திருச்செந்தூர் - 0027. அளகபாரம் அலைந்து





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

அளக பாரமலைந்து (திருச்செந்தூர்)

திருவடிகளைத் தந்து அருள வேண்டல்.

தனன தானன தந்தன தந்தன
     தனன தானன தந்தன தந்தன
          தனன தானன தந்தன தந்தன ...... தனதான


அளக பாரம லைந்துகு லைந்திட
     வதனம் வேர்வுது லங்கிந லங்கிட
          அவச மோகம்வி ளைந்துத ளைந்திட ...... அணைமீதே

அருண வாய்நகை சிந்திய சம்ப்ரம
     அடர்ந காநுதி பங்கவி தஞ்செய்து
          அதர பானம ருந்திம ருங்கிற   ...... முலைமேல்வீழ்ந்

துளமும் வேறுப டும்படி ஒன்றிடு
     மகளிர் தோதக இன்பின்மு யங்குதல்
          ஒழியு மாறுதெ ளிந்துளம் அன்பொடு ...... சிவயோகத்

துருகு ஞானப ரம்பர தந்திர
     அறிவி னோர்கரு தங்கொள்சி லம்பணி
          உபய சீதள பங்கய மென்கழல் ...... தருவாயே

இளகி டாவளர் சந்தன குங்கும
     களப பூரண கொங்கைந லம்புனை
          இரதி வேள்பணி தந்தையும் அந்தண ....மறையோனும்

இனது றாதெதிர் இந்திரன் அண்டரும்
     ஹரஹ ராசிவ சங்கர சங்கர
          எனமி காவரு நஞ்சினை யுண்டவர் ...... அருள்பாலா

வளர்நி சாசரர் தங்கள்சி ரம்பொடி
     படவி ரோதமி டுங்குல சம்ப்ரமன்
          மகர வாரிக டைந்தநெ டும்புயல்    ...... மருகோனே

வளரும் வாழையு மஞ்சளும் இஞ்சியும்
     இடைவி டாதுநெ ருங்கிய மங்கல
          மகிமை மாநகர் செந்திலில் வந்துறை ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


அளக பாரம் அலைந்து குலைந்திட,
     வதனம் வேர்வு துலங்கி நலங்கிட,
          அவச மோகம் விளைந்து தளைந்திட, ...... அணைமீதே

அருண வாய் நகை சிந்திய சம்ப்ரம,
     அடர் நகா நுதி பங்க விதம் செய்து,
          அதர பானம் அருந்தி, மருங்குஇற, ...... முலைமேல் வீழ்ந்து,

உளமும் வேறு படும்படி ஒன்றிடு,
     மகளிர் தோதக இன்பின் முயங்குதல்
          ஒழியுமாறு, தெளிந்து, உளம் அன்பொடு ......சிவயோகத்து

உருகு ஞான பரம்பர, தந்திர
     அறிவினோர் கருது அம்கொள் சிலம்புஅணி
          உபய சீதள பங்கய மென்கழல் ...... தருவாயே.

இளகிடா வளர் சந்தன குங்கும
     களப பூரண கொங்கை நலம்புனை
          இரதிவேள் பணி தந்தையும், அந்தண....மறையோனும்,

இனிது உறாது எதிர் இந்திரன், அண்டரும்,
     "ஹரஹரா சிவ சங்கர சங்கர"
          என, மிகா வரு நஞ்சினை உண்டவர் ...... அருள்பாலா!

வளர் நிசாசரர் தங்கள் சிரம் பொடி
     பட, விரோதம் இடும் குல சம்ப்ரமன்,
          மகர வாரி கடைந்த நெடும்புயல்    ...... மருகோனே!

வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும்
     இடை விடாது நெருங்கிய மங்கல
          மகிமை மாநகர் செந்திலில் வந்துஉறை......பெருமாளே.


பதவுரை

         இளகிடா வளர் சந்தன --- தளர்ச்சியின்றி வளர்கின்ற சந்தன மரத்தின் கட்டையைத் தேய்த்து அதனால் வந்த குழம்பும்,

     குங்கும களப பூரண --- குங்குமப் பூவின் கலவையும் நிறைந்த,

     கொங்கை நலம் புனை --- தனபாரங்களினால் நலம் பெற்ற,

     இரதி வேள் பணி தந்தையும் ---  இரதிதேவியின் கணவனாகிய மன்மதன் தொழுகின்ற பிதாவாகிய திருமாலும்,

     அந்தண மறையோனும் --- தணிந்த சிந்தையுடைய பிரமதேவனும்,

     இனிது உறாது எதிர் இந்திரன் ---  இனிமை அடையாது வருந்தி எதிர்வந்த இந்திரனும்,

     அண்டரும் --- தேவரும்,

     ஹரஹரா சிவ சங்கர சங்கர என --- ஹர ஹரா சிவ சங்கரா சங்கரா என்று துதிசெய்ய,

     மிகா வரு நஞ்சினை உண்டவர் அருள்பாலா --- மிகுதியாக வந்த ஆலகால விடத்தை உண்ட சிவபெருமான் அருளிய புதல்வரே!

     வளர் நிசாசரர் தங்கள் சிரம் பொடிபட --- ஆற்றலினால் வளர்ந்த அசுரர்களுடைய தலைகள் துகளாகும்படி,

     விரோதம் இடும் குல சம்ப்ரமன் --- பகை கொண்டவரும் மேன்மையுடையவரும் பெருஞ் சிறப்புடையவரும்,

     மகர வாரி கடைந்த --- மகர மீன்கள் வாழுகின்ற கடலைக் கடைந்தவரும்,

     நெடும் புயல் மருகோனே --- நீண்ட நீலமேகம் போன்றவருமாகிய நாராயண மூர்த்தியின் திருமருகரே!

வளரும் வாழையும் --- வளர்கின்ற வாழையும்

மஞ்சளும் --- மஞ்சள் செடியும்

இஞ்சியும் --- இஞ்சியும்,

இடைவிடாது நெருங்கிய --- எப்போதும் அடர்ந்து திகழ்கின்ற,

மங்கல --- மங்கல மிக்க,

மகிமை மாநகர் --- மகிமை நிறைந்த சிறந்த திருநகரமாகிய,

செந்திலில் வந்து உறை பெருமாளே --- திருச்செந்தூரில் எழுந்தருளி இருக்கின்ற பெருமையின் மிக்கவரே!

         அளகபாரம் அலைந்து குலைந்திட --- பெருத்த கூந்தல் இப்படியும் அப்படியுமாக அலைந்து அதன் கட்டு குலைவு பெறவும்,

     வதனம் வேர்வு துலங்கி நலங்கிட --- முகத்தில் வேர்வை தோன்றி மாசு பெறவும்,

     அவச மோகம் விளைந்து தளைந்திட --- மதிமயங்குமாறு மோகம் பிறந்து கட்டுப்படுத்தவும்,

     அணை மீதே --- பஞ்சணை மீதில்,

     அருண வாய் நகை சிந்திய --- சிவந்த வாயினின்றும் புன்னகைத் தோன்றி அதில் வெளிப்பட்ட

     சம்ப்ரம அடர் நக நுதி பங்கவிதஞ் செய்து --- களிப்புடன் கூடி, நெருக்கமாக நக நுனியால் குறியுண்டாகுமாறு செய்து,

     அதர பானம் அருந்தி --- இதழமுதை உண்டு,

     மருங்கு இற முலைமேல் வீழ்ந்து --- இடை அற்றுப் போகுமாறு தனங்களின் மீது வீழ்ந்து,

     உளமும் வேறுபடும்படி ஒன்றிடு --- உள்ளமும் திரியும்படி சேர்கின்ற,

     மகளிர் தோதக இன்பின் முயங்குதல் ஒழியுமாறு தெளிந்து ---  பொது மாதர்களின் வஞ்சனை நிறைந்த இன்பத்தில் முழுகுதல் நீங்குமாறு, உள்ளமானது தெளிவு பெற்று,

     உள்ளம் அன்பொடு --- உள்ளத்தில் அன்பு மேலிட்டு,

     சிவயோகத்து உருகு --- சிவயோகத்தில் நிலைபெற்று உள்ளம் உருகுகின்ற,

     ஞான பரம்பர தந்திர அறிவினோர் கருது --- ஞானமும் மேலான ஆகம அறிவும் படைத்த ஆன்றோர்கள் தியானிக்கின்றதும்,

     அம்கொள் சிலம்பு அணி --- அழகிய சிலம்பை அணிவதுமாகிய,

     உபய சீதள பங்கயமென் கழல் தருவாயே ---  குளிர்ந்த தாமரைப் போன்ற மெல்லிய இரு பாதங்களையும் தந்தருளுவீர்.


பொழிப்புரை

         தளர்ச்சியின்றி வளர்ச்சியுற்ற சந்தன மரத்தின் குழம்பும் குங்குமப்பூவின் கலவையும் நிறைந்த தனபாரங்களினால் நலம் பெற்ற இரதிதேவியின் கணவனாகிய மன்மதன் தொழுகின்ற பிதாவாகிய திருமாலும், தணிந்த சிந்தையுடைய நான்முகக் கடவுளும், இனிய சுகம் பெறாது கவன்ற இந்திரனும், இமையவரும், “ஹர ஹரா! சிவா! சங்கரா! சங்கரா!” என்று துதி செய்ய, அவர்கள் பொருட்டு மிகுதியாகவந்த ஆலகாலவிடத்தை யுண்டு அருள்புரிந்த சிவபெருமான் அருளிய திருக்குமாரரே!

     வலிமையால் வளர்ந்த அரக்கர்களின் தலைகள் பொடிபடுமாறு பகைகொண்ட மேன்மையும் சிறப்பும் உடையவரும். மகர மீன்கள் வாழுங் கடலைக் கடைந்தவரும் நீலமேக வண்ணரும் ஆகிய நீண்ட மாயவனது திருமருகரே;

     வளர்கின்ற வாழையும் மஞ்சளும் இஞ்சியும் எந்நாளும் நெருங்கி விளங்குகின்ற மங்கலமும் மகிமையும் மிகுந்த செந்திமாநகரில் வந்து எழுந்தருளி யிருக்கின்ற பெருமிதம் உடையவரே!

         கூந்தல் அலைந்து குலையவும், முகத்தில் வேர்வைத் தோன்றி மாசுறவும், மதி மயங்குமாறு மோகங்கொண்டு கட்டுப்படுத்தியும், பஞ்சணைமீதில் சிவந்த வாயில் புன்னகைப் புரிந்தும் மிக்க மகிழ்ச்சியுடன் நகநுனியால் அடையாளங்களை உண்டாக்கியும், இதழமுதம் அருந்தியும், இடை வருந்த தனங்களின்மீது வீழ்ந்து உள்ளமும் வேறுபடுமாறு சேர்கின்ற பொதுமகளிரது வஞ்சனை நிரம்பின இன்பத்தில் முழுகுஞ்செயல் முற்றிலும் ஒழியும்படி, உள்ளம் தெளிவுபெற்று, அன்புகொண்டு, சிவயோக நிலையில் நின்று உருகுகின்ற ஞானமுடையவரும் மேலான சிவாகமங்களில் தெளிவு பெற்ற அறிஞருமாகிய ஞானிகள் தியானிக்கின்றதும், அழகிய சிலம்பை யணிந்திருப்பதும், குளிர்ந்த தாமரைப் போன்றதுமாகிய மென்மையுடைய இரு சரணங்களையும் அடியேனுக்குத் தந்தருளுவீர்.

விரிவுரை

         இத்திருப்புகழில் எட்டு வரிகள் மகளிர் மயலின் தன்மையைக் கூறுகின்றன. அது ஒழியவேண்டுமானால் ஞானபண்டிதனுடைய திருவருள் துணை புரிய வேண்டும்.

தெளிந்து உளம் அன்பொடு ---

காமாதி குற்றங்களால் உள்ளம் கலங்கியுள்ளது. கலங்கிய உள்ளத்தில் உண்மை விளங்காது. கலங்கிய தண்ணீரில் சந்திர சூரிய பிரதிபிம்பம் தெரியாது. கலங்கிய நீரைத் தேற்றாங் கொட்டையிட்டுத் தெளிய வைப்பர். அதுபோல் முருகன் திருவடித் தியானத்தில் உள்ளத்தைத் தெளியவைக்க வேண்டும்.

சிவயோகத்து உருகு ஞான பரம்பர தந்திர அறிவினோர் --

முன் கூறியவாறு தெளிவு பெற்றவர்க்குச் சிவயோக உணர்வு வரும். ஞானிகள் அதில் நிலைத்து நின்று அவிச்சின்ன தாரையாக இடையறாது இறைவன் திருவடியை நினைத்து உருகிய உள்ளத்துடன் திகழ்வார்கள்.அவர்கட்கு மிகமேலான சிவாகம உணர்ச்சியும் உண்டாகும். அதனால் சிவமே பொருள் என உணர்ந்து சிவமாந்தன்மையைப் பெறுவர். இத்தகைய அருள் ஞானிகள் கருதுகின்ற திருவடி முருகன் திருவடி.


திரோத மலமாறு மடியார்க ளருமாதவர்
    தியானமுறு பாதம் தருவாயே”          --- (அவாமரு) திருப்புகழ்.

உபய சீதள பங்கய மென்கழல் ---

இறைவனுடைய திருவடிகள் கிரியாசக்தி ஞானசக்தி என உணர்க. அதன் நிழல் “மாசில் வீணையும் மாலை மதியமும் வீசுதென்றலும் வீங்கிள வேனிலும், மூசுவண்டு அறை பொய்கையும்” போல குளிர்ந்திருக்கும் அக் குளிர்ச்சியினால் பிறவிக் கோடைவெப்பந் தணியும்.

இளகிடாவளர்................நஞ்சினை உண்டவர் ---

மாலயனாதி வானவர்கள் துதிசெய்து வேண்ட, சிவபெருமான், ஒருவரும் அணுகமுடியாத மிகப்பெரும் வெப்பத்துடன் வெளிப்பட்ட ஆலகால விடத்தையுண்டு அருள்புரிந்தார்.

வளர் நிசாசரர் :-

அசுரர்கள் ஆற்றலினால் வளர்ச்சியுற்றவர்கள். இரவில் சஞ்சரிப்பவர்கள். அதனால் நிசாசரர் எனப்பட்டனர். நிசி-இரவு; சரர்-சஞ்சரிப்பவர்.

சிரம் பொடிபட விரோதமிடும் குல சம்ப்ரமன் ---

இந்திராதி இமையவர்க்கு என்றும் இடர்விளைவித்து கொண்டிருந்த முரன், மதுகைடவர் முதலிய பற்பல அசுரர்களுடைய தலைபொடிபடுமாறு திருமால் வதைத்தனர். திருமாலுக்குச் சுரரும் அசுரரும் மக்களேயாயினும், மெலியவராகிய அமரரை வலியவராகிய அசுரர் வருத்தியபோது பாரபட்சமில்லாத காத்தற் கடவுளாகிய திருமால் அமரர் பொருட்டு அசுரரைப் பகைத்து அவர்களை அழித்தனர்.

மெலிந்த மகனை வலிந்த மகன் அடிப்பானாயின், இருவருக்கும் பிதா அடிபடுகின்ற புதல்வன் பக்கம் சேர்ந்து அகாரணமாக அடித்த மற்றொரு மகனைத் தண்டிப்பார். அதனால் இருவருக்கும் பிதாவாகிய அவருக்கு பாரபட்ச பாவம் எய்தாது. இந்த நியாயத்தை இங்கு உய்த்து உணர்க.


வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும் இடைவிடாது நெருங்கிய மங்கல ---

முருகவேள் எழுந்தருளியுள்ள திருத்தலங்கள் நல்ல வளமையுள்ளதாக அமையும். அநேக எல்லா வளங்களும் மங்கலமும் பெருகும்.


கருத்துரை

         சிவகுமாரரே! திருமால் மருகரே! செந்திலாண்டவரே! மாதர்மையலில் ஆழாது அடியேனுக்கு ஞானிகள் தியானிக்கும் திருவடியைத் தந்தருள்வீர்.




No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...