திருமாற்பேறு


திரு மாற்பேறு
(திருமால்பூர்)

     தொண்டை நன்னாட்டுத் திருத்தலம்.

     காஞ்சிபுரம் நகரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அரக்கோணம் செல்லும் வழியில் உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்தும், அரக்கோணத்தில் இருந்தும் அடிக்கடி பேருந்து வசதிகள் இருக்கின்றன.

     சென்னையில் இருந்து பேருந்து நேரம் விசார்த்துச் செல்லவேண்டும். இரயில் வண்டி வசதி உள்ளது. நேரம் பார்த்துச் செல்ல வேண்டும்.

     அரக்கோணத்தில் இருந்தும் இரயில் வசதி உள்ளது. இரயில் நிலயத்தில் இறங்கி, மேற்கே ஐந்து கி.மீ. சென்றால் ஏரை அடையலாம்.

இறைவன்        :-    மணிகண்டேசுவரர், மால்வணங்கீசுவரர்

இறைவி          :-    அஞ்சனாட்சி அம்மை, கருணை நாயகி

பதிகம்            :-    திருநாவுக்கரசர் - 1. மாணிக்கு உயிர்பெற
                                                                        2. பொரும் ஆற்றின்படை
                                                                        3. ஏதும் ஒன்றும்
                                                                        4. பாரானை பாரினது
                                                                       
                               திருஞானசம்பந்தர் - 1. ஊறியார்தரு
                                                                          2. குருந்தவன் குருகவன்

     மகாவிஷ்ணு ஒருமுறை குபன் என்ற அரசனுக்காக ததீசி முனிவருடன் போரிட்டார். அப்போது மகாவிஷணுவின் சக்கரம் முனிவரின் வைர உடம்பில் பட்டு முனை மழுங்கி விட்டது. சலந்தரனை சம்ஹாரம் செய்த சக்கரம் சிவபெருமானிடம் இருப்பதைக் கேள்விப்பட்ட மகாவிஷ்ணு, அதனை பெறவேண்டி இத்தலம் வந்து அம்பிகை பூசித்த இலிங்கத்தை தினந்தோறும் ஆயிரம் தாமரை மலர்களால் அருச்சித்து வந்தார். சிவபெருமான் அவரது பக்தியைப் பரிசோதிக்க வேண்டி ஒரு நாள் ஆயிரம் தாமரை மலர்களில் ஒன்றை மறைத்தருளினார். திருமால் ஆயிரம் பெயர்களால் இறைவனை அருச்சிக்கும் போது ஒரு பெயருக்கு மலர் இல்லாமையால் தனது கண்ணைப் பறித்து இறைவன் திருவடியில் சமர்ப்பித்தார். உடன் சிவபெருமான் மகிழ்ந்து மகாவிஷணுவிற்குக் காட்சி கொடுத்து அவர் வேண்டியபடி சக்கரத்தைக் கொடுத்தருளினார். திருமால் வழிபட்டு சக்கராயுதம் பெற்றதால் இத்தலம் அன்று முதல் திருமாற்பேறு என்று பெயர் பெற்றது.

     இதே வரலாறு திருவீழிமிழலை தலத்திற்கும் சொல்லப்படுகின்றது. இப்புராண வரலாற்றை உறுதிப்படுத்தும் வகையில் திருமாலின் உற்சவத் திருமேனி நின்ற கோலத்தில் ஒரு கையில் தாமரை மலரும், மறு கையில் "கண்"ணும் கொண்டு இருப்பதை இக்கோயிலில் காணலாம்.

         ஒருமுறை பார்வதி விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூட, அதனால் உலகமே இருண்டு போயிற்று. உலக இயக்கமே தடைபட, தனது தவறை உணர்ந்த பார்வதி இப்பூவுலகம் வந்து பாலாறு நதிக்கரையில் மணலால்  இலிங்கம் அமைத்து இறைவனை பூஜித்து தன் தவறை போக்கிக் கொண்டாள். விருத்தக்ஷீர நதி என்பது தமிழில் பாலாறு ஆகும். எல்லாத் தமிழ்ப் பெயர்களையும், வடமொழில் மாற்றி வழங்கிய நிலையில் 'பழைய பாலாறு' இவ்வாறு ஆனது.

     இத்தலத்திற்கு வடக்குத் திசையில் இப்போது உள்ளது. மணலால் அமைக்கப்பட்ட லிங்கம் இங்கு மூலவராக உள்ளதால், அது கரைந்து விடாமல் இருக்க லிங்கத்தின் மீது செம்பினால் ஆன குவளை  சாத்தியே அபிஷேகம் செய்யப்படுகிறது. மூலவர் தீண்டாத் திருமேனி.

         கிழக்கு நோக்கிய ஐந்து நிலை இராஜகோபுரம், இரண்டு பிரகாரங்களுடன் திருக்கோயில் அமைந்துள்ளது. எதிரில் சக்கர தீர்த்தம் உள்ளது. சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கியும், அம்மன் சந்நிதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் நேரே உயரமான பீடத்தின்மீது பலிபீடம் கவசமிட்ட கொடிமரம், நந்தி முதலியவை தனித்தனியே உள்ளன. உள் வாயிலைக் கடந்து மூலவர் சந்நிதியை அடையலாம். உட்பிராகாரத்தில் நந்திகேசுவரர் நின்ற திருக்கோலத்திலும், செந்தாமரைக்கண்ணப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் கூப்பிய கரங்களுடன் காட்சி தருகின்றனர். உட்பிராகாரத்தில் விநாயகர், சிதம்பரேசுவரர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், சண்ட்கேசுவரர், நடராஜர், கஜலட்சுமி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன.

         பிராகார வலம் முடித்து, மூலவர் கருவறை நோக்கி செல்லும் போது வாயிலின் இருபுறம் துவாரபாலகர்கள் உள்ளனர். ஒருபுறம் வல்லபை விநாயகர் பத்துக் கரங்களுடன் காட்சி தருகின்றார். இது அபூர்வ அமைப்பாகும். மறுபுறம் சண்முகர் உள்ளார். நடுவில் மூலவரைப் பார்த்தவாறு மகா விஷ்ணு கூப்பிய கரங்களுடன் காட்சி தருகின்றார். மேலே விமானம் உள்ளது. அவருக்கு முன் நந்தி உள்ளது. சந்நிதி வாயிலைக் கடந்து உள் மண்டபத்தை அடையலாம்.

     இங்குள்ள தூண்களில் தட்சிணாமூர்த்தி, சூரியன், மகாவிஷ்ணு, பாலசுப்பிரமணியர், அப்பர், சுந்தரர், சம்பந்தர், விநாயகர், முருகன், நான்கு முகங்களும் நன்கு தெரிய பிரம்மா, அம்பாள் வில்வ மரத்தடியில் இறைவனை வழிபடுவது, காளிங்கநர்த்தனம், காமதேனு, பைரவர், வீரபத்திரர் ஆகிய பல வகையான அரிய சிற்பங்கள் உள்ளன.

     நடராசர் தெற்கு நோக்கியுள்ளார். சபையில் மாணிக்கவாசகரும் சிவகாமியும் உடன் எழுந்தருளியுள்ளனர். நேரே மூலவர் தரிசனம். கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். துர்க்கை அஷ்டபுஜங்களுடன் சங்கு சக்கரம் ஏந்தி அழகாகக் காட்சி தருகின்ற திருமேனி. சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. மூலவருக்கு எதிரில் உள்ள மகாவிஷ்ணுவுக்குத் தீபாராதனை முடிந்த பின்பு சடாரி சார்த்தி தீர்த்தம் தரும் மரபு உள்ளது.

         திருஞானசம்பந்தர் அருளிய இரண்டு திருப்பதிகங்களும், திருநாவக்கரசர் அருளிய நான்கு திருப்பதிகங்களும் ஆக ஆறு தேவாரப் பதிகங்கள் இத்தலத்திற்கு உரியன. சுந்தரமூர்த்தி சுவாமிகளும் இத்தலத்திற்கு எழுந்தருளி வழிபட்டதாக சேக்கிழார் தனது பெரிய புராணத்தில் குறிப்பிடுகிறார். ஆனால் அவர் அருளிய திருப்பதிகம் கிடைக்கவில்லை.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில்,  "சொல் வரிக்குக் கால்பேறு கச்சியின் முக்கால் பேறு இவன் என்னும் மாற்பேற்றின் அன்பர் மனோபலமே" என்று போற்றி உள்ளார்.

     காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திருக்கோயில் திறந்திருக்கும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

         திருஞானசம்பந்தப் பெருமான் திருக்கச்சிமேற்றளியை வணங்கி எழுந்தருளி இருக்கின்ற காலத்து, ஒரு நாள், பாலியாற்றுத் தென்கரை வழியாகச் சென்று திருமாற்பேறு என்னும் தலத்தை அடைந்து, முப்புரம் வென்ற முதல்வரை வணங்கி, மொழிமாலை சாத்தினார் என்று தெய்வச் சேக்கிழார் பெருமானால் சிறப்பிக்கப்பட்ட இத் திருப்பதிகத்தைப் பாடி அருளினார்.


பெரிய புராணப் பாடல் எண். 1002
அப்பதியில் விருப்பினொடும்
         அங்கணரைப் பணிந்து அமர்வார்,
செப்பரிய புகழ் பாலித்
         திருநதியின் தென்கரை போய்
மைப்பொலியும் கண்டர்திரு
         மாற்பேறு மகிழ்ந்து இறைஞ்சி,
முப்புரம் செற்றவர் தம்மை
         மொழிமாலை சாத்தினார்.

         பொழிப்புரை : இவ்வாறு காஞ்சி நகரத்தில் மிக்க விருப்புடன் இறைவரை வணங்கியவாறு விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பிள்ளையார், கூறுதற்கரிய புகழுடன் கூடிய பாலியாற்றின் தெற்குக் கரையின் வழியில் சென்று, நஞ்சு விளங்கும் கழுத்தையுடைய சிவபெருமான் வீற்றிருக்கின்ற `திருமாற்பேற்றை' மகிழ்ச்சியுடன் வணங்கி, முப்புரங்களை எரித்த சிவபெருமானுக்குச் சொல் மாலை ஆன திருப்பதிகம் சாத்தியருளினார்.

         குறிப்புரை : இவ்வாறு காஞ்சி நகரத்தில் மிக்க விருப்புடன் இறைவரை வணங்கியவாறு விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பிள்ளையார், கூறுதற்கரிய புகழுடன் கூடிய பாலியாற்றின் தெற்குக் கரையின் வழியில் சென்று, நஞ்சு விளங்கும் கழுத்தையுடைய சிவபெருமான் வீற்றிருக்கின்ற `திருமாற்பேற்றை\' மகிழ்ச்சியுடன் வணங்கி, முப்புரங்களை எரித்த சிவபெருமானுக்குச் சொல் மாலை ஆன திருப்பதிகம் சாத்தியருளினார்.

திருஞானசம்பந்தர் திருப்பதிகங்கள்

1.055   திருமாற்பேறு                     பண் - பழந்தக்கராகம்
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு,உமை,
நீறு சேர்திரு மேனியர்,
சேறு சேர்வயல் தென்திரு மாற்பேற்றின்
மாறு இலாமணி கண்டரே.

         பொழிப்புரை :சேற்று வளம் நிறைந்த வயல்கள் சூழ்ந்த அழகிய திருமாற்பேற்றில் ஒப்பற்ற நீலமணி போன்ற கண்டத்தை உடைய இறைவர், கடலிடத்தே ஊறிப் பொருந்திவந்த நஞ்சினை உண்டு உமையம்மையோடு கூடியவராய்த் திருநீறு பூசிய திருமேனியராய் விளங்குகிறார்.
  
பாடல் எண் : 2
தொடைஆர் மாமலர் கொண்டுஇரு போதுஉம்மை
அடைவா ராம்அடி கள்என.
மடையார் நீர்மல்கு மன்னிய மாற்பேறு
உடையீ ரேஉமை உள்கியே.

         பொழிப்புரை :வாய்க்கால் மடைகளில் நீர் நிறைந்து விளங்கும் நிலையான திருமாற்பேற்றைத் தமது இருப்பிடமாக உடையவரே, உம்மை நினைந்து சிறந்த மாலைகளைத் தொடுத்து ஏந்திய கையினராய்க் காலை, மாலை இருபோதும் உம்மைத்தலைவராக எண்ணி அடியவர் அடைகின்றனர்.
  
பாடல் எண் : 3
பைஆ ரும்அர வங்கொடு ஆட்டிய
கையான் என்று வணங்குவர்,
மையார் நஞ்சுஉண்டு மாற்பேற்று இருக்கின்ற
ஐயா நின்அடி யார்களே.

         பொழிப்புரை :கருநிறம் பொருந்திய நஞ்சை உண்டு தேவர்களைக் காத்தருளிய நீலகண்டராய்த் திருமாற்பேற்றில் வீற்றிருக்கின்ற தலைவரே, உம் அடியவர்கள் படம் பொருந்திய பாம்பைப் பிடித்து ஆட்டும் கைகளை உடையவர் என்று உம்மை வணங்குவார்கள்.

பாடல் எண் : 4
சால மாமலர் கொண்டு சரண்என்று
மேலை யார்கள் விரும்புவர்,
மாலி னார்வழி பாடுசெய் மாற்பேற்று
நீலம் ஆர்கண்ட நின்னையே.

         பொழிப்புரை :திருமால் வழிபாடு செய்து அருள் பெற்றதால் திருமாற்பேறு என வழங்கும் இத்தலத்தில் விளங்கும் நீலநிறம் பொருந்திய கண்டத்தை உடையவரே, நும்மை மேன்மை மிக்க பெரியோர்கள் மிகுதியான நறுமலர்களைக் கொண்டு அர்ச்சித்து உம்மையே சரண் என்று விரும்பி வழிபடுவர்.

பாடல் எண் : 5
மாறு இலாமணி யேஎன்று வானவர்
ஏற வேமிக ஏத்துவர்,
கூற னே,குல வும்திரு மாற்பேற்றின்
நீற னே, என்று நின்னையே.

         பொழிப்புரை :உமையம்மையை ஒரு கூற்றாகக் கொண்டவரே, விளங்கும் திருமாற்பேற்றில் வெண்ணீறுபூசி விளங்குபவரே, ஒப்பற்ற மாணிக்கமணியே என்று உம்மையே வானவர் மிகமிக ஏத்தி மகிழ்வர்.


பாடல் எண் : 6
உரையா தார்இல்லை ஒன்றுநின் தன்மையை,
பரவா தார்இல்லை நாள்களும்,
திரையார் பாலியின் தென்கரை மாற்பேற்று
அரையா னேஅருள் நல்கிடே.

         பொழிப்புரை :அலைகள் பொருந்திய பாலியாற்றின் தென்கரையில் விளங்கும் திருமாற்பேற்றில் விளங்கும் அரசனே, பொருந்திய நின் பெருந்தன்மையை வியந்து உரையாதார் இல்லை. நாள்தோறும் உன் பெருமைகளைப் பரவாதவர் இல்லை. அருள் நல்குவீராக.

பாடல் எண் : 7
* * * * * * * * *
பாடல் எண் : 8
அரசு அளிக்கும் அரக்கன் அவன்தனை
உரைகெ டுத்துஅவன் ஒல்கிட
வரமி குத்தஎம் மாற்பேற் அடிகளைப்
பரவி டக்கெடும் பாவமே.

         பொழிப்புரை :இலங்கை நாட்டை ஆளும் இராவணனின் புகழை மங்கச் செய்து, பின் அவன் பிழை உணர்ந்து வேண்டிய அளவில் அவனுக்கு வரங்கள் பலவற்றையும் மிகுதியாக அளித்தருளிய எமது திருமாற்பேற்று அடிகளைப் பரவப் பாவம் கெடும்.
  
பாடல் எண் : 9
இருவர் தேவரும் தேடித் திரிந்துஇனி
ஒருவ ரால்அறிவு ஒண்ணிலன்
மருவு நீள்கழல் மாற்பேற்று அடிகளைப்
பரவு வார்வினை பாறுமே.

         பொழிப்புரை :திருமால் பிரமன் ஆகிய இருவரும் அடிமுடி காணத்தேடித் திரிந்தும் ஒருவராலும் அறிய ஒண்ணாத இயல்பினனாகிய, திருமாற்பேற்றுள் விளங்கும் சிவபிரானுடைய பெருமை விரிந்த திருவடிகளைப் பரவித்துதிப்பார் வினைகள் கெடும்.

பாடல் எண் : 10
தூசு போர்த்துஉழல் வார், கையில் துற்றுஉணும்
நீசர் தம்முரை கொள்ளெலும்,
தேச மல்கிய தென்திரு மாற்பேற்றின்
ஈசன் என்றுஎடுத்து ஏத்துமே.

         பொழிப்புரை :ஆடையை மேனிமேற் போர்த்து உழல்வோரும், கைகளில் உணவை ஏற்று உண்ணும் இழிந்தோருமாகிய புத்த, சமணர்களின் உரைகளை மெய்யெனக் கொள்ளாதீர். புகழ் பொருந்திய அழகிய திருமாற்பேற்றுள் விளங்கும் ஈசன் என்று பெருமானைப் புகழ்ந்து போற்றுமின்.

பாடல் எண் : 11
மன்னி மாலொடு சோமன் பணிசெயும்
மன்னு மாற்பேற்று அடிகளை
மன்னு காழியுள் ஞானசம் பந்தன்சொல்
பன்ன வேவினை பாறுமே.

         பொழிப்புரை :திருமாலும் சந்திரனும் தங்கியிருந்து பணிசெய்து வழிபட்ட நிலைபேறுடைய திருமாற்பேற்றுள் விளங்கும் இறைவனை நிலைத்த காழிமாநகருள் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத்தை ஓதினால் வினைகள் கெடும்.

                                             திருச்சிற்றம்பலம்
        
1.114 திருமாற்பேறு                   பண் - வியாழக்குறிஞ்சி
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
குருந்துஅவன், குருகுஅவன், கூர்மைஅவன்,
பெருந்தகை, பெண்அவன், ஆணும்அவன்,
கருந்தட மலர்க்கண்ணி காதல்செய்யும்
மருந்துஅவன் வளநகர் மாற்பேறே.

         பொழிப்புரை :குருத்தாக, தளிராக, மொட்டு, காய் ஆதியனவாக விளங்குபவனும், பெருந்தகையாய்ப் பெண் ஆண் வடிவோடு விளங்குபவனும், தடாகத்தில் பூக்கும் கருநீல மலர் போன்ற கண்களை உடைய உமையம்மையால் விரும்பப்படுபவனும், அரிய மருந்தாய் விளங்குபவனும் ஆகிய சிவபெருமானது வளநகர் மாற்பேறு.

பாடல் எண் : 2
பாறுஅணி வெண்தலை கையில்ஏந்தி
வேறுஅணி பலிகொளும் வேட்கையனாய்
நீறுஅணிந்து உமைஒரு பாகம்வைத்த
மாறுஇலி வளநகர் மாற்பேறே.

         பொழிப்புரை :பருந்தால் நெருங்கப்பட்ட புலால் நீங்கிய அழகிய வெள்ளிய தலையோட்டைக் கையில் ஏந்தி, உலகியலில் வேறுபட்ட அழகுடன் சென்று பலியேற்கும் வேட்கையனாய் மேனி முழுதும் நீறுபூசி உமையம்மையை ஒருபாகமாக வைத்துள்ளவனும், தனக்கு ஒப்பு இல்லாதவனும் ஆகிய சிவபிரானது வளநகர், மாற்பேறு.

பாடல் எண் : 3
கருவுடை யார்உல கங்கள்வேவச்
செருவிடை ஏறியும் சென்றுநின்று,
உருஇடை யாள்உமை யாளும் தானும்
மருவிய வளநகர் மாற்பேறே.

         பொழிப்புரை :பிறப்புடைய ஆன்மாக்களுக்குப் படைக்கப்பட்ட உலகங்களை ஊழிக் காலத்தில் அழியுமாறு செய்பவனும், போரில் வல்ல விடை மீது ஏறிவருபவனும் ஆகிய சிவபிரான் மணம் புரிந்த அழகிய இடையினை உடைய உமையாளும் தானுமாய்ச் சென்று நின்று பொருந்தி விளங்கும் வளநகர் மாற்பேறாகும்.

பாடல் எண் : 4
தலையவன், தலையணி மாலைபூண்டு
கொலைநவில் கூற்றினைக் கொன்றுஉகந்தான்,
கலைநவின் றான்,கயி லாயம்என்னும்
மலையவன் வளநகர் மாற்பேறே.

         பொழிப்புரை :எல்லோரினும் மேம்பட்டவனும், அழகிய தலைமாலையைப் பூண்டு உயிரைக் கொல்லும் விருப்பொடுவந்த கூற்றுவனைக் கொன்று மகிழ்ந்தவனும், பல கலைகளையும் உலகிற்கு அருளியவனும், கயிலாய மலையாளனுமாகிய சிவபிரானது வளநகர் மாற்பேறாகும்.

பாடல் எண் : 5
துறையவன், தொழில்அவன், தொல்உயிர்க்கும்
பிறைஅணி சடைமுடிப் பெண்ணொர்பாகன்,
கறைஅணி மிடற்றுஅண்ணல், காலற்செற்ற
மறையவன் வளநகர் மாற்பேறே.

         பொழிப்புரை :பல்வேறு நெறிகளாய் விளங்குபவனும், பழமையாக வரும் உயிர்களின் பொருட்டு ஐந்தொழில்களைப் புரிபவனும், பிறையணிந்த சடைமுடியனும், உமை நங்கையை ஒருபாகமாகக் கொண்டவனும், விடக்கறை பொருந்தியமிடற்றினை உடைய தலைமையாளனும், காலனைச் செற்றுகந்த மறையவனுமான சிவபிரானது வளநகர், மாற்பேறாகும்.
  
பாடல் எண் : 6
பெண்ணின்நல் லாளைஓர் பாகம்வைத்துக்
கண்ணினால் காமனைக் காய்ந்தவன்தன்
விண்ணவர் தானவர் முனிவரொடு
மண்ணவர் வணங்குநன் மாற்பேறே.

         பொழிப்புரை :பெண்களிற் பேரழகினளாகிய உமையம்மையை ஒரு பாகமாக வைத்திருந்தும் தனது நெற்றிக் கண்ணால் காமனை நீறாக்கி அழித்தவனும், தேவர்கள், அசுரர்கள் முனிவர்கள், மண்ணுலக மக்கள் ஆகியோரால் வணங்கப் பெறுபவனுமாய சிவபிரானது வளநகர், மாற்பேறாகும்.
  
பாடல் எண் : 7
* * * * * * * * * *
 பாடல் எண் : 8
தீதுஇலா மலைஎடுத் தவ்வரக்கன்
நீதியால் வேதகீ தங்கள்பாட
ஆதியான் ஆகிய அண்ணல்எங்கள்
மாதிதன் வளநகர் மாற்பேறே.

         பொழிப்புரை :குற்றமற்ற கயிலை மலையைப் பெயர்த்த அரக்கனாகிய இராவணனை முதலில் கால்விரலால் அடர்த்துப் பின் அவன் பிழை உணர்ந்து முறையோடு வேத கீதங்களைப் பாட அருள்புரிந்த ஆதியானாகிய அண்ணலும் மாதினை இடப்பாகமாக உடைய எங்கள் தலைவனுமாய சிவபிரானது வளநகர், மாற்பேறாகும்.

பாடல் எண் : 9
செய்யதண் தாமரைக் கண்ணனொடும்
கொய்அணி நறுமலர் மேல்அயனும்
ஐயன்நன் சேவடி அதனைஉள்க
மையல்செய் வளநகர் மாற்பேறே.

         பொழிப்புரை :சிவந்த தண்தாமரை மலர்போன்ற கண்களை உடைய திருமாலும், கொய்து அணியத்தக்க தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனும், தலைவனாகிய சிவபிரானின் சேவடிகளை விருப்போடு நினைந்து வழிபட அருள்புரியும் சிவபிரான் எழுந்தருளிய வளநகர், மாற்பேறாகும்.

பாடல் எண் : 10
குளித்துஉணா அமணர்,குண் டாக்கர்என்றும்
களித்துநன் கழல்அடி காணல்உறார்,
முளைத்தவெண் மதியினொடு அரவஞ்சென்னி
வளைத்தவன் வளநகர் மாற்பேறே.

         பொழிப்புரை :குளித்துப்பின் உண்ணாத இயல்பினராகிய அமணர்களும், பருத்த உடலினராகிய புத்தர்களும், களிப்போடு சிவபிரான் திருவடிகளைக் காணப்பெறார். ஒரு கலைப் பிறையாக முளைத்த வெள்ளிய பிறை மதியையும் பாம்பையும் முடிமீது சூடியவனாகிய சிவபிரானது வளநகர், மாற்பேறாகும்.

பாடல் எண் : 11
அந்தம்இல் ஞானசம் பந்தன்சொன்ன
செந்துஇசை பாடல்செய் மாற்பேற்றைச்
சந்தம்இன் தமிழ்கள்கொண்டு ஏத்தவல்லார்
எந்தைதன் கழல்அடி எய்துவரே.

         பொழிப்புரை :ஞானசம்பந்தன் செவ்விய இசையால் பாடிப் போற்றிய மாற்பேற்றைத் தரிசித்துச் சந்த இசையோடு கூடிய அழிவற்ற இனிய இத்திருப்பதிகப் பாடல்களைக் கொண்டு ஏத்தி வழிபட வல்லவர் எந்தையாகிய சிவபிரானின் கழலணிந்த திருவடிகளை எய்துவர்.

                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------

திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பாடல் எண் : 326
சீர்வளரும் மதில்கச்சி
         நகர்த்திருமேல் தளிமுதலா,
நீர்வளரும் சடைமுடியார்
         நிலவிஉறை ஆலயங்கள்
ஆர்வம்உறப் பணிந்துஏத்தி,
         ஆய்ந்த தமிழ்ச் சொல்மலரால்
சார்வுறு மாலைகள் சாத்தி,
         தகும்தொண்டு செய்துஇருந்தார்.

         பொழிப்புரை : சீர்மை மிக்க மதில்களையுடைய திருக்கச்சி மேற்றளி முதலாகக் கங்கை தங்கிய சடைமுடியார் நிலைபெற வீற்றிருக்கும் கோயில்கள் பலவற்றையும் ஆர்வத்துடன் வணங்கி, ஆய்ந்த தமிழ்ச் சொல் மாலைகளால் ஆய திருப்பதிகங்களைச் சாத்தி, தக்க தொண்டுகளைச் செய்த வண்ணம் அங்கே திருநாவுக்கரசர் தங்கியிருந்தார்.

         குறிப்புரை : திருக்கச்சித் திருமேற்றளியில் அருளிய பதிகம் `மறையது பாடி` (தி.4 ப.43) எனத் தொடங்கும் திருநேரிசைப் பதிகம் ஆகும். ஆலயங்கள் - எவ்வெக் கோயில்கள் எனத் தெரியவில்லை.


பெ. பு. பாடல் எண் : 327
அந்நகரில் அவ்வண்ணம்
         அமர்ந்துஉறையும் நாளின்கண்,
மன்னுதிரு மாற்பேறு
         வந்து அணைந்து, தமிழ்பாடி,
சென்னிமிசை மதிபுனைவார்
         பதிபலவும் சென்று இறைஞ்சி,
துன்னினார் காஞ்சியினைத்
         தொடர்ந்த பெரும் காதலினால்.

         பொழிப்புரை : இவ்வாறு காஞ்சி நகரத்தில் நாவரசர் இருந்தருளிய பொழுது, நிலை பெற்ற திருமாற்பேற்றுக்குச் சென்று திருப்பதிகம் பாடி, தலையில் பிறைச்சந்திரனை அணிந்த சிவபெருமானின் திருப்பதிகள் பலவற்றிற்கும் சென்று வணங்கி, முன் தொடர்ந்த பெருங்காதல் காரணமாக மீளவும் காஞ்சி நகரத்தை வந்து சேர்ந்தார்.

         குறிப்புரை : திருமாற்பேற்றில் அருளிய பதிகங்கள்:

1.    `மாணிக் குயிர்` (தி.4 ப.108) - திருவிருத்தம்.
2.    `பொருமாற்றின்` (தி.5 ப.59) - திருக்குறுந்தொகை.
3.    `எதும் ஒன்றும்` (தி.5 ப.60) - திருக்குறுந் தொகை.
4.    `பாரானை` (தி.6 ப.80) - திருத்தாண்டகம்.

          பதிபலவும் எனக் குறிப்பன திருவூறல், திருவிற்கோலம், இலம்பையங்கோட்டூர் முதலாயனவாகலாம் என்பர் சிவக்கவிமணியார் (பெரிய.பு.உரை). இத் திருத்தலங்களில் அப்பர் திருப் பதிகங்கள் எவையும் கிடைத்தில.


திருநாவுக்கரசர் திருப்பதிகங்கள்
        
4. 108  திருமாற்பேறு                     திருவிருத்தம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
மாணிக்கு உயிர்பெறக் கூற்றை உதைத்தன, மாவலிபால்
காணிக்கு இரந்தவன் காண்டற்கு அரியன, கண்டதொண்டர்
பேணிக் கிடந்து பரவப் படுவன, பேர்த்தும்அஃதே
மாணிக்கம் ஆவன மாற்பேறு உடையான் மலர்அடியே.

         பொழிப்புரை : மாற்பேறுடையானுடைய தாமரை போன்ற திருவடிகள் பிரமசாரியான மார்க்கண்டேயன் ஆயுள் குறையாது நிலைபெற்றிருக்கக் கூற்றுவனை உதைத்தன. மாவலியினிடத்தில் நிலத்திற்காக யாசகம் செய்த திருமால் காண்பதற்கு அரியன . ஞானத்தால் உணர்ந்த அடியவர்களால் விரும்பித் துதிக்கப்படுவன . மாணிக்கம் போன்று ஒளி வீசுவன . மேலும் வீடுபேற்றை நல்குவன .


பாடல் எண் : 2
கருடத் தனிப்பாகன் காண்டற்கு அரியன, காதல்செய்யில்
குருடர்க்கு முன்னே குடிகொண்டு இருப்பன, கோலமல்கு
செருடக் கடிமலர்ச் செல்வி,தன் செங்கம லக்கரத்தால்
வருடச் சிவப்பன மாற்பேறு உடையான் மலர்அடியே.

         பொழிப்புரை : கருடனை வாகனமாக உடைய திருமால் காண்பதற்கு அரியனவாகிய மாற்பேறுடையான் திருவடிகள் அன்பு செய்தால் அகக்கண் புறக்கண் என்ற இரு கண்களும் இல்லாதவர்களுக்கும் அவர் எதிரே நிலையாக இருந்து நிலைபெயராது ஒளி வீசுவன . அழகுமிக்க வாகைமாலையைச் சூடிய பார்வதி தன் கைகளால் தடவுவதால் சிவப்பு நிறம் மிகுவன .
                                             திருச்சிற்றம்பலம்


5. 059    திருமாற்பேறு                 திருக்குறுந்தொகை
                                      திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பொரும்ஆற் றின்படை வேண்டிநல் பூம்புனல்
வரும்ஆற் றின்மலர் கொண்டு வழிபடும்
கருமாற்கு இன்அருள் செய்தவன், காண்தகு
திருமாற் பேறு தொழவினை தேயுமே.

         பொழிப்புரை : போரிடுவதற்கு ஏற்ற படைக்கலம் வேண்டி நல்ல பூம்புனல் பாய்ந்துவரும் ஆற்றில் மூழ்கி , மலர் கொண்டு வழிபடுவோனாகிய கருநிறத்துத் திருமாலுக்கு இனிய அருள் செய்தவனுக்குரிய கண்டு வழிபடத்தக்க திருமாற்பேறு தொழ வினைகள் தேயும் .


பாடல் எண் : 2
ஆலத்து ஆர்நிழலில் அறம் நால்வர்க்குக்
கோலத் தால்உரை செய்தவன், குற்றம்இல்
மாலுக்கு ஆர்அருள் செய்தவன் மாற்பேறு
ஏலத் தான்தொழு வார்க்குஇடர் இல்லையே.

         பொழிப்புரை : கல் ஆலமரத்தின் பொருந்திய நிழலில் நால்வர்க்கு அறம் அழகுபட உரைத்தவனும் , குற்றமற்ற திருமாலுக்கு நிறைந்த பேரருள் செய்தவனும் ஆகிய பெருமான் உறையும் திருமாற்பேற்றைப் பொருந்தத் தாம் தொழுவார்க்கு இடர்கள் இல்லை .


பாடல் எண் : 3
துணிவண் ணச்சுடர் ஆழிகொள் வான்எண்ணி
அணிவண் ணத்துஅலர் கொண்டுஅடி அர்ச்சித்த
மணிவண் ணற்குஅருள் செய்தவன் மாற்பேறு
பணிவண் ணத்தவர்க்கு இல்லையாம் பாவமே.

         பொழிப்புரை : தீவினை செய்தாரைத் துணிக்கின்ற வண்ணத்தையும் , ஒளியையும் உடைய சக்கரப்படையினைக் கொள்வதற்காக எண்ணி , அழகு வண்ணம் உடைய மலர்களைக் கொண்டு திருவடிகளை அருச்சித்த நீலமணிபோலும் நிறமுடையானாகிய திருமாலுக்கு அருள் செய்தவன் உறையும் திருமாற்பேற்றைப் பணிகின்ற இயல்புடையார்க்குப் பாவங்கள் இல்லையாம் .


பாடல் எண் : 4
தீதுஅவை செய்து தீவினை வீழாதே,
காதல் செய்து கருத்தினில் நின்றநன்
மாத வர்பயில் மாற்பேறு கைதொழப்
போது மின், வினை ஆயின போகுமே.

         பொழிப்புரை : தீயவற்றையே செய்து தீவினையில் பின்னும் வீழாது , கருத்தினில் நிலைபெறுமாற்றை உடைய காதல் புரிந்தோராகிய நல்ல மாதவர் பயில்கின்ற மாற்பேற்றைக் கைதொழப் போதுவீராக ; உம் வினையாயின போகும் .

பாடல் எண் : 5
வார்கொள் மென்முலை மங்கையொர் பங்கினன்,
வார்கொள் நன்முர சம்அறை யவ்வறை
வார்கொள் பைம்பொழில் மாற்பேறு கைதொழு
வார்கள் மன்னுவர் பொன்உல கத்திலே.

         பொழிப்புரை : கச்சினைக்கொண்ட மென்முலை உடைய உமையொரு பங்கினன் உறைவதும் , இழுத்துக் கட்டப் பெற்ற நல்ல முரசுகளும், நான்மறைகளும் அழகுற ஒலிக்கப்பெறுவதும், நெடிய பசும் பொழில்களை உடையதுமாகிய திருமாற்பேற்றைக் கைதொழும் அடியார்கள் பொன்னுலகத்தில் நிலைபெற வீற்றிருப்பர் .


பாடல் எண் : 6
பண்டை வல்வினை பற்றுஅறுக் கும்வகை
உண்டு சொல்லுவன் கேண்மின், ஒளிகிளர்
வண்டு சேர்பொழில் சூழ்திரு மாற்பேறு
கண்டு கைதொழத் தீரும் கவலையே.

         பொழிப்புரை : பழைய வல்வினைகளது பற்று அறுக்கும் வகை ஒன்று உண்டு ; அதனைச் சொல்லுவேன் கேட்பீராக ; ஒளிகிளர்கின்றதும் , வண்டுகள் சேரும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய திருமாற் பேறு கண்டு கைதொழக் கவலைகள் தீரும் .


பாடல் எண் : 7
மழுவ லான்திரு நாமம் மகிழ்ந்துஉரைத்து
அழவ லார்களுக்கு அன்புசெய்து இன்பொடும்
வழு இலாஅருள் செய்தவன் மாற்பேறு
தொழவ லார்தமக்கு இல்லை துயரமே.

         பொழிப்புரை : மழுவினை ஏந்திய வெற்றி உடையானது திரு நாமத்தை மகிழ்ந்துரைத்து அழவல்ல அடியார்களுக்கு அன்பு செய்து இன்பமொடும் வழுவில்லாத அருள் செய்தவன் உறையும் திருமாற் பேறு தொழவல்ல அடியார்களுக்குத் துயரங்கள் இல்லை .


பாடல் எண் : 8
முன்ன வன்உல குக்கு, முழுமணிப்
பொன்ன வன்,திகழ் முத்தொடு போகமாம்
மன்ன வன்,திரு மாற்பேறு கைதொழும்
அன்ன வர்எமை ஆள்உடை யார்களே.

         பொழிப்புரை : உலகினுக்கு முன்னே தோன்றியவனும் , முழு மணியும் , பொன்னும் , விளங்கும் முத்தும் , போகங்களும் ஆக விளங்கும் . மன்னவனும் ஆகிய திருமாற்பேற்றில் உறையும் இறைவனைக் கைதொழும் அத்தன்மையவர் எம்மை ஆளுடையார்கள் .


பாடல் எண் : 9
வேட னாய்விச யன்னொடும் எய்துவெம்
காடு நீடுஉகந்து ஆடிய கண்ணுதல்
மாட நீடுஉய ருந்திரு மாற்பேறு
பாடு வார்பெறு வார்பர லோகமே.

         பொழிப்புரை : அருச்சுனனோடும் வேடனாய் வந்து அம்பு எய்து , வெவ்விய சுடுகாட்டை நீண்டு உகந்து ஆடிய கண்ணுதற் பெருமான் உறைவதும் , மாடங்கள் நீண்டு உயருஞ் சிறப்புடையதுமாகிய திருமாற்பேறு பாடுவார்கள் பரலோகம் அடையப் பெறுவார்கள் .


பாடல் எண் : 10
கருத்த னாய்க்கயி லாய மலைதனைத்
தருக்கி னால்எடுத் தானைத் தகரவே
வருத்தி ஆர்அருள் செய்தவன் மாற்பேறு
அருத்தி யால்தொழு வார்க்குஇல்லை அல்லலே.

         பொழிப்புரை : கயிலாய மலையை எடுக்கும் கருத்து உடையவனாய்ச் செருக்கினோடு எடுக்கலுற்ற இராவணனைச் சிதையும் வண்ணம் வருத்திப் பின் நிறைந்த அருள் செய்தவன் உறையும் திருமாற்பேற்றை விருப்பத்தினோடு தொழுவார்க்கு அல்லல் இல்லை .

                                             திருச்சிற்றம்பலம்

  
5. 060    திருமாற்பேறு                 திருக்குறுந்தொகை
                 
                                        திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
ஏதும் ஒன்றும் அறிவுஇலர் ஆயினும்
ஓதி அஞ்செழுத் தும்உணர் வார்கட்குப்
பேதம் இன்றி அவரவர் உள்ளத்தே
மாதும் தாமும் மகிழ்வர்மாற் பேறரே.

         பொழிப்புரை : திருமாற்பேற்றில் எழுந்தருளியிருக்கும் இறைவர் ஏதொன்றும் அறியாதவர்கள் ஆனாலும், திருவஞ்செழுத்தை ஓதி உணர்வார்கட்கு வேற்றுமையின்றி அவரவர் உள்ளத்தே தாமும் அம்பிகையுமாய் மகிழ்ந்து வீற்றிருப்பர்.


பாடல் எண் : 2
அச்சம் இல்லைநெஞ்சே, அரன் நாமங்கள்
நிச்ச லும்நினை யாய்,வினை போய்அற,
கச்ச மாவிடம் உண்டகண் டாஎன
வைச்ச மாநிதி ஆவர்மாற் பேறரே.

         பொழிப்புரை : நெஞ்சே! அரன் திருநாமங்களை வினைகள் விட்டு நீங்குவதற்காக, நித்தமும் நினைவாயாக; உனக்கு அச்சமில்லை. திருமாற்பேற்று இறைவர், கைப்புள்ள ஆலகால விடத்தை உண்டதிரு நீலகண்டர் என்று அன்பொடுகூற, சேமித்து வைத்த மாநிதிபோலப் பயன்படுவர்.


பாடல் எண் : 3
சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர்காள்,
கோத்தி ரமும் குலமும் கொண்டு என்செய்வீர்,
பாத்தி ரஞ்சிவம் என்று பணிதிரேல்
மாத்தி ரைக்குள் அருளும்மாற் பேறரே.

         பொழிப்புரை : சாத்திரங்கள் பலவற்றைப் பேசும் தீயவர்களே! கோத்திரம், குலம் முதலியவற்றைக் கொண்டு என்ன செய்வீர்! பணிதற்குரிய பொருள் சிவபரம்பொருளே என்று கொண்டு பணிவீராயின், திருமாற்பேற்று இறைவர் ஒருமாத்திரைப் பொழுதுக்குள் அருளுவர்.


பாடல் எண் : 4
இருந்து சொல்லுவன் கேண்மின்கள் ஏழைகாள்,
அருந்த வம்தரும் அஞ்செழுத்து ஓதினால்,
பொருந்து நோய்பிணி போகத் துரப்பதுஓர்
மருந்தும் ஆகுவர் மன்னுமாற் பேறரே.

         பொழிப்புரை : அறிவில்லாதவர்களே! சிந்தித்திருந்து சொல்லுவேன்; கேட்பீர்களாக! அரிய தவத்தினாலாய பயனைத்தரும் திருவஞ்செழுத்தை ஓதினால் திருமாற்பேற்று இறைவர் உம்மைப் பொருந்தியுள்ள நோய்களாகிய பிணிகள் போகும்படி துரத்துவதாகும் ஒப்பற்ற மருந்தும் ஆவர்.


பாடல் எண் : 5
சாற்றிச் சொல்லுவன் கேண்மின் தரணியீர்,
ஏற்றின் மேல்வரு வான்கழல் ஏத்தினால்
கூற்றை நீக்கிக் குறைவுஅறுத்து ஆள்வதோர்
மாற்றி லாச்செம்பொன் ஆவர்மாற் பேறரே.

         பொழிப்புரை : உலகில் உள்ளவர்களே! எல்லோரும் அறியச் சொல்லுவேன் கேட்பீர்களாக; இடபத்தின் மேல் வருவாராகிய திருமாற்பேற்று இறைவர் திருவடிகளை ஏத்தினால், உம்மைக் கொள்ளவரும் கூற்றுவனை நீக்கி, குறைகளை அறுத்து, ஆள்கின்ற மாற்றில்லாத செம்பொன்னை ஒப்பர்.


பாடல் எண் : 6
ஈட்டும் மாநிதி சால இழக்கினும்,
வீட்டும் காலன் விரைய அழைக்கினும்,
காட்டில் மாநடம் ஆடுவாய் கா, எனில்
வாட்டம் தீர்க்கவும் வல்லர்மாற்பேறரே.

         பொழிப்புரை : வருந்திச் சேர்த்த பெருஞ்செல்வத்தை மிகுதியாக இழந்தாலும், அழிக்கும் காலன் விரையவந்து அழைத்தாலும், சுடு காட்டில் பெரிய நடனம் ஆடுகின்ற பெருமானே! காப்பாற்றுவாயாக! என்றழைத்தால், திருமாற்பேற்றிறைவர் வாட்டம் தீர்க்கவும் வல்லவராவர்.


பாடல் எண் : 7
ஐயனே, அரனே, என்று அரற்றினால்,
உய்யலாம் உலகத்தவர் பேணுவர்,
செய்ய பாதம் இரண்டும் நினையவே
வையம் ஆளவும் வைப்பர்மாற் பேறரே.

         பொழிப்புரை : தலைவனே! சிவபெருமானே! என்று வாய்விட்டு அரற்றினால் உய்தி அடையலாம்; அதுவன்றியும் உலகத்திலுள்ளவர் பேணி மதிப்புச்செய்வர்; அப்பெருமானின் இரண்டு சிவந்த திருப் பாதங்களை நினைத்தால் திருமாற்பேற்று இறைவர் உலகத்தை ஆளவும் வைப்பர்.


பாடல் எண். 8, 9
****************

பாடல் எண். 10
உந்திச் சென்று மலையை எடுத்தவன்
சந்து தோளொடு தாள்இற ஊன்றினான்,
மந்தி பாய்பொழில் சூழுமாற் பேறுஎன
அந்தம் இல்லாது ஓர்இன்பம் அணுகுமே.

         பொழிப்புரை : செருக்கு தன்னை உந்தித்தள்ளுதலால் சென்று திருக் கயிலாயத்தை எடுத்தவனாகிய இராவணனது சந்தனம் பூசிய தோளும் தாள்களும் இறுமாறு திருவிரலால் ஊன்றிய பெருமானுக்குரியதும், பெண்குரங்குகள் பாயும் பொழில் சூழ்வதுமாகிய திருமாற்பேறு என்று கூறினால் முடிவில்லாத ஒப்பற்ற இன்பம் அணுகும்.

                                             திருச்சிற்றம்பலம்


6. 080     திருமாற்பேறு                திருத்தாண்டகம்
                                       திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பாரானை, பாரினது பயன் ஆனானை,
         படைப்புஆகிப் பல்உயிர்க்கும் பரிவோன் தன்னை,
ஆராத இன்னமுதை, அடியார் தங்கட்கு
         அனைத்துஉலகும் ஆனானை, அமரர் கோனை,
கார்ஆருங் கண்டனை, கயிலை வேந்தை,
         கருதுவார் மனத்தானை, காலற் செற்ற
சீரானை, செல்வனை, திருமாற் பேற்றுஎம்
         செம்பவளக் குன்றினைச்சென்று அடைந்தேன் நானே.

         பொழிப்புரை :இப்பூமி ஆனவனும், பூமியின் பயன் ஆனவனும் , படைத்தல் தொழிலே தானாய் அதன்கண் நின்றவனும் , பல்லுயிர் மேலும் இரக்கம் கொண்டவனும் , அடியார்க்குத் தெவிட்டாத இனிய அமுது ஆனவனும் , எல்லா உலகுகளாகவும் விரிந்தவனும் , தேவர் கோனாய்த் திகழ்பவனும், கரிய கண்டமுடையவனும் , கயிலை மலைக்கு இறையவனும் , நினைவார் மனத்தில் நிற்பவனும் , இயமனை வெகுண்டொறுத்த புகழுடையவனும் , செல்வம் மிக்கவனும் ஆகித் திருமாற் பேற்றில் திகழும் எம் செம்பவளக் குன்றினை நான் சென்று அடைந்தேன் .


பாடல் எண் : 2
விளைக்கின்ற நீர்ஆகி, வித்தும் ஆகி,
         விண்ணொடுமண் ஆகி, விளங்கு செம்பொன்
துளைக்கின்ற துளையாகி, சோதி ஆகி,
         தூண்டஅரிய சுடர்ஆகி, துளக்குஇல் வான்மேல்
முளைக்கின்ற கதிர்மதியும் அரவும் ஒன்றி
         முழங்குஒலிநீர்க் கங்கையொடு மூவாது, என்றும்
திளைக்கின்ற சடையானை, திருமாற் பேற்றுஎம்
         செம்பவளக் குன்றினைச்சென்று அடைந்தேன் நானே.

         பொழிப்புரை :விளைவை உண்டாக்கும் நீராயும் , வித்தாயும், விண்ணாயும் , மண்ணாயும் , செம்பொன்விளையும் சுரங்கமாயும் , அலகில் சோதியாயும் , தூண்டுதல் வேண்டா விளக்காயும் , அசைவில்லா வானத்தின்மேல் தோன்றி ஒளிர்பிறையும் பாம்பும் என்றும் மூவாது நின்று ஒலிமிக்க நீரையுடைய கங்கையுடன் விளையாடி மகிழ்கின்ற சடையனாகவும் ஆகித் திருமால் பேற்றில் திகழும் எம் செம்பவளக் குன்றினை நான் சென்றடைந்தேன் .


பாடல் எண் : 3
மலைமகள்தம் கோன்அவனை, மாநீர் முத்தை,
         மரகதத்தை, மாமணியை, மல்கு செல்வக்
கலைநிலவு கையானை, கம்பன் தன்னை,
         காண்புஇனிய செழுஞ்சுடரை, கனகக் குன்றை,
விலைபெரிய வெண்ணீற்று மேனி யானை,
         மெய்யடியார் வேண்டுவதே வேண்டு வானை,
சிலைநிலவு கரத்தானை, திருமாற் பேற்றுஎம்
         செம்பவளக் குன்றினைச்சென்று அடைந்தேன் நானே.

         பொழிப்புரை :மலைமகளுடைய தலைவனும் , கடலில் படும் முத்தும் , மரகதமும் , சிறந்த மாணிக்க மணியும் போல்பவனும் , மான் கன்றையே மிக்க செல்வமாகக் கையிடத்துக் கொண்டவனும் , கச்சி ஏகம்பனும் , விலைமிக்க வெண்ணீற்று மேனியனும் , உண்மையடியார் கருதுவதையே தானும் கருதி முடித்தருளுபவனும் , வில் நிலவும் கரத்தவனும் ஆகித் திருமாற்பேற்றில் திகழும் எம் செம்பவளக் குன்றினை நான் சென்றடைந்தேன் .


பாடல் எண் : 4
உற்றானை, உடல்தனக்குஓர் உயிர் ஆனானை,
         ஓங்காரத்து ஒருவனை, அங்கு உமைஓர் பாகம்
பெற்றானை, பிஞ்ஞகனை, பிறவா தானை,
         பெரியனவும் அரியனவும் எல்லாம் முன்னே
கற்றானை, கற்பனவும் தானே ஆய
         கச்சி ஏகம்பனை, காலன் வீழச்
செற்றானை, திகழ்ஒளியை, திருமாற் பேற்றுஎம்
         செம்பவளக் குன்றினைச்சென்று அடைந்தேன் நானே.

         பொழிப்புரை :உறவானவனும் , உடலிடத்து உயிர் ஆனவனும் , ஓங்காரத்தில் முழுப்பொருள் தான் ஒருவனே ஆனவனும் , உமை ஒரு பாகத்தைப் பெற்றவனும் , தலைக்கோலச் சிறப்பினனும் , பிறவாதவனும் , பெரியனவும் அரியனவும் ஆகிய எல்லாப் பொருள்களையும் பிறர் எல்லார்க்கும் முன்னே கற்றவனும் , கற்றவனாகிய தானே கற்கப்படும் பொருளுமாய் ஆனவனும் , கச்சி ஏகம்பனும் , இயமன் இறந்துபடச் சினந்தவனும் , தானே விளங்கும் ஒளியினனும் ஆகித் திருமாற்பேற்றில் திகழும் எம் செம்பவளக் குன்றினை நான் சென்று அடைந்தேன் .


பாடல் எண் : 5
நீறுஆகி, நீறுஉமிழும் நெருப்பும் ஆகி,
         நினைவுஆகி, நினைவுஇனிய மலையான் மங்கை
கூறுஆகி, கூற்றுஆகி, கோளும் ஆகி,
         குணம்ஆகி, குறையாத உவகைக் கண்ணீர்
ஆறாத ஆனந்தத்து அடியார் செய்த
         அனாசாரம் பொறுத்துஅருளி அவர்மேல் என்றும்
சீறாத பெருமானை, திருமாற் பேற்றுஎம்
         செம்பவளக் குன்றினைச்சென்று அடைந்தேன் நானே.

         பொழிப்புரை :சாம்பலாயும் , சாம்பலை உமிழும் நெருப்பாயும் , நினைவாயும் , நினைவில் நின்று இனிக்கும் உமையம்மை நிலவு கூறாயும் , இயமனாயும் , தீயனவும் நல்லனவுமாய் நிற்கும் அவ் வினைகளாயும் , நிறைந்த அன்புக் கண்ணீரினராய் நீங்காத ஆனந்தத்தையுடைய அடியார்கள் செய்த அனாசாரமாகிய சிறு குற்றங்களைப் பொறுத்து அவர்களை என்றுஞ் சினவாத பெருமானாயும் ஆகித் திருமாற் பேற்றில் திகழும் எம் செம்பவளக் குன்றினை நான் சென்றடைந்தேன் .


பாடல் எண் : 6
மருவஇனிய மறைப்பொருளை, மறைக்காட் டானை,
         மறப்புஇலியை, மதிஏந்து சடையான் தன்னை,
உருநிலவும் ஒண்சுடரை, உம்ப ரானை,
         உரைப்புஇனிய தவத்தானை, உலகின் வித்தை,
கருநிலவு கண்டனை, காளத்தியை,
         கருதுவார் மனத்தானை, கல்வி தன்னை,
செருநிலவு படையானை, திருமாற் பேற்றுஎம்
         செம்பவளக் குன்றினைச்சென்று அடைந்தேன் நானே.

         பொழிப்புரை :மருவுதற்கினிய மறைப்பொருள் ஆனவனும் , மறைக்காட்டில் உறைபவனும் , மறப்பில்லாதவனும் , பிறை சூடிய சடையினனும் , நிலவுகின்ற தன் நிறத்தால் ஒளிரும் சுடர் ஆனவனும் , மேலிடத்து உள்ளவனும் , பேசுதற்கினியவனும் , தவக்கோலம் தாங்கியவனும் , உலகிற்கு வித்தானவனும் , கறுத்த கண்டத்தவனும் , காளத்தி நகரினனும் , நினைப்பவர் உள்ளத்தில் நிற்பவனும் , போர்த் தொழில் பயின்ற படைக்கலங்களை ஏந்தியவனும் ஆகித் திருமாற் பேற்றில் திகழும் எம் செம்பவளக்குன்றினை நான் சென்றடைந்தேன் .


பாடல் எண் : 7
பிறப்பானை, பிறவாத பெருமை யானை,
         பெரியானை, அரியானை, பெண்ஆண் ஆய
நிறத்தானை, நின்மலனை, நினையா தாரை
         நினையானை, நினைவோரை நினைவோன் தன்னை,
அறத்தானை, அறவோனை, ஐயன் தன்னை,
         அண்ணல்தனை, நண்ணஅரிய அமரர் ஏத்தும்
திறத்தானை, திகழ்ஒளியை, திருமாற் பேற்றுஎம்
         செம்பவளக் குன்றினைச்சென்று அடைந்தேன் நானே.

         பொழிப்புரை :பலவகைப் பிறப்புகளாய் உள்ளவனும் , வினை வயத்தால் பிறவாத பெருமையுடையவனும் , தோற்றம் ஆற்றல் முதலியவற்றில் மிகப் பெரியவனும் , உணர்தற்கு அரியவனும் , பெண்ணும் ஆணுமாகிய வடிவினனும் , குற்றமற்றவனும் , தன்னை நினையாதாரைத் தான் நினையாதவனும் , தன்னை நினைப்போரைத் தான் நினைப்பவனும் , அறமேயாய் நின்று அதனை நிலை பெறுவிப்பவனும் , நன்மை தீமைகளை அடைவிக்கும் அறவோனும் , வியக்கத் தக்கவனும் , தலைவனும் , தேவர்கள் வணங்கும் தன்மையனும் , திகழ்சோதியும் ஆகித் திருமாற்பேற்றில் திகழும் எம்செம்பவளக் குன்றினை நான் சென்றடைந்தேன் .


பாடல் எண் : 8
வான்அகத்தில் வளர்முகிலை, மதியம் தன்னை,
         வணங்குவார் மனத்தானை, வடிவுஆர் பொன்னை,
ஊன்அகத்தில் உறுதுணையை, உலவா தானை,
         ஒற்றியூர் உத்தமனை, ஊழிக் கன்றை,
கான்அகத்துக் கருங்களிற்றை, காளத் தியை,
         கருதுவார் கருத்தானை, கருவை, மூலத்
தேன்அகத்தில் இன்சுவையை, திருமாற் பேற்றுஎம்
         செம்பவளக் குன்றினைச்சென்று அடைந்தேன் நானே.

         பொழிப்புரை :வானில் வளர் முகிலாயும் , மதியமாயும் , வணங்குவார் மனத்தில் உறைபவனாயும் , அழகிய பொன்னாயும், உடம்பில் உயிர்க்குற்ற உறுதுணையாயும் , அழிவில்லாதவனாயும் , ஒற்றியூர் வாழ் உத்தமனாயும் , ஊழிக்கு ஊழியாயும் , கானகத்து வாழ் கருங் களிறாயும் , காளத்தி வாழ்வானாயும் , கருதுவார் கருத்துள் நிலவுபவனாயும் , முதன் முதலாயும் , தேனில் இனிய சுவையாயும் , நிலவித் திருமாற்பேற்றில் திகழும் எம் செம்பவளக் குன்றினை நான் சென்றடைந்தேன் .


பாடல் எண் : 9
முற்றாத முழுமுதலை, முளையை, மொட்டை,
         முழுமலரின் மூர்த்தியை, முனியாது என்றும்
பற்றுஆகிப் பல்உயிர்க்கும் பரிவோன் தன்னை,
         பராபரனை, பரஞ்சுடரை, பரிவோர் நெஞ்சில்
உற்றானை, உயர்கருப்புச் சிலையோன் நீறாய்
         ஒள்அழல்வாய் வேவஉறு நோக்கத் தானை,
செற்றானைத் திரிபுரங்கள், திருமாற் பேற்றுஎம்
         செம்பவளக் குன்றினைச்சென்று அடைந்தேன் நானே.

         பொழிப்புரை :மூவாத முதற்பொருளாயும் , முளையாயும் , மொட்டாயும் , மலரின் வடிவினனாயும் , எக்காலத்தும் வெறுப்பிலனாய்ப் பல்லுயிர்க்குந் துணையாகி இரக்கமுடையனாயும் , மேற் பொருளும் , கீழ்ப்பொருளும் தான் ஆனவனாயும் , மேலான ஒளிப் பிழம்பாயும் , எண்ணுவார் மனத்தில் பொருந்தியிருப்பவனாயும் , உயர்ந்த கரும்பு வில்லையுடைய மன்மதன் ஒள்ளிய நெருப்பிடத்து வெந்து நீறாகுமாறு செய்த பார்வையனாயும் திரிபுரங்களை அழித்தவனாயும் ஆகித் திருமாற்பேற்றில் திகழும் எம்செம்பவளக் குன்றினை நான் சென்றடைந்தேன் .


பாடல் எண் : 10
விரித்தானை நான்மறையோடு அங்கம் ஆறும்,
         வெற்புஎடுத்த இராவணனை விரலால் ஊன்றி
நெரித்தானை, நின்மலனை,  அம்மான் தன்னை,
         நிலாநிலவு செஞ்சடைமேல் நிறைநீர்க் கங்கை
தரித்தானை, சங்கரனை, சம்பு தன்னை,
         தரியலர்கள் புரமூன்றும் தழல்வாய் வேவச்
சிரித்தானை, திகழ்ஒளியை, திருமாற் பேற்றுஎம்
         செம்பவளக் குன்றினைச்சென்று அடைந்தேன் நானே.

         பொழிப்புரை :நான்மறைகளையும் ஆறங்கங்களையும் விரித்தவனும், கயிலை மலையை எடுக்க முயன்ற இராவணனை விரலூன்றித் துன்புறுத்தியவனும், குற்றமற்றவனும், தலைவனும், பிறைதங்கிய செஞ்சடைமேல் நீர்நிறைந்த கங்கையைத் தரித்தவனும், இன்பத்தைச் செய்யும் சங்கரனும், இன்ப காரணனான சம்புவும் பகைத்தார் புரங்கள் மூன்றும் நெருப்பிடத்து வேகுமாறு சிரித்தவனும், ஒளிப்பிழம்பாய் விளங்கியவனும் ஆகித் திருமாற்பேற்றில் திகழும் எம் செம்பவளக் குன்றினை நான் சென்றடைந்தேன்.

                                             திருச்சிற்றம்பலம்



1 comment:

எமனுக்கு எச்சரிக்கை

  எமனுக்கு எச்சரிக்கை ---- வருமுன் காப்பது, வந்தபின் காப்பது, வரும்போது காப்பது என்பது உலகில் வருகிற நோய்களுக்கும், துன்பத்திற்கும், வறுமை...