திருச்செந்தூர் - 0023. அமுதுததி விடம்


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

அமுத உததி விடம் (திருச்செந்தூர்)

முருகா!
பகுத்து உண்டு பல்உயிர் ஓம்பி,
 உய்ய அருள்.

தனதனன தனதனன தந்தத் தந்தத்
     தனதனன தனதனன தந்தத் தந்தத்
     தனதனன தனதனன தந்தத் தந்தத் ...... தனதான


அமுதுததி விடமுமிழு செங்கட் டிங்கட்
     பகவினொளிர் வெளிறெயிறு துஞ்சற் குஞ்சித்
     தலையுமுடை யவனரவ தண்டச் சண்டச் ...... சமனோலை

அதுவருகு மளவிலுயி ரங்கிட் டிங்குப்
     பறைதிமிலை திமிர்தமிகு தம்பட் டம்பற்
     கரையவுற வினரலற உந்திச் சந்தித் ...... தெருவூடே

எமதுபொரு ளெனுமருளை யின்றிக் குன்றிப்
     பிளவளவு தினையளவு பங்கிட் டுண்கைக்
     கிளையுமுது வசைதவிர இன்றைக் கன்றைக் ......கெனநாடா

திடுககடி தெனுமுணர்வு பொன்றிக் கொண்டிட்
     டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்
     டெனவகலு நெறிகருதி நெஞ்சத் தஞ்சிப் ...... பகிராதோ

குமுதபதி வகிரமுது சிந்தச் சிந்தச்
     சரணபரி புரசுருதி கொஞ்சக் கொஞ்சக்
     குடிலசடை பவுரிகொடு தொங்கப் பங்கிற் ...... கொடியாடக்

குலதடினி அசையஇசை பொங்கப் பொங்கக்
     கழலதிர டெகுடெகுட டெங்கட் டெங்கத்
     தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத் தொங்கத் ......தொகுதீதோ

திமிதமென முழவொலிமு ழங்கச் செங்கைத்
     தமருகம ததிர்சதியொ டன்பர்க் கின்பத்
     திறமுதவு பரதகுரு வந்திக் குஞ்சற் ...... குருநாதா

திரளுமணி தரளமுயர் தெங்கிற் றங்கிப்
     புரளஎறி திரைமகர சங்கத் துங்கத்
     திமிரசல நிதிதழுவு செந்திற் கந்தப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


அமுது உததி விடம் உமிழும் செங்கண், திங்கள்
     பகவின் ஒளிர் வெளிறு எயிறு, துஞ்சல் குஞ்சித்
     தலையும் உடையவன், ரவ தண்டச் சண்டச் ......சமன்ஓலை

அது வருகும் அளவில், யிர் அங்கிட்டு, ங்குப்
     பறை திமிலை திமிர்த மிகு தம்பட்டம் பல்
     கரைய, உறவினர் அலற, உந்திச் சந்தித் ...... தெருஊடே,

எமதுபொருள் எனும் மருளை இன்றி, குன்றிப்
     பிளவு அளவு தினைஅளவு பங்கிட்டு உண்கைக்கு
     இளையும், முது வசை தவிர இன்றைக்கு அன்றைக்கு ......என நாடாது

இடுக கடிது எனும் உணர்வு பொன்றிக் கொண்டிட்டு,
     டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்டு
     என அகலும் நெறிகருதி, நெஞ்சத்து அஞ்சிப் ...... பகிராதோ?

குமுத பதி வகிர்அமுது சிந்தச் சிந்த,
     சரண பரிபுர சுருதி கொஞ்சக் கொஞ்ச,
     குடில சடை பவுரிகொடு தொங்க, பங்கில் ...... கொடிஆட,

குல தடினி அசைய, இசை பொங்கப் பொங்க,
     கழல் அதிர டெகுடெகுட டெங்கட் டெங்கத்
     தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத் தொங்கத் ......தொகுதீதோ

திமிதம் என முழவு ஒலி முழங்க, செங்கைத்
     தமருகம் அது அதிர் சதியொடு, ன்பர்க்கு இன்பத்
     திறம் உதவு பரதகுரு வந்திக்கும் சற் ...... குருநாதா!

திரளு மணி தரளம் உயர் தெங்கில் தங்கிப்
     புரள எறி, திரை மகர சங்கத் துங்கத்
     திமிர சலநிதி தழுவு செந்தில் கந்தப் ...... பெருமாளே.


பதவுரை

      குமுத பதி வகிர் அமுது சிந்த சிந்த --- ஆம்பல் மலருக்கும் பதியாகிய சந்திரனது பிறை தனது அமிர்த கிரணங்களை மிகவும் பொழியவும்,

     சரண பரிபுர சுருதி கொஞ்ச கொஞ்ச --- திருவடியில் அணிந்துள்ள சிலம்பானது வேத வசனங்களை இனிமையுடன் ஒலிக்கவும்,

     குடில சடை பவுரி கொடு தொங்க --- வளைவுடைய சடையானது அந்தத் திருநடனத்திற்கு இணங்க அசைந்து (அழகுடன்) தொங்கவும்,

     பங்கில் கொடியாட --- ஒரு பக்கத்தில் கொடியனைய சிவகாமசுந்தரி ஆடவும்,  

     குலதடினி அசைய --- மேன்மைப் பொருந்திய கங்காநதி அசையவும்,

     இசை பொங்க பொங்க --- இனிய பாடல்களின் ஒலியும், வாத்திய ஒலியும் மிகுதியாக சப்திக்கவும்,

     கழல் அதிர --- பாதத்தில் அணிந்துள்ள வீரகண்டாமணி அதிர்ந்து ஒலிக்கவும்,

     டெகுடெ குட டெங்கட் டெங்கத் தொகுகுகுகு தொங்கத் தொங்கத் தொகு தீ தோ திமிதம் என முழவொலி முழங்க --- இத்தகைய தாள வரிசையுடன் மேள ஒலிகள் முழங்கவும்,

     செம் கை --- சிவந்த திருக்கரத்திலுள்ள,

     தமருகம் அது அதிர் கதியொடு --- உடுக்கையானது அதிரும் தாளவொத்துடனும்,

      அன்பர்க்கு இன்பத் திறம் உதவும் --- (ஆனந்தத் திருநடனம் புரிந்து) அன்பு செய்யும் அடியார்க்கு என்றும் அழியாத இன்ப நலனை வழங்கும்,

     பரதகுரு வந்திக்கும் சற்குருநாதா --- பரத நாடகத்திற்கு ஆசிரியராகிய சிவபெருமான் வணங்குகின்ற ஞானாசிரியரே!

      திரளு மணி தரளம் --- உருட்சியாகத் திரளும் முத்து மணிகள்

     உயர் தெங்கில் தங்கிப் புரள --- உயர்ந்து வளர்ந்துள்ள தென்னை மரங்களின்மீது தங்கிப் புரளுமாறு,

     எறி திரை  --- அம் முத்துக்களை வீசி எறிகின்ற அலைகளையுடையதும்,

     மகர சங்க --- மகர மீன்களின் கூட்டத்தையுடையதும்,

     துங்க --- தூய்மையுடையதும்,

     திமிர சலநிதி தழுவு --- இருள்போல் கருநிறத்தை உடையதும் ஆகிய கடல் அணைந்துள்ள

     செந்தில் கந்த --- செந்திலம்பதியில் வாழுகின்ற கந்தப்பெருமானே!
    
     பெருமாளே --- பெருமையின் மிக்கவரே!

      அமுது உததி விடம் உமிழு செம்கண் --- பால் கடலில் தோன்றிய ஆலகால விடத்தைக் கக்கும் சிவந்த கண்களையும்,

     திங்கள் பகவின் ஒளிர் வெளிறு எயிறு --- சந்திரனது பிளவைப் (பிறை) போற் பிரகாசிக்கின்ற வெண்மையான பற்களையும்,

     துஞ்சல் குஞ்சி தலையும் உடையவன் --- சுருளுகின்ற தன்மையுடைய மயிர்க் குடுமியோடு கூடிய தலையையும் உடையவனாகிய,

     அரவ தண்ட --- பேரொலியுடன் வந்து உயிர்களை காலாந்தரத்தில் தண்டிக்கும்

     சண்டச் சமன் ஓலை அது வருகும் அளவில் --- வேகத்தையுடைய கூற்றுவனது ஓலையானது வருகின்ற காலத்தில்,

     உயிர் அங்கிட்டு --- ஆவி இயமனுலகில் செல்ல,

     இங்கு --- உடலிருக்கும் இவ்விடத்திலே

     பறை, திமிலை, திமிர்த மிகு தம்பட்டம் பல் கரை --- பறை வாத்தியங்களும், பம்பையும், ஒலி மிகுந்த தம்பட்டம் என்கிற வாத்தியமும் பலவிதமாக ஒலிக்கவும்,

     உறவினர் அலற  --- உறவின் முறையோர் துன்புற்றுக் கதறி அழவும்,

     எமது பொருள் எனும் மருளை இன்றி --- எம்முடைய பொருள் என்னும் மயக்கமின்றி,

     குன்றிப் பிளவு அளவு --- குன்றி மணியில் பாதியாகிலும்,

     தினையளவு --- தினையரிசி அளவாகிலும்,

     பங்கிட்டு உண்கைக்கு இளைய --- ஏழைகளுக்கு பங்கிட்டுத் தந்து உண்ணவேண்டிய அறவழியில் நின்றும் இளைத்து,

     முது வசை தவிர --- உலோபி என்ற பழமையான வசைச் சொல் நீங்குமாறு,

     இன்றைக்கு அன்றைக்கு என நாடாது --- இன்றைக்கு அறம் புரிவது நாளைக்கு புரிவது என்று எண்ணாது,

     இடுக கடிது எனும் உணர்வு பொன்றிக் கொண்டிட்டு --- விரைந்து வறிஞர்க்குப் பிச்சை இடு என்று (அறிஞர்) உரைக்கும் உரைகளால் ஏற்படும் அறிவு அழிந்துபோய்,

     உந்தி சந்தி தெருவூடே --- (பிணத்தை) எடுத்துக்கொண்டு பல தெருக்கூடும் சந்திகளின் வழியாக,

     டுடுடுடுடு........என அகலும் --- டுடுடுடுடு என்ற பறை ஒலியுடன் கொண்டு போகின்ற,

      நெறி கருதி --- மார்க்கத்தை நினைத்து,

     நெஞ்சத்து அஞ்சிப் பகிராதோ ---  மனத்தில் இவ்வாறு நாமும் ஒரு நாளைக்குச் செல்லவேண்டி வரும் என்று பயந்து, ஏழைகளுக்கு என் வருவாயில் பங்கிட்டு தருமம் புரியமாட்டேனோ?

பொழிப்புரை

         குமுத மலருக்குப் பதியாகிய சந்திரனது பிறை தனது அமிர்த கிரணங்களை மிகவும் பொழியவும், திருவடியில் அணிந்துள்ள சிலம்பானது வேத ஒலியைச் செய்யவும், வளைவுடைய சடை அத் திருநடனத்திற்கு இணங்க அசைந்து தொங்கவும், ஒரு பக்கத்தில் கொடியிடை உடைய சிவகாமசுந்தரி ஆடவும், மேன்மைப் பொருந்திய கங்கா நதி அசையவும், பாடல்கள் வாத்தியங்களின் இனிய ஒலி மிகுதியாகப் பொங்கவும், பாத கமலத்திலுள்ள வீர கண்டாமணி அதிர்ந்து ஒலிக்கவும், டெகுடெகுட டெங்கட் டெங்க தொகுகுகுகு தொகுகுகுகு தெங்கத் தொங்கத் தொகுதீதோ திமிதம் என்று முழவுகள் முழங்கவும், சிவந்த கரத்திலுள்ள உடுக்கையின் தாள ஒத்துடனும், ஆநந்த நிருத்தம் புரிந்து, அன்பர்களுக்கு என்றும் அகலாத இன்ப வீட்டை வழங்கும் பரத நாடகத்திற்கு ஆசிரியராகிய சிவபெருமான், சிஷ்யபாவ மூர்த்தியாக இருந்து வணங்கி வழிபாடு செய்யும் ஞானாசிரியரே!

         உருட்சியாகத் திரளும் முத்து மணிகள் உயாந்த தென்னை மரத்தில் தங்கிப் புரளுமாறு வீசி எறிகின்ற அலைகளை உடையதும், மகர மீன்களின் கூட்டத்தை உடையதும், பரிசுத்தமானதும், இருள்போன்ற கருநிறத்தை உடையதுமாகிய சமுத்திரம் அணைந்துள்ள திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள கந்த மூர்த்தியே!

     பெருமையில் சிறந்தவரே!

          பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தைக் கக்கும் (கோபத்தினால்) சிவந்த கண்களையும், பிறைச் சந்திரனைப் போல் ஒளிசெய்யும் வெண்ணிற முடைய பற்களையும், சுருண்டுள்ள மயிர்க் குடுமியுடன் கூடிய தலையையும், உடையவனும், பேரொலியுடன் வந்து உயிர்களைக் காலாந்தரத்தில் வினைக்கேற்பத் தண்டிப்பவனும், வேகமுடையவனுமாகிய இயமனது ஓலை வருகின்ற காலத்தில் உயிர் இயமலோகஞ் செல்ல, உடல் மட்டுமுள்ள இவ்விடத்தில் பறை, பம்பை, ஒலியுடைய தப்பட்டம் முதலிய பலவிதமான வாத்தியங்கள் ஒலிக்கவும், உறவினர் ஓவென்று கதறியழவும், எமது பொருள் என்ற மயக்கமின்றி, குன்றிமணியில் பாதியாகிலும், தினையரிசி அளவாகிலும் ஏழைகளுக்குப் பகிர்ந்து உண்ணுவதற்கு இளைத்து, லோபி என்ற பழமையான வசைமொழி நீங்குமாறு, இன்று அறஞ் செய்வோம், நாளை செய்வோம், என எண்ணாது விரைந்து தருமஞ்செய் என்று அறிஞர் அறிவுரைகளால் ஏற்படுகின்ற அறிவு அழிந்து, பிணத்தை எடுத்துக்கொண்டு தெருக்கள் கூடுகின்ற சந்திவழியாக டுடுடுடுடு என்ற பறை ஒலியுடன் வீணே போகின்ற மார்க்கத்தை நினைந்து நினைந்து, இவ்வாறு வறிதே ஒருநாள் அழிவு வருவது நிச்சயமென்று பயந்து, பொருள் உள்ள போதே சிறிதாவது பகிர்ந்தளிக்க மாட்டேனோ?


விரிவுரை

அமுது உததி விடம் உமிழு செங்கண் ---

     கூற்றுவனுடைய கண்கள் மிகவும் பயங்கரத்தை விளைவிக்குமாறு கொடிய விடத்திற்கு நிகரான நெருப்புக்களைப் பொழியும். கூற்றுவனுக்கு இரண்டு உருவம் உள்ளன.  ஒன்று புண்ணிய சீலர்களுக்கு அருள்மேனி.  மற்றொன்று பாவிகளுக்கு அச்சத்தைத் தரும் கோர வடிவு. இவ்விரண்டில் பாவமுடையார்க்கு மிகவும் கோர வடிவுடன் தோன்றும் போது அக் கண்களில் அனல் சொரியும்.

அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியை அன்பால்
எழுத்துப்பிழை அறக் கற்கின்றிலீர், எரி மூண்டது என்ன
விழித்துப் புகை எழப் பொங்கு வெம் கூற்றன் விடும் கயிற்றால்
கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ கவி கற்கின்றதே.   ---  கந்தர்அலங்காரம்.

தண்டம் ---

     அறப்பால் மூன்றனுள் ஒன்று.  அது ஒழுக்கத்தினும் வழக்கத்தினும் திரும்பினோரை அவற்றின் நெறியே நிற்குமாறு இறைவன் தண்டித்தலாம். இத்தொழிலை இயமன் மேற் கொண்டிருக்கிறான். அறநெறி வழுவி மறநெறி சென்றோர்க்குக் கூற்றுவன் தனது தூதுவர்களால் பற்பல துன்பங்களை விளைவிப்பன்.

சமன் ஓலை ---

     ஆன்ம லாபத்தை அடைதற்பொருட்டுத் தோன்றிய நாம் ஆவி ஈடேறும் வழியைக் கருதாமல், வறிதே வாழ்நாளை வீணாக்கிக் கொண்டிருந்தால், கூற்றுவன் ஓலையை எடுத்துக் கொண்டுவந்து உயிரைக் கொண்டு போகின்றான். அவ்வோலை வருவதற்கு முன் இறைவன் திருவருளைப் பெறுவதற்கு மிகமிக விரைந்து முயலுதல் வேண்டும். இயமன் ஓலை காட்டிக் கொண்டு போவான் என்பதை அடியில்வரும் திருவாக்காலுணர்க.

காலம் ஆச்சு வருகஎன ஓலை காட்டி, யமபடர்
     காவல் ஆக்கி, உயிரது          கொடுபோமுன்,
 காம வாழ்க்கை பொடிபட, ஞானம் வாய்த்த கழலிணை
     காதலாற் கருதும்உணர்            தருவாயே”  ---  (ஆலமேற்ற) திருப்புகழ்.

பறை திமிலை...............கரைய ---

ஆவிபோன உடம்பை பற்பல பறை வாத்தியங்களுடன் ஈமதேசம் கொண்டுபோய்ச் சுடுவர். இப் பறை வாத்தியங்களை ஒருவர் இறந்தவுடன் மூன்று முறை முழக்குவர்.

சென்றே எறிய ஒருகால், சிறுவரை
நின்றே எறிப பறையினை, --- நன்றேகாண்
முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டழுவார்
செத்தாரைச் சாவார் சுமந்து.              --- நாலடியார்.

     இவ்வளவு அற்ப காலத்தில் அழியும் நிலையற்ற வாழ்வைப் பெரிதென்று எண்ணி மதிமயங்கி, இறந்து படுவோரைக்கண்டும் தெளிவடையாது, மணம் புரிந்து கொண்டு, சுகம் உண்டு உண்டு உண்டு என்னும் சிற்றறிவுடையார்க்கு அறிவைப் புகட்டுவது போல் ஒலிக்கிறது பறை.

கணங்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்
பிணங்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டு-மணங்கொண்டீன்
டுண்டுண்டுண் டென்னு முணர்வினாற் சாற்றுமே
டொண்டொண்டொண் டென்னும் பறை.         --- நாலடியார்.


எமது பொருள் எனும் மருளை இன்றி ---

     செல்வமானது நீர்மேல் குமிழிபோல் நிலையற்றது. ஆதலால், அதனை உள்ளபோதே அறவழியில் செலவழித்தல் வேண்டும். செல்வம் வந்தபோது அதன் நிலைமையை உணர்தல் வேண்டும். அருமைப் பத்தினியானவள் அருகிலிருந்து அறுசுவை உண்டிகளை ஊட்ட, அதனை மறு கவளம் வேண்டாமென்னும் பெருஞ் செல்வராய் இருந்தோரும், ஏழைகளாய் ஓரிடத்தில் போய் கூழையராய் இரப்பர் என்று சொன்னால், செல்வம் நிலையுடையது என்று எண்ணக்கூடியதா? அநேக செல்வர்கள் தாமும் உண்ணாது பிறருக்கும் உதவி செய்யாது, பணம் காக்கும் பூதம்போல வறிதே அழிவர்; இது தானே பேதமை?

     நம்மைக் காட்டிலும் அறிவும் ஆற்றலும் உடையவர்கள் எல்லாம் ஏழையாய் இருக்கிறார்களே? நமக்கு மட்டும் செல்வம் உண்டாவதற்குக் காரணம் என்ன? “கொடுத்து வைத்த புண்ணியவான்” என்கிறார்களே? எப்போது கொடுத்து வைத்தோம்? “முந்தின பிறவியில் ஏழைகளுக்குக் கொடுத்து வைத்தோம்; அதன் புண்ணியத்தால் இப்போது பெருஞ்செல்வராய் இருக்கிறோம். இப்போதும் கொடுத்து வைத்தால் தானே, இனிவரும் பிறிவியிலும் சுகமே வாழ்வோம். நாம் எந்தப் பொருளை ஏழைக்குத் தருகிறோமோ அதுதான் நம்முடைய பொருள். எவ்வளவு பொருளை அறவழியில் செலவழிக்கிறோமோ, அவ்வளவும் மறுமைக்கு வந்து துணை செய்யும்” என்று ஒவ்வொருவரும் தனியே இருந்து சிறிது நேரம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

     பிறக்கும் பொழுது கொண்டு வந்ததில்லை. இறக்கும் பொழுது கொண்டு போவதுமில்லை. எனவே இடையில் வந்த பொருள் சிவபெருமானால் கொடுக்கப்பட்டது. அதனை அரன் பணியிலும், அடியார் பணியிலும் செலவழித்தல் வேண்டும்.

     அங்ஙனம் செலவழிக்காது காவல் புரிந்து கொண்டிருந்தால், செல்வம் விரைவில் அழியும். தேனீயானது மிகவும் துன்புற்று அலைந்து சிறிது சிறிதாகத் தேனைச் சேர்த்து வைத்துத் தானும் உண்ணாமல் பிறருக்கும் வழங்காமல் காத்துக் கொண்டிருக்கிறது. பின்னர் என்ன ஆகிறது? பிறரால் அத்தேன் கவரப்பட்டு, தேனீ வீணே வருந்தி அழிகிறது. அதுபோல் அறம் செய்யாதான் செல்வம் அழியும்.

உடா அதும், உண்ணாதும், தம்உடம்பு செற்றும்,
கெடாஅத நல்லறமும் செய்யார்-கெடா அது
வைத்து ஈட்டினார் இழப்பர், வான்தோய் மலைநாட!
உய்த்து ஈட்டும் தேனீக் கரி.                 --- நாலடியார்.

சுழித்துஓடும் ஆற்றில் பெருக்குஆனது செல்வம், துன்பம்இன்பம்
கழித்து,டு கின்றது,க்காலம், நெஞ்சே! கரிக் கோட்டுமுத்தைக்
கொழித்துஓடு காவிரிச் செங்கோடன் என்கிலை, குன்றம்எட்டும்
கிழித்துஓடு வேல்என் கிலை,எங்ஙனே முத்தி கிட்டுவதே.  --- கந்தர்அலங்காரம்.

சூரில் கிரியில் கதிர்வேல் எறிந்தவன் தொண்டர்சூழாம்
சாரில், கதிஇன்றி வேறுஇலை காண்,தண்டு தாவடிபோய்த்
தேரில் கரியில் பரியில் திரிபவர் செல்வம் எல்லாம்
 நீரில் பொறிஎன்று அறியாத பாவி நெடு நெஞ்சமே.  --- கந்தர்அலங்காரம்.

நீர்க்குமிழக்கு நிகர்என்பர் யாக்கை,நில்லாது செல்வம்,
பார்க்கும் இடத்து அந்த மின் போலும்என்பர், பசித்துவந்தே
ஏற்கும் அவர்க்குஇட என்னின்,ங் கேனும் எழுந்திருப்பார்
வேற்குமரற்கு அன்புஇலாதவர் ஞானம் மிகவும்நன்றே.   --- கந்தர்அலங்காரம்.

குன்றிப் பிளவளவு பங்கிட்டு ---

     பெருந் தருமங்களைப் புரிவதற்குப் போதிய செல்வம் இல்லாதோரும் தமது தகுதிக்குத் தக்கவாறு சிறிதாவது அறம் புரிதல் வேண்டும். இதனை வலியுறுத்துவதற்காகவே “இயல்வது கரவேல்” என்ற அமுதமொழி எழுந்தது. ஒவ்வொரு நாளும் நமது வருவாயில் சிறிதாவது அறத்தில் செலவழிந்ததா என்று இரவில் படுக்கும்போது சிந்தித்தல் வேண்டும்.

ஒல்லும் வகையான் அறவினைஓவாதே
செல்லும் வாய் எல்லாம் செயல்.       --- திருக்குறள்.

தவிடின் ஆர்ப்பதம் ஏனும் ஏற்பவர்
 தாழாது ஈயேன்”          --- (கவடுகோத்தெழு) திருப்புகழ்.


வையில் கதிர்வடி வேலோனை வாழ்த்தி, வறிஞர்க்குஎன்றும்
நொய்யில் பிளவுஅளவேனும் பகிர்மின்கள், நுங்கட்கு இங்ஙன்
வெய்யிற்கு ஒதுங்க உதவா உடம்பின் வெறுநிழல்போல்
கையில் பொருளும் உதவாது காணும் கடைவழிக்கே.   --- கந்தர்அலங்காரம்.  

சிறுமிக் குமர நிகர்வீர் பகிரச் சிதையுயிர்த்துச்
சிறுமிக் குமர சரணமென் னீருய்விர் செந்தினைமேற்
சிறுமிக் குமர புரைத்துநின் றோன்சிலை வேட்டுவனெச்
சிறுமிக் குமர வணிமுடி யான்மகன் சீறடிக்கே.       --- கந்தர் அந்தாதி.

இதன் பதவுரை -----

         சிறு - சிறிதான, உமிக்கும் - குற்றுமியையாயினும், பகிர மர நிகர்வீர் - பிறர்க்கு இட்டு உண்ண மனம் கூடாமல் மரம் போன்று இருப்பவரே, சிதை - அழிந்து போவதும், உயிர் - பிராணனுக்கு, துச்சில் - ஒதுக்கிடமும் ஆகிய இவ் உடலின்கண், துமி - ஒரு தும்மல் உண்டாகும் அக் காலையினும், குமர - குமரனே, சரணம் - உனக்கு அடைக்கலம், என்னீ்ர் - என்று சொல்லுங்கள், உய்விர் - பிழைப்பீர்கள், செம் - சிவந்த, தினைமேல் - தினைப் புனத்தில் வாசம் செய்த, சிறுமிக்கு - வள்ளிநாயகிக்கு, மரபு - தமது மரபின் வழிகளை, உரைத்து - எடுத்து உரைத்து, நின்றோன் - குறையிரந்து நின்றவனும், சிலை - வில்லை உடைய, வேட்டுவன் - வேடத் திருமேனியை உடைய கண்ணப்ப நாயனார், எச்சில் - ஊன் முதலியவற்றை முன் ருசி பார்த்து நிவேதித்த எச்சிலை, து - உவப்புடனே உண்டவராகிய, மிக்கும் - மேன்மையாக, அரவு - பாம்பு ஆபரணத்தை, அணி - தரித்த, முடியான் - முடியை உடைய பரமசிவனது, மகன் - மைந்தனுமாகிய குமாரக் கடவுளினது, சீறடிக்கு - சிறிய திருவடியைக் கருதிக் கொண்டே.

இன்றைக்கு அன்றைக்கு என நாடாது இடுக ---

     அறிஞர் அறமொழியைக் கேட்பதனாலும், அறிவு நூல்களைப் படிப்பதாலும் அறஞ்செய்ய வேண்டுமென்ற எண்ணம் உண்டாகும். அங்ஙனம் உண்டாயின் உடனே அறத்தைச் செய்யவேண்டும். இன்று புரிவோம் நாளை புரிவோம் என்றிருத்தல் கூடாது, ஏனெனில் மறுகணம் இருப்போம் என்பது என்ன நிச்சயம். யாம் இளையோம் முதுமையில் அறம் புரிவோ மென்னில், இளமையில் அழிதலும் கண்கூடு. முற்றிய கனி உதிர்வதோடு, முதிராத பிஞ்சுகளும் உதிர்ந்து வீழ்வதைக் காண்கிறோம். ஆதலால், யாக்கை நிலையாமையை யஉணர்ந்து, அறம்புரிய வேண்டும் என்ற எண்ணம் உண்டானபோதே, விரைந்து தருமஞ்செய் என்றனர்.

அன்று அறிவாம் என்னாது அறஞ்செய்க, மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.         --- திருக்குறள்.

இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றம்என்று --- எண்ணி
ஒருவுமின் தீயவை, ஒல்லும் வகையான்
மருவுமின் மாண்டார் அறம்                   --- நாலடியார்.

மற்றுஅறிவாம் நல்வினை, யாம்இளையம் என்னாது
கைத்துஉண்டாம் போதே கரவாது அறஞ்செய்மின்,
முற்றி இருந்த கனிஒழியத் தீ வளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு.                    --- நாலடியார்.


டுடுடுடுடு....என அகலும் நெறிகருதி நெஞ்சத்து அஞ்சிப் பகிராதோ ---

     ஆன்றோர் அறமொழிகள், அறிவு நூல்கள் இவைகளைக் கொண்டு யாக்கை, இளமை, செல்வ நிலையாமைகளை உணரவில்லை எனின், தினந்தோறும் இறந்தவரைப் பறையொலியுடன் கொண்டு போவதைக் கண்டாவது நெஞ்சம் அஞ்ச வேண்டாமோ?

     இறந்தோரை அலங்கரித்து அழுகை ஒலியுடன் ஈமதேசத்திற்குக் கொண்டுபோகப் போகிறோமல்லவா? அதைக் கண்டும் ஆசையில் அழுந்தலாமா?

      நாம் நெடு நாளைக்கிருப்போம் என்று எண்ணுவது மதியீனம்? சற்று சிந்தியுங்கள். நன்கு எண்ணிப் பார்த்து மனம் பதைக்கவேண்டும்.

     “அந்தோ! இதுகாறும் அறஞ்செய்யாது ஒழிந்தோமே? நாமும் இப்படி ஒரு நாள் இறப்போம்.  இத்துணைச் செல்வத்தையும் விட்டுப்போய் விடுவோம். நமக்கு இப்போது இருக்கிற பெயரை ஒழித்து, பிணம் என்ற பெயரிட்டு, பறை ஒலியுடன் கொண்டுபோய்த் தீக்கு இரையாக்குவர்? அதற்குள் விரைந்து தருமம் செய்து இகபர சௌபாக்கியத்தைப் பெற வேண்டும் என்று” நினைத்து நினைத்து நெஞ்சம் அஞ்சிப் பகிர்ந்து அளிக்கவேண்டும்.

குமுதபதி - பரதகுரு ---

சிவபெருமானது திரு நடனத்தின் பெருமை.

திரளுமணிதரள................எறிதிரை ---

     செந்திலம்பதி கடற்கரையில் கண்கவருங் கவினுடையதாகத் திகழ்வதால், ஆங்குள்ள தென்னை மரங்கள் மீது தங்கிப் புரளுமாறு கடலலைகள் மிக உயர்ந்து எழுந்து முத்துக்களைக் கொழிக்கின்றன.

ஒருகோடி முத்தம்
 தெள்ளிக் கொழிக்கும் கடல் செந்தில் மேவிய சேவகனே”!
                                                                               --- கந்தர்அலங்காரம்.

கருத்துரை

         முருகா! பகுத்து உண்டு பல்உயிர் ஓம்பி, உய்ய அருள்.

No comments:

Post a Comment

பொது --- 1096. இருவினைகள் ஈட்டும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இருவினைகள் ஈட்டும் (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதனன தாத்த தனதனன தாத்த      தனதனன தாத்த ...... தன...