அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அம்பொத்த விழி
(திருச்செந்தூர்)
அகப் பொருள் - நல்
தாய் இரங்கல்
முருகா, எனது பெண்ணை
நீர் தழுவி இன்புறலாம் அல்லவா?
தந்தத்
தனனத் தந்தத் தனனத்
தந்தத் தனனத் ...... தனதானா
அம்பொத்
தவிழித் தந்தக் கலகத்
தஞ்சிக் கமலக் ...... கணையாலே
அன்றிற்
குமனற் றென்றற் குமிளைத்
தந்திப் பொழுதிற் ...... பிறையாலே
எம்பொற்
கொடிமற் றுன்பக் கலனற்
றின்பக் கலவித் ...... துயரானாள்
என்பெற்
றுலகிற் பெண்பெற் றவருக்
கின்பப் புலியுற் ...... றிடலாமோ
கொம்புக்
கரிபட் டஞ்சப் பதுமக்
கொங்கைக் குறவிக் ...... கினியோனே
கொன்றைச்
சடையற் கொன்றைத் தெரியக்
கொஞ்சித் தமிழைப் ...... பகர்வோனே
செம்பொற்
சிகரப் பைம்பொற் கிரியைச்
சிந்தக் கறுவிப் ...... பொரும்வேலா
செஞ்சொற்
புலவர்க் கன்புற் றதிருச்
செந்திற் குமரப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
அம்பு
ஒத்த விழித் தந்தக் கலகத்து,
அஞ்சிக் கமலக் ...... கணையாலே,
அன்றிற்கும், அனல் தென்றற்கும் இளைத்து,
அந்திப் பொழுதில் ...... பிறையாலே,
எம்பொன்
கொடிமன் துன்பக் கலன் அற்று
இன்பக் கலவித் ...... துயர் ஆனாள்.
என்பெற்று
உலகில், பெண் பெற்றவருக்கு,
இன்பப் புலி உற் ...... றிடலாமோ?
கொம்புக்
கரிபட்டு அஞ்சப் பதுமக்
கொங்கைக் குறவிக்கு ...... இனியோனே!
கொன்றைச்
சடையற்கு ஒன்றைத் தெரியக்
கொஞ்சித் தமிழைப் ...... பகர்வோனே!
செம்பொன்
சிகரப் பைம்பொன் கிரியைச்
சிந்தக் கறுவிப் ...... பொரும்வேலா!
செஞ்சொல்
புலவர்க்கு அன்பு உற்ற, திருச்
செந்தில் குமரப் ...... பெருமாளே.
பதவுரை
கொம்புக் கரி பட்டு
அஞ்சு
--- தந்தங்களையுடைய யானை எதிர்ப் பட்டதைக் கண்டு அஞ்சிய
அப் பதுமக் கொங்கைக் குறவிக்கு இனியோனே ---
தாமரை மொட்டு போன்றுள்ள தனங்களையுடைய குறமகளாகிய வள்ளியம்மையாருக்கு இனிமையானவரே!
கொன்றை சடையர்க்கு --- கொன்றை மலரணிந்த
சடைமுடியை உடைய சிவபெருமானுக்கு,
ஒன்றைத் தெரிய --- ஒப்பற்ற
மொழியாகிய பிரணவ மந்திரத்தின் உட்பொருள் தெரியுமாறு,
கொஞ்சித் தமிழைப்
பகர்வோனே
--- மழலை மொழியுடன் கொஞ்சித் தமிழ்மொழியால் எடுத்து உபதேசித்தவரே!
செம்பொன் சிகர
பைம்பொன் கிரியை --- பொன்னாலாகிய கொடுமுடியுடைய பசும்பொன் போன்ற நிறமுடைய
கிரவுஞ்ச மலையை,
சிந்தக் கறுவிப்
பொரும் வேலா
--- அது துகள்படுமாறு சினந்து போர் புரிந்து வேலை விடுத்தவரே!
செஞ்சொல் புலவர்க்கு
அன்புற்ற திருசெந்தில் குமர --- செந்தமிழ் பேசும் சிறந்த
புலவர்கட்கு அன்பு செய்கின்ற திருச்செந்தூரில்
எழுந்தருளியுள்ள குமாரக் கடவுளே!
பெருமாளே --- பெருமையின்
மிகுந்தவரே!
அம்பு ஒத்த விழி தந்த
கலகத்து அஞ்சிக் கமலக் கணையாலே --- கணைபோன்ற கூர்மையுடைய கண்களையுடைய
பெண்கள் பேசுகின்ற அவர் மொழிகளால் பயந்தும், மன்மதனுடைய, தாமரைப் பூங்கணையாலும்,
அன்றிற்கும் --- அன்றில் பறவைக்கும்,
அனல் தென்றற்கும் --- நெருப்பு
வீசுவதுபோல் துன்புறுத்தும் தென்றல் காற்றுக்கும்
இளைத்து --- இளைப்புற்று,
அந்திப் பொழுதில் பிறையாலே --- மாலைப்பொழுதில்
தோன்றும் சந்திரனாலும்,
எம் பொன் கொடி மன் துன்ப கலன் அற்று ---
எமது பொற்கொடிப் போன்ற புதல்வி பெரிய
துன்பத்தைத்தரும் ஆபரணங்களை நீக்கி
இன்பக் கலவித் துயர் ஆனாள் --- இன்பத்தைத்
தரும் கலவியைக் கருதி பெருந்துன்பத்தை அடைந்தாள்,
பெண் பெற்றவருக்கு உலகில் என் பெற்று ---
பெண்ணைப் பெற்றவர்க்கு உலகத்திலே என்னதான்
பெற்றாலும் என்ன பயன்?
இன்பப் புலி உற்றிடலாமோ --- இன்பத்துடன்
தேவரீர் அவளைத் தழுவி அணைத்திடலாமோ?
பொழிப்புரை
தந்தங்களை உடைய யானை எதிர்ப்பட்டதைக்
கண்டு அஞ்சிய தாமரை அரும்பு போன்ற தனங்களை உடைய வள்ளியம்மையார்க்கு இனிய கணவரே!
கொன்றை மலரணிந்த சிவமூர்த்திக்கு, ஒரு மொழியாகிய ஓங்காரத்தின் உட்பொருளை, மழலை மொழியால் கொஞ்சித் தமிழ்ச்
சொற்களால் விரித்து உரைத்து உபதேசித்த குருநாதரே!
செய்ய தமிழ் மொழியில் வல்ல புலவர்கட்கு அன்பு
செய்யும் திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள குமாரக் கடவுளே!
பெருமிதம் உடையவரே!
கணைபோன்ற கண்களையுடைய பெண்கள் கூறும் வசை மொழியாகிய
அலரினால் அஞ்சியும், மதனன்விடும் தாமரைப்
பூங்கணையாலும், அன்றில் என்ற
பறவைக்கும், அனல் போல்
வெப்பமாகின்ற தென்றல் காற்றுக்கும் இளைப்புற்றும், மாலையில் தோன்றும் சந்திரனால்
துன்புற்றும், எனது பொற்கொடி மிக்க
துன்பத்தைத்தரும் அணிகலங்களைக் கழற்றி யெறிந்தும் இன்பத்தைத் தரும் கலவியைக்
கருதிக் கவல்கின்றாள்; பெண் பெற்றவர்கட்கு
உலகில் என் பெற்று என்ன பயன்? இன்பத்துடன் அவளைக்
கலந்து அருள் புரிவீர்.
விரிவுரை
இப்பாடல் "நல்தாய் இரங்கல்"
என்ற துறையாக எழுந்தது. பழங்காலத்தில் பண்டைத் தமிழர்களிடையே களவுமணம் நிகழ்ந்த
பின்னர் கற்பு மணம் நிகழும். தன் மகள் ஒரு தலைவனைக் காதலித்து, அதனால் எய்திய காதல் நோயால் தென்றலையும்
அன்றிலையும் திங்களையும் கண்டு வருந்தி வாடி நின்ற போது, புதல்வியின் நிலைமைக்குத் தாய்
வருந்தும் தன்மையில் வருவது “நற்றாயிரங்கல்” என்ற துறை.
அம்பொத்த
விழி ---
அம்பொத்த விழி என்பது அன்மொழித் தொகையாக
விழியையுடைய மகளிரைக் குறித்தது. பெண்களுடைய கண்கள் மிகவும் கூர்மையாக வாள்
போலவும், கணைபோலவும்
இருக்கும். எதிர்ப்பட்டார் நெஞ்சத்தை வெட்டிப் பிளக்கும். ஒரு பெண் ஒரு காதலனைக்
காதலித்திருக்கும் போது உள்ளதை யறியாத ஊர்ப் பெண்கள் பலவாறு அப்பெண்ணைப்பற்றிப்
பேசித் தூற்றுவர். அதற்கு அலர் என்று பேர். அம்மொழிக் காதலியின் உள்ளத்தை
வருத்தும்.
அம்பொத்த விழி என்ற சொற்றொடர் இயல்பாக
வரவேண்டியது “அம்பொத்த விழித்” என்று சந்தத்தைக் கருதி வல்லொற்று வந்தது.
தந்தக்
கலகத் தஞ்சி ---
முன்னே கூறியவாறு ஊரவர் கூறும் பழியுரைக்குத்
தலைவி அஞ்சுவாள்.
கமலக்
கணையாலே ---
மன்மதனுக்கு ஐம்பெருங் கணைகள். தாமரைப்பூ, மாம்பூ, முல்லைப்பூ, அசோகம்பூ, நீலோற்பலப்பூ என்ற மலர்கள்.
தாமரைப்பூ
--- நினைப்பூட்டும்;
மாம்பூ
--- பசலை நிறந்தரும்;
அசோகம்பூ
--- உணர்வை நீக்கும்;
முல்லைப்பூ
--- படுக்கச் செய்யும்;
நீலோற்பலப்பூ
--- கொல்லும்.
தலைவனை
நாடிய தலைவிக்கு அந் நினைவை அதிகப்படுத்துவது மன்மதன் விடுகின்ற தாமரைப் பூங்கணை.
நினைக்கும்
அரவிந்தம், நீள்பசலை மாம்பூ,
அனைத்துணர்வு
நீக்கும் அசோகம்,-வனத்திலுறு
முல்லை
இடைகாட்டும், மாதே முழுநீலம்
கொல்லுமதன்
அம்பின் குணம் --- இரத்தினச்
சுருக்கம்.
அன்றிற்கும்
---
பறவைகளில் அன்றில் சிறந்தது. ஆண் பறவையும்
பெண் பறவையும் ஒருபோதும் பிரியாது வாழும் இயல்புடையவை. பிரிந்தால் உயிர்த்
துறந்துவிடும். அதனால் பிரிவுத் துன்பத்திற்கு உவமையாக அன்றிலை உரைப்பர். அவைகள்
ஒன்றி வாழ்வதைக் காணும் தலைவி, தான் தலைவனைப் பிரிந்திருக்கும்
தன்மை குறித்து வருந்துவள்.
அனல்
தென்றல் ---
பிரிந்து உறையும் தலைவன் தலைவியர்க்குத்
தென்றல் மிகுந்த வெப்பத்தைத் தரும். எல்லோருக்கும் இனிமையான தென்றல் காற்று
பிரிந்த காதலன் காதலிக்குப் பெருந்துன்பத்தைத் தரும்.
அந்திப்
பொழுதில் பிறையாலே ---
மாலையில் தோன்றும் மதி மற்றவர்க்கு
மகிழ்ச்சியைத் தரும். காதலர்க்கு வேதனையைத் தரும்.
“ஏ சந்திரனே! நீ
கொடியவனல்லவே! யாரையுங் கொன்றதில்லையே? நீ
அமிர்தத்துடன் பாற்கடலில் பிறந்தனையே? அதுவும்
ஒரு பெண்ணுடன் பிறந்தனையே? இத்தகைய நலமுடைய நீ
என்னை வருத்திச் சுடலாமோ?” என்று அன்னை ஜானகி
வருந்துகின்றாள்.
கொடியை
அல்லைநீ, யாரையும் கொல்கிலாய்
வடுவில்
இன்னமு தத்தொடும் வந்தனை,
பிடியின்
மென்னடைப் பெண்ணொடுஎன் றால்,எனைச்
சுடுதியோ
கடல் தோன்றிய திங்களே.
என்
பொற் கொடிமற்றுன்பக் கலனற்று ---
என்னடைய பொற்கொடிப் போன்ற புதல்வி பெரிய
துன்பத்தைத்தரும் அணிகலன்களை யகற்றி விட்டாள். கணவனைப் பிரிந்திருக்கின்றபோது
அணிகலன்கள் சுமையாகவும் வேதனையாகவும் இருக்கும்.
இன்பக்
கலவித் துயரானாள் ---
“முருகா! உன்னை மருவி மகிழும்
பேரின்பமாகிய பெரு வாழ்வு கிட்டவில்லையே என்ற பெருந்துயரால் என்மகள்
வாடுகின்றாள்.”
என்
பெற்றுலகில் பெண் பெற்றவருக்கு ---
பெண்ணைப் பெற்றவர்கட்கு உலகிலே என்ன என்ன
நலன்களைப் பெற்றாலும், அவைகளால் மகிழ்ச்சி
வரமாட்டா. நல்ல மணவாளன் தன் புதல்விக்கு எய்தினாலன்றி உள்ளம் உவகையுறாது.
இன்பப் புலி உற்றிடலாமோ ---
"புல்லி" என்ற சொல் "புலி"
என வந்தது. இன்பத்துடன் என் புதல்வியைத் தருவீர்; அவ்வாறு பொருந்தலாமோ?
கொம்புக்கரி
பட்டு அஞ்சு அப் பதுமக் கொங்கைக் குறவிக்கு இனியோனே ---
தந்தங்களையுடைய யானை வடிவுடன் விநாயகர் வந்து
நின்றவுடன் வள்ளியம்மை அஞ்சி முருகனைத் தஞ்சம் புகுந்தனர் என்ற வரலாறு உலகறிந்தது.
பிரணவ தெரிசனம் பெற்றவுடன் பாசபந்தம் நீங்கிய ஆன்மா சிவத்தை மருவியது என்பது அதன்
உட்கிடை.
கொன்றைச்
சடையர் ---
கொன்றை ஐந்து இதழ்களுடைய மலர். அது திரு
ஐந்தெழுத்தைக் குறிக்கும். பஞ்சாக்கரத்திற்குரிய பரம்பொருள் சிவபெருமான். கொன்றை
மலர் அவர் ஒருவரே அணிவதற்கு உரியது. சடையர் என்றமையால் அவர் விருப்பு வெறுப்பு
இல்லாதவர் என்பதையும், தவக்கோலமுடையார்
என்பதையும் உணர்தல் வேண்டும். “பின்றாழ் சடையான்” என்கின்றார் அப்பர் பெருமான்.
வணங்கத்தக்கவர் சடைமுடியுடைய சிவபெருமான் என வுணர்க.
ஒன்றைத்
தெரியக் கொஞ்சித் தமிழைப் பகர்வோனே ---
ஒப்பற்ற ஒரு மொழியாகிய ஓங்கார மந்திரத்தின்
உட்பொருளைக் குமாரக்கடவுள் தன் தந்தையாருக்கு மழலை மொழியால் கொஞ்சிக் கொஞ்சிச்
செந்தமிழ் மொழியால் விரிவுரை செய்து விளக்கியருளினார். எனவே, திருக்கயிலையில் சிவனும் முருகனும்
பேசிக்கொள்ளும் மொழி தமிழ் என்பது இதனால் விளங்குகின்றது. தமிழால் என்ற சொல்
இரண்டாம் வேற்றுமை பெற்றது. இதனால் தமிழின் பெருமை அளவிடற்கரியது. தெய்வத் தமிழ்
தீஞ்சுவை யுடையது. அதன் மாண்பு மிகப்பெரியது. அதன் இனிமை கல்லையுங் கரைக்கும்.
செம்பொற்
சிகரப் பைம் பொற்கிரி ---
கிரவுஞ்சன் என்ற அசுரன் பொன் மலைபோல்
மாயையால் நின்று தீமைபுரிந்தான். அம்மலையை ஆறுமுகப்பெருமான் வேலினால் அழித்தனர்.
“பொன் சிலம்பு புலம்ப வரும் எங்கோன்” என்று அலங்காரத்திலும் கூறுகின்றார்.
செஞ்சொல்
புலவர்க்கு அன்புற்ற திருச்செந்தில் ---
பகழிக்கூத்தர் முதலிய பல புலவர்களை ஆதரித்த
தலம் செந்திலம்பதி யாகும். தமிழ்மணங் கமழ்வது; தமிழ்த் தெய்வம் தனியரசு புரிவது. திருச்செந்தூரின்
பெருமையைப் புலவரே அறிவர்.
கருத்துரை
வள்ளி மணவாளரே! சிவகுருவே! மலைபிளந்த
வேலவரே! செந்திலாண்டவரே! தேவரீரை நினைந்து வரும் என் புதல்வியை மணந்து
அருள்புரிவீர்.
No comments:
Post a Comment