திருவிற்கோலம்


திரு விற்கோலம்
(கூவம்)

     தொண்டை நன்னாட்டுத் திருத்தலம்.

     சென்னை - அரக்கோணம் இரயில் பாதையில் உள்ள கடம்பத்தூர் இரயில் நிலையத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவு. அருகில் உள்ள ஊர் திருவள்ளூர். திருவள்ளூரில் இருந்து காஞ்சீபுரம் செல்லும் பேருந்து கடம்பத்தூர், பேரம்பாக்கம் வழியாக கூவம் செல்கிறது. கூவம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சுமார் ஒரு கி.மீ. சென்றால் இத்திருத்தலத்தை அடையலாம்.

இறைவர்         : திரிபுராந்தகேசுவரர், திருவிற்கோலநாதர்.

இறைவியார்      : திரிபுராந்தகி, திரிபுரசுந்தரி.

தல மரம்     : தனியாக ஏதுமில்லை.

தீர்த்தம்               : அக்கினி தீர்த்தம்.

தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - உருவினார் உமையொடும்.


     கூவம் என்ற பெயரில் தற்போது அறியப்படும் இத்தலம் திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னையிலிருந்து சுமார் 50 கி.மி. தொலைவில் இருக்கிறது. இத்தலத்தின் அருகே தான் கூவம் ஆறு உற்பத்தியாகிறது. சுத்தமான நீரோட்டம் உள்ள இந்த ஆறு சென்னையை நெருங்கும் போது மிகவும் அசுத்தமடைந்து விடுகிறது.

     இத்தலத்து இறைவன் ஒரு சுயம்புலிங்கம். இங்குள்ள இலிங்கத் திருமேனியை ஆலய அர்ச்சகர்கள் கூடத் தொடுவதில்லை. அதனால் இறைவன் தீண்டாத் திருமேனிநாதர் என்றும் பெயர் கொண்டுள்ளார்.

         இங்குள்ள இலிங்கம் காலத்திற்கு ஏற்ப நிறம் மாறுவதாக கூறப்படுகிறது. அதிக மழைபெய்வதாக இருந்தால் இறைவரின் திருமேனியில் வெண்மை நிறம் தோன்றுவதும், போர் ஏற்படுவதாயிருந்தால் சிவப்பு நிறம் படர்வதும் ஆகிய அற்புதம் பொருந்திய தலம்.

         இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் முதலில் இறைவி திருபுரசுந்தரியை வணங்கிவிட்டுத் தான் பிறகு மூலவர் திரிபுராந்தகரை வழிபடவேண்டும் என்ற நியதி வழக்கத்தில் உள்ளது. திருமணமான தம்பதியர்களுக்கு இடையே ஏற்படும் எந்தவிதமான பிரச்னைகளும் இத்தலத்து இறைவனை வழிபடுவதின் மூலம் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.

         தெற்கு திசையிலுள்ள ஐந்து நிலை இராஜகோபுரம் தான் இவ்வாலயத்தின் பிரதான வாயிலாகும். கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்து தெற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள வாயில் வழியாக அம்பாள் மற்றும் சுவாமி சந்நிதிகள் உள்ள பகுதிக்குள் செல்லலாம்.

     முதலில் அம்பாள் திரிபுரசுந்தரி சந்நிதியும், அதையடுத்து திரிபுராந்தக சுவாமி சந்நிதியும் கிழக்கு நோக்கு அமைந்துள்ளன. சுவாமி சந்நிதி விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையது. இரண்டு சந்நிதிகளையும் சேர்த்து வலம் வர பிரகாரம் உள்ளது. உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் அச்சிறுத்த விநாயகர் சந்நிதி அமைந்திருக்கிறது. அம்பாள் மற்றும் சுவாமி சந்நிதிகளுக்கு தனித்தனியே கொடிமரம், பலிபீடம் இருக்கின்றன. சுவாமி சந்நிதி நுழை வாயிலுக்கு முன் இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் திரிபுராதிகள் மூவருள் இருவர் இவர்கள் என்று சொல்லப்படுகிறது. சுவாமி சந்நிதி நுழை வாயிலுக்கு முன் வலதுபுறம் தெற்கு நோக்கிய நடராஜர் சந்நிதி உள்ளது. வள்ளி தெய்வானையுடன் உள்ள முருகர், தட்சினாமூர்த்தி ஆகிய மூர்த்தங்களும் பார்க்க வேண்டியவை. சுவாமி கருவறை கோஷ்டத்தில் உள்ள லிங்கோத்பவர் சிற்பமும் கலையழகுடன் உள்ளது. மஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியைக் குடைவதும், பிரம்மா அன்னப் பறவை உருவில் ஜோதி உருவமான சிவபெருமானின் முடியைக் காண முயலுவதும் லிங்கோத்பவர் சிற்பத்தில் காணலாம். பக்கத்தில் பாலமுருகன் சந்நிதியும் அடுத்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதியும் உள்ளன. துர்க்கை சந்நிதிக்கு எதிரில் சந்தன மேடை உள்ளது. இதில் அரைத்த சந்தனம் சுவாமிக்குச் சார்த்தப்படுகிறது.நவக்கிரக சந்நிதி வடக்கு வெளிப் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் உள்ளது.

         இத்தலம் சிவபெருமான் நிகழ்த்திய திரிபுர சங்காரத்துடன் சம்பந்தம் கொண்டதாகும் என்று சொல்லப்படுகின்றது. சிவபெருமான் திரிபுர சங்காரம் செய்ய புறப்பட்ட போது முழுமுதற் கடவுள் விநாயகரை வழிபட்டு கிளம்பாததால் சிவன் ஏறிய தேரின் அச்சு முறிந்து விட்டது. பிறகு விநாயகர் வழிபாடு செய்து புறப்பட்டார் என்று புராணங்கள் கூறுகின்றன.

     சிவபெருமான் வில்லைத் திருக்கையிலேந்தி காட்சி கொடுப்பதால் இத்தலம் திருவிற்கோலம் என்ற பெயரில் ஒரு பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது. இத்தலத்திலுள்ள விநாயகருக்கு அச்சிறுத்த விநாயகர் என்று பெயர்.

         இந்த கோவிலிலுள்ள தீர்த்தம் அக்னி தீர்த்தம் (கூபாக்கினி தீர்த்தம்) எனப்படும். ஆலய அர்ச்சகர்கள் இந்த அக்னி தீர்த்தத்தில் நீராடிய பிறகே தினசரி வழிபாடுகள் செய்வார்கள். கடுமையான வறட்சி காலத்திலும் இந்த அக்னி தீர்த்தம் வற்றுவதில்லை என்று கூறப்படுகிறது. சுற்றிலும் வயல் வெளி இருந்தும், இக் குளத்தில் தவளைகள் இல்லை.  பிடித்து வந்து விட்டாலும் வெளியேறி விடுவதாகச் சொல்லப்படுகின்றது. இக்குளத்தில் மூழ்கி இறைவனை வழிபடுவோருக்குப் புத்திரப் பேறு வாய்க்கும் என்று சொல்லப்படுகின்றது.

        மேலும் 4 கி.மி தொலைவிலுள்ள கூவம் ஆற்றிலிருந்து கொண்டு வரும் நீரால் மட்டுமே இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் வழக்கத்தை அர்ச்சகர்கள் கடைபிடித்து வருகின்றனர். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக என்றேனும் இவ்வாறு கூவம் ஆற்று நீர் அபிஷேகத்திற்கு இல்லையெனில் இளநீர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பகல் நேர அபிஷேகம் செய்ய அருகில் உள்ள பிஞ்சவாக்கம் என்ற கிராமத்தில் இருந்து கொண்டு வரப்படும் பால் பயன்படுத்தப்படுகிறது. பிஞ்சவாக்கம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் இவ்வாலய இறைவன் அபிஷேகத்திற்கு பால் கொடுப்பதை தங்கள் கடமையாக நினைத்து செயல்படுகின்றனர்.

         அதிக மழை, வெள்ளம் வரும் அறிகுறி இருந்தால் சுவாமி மீது வெண்மை படரும் என்றும், போர் நிகழ்வதாயின் செம்மை படரும் என்றும் சொல்லப்படுகின்றது. இது பற்றியே திருஞானசம்பந்தர் தம் திருப்பதிகத்தின் 3-வது பாடலில் "ஐயன் நல் அதிசயன்" என்று குறிப்பிடுகின்றார். இவ்வண்ண மாற்றம் தற்போது காணப்படவில்லையாம். மூலவர் - திரிபுரம் எரித்த மூர்த்தி. அபிஷேகங்கள் செய்வதால் உண்டாகும் மேற்புறப் படிவுகள் தானாகவே பெயர்ந்து விழுந்து திருமேனி சுத்தமாகி விடும் என்று சொல்லப்படுகிறது.

         கோயிலுக்கு வெளியே - திரிபுர சங்கார காலத்தில் தேர் அச்சு முறிந்திட, உடனே பெருமானை விடையாக இருந்து தாங்கியதாகச் சொல்லப்படும் - கரிய மாணிக்கப் பெருமாள் கோயில் உள்ளது.

     காலை 6 முதல் 11 மணி வரையிலும் மாலை 4 முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "தீது உடைய பொன் கோலமாம் எயிற்கு, போர்க் கோலம் கொண்ட திரு விற்கோலம் மேவு பரமேட்டிமையே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 1004
அங்குள்ள பிறபதியில் அரிக்குஅரியார் கழல்வணங்கி,
பொங்குபுனல் பாலியாற்றின் புடையில்வட பால்,இறைவர்
எங்கும்உறை பதிபணிவார் இலம்பையங்கோட் டூர்இறைஞ்சி,
செங்கண்விடை உகைத்தவரைத் திருப்பதிகம் பாடினார்.

         பொழிப்புரை : திருவல்லம் தொழுத பின், அவ்விடங்களிலுள்ள திருப்பதிகளில் திருமாலுக்கு அரியவரான இறைவரின் திருவடிகளை வணங்கி, பெருகும் நீரைக் கொண்ட பாலியாற்றின் அருகே வடபாலில் இறைவர் எங்கும் எழுந்தருளியுள்ள திருப்பதிகளையெல்லாம் வணங்குவாராகி, திருஇலம்பையங்கோட்டூரினைத் தொழுது, சிவந்த கண்களையுடைய ஆனேற்றை ஊர்தியாகச் செலுத்தி வருபவரைத் திருப்பதிகம் பாடி யருளினார்.


பெ. பு. பாடல் எண் : 1005
திருத்தொண்டர் பலர்சூழத் திருவிற்கோ லமும்பணிந்து,
பொருட்பதிகத் தொடைமாலை புரம்எரித்த படிபாடி,
அருட்புகலி ஆண்டகையார் தக்கோலம் அணைந்துஅருளி,
விருப்பினொடும் திருவூறல் மேவினார் தமைப்பணிந்தார்.

         பொழிப்புரை : பாலியாற்றின் வடபாலுள்ள திருப்பதிகளாவன திருச்சுரபுரம், விரிஞ்சிபுரம், மகாதேவமலை, தீக்காலி, வள்ளிமலை முதலாயினவாகலாம் என்பார் சிவக்கவிமணியார். பதிகங்கள் எவையும் கிடைத்தில. திருஇலம்பையங்கோட்டூரில் அருளிய பதிகம் `மலையினார்\' (தி.1 ப.76) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணில் அமைந்த பதிகமாகும்.

         குறிப்புரை : திருவிற்கோலத்தில் அருளிய பதிகம் `உருவினார்' (தி.3 ப.23) எனத் தொடங்கும் பஞ்சமப் பண்ணில் அமைந்த திருப் பதிகமாகும். இப்பதிகத்தில் வரும் 2, 4, 6, 7, 9 ஆகிய பாடல்களில் முப்புரம் எரித்தமை அருளப்படுகின்றது. அதனை உளங்கொண்டே ஆசிரியர் சேக்கிழார் இங்ஙனம் அருளுவாராயினர். இங்குள்ள இறைவரின் தீண்டாத் திருமேனியின் நிறம் பருவ காலத்திற்கேற்ப மாறுபடுகிறது என்பர்.


3. 023    திருவிற்கோலம்            பண் - காந்தாரபஞ்சமம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
உருவின்ஆர் உமையொடும் ஒன்றி நின்றதுஓர்
திருவினான், வளர்சடைத் திங்கள் கங்கையான்,
வெருவிவா னவர்தொழ வெகுண்டு நோக்கிய
செருவினான் உறைவிடம் திருவிற் கோலமே.

         பொழிப்புரை :அழகே உருவான உமாதேவியோடு ஒன்றிநின்ற, செல்வரான சிவபெருமான் தம் சடைமுடியில் திங்களும், கங்கையும் சூடியவர். வானவர்கள் அஞ்சித் தொழுது போற்றுமாறு, வெகுண்டெழுந்து போர்க்கோலம் பூண்டு வில்லேந்தி, அப்பெருமான் வீற்றிருந்தருளுகிற இடம் திருவிற்கோலம் ஆகும்.


பாடல் எண் : 2
சிற்றுஇடை உமையொரு பங்கன், அங்கையில்
உற்றதுஓர் எரியினன், ஒரு சரத்தினால்
வெற்றிகொள் அவுணர்கள் புரங்கள் வெந்துஅறச்
செற்றவன், உறைவிடம் திருவிற் கோலமே.

         பொழிப்புரை :சிறிய இடையையுடைய உமாதேவியைத் தம் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு, அழகிய கையில் நெருப்பு ஏந்தி விளங்கும் சிவபெருமான், ஓர் அம்பால் அசுரர்களின் மூன்று புரங்களும் வெந்தழியுமாறு போர்செய்து வெற்றி கொண்டவர். அப்பெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம் திருவிற்கோலம் என்னும் கோயிலாகும்.


பாடல் எண் : 3
ஐயன்நல் அதிசயன், அயன்விண் ணோர்தொழும்
மைஅணி கண்டனார், வண்ண வண்ணம்வான்
பையரவு அல்குலாள் பாகம் ஆகவும்,
செய்யவன் உறைவிடம் திருவிற் கோலமே.

         பொழிப்புரை :இறைவர் யாவற்றுக்கும் தலைவர். பல பல வேடம் கொள்ளும் அதிசயர். பிரமனும், மற்றுமுள்ள விண்ணோர்களும் தொழுகின்ற மை போன்ற இருண்ட கண்டத்தர். நல்ல வண்ணமுடைய, பாம்பின் படம் போன்ற அல்குலையுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு செம்மேனியராய் அவர் வீற்றிருந்தருளும் இடம் திருவிற்கோலம் ஆகும்.


பாடல் எண் : 4
விதைத்தவன் முனிவருக்கு அறம்முன், காலனை
உதைத்தவன் உயிரிழந்து உருண்டு வீழ்தர,
புதைத்தவன் நெடுநகர்ப் புரங்கள் மூன்றையும்
சிதைத்தவன், உறைவிடம் திருவிற் கோலமே.

         பொழிப்புரை :இறைவன் சனகாதி முனிவர்கட்கு அறக்கருத்துக்களை நன்கு பதியும்படி உபதேசித்தவன். மார்க்கண்டேயனின் உயிரைக் கவரவந்த காலனைக் காலால் உதைத்து உருண்டு விழும்படி செய்தவன். திரிபுரங்கள் மூன்றையும் எரித்துச் சாம்பலாகுமாறு சிதைத்தவன். அப்பெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம் திருவிற்கோலம் என்பதாம்.



பாடல் எண் : 5
முந்தினான் மூவர்உள் முதல்வன் ஆயினான்,
கொந்துஉலா மலர்ப்பொழிற் கூகம் மேவினான்,
அந்திவான் பிறையினான், அடியர் மேல்வினை
சிந்துவான், உறைவிடம் திருவிற் கோலமே.

         பொழிப்புரை :இறைவன் எல்லாப் பொருள்கட்கும் முற்பட்டவன். மும்மூர்த்திகளுக்குள் தலைவனாவன். கொத்தாகப் பூக்கும் மலர்கள் நிறைந்த சோலைகளையுடைய கூகம் என்னும் ஊரில் வீற்றிருப்பவன். மாலையில் வானில் தோன்றும் பிறைச் சந்திரனைச் சூடியவன். அடியவர்களைப் பற்றியுள்ள வினைகள் நீங்கும்படிச் செய்பவன். அப்பெருமான் வீற்றிருந்தருளுமிடம் திருவிற்கோலம் ஆகும்.


பாடல் எண் : 6
தொகுத்தவன் அருமறை, அங்கம் ஆகமம்
வகுத்தவன், வளர்பொழில் கூகம் மேவினான்,
மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்துஅறச்
செகுத்தவன், உறைவிடம் திருவிற் கோலமே.

         பொழிப்புரை :இறைவன் அரிய நான்கு வேதங்களையும் அவற்றின் ஆறங்கங்களையும் தொகுத்தவன். சிவாகமங்களை அருளிச் செய்தவன். வளமையான சோலைகளையுடைய கூகம் என்னும் ஊரில் வீற்றிருக்கும் அவன், தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன். செருக்குற்று மிகுந்த கொடுமைகளைச் செய்த அசுரர்களின் முப்புரங்களை வெந்தழியும்படி செய்தவன். அப் பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவிற்கோலம் ஆகும்.



பாடல் எண் : 7
விரித்தவன் அருமறை, விரிச டைவெள்ளம்
தரித்தவன், தரியலர் புரங்கள் ஆசற
எரித்தவன், இலங்கையர் கோன்இ டர்படச்
சிரித்தவன், உறைவிடம் திருவிற் கோலமே.

         பொழிப்புரை :அரும்பொருளுரைக்கும் வேதங்களை இறைவன் விரித்து அருளியவன். விரிந்து சென்ற கங்கையைச் சடைமுடியில் தாங்கியவன். பகையசுரர்களின் முப்புரங்கள் அற்றொழியும்படி எரித்தவன். இலங்கை மன்னனான இராவணன் கயிலையின் கீழ்த் துன்புறும்படி செய்து, பின் அருள் புரிந்த விளையாடல் செய்தவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவிற்கோலம் ஆகும்.


பாடல் எண் : 8
* * * * * * * * *
பாடல் எண் : 9
திரிதரு புரம்எரி செய்த சேவகன்,
வரிஅர வொடுமதி சடையில் வைத்தவன்,
அரியொடு பிரமனது ஆற்ற லால்உருத்
தெரியலன், உறைவிடம் திருவிற் கோலமே.

         பொழிப்புரை :இறைவன் வானத்திலே பறந்து திரிந்து தேவர்கட்குத் தீங்குகள் செய்த அசுரர்களின் முப்புரங்களை எரித்தவன். வரிகளையுடைய பாம்பையும், சந்திரனையும் சடையிலே அணிந்தவன். திருமாலும், பிரமனும் தமது ஆற்றலைப் பெரிதாகக் கொண்டு முனைந்ததால் காண்பதற்கு அரியவனானவன். அப் பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருவிற்கோலம் ஆகும்.


பாடல் எண் : 10
சீர்மையில் சமணொடு சீவ ரக்கையர்
நீர்மைஇல் உரைகள்கொள் ளாத நேசர்க்குப்
பார்மலி பெருஞ்செல்வம் பரிந்து நல்கிடும்
சீர்மையி னான், இடம் திருவிற் கோலமே.

         பொழிப்புரை :இறையுண்மையை உணரும் தன்மையில்லாத சமணர்களும், புத்தர்களும் கூறும் உரைகளைக் கொள்ளாது, இறை நம்பிக்கையுடன் அவன்மீது பக்தி செலுத்துபவர்கட்கு உலகில் பெருஞ்செல்வத்தைப் பரிவுடன் இறைவன் தருவான். அத்தகைய மேன்மையுடைய பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவிற்கோலம் ஆகும்.


பாடல் எண் : 11
கோடல்வெண் பிறையனைக் கூகம் மேவிய
சேடன செழுமதில் திருவிற் கோலத்தை
நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன
பாடல்வல் லார்களுக்கு இல்லை பாவமே.

         பொழிப்புரை :வளைந்த வெண்ணிறப் பிறைச்சந்திரனைச் சடையில் சூடி, கூகம் என்னும் ஊரில், அழகிய, வளமையான மதில்களை யுடைய திருவிற்கோலம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளும் சிவபெருமானை நினைத்துத் தமிழ் ஞானசம்பந்தன் பாடல்களைப் பாட வல்லவர்கட்குப் பாவம் இல்லை.

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

பொது --- 1096. இருவினைகள் ஈட்டும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இருவினைகள் ஈட்டும் (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதனன தாத்த தனதனன தாத்த      தனதனன தாத்த ...... தன...