திரு ஏகம்ப மாலை - 26


"எல்லாம் அறிந்து படித்தே இருந்து எமக்கு உள்ளபடி

வல்லான் அறிந்து உளன் என்று உணராது, மதிமயங்கிச்

சொல்லால் மலைந்து, உறு சூழ் விதியின்படி, திக்கித்து, பின்

எல்லாம் சிவன்செயலே என்பர் காண், கச்சி ஏகம்பனே."


பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே! எல்லாச் செயல்களையும் காட்சிப் பிரமாணமாகக் கண்டு இருந்தும், ஒலிப் பிரமாணமாகப் படித்து இருந்தும், எமக்கு உள்ள தன்மையை, எல்லாம் வல்லவனாகிய இறைவன் தெரிந்து வைத்தே விதித்து இருக்கின்றான் என்று உணர்ந்து கொள்ளாமல், அறிவு கலங்கிப் பிறர் சொல்லும் சொற்களால் மாறுபாடு கொண்டு, தம்மை வந்து சூழ்ந்து கொண்ட ஊழ்வினையின் படி வருத்தம் அடைந்து, கடைசியில் எல்லாம் சிவன் செயலே என்று ஒருவாறு மனம் தெளிவார்கள்.

விளக்கம் ---  நமது கண்முன்னே நடப்பதையும் கண்டுள்ளோம், நூல்களில் சொல்லி இருப்பதைப் படித்தும் உள்ளோம். சாத்திரங்கள் கூறும் உண்மை, உயிர்கள் அவ்வவற்றின் நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப, பிறப்பை எடுக்கும். அந்த வினைகளை ஊட்டுபவன் எல்லாம் வல்ல பரம்பொருளாகிய இறைவனே. அவன் விதித்தது தான் ஊழ்.  "வகுத்தான் வகுத்த வகை" என்று திருவள்ளுவ நாயனார் காட்டியதும் இதுதான். இவைகளை உணராது, ஆணவத்தின் வயப்பட்டு, பிறர் கூறும் பொய்ம்மொழிகளைக் கேட்டு அறிவு மயங்கி அவற்றையே மெய்ம்மொழியாகக் கொண்டு மயங்கிடுவார் எனக் காட்ட,  "எல்லாம் அறிந்து படித்தே இருந்து எமக்கு உள்ளபடி வல்லான் அறிந்து உளன் என்று உணராது, மதிமயங்கிச் சொல்லால் மலைந்து" என்றார். பலகாலும் துன்பப்பட்டு உழன்ற பிறகு, எப்போதாவது நல்வினைப் பயனாய் அறிவு விளங்குகின்ற காலத்தில், இந்தத் துன்பமானது தம்மைச் சூழ்ந்து கொண்டு ஊழ்வினைப்படி நிகழ்ந்தது எனவும், எல்லாம் சிவன் செயல் என்று தெளிவு பெறும் நிலை வாய்ப்பதால், "உறு சூழ் விதியின்படி, திக்கித்து, பின், எல்லாம் சிவன்செயலே என்பர்" எனவும் கூறினார்.

எல்லாம் படித்து உணர்ந்தவர்கள் கூட, தமக்கு ஒரு துன்பம் வந்தபோது, இது தாம் முன் செய்த தீவினையின் பயன், இறைவனால் ஊட்டப்பட்டது என்று உணராது மதிமயங்கி, வருந்தி, பிறகு எல்லாம்  பிறகு, இறைவன் செயல் என்று தெளிவது உயிரின் இயல்பு.  அறிவித்தாலும், உணர்ந்து கொள்ளும் பக்குவம் வாய்க்கும் போதுதான், அறிந்து கொள்ளும் இயல்பு உடையது உயிர்.


No comments:

Post a Comment

திருத் தில்லை - 2

  "பாராமல் ஏற்பவர்க்கு இல்லை என்னாமல், பழுதுசொல்லி வாராமல், பாவங்கள் வந்து அணுகாமல், மனம் அயர்ந்து பேராமல், சேவை பிரியாமல், என்பு பெறாத...