திருச்செந்தூர் - 0025. அருணமணி மேவு


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

அருணமணி மேவு (திருச்செந்தூர்)

முருகன் திருவடிகளைப் பாடி வா, உள்ளத்தில் இனிய சொற்களைத் தந்து அருள வேண்டல்.


தனதனன தான தானன தனதனன தான தானன
     தனதனன தான தானன தந்தத் தந்தத் ...... தனதான


அருணமணி மேவு பூஷித ம்ருகமதப டீர லேபன
     அபிநவவி சால பூரண அம்பொற் கும்பத் ...... தனமோதி

அளிகுலவு மாதர் லீலையின் முழுகியபி ஷேக மீதென
     அறவுமுற வாடி நீடிய அங்கைக் கொங்கைக் ...... கிதமாகி

இருணிறைய மோதி மாலிகை சருவியுற வான வேளையி
     லிழைகலைய மாத ரார்வழி யின்புற் றன்புற் ...... றழியாநீள்

இரவுபகல் மோக னாகியெ படியில்மடி யாமல் யானுமுன்
இணையடிகள் பாடி வாழஎ னெஞ்சிற் செஞ்சொற் ...... றருவாயே

தருணமணி யாட ராவணி குடிலசடி லாதி யோதிய
     சதுர்மறையி னாதி யாகிய சங்கத் துங்கக் ...... குழையாளர்

தருமுருக மேக சாயலர் தமரமக ராழி சூழ்புவி
     தனைமுழுதும் வாரி யேயமு துண்டிட் டண்டர்க் ...... கருள்கூரும்

செருமுதலி மேவு மாவலி யதிமதக போல மாமலை
     தெளிவினுடன் மூல மேயென முந்தச் சிந்தித் ......தருள்மாயன்

திருமருக சூரன் மார்பொடு சிலையுருவ வேலை யேவிய
     ஜெயசரவ ணாம னோகர செந்திற் கந்தப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


அருணமணி மேவு பூஷித, ம்ருகமத படீர லேபன,
     அபிநவ விசால, பூரண அம்பொன் கும்பத் ...... தனம் மோதி,

அளி குலவு மாதர் லீலையின் முழுகி அபிஷேகம் ஈதுஎன
     அறவும் உறவாடி நீடிய அங்கைக் கொங்கைக்கு .....இதமாகி,

இருள் நிறை அம்ஓதி மாலிகை சருவி உறவான வேளையில்,
     இழை கலைய, மாதரார் வழி இன்புற்று அன்புற்று..... அழியாநீள்

இரவுபகல் மோகன் ஆகியெ, படியில் மடியாமல், யானும்உன்
இணைஅடிகள் பாடி வாழ என் நெஞ்சில் செஞ்சொல் ...... தருவாயே.

தருண மணி ஆ, அராஅணி குடில சடில ஆதி ஓதிய
     சதுர்மறையின் ஆதி ஆகிய சங்கத் துங்கக் ...... குழையாளர்

தருமுருக! மேக சாயலர் தமர மகர ஆழி சூழ்புவி
     தனை,முழுதும் வாரியே அமுது உண்டிட்டு அண்டர்க்கு ...... அருள்கூரும்

செருமுதலி, மேவு மாவலி, அதிமத கபோல மாமலை
     தெளிவினுடன் மூலமே என முந்தச் சிந்தித்து ......அருள்மாயன்

திருமருக! சூரன் மார்பொடு சிலைஉருவ வேலை யேவிய
     ஜெயசரவணா! மனோகர! செந்தில் கந்தப் ...... பெருமாளே.


பதவுரை
  
     தருண --- இளமையையும்,

     மணி --- இரத்தின மணிகளையும்,

     ஆடு --- ஆடலையும் உடைய,

     அரா அணி --- பாம்பையணிந்துள்ள,

     குடில சடில ஆதி --- வளைந்த சடையையுடைய ஆதிப் பொருளும்,

     ஓதிய சதுர் மறையின் ஆதியாகிய --- ஓதியுள்ள நான்கு வேதங்களின் முதற்பொருளும்,

     சங்க துங்க குழையாளர் --- தூய சங்கினாலாகிய குழையை அணிந்தவருமாகிய சிவபெருமான்,

     தரு முருக --- தந்த முருகக் கடவுளே!

     மேக சாயலர் --- நீலமேக நிறத்தினரும்,

     தமர --- ஒலியுடன் கூடிய,

     மகர ஆழி சூழ் புவி தனை முழுதும் --- மகர மீன்கள் வாழ்கின்ற கடல் சூழ்ந்த மண்ணுலகெல்லாம்,

     வாரியே அமுது உண்டிட்டு --- எடுத்து அமுதம் போல் உண்டவரும்,

     அண்டர்க்கு அருள் கூறும் --- தேவர்கட்கு அருள் மிகுதியாகப் புரிபவரும்,

     செரு முதலி --- போருக்குத் தலைவரும்,

     மேவு --- விரும்பிய,

     மாவலி --- பெரிய வலிமையையும்,

     அதி மத கபோல --- அதிக மதத்தைக் கொண்ட கன்னத்தையும் கொண்ட,

     மாமலை --- பெரிய மலை பொன்ற கஜேந்திர யானை,

     தெளிவினுடன் --- தெளிந்த அறிவோடு,

     மூலமே என --- ஆதிமூலப் பொருளே! என்று அழைக்க,

     முந்த சிந்தித்து அருள் மாயன் --- முற்பட்டு கருணையுடன் நினைத்து அருள் புரிந்த திருமாலின்

     திருமருக --- திருமருகனாரே,

     சூரன் மார்பொடு --- சூரனுடைய மார்பும்,

     சிலை உருவ --- கிரௌஞ்ச மலையும் உருவுமாறு,

     வேலை ஏவிய --- வேற்படையை ஏவிய,

     ஜெய சரவணா --- வெற்றியையுடைய சரவணக் கடவுளே!

     மனோகர --- மனத்திற்கு இன்பம் தருபவரே!

     செந்தில் கந்த --- திருச்செந்தூரில் வாழுங் கடவுளே!

     பெருமாளே --- பெருமையின் மிகுந்தவரே!

     அருணமணி மேவு பூஷித --- சிவந்த இரத்தினமணிகளால் அலங்கரிக்கப்பட்டதாய்,

     ம்ருகமத --- கஸ்தூரியும்,

     படீர --- சந்தனமும் சேர்ந்த,

     லேபன --- கலவை அணிந்ததாய்,

     அபிநவ --- புதுமை வாய்ந்ததாய்,

     விசால --- அகன்றதும்,

     பூரண --- நிறைந்ததும்,

     அம்பொன் கும்ப --- அழகிய பொற்குடம் போன்றதுமாகிய,

     தனம் மோதி --- தனங்களில் மோதப்பட்டு,

     அளி குலவு மாதர் லீலையின் --- ஆசையுடன் குலாவுகின்ற பொதுமாதர்களின் விளையாட்டில்,

     அபிஷேகம் ஈது என முழுகி --- திருமஞ்சனம் இதுவே என்று முழுகி,

     அறவும் உறவு ஆடி --- மிகவும் அவர்களுடன் உறவு கொண்டு,

     நீடிய அங்கை கொங்கைக்கு --- நீண்ட அழகிய கைக்கும் தனத்துக்கும்,

     இதம் ஆகி --- இன்பம் பூண்டவனாய்,

     இருள் நிறை ஆம் ஓதி --- இருள் நிறைந்த அழகிய கூந்தலின்,

     மாலிகை --- பூமாலை,

     சருவி உறவான வேளையில் --- கொஞ்சி உறவு கொள்ளும் வேளையில்,

     இழை கலைய --- ஆபரணங்களுடன் கலைய,

     மாதரார் வழி --- பெண்களிடத்தே,

     இன்புற்று அன்புற்று அழியா --- இன்பத்தை யடைந்தும் அன்புகொண்டும் அழிகின்றவனாகி,

     நீள் இரவு பகல் மோகன் ஆகியே --- நீண்ட இரவும் பகலும் மோகங் கொண்டவனாகி,

     படியில் மடியாமல் --- இந்த உலகில் வீணே மாண்டு போகாமல்,

     யானும் உன் இணையடிகள் பாடி வாழ --- அடியேனும் உமது இருதிருவடிகளைப் பாடி வாழுமாறு,

     என் நெஞ்சில் செஞ்சொல் --- எனது உள்ளத்தில் செவ்விய சொற்களை,

     தருவாயே --- தந்தருள்வீர்.


பொழிப்புரை

         இளமையையும் இரத்தினத்தையும் ஆடுகின்ற தன்மையையும் உடைய பாம்பையணிந்த வளைந்த சடையையுடைய முதல்வரும், ஓதிய நான்கு வேதங்களின் முதற்பொருளானவரும், சங்க வெண்குழை அணிந்தவருமாகிய சிவபெருமான் பெற்ற முருகக் கடவுளே!

         நீலமேக வண்ணரும், மகர மீன்கள் வாழ்கின்ற ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த உலக முழுவதும் வாரி யுண்டவரும், அமரர்க்கு அருள்புரிகின்றவரும், போருக்கு முதல்வரும், விரும்பிய பெருவலிமையும் நிறைந்த மதம் பொழியுங் கன்னமும் உடைய மலைபோன்ற யானையாகிய கஜேந்திரன், தெளிந்த அறிவுடன் ஆதிமூலமே என்றழைத்தவுடன், முற்பட்டு கருணையுடன் நினைத்து வந்து அருள் புரிந்தவருமாகிய திருமாலின் திருமருகரே!

         சூரனுடைய மார்பும் கிரவுஞ்சமலையும் தொளைபடுமாறு வேலை விடுத்தருளிய வெற்றிக் கடவுளே!

         சரவணபவரே!

         மனத்திற்கு மகிழ்ச்சியைத் தருபவரே!

         திருச்செந்தூரில் எழுந்தருளிய கந்தவேளே!

         பெருமிதம் உடையவரே!

         சிவந்த இரத்தினமணிகளால் அலங்கரிக்கப்பட்டதும், கஸ்தூரி, சந்தனம் இவைகளின் கலவை பூசினதும், புதுமை வாய்ந்ததும், அகன்றதும், நிறைந்ததுமான அழகியப் பொற்குடம் போன்ற தனங்களின் மீது மோதி, ஆசையோடு குலாவுகின்ற அம் மாதர்களது விளையாட்டில் இதுவே திருமஞ்சனம் என்று முழுகி, அவர்களுடன் மிகவும் கலந்து உறவாடி, அவர்களுடைய அங்கைக்கும் கொங்கைக்கும் இன்பம் பூண்டவனாய், இருள் நிறைந்த அழகிய கூந்தலில் உள்ள மாலை, கொஞ்சிக் குலவி உறவு கொள்ளும் வேளையில் ஆபரணங்களுடன் கலைய, மாதர்களின் வசப்பட்டும் இன்புற்று அன்புற்றும் நீண்ட நேரம் இரவும் பகலும் மோகம் கொண்டவனாய் இப்பூமியில் வீணே இறந்து போகாமல், அடியேனும் தேவரீருடைய இரண்டு திருவடிகளைப் பாடி வாழுமாறு எளியேனுடைய உள்ளத்தில் இனிய சொற்களைத் தந்து ஆட்கொள்ளுவீர்.


விரிவுரை

அருணமணி மேவு பூஷித ---

விலைமகளிர் தம்மை நாடிவரும் ஆடவரை மயக்கும் பொருட்டு சிவந்த இரத்தினமணிகள் பதித்த ஆபரணங்களை மார்பில் அணிந்திருப்பார்கள்.

ம்ருகமத படீர லேபன ---

கஸ்தூரி சந்தனம் முதலியவை கலந்துள்ள கலவைச் சாந்தினை பூசிக் கொண்டிருப்பர்.

அபிநவ விசால பூரண அம்பொற் கும்பத் தனம் ---

அப் பொதுமகளிரது தனங்கள் புதுமையும் விசாலமும் நிறைவும் உடையதாய் தங்கக் குடம் போன்று இலகி இளைஞரை மயக்கும்.

அளி குலவு மாதர் லீலையின் ........அறவும் உறவாடி ---

ஆசையுடன் குலாவுகின்ற அப் பொது மாதர்களின் சரச விளையாட்டில் இதுவே பெரிய அபிஷேகம் என்று கருதி அதிலேயே விடர்கள் முழுகி, இரவு பகலாக உறவாடி யுழலுவர்.

இருள் நிறை அம் ஓதி ---

இருள் நிறை அம் ஓதி. ஓதி-பெண்களின் கூந்தல்; இருண்ட கரிய குழல்.

மோகன் ஆகியெ படியில் மடியாமல் ---

மகளிர்மீது மோகங்கொண்டு சதா அந்த இருள் வழியுழன்று அடியேன் இவ்வுலகில் இறந்து வீணாகக் கூடாது.

இணையடிகள் பாடி வாழ ---

முருகா! உனது திருவடிகளைப் புகழ்ந்துபாடி இன்புற்று வாழவேண்டும். `பாடும் பணியே பணியா அருள்வாய்’. நீ பாடுவார்க்கு எல்லா நலன்களையும் அருளுகின்றவன். ஆதலின் உன்னையே பாடி உய்வு பெறுவேன்.

என் நெஞ்சில் செஞ்சொல் தருவாயே ---

சொல் என்பது சிறந்த செல்வம். ஏனைய செல்வங்கள் எல்லாவற்றினுந் தலையாயச் செல்வம். அதனைச் சிலரே பெற்றனர். பொற் செல்வம் அழியும்; சொற் செல்வம் அழியாது. அநுமனைக் கண்டு இராமர் “யார் கொல் இச்சொல்லின் செல்வன்” என்று வியந்து கூறுகின்றார். அதனைக் கூறிய கம்பரும் ஒரு சொல்லின் செல்வர். சேக்கிழார் பெருமான் பெரிய சொற் செல்வர்.

         சொல்லில் இனிமையும் தனிமையும் மிகுதியாய பொழுது அது செஞ்சொலாகின்றது. தமிழுக்கே உரிய தனிப் பெருமை செஞ்சொல். அருணகிரியார் செந்தில் திருப்புகழில் நான்கு திசைகளைப் பற்றிக் கூற வருகின்றார். ஏனைய திசைகளை மேல்திசை கீழ்த்திசை வடதிசை என்று கூறினார். தென்திசையை மட்டும் பொதுவாகத் தென்திசை என்று கூறாமல் “செஞ்சொல் மாதிசை” என்று கூறினார். பெருமை மிகுந்த திசை என்றும் குறிப்பிடுவான் வேண்டி மாதிசை என்றார். செஞ்சொல் என்றால் தமிழ் என்றே பொருள். “செஞ்சொல் புனைமாலை சிறந்திட” என்கின்றார் கந்தர் அநுபூதியில்.

இத்தகைய சிறந்த செஞ்சொற்றமிழை அடியேனுக்கு அருள்புரிவீர் என்று இப்பாடலில் சுவாமிகள் வேண்டுகின்றார். எல்லோரும் வெஞ்சொல்லை விடுத்து செஞ்சொல்லை யடுத்து நலம் பெறுதல் வேண்டும்.

 
தருண மணி ஆடு அரா அணி ---

சிவபெருமான் தலை மீதுள்ள நாகம் இளமையானது; இரத்தின மணியை உடையது; அழகியது. அது பெருமான் முடியில் இனிது படமெடுத்து ஆடுகின்றது. அவரும் ஆட சடைமீது அரவமும் ஆடுகின்றது.

குடில சடிலாதி ---

இறைவன் ஆடுவதனால் சடையும் வளைவாக அசைந்து ஆடுகின்றது. அப்பரமபதியே எப்பொருட்குந் தலைவர் ஆதலால் ஆதி என்றனர். திருவள்ளுவரும் “ஆதி பகவன்” என்பார்.

ஓதிய சதுர்மறையின் ஆதி ---

   அவரே வேத முதல்வருமாவார். வேதங்கள் நான்கும் அப் பரமனையே பரம்பொருள் என்று வழுத்துகின்றன.
  
சங்கத் துங்கக் குழையாளர் ---

சிவபெருமான் தமது திருச் செவியில் பரிசுத்தமான சங்கினாலாய குழையை யணிந்திருக்கின்றார். “சங்கவெண் குழையோர் காதிற் கோமாற்கே” என்று திருநாவுக்கரசு நாயனார் கூறுகின்றார்.

மேக சாயலர் ---

திருமால் மேகநிறமுடையவர், இது தட்பத்தின் சொரூபம் என்பதை உணர்த்துகின்றது. “மஞ்சு நிறம் புனைபவன்” என்று திருப்பரங்குன்றத் திருப்புகழிலும் கூறுகின்றனர். “மஞ்செனத் திரண்ட கோல மேனிய” என்கின்றார் கம்ப நாடரும்.

தமர மகர ஆழி சூழ் புவிதனை முழுதும் வாரியே அமுது உண்டு ---

ஒலியையும் மகர மீனையும் தன்னகத்தே கொண்டது கடல். அக்கடலால் சூழப்பட்டது உலகம். இவ்வுலக முழுவதும் ஒரு கவளமாக எடுத்துத் திருமால் உண்டார். உலகமெல்லாம் பிரளய காலத்தில் அவர் திருவுதரத்துள் ஒடுங்குகின்றன.

அண்டர்க்கு அருள்கூரும் ---

நற்குண சீலர்களாகிய தேவர்கட்குத் திருமால் மிகுந்த அருள் புரிந்து ஆட்கொள்கின்றனர்; தேவசகாயர். இனி அண்டர் என்பதற்கு யாதவர் எனப் பொருள் கொண்டு யாதவர்க்கு அருள் புரிந்தார் எனினும் பொருந்தும்.

மூலமே என் அருள்மாயன் ---
  
 திருப்பாற் கடலாற் சூழப்பட்டதாயும், பதினாயிரம் யோசனை உயர முடையதாயும், பெரிய ஒளியோடு கூடியதாயும், திரிகூட மென்ற ஒரு பெரிய மலையிருந்தது. சந்தனம், மந்தாரம், சண்பகம் முதலிய மலர்த்தருக்கள் நிறைந்து எப்போதும் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. அம்மலையில் குளிர்ந்த நீர் நிலைகளும் நவரத்தின மயமான மணற் குன்றுகளும் தாமரை ஓடைகளும் பற்பல இருந்து அழகு செய்தன. கந்தருவரும், இந்திரர் முதலிய இமையவரும், அப்சர மாதர்களும் வந்து அங்கு எப்போதும் நீராடி மலர் கொய்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். நல்ல தெய்வமணம் வீசிக்கொண்டிருக்கும். அவ்வழகிய மலையில், வளமைத் தங்கிய ஒரு பெரிய தடாகமிருந்தது. அழகிய பூந்தருக்கள் சூழ அமிர்தத்திற்கு ஒப்பான தண்ணீருடன் இருந்தது அத்தடாகம். அந்தத் திரிகூட மலையின் காடுகளில் தடையின்றி உலாவிக் கொண்டிருந்த கஜேந்திரம் என்கின்ற ஒரு யானையானது, அநேக பெண் யானைகளாலே சூழப்பட்டு, தாகத்தால் மெலிந்து, அந்தத் தடாகத்தில் வந்து அதில் முழுகித் தாகந்தணித்து தனது தும்பிக்கை நுனியால் பூசப்பட்ட நீர்த்துளிகளால் பெண் யானைகளையும் குட்டிகளையும் நீராட்டிக்கொண்டு மிகுந்த களிப்புடன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு முதலை அந்த யானையின் காலைப் பிடித்துக் கொண்டது. அக் கஜேந்திரம் தன்னால் கூடியவரைக்கும் முதலையை இழுக்கத் தொடங்கிற்று. முதலையை வெற்றி பெறுஞ் சக்தியின்றித் தவித்தது. கரையிலிருந்த மற்ற யானைகள் துக்கப் பட்டு அந்த யானையை இழுக்க முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை. யானைக்கும் முதலைக்கும் ஆயிரம் ஆண்டுகள் யுத்தம் நிகழ்ந்தது; கஜேந்திரம் உணவின்மையாலும் முதலையால் பல ஆண்டுகள் துன்புற்றமையாலும் எலும்பு மயமாய் இளைத்தது. யாதும் செய்ய முடியாமல் அசைவற்றிருந்தது. பின்பு தெளிந்து துதிக்கையை உயர்த்தி, பக்தியுடன் “ஆதிமூலமே!” என்று அழைத்தது.

திக்கற்றவர்க்குத் தெய்வமே துணையென்று உணர்ந்த அந்த யானை அழைத்த குரலை, பாற்கடலில் அரவணை மேல் அறிதுயில் செய்யும் நாராயணமூர்த்தி கேட்டு, உடனே கருடாழ்வான்மீது தோன்றி, சக்கரத்தைவிட்டு முதலையைத் தடிந்து, கஜேந்திரத்திற்கு அபயந்தந்து அருள் புரிந்தனர். சிவபெருமான் தமக்குத் தந்த காத்தற்றொழிலை மேற்கொண்ட நாராயணர் காத்தற் கடவுளாதலால், உடனே ஓடிவந்து கஜேந்திரனுடைய துன்பத்தை நீக்கி இன்பத்தை நல்கினர்.

மதசிகரி கதறிமுது முதலை கவர் தரநெடிய
 மடுநடுவில் வெருவியொரு விசையாதி மூலமென
 வருகருணை வரதன்”              --- சீர்பாதவகுப்பு.

யானை பொதுவாக அழைத்தபோது நாராயணர் வந்து காத்தருளிய காரணம், நாராயணர் தமக்குச் சிவபெருமான் கொடுத்தருளிய காத்தல் தொழிலைத் தாம் செய்வது கடமை ஆதலால் ஓடி வந்தனர். ஒரு தலைவன் நீ இந்த வேலையைச் செய்யென்று ஒருவனுக்குக் கொடுத்துள்ளபோது, ஒருவன் தலைவனையே அழைத்தாலும் தலைவன் கொடுத்த வேலையைச் செய்வது அப்பணியாளன் கடமையல்லவா? தலைவனைத்தானே அழைத்தான்? நான் ஏன் போகவேண்டு மென்று அப்பணியாளன்  வாளாவிருந்தால், தலைவனால் தண்டிக்கப் படுவானல்லவா? ஆதலால், சிவபெருமான் தனக்குத் தந்த ஆக்ஞையை நிறைவேற்ற நாராணர் வந்தார் என்பது தெற்றென விளங்கும்.

மனோகர ---

மனத்திற்கு இன்பத்தைத் தருபவர்.

என்றுமுளானே மனோகர வயலூர”         ---  (கொம்பனையார்) திருப்புகழ்.

 கருத்துரை 

         சிவகுமாரரே! மால்மருகரே! செந்திற் கடவுளே! மாதர் ஆசையிற்பட்டு அழியாமல் அடியேன் செந்தமிழால் உம்மைப் பாடி உய்ய அருளுவீர்.

No comments:

Post a Comment

பொது --- 1096. இருவினைகள் ஈட்டும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இருவினைகள் ஈட்டும் (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதனன தாத்த தனதனன தாத்த      தனதனன தாத்த ...... தன...