திரு ஆலங்காடு


திரு ஆலங்காடு
வடாரண்யேசுவரர் கோயில், திருவாலங்காடு

     தொண்டை நன்னாட்டுத் திருத்தலம்.

         சென்னை - அரக்கோணம் இரயில் பாதையில் உள்ள திருவாலங்காடு இரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் இத்திருத்தலம் உள்ளது. இரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ வசதிகள் உண்டு. திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் பேருந்தில் சென்று திருவாலங்காடு நிறுத்தத்தில் இறங்கினால் கோயில் மிக அருகிலேயே இருக்கிறது. திருவள்ளூரில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும், அரக்கோணத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
  
இறைவன் பெயர்  --    வடாரண்யேசுவரர், ஊர்த்துவ தாண்டவர்

இறைவி பெயர்   --    வண்டார் குழலம்மை

பதிகம்            --              திருநாவுக்கரசர் - 1. வெள்ளநீர்ச் சடையர்
                                                                          2. ஒன்றா உலகனைத்தும்

                                             திருஞானசம்பந்தர் - 1. துஞ்சவருவாரும்.

                                             சுந்தரர் - 1 - முத்தா முத்தி தரவல்ல

         வடாரண்யேசுவரர் திருக்கோயில் நடராசப் பெருமானின் ஐந்து சபைகளில், இரத்தின சபையாகத் திகழ்கிறது. காரைக்கால் அம்மையாருக்கு நடராசப் பெருமான் காட்சி தந்த தலம் திருவாலங்காடு. இத்தலத்தில் இறைவனின் காலடியில் இன்றும் காரைக்கால் அம்மையார் வாழ்கிறார்.

     திருவாலங்காட்டில் உள்ள நடராச தாண்டவம் ஊர்த்துவ தாண்டவம் என்று சொல்லப்படும். வலக்காலை உடம்புடன் ஒட்டி உச்சங்கால் வரை தூக்கி நின்றாடும் நாட்டியம் இதுவாகும். இத்தலத்து நடராசர் மற்ற ஊர்த்துவ தாண்டவங்களைப் போல் தனது பாதத்தை செங்குத்தாக உடலை ஒட்டி தூக்கி நின்று ஆடாமல் உடலின் முன்பக்கத்தில் முகத்திற்கு நேராக பாதத்தை தூக்கியிருக்கிறார். எட்டு கைகளுடன் சுமார் நான்கு அடி உயரமுள்ள இந்த திரு உருவத்தைக் காண நம் மெய் சிலிர்க்கும். யாருக்கும் அடங்காத காளி வெட்கித் தலை குனிய வைத்த நடனமான இந்த ஊர்ர்த்துவ தாண்டவ நடனம் பார்த்துப் பரவசமடைய வேண்டியதாகும். ஒருமுறை காளிக்கும், சிவனுக்கும் நடனப் போட்டி நடந்தது. சிவபெருமானை விட நன்றாக நடனமாடி வந்த காளி கடைசியில் சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும் காலை மேலே நேராகத் தூக்கியவுடன் காளியான சக்தி வெட்கித் தலைகுனிந்து தோற்றுப் போனாள். நடராசர் சந்நிதிக்கு எதிரே காளியின் சந்நிதி இருக்கிறது. சந்நிதிக்கு எதிரே மற்றும் பல விக்கிரகங்கள் இருக்கின்றன. வடாரண்யேசுவரரை ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் தரிசனம் செய்தால் எல்ல வகையான இன்பங்களும் கிடைக்கும் என்கிறது தல புராணம்.

         கிழக்கிலுள்ள ஐந்து நிலை இராஜகோபுரம் அழகிய சுதை வேலைப்பாடுகளுடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. கோபுர நுழைவு வாயிலுக்கு இடதுபறம் ஒரு சிறிய சந்நிதியில் அருள்மிகு வல்லப கணபதி காட்சி தருகிறார். வலதுபுறம் ஒரு சிறிய சந்நிதியில் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானையுடன் அருள்மிகு ஸ்ரீசண்முகர் காட்சி தருகிறார். உள்ளே நுழைந்தவுடன் வலதுபுறம் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. இம் மண்டபத்தில்தான் நடராசர் அபிஷேகம் நடைபெறுகிறது. நுழைவு வாயிலைக் கடந்து சென்றவுடன் நாம் எதிரே காண்பது பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் மற்றும் 3 நிலைகளுடைய இரண்டாவது கோபுரம். இந்த கோபுரத்திலும் அழகிய சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோபுரத்தை ஒட்டிய மதிற்சுவரின் மேல் இடதுபுறம் காரைக்கால் அம்மையார் வரலாறும், வலதுபுறம் மீனாட்சி திருக்கல்யாண வரலாறும் அழகிய சுதை சிற்பங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றதும் நாம் காண்பது இண்டாவது சுற்றுப் பிரகாரம். வலதுபுறத்தில் இறைவி வண்டார் குழலம்மை சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. நேரே இறைவன் கருவறைக்குச் செல்லும் நுழைவு வாயில். இந்த நுழைவு வாயிலின் மேற்புறம் சிவபெருமானின் ஐந்து சபைகளும் அழகிய சுதைச் சிற்பங்களாக காட்சி தருகின்றன. கருவறையில் இறைவன் வடாரண்யேஸ்வரர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார்.

         மூலவரைத் தரிசிக்க உள் பிராகாரத்தில் செல்லும்போது சூரியன், அதிகார நந்தி, விஜயராகவப் பெருமாள் தேவியருடன், சண்முகர், அகோர வீரபத்திரர், சப்த கன்னியர், நால்வர், காரைக்காலம்யைார், கார்க்கோடகன், முஞ்சிகேசமுனிவர், பதஞ்சலி, அநந்தர், சண்டேச அநுக்ரஹர், எண்வகை விநாயகர் உருவங்கள் முதலிய சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். துர்க்கைக்குப் பக்கத்தில் துர்க்கா பரமேஸ்வரர் உருவம் ஒன்று கோஷ்ட மூர்த்தமாகவுள்ளது. சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது. பஞ்சபூதத் தலத்திற்குரிய லிங்கங்கள் வரிசையாக உள்ளன. சஹஸ்ரலிங்கம் தரிசிக்கத் தக்கது. சுப்பிரமணியர், கஜலட்சுமி, பாபஹரீஸ்வர லிங்கம் முதலிய சந்நிதிகளும் உள. பைரவர் தனது வாகனமின்றிக் காட்சி தருகின்றார்.

         திருச்சுற்றில் வலமாக வரும்போது ஆருத்ரா அபிஷேக மண்டபம், இரத்தினசபை வாயில் உள்ளது. சபைக்கு எதிரில் நிலைக்கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது. அடுத்து தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. அம்பிகை நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சிதருகிறாள். அம்பிகை கருவறையில் கோஷ்ட மூர்த்தங்கள் இல்லை. சந்நிதியிலுள்ள சிற்பக் கலையழகு வாய்ந்த கல்தூண்கள் காண அழகுடையவை. இரத்தின சபையில் நடராசப் பெருமானின் ஊர்த்துவ தாண்டவ உற்சவத் திருமேனி தரிசிக்கத்தக்கது. சிவகாமி, காரைக்காலம்மையார் திருமேனிகள் அருகில் உள்ளன. இரத்தின சபையில் பெரிய ஸ்படிகலிங்கமும், சிறிய மரகதலிங்கமும் உள்ளன. இவற்றிற்கு நான்கு கால அபிஷேகம் நடைபெறுகிறது. இரத்தின சபையை வலம் வரும்போது சாளரத்தில் சண்டேசுவரரின் உருவம் உள்ளது. இரத்தினச் சபையின் விமானம் செப்புத் தகடு வேயப்பட்டு ஐந்து கலசங்களுடன் விளங்குகிறது.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "சொல் போரில் ஓலம் காட்டும் பழையனூர் நீலி வாது அடக்கும் ஆலங்காட்டில் சூழ் அருள் மயமே" என்று போற்றி உள்ளார்.

         காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தொடர்ந்து தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு:

         புகலி ஆண்தகையார் தக்கோலம் என்னும் திருத்தலத்தை அடைந்து திருஊறலை வணங்கிப் பதிகம்பாடிப் பழையனூர், திருவாலங்காட்டிற்கு அருகே வருகின்றார்கள். அப்போது இத்தலம் 'எம்மையாளும் அம்மை திருத்தலையாலே நடந்து போற்றும் அம்மையப்பரின் அணிநகரல்லவா?' என்ற எண்ணம் உண்டாயிற்று. அதனை மிதிக்க அஞ்சி, அடுத்துள்ள ஊரிற்சென்று இரவு பள்ளிகொண்டார்கள்.

         இடை யாமத்திலே பிள்ளையார் கனவிலே பெருமானும் எழுந்தருளி ‘எம்மைப் பாட மறந்தனையோ’ என்று அருளிச் செய்தனர். அதனை உணர்ந்த பிள்ளையார் வியந்தெழுந்து கருணையைப் போற்றித் ‘துஞ்ச வருவாரும்’ என்ற இத்திருப்பதிகத்தை அருளிச் செய்தார்கள். இதில் பழையனூர் நீலி வரலாற்றை முதல் திருப்பாடலிலும், கனவில் வந்தருளிச் செய்ததை முதல் ஏழாந் திருப்பாடல்களிலும் சிறப்பித்திருக்கிறார்கள். இச்செய்தியை மறுநாட்காலையில் எல்லாருக்கும் அறிவித்துத் திருவாலங்காடு சென்று ஆலங்காட்டப்பரை வழிபட்டுத் திருப்பாசூருக்கு வழிக் கொண்டார்கள்.

         குருவருள்: இத்திருப்பதிகத்தைப் பண் - தக்கராகம் என்று தொன்று தொட்டு பதிப்பித்து வருகின்றார்கள். ஆனால் சேக்கிழார் "பஞ்சுரமாம் பழைய திறம் கிழமை கொள்ளப் பாடினார் ஞானசம்பந்தர்" என்பதால் இது பழம்பஞ்சுரப் பண்ணாகும். பழம்பஞ்சுரப் பண் வரிசையில் மூன்றாம் திருமுறையில் இடம் பெறத்தக்கதே முறையாகும். ஓதுவார்கள் இது விவரம் தெரிந்து பழம்பஞ்சுரப் பண்ணாகப் பாடுதல் நலம்.

துஞ்சவரு வாரென்றே யெடுத்த ஓசைச்
         சுருதிமுறை வழுவாமல் தொடுத்த பாடல்,
எஞ்சலிலா வகைமுறையே பழைய னூரார்
         இயம்புமொழி காத்தகதை சிறப்பித் தேத்தி,
அஞ்சனமா கரியுரித்தார் அருளாம் என்றே
         அருளும் வகை திருக்கடைக்காப் பமையச் சாத்திப்,
பஞ்சுரமாம் பழையதிறங் கிழமை கொள்ளப் பாடினார்
         பாரெல்லாம் உய்ய வந்தார்."

என்பது இத்திருப்பதிகம் எழுந்த வரலாற்றைக் குறிக்கும் சேக்கிழார் திருமொழியாகும்.


பெரிய புராணப் பாடல் எண் : 1007
குன்றநெடுஞ் சிலையாளர் குலவியபல் பதிபிறவும்
நின்றவிருப் புடன்இறைஞ்சி, நீடுதிருத் தொண்டருடன்,
பொன்தயங்கு மணிமாடப் பூந்தராய்ப் புரவலனார்
சென்றுஅணைந்தார் பழையனூர்த் திருஆலங் காட்டுஅருகு.

         பொழிப்புரை : இப்பதியில் உள்ள கோயிலின் பெயர் திருவூறல் என்பதாகும். இறைவனின் திருவடிகளிலிருந்து நீர் பெருகி வருதலின் இப்பெயர் பெற்றது. இப்பதியில் அருளிய பதிகம் `மாறில் அவுணர்\' (தி.1 ப.106) எனத் தொடங்கும் வியாழக் குறிஞ்சிப் பண்ணில் அமைந்த பதிகம் ஆகும்.

         குறிப்புரை : `பதிபிறவும்' என்றது மணவூர், திருஎவ்வளூர் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் எவையும் கிடைத்தில.

 
பெ. பு. பாடல் எண் : 1008
இம்மையிலே புவியுள்ளோர் யாரும்  காண,
         ஏழ்உலகும் போற்றிஇசைப்ப, எம்மை ஆளும்
அம்மைதிருத் தலையாலே நடந்து போற்றும்
         அம்மையப்பர் திருஆலங் காடாம் என்று,
தம்மைஉடை யவர்மூதூர் மிதிக்க அஞ்சி,
         சண்பைவரும் சிகாமணியார் சாரச் சென்று,
செம்மைநெறி வழுவாத பதியின் மாடு,ஓர்
         செழும்பதியில் அன்றுஇரவு பள்ளி சேர்ந்தார்.

         பொழிப்புரை : இப்பிறவியில் இம்மண்ணுலகத்தில் எவரும் நேரில் காணும்படி, ஏழ் உலகத்தவரும் போற்றுமாறு எம்மை ஆளுகின்ற அம்மையாரான காரைக்கால் அம்மையார், தம் திருத்தலையினால் நடந்து சென்று போற்றிய அம்மையப்பர் வீற்றிருக்கின்ற பதி இத்திருவாலங்காடாகும் என்று உள்ளத்தில் எண்ணி, தம்மை ஆளுடைய இறைவரின் பழமை பொருந்திய அவ்வூரைக் காலால் மிதித்து உள் செல்ல அச்சம் கொண்டு, சீகாழியில் தோன்றியருளிய பிள்ளையார், அப்பதியின் அருகில் சாரச் செம்மை நெறியினின்று சற்றும் வழுவாத தூய ஒழுக்கமுடையவர்கள் வாழ்கின்ற ஒரு செழுமையான நகரில் சென்று இரவிலே தங்கி உறங்கலானார்.


பெ. பு. பாடல் எண் : 1009
மாலைஇடை யாமத்துப் பள்ளி கொள்ளும்
         மறையவனார் தம்முன்பு கனவி லேவந்து,
ஆலவனத்து அமர்ந்து அருளும் அப்பர், "நம்மை
         அயர்த்தனையோ பாடுதற்கு" என்று அருளிச் செய்ய,
ஞாலம்இருள் நீங்கவரும் புகலி வேந்தர்,
         நடுஇடையா மத்தினிடைத் தொழுது, உணர்ந்து,
வேலைவிடம் உண்டவர்தம் கருணை போற்றி
         மெய்உருகித் திருப்பதிகம் விளம்பல் உற்றார்.

         பொழிப்புரை : மாலைப் பொழுது கழிய நடுயாமத்தில் பள்ளி கொண்டருளும் வேதியரான பிள்ளையாரின் கனவில் வெளிப்பட்டுத் திருவாலங்காட்டில் வீற்றிருக்கும் இறைவர், `நம்மைப் பாடுவதற்கு மறந்தாயோ?\' என்று வினவியருள, உலகம் இருள்நீங்கி உய்யும் பொருட்டுத் தோன்றியருளிய சீகாழித் தலைவர், அந்நள்ளிருள் யாமத்தில் உறக்கத்தினின்று உணர்ந்து எழுந்து, கடலில் உண்டான நஞ்சை உண்டருளிய சிவபெருமானின் திருவருளைப் போற்றி, மெய் உருகித் திருப்பதிகத்தைப் பாடத் தொடங்கினார்.


பெ. பு. பாடல் எண் : 1010
"துஞ்சவரு வார்"என்றே எடுத்த ஓசைச்
         சுருதிமுறை வழுவாமல் தொடுத்த பாடல்,
எஞ்சல்இலா வகை,முறையே பழைய னூரார்
         இயம்புமொழி காத்தகதை சிறப்பித்து ஏத்தி,
அஞ்சனமா கரிஉரித்தார் அருளாம் என்றே,
         அருளும்வகை திருக்கடைக்காப்பு அமையச் சாற்றி,
பஞ்சுரமாம் பழைய திறம் கிழமை கொள்ளப்
         பாடினார் பார்எலாம் உய்ய வந்தார்.

         பொழிப்புரை : `துஞ்ச வருவாரும்' என்று தொடங்கி ஓசை யுடைய மறைநெறி தவறாதவாறு பாடிய பாடலில், குறைவற்ற வகையினால் அறநெறிவழுவாத பழையனூர் வேளாளர், தாங்கள் கூறிய சொல்லைத் தவறாது காத்து, அருள் பெற்ற வரலாற்றைச் சிறப்பித்துப் பாராட்டி, கரிய யானையை உரித்த இறைவரின் திருவருளேயாகும் இது என்று அவர் அருள் செய்யும் தன்மையைத் திருக்கடைக்காப்பில் வைத்து, குறிஞ்சியாழ்ப் பண் அமைதித் திறமும் கிழமையும் பொருந்தப் பாடினார்.


பெ. பு. பாடல் எண் : 1011
நீடும்இசைத் திருப்பதிகம் பாடிப் போற்றி,
         நெடுங்கங்குல் இருள்நீங்கி நிகழ்ந்த காலை,
மாடுதிருத் தொண்டர்குழாம் அணைந்தபோது,
         மாலையினில் திருஆல வனத்து மன்னி
ஆடும்அவ ரருள்செய்த படியை எல்லாம்
         அருளிச்செய்து, அகமலரப் பாடி ஏத்தி,
சேடர்பயில் திருப்பதியைத் தொழுது, போந்து,
         திருப்பாசூர் அதன்மருங்கு செல்லல் உற்றார்.

         பொழிப்புரை : எக்காலத்தும் நிலைபெறும் இசையமையந்த திருப்பதிகத்தைப் பாடிப் போற்றி, பின் நீண்ட இரவின் இருள் புலர்ந்த பகற் காலத்தே, திருத்தொண்டர்களின் கூட்டம் வந்து சேர்ந்த போது, இரவில் திருவாலங்காட்டுப் பதியில் ஆடுகின்ற இறைவர், தமக்கு அருள் செய்த பாங்கை எல்லாம் அவர்களுக்குச் சொல்லி, அத்திருப் பதிகத்தைத் திரும்பவும் உள்ளம் மகிழப் பாடிப் போற்றிய பின்பு, பெரியவர்கள் வாழ்கின்ற அப்பதியை வணங்கி அகன்று போய்த் `திருப்பாசூர்\' அருகில் செல்வாராய்,


திருஞானசம்பந்தர் திருப்பதிகம்

1.045    திருவாலங்காடு                      பண் - தக்கராகம்
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
துஞ்சவருவாரும், தொழுவிப்பாரும், வழுவிப்போய்
நெஞ்சம்புகுந்துஎன்னை நினைவிப்பாரும், முனைநட்பாய்
வஞ்சப்படுத்துஒருத்தி வாணாள்கொள்ளும் வகைகேட்டு
அஞ்சும்பழையனூர் ஆலங்காட்டுஎம் அடிகளே.

         பொழிப்புரை :உறங்கும்போது கனவிடை வருபவரும், தம்மைத் தொழுமாறு செய்பவரும், முனைப்புக் காலத்து மறைந்து, அன்பு செய்யும் காலத்து என் நெஞ்சம் புகுந்து நின்று, நினையுமாறு செய்பவரும் ஆகிய இறைவர், முற்பிறவியில் நட்பாய் இருப்பதுபோலக் காட்டித்தன்னை வஞ்சனை செய்து கொன்ற கணவனை மறுபிறப்பில் அடைந்து அவனது வாழ்நாளைக் கவர்ந்த பெண்ணின் செயலுக்குத் துணைபோன வேளாளர்கள் அஞ்சி உயிர்த்தியாகம் செய்த திருவாலங்காட்டில் உறையும் எம் அடிகளாவார்.

         இங்குக் குறித்த சரிதச் சுருக்கமாவது - ஒருகாலத்துப் பரத்தை வலைப்பட்ட ஒரு வணிகன் தன்னைத் திருத்த முயன்ற தன் மனைவியைத் தனிவழிப்படும்போது கொன்றுவிட, அப்பழி நீலி என்னும் பேயாகி அவனை அலைத்து வந்தது. அதினின்றும் மீளும்பொருட்டு, அவன், ஒரு பெரியார் தந்த மந்திர வாளினை ஏந்திக் கொண்டே திரிந்து வந்தனன். அப்பழியும் அவளைக் கொல்வதற்குச் சமயம் பார்த்துப் பின் தொடர்ந்து கொண்டே வந்தது. அவன் ஒருநாள் பழயனூருக்கு வந்தான். நீலியும் ஒரு
பெண் வடிவம் பூண்டு, கள்ளிக்கொம்பு ஒன்றை முரித்து, அதனைக் குழந்தை வடிவமாக்கி இடையில் ஏந்திக்கொண்டு வணிகனைப் பின் தொடர்ந்து வந்தது. வணிகன் அவ்வூரில் வேளாளர் பெருமக்கள் எழுபதுபேர் இருந்த சபையின் முன்வந்து தன்னை நீலி கொல்ல வருகின்றமையால் காக்க வேண்டுமென்று அடைக்கலம் புகுந்தான். நீலியும் அச்சபையின் முன் வந்து "இவன் என் நாயகன்; இது எங்கள் குழவி; இவன் பரத்தை வயப்பட்டு எங்களை வெறுத்துக் கைவிட்டு ஓடிவந்துவிட்டான்"; எங்களை ஒன்றுபடுத்தி வாழவைக்க வேண்டும்" என்று ஓலமிட்டது. வணிகன் மறுத்து "இது
பெண்ணல்ல; நீலியென்ற பேய்" என்று சொல்ல, நீலி அக்கள்ளிக்
குழந்தையைக் கீழேவிட, அது வணிகனிடம் அப்பாவென்று சென்று சேர்ந்தது. இதன் உண்மை புலப்படவாராமையின், "நாளைத் தீர்ப்போம். இன்றிரவு நீங்கள் ஒன்றுகூடி இங்கேயிருங்கள்" என்று சபையினர் கூறினர். வணிகன் கையில் வாளிருந்தபடியால் அதனால் அவன் தன்னை வெட்டி விடுவானாதலின் அதனைக் கழிப்பிக்க வேண்டுமென்றது நீலிப்பேய். வணிகனோ இந்த வாள் இல்லையேல் நீலிப்பேய் தன்னைக் கிழித்துக் கொன்றுவிடும் என்றான். இவ்விருவர்களுக்குமிடையில் குழந்தையின் செய்கையால் ஏமாந்த வேளாளர்கள் வாளினை நீக்கிவிட்டு அவளுடன்
தங்கும்படி வணிகனை ஏவினதோடு அதனால் அவனுயிர்க்குக் கேடு வருமாயின் தங்கள் எழுபது பேர்களின் உயிரையும் அதற்கு ஈடாகத் தருவதாக வாக்குறுதியும் செய்தனர். அன்றிரவு நீலி வணிகனைக் கிழித்துக் கொன்று பழிதீர்த்துப் போய்விட்டது. இதனையறிந்த வேளாளர்கள் தாங்கள் வணிகனுக்குச் சொல்லிய சொல்லே தமது உயிரினும் சிறந்தது எனக்கொண்டு தீ வளர்த்து அதில் எழுபது பேரும் மூழ்கித் திருவாலங்காட்டு அப்பரது திருஅடியில் அடைந்தனர்.

          மிகப்பழைய உண்மைச் சரித்திரமாகிய இதனை ஆளுடைய பிள்ளையார் திருவாலங்காட்டுத் தேவாரத்துள் "முனநட்பாய், வஞ்சப் படுத்தொருத்தி வாணாள் கொள்ளும் வகைகேட், டஞ்சும் பழையனூர்" என்று எடுத்துக் கூறியருளினர். இச்சிறப்பினை "எஞ்சலிலா வகைமுறையே பழய னுரா ரியம்புமொழி காத்த கதை சிறப்பித்தேத்தி" (திருஞான - புரா - 1010) என்று ஆசிரியர் காட்டியதுங் காண்க.

         ஆசிரியர் சேக்கிழார் சுவாமிகளது புராணம் கூறவந்த போது அவரது மரபுச் சிறப்பு உரைக்கும் வகையால் இச் சரிதத்தினையே "மாறுகொடு பழையனூர் நீலி செய்த வஞ்சனையால் வணிகனுயி ரிறப்பத் தாங்கள், கூறியசொற் பிழையாது துணிந்து செந்தீக் குழியிலெழு பதுபேரும் முழுகிக் கங்கை, ஆறணிசெஞ் சடைத்திருவாலங்காட் டப்பரண்டமுற நிமிர்ந்தாடு மடியின் கீழ்மெய்ப், பேறுபெறும் வேளாளர் பெருமையெம்மாற் பிரித்தளவிட் டிவளவெனப் பேசலாமோ?" (திருத்தொண்டர் புராண வரலாறு - 15) என்று விரித்து உமாபதி சிவாசாரியார் வாயார வாழ்த்தியது காண்க. வேளாளர் தீக்குளித்த குழி இப்போது (நீலிகுளம் என வழங்கும்) ஒருகுளமாக உள்ளது. அதன் கரையில் அந்த வேளாளர் எழுபதின்மர் திருவுருவமும் நீலியின் உருவமும் ஒருகோயிலில் உள்ளன. கோயிலும் குளமும் கிலமாயுள்ளன. பழையனூர்த் திருவாலங்காட்டப்பரின் சீர்பாதந் தாங்கும் சிறந்த தொண்டர்களாய் அவ்வேளான மரபினர் இன்றைக்கும் விளங்குவதும், அவ்வாய்மைச் சிறப்பின் மணம் இன்றளவும் வீசும் சிறப்பும் இத்திருநாட்டுக்கு உரியமையாவது காணப்பெறும்.

பாடல் எண் : 2
கேடும்பிறவியும் ஆக்கினாரும், கேடுஇலா
வீடுமாநெறி விளம்பினார்எம் விகிர்தனார்
காடுஞ்சுடலையும் கைக்கொண்டுஎல்லிக் கணப்பேயோடு
ஆடும்பழையனூர் ஆலங்காட்டுஎம் அடிகளே.

         பொழிப்புரை :பிறப்பு இறப்புக்களை உயிர்கட்குத் தந்தருளியவரும், அழிவற்ற வீட்டு நெறியை அடைதற்குரிய நெறிகளை உயிர்கட்கு விளம்பியவரும் ஆகிய நம்மின் வேறுபட்ட இயல்பினராகிய சிவபிரான், இடுகாடு சுடலை ஆகியவற்றை இடமாகக் கொண்டு இராப்போதில் பேய்க்கணங்களோடு நடனமாடும் பழையனூரைச் சேர்ந்த திருவாலங்காட்டு எம் அடிகள் ஆவார்.
  
பாடல் எண் : 3
கந்தங்கமழ்கொன்றைக் கண்ணிசூடிக் கனல்ஆடி,
வெந்தபொடிநீற்றை விளங்கப்பூசும் விகிர்தனார்,
கொந்தண்பொழிற்சோலை அரவில்தோன்றிக் கோடல்பூத்த
அந்தண்பழையனூர் ஆலங்காட்டுஎம் அடிகளே.

         பொழிப்புரை :மணம் கமழும் கொன்றை மலர் மாலை சூடிக்கனலிடை நின்று ஆடி சுடுகாட்டில் `வெந்த` சாம்பலை உடல் முழுதும் விளங்கப் பூசும் வேறுபட்ட இயல்பினராகிய சிவபிரான், கொத்துக்கள் நிறைந்த பொழில்களிலும் சோலைகளிலும் பாம்பின் படம் போலக் காந்தள் மலர் மலரும் அழகிய குளிர்ந்த பழையனூரைச் சேர்ந்த திருவாலங்காட்டு எம் அடிகள் ஆவார்.
  
பாடல் எண் : 4
பாலமதிசென்னி படரச்சூடி பழிஓராக்
காலன்உயிர்செற்ற காலன்ஆய கருத்தனார்,
கோலம்பொழிற்சோலைப் பெடையோடுஆடி, மடமஞ்ஞை
ஆலும்பழையனூர் ஆலங்காட்டுஎம் அடிகளே.

         பொழிப்புரை :இளம்பிறையை முடிமீது பொருந்தச் சூடி, தனக்கு வரும் பழியை நினையாத காலனது உயிரைச் செற்ற காலகாலராய இறைவர் அழகிய பொழில்களிலும் சோலைகளிலும் இளமயில்கள் பெண் மயில்களோடு கூடிக்களித்து ஆரவாரிக்கும் பழையனூரைச் சேர்ந்த திருவாலங்காட்டு எம் அடிகள் ஆவார்.
  
பாடல் எண் : 5
ஈர்க்கும் புனல்சூடி, இளவெண்திங்கள் முதிரவே,
பார்க்கும் அரவம்பூண்டு ஆடி,வேடம் பயின்றாரும்
கார்க்கொள்வ கொடிமுல்லை குருந்தம்ஏறிக் கருந்தேன்மொய்த்து
ஆர்க்கும்பழையனூர் ஆலங்காட்டுஎம் அடிகளே.

         பொழிப்புரை :ஈர்த்துச் செல்லுதலில் வலிய கங்கை நீரை முடி மிசைத் தாங்கி, இளம்பிறையை விழுங்க அதனது வளர்ச்சி பார்த்திருக்கும் பாம்பை அணிகலனாகப் பூண்டு, நடனம் ஆடிப் பல்வேறு வேடங்களில் தோன்றி அருள்புரிபவர், கார்காலத்தே மலரும் முல்லைக் கொடிகள் குருந்த மரங்களில் ஏறிப்படர அம்மலர்களில் உள்ள தேனை உண்ணவரும் கரிய வண்டுகள் மலரை மொய்த்து ஆரவாரிக்கும் பழையனூரைச் சேர்ந்த திருவாலங்காட்டு எம் அடிகள் ஆவார்.

பாடல் எண் : 6
பறையும் சிறுகுழலும் யாழும்பூதம் பயிற்றவே
மறையும் பலபாடி மயானத்துஉறையும் மைந்தனார்,
பிறையும் பெரும்புனல்சேர் சடையினாரும் பேடைவண்டு
அறையும் பழையனூர் ஆலங்காட்டுஎம் அடிகளே.

         பொழிப்புரை :பறை, சிறுகுழல், யாழ் முதலிய கருவிகளைப் பூதங்கள் ஒலிக்க வேதங்களைப் பாடிக்கொண்டு மயானத்தில் உறையும் மைந்தராய், பிறை, பெருகி வரும் கங்கை ஆகியவற்றை அணிந்த சடை முடியினர் ஆகிய சிவபெருமான் பெடைகளோடு கூடிய ஆண் வண்டுகள் ஒலிக்கும்சோலைகள் சூழ்ந்த பழையனூரைச் சேர்ந்த திருவாலங்காட்டு எம் அடிகள் ஆவார்.

 
பாடல் எண் : 7
நுணங்குமறைபாடி ஆடிவேடம் பயின்றாரும்,
இணங்குமலைமகளோடு இருகூறுஒன்றாய் இசைந்தாரும்,
வணங்குஞ்சிறுத்தொண்டர் வைகல்ஏத்தும் வாழ்த்துங்கேட்டு
அணங்கும்பழையனூர் ஆலங்காட்டுஎம் அடிகளே.

         பொழிப்புரை :நுட்பமான ஒலிக் கூறுகளை உடைய வேதங்களைப் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் பல்வேறு திருவுருவங்களைக் கொள்பவரும், தம்மோடு இணைந்த பார்வதிதேவியுடன் இருவேறு உருவுடைய ஓருருவாக இசைந்தவரும், ஆகிய பெருமானார் தம்மை வணங்கும் அடக்கமுடைய தொண்டர்கள் நாள்தோறும் பாடும் வாழ்த்துக்களைக் கேட்டு தெய்வத் தன்மை மிகுந்து தோன்றும் பழையனூரைச் சேர்ந்த திருவாலங்காட்டு எம் அடிகள் ஆவார்.

பாடல் எண் : 8
கணையும்வரிசிலையும் எரியுங்கூடிக் கவர்ந்துஉண்ண,
இணையில்எயின்மூன்றும் எரித்திட்டார்எம் இறைவனார்,
பிணையும்சிறுமறியும் கலையும்எல்லாம் கங்குல்சேர்ந்து
அணையும்பழையனூர் ஆலங்காட்டுஎம் அடிகளே.

         பொழிப்புரை :அம்பு வில் நெருப்பு ஆகியன கூடிக் கவர்ந்து உண்ணுமாறு ஒப்பற்ற முப்புரங்களை எரித்தவராகிய எம் இறைவர், பெண் மான் ஆண்மான் அவற்றின் குட்டிகள் ஆகியன இரவிடைச் சென்றணையும் பழையனூரைச் சேர்ந்த ஆலங்காட்டு எம் அடிகள் ஆவார்.
  
பாடல் எண் : 9
கவிழமலைதரளக் கடகக்கையால் எடுத்தான்தோள்
பவழநுனைவிரலால் பையஊன்றிப் பரிந்தாரும்,
தவழுங்கொடிமுல்லை புறவஞ்சேர நறவம்பூத்து
அவிழும்பழையனூர் ஆலங்காட்டுஎம் அடிகளே.

         பொழிப்புரை :கயிலை மலை நிலை குலையுமாறு முத்துக்கள் பதித்த வீரக் கடகம் அணிந்த தன் கைகளால் எடுத்த இராவணனின் தோள் வலியைத் தம் பவழம் போன்ற கால்விரல் நுனியால் மெல்ல ஊன்றி அடர்த்துப் பின் அவனுக்கு இரங்கி அருள் புரிந்த சிவபிரானார் முல்லைக்கொடிகள் முல்லை நிலத்தின்கண் தவழ்ந்து படர நறவக் கொடிகள் மலர்களைப் பூத்து விரிந்து நிற்கும் பழையனூரைச் சேர்ந்த ஆலங்காட்டு எம் அடிகள் ஆவார்.
  
பாடல் எண் : 10
பகலும்இரவுஞ்சேர் பண்பினாரும், நண்புஓராது
இகலும்இருவர்க்கும் எரியாய்த்தோன்றி நிமிர்ந்தாரும்,
புகலும்வழிபாடு வல்லார்க்குஎன்றும் தீயபோய்
அகலும்,பழையனூர் ஆலங்காட்டுஎம் அடிகளே.

         பொழிப்புரை :பகல் இரவு போன்ற வெண்மை கருமை நிறங்களைக் கொண்ட நான்முகனும் திருமாலும் தங்களிடையே உள்ள உறவு முறையையும் கருதாது யார் தலைவர் என்பதில் மாறுபட்டு நிற்க அவ்விருவர்க்கும் இடையே எரியுருவாய்த் தோன்றி ஓங்கி நின்றவரும் ஆகம நூல்கள் புகலும் வழிபாடுகளில் தலை நிற்கும் அடியவர்க்குத் தீயன போக்கி அருள்புரிபவரும் ஆகிய பெருமான் பழையனூர்ஆலங்காட்டு எம் அடிகள் ஆவார்.

பாடல் எண் : 11
போழம்பலபேசிப் போதுசாற்றித் திரிவாரும்
வேழம்வருமளவும் வெயிலேதுற்றித் திரிவாரும்
கேழல்வினைபோகக் கேட்பிப்பாரும் கேடிலா
ஆழ்வர்பழையனூர் ஆலங்காட்டுஎம் அடிகளே.

         பொழிப்புரை :மாறுபட்ட சொற்களைப் பேசியும், காலத்துக்கு ஏற்றவாறு உண்மையல்லாதவைகளைச் சொல்லியும் திரியும் புறச்சமயத்தவரும், நன்மையல்லாதவற்றை உபதேசங்களாகக் கூறுபவரும், யானைத் தீ வரும் அளவும் வெயிலிடை உண்டு திரியும் மதவாதிகளுமாகிய புறச்சமயிகளைச் சாராது தம்மைச் சார்ந்த அடியவர்களைப் பற்றிய வினைகள் அகலுமாறு அவர்கட்கு உபதேசங்களைப் புரியச் செய்பவராகிய அழிவற்ற ஆளுமையுடையவர் ஆலங்காட்டு எம் அடிகள் ஆவார்.

பாடல் எண் : 12
சாந்தம் கமழ்மறுகில் சண்பைஞான சம்பந்தன்
ஆந்தண் பழையனூர் ஆலங்காட்டுஎம் அடிகளை
வேந்தன் அருளாலே விரித்தபாடல் இவைவல்லார்
சேர்ந்த இடம் எல்லாம் தீர்த்தம்ஆகச் சேர்வாரே.

         பொழிப்புரை :சந்தனம் கமழும் திருவீதிகளை உடைய சண்பைப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் அழகிய தண்ணிய ஆலங்காட்டு வேந்தனாக விளங்கும் அவ்விறைவன் திருவருளாலே போற்றி விரித்தோதிய இத்திருப்பதிகப் பாடல்களை வல்லவர்கள் சேர்ந்த இடங்களெல்லாம் புனிதமானவைகளாகப் பொருந்தப் பெறுவர்.

                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------

திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

         நாவரசர் மெய்மை நிலை வழுவாத மேன்மை நெறி விழுக்குடிமைச் செம்மையினார் பழையனூர்த் திருவாலங்காட்டு இறைவனைப் பணிந்து பாடியவற்றுள் ஒன்று இத்திருப்பதிகம்

பெரிய புராணப் பாடல் எண் : 341
அம்மலர்சீர்ப் பதியைஅகன்று
         அயல்உளவாம் பதிஅனைத்தின்
மைம்மருவும் களத்தாரை
         வணங்கிமகிழ் வொடும்போற்றி,
மெய்ம்மைநிலை வழுவாத
         வேளாள விழுக்குடிமைச்
செம்மையினார் பழையனூர்த்
         திருஆல வனம்பணிந்தார்.

         பொழிப்புரை : திருப்பாசூர் என்னும் அவ்வழகிய சிறந்த திருப்பதியை நீங்கி, அருகில் உள்ள பதிகள் எல்லாவற்றிற்கும் சென்று நஞ்சு விளங்கும் கழுத்தினை உடைய இறைவரை வணங்கி, மகிழ்வோடும் போற்றிப் பின்னர், மெய்ம்மை நிலையினின்றும் சற்றும் தவறாத மேன்மையும், நெறியில் வாழும் தூய குடிமையும் செம்மையும் உடையவர்களான வேளாளர்கள் வாழ்கின்ற பழையனூர்த் திருவாலங்காட்டைப் பணிந்தவராய்.


பெ. பு. பாடல் எண் : 342
"திருவாலங் காடுஉறையும்
         செல்வர்தாம்" எனச்சிறப்பின்
ஒருவாத பெருந்திருத்தாண்
         டகம்முதலாம் ஓங்குதமிழ்ப்
பெருவாய்மைத் தொடைமாலை
         பலபாடி, பிறபதியும்
மருவுஆர்வம் பெறவணங்கி,
         வடதிசைமேல் வழிக்கொள்வார்.

         பொழிப்புரை : `திருவாலங்காடு உறையும் செல்வர் தாமே` என நிறைவுறும், என்றும் நீங்காத சிறப்பையுடைய பெருந்திருத் தாண்டகப் பதிகம் முதலாக ஓங்கும் பெருவாய்மைத் தமிழ் மாலைகள் பலவற்றையும் பாடிப் பிறபதிகளையும் பொருந்திய ஆர்வம் மீதூர வணங்கி, அங்கிருந்து வடதிசை நோக்கிச் செல்வாராய்.

         குறிப்புரை : `திருவாலங்காடுறையும் செல்வர் தாமே` என நிறைவுறும் திருப்பதிகம் `ஒன்றா வுலகனைத்தும்` (தி.6 ப.78) எனத் தொடங்கும் திருத்தாண்டகமாகும். இத்தாண்டகம் முதலாகத் `தொடை மாலை பல பாடி` என்றாரேனும் இதுபொழுது கிடைத்திருக்கும் பதிகம் ஒன்றேயாம். அது `வெள்ளநீர்` (தி.4 ப.68) எனத் தொடங்கும் திருநேரிசைப் பதிகம் ஆகும். பெருந்திருத்தாண்டகம் எனச் சேக்கிழார் குறிப்பன இத் திருப்பதிகமும், `அரியானை` (தி.6 ப.1) எனத் தொடங்கும் தில்லைத் திருத்தாண்டகமுமாம்.
      
திருநாவுக்கரசர் திருப்பதிகங்கள்


4. 068    திருவாலங்காடு                      திருநேரிசை
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
வெள்ளநீர்ச் சடையர் போலும்,
         விரும்புவார்க்கு எளியர் போலும்,
உள்உளே உருகி நின்றுஅங்கு
         உகப்பவர்க்கு அன்பர் போலும்,
கள்ளமே வினைகள் எல்லாம்
         கரிசுஅறுத் திடுவர் போலும்
அள்ளல்அம் பழனை மேய
         ஆலங்காட்டு அடிக ளாரே.

         பொழிப்புரை : வயல்களில் சேறு நிரம்பிய பழையனூரை அடுத்த திருவாலங்காட்டுப் பெருமான் கங்கை சூடிய சடையினராய் , விரும்புபவர்களுக்கு எளியவராய் , உள்ளத்திலே இறை தியானத்தால் நெகிழ்ச்சியுற்று மகிழும் அடியவர்பால் அன்பராய் , நுகர்வோர் காரணம் உணராத வகையில் நுகர்விக்கும் இரு வினைகளின் மாசுகளைப் போக்குபவர் ஆவார் .


பாடல் எண் : 2
செந்தழல் உருவர் போலும்,
         சினவிடை யுடையர் போலும்,
வெந்தவெண் நீறு கொண்டு
         மெய்க்குஅணிந் திடுவர் போலும்,
மந்தமாம் பொழில்ப ழனை
         மல்கிய வள்ளல் போலும்,
அந்தம்இல் அடிகள் போலும்,
         ஆலங்காட்டு அடிக ளாரே.

         பொழிப்புரை : ஆலங்காட்டு அடிகளார் செந்தழல் நிறத்தவராய் , கோபம் உடைய காளையை உடையவராய் , வெண்ணீற்றைத் திருமேனியில் அணிபவராய் , தென்றல் வீசும் சோலைகளை உடைய பழையனூரில் உறையும் வள்ளலாராய்த் தமக்கு ஒரு காலத்தும் இறுதி யில்லாத பெருமானாய் உள்ளார் .


பாடல் எண் : 3
கண்ணினால் காம வேளைக்
         கனல்எழ விழிப்பர் போலும்,
எண்ணிலார் புரங்கள் மூன்றும்
         எரிஉணச் சிரிப்பர் போலும்,
பண்ணின்ஆர் முழவம் ஓவாப்
         பைம்பொழில் பழனை மேய
அண்ணலார் எம்மை ஆளும்
         ஆலங்காட்டு அடிக ளாரே.

         பொழிப்புரை : நம்மை அடிமை கொள்ளும் ஆலங்காட்டுப் பெருமான் நெற்றிக்கண்ணால் கருவேள் ஆகிய மன்மதனைத் தீயினால் சாம்பலாகுமாறு விழித்தவரும் , பகைவருடைய மும்மதில்களும் தீக்கு இரையாகுமாறு சிரித்தவரும் , பண்ணுக்கு ஏற்ப ஒலிக்கும் முழாவின் ஒலி நீங்காததும் , சோலைகளை உடையதுமான பழையனூரில் விரும்பித்தங்கிய தலைவரும் ஆவார் .


பாடல் எண் : 4
காறிடு விடத்தை உண்ட
         கண்டர்எண் தோளர் போலும்,
தூறுஇடு சுடலை தன்னில்
         சுண்ணவெண் நீற்றர் போலும்,
கூறுஇடும் உருவர் போலும்
         குளிர்பொழில் பழனை மேய
ஆறுஇடு சடையர் போலும்
         ஆலங்காட்டு அடிக ளாரே.

         பொழிப்புரை : குளிர்ந்த சோலைகளை உடைய பழையனூரைச் சேர்ந்த , கங்கை சூடிய ஆலங்காட்டுப் பெருமான் கொல்லுகின்ற விடத்தை உண்ட கழுத்தினராய் , எட்டுத் தோளினராய்த் தூறுகள் மண்டிக் கிடக்கும் சுடுகாட்டு வெள்ளிய சாம்பலைப் பூசியவராய்ப் பார்வதிக்காக இடப்பாகத்தைப் பிரித்துக் கொடுத்துப் பார்வதிபாகராம் உருவினராய் உள்ளார் .


பாடல் எண் : 5
பார்த்தனோடு அமர் பொருது
         பத்திமை காண்பர் போலும்,
கூர்த்தவாய் அம்பு கோத்துக்
         குணங்களை அறிவர் போலும்,
பேர்த்தும் ஓர்ஆவ நாழி
         அம்பொடும் கொடுப்பர் போலும்,
தீர்த்தமாம் பழனை மேய
         திருஆலங் காட னாரே.

         பொழிப்புரை :பழையனூரையடுத்த , பாவத்தைப் போக்கும் தூய்மையை உடைய ஆலங்காட்டுப் பெருமான் பார்த்தனோடு போரிட்டு அவனுடைய பக்தியைக் கண்டவராய் , கூர்மையான நுனியை உடைய அம்புகளைக் கோத்து அவன் குணங்களை அறிந்தவராய்ப் பின்னும் ஒரு அம்புப் புட்டிலை அத்திரத்தோடு அவனுக்கு வழங்கியவராய் உள்ளார் .


பாடல் எண் : 6
வீட்டினார் சுடுவெண் நீறு
         மெய்க்குஅணிந் திடுவர் போலும்,
காட்டில்நின்று ஆடல் பேணும்
         கருத்தினை உடையர் போலும்,
பாட்டினார் முழவம் ஓவாப்
         பைம்பொழில் பழனை மேயார்,
ஆட்டினார் அரவம் தன்னை
         ஆலங்காட்டு அடிக ளாரே.

         பொழிப்புரை : ஆலங்காட்டுப் பெருமான் இறந்தவர்களைக் கொளுத்திய சாம்பலை உடலில் பூசியவராய்ச் சுடுகாட்டிலிருந்து கூத்தாடுதலை விரும்பும் கருத்தினை உடையவராய்ப் பாம்பினை ஆட்டுபவராய்ப் பாடுதலை உடையவராய் , முழாவின் ஒலி நீங்காததும் , பசுமையான சோலைகளை உடையதுமான பழையனூரை விரும்பி உறைகின்றார் .


பாடல் எண் : 7
தாள்உடைச் செங் கமலத்
         தடங்கொள்சே வடியர் போலும்,
நாள்உடைக் காலன் வீழ
         உதைசெய்த நம்பர் போலும்,
கோள்உடைப் பிறவி தீர்ப்பார்,
         குளிர்பொழில் பழனை மேய
ஆள்உடை அண்ணல் போலும்
         ஆலங்காட்டு அடிக ளாரே.

         பொழிப்புரை : குளிர்ந்த சோலைகளை உடைய பழையனூரை அடுத்த ஆலங்காட்டுப் பெருமான் தண்டினை உடைய செங் கமலப்பூப் போன்ற பெருமை பொருந்திய திருவடிகளை உடையவராய் , தனக்கு உயிர்வாழ வேண்டிய நாள்கள் இன்னும் பலவாக உடைய இயமன் அழியுமாறு உதைத்த , நம்மால் விரும்பப்படும் தலைவராய் , யாம் வினைவயத்தாற் கொள்ளுதற்குரிய பிறவிகளைப் போக்குபவராய் நம்மை அடிமையாகக்கொள்ளும் தலைவராக உள்ளார் .


பாடல் எண் : 8
கூடினார் உமை தனோடே
         குறிப்புடை வேடம் கொண்டு,
சூடினார் கங்கை யாளை,
         சுவறிடு சடையர் போலும்,
பாடினார் சாம வேதம்,
         பைம்பொழில் பழனை மேயார்,
ஆடினார் காளி காண,
         ஆலங்காட்டு அடிக ளாரே.

         பொழிப்புரை : பசுமையாகிய சோலைகளை உடைய பழையனூரை விரும்புபவராகிய ஆலங்காட்டுப் பெருமான் காதற் குறிப்புடைய வேடத்தைக் கொண்டு பார்வதி பாகராகிக் கங்கையைச் சூடி அதன் பெருக்கைக் குறைத்த சடையினராய்ச் சாமவேதம் பாடினவராய்க் காளிதேவி காண ஆடிய பெருமானாராவார் .


பாடல் எண் : 9
வெற்றுஅரைச் சமண ரோடு
         விலைஉடைக் கூறை போர்க்கும்
ஒற்றரைச் சொற்கள் கொள்ளார்
         குணங்களை உகப்பர் போலும்,
பெற்றமே உகந்துஅங்கு ஏறும்
         பெருமையை உடையர் போலும்,
அற்றங்கள் அறிவர் போலும்,
         ஆலங்காட்டு அடிக ளாரே.

         பொழிப்புரை : ஆலங்காட்டு அடிகளார் ஆடையற்ற சமணர்களோடு விலைமதிப்புடைய ஆடைகளைப் போர்க்கும் புத்தர்கள் பேசும் ஒன்றும் பாதியுமாகிய சொற்களை ஏற்றுக் கொள்ளாத சிவனடியார்களுடைய குணங்களை விரும்பியவராய், விரும்பிக் காளையை வாகனமாகக் கொள்ளும் பெருமையை உடையவராய்ப் பிறர் அறியாதவாறு மறைத்துச் செய்யும் பாவங்களை அறியும் ஞான முடையவராய் உள்ளார் .


பாடல் எண் : 10
மத்தனாய் மலை எடுத்த
         அரக்கனைக் கரத்தோடு ஒல்க
ஒத்தினார் திருவி ரலால்
         ஊன்றியிட்டு அருள்வர் போலும்,
பத்தர்தம் பாவம் தீர்க்கும்
         பைம்பொழில் பழனை மேய
அத்தனார் நம்மை ஆள்வார்
         ஆலங்காட்டு அடிக ளாரே.

         பொழிப்புரை : ஆலங்காட்டுப் பெருமான் செருக்குற்றவனாய்க் கயிலையைப் பெயர்த்த இராவணனைக் கைகளோடு தளருமாறு விரலை ஊன்றிப் பின் அவனுக்கு அருள் செய்தவராய், பக்தர்களுடைய தீவினைகளைத் தீர்ப்பவராய், பசுமையான சோலைகளை உடைய பழையனூரை விரும்பி உறையும் தலைவராய் நம்மை அடிமை கொள்பவராய் உள்ளார்.

                                             திருச்சிற்றம்பலம்



         6. 078     திருவாலங்காடு           திருத்தாண்டகம்
                                         திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
ஒன்றா உலகுஅனைத்தும் ஆனார் தாமே,
         ஊழிதோறு ஊழி உயர்ந்தார் தாமே,
நின்றாகி எங்கும் நிமிர்ந்தார் தாமே,
         நீர்வளிதீ ஆகாசம் ஆனார் தாமே,
கொன்றுஆடும் கூற்றை உதைத்தார் தாமே,
         கோலப் பழனை உடையார் தாமே,
சென்றுஆடு தீர்த்தங்கள் ஆனார் தாமே,
         திருஆலங் காடுஉறையும் செல்வர் தாமே.

         பொழிப்புரை :தாமே கலந்து உலகங்கள் யாவும் ஆனவரும், ஊழிகள் தோறும் பல உயிர்களை வீடேற்றி உயர்ந்தவரும் , ஒருநிலையே நின்று எல்லா இடங்கட்கும் உரியவராய்ப் பரந்தவரும் , நீரும் வளியும் தீயும் ஆகாசமுமாகி நின்றவரும் , கொன்று திரிகின்ற கூற்றுவனை உதைத்தவரும் , அழகிய பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும் , தேடிச்சென்று மூழ்கும் தீர்த்தங்கள் ஆனவரும் திருவாலங்காட்டுறையும் செல்வரே ஆவார் .


பாடல் எண் : 2
மலைமகளைப் பாகம் அமர்ந்தார் தாமே,
         வானோர் வணங்கப் படுவார் தாமே,
சலமகளைச் செஞ்சடைமேல் வைத்தார் தாமே,
         சரண்என்று இருப்பார்கட்கு அன்பர் தாமே,
பலபலவும் வேடங்கள் ஆனார் தாமே,
         பழனை பதியா உடையார் தாமே,
சிலைமலையா மூஎயிலும் அட்டார் தாமே,
         திருஆலங் காடுஉறையும் செல்வர் தாமே.

         பொழிப்புரை :மலைமகளைத் தம் உடலிற்பாகமாக விரும்பிக் கொண்டவரும் , வானோரால் வணங்கப்படுபவரும் , கங்கையாளைத் தம் செஞ்சடைமேல் வைத்தவரும் , சரண்புக்குத் தம் செயல் அற்று இருப்பார்க்கு அன்பர் ஆனவரும் , பற்பல வேடங்களைப் புனைபவரும் , பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும் , மலையை வில்லாகக் கொண்டு மும்மதில்களையும் அழித்தவரும் திருவாலங் காட்டுறையும் செல்வரே ஆவார் .


பாடல் எண் : 3
ஆஉற்ற ஐந்தும் உகந்தார் தாமே,
         அளவுஇல் பெருமை உடையார் தாமே,
பூஉற்ற நாற்றமாய் நின்றார் தாமே,
         புனிதப் பொருள்ஆகி நின்றார் தாமே,
பாஉற்ற பாடல் உகப்பார் தாமே,
         பழனை பதியா உடையார் தாமே,
தேவுற்று அடிபரவ நின்றார் தாமே,
         திருஆலங் காடுஉறையும் செல்வர் தாமே.

         பொழிப்புரை :பசுவிடத்துப் பொருந்திய ஐந்து பொருள்களையும் விரும்பியவரும். அளவிறந்த பெருமையுடையவரும், மலரின்கண் மணம்போல எல்லாப் பொருள்களிலும் நுண்ணியராய் நிறைந்து நின்றவரும் , பா என்னும் ஓசையாம் உறுப்புப் பொருந்திய பாட்டினை விரும்புபவரும் , பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும் , தேவர் பலரும் அடைந்து அடிபரவ நின்றவரும் திருவாலங்காட்டுறையும் செல்வரே ஆவார் .


பாடல் எண் : 4
நாறுபூங் கொன்றை முடியார் தாமே,
         நான்மறையோடு ஆறுஅங்கம் சொன்னார் தாமே,
மாறுஇலா மேனி உடையார் தாமே,
         மாமதியம் செஞ்சடைமேல் வைத்தார் தாமே,
பாறினார் வெண்தலையில் உண்டார் தாமே,
         பழனை பதியா உடையார் தாமே,
தேறினார் சித்தத்து இருந்தார் தாமே,
         திருாலங் காடுஉறையும் செல்வர் தாமே.

         பொழிப்புரை :மணங்கமழும் கொன்றை மலரைச் சூடிய முடியினரும் , மறை நான்கும் அங்கம் ஆறும் சொன்னவரும் , நரைத்துத் திரைத்து மூத்து விளிதல் இல்லாத மேனியை உடையவரும் , அழகிய பிறையைத் தஞ்சடைமேல் வைத்தவரும், அழிந்தாருடைய வெள்ளிய தலையோட்டில் பிச்சை ஏற்று உண்டவரும் , பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும் , தம் இயல்புகளைத் தெளிவாக உணர்ந்த மெஞ் ஞானியரின் சித்தத்தில் இருந்தவரும் திருவாலங்காட்டுறையும் செல்வரே ஆவார் .


பாடல் எண் : 5
அல்லும் பகலுமாய் நின்றார் தாமே,
         அந்தியும் சந்தியும் ஆனார் தாமே,
சொல்லும் பொருள்எலாம் ஆனார் தாமே,
         தோத்திரமும் சாத்திரமும் ஆனார் தாமே,
பல்உரைக்கும் பாஎலாம் ஆனார் தாமே,
         பழனை பதியா உடையார் தாமே,
செல்லும் நெறிகாட்ட வல்லார் தாமே,
         திருஆலங் காடுஉறையும் செல்வர் தாமே.

         பொழிப்புரை :இரவும் பகலுமாய் நின்றவரும் , அந்தியும் சந்தியும் ஆனவரும் , சொல்லும் , பொருளும் ஆகிய எல்லாப் பொருள்களும் ஆனவரும் , தோத்திரமும் சாத்திரமும் ஆனவரும் , மற்றை உலகியலுரைக்கும் எல்லாப் பாக்களும் ஆனவரும் , பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும் , செல்லுதற்குரிய வழியைக் காட்ட வல்ல வரும் திருவாலங்காட்டுறையும் செல்வரே ஆவார் .


பாடல் எண் : 6
தொண்டாய்ப் பணிவார்க்கு அணியார் தாமே,
         தூநீறு அணியும் சுவண்டர் தாமே,
தண்தா மரையானும் மாலும் தேடத்
         தழல்உருவாய் ஓங்கி நிமிர்ந்தார் தாமே,
பண்தான இசைபாட நின்றார் தாமே,
         பழனை பதியா உடையார் தாமே,
திண்தோள்கள் எட்டும் உடையார் தாமே,
         திருஆலங் காடுஉறையும் செல்வர் தாமே.

         பொழிப்புரை :தொண்டராய்ப் பணிவார்க்கு அருகில் உள்ள வரும் , தூய வெண்ணீற்றையணிந்து நல்லநிறமுடையவரும் , குளிர்ந்த தாமரை மலரில் உறையும் நான்முகனும் திருமாலும் தேடத் தழற் பிழம்பாய் நிமிர்ந்து ஓங்கியவரும் , பழைமையான இசையில் பாட அது கேட்டு மகிழ்ந்து நின்றவரும் , பழையனூரைத் தமக்கு உரியதாக உடையவரும் , வலியதோள்கள் எட்டும் உடையவரும் திருவாலங் காட்டுறையும் அடிகளே ஆவார் .


பாடல் எண் : 7
மைஆரும் கண்ட மிடற்றார் தாமே,
         மயானத்தில் ஆடல் மகிழ்ந்தார் தாமே,
ஐயாறும் ஆரூரூம் ஆனைக் காவும்
         அம்பலமும் கோயிலாக் கொண்டார் தாமே,
பைஆடு அரவம் அசைத்தார் தாமே,
         பழனை பதியா உடையார் தாமே,
செய்யாள் வழிபட நின்றார் தாமே,
         திருஆலங் காடுஉறையும் செல்வர் தாமே.

         பொழிப்புரை :கருமை பொருந்திய மிடற்றினை உடையவரும் , சுடுகாட்டில் மகிழ்ந்து ஆடினவரும் , ஐயாறும் , ஆரூரும் , ஆனைக்காவும் தில்லையம்பலமும் கோயிலாகக் கொண்டவரும் , படம் விரித்தாடும் பாம்பைக் கச்சையாகவும் கங்கணமாகவும் பிறவாகவும் கட்டியவரும் , பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும் , திருமகள் வழிபட அவட்கு வரமளித்து நின்றவரும் திருவாலங் காட்டுறையும் செல்வரே யாவர் .


பாடல் எண் : 8
விண்முழுதும் மண்முழுதும் ஆனார் தாமே,
         மிக்கோர்கள் ஏத்தும் குணத்தார் தாமே,
கண்விழியாக் காமனையும் காய்ந்தார் தாமே,
         காலங்கள் ஊழி கடந்தார் தாமே,
பண்இயலும் பாடல் உகப்பார் தாமே,
         பழனை பதியா உடையார் தாமே,
திண்மழுவாள் ஏந்து கரத்தார் தாமே,
         திருாலங் காடுஉறையும் செல்வர் தாமே.

         பொழிப்புரை :விண்முழுதுமாய் மண்முழுதுமாய் வியாபித்து நின்றவரும் , உயர்ந்தோர்கள் புகழும் குணத்தினரும் , நெற்றிக் கண்ணை விழித்துக் காமனைக் காய்ந்தவரும் , காலங்களாகிய ஊழிகள் பலவற்றைக் கடந்தவரும் , பண்கள் உலவுதற்கு இடமாகிய பாடல்களை விரும்புபவரும் , பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும் , வலிய மழுவாயுதத்தை ஏந்திய கரத்தவரும் திருவாலங்காட்டுறை செல்வரே ஆவார் .


பாடல் எண் : 9
கார்ஆர் கடல்நஞ்சை உண்டார் தாமே,
         கயிலை மலையை உடையார் தாமே,
ஊராஏ கம்பம் உகந்தார் தாமே,
         ஒற்றியூர் பற்றி இருந்தார் தாமே,
பாரார் புகழப் படுவார் தாமே,
         பழனை பதியா உடையார் தாமே,
தீராத வல்வினைநோய் தீர்ப்பார் தாமே,
         திருாலங் காடுஉறையும் செல்வர் தாமே.

         பொழிப்புரை :கடலில் தோன்றிய கரிய நஞ்சை உண்டவரும் , கயிலை மலையை உடையவரும், தமக்குரிய ஊராக ஏகம்பத்தை விரும்பிக் கொண்டவரும், தமக்குரித்தல்லாததாய் ஒற்றியாகப் பெற்ற ஊர் என்று கொள்ளத்தகும் ஒற்றியூரை நிலையாகப் பற்றி நின்றவரும் , உலகத்தாரால் உயர்த்துப் புகழப்படுபவரும் , பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும் , வலிய வினையாகிய தீராத நோயைத் தீர்ப்பவரும் திருவாலங்காட்டுறையும் செல்வரேயாவர்.


பாடல் எண் : 10
மாலைப் பிறைசென்னி வைத்தார் தாமே,
         வண்கயிலை மாமலையை வந்தி யாத
நீலக் கடல்சூழ் இலங்கைக் கோனை
         நெரிய விரலால் அடர்த்தார் தாமே,
பால்ஒத்த மேனி நிறத்தார் தாமே,
         பழனை பதியா உடையார் தாமே,
சீலத்தார் ஏத்தும் திறத்தார் தாமே,
         திருஆலங் காடுஉறையும் செல்வர் தாமே.

         பொழிப்புரை :மாலைக் காலத்துப் பிறையைச் சென்னியில் சேர்த்தவரும் , வளமிக்க கயிலை மலையை வணங்காதவனும் கரிய கடலால் சூழப்பட்ட இலங்கைக்கு அரசனுமாகிய இராவணனுடைய உடல் நெரியுமாறு கால்விரலை ஊன்றி வருத்தினவரும் , பால்போலும் நிறங்கொண்ட மேனியினரும் , பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும் , ஒழுக்கமுடைய உயர்ந்தோர் ஏத்தும் கூறுபாட்டில் அமைந்த அறக்கருணை உடையவரும் திருவாலங்காட்டுறையும் செல்வரே ஆவார் .

                                             திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------------

சுந்தரர் திருப்பதிக வரலாறு:

         சுவாமிகள். சங்கிலியாரைப் பிரிந்து திருவொற்றியூரை நீங்கியதால் இரு கண்களையும் இழந்து, வழிப்போவோர் வழி காட்ட, திருவெண்பாக்கம் சென்று தொழுது, பெருமான் அருளால் ஊன்றுகோல் பெற்று, பழையனூர் உழைச் சென்று, காரைக் காலம்மையார் தலையால் நடந்த தலம் என்று திருவாலங்காட்டை மிதியாது அதன் அயலில் நின்று பாடியருளியது இத் திருப்பதிகம்.

ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணப் பாடல் எண் : 282
அங்கணர்தம் பதிஅதனை அகன்றுபோய், அன்பருடன்
பங்கயப்பூந் தடம்பணைசூழ் பழையனுர் உழைஎய்தித்
தங்குவார், அம்மைதிருத் தலையாலே வலங்கொள்ளும்
திங்கண்முடி யார்ஆடும் திருவாலங் காட்டின்அயல்.

         பொழிப்புரை : நெற்றிக்கண்ணை உடைய இறைவரின் திருப்பதியினின்றும் நீங்கிப்போய், அன்பர்களுடன் தாமரை மலர்கள் நிறைந்த குளங்கள் புறமே சூழ இருக்கும் வயல்களை உடைய பழையனூர் வந்து சேர்ந்து, காரைக்கால் அம்மையார் தலையாலே வலங்கொள நின்ற, இளம்பிறையை முடியில் அணிந்த பெருமான் திருக்கூத்தியற்றி வரும் திருவாலங்காடு என்னும் பதியின் அயலாக,

         குறிப்புரை : நம்பிகள் திருவாலங்காட்டின் உட்செல்லாது அயலே நின்று, இறைவரின் திருக்கோயிலை நோக்கியவாறே தொழுதற்குக் காரணம், அம்மையார் அக்கோயிலை வலங்கொண்டும் வணங்கியும் இருந்தருளும் காரணத்தாலாம். ஆளுடைய பிள்ளையார் இத்திருப்பதிக்குச் சென்றபொழுதும் இந்நியமமே கொண்டு வழிபட்டமையும் நினைவுகூரத் தக்கதாம்.


பெ. பு. பாடல் எண் : 283
முன்நின்று தொழுதுஏத்தி,
         "முத்தா"என்று எடுத்துஅருளிப்
பன்னும்இசைத் திருப்பதிகம்
         பாடி,மகிழ்ந்து ஏத்துவார்,
அந்நின்று வணங்கிப்போய்த்
         திருவூறல் அமர்ந்துஇறைஞ்சிக்
கன்னிமதில் மணிமாடக்
         காஞ்சிமா நகர்அணைந்தார்.

         பொழிப்புரை : முன்பாக நின்று தொழுது போற்றி, `முத்தா முத்தி, என்று தொடங்கும் இசையமைந்த திருப்பதிகத்தைப் பாடி மகிழ்ந்து, அவ்விடத்தினின்றும் நீங்கிச் சென்று, திருவூறல் என்னும் பதியில் தங்கி, வணங்கி, அப்பால் சென்று, அழியாத மதில் சூழ்ந்த அழகிய மாடங்களையுடைய திருக்காஞ்சி மாநகரினை அடைந்தார்.

         குறிப்புரை : `முத்தா முத்தி, என்று தொடங்கும் பதிகம், பழம்பஞ்சுரப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.52).

சுந்தரர் திருப்பதிகம்

7. 052    திருவாலங்காடு              பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
முத்தா முத்தி தரவல்ல
         முகிழ்மென் முலையாள் உமைபங்கா,
சித்தா சித்தித் திறம்காட்டும்
         சிவனே, தேவர் சிங்கமே,
பத்தா பத்தர் பலர்போற்றும்
         பரமா, பழைய னூர்மேய
அத்தா, ஆலங் காடா,உன்
         அடியார்க்கு அடியேன் ஆவேனே.

         பொழிப்புரை : இயல்பாகவே கட்டில்லாதவனே , கட்டுற்ற உயிர்கட் கெல்லாம் வீடளிக்கவல்ல , அரும்புகின்ற மெல்லிய தனங்களை யுடையாளாகிய உமையவளது பாகத்தை உடையவனே , சித்திகளை எல்லாம் உடையவனே , அச்சித்திகளை அடையும் வழியைக் காட்டுகின்ற சிவபெருமானே, தேவர்களாகிய விலங்குகட்குச் சிங்கம் போல்பவனே , அடியார்களுக்குப் பற்றாய் உள்ளவனே , அன்புடையார் பலரும் போற்றும் கடவுளே , பழையனூரை விரும்புகின்ற தலைவனே , திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே , அடியேன் என்றும் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன் .


பாடல் எண் : 2
பொய்யே செய்து புறம்புறமே
         திரிவேன் தன்னைப் போகாமே,
மெய்யே வந்துஇங்கு எனைஆண்ட
         மெய்யா, மெய்யர் மெய்ப்பொருளே,
பைஆடு அரவம் அரைக்கு அசைத்த
         பரமா, பழைய னூர்மேய
ஐயா, ஆலங் காடா,உன்
         அடியார்க்கு அடியேன் ஆவேனே.

         பொழிப்புரை : மனத்தொடு பொருந்தாத செயல்களையே செய்து , அதனால் உனக்கு மிகவும் சேய்மையிலே திரிவேனாகிய என்னை , அங்ஙனம் அகன்றொழியாதவாறு தடுத்து இவ்வுலகில் நேரே வந்து என்னை ஆட்கொண்ட மெய்ம்மையுடையவனே , மெய்ம்மை யுடையவர்க்கு மெய்ப்பொருளாய் உள்ளவனே , படம் எடுத்து ஆடுகின்ற பாம்பை அரையிற் கட்டிய கடவுளே , பழையனூரை விரும்புகின்ற தலைவனே , திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே , அடியேன் என்றும் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன் .


பாடல் எண் : 3
தூண்டா விளக்கின் நற்சோதீ,
         தொழுவார் தங்கள் துயர்தீர்ப்பாய்,
பூண்டாய் எலும்பை, புரம்மூன்றும்
         பொடியாச் செற்ற புண்ணியனே,
பாண்டுஆழ் வினைகள் அவைதீர்க்கும்
         பரமா, பழைய னூர்மேய
ஆண்டா, ஆலங் காடா,உன்
         அடியார்க்கு அடியேன் ஆவேனே.

         பொழிப்புரை : தூண்ட வேண்டாது ஒளிரும் விளக்குப் போலச் சிறந்த ஒளிவடிவினனே , வணங்குவாரது துன்பத்தை நீக்குபவனே , எலும்பையே அணியாகப் பூண்டவனே , முப்புரங்களையும் சாம்பலாகுமாறு அழித்த அறவுருவினனே , முன்பு செய்யப்பட்ட , அழுந்துதற்கு இடமான வினைகளாகிய அவற்றை நீக்கியருளுகின்ற கடவுளே , பழையனூரை விரும்புகின்ற தலைவனே , திருவாலங்காட்டில் எழுந்தருளி யிருப்பவனே , அடியேன் , உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன் .


பாடல் எண் : 4
மறிநேர் ஒண்கண் மடநல்லார்
         வலையில் பட்டு மதிமயங்கி
அறிவே அழிந்தேன், ஐயாநான்,
         மைஆர் கண்டம் உடையானே,
பறியா வினைகள் அவைதீர்க்கும்
         பரமா, பழைய னூர்மேய
அறிவே, ஆலங் காடா,உன்
         அடியார்க்கு அடியேன் ஆவேனே.

         பொழிப்புரை : தலைவனே , கருமைபொருந்திய கண்டத்தை யுடையவனே , தீர்க்க இயலாத வினைகளையெல்லாம் தீர்த்தருளுகின்ற கடவுளே , பழையனூரை விரும்புகின்ற அறிவு வடிவானவனே , திருவாலங்காட்டில் எழுந்தருளி யிருப்பவனே , அடியேன் , மான்போலும் ஒளிபொருந்திய கண்களையுடைய , இளைய , அழகிய மாதர் ஆசையாகிய வலையில் அகப்பட்டு , அறிய வேண்டுவனவற்றை அறியாது , அறிவு அடியோடே கெட்டேன் ; அவ்வாறே இனியுங் கெட்டொழியாது , உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன் .


பாடல் எண் : 5
வேல் அங்கு ஆடு தடம்கண்ணார்
         வலையுள் பட்டு,உன் நெறிமறந்து,
மால் அங்கு ஆடி, மறந்து ஒழிந்தேன்,
         மணியே, முத்தே, மரகதமே,
பால் அங்கு ஆடீ, நெய் ஆடீ,
         படர்புன் சடையாய், பழையனூர்
ஆலங் காடா, உன்னுடைய
         அடியார்க்கு அடியேன் ஆவேனே.

         பொழிப்புரை : மாணிக்கம் போல்பவனே , முத்துப் போல்பவனே , மரகதம் போல்பவனே, பால் முழுக்கு ஆடுபவனே, நெய் முழுக்கு ஆடுபவனே , விரிந்த புல்லிய சடையை யுடையவனே , பழையனூரைச் சார்ந்த திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே , அடியேன் வேல்போலும் , பெரிய கண்களையுடைய மாதராசையாகிய வலையில் அகப்பட்டு , உன்னாற் சொல்லப்பட்ட நெறியை மறந்து , மயக்கம் மிகுந்து என்னையே மறந்தொழிந்தேன் ; இனி அவ்வாறு இராது , என்றும் உன் அடியார்க்கு அடியனாகியே வாழ்வேன் .
   
பாடல் எண் : 6
எண்ணார் தங்கள் எயில்எய்த
         எந்தாய், எந்தை பெருமானே,
கண்ஆய் உலகம் காக்கின்ற
         கருத்தா, திருத்தல் ஆகாதாய்,
பண்ஆர் இசைகள் அவைகொண்டு
         பலரும் ஏத்தும் பழையனூர்
அண்ணா, ஆலங் காடா,உன்
         அடியார்க்கு அடியேன் ஆவேனே.

         பொழிப்புரை : உன்னை மதியாதவரது மதில்களை அழித்த என் தந்தையே , என் தந்தைக்கும் பெருமானே , உலகத்திற்குக் கண்ணாய் நின்று அதனைக் காக்கின்ற முதல்வனே , குற்றம் இல்லாதவனே , பண் பொருந்திய இசைகளைக் கொண்டு பலரும் துதிக்கின்ற பழையனூர்த் தலைவனே , திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே , அடியேன் , என்றும் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன் .

பாடல் எண் : 7
வண்டுஆர் குழலி உமைநங்கை
         பங்கா, கங்கை மணவாளா,
விண்டார் புரங்கள் எரிசெய்த
         விடையாய், வேத நெறியானே,
பண்டுஆழ் வினைகள் பலதீர்க்கும்
         பரமா, பழைய னூர்மேய
அண்டா, ஆலங் காடா,உன்
         அடியார்க்கு அடியேன் ஆவேனே.

         பொழிப்புரை : வண்டுகள் நிறைந்த கூந்தலை உடையவள் ஆகிய ` உமை ` என்னும் நங்கைதன் பாகத்தையுடையவனே , கங்கைக்குக் கணவனே , பகைத்தவரது ஊர்களை எரித்த இடபவாகனனே , வேதநெறியை உடையவனே , முன்பு செய்யப்பட்ட , அழுந்துதற்கு இடமான வினைகள் பலவற்றையும் தீர்க்கின்ற கடவுளே , பழையனூரை விரும்புகின்ற தேவனே , திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே , அடியேன் , என்றும் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன் .


பாடல் எண் : 8
பேழ்வாய் அரவின் அணையானும்
         பெரிய மலர்மேல் உறைவானும்
தாழாது உன்தன் சரண்பணியத்
         தழல்ஆய் நின்ற தத்துவனே,
பாழாம் வினைகள் அவைதீர்க்கும்
         பரமா, பழைய னூர்தன்னை
ஆள்வாய், ஆலங் காடா,உன்
         அடியார்க்கு அடியேன் ஆவேனே.

         பொழிப்புரை : பெரிய வாயையுடைய பாம்பாகிய படுக்கையை உடையவனாகிய திருமாலும் , பெரிதாகிய தாமரை மலர்மேல் இருப்பவனாகிய பிரமனும் விரைவில் உனது முதன்மையை உணர்ந்து உன் திருவடிகளை வணங்குமாறு , தீப்பிழம்பாய் நின்ற மெய்ப் பொருளானவனே , உயிர் , பயனின்றிக் கெடுதற்கு ஏதுவான வினைகளை நீக்கு கின்ற கடவுளே , பழையனூரை ஆள்கின்றவனே , திரு வாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே, அடியேன் , என்றும் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன் .
   
பாடல் எண் : 9
எம்மான் எந்தை மூத்தப்பன்
         ஏழ்ஏழ் படிகால் எமைஆண்ட
பெம்மான், ஈமப் புறங்காட்டில்
         பேயோடு ஆடல் புரிவானே,
பன்மா மலர்கள் அவைகொண்டு
         பலரும் ஏத்தும் பழையனூர்
அம்மா, ஆலங் காடா,உன்
         அடியார்க்கு அடியேன் ஆவேனே.

         பொழிப்புரை : என் தந்தை , என் தந்தைக்கு முன்னோனாகிய தந்தை முதலாக இருவகை ஏழ் தலைமுறைகளில் எங்களை அடிமை கொண்டுள்ள பெருமானே , சுடுகாடாகிய புறங்காட்டில் பேய்களோடு ஆடல் செய்பவனே , பல சிறந்த மலர்களைக்கொண்டு பலரும் வணங்குகின்ற , பழையனூர்க்குத் தலைவனே , திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே , அடியேன் , என்றும் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன் .

பாடல் எண் : 10
பத்தர் சித்தர் பலர்ஏத்தும்
         பரமன் பழைய னூர்மேய
அத்தன் ஆலங் காடன்தன்
         அடிமைத் திறமே அன்பாகிச்
சித்தர் சித்தம் வைத்தபுகழ்ச்
         சிறுவன் ஊரன் ஒண்தமிழ்கள்
பத்தும் பாடி ஆடுவார்
         பரமன் அடியே பணிவாரே.

         பொழிப்புரை : அடியார் பலரும் , சித்தர் பலரும் துதிக்கின்ற கடவுளும் , பழையனூரை விரும்பிய தலைவனும் , ஆகிய திருவாலங்காட்டு இறைவனது அடிமைத் திறத்தின் கண்ணே அன்புடையவராய் , சித்தர்களும் தங்கள் சித்தத்திலே மறவாது வைத்துள்ள புகழையுடைய அடியானாகிய நம்பியாரூரனது இம் மெய்யுணர்வுத் தமிழ்ப் பாடல்களாகிய பத்தினையும் பாடி ஆடுவோர் , சிவபெருமானது திருவடியையே எஞ்ஞான்றும் வணங்கி வாழ்பவராவர் .

                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------

காரைக்கால் அம்மையார் புராணம்

பெரிய புராணப் பாடல் எண் : 55
வடதிசைத் தேசம் எல்லாம்
         மனத்தினும் கடிதில் சென்று,
தொடைஅவிழ் இதழி மாலைச்
         சூலபா ணியனார் மேவும்
படர்ஒளிக் கயிலை வெற்பில்
         பாங்குஅணைந்து, ஆங்குக் காலின்
நடையினைத் தவிர்ந்து, பார்மேல்
         தலையினால் நடந்து சென்றார்.

         பொழிப்புரை : வட திசையிலுள்ள தேயங்களை எல்லாம் மனவேகத்தினும் விரைந்து சென்று, மாலையென மலரும் கொன்றை மாலையை அணிந்தும், கையில் சூலத்தை ஏந்தியும், நின்றருளுகின்ற சிவபெருமான் வீற்றிருக்கும் பேரொளிப் பிழம்பாக விளங்கும் திருக்கயிலையின் அருகு சென்ற அம்மையார், மேலும் காலால் நடந்து செல்லுதலை விடுத்துத் தலையால் நடந்து சென்றார்.

         குறிப்புரை : இதழி - கொன்றை. அது மலருங்கால் மாலையெனத் தோற்றமளிக்கும் ஆதலின் `தொடை அவிழ் இதழி` என்றார். சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருமலையின் அருகே காலால் நடத்தல் தக்கதன்று எனக் கருதியவர், தலையால் நடந்து செல்லலானார். தலையால் நடத்தலாவது, தலைதாழ இருகைகளையும் தரையில் ஊன்ற வைத்து நடப்பதாம். நாவரசர் கைத்தொண்டு செய்த இடம் திருவதிகையென நினைந்து அதனை மிதிக்க அஞ்சி, அருகிருந்த சித்தவடமடத்தில் சுந்தரர் வதிந்ததும், அம்மையார் தலையால் நடந்த இடம் திருவாலங்காடு என நினைந்து அதனை மிதிக்க அஞ்சி, அதன் புறத்தே சம்பந்தர் தங்கியதும் அவரவர் தம் வரலாற்றால் அறியப்பட்டனவாம். அவை இங்கு நினைவு கூர்தற்குரியன.


பெ. பு. பாடல் எண் : 56
தலையினால் நடந்து சென்று
         சங்கரன் இருந்த வெள்ளி
மலையின்மேல் ஏறும் போது,
         மகிழ்ச்சியால் அன்பு பொங்கக்
கலைஇளந் திங்கள் கண்ணிக்
         கண்ணுதல் ஒருபா கத்துச்
சிலைநுதல் இமைய வல்லி
         திருக்கண்நோக்கு உற்றது அன்றே.

         பொழிப்புரை : தலையினால் நடந்து சென்று பெருமான் எழுந்தருளியிருக்கும் கயிலை மலையின் மேல் ஏறும் பொழுது, மகிழ்ச்சி மீதூர்வினால் அன்பு மேன்மேலும் பெருக, இளம் பிறையாகிய மாலையை அணிந்த வில்லைப் போன்ற நெற்றியினை உடைய இறைவனின் இடமருங்கில் அமர்ந்திருக்கும் பார்வதியம்மையின் திருக்கண் பார்வை அப்பொழுது பொருந்தியது.


பெ. பு. பாடல் எண் : 57
அம்பிகை திருவுள் ளத்தின்
         அதிசயித்து அருளித் தாழ்ந்து,
தம்பெரு மானை நோக்கி,
         "தலையினால் நடந்து இங்குஏறும்,
எம்பெரு மான்,ஓர் எற்பின்
         யாக்கைஅன்பு என்னே" என்ன,
நம்பெரு மாட்டிக்கு, அங்கு
         நாயகன் அருளிச் செய்வான்.

         பொழிப்புரை : வரும் அம்மையாரை நோக்கிய பார்வதி அம்மையாரும், தம் திருவுள்ளத்தில் வியப்புக் கொண்டருளி, விரும்பித் தம் பெருமானை நோக்கி, எம் பெருமானே! தலையினால், நடந்து இங்கு ஏறிவரும் ஓர் எலும்புடம்பு பெற்ற இவ்வடிவின் அன்பு என்னே! என்று கேட்க, நம் தலைவியாகிய அம்மைக்கு இறைவரும் அருளிச் செய்வாராய்,


பெ. பு. பாடல் எண் : 58
"வரும்இவள் நம்மைப் பேணும்
         அம்மைகாண் உமையே, மற்றுஇப்
பெருமைசேர் வடிவம் வேண்டிப்
         பெற்றனள்" என்று பின்றை
அருகுவந்து அணைய நோக்கி,
         "அம்மையே" என்னுஞ் செம்மை
ஒருமொழி உலகம் எல்லாம்
         உய்யவே அருளிச் செய்தார்.

         பொழிப்புரை : `உமையே! எலும்புக்கூடாக வரும் இவள் நம்மைப் போற்றி வரும் அம்மையே ஆவள். மற்றும் இப்பேய் வடிவாம் பெருமை பொருந்திய வடிவத்தையும் நம்மிடம் வேண்டிப் பெற்றுக் கொண்டவள்` என்று கூறிய அளவில், அவ்வம்மையாரும் அருகில் வந்து சேரவே, அவரை நோக்கி, அம்மையே! என்னும் செம்மைதரும் ஒப்பற்ற ஒரு மொழியினை உலகமெல்லாம் உய்யும் பொருட்டு அருளிச் செய்தார்.


பெ. பு. பாடல் எண் : 59
அங்கணன் "அம்மையே"என்று
         அருள்செய "அப்பா" என்று
பங்கயச் செம்பொன்  பாதம்
         பணிந்துவீழ்ந்து எழுந்தார் தம்மைச்
சங்கவெண் குழையி னாரும் 
         தாம்எதிர் நோக்கி, "நம்பால்
இங்குவேண் டுவதுஎன்" என்ன
         இறைஞ்சி நின்று இயம்பு கின்றார்.

         பொழிப்புரை : இறைவன் அம்மையே! என்று அருளிச் செய்ய, அம்மையாரும் `அப்பா` என்று தாமரை மலரனைய அழகிய திருவடிகளில் விழுந்து எழுந்தவராகிய அவரை, சங்கினால் ஆகிய வெள்ளிய குழையை அணிந்த இறைவனும் எதிர் நோக்கி, `இவ்விடத்து நம்மிடம் நீ வேண்டும் வரம் யாது? என்றருள,` அவரும் வணங்கி நின்று சொல்வாராகி.


பெ. பு. பாடல் எண் : 60
இறவாத இன்ப அன்பு
         வேண்டிப்பின் வேண்டு கின்றார்,
"பிறவாமை வேண்டும், மீண்டும்
         பிறப்பு உண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும், இன்னும்
         வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போது உன்
         அடியின்கீழ் இருக்க" என்றார்.

         பொழிப்புரை : என்றும் கெடுதலில்லாத இன்ப அன்பினை வேண்டிப் பின்னும் வேண்டுவாராய், `இனிப் பிறவாதிருக்கும் வரம் வேண்டும், மீண்டும் பிறவி உளதாயின் உன்னை என்றும் மறவாது இருக்கும் வரம் வேண்டும், இவற்றோடு இன்னும் ஒன்று வேண்டும், அது, அறவா! நீ ஆடும்போது, நான் மகிழ்ந்துபாடி உன் அடியின்கீழ் இருக்கவும் வேண்டும்` என்று வேண்டினார்.


பெ. பு. பாடல் எண் : 61
கூடுமாறு அருள்கொ டுத்துக்
         "குலவுதென் திசையில் என்றும்
நீடுவாழ் பழன மூதூர்
         நிலவிய ஆலங் காட்டில்
ஆடுமா நடமும் நீகண்டு
         ஆனந்தம் சேர்ந்துஎப் போதும்
பாடுவாய் நம்மை" என்றான்
         பரவுவார் பற்றாய் நின்றான்.

         பொழிப்புரை : அவ்விண்ணப்பத்தைக் கேட்டருளி, தம்மைப் போற்றி வருகின்றவர்களுக்குப் பற்றுக்கோடாய் நிற்கும் இறைவர், தமது திருவடிக்கண் இருக்கும் பேற்றினை வழங்குவாராய், விளக்கமுடைய தென்திசையில் எப்போதும் அழியாத வாழ்வைத் தரும் பழையனூர் என்னும் பழம்பதியில் உள்ள திருவாலங்காட்டில், நாம் ஆடுகின்ற பெருங்கூத்தைக் கண்டு, எப்பொழுதும் மகிழ்வுடன் கூடி எம்மைப்பாடிக் கொண்டு இருப்பாயாக! என்று அருளினார்.


பெ. பு. பாடல் எண் : 62
அப்பரிசு அருளப் பெற்ற
         அம்மையுஞ் செம்மை வேத
மெய்ப்பொருள் ஆனார் தம்மை
         விடைகொண்டு வணங்கிப் போந்து
செப்பஅரும் பெருமை அன்பால்
         திகழ்திரு ஆலங் காடாம்
நல்பதி தலையி னாலே
         நடந்துபுக்கு அடைந்தார் அன்றே.

         பொழிப்புரை : தாம் வேண்டியவாறு அருளைப் பெற்றவராகிய அம்மையாரும், நான்மறைகளின் முடிவாக என்றும் நிலைத்து நிற்பவர் என்று போற்றப்பெறும் இறைவரிடம் விடைபெற்றுக் கொண்டு, வணங்கிச் சென்று, சொலற்கரிய பேரன்பினால், விளங்குகின்ற திருவாலங்காடு எனும் நல்ல திருப்பதியைத் தலையினால் நடந்துசென்று, கோயிலுள் புகுந்து, அப்பெருமானின் திருமுன்பு அடைந்தனர்.

         குறிப்புரை : இறைவனின் திருக்கூத்தை என்றும் பெற்று நிற்கும் பதியாதலின், அதனைக் காலால் மிதிக்க அஞ்சித் தலையால் நடந்து வந்து அடைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 63
ஆலங்காடு அதனில் அண்டம்
         உறநிமிர்ந்து ஆடுகின்ற
கோலங்காண் பொழுது, "கொங்கை
         திரங்கி"என்று எடுத்துத் தங்கு
மூலம் காண்பு அரியார் தம்மை
         மூத்தநல் பதிகம் பாடி,
ஞாலம்கா தலித்துப் போற்றும்
         நடம்போற்றி நண்ணு நாளில்.

         பொழிப்புரை : இவ்வாறு வந்தடைந்த திருவாலங்காட்டில், மேலுள்ள அண்டங்களைப் பொருந்த நிமிர்ந்து ஆடுகின்ற திருக் கோலத்தைக் கண்டபொழுது `கொங்கை திரங்கி` எனத் தொடங்கும் மூத்த நற்பதிகத்தை, எவ்வுயிர்க்கும் தாம் வாழ் முதலாய் இருப்பது அன்றித் தமக்கு ஒரு வாழ்முதல் இல்லாத இறைவரின் திருமுன்பு பாடி, உலகெலாம் விரும்பிப் போற்றிவரும் திருக்கூத்தினைத் தொழுது வாழுகின்ற நாளில்.

         குறிப்புரை : மூத்தபதிகம் - தேவாரத் திருப்பதிகங்கள் எனப் போற்றப் பெறும் பின்னர் எழுந்த பதிகங்களுக்கெல்லாம் இதுவே மூத்தது ஆதலின், இது `மூத்த நற்பதிகம்` (தி.11 பிரபந். 2) என்றழைக்கப் பெறுவதாயிற்று.


பெ. பு. பாடல் எண் : 64
மட்டுஅவிழ்கொன் றையினார்தம்
         திருக்கூத்து முன்வணங்கும்
இட்டமிகு பெருங்காதல்
         எழுந்துஓங்க, வியப்புஎய்தி,
"எட்டிஇல வம்ஈகை"
         எனஎடுத்துத் திருப்பதிகம்
"கொட்டமுழ வம்குழகன்
         ஆடும்"எனப் பாடினார்.

         பொழிப்புரை : நறுமணம் கமழ்கின்ற கொன்றை மாலையை அணிந்த சிவபெருமானின் திருக்கூத்தினை, அவர் திருமுன்பே வணங்கிப் போற்றும் நற்பேற்றால் பொங்கியெழும் விருப்பம். மேன்மேலும் எழ, வியப்பெய்தி `எட்டி இலவம் ஈகை` எனத் தொடங்கி முழவம் கொட்டக் குழகன் ஆடும் எனும் நிறைவுடைய திருப்பாட்டுக்களாலாய திருப்பதிகம் ஒன்றையும் அடுத்துப் பாடினார்.

         குறிப்புரை : `எட்டியிலவம்` (தி.11 பிரபந். 3) எனத் தொடங்கும் திருப்பாடலின் முதலும் இறுதியுமாகவுள்ள தொடர்களை முகந்து ஆசிரியர் அருளிச் செய்திருக்கும் திறம் எண்ணி மகிழ்தற்குரியதாம். இவ்வகையில், அம்மையார் அருளிச் செய்திருக்கும் நான்கு திருப் பதிகங்களுள், முன்குறித்த (பா.1767, 1768) இருபிரபந்தங்களும் கயிலை செல்லும் முன் பாண்டிநாட்டுப் பகுதியிலிருந்து பாடியருளியவை என்பதும், இவ்விருபதிகங்களும் கயிலை சென்று வந்த பின் திருவாலங்காட்டிலிருந்து இறைவன் திருமுன்பு பாடியருளியவை என்பதும் விளங்குகின்றன.


பெ. பு. பாடல் எண் : 65
மடுத்தபுனல் வேணியினார்
         அம்மைஎன மதுரமொழி
கொடுத்துஅருளப் பெற்றாரை,
         குலவியதாண் டவத்தில்அவர்
எடுத்து அருளும் சேவடிக்கீழ்
         என்றும் இருக் கின்றாரை,
அடுத்த பெரும் சீர்பரவல்
         ஆர்அளவு ஆயினது அம்மா.

         பொழிப்புரை : பெருக்கெடுத்த கங்கையைச் சடையில் கொண்ட சிவபெருமான், `அம்மையே` என இனிய மொழியால் அழைத்த ருளப் பெற்றாரை, அப்பெருமான் மகிழ்ந்தாடும் திருக்கூத்தில் எடுத்தருளுகின்ற திருவடிக்கீழ் என்றும் இருக்கின்றாரைப், பொருந்திய பெருஞ் சிறப்பினை எடுத்துப் போற்றும் செயல் எவருடைய அறிவில் அடங்கும்? ஒருவர் அறிவிலும் அடங்காது.


                  காரைக்காலம்மையார் அருளிச் செய்த 
                                    மூத்த திருப்பதிகம் -1

          திருப்பதிகம்’ என்பது தேவாரப் பதிகங்களுக்கு உரிய பெயராயினமையால், அவற்றிற்கு முன்னே தோன்றிய அம்மை பதிகங்கள், ‘மூத்த திருப்பதிகம்’ எனப்பட்டன. திருவாசகத்தில் ‘கோயில் மூத்த திருப்பதிகம்’ என்பது கோயிலின் மற்றைப் பதிகங்கட்கு முன்னர்த் தோன்றியது. அம்மை பேய் வடிவம் பெற்றதற்கு ஏற்பப் பேய்களது வருணனைகளையும், ‘ஆலங்காடு’ என்பதற்கு ஏற்பக் காட்டு வருணனைகளையும் இப்பதிகங்களிற் காணலாம். அம்மை, “நான் மகிழ்ந்து பாடி - அறவா நீ ஆடும்போது உன் அடியின் கீழ் இருக்க” என வேண்டிப் பெற்ற வரத்தின்படி இறைவனது ஆடலை வருகின்ற பதிகத்திற் பாடுவார். ஞானசம்பந்தரது முதற் பதிகம் நட்டபாடைப் பண்ணில் அமைந்தது போலவே அம்மைதன் மூத்த முதற் பதிகமும் நட்டபாடைப் பண்ணில் அமைந்துள்ளது.
  
பாடல் எண் : 1
கொங்கை திரங்கி நரம்பு எழுந்து
         குண்டுகண் வெண்பல் குழிவ யிற்றுப்
பங்கி சிவந்துஇரு பற்கள் நீண்டு
         பரடுஉயர் நீள்கணைக் கால்ஓர் பெண்பேய்
தங்கி அலறி உலறு காட்டில்
         தாழ்சடை எட்டுத் திசையும் வீசி
அங்கம் குளிர்ந்துஅனல் ஆடும் எங்கள்
         அப்பன் இடம்,திரு ஆலங் காடே.

         பொழிப்புரை :  வற்றிய கொங்கைகளோடும், வெளிப்பட்டுத் தோன்றும் நரம்புகளோடும்,  குழிந்த கண்களோடும், வெண்மையான பற்களோடும், ஒட்டிய வயிற்றினோடும், தலைமயிரானது சிவந்து இருக்கவும்,   இரண்டு பற்கள் மட்டும் மிக நீண்டு இருக்கவும், உயர்ந்த புறங்கால்களை உடைய ஒரு பெண் பேயானது அலறி அடித்துக் கொண்டும், பசியால் உடல் மெலிந்தும் இருக்கின்ற இடுகாட்டிலே, தனது தாழ்ந்த சடைகள் எட்டுத் திசைகளிலும் பரந்து விளங்குமாறு, தனது திருமேனியானது குளிர்ந்தே இருக்கவும், அனலைக் கையிலே ஏந்தி ஆடுகின்ற பெருமானது இடம் திருவாலங்காடு.


பாடல் எண் : 2
கள்ளிக் கவட்டுஇடைக் காலை நீட்டிக்
         கடைக்கொள்ளி வாங்கி மசித்து, மையை
விள்ள எழுதி, வெடுவெடு என்ன
         நக்கு, வெருண்டு, விலங்கு பார்த்துத்
துள்ளி, சுடலைச் சுடுபி ணத்தீச்
         சுட்டிய முற்றும் சுளிந்து, பூழ்தி
அள்ளி அவிக்க,நின் றாடும் எங்கள்
         அப்பன் இடம்திரு ஆலங்காடே.

         பொழிப்புரை :கள்ளி மரத்தின் கிளைகளுக்கு இடையல் காலை நீட்டிக் கொண்டு, எரிந்து முடிந்த கொள்ளிக் கட்டையை எடுத்து மசிய அரைத்து, அதனைத் தனது கண்ணில் மையாக எழுதி, வெடுவெடு என்று சினக்குறிப்பு தோன்றுமாறு நகைத்து, வெருண்டு விலங்குகளைப் போல இங்கும் அங்குமாகப் பார்த்து, துள்ளிக் குதித்து,  சுடலையில் பிணத்தைசு சுடுகின்ற தீயை வெகுண்டு நோக்கி,  அதனைப் புழுதியைக் கொண்டு அவிக்க முயலுகின்ற பேய்கள் வாழும் காட்டிலே ஆடுகின்ற எங்கள் அப்பனுக்கு இடமாக விளங்குவது திருவாலங்காடு .


பாடல் எண் : 3
வாகை விரிந்துவெள் நெற்று ஒலிப்ப,
         மயங்குஇருள் கூர்நடு நாளை, ஆங்கே
கூகையொ டுஆண்டலை பாட, ஆந்தை
         கோடுஅதன் மேல்குதித்து ஓட, வீசி
ஈகை படர்தொடர் கள்ளி நீழல்
         ஈமம் இடுசுடு காட்டு அகத்தே
ஆகம் குளிர்ந்துஅனல் ஆடும் எங்கள்
         அப்பன் இடம் திரு ஆலங் காடே.

         பொழிப்புரை :காட்டு வாகை மரமானது விரியத் தழைத்திருக்கும் நிலையில் அதனது நெற்று வெண்மையாஅது காய்ந்து போனது போல, மாலைக் காலத்தில். பகலோடு வந்து பொருந்திய இருள் மிகும் நள்ளிரவு நேரத்தில், கோட்டானுடன் ஆண்தலைப் பறவை ஆட, ஆந்தையானது அவற்றை விரட்டி ஓடவும்,  இண்டங் கொடிகள் படரந்துள்ள, கள்ளியின் நிழலை உடைய, பிணத்தைச் சுடுகின்ற சுடுகாட்டிலே, தனது திருமேனியானது குளிர்ந்த நிலையிலேயே திருக்கையில் அனல் ஏந்தி ஆடுகின்ற எங்களது அப்பனுக்கு இடமானது திருவாலங்காடு.


பாடல் எண் : 4
குண்டில்ஓ மக்குழிச் சோற்றை வாங்கிக்
         குறுநரி தின்ன, அதனை முன்னே
கண்டிலோம் என்று கனன்று, பேய்கள்
         கையடித்து ஓடு இடுகாடு அரங்கா
மண்டலம் நின்றுஅங்கு உளாளம் இட்டு,
         வாதித்து, வீசி எடுத்த பாதம்
அண்டம் உறநிமிர்ந்து ஆடும் எங்கள்
         அப்பன் இடம்திரு ஆலங் காடே.

         பொழிப்புரை : சுடுகாட்டிலே இறுதிக் கடனுக்காக ஆழமாகத் தோண்டப்பட்டு உள்ள ஓம குண்டத்தில் போடப்பட்டுள்ள அவியாகிய உணவை, முன்பே பார்த்திருந்தால், நரிகளை விரட்டித் தின்றிருக்கலாமே என்னும் சினத்தோடு, தனது கைகளை அடித்துக் கொண்டு அங்கும் இங்குமாக ஓடுகின்ற பேய்கள் வாழும் காட்டையே தனது ஆடிடமாகக் கொண்டு, வட்டமாக நின்று குரலால் இசையினைக் கூட்டி, காளியோடு வாதம் புரிகின்ற நிலையிலே, வீசி எடுத்த தனது திருப்பாதமானது அண்டம் அளவும் உயர்ந்து, நிமிர்ந்து ஆடுகின்ற எங்கள் அப்பனுக்கு உரிய இடம் திருவாலங்காடு.


பாடல் எண் : 5
விழுது நிணத்தை விழுங்கி இட்டு,
         வெண்தலை மாலை விரவப் பூட்டி,
கழுதுதன் பிள்ளையைக் காளி என்று
         பேர்இட்டு, சீர்உடைத் தாவளர்த்து,
புழதி துடைத்து, முலைகொ டுத்து,
         போயின தாயை வரவு காணாது
அழுதுஉறங் கும்புறங் காட்டில் ஆடும்
         அப்பன் இடம்திரு ஆலங் காடே

         பொழிப்புரை :பெண் பேயானது திரட்டி எடுத்த உருண்டையாகிய கொழுப்பினைத் தன் பிள்ளைக்கு உணவாகக் கொடுத்து, அதன் கழுத்தில் வெண்மையான மண்டை ஓடுகளால் ஆன மாலையை அணிவித்து, அதற்குக் காளி என்னும் பெயரினை இட்டு, மேலே படிந்துள்ள புழுதியைத் துடைத்து, பாலூட்டி, சீரோடு வளர்த்து, சிறிது நேரம் விட்டுப் போனது.  அப்படிப் போன தனது தாயைக் காணாது, பிள்ளைப் பேயானது அழுது, பின் களைப்பால் உறங்குகின்ற ஊர்ப்புறத்திலே உள்ள சுடுகாட்டிலே ஆடுகின்ற எங்கள் அப்பனுடைய இடம் திருவாலங்காடு ஆகும்.


பாடல் எண் : 6
பட்டஅடி நெட்டுஉகிர்ப் பாறு கால்பேய்
         பருந்தொடு, கூகை, பகண்டை , ஆந்தை
குட்டி யிட, முட்டை, கூகைப் பேய்கள்
         குறுநரி சென்றுஅணங் காடு காட்டில்
பிட்டடித் துப்புறங் காட்டில் இட்ட
         பிணத்தினைப் பேரப் புரட்டி, ஆங்கே
அட்டமே பாயநின்று ஆடும் எங்கள்
         அப்பன் இடம்திரு ஆலங் காடே.

         பொழிப்புரை :`அணங்கு ஆடு காட்டில் கூகைப் பேய்களும், குறு நரிகளும், குட்டியை ஈன, பருந்தும், கூகையும், பகண்டையும், ஆந்தையும் முட்டையிட, பரந்த வற்றிப்போன கால்களை உடைய பேய்கள் சென்று அவைகளைப் பிட்டு வீசிப் பின் புறங்காட்டில் இடப்பட்ட பிணத்தைப் புரளப் புரட்டி, நெடுக்கும், குறுக்குமாகப் பாயம ஓட ஆடும் எங்கள் அப்பன் இடம் திருவாலங்காடு ஆகும்.


பாடல் எண் : 7
கழலும் அழல்விழிக் கொள்ளி வாய்ப்பேய்
         சூழ்ந்து துணங்கையிட்டு ஓடி, ஆடி,
தழலுள் எரியும் பிணத்தை வாங்கித்
         தான் தடி தின்றுஅணங்கு ஆடு காட்டில்
கழல்ஒலி, ஓசைச் சிலம்பு ஒலிப்பக்
         கால்உயர் வட்டணை இட்டு நட்டம்
அழல்உமிழ்ந்து ஓரி கதிக்க ஆடும்
         அப்பன் இடம்திரு ஆலங் காடே.

         பொழிப்புரை : நெருப்பைக் கக்குவது போலும் கண்களை உடைய கொள்ளிவாய்ப் பேய்கள் தமது  இரு கைகளையும் மடக்கி இரு விலாக்களிலும் அடித்துக் கொண்டு ஆடுகின்ற பெரு மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்ற கூத்தினை ஓடியபடியே ஆடி, நெருப்பில் எரியும் பிணத்தை எடுத்து, அதன் தசையைத் தின்று ஆடுகின்ற காட்டில் தனது திருவடிகளில் அணிந்துள்ள கழலும் சிலம்பும் ஒலிக்க, வட்டணையோடு, நெருப்பினை உமிழ்ந்து, நரியானது குதிகொள்ள ஆடுகின்ற எங்கள் அப்பனுக்கு இடம் திருவாலங்காடு ஆகும்.


பாடல் எண் : 8
நாடும், நகரும் திரிந்து சென்று,
         நல்நெறி நாடி நயந்தவரை
மூடி முதுபிணத்து இட்ட மாடே,
         முன்னிய பேய்க்கணம் சூழச் சூழக்
காடும், கடலும், மலையும், மண்ணும்,
         விண்ணும் சுழல அனல்கையேந்தி
ஆடும் அரவப் புயங்கன் எங்கள்
         அப்பன் இடம்திரு ஆலங் காடே.

         பொழிப்புரை : பிறந்தபின் நாடும் நகரமும் திரிந்து சென்று வாழுகின்ற காலத்தில் (தீயோர் மட்டுமல்லாது,) நல்ல நெறியில் வாழந்தவர்களும் வாழ்நாள் முடிவில் அடைகின்ற இடம் சுடுகாடு.  பிணமான நிலையிலே துணியால் மூடு மறைத்து அவர்களை இட்ட இடத்தின் அருகில், பேய்க் கூட்டங்களை சூழ, காடும், மலையும், கடலும், விண்ணும் எல்லாம் சுழலும்படியாக, நெருப்பைத் திருக்கையிலே ஏந்தி,  பாம்பாபரணங்களைத் தரித்து ஆடுகின்ற எங்கள் அப்பனுக்கு உரிய இடம் திருவாலங்காடு ஆகும்.


பாடல் எண் : 9
துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம்,
         உழை, இளி ஓசைபண் கெழுமப் பாடிச்
சச்சரி, கொக்கரை, தக்கை யோடு,
         தகுணிதம், துந்துபி, தாளம், வீணை,
மத்தளம், கரடிகை, வன்கை மென்தோல்
         தமருகம், குடமுழா, மொந்தை வாசித்து
அத்தனை விரவினோடு ஆடும் எங்கள்
         அப்பன் இடம்திரு ஆலங் காடே.

         பொழிப்புரை : துத்தம் முதலான ஏழிசைகளையும் தக்கபடி கூட்டுமிடத்துப் பிறக்கும் பண்களுக்கு ஏற்ப பலவகையான கருவிகள் முழங்க, அதற்கேற்ப ஆடுகின்ற எங்கள் அப்பனுக்கு இடம் திருவாலங்காடு ஆகும்.


பாடல் எண் : 10
புந்தி கலங்கி, மதிம யங்கி
         இறந்தவ ரைப்புறங் காட்டில் இட்டு,
சந்தியில் வைத்து, கடமை செய்து,
         தக்கவர் இட்டசெந் தீவி ளக்கா,
முந்தி அமரர் முழவின் ஓசை
         திசைகதுவ சிலம்பு ஆர்க்க ஆர்க்க,
அந்தியின் மாநடம் ஆடும் எங்கள்
         அப்பன் இடம்திரு ஆலங் காடே.

         பொழிப்புரை : புத்தி கலங்கியும்,  அறிவு மயங்கியும் இறந்தவர்களை சுடுகாட்டில் வைத்து அவருடைய
உறவினர் நண்பர்களது கூட்டமானது கூடியிருக்க ஈமக் கடன் செய்ய உரிமையுடைய புதல்வர் முதலானோர் பிணத்திற்கு இட்ட தீயையே விளக்காகக் கொண்டு, தேவர்கள் எல்லாரும் செய்யும் வாத்தியங்களை முழக்கத்தோடு, சிலம்பு ஓடையானது திசைகள் எல்லாவற்றிலும் நிகழ, அந்திக் காலத்திலே பெருநடம் ஆடுகின்ற எங்கள் அப்பனுக்கு இடம் திருவாலங்காடு ஆகும்.


பாடல் எண் : 11
ஒப்பினை இல்லவன் பேய்கள் கூடி,
         ஒன்றினை ஒன்றுஅடித்து ஒக்க லித்து,
பப்பினை இட்டுப் பகண்டை பாட,
         பாடுஇருந் தஅந்நரி யாழ் அமைப்ப,
அப்பனை அணிதிரு ஆலங் காட்டுஎம்
         அடிகளைச் செடிதலைக் காரைக் காற்பேய்
செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார்
         சிவகதி சேர்ந்துஇன்பம் எய்து வாரே.

         பொழிப்புரை : `ஒப்புமை இல்லாதனவாகிய வலிய பேய்கள் எல்லாம் கூடி, ஒன்றை ஒன்று அடித்துக் கொண்டு ஒருசேரக் கூச்சலிட்டு, பக்கத்தில் உள்ள நரிகளின் குரலையே யாழிசையாகக் கொண்டு, பகண்டைகள் பாடுகின்ற நிலையில் ஆடுகின்ற எங்கள் பெருமானை, காரைக்காலில் தோன்றிய இந்தப் பேயானது பாடிய செந்தமிழால் ஆன பாடல்கள் பத்தையும் பாடி வழிபட வல்லவர்கள் சிவகதியைச் சேர்ந்து நிறைவான பேரின்பத்தை எய்துவார்கள்.


மூத்த திருப்பதிகம் - 2

பாடல் எண் : 1
எட்டி இலவம் ஈகை
         சூரை காரை படர்ந்துஎங்கும்
சுட்ட சுடலை சூழ்ந்த
         கள்ளி சோர்ந்த குடர்கௌவப்
பட்ட பிணங்கள் பரந்த
         காட்டில் பறைபோல் விழிகட்பேய்
கொட்ட முழவம் கூளி
         பாட, குழகன் ஆடுமே.

         பொழிப்புரை :எட்டியும், இலவமும் ஆகிய மரவகைகளும், ஈகையும் சூரையும் ஆகிய கொடிவகைகளும்,  காரை என்னும் செடியும் படர்ந்து வளர்ந்துள்ள பிணங்களைச் சுட்ட சுடலையில் கழுகு முதலியவற்றின் வாயினின்றும் வீழ்ந்த குடர்களைப் பற்றி நிற்கும்படி கிடந்த பிணங்கள் இருக்கின்ற சுடுகாட்டில், அகன்ற கண்களை உடைய பேய்கள் முழவம் கொட்ட, கூளி பாட அழகன் ஆகிய எங்கள் பெருமான் ஆடுவான்.


பாடல் எண் : 2
நிணந்தான் உருகி நிலந்தான்
         நனைப்ப, நெடும்பல் குழிகண்பேய்
துணங்கை எறிந்து சூழும்
         நோக்கிச்சுடலை நவிழ்த்து, எங்கும்
கணங்கள் கூடிப் பிணங்கள்
         மாந்திக் களித்த மனத்தவாய்
அணங்கு காட்டில் அனல்கை
         ஏந்தி அழகன் ஆடுமே.

         பொழிப்புரை :பிணத்தைச் சுடுவதால் கொழுப்பானது உருகி நிலம் ஈரமாகிறது.   நீண்ட பற்களையும் குழிந்த கண்களையும் உடைய பேய்கள் தமது இருகைகளையும் மார்பில் அடித்தபடி ஆடி, சுடலையை மிகவும் விரும்பி, பேய்க் கூட்டமானது எங்கும் நிறைந்து பிணத்தை உண்டு களித்த மனத்தோடும் விளங்குகின்றது.  இவ்வகையான துன்பத்தைத் தரும் சுடுகாட்டில் எங்கள் இறைவனாகிய அழகன் ஆடுகின்றான்.


பாடல் எண் : 3
புட்கள் பொதுத்த புலால்வெண்
         தலையைப் புறமே நரிகவ்வ,
அட்குஎன்று அழைப்ப, ஆந்தை
         வீச, அருகே சிறுகூகை
உட்க விழிக்க, ஊமன்
         வெருட்ட, ஓரி கதித்துஎங்கும்
பிட்க, நட்டம் பேணும்
         இறைவன் பெயரும் பெருங்காடே.

         பொழிப்புரை : காக்கை, பருந்து முதலியன பிணங்களைக் குத்தித் தின்கின்றன.  புலால் நாற்றம் பொருந்திய வெண்மையான தலையை நரியானது கவ்வித் தின்பதற்குத் தனது கூட்டத்தைக் கூச்சலிட்டு அழைக்கின்றது. அதைக் கண்டு, ஆந்தை சிறிய சிறகை வீச, கூகையானது அச்சம் உண்டாகும்படி கண்களை விழித்துப் பார்க்க, பெரிய கூகை தனது குரலால் வெருட்ட, இந்நிலையிலும் ஓரிகள் ஓடித் தசையைப் பிட்டுத் தின்னல் நிகழுகின்ற நிலையில்  இறைவன் பெருங்காட்டில் ஆடுகின்றான்

  
பாடல் எண் : 4
செத்த பிணத்தைத் தெளியாது
         ஒருபேய் சென்று விரல்சுட்டி,
கத்தி உறுமி, கனல்விட்டு
         எறிந்து கடக்கப் பாய்ந்துபோய்,
பத்தல் வயிற்றைப் பதைக்க
         மோதி, பலபேய் இரிந்துஓடப்
பித்த வேடங் கொண்டு
         நட்டம் பெருமான் ஆடுமே.

         பொழிப்புரை :உயிர் நீங்கியதனால் பிண நிலையை அடைந்த உடம்பை, அதன் உண்மையை அறியாமல் `படுத்துக் கிடக்கின்ற ஆள்` என்று நினைத்து ஒரு பேய் அதன் அருகில் சென்று தனது சுட்டுவிரலைக் காட்டி, உரக்கக்கத்தி, உறுமி, கொள்ளி ஒன்றை எடுத்து வீசி அப்பால் செல்ல, அதையே மெய் என்று நினைத்து மற்றைப் பேய்களும் அந்த ஆளுக்கு அஞ்சித் தங்கள் பெரிய வயிற்றில் அடித்துக் கொண்டு அவ்விடத்தைவிட்டு ஓடும் தன்மையை உடைய காட்டில்) பெருமான் ஒரு பித்தன் போல வேடம் பூண்டு நடனம் ஆடுகின்றான்.


பாடல் எண் : 5
முள்ளி தீந்து, முளரி
         கருகி, மூளை சொரிந்துஉக்குக்
கள்ளி வற்றி, வெள்ளில்
         பிறங்கு கடுவெங் காட்டுஉள்ளே
புள்ளி உழைமான் தோல்ஒன்று
         உடுத்துப் புலித்தோல் பியற்குஇட்டுப்
பள்ளி இடமும் அதுவே
         ஆகப் பரமன் ஆடுமே.

         பொழிப்புரை : முள்ளையுடைய செடிகள் தீயில் கருகுகின்றன. பிணங்களைச் சுடுகின்ற போது மூளை சொரிதலால் கள்ளிகள்  பால் வற்றின.  விளா மரம் மட்டுமே விளங்கியிருந்தது. இப்படிப்பட்ட புறங்காட்டிலே மான் தோலை உடுத்து, புலித்தோலைத் தோளில் இட்டுக் கொண்டு, நிலையாக இருக்கும் இடம் அதுவாகக் கொண்டு பரமன் ஆடுகின்றான்.


பாடல் எண் : 6
வாளைக் கிளர வளைவாள்
         எயிற்று வண்ணச் சிறுகூகை
மூளைத் தலையும் பிணமும்
         விழுங்கி முரலும் முதுகாட்டில்
தாளிப் பனையின் இலைபோல்
         மயிர்க்கட்டு அழல்வாய் அழல்கட்பேய்
கூளிக் கணங்கள் குழலோடு
         இயம்பக் குழகன் ஆடுமே.

         பொழிப்புரை : வாளின் வடிவு விளங்குகின்ற, வளைந்த அலகினை உடைய சிறிய கோட்டான்கள் மூக்கால் ஒலித்தல் செய்துகொண்டே பிணங்களை உண்ணுகின்ற சுடுகாட்டில், தாளிப்பனையின் இலை போல விரிந்த தலையை உடைய கொள்ளிவாய்ப் பேய்களும் பூதங்களும் குழல் வாசிக்க அழகன் ஆகிய பெருமான் ஆடுகின்றான்.


பாடல் எண் : 7
நொந்திக் கிடந்த சுடலை
         தடவி நுகரும் புழுக்கின்றிச்
சிந்தித்து இருந்துஅங்கு உறங்கும்
         சிறுபேய் சிரமப் படுகாட்டின்
முந்தி அமரர் முழவின்
         ஒசை முறைமை வழுவாமே
அந்தி நிருத்தம் அனல்கை
         ஏந்தி அழகன் ஆடுமே.

         பொழிப்புரை : சில நாள் உணவு இல்லாமல் அதனால் கவலை அடைந்து, துன்புற்று இருந்து உறங்குகின்ற பேய்கள் துன்பப்படுகின்ற சுடுகாட்டிலே, தேவர்கள் எழுப்புகின்ற முழவின் ஓசைக்கு ஏற்பச் சிறிதும் வழுவாமல் தனது திருக்கையிலே நெருப்பை ஏந்தி, பெருமான் நடமாடுவான்.


பாடல் எண் : 8
வேய்கள் ஓங்கி வெண்முத்து
         உதிர வெடிகொள் சுடலையுள்
ஒயும் உருவில் உலறு
         கூந்தல் அலறு பகுவாய
பேய்கள் கூடிப் பிணங்கள்
         மாந்தி அணங்கும் பெருங்காட்டில்,
மாயன் ஆட மலையான்
         மகளும் மருண்டு நோக்குமே.

         பொழிப்புரை : மூங்கில்கள் ஒங்கி வளர்ந்து அவற்றினின்றும் முத்துக்கள் வெடித்துச் சிதறுகின்ற சுடலையில், விரிந்த கூந்தலையும் பிளந்த வாயையும் உடைய பேய்கள் கூடிப் பிணங்களை உண்உகின்ற பெருங்காட்டிலே பெருமான் ஆட, மலைமகளும் வியப்புடன் காணுவாள்.


பாடல் எண் : 9
கடுவன் உகளுங் கழைசூழ்
         பொதும்பில் கழுகும் பேயுமாய்
இடுவெண் தலையும் ஈமப்
         புகையும் எழுந்த பெருங்காட்டில்
கொடுவெண் மழுவும் பிறையும்
         ததும்பக் கொள்என்று இசைபாடப்
படுவெண் துடியும் பறையும்
         கறங்கப் பரமன் ஆடுமே.

         பொழிப்புரை : ஆண் குரங்குகள் தாவித் தாவிப் பாய்கின்ற மூங்கிலி புதர்கள் நிறைந்து உள்ள சுடுகாட்டில், கழுகுகளும் பேய்களும் உள்ளன.  அங்கே பிணங்களைப் புதைத்ததனால் உண்டான வெண்மையான தலைகள், பிணங்களைச் சுடுவதனால் உண்டாகும் புகை.  அப் பெருங்காட்டினைத் தனது இடமாகக் கொண்டும் திருக்கையில் மழு ஒளி வீச, திருச்சடையில் பிறை ஒளி வீச, உடுக்கைகளும், பறைகளும் பேரொலி செய்யப் பெருமான் ஆடுவான்.


பாடல் எண் : 10
குண்டை வயிற்றுக் குறிய
         சிறிய நெடிய பிறங்கல்பேய்
இண்டு படர்ந்த இருள்சூழ்
         மயானத்து எரிவாய் எயிற்றுப்பேய்
கொண்டு குழவி தடவி
         வெருட்டிக் கொள்என்று இசைபாட
மிண்டி மிளிர்ந்த சடைகள்
         தாழ விமலன் ஆடுமே.

         பொழிப்புரை : குழிந்த வயிற்றினை உடைய குள்ள வடிவமான, சிறிய வடிவமான, நெடிய வடிவமான பேய்கல் நிறைந்துள்ள, இண்டங் கொடிகள் பரந்து இருள் சூழ்ந்துள்ள சுடுகாட்டிலே, பிள்ளைப் பேய்களைத் தாய்ப் பேய்கள் இரவுக் காலத்தில் தடவிக் கொடுத்து, அச்சுறுத்தி, அவை குறும்பு அடங்கி அமைதியுற்றிருக்க இசை பாடவும், நெருங்கி, ஒளி பொருந்திய சடைகள் தாழ்ந்து விளங்கப் பெருமான் ஆடுவான்.


பாடல் எண் : 11
சூடும் மதியம் சடைமேல்
         உடையார் சுழல்வார் திருநட்டம்
ஆடும் அரவம் அரையில்
         ஆர்த்த அடிகள் அருளாலே
காடு மலிந்த கனல்வாய்
         எயிற்றுக் காரைக் கால்பேய்தன்
பாடல் பத்தும் பாடி
         ஆடப் பாவம் நாசமே.

         பொப்புரை : படமெடுத்து ஆடும் பாம்பினை அரையிலே கச்சாகக் கட்டி, திருமுடியிலே பிறைச்சந்திரனைத் தரித்துள்ள பெருமான் சுழன்று நடனம் ஆடுகின்ற பெருமான்  அருளால், சுடுகாட்டையே தனது இருப்பிடமாகக் கொண்ட காரைக்கால் பேய் பாடியருளிய பத்துத் திருப்பாடல்களையும் பாடி ஆட, பாவம் நாசமாகும்.

                                             திருச்சிற்றம்பலம்



No comments:

Post a Comment

இறைவனைப் புகழ்வது எப்படி?

  இறைவனைப் பாடுவது எப்படி? ---- கற்றதனால் ஆய பயன்  இறைவன் நற்றாள் தொழுவது. கற்பதைக் கசடு அறக் கற்கவேண்டும். அதைவிட, கசடறக் கற்றபின் அதற்கு...