அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அனிச்சம் கார்முகம்
(திருச்செந்தூர்)
முருகா!
அடியேனை அழைத்து,
உனது திருவடியை எனது முடிமேல்
சூட்டி அருள்.
தனத்தந்
தானன தானன தானன
தனத்தந் தானன தானன தானன
தனத்தந் தானன தானன தானன ...... தனதான
அனிச்சங்
கார்முகம் வீசிட மாசறு
துவட்பஞ் சானத டாகம்வி டாமட
அனத்தின் தூவிகு லாவிய சீறடி ......
மடமானார்
அருக்கன்
போலொளி வீசிய மாமர
கதப்பைம் பூணணி வார்முலை மேல்முகம்
அழுத்தும் பாவியை யாவியி டேறிட ......
நெறிபாரா
வினைச்சண்
டாளனை வீணணை நீணிதி
தனைக்கண் டாணவ மானநிர் மூடனை
விடக்கன் பாய்நுகர் பாழனை யோர்மொழி ......
பகராதே
விகற்பங்
கூறிடு மோகவி காரனை
அறத்தின் பாலொழு காதமு தேவியை
விளித்துன் பாதுகை நீதர நானருள் ......
பெறுவேனோ
முனைச்சங்
கோலிடு நீலம கோததி
அடைத்தஞ் சாதஇ ராவண னீள்பல
முடிக்கன் றோர்கணை யேவுமி ராகவன் ......
மருகோனே
முளைக்குஞ்
சீதநி லாவொட ராவிரி
திரைக்கங் காநதி தாதகி கூவிள
முடிக்குஞ் சேகரர் பேரரு ளால்வரு ......
முருகோனே
தினைச்செங்
கானக வேடுவ ரானவர்
திகைத்தந் தோவென வேகணி யாகிய
திறற்கந் தாவளி நாயகி காமுறும் ......
எழில்வேலா
சிறக்குந்
தாமரை யோடையில் மேடையில்
நிறக்குஞ் சூல்வளை பால்மணி வீசிய
திருச்செந் தூர்வரு சேவக னேசுரர் ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
அனிச்சம்
கார்முகம் வீசிட, மாசு அறு
துவள் பஞ்சு ஆன தடாகம் விடா, மட
அனத்தின் தூவி குலாவிய சீறடி ......
மடமானார்,
அருக்கன்
போலஎஒளி வீசிய மா மர-
கதப் பைம் பூண்அணி வார்முலை மேல்,முகம்
அழுத்தும் பாவியை, ஆவி யிடேறிட ......
நெறிபாரா,
வினைச்
சண்டாளனை, வீணணை, நீள்நிதி
தனைக் கண்டு, ஆணவம் ஆன நிர் மூடனை,
விடக்கு அன்பாய் நுகர் பாழனை, ஓர்மொழி ......
பகராதே,
விகற்பம்
கூறிடு மோக விகாரனை,
அறத்தின் பால் ஒழுகாத முதேவியை,
விளித்து, உன் பாதுகை நீ தர நான்அருள் ......
பெறுவேனோ?
முனைச்சங்கு
ஓலிடு நீல மகா உததி
அடைத்து, அஞ்சாத இராவணன் நீள் பல
முடிக்கு அன்று ஓர் கணை ஏவும் இராகவன்......மருகோனே!
முளைக்கும்
சீத நிலாவொடு அரா, விரி
திரைக் கங்கா நதி, தாதகி, கூவிளம்
முடிக்கும் சேகரர் பேர்அருளால் வரு ......
முருகோனே!
தினைச்
செங்கானக வேடுவர் ஆனவர்
திகைத்து, அந்தோ எனவே, கணி ஆகிய
திறல் கந்தா! வளி நாயகி காமுறும் ......
எழில்வேலா!
சிறக்கும்
தாமரை ஓடையில் மேடையில்
நிறக்கும் சூல்வளை பால்மணி வீசிய
திருச்செந்தூர் வரு சேவகனே! சுரர் ......
பெருமாளே.
பதவுரை
முனை சங்கு ஓலிடு நீல --- போருக்குரிய
சங்குகள் ஓவென்று ஒலிக்கும் நீலநிறத்தையுடைய
மகா உததி அடைத்து --- பெரிய
சமுத்திரத்தை (வானர வீரர்களைக் கொண்டு) அணை புதுக்கி,
அஞ்சாத இராவணன் --- பகைவர்களுக்குப்
பயப்படாத இராவணனது
நீள் பல முடிக்கு --- உயர்ந்த
மணிமகுடந்தரித்த பல தலைகளையும் அறுப்பதற்கு,
அன்று --- அந்நாளில்
ஓர் கணை ஏவும் இராகவன் மருகோனே ---
ஒரே ஒரு அம்பினை விடுத்த இரகு வம்சத்தில் அவதரித்த
இராமபிரானது திருமருகனாக விளங்குபவரே!
முளைக்கும் சீத நிலாவொடு --- திருப்பாற்
கடலிலே தோன்றும் குளிர்ந்த பிறைச் சந்திரனையும்,
அரா --- பாம்பையும்,
விரிதிரை கங்கா நதி --- விசாலமானதும்
அலைகளை உடையதுமாகிய கங்கா நதியையும்,
தாதகி --- ஆத்திமலரையும்,
கூவிளம் --- வில்வத்தையும்
முடிக்கும் சேகரர் --- தரித்துக்கொண்டுள்ள
சடாமகுடத்தையுடைய சிவபெருமானது
பேர் அருளால் வரு முருகோனே ---
பெருங்கருணையால் அவதரித்த முருகப்பெருமானே!
தினை செம் கானக வேடுவர்
ஆனவர்
--- தினைப்பயிர் விளையும் செழிப்பாகிய காட்டகத்தில் வாழுகின்ற வேடுவர்களானவர்கள்,
திகைத்து அந்தோ என(ஏ-அசை) --- புதிதாக
முளைத்ததால் “இது ஏது?” என்று பிரமித்து”
ஐயோ! என் செய்வோம்” என்று கூற,
கணி ஆகிய திறல் கந்தா --- வேங்கை மரமாகி
நின்ற வலிபொருந்திய கந்தப்
பெருமானே!
வள்ளி நாயகி காமுறும்
எழில் வேலா ---
வள்ளி நாயகியார் கண்டு அன்புறும் கட்டழகுடைய
வேலாயுதரே!
சிறக்கும் தாமரை
ஓடையில் மேடையில் --- மலர்களுக்குள் சிறப்புற்றிருக்குந் தாமரை ஓடைகளிலும், உயர்ந்த உப்பரிகைகளிலும்,
நிறக்கும் சூல் வளை பால் மணிவீசிய ---
நல்ல நிறம் பொருந்திய சினைகொண்ட சங்குகள், பால் போன்ற வெண்ணிறமுடைய முத்துக்களை
எறிகின்ற (கடற்கரையிலுள்ள),
திருச்செந்தூர் வரு சேவகனே --- திருச்செந்திலம்பதியில்
அடியார் பொருட்டு எழுந்தருளி வருகின்ற
வீரரே!
சுரர் பெருமாளே --- தேவர்களால்
வணங்கப்படும் பெருமையில் சிறந்தவரே!
அனிச்சம் --- அனிச்ச மலரும்,
கார்முகம் வீசிட --- பஞ்சடிக்கும்
வில்லினால் அடிக்க
மாசு அறு --- குற்றமுடையவைகள் நீங்கப்
பெற்ற
துவள் பஞ்சு ஆன --- கடினமாகிய மெல்லிய
பஞ்சும் துவளுகின்ற,
தடாகம் விடாமட --- அன்பு மிக்கதான
தடாகத்தை விட்டு நீங்காத அழகிய (நடையுடைய)
அனத்தின் தூவி குலாவிய --- அன்னப்
பறவையின் மெல்லிய இறகும், மிகவும் மிருதுவாக
விளங்குவதால் கொண்டாடுகின்ற
சிறு அடி மடமானார் --- சிறிய
பாதங்களையுடைய, அழகிய மானைப் போன்ற
மகளிரது,
அருக்கன்போல் ஒளி வீசிய --- சூரியனைப்போல் பிரகாசிக்கின்ற,
மா மரகதப் பைம்பூண் அணி --- சிறந்த
மரகதமணிகள் பதித்த பசுமை நிறம் பொருந்திய ஆபரணங்களை அணிந்துள்ள,
வார் முலைமேல் முகம் அழுத்தும் பாவியை ---
இரவிக்கையோடு கூடிய தனங்களின்மேல் முகத்தையும்
பார்வையையும் வைத்து அழுத்திக் களிக்கின்ற பாவியும்,
ஆவி ஈடேறிட --- ஆன்மாவானது உய்யும்
நெறி பாரா வினை சண்டாளனை --- நெறி
இன்னதென்று ஆராய்ந்தறியாத, தீய காரியங்களைப் புரியும் சண்டாளனும்,
வீணனை --- வீண் காரியங்களைப்
புரிவோனும்,
நீள் நிதி தனைக்கண்டு ஆணவமான நிர்மூடனை
--- பெரிய செல்வமுடைமையைக் கண்டு (அதன் பெருக்கத்தை நினைத்து), அகங்காரத்தைக் கொண்ட முழு மூடனும்,
விடக்கு அன்பாய் நுகர் பாழனை ---
மாமிசத்தை அன்பாக உண்ணுகின்ற பாழனும்,
ஓர் மொழி பகராதே --- ஒப்பற்ற மொழியான தேவரீரது சடக்கர
மந்திரத்தை உச்சரிக்காமல்,
விகற்பம் கூறிடு --- சாஸ்திர விரோதமான
வார்த்தைகளையே பேசுகின்ற,
மோக விகாரனை --- மோக விகாரத்தை உடையவனும்,
அறத்தின் பால் ஒழுகாத மூதேவியை ---
தரும நெறியில் நின்று ஒழுகாத மூதேவியுமாகிய அடியேனை,
விளித்து --- தேவரீர் கருணையால்
அழைத்து
உன் பாதுகை நீ தர --- உங்களுடைய
திருவடி ரட்சையை என் முடிமேல் சூட்ட
நான் அருள் பெறுவேனோ ---- அடியேன்
அந்த அனுக்கிரகத்தைப் பெற மாட்டேனோ?
பொழிப்புரை
போருக்குரிய சங்குகள் ஓவென்று
ஒலித்துக்கொண்டிருக்கும் நீல நிறம் பொருந்திய பெரிய சமுத்திரத்தில் அணைக் கட்டி
பகைவர்களுக்கு அஞ்சாத இராவணனது மணிமகுடந் தரித்துள்ள பல தலைகளும் அற்றுவிழ ஒரே ஒரு
கணையை ஏவிய ரகுவீரராகிய ஸ்ரீராமபிரானது மருமகராக எழுந்தருளி இருப்பவரே;
பாற்கடலில் தோன்றிய குளிர்ந்த பிறைச்
சந்திரனையும், பாம்பையும்
விசாலமானதும் அலைகளை உடையதுமாகிய கங்கா நதியையும், ஆத்தி மலரையும், வில்வத்தையும் தரித்துக் கொண்டுள்ள
சடாமகுடத்தையுடைய சிவபெருமானது பெருங்கணையால் (உலகம் உய்யும் பொருட்டு) அவதரித்த
முருகப் பெருமானே!
தினைப்பயிர் விளையும் செழுமையான
கானகத்தில் வசிக்கும் (நம்பி முதலிய) வேடுவர்கள் (புதிதாகத் தோன்றியதால்) “இது
ஏது” என்று திகைப்புற்று “ஐயோ! இதற்கு என் செய்வோம்” என்று கூறும்படி வேங்கை
மரமாகி நின்ற வல்லபமுடைய கந்தமூர்த்தியே!
வள்ளி நாயகியார் அன்புறும் கட்டழகில் சிறந்த
வேலாயுதப் பெருமானே!
மலர்களுள் சிறந்த தாமரை ஓடைகளிலும்
உப்பரிகைகளிலும் நல்ல நிறம் பொருந்திய சினைச்சங்குகள் பால்போன்ற வெண்ணிற முத்துக்களைக்
கொழிக்கும் கடற்கரையில் விளங்கும் திருச்செந்தூர் என்னுந் திருத்தலத்தில்
எழுந்தருளியுள்ள வீரரே!
தேவர்களுக்குள் பெருமையிற் சிறந்தவரே!
(மிகவும் மெல்லியதாகிய) அனிச்சமலரும், பஞ்சடிக்கும் வில்லாலடிக்க கடின
பொருள்களாகிய குற்றம் நீங்கிய மெல்லிய பஞ்சும், அன்புடையதான தடாகத்தை நீங்காத அழகிய
அன்னப் பறவையின் மெல்லிய இறகும்,
தமது
மென்மையிலும் மிருதுவாக இருப்பதால் கொண்டாடுகின்ற சிறிய பாதங்களையுடைய அழகிய
மானைப்போன்ற மகளிரது சூரியனைப் போல் பிரகாசிக்கின்ற சிறந்த மரகத மணிகளிழைத்த பசுமை
நிறம் பொருந்திய பொன்னாபரணங்களை யணிந்துள்ள இரவிக்கையோடு கூடிய தனபாரங்களின்மீது
முகத்தையும் (பார்வையையும்) ஆசைப் பெருக்கத்தால் அழுத்துகின்ற பாவியும், ஆன்மா ஈடேறுகின்ற நன்னெறியை ஆராய்ந்து
பார்க்காது தீய காரியங்களைப் புரியும் சண்டாளனும், வீண் காரியங்களைப் புரிவோனும், பெரிய செல்வம் உடைமையைக் கண்டு
அகங்கரிக்கும் நிர்மூடனும், மாமிசத்தை அன்பாக
உண்ணுகின்ற பாழனும், தேவரீரது ஒப்பற்ற
மொழியாகிய சடக்கர மந்திரத்தை அன்புடன் உச்சரிக்காமல் சாஸ்திர விரோதமான குதர்க்க
வார்த்தைகளைப் பேசுகின்ற மோக விகாரனும், தரும
நெறியில் நின்று ஒழுகாத மூதேவியுமாகிய அடியேனைத் தேவரீர் திருவருட்
பெருக்கமுடையவராதலால் வலிந்து அழைத்து தமது திருவடியிலணிந்துள்ள பாதுகைகளை என்
முடிமீது சூட்ட அடியேன் அந்த அனுக்கிகரத்தைப் பெறுவேனோ?
விரிவுரை
அனிச்சம் ---
அனிச்ச மலர் என்பது மிகவும் மென்மையுடைத்து:
அது மோந்தால் வாடும்:அத்துணை மெல்லியது. இம்மலரின் மென்மையைப் பற்றி தெய்வப்
புலவர்,
“மோப்பக் குழையு
மனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து”
என்றதனால் நன்கு புலனாகின்றது. இத்துணை
மெல்லிய அனிச்சப் பூவைக் காட்டிலும், மெல்லிய
பஞ்சு, அன்னப் பறவையின்
மெல்லிய இறகு இவைகளைக் காட்டிலும் மாதரடி மென்மையுடைத்து.
அனிச்சமு
மன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு
நெருஞ்சிப் பழம் --- திருக்குறள்.
ஆவி
ஈடேறிட நெறிபாரா ---
“ஆன்மா
ஈடேறும் நெறி எது?” என்று ஆராய்ந்து
பார்த்தல் அவசியம். அந்நெறி பக்தி நெறியே யாகும். அந்நெறியே சென்றால் பழவினைகள்
கெட்டு மலநீக்கமுற்று சிவமாந்தன்மையை எளிதில் பெறலாம்.
“பத்திநெறி அறிவித்து, பழவினைகள் பாறும்வண்ணம்
சித்தமலம் அறுவித்து, சிவம்ஆக்கி, எனை ஆண்ட
அத்தன்,எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே” ---
மணிவாசகனார்.
வினைச்
சண்டாளனை
---
சண்டாளர் என்பது ஒரு தனிப்பட்ட குலமன்று; பிறப்பினாலே சண்டாள குலம் என்பது இல்லை; சண்டாளத்துவம் எவரிடத்தில் இருக்கின்றதோ
அவரெல்லாம் சண்டாளரே. பிறப்பினாலேயே உயர்வு தாழ்வைக் குறித்துப் பேசுவதை அறிஞர்
வெறுக்கின்றனர்.
பிறப்பொக்கும்
எல்லா வுயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
செய்தொழில்
வேற்றுமை யால் --- திருக்குறள்.
தொழிலின் உயர்வு தாழ்வாலேயே குலமும்
உண்டாகிறது. பிராமண உடம்பு, க்ஷத்திரியர் உடம்பு
என்பது இல்லையாதலால் குலம் உடம்பைப் பற்றியதல்ல; பிராமண உயிர், க்ஷத்திரிய உயிர் என்பதும் இல்லையாதலால்
குலம் உயிரைப் பற்றியதுமல்ல; ஆதலால் தொழிலைப்
பற்றியே ஏற்படுகிறது. மேற்குலத்திற் பிறந்தான் ஒருவன் இழி தொழிலைப் புரிந்தால்
மேற்குலத்தான் என்று கூறலாமோ? சகல ஒழுக்கங்களும்
பொருந்தியுள்ளவனை இழிகுலத்தான் என்று கூறலாமோ?
பிரம ஞானம் அணர்ந்தவன் பிராமணன்; அழகிய தணிந்த சிந்தையுடையவன் அந்தணன்;
வேதமோதுபவன் வேதியன்;
இந்திரியங்களுடன் போராடி அவற்றை வென்று பொறி
புலன்களை அடக்கியாள்பவன் அரசன்;
புண்ணிய பாவங்களை நிறுத்து வாணிபஞ் செய்பவன்
வைசியன்;
புலன்களுக்கு அடிமைப்பட்டவன் சூத்திரன்;
பறை வாத்தியத்தை வாசிப்பவன் பறையன்;
புலால் உண்பவன் புலையன்;
சண்டாளத்துவம் உடையவன் சண்டாளன் எனப்
பிரித்து உணர்தல் வேண்டும்.
வீணனை ---
கிடைத்தற்கரிய வாழ்நாளை, அவமாயை கொண்டு விருதாவாகக் கழிப்பவர்
வீணர் எனப்படுவர். நம்முடைய வாழ்நாளில் ஒவ்வொரு கணமும் மிகவும் விலையுயர்ந்த
மாணிக்கத்திற்கு நிகரானது. அதனை வீண் களியாடல்களில் கழித்து விட்டால் யாக்கையும்
அழிகிறது. ஆதலால் நம்முடைய காலங்களைச் சிவநெறியில் கழிக்கவேண்டும்.
நாள்ஆய
போகாமே நஞ்சணியும் கண்டனுக்கே
ஆள்ஆய
அன்புசெய்வோம், மடநெஞ்சே! அரன்நாமம்
கேளாய், நம் கிளை கிளைக்கும், கேடுபடாத் திறம்அருளி
கோள்ஆய
நீக்கும், அவன் கோளிலிஎம்
பெருமானே. --- திருஞானசம்பந்தர்.
நிதிதனைக்
கண்டு ஆணவமான நிர்மூடனை ---
அழிகின்ற செல்வத்தைக் கண்டு அதன் நிலையாமையை
யுணராது, செருக்குற்று மூடனாக
இருத்தல்.
"சிறியரே
மதிக்குமிந்தச் செல்வம்வந்த துற்றஞான்று
வறியபுன்
செருக்குமுடி வாயுளோர் மூகராவர்
பறியணி
செவியுளாரும் பயிறரு செவிடராவர்
குறிபெறு
கண்ணுளாருங் குருடராய் முடிவரன்றே". --- குசலோபாக்கியானம்.
"செல்வம்
வந்துற்ற போது
தெய்வமும் சிறிது பேணார்
சொல்வதை
அறிந்து சொல்லார்
சுற்றமும் துணையும் பேணார்
வெல்வதே
கருமம் அல்லால்
வெம்பகை வலிதென்று எண்ணார்
வல்வினை
விளைவும் பாரார்
மண்ணின் மேல் வாழும் மாந்தர்". ---
விவேகசிந்தாமணி.
விடக்கு
அன்பாய் நுகர் பாழனை ---
விடக்கு --- மாமிசம்.
மோக்ஷ உலகத்திற்கு முதற்படி ஜீவகாருண்யமே.
சகல யாகங்களிலும் செய்யும் தானமும்,
சகல
தீர்த்தங்களிலுஞ் செய்யும் ஸ்னானமும், சகல
தானங்களின் புண்ணியமும் அஹிம்சா தருமத்திற்கு சமம் ஆகமாட்டாது. அஹிம்சா தருமத்தை
அனுசரித்து நடக்கிறவனுடைய தவம் குறைவற்றது. அஹிம்சா தருமத்தை அனுசரித்து
நடக்கிறவன் எப்பொழுதும் யக்ஞம் செய்பவனாக எண்ணப் படுகின்றான்.
ஓர்
மொழி
---
பிரணவ மந்திரம் என்றும் சடக்கர மந்திரம்
என்றும் பொருள் கொள்ளலாம்.
விளித்து
உன் பாதுகை நீ தர ---
பாவியும், சண்டாளனும், வீணனும், மூடனும், பாழனும், மோகனும், மூதேவியுமாகிய அடியேனை குற்றம் நோக்கிக்
கைவிடாமல் தேவரீரது திருவருட் பெருக்கால் வலிந்து அழைத்து பாதுகையைச் சென்னிமேல்
வைத்துத் திருவருள் புரியவேண்டும்.
தினைச்
செங்கானக வேடுவர்..........கணியாகிய ---
மூவர் தேவாதிகள் தம்பிரானாகிய முருகப்
பெருமான், மாமுனிவன் புணர் மான்
உதவுந் தனிமானாகிய வள்ளிப் பிராட்டியாரைத் திருமணஞ் செய்துகொள்ள வேட வடிவங்கொண்டு, அப்பிராட்டியார் காக்குந் தினைவனம்
போந்து, வேடர்குலக் கொடியுடன்
உரை நிகழ்த்திக் கொண்டிருக்குங் காலை, வேடர்கள்
சூழ நம்பிராஜன் அங்கு வந்தான். அது கண்ட ஆறுமுகப்பெருமான் பயந்தவரைப் போல இளவேங்கை
மரமாக நின்றார். வேதங்கள் வேர்களும் அடியுமாக, சிவாகமங்கள் நடுப்பாகமும், பலவித கலைகள் கவடுகளுமாக மந்திர வடிவான
மரமாயினார்.
ஆங்கது
காலை தன்னில் அடிமுதன் மறைகளாக
வோங்கிய
நடுவண் எல்லாம் உயர்சிவ நூலதாகப்
பாங்கமர்
கவடுமுற்றும் பல்கலை யாகத் தானோர்
வேங்கையின்
உருவமாகிய வேற்படை வீரன்நின்றான். --- கந்தபுராணம்.
பெண்களை நேசிப்பவன் எத்துணை
வலியுடையயோனாயினும் மரம்போல் அசைவற்றுச் செயலற்று நிற்பான் என்பது அதனுடைய
தத்துவம்.
"குறமறவர்
தொடி அடிகள் கூசாது போய்வருட
கரடிபுலி
திரிகடிய வாரான கானில்மிகு
குளிர்கணியின் இளமரம் அதே ஆகி நீடி உயர் குன்றுலாவி...
--- (உறவின்முறை) திருப்புகழ்.
கருத்துரை
சேது பந்தனம் புரிந்து, இராவண வதஞ்செய்த இரகுவீரரது மருகரே! மதி, நதி,பாம்பு, ஆத்தி, வில்வம் இவைகளை முடிக்குஞ்
சிவமூர்த்தியின் புதல்வரே! வேடுவரஞ்ச வேங்கை மரமாகிய கந்தப் பெருமானே! வள்ளி நாயகி
அன்பு கொள்ளும் வேலாயுதரே! செந்திலம்பதியில் வாழும் பெருமாளே! மாதராசையால்
மயங்கும் பாவியும், வினைச் சண்டாளனும், செல்வச் செருக்கு மூடிய மூடனும், புலாலுண்ணும் பாழனும், மோகவிகாரனும், அறநெறியில் ஒழுகாத மூதேவி யுமாகிய
அடியேனை அழைத்து உமது பாதுகையைத் தர அடியேன் அருள் பெறுவேனோ?
No comments:
Post a Comment