திரு நல்லூர்ப் பெருமணம் - 0773. மூல முண்டக





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மூல முண்டக (திருநல்லூர்)

திருநல்லூர் முருகா!
சிவயோக சாதனையினால்
மேலைப் பெருவெளியில் வாழும் வாழ்வை அருள் புரிவீர்.


தான தந்ததன தான தந்ததன
     தான தந்ததன தான தந்ததன
     தான தந்ததன தான தந்ததன ...... தந்ததான


மூல முண்டகனு பூதி மந்திரப
     ராப ரஞ்சுடர்கள் மூணு மண்டலவ
     தார சந்திமுக மாறு மிந்த்ரதரு ...... வுந்தளாமேல்

மூது ரம்பலவர் பீட மந்தமுமி
     லாத பந்தவொளி யாயி ரங்கிரண
     மூணு மிந்துவொளிர் சோதி விண்படிக ......விந்துநாதம்

ஓல மென்றுபல தாள சந்தமிடு
     சேவை கண்டமுதை வாரி யுண்டுலகி
     ரேழு கண்டுவிளை யாடி யிந்துகதி ...... ரங்கிசூலம்

ஓடு மந்தகலி காலொ டுங்கநடு
     தூணில் தங்கவரி ஞான வண்கயிறு
     மீத ணைந்துசத கோடி சந்த்ரவொளி ...... சந்தியாதோ

சூலி யந்தரிக பாலி சங்கரிபு
     ராரி யம்பரிகு மாரி யெண்குணசு
     வாமி பங்கிசிவ காம சுந்தரியு ...... கந்தசேயே

சூர சங்கரகு மார இந்திரச
     காய அன்பருப கார சுந்தரகு
     காஎ னுஞ்சுருதி யோல மொன்றநட ....னங்கொள்வேலா

சீல வெண்பொடியி டாத வெஞ்சமணர்
     மாள வெங்கழுவி லேறு மென்றுபொடி
     நீறி டுங்கமல பாணி சந்த்ரமுக ...... கந்தவேளே

தேவ ரம்பையமு தீண மங்கைதரு
     மான ணைந்தபுய தீர சங்கரதி
     யாகர் வந்துறைந லூர மர்ந்துவளர் ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


மூல முண்டகம் அனுபூதி மந்திரம்,
     பராபரம், சுடர்கள் மூணு மண்டல
     அதார சந்திமுகம் ஆறும், ந்த்ர தரு ......வும்,தளாமேல்

மூதுர உம்பலவர் பீடம், ந்தமும்
     இலாத பந்தஒளி ஆயிரம் கிரணம்
     மூணும் இந்து ஒளிர் சோதி, விண்படிக ......விந்துநாதம்

ஓலம் என்று பல தாள சந்தமிடு
     சேவை கண்டு, முதை வாரி உண்டு, லகு
     இரேழு கண்டு விளையாடி, இந்துகதிர் ...... அங்கிசூலம்

ஓடும் அந்த கலி கால் ஒடுங்க, நடு
     தூணில் தங்க, வரி ஞான வண்கயிறு
     மீது அணைந்து, சத கோடி சந்த்ரஒளி ......சந்தியாதோ?

சூலி, அந்தரி, கபாலி, சங்கரி,
     புராரி, அம்பரி, குமாரி, எண்குண
     சுவாமி பங்கி, சிவகாம சுந்தரி ...... உகந்தசேயே!

சூர சங்கர குமார! இந்திர
     சகாய! அன்பர் உபகார! சுந்தர
     குகா எனும் சுருதி ஓலம் ஒன்ற நடனம்....கொள்வேலா!

சீல வெண் பொடி இடாத வெஞ்சமணர்
     மாள, வெங்கழுவில் ஏறும் என்று, பொடி
     நீறு இடும் கமல பாணி, சந்த்ரமுக, ...... கந்தவேளே!

தேவ ரம்பை அமுது ஈண மங்கை தரு
     மான் அணைந்த புய! தீர சங்கர
     தியாகர் வந்து உறை நலூர் அமர்ந்து வளர் .....தம்பிரானே.


பதவுரை

      சூலி --- திரிசூலத்தை ஏந்தியவரும்,

     அந்தரி --- நடுவுநிலைமை உடையவரும்,

     கபாலி --- பிரமனது கபாலத்தை ஏந்தியவரும்,

     சங்கரி ---  சுகத்தைச் செய்பவரும்,

     புராரி --- திரிபுரங்களை எரித்தவரும்,

     அம்பரி --- ஞானவெளியில் விளங்குபவரும்,

     குமாரி ---  என்றும் இளமை மாறாதவரும்,

     எண்குண சுவாமி பங்கி --- எட்டுக் குணங்களைய உடைய சிவபெருமானுடைய இடப்பக்கத்தில் இருப்பவரும்,

     சிவகாமி ---  சிவத்தை விரும்புகின்றவரும்,

     சுந்தரி --- கட்டழகு உடையவரும் (ஆகிய உமாதேவியார்)

     உகந்த சேயே --- விரும்புகின்ற திருக்குமாரரே!

      சூர சங்கர --- சூரனை அழித்தவரே!

    குமார --- குமார வேளே!

     இந்திர சகாய --- இந்திரனுக்கு உதவி செய்தவரே!

     அன்பர் உபகார --- அடியார்களுக்கு உபகாரம் செய்பவரே!
  
சுந்தர --- அழகரே!  

     குகா எனும் சுருதி ஓலம் ஒன்ற --- குகமூர்த்தியே என்றெல்லாம் வேதங்கள் முறையிட்டு அழைக்கும் கீதம் பொருந்த

    நடனம் கொள் வேலா --- திருநடனம் செய்கின்ற வேலாயுதக் கடவுளே!

      சீல வெண்பொடி இடாத --- திருவெண்ணீற்றை அணியாதவர்களும்

     வெம்சமணர் மாள --- கொடியவர்களும் ஆகிய சமணர்கள் இறக்கும்படி

     வெம்கழுவில் ஏறும் என்று --- கொடிய கழுமரத்தில் ஏறுங்கள் என்று

     பொடி நீறு இடும் --- பாண்டியனுக்குத் திருநீற்றுப் பொடியைப் பூசிய

     கமல பாணி --- தாமரை போன்ற திருக்கரத்தினரே!

     சந்திர முக --- திங்களை ஒத்த திருமுகத்தை உடையவரே!

     கந்த வேளே --- கந்தப் பெருமானே!

      தேவ ரம்பை அமுது ஈண --- தேவலோகத்து அரம்பை அமிர்தத்தைத் தர அருந்துகின்றவரும்,

     மங்கை --- மங்கைப் பருவமுடையவரும்,

     தரு மான் அணைந்த புய  --- கற்கபகத் தருவின் கீழ் வாழும் மான் போன்றவரும் ஆகிய தெய்வயானை அம்மையார் தழுவுகின்ற திருத்தோள்களை உடையவரே!

      தீர --- தீரரும்,

     சங்கர --- உயிர்களுக்குச் சுகத்தைப் புரியும்

     தியாகர் வந்து உறை --- தியாகராகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள

     நல்லூர் அமர்ந்து வளர் தம்பிரானே --- திருநல்லூரில் விரும்பி வாழ்கின்ற தனிப்பெரும் தலைவரே!

      மூல முண்டகம் அனுபூதி மந்திர --- மூலாதார கமலத்தில் அனுபவ ஞானத்தைத் தருகின்ற பிரணவ மந்திரத்தையும்,

     பராபரம் சுடர்கள் மூணு மண்டல --- மிகப் பெரிய ஒளிகளாகிய சூரிய சந்திர அக்கினி என்ற மூன்று மண்டலங்களையும்,

     அதார சந்தி முகம் ஆறும் --- வணங்கத் தகுந்த இடங்களாகிய ஆறு ஆதாரங்களையும்,

     இந்த்ர தருவும் --- புருவ நடுவில் காணப்படும் கற்பகத் தருவையும்,

      தளாமேல் மூதுர அம்பலவர் பீடம் --- தள்ளாததாகிய பழமையான ஞான ஆகாயத்தில் நடிப்பவராகிய நடனமூர்த்தியின் மேலான பீடத்தையும்,

    அந்தமும் இலாத பந்த ஒளி ஆயிரம் கிரண மூணும் --- முடிவே இல்லாத அழகிய ஒளியுடன் கூடிய ஆயிரம் கிரணங்களுடன் மூன்று பிறையுடன் கூடிய ஆக்ஞா இடத்தையும்,  

    இந்து ஒளிர் சோதி விண் படிக --- சந்திர ஒளியுடன் கூடிய இனிமையான பளிங்கு மேடையாகிய பட்டி மண்டபத்தையும்,

    விந்து நாதம் ஓலம் என்று பல தாள சந்தம் இடு சேவை கண்டு --- விந்துநாத ஓசையுடன் பற்பல விதமான தாள பேதத்துடன் கூடிய நடன சேவையையும் அடியேன் தரிசித்து, சோமரசமாகிய

    அமுதை வாரி உண்டு --- அமிர்தத்தை அள்ளிப் பருகி,

      உலகு இரு ஏழு கண்டு விளையாடி --- பிரமரந்திரமாகிய ஏழாவது உலகத்தைக் கண்டு, அங்கு விளையாடி,

    இந்து கதிர் அங்கி சூலம் ஓடும் அந்த கலிகால் ஒடுங்க --- சந்திரன் சூரியன் அக்கினி என்ற மூன்று நாடிகளில் சூலம் போல் வேகமாக ஓடுகின்ற அந்தப் பிராணவாயு ஒடுங்க,

    நடு தூணில் தங்க வரி ஞான வண்கயிறு மீது அணைந்து --- வீணாதண்டமாகிய முதுகெலும்பில் தங்க வரிகளுடன் கூடிய ஞான மயமாகிய சுழுமுனை என்ற நாடியின் வழியே சென்று,

   சத கோடி சந்திர ஒளி சந்தியாதோ --- நூறுகோடி சந்திர ப்ரகாசமாக விளங்கும் மேலைப் பெருவெளியை அடையும் சிவயோக வாழ்வு அடியேனுக்கு உண்டாக மாட்டாதோ?


பொழிப்புரை


         திரிசூலத்தை ஏந்தியவரும், நடுவுநிலைமை உடையவரும், பிரமனது கபாலத்தை ஏந்தியவரும், சுகத்தைச் செய்பவரும், திரிபுரங்களை எரித்தவரும், ஞானவெளியில் விளங்குபவரும், என்றும் இளமை மாறாதவரும், எட்டுக் குணங்களைய உடைய சிவபெருமானுடைய இடப்பக்கத்தில் இருப்பவரும், சிவத்தை விரும்புகின்றவரும், கட்டழகு உடையவரும் ஆகிய உமாதேவியார் விரும்புகின்ற திருக்குமாரரே!

         சூரனை அழித்தவரே! குமார வேளே!  இந்திரனுக்கு உதவி செய்தவரே! உபகாரம் செய்பவரே! அழகரே! அடியார்களின் இதயமாகிய குகையில் விளங்கும் மூர்த்தியே என்றெல்லாம் வேதங்கள் முறையிட்டு அழைக்கும் கீதம் பொருந்த திருநடனம் செய்கின்ற வேலாயுதக் கடவுளே!

         ஒழுக்கத்திற்கு உரிய திருவெண்ணீற்றை அணியாதவர்களும் கொடியவர்களும் ஆகிய சமணர்கள் இறக்கும்படி கொடிய கழுமரத்தில் ஏறுங்கள் என்று பாண்டியனுக்குத் திருநீற்றுப் பொடியைப் பூசிய தாமரை போன்ற திருக்கரத்தினரே!

திங்களை ஒத்த திருமுகத்தை உடையவரே கந்தப் பெருமானே!

         தேவலோகத்து அரம்பை அமிர்தத்தைத் தர அருந்துகின்றவரும், மங்கைப் பருவமுடையவரும், கற்கபகத் தருவின் கீழ் வாழும் மான் போன்றவரும் ஆகிய தெய்வயானை அம்மையார் தழுவுகின்ற திருத்தோள்களை உடையவரே!

         தீரரும், உயிர்களுக்குச் சுகத்தைப் புரியும் தியாகராகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருநல்லூரில் விரும்பி வாழ்கின்ற பெருமையின் மிக்கவரே!

         மூலாதார கமலத்தில் அனுபவ ஞானத்தைத் தருகின்ற பிரணவ மந்திரத்தையும், மிகப் பெரிய ஒளிகளாகிய சூரிய சந்திர அக்கினி என்ற மூன்று மண்டலங்களையும், வணங்கத் தகுந்த இடங்களாகிய ஆறு ஆதாரங்களையும், புருவ நடுவில் காணப்படும் கற்பகத் தருவையும், தள்ளாததாகிய பழமையான ஞான ஆகாயத்தில் நடிப்பவராகிய நடனமூர்த்தியின் மேலான பீடத்தையும், முடிவே இல்லாத அழகிய ஒளியுடன் கூடிய ஆயிரம் கிரணங்களுடன் மூன்று பிறையுடன் கூடிய ஆக்ஞா இடத்தையும்,  சந்திர ஒளியுடன் கூடிய இனிமையான பளிங்கு மேடையாகிய பட்டிமண்டபத்தையும், விந்துநாத ஓசையுடன் பற்பல விதமான தாள பேதத்துடன் கூடிய நடன சேவையையும் அடியேன் தரிசித்து, சோமரசமாகிய அமிர்தத்தை அள்ளிப் பருகி, பிரமரந்திரமாகிய ஏழாவது உலகத்தைக் கண்டு, அங்கு விளையாடி, சந்திரன் சூரியன் அக்கினி என்ற மூன்று நாடிகளில் சூலம் போல் வேகமாக ஓடுகின்ற அந்தப் பிராணவாயு ஒடுங்க, வீணாதண்டமாகிய முதுகெலும்பில் தங்க வரிகளுடன் கூடிய ஞான மயமாகிய சுழுமுனை என்ற நாடியின் வழியே சென்று, நூறுகோடி சந்திர ப்ரகாசமாக விளங்கும் மேலைப் பெருவெளியை அடையும் சிவயோக வாழ்வு அடியேனுக்கு உண்டாக மாட்டாதோ?


விரிவுரை


மூல முண்டக அநுபூதி மந்திரம் ---

மூலாதராத்தில் நால் இதழ்க் கமலத்திற்கு நடுவே "ஓம்" என்ற பிரணவ மந்திரம் உண்டும். சிவயோக சாதனையில் முதன்முதலாக, நாட்டத்தை உள்முகப்படுத்தி மூலாதாரத்தை தரிசித்து வணங்கவேண்டும்.

சுவாதிட்டானத்தில் கரமும், மணிபூரகத்தில் கரமும், அநாகதத்தில் சிகரமும், விசுத்தியில் கரமும், ஆக்ஞையில் கரமும் விளங்கும். ஓம் நமசிவய என்ற ஆறெழுத்துக்களும் ஆறாதாரத்தில் அடங்கி இருக்கும். அவைகளைத் தெரிசித்துக் கொண்டு மேலே செல்லவேண்டும்.

ஞானங்கொள் பொறிகள் கூடி, வான்இந்துகதிர் இலாத
நாடுஅண்டி, நமசிவாய வரை ஏறி......

என்பார் அடிகளார் பழநித் திருப்புகழில்.

மந்திரம் என்றது மந்திரமும் என்று உம்மை வருவிக்கப்பட்டது.  சந்தத்தை நோக்கி இவ்விடத்திலும் இனி வரும் இடங்களிலும் எண் உம்மைகள் தொக்கி நிற்கின்றன.

அதார சந்தி முகம் ஆறும் ---

ஆதாரம் என்பது அதாரம் எனக் குறுகல் விகாரம் பெற்றது.  சந்தி முகம் - வணங்குகின்ற இடங்கள்.

1.    மூலாதாரம் - இது குதத்திற்கும் குறிக்கும் நடுவில் இருப்பது,  முக்கோண வடிவுள் நான்கு இதழ்க் கமலம், மாணிக்க நிறமாய் உள்ளது. கணபதி, குண்டலினி சத்தி, 'ஓம்' என்ற ஓரெழுத்து,  இவற்றைப் பெற்று விளங்குவது.

"ஆதார மூலத்து அடியில் கணபதியைப்
பாதார விந்தம் பணிந்து நிற்பது எக்காலம்".

முக்கோண வடிவமாகிய மூலாதாரத்தின் மத்தியில் எழுந்தருளி இருக்கும் கணபதியின் திருவடித் தாமரைகளைப் பணிவது எப்போது.     
                                                    ---  பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.

"மூலத்து உதித்து எழுந்தமுக்கோணச் சதுரத்துள்
வாலைதனைப் போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே".

எங்கும் நிறைந்த பொருளே, மூலாதாரத்தில் உதித்த திரிகோண வடிவமாய் உள்ள இயந்திரத்தின் கண்ணே எழுந்தருளி இருக்கும் வாலாம்பிகைத் தாயை வணங்காமல் அறிவிழந்தேன்.
                                                               ---     பட்டினத்தார் பூரணம்.

2.    சுவாதிட்டானம் - இது குறிக்கும் நாபிக்கும் நடுவில் இருப்பது,  நால்சதுர வடிவுள் ஆறு இதழ்க் கமலம்,  செம்பொன் நிறமாய் உள்ளது,  பிரமன் - சரசுவதி,  '' கரம் என்ற எழுத்து, இவற்றைப் பெற்று விளங்குவது.

"மண்வளைந்த நற்கீற்றில் வளைந்து இருந்த வேதாவைக்
கண்வளைந்து பார்த்து உள்ளே கண்டு இருப்பது எக்காலம்".

நாற்கோண வடிவத்தோடும் கூடிய சுவாதிட்டான மத்தியில் எழுந்தருளி இருக்கும் பிரமாவை, உள்ளே கண்டு தரிசித்தும் மனம் மகிழ்ந்து இருப்பது எப்போது.
                                                            --- பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.

"உந்திக் கமலத்து உதித்து நின்ற பிரமாவைச்
சந்தித்துக் காணாமல் தட்டழிந்தேன் பூரணமே".

எங்கும் நிறைந்த பொருளே,  சுவாதிடாடானத்தில், அதாவது உந்தியாகிய கமத்தில் விளங்கும் நான்முகனை நெருங்கித் தரிசியாமல் நிலைகுலைந்தேன்.
                                                               --- பட்டினத்தார் பூரணம்

3.    மணிபூரகம் - இது நாபிக் கமலத்தில் இருப்பது,  மூன்றாம் பிறை வடிவுள் பத்து இதழ்க் கமலம், மரகத நிறமாய் உள்ளது.  விஷ்ணு - இலட்சுமி, '' கரம் என்ற எழுத்து, இவற்றைப் பெற்று விளங்குவது.

"அப்புப் பிறைநடுவே அமர்ந்து இருந்த விட்டுணுவை
உப்புக் குடுக்கை உள்ளே உணரந்து அறிவது எக்காலம்".

மூன்றாம் பிறைபோன்ற மணிபூரகத்தின் மத்தியில் எழுந்தருளி இருக்கும் விட்டுணுவை, உப்புக் குடுக்கை போன்ற தேகத்தின் உள்ளே தெரிந்து கொள்வது எப்போது.
                                                             ---     பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.

"நாவிக் கமலநடு நெடுமால் காணாமல்
ஆவிகெட்டு யானும் அறிவுஅழிந்தேன் பூரணமே".

எங்கும் நிறைந்த பொருளே, மணிபூரகத்தில் விளங்குகின்ற விண்டுவைத் தரிசியாமல் உயிர் இழந்து புத்தி கெட்டேன்.
                                                               ---       பட்டினத்தார் பூரணம்

4.    அநாகதம் -  இது இருதய கமலத்தில் இருப்பது.  முக்கோண வடிவுள் பன்னிரண்டு இதழ்க் கமலம், படிக நிறமாய் உள்ளது.  உருத்திரன் - பார்வதி. 'சி' கரம் என்ற எழுத்து, இவற்றைப் பெற்று விளங்குவது.

"மூன்று வளையம் இட்டு முளைத்து எழுந்த கோணத்தில்
தோன்றும் உருத்திரனைத் தொழுது நிற்பது எக்காலம்".

முக்கோண வடிவமாகிய அனாகதத்தின் நடுவில் எழுந்தருளி இருக்கும் உருத்திர மூர்த்தியைத் தொழுவது எப்போது.
                                                           ---     பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.

"உருத்திரனை இருதயத்தில் உண்மையுடன் பாராமல்
கருத்து அழிந்து நானும் கலங்கினேன் பூரணமே".

எங்கும் நிறைந்த பொருளே, அநாகதத்தில், அதாவது இருதயத்தில் உருத்திர மூர்த்தியைத் தரிசியாமல் மனம் கெட்டுச் சஞ்சலம் உற்றேன்.                        
                                                                                  ---     பட்டினத்தார் பூரணம்

5.    விசுத்தி - இது கண்டத்தில் இருப்பது.  ஆறு கோண வடிவுள் பதினாறு இதழ்க் கமலம். மேக நிறமாய் உள்ளது. மகேசுவரன் - மகேசுவரி. '' கரம் என்ற எழுத்து,  இவற்றைப் பெற்று விளங்குவது.

"வாயுஅறு கோணம்அதில் வாழும் மகேச்சுரனைத்
தோயும் வகை கோட்கத் தொடங்குவதும் எக்காலம்".

அறுகோண வடிவாய் உள்ள விசுத்தியின் மத்தியில் எழுந்தருளி இருக்கும் மகேச்சுரனைத் தரிசித்து அவனுடன் கலக்கும் வழியை ஆராய்ந்து தொடங்குவது எப்போது.                                      ---   பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.

"விசுத்தி மகேசுரனை விழிதிறந்து பாராமல்
பசித்து உருகி நெஞ்சம் பதறினேன் பூரணமே".

எங்கும் நிறைந்த பொருளே,  விசுத்தியில் அதாவது கண்டத்தில் விளங்கும் மகேசுரனை நோக்கி விழித்துக் கொண்டு இருந்து தரிசியாமல், பசியால் வருந்தி மனம் கலங்கினேன்.
                                                                    பட்டினத்தார் பூரணம்.

6.    ஆஞ்ஞை - இது புருவ மத்தியில் இருப்பது, வட்ட வடிவமான, மூன்று இதழ்க் கமலம். படிக நிறமாய் உள்ளது. சதாசிவன்- மனோன்மணி. '' கரம் என்ற எழுத்து இவற்றைப் பெற்று விளங்குவது.

"வட்ட வழிக்கு உள்ளே மருவும் சதாசிவத்தைக்
கிட்ட வழிதேடக் கிருபை செய்வது எக்காலம்".

வட்ட வடிவமாகிய ஆஞ்ஞையின் நடுவில் எழுந்தருளி இருக்கும் சதாசிவத்தினைத் தேடிக் கிருபை அடைவது எப்போது.
                                                   --  பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.

"நெற்றி விழி உடைய நிர்மல சதாசிவத்தைப்
புத்தியுடன் பாராமல் பொறி அழிந்தேன் பூரணமே".

எங்கும் நிறைந்த பொருளே,  விசுத்தியில் விளங்குகின்ற முக்கண் வாய்ந்த சதாசிவத்தினை அதாவது, நெற்றியின்கண்ணே நேத்திரத்தினை உடைய மலரகிதமாய் உள்ள சதாசிவத்தினைத் அறிவுடன் தரிசியாமல், ஐம்பொறியில் சிக்கி ஞானத்தை இழந்தேன்.                                               ----   பட்டினத்தார் பூரணம்.  

4, 6, 10, 12, 16, 3 என்ற 51 இதழ்களிலும் 51 எழுத்துக்களும் அடங்கி இருக்கும். இந்த 51 அக்கரங்களும் மாத்ருகா மந்திரம் எனப்படும்.

மந்திரயோகத்திலே அந்த அந்த ஆதாரங்களையும் உள்முகமாகத் தெரிசித்து, அந்த அந்த ஆதாரமூர்த்தியை வணங்கி, அருள் பெற்று மேலே செல்லவேண்டும்.

நாலும், இருமூன்றும், ஈரைந்தும், ஈராறும்,
கோலிமேல் நின்ற குறிகள் பதினாறும்
மூலம்கண்டு ஆங்கே முடிந்து, முதல்இரண்டும்
காலம்கண்டான் அடி காணலும் ஆமே.

ஆறந்த மும்கூடி ஆகும் உடம்பினில்
கூறிய ஆதாரம் மற்றும் குறிக்கொள்மின்
ஆறிய அக்கரம் அம்பதின் மேலே
கூறிய ஆதாரத்து ஓர்எழுத்து ஆமே.           ---  திருமந்திரம்.


இந்த்ர தருவும் ---

நாட்டத்தைப் புருவ நடுவே வைத்து தியானிக்க வல்லார்க்கு, அங்கே ஜோதிமலை தோன்றும். அந்த ஜோதிமலைக்கு இடையே ஒரு வீதியும், அவ்வீதியில் கற்பக விருட்சமும் தோன்றும்.

ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள்
     அற்புதக் காட்சிய டி - அம்மா
    அற்புதக் காட்சிய டி.                 ---  திருவருட்பா.

ஆணிப் பொன்னம்பலம் - மாற்றுயர்ந்த பொன்னாலாகிய சபை.

ஜோதி மலைஒன்று தோன்றிற் றதில்ஒரு
     வீதிஉண் டாச்சுத டி - அம்மா
     வீதிஉண் டாச்சுத டி.                ---  திருவருட்பா.  
                      
சோதி மலை - சோதியின் திரட்சியைச் சோதி மலை என்று சொல்லுகின்றார்.                                  
வீதியில் சென்றேன்அவ் வீதி நடுஒரு
     மேடை இருந்தத டி - அம்மா
     மேடை இருந்தத டி.                ---  திருவருட்பா.                        
மேடைமேல் ஏறினேன் மேடைமேல் அங்கொரு
     கூடம் இருந்தத டி - அம்மா
     கூடம் இருந்தத டி.                  ---  திருவருட்பா.                                
கூடத்தை நாடஅக் கூடமேல் ஏழ்நிலை
     மாடம் இருந்தத டி - அம்மா
     மாடம் இருந்தத டி.                 ---  திருவருட்பா.                        
ஏழ்நிலைக் குள்ளும் இருந்த அதிசயம்
     என்னென்று சொல்வன டி - அம்மா
     என்னென்று சொல்வன டி.          ---  திருவருட்பா.

கற்ப கந்தெருவில் வீதி கொண்டுசுடர்
பட்டி மண்டபமு டாடி யிந்துவொடு
கட்டி விந்துபிச காமல் வெண்பொடிகொ ...... டசையாமல்
                                                               --- (கட்டிமுண்ட) திருப்புகழ்.

தளா மேல் மூதூர் அம்பலவர் பீடம் ---

தளா - தள்ளாது விரும்பப்படுவது. மூதூர் - பழமையான இடம்.
"வேதியர் தில்லை மூதூர்" என்பர் சேக்கிழாரடிகள். அம்பலவர் பீடம் - தகராகாசப் புண்டரிக வீடு.

ஆயிரம் கிரண மூணும் ---

"மூன்று" என்றது "மூணு" என மருவியது. முன்றுபிறை நிலாப் போன்ற வடிவத்தில் உள்ள ஆக்கினை.

இந்து ஒளிர் சோதி வின்படிக ---

சந்திர ஒளி வீசும் இனிமையான பளிங்கு மண்டபம். பட்டி மண்டபம். சிவயோக சாதனையில் இளைத்த ஆன்மா இளைப்பாறும் இடம்.

கட்டு அறுத்து, எனை ஆண்டு, கண்ஆர நீறு
இட்ட அன்பரொடு யாவரும் காணவே
பட்டி மண்டபம் ஏற்றினை, ஏற்றினை,
எட்டினோடு இரண்டும் அறியேனையே.        ---  மணிவாசகம்.


விந்துநாதம் ஒலம் என்ற பல தாள சந்தம் இடும் சேவை ---

வாயு ஒடுங்கிய பொழுது அங்கே விந்துநாதம் உண்டாகும்.  விந்து ஒலி கத்த என்றார் சிதம்பரம் திருப்புகழில். அங்கே பலவகையான வாத்தியங்கள் ஒலிக்கும்.

மணிகடல் யானை வளர்குழல் மேகம்
மணிவண்டு தும்பிவளை பேரிகையாழ்
தணிந்துஎழு நாதங்கள் தம்இவை பத்தும்
பணிந்தவர்க்கு அல்லது பார்க்கஒண்ணாதே.    ---  திருமந்திரம்.

இத்தனை ஒலிகளுடன் உள்ளக் கமலத்தில் இளங்குமரன் அனவரதத் தாண்டவம் புரிவான்.

அமுதை வாரி உண்டு ---

மூலக்கனல் மூண்டதனால் மதிமண்டலம் என்னும் சந்திரமண்டலம் வெதும்பி, பொங்கி வழியும் அமுதத்தை அருந்துவர் சிவயோகியர். அது சோம பானம் எனப்படும்.

ஒடிச்சென்று அங்கே ஒருபொருள் கண்டவர்
நாடியின் உள்ளாக நாதம் எழுப்புவர்
தேடிச் சென்றுஅங்கே தேனை முகந்துண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே.     ---  திருமந்திரம்.

உலகு இரு ஏழு கண்டு விளையாடி ---

ஏழாவது உலகமாகிய பிரமரந்திரம். உலகு இரு ஏழு என்று பிரியும். இரு பெரிய. ஆறாதாரம் கடந்தபின், பிரமரந்திர வழியே மேலைப் பெருவெளிக்குச் செல்லுதல் வேண்டும்.

தங்கிய தவத்து உணர்வு தந்து, அடிமை முத்திபெற
சந்திர வெளிக்குவழி அருள்வாயே....
                                                                        ---  (ஐங்கரனை) திருப்புகழ்.

இந்து கதிர் அங்கி சூலம் ஓடும் அந்த கலி கால்ஒடுங்க ---

இடை பிங்கலை சுழுமுனை என்ற மூன்று நாடிகளின் வழியே பிராணவாயு சஞ்சரிக்கும். அது சூலம் போலே வேகமாகச் செல்லும். அவ்வாறு அதிவேகமாகச் செல்லும் பிராணவாயுவைச் செல்ல விடாது அடக்குதல் வேண்டும். அவ்வண்ணம் அடங்கிய இடத்தில் மனம் தானே அடங்கிவிடும். வாயு இல்லாத இடத்தில் தீபம் அசையாது நிற்பதுபோல் என்று அறிக.

மன்மனம் எங்குஉண்டு வாயுவும் அங்குஉண்டு,
மன்மனம் எங்குஇல்லை வாயுவும் அங்குஇல்லை,
மன்மனத்து உள்ளே மகிழ்ந்து இருப்பார்க்கு
மன்மனத்து உள்ளே மனோலயம் ஆமே.       ---  திருமந்திரம்.

நடு தூணில் தங்கவரி ஞான வண்கயிறு மீது அணைந்து சதகோடி சந்த்ர ஒளி சந்தியாதோ ---

நடுதூண் -  முதுகெலும்பு.  வீணாதண்டம் எனப்படும். 

அதன் நடுவே தாமரைத் தண்டில் உள்ள நூல் போன்ற நுட்பமான வெள்ளை நரம்பு ஒன்று உண்டு. அது சுழுமுனை எனப்படும். இடைகலை பிங்கலை என்ற இரு நாடிகளுின் வழியே செல்லும் பிராணவாயுவை, அவ்வண்ணம் செல்லவிடாது மடைமாற்றி, சுழுமுனை வழி செலுத்திடில், பிரமரந்திர வழியே சகஸ்ராரப் பெருவெளியிலே முகர்வர். அங்கு சதகோடி சந்திர ஒளி உண்டாகும்.

கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
வீணாத் தண்டூடே வெளி உறத் தான்நோக்கி
காணாக்கண் கேளாச் செவிஎன்று இருப்பார்க்கு
வாழ்நாள் அடைக்கும் வழி அதுவாமே.

மேலைவாசல் வெளியுறக் கண்டபின்
காலன்வார்த்தை கனாவிலும் இல்லையே...    ---  திருமந்திரம்.

நாளுமதி வேக கால்கொண்டு தீமண்ட
     வாசியன லூடு போயொன்றி வானின்க
     ணாமமதி மீதி லூறுங்க லாஇன்ப ...... அமுதூறல்

நாடியதன் மீது போய்நின்ற ஆநந்த
     மேலைவெளி யேறி நீயின்றி நானின்றி
     நாடியினும் வேறு தானின்றி வாழ்கின்றது....ஒருநாளே
                                                               ---  (மூளும்வினை) திருப்புகழ்.

சூலி ---

இச்சை, கிரியை, ஞானம் மூன்று சத்திகளின் வடிவம் திரிசூலம்.  அவைகளுக்குத் தலைவியாகிய அம்பிகை திரிசூலத்தைத் தாங்கி இருப்பர்.

அந்தரி ---

அந்தரம் - நடுவுநிலைமை. தாய் எல்லாக் குழந்தைகளையும் ஒன்றுபோல பார்ப்பது போல், உலகன்னை ஆகிய உமையம்மையார் நடுவுநிலைமையோடு அருள் புரிவர்.

நல்லார்க்கும் பொல்லர்க்கும் நடுநின்ற நடுவே...       ---  திருவருட்பா.

சங்கரி ---

சம் - சுகம்.  கரம் - செய்வது. உயிர்களுக்குச் சுகத்தைச் செய்பவள்.


எண்குண சுவாமி பங்கி ---

சிவபெருமானுக்கு எட்டு அருட்குணங்கள் உண்டு.  நிர்க்குணன் என்று அவருக்கு ஒரு பெயரும் உண்டு. அதற்குக் "குணம் இல்லாதவர்" என்பது பொருள். அந்த குணம் பிராகிருத குணங்களாகிய சத்துவம், இராஜஸம், தாமதம் என்னும் முக்குணங்கள் ஆகும். எனவே, முக்குணம் இல்லாதவர்.

இங்கே எண்குணம் என்றது இறைவனுடைய அருட்குணங்கள் ஆகும். அவையாவன ---

1.      தன்வயத்தன் ஆதல்  (சுவதந்திரத்துவம்.)

2.      தூய உடம்பினன் ஆதல் (விசுத்த தேகம்.)

3.      இயற்கை உணர்வினன் ஆதல்  (நிராமயான்மா)

4.      முற்றுணர்தல் (சர்வஞ்ஞத்துவம்)

5.      இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்குதல் (அநாதிபோதம்.)

6.      பேரருள் உடைமை (அலுப்தசத்தி)

7.      முடிவில் ஆற்றல் உடைமை (அநந்த சத்தி)

8.    வரம்பில் இன்பம் உடைமை  (திருப்தி)

கோள்இல் பொறியில் குணம்இலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.                    ---  திருக்குறள்.

சீல வெண் பொடி இடாத வெஞ்சமணர் மாள, வெங்கழுவில் ஏறும் என்று, பொடி நீறு இடும் கமல பாணி ---

கமலம் - தாமரை.  பாணி - கை. தாமரை போன்ற அழகிய திருக்கைகளை உடையவர் திருஞானசம்பந்தர்.

முருகப்பெருமானது சாரூபம் பெற்ற அபர் சுப்ரமணிய மூர்த்திகளுக்குள் ஒன்று, முருகவேளது திருவருட்கலையுடன் சம்பந்தப்பட்டு, திருஞானசம்பந்தராக வந்த அவதாரம் புரிந்தது. முருகவேள் பிறப்பு இல்லாதவர் என்பதை நம் அருணகிரியார், "பெம்மான் முருகன் பிறவான் இறவான்" என்று கூறியுள்ளதால் அறிக. இதை கூர்த்தமதி கொண்டு உணராதார் மூவருக்கு முதல்வனும், மூவரும் பணிகேட்க, முத்தொழிலைத் தந்த முழுமுதற் கடவுளும், தாரகப் பொருளாய் நின்ற தனிப்பெருந் தலைவனுமாகிய பதிப்பொருட் பரஞ்சுடர் வடிவேல் அண்ணலே திருஞானசம்பந்தராகவும் உக்கிரகுமாரராகவும் பிறந்தார் என எண்ணுகின்றனர். தெய்வ இலக்கணங்கள் யாதுயாது உண்டோ அவை அனைத்தும் ஒருங்கே உடைய முருகப்பெருமான் பிறப்பிலி என்பதை வேதாகமங்களால் நுணுகி ஆராய்ந்து அறிக.

சிவஞான மயமானது திருநீறு. "சத்திதான் யாதோ என்னில் தடையிலா ஞானமாகும்" என்ற சித்தியாரது திருவாக்கின்படி, ஞானமே சத்தியாகும். ஆதலின், திருவருள் சத்தி சொரூபமானது.  "பராவணம் ஆவது நீறு" என்றார் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார். திருநீற்றினை அணிந்துகொள்வார்க்கு நோயும் பேயும் விலகும். எல்லா நலன்களும் உண்டாகும். சர்வமங்கலங்களும் பெருகும். தீவினை கருகும்.

எல்லாவற்றையும் தூய்மை செய்வது பசுவின் சாணமே ஆகும்.  அதனால் ஆகிய திருநீறு, உள்ளத்தையும் உடம்பையும் தூய்மை செய்ய வல்லது. நிறைந்த தவம் புரிந்தோர்க்கே திருநீற்றில் மிகுந்த அன்பு உண்டாகும். தவம் செய்யாத பாவிகட்குத் திருநீற்றில் அன்பு உண்டாகாது.

எத்தகைய பாவங்களைப் புரிந்தவராயினும், பெரியோர்கள் இகழ்கின்ற ஐம்பெரும் பாவங்களைச் செய்தவராயினும், விபூதியை அன்புடன் தரித்து நல்வழிப்படுவாராயின், முன் செய்த பாவங்களினின்றும் விடுபட்டு, செல்வம் பெற்று, உலகமெல்லாம் போற்றும் பெருமை அடைவார்கள்.

யாது பாதகம் புரிந்தவ ராயினும் இகழும்
பாதகங்களில் பஞ்சமா பாதக ரெனினும்
பூதி போற்றிடில், செல்வராய் உலகெலாம் போற்றத்
தீது தீர்ந்தனர், பவுத்திரர் ஆகியே திகழ்வார்.
                                                                                 ---  உபதேச காண்டம்.

சிவதீட்சை பெற்று ஒவ்வொருவரும் முறைப்படி திருநீறு பூசி, இறைவன் திருவருளைப் பெறவேண்டும்.

திரிபுண்டரமாகத் திருநீறு பூசும்போது, இடையில் துண்டுபடுதல், ஒன்றுடன் ஒன்று சேர்தல், அதிகமாக விலகுதல்,  வளைதல், முதலிய குற்றங்கள் இன்றி அணிதல் வேண்டும். நெற்றி, மார்பு, தோள் ஆகிய மூன்று இடங்களில் ஆறு அங்குல நீளமும், ஏனைய அங்கங்களில் ஓவ்வோரங்குல நீளமுமாகத் தரித்தல் வேண்டும். மூன்று கீற்றாக அழகாக அணிதல் சிறப்பு.

மூன்று வேளையும் இவ்வாறு திருநீறு திரிபுண்டரமாகப் புனைதல் வேண்டும். முடியாத போது, ஒருவேளையேனும் முறைப்படி திருநீற்றினைத் திரிபுண்டரமாகத் தரித்தவர் உருத்திர மூர்த்தியே ஆவார். இவ்வண்ணம் உயர்ந்த திரிபுண்டரமாகத் திருநீற்றினை அணிந்து, பதி தருமம் புரிவோர் நிகரில்லாத மும்மூர்த்தி மயமாவார் என்று வேதங்கள் கூறுகின்றன.

திருநீறு வாங்குதல், அணிதல் முறையை, "குமரேச சதகம்" என்னும் நூலில் விளக்கியிருப்பது காண்க.
  
திருநீறு வாங்கும் முறை

பரிதனில் இருந்தும் இயல் சிவிகையில் இருந்தும் உயர்
     பலகையில் இருந்தும்மிகவே
பாங்கான அம்பலந் தனிலே இருந்தும்
     பருத்ததிண் ணையிலிருந்தும்

தெரிவொடு கொடுப்பவர்கள் கீழ்நிற்க மேல்நின்று
     திருநீறு வாங்கியிடினும்
செங்கையொன்றாலும்விரல் மூன்றாலும் வாங்கினும்
     திகழ்தம் பலத்தினோடும்

அரியதொரு பாதையில் நடக்கின்ற போதினும்
     அசுத்தநில மான அதினும்
அங்கே தரிக்கினும் தந்திடின் தள்ளினும்
     அவர்க்குநர கென்பர்கண்டாய்

வரிவிழி மடந்தைகுற வள்ளிநா யகிதனை
     மணந்துமகிழ் சகநாதனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

திருநீறு அணியும் முறை

பத்தியொடு சிவசிவா என்றுதிரு நீற்றைப்
     பரிந்துகை யாலெடுத்தும்
பாரினில் விழாதபடி அண்ணாந்து செவியொடு
     பருத்தபுய மீதுஒழுக

நித்தம்மூ விரல்களால் நெற்றியில் அழுந்தலுற
     நினைவாய்த் தரிப்பவர்க்கு
நீடுவினை அணுகாது தேகபரி சுத்தமாம்
     நீங்காமல் நிமலன் அங்கே

சத்தியொடு நித்தம்விளை யாடுவன் முகத்திலே
     தாண்டவம் செய்யுந்திரு
சஞ்சலம் வராதுபர கதியுதவும் இவரையே
     சத்தியும் சிவனுமென்னலாம்

மத்தினிய மேருஎன வைத்தமு தினைக்கடையும்
     மால்மருகன் ஆனமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

 
அரக ராஎ னாமூடர் திருவெ ணீறி டாமூடர்
     அடிகள் பூசி யாமூடர் ...... கரையேற
அறிவு நூல்க லாமூடர் நெறியி லேநி லாமூடர்
     அறம்வி சாரி யாமூடர் ...... நரகேழிற்
புரள வீழ்வ ரீராறு கரவி நோத சேய்சோதி
     புரண பூர ணாகார ...... முருகோனே..            ---  (இரதமான) திருப்புகழ்.

திருநீறு இடும் சமயத்தை நிந்தித்த காரணத்தால், சமண் சமயத்தை மாற்றி, சைவ சமயத்தைத் திருஞானசம்பந்தர் வாழ்வித்தனர். திருநீறு இடாத பாண்டியனையும் வனது நாட்டு மக்களையும் திருநீறு அணியும்படி புரிந்து உய்தி பெறச் செய்தார்.

தென்னவன் தனக்கு நீறு
     சிரபுரச் செல்வர் ஈந்தார்,
முன்னவன் பணிந்து கொண்டு,
     முழுவதும் அணிந்து நின்றான்,
மன்னன் நீறு அணிந்தான் என்று,
     மற்று அவன் மதுரை வாழ்வார்,
துன்னி நின்றார்கள் எல்லாம்
     தூயநீறு அணிந்து கொண்டார்.         --- பெரியபுராணம்.

பவமாய்த்து ஆண்அது ஆகும் பனைகாய்த்தே, மண நாறும்
     பழமாய்ப் பார்மிசை வீழும் ...... படி,வேதம்
படியாப் பாதகர், பாய் அன்றி உடாப் பேதைகள், கேசம்
     பறிகோப் பாளிகள் யாரும் ...... கழுவேற,
சிவமாய்த் தேன் அமுது ஊறுந் திருவாக்கால் ஒளிசேர் வெண்
     திருநீற்றால் அமர் ஆடும் ...... சிறியோனே...
                                                                        --- (தவர்வாள்) திருப்புகழ்.

சங்கர தியாகர் வந்து உறை நல்லூர் ---

நல்லூர் - சிதம்பரத்திற்கு அருகில் கொள்ளிடத்திற்கு மூன்று மைல் கிழக்கில் உள்ள ஆச்சாள்புரம். நல்லூர் என வழங்குவது.  திருநல்லூர்ப் பெருமணம் எனப்படும். திருஞானசம்பந்த சுவாமிகள் முத்தி பெற்ற திருத்தலம். இந்தத் திருத்தலத்தில் உள்ள சிவபெருமானது திருப்பேர் சிவலோகத் தியாகர்.

சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் கொள்ளிடம் பாலம் கடந்து சென்றால் கொள்ளிடம் ஊர் வரும். அங்கிருந்து ஆச்சாள்புரம் செல்லும் கிளைச் சாலையில் சுமார் 8 கி. மீ. சென்று இத் திருத்தலத்தை அடையலாம்.

திருஞானசம்பந்தர் சீர்காழியிலே இருந்த காலத்தில் அவருக்குத் திருமணம் செய்வித்தல் வேண்டும் என்னும் விருப்பம் சிவபாதஇருதயருக்கு உண்டாயிற்று. அவர் தம் சுற்றத்தாருடன் கலந்து ஆலோசித்தார். எல்லோரும் ஒருங்கு கூடிப் பிள்ளையாருக்குத் தம் கருத்தைத் தெரிவித்தனர். அதற்குப் பிள்ளாயர் இணங்கவில்லை. அவர்கள், பிள்ளையாரைத் தொழுது, "உலகு உய்யத் தோன்றிய பெருமானே! உலகு உய்யத் திருமணம் செய்து காட்டுதல் வேண்டும்" என்று வேண்டினார்கள். பிள்ளையார் திருவருளை நினைந்து அவர்கள் வேண்டுதலுக்கு இணங்கினார். சிவபாத இருதயரும் மற்றவர்களும் மகிழ்வு எய்தினர். அவர்கள் எல்லோரும் ஒருங்கு கூடிச் சிந்தித்து, "திருநல்லூரில் உள்ள நம்பாண்டார் நம்பியின் திருமகளே பிள்ளையாருக்கு உரியவள்" என்னும் முடிவிற்கு வந்தனர்.  திருநல்லூருக்குப் போய்த் தங்கள் கருத்தை நம்பாண்டார் நம்பிக்குத் தெரிவித்தனர். நம்பாண்டார் நம்பி, "நான் உய்ந்தேன்.  என் குலமும் உய்ந்தது. பிள்ளையாருக்கு என் மகளைக் கொடுக்க என்ன தவம் செய்தேன்" என்று ஆனந்தக் கூத்தாடினார்.  உடன்பட்டார். சிவபாதஇருதயரும் மற்றோரும் நம்பிபால் விடைபெற்று, சீர்காழிக்குத் திரும்பி, பெருமானிடத்தில் நம்பாண்டார் நம்பியின் விருப்பத்தைத் தெரிவித்தனர். திருமண நாள் குறிக்கப்பட்டது.

"திருமணம் செய் கலியாணத் திருநாளும், திகழ் சிறப்பின்
மருவிய ஓரையும், கணித மங்கல நூலவர் வகுப்ப,
பெருகு மணநாள் ஒலை பெரும் சிறப்பினுடன் போக்கி,
அருள் புரிந்த நல்நாளில் அணிமுலைப் பாலிகை விதைத்தார்".  ---  பெரியபுராணம்.

குறிப்பிட்ட நாளில் பிள்ளையார் திருமணம் நிகழவிருக்கும் திருநல்லூருக்கு எழுந்தருளினார். திருமணப் பந்தரை அடைந்தார். அப்பொழுது மாதர்கள் மணப்பெண்ணையும் அணி செய்தார்கள். நம்பாண்டார் நம்பி, பிள்ளையாரைச் சிவமாகவே கருதி பாலும் நீரும் கொண்டு பிள்ளையாரின் திருவடிகளை விளக்கி, தாமும் தெளித்து, உள்ளும் பருகி, மற்றவர் மீதும் தெளித்தார். பிள்ளையாரின் திருக்கரத்திலே நீரைச் சொரிந்து, "என் புதல்வியை உமக்கு அளித்தேன்" என்றார்.

பெண்மணிகள் மணப்பெண்ணை அழைத்து வந்து பிள்ளையாரின் வலப்பக்கத்திலே அமர்த்தினார்கள். திருநீலநக்க நாயனார் திருமணச் சடங்குகளைச் செய்தார். எரியிலே பொரி இடப்பட்டது.  எரியை வலம் வரவேண்டி, பிள்ளையார் அம்மையாரின் திருக்கரத்தைப் பற்றலானார். அவ் வேளையில், பிள்ளையார், "எரி சிவம் அன்றோ" என்று நினைந்தார். "இந்த இல் ஒழுக்கம் வந்து சூழ்ந்ததே, இவள் தன்னோடும் அந்தம் இல் சிவன் தாள் சேர்வன்" என்று திருப்பெருமணக் கோயிலுக்குச் சென்றார். எல்லோரும் தொடர்ந்து சென்றனர். பிள்ளையார் இறைவனை வேண்டி, "நாதனே!  நல்லூர் மேவும் பெருமண நம்பனே! உன் பாத மெய் நீழல் சேரும் பருவம் இது" என்று, "கல்லூர்ப் பெருமணம்" என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடியருளினார்.

இறைவன் திருவருள் புரிந்து, "நீயும் பூவை அன்னாளும், இங்கு உன் புண்ணிய மணத்தின் வந்தார் யாவரும் எம்பால் சோதி இதன் உள் வந்து எய்தும்" என்றார். திருக்கோயில் ஒளிப்பிழம்பாக மாறியது. அதன்கண் ஒரு வாயிலையும் வகுத்துக் காட்டியது. அது கண்ட பிள்ளையார், "காதலாகிக் கசிந்து" என்று தொடங்கும் பஞ்சாக்கரத் திருப்பதிகத்தைப் பாடி அருளினார். "இம் மணத்தில் வந்தோர் ஈனம் ஆம் பிறவி தீர யாவரும் புகுக" என்று பிள்ளையார் அருள் புரிந்தார். அவ்வாறே சோதியில் எல்லாரும் புகுந்தனர். திருநீலநக்க நாயனார், திருமுருக நாயனார், சிவபாத இருதயர், நம்பாண்டார் நம்பி, திருநாலகண்ட யாழ்ப்பாணர், முதலிய திருத்தொண்டர்கள் தங்கள் தங்கள் மனைவிமார்களுடனும், சுற்றத்தவர்களுடனும் புகுந்தார்கள். முத்துச் சிவிகை முதலியவற்றைத் தாங்கி வந்தவர்களும், மற்ற அடியவர்களும், அறுவகைச் சமயத்தவர்களும், முனிவர்களும் புகுந்தார்கள். எல்லோரும் புகுந்த பின்னர், திருஞானசம்பந்தப் பெருமான் தம் காதலியைக் கைப்பற்றிக் கொண்டு, சிவசோதியை வலம் வந்து, அதனுள் நுழைந்து இரண்டறக் கலந்தார். சோதி மறைந்தது. திருக்கோயில் பழையபடி ஆனது. சோதியுள் கலக்கப் பெறாதவர்கள் கலங்கி நின்றார்கள். தேவர்கள் போற்றி நின்றார்கள்.

காதல்மெய்ப் பதிகம் "கல்லூர்ப் பெருமணம்" எடுத்து, கண்டோர்
தீதுஉறு பிறவிப் பாசம் தீர்த்தல் செம்பொருளாக் கொண்டு,
"நாதனே! நல்லூர் மேவும் பெருமண நம்பனே! உன்
பாதமெய்ந் நீழல் சேரும் பருவம் ஈது" என்று பாட,

தேவர்கள் தேவர் தாமும் திருவருள் புரிந்து, "நீயும்,
பூவை அன்னாளும், இங்கு உன் புண்ணிய மணத்தின் வந்தார்
யாவரும், எம்பால் சோதி இதனுள் வந்து எய்தும்" என்று
மூவுலகு ஒளியால் விம்ம, முழுச்சுடர்த் தாணு ஆகி,

கோயில் உட்பட மேல் ஓங்கும் கொள்கையால் பெருகும் சோதி
வாயிலை வகுத்துக் காட்ட, மன்னுசீர்ப் புகலி மன்னர்
பாயின ஒளியால் நீடு பரஞ்சுடர்த் தொழுது போற்றி,
மாயிரு ஞாலம் உய்ய வழியினை அருளிச் செய்வார்.

"ஞானமெய்ந் நெறிதான் யார்க்கும் நமச்சிவாயச் சொல் ஆம்" என்று,
ஆன சீர் நமச்சி வாயத் திருப்பதிகத்தை, அங்கண்
வானமும் நிலனும் கேட்க அருள்செய்து, "ம்மணத்தில் வந்தோர்
ஈனமாம் பிறவி தீர யாவரும் புகுக" என்ன,

வருமுறைப் பிறவி வெள்ளம் வரம்பு காணாது அழுந்தி,
உரு எனும் துயரக் கூட்டில் உணர்வு இன்றி மயங்குவார்கள்,
திருமணத்துடன் சேவித்து முன்செலும் சிறப்பினாலே
மருவிய பிறவி நீங்க மன்னு சோதியினுள் புக்கார்.

சீர்பெருகு நீலநக்கர், திருமுருகர் முதல்தொண்டர்,
ஏர்கெழுவு சிவபாத இருதயர், நம்பாண்டார், சீர்
ஆர் திருமெய்ப் பெரும்பாணர், மற்று ஏனையோர் அணைந்து உளோர்
பார்நிலவு கிளைசூழப் பன்னிகளோடு உடன்புக்கார்.

அணிமுத்தின் சிவிகைமுதல் அணிதாங்கிச் சென்றோர்கள்,
மணிமுத்த மாலைபுனை மடவார், மங்கலம்பெருகும்
பணிமுற்றும் எடுத்தார்கள், பரிசனங்கள், வினைப்பாசம்
துணிவித்த உணர்வினராய்த் தொழுது உடன் புக்கு ஒடுங்கினார்.

ஆறுவகைச் சமயத்தின் அருந்தவரும், அடியவரும்,
கூறுமறை முனிவர்களும், கும்பிடவந்து அணைந்தாரும்,
வேறு திருவருளினால் வீடுபெற வந்தாரும்,
ஈறு இல் பெருஞ் சோதியின் உள் எல்லாரும் புக்கதன் பின்,

காதலியைக் கைப்பற்றிக் கொண்டு, வலம் செய்து அருளி,
தீது அகற்ற வந்து அருளும் திருஞானசம்பந்தர்,
நாதன்எழில் வளர்சோதி நண்ணி, அதன் உட்புகுவார்
போதநிலை முடிந்தவழிப் புக்கு ஒன்றி உடன் ஆனார்.

பிள்ளையார் எழுந்தருளிப் புக்கதன் பின், பெருங்கூத்தர்
கொள்ள நீடிய சோதிக் குறிநிலை அவ் வழி கரப்ப,
வள்ளலார் தம் பழைய மணக்கோயில் தோன்றுதலும்,
தெள்ளுநீர் உலகத்துப் பேறு இல்லார் தெருமந்தார்.

கண்ணுதலார் திருமேனி உடன்கூடக் கவுணியனார்
நண்ணியது தூரத்தே கண்டு, நணுகப் பெறா
விண்ணவரும் முனிவர்களும் விரிஞ்சனே முதலானார்
எண்ணிலவர் ஏசறவு தீர எடுத்து ஏத்தினார்.           ---  பெரியபுராணம்.

இது நிற், கும்பகோணத்திற்கு அருகில் சுந்தரப்பெருமாள் கோயில் இரயில் நிலையத்திற்குத் தெற்கே இரண்டு மைலில் திருநல்லூர் என்றும் ஒரு திருத்தலமும் உண்டு. அப்பர் சுவாமிகளுக்குச் சிவபெருமான் திருவடி தீட்சை புரிந்த திருத்தலம் இது ஆகும்.

வீதிவிடங்கத் தியாகர் இத் தலத்திற்கு வந்து மூன்று நாட்கள் தங்கியதாக தலபுராணம் கூறுகின்றது.


கருத்துரை


திருநல்லூர் முருகா! சிவயோக சாதனையினால் மேலைப் பெருவெளியில் வாழும் வாழ்வை அருள் புரிவீர்.

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...