திரு இலம்பையங்கோட்டூர்




திரு இலம்பையங்கோட்டூர்
(தற்போது எலுமியன்கோட்டூர் என்று வழங்குகிறது)

     தொண்டை நன்னாட்டுத் திருத்தலம்.

     திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூவம் (திருவிற்கோலம்) சிவத்தலத்திலிருந்து தென்மேற்கே 4 கி மீ. தொலைவில் இத் திருத்தலம் அமைந்துள்ளது. அருகில் உள்ள பெரிய ஊர் திருவள்ளூர். திருவள்ளூரிலிருந்து பேரம்பாக்கம் சென்று அங்கிருந்து ஆட்டோ மூலம் இலம்பையங்கோட்டூர் செல்லலாம். சென்னை - அரக்கோணம் மின்சார இரயில் மார்க்கத்திலுள்ள கடம்பத்தூரில் இறங்கி அங்கிருந்து பேரம்பாக்கம் சென்று பின் ஆட்டோ மூலம் இலம்பையங்கோட்டூர் செல்லலாம்.

 
இறைவர்          : அரம்பேசுவரர், தெய்வநாயகேசுவரர்,                                                                 சந்திரசேகரர்.
இறைவியார்      : கனககுஜாம்பிகை, கோடேந்து முலையம்மை.
        
தல மரம்          : மல்லிகை.
        
தீர்த்தம்           : மல்லிகை தீர்த்தம்.
                 
தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - மலையினார் பருப்பதம்.

     திரிபுர சங்காரத்தின் போது இறைவன் தேரேறிச் சென்றார். அவருடன் சென்ற தேவர்கள் விநாயகரை வழிபடாம்ல் சென்றதால் அவர் தேரின் அச்சை முறித்தார். தேர் நிலைகுலைந்து சாய்ந்தது. தேர் கீழே விழாமல் திருமால் அதைத் தாங்கிப் பிடித்தார். அப்போது சிவபெருமான் கழுத்தில் அணிந்திருந்த கொன்றை மாலை கீழே விழுந்தது. மாலை விழுந்த இடத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார். அந்த இடம் தான் இத்தலம் என்று தலபுராணம் கூறுகிறது.

     தேவர்கள் படைக்கு தலைமை ஏற்று திரிபுர சம்மாரம் செய்ததாலும், அவர்களால் வழிபடப் பெற்றதாலும் இத்தல இறைவன் தெய்வநாதேசுவரர் என்று பெயர் பெற்றார்.

     மேலும் தேவலோக மங்கையான அரம்பை இத்தல இறைவனை பூசித்து, தனக்கு என்றும் மாறாத இளமை வேண்டுமென்று பிரார்த்தித்தாள். அரம்பை வழிபட்டதால் இறைவனுக்கு அரம்பேசுவரர் என்ற பெயரும் உண்டாயிற்று. அரம்பை வழிபட்ட இத்தலம் அரம்பைக்கோட்டூர் ஆயிற்று. பிறகு நாளடைவில் மருவி இலம்பயங்கோட்டூர் என்று மாறி தற்போது எலுமியன்கோட்டூர் என்று வழங்குவதாகச் சொல்லப்படுகிறது.

         திருஞானசம்பந்தரை வரவழைத்தது: இது குறித்த செவிவழிச் செய்தி. திருஞானசம்பந்தர் மற்ற தொண்டை நாட்டுத் தலங்களை தரிசித்துக் கொண்டு இத்தலம் வழியே வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு சிறு பிள்ளையாகவும், பின் ஒரு முதியவர் போன்றும் தோன்றி வழிமறித்து இக்கோயில் இருப்பதை உணர்த்த கூட வந்த அடியார்கள் அதை தெரிந்து கொள்ளவில்லை. பின்பு இறைவன் ஒரு வெள்ளைப் பசு உருவில் வந்தார். திருஞானசம்பந்தர் எறி வந்த சிவிகையை அந்தப் பசு முட்டியது. திருஞானசம்பந்தர் வியந்து அப்பசு காட்டிய குறிப்பின் படி அதைத் தொடர்ந்து செல்ல இத்தலத்தின் அருகே வந்தவுடன் பசு மறைந்து விட்டது. அப்போது தான் இறைவனே பசு உருவில் நேரில் வந்து இத்தலத்தைப் பற்றி உணர்த்தியதை திருஞானசம்பந்தர் அறிந்தார். பின் இத்தலம் வந்த சம்பந்தரை இறைவனைப் பதிகம் பாடி வழிபட்டார்.    

         கோயில் அமைப்பு: இராஜகோபுரம் இல்லை. கிழக்கில் உள்ள வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பலிபீடமும், அதிகார நந்தி மண்டபம் உள்ளன. இத்தலத்தில் கொடிமரம் இல்லை. வெளிப் பிரகாத்தில் இடதுபுறம் இரம்பை வழிபட்ட அரம்பேசுவரர் 16 பட்டைகளுடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறையில் இறைவன் தெய்வநாதேசுவரர் கிழக்கு நோக்கு லிங்க உருவில் காட்சி தருகிறார். ஆலயத்திற்கு ஒரு பிரகாரம் மட்டுமே உள்ளது. பிரகாரம் வலம் வருகையில் குருந்த விநாயகர் சந்நிதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகர் சந்நிதி, பைரவர் சந்நிதி ஆகியவை உள்ளன. கோஷ்ட மூர்த்திகளாக விநாயகர், அவரை அடுத்து தட்சிணாமூர்த்தி, கருவறை பின்புறம் லிங்கோத்பவருக்கு பதில் அவ்விடத்தில் திருமால், அடுத்து பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் உள்ளனர். இங்குள்ள தட்சிணாமூர்த்தி யோக தட்சிணாமூர்த்தியாக சின் முத்திரையை இதயத்தில் வைத்து காணப்படுகிறார். வலது காலை மடித்து பீடத்தில் வைத்து, இடது கையை ஆசனத்தில் அழுத்திக் கொண்டு, கண்களை மூடிக் கொண்டு கல்லால மரத்தின் கீழ் சனகாதி முனிவர்களோடு, பாதத்தில் முயலகன் அழுந்திக் கிடக்க மிக அமைதியாக அமர்ந்திருக்கின்ற இவரது சிற்பம் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும்.

         இத்தல இறைவன் ஒரு சுயம்பு லிங்கமாகும், மூலவர் தீண்டாத் திருமேனி. பெரிய ஆவுடையார் அடிப்பாகம் பத்மம் போன்ற அமைப்பில் காணப்படுகிறது. இவ்வாலயத்திற்கு வெளியே இருபுறமும் திருக்குளங்களாக இத்தலத்தின் தீர்த்தங்களான மல்லிகை தீர்த்தமும், சந்திர தீர்த்தமும் அமைந்துள்ளன. தட்சனால் சாபம் பெற்ற சந்திரன் இங்குள்ள மல்லிகை திர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கியுள்ளான்.

         வருடத்தில் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரையிலும், செப்டம்பர் மாதம் 5-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையிலும் சூரியனின் ஒளிக்கற்றைகள் சுவாமி மீது படுகின்றன. தேவர்கள் வழிபட்ட தெய்வநாதேசுவரரை வணங்கிட தோஷங்கள் நீங்கும். குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யோக தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "மாறுபாடு தீதும் இலம், பயம் கோட்டீர் என்று அடியார் புகழ் ஓதும் இலம்பையங் கோட்டூர் நலமே" என்று போற்றி உள்ளார்.

     காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

         திருஞானசம்பந்தப் பெருமான் திருமாற்பேற்றை வணங்கித் திருவருள் பெற்று, திருவல்லம் முதலிய திருத்தலங்களை வணங்கிக் கொண்டு, பாலாற்றுப் பக்கத்தில் வடகரையில் உள்ள திருத்தலங்களையும் வணங்கத் திருவுள்ளம் கொண்டு, திரு இலம்பையங்கோட்டூர் அடைந்து வணங்கி இத் திருப்பதிகம் பாடியருளினார்.

பெரிய புராணப் பாடல் எண் : 1003
திருமாற்பேறு உடையவர்தம்
         திருவருள்பெற்று எழுந்துஅருளி,
கருமாலும் கருமாவாய்க்
         காண்புஅரிய கழல்தாங்கி
வரும்ஆற்றல் மழவிடையார்
         திருவல்லம் வணங்கித்தம்
பெருமாற்குத் திருப்பதிகப்
         பெரும்பிணையல் அணிவித்தார்.

         பொழிப்புரை : திருமாற்பேற்றில் வீற்றிருக்கும் இறைவரின் திருவருளைப் பெற்று, அங்கிருந்து எழுந்தருளிச் சென்று, கரிய நிறம் கொண்ட திருமால் பன்றி வடிவு எடுத்தும் காண இயலாத திரு அடிகளைச் சுமந்து வரும் வலிமை பெற்றுள்ள இளைய விடையை உடைய இறைவரின், திருவல்லம் என்னும் பதியினை வணங்கித் தம் இறைவர்க்குத் திருப்பதிகமான மாலையைச் சார்த்தியருளினார்.


பெ. பு. பாடல் எண் : 1004
அங்குள்ள பிறபதியில்
         அரிக்குஅரியார் கழல்வணங்கி,
பொங்குபுனல் பாலியாற்றின்
         புடையில்வட பால்இறைவர்
எங்கும்உறை பதிபணிவார்,
         இலம்பையங்கோட் டூர்இறைஞ்சிச்
செங்கண்விடை உகைத்தவரைத்
         திருப்பதிகம் பாடினார்.

         பொழிப்புரை : அவ்விடங்களிலுள்ள திருப்பதிகளில் திருமாலுக்கு அரியவரான இறைவரின் திருவடிகளை வணங்கி, பெருகும் நீரைக் கொண்ட பாலியாற்றின் அருகே வடபாலில் இறைவர் எங்கும் எழுந்தருளியுள்ள திருப்பதிகளையெல்லாம் வணங்குவாராகி, திருஇலம்பையங்கோட்டூரினைத் தொழுது, சிவந்த கண்களையுடைய ஆனேற்றை ஊர்தியாகச் செலுத்தி வருபவரைத் திருப்பதிகம் பாடி யருளினார்.

         குறிப்புரை : பாலியாற்றின் வடபாலுள்ள திருப்பதிகளாவன திருச்சுரபுரம், விரிஞ்சிபுரம், மகாதேவமலை, தீக்காலி, வள்ளிமலை முதலாயினவாகலாம் என்பார் சிவக்கவிமணியார். பதிகங்கள் எவையும் கிடைத்தில. திருஇலம்பையங்கோட்டூரில் அருளிய பதிகம் `மலையினார்' (தி.1 ப.76) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணில் அமைந்த பதிகமாகும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிகம்


1. 076   திருஇலம்பையங்கோட்டூர்            பண் - குறிஞ்சி
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
மலையின்ஆர்பருப்பதம், துருத்தி,மாற்பேறு,
         மாசிலாச்சீர்மறைக் காடு,நெய்த்தானம்,
நிலையினான் எனதுஉரை தனதுஉரையாக,
         நீறுஅணிந்து ஏறுஉகந்து ஏறியநிமலன்,
கலையினார்மடப்பிணை துணையொடும் துயில,  
       கானல்அம்பெடைபுல்கிக் கணமயில்ஆலும்,
இலையின்ஆர்பைம்பொழில் இலம்பையங்கோட்டூர்   
      இருக்கையாப்பேணி, என்எழில்கொள்வது இயல்பே?

         பொழிப்புரை :கயிலாய மலையை இடமாகக் கொண்டுறையும் இறைவன், சீபருப்பதம், துருத்தி, மாற்பேறு, குற்றமற்ற சிறப்புடைய திருமறைக்காடு, நெய்த்தானம் ஆகிய தலங்களில் நிலையாக எழுந் தருளியிருப்பவன். தன் உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தி அருள்புரிபவன். திருநீறு அணிந்து ஆனேற்றில் மகிழ்வோடு ஏறிவரும் நிமலன். அத்தகையோன் ஆண்மான்கள் தம் இளைய பெண் மான்களோடு துயில்வதும், சோலைகளில் வாழும் ஆண் மயில்கள் பெடைகளைத் தழுவி அகவுவதுமாய இலைகள் நிறைந்த பசிய பொழில்கள் சூழ்ந்த இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் அழகினைக் கவர்ந்து செல்வது முறையோ?


பாடல் எண் : 2
திருமலர்க்கொன்றையான், நின்றியூர்மேயான்,       
         தேவர்கள் தலைமகன், திருக்கழிப்பாலை,
நிருமலன் எனதுஉரை தனது உரையாக,
         நீறுஅணிந்து, ஏறுஉகந்து, ஏறியநிமலன்,
கருமலர்க்கமழ்சுனை நீள்மலர்க்குவளை     
      கதிர்முலைஇளையவர் மதிமுகத்து உலவும்,
இருமலர்த்தண்பொய்கை இலம்பையங்கோட்டூர்  
      இருக்கையாப் பேணி, என் எழில்கொள்வதுஇயல்பே?

         பொழிப்புரை :அழகிய கொன்றை மலர் மாலையை அணிந்தவன். திருநின்றியூரில் எழுந்தருளியிருப்பவன். தேவர்கட்குத் தலைவன். திருக்கழிப்பாலையில் குற்றமற்றவனாய் உறைபவன். தன்னுடைய உரைகளை என்னுடைய உரைகளாக வெளிப்படுத்தி அருள்புரிபவன். திருநீறு அணிந்து ஆனேற்றில் மகிழ்வோடு ஏறிவரும் நிமலன். அத்தகையோன் பெரிய தாமரை மலர்களால் மணம் கமழும் சுனைகளில் உள்ள நீண்ட குவளை மலர்கள் இளம் பெண்களின் மதி போன்ற முகத்தில் உலவும் பெரிய கண்களை நிகர்க்கும் இலம்பையங் கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் அழகைக் கவர்ந்து செல்லுதல் முறையோ?


பாடல் எண் : 3
பாலனாம், விருத்தனாம், பசுபதிதானாம்,
         பண்டுவெங்கூற்று உதைத்து அடியவர்க்கு அருளும்
காலனாம், எனதுஉரை தனதுஉரையாக,
         கனல்எரி அங்கையில் ஏந்தியகடவுள்,
நீலமாமலர்ச்சுனை வண்டுபண்செய்ய ,
         நீர்மலர்க் குவளைகள் தாதுவிண்டுஓங்கும்,
ஏலநாறும்பொழில் இலம்பையங்கோட்டூர்
         இருக்கையாப் பேணி,என்எழில் கொள்வதுஇயல்பே?

         பொழிப்புரை :பால வடிவோடும், விருத்த வடிவோடும் வரும் பசுபதி எனப் பெறுபவன். முற்காலத்தில் கொடிய கூற்றுவனை உதைத்து மார்க்கண்டேயருக்கு அருள்புரிந்த காலகாலன். தன்னுடைய உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தியவன். கையில் விளங்கும் எரியை ஏந்திய கடவுள். அத்தகைய இறைவன் நீல நிறம் பொருந்திய சிறந்த மலர்கள் பூக்கும் சுனையில் வண்டுகள் பாட நீரில் பூக்கும் குவளை மலர்கள் மகரந்தம் விண்டு மணம் பரப்புவதும், ஏலமணம் கமழும் பொழில்கள் சூழ்ந்ததுமான இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு அவனைத் தரிசிக்க வந்த என் எழிலைக் கொள்வது முறையோ?


பாடல் எண் : 4
உளம் கொள்வார் உச்சியார், கச்சிஏகம்பன்,     
         ஒற்றியூர் உறையும்அண் ணாமலை அண்ணல்,
விளம்புவான் எனதுஉரை தனதுஉரையாக,
         வெள்ளநீர்விரிசடைத் தாங்கியவிமலன்,
குளம்பு உறக் கலைதுள மலைகளும் சிலம்பக்     
       கொழுங்கொடி எழுந்துஎங்கும் கூவிளம் கொள்ள,
இளம்பிறை தவழ்பொழில் இலம்பையங்கோட்டூர்
         இருக்கையாப் பேணி,என் எழில்கொள்வது இயல்பே?

         பொழிப்புரை :உள்ளத்தில் தியானிப்பவர்களின் முடிமீது விளங்குபவன் கச்சியேகம்பன். ஒற்றியூர், திருவண்ணாமலை ஆகிய தலங்களில் விளங்கும் தலைவன். என்னுடைய உரைகளாகத் தன்னுரைகளை வெளியிடுபவன். கங்கை வெள்ளத்தைத் தனது விரிந்த சடைமிசைத் தாங்கிய விமலன். அத்தகையோன், கலைமான்கள் குளம்புகள் நிலத்தில் பதியுமாறு கால்களை அழுத்தித் துள்ளவும், மலைகள் அவ்விடங்களில் எழும்பும் ஒலிகளை எதிரொலிக்கவும், வளமையான கொடிகள் வளர்ந்த வில்வமரங்கள் முழுதும் படியவும் அமைந்துள்ள, இளம்பிறை தவழும் வான் அளவிய பொழில்கள் சூழ்ந்த இலம்பையங் கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு அவனைத் தரிசிக்க வந்த என் எழிலைக் கவர்ந்து கொள்வது நீதியோ!


பாடல் எண் : 5
தேனுமாய் அமுதமாய்த் தெய்வமும் தானாய்த்
         தீயொடு நீருடன் வாயுவாம் தெரியில்,
வானுமாம், எனதுஉரை தனதுஉரையாக,
         வரிஅரா அரைக்கு அசைத்து உழிதருமைந்தன்,
கானமான் வெருவுறக் கருவிரல் ஊகம்
         கடுவனோடு உகளும்ஊர் கல்கடுஞ்சாரல்,
ஏனமான் உழிதரும் இலம்பையங்கோட்டூர்  
         இருக்கையாப் பேணி,என் எழில்கொள்வது இயல்பே?

         பொழிப்புரை :தேன் , அமுது ஆகியன போல இனிப்பவனாய் , தெய்வம் தானேயானவன் . தீ , நீர் , வாயு , வான் , மண் ஆகிய ஐம்பூத வடிவினன் . தன் உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தியவன் . உடலில் வரிகளை உடைய பாம்பைத் தன் இடையிலே கட்டிக் கொண்டு திரிபவன் . மான்கள் அஞ்சும்படி கரிய விரல்களை உடைய பெண் கருங்குரங்கு ஆண் குரங்கோடு காட்டில் உகளும் பாறைகளை யுடைய கடுமையான மலைச்சாரலில் பன்றிகளும் காட்டுப் பசுக்களும் திரியும் இலம்பையங்கோட்டூரைத் தன் இருப்பிடமாகக் கொண்டு தன்னை வழிபட வந்த என் அழகைக் கவர்ந்து கொள்ளல் முறையோ ?


பாடல் எண் : 6
மனம் உலாம் அடியவர்க்கு அருள்புரிகின்ற
         வகையலால், பலிதிரிந்து உண்புஇலான்,மற்றுஓர்
தனமிலான், எனதுஉரை தனதுஉரையாகத்
         தாழ்சடை இளமதி தாங்கியதலைவன்,
புனம்எலாம் அருவிகள் இருவிசேர்முத்தம்   
     பொன்னொடு மணிகொழித்து ஈண்டிவந்து எங்கும்
இனம் எலாம் அடைகரை இலம்பையங்கோட்டூர்   
     இருக்கையாப் பேணி,என் எழில்கொள்வது இயல்பே?

         பொழிப்புரை :தங்கள் மனங்களில் இறைவனை உலாவச் செய்யும் அடியவர்க்கு அருள்புரிதற்பொருட்டே பலியேற்றுத் திரிபவனேயன்றி உண்ணும்பொருட்டுப் பலி ஏலாதவன். வீடுபேறாகிய செல்வமன்றி வேறு செல்வம் இல்லாதவன். தன்னுடைய உரைகளை என்னுடைய உரைகளாக வெளிப்படுத்தியவன். தாழ்ந்து தொங்கும் சடைமீது இளம் பிறையைத் தாங்கியுள்ள தலைவன். அத்தகையோன் தினைப்புனங் களில் பாய்ந்து வரும் அருவிகள் அரிந்த தினைத்தாள்களில் ஒதுங்கிய முத்து பொன்மணி முதலியவற்றைக் கொழித்துக் கொண்டு வந்து எல்லா இடங்களிலும் சேர்க்கும் கரைகளோடு கூடிய வயல்களை உடைய இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் எழிலைக் கொள்வது முறையோ?


பாடல் எண் : 7
நீர்உளான், தீஉளான், அந்தரத்து உள்ளான்,
         நினைப்பவர் மனத்து உளான், நித்தமா ஏத்தும்
ஊர்உளான், எனதுஉரை தனதுஉரையாக ,
         ஒற்றைவெள் ஏறுஉகந்து ஏறியஒருவன்,
பார்உளார் பாடலோடு ஆடல் அறாத
         பண்முரன்று அஞ்சிறை வண்டினம்பாடும்
ஏர்உளார்  பைம்பொழில் இலம்பையங்கோட்டூர் 
      இருக்கையாப் பேணி,என் எழில்கொள்வதுஇயல்பே?

         பொழிப்புரை :நீர், தீ, ஆகாயம் ஆகியவற்றுள் இருப்பவன். நினைப்பவர் மனத்தில் உறைபவன். நாள்தோறும் அடியவர்கள் வந்து வணங்கும் ஊர்களை இடமாகக் கொண்டவன். தன்னுடைய உரைகளை என்னுடையனவாக வெளிப்படுத்தியவன். தனித்த ஒரு வெள்ளேற்றை உகந்து ஏறிவருபவன். அத்தகையோன், மண்ணக மக்களின் பாடல் ஆடல்கள் இடையறாது நிகழ்வதும், அழகிய சிறகுகளை உடைய வண்டுகள் பண்ணிசை போல ஒலி செய்து பாடும் அழகிய பொழில்கள் சூழ்ந்ததுமான இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் எழிலைக் கவர்தல் முறையாகுமோ?

பாடல் எண் : 8
வேர்உலாம் ஆழ்கடல் வருதிரை இலங்கை
         வேந்தன தடக்கைகள் அடர்த்தவன், உலகில்
ஆர் உலாம் எனதுஉரை தனதுஉரையாக ,
         ஆகம் ஓர்அரவு அணிந்து உழிதரும் அண்ணல்,
வார் உலாம் நல்லன மாக்களும் சார
         வாரணம் உழிதரும் மல்லல் அங்கானல்
ஏர்உலாம் பொழில்அணி இலம்பையங்கோட்டூர்  
      இருக்கையாப் பேணி,என் எழில்கொள்வது இயல்பே?

         பொழிப்புரை :நிலத்தின் வேர்வரை உலாவுகின்ற ஆழ்ந்த கடலின் அலைகள் தவழ்கின்ற இலங்கை வேந்தனாகிய இராவணனின் நீண்டகைகள் இருபதையும் நெரித்தவன். உலகின்கண் நிறைந்து விளங்கும் தன்னுடைய உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தியவன். தன்னுடைய மார்பில் பெரியதொரு பாம்பினை அணிந்து திரியும் தலை வன். அத்தகையோன், கழுத்தில் வார் கட்டப்பட்ட நல்ல வளர்ப்பு விலங்குகளும், யானைகளும் திரியும் வளமான காடுகளும் அழகிய பொழில்களும் சூழ்ந்த இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிட மாகக்கொண்டு என் எழிலைக் கவர்தல் முறையோ?


பாடல் எண் : 9
கிளர்மழை தாங்கினான், நான்முகம் உடையோன் ,
         கீழ்அடிமேன்முடி தேர்ந்து அளக்கில்லா,
உளம் அழை எனதுஉரை தனதுஉரையாக,
         ஒள்அழல் அங்கையில் ஏந்திய ஒருவன்,
வள மழை எனக்கழை வளர்துளிசோர
         மாசுணம் உழிதரு மணிஅணிமாலை
இளமழை தவழ்பொழில்ல இம்பையங்கோட்டூர்  
      இருக்கையாப் பேணி,என் எழில்கொள்வது இயல்பே?

         பொழிப்புரை :ஆயர்பாடியை அழித்தற்கெனக் கிளர்ந்தெழுந்த மழையைக் கோவர்த்தனம் என்னும் மலையால் தடுத்த திருமாலும், நான்முகனும், கீழே அகழ்ந்து சென்று அடியையும், மேலே பறந்து சென்று முடியையும் அளந்தறியமுடியாதவாறு அழலுருவாய் ஓங்கி நின்றவன். மனத்தால் அழைத்தற்கு உரியனவாய் அமைந்த தன்னுடைய உரைகளை என்னுடையவாக வெளிப்படுத்தியவன். அழகிய கையில் ஒளி பொருந்திய அழலை ஏந்திய ஒப்பற்ற தலைவன். அத்தகையோன், வளமான மழை போல, மூங்கிலில் தேங்கிய பனி நீர், காற்றால் பொழிவதும், மலைப் பாம்புகள் ஊர்வதும், அழகிய மணிகள் மாலைபோல நிறைந்து தோன்றுவதும், மேகக் கூட்டங்கள் தவழும் பொழில் சூழ்ந்ததுமான இலம்பையங் கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் எழிலைக் கவர்ந்தான். இது முறையோ?


பாடல் எண் : 10
உரிஞ்சன கூறைகள் உடம்பினர் ஆகி
         உழிதரு சமணரும் சாக்கியப்பேய்கள்,
பெருஞ்செல்வன் எனதுஉரை தனதுஉரையாக,       
         பெய்பலிக்கு என்றுஉழல் பெரியவர்பெருமான்,
கருஞ்சினை முல்லைநன் பொன்அடைவேங்கை  
       களிமுகவண்டொடு தேன் இனம் முரலும்
இருஞ்சுனை மல்கிய இலம்பையங்கோட்டூர்  
      இருக்கையாப் பேணி,என் எழில்கொள்வது இயல்பே?

         பொழிப்புரை :ஆடைகளை உரிந்துவிட்டாற் போன்ற அம்மண உடம்பினராய்த் திரியும் சமணர்களும், சாக்கியர்களாகிய பேய்களும் அறிய இயலாத பெரிய வைப்பு நிதியாய் விளங்குவோன். தன்னுடைய உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தியவன். ஊரார் இடும் பலியை ஏற்பதற்கெனப் பிட்சாடனனாய்த் திரிபவன். பெரியோர்களுக்கெல்லாம் தலைவன். அத்தகையோன், பெரிதான அரும்புகளை உடைய முல்லையும், பொன்போன்று மலரும் வேங்கையும், மகிழ்ச்சி நிறைந்த முகத்தோடு வண்டுகளும், தேனீக்களும் முரலும் பெரிய சுனைகளும், நிறைந்து காணப்படும் இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு, என் எழிலைக் கவர்தல் முறையோ?


பாடல் எண் : 11
கந்தனை மலிகனை கடல் ஒலிஓதம்
         கானல் அம் கழிவளர் கழுமலம் என்னும்
நந்தியார் உறைபதி, நான்மறைநாவன்,
         நல் தமிழ்க்கு இன்துணை ஞானசம்பந்தன்,
எந்தையார் வளநகர் இலம்பையங்கோட்டூர்,
         இசையொடுகூடிய பத்தும்வல்லார்போய்
வெந்துயர் கெடுகிட, விண்ணவரோடும்
         வீடுபெற்று, இம்மையின் வீடு எளிது ஆமே.

         பொழிப்புரை : மணம் நிரம்பியதும், கடல் ஒலியோடு அதன் வெள்ளம் பெருகிக் கடற்கரைச் சோலைகள் உப்பங்கழிகள் ஆகியன நிரம்புவதும் ஆகிய கழுமலம் என்னும் சிவன் உறைபதியாகிய சீகாழியில் தோன்றிய நான்மறை ஓதும் நாவினனும் நற்றமிழ்க்குஇனிய துணையாயிருப்பவனுமாகிய ஞானசம்பந்தன் எந்தையார் உறையும் வளநகராகிய இலம்பையங்கோட்டூரில் வீற்றிருந்தருளும் இறைவன் மீதுபாடிய இசையொடும் கூடிய பத்துப் பாடல்களையும் ஓத வல்லவர்கள் தம் கொடிய துயர்கள் ஓடிக்கெட விண்ணவரோடும் வீற்றிருந்து பின் விண்ணிலிருந்து விடுபட்டு வீடு பேற்றையும் இப்பிறப்பு ஒன்றாலேயே எளிதாகப் பெறுவார்கள்.

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

பொது --- 1096. இருவினைகள் ஈட்டும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இருவினைகள் ஈட்டும் (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதனன தாத்த தனதனன தாத்த      தனதனன தாத்த ...... தன...