திருப் பாசூர்
தொண்டை நன்னாட்டுத் திருத்தலம்.
திருப்பாச்சூர் என்று வழங்கப்படுகின்றது.
சென்னை - திருத்தணி பேருந்து சாலையில், கடம்பத்தூர் சாலை பிரியும் இடத்தில்
உள்ளது. சலையில் இருந்து பார்த்தால்
திருக்கோயில் தெரியும்.
சென்னையில் இருந்து திருவாலங்காடு வழியாக
அரக்கோணம் செல்லும் பேருந்துச் சாலையில் உள்ளது.
காஞ்சிபுரத்தில் இருந்து கடம்பத்தூர்
வழியாகத் திருவள்ளூர் செல்லும் பேருந்து சாலையில், கடம்பத்தூரை அடுத்து
உள்ளது.
திருவள்ளூர் - பேரம்பாக்கம் பேருந்து
திருப்பாசூர் வழ்யாகச் செல்லுகின்றது.
திருவள்ளூர் இரயில் நிலையத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவிலும், திருவள்ளூர் நகர பேருந்து நிலையத்தில்
இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிலும்
இத் திருத்தலம் உள்ளது. திருவள்ளூர் - திருத்தணி சாலையில் கடம்பத்தூர் செல்லும்
சாலை பிரியும் இடத்தில் உள்ளது.
இறைவர்
: பாசூர்நாதர், வாசீசுவரர், பசுபதீசுவரர்
இறைவியார்
: பசுபதிநாயகி, மோகனாம்பாள்,தம்காதலி
தல
மரம் : மூங்கில்
தேவாரப்
பாடல்கள் : திருஞானசம்பந்தர் - 1. சிந்தையிடையார்
அப்பர்
- 1. முந்தி மூவெயிலெய்த,
2.
விண்ணாகி
நிலனாகி.
வேதங்களைத் திருடிச்சென்ற மது, கைடபர் என்ற அசுரர்களை அழித்ததால்
உண்டான தோஷம் நீங்க, மகாவிஷ்ணு
இத்தலத்தில் சிவபூஜை செய்தார். அவருக்கு அருள் செய்த சிவன் இங்கேயே லிங்க வடிவில்
எழுந்தருளினார். மூங்கில் வனமாக இருந்த இப்பகுதியில் லிங்கத்திற்கு மேலே புற்று
வளர்ந்து மூடியது. அந்தப் புற்றின் மீது மேய்ச்சலுக்கு வந்த பசு ஒன்று தினந்தோறும்
பால் சுரந்தது. இடையன் மூலமாக இதை அறிந்த மன்னன் ஒருவன் அங்கு சென்றான். புற்றின்
அடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு கோயில் எழுப்பினான். மூங்கில் வனத்தில்
தோன்றியதால் சிவனுக்கு "பாசூர் நாதர்" என்ற பெயர் ஏற்பட்டது. மூங்கில்
காட்டில் சுயம்புவாகத் தோன்றிய இடத்தில் ஆலயம் உள்ளதால் திருப்பாசூர் என்று பெயர்
பெற்றது.
மூன்று நிலைகளுடன் கூடிய
தெற்கு நோக்கிய இராஜகோபுரமும், கிழக்கில் ஒரு
வாயிலும் கொண்டு, இரண்டு அகலமான திருச்சுற்றுக்கள்
உள்ளன. வெளிச் சுற்றில் வரும்போது கிழக்குச் சுற்றில் பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன.
தலவிருட்கம் மூங்கில் ஓங்கி வளர்ந்துள்ளது.
தெற்கு வெளிச் சுற்றிலிருந்து உட்பிராகாரம் செல்ல வழி உள்ளது. இரண்டாவது திருச்சுற்றில்
சுவாமி, அம்பாள் மற்றும்
சுப்பிரமணியர் சந்நிதிகள் இருக்கின்றன. மூலவர் வாசீசுவரர் சந்நிதியும், இறைவி சந்நிதியும் தனித்தனி
விமானங்களுடன் உள்ளன. இறைவன் கருவறை விமானம் கஜப்பிரஷ்ட அமைப்பைக் கொண்டது. அம்மன்
சந்நிதி சிவபெருமான் சந்நிதியின் வலதுபுறம் அமைந்துள்ளது. மூலவர் சுயம்பு. யாரும்
தீண்டுவதில்லை. அலங்காரங்கள் கூட பாவனையாகத்தான் நடைபெறுகின்றன. சுவாமி தீண்டாத்
திருமேனி என்று அழைக்கப்படுகிறார்.
சுவாமி சந்நிதியின் இரு பக்கமும்
வாயில்காவலர்கள் சிலைகள் கருத்தைக் கவரும் வகையில் உள்ளன. மூலவர் கருவறையில் நுழைவாயில்
இடதுபுறம் ஏகாதச விநாயகர் சபை இருக்கிறது. இதில் சிறிதும் பெரிதுமாக 11 விநாயக திரு உருவச்சிலைகள் காண்போர்
கருத்தை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ளன.
அருகில் கேதுவும் இருக்கிறார். கருவறை
சுற்றுச் சுவர்களில் கோஷ்ட மூர்த்தங்களாக தட்சினாமூர்த்தி, அண்ணாமலையார், துர்க்கை, பிரம்மா ஆகியோர் உள்ளனர்.
உட்பிரகாரத்தில் தேவார மூவரின் உருவச்சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.
ஒருமுறை சோழமன்னன் கரிகாலன் இந்த வழியாக
மூங்கில் காட்டில் சென்று கொண்டு இருக்கும்போது மூங்கில் புதரில் சிவலிங்கம்
இருக்கக் கண்டு, இவ்வாலயம் எழுப்பினான்
என்று தல வரலாறு கூறுகிறது. சோழர் காலத்திய கல்வெட்டுகள் ஆலயத்தின் உள்ளே
காணப்படுகின்றன.
மற்றொரு செய்தியும் உண்டு. இத் திருக்கோயிலை நிருமாணிக்க
எண்ணிய கரிகால் சோழன், அப்பகுதியை ஆண்டு வந்த குறுநில மன்னனாகிய காளி உபாசகனுடன்
போரிட்ட போது,
அந்தக்
குறுநில மன்னனுக்குத் துணையாக காளியே வர, கரிகாலன் சிவபெருமானிடம் விண்ணப்பிக்க, கரிகாலனுக்குத் துணையாக
வந்த நந்தியம்பெருமான், காளியை உற்று நோக்க, காறியின் வலி அடங்கியது.
நந்தி காளிக்கு விலங்கு பூட்டி வந்து அடைத்தார். அதன் காரணமாக, கோயிலின் வெளிச்சுற்றில், உள்ள நாற்றுக் கால் மண்டபத்தின் முன்னர் விலங்கு இட்ட
காளியின் சிற்பம் உள்ளது.
இங்கு உள்ள சோம தீர்த்தத்தில் நீராடியதால் திருமால்
தனது வினை நீங்கப் பெற்றார் என்றும் கூறப்படுகின்றது. திருக்கோயிலின் உள் வினைதீர்த்த
ஈசுவரர் திருமேனியும், திருமாலின் திருமேனியும் உள்ளது.
மகாசிவராத்திரி இத்தலத்தில் மிகச்
சிறப்பாக கொண்டாடப் படுகிறது. சிவராத்திரி அன்று இத்தலத்தில் சிவபெருமானை
வழிபடுவது மிகவும் விசேஷமாகும்.
வள்ளல்
பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், 'ஞாலம் சேர் மாசூர் அகற்றும் மதி உடையோர் சூழ்ந்த திருப்
பாசூரில் உண்மைப் பரத்துவமே' என்று போற்றி உள்ளார்.
காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருஞானசம்பந்தர்
பதிக வரலாறு:
பாரெல்லாம் உய்யவந்த பாலறாவாயர், "எம்மை ஆளும் அம்மை, திருத்தலையாலே நடந்து போற்றும்
அம்மையப்பர் திருவாலங்காடு ஆம்" என்று, அம் மூதூர் மிதிக்க அஞ்சி அணுகச் சென்று, செம்மை நெறி வழுவாத பதியின் பக்கத்தில்
உள்ள ஓரிடத்தில் இரவில் தங்கினார். இடை யாமத்தில் கனவில் ‘நம்மைப் பாடுவதற்கு
மறந்தனையோ’ என்று ஆலங்காட்டப்பர் அருளினார்.
அவர் கருணை போற்றி மெய்யுருகித் ‘துஞ்ச வருவார்’ எனத் தொடங்கும் சுருதிமுறை வழுவாத
திருப்பதிகம் பாடிப் பழயனூர் வரலாற்றைச் சிறப்பித்துச் சொல்லித் திருவருளை
உணர்த்தி, அங்கிருந்து
திருப்பாசூர் அணைந்து, அருட்கருணைத்
திருவாளன் நாமம் ‘சிந்தையிடையார்’ என்று அருளிய இசைப்பதிகம் இது.
பெ.
பு. பாடல் எண் : 1010
"துஞ்சவரு வார்"
என்றே எடுத்த ஓசைச்
சுருதிமுறை வழுவாமல்
தொடுத்த பாடல்,
எஞ்சல்இலா
வகைமுறையே, பழைய னூரார்
இயம்புமொழி காத்தகதை
சிறப்பித்து ஏத்தி,
அஞ்சனமா
கரிஉரித்தார் அருளாம் என்றே,
அருளும்வகை
திருக்கடைக்காப்பு அமையச் சாற்றி,
பஞ்சுரமாம்
பழைய திறம் கிழமை கொள்ளப்
பாடினார், பார்எலாம் உய்ய
வந்தார்.
பொழிப்புரை : `துஞ்ச வருவாரும்' என்று தொடங்கி ஓசை யுடைய மறைநெறி
தவறாதவாறு பாடிய பாடலில், குறைவற்ற வகையினால்
அறநெறிவழுவாத பழையனூர் வேளாளர்,
தாங்கள்
கூறிய சொல்லைத் தவறாது காத்து, அருள் பெற்ற
வரலாற்றைச் சிறப்பித்துப் பாராட்டி,
கரிய
யானையை உரித்த இறைவரின் திருவருளேயாகும் இது என்று அவர் அருள் செய்யும் தன்மையைத்
திருக்கடைக்காப்பில் வைத்து, குறிஞ்சியாழ்ப் பண்
அமைதித் திறமும் கிழமையும் பொருந்தப் பாடினார்.
பெ.
பு. பாடல் எண் : 1011
நீடும்இசைத்
திருப்பதிகம் பாடிப் போற்றி,
நெடுங்கங்குல்
இருள்நீங்கி நிகழ்ந்த காலை,
மாடுதிருத்
தொண்டர்குழாம் அணைந்தபோது,
மாலையினில் திருஆல
வனத்து மன்னி
ஆடும்அவர்
அருள்செய்த படியை எல்லாம்
அருளிச்செய்து, அகமலரப் பாடி ஏத்தி,
சேடர்பயில்
திருப்பதியைத் தொழுது போந்து,
திருப்பாசூர்
அதன்மருங்கு செல்லல் உற்றார்.
பொழிப்புரை : எக்காலத்தும்
நிலைபெறும் இசையமையந்த திருப்பதிகத்தைப் பாடிப் போற்றி, பின் நீண்ட இரவின் இருள் புலர்ந்த பகற்
காலத்தே, திருத்தொண்டர்களின்
கூட்டம் வந்து சேர்ந்த போது, இரவில்
திருவாலங்காட்டுப் பதியில் ஆடுகின்ற இறைவர், தமக்கு அருள் செய்த பாங்கை எல்லாம்
அவர்களுக்குச் சொல்லி, அத்திருப் பதிகத்தைத்
திரும்பவும் உள்ளம் மகிழப் பாடிப் போற்றிய பின்பு, பெரியவர்கள் வாழ்கின்ற அப்பதியை வணங்கி
அகன்று போய்த் `திருப்பாசூர்' அருகில் செல்வாராய்,
பெ.
பு. பாடல் எண் : 1012
திருப்பாசூர்
அணைந்துஅருளி, அங்கு மற்றுஅச்
செழும்பதியோர்
எதிர்கொள்ளச் சென்று புக்கு,
பொருப்புஅரையன்
மடப்பாவை இடப்பா கத்துப்
புராதனர்வேய்
இடங்கொண்ட புனிதர் கோயில்
விருப்பின்உடன்
வலம்கொண்டு, புக்கு, தாழ்ந்து,
வீழ்ந்து,எழுந்து, மேனிஎலாம் முகிழ்ப்ப
நின்றே,
அருட்கருணைத்
திருவாளன் நாமம் "சிந்தை
இடையார்" என்று
இசைப்பதிகம் அருளிச் செய்தார்.
பொழிப்புரை : திருப்பாசூரை அணைந்து, அங்கு அச்செழும் பதியார் வந்து
எதிர்கொள்ளப் பதியுள் போய்ப் புகுந்து, மலை
அரசனின் மகளான பார்வதி அம்மையாரை இடமருங்காகக் கொண்ட பழமை உடையவரும், மூங்கிலை இடமாகக் கொண்டவருமான இறைவரின்
திருக்கோயிலுள் விருப்பத்துடன் வலமாக வந்து, உள்ளே புகுந்து, இறைவரின் திருமுன்பு, நிலம் பொருந்த விழுந்து வணங்கி எழுந்து, திருமேனி முழுதும் மயிர்க்கூச்செறிய
நின்று, அருட்கருணை என்ற
செல்வத்தை உடைய இறைவரின் திருநாமத்தைச் `சிந்தை
யிடையார்\' எனத் தொடங்கி
இசையுடன் கூடிய அத்திருப்பதிகத்தைப் பாடியருளினார்.
குறிப்புரை : `சிந்தை யிடையார்' எனத் தொடங்கும் பதிகம் காந்தாரப்
பண்ணில் அமைந்த பதிகமாகும் (தி.2 ப.60). இம்முதற் பாடலில் வரும் தொடர்கள் பலவும்
பெருமானின் திருப்பெயர்களாய் அமைந்திருக்கு மாறும் காணலாம்.
2.060 திருப்பாசூர் பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
சிந்தை
இடையார், தலையின் மிசையார், செஞ்சொல்லார்,
வந்து
மாலை வைகும் போழ்துஎன் மனத்துஉள்ளார்,
மைந்தா, மணாளா, என்ன மகிழ்வார்
ஊர்போலும்,
பைந்தண்
மாதவி சோலை சூழ்ந்த பாசூரே.
பொழிப்புரை :மனத்திலும், தலையின்மேலும் வாக்கிலும் உறைபவர், மாலைக்காலம் வரும்போது வந்து என்
மனத்தில் விளங்குபவர், மைந்தா! மணாளா! என்று
அழைக்க மகிழ்பவர். அவரது ஊர் பசுமையான மாதவி படர்ந்த சோலைகள் சூழ்ந்த பாசூர்
ஆகும்.
பாடல்
எண் : 2
பேரும்
பொழுதும், பெயரும் பொழுதும், பெம்மான்என்று
ஆரும்
தனையும் அடியார் ஏத்த அருள்செய்வார்,
ஊரும்
அரவம் உடையார் வாழும் ஊர்போலும்,
பாரின்
மிசையார் பாடல் ஓவாப் பாசூரே.
பொழிப்புரை :இடம்
விட்டுச்செல்லும்போதும், வரும் போதும்
பெம்மானே என்று மனம் நிறைவுறும் அளவும் அடியவர் ஏத்த அருள் செய்பவர். ஊர்ந்து
செல்லும் படப்பாம்பை அணிந்தவர். அவர் வாழும் ஊர் உலக மக்களின் பாடல்கள் ஓவாது
கேட்கும் பாசூர் ஆகும்.
பாடல்
எண் : 3
கையால்
தொழுது தலைசாய்த்து உள்ளங் கசிவார்கள்
மெய்ஆர்
குறையும், துயரும் தீர்க்கும்
விகிர்தனார்,
நெய்
ஆடுதல்அஞ் சுஉடையார், நிலாவும் ஊர்போலும்
பைவாய்
நாகம் கோடல்ஈனும் பாசூரே.
பொழிப்புரை :கைகளால் தொழுதும், தலையைத்தாழ்த்தியும், உள்ளம் உருகி வழிபடும் அடியவர்களின்
உடற்குறைகளையும் துன்பங்களையும் தவிர்த்தருளும் விகிர்தன். நெய் முதலிய ஆனைந்தும்
ஆடுதல் உடையவன், அவன் எழுந்தருளிய ஊர், பாம்பின் படம் போலக்காந்தள் பூக்கள்
மலர்ந்துள்ள பாசூராகும்.
பாடல்
எண் : 4
பொங்குஆடு
அரவும், புனலும், சடைமேற் பொலிவுஎய்த,
கொங்குஆர்
கொன்றை சூடி,என் உள்ளம்
குளிர்வித்தார்,
தம்கா
தலியும் தாமும் வாழும் ஊர்போலும்,
பைங்கான்
முல்லை பல்அரும்பு ஈனும் பாசூரே.
பொழிப்புரை :சினந்து படம்
எடுத்தாடும் பாம்பும், கங்கையும் சடையின்
மேல் விளங்கித்தோன்ற, தேன் நிறைந்த கொன்றை
மலரைச் சூடி என் உள்ளம் குளிர் வித்தவர். அவர் தம் காதலியாரோடு தாமும் வாழும் ஊர்
பசிய காலோடு கூடிய முல்லைக் கொடிகள் பற்கள் போல அரும்புகள் ஈனும் பாசூராகும்.
பாடல்
எண் : 5
ஆடல்
புரியும் ஐவாய் அரவுஒன்று அரைச்சாத்தும்
சேடச்
செல்வர், சிந்தையுள் என்றும்
பிரியாதார்,
வாடல்
தலையில் பலிதேர் கையார் ஊர்போலும்,
பாடல் குயில்கள் பயில்பூஞ் சோலைப் பாசூரே.
பொழிப்புரை :ஆடும் ஐந்து
தலைப்பாம்பை இடையிலே கட்டிக் கொண்டுள்ள மேலான செல்வர். நினைப்பவர்
சிந்தையினின்றும் பிரியாதவர். ஊன்வாடியதலையோட்டில் பலிதேரும் கையினர். அவரது ஊர், பாடும் குயில்கள் வாழும் பூஞ்சோலைகளை
உடைய பாசூர் ஆகும்.
பாடல்
எண் : 6
கால்நின்று
அதிரக் கனல்வாய் நாகம் கச்சாகத்
தோல்ஒன்று
உடையார், விடையார், தம்மைத் தொழுவார்கள்
மால்கொண்டு
ஓட மையல் தீர்ப்பார் ஊர்போலும்,
பால்வெண்
மதிதோய் மாடம் சூழ்ந்த பாசூரே.
பொழிப்புரை :திருவடி ஊன்றித்
தாளம் இட நாகத்தைக் கச்சாக இடையில் கட்டிக்கொண்டு தோலை ஆடையாக உடுத்தவர். விடை
ஊர்தியர். தம்மைத் தொழுபவர்கள் அன்பு கொண்டு தம்மைத் தொழ அவர்களின் மயக்கங்களைத்
தீர்ப்பவர். அவரது ஊர் பால் போன்ற வெண்மதிதோயும் மாட வீடுகள் சூழ்ந்த பாசூர்
ஆகும்.
பாடல்
எண் : 7
கண்ணின்
அயலே கண்ஒன்று உடையார், கழல்உன்னி
எண்ணும்
தனையும் அடியார் ஏத்த அருள்செய்வார்,
உள்நின்று
உருக உகவை தருவார் ஊர்போலும்,
பண்ணின்
மொழியார் பாடல் ஓவாப் பாசூரே.
பொழிப்புரை :இரு கண்களுக்கு அயலே
நெற்றியில் மூன்றாவதாக ஒரு கண்ணை உடையவர். தம் திருவடிகளை நினைந்து எண்ணும்
போதெல்லாம் உவகைகள் தருபவர். அவரது ஊர் பண்ணிசை போல மொழிகள் பேசும் பெண்கள் பாடும்
ஓசை நீங்காத பாசூராகும்.
பாடல்
எண் : 8
தேசு
குன்றாத் தெண்ணீர் இலங்கைக் கோமானைக்
கூச
அடர்த்துக் கூர்வாள் கொடுப்பார், தம்மையே
பேசிப்
பிதற்றப் பெருமை தருவார் ஊர்போலும்,
பாசித்
தடமும் வயலும் சூழ்ந்த பாசூரே.
பொழிப்புரை :புகழ்குன்றாத தெளிந்த
நீரை உடைய கடலால் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனை மனம் கூசுமாறு அடர்த்துக் கூரிய
வாளைப் பரிசாகக் கொடுத்தவர். தம்மையே பலகாலம் பேசிப்பிதற்றும் அடியவர்கட்குப்
பெருமை தருபவர். அவரது ஊர் பசுமையான நீர் நிலைகளும், வயல்களும் சூழ்ந்த பாசூராகும்.
பாடல்
எண் : 9
நகுவாய்
மலர்மேல் அயனும், நாகத்து அணையானும்
புகுவாய்
அறியார், புறநின்று ஓரார், போற்றுஓவார்,
செகுவாய்
உகுபல்தலைசேர் கையார் ஊர்போலும்,
பகுவாய்
நாரை ஆரல் வாரும் பாசூரே.
பொழிப்புரை :விரிந்த தாமரை மலர்
மேல் உறையும் நான்முக னும், நாகணையில்
பள்ளிகொள்ளும் திருமாலும் புகுமிடம் அறியாதவராகவும் புறம்பே நின்று அறிய
இயலாதவராகவும் போற்றுதலை ஓவாதவராகவும் நிற்க அழிந்தவாயிற் பல்லுடைய தலையோடு சேர்ந்த
கையினை உடையவர். சிவபெருமான். அவரது ஊர் பிளந்தவாயினை உடைய நாரைகள் ஆரல் மீன்களை
வௌவி உண்ணும் பாசூராகும்.
பாடல்
எண் : 10
தூய
வெயில் நின்று உழல்வார்,
துவர்தோய்
ஆடையார்,
நாவில்
வெய்ய சொல்லித் திரிவார்,
நயம்இல்லார்,
காவல்
வேவக் கணைஒன்று எய்தார் ஊர்போலும்,
பாவைக்
குரவம் பயில்பூஞ் சோலைப் பாசூரே.
பொழிப்புரை :நல்ல வெயிலில் நின்று
உழல்பவரும், துவர் தோய்ந்த ஆடையை
அணிந்தவருமாகிய சமண புத்தர்கள் நாவினால் வெய்ய சொற்களைச் சொல்லித்திரியும் நீதி
அற்றவர்கள் காவல் புரியும் முப்புரங்களும்வெந்தழியுமாறு கணை ஒன்றை எய்த சிவபிரானது
ஊர் பாவை போல மலரும் குராமரங்கள் செறிந்த சோலைகள் சூழ்ந்த பாசூர் ஆகும்.
பாடல்
எண் : 11
ஞானம்
உணர்வான், காழி ஞான சம்பந்தன்,
தேனும்
வண்டும் இன்னிசை பாடும் திருப்பாசூர்க்
கானம்
உறைவார் கழல்சேர் பாடல் இவைவல்லார்,
ஊனம்
இலராய், உம்பர் வானத்து
உறைவாரே.
பொழிப்புரை :கலைஞானம் சிவஞானம்
ஆகியவற்றை உணர்ந்தவனாகிய காழி ஞானசம்பந்தன் தேனும், வண்டும் இன்னிசை பாடும் திருப்பாசூர்
என்னும் காடுகள் நிறைந்த ஊரில் உறையும் இறைவனின் திருவடிகளில் சேர்ப்பிக்கும்
பாடல்களாகிய இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர் குற்றம் அற்றவராய் வானுலகில் உறைவர்.
திருச்சிற்றம்பலம்
திருநாவுக்கரசர் பதிக
வரலாறு:
திருவொற்றியூர்
தொழுது போந்து, உமையாள் பங்கு உடையார்
அமர்ந்த திருப்பாசூராம் பதி அணைந்து உலகுய்ய இருப்பாரைத் தொழுது பாடிய தமிழ்
இத்திருப்பதிகம். (தி.12.திருநா. புரா.339.340.)
பெரிய
புராணப் பாடல் எண் : 339
திருப்பாசூர்
நகர்எய்தி,
சிந்தையினில்
வந்துஊறும்
விருப்புஆர்வம்
மேற்கொள்ள,
வேய்இடங்கொண்டு
உலகுஉய்ய
இருப்பாரை, புரம்மூன்றும்
எரித்துஅருள
எடுத்ததனிப்
பொருப்புஆர்வெஞ்
சிலையாரை,
தொழுது, எழுந்து, போற்றுவார்.
பொழிப்புரை : `திருப்பாசூர்` என்ற பதியை அடைந்து, உள்ளத்தில் ஊறுகின்ற விருப்பம் மீதூர, உலகம் உய்யும் பொருட்டு அப்பதியில்
மூங்கிலை இடனாகக் கொண்டு வெளிப்பட எழுந்தருளியிருப்பவரான இறைவரை, முப்புரங்கள் எரிந்திடவும், அதில் அன்பர் மூவர்க்கும்
அருள்செய்யவும் எடுத்த ஒப்பற்ற மேரு என்ற வில்லை யுடையவரைக், காலுற வணங்கித் தொழுபவராய்.
பெ.
பு. பாடல் எண் : 340
"முந்திமூ எயில்எய்த
முதல்வனார்" என எடுத்து,
சிந்தைகரைந்து
உருகுதிருக் குறுந்தொகையும் தாண்டகமும்
சந்தம்
நிறை நேரிசையும் முதல்ஆன தமிழ்பாடி
எந்தையார்
திருவருள்பெற்று ஏகுவார் வாகீசர்.
பொழிப்புரை : `முந்தி மூவெயில் எய்த முதல்வனார்` எனத் தொடங்கி, உள்ளம் கரைந்துருகும் தன்மையுடைய
திருக்குறுந் தொகைப் பதிகத்தையும்,
திருத்தாண்டகப்
பதிகத்தையும், சந்தம் நிறைந்த
திருநேரிசை முதலான தமிழ்ப் பதிகங்களையும் பாடி, நாவுக்கரசர், எம் இறைவரின் திருவருளைப் பெற்றவராய்ச்
செல்கின்றார்.
குறிப்புரை : சந்தநிறை நேரிசையும்
முதலான தமிழ் பாடி - எனவே, திருநேரிசை, திருவிருத்தம், திருத்தாண்டகம், திருக்குறுந்தொகை முதலாய பதிகங்களும்
பிற பண்ணமைவான பதிகங்கள் பலவும் அருளியிருக்கலாம் எனத் தெரிகிறது.
எனினும்
இதுபொழுது கிடைத்திருக்கும் பதிகங்கள் இரண்டேயாம். அவை:
1. `முந்திமூவெயில்` (தி.5 ப.25) - திருக்குறுந் தொகை.
2. `விண்ணாகி` (தி.6 ப.83) - திருத்தாண்டகம்.
5. 025 திருப்பாசூர்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
முந்தி
மூஎயி எய்த முதல்வனார்,
சிந்திப்பார்வினை
தீர்த்திடும் செல்வனார்,
அந்திக்
கோன்தனக் கேஅருள் செய்தவர்,
பந்திச்
செஞ்சடைப் பாசூர் அடிகளே.
பொழிப்புரை : வரிசையாகிய அடர்ந்த
செஞ்சடையுடையவராகிய திருப்பாசூர்த் தலத்து இறைவர் முதற்கண் முப்புரங்களை எய்த
முதல்வர் ; சிந்திப்பவர்களின்
வினைகளைத் தீர்க்கும் செல்வர் ;
சந்திரனுக்கு
அருள் செய்த தண்ணளியாளர் .
பாடல்
எண் : 2
மடந்தை
பாகம் மகிழ்ந்த மணாளனார்,
தொடர்ந்த
வல்வினை போக்கிடும் சோதியார்,
கடந்த
காலனைக் கால்கொடு பாய்ந்தவர்,
படர்ந்த
நாகத்தர், பாசூர் அடிகளே.
பொழிப்புரை : படர்ந்தெழும்
நாகத்தைப் பூண்ட திருப்பாசூர்த் தலத்து இறைவர் . உமாதேவியை ஒரு பாகத்து மகிழ்ந்த
மணவாளர் ; உயிர்களைப்
பிறவிதோறும் தொடர்ந்து வரும் வல்லமை உடைய வினைகளாகிய இருளைப் போக்கிடும் ஒளி
வடிவானவர் ; எல்லை கடந்த இயமனைக்
கால்கொண்டு பாய்ந்து உதைத்தவர் .
பாடல்
எண் : 3
நாறு
கொன்றையும் நாகமும் திங்களும்
ஆறும்
செஞ்சடை வைத்த அழகனார்,
காறு
கண்டத்தர், கையதுஓர் சூலத்தர்,
பாறின்
ஓட்டினர், பாசூர் அடிகளே.
பொழிப்புரை : பருந்துகள் அலைக்கும்
மண்டை யோட்டினைக் கையில் ஏந்தியவராகிய திருப்பாசூர்த்தலத்து இறைவர் , மணம்வீசும் கொன்றையும் , நாகமும் , திங்களும் , கங்கையாறும் செஞ்சடையில் வைத்த அழகர் ; கரியகண்டத்தர் ; கையிற்பிடித்த சூலத்தர் .
பாடல்
எண் : 4
வெற்றி
யூர்உறை வேதியர் ஆவர்,நல்
ஒற்றி
ஏறுஉகந்து ஏறும் ஒருவனார்,
நெற்றிக்
கண்ணினர், நீள்அரவம் தனைப்
பற்றி
ஆட்டுவர், பாசூர் அடிகளே.
பொழிப்புரை : நீண்ட அரவினைப்
பற்றியாட்டும் , இயல்பினர் ஆகிய
திருப்பாசூர்த் தலத்து இறைவர் ,
வெற்றியூரில்
உறையும் வேதியர் , ஏற்றினை ஒற்றி உகந்து
ஏறும் ஒப்பற்றவர், நெற்றிக் கண்ணினர் .
பாடல்
எண் : 5
மட்டு
அவிழ்ந்த மலர்நெடுங் கண்ணிபால்
இட்ட
வேட்கையர் ஆகி இருப்பவர்,
துட்ட
ரேல், அறியேன் இவர்
சூழ்ச்சிமை,
பட்ட
நெற்றியர், பாசூர் அடிகளே.
பொழிப்புரை : பட்டமணிந்த நெற்றியை
உடையவராகிய திருப்பாசூர்த்தலத்து இறைவர் . தேன் விரிந்த மலர்களையணிந்த நீண்ட
கண்ணுடைய உமாதேவியார்பால் விருப்பமும் வேட்கையும் உடையவராயிருப்பவர் ; இவர் தீயவரேல் இவரது சூழ்ச்சித்
தன்மைகளை அறியேன் .
பாடல்
எண் : 6
பல்இல்
ஓடுகை ஏந்திப் பகல்எலாம்
எல்லி
நின்றுஇடு பெய்பலி ஏற்பவர்,
சொல்லிப்
போய்ப்புகும் ஊர்அறி யேன்சொலீர்,
பல்கு
நீற்றினர், பாசூர் அடிகளே.
பொழிப்புரை : நிறைந்த
திருவெண்ணீற்றினராகிய திருப்பாசூர்த் தலத்து இறைவர், பல்லில்லாத ஓட்டினைக் கையேந்திப்
பகலெல்லாம் வெயிலில் நின்று இடுகின்ற பலியினை ஏற்பவர் ; சொல்லிவிட்டுச் சென்று புகுந்த ஊரினை
அறியேன்; சொல்லுவீராக.
பாடல்
எண் : 7
கட்டி
விட்ட சடையர், கபாலியர்,
எட்டி
நோக்கிவந்து இல்புகுந்து,
அவ்அவர்
இட்டமா
அறியேன், இவர் செய்வன,
பட்ட
நெற்றியர், பாசூர் அடிகளே.
பொழிப்புரை : பட்டமணிந்த நெற்றியை
உடையவராகிய திருப்பாசூர்த்தலத்து இறைவர் கட்டிவிட்ட சடையை உடையவரும் , கபாலம் கைக்கொண்டவரும் எட்டிப்பார்த்து
இல்லத்தில் புகுந்தவரும் ஆகியர் . இவர் விரும்பிச் செய்வன இவையென யான் முற்ற
அறியேன் .
பாடல்
எண் : 8
வேதம்
ஓதிவந்து இல்புகுந்தார் அவர்,
காதில்
வெண்குழை வைத்த கபாலியார்,
நீதி
ஒன்றுஅறி யார்நிறை கொண்டனர்,
பாதி
வெண்பிறைப் பாசூர் அடிகளே.
பொழிப்புரை : பாதி வெண்பிறையணிந்த
திருப்பாசூர்த் தலத்து இறைவர் ,
வேதங்களை
ஓதிவந்து இல்லத்துட் புகுந்தார் ;
காதில்
வெண்குழை வைத்த கபாலியார் ; நீதியொன்றறியாது
என்னுடைய கற்பினைக் கொண்டார் .
பாடல்
எண் : 9
சாம்பல்
பூசுவர், தாழ்சடை கட்டுவர்,
ஓம்பல்
மூதுஎருது ஏறும் ஒருவனார்,
தேம்பல்
வெண்மதி சூடுவர், தீயதோர்
பாம்பும்
ஆட்டுவர், பாசூர் அடிகளே.
பொழிப்புரை : தீயதாகிய
பாம்பினையும் பற்றி ஆடுபவராகிய திருப்பாசூர்த் தலத்திறைவர் , சாம்பல் பூசுவர் ; தாழ்கின்ற சடையினைக் கட்டுவர் ; தாங்கும் இயல்புள்ள முதிர்ந்த
எருதினையேறும் ஒருவர் ; ஒளிதேம்பிய
வெண்மதியைச் சூடுவர் .
பாடல்
எண் : 10
மாலி
னோடு மறையவன் தானுமாய்
மேலும்
கீழும் அளப்பரிது ஆயவர்,
ஆலின்
நீழல் அறம் பகர்ந் தார்,மிகப்
பால்வெண்
நீற்றினர், பாசூர் அடிகளே.
பொழிப்புரை : பால்போன்ற
வெண்ணீற்றையணிந்தவராகிய திருப்பாசூர்த் தலத்திறைவர் மாலினோடு பிரமனும் மேலும்
கீழும் அளந்தும் காண்டற்கரியவர் ;
ஆலின்நீழல்
இருந்து அறம் பகர்ந்த ஞானவடிவினர் .
பாடல்
எண் : 11
திரியும்
மூஎயில் செங்கணை ஒன்றினால்
எரிய
எய்தன ரேனும், இலங்கைக்கோன்
நெரிய
ஊன்றியிட் டார்விரல் ஒன்றினால்,
பரியர், நுண்ணியர், பாசூர் அடிகளே.
பொழிப்புரை : பருப்பொருளும் , நுண்பொருளுமாகிய திருப்பாசூர்த் தலத்து
இறைவர் , திரியும் மூன்று
புரங்களைச் சிவந்த கணையொன்றினால் எரியுமாறு எய்தனரேனும் , இலங்கையரசன் நெரியுமாறு திருவிரலால்
ஊன்றியவர் ஆவர் .
திருச்சிற்றம்பலம்
6. 083
திருப்பாசூர்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
விண்ஆகி, நிலன்ஆகி, விசும்பும் ஆகி,
வேலைசூழ் ஞாலத்தார்
விரும்பு கின்ற
எண்ஆகி, எழுத்துஆகி, இயல்பும் ஆகி,
ஏழ்உலகும்
தொழுதுஏத்திக் காண நின்ற
கண்ஆகி, மணிஆகி, காட்சி ஆகி,
காதலித்துஅங்கு
அடியார்கள் பரவ நின்ற
பண்ஆகி, இன்அமுதாம் பாசூர்
மேய
பரஞ்சுடரைக் கண்டு,அடியேன் உய்ந்த வாறே.
பொழிப்புரை :பாசூரிற் பொருந்திய
பரஞ்சுடரை மேகமாகவும் , நிலனாகவும் , ஆகாயமாகவும் , கடல் சூழ்ந்த பூமியிலுள்ளார்
விரும்புகின்ற எண்ணாகவும் , எழுத்தாகவும் , தமக்கென வேறுபட்ட இயல்புகளை உடைய
எல்லாப் பொருள்களுமாகவும் , ஏழுலகத்தாரும்
வணங்கித்துதித்துக் காணுதற்கமைந்த கண்ணாகவும் அக்கண்ணுள் மணியாகவும் அதனால்
காணப்படுகின்ற காட்சியாகவும் , அடியார்கள்
விரும்பித் துதித்தற்குரிய பண் நிறைந்த பாடலாகவும் , இன்னமுது ஆகவும் அடியேன் கண்டு
உய்ந்தவாறு நன்று .
பாடல்
எண் : 2
வேதம்ஓர்
நான்காய், ஆறுஅங்கம் ஆகி,
விரிகின்ற
பொருட்குஎல்லாம் வித்தும் ஆகி,
கூதலாய்ப்
பொழிகின்ற மாரி ஆகி,
குவலயங்கள்
முழுதுமாய், கொண்டல் ஆகி,
காதலால்
வானவர்கள் போற்றி என்று
கடிமலர்கள் அவைதூவி
ஏத்த நின்ற
பாதிஓர்
மாதினனை, பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டு,அடியேன் உய்ந்த வாறே.
பொழிப்புரை :பாசூரிற் பொருந்திய
பரஞ்சுடரை நான்கு வேதங்கள் ஆகவும் ,
அங்கங்கள்
ஆறு ஆகவும் , பெருகிவளர்கின்ற
பொருள்களுக்கெல்லாம் அடியான வித்து ஆகவும் , விடாது தூற்றும் சிறு திவலைகளைப்
பொழியும் மாரியாகவும் , உலகங்கள் யாவும் ஆகவும்
, கீழ்க்காற்று ஆகவும், அன்பு மேலீட்டால் தேவர்கள் ` போற்றி ` என்று உரைத்து மணமலர்களைத் தூவித்
தோத்திரிக்க நின்ற மாதொரு பாகன் ஆகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று .
பாடல்
எண் : 3
தடவரைகள்
ஏழுமாய், காற்றாய், தீயாய்,
தண்விசும்பாய், தண்விசும்பின் உச்சி
யாகி,
கடல்வலயஞ்
சூழ்ந்தது ஒரு ஞாலம் ஆகி,
காண்கின்ற கதிரவனும், கதியும் ஆகி,
குடமுழவச்
சரிவழியே அனல்கை ஏந்திக்
கூத்தாட வல்ல குழகன்
ஆகி,
படஅரவு
ஒன்று அதுஆட்டி, பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டு,அடியேன் உய்ந்த வாறே.
பொழிப்புரை :பாசூரிற் பொருந்திய
பரஞ்சுடரை பெரிய ஏழு குலமலைகள் ஆகவும் , காற்றாகவும்
, தீ ஆகவும் , குளிர்ந்த விசும்பாகவும் , குளிர் விசும்பின் உச்சி ஆகவும் , கடல்வட்டம் சூழ்ந்ததொரு ஞாலம் ஆகவும் , காண்பதற்குத் துணை நிற்கும் கதிரவன்
ஆகவும் , வீடடைதற்குரிய
வழியாகவும் , குடமுழவு சச்சரி
இவற்றின் முழக்கிற்கு ஏற்ப அனலைக் கையில் ஏந்திக் கூத்தாடவல்ல அழகன் ஆகவும் , படமெடுத்தாடும் பாம்பொன்றினை ஆட்டுவான்
ஆகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று .
பாடல்
எண் : 4
நீர்ஆருஞ்
செஞ்சடைமேல் அரவம் கொன்றை
நிறைமதியம் உடன்சூடி, நீதி யாலே
சீர்ஆரும்
மறைஓதி, உலகம் உய்யச்
செழுங்கடலைக்
கடைந்தகடல் நஞ்சம் உண்ட
கார்ஆருங்
கண்டனை, கச்சி மேய
கண்ணுதலை, கடல்ஒற்றி கருதி னானை,
பாரோரும்
விண்ணோரும் பரசும் பாசூர்ப்
பரஞ்சுடரைக் கண்டு,அடியேன் உய்ந்த வாறே.
பொழிப்புரை :பாரிடத்து மக்களும்
விண்ணிடத்துத் தேவரும் புகழும் பாசூரிற் பொருந்திய பரஞ்சுடரை கங்கை பொருந்திய
செஞ்சடை மேல் பாம்பு , கொன்றை , அழகுநிறைந்த பிறைமதி ஆகியவற்றைச்
சூடியவன் ஆகவும் , சிறப்புமிக்க மறைகளை , அறத்தின் வழி உலகம் ஒழுக ஓதியருளியவன்
ஆகவும் , வளவிய கடலைக் கடைந்த
பொழுது எழுந்த கடல் அளவு கொடுமை மிக்க நஞ்சினை உண்டதனால் கருமை பொருந்திய
கண்டனாகவும் , கச்சி நகரில்
விளங்கும் கண்ணுதலாகவும் , கடலை அடுத்துள்ள
ஒற்றியூரை உயர்வாக மதிப்பவனாகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று .
பாடல்
எண் : 5
வேடனாய்
விசயன்தன் வியப்பைக் காண்பான்
வில்பிடித்துக்
கொம்புஉடைய ஏனத் தின்பின்
கூடினார், உமையவளும் கோலங்
கொள்ள,
கொலைப்பகழி உடன்
கோத்துக் கோரப்பூசல்
ஆடினார், பெருங்கூத்துக் காளி
காண,
அருமறையோடு ஆறு
அங்கம் ஆய்ந்து கொண்டு
பாடினார்
நால்வேதம், பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டு,அடியேன் உய்ந்த வாறே.
பொழிப்புரை :பாசூரிற் பொருந்திய
பரஞ்சுடரை தமது திருவிளையாடலின் நிலையை உணர்ந்து வியக்கும் விசயனது மருட்கையைக்
காண வேண்டி உமையவளும் வேட்டுவக்கோலம் கொள்ளத்தாமும் ஒரு வேடனாய் வில்லை ஏந்திக்
கொலையிற் பழகிய பகழியையும் வில்லிற்கோத்துக் கொம்பினையுடைய பன்றியைத் தொடர்ந்து
சென்று கொடிய பூசலைச் செய்தவர் ஆகவும், காளி
காணப் பெருங்கூத்தினை ஆடினார் ஆகவும், அரிய
மறைவாகிய பொருளையுடைய வேதங்களையும் ஆறங்கப் பொருளையும் ஆராய்ந்து மனத்திற்கொண்டு
நான்கு வேதங்களையும் பாடினவர் ஆகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று.
பாடல்
எண் : 6
புத்தியினால்
சிலந்தியும்தன் வாயின் நூலால்
புதுப்பந்தர்
அதுஇழைத்து, சருகால் மேய்ந்த
சித்தியினால், அரசுஆண்டு சிறப்புச்
செய்ய,
சிவகணத்துப்
புகப்பெய்தார், திறலால் மிக்க
வித்தகத்தால்
வெள்ஆனை விள்ளா அன்பு
விரவியவா கண்டுஅதற்கு
வீடு காட்டி,
பத்தர்களுக்கு
இன்அமுதாம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டு,அடியேன் உய்ந்த வாறே.
பொழிப்புரை :பாசூரிற் பொருந்திய
பரஞ்சுடரைப் பெற்ற ஞானத்தினால் உயர் சிலந்தி தன் வாயிலிருந்து வரும் நூலால்
மக்களால் செய்யலாகாத பந்தலை இயற்றி அதனைச் சருகால் மூடிய திருத் தொண்டைச்
சிந்தித்துச் செய்தமையால் பின் அரசனாகி நிலவுலகை ஆண்டு அப்பிறப்பிலும் சிறந்த
தொண்டு செய்யச் சிவகணங்களுள் புக்கு இன்புறுமாறு சேர்த்தருளினவர் ஆகவும் , வலிமையும் , திறமையும் கொண்டு வெள்ளானை , செய்த செயலிடத்து மிக்க அன்பு விரவி
யிருந்தமை கண்டு அதற்கு வீடு அருளியவர் ஆகவும் , பத்தர்களுக்கு இன்னமுதம் ஆகவும் அடியேன்
கண்டு உய்ந்தவாறு நன்றாம் .
பாடல்
எண் : 7
இணைஒருவர்
தாம் அல்லால் யாரும் இல்லார்,
இடைமருதோடு ஏகம்பத்து
என்றும் நீங்கார்,
அணைவுஅரியர்
யாவர்க்கும், ஆதி தேவர்,
அருமந்த நன்மைஎலாம்
அடியார்க்கு ஈவர்,
தணல்
முழுகு பொடிஆடும் செக்கர் மேனித்
தத்துவனை, சாந்துஅகிலின் அளறு
தோய்ந்த
பணைமுலையாள்
பாகனை,எம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டு,அடியேன் உய்ந்த வாறே.
பொழிப்புரை :பாசூரிற் பொருந்திய
எம்பரஞ்சுடரைத் தமக்குத் தாம் அல்லால் இணையாவார் ஒருவரும் இல்லார் ஆகவும் , இடை மருது , ஏகம்பம் என்றிவற்றை என்றும் நீங்காதார்
ஆகவும் , யாவர்க்கும்
அணைவதற்கு அரியார் ஆகவும் , ஆதி தேவர் ஆகவும் , அடியார்க்கு அரிய அமுதம் போன்ற நல்லன
எல்லாம் ஈவார் ஆகவும் , நெருப்பில்
மூழ்கினமையால் உண்டான சாம்பற்பூச்சைக் கொண்ட செவ்வானன்ன மேனித் தத்துவன் ஆகவும் , சந்தனம் அகில் ஆகியவற்றின் சேறு
தோயப்பெற்ற பருத்த தனத்தினையுடைய பார்வதியின் பாகன் ஆகவும் அடியேன் கண்டு
உய்ந்தவாறு நன்று .
பாடல்
எண் : 8
அண்டவர்கள்
கடல்கடைய, அதனுள் தோன்றி
அதிர்த்து எழுந்த
ஆலாலம், வேலை ஞாலம்
எண்திசையும்
சுடுகின்ற ஆற்றைக் கண்டு,
இமைப்புஅளவில்
உண்டுஇருண்ட கண்டர், தொண்டர்
வண்டுபடு
மதுமலர்கள் தூவி நின்று
வானவர்கள் தானவர்கள்
வணங்கி யேத்தும்
பண்டரங்க
வேடனை,எம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டு,அடியேன் உய்ந்த வாறே.
பொழிப்புரை :பாசூரிற் பொருந்திய
எம் பரஞ்சுடரை மேலுலகத்தார் கடலைக் கடைய அதனிடத்து அனைவரையும் நடுங்கச்செய்து
எழுந்த ஆலால நஞ்சு கடல் சூழ்ந்த உலகை எட்டுத் திசைகளிலும் சுடுகின்ற தன்மையைக்
கண்டு இமைப்பளவில் அதனை உண்டு அதனால் கறுத்த கண்டர் ஆகவும் , தேவர்களும் அசுரர்களும் வண்டுகள்
மொய்க்கும் தேன் நிறைந்த மலர்களைத் தூவி நின்று வணங்கித் துதிக்கும் பண்டரங்கக்
கூத்தனாம் வேடம் கொண்டவர் ஆகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று .
பாடல்
எண் : 9
ஞாலத்தை
உண்டதிரு மாலும் மற்றை
நான்முகனும் அறியாத
நெறியார், கையில்
சூலத்தால்
அந்தகனைச் சுருளக் கோத்து,
தொல்உலகில்
பல்உயிரைக் கொல்லும் கூற்றைக்
கால்அத்தால்
உதைசெய்து, காதல் செய்த
அந்தணனைக் கைக்கொண்ட
செவ்வான் வண்ணர்,
பால்
ஓத்த வெண்ணீற்றர், பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டு,அடியேன் உய்ந்த வாறே.
பொழிப்புரை :பாசூரிற்பொருந்திய
பரஞ்சுடரை ஞாலத்தை உண்ட திருமாலும் நான்முகனும் அறியாத நிலையினை உடையவராகவும் , அந்தகாசுரன் மடிய அவனைச் சூலத்தாற்
குத்தியவர் ஆகவும் , பழைய இவ்வுலகில்
பல்லுயிரையும் கொல்லும் இயமனைக் காலால் உதைத்து உருட்டித் தன்பால் உண்மை அன்பு
கொண்ட அந்தணனைக் கைக்கொண்டு காத்த செவ்வான் அன்னமேனி நிறத்தவர் ஆகவும் , பால்போன்ற வெண்ணீற்றுப் பூச்சினர்
ஆகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று .
பாடல்
எண் : 10
வேந்தன்நெடு
முடிஉடைய அரக்கர் கோமான்,
மெல்இயலாள் உமைவெருவ, விரைந்திட்டு ஓடி,
சாந்தம்என
நீறுஅணிந்தான் கயிலை வெற்பைத்
தடக்கைகளால்
எடுத்திடலும், தாளால் ஊன்றி,
ஏந்துதிரள்
திண்தோளும் தலைகள் பத்தும்
இறுத்து, அவன்தன் இசைகேட்டு
இரக்கங் கொண்ட
பாந்தள்அணி
சடைமுடிஎம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டு,அடியேன் உய்ந்த வாறே.
பொழிப்புரை :பாசூரிற் பொருந்திய
எம்பரஞ்சுடரை நெடிய முடியை அணிந்த அரக்கர் கோமானாகிய வேந்தன் விரைந்து ஓடிச்
சந்தனம் ஒப்பத்திருநீற்றினை அணிந்த தனது கயிலை மலையைப் பெரிய கைகளால்
பெயர்த்திடவும் மெல்லியல் உமைவெருவ , அவ்வளவில்
, அவனுடைய வலிமை மிக்கு
உயர்ந்து திரண்ட தோள்களும் பத்துத்தலைகளும் இறும் வண்ணம் தன் தாள் விரலை ஊன்றிப்
பின் அவனது இசையைக் கேட்டு இரக்கங்கொண்டவன் ஆகவும் சடையாலாகிய முடியிடத்துப்
பாம்பை அணிந்தவனாகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று .
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment