அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அறிவழிய
மயல்பெருக (திருச்செந்தூர்)
திருவடி சேருமாறு அருள
வேண்டல்
தனதனன
தனதனன தனதனன தனதனன
தனதனன தனதனன ...... தனதானா
அறிவழிய
மயல்பெருக வுரையுமற விழிசுழல
அனலவிய மலமொழுக ...... அகலாதே
அனையுமனை
யருகிலுற வெருவியழ வுறவுமழ
அழலினிகர் மறலியெனை ...... யழையாதே
செறியுமிரு
வினைகரண மருவுபுல னொழியவுயர்
திருவடியி லணுகவர ...... மருள்வாயே
சிவனைநிகர் பொதியவரை முநிவனக மகிழஇரு
செவிகுளிர இனியதமிழ் ...... பகர்வோனே
நெறிதவறி
யலரிமதி நடுவன்மக பதிமுளரி
நிருதிநிதி பதிகரிய ...... வனமாலி
நிலவுமறை
யவனிவர்க ளலையஅர சுரிமைபுரி
நிருதனுர மறஅயிலை ...... விடுவோனே
மறிபரசு
கரமிலகு பரமனுமை யிருவிழியு
மகிழமடி மிசைவளரு ...... மிளையோனே
மதலைதவ
ழுததியிடை வருதரள மணிபுளின
மறையவுயர் கரையிலுறை ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
அறிவு
அழிய, மயல்பெருக, உரையும்அற, விழிசுழல,
அனல்அவிய, மலம் ஒழுக, ...... அகலாதே
அனையும்
மனை அருகில்உற, வெருவி அழ, உறவும்அழ,
அழலின் நிகர் மறலி எனை ...... அழையாதே,
செறியும்
இருவினை, கரணம், மருவு புலன் ஒழிய, உயர்
திருவடியில் அணுக வரம் ...... அருள்வாயே.
சிவனை
நிகர் பொதியவரை முநிவன் அக மகிழ,இரு
செவிகுளிர, இனியதமிழ் ...... பகர்வோனே!
நெறி
தவறி அலரி மதி நடுவன் மகபதி முளரி
நிருதி நிதிபதி கரிய ...... வனமாலி
நிலவு
மறையவன் இவர்கள் அலைய, அரசு உரிமைபுரி
நிருதன் உரம் அற, அயிலை ...... விடுவோனே!
மறிபரசு
கரம் இலகு பரமன் உமை இருவிழியும்
மகிழ மடி மிசை வளரும் ...... இளையோனே!
மதலை
தவழ் உததி இடை வரு தரள மணி புளினம்
மறைய உயர் கரையில் உறை ...... பெருமாளே.
பதவுரை
சிவனை நிகர் --- சிவமூர்த்திக்குச் சமமானவரும்,
பொதிய வரை --- பொதிய மலையில் வசிப்பவருமாகிய,
முனிவன் --- அகத்திய முனிவர்,
அக மகிழ --- உள்ளம் மகிழ்ச்சியடையவும்,
இரு செவி குளிர --- அவருடைய இரண்டு செவிகளும்
குளிர்ச்சியடையவும்,
இனிய தமிழ் --- இனிமையான தமிழ் மொழியை அம் முனி
புங்கவருக்கு,
பகர்வோனே --- உபதேசித்தருளியவரே,
நெறி தவறி --- அற நெறியினின்றும் வழுவி,
அலரி --- சூரியன்,
மதி --- சந்திரன்,
நடுவன் --- இயமன்,
மகபதி --- நூறு அசுவமேதங்களுக்குத் தலைவனாகிய
தேவேந்திரன்,
முளரி --- அக்கினி,
நிருதி --- தென்மேற்றிசைக்கு அதிபனாகிய நிருதிதேவன்,
நிதிபதி --- நிதிகளுக்கு அதிபதியாகிய குபேரன்,
கரிய வனமாலி --- கருமை நிறம் பொருந்திய திருமேனியை
யுடையவரும் துளபமாலையை அணிந்துள்ளவருமான நாராயணர்,
நிலவு மறையவன் --- நிலைபெற்றவராகிய பிரமதேவர்,
இவர்கள் அலைய --- இத்தேவர்கள் அனைவரும் வருந்தி
ஏவல் புரிந்து திரியுமாறு,
அரசு உரிமை புரி --- அரசாட்சி செய்துகொண்டிருந்த,
நிருதன் உரம் அற --- அசுரனாகிய சூரபன்மனது
மார்பு பிளக்குமாறு,
அயிலை விடுவோனே --- வேலாயுதத்தை விடுத்தவரே!
மறி பரசு கரம் இலகு --- மான்குட்டியையும் மழுவையும்
கரத்தில் தாங்கிக் கொண்டருள்புரியும்,
பரமன் --- பரமபதியாகிய சிவபெருமான்,
உமை --- உமாதேவியார்,
இரு விழியும் --- இரண்டு கண்மலர்களும்,
மகிழ --- மகிழ்ச்சியடைய,
மடிமிசை வளரும் --- உமையம்மையாரது திருமடியின்
மீது வளர்கின்ற,
இளையோனே --- என்றும் அகலாத இளங்குமாரரே!
மதலை தவழ் - மரக்கலன்கள் தவழுகின்ற,
உததியிடை வரும் --- சமுத்திரத்தில் தோன்றும்,
தரள மணி --- முத்துமணிகள்,
புளினம் மறைய உயர் --- மணற்குன்றுக்கள் மறையுமாறு
அதனினும் உயர்ந்துள்ள,
கரையில் உறை --- சமுத்திரக் கரையாகிய திருச்சீரலைவாயில்
எழுந்தருளியுள்ள,
பெருமாளே --- பெருமையின் மிக்கவரே!
அறிவு அழிய --- (அடியேனுக்கு மரணாவத்தை யுண்டாகிற
காலத்தில்) அறிவு நிலைக் கலங்கி அழியவும்,
மயல் பெருக --- மயக்கம் பெருகவும்,
உரையும் அற --- (கைகால்களின் அசைவு நீங்குவதோடு)
பேசுவதும் நீங்கவும்,
விழி சுழல --- கண்கள் சுழலவும்,
அனல் அவிய --- உடம்பிலுள்ள அக்கினித் தணியவும்,
மலம் ஒழுக --- மலம் தானாக நீர்போல் ஒழுகவும்,
அகலாதே --- அடியேனை விட்டு நீங்காமல்,
அனையும் --- தாயாரும்,
மனை --- மனைவியும்,
அருகில் உற --- சமீபத்தில் அமர்ந்து,
வெருவி அழ --- பயந்து ஓவென்று கதறியழவும்,
உறவும் அழ --- சுற்றத்தார்களும் அழவும்,
அழலின் நிகர் மறலி --- அக்கினி போற் கொளுத்துகின்ற
கூற்றுவன்,
எனை அழையாதே --- அடியேனைத் தனது நரகலோகத்திற்கு
வாவென்று அழையாவண்ணம்,
செறியும் இருவினை --- அடியேனை நெருங்கியுள்ள நல்வினைத்
தீவினைகளாகிய இருவினைகளும்,
கரணம் --- அந்தக் கரணங்களும்,
மருவு புலன் ஒழிய --- பொருந்தியுள்ள ஐம்புலன்களும்
செயலற்று நீங்க,
உயர் திருவடியில் அணுக --- தேவரீரது சிறந்த திருவடித்
தாமரைகளில் அடியேன் சேருமாறு,
வரம் அருள்வாயே --- அடியேனுக்கு வரத்தை வழங்கியருள்வீர்.
பொழிப்புரை
சிவபெருமானுக்கு நிகர் என்று
எல்லோராலும் கருதப்படுகின்றவரும்,
பொதியாசலத்தில்
தவம் புரிந்துகொண்டு வீற்றிருப்பவருமாகிய அகத்திய முனிவருக்கு, அவருடைய உள்ளம் மகிழவும், இருசெவிகளும் குளிரவும், இனிமையான தமிழ் மொழியை
உபதேசித்தருளியவரே!
அறநெறி தவறி சூரியன், சந்திரன், இயமன், இந்திரன், அக்கினி, நிருதி, குபேரன், துளபமாலையைத் தரித்துக்கொண்டுள்ள கரிய
திருமேனியை யுடைய திருமால், நிலைபெற்றுள்ள
பிரமதேவர், இவர் (சிறைப்பட்டு)
நெடுநாளாக ஏவல் புரிந்து கொண்டு ஏங்கியலையுமாறு அரசாட்சி செய்து சூரபன்மனது மார்பு
பிளந்தழியுமாறு வேலாயுதத்தை விடுத்தருளியவரே!
மான் மழுவைக் கரத்தில் தாங்கிக்
கொண்டுள்ள சிவபெருமானும் உமையம்மையாரும் கண்களிக்க உமாதேவியார் திருமடித்தலத்தின்
கண் வளருகின்ற இளையப் பிள்ளையாரே!
மரக் கலங்கள் தவழுகின்ற சமுத்திரத்தில்
தோன்றுகின்ற முத்துமணிகள் மணற்குன்றுகள் மறையுமாறு உயர்ந்துள்ள கடற்கரையாகிய
திருச்சீரலைவாயில் எழுந்தருளியுள்ள பெருமையின் மிக்கவரே!
(மரணகாலத்தில் அடியேனுடைய) அறிவு
அழியவும், மயக்கம் உண்டாகவும், (கை கால்கள் அசைவற்றதோடு) பேசுவதும் ஒழியவும், கண்கள் சுழலவும், உடம்பிலுள்ள உதராக்கினித் தணியவும், தன்னாலே மலம் நீராகி ஒழுகவும், இந்நிலையிலும் என்னைவிட்டு
நீங்காமற்படிக்குத் தாயாரும் மனைவியும் அருகிலிருந்து பயந்து ஓவென்று கதறியழவும், சுற்றத்தார்களும் அழவும், நெருப்பைப்போல் கொதித்துக்கொண்டு வரும்படியான
கூற்றுவன் என்னைத் தனது நரகலோகத்திற்கு அழைக்கா வண்ணம், அடியேனை நெருங்கியுள்ள நல்வினைத்
தீவினைகளாகிய இருவினைகளும், அந்தக்கரணங்களும், பொருந்தியுள்ள ஐம்புலன்களும் செயலற்று
நீங்க, தேவரீரது திருவடி
மலர்களில் அடியேன் சேருமாறு வரம் அருள்புரிவீர்.
விரிவுரை
அறிவழிய........மலமொழுக ---
ஆன்மா
பிரியுங்காலத்தில் அறிவுகெட்டு மயக்கமுற்று நா குழறி அவயவங்கள் அசைவற்று புலன்கள்
கலங்கித் துன்புறுவார்கள்.
புலன்ஐந்தும்
பொறிகலங்கி, நெறிமயங்கி,
அறிவு அழிந்திட்டு, ஐம் மேல் உந்தி
அலமந்த
போதாக, அஞ்சேல் என்று
அருள்செய்வான் அமரும் கோயில்,
வலம்வந்த
மடாவார்கள் நடமாட
முழவு அதிர மழை என்று அஞ்சிச்
சிலமந்தி
அலமந்து மரம் ஏறி
முகில்பார்க்கும் திருவையாறே. --- திருஞானசம்பந்தர்
அனையும், மனை........உறவுமழ ---
தாய்
மனைவி மக்கள் முதலியோர் உயிர் பிரியும்போது கதறி அழுவார்களேயன்றி, உயிர்க்கு உறுதி பயக்குந் தன்மையைத்
தேடமாட்டார்கள். இயமனுடைய பாசக்கயிற்றினின்று விடுவிக்கவும் ஆற்றலற்று வாளா
வருந்துவார்கள். அம் மரணகாலத்தில் காப்பாற்ற வல்லவர் முருகவேள் ஒருவரே யாவர்.
“முதலவினை முடிவில்இரு
பிறைஎயிறு கயிறுகொடு
முதுவடவை விழிசுழல வருகால தூதர்கெட
முடுகுவதும் அருள்நெறியில் உதவுவதும்” --- சீர்பாதவகுப்பு
தெய்வத்
திருமலைச் செங்கோட்டில் வாழும் செழும் சுடரே
வைவைத்த
வேற்படை வானவனே மறவேன் உனை நான்
ஐவர்க்கு
இடம்பெற கால் இரண்டு ஓட்டி அதில் இரண்டு
கைவைத்த
வீடு குலையும் முன்னே வந்து காத்தருளே.
மைவரும்
கண்டத்தர் மைந்த 'கந்தா' என்று வாழ்த்தும் இந்தக்
கைவரும்
தொண்டுஅன்றி, மற்றுஅறியேன், கற்ற கல்வியும் போய்ப்
பை
வரும் கேளும் பதியும் கதறப் பழகி நிற்கும்
ஐவரும்
கைவிட்டு மெய்விடும்போது உன் அடைக்கலமே. --- கந்தர்அலங்காரம்.
அழலின்
நிகர் மறலி எனை அழையாதே ---
இயமலோகம்
செல்லும் வழி
தீவினையைச்
செய்த பாவிகளை இயமதூதர்கள் வடவா முகாக்கினிபோல் கொதித்துப் பாசக்கயிற்றால்
இறுக்கிக் கட்டிக் கொண்டு, தமது இயமபுரம்
கொண்டுபோய்த் துன்புறுத்துவார்கள். புண்ணியஞ் செய்தவர்களை இயம தூதுவர்கள் உபசரித்து, சுகமான வழியில் கொண்டு போவார்கள்.
யமலோகத்திற்கும் மனிதலோகத்திற்கும்
இடையிலுள்ள வழி, எண்பத்தாறாயிரம்
யோசனைத் தூரமாகும். அவ்வழியானது காடாகவும், கோரமாகவும், நாற்புறங்களிலும் தண்ணீரில்லாத
வெளியாகவும் இருக்கிறது. அந்த வழியில் மரங்களின் நிழல் கிடையாது; தண்ணீருமில்லை; களைப்படைந்தவனும் இளைத்தவனுமான மனிதன்
இளைப்பாறத்தக்க வீடுகளுமில்லை. யமனுடைய கட்டளையைச் செய்கின்ற யமதூதர்களால் ஆடவரும், மகளிரும் அப்படியே பூமியிலுள்ள
மற்றவைகளும் அந்தவழியில் பலாத்காரமாகக் கொண்டுபோகப் படுகிறார்கள்.
எந்த
மனிதர்கள் ஏழைகளுக்கு வண்டி, குதிரை முதலிய
வாகனங்களைக் கொடுத்து உதவிசெய்கின்றார்களோ அவர்கள் அந்த வாகனங்களின்மேல் அந்த
வழியில் துன்பமில்லாமற் செல்லுகிறார்கள்.
குடையைத்
தானம் செய்தவர்கள் குடையினாலே வெய்யிலைத் தடுத்துக் கொண்டு செல்லுகிறார்கள்.
அன்னதானம்
செய்தவர்கள் அந்த வழியில் அன்னத்தைப் புசித்துக் கொண்டு பசியின்றிச்
செல்லுகிறார்கள்.
வஸ்திரங்களைக்
கொடுத்தவர்கள் வஸ்திரமுள்ளவர்களாகவும், வஸ்திரம்
கொடாதவர்கள் நிர்வாணராகவும் செல்லுகிறார்கள்.
பொன்னைக்
கொடுத்தவர்கள் அலங்கரிக்கப் பட்டவர்களாக சுகமாகச் செல்லுகிறார்கள்.
பூதானம்
செய்தவர்கள் விரும்பிய எல்லாவற்றையும் அடைந்து இன்புற்று இனிது செல்லுகிறார்கள்.
தானியங்களைக்
கொடுக்கிற மனிதர்கள் துன்பமின்றிச் செல்லுகிறார்கள்.
வீட்டைத்
தானம் செய்கிற மனிதர்கள் விமானங்களில் மிக்க சுகமாகச் செல்லுகிறார்கள்;
தண்ணீரைத்
தானம் செய்தவர்கள் தாகமில்லாதவர்களாயும் மிக மகிழ்ந்த மனமுள்ளவர்களாகவும்
செல்லுகிறார்கள்;
விளக்கு
தானம் செய்தவர்கள் பிரகாசமுள்ள வழியில் பிரகாசமுள்ள உருவத்துடன் செல்லுகிறார்கள்.
கோதானம்
செய்தவர்கள் எல்லா பாவங்களாலும் விடுபட்டுச் சுகமாகச் செல்லுகிறார்கள்.
ஒரு
மாதம் உபவாசம் இருப்பவர்கள் அன்னங் கட்டிய விமானத்தின் மீது செல்லுகிறார்கள்.
ஆறு
நாளுக்கு ஒருதரம் உபவாசமிருப்பவர்கள் மயில்கள் பூட்டின விமானங்களின் மேல்
செல்லுவார்கள்.
எந்த
மனிதன் ஒரு வேளை சாப்பிட்டுக் கொண்டு மூன்று இரவுகளைக் கழிக்கிறானோ? இடைவேளைகளில் சாப்பிடுகிறதில்லையோ அவனுக்கு
அழிவற்ற லோகங்கள் கிடைக்கின்றன.
தண்ணீர்ப்
பந்தல் வைத்து கோடைக் காலத்தில் தாகத்தால் வாடும் மக்களுக்குத் தண்ணீரும் மோரும்
கொடுத்து உதவிய உத்தமர்களுக்கு, அந்த யமலோகத்தில் புஷ்போதகை என்ற நதியை உண்டாக்கிக்
கொடுப்பார்கள். அந்த நதியில் அவர்கள் அமிருதம் போன்ற குளிர்ந்த தண்ணீரைக்
குடித்துக் கொண்டு சுகமாய் இருப்பார்கள்.
எவர்கள்
தீவினைகளைச் செய்தவர்களோ அவர்களுக்கு அந்த நதியில் சீயானது குடிப்பதற்கு
ஏற்படுத்தப் படுகிறது.
மாமிசங்களைத்
தின்றவர்கள் யமலோகத்தில் தமது மாமிசத்தைத் தானே யுண்டு தங்களுடம்பில் வடியும் உதிரத்தைக்
குடித்துக்கொண்டுத் தீவாய் நகரத்தில் மல்லாக்கப் படுத்த வண்ணமாக பெருந்துன்பத்தை
யனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.
இவற்றை
யெல்லாம் உணர்ந்து நாம் நல்வழிப்படுமாறு நமது பரம குருமூர்த்தியாகிய அருணகிரிநாத
சுவாமிகள் நம் மீதுள்ள பெருங் கருணையால் உபதேசிக்குமாறு காண்க.
கிழியும்
படிஅடற் குன்றுஎறிந் தோன்கவி கேட்டு,உருகி
இழியும்
கவி கற்றிடாது இருப்பீர், எரி வாய் நரகக்
குழியும்
துயரும் விடாய்படக் கூற்றுவன் ஊர்க்குச் செல்லும்
வழியும்
துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே. ---
கந்தர்அலங்காரம்.
செறியும்
இருவினை.......அணுகவரம் ---
இருவினையொப்பு, மலப்பரிபாக முற்று சத்திநிபாத மடைந்த
பக்குவ ஆன்மாக்களே இறைவன் திருவடியில் இரண்டறக் கலந்து அத்துவித முத்தி யின்பத்தை
நுகர்ந்து பிறவாநிலையைப் பெறுவார்கள். அவ்வரத்தை ஆண்டவன்பால் வேண்டுகின்றனர்.
சிவனை
நிகர் பொதியவரை முனிவன் ---
பருவத
வேந்தனுக்கு அவன் செய்த தவங்காரணமாகத் திருமகளாகத் தோன்றி வளர்ந்த உமாதேவியாரைச்
சிவபெருமான் திருமணஞ் செய்து கொள்ளும்
பொருட்டு, இமயமலையில்
எழுந்தருளிய போது திருக்கல்யாணத்தைச் சேவிக்கும் பொருட்டு, எப்புவனத்திலுமுள்ள யாவரும் வந்து
கூடினமையால் இமயமலை நடுங்கியது. அதனால் பூமியின் வடபால் தாழ, தென்பால் மிக உயர்ந்தது. உடனே தேவர்கள்
முதல் அனைவரும் ஏங்கி, `என் செய்வது’ என்று
துன்புற்று “சிவா சிவா” என்று ஓலமிட்டார்கள். சிவபெருமான் அது கண்டு திருமுறுவல்
செய்து, அவர்களது குறையை
நீக்கத் திருவுளங்கொண்டு, அகத்திய முனிவரை
நோக்கி “முனிவனே! இங்கே யாவரும் வந்து கூடினமையால், வடபால் தாழத் தென்பால் உயர்ந்துவிட்டது.
இதனால், உயிர்கள் மிகவும்
வருந்துகின்றன. ஆதலால் நீ இம்மலையினின்று நீங்கித் தென்னாட்டிற் சென்று பொதியை
மலையின்மேல் இருக்கக் கடவாய்; நின்னைத் தவிர இதனைச்
செய்ய வல்லவர் வேறு யாருளர்! நீ ஒருவன் பொதியாசலஞ் சேர்ந்தால் பூமி சமனாகும்!”
என்று பணித்தருளினார். அது கேட்ட அகத்திய முனிவர் அச்சமுற்று, “பரம கருணாநிதியாகிய பரமபதியே! அடியேன்
யாது குற்றஞ் செய்தேன்? தேவரீரது திருமணக்
கோலத்தைக் காணவொட்டாமல் கொடியேனை விலக்குகின்றீர்; எந்தையே! திருமாலிருக்க, திசை முகன் முதலிய தேவர்களிருக்க, எளியோனை விலக்குவது யாது காரணம்? என்று பணிந்து உரைத்தார். சிவபெருமான், “மாதவ! உனக்கு ஒப்பான முனிவர்கள்
உலகத்தில் உண்டோ? இல்லை; பிரமனும் மாலனும் நினக்கு நிகராகார்; ஆதலால் நினைந்தவை யாவையும், நீ தவறின்றி முடிக்கவல்லை; இவ்வரிய செய்கை மற்றைத் தேவர்களாலேனும்
முனிவர்களாலேனும் முடியுமா? யாவரினும் மேலாகிய
உன்னாலே மாத்திரம் முடியும்; செல்லக் கடவாய்”
என்று திருவாய் மலர்ந்தருளினார். அகத்திய முனிவர், “எமது பரம பிதாவே! தங்களுடைய திருமணக்
கோலத்தை வணங்காது பிரிவாற்றாமையால் என் மனம் மிகக் கவல்கின்றது” என்ன, கயிலாயபதி, “குறுமுனிவ! நீ கவலாது பொதியமலை செல்லுதி; நாம் அங்கு வந்து நமது கல்யாணக்
கோலத்தைக் காட்டுவோம்; நீ மகிழ்ந்து
தரிசிக்கக் கடவை; நீ நம்மைத்
தியானித்துக் கொண்டு அங்கு சில நாள் தங்கியிருந்து, பின்பு முன்போல் நமது பக்கத்தில்
வருவாயாக” என்று அருளிச்செய்தார்.
அகத்திய
முனிவர் அதற்கியைந்து, அரனாரை வணங்கி
விடைபெற்று, பெருமூச்செறிந்து
அரிதில் நீங்கி, தென்திசையை
நோக்கிச்சென்று பொதிய மலையை யடைந்து, சிவமூர்த்தியைத்
தியானித்துக்கொண்டு அப்பொதிய மலையில் எழுந்தருளியிருந்தார். பூமியும் சமமாயிற்று.
ஆன்மாக்கள் துன்பம் நீங்கி இன்பமுற்றன. என்னே! அம் முனிவரின் பெருமை? மாலயனாதி வானவராலும் முனிவர்களாலும்
செய்தற்கரிய அரிய செயலைச் செய்ததனால் இங்கே நம் அருணகிரியார் “சிவனை நிகர்
பொதியவரை முனிவன்” என்று ஓதியருளினார். வடபாகத்தில் கைலாயமலையில் சிவபெருமான்
எழுந்தருளி யிருப்பதுபோல் தென்பாகத்தில் அகத்திய முனிவர்
எழுந்தருளியிருப்பதால்
“பொதியவரை முனிவன்” என்ற குறிப்பும் உணர்தற்கு இடமாய் அமைத்துள்ளனர்.
இனிய
தமிழ் பகர்வோனே ---
அகத்தியருக்கு
முருகப்பெருமான் இனிய தமிழ் மொழியையும், அதன்
இலக்கணத்தையும் உபதேசித்தருளினார். இதனால் தமிழ்மொழி ஏனைய மொழிகளினும் உயர்ந்த
மொழியென்பதும், அதன் ஆசிரியர்
முருகப்பெருமானே என்பதும், அதனை உலகிற்கு
உபகரித்த சந்தனாசாரியார் அகத்தியர் என்பதும் நன்கு புலனாகின்றன.
நெறி
தவறி.......அயிலை விடுவோனே ---
சூரபன்மன்
சிவமூர்த்தியிடம் மாளா வரம்பெற்று,
உளந்தருக்கி
இந்திரன் முதலிய இமையவர்கள் மீன்பிடிக்கவும், வருணன் தண்ணீர்த் தெளிக்கவும், பிரமன் நாள்கோள் முதலியவற்றைச்
சொல்லவும், திருமால் கேட்ட
வரங்களை நல்கவும், வாயு வீதிகளைக்
கூட்டவும், சூரியன் தன் மண்டலத்திற்
செல்லாது வீரமா மகேந்திரபுரியில் தேரைவிட்டிறங்கி குளிர்ந்த கிரணங்களை
வீசிக்கொண்டு நடந்து செல்லவும்,
சந்திரன்
எந்த நாளிலும் பூரணகலைகளுடன் பிரகாசித்துக் கொண்டிருக்கவும், எமன் எந்த உயிரையும் பற்றாமலிருக்கவும், அக்கினித் தன்னாலே எரியவும், பிறதேவர்கள் தத்தமக்குரிய வேலைளைச்
செய்யவும் ஆக்ஞாபித்து, அவர்கள் பலநாளாய்
அலைந்து திரியுமாறு கொடுமை செய்ததால், குமாரக்கடவுள்
தேவர்கள் துன்பத்தை நீக்குமாறு திருவுளங்கொண்டு, சூராதியவுணரை யழித்து ஆட்கொண்டார்.
கருத்துரை
அகத்திய முனிவருக்கு இனிய தமிழை
உபதேசித்தவரே! நெறி தவறிய சூராதி அவுணரை அழித்தவரே! உமாதேவியாரது திருக்குமாரரே!
திருச்செந்திலதிப! மரண காலத்தில் பொறிபுலன்கள் கலங்கி அடியேன் செயலற்றுக்
கிடக்குங் காலத்தில், என் மனைவி மக்கள்
கதறியழ, இயமன் என்னை அழைக்கா
வண்ணம் தேவரீரது திருவடியிற் சேர்த்தருள்வீர்
No comments:
Post a Comment