அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
இன்பமும் துன்பமும் (திருச்செந்தூர்)
முருகனுக்குத்
தொண்டுபட்டு அகம் மகிழ
இன்பமுந் துன்பமுஞ் சந்ததங் கொண்டுசென்
றிங்குமங் குஞ்சுழன் றிடுமாயத்
துன்பவெண் கும்பியங் கந்தவிர்ந் துன்பெருந்
தொண்டனென் றுய்ந்துளங் களியேனோ
புன்குருந் துந்தியுஞ் சந்தனஞ் சிந்திமுன்
பொங்கிவெண் சங்கெறிந் தலைவீசும்
தன்பொருந் தந்பசும் பொன்சொரிந் தெங்கணுந்
தந்திடுஞ் செந்திலம் பெருமாளே.
பதம்
பிரித்தல்
இன்பமும் துன்பமும் சந்ததம் கொண்டுசென்று,
இங்கும் அங்கும் சுழன்- ...... றிடுமாயத்
துன்ப எண் கும்பி அங்கம் தவிர்ந்து, உன்பெரும்
தொண்டன் என்று உய்ந்து, உளம்.... களியேனோ
புன்குருந்து உந்தியும் சந்தனம் சிந்தி, முன்
பொங்கி, வெண் சங்கு எறிந்து...... அலைவீசும்
தன் பொருந்தம் பசும் பொன் சொரிந்து எங்கணும்
தந்திடும் செந்தில்அம்..... பெருமாளே.
பதவுரை
புன் குருந்து உந்தி --- மென்மையான குருந்த மரத்தைத் தள்ளியும்,
அம் சந்தனம் சிந்தி --- அழகிய சந்தன மரத்தைக் கரையில் ஒதுக்கியும்,
முன் பொங்கி --- முன்னால் வெள்ளம் பொங்கியும்,
வெண் சங்கு எறிந்து அலை வீசும் --- வெண்மையான சங்குகளை இரு கரைகளில் வீசியும், அலைகள் வீசுகின்ற,
தன் பொருந்தம் ---
தனக்கே உரிய பொருநை நதியானது,
பசும்பொன் சொரிந்து --- பசுமை நிறைத்துடன் கூடிய பொன் துகளைக் கரைகளில்
சொரிந்து
எங்கணும்
தந்திடும் --- எல்லாப் பகுதிகளிலும் வழங்குகின்றதாய்ச் சூழ்ந்துள்ள,
செந்தில் அம் பெருமாளே --- அழகிய
திருச்செந்தூரில் எழுந்தருளி உள்ள பெருமிதம் உடையவரே!
இன்பமும் துன்பமும் --- இன்ப துன்பங்களை,
சந்ததம் கொண்டு சென்று --- நாள்தோறும் உடையவனாகி,
இங்கும் அங்கும் சுழன்றிடும் --- இங்கும் அங்குமாகப் போய் திரிகின்ற,
மாய துன்ப --- மாயத்தை விளைவிக்கின்ற துன்பத்துடன் கூடிய
எண் கும்பி அங்கம்
தவிர்ந்து --- வயிற்றுடன்
கூடியதும் ஆகிய இந்த உடம்பை விடுத்து,
உன் பெரும்
தொண்டன் என்று உய்ந்து --- தேவரீருடைய பெரிய
தொண்டன் என்று அடியேன் அமைந்து உய்வு பெற்று,
உளம் களியேனோ --- உள்ளம் மகிழ்ச்சி அடைய மாட்டேனோ?
பொழிப்புரை
மென்மையான குருந்த மரத்தைத் தள்ளியும், அழகிய சந்தன மரத்தைக் கரையில் ஒதுக்கியும்,
முன்னால் வெள்ளம் பொங்கியும்,
வெண்மையான சங்குகளை இரு கரைகளில் வீசியும், அலைகள் வீசுகின்ற தனக்கே உரிய பொருநை நதியானது, பசுமை நிறைத்துடன் கூடிய பொன் துகளைக் கரைகளில் சொரிந்து எல்லாப் பகுதிகளிலும்
வழங்குகின்றதாய்ச் சூழ்ந்துள்ள, அழகிய
திருச்செந்தூரில் எழுந்தருளி உள்ள பெருமிதம் உடையவரே!
இன்ப துன்பங்களை நாள்தோறும் உடையவனாகி, இங்கும் அங்குமாகப் போய் திரிகின்ற, மாயத்தை
விளைவிக்கின்ற துன்பத்துடன் கூடியதும், வயிற்றுடன்
கூடியதும் ஆகிய இந்த உடம்பை விடுத்து, தேவரீருடைய பெரிய
தொண்டன் என்று அடியேன் அமைந்து உய்வு பெற்று, உள்ளம் மகிழ்ச்சி அடைய மாட்டேனோ?
விரிவுரை
இன்பமும் துன்பமும் சந்ததம் கொண்டு ---
உயிர்களுக்கு இன்ப துன்பம் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். இரவு பகல், வெயில் நிழல், இறப்பு பிறப்பு, வெப்பம் தட்பம், அகம் புறம், விருப்பு வெறுப்பு, நினைவு மறப்பு என்று எல்லாம் இரட்டைகளாகவே உலக இயல்பு அமைந்து உள்ளன.
இவைகளில் இருந்து மீண்டவர்களே உண்மை ஞானிகள். ஞானிகட்கு சுகதுக்கம் இல்லை.
ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும்.. --- வெற்றிவேற்கை.
விட்டேன் உலகம், விரும்பேன்
இருவினை, வீணருடன்
கிட்டேன், அவர் உரை கேட்டும்
இரேன், மெய்கெடாதநிலை
தொட்டேன், சுகதுக்கம்
அற்றுவிட்டேன், தொல்லைநான்மறைக்கும்
எட்டேன் எனும் பரம் என்னிடத்தே வந்து, இங்கு எய்தியதே. --- பட்டினத்தார்.
இங்கும் அங்கும் சுழன்று ---
இன்ப துன்பத்தால் இவ்விடத்திலும் அவ்விடத்திலும் மனிதர்கள்
சுழன்று திரிகின்றார்கள்.
இனி துன்பத்தை அநுபவிக்க நரகத்துக்கும், இன்பத்தை அநுபவிக்கச் சுவர்க்கத்துக்கும் உயிர்கள் உழல்கின்றன.
மாயத் துன்ப எண் ---
மாயம் - தோன்றி மறைவது. துன்ப எண்ணங்களுடன் கூடியது இந்த உடம்பு.
கும்பி ---
வயிறு.
இந்த உடம்பில் வயிறு உயிரைச் சதா வருத்திக் கொண்டே
இருக்கின்றது. எண்சாண் உடம்பில் பிற ஏழு சாண்களும் இந்த ஒரு சாண் வயிற்றுக்காகவே உழைக்கின்றன.
அங்கம் தவிர்ந்து ---
இந்தப் புலால் உடம்பின் தொடர்பை ஒழித்து, சுத்த தேகம் பெறுதல் வேண்டும்.
எய்ச்சிளைச்ச பேய்க்கும் எய்ச்சிளைச்ச நாய்க்கும்
எய்ச்சிளைச்ச
ஈக்கும் இரையாகும்
இக்கடத்தை நீக்கி அக்கடத்து ளாக்கி
இப்படிக்கு
மோட்சம் அருள்வாயே” --- (மச்சமெச்சு) திருப்புகழ்
பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேஇரை தேடி அலமந்து
காக்கைக் கேஇரை யாகிக் கழிவரே. ---
அப்பர்.
விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க்கழல் என்று அருள்வாய்... --- கந்தர் அநுபூதி.
உன் பெரும் தொண்டன் என்று உய்ந்து உளம் களியேனோ ---
முருகப் பெருமானுக்குத் திருத்தொண்டன் என்ற அரும் பெரும்
பதம் பெற்று உள்ளம் மகிழவேண்டும்.
கிரிவாய் விடு விக்ரமவேல் இறையோன்
பரிவாரம் எனும் பதம் மேவலையே
புரிவாய் மனனே, பொறையாம் அறிவால்
அரிவாய் அடியோடும் அகந்தையையே.. ---
கந்தர் அநுபூதி.
புன் குருந்து...... தன் பொருந்தம் ---
பொருநை நதி திருநெல்வேலி மாவட்டத்தில் ஓடுகின்ற புண்ணிய நதி. அந் நதியின் அண்மையில் விளங்குவது திருச்செந்தூர்.
பொருநை என்ற இந் நதி, இப்போது தாம்பிரபரணி என்று வழங்குகின்றது.
இந் நதி பொதியமலையில் பிறக்கின்றது. சந்தனம் முதலிய
அரிய மரங்களைத் தன் வெள்ளத்தில் சுமந்து வந்து கரைகளில் ஒதுக்குகின்றது. சங்கினங்களை அலைக் கரங்களால் இருமருங்கிலும் எறிகின்ற வள்ளன்மை உடையது.
சந்தமார் அகிலொடு சாதித் தேக்கம்மரம்
உந்துமா முகலியின் கரையினில்...
என்ற திருஞானசம்பந்தருடைய தேவாரத்தை இப் பாடல் நினைவு
செய்கின்றது.
இனி, இந்த நதிக்கே இத்தகைய வள்ளன்மை இருக்குமானால், அதன் கரையில் உள்ள மக்களும் அத்தகைய வள்ளன்மை உடையவர்தானே.
தருமகுணம் நிறைந்தவர்களே மனிதரில் தலையாயவர்கள். இத்தகைய தருமகுண சீலர்கள் நிறைந்த தலம் திருச்செந்தூர் எனவும்
குறிப்பிடுகின்றார்.
மிகுகொடை வடிவினர் பயில் வலிவலம்...
என்னும் தேவாரப் பாடலையும் உன்னுக.
கருத்துரை
செந்தில் கடவுளே, இந்த ஊன உடம்பை
நீக்கி, ஞான உடம்பைத் தந்து உமது தொண்டனாக்கி அருள் புரிவீர்.
No comments:
Post a Comment