்ட ஒருவனைக் கண்ட எல்லோரும் அருவருப்புறுவர். ஆ! இந்த நோய் நமக்கு
ஒட்டி வரக் கூடாதே! என்று அகலுவர்;
அஞ்சுவர்.
இந்த நோயின் கொடுமையை அடிகளார் இந்தப் பாடலில் இரண்டு அடிகளில் கூறுகின்றனர்.
இந்த
நோய் மூன்று காரணங்களால் வரும்;
1. சிவஞானிகளாகிய உத்தம பக்தர்கள் மனம்
கலங்குமாறு அபாண்டமான பழிச்சொல் கூறி எவன் பழிப்பானோ அவனுக்கு இந் நோய் அணுகும்.
“அடியார் மனம் சலிக்க
எவராகிலும் பழிக்க
அபராதம் வந்துகெட்ட பிணிமூடி
அனைவோரும் வந்து சிச்சி எனநால்வரும் பழிக்க
அனலோடுஅழன்று செத்து விடுமாபோல்” ---
திருப்புகழ்.
2. உத்தமமான பதிவிரதைகளின் மனம்
கொதிக்குமாறு எவன் நடப்பானோ அவனுக்கு இக் கொடிய நோய் சாரும்.
3. முன் சொன்ன இரண்டு பாவங்கள் இப்
பிறப்பிலேயே வந்து சாரும்.
முற்பிறப்பில்
பத்துக் கால்களையுடைய நண்டைப் பிடித்து பத்துக் கால்களையும் ஒடித்து உண்டவனுக்கு
கை கால்களில் உள்ள விரல்கள் அழுகி சங்குபோல் மழுமழு என்று இருக்கத் துக்கத்தைத்
தரும் இத் தொழுநோய் வந்து இப் பிறப்பில் துன்புறுத்தும்.
அக்கேபோல்
அங்கை ஒழிய விரல்அழுகித்
துக்கத்
தொழுநோய் எழுபவே-அக்கால்
அலவனைக்
காதலித்துக் கால் முறித்துத் தின்ற
பழவினை
வந்துஅடைந்தக் கால், --- நாலடியார்.
கடிது
என வெகுண்டு இயம்ப ---
பெருநோயாளன்
அருகில் வந்தபோது, அருவருத்து “அடேய்!
கிட்டவராதே! சீக்கிரம் அப்பால் எட்டிப் போ” என்று வெகுண்டு உரைப்பார்கள். இயம்-
மேளம், மேளம் போல் உரைத்த
குரலில் உரைப்பர்; அதனால் “இயம்ப”
என்றனர்.
அமர
அடி பின் தொடர்ந்து ---
கண்டவர்கள்
கடிந்துரைக்கும் நோயாளன் குறிப்பறிந்து விலகிப் போகாமல் அவர்கள் பின்னர் சென்று
வீண்தொந்தரவு தருவான்.
பிணநாறும்
அழகு பிணிகொண்டு ---
தொழுநோயினால்
நிணங்கள் மிகுந்து, சதைகள் அழுகி
உதிரமும் சீழும் வடிந்து, அதனால் பிணநாற்றம்
வீசும். அந்த நாற்றத்தைக் கண்டு எல்லோரும் மிகவும் பழித்து விலகிப் போவார்கள். அது
கண்டு பிணியாளன் பெரும் வேதனையுறுவான்.
விண்டு
புழுவுடன் எலும்பு அலம்பு ---
தொழுநோயினால்
ஏற்பட்ட புண்களில் புழுக்கள் பல நெளிந்து வெளிப்படவும், ஆழமான குழிகள் விழுந்து எலும்புகள்
தெரிந்து, அந்த எலும்புகள்
நிலைகுலைந்தும் நோயாளன் துன்பமுறுவான்.
அவல
உடலம் சுமந்து தடுமாறி ---
அவலம்-துன்பம்.
நோயால்
துன்பமுற்ற இந்த உடம்பை மேலும் மேலும் சுமந்து நோயாளன் திரிவான். நோயுற்று, புண்பட்டுப் புழு நெளியப்
பெருந்துன்பமுற்றாலும் “இந்த உடம்பு இனி வேண்டாம்; மாள்வது நலம்” என்று துணியமாட்டான்.
இன்னும் சிலகாலம் வாழவேண்டும் என்றே இப் பாரமான உடம்பைச் சுமந்துகொண்டு தடுமாறித்
திரிவான்.
மனைதொறும்
இதம் பகர்ந்து வரவர விருந்து அருந்தி ---
வீடுகள்
தோறும் சென்று, அவரவர்கட்கு ஏற்றவாறு
இன்னுரைக் கூறி, பின்னர் வேறு வேறு
புதிய புதிய வீடுகட்குச் சென்று உணவு அருந்தி அலைவர்.
“அசனம் இடுவார்கள்
தங்கள் மனைகள் தலைவாசல் நின்று
அநுதினமும் நாணம் இன்றி அழிவேனோ” --- (கருவினுரு)
திருப்புகழ்.
மனவழி
திரிந்து மங்கும் வசைதீர ---
மனம்போன
போக்கெல்லாம் போய், இங்கும் அங்குமாகத்
திரிந்து அழிகின்றதனால், வரும் பழிப்பு
நீங்கவேண்டுமாயின் முருகன் பாதபங்கயங்களைப் பரவுதல் வேண்டும்.
மறை
சதுர் விதம் தெரிந்து வகை சிறு சதங்கை கொஞ்ச ---
முருகப்பெருமானுடைய
திருவடியில் விளங்கும் பொற் சதங்கைகள் நான்கு வேதங்களின் மந்திரங்களை ஒலித்துக்
கொஞ்சுகின்றன.
மலரடி
வணங்க என்று பெறுவேனோ? ---
பெறுகின்ற
பேற்றினுக்கெல்லாம் பெரும்பேறு முருகன் அடியைப் பணியப் பெறுதலேயாம். அதுவே மானிடப்
பிறப்பைப் பெற்றதன் பயனாம். இனிப் பிறவாத பெற்றியை அது தரும்.
பெறுதற்கு
அரிய பிறவியைப் பெற்று,நின் சிற்றடியைக்
குறுகிப்
பணிந்து பெறக் கற்றிலேன், மதகும்ப கம்பத்
தறுகண்
சிறுகண் சங்க்ராம சயில சரவல்லி
இறுகத்
தழுவும் கடகாசல பன்னிருபுயனே. --- கந்தர் அலங்காரம்.
தினைமிசை
சுகம் கடிந்த புனமயில்.....திருமார்பா ---
மெய்ஞ்ஞானமாகிய
பயிரில் முத்திக் கதிரைப் பாழ்படுத்த வந்த காமக்ரோதாதி கிளிகளை பக்தியாகிய கவணிலே
முருக நாமங்களாகிய கற்களை விட்டெறிந்து ஓட்டிய இச்சா சக்தியாகிய வள்ளியின் அபர
பரஞானங்களாகிய இரு தனங்களால் தழுவப்பெற்ற தோள்களை யுடையவன் முருகன்.
செகமுழுது......வலம்
வந்த
---
கனி
காரணமாக எங்கும் தானே நிறைந்தவன்;
தன்னையல்லாமல்
உலகமில்லை என்ற தத்துவத்தை முருகப்பெருமான் காட்டியருளினார்.
இனியகனி
மந்தி சிந்து மலைகிழவ ---
முருகனுக்கே
உரிய நிலம் குறிஞ்சி.
சேயோன்
மேய மைவரையுலகு. --- தொல்காப்பியம்.
அப்
பெருமான் எழுந்தருளிய நிலம் மலை நிலம். அதுதானே உயர்ந்தது. அவர் தேவ சிகாமணி.
தெய்வநாயகன்.
“விண்பொரு நெடுவரைக்
குறிஞ்சிக் கிழவ”
என்கின்றார்
நக்கீரர்.
திருந்தப்
புவனங்கள் ஈன்ற பொற்பாவை திருமுலைப்பால்
அருந்தி, சரவணப் பூந்தொட்டில் ஏறி, அறுவர் கொங்கை
விரும்பி, கடல்அழக் குன்றுஅழச் சூர்அழ விம்மிஅழும்
குருந்தைக்
குறிஞ்சிக் கிழவன் என்றுஓதும் குவலயமே. --- கந்தர் அலங்காரம்
அப்
பெருமான் எழுந்தருளியுள்ள மலைகள் எல்லாம் இனிய கனிகளுடன் கூடியவை. பூத்துப்
பழுத்துக் குலை குலையாகக் குலுங்குகின்றன. மந்திகள் வந்து மரத்தைக் குலுக்கி
உதிர்க்கின்றன. உதிர்ந்த கனிகளை உண்டு உவகையுறுகின்றன. எம்பெருமான்
எழுந்தருளியுள்ள மலைகளில் உள்ள மந்திகளுக்குக் கூட பசிதாகமே கிடையா. அத்தனை வளமை.
இறைவ ---
எங்கும்
எப்பொருட்கும் அப்பரமபதியே தலைவன். ஆறுசமயங்கட்கும் அதிபன்.
குக ---
மலைக்
குகைகளில் முருகன் எழுந்தருளியிருப்பதன்றி, ஆன்மாக்களின் இதய குகைகளிலும்
எழுந்தருளியிருக்கின்றான். அதனால் 'குகன்' எனப் பெறுகின்றான்.
என்றும்
இளையோனே
---
முருகன்
என்றும் அகலாத இளமைக்காரன். குழந்தை வடிவில் விளங்கும் குருநாதன். குமரன் என்ற
திருப்பெயருக் குரியவன்.
அஞ்சல்
என்ற பெருமாளே
---
முருகன்
வேலை எடுத்தவுடன் ஏழு கடல்களும்,
எட்டு
மலைகளும், சூராதியவுணரும்
அஞ்சினார்கள். அப்போது இமையவர்களை “அஞ்சல்” என்று அபயமருளி அருள் புரிந்தனர்.
கருத்துரை
வள்ளி மணவாளரே! செந்திலாண்டவரே!
குறிஞ்சிக் கிழவரே! தொழுநோய் தொடர்ந்து அழியாமல் உமது திருவடியைத் தொழ அருள்புரிவீர்.
No comments:
Post a Comment