நல்லவனாக வாழ்வது எளிதா?
---
நல்லவனாக வாழ்வது எளிதா? நல்லவர்களிடையே வாழ்வது எளிதா? இந்த ஒரு வினாவை எழுப்பிச் சிந்திப்போமானால், நல்லவனாக ஒருவன் வாழ்வதுதான் சிறப்பு என்பதும், நல்லவர்களிடையே ஒருவன் நல்லவனாக வாழ்வது அப்படி ஒன்றும் பெரிதல்ல என்பதும் தெளிவாகும். ஆனால், நீங்கள் நல்லவனாக இருக்கும் பட்சத்தில் நல்லவர்களுக்கே உரித்தான ஒரு சிறப்பான ஆற்றலும் உங்களிடத்தில் இருக்கும். அதுதான் தீமையைக் கண்டு வெகுண்டு எழுகின்ற ஆற்றல். நல்லவர் என்று யாரைக் குறிப்பிடலாம்? நல்லவராக வாழ்வது எப்படி என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்பது மகாபாரதக் கதைக்குள் பயணித்தால் தெளிவாகும்.
பதினெட்டு நாள்கள் நீடித்த பாரதப் போரின், பதினான்காவது நாள். பாண்டவர்கள், பாஞ்சாலி ஆகியோருடன் கண்ணன் பேசிக் கொண்டு இருக்கிறார். இன்று அதிக எண்ணிக்கையிலான கௌரவ சேனையைக் கொன்று குவித்தாக வேண்டும் என்பது அன்றைய சிந்தனை. பாண்டவர்கள் அவரவது தேரில் புறப்பட்டனர். கண்ணன் அருச்சுனனது தேரில் ஏறினார். பாஞ்சாலி கண்ணனைப் பார்த்து, "கண்ணா இன்றைய போரில் யாரால் யார் மடியப் போகிறார்கள்?" என்று கேட்கிறாள். கண்ணன் பாஞ்சாலியைப் பார்த்து, "பாஞ்சாலி, எல்லாவற்றையும் முன் கூட்டியே அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் உனக்கு அதிகம்தான். இன்றைய போரில் மிகமிக நல்லவன் ஒருவன் கொல்லப்படுவான். இருதரப்பிலும் இருப்பவர்களிலேயே மிகவும் நல்லவனாகிய அவன் இறக்க இருப்பதை எண்ணி என் மனம் சஞ்சலப்படுகின்றது" என்றார். பாண்டவர்கள்தான் நல்லவர்கள். கௌரவர்கள் அனைவரும் தீயவர்கள். இரு தரப்பினருக்கும் இடையில் நடக்கும் போரில் மிகமிக நல்லவன் ஒருவன் மடிவான் என்றால், அது தருமபுத்திரனாக இருக்குமோ? என்ற ஐயம் பாஞ்சாலியைத் தொற்றிக் கொண்டது. அவளுக்கு அச்சம் மேலிட்டது. எல்லோரும் தருமபுத்திரரைக் கவலையோடு பார்த்தார்கள். காரணம், இப்போது இருப்பவர்களில் தருமனை விட நல்லவர்கள் யாரும் இல்லை என்ற எண்ணம்தான். ஆனால், எதைப் பற்றியும் கவலை கொள்ளமால், கண்ணன் தேரைச் செலுத்தலானார். இன்று மாலை பாண்வடர்கள் அனைவரும் வெற்றியோடு திரும்பவேண்டும் என்று மனதாரக் கண்ணனிடம் பிரார்த்தித்துக் கொண்டு இருந்தாள் பாஞ்சாலி. கண்ணன் சொன்னதை எண்ணி அத்தனை கவலை குடிகொண்டு இருந்தது அவளிடத்தில். பாண்டவர்களை விடவும் மிக நல்லவன் ஒருவன் இருந்தான். அதுவும் தீயவர்கள் மத்தியில் வாழ்ந்து இருந்தான் என்பதுதான் நாம் அறிந்து கொள்ள வேண்டியது.
அன்றைய போரில் எப்படியும் துரியோதனனைக் கொன்றாக வேண்டும் என்ற வெறியோடு பீமசேனன் இருந்தான். துரியாதனனது தம்பியரில் பலர் அன்று பீமனால் அழிந்தனர். வீராவேசத்துடன் சென்ற பீமனை எதிர்கொண்டான் விகர்ணன். "எனது தம்பியே! நான் சொன்ன சபதம் தவறுவதானாலும், உன்னோடு போர் செய்யமாட்டேன். நீ விலகிச் செல்" என்கிறான் பீமன். பீமன் அவ்வாறு சொன்னதற்கு ஒரு காரணம் உண்டு. வில்லிப்புத்தூரார் அதை விவரிக்கிறார். பாடல்களைப் பொருளோடு காண்போம்.
"சுடு உரைக் கனல் அன்ன துச்சாதனன்
வடு உரைக்கவும், மன் உறை மன்றிடை,
நடு உரைக்கும் நல் நா உடையாய்! உனைக்
கொடு உரைக் கணை ஏவினும், கொல்லுமோ?" --- வில்லிபாரதம்.
நெருப்பை ஒத்த கொடும் சொற்களை உடைய துச்சாதனன் அன்று அரசர்கள் தங்கிய சபையின் நடுவிலே, நிந்தையான வார்த்தைகளைக் கூறவும், அங்கு நடுவு நிலைமையாகப் பேசிய சிறந்த நாக்கை உடையவனே! கொடிய சாபச் சொல் போலத் தவறாமல் அழிக்கவல்ல அம்புகளை நான் உன்மேல் விடுத்தாலும், அவை உன்னைக் கொல்லுமோ?
"பார் அறிந்த பழிக்கு உட்படாத நின்
நேர் அறிந்தும், பொர நெஞ்சு இயையுமோ?
போர் அறிந்து பொருக!' என்றான், நெடுஞ்
சீர் அறிந்தவர் செய்ந்நன்றி கொல்வரோ?" --- வில்லிபாரதம்.
நல்லொழுக்க நெறியிலே நின்றவர் யாரும், பிறர் தனக்குச் செய்த நன்மையை மறந்து, அவர்க்குத் தீங்கு செய்ய இசைவார்களா? உலகத்தார் அறிந்த குற்றத்துக்கு, உடன்படாத உனது நீதிநெறியை, நான் தெரிந்திருந்தும், எனது மனம் உன்னோடு போர் செய்யச் சம்மதிக்குமோ? ஆதலால் அறிந்து, வேறு யாருடனாயினும் ஆராய்ந்து போர் செய்வாயாக என்று விகர்ணனை நோக்கி வீமன் கூறினான்.
அரசவையில் பாஞ்சாலிக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டு மனம் வெதும்பிய இருவர் கௌரவர் பக்கம் இருந்தனர். ஒருவர் விதுரர். அவர் எடுத்துக் கூறிய நீதிகளை பொருட்படுத்தாது, தனது சிற்றப்பன் என்றும் கொள்ளாது, துரியோதனன் அவரை அவமானப்படுத்தினான். போரில் தான் ஈடுபடப் போவது இல்லை என்று அவர் ஒதுங்கிக் கொண்டார். இராமாயணத்தில் விபீடணனும் தனது அண்ணன் செயலுக்கு மனம் ஒவ்வாது போரில் இருந்து விலகிக் கொண்டான். ஆனால், எல்லாவிதமான சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு இருந்துவிட்டு, ஆபத்து வந்த வேளையில் துணை நில்லாமல், விட்டுச் செல்வது ஒரு விதத்தில் நல்லவருக்கு அழகு அல்ல. இதை உணர்ந்த விகரணன், தனது அண்ணனுக்குத் துணை நிற்கப் பாரதப் போரில் ஈடுபட்டான்.
போர் என்று வந்துவிட்ட பிறகு நல்லவன் - தீயவன், வேண்டியவன் - வேண்டாதவன் என்று பார்ப்பது கூடாது. போருக்கு முன்னர் இவற்றை எல்லாம் ஆராயவேண்டும். ஆனால், போர் முனைக்கு வந்தபின், எதிரி ஒருவனைக் கொல்லக் கூடாது என்று எண்ணம் ஒருவனுக்கு உண்டாகுமானால், அவன் எவ்வளவு நல்லவனாக இருக்கவேண்டும்? விகர்ணனைப் பற்றிப் போர்முனையில் இவ்வாறு கருத இடம் தந்த நிகழ்வு எது? வில்லிப்புத்தூரார் வாய்மொழியாக இதனைக் காண்போம்.
அரசவையில் அபலையாக இருந்து கொண்டு, துயருடன் அலறும் பாஞ்சாலியை நோக்கி, துச்சாதனன் சுடுமொழிகளைக் கணையாகத் தொடுக்கின்றான்.
"வாரும் கண்ணீர் வளர் கொங்கை
வரைமேல் அருவி என வீழ,
தாரும் குழலும் மின்னுடனே
தலம் சேர் கொண்டல் என வீழ,
கூரும் துயரினுடன் வீழ்ந்து,
'கோகோ!' என்று கோச் சபையில்,
சோரும் கொடியை முகம்நோக்கி,
துச்சாதனன் மெய் சுடச் சொன்னான்." --- வில்லிபாரதம்.
வழிகிற கண்ணீரானது, மேன்மேல் வளர்கின்ற கொங்கைகள் ஆகிய மலையின் மீது, நீர் அருவி போலப் பெருகவும், சூடிய மலர் மாலையும் கூந்தலும், மின்னலோடு தரையில் படிகின்ற மேகம் போலக் கீழே விழவும், அரச சபையில், மிகுந்த துன்பத்துடனே பூமியில் விழுந்து புரண்டு, 'கோ' என்று கதறி அழுது வருந்துகிற பூங்கொடி போன்றவளான பாஞ்சாலியினது முகத்தைப் பார்த்து, அவளது உடம்பு கொதிக்குமாறு மிக்க கொடுமையாக துச்சாதனன் (பின்வருமாறு) கூறுகின்றான்.
'மன் வந்து இருந்த சங்கத்து,
உன் மாமன் இருந்தான்; ஐவரும் உன்
முன் வந்திருந்தார், முன் கொண்ட
முறையால் முயங்கும் முடிவேந்தர்;
மின் வந்தனைய நுண் இடையாய்!
விழி நீர் சொரிந்து, மெலிய, உனக்கு
என் வந்ததுகொல்? பொதுமகளிர்க்கு
அரிதோ, விழிநீர்? எளிது!' என்றான். --- வில்லிபாரதம்.
(துச்சாதனன் திரௌபதியை நோக்கி), "மின்னல் வந்து பொருந்தினாற் போன்ற நுண்ணிய இடையை உடையவளே! பல அரசர்கள் வந்து கூடியுள்ள இச் சபையில் உனது மாமனாராகிய திருதராட்டிரன் இருக்கின்றான். அன்றியும் முன்னே உன்னைத் திருமணம் புரிந்து கொண்ட முறைப்படியே உன்னைத் தழுவுகிற கிரீடாதிபதிகளான பாண்டவர் ஐவரும் உன் எதிரில் வந்து இருக்கின்றார்கள். இவ்வாறு உன்னைத் சேர்ந்தவர்கள் அருகில் இருக்கையில் கண்ணீர் சொரிந்து அழும்படி உனக்கு இப்பொழுது என்ன கதியின்மை நேரிட்டது. ஒன்றும் நேரவில்லை. ஆதலால் நீ அழக் காரணமில்லை. பல ஆடவரும் இன்பம் நுகருமாறு பொதுவாய் இருக்கின்ற வேசையர்க்கு, நினைத்தபோதே கண்ணீர் பெருக்குதல் அருமையானதோ? எளிமையானதே" என்றான்.
இங்கு உனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் உன்னை அவ்வாபத்தினின்றும் பாதுகாப்பதற்கு உனது மாமனாரும் உனது கணவர்களும் இருக்கையில், நீ புலம்பி வீணே பாசாங்கு செய்ய வேண்டாம் எனத் துச்சாதனன் கடுமையாகக் கூறினான்.
துச்சாதனன் இவ்வாறு சுடுமொழி சொல்ல, பாஞ்சாலி பீஷ்மரைப் பார்த்து முறையிடுகின்றாள். அவளுக்கு பீஷ்மர் மறுமொழி கூறுகின்றார்.
"பொல்லா வசையே, புகழ் பூணாப்
புல்லன் புகல, இதற்கு ஒன்றும
சொல்லாது இருந்த பேர் அவையைத்
தொழுதாள், அழுதாள், சோர்வுற்றாள்;
'மல்ஆர் திண்தோள் மாமாவோ!
மந்தாகினியாள் மதலாயோ!
எல்லா நெறியும் உணர்ந்தவருக்கு,
இதுவோ மண்ணில் இயல்பு?' என்றாள்." --- வில்லிபாரதம்.
மிகக் கொடிய பழிப்பையே தனக்குப் புகழும் ஆபரணமுமாகக் கொண்டு, அற்பனான துச்சாதனன் இவ்வாறு கடுமையாகச் சொல்ல, இந்தத் துச்சாதனனது வசை மொழியைக் குறித்து ஒன்றும் பேசாதிருந்த பெருஞ் சபையோரை நோக்கி, பாஞ்சாலி புலம்பி ஏக்கமுற்றவளாய் நின்று, கைகூப்பி வணங்கிக்கொண்டு, "மற்போர்க்கு இயைந்த வலிய தோள்களையுடைய மாமனே! கங்கா தேவியின் புத்திரனே! நீதிநெறிகள் எல்லாவற்றையுங் கற்றுத் தேர்ந்தவர்களாகிய உங்களுக்கு, இது இந் நிலவுலகத்தில் இயற்கையான நற்குணமாகுமோ?' என்று கூறினாள்.
தருமபுத்திரன் தன்னைத் தோற்ற பின்பு பந்தயமாக வைத்ததனால் முறைமையாக வெல்லப்படாத என்னை, தீண்டக் கூடாத காலத்தில் பலர் கூடிய சபையிலே துச்சாதனன் வசைமொழி கூறி இழுத்துக் கொண்டு வருகையிலும் ஒன்றும் பேசாது மௌனமாய் இருத்தலைக் குறித்துப் பாஞ்சாலி இவ்வாறு கூறினாள்.
"இன்னல் படு சொல் பாஞ்சாலி
இரக்கம்தனைக் கண்டு, இரக்கம் உறா,
'மன்னற்கு இளையோய்! தவறுஉரைத்தல்
வழக்கோ, வடமீன் அனையாளை?'
என்னக் கழறி, 'நீ உரைத்த
எல்லாம் அரசற்கு இயம்பு' என்றான்-
முன்னர்ப் புகலும் குருகுலத்தோர்
முதல் ஆம் வாய்மை மொழியோனே." --- வில்லிபாரதம்.
சிறப்பாகப் பேசப்படுகிற குருகுலத்தோருள் பெரியவரும், சத்தியமான பேச்சை உடையவருமாகிய பீஷ்மர், துன்பத்தைத் தாங்கமாட்டாமல் அழுது புலம்புகின்ற பாஞ்சாலியைப் பார்த்து, இரக்கங்கொண்டு, துச்சாதனனை நோக்கி, "அரசனாகிய துரியோதனனுக்குத் தம்பியே! அருந்ததியை ஒத்த பதிவிரதையாகிய பாஞ்சாலியைக் குறித்து, 'பொதுமகள்' என்று இழிவாகச் சொல்வது நீதி முறைமையாகுமோ" என்று சொல்லி, பாஞ்சாலியை நோக்கி, "நீ முன்னே கூறிய செய்திகளை எல்லாம், இப்பொழுது இந்த அவையிலே கொலு வீற்று இருக்கும் திருதராஷ்டிர மகாராஜன் முன்னிலையில் சொல்வாய" என்றார்.
பாஞ்சாலி அவையினரை நோக்கி அழுது முறையிட்டாள். அனைவரும் ஓவியம் போல அசைவற்று இருந்தனர்.
"மன் தோற்றனன் வெஞ் சூது ஆகில்,
வழக்கால் கொண்மின்; மன் அவையில்
முன் தோற்றனனோ, என்னையும்? தான்
முன்னே இசைந்து தனைத் தோற்ற
பின் தோற்றனனோ? கரியாகப்
பெரியோர் உண்மை பேசுக!" என,
மின் தோற்றனைய நுண் இடையாள்,
விழிநீர் வெள்ளமிசை வீழ்ந்தாள். --- வில்லிபாரதம்.
மின்னலும் தோற்றுவிட்டாற் போன்று இருக்கிற சிறந்த நுண்ணிய இடையை உடையவளான பாஞ்சாலி, தருமராசன் கொடிய சூதாட்டத்தில் என்னை முறைமைப் படியே பந்தயம் வைத்துத் தோல்வி அடைந்திருந்தால், உமது விருப்பத்தின்படியே என்னையும் அடிமை கொள்ளுங்கள். அரச சபையிலே அந்தத் தருமபுத்திரன், மற்றைப் பொருள்களோடு என்னையும் தன்னைத் தோற்பதற்கு முன்னமே தோற்று விட்டானோ? அன்றி, முதலில் தன்னைப் பந்தயமாகக் குறிப்பிட்டுத் தோற்ற பின்பு, என்னைத் தோற்றுவிட்டானோ? இங்கு உள்ள பெரியோர்கள் இவ்விஷயத்தில் சாட்சியாக உண்மை சொல்லுங்கள்" என்றுகூறி, தனது கண்ணீர்ப் பெருக்கின்மேல் விழுந்து வருந்தினாள்.
சபையோரை நோக்கி, 'பெரியோர்களே! தருமபுத்திரன் தன்னைத் தோற்ற பின்பு என்னைத் தோற்றானோ? என்னைத் தோற்ற பின்பு தன்னைத் தோற்றானோ? இவ்விஷயத்தைப் பற்றி நீங்கள் உண்மை கூறுங்கள். தருமபுத்திரன் தன்னைத் தோற்பதற்கு முன்னமே என்னைத் தோற்றிருப்பின் என்னை அடிமையாகக் கொள்வதில் எனக்கு ஆட்சேபமில்லை. தருமபுத்திரன் தன்னைத் தோற்ற பிறகு ஐவர்க்கும் பொதுவாகிய என்னைத் தோற்றிருப்பின், அடிமையாகிய தான் என்னைப் பந்தயம் வைத்து இழப்பதற்கு அவருக்கு உரிமை இல்லை. அப்போது என்னை அடிமையாக்கச் சிறிதும் முறைமையில்லை எனத் தன் கருத்தை வெளியிட்டாள் பாஞ்சாலி.
இந்தக் கொடுமையைப் பாட்டாக வரிக்கும் வில்லிபுத்தூராருடைய கனத்த இதயத்தில் ஒரு எண்ணம் தோன்றுகிறது. அதைப் பின்வரும் பாடலாக வரித்துக் காட்டுகின்றார்.
"மையோடு அரிக் கண் மழை பொழிய,
வாடும் கொடியின் மொழிக்கு ஆகார்;
வெய்யோன் எண்ணம் தனக்கு ஆகார்;
விறல் வேல் வேந்தர் வெரூஉக்கொண்டு,
பொய்யோ அன்று, மெய்யாக,
புனை ஓவியம்போல் இருந்தாரை,
ஐயோ! அந்தக் கொடுமையை யாம்
உரைக்கும் பொழுதைக்கு அதிபாவம்!" --- வில்லிபாரதம்.
அந்தச் சபையிலுள்ள பராக்கிரமம் உள்ளவர்களும், வேலாயுதத்தை எந்திய அரசர்களும், துரியோதனனிடத்து அச்சம் கொண்டிருப்பதனால், மையையும் செவ்வரியையும் உடைய கண்களிலிருந்து மழைபோல நீர் பெருக வாடுகின்றவளாகிய பூங்கொடி போன்ற பாஞ்சாலியினது வினைவிற்குச் சரியானபடி விடைகூறத் திறம் அற்றவர்களாயும், நடந்த உண்மை வேறுவகையாக இருப்பதனால், கொடியோனாகிய துரியோதனனது எண்ணத்திற்கு உடன்பட்டுக் கூறாதவர்களாயும், உண்மையாகவே அழகாக எழுதிய சித்திரப்பாவை போல(ச் சிறிது அசைதலும் இன்றி இருந்தார்கள். ஐயோ! அந்தக் கொடுமையைக் குறித்து, நாம் எடுத்துச் சொன்னாலும் நமக்குப் பெரும்பாவம் உண்டாகும்.
சபையிலிருந்த அரசர்கள் எல்லாரும் துரியோதனனிடத்து அச்சத்தால் முறைப்படி பாஞ்சாலிக்குச் சார்பாகப் பேசுவதற்கு அஞ்சியும், மனச்சாட்சிக்கு மாறாய் இருத்தலால் துரியோதனனுக்குச் சார்பாகப் பேசுவதற்குப் பின்வாங்கியும், ஒருவழியிலும் துணியாமல், எழுதப்பட்ட சித்திரம்போலத் திகைப்புற்று இருந்தார்கள். ஒரு பெண் துணையின்றித் தனியே நின்று பலர் கூடிய அரச சபையில் நீதிகூறுமாறு குறையிரந்து வேண்டி அழுது புலம்புகையிலும், துரியோதனனுக்கு அஞ்சி, நடுவுநிலைமை குன்றி நீதியெடுத்துக் கூறாது மௌனமாய் இருந்தது பெரும்பாதகம் என்பதால், அதை நாம் சொன்னாலும் பெரும்பாவம் ஆகிவிடும் என்றார் வில்லிப்புத்தூரார்.
இந்த நேரத்தில் துரியோதனன் தம்பிருள் ஒருவனாகிய விகர்ணன் துணிந்து எழுந்து, சபையோரை நோக்கிப் பின்வருமாறு கூறுகிறான்...
"அல் ஆர் கூந்தல் விரித்த மயில்
அனையாள் அரற்ற, அதற்கு ஒன்றும்
சொல்லாது, ஊமர் கணம் போலத்
தொல் போர் வேந்தர் சூழ்ந்திருப்ப,
மல் ஆர் தடந் தோள் விகருணன் ஆம்
வாய்மைக் கடவுள், 'வாள் வேந்தீர்!
பொல்லா நெறியில் அனைவீரும்
போகாவண்ணம் புகல்வீரே!" --- வில்லிபாரதம்.
இருளை ஒத்த கருநிறமான கூந்தலை விரித்துக் கொண்டுள்ளவளும் மயில் போன்ற சாயலை உடையவளுமான பாஞ்சாலி இவ்வாறு முறையிட்டுக் கதறிப் புலம்புதலைக் கண்டும், தக்கது என்றாவது, தகாதது என்றாவது ஒன்றும் மறுமொழி கூறாமல், ஊமைகளின் கூட்டம் போல, பழமையான குலத்தில் தோன்றிய போர் செய்தற்கு உரிய அரசர்கள் சூழ்ந்திருக்க, மற்போர் செய்தற்கு உரிய பெரிய தோள்களை உடையவனும் சத்தியத்தையே பேசும் தெய்வத்தன்மை உடையவனுமான விகர்ணன் என்பவன், அச்சபையோரை நோக்கி, வாட்படையை உடைய அரசர்களே! நீங்கள் எல்லோரும், பொல்லாத நரகநெறியில் செல்லாது இருக்கும் பொருட்டு நீதியையே கூறுங்கள்" என்றான்.
நீதியை யெடுத்துக் கூறாது ஒழிவீராயின் உங்களுக்கு நரகம் நேர்வது திண்ணம் என்று துணிந்து கூறுகின்றான் விகர்ணன் என்பதை நினைக்க, அவன் எந்த அளவுக்கு நீதிநெறியை உணர்ந்தவன் என்பது புலனாகும். தமக்குத் துன்பம் நேர்வதானாலும் இப்படித்தான் இருப்பார்கள். இராவணன் தம்பியருள் விபீஷணன் போல, துரியோதனன் தம்பிமாருள் விகர்ணன் நீதிகளை நன்கு உணர்ந்து நடுவுநிலையோடு பேசுகின்ற நற்குணம் உடையவன். இவனது சத்திய குணத்தை நன்கு மதித்து "விகருணனாம் வாய்மைக் கடவுள்" என்று போற்றுகின்றார் வில்லிப்புத்தூரார்.
"முறையோ! என்று என்று, அவனிதலம்
முழுதும் உடையான் முடித் தேவி
நிறையோடு அழிந்து, வினவவும், நீர்,
நினைவுற்று இருந்தீர்; நினைவு அற்றோ?
இறையோன் முனியும் என நினைந்தோ?
இருந்தால், உறுதி எடுத்து இயம்பல்
குறையோ? கண் கண்டது நாளும்
குலத்துப் பிறந்தோர் கூறாரோ?" --- வில்லிபாரதம்.
இந்நிலவுலகம் முழுவதற்கும் உரியவனான தருமபுத்திரனது, பட்டத்து அரசியான பாஞ்சாலி, 'என்னை அடிமை எனக்கொண்டு இவ்வாறு சபையில் இழுத்து வருவது முறைமை ஆகுமோ?' என்று பலதரம் சொல்லி, தன்மனத்தை நல்வழியில் நிறுத்தின கற்பு நிலைமையோடு மனம் வருந்தி நியாயம் விசாரிக்கிறாள். நீங்கள் விடை கூறுவதற்குத் தயங்குகின்றீர்களே. இவ்வாறு நீதிகூறாமல் இருப்பதற்குக் காரணம் உங்களின் நினைவு மறதியா? அல்லது, நியாயம் பாஞ்சாலிக்கே சாதகமாய் இருத்தல்பற்றி அவளுக்குச் சாதகமாய்க் கூறினால் துரியோதனன் கோபம் கொள்வன் என்று அஞ்சித்தானோ? நியாயமிருந்தால் உள்ள நியாயத்தை எடுத்துக் கூறுதல் குற்றமாகுமோ? நல்ல குலத்தில் பிறந்தவர்கள் தாம் கண்கூடாய்க் கண்டதை எப்பொழுதும் கூறாது விடுவார்களோ?
"தன் நேர் இல்லா நெறித் தருமன்
தன என்று உரைக்கத்தக்க எலாம்
முன்னே தோற்று, தங்களையும்
முறையே தோற்று, முடிவுற்றான்;
சொல் நேர் உரைக்கு, 'தான் பிறர்க்குத்
தொண்டாய்விட்டு, சுரிகுழலைப்
பின்னே தோற்க உரிமையினால்
பெறுமோ?' என்று பேசீரோ?" --- வில்லிபாரதம்.
தனக்கு ஒப்பாக ஒருவரையும் பெறாதவனும் நல்லொழுக்கத்தை உடையவனுமான தருமபுத்திரன், தன்னுடையன என்று சொல்லத்தக்க எல்லாப் பொருள்களையும் முதலில் தோற்று இழந்து, தங்களை் ஐவரையும் முறையே பந்தயமாக வைத்துத் தோற்றுத் தனது நல்லுணர்வு) ஒழியப் பெற்றான். தான் இவ்வாறு எல்லாவற்றையும் தோற்றுப் பிறர்க்கு அடிமையாய் விட்ட பிறகு, எதிரில் நின்று சகுனி கூறிய வார்த்தைக்கு இசைந்து, நுனி சுருண்ட கூந்தலை உடைய பாஞ்சாலியைப் பந்தயமாக வைத்துத் தோற்பதற்கு நீதிப்படி உரிமையை உள்ளவனா என்று நீங்கள் நியாயத்தை எடுத்துக் கூறமாட்டீர்களோ?"
ஆக, நல்லவனாக ஒருவன் நல்லவர்கள் மத்தியில் வாழ்வது ஒன்றும் விந்தை அல்ல. தன்னை நல்லவர்கள் இகழ்வார்களோ என்று எண்ணி, தகாத செயல்களைப் பிறர் அறியாமல் செய்துகொண்டே, நல்லவனாக நடிப்பவர்கள் இல்லாமல் இல்லை. ஆனால், முற்றிலும் தீயகுணமே படைத்தவர்களோடு வாழ்நாள் முழுதும் இருந்துகொண்டே, ஒருவன் நல்லவனாக வாழமுடியும் என்பதைக் காட்டுவதுதான் மேற்குறித்த நிகழ்வு. நல்லவன்போல் வாழ்வது எளிது. நல்லவனாக வாழ்வதுதான் அருமை.
No comments:
Post a Comment