திரு வன்பார்த்தான்
பனங்காட்டுர்
(திருப்பனங்காடு)
தொண்டை நன்னாட்டுத் திருத்தலம்.
காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 7 கி.மீ. செல்ல, ஐயன்குளத்தில் வலதுபுறம் திரும்பி சுமார் 7 கி.மீ. செல்ல, திருப்பனங்காட்டூர் குறுக்கு சாலை
சந்திப்பு வரும். அதில் வலது புறம் திரும்பி சுமார் 2 கி.மீ. சென்றால் திருப்பனங்காடு
கிராமம் வரும். சற்றே கடந்து செல்ல ஆலயம் வரும். காஞ்சிபுரத்தில் இருந்து பேருந்து
வசதிகள் இருக்கின்றன.
இறைவர்
: தாலபுரீசுவரர் (அகத்தியர்
வழிபட்டது - சுயம்பு.),
கிருபாநாதேசுவரர் (புலத்தியர் வழிபட்டது).
இறைவியார்
: அமிர்தவல்லி (அகத்தியர் வழிபட்டது.), கிருபாநாயகி (புலத்தியர் வழிபட்டது).
தல
மரம் : பனை
வழிபட்டோர் : அகத்தியர், புலத்தியர் முதலியோர்.
தேவாரப்
பாடல்கள் : சுந்தரர் - விடையின்மேல்
வருவானை.
கிழக்கு நோக்கிய
இக்கோயிலுக்கு இராஜகோபுரம் இல்லை. முகப்பு வாயில் வழியாக உள்ளே சென்றவுடன் வெளிப்
பிரகாரமும் நேரே பலிபீடம், கொடிமரம், நந்தி மற்றும் அதைத் தொடர்ந்து 3 நிலை கோபுரத்துடன் உள்ள இரண்டாவது
நுழைவு வாயில். இதன் வழியாக உள்ளே சென்றவுடன் எதிரில் காண்பது கிருபாநாதேசுவரர்
சந்நிதி. வெளிப் பிரகாரத்தில் உள்ள பலிபீடம், கொடிமரம், நந்தி ஆகியவற்றின் இடதுபுறம் மற்றுமொரு
பலிபீடம், கொடிமரம், நந்தி உள்ளது.
இந்த இரண்டாவது கொடிமரத்தின் எதிரே ஆலயத்தின்
உள் மதிலில் ஒரு சாளரம் உள்ளது. உள் பிரகாரத்தில் கிருபாநாதேசுவரர் சந்நிதிக்கு
இடதுபுறம் தாலபுரீசுவரர் சந்நிதி உள்ளது. இந்த சந்நிதிக்கு எதிரில் தான் உள்
மதிலில் நாம் பார்த்த சாளரம் இருக்கிறது. இரண்டு மூலவர் சந்நிதிகளும் கிழக்கு
நோக்கி அமைந்துள்ளன. இரு சுவாமி சந்நிதிகளும் கஜப்பிரஷ்ட விமான அமைப்புடன் மூன்று
கலசங்களுடன் விளங்குகின்றன. இரண்டு மூலவர்கள் இவ்வாலயத்தில் இருப்பதைப் போலவே
இரண்டு அம்பாள் சந்நிதிகளும் இருக்கின்றன.
கயிலை மலையில் சிவன் பார்வதி திருமணம்
நடைபெறும் சமயம் தேவர்கள் எல்லோரும் அங்கு கூடியதால் பாரம் அதிகரித்து வடபுலம்
தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதனை சமன் செய்ய அகத்திய முனிவரை தென் திசை
நோக்கிச் செல்லும் படி சிவபெருமான் பணித்தார். அதன்படி தென்திசை வந்த அகத்தியர்
இத்தலத்தில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். அகத்தியர் தாபித்து வழிபட்ட
ஈசன் தாலபுரீசுவரர் என்ற பெயரில் இங்கு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
இச்சந்நிதி துவார வாயிலின் முன்னால் ஒரு புறம் அகத்தியர் உருவமும் மறுபுறம்
பனைமரமும் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. தாலபுரீசுவரரின் கருவறையில் கோஷ்ட
மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். இச்சந்நிதியில்
சண்டேசுவரர் இல்லை.
அகத்திய முனிவரின் சீடரான புலத்தியர்
இத்திருத்தலம் வந்தபோது தாளபுரீசுவரருக்கு அருகில் மற்றொரு சிவலிங்கத்தை தாபித்து
வழிபட்டார். இந்த மூலவர் கிருபாநாதேசுவரர் என்று போற்றப்படுகிறார்.
கிருபாநாதேசுவரர் சந்நிதியிலும் துவார வாயிலின் முன்னால் ஒரு புறம் புலத்தியர்
உருவமும் மறுபுறம் பனைமரமும் கல்லில் உள்ளன.
கிருபாநாதேசுவரர்
கருவறையில் உள்ள கோஷ்ட தட்சிணாமூர்த்தி அமைப்பு அற்புதமானது. வலக்காலைத்
தொங்கவிட்டு, இடக்காலை மேலே
உயர்த்திக் குத்துக்காலிட்டு, சின்முத்திரை பாவத்தில்
அபய கரத்துடன் வரத கரமும் கூடி அற்புதமாகக் காட்சி தருகின்றார்.
அகத்தியர் தாபித்து வழிபட்ட
தாலபுரீசுவரர் என்கிற பனங்காட்டீசரரை முதலில் வணங்கிய பிறகு தான், புலத்தியர் தாபித்து வழிபட்ட
கிருபாநாதேசுவரரை வணங்க வேண்டும். அதுவே இக்கோவிலில் முறை. தேவாரத்தில் குறிப்பிடப்படுபவர்
பனங்காட்டீசரே ஆவார்.
அகத்தியர் தான் தாபித்த ஈசன்
தாலபுரீசுவரருக்கு பனம் பழம் படைத்து வழிபட்டதால் பனைமரமே தலமரமாக விளங்குகிறது.
இதனாலேயே இறைவன் பனங்காட்டீசர் என்றும் அழைக்கப்படுகிறார்.
இத்திருத்தலத்தில் உயிருள்ள பனைமரங்களை
வெட்டுபவர்கள் தண்டனைக்கும், தோஷத்திற்கும்
உள்ளாவார்கள் என்று இத்தலத்திலுள்ள கலவெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதானத் தல
விருட்சமாகிய ஆதி பனை மரங்கள் இரண்டும் கோயிலுக்கு வெளியில் உள்ள கோட்டை
முனீசுவரர் கோயிலின் பின்புறம் உள்ளன.
இரண்டு சுவாமி சந்நிதிகள் இருப்பதைப்
போன்று இரண்டு அம்பிகைகள் அமிர்தவல்லி, கிருபாநாயகி
என்ற பெயர்களுடன் தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருக்கின்றனர். அம்பாள் சந்நிதிகளை
வலமாக வரும்போது பைரவர், சந்திரன் சந்நிதிகள்
உள்ளன.
இக்கோயிலின் உள் மண்டபத்தில் தூண்களில்
மிக அரிய சிற்பங்கள் உள்ளன. அவற்றுள் சில: (1) அமிர்தவல்லி அம்பாள் சந்நிதியின்
முன்புள்ள கல்தூணில் நாகலிங்கச் சிற்பம் உள்ளது. (2) உள் வாயிலுக்கு வெளியில் உள்ள ஒரு
தூணில் இராமருடைய சிற்பம் உள்ளது. உள்மண்டபத்தில் கிருபாநாதேஸ்வரர் சந்நிதிக்கு
முன்புள்ள ஒரு தூணில் வாலி, சுக்ரீவர் போரிடும்
சிற்பம் உள்ளது. இராமர் சிற்பத்திடம் நின்று பார்த்தால் வாலி சுக்ரீவ போர்ச் சிற்பம்
தெரிகிறது. ஆனால் வாலி சுக்ரீவ சிற்பத்திடம் நின்று பார்த்தால் பார்வைக்கு இராமர்
சிற்பம் தெரியவில்லை. அவ்வாறு அருமையாக அமைந்துள்ளது.
வள்ளல் பெருமான் தாம் பாடியருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "பூத்தவிசின் ஆர்த்தான், பன் நாகத்தவன், இந்திரன் புகழ், வன்பார்த்தான் பனங்காட்டூர் பாக்கியமே" என்று போற்றி உள்ளார்.
காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திருக்கோயில் திறந்திருக்கும்.
சுந்தரர்
திருப்பதிக வரலாறு:
சுவாமிகள், திருக்கச்சி அனேகதங்காவதத்தைப் பணிந்து
அருகில் உள்ள பதிகளை வணங்கிச் சின்னாள் தங்கி வன்பார்த்தான்பனங்காட்டூர் சென்று
இறைஞ்சிப் பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 194)
பெரிய
புராணப் பாடல் எண் : 193
பாட
இசையும் பணியினால்
பாவை தழுவக்
குழைகம்பர்
ஆடல்
மருவும் சேவடிகள்
பரவிப் பிரியாது
அமர்கின்றார்,
நீட
மூதூர்ப் புறத்துஇறைவர்
நிலவும் பதிகள்
தொழவிருப்பால்
மாட
நெருங்கு வன்பார்த்தான்
பனங்காட்டூரில் வந்து
அடைந்தார்.
பொழிப்புரை : பாடுதற்கு இசைகின்ற
பணிசெய்யப் பெற்றதனால், அம்மையார் தழுவக்
குழைந்து காட்டிய திருவேகம்பரது அருட் கூத்தாடும் திருவடிகளைப் போற்றிப் பிரியாது
விரும்பி எழுந்தருளி இருக்கின்ற நம்பியாரூரர், மிகப் பழமையான அக்கச்சிமூதூரின் புறத்
திலே நிலவுகின்ற பதிகள் பலவற்றையும் தொழுது விருப்பத்தினால் சென்று, மாடங்கள் நெருங்கி விளங்கும்
வன்பார்த்தான்பனங்காட்டூரை வந்து அடைந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 194
செல்வ
மல்கு திருப்பனங்காட்
டூரில் செம்பொன்
செழுஞ்சுடரை,
அல்லல்
அறுக்கும் அருமருந்தை
வணங்கி, அன்பு பொழிகண்ணீர்
மல்கநின்று, "விடையின்மேல்
வருவார்"
எனும்வண் தமிழ்ப்பதிகம்
நல்ல
இசையி னுடன்பாடிப்
போந்து புறம்பு
நண்ணுவார்.
பொழிப்புரை : செல்வம் நிறைந்த
திருப்பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கும் சிவந்த பொன்போன்ற ஒளியையுடைய
செழுஞ்சுடராயும், பிறவித் துன்பத்தினை
அறுக்கும் அரிய மருந்தாயும் இருக்கும் இறைவரைப் பணிந்து, அன்பு மேலீட்டால் பொழியும் கண்ணீர்
பெருக நின்று, `விடையின் மேல்
வருவானை\' எனத் தொடங்கும்
வளப்பம் உடைய பதிகத்தை நல்ல இசை பொருந்தப் பாடிப் புறம் போந்து சேர்வாராய்,
குறிப்புரை : `விடையின் மேல் வருவானை' எனத் தொடங்கும் பதிகம் சீகாமரப் பண்ணில்
அமைந்ததாகும் (தி.7 ப.86).
7. 086 திருவன்பார்த்தான்
பனங்காட்டூர் பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
விடையின்மேல்
வருவானை,
வேதத்தின் பொருளானை,
அடையில்அன்பு
உடையானை,
யாவர்க்கும்
அறிவுஒண்ணா
மடையில்வா
ளைகள்பாயும்
வன்பார்த்தான்
பனங்காட்டூர்ச்
சடையிற்கங்கை
தரித்தானைச்
சாராதார் சார்வுஎன்னே
பொழிப்புரை : இடபத்தின்மேல் ஏறி
வருபவனும் , வேதத்தின் பொருளாய்
உள்ளவனும் , தன்னை அடைந்தால் , அங்ஙனம் அடைந் தார்மாட்டு , அன்புடையனாகின்றவனும் ஆகிய , நீர் மடைகளில் வாளை மீன்கள் துள்ளுகின்ற
திருவன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற , யாவராலும் அறியவொண்ணாத , சடைமுடி யின்கண் கங்கையைத் தாங்கியுள்ள
பெருமானை அடையாதவரது அடைவுதான் என்னே !
பாடல்
எண் : 2
அறையும்பைங்
கழல்ஆர்ப்ப,
அரவுஆட அனல்ஏந்திப்
பிறையுங்கங்
கையுஞ்சூடிப்
பெயர்ந்துஆடும்
பெருமானார்
பறையுஞ்சங்கு
ஓலிஓவாப்
படிறன்தன் பனங்காட்டூர்
உறையும்எங்
கள்பிரானை
உணராதார் உணர்வுஎன்னே
பொழிப்புரை : ஒலிக்கின்ற , பசிய பொன்னாலாகிய கழல்கள் கலிப்பவும் , அணியப்பட்ட பாம்புகள் சுழன்று ஆடவும் , கையில் நெருப்பை ஏந்தி , தலையில் பிறையையும் கங்கையையும் அணிந்து
கொண்டு , அடிபெயர்ந்து நின்று
நடனம் ஆடுகின்ற பெருமானாகிய , யாவராலும்
அறியவொண்ணாமையிற் கள்வனாய் , முழங்குகின்ற
பறைகளும் , சங்குகளும் ஒலித்தல்
ஒழியாத , தனது
திருவன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் இறைவனை உணராதாரது
உணர்வுதான் என்னே !
பாடல்
எண் : 3
தண்ணார்மா
மதிசூடித்
தழல்போலும்
திருமேனிக்கு
எண்ஆர்நாள்
மலர்கொண்டுஅங்கு
இசைந்துஏத்தும்
அடியார்கள்
பண்ணார்பா
டல்அறாத
படிறன்தன்
பனங்காட்டூர்
பெண்ஆண்
ஆயபிரானைப்
பேசாதார் பேச்சுஎன்னே
பொழிப்புரை : குளிர்ச்சி பொருந்திய
சிறந்த சந்திரனை முடிமேற் சூடி ,
கள்வனாய்
, நெருப்புப்போலும்
தனது திருமேனிக்கு உரியனவாக எண்ணுதல் பொருந்திய , அன்று மலர்ந்த மலர்களைக்கொண்டு , மனம் பொருந்தித் துதித்து வழிபடும்
அடியார்களது பண்ணிறைந்த பாடலின் ஒலி நீங்காத , தனது திருவன்பார்த்தான் பனங்காட்டூரில்
எழுந்தருளி யிருக்கின்ற , பெண்ணும் ஆணும் ஆய
உருவத்தினனாகிய பெரு மானைச் சொல்லாதவரது சொல்தான் என்னே !
பாடல்
எண் : 4
நெற்றிக்கண்
உடையானை
நீறுஏறுந் திருமேனிக்
குற்றம்இல்
குணத்தானைக்
கோணாதார் மனத்தானைப்
பற்றிப்பாம்பு
அரைஆர்த்த
படிறன்தன்
பனங்காட்டூர்ப்
பெற்றுஒன்று
ஏறும்பிரானைப்
பேசாதார் பேச்சுஎன்னே
பொழிப்புரை : நெற்றியில் கண்ணை
யுடையவனும் , திருநீறு பொருந்திய
திருமேனியை உடையவனும் , குற்றம் இல்லாத
இயல்பை யுடையவனும் , கோடுதல் இல்லாதவரது
மனத்தில் உள்ளவனும் , பாம்பைப் பிடித்து
அரையிற் கட்டிய கள்வனும் ஆகிய ,
தனது
திரு வன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற , எருது ஒன்றின்மேல் ஏறுகின்ற கடவுளைச்
சொல்லாதவரது சொல்தான் என்னே !
பாடல்
எண் : 5
உரம்என்னும்
பொருளானை
உருகில்உள் உறைவானைச்
சிரம்என்னும்
கலனானைச்
செங்கண்மால் விடையானை,
வரமுன்னம்
அருள்செய்வான்
வன்பார்த்தான்
பனங்காட்டூர்ப்
பரமன்எங்
கள்பிரானைப்
பரவாதார் பரவுஎன்னே
பொழிப்புரை : ` ஞானம் ` என்று சொல்லப்படும் பொருளாய் உள்ளவனும் , உள்ளம் அன்பால் உருகினால் , அதன் கண் நீங்காது தங்குகின்றவனும் , தலை ஓடாகிய உண்கலத்தை உடையவனும் , சிவந்த கண்களை யுடைய பெரிய இடப வாகனத்தை
உடையவனும் , தன்னை வழிபடுவார் விரும்பும்
வரத்தை விரைந்து அருளுபவனும் , மேலானவனும் ஆகிய , திரு வன்பார்த்தான் பனங்காட்டூரில்
எழுந்தருளி யிருக்கின்ற எங்கள் இறைவனைத் துதியாதவரது துதிதான் என்னே !
பாடல்
எண் : 6
எயிலார்பொக்
கம்எரித்த
எண்தோள்முக்
கண்இறைவன்,
வெயில்ஆய்க்காற்று
எனவீசி
மின்ஆய்த்தீ
எனநின்றான்
மயில்ஆர்சோ
லைகள்சூழ்ந்த
வன்பார்த்தான்
பனங்காட்டூர்ப்
பயில்வானுக்கு
அடிமைக்கண்
பயிலாதார்
பயில்வுஎன்னே
பொழிப்புரை : பொலிவு நிறைந்த சில
மதில்களை எரித்தவனும் , எட்டுத் தோள்களையும் , மூன்று கண்களையும் உடைய கடவுளும் , வெயிலாய்க் காய்ந்து , காற்றாய் வீசி , மின்னாய் மின்னி , தீயாய் எரிந்து நிற்பவனும் ஆகிய , மயில்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திரு
வன்பார்த்தான் பனங்காட்டூரில் நீங்காதிருக்கும் பெருமானுக்குச் செய்யும் தொண்டிற்
பயிலாதவரது பயிற்சிதான் என்னே !
பாடல்
எண் : 7
மெய்யன்,வெண் பொடிபூசும்
விகிர்தன்,வே தமுதல்வன்
கையின்மான்
மழுஏந்திக்
காலன்கா லம்அறுத்தான்
பைகொள்பாம்பு
அரைஆர்த்த
படிறன்தன்
பனங்காட்டூர்
ஐயன்எங்
கள்பிரானை
அறியாதார் அறிவுஎன்னே
பொழிப்புரை : மெய்ப்பொருளாய்
உள்ளவனும் , வெள்ளிய நீற்றைப்
பூசுகின்ற , வேறுபட்ட இயல்பினனும்
, வேதத்திற்குத் தலை
வனும் , கையில் மான் மழுக்களை
ஏந்துபவனும் , காலனது காலத்தை
இடைமுரிவித்தவனும் , படத்தைக் கொண்ட
பாம்பினை அரையின் கண் கட்டியுள்ள கள்வனும் , யாவர்க்கும் தலைவனும் ஆகிய தனது திரு
வன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் பெருமானை அறியாதவரது
அறிவுதான் என்னே !
பாடல்
எண் : 8
வஞ்சமற்ற
மனத்தாரை
மறவாத பிறப்பிலியைப்
பஞ்சிச்சீ
றடியாளைப்
பாகம்வைத்து உகந்தானை
மஞ்சுஉற்ற
மணிமாட
வன்பார்த்தான்
பனங்காட்டூர்
நெஞ்சத்துஎங்
கள்பிரானை
நினையாதார்
நினைவுஎன்னே
பொழிப்புரை : வஞ்சனையற்ற தூய மனம்
உடையவரை என்றும் மறவாதவனும் , பிறப்பில்லாதவனும் , செம்பஞ்சு ஊட்டிய சிறிய அடிகளை
யுடையாளாகிய உமாதேவியை ஒரு பாகத்தில் விரும்பி வைத்துள்ளவனும் ஆகிய , மேகங்கள் பொருந்திய , மணிகள் இழைத்த மாடங்களையுடைய திரு
வன்பார்த்தான் பனங்காட்டூரிலும் ,
எங்கள்
நெஞ்சத்திலும் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை நினையாதவரது நினைவுதான் என்னே !
பாடல்
எண் : 9
மழையானும்
திகழ்கின்ற மலரோன்என்று இருவர்தாம்
உழையாநின்
றவர்உள்க உயர்வானத்து உயர்வானைப்
பழையானைப்
பனங்காட்டூர் பதியாகத் திகழ்கின்ற
குழைகாதற்கு
அடிமைக்கண் குழையாதார் குழைவுஎன்னே
பொழிப்புரை : மேகம்போலும்
நிறத்தினனாகிய திருமாலும் , மலரில் இருப்பவனாகிய
பிரமனும் என்ற இருவரும் பணி செய்கின்ற வராய் நினைந்து நிற்க , உயர்ந்த வானத்தினும் உயர்ந்து
நிற்பவனும் , எல்லாரினும்
பழையவனும் ஆகிய , திரு வன்பார்த்தான்
பனங் காட்டூரைத் தனது ஊராகக் கொண்டு விளங்குகின்ற , குழையணிந்த காதினையுடைய பெருமானுக்குத்
தொண்டுபடுதலில் மனம் நெகிழாத வரது மனநெகிழ்ச்சிதான் என்னே !
பாடல்
எண் : 10
பார்ஊரும்
பனங்காட்டூர்ப் பவளத்தின் படியானைச்
சீர்ஊரும்
திருவாரூர்ச் சிவன்பேர்சென் னியில்வைத்த
ஆரூரன்
அடித்தொண்டன், அடியன்சொல், அடிநாய்சொல்,
ஊர்ஊரன்
உரைசெய்வார் உயர்வானத்து உயர்வாரே
பொழிப்புரை : தனது பெயர் நிலம்
முழுதும் பரவிய திரு வன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற பவளம்
போலும் உருவத்தையுடைய பெருமானை ,
புகழ்மிக்க
திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானது பெயரைத் தலையில் வைத்துள்ள , அப்பெருமானுக்கு அடித்தொண்டு செய்யும்
அடியவ னாகிய , அவன் அடிக்கீழ்க்
கிடக்கும் நாய் போலும் நம்பியாரூரன் பாடிய இப்பாடல்களை , அவரவர் ஊரின்கண் உரைசெய்வாரும்
சிவலோகத்தில் உயர்வு பெற்று விளங்குவர் .
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment