திரு ஊறல் (தக்கோலம்)




திரு ஊறல்
(தற்போது தக்கோலம் என்று வழங்குகிறது)

     தொண்டை நன்னாட்டுத் திருத்தலம்.

     அரக்கோணம் இரயில் நிலையத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவு. மற்றொரு பாடல் பெற்ற சிவத்தலம் திருமாற்பேறு அருகில் இருக்கிறது. திருவள்ளூரில் இருந்து பேரம்பாக்கம் வழியாக தக்கோலம் செல்ல பேருந்து வசதி உள்ளது.
  
இறைவர்              : ஜலநாதேசுவரர், உமாபதீசர்.
        
இறைவியார்           : கிரிராஜ கன்னிகை, மோகனவல்லி.
        
தீர்த்தம்               : நந்தி தீர்த்தம்.
        
தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - மாறில் அவுணரரணம்.

     இறைவனை அழைக்காமல் அவமதித்து தக்கன் நடத்திய யாகத்தை அழித்து அவன் தலையை வீரபத்திரர் தலையைக் கொய்த தலம் இதுதான் என்பர். தக்கன் தனக்கு அழிவு வரும் நிலையைக் கண்டு "ஓ" என்று ஓலமிட்டதால் தக்கோலம் என்று பெயர் பெற்றதாக உள்ளூர்ச் செய்தி அறிவிக்கின்றது.

     குசத்தலை என்னும் கல்லாற்றின் கரையில், மேற்கு நோக்கிய மூன்று நிலை இராஜகோபுரத்துடனும், இரண்டு பிராகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது.கோபுர வாயில் கடந்து உள்ளே சென்றவுடன் மேற்கு வெளிப் பிராகாரத்தில் பலிபீடம், கொடிமரம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். கோபுரவாயில் நுழைந்ததும் வெளிப்பிராகாரத்தில் விநாயகர் சந்நிதியும் தனிக்கோயிலாகவுள்ளது. நந்திக்கு எதிரில் உள்சுற்றுச் சுவரில் ஒரு சாளரம் உள்ளது. வெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது தெற்கு பிராகாரத்தில் வடக்கு நோக்கிய அம்பிகை சந்நிதி தனிக் கோயிலாக ஒரு முன் மண்டபத்துடன் உள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில், அபய வரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்களுட்ன காட்சி தருகிறாள்.

     இச்சந்நிதிக்குப் பக்கத்தில் தனியே உள்ள மண்டபத்தில் வள்ளி தெய்வயானையுடன் கூடிய சுப்பிரமணியர் சந்நிதி கம்பீரமாக உள்ளது. அம்பிகை சந்நிதிக்கு எதிரே சுவாமி சந்நிதிக்குச் செல்ல பக்கவாயில் உள்ளது. இதன் வழியே உள்ளே சென்று மேற்கிலுள்ள உள்வாயில் வழியே துவார கணபதி, சுப்பிரமணியரை வணங்கி உள்ளே சென்றால் ஒரு புறத்தில் நவக்கிரக சந்நிதி உள்ளது. அடுத்துள்ள மண்டபத்தில் சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், பிட்சாடனார் முதலிய உற்சவத் திருமேனிகளும், நடராச சபையும் உள்ளன. அடுத்துள்ள மேற்கு நோக்கிய உள் வாயிலைக் கடந்து சென்றால் துவார பாலகர்களைத் தரிசிக்கலாம். நேரே மூலவர் தரிசனம். சிவலிங்கத் திருமேனி மணலால் ஆனது. தீண்டாத் திருமேனி. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது.

         உள் பிராகாரத்தில் சக்தி விநாயகர், சுப்பிரமணியர், பஞ்சலிங்கம், மகாலட்சுமி, நடராஜர், சூரியன், சந்திரன், பைரவர், சப்த கன்னியர் ஆகிய சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணுதுர்க்கை முதலிய திருமேனிகள் உள்ளன. இவற்றுள் துர்க்கை நீங்கலாக உள்ள மற்ற திருமேனிகள் அனைத்தும் அமர்ந்த நிலையிலேயே உள்ளன.

     தட்சிணாமூர்த்தி வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலைக் குத்துக்காலிட்டு அபூர்வமாகக் காட்சி தருகின்றார்.

     லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் உள்ள மகாவிஷ்ணுவும் வலக்காலை மடித்து இடக்காலைத் தொங்கவிட்டு, வலக்கை அபயமாகக் கொண்டு, இடக்கையைத் தொடைமீது வைத்துள்ளார். பிரம்மாவும் அமர்ந்த நிலை.

     விஷ்ணுதுர்க்கை அமைப்பு நின்ற நிலையினதாயினும் அழகான வேலைப்பாடுடன் உள்ளது. இரு திருவடிகளுள் ஒன்றை பாத அளவில் மடித்து ஒன்றால் கீழேயுள்ள மகிஷத்தை காலூன்றி, (குழலூதும் கண்ணன் நிற்கும் அமைப்பில்) நிற்கும் அற்புதமான திருக்கோலம் காணத்தக்கது.

         நந்தியின் வாயிலிருந்து ஒரு காலத்தில் நீர் விழுந்து கொண்டிருந்ததாலும், இறைவன் திருவடியில் நீர் சுரப்பதாலும் இவ்வூருக்கு "திருஊறல்" என்று பெயர். வடக்கு மதில் ஓரத்தில் உள்ள கங்காதரர் சந்ந்தியின் மேற்குப் பிராகாரத்தில் சத்யகங்கை தீர்த்தம் உள்ளது. இதன் கரையிலுள்ள நந்தியின் வாயிலிருந்து தான் கங்கை நீர் பெருகி வந்தது. உததி முனிவர் வழிபட்டு அவர் வேண்டிக்கொண்டபடி நந்தியெம்பெருமான் தன்வாய் வழியாக கங்கையை வரவித்த சிறப்புடையது இத்தலம். இப்போதும் கல்லாற்றில் நீர்ப்பெருக்கு உண்டாயின் அப்போது நந்தி வாயில் நீர் விழும் என்று சொல்கிறார்கள்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "ஏற்பு உடையாய்! ஊறல் அடியார் உறத் தொழுது மேவு, திரு ஊறல் அழியா உவகையே" என்று போற்றி உள்ளார்.

         காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திருக்கோயில் திறந்திருக்கும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 1005
திருத்தொண்டர் பலர்சூழ, திருவிற்கோ லமும்பணிந்து,
பொருட்பதிகத் தொடைமாலை புரம்எரித்த படிபாடி,
அருட்புகலி ஆண்டகையார் தக்கோலம் அணைந்துஅருளி,
விருப்பினொடும் திருவூறல் மேவினார் தமைப்பணிந்தார்.

         பொழிப்புரை : பாலியாற்றின் வடபாலுள்ள திருப்பதிகளாவன திருச்சுரபுரம், விரிஞ்சிபுரம், மகாதேவமலை, தீக்காலி, வள்ளிமலை முதலாயினவாகலாம் என்பார் சிவக்கவிமணியார். பதிகங்கள் எவையும் கிடைத்தில. திருஇலம்பையங்கோட்டூரில் அருளிய பதிகம் `மலையினார்\' (தி.1 ப.76) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணில் அமைந்த பதிகமாகும்.

         குறிப்புரை : திருவிற்கோலத்தில் அருளிய பதிகம் `உருவினார்\' (தி.3 ப.23) எனத் தொடங்கும் பஞ்சமப் பண்ணில் அமைந்த திருப் பதிகமாகும். இப்பதிகத்தில் வரும் 2, 4, 6, 7, 9 ஆகிய பாடல்களில் முப்புரம் எரித்தமை அருளப்படுகின்றது. அதனை உளங்கொண்டே ஆசிரியர் சேக்கிழார் இங்ஙனம் அருளுவாராயினர்.

     இங்குள்ள இறைவரின் தீண்டாத் திருமேனியின் நிறம் பருவ காலத்திற்கேற்ப மாறுபடுகிறது என்பர்.

     தக்கோலம் எனும் பதி பழங்காலத்தே திருவூறல் எனும் பெயரில் வழங்கப்பட்டது. எனினும் தக்கோலம் ஊர்ப் பெயராகவும், திருவூறல் கோயில் பெயராகவும் கருதத் தக்கதாம்.


பெ. பு. பாடல் எண் : 1006
தொழுதுபல முறைபோற்றி, சுரர்குருவுக்கு இளையமுனி
வழுவில்தவம் புரிந்துஏத்த மன்னினார் தமை,மலர்ந்த
பழுதுஇல்செழுந் தமிழ்மாலைப் பதிகஇசை புனைந்துஅருளி,
முழுதும்அளித் தவர்அருளால் போந்தனர்முத் தமிழ்விரகர்.

         பொழிப்புரை : வணங்கிப் பலமுறையும் போற்றித் தேவ குருவான வியாழனின் தம்பி சம்வர்த்தமுனிவர், குற்றம் இல்லாத தவத்தைச் செய்து போற்ற எழுந்தருளிய இறைவரைப் போற்றி, அன்பால் மலர்ந்த குற்றம் இல்லாத செழுந்தமிழ் மாலையான பதிக இசையைப் பாடி, எல்லாவற்றையும் படைத்தளித்த இறைவரிடம் விடைபெற்று முத்தமிழ் வல்லுநர் சென்றார்.

         குறிப்புரை : இப்பதியில் உள்ள கோயிலின் பெயர் திருவூறல் என்பதாகும். இறைவனின் திருவடிகளிலிருந்து நீர் பெருகி வருதலின் இப்பெயர் பெற்றது. இப்பதியில் அருளிய பதிகம் `மாறில் அவுணர்' (தி.1 ப.106) எனத் தொடங்கும் வியாழக் குறிஞ்சிப் பண்ணில் அமைந்த பதிகம் ஆகும்.
        

திருஞானசம்பந்தர் திருப்பதிகம்

1.106 திருவூறல்                      பண் - வியாழக்குறிஞ்சி
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
மாறுஇல் அவுணர்அரணம் அவைமாயஓர்
         வெங்கணையால் அன்று
நீறுஎழ எய்த எங்கள் நிமலன் இடம்வினவில்
தேறல் இரும்பொழிலும் திகழ்செங்கயல்
         பாய்வயலும் சூழ்ந்த
ஊறல் அமர்ந்தபிரான் ஒலிஆர்கழல் உள்குதுமே.

         பொழிப்புரை :தமக்கு ஒப்பாரில்லாத வலிய அவுணர்களின் அரணங்களாக விளங்கிய முப்புரங்களை மறையுமாறு முற்காலத்தில் ஒரு வெங்கணையால் நீறுபடச் செய்தழித்த எங்கள் நிமலன் ஆகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள இடம், யாதென வினவில், தேன் நிறைந்த பெரிய பொழில்களும், விளங்கிய செங்கயல்கள் பாயும் வயல்களும், சூழ்ந்துள்ள திருவூறலாகும். அப்பெருமானுடைய ஒலிக்கின்ற கழலணிந்த திருவடிகளை நாம் தியானிப்போம்.


பாடல் எண் : 2
மத்த மதக்கரியை மலையான்மகள்
         அஞ்சஅன்று கையால்
மெத்த உரித்த எங்கள் விமலன் விரும்பும்இடம்
தொத்துஅல ரும்பொழில்சூழ் வயல்சேர்ந்து ஒளிர்
         நீலநாளும் நயனம்
ஒத்துஅல ருங்கழனித் திருவூறலை உள்குதுமே.

         பொழிப்புரை :மதம் பொருந்திய பெரிய தலையையுடைய யானையை மலைமகள் அஞ்ச, முற்காலத்தில் தன் கைகளால் மெல்ல உரித்த எங்கள் விமலனாகிய சிவபெருமான் விரும்பும் இடம் யாதென வினவில், பூங்கொத்துக்கள் விரிந்துள்ள பொழில்கள் சூழ்ந்ததும், வயல்களில் நாள்தோறும் முளைத்து விளங்கிய நீல மலர்கள் மங்கையரின் கண்களையொத்து மலரும் வயல்வளங்களை உடையதுமான திருவூறலாகும். அத்தலத்தை நாம் நாள்தோறும் நினைவோமாக.

 
பாடல் எண் : 3
ஏன மருப்பினொடும் எழில்ஆமையும்
         பூண்டுஅழகார் நன்றும்
கான்அமர் மான்மறிக்கைக் கடவுள் கருதும்இடம்
வானம் மதிதடவும் வளர்சோலைகள்
         சூழ்ந்த அழகார் நம்மை
ஊனம் அறுத்தபிரான் திருவூறலை உள்குதுமே.

         பொழிப்புரை :பன்றிக் கொம்புகளோடு ஆமையோட்டையும் அணிகலனாக அழகுறப் பூண்டு, நல்ல காட்டில் வாழும் மான்கன்றைத் தன் கையில் ஏந்தியுள்ள கடவுளாகிய சிவபெருமான் விரும்புமிடம், வானத்தின் கண் உள்ள மதி தோயுமாறு வளர்ந்துள்ள சோலைகளால் அழகுறச் சூழப்பட்டு நமது பிறவிப் பிணியைப் போக்க வல்லவனாய்ச் சிவபிரான் எழுந்தருளிய திருவூறலாகும். அதனை நாம் நாள்தோறும் நினைவோமாக.


பாடல் எண் : 4
நெய்அணி மூவிலைவேல், நிறைவெண்மழு
         வும்அனலும் அன்று
கைஅணி கொள்கையினான் கடவுள் இடம்வினவில்
மைஅணி கண்மடவார் பலர்வந்து
         இறைஞ்சமன்னி நம்மை
உய்யும் வகைபுரிந்தான் திருவூறலை உள்குதுமே.

         பொழிப்புரை :நெய் பூசப்பெற்ற மூவிலை வேல், ஒளிநிறைந்த வெண்மழு, அனல் ஆகியவற்றைத் தன் கைகளில் அணியும் கோட்பாட்டினை உடைய கடவுள் விரும்பும் இடம் யாதென வினவுவீராயின், மை பூசப் பெற்ற கண்களையுடைய மடவார் பலர் வந்து வழிபட நிலையாகத் தங்கி, நாம் உய்யும் வகையில் எழுந்தருளி அருள் புரியும் திருவூறலாகும். அத்தலத்தை நாம் நாள்தோறும் நினைவோமாக.


பாடல் எண் : 5
எண்திசை யோர்மகிழவு எழிம்மாலையும்
         போனகமும் பண்டு
சண்டி தொழஅளித்தான் அவன்தாழும் இடம்வினவில்
கொண்டல்கள் தங்குபொழில் குளிர்பொய்கைகள்
         சூழ்ந்து நஞ்சை
உண்டபி ரான்அமரும் திருவூறலை உள்குதுமே.

         பொழிப்புரை :எட்டுத் திசைகளில் உள்ளாரும் கண்டு மகிழுமாறு தன்னைத் தொழுத சண்டீசர்க்கு அழகிய மாலை, உணவு முதலியவற்றை முற்காலத்தே அளித்தருளியவனும், கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு தேவர்களைக் காத்தவனுமாகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம் யாதென வினவில், மேகங்கள் தங்கும் பொழில்களும், குளிர்ந்த பொய்கைகளும் சூழ்ந்து விளங்கும் திருவூறலாகும். அதனை நாம் நாள்தோறும் நினைவோமாக.


பாடல் எண் : 6 - 7
* * * * * * * * *

பாடல் எண் : 8
கறுத்த மனத்தினொடும் கடுங்காலன்வந்து
         எய்துதலும் கலங்கி
மறுக்குஉறு மாணிக்குஅருள மகிழ்ந்தான் இடம்வினவில்
செறுத்துஎழு வாள்அரக்கன் சிரம்தோளும்
         மெய்யும்நெரிய அன்று
ஒறுத்துஅருள் செய்தபிரான் திருவூறலை உள்குதுமே.

         பொழிப்புரை :சினம் பொருந்திய மனத்தோடு கூடிய கொடிய காலன் தம் வாழ்நாளைக் கவரவந்து அடைதலைக் கண்டு கலங்கி மயங்கிய மார்க்கண்டேயனுக்கு அருள் புரிந்தவனும், தன்னை மதியாது சினந்து வந்த வாள்வல்ல இராவணனின் தலை, தோள், உடல் ஆகியனவற்றை முற்காலத்தில் நெரித்து அருள் செய்தவனுமாகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம் யாதென வினவில் திருவூறலாகும். அதனை நாம் நாள்தோறும் நினைவோமாக.


பாடல் எண் : 9
நீரின் மிசைத்துயின்றோன் நிறைநான்
         முகனும்அறியாது அன்று
தேரும் வகை நிமிர்ந்தான் அவன்சேரும் இடம்வினவில்
பாரின் மிசைஅடியார் பலர்வந்து
         இறைஞ்சமகிழ்ந்து ஆகம்
ஊரும் அரவுஅசைத்தான் திருவூறலை உள்குதுமே.
         பொழிப்புரை :கடல்நீரின் மேல் துயில் கொள்வோனாகிய திருமாலும் ஞானத்தினால் நிறைவுபெற்ற நான்முகனும் அறிய முடியாமல் தேடி ஆராயுமாறு நிமிர்ந்து நின்றவனும், மண்ணுலகில் அடியவர் பலரும் வந்து வணங்க மகிழ்ந்து ஊரும் பாம்பினை இடையில் கட்டியவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் யாதென வினவில் திருவூறலாகும். அதனை நாமும் உள்குவோமாக.


பாடல் எண் : 10
பொன்இயல் சீவரத்தார், புளித்தட்டையர்,
         மோட்டுஅமணர் குண்டர்
என்னும் இவர்க்குஅருளா ஈசன்இடம் வினவில்
தென்என வண்டுஇனங்கள் செறிஆர்பொழில்
         சூழ்ந்துஅழகார் தன்னை
உன்ன வினைகெடுப்பான் திருவூறலை உள்குதுமே.

         பொழிப்புரை :பொன்போன்ற மஞ்சட் காவியுடை அணிந்த புத்தர்கள், புளிப்பேறிய காடியைத் தட்டில் இட்டு உண்பவர்கள் ஆகிய அறியாமையை உடைய சமண் குண்டர்கள் என்னும் இவர்கட்கு அருள் புரியாதவனும், தன்னை நினைவார்களின் வினைகளைக் கெடுப்பவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் யாதென வினவில் வண்டு இனங்கள் தென்னென்ற ஓசையோடு செறிந்த பொழில்கள் சூழ்ந்த அழகிய திருவூறலாகும். அதனை நாமும் நினைவோமாக.


பாடல் எண் : 11
கோடல் இரும்புறவில் கொடிமாடக்
         கொச்சையர்மன் மெச்ச
ஓடு புனல்சடைமேல் கரந்தான் றிருவூறல்
நாடல் அரும்புகழான் மிகுஞானசம்
         பந்தன்சொன்ன நல்ல
பாடல்கள் பத்தும்வல்லார் பரலோகத்து இருப்பாரே.

         பொழிப்புரை :செங்காந்தட் செடிகள் நிறைந்த பெரிய புதர்கள் விளங்குவதும் கொடிகள் கட்டிய மாட வீடுகளைக் கொண்டதுமான கொச்சையம்பதிக்குத் தலைவனும், பெருகிவரும் கங்கையைச் சடைமிசைக் கரந்தவனுமாகிய சிவபிரானது திருவூறலைப் பற்றி நாடற் கரிய புகழால் மிக்க ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் வல்லவர் பரலோகத்திருப்பர்.

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

பொது --- 1096. இருவினைகள் ஈட்டும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இருவினைகள் ஈட்டும் (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதனன தாத்த தனதனன தாத்த      தனதனன தாத்த ...... தன...