அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
நாட்டம் தங்கி
(வேப்பஞ்சந்தி)
முருகா!
சித்தத்தை உன்பால் வைத்துத்
தொண்டுபடுவோர்க்கு
உனது திருவடியை அருள்வாய்.
தாத்தந்
தந்தத் தந்தத் தனனத் ...... தனதான
நாட்டந்
தங்கிக் கொங்கைக் குவடிற் ...... படியாதே
நாட்டுந் தொண்டர்க் கண்டக் கமலப் ...... பதமீவாய்
வாட்டங்
கண்டுற் றண்டத் தமரப் ...... படைமீதே
மாற்றந்
தந்துப் பந்திச் சமருக் ...... கெதிரானோர்
கூட்டங்
கந்திச் சிந்திச் சிதறப் ...... பொருவோனே
கூற்றன்
பந்திச் சிந்தைக் குணமொத் ...... தொளிர்வேலா
வேட்டந் தொந்தித் தந்திப் பரனுக் ...... கிளையோனே
வேப்பஞ்
சந்திக் கந்தக் குமரப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
நாட்டம்
தங்கிக் கொங்கைக் குவடில் ...... படியாதே,
நாட்டும் தொண்டர்க்கு அண்டக் கமலப் ...... பதம்ஈவாய்.
வாட்டம்
கண்டு உற்று, அண்டத்து அமரப் ......
படைமீதே
மாற்றம்
தந்து, பந்திச் சமருக்கு
...... எதிர் ஆனோர்
கூட்டம்
கந்திச் சிந்திச் சிதறப் ...... பொருவோனே!
கூற்றன்
பந்திச் சிந்தைக் குணம்ஒத்து ...... ஒளிர்வேலா!
வேட்டம் தொந்தித் தந்திப் பரனுக்கு ...... இளையோனே!
வேப்பஞ்
சந்திக் கந்த! குமரப் ...... பெருமாளே.
பதவுரை
வாட்டம் கண்டு உற்று --- மனச் சோர்வு
கொள்ளும்படியாக,
அண்டத்து அமரப்படை மீதே
மாற்றம் தந்து
--- விண்ணில் வாழும் தேவர்களின் சேனைகள் மீது மாறுபாடு கொண்டு,
பந்திச் சமருக்கு
எதிரானோர் கூட்டம் --- கூட்டமாகப் போருக்கு எதிர்த்து வந்த அசுரர்களின்
கூட்டமானது
கந்திச் சிந்திச்
சிதறப் பொருவோனே --- கெட்டுப் பிரிந்துச் சிதறும்படி போர் புரிந்தவரே!
கூற்றன் பந்திச்
சிந்தைக் குணம் ஒத்த ஒளிர் வேலா --- யமனைப் போல நீதி வழுவாத மனத்தின்
பண்பை நிகர்த்த ஒளி வீசும் வேலாயுதத்தை உடையவரே!
வேட்டம் --- அடியார்கள் விரும்பியதை
அளிக்கும்
தொந்தித் தந்திப் பரனுக்கு இளையோனே
--- தொப்பை வயிறும், தந்தமும் உடைய
விநாயகப் பெருமானுக்கு இளையவரே!
வேப்பம் சந்திக் கந்த --- வேப்பஞ்சந்தி
என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு இருக்கும் கந்தப் பெருமானே!
குமர --- குமாரக் கடவுளே!
பெருமாளே --- பெருமையில் மிக்கவரே!
நாட்டம் தங்கி --- நாட்டம் கொண்டு,
கொங்கைக் குவடில் படியாதே ---
விலைமாதர்களின் பருத்த கொங்கைகளில் படியாமல்,
நாட்டும் தொண்டர்க்கு --- கருத்தை
திருவடியில் நாட்டித் திருத்தொண்டு படுவோர்க்கு.
அண்டக் கமலப் பதம் ஈவாய் --- பொருந்தும்படியாக
உமது திருவடித் தாமரைகளை அருள்வாய்.
பொழிப்புரை
மனச் சோர்வு கொள்ளும்படியாக, விண்ணில் வாழும் தேவர்களின்
சேனைகள் மீது மாறுபாடு கொண்டு, கூட்டமாகப் போருக்கு
எதிர்த்து வந்த அசுரர்களின் கூட்டமானது கெட்டுப் பிரிந்துச் சிதறும்படி போர்
புரிந்தவரே!
யமனைப் போல நீதி வழுவாத மனத்தின் பண்பை
நிகர்த்த ஒளி வீசும் வேலாயுதத்தை உடையவரே!
அடியார்கள் விரும்பியதை அளிக்கும், தொப்பை வயிறும், தந்தமும் உடைய, விநாயகப் பெருமானுக்கு
இளையவரே!
வேப்பஞ்சந்தி என்னும் திருத்தலத்தில்
திருக்கோயில் கொண்டு இருக்கும் கந்தப் பெருமானே!
குமாரக் கடவுளே!
பெருமையில் மிக்கவரே!
நாட்டம் கொண்டு, விலைமாதர்களின் பருத்த கொங்கைகளில்
படியாமல், கருத்தை திருவடியில்
நாட்டித் திருத்தொண்டு படுவோர்க்குப் பொருந்தும்படியாக உமது திருவடித் தாமரைகளை
அருள்வாய்.
விரிவுரை
கூற்றன்
பந்திச் சிந்தைக் குணம் ஒத்த ஒளிர் வேலா ---
நடுநிலையில்
நின்று தனக்கு இட்ட தொழிலைப் புரிபவன் கூற்றன்.
உயிர்களுக்கு
அவற்றின் வினைப் போகத்திற்கு ஏற்ப, உடலைப் படைத்து அருளுகின்றது பரம்பொருள்.
உயிரானது உடம்பில் பொருந்துகின்ற கரு உண்டான காலத்திலேயே, அதன் சாதி, ஆயுள், போகம் ஆகியவை
நிச்சயிக்கப் பெறுகின்றன. வினைநுகர்வு
தீர்ந்து விட்டால், ஒரு கணம் கூட இந்த உடம்பு நில்லாது. "வினைப் போகமே ஒரு
தேகம் கண்டாய்,
வினைதான்
ஒழிந்தால் தினைப்போது அளவும் நில்லாது கண்டாய்" என்றார் பட்டினத்து அடிகள்.
உயிரை
உடம்பில் இருந்து கூறு செய்து, உடம்பை விட்டு, உயிரைக் கொண்டுபோக
கூற்றுவன் வருவான். ஊன் உயிர் வேறு செய்பவன் நொடித்தான் மலை உத்தமனாகிய
சிவபெருமான். அவனது ஏவலின்படிக்கு அமைந்தவன் கூற்றன். உடம்பையும் உயிரையும் கூறு
செய்வதால் கூற்றன் எனப்பட்டான். அவன் எப்போது வருவான் என்பது யாராலும்
அறிந்துகொள்ள முடியாதது.
"எப்போது
ஆயினும் கூற்றுவன் வருவான்
அப்போது
அந்தக் கூற்றுவன் தன்னைப்
போற்றவும்
போகான் பொருள்தரப் போகான்
சாற்றவும்
போகான் தமரொடும் போகான்
நல்லார்
என்னான் நல்குரவு அறியான்
தீயார்
என்னான் செல்வர் என்று உன்னான்
தரியான்
ஒருகணம் தறுகணாளன்
உயிர்கொடு
போவான் உடல்கொடு போகான்"
என்னும்
கபிலர் அகவல் இதை உணர்த்தும்.
எந்த
சமயத்திலும் உயிரைக் கொண்டு போக, கூற்றுவன் என்பான் வருவான். அந்த சமயத்தில், அந்தக் கூற்றுவன் ஆனவன், தன்னைப் புகழ்ந்து துதித்தாலும்
போகமாட்டான், வேண்டிய
பொருளைத் தருகின்றோம், விட்டுவிடு
என்று மிக்க பொருளைக் கொடுத்தாலும் அதைப் பெற்றுக் கொண்டு போகமாட்டான். உபசாரமான
வார்த்தைகளைக் கூறினாலும் வந்த வேலையை விட்டுப் போகமாட்டான். நமது சுற்றத்தார்களை
நாளடைவில் பிடித்துச் சென்று இருந்தாலும், நம்மை மட்டுமாவது விட்டுவிடலாம் என்ற எண்ணம்
அவனுக்கு உண்டாகாது, ஆகையினால், நமது சுற்றத்தாரைப் பிடித்துச் செல்வதோடு போய்விட
மாட்டான். தன்னால்
பிடிக்கப்படுபவர் நல்லவர் என்று பார்க்கமாட்டான். தன்னால்
பிடிக்கப்படுபவர் வறுமையில் உள்ளவராயிற்றே என்பதையும் உணர மாட்டான், தன்னால்
கொண்டு செல்ல உள்ளவர் தீயவர் என்று கருதி விரைந்து கொண்டு போகமாட்டான், மிகுந்த செல்வம் படைத்தவர் என்று விட்டுவிடமாட்டான். ஒருவனுடைய வாழ்நாள் முடிந்துவிட்டால், ஒரு கணப் பொழுதும் தாமதிக்கமாட்டான், அவன் அஞ்சா
செஞ்சம் படைத்தவன்,
உயிரைத்
தன்னோடு கொண்டு போவான், உடம்பைக் கொண்டு போக
மாட்டான். (அது பயன்றறது என்று தள்ளி விடுவான்)
எனவேதான், அவன் எமதருமன் எனப்பட்டான்.
யமனைப்
போல நீதி வழுவாத மனத்தினை உடையவர் முருகப் பெருமான் என்கின்றார் அடிகளார். எமனுடைய
செயலை நாம் அறிந்து இருப்பதால்,
அவனைக்
காட்டி,
முருகப்
பெருமானின் பண்பை நமக்குக் காட்டி அருளினார்.
"ஆராயும்
நீதி வேலும்" என்றார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில். "நீதி தங்கிய
தேவா" என்றார் பிறிதொரு திருப்புகழில்.
பூமியை
ஆளுகின்றவனுக்கு (அரசனுக்கு) நீதி மிக மிக இன்றியமையாதது. நீதி உடையவனே சிறந்த
வேந்தன். தேர்க்காலில் வீழ்ந்து இறந்த ஆண் கன்றுக்காக, அரச கன்றாகிய தன் மகனைத் தெருவில் படுக்க
வைத்துத் தேரை அவன் மீது செலுத்திய மனுநீதிச் சோழனுடைய நீதியின் சிறப்பு நினைக்கும்
தொறும் நெஞ்சை உருக வைக்கின்றது. முருகவேள் அகிலலோக சக்கரவர்த்தி, அப் பரமன் எளிய அமரர்களை வலிய சூரன்
வருத்தியபோது, தாம் சென்று உடனே
சூரனை அழிக்காது, செந்திலில் அமர்ந்து, வீரவாகு தேவரைத் தூது ஏவி, அரச முறைப்படி போர் புரிந்து அவனை
மாய்த்து அருளினார். வேல்
என்பது ஞானம். ஞானமே நீதியை ஆராய வல்லது.
"துதிக்கும்
அடியவர்க்கு ஒருவர் கெடுக்க இடர்
நினைக்கின், அவர் குலத்தை முதல் அறக்களையும்,
எனக்கு ஓர் துணை ஆகும்,
சொலற்கு
அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்து எறிய எருக்கி எழும்
அறத்தை நிலை காணும்"
என்று
வேல்வகுப்பில் அடிகளார் அருளிச் செய்தவண்ணம், அறத்தை நிலை காண்பது முருகப் பெருமானுடைய
ஞானசத்தியாகிய வேல். அந்த வேலைத் தனது திருக்கரத்தில் தாங்கியவர் முருகப் பெருமான்
என்பதால்,
"கூற்றன்
பந்திச் சிந்தைக் குணம் ஒத்த ஒளிர் வேலா" என்றார் அடிகளார்.
வேட்டம் ---
வேட்டம்
- விருப்பம்.
அடியார்கள்
விரும்பியதை அளிக்கும் அருளாளர் விநாயகப் பெருமான். "கற்பகம் என வினை கடிது ஏகும்"
என்றார் முதல் திருப்புகழில். கற்பகம் என்னும் தேவலோக மரமானது நினைத்ததை எல்லாம் அளிக்கக்
கூடியது. எனவே, விநாயகப் பெருமான்
அடியார்கள் நினைத்ததை அளிப்பவர்.
தொந்தித்
தந்திப் பரனுக்கு இளையோனே ---
பருத்த
தொந்தியினை உடையவர் விநாயகப் பெருமான். "மத்தள வயிறன்" என்றார் முதல் திருப்புகழில்.
யானை முகம் உடையவர் என்பதால், அந்த முகத்தில் தந்தமும்
பொருந்தி இருக்கும். எனவே தந்திப் பரன் என்றார். மூத்த பிள்ளாயார் ஆகிய விநாயகமூர்த்திக்குப்
பின் அவதரித்தவர் இளையபிள்ளையார் முருகப் பெருமான். ஆதலினால், "தொந்தித் தந்திப்
பரனுக்கு இளையோனே" என்றார்.
வேப்பம்
சந்திக் கந்த
---
வேப்பஞ்சந்தி
என்பதொரு திருத்தலம் இருக்குமிடம் விளங்கவில்லை என்பர் ஒரு சாரார். மற்றொரு சாரார், இத் திருத்தலம் சென்னை திருச்சிராப்பள்ளி
நெடுஞ்சாலையில்,
உளுந்தூர்ப்பேட்டைக்கு
தெற்கில் 24 கி. மீ. தொலைவிலும், திட்டக்குடியில் இருந்து 8 கி. மீ. தொலைவிலும்
உள்ளது என்பர்.
நாட்டம்
தங்கி கொங்கைக் குவடில் படியாதே ---
நாட்டம்
- நோக்கம், கண், பார்வை.
விலைமாதர்களின்
அழகைக் கண்டு அறிவு மயங்கி, மனத்தை அவர்களிடத்தில் வைத்து, அவர்களது மலை போன்று
பருத்து உயர்ந்துள்ள முலைகளில் படிந்து, அவர் தரும் கலவியைக் கருதி இருந்து துன்புற்று
அழியும் நிலை கூடாது.
நாட்டும் தொண்டர்க்கு அண்டக் கமலப் பதம் ஈவாய் ---
நாட்டுதல்
- நடுதல், நிலைநிறுத்துதல், வாழவைத்தல்.
அண்ட, அண்டுதல் - பொருந்தி
இருத்தல். நெருங்குதல்.
சித்தத்தைத்
திருவடியில் நாட்டி இறைவன் திருத்தொண்டில் ஈடுபட்டு இருப்போர்க்கு ஆணவம், மாயை, கன்மம் என்னும் மும்மலங்களும்
அறும். "ஏகன் ஆகி இறைபணி நிற்க, மலமாயை தன்னொடு வல்வினை
இன்றே" என்னும் சிவஞானபோதச் சூத்திரத்தினை அறிக. "தொண்டுபடு தொண்டர் துயர்
தீர்ப்பான்" என்றார் அப்பர் அடிகள். தொண்டு செய்தால் துயர் தீரும் என்னும் உண்மையை
உணர்த்த வந்ததே திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம்.
கருத்துரை
முருகா!
சித்தத்தை உன்பால் வைத்துத் தொண்டுபடுவோர்க்கு உனது திருவடியை அருள்வாய்.
No comments:
Post a Comment